திங்கள், அக்டோபர் 8

PM 3:28
23



பதிவர்களை பற்றி விமர்சனம் எழுதவேண்டும் என முடிவு செய்து முதல் பதிவராக உணவு உலகம் சங்கரலிங்கம் அவர்களை பற்றி எழுதினேன். அதன் பின் தொடர்ந்து எழுதணும் , ஆனால் சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லை. இரண்டாவதாக எழுதவேண்டும் என குறித்து வைத்திருந்த ஒருவரின் பதிவுகளில் இருந்து 'இந்த பதிவை பற்றி சொல்லலாம்' என சிலவற்றை குறித்து எழுதி வைப்பேன், மறுநாளே அவர் வேறு ஒரு போஸ்ட் எழுதி விடுவார், அது இதை விட சிறப்பா இருக்கும்...ஏற்கனவே எழுதியதை டெலீட் பண்ணிட்டு புது போஸ்டை பற்றி எழுதி வைப்பேன், இப்படியே கடந்த பல மாதங்களாக மாத்தி மாத்தி எழுதி எழுதி ஒரு வழியாகி(?!) விட்டேன்...!!

இப்படியே நாட்கள் போய் கொண்டு இருந்ததே தவிர விமர்சன பதிவு வெளியிடவே இல்லை, (இவரை பற்றி எழுதி விட்டு தான் மற்றவர்களை பற்றி எழுதணும்னு  முடிவு வேற பண்ணி வச்சிட்டேன்) பதிவரை பற்றிய விமர்சனம் தானே பதிவுகள் எதுக்கு, பதிவுகளை விட்டுடுவோம்னு இப்பதான் ஒரு புதுசா  ஞானோதயம் வந்து இதோ எழுதிட்டேன்...இனி படிக்கிற உங்க பாடு...!! என்னிடம் மாட்டிக்கொண்ட அந்த பதிவர் பாடு ?!

யார் அந்த பதிவர் ?

தமிழ்ல சுமாரா எழுதுற எனக்கு இவரது எழுத்துக்கள் ஒரு பெரிய தாக்கத்தை கொடுத்தது. பொதுவா அனைத்து புத்தகங்களும் விரும்பி படிப்பேன் ஆனால் குறிப்பிட்ட எந்த எழுத்தாளரின்  எழுத்திற்கும் தீவிர வாசகி இல்லை. பதிவுலகம் வந்த புதிதில் பல தளங்கள் சுற்றி வந்த போது தற்செயலாக இவரது கவிதை ஒன்றை படித்தேன்...என்னமோ ரொம்ப பிடிச்சது...அதிலிருந்து ஆன்லைன் வரும்போதெல்லாம் இவர் தளம் செல்வது வழக்கமாகிவிட்டது...நேரம் கிடைத்தால் படிக்க வரும் நான், பின்பு இவரது எழுத்தை படிப்பதற்காக நேரத்தை ஒதுக்க தொடங்கினேன்...!

ஒரு தடவை படிக்க ஆரம்பிச்சா மறுபடி அங்க இருந்து வெளில வர்றது ரொம்ப சிரமம்னு லேட்டா புரிஞ்சது  :)

ஒவ்வொருவருக்கும் சுஜாதா,ஜெயகாந்தன், தி.ஜானகிராமன்,பாலகுமாரன்  மாதிரி எனக்கு இவர் !!

இவர்தான் அவர்...

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை அருகிலிருக்கும் குருக்கத்தி இவரது சொந்த ஊர் என்றாலும் இவர் பிறந்தது தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர், இவர் தற்போது வசிப்பது துபாயில்...வாரியர் என்ற பெயரில் எழுதிவரும் திரு.தேவா  இன்று வரை 475 பதிவுகள் எழுதியுள்ளார். தமிழின் மேல் தீரா காதல் கொண்ட இவரது எழுத்துக்கள்  ஒவ்வொன்றும்  செந்தமிழால் செதுக்கி சீர்திருத்த சிந்தனையால் வடித்த அற்புத படைப்புகள்...


பாலகுமாரனின் எழுத்துகள் பால் ஈர்க்கப்பட்டு அவரது தீவிர ரசிகராக இருப்பவர். இவரது எழுத்துக்களில் பாலகுமாரனின் தன்மை இருப்பது இயல்பு என்று  வெளிப்படையாக ஒத்துக்கொள்வார். தனது பதிவுகளுக்கு தேர்ந்தெடுக்கும் படங்கள் இவரது படைப்பை பிரதிபலிப்பதாக, ஆயிரம் அர்த்தங்கள் உள்ளடக்கியதாக இருப்பது ஆச்சர்யம்...!

வானத்தின் தூரங்களை
என் எண்ணங்களால் அளந்துவிடுவேன்
கற்பனையில் வரும் வார்த்தைகளுக்கு
அலங்காரம் செய்து கவிதைகள் என்பேன்
தனிமையில் இருந்து கொண்டே
உற்சாக ஊர்வலங்கள் செல்வேன்
கனவுகளில் எனக்கான காதலியின்
கைப் பிடித்து போகாத தூரங்கள் போய் வருவேன்

இறை என்ற விசயத்தை....என்னுள்ளே
தேக்கி வைத்து நான் ஏகாந்த புருஷனென்பேன்
புல்லோடு சர்ச்சைகள் செய்வேன்
புயலோடு காதல் செய்வேன்
கடலோடு காவியம் பேசுவேன்
மெல்ல நடக்கையில் 

சிறகு விரித்து பறந்தே போய்விடுவேன்...!

இப்படி தன்னைத் தானே கவிதையில் விமர்சிக்கிறார். உண்மையும் அதுதான் என்பதை போல அவரது எழுத்துக்கள் இருக்கும். எழுதுவதை சுவாசமாக எண்ணுபவர். 

காதல் 

மரம், செடி, பூ, மழை, காற்று, நதி, நிலா, மொட்டை மாடி என்று எதன் மீதும் காதல் கொள்வார். காதலிப்பதுடன் நில்லாமல் கவிதைகளாக எழுதி தள்ளுவார்...படிக்கும் பலருக்கும் இவர் காதலை பெற்ற பெண் யாராக இருக்கும் என்ற ஆவல் ஏற்படுவது இயல்பு. ஆனால் அப்படி உருகி உருகி இவர் எழுத்தில் கொண்டு வந்திருப்பது ஒரு மலை, சிறு பூ, ஒரு வண்ணத்துபூச்சி, நதி இவை மீதான காதலாக கூட  இருக்கலாம். இயற்கையை இவர் அளவுக்கு நேசிக்க வேண்டுமென்றால் நாம் இவரது கண்ணால் காண வேண்டும், உணரவேண்டும்...!!  பிரபஞ்ச காதலன் இவர் !!

//உடலோடு சம்பந்தப்படாமல் நாம் நேசிக்கும் எல்லாமே காதல்தான்...உடல் வரும்போதுதான் அங்கே சுயநலங்கள் உயிர்த்துக் கொண்டு உண்மையை அழித்து விடுகின்றன.....//

காதல் மொழி பேசிக்கொண்டே மறுபக்கம்  'ஏனடா வீளுகிறாய் எழு' என்ற புரட்சி கொந்தளிக்கும் வரிகளை வீசி திணறடிப்பார்...!

ஈழம் 

தனி ஈழம் கிடைத்தே தீரும் என அழுத்தமாக பதிவு செய்வார். ஈழ மக்களுக்காக இவர் எழுதிய பதிவுகள், கவிதைகளை படிக்கும் போது இமைகள் நனைவதை தவிர்க்க முடியாது. அந்த எழுச்சியை நம் மீதும் ஏற்றிவிடுவார். தமிழனாய் பிறந்ததை பெருமையாக எண்ணுகிறேன் என ஒவ்வொரு முறையும் சொல்லி ஆனந்த பட்டுக்கொள்ளும் இவரது தமிழ் காதல் படிக்கும் நம்மையும் பெருமை கொள்ளச் செய்யும்...

ஆன்மிகம்

சிவனின் ருத்ரதாண்டவம் இவரது எழுத்தில் !! ஆன்மீகத்தை பற்றிய இவர் எழுத்துக்களை வாசிக்கும் போது தேர்ந்த முதிர்ச்சி தெரியும்...சாமியாராக போய்விடுவாரோ என்று கூட தோன்றவைக்கும். ஆனால் இவரது தேடல்கள் தொலைந்து போன ஒன்றை தேடுவதாக இல்லை...பிரபஞ்சத் தேடல் ! கடவுளைப் பற்றியதான   தேடல்,  இப்போது மனிதர்களின் தேடலாக மாறி இருக்கிறது ! இரண்டும் வேறல்ல என்பதை போன்ற எழுத்தை நான் இதுக்கு மேல சொல்லகூடாது, அவை படித்து உணரகூடியவை !

ஆன்மிகம் தொடர்பான பதிவுகள் சாதாரணமாக எழுதியதை போல் அல்லாமல் ஆழ்ந்த தியானத்தில்  அமர்ந்தபின் எழுதியதை போல் இருக்கும், ஆழ்ந்து வாசித்தால் நாமும் தியான நிலைக்குள் ஆட்படுவது சத்தியம் ! இதை  அநேக தடவைகள் நான் உணர்ந்திருக்கிறேன்.

காமம் பற்றி குறிப்பிடும் வரிகளில் ஒரு நளினமும் நாகரீகமும் இருக்கும்...ஆன்மீகத்தையும்  காமத்தையும் இணைத்து இதோ ஒரு சில வரிகள்,

//பிரபஞ்ச சூட்சுமத்தின் இத்தியாதிகளை தன்னுள் நிறைத்து வைத்திருக்கும் காமமென்னும் கடலை நாம் கடந்த இடம்.

மோகத்தில் மேகங்கள் உரசி பெருமழை பெய்விப்பது போல தாகத்தில் நாம் உரசி...சாந்தியடைந்து தட்சிணாமூர்த்தி தத்துவத்தை கற்று தேர்ந்து கலவி செய்த இடம். இருந்ததனை இருந்ததுபோல இருந்து காட்டி வாய் பேசாமல் பிரபஞ்ச ரகசியத்தின் நிழல்தனை தொட்ட இடம்...!

நானற்று, நீயுமற்று வெறுமனே இருந்து மூல இருப்பினை உணரவைத்த காமத்தின் உச்சத்தில் கடவுளைக் கண்டோம் என்று மானசீகமாய் எழுதி கையெழுத்திட்ட ஒரு மடம்.//

//விழிகளால் தீட்சைக் கொடுத்து காதலை எனக்குள் ஊற்றி, உள்ளுக்குள் அழுத்தமாய் இருந்த எல்லா ஆளுமைகளையும் அவள் உடைத்துப் போட சரணாகதியில் இறைவனின் பாதம் தேடும் பக்தனாய் நான் எனக்குள் கதறத் தொடங்கி இருந்தேன். காமம் உடல் வழியே உச்சம் தேடி அந்த உச்சத்தின் வழியே கடவுள் என்னும் சூட்சுமத்தை உணரும் ஒரு வழிமுறை... , //

இவரது எல்லா பதிவுகளையும் படித்தாலும், சிலவற்றுக்கு கமென்ட் எப்படி, என்ன  போடனு யோசிச்சிட்டே வெளில வந்துடுவேன். ஏதோ நாம ஒன்னை எழுத அது அந்த படைப்பையே திசை திருப்பி கெடுத்துவிடுமோனு  ஒரு பயம் தான் !! :)  என்னை மாதிரிதான் நிறைய பேர் இருக்காங்கனு நினைக்கிறேன் . :)
 

அவரது படைப்புகளில் சில அறிமுகங்கள்...

ரஜினியின் தீவிர ரசிகர். அவர் நடித்த படங்களை விட ரஜினி என்ற மனிதரின் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். பல பதிவுகள் இவரை பற்றி எழுதி இருக்கிறார். அதில் ஒன்று  ரஜினி என்னும் வசீகரம் 

தனது 200 வது பதிவில் தந்தையை பற்றி எழுதி இருப்பார், படித்தவர்கள் கண்கலங்காமல் வெளிவர இயலாது. உணர்வு பூர்வமான உணர்ச்சி கலவை அப்பா 

காதலை ரசித்து கொண்டாடுபவர்களுக்காக  சுவாசமே காதலாக  

கவிதைகள் அதிலும் காதல் கவிதைகளின் ரசிகரா நீங்கள், அப்படினா கண்டிப்பா இந்த காதல் கவிதைகள் படித்து பாருங்கள். காதலை உணருவீர்கள், காதலிக்க தொடங்கிவிடுவீர்கள்

ஆன்மிகம் என்பது மதம் சம்பந்தப்பட்டதா இல்லையா என உங்களுக்குள் ஒரு கேள்வி இருந்தால் அவசியம் இங்கே கிளிக் செய்யுங்கள், படித்து முடித்ததும் பதிலும் கிடைக்கும் கூடவே ஒரு தெளிவும் பிறக்கும்.

ஆன்மிகம் எழுதியவர் இந்த கிராமத்தான் தானா என வியக்கவைக்கும்,
கிராமத்தாய்ங்க தான்  நாங்க 

கண்களை கலங்கவைத்து, மனதை கொந்தளிக்க வைக்கும் ஈழம் 

எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு வீரத்தமிழச்சி இந்த வெட்டுடையாள் 

லோக்கல் தமிழ், சென்னை தமிழ், அந்த தமிழ், இந்த தமிழ்னு பல விதமா எழுதுற திறமையை நிஜமா பாராட்டனும். அப்புறம் சீரியஸ், நக்கல், நையாண்டி, தெய்வீகம், அன்பு, பாசம், காதல், சிநேகம், வீரம்,செண்டிமெண்ட், கோபம், துக்கம், ஆதங்கம், ஆவேசம், ஏக்கம் அப்டி இப்டின்னு எல்லாம் உணர்ச்சியையும் கலந்து கட்டி எழுதுற இவரது எழுத்தை இதுவரை படிக்கவில்லை என்றால் லைப்ல எதையோ மிஸ் பண்ணிடீங்கனு அர்த்தம் !

இன்னும் எழுதிக்கொண்டே போகலாம், ஆனால் முடிச்சாகனுமே என்ற ஒரு யோசனையிலும் எப்படி முடிக்க என்ற தர்மசங்கடத்திலும், ஒருவழியாக முடிக்கிறேன்.

அப்புறம் விமர்சனம் என்றால் நிறைகுறைகளை சொல்லணும். நிறை சொல்லிட்டேன், குறையும் சொல்லிடுறேன். (இங்க சொன்னா தான் உண்டு) :)

தேவா, 

* உங்களின் சில படைப்புகளின் பொருள் எல்லோராலும் புரிந்துகொள்ள முடியாதவை, கொஞ்சம் எளிய நடையில் இருந்தால்  புரிந்துகொள்ள முடியும். சாதாரண தமிழையே சிறிது ஆங்கிலம் கலந்து சொன்னால் தான் புரிகிறது. ஆன்மிகம் பற்றியவை செந்தமிழில் இருந்தால் போதுமானது, ஆனால் அன்றாட சம்பவங்களை பற்றி எழுதும் போது  எளிய முறையை கையாண்டால் நன்றாக இருக்கும். வேகமாக படித்து கடந்து செல்லும் மனநிலையில் தான் இங்கே பலரும் இருக்கிறார்கள், தவிரவும் மற்றவர்கள் படிக்கவேண்டும் என்று தானே இங்கே எழுதுகிறோம்.

ஒரு படைப்பாளியின் படைப்பு பலருக்கும் சென்று சேர்ந்தால் தான் அந்த படைப்பு முழுமை பெறும்.  நல்ல எழுத்துக்களை பலர் அறியாமல் போனால் மோசமான எழுத்துக்கள் தான் இங்கே பரவி நிரவி இருக்கும். நாளைய தலைமுறைகள் அத்தகைய எழுத்துக்களை படித்துவிட்டு இதுதான் நம் முன்னோர்களின் நிலை என்று எண்ணிவிட கூடிய ஆபத்து இருக்கிறது. கம்பனையும் வள்ளுவனையும் பாரதியையும் இன்றைய தலைமுறையில் எத்தனை பேருக்கு தெரியும்...??! அந்த எழுத்துக்களை புரிந்துகொள்ளக் கூடிய அளவில் இல்லை இன்றைய நம் கல்விமுறை...!! புத்தகம் படிக்கும் வழக்கம் குறைந்துவிட்ட இந்நாளில் இணையம் ஒன்றே அவர்கள் முன் இருக்கிறது. இங்கே நல்ல எழுத்துக்கள் அதிகம் படிக்கப்படணும், படிக்க வைக்கப்படணும்.

* 'புரிதல் உள்ள ஒருவர், இருவர் என் எழுத்தை படித்தால் போதும்' என்று எண்ணாதீர்கள். எளிய தமிழில் அதிகம் எழுதுங்கள்.

பாரதி அவர் வாழ்ந்த காலத்தில் அவ்வளவாக கொண்டாடப்படவில்லை காரணம் அவர்களை விட்டு தனித்து தெரிந்தார்...!!சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட நீங்கள், சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை எழுதிவிட்டேன் என்பதுடன் நின்றுவிடக்கூடாது...!!

*  அப்புறம் ஒரு தொடர் பதிவை முடித்துவிட்டு அடுத்ததை தொடர்ந்தால் வாசகர்களுக்கு தொடர்ச்சி புரியும். (முன்னாடி என்ன படிச்சோம்னு மறந்து போய்  மீண்டும் தேடி பிடித்து படிக்கிறேன்)

*  சிறந்த தளங்களின் பதிவுகளை படித்தால் அங்கே உங்களின் கருத்துகளை பதிய வைக்கலாம். பதிவுலகில் எழுதுவதை பலர் குறைத்து கொண்டிருக்கிறார்கள். உங்களது கருத்துக்கள் அவர்களை உத்வேகம், உற்சாகம் கொள்ள வைக்கலாம். இதற்காக உங்களின் நேரத்தில் கொஞ்சம் இதுக்கு  ஒதுக்கினால் என்ன ?! 

இணைய உறவுகளுக்கு ஒரு வேண்டுகோள் 

இணையத்தில் நல்லதும் கெட்டதுமாய் பல விசயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. நமக்கு நல்லது எது என தேடி எடுத்துக்கொள்வதை போல இவரை போன்றோரின் எழுத்துகளையும் தேடி எடுக்கவேண்டும்.

அங்கே சென்று பின்னூட்டம் இட வேண்டும் என சொல்லவில்லை ஆனால் அவசியம் படியுங்கள்...இது வேண்டுகோள் அல்ல விருப்பம்...நான் சுவைத்த நல்ல தமிழை, நல்ல பண்பை , நல்ல எழுத்தை நீங்களும் சுவைத்து பாருங்கள் !! மோசமான எழுத்துக்களும் மலிந்து கிடக்கும் இங்கே இவரை போன்றோரது எழுத்துக்களை நாம் கவனிக்க தவறிவிடகூடாது.

படைப்பாளிகள் பலர் அவர்கள் வாழும் காலத்தில் கண்டுகொள்ளபடாமல் போய்விட்ட துர்பாக்கிய நிலை நாம் அறிந்ததே...! அதே தவறை இவரை போன்றோருக்கும் நாம் செய்துவிட கூடாது...நம்மால் கண்டுகொள்ளப்பட்டு அங்கீகரிக்கபட்டால் மேலும் பலர் வெளி வருவார்கள்...நம்மால் நல்ல எழுத்தை படைக்க இயலாவிட்டாலும் படைப்பாளிகளை உற்சாக படுத்துவோம்...ஒரு சமூகம் நல்ல எழுத்தாளர்களாலேயே கட்டமைக்க படுகிறது.

பின் குறிப்பு 

இனி எப்படியாவது தொடர்ந்து எனக்கு தெரிந்த படைப்பாளிகளை பற்றி எழுதவேண்டும். மூணாவதாக  ஒருத்தரை எழுதனும்னு முடிவு பண்ணி இருக்கிறேன்...! அவர் ரொம்ப பிரபலமா தான் இருந்தாரு, இப்போ கொஞ்ச நாளா சிலருக்கு பிராபளமா தெரிய ஆரம்பிச்சு இருக்காரு...!! (நான் எழுதினதுக்கு அப்புறம் எனக்கும் பிராபளமா ஆகிடுவாரோ !?) முடிவு பண்ணியாச்சு பார்ப்போம். அப்புறம் இந்த தடவை சீக்கிரம் எழுதிடுவேன்னு நினைக்கிறேன் :-)




பிரியங்களுடன்
கௌசல்யா 

Tweet

23 கருத்துகள்:

  1. படைப்பாளி பற்ரி அருமையான விமர்சனம்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  2. வாரியர் பற்றி தங்கள் மூலமாக இப்போது தான் அறிந்து கொண்டேன் நன்றி அவரது தளம் சென்று படிக்கிறேன்

    பதிலளிநீக்கு

  3. நல்ல பதிவர் அறிமுகள் சகோ
    பதிவரின் படைப்புக்களின் அழகிய அறிமுகள்
    அழகிய எழுத்துக் கையாழல்


    நிறைய நல்ல விஷயங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது
    ம்ம்ம் ..அருமை பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  4. அருமையான விரிவான அறிமுகம் அவருக்கு சொன்ன அறிவுரைகளும் நன்று

    பதிலளிநீக்கு
  5. தேவா.,அவரது எழுத்துநடைதான் அவரை அடையாளப்படுத்துகிறது.,

    அதை மாற்றி அமைத்தால் அது ரசிக்கும்படியாக இருக்காது. ஆர்வமுள்ளவர்கள் சற்றே மெதுவாக உள்வாங்கிப்படித்தாலே போதும். எளிதில் புரியக்கூடிய உணர்வுபூர்வமான எழுத்துகள்.,

    பாராட்டப்படவேண்டிய செயல் உங்களுடையது கெளசல்யாராஜ் :)

    பதிலளிநீக்கு
  6. @@நிகழ்காலத்தில் சிவா said...

    // தேவா.,அவரது எழுத்துநடைதான் அவரை அடையாளப்படுத்துகிறது.,

    அதை மாற்றி அமைத்தால் அது ரசிக்கும்படியாக இருக்காது.//

    நான் முழுதும் எங்கே மாற்றி அமைக்க சொன்னேன்...??? இதை கவனிக்கவில்லையா ?

    //ஆன்மிகம் பற்றியவை செந்தமிழில் இருந்தால் போதுமானது, ஆனால் அன்றாட சம்பவங்களை பற்றி எழுதும் போது எளிய முறையை கையாண்டால் நன்றாக இருக்கும்.//

    ஆன்மவிழிப்பு தேவை என சொல்பவர் அவர்,சாதாரண தமிழை பேசவும் புரியவும் இயலாத இன்றைய தமிழர்களிடத்தில் இன்னும் எளிமையாக சொன்னால் பலரை சென்று சேரும் என சொல்கிறேன். அவரது அத்தகைய நடை உங்களை போன்றோருக்கு பிடிக்கும் என்பது வேற, பலருக்கும் பிடிக்கவேண்டும் என்பது வேற !!

    அவரால் எந்த நடையிலும் எழுத முடியும் என்பதால் நான் முன் வைக்கும் என் விருப்பம் அது !! ஒரே விதமாக மட்டும் எழுதுபவர்களை உங்க எழுத்தை மாத்துங்க என்று சொன்னால் அது வேடிக்கை :))

    நன்றி சிவா.

    பதிலளிநீக்கு
  7. @@இராஜராஜேஸ்வரி...

    நன்றிகள் தோழி.



    @@r.v.saravanan said...

    மிக்க நன்றிகள்



    @@செய்தாலி...

    மிக்க நன்றிகள்

    பதிலளிநீக்கு
  8. @@மோகன் குமார் said...

    அறிவுரை மாதிரி அல்ல, ஆலோசனை, விருப்பம் இந்த மாதிரி எடுத்துக்கலாம்.

    நன்றிகள் சார்.

    பதிலளிநீக்கு
  9. ராமர் பாலம் கட்டும் போது அணில் மண் சுமந்து சென்றது போல ஒரு செயலுக்கான ஊக்கம் உங்கள் எழுத்து தோழி ....அருமை பாராட்டுகள் நல்லது எங்கிருந்தாலும் அதை தேடி சென்று படிக்கலாம் .....பிழைகளை மனம் கோணாமல் எடுத்து சொல்லலாம் என்ற உங்கள் அடிப்படை நாகரிகம் என்னை வியக்க வைத்தது தொடர்ந்து எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
  10. அன்பின் கெளசல்யா,

    கட்டுக்களின்றி நகரும் காட்டாறாய் நகரும் வாழ்க்கையினூடே நினைவுகளைப் பதிவு செய்யும் கருவியாய் நான் இருக்க கர்த்தாவின் செயல் தொடர்ந்து கொண்டிருக்கிறது!

    வார்த்தைகளை தேடிப்பிடித்து நாம் எடுப்பதில்லை. வார்த்தைகளை வார்த்தைகளே பெற்றுக் கொடுக்கின்றன. அப்படியாய் வார்த்தைகளை கோர்க்கும் போது புத்தியில் பதிந்து கிடக்கும் சமகாலத்து நினைவுகளும் வாசித்த புத்தகங்களில் இருந்து பெறப்பட்ட அனுபவக் கோர்வகைகளும் ஒன்று சேர, ஒட்டு மொத்த உணர்வுகளின் வெளிப்பாடாய் ஏதோ ஒன்றை எழுதி வைத்து விடுகிறோம்.

    எழுதுபவன் எப்போதும் எழுத்துக்குச் சொந்தமானவன் அல்ல. எழுதவேண்டும் என்று தீர்மானித்த ஒருவன்.. நீரூற்றிக் கொண்டிருக்கிறான்... ஒரு சேவகனாய் அதை கை குவித்து வாங்கிப் பருகி நிறைவுகளை நினைவுகளாய் எழுதிக் கொண்டிருக்கிறோம்.
    உங்களை ஒரு கட்டுரையை எழுதச் சொல்லி அங்கே காட்சிப் படுத்திக் கொண்டிருப்பவனும் அவன் தான்...!

    வாசித்து உள்வாங்கி அதை விமர்சித்து ஜனிப்பின் மூலத்தை உள்வாங்கிக் கொள்ளும் ஒருவரை கொண்டிருப்பது மிகப்பெரிய பாக்கியம். அந்த நிறைவு நிறைய எழுத வைக்கும். நிறைய எழுத நிறைய வாசிக்க வைக்கும், கற்றுக் கொள்ள வைக்கும்....புரிதலை அதிகப்படுத்தும். புரிதலில் ஏற்படும் நிதானத்தில் மனதைச் சாந்தப்படுத்தும். சாந்தம் பேரமைதியைக் கொடுக்கும். பேரமைதி கருவியைக் கர்த்தாவிடம் கொண்டு சேர்க்கும்...!

    தங்களின் புரிதலுக்கு எனது நன்றிகள்!

    ஏக இறைக்கு எனது வணக்கங்கள்...!

    " பூசுவதும் வெண்ணீறு
    பூண்பதுவும் பொங்கரவம்
    பேசுவதும் திருவாயால்
    மறைபோலுங் காணேடீ
    பூசுவதும் பேசுவதும்
    பூண்பதுவுங் கொண்டென்னை
    ஈசனவன் எவ்வுயிர்க்கும்
    இயல்பானான் சாழலோ "

    பதிலளிநீக்கு

  11. இயற்கை காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் தம்பதியர் உங்கள் இருவருக்கும் சல்யூட். பசுமை குறித்த அறிவினை வளர்க்க எனக்கு உதவிய நிகழ்ச்சி இது. நன்றி.

    பதிலளிநீக்கு
  12. அன்பின் இனிய சகோதரி! தேவாவைப் பற்றி த‍ங்கள் எழுதியுள்ள கட்டுரை மிகவும் சரியான ஆய்வாகும் தேவா அவர்களின் பதிவு படிக்கும் என் போன்ற வாசகர்களுக்கு இனிக்கும் பால் கோவா ஆகும்! நானும் பலவற்றை படித்திருந்தாலும் மறுமொழி அதிகம் இடுவதில்லை! காரணம் நீங்கள் கொண்ட அதே அச்சம்தான் எனக்கும்

    ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல தாங்கள் முதலில் எடுத்துக் காட்டியுள்ள கவிதை ஒன்றே போதும் அவரது எழுத்தின் ஆற்றலை விளக்க!

    பதிலளிநீக்கு
  13. அவரைப் பற்றிய விரிவான விளக்கங்களுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  14. தி ஜானகிராமனை சொல்றீங்கனு நெனைக்கிறேன். :-)

    பதிலளிநீக்கு
  15. @@வருண் said...

    //தி ஜானகிராமனை சொல்றீங்கனு நெனைக்கிறேன். :-)//

    பார்த்தீங்களா...இதுக்குதான் வருண் வரணும். :))

    மாத்திட்டேன். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  16. அருமையான ஆய்வு... தேவாவின் பிறந்த நாளில் நல்ல பரிசு.
    காதல், ஈழம், ஆன்மிகம் என அவரது படைப்புகளை மேற்கோள் காட்டியது அழகு. குறைகளை சொன்ன விதம் மேம்பாட்டிற்கு உகந்தவை...
    தேவாவும் நானும் ஒரே கல்லூரியில் படித்தோம். 18 வருடங்களுக்குப் பிறகு துபாயில் சந்தித்தேன். அவருடைய பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுவது சற்று சிரமமானது. ஆனால், படைப்பாளியாய் படிப்பவரை சொல்லும் நிகழ்வுகளை கண் முன் கொண்டுவரும் அதே சமயம், அவருடைய எண்ண ஓட்டங்களையும் அடுத்தவருக்கு புரிய வைத்து விடுவார். தேவாவை தேடாமல் அடுத்தவர்களுக்கு அடையாளம் காட்டும் விதமாய் அமைந்தது தங்கள் பதிவு.

    நன்றி தோழி...

    பதிலளிநீக்கு
  17. @@கோவை மு சரளா said...

    //நல்லது எங்கிருந்தாலும் அதை தேடி சென்று படிக்கலாம் .....//

    ஆமாம் நிச்சயமாக !

    உங்களின் புரிதலுக்கும், பாராட்டுக்கும் மகிழ்கிறேன் தோழி .

    நன்றி.

    பதிலளிநீக்கு
  18. @@dheva said...

    // வார்த்தைகளை கோர்க்கும் போது புத்தியில் பதிந்து கிடக்கும் சமகாலத்து நினைவுகளும் வாசித்த புத்தகங்களில் இருந்து பெறப்பட்ட அனுபவக் கோர்வகைகளும் ஒன்று சேர, ஒட்டு மொத்த உணர்வுகளின் வெளிப்பாடாய் ஏதோ ஒன்றை எழுதி வைத்து விடுகிறோம்.//

    உண்மை.

    //எழுதுபவன் எப்போதும் எழுத்துக்குச் சொந்தமானவன் அல்ல. எழுதவேண்டும் என்று தீர்மானித்த ஒருவன்.. நீரூற்றிக் கொண்டிருக்கிறான்... ஒரு சேவகனாய் அதை கை குவித்து வாங்கிப் பருகி நிறைவுகளை நினைவுகளாய் எழுதிக் கொண்டிருக்கிறோம்.//

    இப்படி எல்லோராலும் சொல்ல முடிவதில்லை. பாராட்டுகிறேன்.

    //உங்களை ஒரு கட்டுரையை எழுதச் சொல்லி அங்கே காட்சிப் படுத்திக் கொண்டிருப்பவனும் அவன் தான்...!//

    இப்படி கொண்டு வந்து முடிச்சதுக்கு பிறகு நான் என்ன சொல்றதுங்க...?!! :)

    உணர்வுகளை எந்த பூச்சும் இல்லாமல் சொல்லும் இந்த எழுத்து மிக பிடிக்கவேதான் இந்த பதிவை எழுத எனக்கு ஒரு வருடம் பிடித்தது. :)

    குறைகள் என்று குறிப்பிட்டு எழுதி இருந்தபோதும் அதை நீங்க எடுத்துகொண்ட விதமும் விளக்கமும் மிக அருமை.

    எப்போதும் உங்களிடம் இருந்து கற்கும் இடத்தில் நான் இருக்கிறேன் என்பதை அறிவேன்... எந்த அளவிற்கு என்னை உங்கள் எழுத்துக்கள் பக்குவபடுத்தி இருக்கிறது என்பதை உணர்ந்தும் இருக்கிறேன்.

    இணையத்தில் இருக்கும் இவை புத்தகத்தில் வெளிவர வேண்டும். அந்நாளை விரைவில் எதிர்ப்பார்க்கிறேன்.

    நன்றிகள் தேவா!!!


    பதிலளிநீக்கு
  19. @@! சிவகுமார் ! said...

    //இயற்கை காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் தம்பதியர் உங்கள் இருவருக்கும் சல்யூட்.//

    நன்றிகள் சிவகுமார்.

    பதிலளிநீக்கு
  20. @@புலவர் சா இராமாநுசம் said...

    //தேவா அவர்களின் பதிவு படிக்கும் என் போன்ற வாசகர்களுக்கு இனிக்கும் பால் கோவா ஆகும்!//

    எவ்வளவு ரசித்திருந்தால் இப்படி சொல்லி இருப்பீங்க? :)

    // நானும் பலவற்றை படித்திருந்தாலும் மறுமொழி அதிகம் இடுவதில்லை! காரணம் நீங்கள் கொண்ட அதே அச்சம்தான் எனக்கும்//

    என்னங்க ஐயா நீங்களுமா...?! எனக்கு இது ஆச்சர்யம்.

    //ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல தாங்கள் முதலில் எடுத்துக் காட்டியுள்ள கவிதை ஒன்றே போதும் அவரது எழுத்தின் ஆற்றலை விளக்க!//

    மிகவும் நன்றிகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  21. @@திண்டுக்கல் தனபாலன்...

    நன்றிகள்

    பதிலளிநீக்கு
  22. @@Shankar M said...

    //தேவாவின் பிறந்த நாளில் நல்ல பரிசு.//

    சரியா சொல்லிடீங்க, ஆனா இது பரிசானு அவரத்தான் கேட்கணும். :)

    //தேவாவும் நானும் ஒரே கல்லூரியில் படித்தோம். 18 வருடங்களுக்குப் பிறகு துபாயில் சந்தித்தேன்.//

    இருவரின் அழகான தமிழுக்கும் அந்த கல்லூரிதான் காரணமா ?!

    //படைப்பாளியாய் படிப்பவரை சொல்லும் நிகழ்வுகளை கண் முன் கொண்டுவரும் அதே சமயம், அவருடைய எண்ண ஓட்டங்களையும் அடுத்தவருக்கு புரிய வைத்து விடுவார்.//

    உங்களின் சரியான புரிதலுக்கு மகிழ்கிறேன்.

    நன்றிகள் சங்கர்!!

    பதிலளிநீக்கு
  23. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_12.html) சென்று பார்க்கவும்...

    நன்றி...

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...