வெள்ளி, செப்டம்பர் 16

9:53 AM
31நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இரண்டாவது அணு உலை கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நேரத்தில் அணு உலை திட்டத்தை கைவிட கோரி தற்போது கூடங்குளம் அருகில் உள்ள இடிந்தகரையில் ஆறாவது நாளாக 10 ஆயிரம் பேருக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இந்த உண்ணாவிரதம் நேற்று பேசி இன்று தொடங்கப்பட்டது இல்லை, பல காலமாக மக்கள் போராடிவருகிறார்கள்...ஒவ்வொரு போராட்டத்திற்கும் பல சமாதானங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது...!! பொறுத்து பார்த்த மக்கள் இப்போது உண்ணாவிரதம் மேற்கொண்டு அமைதியான முறையில் போராடி வருகிறார்கள். காந்திய வழி என்றால் எல்லோருக்கும் உடனே புரிந்துவிடும். யாரோ ஒருவர் போராடுகிறார் என்றால் மக்கள் ஒன்று சேர்ந்து ஆதரவு தருவார்கள், ஆனால் மக்கள் போராடினால் அதற்கு ஆதரவு கிடைப்பது இல்லை என்பது ஒரு சாபக்கேடு ?

முக்கியமாக ஊடகங்கள் பெரிதாக இதை ஏன் கண்டுகொள்ளவில்லை...?! அணு உலைகளை பற்றிய முழு விழிப்புணர்வு நம்மிடையே இல்லையா?  குறிப்பிட்ட சில ஊர்களை பற்றிய பிரச்சனை, நம்ம வீடு பத்திரமாக தானே இருக்கிறது என்கிற மனோபாவமா ?? மத்திய அரசுக்கு, தமிழ்நாடு தானே என்கிற அலட்சியமா ??  

எது எப்படி என்றாலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஆறு நாட்களாக உண்ணாவிரதம் (இதில் 127 பேர் ஆறுநாளும் முழுமையான உண்ணாவிரதம் )இருந்து வரும் வேளையில் ஏன் இன்னும் அரசாங்கத்தால் சரியாக கவனிக்க படவில்லை...??! அவர்களில் சிலர் மயங்கிய நிலையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக வரும் தகவல்கள் யார் காதையும் எட்டவில்லையா??


மக்கள் ஏன் மௌனமாக இருந்தார்கள் ?

ஒரு அணு உலை அமைக்கும் போது ஒன்றும் சொல்லாத மக்கள், மின்சாரம் தயாரிக்க எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்ட பின்னர் இப்போது எதிர்க்க என்ன காரணம்...??! இத்தனை வருடம் என்ன செய்தார்கள் என்று பலரின் மனதிலும் ஒரு கேள்வி இருக்கிறது...?!!

ஆங்கிலேயர்களை ஆரம்பத்தில் வரவேற்கவே செய்தோம், கெடுதல் என்னவென்று தெரியாமல்...!! அதன் பின் எவ்வளவு போராடி வெளியேற்றினோம் என்பதை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன் !!

அணு உலையை பொருத்தவரை நம்ம மக்களின் அறியாமை, இயலாமை அன்றி வேறு என்ன காரணம் இருக்க முடியும்...?! கூடங்குளத்தில் அணு உலை அமைந்தால் இப்பகுதி மக்களுக்கு வேலை கிடைக்கும், குடியிருக்க மாற்று இடங்களும் அமைக்கப்படும் என்று ஆரம்பத்தில் தடுக்காமல் இருந்துள்ளனர்...இப்போது தான் அணு உலை என்றால் என்ன? அதன் கதிரியக்கம் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற தெளிவே வந்திருக்கிறது.இதன் ஆபத்து பற்றி தெரிந்ததால் எதிர்க்கின்றனர்.  சமீபத்தில் ஜப்பானில்  என்ன நடந்தது என்பதை பற்றி அறிந்ததால் கூட இருக்கலாம்.

எது எப்படியோ இப்போது இத்தனை மக்கள் தங்கள் உயிருக்காகவும் எதிர்காலத்தின் மேல் உள்ள அச்சத்தினாலும் போராடி வருகின்றனர்...இனியும் அரசாங்கம் இப்படி அமைதியாக இருக்காமல் உடனடியாக மக்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.

* அணு உலையால் ஆபத்து இருக்கிறதா இல்லையா ?

* அணு உலையால் என்ன நன்மை ?

கேள்விகளுக்கான பதில் மக்களிடம் தெளிவாக எடுத்துரைக்க பட்டதா ??

ஒரு வேளை விபத்து நடந்துவிட்டால் அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்கிற உத்தரவாதம் கொடுக்க முடியுமா ?

கதிரியக்கத்தின் பாதிப்பு உடனே தெரியாது...இன்று ஒன்றும் பிரச்சனை இல்லை என்பதற்காக இதை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கலாமா ??பூகம்பம், சுனாமி போன்றவைகளை அடிக்கடி சந்தித்து திட மனதை கொண்ட ஜப்பானிய மக்கள் இப்போது ஏற்பட்ட அணு உலை பிரச்சனையால் நிலை குலைந்து உள்ளனர். பல சவால்களை சந்தித்து பல துறைகளிலும் முன்னேற்றம் கண்டு  துரிதமாக செயல்படகூடிய அவங்களே முடியாமல் அணு உலையைச் சுற்றி சுவர்களை கட்டியும், இன்னும் பிற ஏற்பாடுகளையும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

உலக பொருளாதாரத்தில் உயர்ந்த இடத்தில் இருந்த ஜப்பானால் ஒரு பெரிய சீற்றத்தை எதிர்கொள்ள முடியாமல், ஓரளவிற்கு சமாளிச்சிட்டோம் என்கிற மாதிரியான ஒரு நம்பிக்கையை மட்டும் தான் மக்களுக்கு கொடுக்க முடிந்தது. ஆனால் ஒரு பிரச்சனை என்றால், உடனே அடுத்த நாடுகளின் உதவியை நாடக்கூடிய நிலையில் இருக்கும் நாம் ?!!

கூடங்குளம் அணுஉலை குறித்து எழுதப்பட்ட பதிவுகள்

பதிவர் கூடல் பாலா கூடங்குளம் அணு உலை பற்றிய பல பதிவுகளை தொடர்ச்சியாக எழுதி வந்துள்ளார்...தகவல்கள் தெளிவாக தெரியவேண்டும் என்றால் அவரது பதிவுகளை படித்துபாருங்கள். இங்கே சில சுட்டிகளை இணைத்துள்ளேன். 

உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ள கூடல் பாலா அவர்களை நாம் பாராட்டுவோம்,வாழ்த்துவோம்.அவரது பதிவுகள் சில உங்கள் பார்வைக்காக...

அணு உலையால் ஏற்படக்கூடிய 10 முக்கிய பாதிப்புகள் பற்றி தெரிய வேண்டுமா? இங்கே செல்லவும் !

மார்ச் மாதம் 26 ல் நடைபெற்ற போராட்டம் பற்றி படிக்க இங்கே செல்லவும் !

அணு உலையை பற்றிய மேலும் சில அதிர்ச்சி தகவல்கள் படிக்க இங்கே செல்லவும் 

மேலும் ஒரு செய்தி 

வேண்டுகோள் :

கூடங்குளத்திற்காக...கூடுங்கள் நண்பர்களே !

மக்களுக்காக மக்களால் நடத்தப்பட்டு கொண்டு இருக்கும் இந்த போராட்டம் மத்திய மாநில அரசின் பார்வைக்கு இன்னும் சரியாக கொண்டு செல்லப்படவில்லை ?!! இணைய நண்பர்கள் நாம் முன்னெடுப்போம்.....ஒன்று கூடுவோம்.....உரக்க குரல் கொடுப்போம்..... எழுச்சி அலை மோதட்டும்.....மக்களின் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம்.....உண்ணாவிரதம் இருக்கும் அந்த நெஞ்சங்களுக்கு ஆதரவு திரட்டுவோம்.....இடிந்தகரையில் நடக்கும் இந்த போராட்டம் தமிழகம் எங்கும் பரவட்டும்.....! ஒத்துழையுங்கள் பதிவுலக நல்லுள்ளங்களே ! 

அவர்களுக்காக மட்டும் அல்ல இந்த போராட்டம்...ஒட்டுமொத்த தமிழக மக்களுக்காக !! Tweet

31 கருத்துகள்:

 1. கூடிநின்று கூக்குரலிடுவோம்
  கூடங்குளம் மூடும்வரை.....

  பதிலளிநீக்கு
 2. ஒரு வேளை விபத்து நடந்துவிட்டால் அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்கிற உத்தரவாதம் கொடுக்க முடியுமா ?//

  நானும் இதைதான் கேட்கிறேன் என்ன உத்திரவாதம், டெல்லியில இருக்குறவனுக்கு ஒரு பிரச்சினையும் இல்லைன்னு நினைக்கிரானுகளோ..??

  பதிலளிநீக்கு
 3. அனைத்து அம்சங்களையும் அலசிய ஆய்ந்து எழுதிய கட்டுரை. இன்னும் பலருக்கு அணு உலை பற்றிய விழிப்புணர்வு வரவேயில்லை என்பது தான் வேதனையிலும் வேதனை.போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
 4. சாதகம் மட்டுமல்ல, பாதகமும் பார்க்கவேண்டுமென்ற கருத்தை ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 5. ஒரு வேளை விபத்து நடந்துவிட்டால் அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்கிற உத்தரவாதம் கொடுக்க முடியுமா ?//
  அப்படி கொடுத்தாலும் அதை நம்பதான் முடியுமா?.

  உலகிலேயே அணுவின் அதிக பாதிப்பை அறிந்தவர்கள் ஜப்பானியர்கள்தான். ஜப்பானில் அணு உலைகள் இருப்பதும் உண்மைதான். தற்போதைய பூகம்பத்தில் அவர்களது அணு உலைகள் அபாய நிலையை எட்டியதும் உண்மைதான். ஆபத்து என்பது எல்லா நவீன தொழில்நுட்பத்திலும் இருக்கிறது. கூடுதல் குறைவு இருக்கலாம். ஆனால் இருக்கிறது. அலை பேசிகளில் கூட நிறைய பாதிப்புகள் இருக்கிறது. ஆனால் அதை யாரும் தவிற்த்ததாக தெரியவில்லை.ஒன்றும் வேண்டாம் எங்களது கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள மண்ணில் கூட கதிர்வீச்சு இருப்பதாக சொல்லப்படுகிறது.அதனால் இங்கு புற்று நோயும் அதிகம். இன்று இவ்வளவு செய்கிறவர்கள் நினைத்தால் இதை ஆரம்பத்திலேயே தவிற்த்திருக்கலாம். அரசின் பணவிரயத்தையும் தவிற்த்திருக்கலாம். அணு உலை வெடித்தால் ஆபத்து என்பது பள்ளி மாணவர்களுக்கு கூட தெரியும். அதனால் ஜப்பானில் பூகம்பம் ஏற்பட்டதால் தான் தெரிந்தது என்பது ஏற்புடையதல்ல. என் மனதில் எழும் கேள்வி இது இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்டதல்ல. குறைந்தது எனக்கு தெரிந்து 18 ஆண்டுகள் ஆகியிருக்கும். இத்தனை நாள்கள் ஏன் மெளனம் காத்தார்கள்.ஆரம்பத்தில் நிலம் கையகப்படுத்தும்போதே இதே தீவிரத்தை காட்டியிருந்தால் கண்டிப்பாக கைவிடப்பட்டிருக்கும் என்பதே என் கருத்து.

  பதிலளிநீக்கு
 6. போராட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. கூடங்குளம் அணு உலை மூடும்வரை போராடுவோம்.

  பதிலளிநீக்கு
 8. @@ தமிழ்வாசி - Prakash...

  ஒன்று படுவோம்...போராட்டம் வெற்றி பெறும் நம்புவோம்.

  நன்றிகள் பிரகாஷ்

  பதிலளிநீக்கு
 9. @@ மகேந்திரன்...

  //கூடிநின்று கூக்குரலிடுவோம்
  கூடங்குளம் மூடும்வரை...//

  நல்ல தீர்வு கிடைக்கவேண்டும்.

  நன்றிகள் மகேந்திரன்

  பதிலளிநீக்கு
 10. @@ MANO நாஞ்சில் மனோ said...

  //நானும் இதைதான் கேட்கிறேன் என்ன உத்திரவாதம், டெல்லியில இருக்குறவனுக்கு ஒரு பிரச்சினையும் இல்லைன்னு நினைக்கிரானுகளோ..??//

  எல்லா முன் ஏற்பாடும் செஞ்சிடோம்னு சொல்வாங்க...சமாளிக்கிறதுக்கு காரணங்களா இல்லை ?!!

  பதிலளிநீக்கு
 11. @@ நண்டு @நொரண்டு -ஈரோடு said...

  //பலருக்கு அணு உலை பற்றிய விழிப்புணர்வு வரவேயில்லை என்பது தான் வேதனையிலும் வேதனை.//

  உண்மை தான்.

  நன்றிகள்

  பதிலளிநீக்கு
 12. @@ கே. ஆர்.விஜயன் said...

  //இன்று இவ்வளவு செய்கிறவர்கள் நினைத்தால் இதை ஆரம்பத்திலேயே தவிற்த்திருக்கலாம். அரசின் பணவிரயத்தையும் தவிற்த்திருக்கலாம்.//

  விஜயன் இந்த கேள்விக்கு பதில் இப்படியும் இருக்கலாம். வேலை வாய்ப்பு தருகிறோம், மாற்று இடம் தருகிறோம், இதனால் மின்சாரம் கிடைக்கும் என்று நல்லவனவற்றை பற்றி மட்டும் விரிவாக சொல்லப்பட்டதால் சாமானிய மக்கள் என்ன சொல்லமுடியும். நமக்கு நன்மைதானே என்று இருந்திருக்கலாம் . அறிவியல் கண்டுபிடிப்புகள் நன்மை தீமை இரண்டும் கலந்தது என்றாலும் எதில் நன்மையைவிட தீமை அதிகம் என்று அறிதல் முக்கியம்.

  //அணு உலை வெடித்தால் ஆபத்து என்பது பள்ளி மாணவர்களுக்கு கூட தெரியும். அதனால் ஜப்பானில் பூகம்பம் ஏற்பட்டதால் தான் தெரிந்தது என்பது ஏற்புடையதல்ல.//

  பாடத்தில் படிப்பது வேறு அனுபவத்தில் கண்டு உணர்வது வேறு விஜயன்.அணு உலை சம்பந்த பட்ட சுட்டிகளை படித்து பாருங்கள். பணம் செலவாகிவிட்டது என்பதற்காக மனித உயிர்களை பற்றிய அக்கறையை விட்டுவிட முடியுமா?

  இதை பற்றிய சரியான பாதுகாப்பு, நன்மை, போன்றவற்றை பற்றி முதலில் தெளிவாக மக்களிடம் எடுத்துரைக்கவேண்டும். அதற்க்கு முன் மக்களின் உண்ணாவிரத போராட்டத்தை நிறுத்துவதற்கு என்ன செய்யணுமோ அதை உடனடியாக செய்யவேண்டும்.

  பார்ப்போம் அரசாங்கம் என்ன முடிவு செய்யபோகிறது என்று !

  கருத்துக்களை தெளிவாக பகிர்ந்தமைக்கு நன்றிகள் விஜயன்.

  பதிலளிநீக்கு
 13. நான் இது பற்றிய கட்டுரை எழுத எண்ணி இருந்தேன்.என் கருத்துக்களை உங்களது கட்டுரை அப்படியே பிரதிபலித்துவிட்டது.கூடங்குளம் அணு உலையை திறக்க விடவே கூடாது.இதை நாம் அனுமதித்தால் நமக்கு நாமே சவக்குழி வெட்டிக் கொள்வதற்குச் சமம்.எதேனும் விஷமிகள் இந்த அணு உலைகளில் சிறு தாக்குதல் நடத்தினாலும் பல அணு குண்டுகள் போட்ட விளைவு ஏற்பட்டுவிடும்.எனவே இதை கடும் எதிர்ப்போடு தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும்.இது போன்று அரசு செய்து வரும் முட்டாள்தனங்களை எனது வலைப்பூவில் தொடராக எழுதி வருகிறேன்.அந்தத் தொடரில் கடைசியாக எழுதிய பதிவு இது.
  http://machamuni.blogspot.com/2011/08/blog-post_20.html
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  பதிலளிநீக்கு
 14. போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள். நானும் திருன வேலிக்காரிதான்

  பதிலளிநீக்கு
 15. ஒரு வேளை விபத்து நடந்துவிட்டால் அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்கிற உத்தரவாதம் கொடுக்க முடியுமா ?//

  கொடுத்துவிட்டு தலைமறைவாகிவிடுவார்களே!

  போராட்டம் வெற்றி பெற பிரார்த்தனைகள்!

  பதிலளிநீக்கு
 16. கண்மூடித்தனம் என்றைக்குமே வருந்தத்தக்கது.

  இது போன்ற கண்மூடித்தனங்களை ஆதரித்து பதிவில் குரல் எழுப்புவது இன்னும் வருத்தமாக இருக்கிறது.

  அணு உலையை விட சென்னைத் தெருக்களில் அதிக ஆபத்து இருக்கிறது. ஜப்பானில் நடந்த விபத்தின் பின்னணி என்னவென்று தெரியாதா? சுனாமி. அதற்கும் மேலாக அந்த உலை பழைய உலை.

  அணு உலைகள் மிகப் பாதுகாப்பானவை. அப்படி ஏடாகூடமாக நடந்துவிடும் என்று கவலை இருந்தால், பாதுகாப்பை மேம்படுத்தக் கோரி போராட்டம் நடத்தலாம். ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை பொதுமக்களுக்கு பகிரங்க ரிபோர்ட் கொடுக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வரலாம்.

  எத்தனையோ முற்போக்கான முறைகள் இருக்கையில் உண்ணாவிரதம் போன்ற சோம்பேறித்தனமான முறைகளைக் கையாளும் மக்களையும் இதைத் தூண்டிவிடும் கண்மூடிகளின் அராஜகத்தையும் எப்படித் திருத்துவது?!

  இந்தியாவின் பிரச்சினை கண்மூடித்தனம். கண்மூடித்தனம் ஒழிய யாராவது உண்ணாவிரதம் இருந்தால் நன்றாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 17. மறுபடியும் படித்தேன். மறுபடியும் வருத்தப்பட்டேன்.

  ஆட்டுமந்தை போல் எல்லாருமே ஒரே கருத்தைப் பிடித்துக் கொண்டு போனால் எப்படி?

  nuclear energy is clean energy. cheaper energy. பாதுகாப்புத் திட்டங்களை மேம்படுத்தி உரிமையோடு கேட்பதை விட்டு, உண்ணாவிரதம் இருந்துக் குடியைக் கெடுக்கலாமா? தொலை நோக்கற்ற போராட்டங்களில் ஈடுபடலாமா? ஆதரிக்கலாமா?

  அணு உலையினால் ஏற்படும் தீமைகளை விட டேஸ்மேக்கினால் ஏற்படும் தீமைகள் பரம்பரையாக dnaவில் கலந்து பரவும். நகரத் தெருக்களின் குப்பையில் இல்லாத தீமையா? அணு உலை மூட உண்ணாவிரதம் முடித்து விட்டு தெருவில் மலமும் மூத்திரமும் கழிக்கும் கூட்டம். வீட்டிலும் தெருவிலும் சாக்கடையை வளர்க்கும் கூட்டம். பெண்களை அடித்து உதைக்கும் கூட்டம். சிறு பிள்ளைகளைப் பிச்சை எடுக்கவும் விபசாரம் செய்யவைக்கவும் தயங்காத கூட்டம். இதை ஒழிக்க உண்ணாவிரதம் இருக்க வேண்டியது தானே?

  கேவலம்!

  சாப்பாட்டுக்கே வழியில்லாமல் எத்தனையோ இந்தியர்கள் உண்ணாவிரதம் என்றதும் ஓடிவந்து உட்காருவது வேடிக்கை தான். எத்தனை வருங்கால இந்தியர்களை இந்த உண்ணாவிரதப் பழக்கம் பாதிக்கப்போகிறதோ! நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை எண்ணி என்று மீசைக்காரன் பாடியது முட்டாள்தனத்துக்கு வால் பிடிப்பவரை எண்ணித்தான்.

  என்னே, பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை! (பாண்டிய நாடா தெரியாது, பிடித்த பஞ்ச் டயலாக்.. அதான்!)

  பதிலளிநீக்கு
 18. @@ அப்பாதுரை said...

  //அணு உலைகள் மிகப் பாதுகாப்பானவை. அப்படி ஏடாகூடமாக நடந்துவிடும் என்று கவலை இருந்தால், பாதுகாப்பை மேம்படுத்தக் கோரி போராட்டம் நடத்தலாம்//

  பாதுகாப்பானவை என்பதை ஏன் அரசால் உரக்க சொல்ல இயலவில்லை. வெறும் அறிக்கை போன்றவை மட்டும் சாமானிய மக்களின் செவிகளை போய் சேருமா ?? அதற்கு முதலில் விளக்கமான தெளிவான விழிப்புணர்வு பிரசாரங்கள் வாயிலாக அணு உலைகள் பற்றிய நன்மைகள் தீமைகள் போன்றவற்றை பற்றி கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.

  //எத்தனையோ முற்போக்கான முறைகள் இருக்கையில் உண்ணாவிரதம் போன்ற சோம்பேறித்தனமான முறைகளைக் கையாளும் மக்களையும் இதைத் தூண்டிவிடும் கண்மூடிகளின் அராஜகத்தையும் எப்படித் திருத்துவது?!//

  //பாதுகாப்புத் திட்டங்களை மேம்படுத்தி உரிமையோடு கேட்பதை விட்டு, உண்ணாவிரதம் இருந்துக் குடியைக் கெடுக்கலாமா? //

  சகோ இந்த போராட்டம் இப்போது ஏற்பட்டது அல்ல. பல காலமாக, பல கட்டங்களில், பல விதங்களில் தங்களின் எதிர்ப்பை வெளிபடுத்தி வந்திருக்கிறார்கள். ஆனால் எதுவும் சரியான முறையில் கவனிக்க படவில்லை.

  உரிமையாக எப்படி எல்லாம் கேட்கமுடியுமோ அப்படி எல்லாம் கேட்டு பார்த்துவிட்டார்கள் .இப்போது உண்ணாவிரத போராட்டத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 19. @@ அப்பாதுரை said...

  //மறுபடியும் படித்தேன். மறுபடியும் வருத்தப்பட்டேன்.

  ம்...

  //ஆட்டுமந்தை போல் எல்லாருமே ஒரே கருத்தைப் பிடித்துக் கொண்டு போனால் எப்படி?//

  எல்லோரும் இல்லை சகோ,உங்களின் கருத்துக்களை ஒத்தவர்கள் இங்கேயும் இருக்கிறார்கள்.

  நன்மை என்றால் யாரும் வேண்டாம் என்று கூற போவது இல்லை. ஆனால் எல்லாவற்றுக்கும் அடிப்படை விழிப்புணர்வு இன்மை. இதை சரியான விதத்தில் கொடுத்துவிட்டு எந்த திட்டங்களும் செயல்படட்டுமே.

  விவாதம் என்று போனால் நிறைய பேச வேண்டும் சகோ. ஆனால் இந்த பதிவின் நோக்கம் இது போன்றதொரு போராட்டம் நடக்கிறது என்பதை பலரிடம் கொண்டு சேர்க்க என்பதற்காக . பதிவிலேயே சொல்லி இருக்கிறேன் உண்ணாவிரத போராட்டத்தை நிறுத்த என்ன செய்யவேண்டுமோ அதை உடனே செய்யவேண்டும்.

  அரசு மக்களின் உணர்வுகளுக்கு முதலில் மதிப்பு கொடுக்கட்டும், மற்றவை பின்னர்...!

  எடுத்ததுக்கு எல்லாம் உண்ணாவிரதம் என்பது ஏற்புடையது இல்லை,முன் உதாரணமாக போய்விடும் ஆபத்து இருக்கிறது. ஒத்துகொள்கிறேன். ஆனால் இந்த விசயத்தில் வேறு வழியில்லை.

  பதிலளிநீக்கு
 20. @@அப்பாதுரை said...

  //வீட்டிலும் தெருவிலும் சாக்கடையை வளர்க்கும் கூட்டம். பெண்களை அடித்து உதைக்கும் கூட்டம். சிறு பிள்ளைகளைப் பிச்சை எடுக்கவும் விபசாரம் செய்யவைக்கவும் தயங்காத கூட்டம். இதை ஒழிக்க உண்ணாவிரதம் இருக்க வேண்டியது தானே?//

  உங்களின் ஆதங்கம் என்னையும் ஆதங்க படவைக்கிறது.

  //ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை பொதுமக்களுக்கு பகிரங்க ரிபோர்ட் கொடுக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வரலாம்.//

  நல்ல யோசனை . போராட்டங்களின் முடிவுகள் ஒரு வேளை இது போன்ற நல்ல சட்டம் கொண்டு வர உதவி செய்தாலும் சரியே.

  ......

  அணு உலையை எதிர்ப்பவர்கள் கிராம மக்கள் மட்டும் அல்ல, விவரம் தெரிந்தவர்களும் சேர்ந்து தான்.

  எங்கே போனார்கள் அரசு அதிகாரிகளும், அணு உலை விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் மக்களின் கூக்குரலுக்கு பதில் சொல்ல வேண்டியது தானே...?!

  //இந்த நிலை கெட்ட மனிதரை எண்ணி என்று மீசைக்காரன் பாடியது முட்டாள்தனத்துக்கு வால் பிடிப்பவரை எண்ணித்தான்.//

  ஆதங்கத்துடன் கூடிய கருத்துரை !!

  நன்றிகள் சகோ.

  பதிலளிநீக்கு
 21. @@ சாமீ அழகப்பன் said...

  //எதேனும் விஷமிகள் இந்த அணு உலைகளில் சிறு தாக்குதல் நடத்தினாலும் பல அணு குண்டுகள் போட்ட விளைவு ஏற்பட்டுவிடும்//

  உங்களின் இந்த கோணம் மிக யோசிக்க வைக்கிறது.

  உங்கள் பதிவை படித்தேன்...விசத்தை உணவென்று சாப்பிட்டு கொண்டிருக்கிறோம், நாளை நமது சந்ததிகளின் நிலை...?!பாரம்பரியத்தை தொலைத்துவிட்டு எதை நோக்கியோ பயன்பட்டு கொண்டிருக்கிறோம்...உங்கள் பதிவை ஒற்றி நானும் ஒன்றை விரைவில் எழுதுகிறேன்.

  நன்றிகள் சாமி ஜீ

  பதிலளிநீக்கு
 22. @@ Lakshmi said...

  //போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள். நானும் திருன வேலிக்காரிதான்//

  ஊர் பேரை சொல்லும்போதே குறும்பு தெரிகிறது லக்ஷ்மி அம்மா :)

  நீங்க இந்த ஊர் என்று நானும் கேள்விபட்டு இருக்கிறேன். ஊர் பக்கம் வந்தால் தகவல் சொல்லுங்கள்

  போராட்டத்திற்கு வாழ்த்து சொன்னதுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 23. @@ இராஜராஜேஸ்வரி said...

  //கொடுத்துவிட்டு தலைமறைவாகிவிடுவார்களே!//

  அது என்னவோ சரிதான்.

  நன்றிகள் ராஜி

  பதிலளிநீக்கு
 24. இன்று எட்டாவது நாள் என்ற ஞாபகம் எனக்கு..

  பதிலளிநீக்கு
 25. @@ suryajeeva said...

  //இன்று எட்டாவது நாள் என்ற ஞாபகம் எனக்கு..//

  இன்று எட்டாவது நாள் தான்...நான் இந்த போஸ்ட் எழுதியது வெள்ளிகிழமை அன்று...

  வருகைக்கு நன்றி சூர்யாஜீவா

  பதிலளிநீக்கு
 26. உங்கள் பதிவில் தேதி இல்லாததால் குழம்பி விட்டேன்.. மன்னிக்கவும்

  பதிலளிநீக்கு
 27. @@ suryajeeva said...

  //உங்கள் பதிவில் தேதி இல்லாததால் குழம்பி விட்டேன்.. மன்னிக்கவும்//

  சாரிங்க ஆச்சுவலா நான் சரியா கவனிக்கல...புதுசா டெம்பிளேட் மாத்தினேன், அதில் தேதி டிஸ்பிளே இல்லை.

  சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 28. மக்கள் விழிப்புணர்வு பெறுவது மகிழ்ச்சிதருகிறது. தக்க தருணத்தில் நல்ல பதிவு

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...