Tuesday, January 11

11:12 AM
48


பதிவுலகத்தில் சினிமா துறையை பற்றியும் புதிதாக வெளியாகும் சினிமாக்கள் பற்றியும் விமர்சனங்கள் எழுதபடுகின்றன. பதிவுலகத்தில் இருந்துகொண்டு பதிவர்கள் பற்றியும் , பதிவுகள் பற்றியும் விமர்சனம் எழுதினால் என்ன என்று தோன்றியதின் விளைவே இந்த பதிவு. இனி இது போல் தொடந்து பதிவுகள் வெளியிடப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்.....?!! அவ்வாறு விமர்ச்சிக்கும் போது நிறைகள், குறைகள் இரண்டும் அலசப்படும். (எதுக்கு இந்த வேண்டாத  வேலை என்று உள்ளிருந்து ஒரு குரல் வந்தாலும் இப்போதைக்கு என் முடிவை மாத்திக்கிற மாதிரி இல்லை...!!?)

பதிவர் - ஒரு சின்ன அறிமுகம் 

முதலில் இந்த வாரம் என்னிடம் வகையாக வந்து மாட்டியவர் எங்க ஊர்க்காரர் ஒருவர் தான். இவர் ரொம்ப பெரிய ஆள்.  நாள் தவறாமல் செய்திதாளில் வலம் வருபவர்...அதை விட அதிகமாக  ஊர் முழுவதும் வலம் வருபவர்...! இவர் ஒரு இடத்திற்கு வந்தால் அங்கே ஏதோ விபரீதம்  (சம்பந்த பட்டவங்களுக்கு...!?),  நல்ல காரியம் (மக்களுக்கு...!?) நடக்க போகிறது என்று அர்த்தம். சினிமாவில் ஹீரோ அதிரடியா சாகசம் பண்ணினா உடனே நாம அடிக்கிற விசில் என்ன ? கைதட்டல் என்ன ? ஆனா இவர் சத்தமே இல்லாமல் பல நல்ல விசயங்களை அதிரடியாக செய்து கொண்டு வருகிறார்.


                                                          (இடது  புறம் நிற்பவர்)

யார் இவர் ?

இவரது பெயர் திரு.அ.ரா.சங்கரலிங்கம் அவர்கள் . திருநெல்வேலி மாநகராட்சியில் உணவு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். பொது  சுகாதாரம், உணவு பாதுகாப்பு துறையில் 26   ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். இந்த அனுபவங்கள் அனைத்தையும் உலகத்திற்கு எடுத்துச் சொல்லனும் என்கிற தீராத வேட்கையுடன் இருக்கிறவர். 

இவரது நண்பர் திரு. ஜோசப்  சார் அவர்களின் விருப்பத்தின்  காரணமாக வலையுலகில் கால் பதித்து எழுதி வருகிறார் . பல அதிர்ச்சி தரக்கூடிய தகவல்களை அனாயசமாக சொல்லி தெளிவு படுத்துகிறார். 

எத்தகைய பதிவுகள் ?! 

உணவு பொருள்களில் கலப்படம் எவ்வாறு எல்லாம் கலக்கப்படுகிறது, எந்த பொருளில் என்ன கலப்படம் செய்யப்பட்டு இருக்கிறது ? அவற்றை  எப்படி கண்டறிவது ? எப்படி தவிர்ப்பது என்று பல விசயங்களை  பற்றியும்  எழுதி வருகிறார். நெல்லையில் இவர் தலைமையில் செய்யப்படும் ஆய்வுகள், இவர் கலந்து கொள்ளும் கூட்டங்கள், கலந்துரையாடல்கள்  போன்றவற்றை பற்றியும் அதை குறித்து பத்திரிகைகளில் வந்த செய்திகள், வீடியோக்களையும்  பதிவில் இணைத்திருக்கிறார். 

இரண்டு நாளுக்கு முன்பு ஆங்கிலத்திலும்  பதிவுகளை வெளியிட எண்ணி புதிதாக ஆங்கில மொழி பேசும் தளம் ஒன்றும்  தொடங்கி இருக்கிறார். தமிழில் பதிவிடும் போதெல்லாம் அப்படியே ஆங்கிலத்திலும் வெளி வரும் என்று சொல்லி இருக்கிறார். தமிழ் தெரியாதவர்களுக்கும்  உதவியாக  இருக்கும்.
அதன் லிங்க் http://way2foodsafety.blogspot.com/

அனைத்து பதிவுகளுமே நாம் படித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இருநூறு பதிவுகளை எட்ட போகிறார்...எந்த பதிவு முக்கியம் என்று குறிப்பிட்டு சொல்வது மிக கடினம்.  

* தயிரில் கலப்படம் என்ற பதிவை படித்து ஆச்சரியம் ஆகிவிட்டது...அந்த பதிவின் லிங்க்  

* இவரது இந்த பதிவை பார்த்தால் ஆப்பிள் மேல்  ஒரு பயம் கலந்த மரியாதை வருவது நிச்சயம். 

* இவரது அதிரடி நடவடிக்கைக்கு ஒரு சாம்பிள் இதோ, http://unavuulagam.blogspot.com/2010_11_01_archive.html

* தூதுவாளை மிட்டாயில் கலப்படம்...மிக கொடுமைங்க இது. பாதிக்கபடுவது குழந்தைகள் என்கிற போது மனம் பதைக்கிறது...இதையும் படிங்க http://unavuulagam.blogspot.com/2010/11/blog-post_14.html 


சிறிய டீ கடை முதல் பெரிய  ஹோட்டல் வரை சென்று ஆய்வு செய்து உணவு பொருளில் கலப்படம் செய்ய பட்டோ அல்லது சுகாதார மற்ற வகையில் வைக்க பட்டிருந்தாலோ உடனே அதிரடியாக எதிரான நடவடிக்கை எடுக்கிறார். பல கடைகள் சீல் வைக்க பட்டு இருக்கின்றன. இவர் ஆய்வு செய்கிறார் என்றால் பல கடைகளின் உரிமையாளர்களுக்கும் வயிற்றில் புளியை கரைக்கும். 

உலகத்திற்க்கே அல்வா கொடுக்கிற திருநெல்வேலியில் இருக்கிற அல்வா கடைகளையும்  இவர் விட்டு வைக்கவில்லை.....! சமீபத்தில் ஒரு பிரபல கடையை அடைத்து சீல் வைத்தவர்.    

நேரில் இவரிடம் பலரும் கேட்கும்  கேள்விகளில் முக்கியமான ஒன்று,

இத்தனை ரெய்டுகள், இத்தனை வழக்குகள், அத்தனையும் செய்யும் போது மிரட்டல் வராதா ?? அடியாட்கள் வரமாட்டார்களா ?? என்று 

அதற்கு இவரின் அதிரடி பதில் " வராமல் என்ன, வரத்தான் செய்யும், அதையும் சமாளிக்க தெரிய வேண்டும், அதுதான்  சாமார்த்தியம்" என்பது தான்.

விருதுகள் 

இவரது சீரிய பணிக்காக பல விருதுகள் வாங்கி கொண்டே இருக்கிறார்...!! எண்ணிக்கை அவருக்கே தெரியாது என்று நினைக்கிறேன்.  

ஒரு பதிவில் விருது வாங்கியதை பற்றி குறிப்பிட்டு இந்த விருதுகள் எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்றாலுமே பதிவிற்கு வருகை தரும் நண்பர்கள் தரும் ஊக்கம் ஒரு அலாதி மகிழ்ச்சிதான் என்று சொல்லி இருப்பார். 

ஒரு வேண்டுகோள் நண்பர்களே 

தனது ஓய்வில்லாத வேலைகளுக்கு நடுவிலும் நேரம் ஒதுக்கி, பதிவுகளை எழுதி மக்களிடம் கொண்டு போய் சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தணும் என்கிற இவரது ஆர்வம் பாராட்டபடகூடியது.  

இவர் நமது தளத்துக்கு வருவாரா, பின்னூட்டம் இடுவாரா என்று யோசிக்காமல் நமக்கு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பாக இதை கருதி இந்த நல்ல மனிதரை நாம் உற்சாகபடுத்த வேண்டும். 

நல்ல அதிகாரிகள் நம்மிடையே இல்லையே என்கிற ஆதங்கம் நம்மில் பலருக்கும் இருக்கும், நமக்கு இப்போது அறிமுகமாகிற இவரை உற்சாகபடுத்துவத்தின் மூலம் சிறிது நிம்மதி நமக்கு ஏற்படுவது நிச்சயம். 
   
நேரம் கிடைக்கும் போது அவசியம் எல்லோரும் இவரது தளம் சென்று பதிவுகளை படிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்.

நல்ல விஷயம், நல்ல மனிதர் எங்கே இருந்தாலும் தேடி கண்டுபிடிச்சி முதலில் பாராட்டுவது பதிவுலகம் தான் என்பதை மற்றவர் தெரிந்து கொள்ள கிடைத்த ஒரு சந்தர்ப்பம்  இது.
  
நிறைகள், குறைகள் :

இவரது தளத்தை பொறுத்தவரை நிறைகள் தான் நிறைய இருக்கிறது...குறைகள் எதுவும் தெரியவில்லை. குறைகள் ஏதும் உங்களுக்கு தெரிந்தாலும் சொல்லுங்கள், அதை ஏற்று கொண்டு சரி செய்து கொள்ள கூடிய உயரிய நல்ல பண்பு கொண்டவர்.   

லேட்டஸ்ட் செய்தி 

நேற்று நெல்லை நகரில் இருந்த அனைத்து கட்சி சம்பந்த பட்ட போர்டுகள் (விளம்பர பலகைகள் ) அகற்றபட்டன. 

 பின் குறிப்பு 

ஒரு வழியாக  முதல் விமர்சனம் திருப்தியா முடிந்தது...அடுத்த பதிவர் யார் என்று முடிவு செய்து விட்டேன்...அவரை பற்றிய விமர்சனம் விரைவில்...க்ளு - அவர் ஒரு பிரபல ஆண் பதிவர் !!?


பிரியங்களுடன்
கௌசல்யா Tweet

48 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...