Thursday, June 28

11:51 AM
30

ஒரு சமுதாயம் படித்த ஆண்களையும் படிக்காத பெண்களையும் கொண்டிருந்தால் முன்னேற்றம் அடைவதென்பது இயலாத காரியம். பெண் கல்வியே சமுதாய முன்னேற்றத்திற்கு சிறந்த வழி - பாரதியார்


மொத்த மக்கள்தொகையில் பாதிக்குபாதி இருக்கும் பெண்கள் கல்வி அறிவில் முன்பை விட இப்போது முன்னேற்றமான நிலையில் இருக்கிறார்கள் என முழுமையாக நிறைவு கொள்ள இயலவில்லை...காரணம் கல்வி நிலையங்களில் மாணவிகள் அனுபவிக்கும் சங்கடமான ஒரு பிரச்சனை. வெளியே பேசவே கூடாத ஒன்று  என்ற நிலை என்று மாறும் தெரியவில்லை...!!


2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக்கணக்கின் படி இந்தியளவில் படித்த பெண்கள் 65%. இது 2001 ஆம் ஆண்டு இருந்ததை விட 12% அதிகமாகும். அதே சமயம் 8 ஆம் வகுப்பில் படிப்பை விட்டு விலகும் பெண்களின் எண்ணிக்கை அதிகம். இதற்கு குடும்ப சூழ்நிலை மட்டும் காரணம் அல்ல பள்ளியில் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பான கழிப்பறையும், தண்ணீர் வசதியும் இல்லாதது !!? இந்தியாவில் உள்ள அரசு சார்ந்த அனைத்து வகையான பள்ளிகளிலும் 51% பள்ளிகளில் டாய்லெட் வசதியே  இல்லை. 74% பள்ளிகளில் தண்ணீர் வசதி இல்லையாம். இதனாலேயே 7 & 8 ஆம் வகுப்பு மாணவிகளில் (வயதுக்கு வந்துவிடுவதால்) 7% மாணவிகள் பள்ளியை விட்டு நின்று விடுகிறார்கள் என்ற காரணத்தை ஒரு செய்தியாக எண்ணி கடந்து போக முடியவில்லை.

பள்ளிகளில் கழிப்பறை எவ்வளவு இன்றியமையாதது என்பதில் சிறிதும் அக்கறை இன்றி இருக்கின்றன பள்ளி நிர்வாகமும், அரசும்...!  கிராம, நகர  தெருவோரங்கள் அசிங்கப்படும் அவல நிலைக்கு முக்கிய காரணம் ஆரம்ப பள்ளியில் கழிப்பறை பற்றிய கவனத்தை,விழிப்புணர்வை மாணவர்கள் மனதில் பதிய வைக்க தவறியதே...??!! கழிப்பறை இல்லாத அல்லது இருந்தும் சுகாதாரமற்ற பள்ளிகள் எவ்வாறு மாணவ, மாணவிகளுக்கு இதை பற்றிய விழிப்புணர்வை போதிக்கும்...?! நல்லவைகளின் ஆரம்பம் பள்ளி என்பது திரிந்து சமூக ஒழுங்கீனங்களின் ஆரம்பம் பள்ளிகள் என்றாகிவிட்டதோ...??!

ஏற்படும்  பிரச்சனைகள்

இன்றைய தினத்தில் நாள் ஒன்றுக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்...ஆனால் பள்ளி செல்லும் நம் குழந்தைகளோ சுகாதாரமற்ற கழிவறை பக்கம் போக தயங்கியே நீர் அருந்துவதில்லை...காலையில் வீட்டில் இருந்து கிளம்பும் அவர்கள், மீண்டும் வீடு வந்தபின்னே சிறுநீர் கழிக்கிறார்கள்...இவ்வாறு சிறுநீர் வெளியேறாமல் இருப்பதால் கிட்னி பாதிப்படைய கூடிய வாய்ப்பு இருக்கிறது...தண்ணீர் அருந்தாமல் தவிர்ப்பதால் வயிற்று கோளாறுகளுக்கு ஆளாக்கி விடுகிறார்கள். சுகாதாரமற்ற கழிப்பறையை பயன்படுத்துவதின் மூலம் நோய்தொற்று ஏற்பட்டு கருப்பப்பை பாதிப்படைவதுடன் வெள்ளைபடுதல், மலட்டுத்தன்மை உள்ளிட்ட அது தொடர்பான பல்வேறு துன்பங்களையும் அனுபவிக்க நேரும் என சொல்கிறார்கள்.
.
பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் போது இதை பற்றி அவசியம் விசாரிக்கவேண்டும்...சங்கடமின்றி 'அந்த மூன்று நாட்களை' கடந்து போக கூடிய அளவிற்கு அங்கே பாத்ரூம் வசதி இருக்கிறதா ?! அது சுத்தமாக இருக்கிறதா? இன்னும் சொல்ல போனால் தாய் அந்த இடத்திற்கு சென்று பார்த்து வரலாம்...அங்கே ஏதும் சரியில்லை என்றால் பள்ளி நிர்வாகத்திடம் சரி பண்ண சொல்ல வேண்டும். 

அரசின் இலவச சானிடரி நாப்கின்

தற்போது தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் வளர் இளம் பெண்களுக்கு சானிடரி நாப்கின் கொடுப்பதாக அறிவித்திருக்கிறது. பாராட்டப்பட வேண்டிய நல்ல விஷயம்...அதே நேரம் பெண்கள் பள்ளிகளில்/கல்லூரிகளில்  கழிப்பறை வசதி சரியான விதத்தில் இருக்கிறதா என அரசு கவனித்து நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும். கட்டாயம் எடுத்தாக  வேண்டும் !!

மாணவிகளின்  தவறு அல்ல !

மாணவிகள் உபயோகித்தப் பின் சானிடரி நாப்கின்களை நல்ல முறையில் டிஸ்போஸ் பண்ண வேண்டும். ஆனால் சரியான முறைப்படி செய்ய இயலாததால் டாய்லெட் மற்றும் கழிவு நீர் செல்லும் குழாய்களில் அவை அடைத்து கொண்டு பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடுகிறது...அகற்றுவதற்கு ஆள் கிடைப்பதில்லை. அடைத்து கொண்டதை அகற்ற தாமதமாகும் ஒவ்வொரு மணி நேரமும் சுகாதார கேடு  அதிகரிக்கிறது.

பள்ளி நிர்வாகம் இது குறித்து மாணவிகளிடம் கண்டிக்கும் நிலையில் அவர்கள் அந்த நாட்களில் பள்ளிக்கு செல்வதையே தவிர்த்துவிடுகிறார்கள்...இங்கே தவறு மாணவிகளிடம் இல்லை, பள்ளி நிர்வாகத்திடம் இருக்கிறது.


பள்ளி மாணவிகளை பொறுத்தவரை மாதம் தோறும் அல்லாமல் 2, 3, வெகு சிலருக்கு 5 மாதங்களுக்கு ஒரு முறை தான் மாதவிடாய் நிகழுகிறது...அது போன்ற சமயத்தில் அதிக அளவில் ரத்தபோக்கு இருக்கலாம். கிராமத்து மாணவிகளை பொறுத்தவரை துணியை பயன்படுத்துவார்கள், அதிகபடியான ரத்தபோக்கால் பெரும் அவதிப்பட நேரும். ஒரு நாள் முழுவதும் துணி அல்லது நாப்கின் மாற்றாமல் வகுப்பில் இருப்பது வெகு சிரமம். பிறருக்கு தெரியும் படி ஒருவேளை இருந்துவிட்டால் அதனால் ஏற்படக்கூடிய அசுயை, அவமானம் (?) போன்றவை அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடும். உடல் ரீதியிலான பாதிப்புகளுடன் உளவியல் பாதிப்புக்கும் ஆளாகிறார்கள்...

உபயோகித்த நாப்கின்களை அகற்ற சரியான வழிவகை செய்தாக வேண்டும்.

என்னதான் வழி?!

2011 ஆம் ஆண்டு திருப்பூர்  ஜெய்வாபாய் நகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திரு. A.ஈஸ்வரன் என்பவர் மாணவிகள் சந்திக்கும் இத்தகைய பிரச்னைக்கு என்ன வழி என தீர யோசித்து ஒரு வழிமுறையை கண்டுபிடித்து வெற்றியும் பெற்று இருக்கிறார். பலரின் பாராட்டையும் பெற்று உள்ளார். இப்படியொரு வித்தியாசமான முயற்சியை பாராட்டி 1997 ஆம் ஆண்டு மங்கையர் மலர், மகளிர் சிந்தனை, மாலை மலர் போன்ற பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. செய்தி கேள்விப்பட்ட திருப்பூர் பகுதிகளில் உள்ள மில் கல்லூரிகளில் இருந்து வந்து இதை பார்வை இட்டு சென்று தங்கள் இடங்களிலும் அமைத்துள்ளனர். தற்போது தொழில் ரீதியாக மின்சாரம், எல்.பி.ஜி கேஸ் போன்றவை பயன்படுத்தி தயாரித்து பெண்கள் கல்லூரி பள்ளிகளுக்கு விற்று வருகிறார்கள்...!

அப்படியென்ன  கண்டுபிடிப்பு ?!

பழைய இரும்பு டிரம்மை சில மாற்றங்கள் செய்து புகை போக்கியுடன் கூடிய பாய்லராக வடிவமைத்து வைத்து அதன் இரு புறமும் 2 பாத்ரூம்களை கட்டி இருக்கிறார். பாத்ரூம் செல்லும் மாணவிகள் சிலிண்டரில் உள்ள சிறிய திறப்பானைத் திறந்து உபயோகபடுத்திய துணியை/நாப்கினை போட்டு விடலாம். பள்ளி முடிந்த மாலை நேரம் பாய்லரின் கீழேயுள்ள கதவைத்திறந்து மண்ணெண்ணெய் சிறிது ஊற்றி எரித்து விடலாம். புகை போக்கி மூலமாக புகை வெளியேறி விடும்...!


மத்திய அரசின் RMSA திட்டம் மூலமாக பெண்கள் பள்ளிகளில் கழிப்பறை கட்ட பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்...வெறும் கழிப்பறை மட்டும் கட்டுவதை விட இது போன்ற பாய்லர்களையும் சேர்த்து கட்ட தமிழக அரசும், கல்வித்துறையும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


ஆணென்ன ? பெண்ணென்ன ?

மாணவன் , மாணவி யாராக இருந்தாலும் வீட்டில் இருப்பதை விட பள்ளிகளில் தான் அவர்களின் பெரும்பாலான நேரம் கழிகிறது. அவர்களின் ஆரோக்கியத்திலும் பள்ளிகள் அக்கறை காட்டவேண்டும். ஒரு நாளைக்கு பள்ளி செல்லும் சிறுமி/சிறுவன் இரண்டு கிளாஸ் நீர் அருந்துவதே அதிகம். பெற்றோர் கொடுத்துவிடும் தண்ணீரையும் குடிக்காமல் மீதம் எடுத்து வருகிறார்கள்...கேட்டால் தண்ணீர் குடிக்க டைம் இல்ல, ஏதாவது ஒரு சாக்கு. இதை பெற்றோர்கள் நாம் கண்டுகொள்ளாமல் இருக்கக் கூடாது. குழந்தைகளை தயங்காமல் தண்ணீர் அதிகம் குடிக்க சொல்லுங்க...பள்ளியில் இருக்கும் கழிவறை சம்பந்தப்பட்ட பிரச்னையை குழந்தைகள் சொல்ல மாட்டார்கள் நாம் தான்  அக்கறை எடுக்கவேண்டும்...தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளை அணுகி கழிவறை வசதிகள் எவ்வாறு இருக்கிறது என விசாரித்து கவனியுங்கள்.

பெண் குழந்தைகள் என்றால் மேற்கூறிய பாய்லர் பற்றி பள்ளிகளுக்கு எடுத்து கூறுங்கள். படிப்பில் மட்டும் அக்கறை கொள்ளாமல் அவர்களின் ஆரோக்கியத்திலும் சிறிது கவனம் கொள்ளுங்கள்.

                                                                  * * * * * * * * *

 தகவல்,படங்கள்  உதவி 

- நன்றி திரு. A. ஈஸ்வரன்,
  http://jaivabaieswaran.blogspot.in/2010/04/blog-post_14.html
                                   
  மற்றும் இணையம் Tweet

30 comments:

 1. நல்ல தகவல். வாழ்க நல்ல உள்ளங்கள்.

  ReplyDelete
 2. தேவையற்ற இலவசங்களை வழங்கி மக்களின் வரிப்பணத்தை வீணடித்துக்கொண்டிருக்கும் அரசு வசதிகள் அடங்கிய கழிவறைகளை அனைத்து பள்ளிகளிலும் ஏற்படுத்துவது குறித்து சிந்திக்குமா?

  ReplyDelete
 3. நல்ல கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள் ஈஸ்வரன் சார் :)

  ReplyDelete
 4. மாணவிகளின் நலம் கருத்தில் கொள்ளப்பட் வேண்டியது அவசியம், பயனுள்ள பகிர்வு.

  ReplyDelete
 5. Very useful post. Thanks for writing it in your blog.

  ReplyDelete
 6. கட்டணம் வசுீலிப்பதே குறிக்கோள் என்று இல்லாமல் அடிப்படை விசயங்களையும் பார்க்க வேண்டும். நல்ல பகிர்வு.

  ReplyDelete
 7. அனைவரும் அறியத் தேவையான பதிவு

  ReplyDelete
 8. பயனுள்ள அருமையான பதிவு தோழி .காலை ஒன்பது மணிமுதல் மாலை வரை சிறுநீரை அடக்கி வைத்திருந்தால் கண்டிப்பா இன்ஃபெக்ஷன் வரும் பின்னாளில் பல பிரச்சினைக்கு ஏதுவாகும்
  பெரும்பாலான பள்ளிகள் இன்னமும் இந்த விடயத்தில் முன்னேறவேயில்லை .அதுமட்டுமில்லை நம்மூரில் பெரிய ஷாபிங் கடைகளில் எல்லாம் கூட (wc)இந்த வசதி இருக்கிறதா என்பதனை கருத்தில் கொண்டு செயல்படனும் .personal hygiene பற்றி பெற்றோரும் பிள்ளைகளுக்கு சொல்லிதரணும் .

  ReplyDelete
 9. மிகவும் ப்யனுள்ள பதிவு.

  அனைவரும் சிந்தித்து செயல்பட வேண்டியது அவசியமும் அவசரமுமாகும்.

  நியாயமானதொரு பிரச்சனையையும் எடுத்துரைத்து, அதற்கான தீர்வையும் சொல்லியுள்ளதை மனதாரப் பாராட்டுகிறோம். நன்றி.

  ReplyDelete
 10. பள்ளிகள் மட்டுமல்ல, பல தனியார் கல்லூரிகளும் தேவையான சுகாதார வசதிகள் இன்றித்தான் இருக்கின்றன. இதனால்,பள்ளிசெல்லும் பிள்ளைகளூக்கு, சிறு வய்து முதலே, அதிலும் குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு சொல்லொன்னாத்துயர். அதனை அப்பட்டமாய் படம் பிடித்து காட்டியதுடன், அதற்கான தீர்வொன்றையும் அழ்காய் சொல்லியுள்ளீர்கள்.

  ReplyDelete
 11. பாதசாரியின் பேய்க்கரும்பு கட்டுரைத் தொகுப்பில் படித ஒரு விஷயம்:

  \\கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளியில் இன்சினரேட்டர் இயந்திரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது பயன்பய்டுத்தப்ப்ட்ட நாப்கினை நிமிடத்தில் சாம்பலாக்கிவிடும்.\\

  எல்லாப் பள்ளிகளிலும் இதைச் செய்தால் நன்றாக இருக்கும்.எப்போது நடக்குமோ?

  ReplyDelete
 12. இன்சிநேரேட்டர் வைக்கும் அளவுக்கு பொருளாதாரத்தில் எல்லா பள்ளிகளும் உயர்ந்து விடவில்லை. அவ்வளவு பணம் செலவழிக்க பணக்காரப்பள்ளிகளுக்கு மனம் இருப்பதில்லை.

  கண்ணதாசனின் வரிகள்:

  "இது இருந்தால் அது இல்லை
  அது இருந்தால் இது இல்லை
  இதுவும் அதுவும் சேர்ந்து இருந்தால்
  இங்கே அவனுக்கு இடமில்லை"

  மனம் இருப்பவர்களுக்கு பணமில்லை. பணம் உள்ள பலருக்கு மனம் இல்லை.

  இதை நினைத்து பார்க்கையில் இந்த கண்டுபிடிப்பு (யோசனை) பாராட்ட, வரவேற்க தகுந்ததே.

  என்னை கேட்டால் அரசே இன்சிநேரட்டர் இயந்திரங்களை முன்வந்து வழங்க வேண்டும்.

  பெண்களுக்கு மட்டும் என்றில்லை. ஆண்களுக்கும் Sanitation (or the lack of it) பிரச்சினை தான். கழிப்பறைகள் இல்லாமல், அருவருக்க தக்க இடங்களில் நுழைய விருப்பம் இன்றி சொல்ல முடியாத அவஸ்தையை நானும் பட்டிருக்கிறேன், பள்ளியில், பேருந்தில், உணவகங்களில், பெங்களூருவின் "அதிநவீன" (???!!!) ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்களில், ஏன் அமெரிக்காவிலும் கூட. அங்கே கம்மி இங்கே ஜாஸ்தி. அவ்வளவு தான்.


  One of the worst toilets in Bangalore is inside a woman's college. I don't want to name it. We had gone from my University (Christ University) to that famous college for women, as they were hosting a Quiz competition. And the toilet assigned to us boys was just sickening - ad nauseum, disgusting and revolting, to say the least. And that was an all girls college. I pity those girls studying there.

  I can proudly tell that Christ university had an exclusive facility - rest room complete with a lounge, incinerator and a nurse on duty always in all blocks, just for girls.

  Hats off!

  ReplyDelete
 13. ஒரு நாடு வளர்ந்ததா இல்லையா என கணிக்கும் அளவு கோல் மாட மாளிகைகளிலோ கண்ணாடி ஜன்னல்கள் அடைத்த வான்சுரண்டிகளிலோ (skyscrapers), டாக்கு டீக்கேன்று வலம் வரும் அதி நவீன மக்களிடமோ இல்லை.

  அடிமட்டத்துக்கும் மேல் மட்டத்துக்கும் உள்ள வித்தியாசம் எந்த அளவு குறைந்து உள்ளது என்பதை பொறுத்து தான் வளர்ச்சி.

  உடல் முழுவதும் சதை போட்டால் அது புஷ்டி ஒரு இடம் மட்டும் சதை போட்டால் அது வீக்கம்/கட்டி. அதை வெட்டி எடுத்து விட வேண்டும்!

  உடனே நான் பணக்காரர்களை தூற்றவில்லை. நேர்மையாக உழைத்து பணக்காரனாக வாழ்வதில் தப்பெல்லாம் இல்லை. எல்லாத்தையும் ஊருக்கு குடுத்துடு நு நான் சொல்ல மாட்டேன்.

  ஆனால், நாம் நல்ல நிலைமையில் இருக்கிற போது ஏதோ நம்மால் ஆன அடிப்படை வசதிகளை எல்லாருக்கும் (ஆண் பெண் பேதமின்றி) செய்து தர கொஞ்சம் தரலாம், தரணும்.

  நம் கூடப்பிறந்தவர்கள் என்று நினைத்தால் இப்படி பெண்களின் கஷ்டம் புரியாமல் பள்ளிகள் போது இடங்கள் இருக்க மாட்டா.

  பி. கு: நான் இதை வேறு ஒரு இடத்தில சொல்லப்போய் அவர்கள் என்னை நீ ஒரு பெண்ணியவாதியா என கேட்டார்கள். சிரிப்பாக இருந்தது. ஏன் பெண்ணிய வாதிக்கு தான் பெண்களின் கஷ்டம் புரியுமா என்ன?
  நான் பெண்ணிய வாதத்தை முற்றிலும், எல்லா விதத்திலும் எதிர்ப்பவன். ஆனால் பெண்களுக்கு எதிரானவன் அல்ல. இரண்டும் வேறு வேறு! அதனால் தான் இதை இங்கே பதிவு செய்கிறேன்.

  ReplyDelete
 14. நல்லப் பதிவு !!! சிறுசிறு விடயங்கள் கூட நம் நாட்டில் எவ்வளவு கடினப்பட்டு பெறவேண்டி உள்ளது. நான் படித்தது சராசரி நடுத்தர தனியார் பள்ளி.. ஆனால் அங்கும் 2000 பேருக்கு ஒரு ஆண் டாய்லட்டும், ஒரு பெண் டாய்லட்டும் தான் இருந்தன. இண்டர்வல் நேரத்தில் இடம் பிடிக்கவே காத்திருக்க வேண்டும். அதற்குள் பெல் அடித்து விடும். மாணவியர் பலர் படு அவஸ்தைகளைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும் !!!

  ReplyDelete
 15. @@ வரலாற்று சுவடுகள் said...

  //தேவையற்ற இலவசங்களை வழங்கி மக்களின் வரிப்பணத்தை வீணடித்துக்கொண்டிருக்கும் அரசு வசதிகள் அடங்கிய கழிவறைகளை அனைத்து பள்ளிகளிலும் ஏற்படுத்துவது குறித்து சிந்திக்குமா?//

  நல்ல யோசனை. மிக அவசியமான இதில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்.

  சிந்திக்கவேண்டும் அரசு, சிந்திக்க வைக்க வேண்டும் மக்கள் !!

  தேவையில்லை இலவசம், கழிவறை வசதி வேண்டும் என வலியுறுத்தவேண்டும் மக்கள்.

  ...

  கருதிட்டமைக்கு நன்றிகள்.

  ReplyDelete
 16. @@ பா.கணேஷ் said...

  //மாணவிகளின் நலம் கருத்தில் கொள்ளப்பட் வேண்டியது அவசியம், //

  கல்வி துறையும், அரசும், பள்ளி நிர்வாகமும் முழு கவனம் அக்கறை எடுத்தாக வேண்டும்.

  பெற்றோர்கள் முயன்றால் செய்யவைக்க முடியும்.

  ...

  நன்றி கணேஷ்

  ReplyDelete
 17. @@ மோகன் குமார் said...

  //Very useful post. Thanks for writing it in your blog.//

  நன்றிகள்.

  ReplyDelete
 18. @@ Sasi Kala said...

  //கட்டணம் வசுீலிப்பதே குறிக்கோள் என்று இல்லாமல் அடிப்படை விசயங்களையும் பார்க்க வேண்டும். //

  வசூலிக்கும் கட்டணத்தில் இதற்க்கு கொஞ்சம் ஒதுக்கினாலே போதும்.

  குழந்தைகளின் படிப்பு அவர்களின் உடல் , மன ஆரோக்கியத்தை பொறுத்தே அமைகிறது. இதை புரிந்து கொள்ளவேண்டும் பெற்றோர்களும்...!!

  ...

  நன்றி சசிகலா

  ReplyDelete
 19. @@ தமிழானவன்...

  வருகைக்கு நன்றிகள்.

  ReplyDelete
 20. @@ angelin said...

  //காலை ஒன்பது மணிமுதல் மாலை வரை சிறுநீரை அடக்கி வைத்திருந்தால் கண்டிப்பா இன்ஃபெக்ஷன் வரும் பின்னாளில் பல பிரச்சினைக்கு ஏதுவாகும்//

  இதை பற்றிய அச்சம் பெற்றோர்களுக்கு ஏன் இல்லை என வருத்தமாக இருக்கிறதுப்பா.

  கொடுத்துவிட்ட தண்ணி மிச்சம் கொண்டு வந்தா என் பசங்களை திட்டுவேன். மிஸ் தண்ணி குடிக்க விடலன்னு சொன்னான் , பள்ளிக்கு போய் அவங்களுக்கு புத்தி சொல்லிட்டு வந்தேன். :( தாய்மார்களே இப்படி இருக்காங்கனு எரிச்சலா இருக்கு.

  //அதுமட்டுமில்லை நம்மூரில் பெரிய ஷாபிங் கடைகளில் எல்லாம் கூட (wc)இந்த வசதி இருக்கிறதா என்பதனை கருத்தில் கொண்டு செயல்படனும் .//

  இவை சரியான படி அமைக்கபட்டு இருந்தால் தான் அனுமதி என்று சட்டம் இருந்தாலும் யார் கவனிக்கிறா இதையெல்லாம் !??

  இங்க பாக்டரில பாத்ரூம் வசதி சரியா இருக்கானு வந்து செக் பண்ணுவாங்க. அவங்க வந்தாலும் வரலைனாலும் நிர்வாகத்தினர் அக்கறைப்பட வேண்டும்.

  //personal hygiene பற்றி பெற்றோரும் பிள்ளைகளுக்கு சொல்லிதரணும்//

  கண்டிப்பாக !

  ...

  நன்றி தோழி.

  ReplyDelete
 21. @@ வை.கோபாலகிருஷ்ணன் said...

  //நியாயமானதொரு பிரச்சனையையும் எடுத்துரைத்து, அதற்கான தீர்வையும் சொல்லியுள்ளதை மனதாரப் பாராட்டுகிறோம்.//

  தீர்வு கண்டுபிடித்த திரு ஈஸ்வரன் சாருக்கு தான் பாராட்டுகள் எல்லாம். அவரது பணிகள் இத்துடன் முடிந்துவிடவில்லை. இன்னும் நிறைய இருக்கிறது. அவரை போன்றவர்களை அரசு பயன்படுத்தி கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு இருக்கிறது.

  ...

  நன்றிகள் ஐயா.

  ReplyDelete
 22. @@ FOOD NELLAI said...

  //பள்ளிகள் மட்டுமல்ல, பல தனியார் கல்லூரிகளும் தேவையான சுகாதார வசதிகள் இன்றித்தான் இருக்கின்றன.//

  உண்மைதான். நானும் பார்த்திருக்கிறேன். இதில் ஏன் இத்தகைய அசட்டைத்தனம் என புரியவில்லை.

  //இதனால்,பள்ளிசெல்லும் பிள்ளைகளூக்கு, சிறு வய்து முதலே, அதிலும் குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு சொல்லொன்னாத்துயர்.//

  வருத்தமாக இருக்கிறது. நெல்லையில் பெண்கள் பள்ளிகளை நேரில் சென்று சந்திக்கலாம் என இருக்கிறேன் அண்ணா. தேவையென்றால் வந்து சானிடரி பாய்லர் செய்து தருகிறேன் என ஈஸ்வரன் சார் சொல்லி இருக்கிறார்.
  முயற்சி செய்வோம் அண்ணா. உங்கள் ஆலோசனை வேண்டும்.

  ...

  நன்றிகள் அண்ணா.

  ReplyDelete
 23. @@ Gopi Ramamoorthy said...

  \\கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளியில் இன்சினரேட்டர் இயந்திரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது பயன்பய்டுத்தப்ப்ட்ட நாப்கினை நிமிடத்தில் சாம்பலாக்கிவிடும்.\\

  ஆமாம் இப்போதுதான் இதை பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டேன்.

  //எல்லாப் பள்ளிகளிலும் இதைச் செய்தால் நன்றாக இருக்கும்.எப்போது நடக்குமோ?//

  நடக்க வேண்டும்...நம்மை போன்றோர் அவரவர் ஊர், பள்ளிகளில் நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டால் நிச்சயம் முடியும். கைக்கெட்டும் தூரம் தானே வானம். இது முடியாதா என்னா ?? கூட்டு முயற்சியும், நம்பிக்கையும்,உழைப்பும் இருந்தால் போதும்.

  ...

  நீண்ட நாள் கழித்த வருகைக்கு நன்றிகள்.

  ReplyDelete
 24. @@ Bhuvaneshwar said...

  //இன்சிநேரேட்டர் வைக்கும் அளவுக்கு பொருளாதாரத்தில் எல்லா பள்ளிகளும் உயர்ந்து விடவில்லை.//

  அரசு, சமூக ஆர்வலர்கள் செய்து கொடுக்கணும்.

  // அவ்வளவு பணம் செலவழிக்க பணக்காரப்பள்ளிகளுக்கு மனம் இருப்பதில்லை.//

  பணத்தில் மட்டும் தானே அவர்களுக்கு குறி இருக்கும்.

  பிரச்சனை என்ன என்பதை விரிவாக தெளிவாக வெளிபடையாக சொன்னதுக்கு மகிழ்கிறேன் புவனேஷ்.

  ...

  நன்றிகள்

  ReplyDelete
 25. @@ இக்பால் செல்வன் said...

  //நான் படித்தது சராசரி நடுத்தர தனியார் பள்ளி.. ஆனால் அங்கும் 2000 பேருக்கு ஒரு ஆண் டாய்லட்டும், ஒரு பெண் டாய்லட்டும் தான் இருந்தன. இண்டர்வல் நேரத்தில் இடம் பிடிக்கவே காத்திருக்க வேண்டும். அதற்குள் பெல் அடித்து விடும். மாணவியர் பலர் படு அவஸ்தைகளைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும் !!!//

  சிறு விஷயம் என்றுதான் ஒதுக்குகிறார்கள். இது தான் மனிதனின் ஆரோக்கியத்தின் அடிப்படை.

  உங்கள் அனுபவத்தினை படிக்கும் போது வருத்தமாக இருக்கிறது. எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் இது போல அனுபவப்பட்டு இருப்பார்கள்.

  ...

  உங்களின் முதல் வருகைக்கு நன்றிகள்.

  ReplyDelete
 26. தேர்தலுக்காக இலவசங்களை வாரி வழங்கும் அரசு இது போன்ற முயற்சிகளை பள்ளிகளில் மேற்கொண்டால் மாணவ சமுதாயம் வாழ்த்தும்.
  அருமையான, தேவையான பகிர்வு.

  ReplyDelete
 27. arumayana vizhippunarvu padhivu idhai thaniyaar palligalum kattaayam payanpaduththa vendum nandri
  vaazhththukkal
  surendran

  ReplyDelete
 28. நல்லதோர் பதிவு..நிச்சயம் இதை அறிய வேண்டும்...இப்பதிவிற்காய் எனது வாழ்த்துக்கள் சொந்தமே...!

  அன்புடன் அதிசயா
  காதல் இங்கும் ஒளிந்திருக்கும்..!!!!

  ReplyDelete
 29. ஆரோக்கியமான விடயத்தை அலசியிருக்கும் எண்ணத்துக்கு வாழ்த்துக்கள்§ விழிப்பு முக்கியம் தேவை பலருக்கு!

  ReplyDelete
 30. வணக்கம் கெளசல்யா..தங்கள் ப்திவுக்கு நிறைய ஆரோக்கியமான பின்னூட்டம்..சித்தாபுதூர் பள்ளியின் பாதுகாவலர்கள் என்னை வந்து கலந்துகொண்டு, ஜெய்வாபாய் பள்ளியில் செய்துள்ள நல்ல விசயங்களை சித்தாபுதூர் பள்ளியில் செய்வதாகக்கூறிச்சென்றனர். அதே போல மின்சாரத்தால் இயங்கும் இன்சினேரட்டரை நிறுவியுள்ளனர். இதே போல தேஜா சக்தி பொறியியல் கல்லூரியில் கேஸ் மூலம் இயங்கும் இன்சினரேட்டர் பொருத்தியுள்ளனர். மின்சாரத்தால் இயங்கும் இன்சினரேட்டரில் ஒரு 10 நாப்கின் மட்டுமே எரிக்கமுடியும். அதே சமயம் ஜெய்வாபாயில் உள்ளது ஒரு 50 வரை ஒரே சமயத்தில் மேனுவலாக எரிக்கமுடியும். கேஸ்சும் அப்படியே...விலை அதிகம்..சாதாரண நகராட்சி/அரசு பெண்கள் பள்ளிகளில் அவர்களாகவே செய்து கொண்டால் மலிவாக இருக்கும்..ஆனால் ஒன்று..பராமரிக்க வேண்டும்..
  தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்..அரசுப்பள்ளிகளை பராமரிப்பது பற்றி எனது அனுபவமும் இருக்கும்..படித்துப்பாருங்கள்...பயனுள்ளதாக இருக்குமானால் பகிர்ந்து கொள்ளுங்கள்..

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...