திங்கள், ஜூலை 17

10:14 AM
21


அன்பின் புதிய வாசகர்கள்  பேசாப் பொருளா காமம்   அறிமுக பதிவை படித்தப் பின் இப்பதிவை தொடருவது ஒரு புரிதலைக் கொடுக்கும். நன்றி.

* * * * *

ஆலோசனைக்காக என்னிடம் வந்த ஒரு நடுத்தர வயது பெண்மணி மிகுந்த தயக்கத்திற்கு பிறகு  உணர்ச்சிகளால் தனக்கு  ஏற்படும் அவஸ்தையை கண்கலங்க கூறத் தொடங்கினார்... இதுவரை யாரிடமும் இதை பற்றி  சொல்லாத அவர் எனது தாம்பத்தியம் பதிவுகளை படித்தப்  பிறகு என்னை நாடி இருக்கிறார் ... அவரது கண்ணீர்  தன்னை விட வயது குறைந்த பெண்ணிடம் இதை சொல்கிறோமோ என்பதால் இருக்கலாமே தவிர பிரச்சனைக்கானது அல்ல என்பது புரிந்தது.    வசதிக்கு குறைவில்லாத வீடு, இந்த மாத லாபத்தை இரட்டிப்பாக்க வேறு எதில் இன்வெஸ்ட் பண்ணலாம் என்ற சிந்தனையில் தூங்க வரும் கணவர். முதுகு காட்டி உறங்கும் கணவரை பார்த்தபடி தூங்க முயற்சி செய்யும் ஒவ்வொரு இரவும் தூக்கமின்றியே கழிந்திருக்கிறது. எண்ணத்தை வேறு பக்கம் திருப்பி கடவுள் பூஜை தியானம் எல்லாம் முயற்சித்தும் தோல்வியே. உணர்ச்சிகளின் அதி உந்துதலில் ஏற்படுகிற  'ஆத்திரத்தில் உடல் உறுப்புகளை அப்படியே பிச்சி எறிஞ்சிடலாம்னு வெறி வருது, எனக்கு மட்டும் ஏன் இப்படி, நான் சராசரி பெண் இல்லையா எனக்கு காமவெறி பிடிச்சிருக்கா' என கேட்டவர் இறுதியாக 'நானும் கண்ணகிதான் மேடம், இவரை தவிர வேறு யாரையும் மனதாலும் நினைச்சது இல்லை'  என்று முடித்து மௌனமானபோது பல பெண்களின் பிரதிநிதியாக தான் எனக்கு அவர் தோன்றினார்.

'எல்லோருக்கும் இது இயல்புதான்  நீங்க உடலளவில் மிக  ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் அவ்வளவுதான் பெரிதாக வேறு ஒன்றும் இல்லை'  என்று சமாதானம் செய்து சில முக்கிய உபாயங்களைச்  சொல்லி அனுப்பினேன்.
பணம் செல்வாக்கு அந்தஸ்து புகழ் எல்லாம் இருந்தும்/இல்லாமலும்  உணர்ச்சிகளோடு ஒவ்வொரு நாளும் மல்லுகட்டுகிறார்கள் பெண்கள். வெளியே சொல்ல வாய்ப்பில்லாததால் பிறருக்கு தெரிய வாய்ப்பில்லை. பெரும்பாலான கணவர்கள்  மனைவியின் தேவையறிந்து நடந்துக் கொள்வதில்லை.  உணர்ச்சி ஏற்பட்டாலும் கணவன் தப்பா எடுத்துப்பாரோ   என தனக்குள் வைத்து புழுங்கி கொள்கிறாள்... கண்ணகி இல்லை என்றாகிவிடுவோமோ என்ற பயம் மனைவிகளுக்கு ! தனது மனைவி கண்ணகி மாதிரி இருக்கவேண்டும் என்பது  ஆண்களின் வசதிக்காக ஏற்படுத்தப் பட்டது.

கண்ணகி ஒரு டிஸைன்! பத்தினி  ஒரு பிராண்ட் !!  

சிறு வயதில் காலில் கட்டப்பட்ட  சிறிய  சங்கிலியை வளர்ந்த  பின்னும்  உடைக்கத்    தெரியாத கோவில்யானையின்  நிலைக்கு சற்றும் குறைந்தது இல்லை பெண்களின் நிலை. பிறந்தது  முதல் 'நீ இப்படி நடக்கணும்' என்ற சமூக சங்கலியால் கட்டி பயிற்றுவிக்கப்பட்ட  பெண்ணால் வளர்ந்து பின்னும் தன்னால் இச்சங்கிலியை உடைத்து வெளியேற இயலாது என்றே இருந்துவிடுகிறாள். அதிலும் குறிப்பாக தனது உடலுக்குள் நிகழும்/எழும்   உணர்வுகளையும் அலட்சியப் படுத்தி அடக்கிவிடுகிறாள்...அதன் கொடிய விளைவுகளை அவளும் அறிவதில்லை  சமூகமும் கண்டுக் கொள்வதில்லை... பிறன்மனை செய்திகள் வெளிவந்ததும் குய்யோ முறையோ என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறது...இந்த சமூகத்தால் அதிகபட்சம் இதை மட்டும்தான் செய்யமுடியும்...தீர்வுகளை தேடத் தெரியாத முட்டாள் சமூகம் இது !

உணர்ச்சிகளுடன் போராடிப் போராடி தோற்று தனக்குள்ளேயே சுருண்டு  கணவனிடம் கூட தெரிவிக்க தைரியமற்று ஏதோ பெயருக்கு வாழ்ந்து ஒருநாள் செத்தேப்  போகிறாள். தைரியம் உள்ள பெண்களும் கண்ணகி கான்செப்ட்டுக்கு பிரச்சனையாகி விடும் என்று 'மறைவில் நடத்தி' பத்தினி பிராண்ட்டை காத்துக் கொள்கிறார்கள்.  தங்களுக்கு பிடித்த மாதிரி வாழும்  பெண்கள் மிக மிக சந்தோசமாக வாழ்கிறார்கள், மாறாக வாழ்வதைப்  போலவே  நடிக்கிறார்கள் கண்ணகிகள் !

ஒரிஜினல் கண்ணகி கதையில் திருமணம் முடிந்த சில நாட்களில் தாம்பத்தியம் என்றால் என்னவென்று முழுமையாக அறிவதற்குள் உணர்வுகளை தூண்டிவிட்டவன் பிரிந்து சென்றுவிடுகிறான். அதன் பிறகான ஒவ்வொரு இரவையும் இன்னதென்று தெரியாத உணர்ச்சிக்  குவியலுக்குள் புதையுண்டு விடியலில் உள்ளுக்குள் கனன்ற நெருப்பை நீரூற்றி அணைத்திருக்கக் கூடும்.  கணவன் வேறோருவளிடம் இருக்கிறான் அவளிடம் இன்பம் துய்க்கிறான்  என்பதும்  உணர்வுகளை அதிகப்படுத்தி இருக்கலாம், (இருந்தும் அத்தனையையும் உள்ளுக்குள் மறைத்து பிறந்தவீடு போதித்தவைகளை அடிப்பிறலாமல் நிறைவேற்றி இருக்கிறாள்)  ஒருநாள் திரும்பி வந்தவனை கண்டு குதூகலித்த அவளது உணர்வுகளின் ஆர்ப்பரிப்பு,  அடுத்ததாக  கோவலன் மாண்டதும் இனி வரவே வழியில்லை என்றானபின் ஒட்டுமொத்த உடலியக்கமும் ஸ்தம்பித்து வெறுப்பை உமிழ அது கட்டுக்கடங்காத பெரும் நெருப்பாக மாறி இருக்கலாம்... ஆம் மதுரையை எரித்தது கண்ணகியின் காமமாக கூட இருக்கலாம்,   ஆனால் கற்பு என்று சொன்னால் தானே  கண்ணகி தெய்வம் ஆவாள்.  ஆணாதிக்க சமூகம் தனது  வசதிக்காக சிலப்பதிகாரம் எழுத  நமது சமூகம்  'புனிதம்' என்ற போர்வையை போர்த்திக் கொண்டது.   கோவலன் ஒருவனை மட்டுமே தனக்கானவனாக வரித்து காமத்தை தனக்குள் எரித்து அவன் நினைவாக மட்டுமே வாழ்ந்து மறைந்த தாசி குலத்தில் பிறந்த மாதவியை பத்தினி லிஸ்டில் சேர்க்க ஏனோ நம்மால் முடியவில்லை!?

கண்ணகி விசயத்தில்  இப்படியும் நடந்திருக்கலாம், மாதவியிடம் சென்று திரும்பிய கோவலனை ஏற்றுக் கொண்டதால் தான் கண்ணகி பத்தினியானாள், கண்ணகி பத்தினியாக வேண்டும் என்றால் மாதவி என்றொருவள் தேவை,  ஆண் செய்யும் துரோகத்தை மனைவி என்பவள் ஏற்றுக்  கொண்டாக வேண்டும் என்பதை பெண்களின் மனதில் பதிய வைக்க கிடைத்தவள் தான் இந்த கண்ணகி. நடக்கவே முடியவில்லை என்றாலும் கூடையில் சுமந்துச்  சென்று தாசி வீட்டில் விட்டால் தான் அவள் பத்தினி.  பெண்ணை தெய்வமாக்கி மூலையில் உட்கார வைப்பதன் பின்னணியில் இருப்பது ஆணின் பெருந்தன்மை அல்ல  ஆதி பயம்.

எல்லா காலத்திலும் கண்ணகிகள் இருக்கிறார்கள் , என்னவொன்று அவர்கள் மதுரைக்கு மாற்றாக தன்னையே எரித்துக் கொண்டிருக்கிறார்கள். சமயங்களில் உடன் இருப்பவர்களையும் சேர்த்து எரித்து விடுகிறார்கள்... ஏற்படும் அத்தனை சமூக அவலங்களுக்கும் இது மறைமுகக் காரணமாகிறது. குழந்தை வளர்ப்பில் இருந்து அவளது பொறுப்பில் இருக்கும் அத்தனையிலும் குளறுப்படிகள் ஏற்படுகின்றன. ஆரோக்கியம் குறைந்த வீடுகள் ஒட்டுமொத்த சமூகத்தையும் நோயாளியாக்கி விடுகிறது.

கற்பு என்ற ஒன்று இருக்கிறது என்றும் அதற்கு 'நெறி' வகுத்தவர்கள்  கண்டிப்பாக பெண்ணுடன் அன்னியோனியமாக சரிக்கு சமமான உரிமையை பகிர்ந்து வாழ்ந்தவர்களாக இருக்க முடியாது. கண்ணகி  சென்று, திரும்பி வந்தால் ஏற்றுக் கொள்ளக் கூடிய கோவலன்கள் இருந்தால் அதுவே சம  தர்ம சமூகம் !

பெண்களின் காமம் பேசப்படுவதே இல்லை ஆண்களின் காமம் 'அவன் ஆம்பள அப்படித்தான்' என்பதில் மறைந்துவிடும். ஆனால் பெண்களின் காமம் வலுக்கட்டாயமாக ஆணுக்குள் அடக்கிவைக்கப் படுகிறது. அவனை மீறி வெளிப்படக் கூடாது அப்படி வெளிப்பட்டால் அது காம வெறி, அவளுக்கு பெயர் வேசி. நடுஇரவில் 'இப்படி  திரும்பு' என்று கணவன் சொல்வதை போல மனைவி சொல்ல முடியாது. காமத்தை மறைக்கத் தெரிந்தவள் மட்டுமே பத்தினி.   'அவனுக்கு தேவை என்றால் படு' என்பதே காலகாலமாக பெண்ணின் மனதில் பதிய வைக்கப் பட்டிருக்கிறது. இதில் இருந்து வெளிவர பெண்ணும் விரும்புவதில்லை. சில பெண்கள் மட்டும் ஆணுக்கு கட்டுப்பட்டவள் இல்லை நான் சுதந்திரமானவள் என பிரகடனப்படுத்தி பெண்ணியவாதியாகிறார்கள். வெகுசீக்கிரத்தில் அவர்களும் பெண்ணுக்கு வியாதியாகி விடுகிறார்கள் !!??

குழந்தை வளர்ப்பிலும் வீட்டுப் பராமரிப்பிலும் பெண்களின் காமம் கரைந்துவிடுவதாக எண்ணும் ஆண்களும் ஏன் பெண்களுமே  மாறவேண்டும். ஆண் பெண் இருவருமே தனது தேவை எது என உணர்த்த வேண்டும் பரஸ்பர தேவைகளை வெளிப்படுத்தி திருப்தி அடைவதுதான் ஒரு நல்ல தாம்பத்தியம். சந்தோசமான தம்பதிகளிடம் வளரும் குழந்தைகளால் தான் நல்ல வீடும் நல்ல சமூகமும் உண்டாகும். 

அடக்கி வைக்கப்பட்ட பெண்ணின்  உணர்ச்சிகள்  கண்டிப்பாக ஒரு கட்டத்தில் வெளிப் பட்டேத் தீரும் ஆனால் அது எதிர்கொள்ளவே முடியாத உக்கிர கோபம் வெறுப்பு எரிச்சல் கலந்த  கடுஞ்சொற்களாக/வாதங்களாக  இருக்கும்.  எப்போதும் அமைதியாக இருப்பவள் ஏன் இன்று இவ்வாறு  நடக்கிறாள் என்ற குழப்பத்தில் ஆண் அதிர்ந்து போவான், கூடவே அந்த பெண்ணுக்கும் தான் ஏன் இப்படி நடக்கிறோம் என்பது தெரியாதது தான் உச்சபட்ச பரிதாபம்.  விவாகரத்து கள்ளக்காதல் முதல் மாமியார் மருமகள் பிரச்சனைகள் வரை ஏதோ ஒரு வடிவத்தில் அங்கே பெண்களின் காமம் மறைந்திருக்கிறது. மனைவியை புரிந்து மதித்து உணர்வுகளை  திருப்திப்படுத்தும் ஆண்  இருக்கும் வீட்டில் அதே ஆண் சகல சந்தோசங்களையும் அனுபவிக்கிறான். அவன் வெளி விடும் ஒவ்வொரு மூச்சும் சந்தோஷத் தூறலாய் மழையாய் அந்த வீட்டை மூழ்கடிக்கும்.

மனைவிக்கும்  நடு இரவில் விழிப்பு ஏற்படும் என்பதை புரிந்து உணர்ந்து நடக்கும் கணவன் இருக்கும் வீட்டில்தான்  நல்லவை மட்டுமே நடக்கும்!!!


                                                                              * * * * *

ஆண்கள் நெருங்கினால் விலகும்/வெறுக்கும்  பெண்களை குறித்தும் பேசியாக வேண்டுமே !

தொடர்ந்து பேசுகிறேன்...

உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா.

Tweet

21 கருத்துகள்:

 1. துவைத்து காயப்போடுவது என்பது இது தானா...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை :-) காமம் பற்றி பேசவும், யோசிக்கவும் தொடங்கி இருக்கிறார்கள் என்பதை லேசாக சுட்டிக்காட்டி இருக்கிறேன். அவ்வளவே.

   அன்பின் நன்றிகள் தனபாலன் சார்.

   நீக்கு
 2. அட என்னமா எழுதிருக்கிங்க கெளசல்யா பெண்ணுக்கும் காமம் முக்கியம் வெளியில் சொல்லாமல் மறைத்து வைத்திருக்கும் பெண்கள் 99% அதே போல் பெண்ணுக்கும் உறவில் திருப்தி உண்டா என்று கேட்கும் ஆண்களும் 1% மட்டுமே இது மாறினாலே போதும் என்று நினைக்கிறேன். நன்றி தொடரட்டும் தங்களுடைய எழுத்துப்பணி வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பெண்ணுக்கும் உறவில் திருப்தி உண்டா // உண்மை. கண்டிப்பாக கேட்கவேண்டும். பெண்ணின் உணர்வுக்கும் மதிப்பு கொடுத்தாக வேண்டும் என்பதன் முக்கியத்துவம் இருபாலருக்கும் புரியவேண்டும். மாற்றம் என்பதே உடனே வந்துவிடாது, இருப்பினும் யோசிக்க தொடங்கி இருக்கிறார்கள் என்பதே எனக்கு தெரிந்தவரை தற்போதைய நல்ல தொடக்கம்.

   கருத்திட்டமைக்கு மிக்க நன்றியும் வணக்கமும்

   நீக்கு
 3. நான் அதிகம் கேட்பது, அதிக தொல்லை தரும் கணவர்கள் குறித்த புகார்கள்... :-)

  அதீத காமம் கொண்ட ஆண்களைச் சமாளிக்கும் பெண்களோ, உடல் தேவை உரிய விதத்தில் நிறைவேறாத பெண்களோ.... அடுத்த நாள் பகலில் அவர்களின் எரிச்சல் - கோபம் - எரிந்துவிழுதலில் முந்தைய இரவின் தாக்கம் அதிகம் உண்டு. :-(

  ஒருவகையில், உடல்தேவைகள் நிறைவேறா பெண்களின் பிரச்னைகளை ஓரளவு எளிதாகச் சரி செய்துவிட முடியும் என்றாலும், அதற்குத் தடையாக இருப்பது, கூட்டுக் குடும்பம்; வளர்ந்தாலும் இங்கிதம் தெரியாமல் அம்மா அப்பாவுடன் ரொமபவே ஒட்டிக் கொண்டு, இரவிலும் அவர்களோடு உறங்கும் பிள்ளைகள்; இன்னபிற காரணங்கள்... தம்பதிகள் தங்களுக்கென தனி நேரம் ஒதுக்குவது "ஒரு இந்தியக் குடும்பப் பெண்ணிற்குரிய" இலட்சணங்களில் கிடையவே கிடையாது. ஆனால், அதுதான் திருமணங்களைக் காப்பாற்றக் கூடியது. நடுத்தர வயதுடையவர்கள், சினிமா, கடற்கரை, ஷாப்பிங் என்று எங்கு போனாலும் உடன் யாரையாவது அழைத்து செல்லச் வேண்டியது இங்கு நியதி... பகலில் தனிமை என்பதே அவர்களுக்கு இல்லாமல் போய்விடுகிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நான் அதிகம் கேட்பது, அதிக தொல்லை தரும் கணவர்கள் குறித்த புகார்கள்.// இருக்கலாம் ஆனால் அதில் உண்மைத்தன்மை எத்தனை சதவீதம் என்பது சந்தேகம். தனது இயலாமையை ஆண்கள் மேல் குறையாக ஏற்றி சொல்வாரும் உண்டு தோழி. மாதத்திற்கு இருமுறை உறவை கூட ஆணின் அதீத காமம் என கூறிய பெண்கள் என்னிடம் வந்த லிஸ்டில் இருக்கிறார்கள் :-)

   //கூட்டுக் குடும்பம்; வளர்ந்தாலும் இங்கிதம் தெரியாமல் அம்மா அப்பாவுடன் ரொமபவே ஒட்டிக் கொண்டு, இரவிலும் அவர்களோடு உறங்கும் பிள்ளைகள்// இருக்கலாம், இருப்பினும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொள்ளாமல் இவற்றை காரணமாக கூறி உறவை தவிர்பவர்கள் தான் இங்கே அதிகம்.

   //தம்பதிகள் தங்களுக்கென தனி நேரம் ஒதுக்குவது//
   தொழில்நுட்பம் அதிகரித்துவிட்ட இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற மாதிரி தங்களை மாற்றிக் கொள்ள முடிந்தவர்களால் தனி நேரத்தை ஒதுக்குவது என்பது முடியவே முடியாத ஒன்றல்ல. என்னவொன்று அதற்கு இருமனம் ஒன்றிணைய வேண்டும். அப்படி ஒன்றிணையவில்லையென்றால் என்ன பிரச்சனைகள் எல்லாம் ஏற்படும் என்பதை நாம் சொல்லியாக வேண்டும் தோழி.

   தவிர பகலில் உறவு தவறு என்று இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் தம்பதிகளும் இருக்கவே செய்கிறார்கள் என்பதுதான் ஆகபெரிய சோகம்.

   வருகை தந்து அருமையாக உங்களின் கருத்தை கூறியமைக்கு அன்பின் நன்றிகள் தோழி.

   நீக்கு
 4. இந்த பிரச்னைகளைப்பற்றி விஜிசேகர்னு ஒருத்தர் எழுதிய பதிவுகள்தான் ஞாபகத்துக்கு வருது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா மகிழ்ச்சி. தங்களின் வருகைக்கு மிக்க நன்றிகள் கவிப்ரியன்

   நீக்கு
 5. விரசமில்லாமல் விளக்கிய சகோதரிக்கு நன்றி ஒவ்வொரு ஆணும் இப் பதிவைப்
  படித்து உணர்ந்து நடந்தால் குடும்பமே மகிழ்வாகும் மேலும் எழுதுங்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசிப்பிற்கு மகிழ்கிறேன். தொடர்ந்து எழுதுகிறேன்...

   வணக்கமும் மிக்க நன்றியும் ஐயா

   நீக்கு
 6. கண்ணகிக்கும் இந்தம்மா பிரச்சினைக்கும் என்னங்க சம்மந்தம். ஆண்கள் எப்படி பெண்களுக்கு ஈடுபாடு இல்லைனா வேறு வடிகால் தேடிக்கிறாங்களோ, அதேபோல் பெண்களும் தேடிக்கொண்டுதான் இருக்காங்க. நானே இதுபத்தி எழுதி இருக்கேன். ஒரு 40-50 வயது தாய், கணவன் முதுகைக் காட்டிப் படுப்பதாலே என்னவோ, அவரிடம் வேலை பார்க்கும் சிறு வயது பையன் ஒருவனிடம் உறவு வைப்பதை கையும் களவுமாக பார்த்த என் நண்பன் சொன்னதை கதை போல் எழுதியிருக்கேன். அந்தம்மா அவனை கைகூப்பி வணங்கி யாரிடமும் சொல்ல வேணாம் என்று கெஞ்சியதையும் சொன்னான். எல்லாரும் இந்தம்மா மாரி ஒப்பாரி வைப்பதில்லை. பெண்களும் அதற்கு தேவையான வடிகால் தேடிக்கத்தான் செய்றாங்க. "அம்மா" மார்களும்தான். இதெல்லாம் காலங்காலமாக நடப்பது உங்களுக்குத் தெரியாதா? ஜோதிஜி அவர் வேலை செய்யும் இடத்தில் நடக்கும் இதுபோல் கணவன் சரியில்லைனு நெறை அஃபையர் வைத்துக்கொள்ளும் பெண்களைப் பத்தி எழுதியதாக ஞாபகம். மேலும் பங்களூரில் பி யி எல் ல வாலை பார்க்கும் ஒரு நண்பர் தன் வேலை இடத்தில் பெண்கள், தாய்கள் எல்லாம் எப்படி வடிகால் தேடிக்கிறாங்க சொல்லி கேட்டதுண்டு. நீங்க சொல்றதுபோல் எல்லாம் யாரும் "கற்பு" கற்பு னு தியாக சீலர்களாக பெண்கள் எந்தக் காலத்திலும் வாழவில்லை. காலங்காலமாக இது நடக்குது. என்ன இவர்களை நடத்தை சரியில்லாதவள் இந்த வீணாப்போன அறிவுகெட்ட ஆம்பளைக, மேலும் பெண்கள், இவர்களை தூற்றுவதுண்டு, அவமானப் படுத்துவதுண்டு. அதுவும் இந்தக் காலத்தில் எல்லாம் பாஸிபிள் இல்லை. ஃபைனான்ஸியல் இண்டிப்பெண்டெண்ஸ் வந்த் அபிறகு இதில் ஆண் பெண் என்கிற பாகுபாடெல்லாம் இல்லை! ஆண் எப்படி தகாத உறவில் ஈடுபடுகிறானோ, அதே போல் பெண்களும் செய்யத்தான் செய்றாங்க. நீங்க சொல்லும் நடுவயதுப் பெண்மணிபோல் நிறைய ஆண்களும் முதுகு காட்டுப் படுத்து உறங்கும் மனைவியைப் பத்தி "கம்ப்லைய்ன்" செய்வதுண்டு. உங்களுக்கு என்ன புரியலைனா, எல்லாவற்றிற்கும் கண்வன் மனைவி ஆலோசனை பெற்று தீர்வு கண்டுவிடலாம் என்பதுபோல் நீங்க சொல்வதுதான். காமம் என்பது மிகவும் காம்ப்ளக்ஸ். அதற்கெல்லாம் எல்லா தம்பதிகளும் தீர்வு கண்டுவிட முடியாது. கண்வன் தேவை அறிந்து மனைவியால் தன்னை தயார் படுத்திக்கொள்ள முடியாமல் போவது ஏகப்பட்ட கேஸ்கள் உண்டு. அதேபோல் மனைவியின் தேவை புரிந்து கணவனால் அவனைத் தயார் செய்துகொள்ள முடியாத ஆண்களும் உண்டு. நீங்க சொல்வதுபோல் தீர்வு காண முடியாத நிலையில் மனதை கட்ட்டிப் படுத்திக் கொண்டு நெறையப் பேர் குடும்ப உறவை வெற்றிகரமாக ஓட்டத்தான் செய்றாங்க. காமம், முக்கியம்தான். ஆனால் இந்த ரெண்டுபேர்தான் காமுறணும், ஒருத்தரை ஒருத்தர் திருப்திப் படுத்தணும் என்று வரும்போது, அதற்கு நீங்க சொல்வதுபோல் எளிதாக தீர்வு காணமுடியாது. One need to have attraction first. Sometimes it is not possible to force oneself to get attracted the "person" one supposed to. It is much more complicated than what you think.

  Yeah, one need to control their sexual urges/needs for the benefit of family. THAT WOMAN needs to understand THAT! Most of the times masturbation is the easiest solution, which is not considered wrong lot of times as it is not physically involved with another person and it wont give you SDS and AIDS. That is the solution for LOTS of widows in our culture as they can not complain like this "woman" right? So, I am positive you can not solve the sexual needs of a married woman/man unless her husband/wife puts his own effort to solve it. That is NOT EASY at all! Most of your suggestion is NOT going to work as long as another person involved there. If you suggest her to masturbate and move on, that might solve the problem to some extent. Now she does not depend on another person, you see!

  BTW, you started writing about sex, Right? So, I have to get into it. Please dont blame me that I did not share my thoughts and "politically correct or sexually polite way" and all. That's the kind of "issue" you have chosen to discuss. This is how people respond to sex issues! Thanks for the understanding.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Correction 1: I suspect it was Jothi Ganesan, may be it was KrishnaKumar, one another guy from thirupur shared this long time ago.

   Correction 2: SDS is wrong! It should read as STD (sexually transmitted diseases).

   நீக்கு
  2. வாங்க வருண். ஒரு பதிவு எழுதுற அளவிற்கு என்னை பதில் சொல்ல வச்சா எப்படி நண்பா! :-)

   //கண்ணகிக்கும் இந்தம்மா பிரச்சினைக்கும் என்னங்க சம்மந்தம்.//

   என்ன பண்ண என்னிடம் வரும் பெண்கள்தான் கண்ணகியை துணைக்கு அழைச்சிட்டு வராங்க. ஆணுக்கும் பெண்ணுக்கும் கண்ணகி ஒரு ரோல்மாடல் என்றாகிப் போச்சே. :-) கண்ணகிக்கும் காமத்திற்கும் தொடர்பை ஏற்படுத்தி வைத்துவிட்டார்கள் சோ கண்ணகி என்ற டிஸைனை இழுத்துதான் ஆகவேண்டும்.

   ///ஆண்கள் எப்படி பெண்களுக்கு ஈடுபாடு இல்லைனா வேறு வடிகால் தேடிக்கிறாங்களோ, அதேபோல் பெண்களும் தேடிக்கொண்டுதான் இருக்காங்க.///

   ///பெண்களும் அதற்கு தேவையான வடிகால் தேடிக்கத்தான் செய்றாங்க. "அம்மா" மார்களும்தான். இதெல்லாம் காலங்காலமாக நடப்பது உங்களுக்குத் தெரியாதா?///

   ///பங்களூரில் பி யி எல் ல வாலை பார்க்கும் ஒரு நண்பர் தன் வேலை இடத்தில் பெண்கள், தாய்கள் எல்லாம் எப்படி வடிகால் தேடிக்கிறாங்க சொல்லி கேட்டதுண்டு///

   அப்படினா இதை எல்லாம் சரி என நியாயப் படுத்துகிறீர்களா? உதாரணத்திற்கு நம் வீட்டு பெண்கள்(தாய்,மனைவி,சகோதரி,மகள்,பேத்தி) அந்த category க்குள் இருந்தாலும் நாம பெருந்தன்மையா கண்டுக்காம இருந்துவிடணும் அப்படிதானே?

   //நீங்க சொல்றதுபோல் எல்லாம் யாரும் "கற்பு" கற்பு னு தியாக சீலர்களாக பெண்கள் எந்தக் காலத்திலும் வாழவில்லை. காலங்காலமாக இது நடக்குது. //

   நீங்கள் பார்த்த கேள்விப்பட்ட பெண்கள் வேண்டுமானால் அவ்வாறு இருக்கலாம். அதற்காக ஒட்டுமொத்த பெண்களுமே இப்படிதான் இருக்கிறார்கள் என்பதை போல இருக்கின்றன உங்களின் கருத்துக்கள்.

   நல்லவேளை நான் பெண்ணியவியாதி இல்லை, தப்பித்தீர்கள் :-)

   யதார்த்ததை சொல்கிறேன் பேர்வழி என்று மிக தவறான பார்வையை கொண்டிருக்கிறீர்கள். மேலும் விளக்கம் கொடுப்பது எனக்கு பிடிக்கவில்லை வருண் sorry.

   * * * * *

   ஆனா ஆலோசனை சொல்வதை குறைத்து மதிப்பிட்டத்தற்கு பதில் சொல்லி ஆகணும்.

   //உங்களுக்கு என்ன புரியலைனா, எல்லாவற்றிற்கும் கண்வன் மனைவி ஆலோசனை பெற்று தீர்வு கண்டுவிடலாம் என்பதுபோல் நீங்க சொல்வதுதான். //

   அப்படி முடியாது என்றால் நாட்டில் எதற்கு குடும்பநல ஆலோசனை மையங்களும், ஆலோசகர்களும் மனநல மருத்துவர்களும் ?!

   sex என்றால் என்னவென்றும், ஆர்கசம் என்றால் என்ன? பெண்ணுக்கு ஆர்கசம் ஏற்படுமா என்ன? ஆணுக்கு வெளியேறுவது போல பெண்ணும் வெளியேறுமா என்று ஏகப்பட்ட கேள்விகள் என் போன்றோரை நோக்கி வீசப் படுகிறதே, கேட்கிற அத்தனை பேரும் படித்தவர்கள் என்கிறபோது ஏன் அவர்களுக்கு தெரியாமல் போனது. கல்வி அவர்களுக்கு சொல்லித் தரவில்லையா? ஏன் விழிப்புணர்வு இல்லை? இதை சொல்லித் தர வேண்டியது யார்? எதை தின்றால் பித்தம் தெளியும் என்று எங்களை போன்றோரை தேடி வருகிறார்களே ஏன்? திருமணம் முடிந்து ஒரு வருடம் கடந்தும் கலவி எப்படி செய்வது என தெரியாமல் முழித்ததை பற்றி கேள்வியாவது பட்டிருக்கிறீர்களா? தெளிவு படுத்திய பின் குழந்தை பெற்ற நிஜம் தெரியுமா? ஓரினச்சேர்கை சுயஇன்பம் பிறன்மனை தொடர்பு என்ற மிக குறைந்த சதவீதத்தில் இருக்கும் மனிதர்களை பற்றி தெரிந்துக் கொண்டு அதையே ஒட்டுமொத்த மக்களுக்கானது என்ற முன்முடிவுக்கு எப்படி வரலாம்??

   சுயஇன்பம் என்ற ஒன்றை பற்றியோ அதை எவ்வாறு செய்யணும் என்பதும் தெரியாத பெண்களின் சதவீதம் மிக மிக அதிகம் என்பதை முதலில் தெரிந்துக் கொள்ளுங்கள்.

   போறபோக்கில் பெண்ணின் காமத்தை பேசிவிட்டு செல்லமுடியாது. ஒரு பெண்ணின் உணர்வுக்கும் அடுத்த பெண்ணின் உணர்வுக்குமே சம்பந்தம் இருக்காது. தீர்வுகளையும் அதற்கு ஏற்றாற்போல் தான் சொல்லியாக வேண்டும்.

   * * *

   நான் எடுத்துக் கொண்ட தலைப்பு விவாதத்துக்கு உரியது என்பதை நான் அறிவேன்... பல மனங்கள் சிந்திக்க ஒரு வாய்ப்பு உருவாகினால் நல்லது, எனது எதிர்பார்ப்பும் அதே.

   நீங்கள் சொன்ன கருத்துக்களை உங்கள் ஒருவரின் கருத்தாக மட்டும் நான் பார்க்கமாட்டேன் என்பதை நீங்களும் அறிவீர்கள். எனது பதிலும் அவ்வாறே...

   அன்பின் நன்றிகள் வருண் !!

   நீக்கு
  3. ****நீங்கள் பார்த்த கேள்விப்பட்ட பெண்கள் வேண்டுமானால் அவ்வாறு இருக்கலாம். அதற்காக ஒட்டுமொத்த பெண்களுமே இப்படிதான் இருக்கிறார்கள் என்பதை போல இருக்கின்றன உங்களின் கருத்துக்கள்.****


   "ஒட்டு மொத்தப் பெண்களூம் அப்படித்தான்" னு நான் சொன்னேனா? இல்லை நான் சொன்னதாக நீங்க சொல்றீங்களா? :)

   நான் சொன்னது தானாக வடிகால் தேடிக்கொள்ளும் பெண்கள் காலங்காலமாக நம் கலாச்சாரத்தில் இருக்காங்க என்பதே. அதை பத்தி நீங்க என்றாவது சொல்லியிருக்கீங்களா? அதை முழுமனதாக ஏற்றுக்கொண்டு இருக்கீங்களா? இல்லை ஆண்களையே மேலும் மேலும் கைகாட்டி இவர்களை ஒரு சிலர் மறைப்பதுபோல் நீங்களும் செய்வீர்களா?

   இதை அழுத்தி சொல்லக் காரணம், இதை நடக்காதது போலவும் ஆம்பளைங்கதான் இப்படி பிறர்மனை நாடுபவர்கள் என்பது போல் (விகிதாச்சாரத்தை வைத்து) பெண்களை உயர்த்தி இதை எல்லாம் மறைப்பது பல பெண்ணியவாதிகளின் தந்திரம்.

   மற்றபடி காம இச்சையை தீர்ப்பதைவிட ஃபேலிலி வால்யுதான் முக்கியம் என்று நினைப்பவர்கள் கணவன் இவர்கள் எதிர்பாப்பதை கொடுக்கவில்லை என்றாலும் அதை சகித்துக்கொண்டு போவதுதான் கற்பு என்பதே.


   BTW, if any woman or man claims that my partner provides me, 100% satisfaction and I am sexually happiest. That's a PLAIN LIE! Every woman and man has sexual issues to some extent. They dont make a big deal out of it, because they know how to solve that issue without finding the real solution to it. That is what life is all about. Sacrifice, tolerance! If one wants to cry about sexual satisfaction, just like that woman you quoted, not just her, every woman and man will be standing the SAME LINE to complain about something which her/his partner does not provide her/him. Let us UNDERSTAND and ADMIT that first!

   Let me get to the topic..

   காமம் என்கிற உணர்வுதான் கற்பு கான்சப்ட் என்பத உருவாக்கியதே. எந்தளவுக்கு ஒருவர் தன் காம உணர்வை தியாகம் செய்ய முடியும் என்பதைப் பொறுத்தே ஒருவர் "கற்பு" எடைபோடப் படுகிறது. கற்பு என்பதே க்விக் அன்ட் டர்ட்டி தீர்வு காண்பதை தவிர்ப்பது. அதனால் ஏற்படும் விளைவுகளை யோசித்து குடும்பத்திற்கு காம இச்சையை தீர்ப்பதைவிட முக்கியத்துவும் கொடுப்பது. கண்ணகிக்கு காமம் இல்லைனனு யாருமே சொல்லவில்லை. கண்ணகி தன் காம இச்சையை கட்டுப் படுத்திக்கொள்ளத் தெரிந்தவள், இல்லைனா அவளாக இன்னொருவருடன் உறவு கொள்ளாமல் தன்னைத்தானே "சமாளிக்க"த் தெரிந்தவள் என்பதே. அதனால்தான் அவள் "கற்புக்கரசி". அந்தப் பட்டம் அவள் "காம உணர்வை" கட்டுப் படுத்தத் தெரிந்ததற்காக கொடுக்கப் பட்டது. அவ்வளவே!

   ----------

   ரெண்டாவது..

   ***அப்படினா இதை எல்லாம் சரி என நியாயப் படுத்துகிறீர்களா? உதாரணத்திற்கு நம் வீட்டு பெண்கள்(தாய்,மனைவி,சகோதரி,மகள்,பேத்தி) அந்த category க்குள் இருந்தாலும் நாம பெருந்தன்மையா கண்டுக்காம இருந்துவிடணும் அப்படிதானே?***

   நீங்க நினைப்பதுபோல்..என் வீட்டுப்பெண்களுக்கு ஒரு நியாயம் ஊரில் உள்ளவர்களுக்கு இன்னொரு நியாயம் என்றெல்லாம் யோசிக்கும் நிலையைக் கடந்து பலப் பல ஆண்டுகளாகிவிட்டது.

   * என் மனை மற்றவருக்கு பிறர் மனைதான்.

   * என் வீட்டுப் பெண்கள் மற்றவற்கு பிறர் வீட்டுப் பெண்கள்தான்.

   * என் வீட்டில் இதுபோல் ஒரு சிலர் நடந்து இருந்தால் அவர்களும் இந்தக் "குற்றம் செய்த" கூட்டத்தில் இருக்கத்தான் செய்றாங்க.

   * உங்களுக்குத்தான் அவர்கள் தெரியவில்லை!

   என் வீட்டுப் பெண்கள் எல்லாமே யோக்கியம் என்றெல்லாம் யாரும் இங்கே "க்ளைம்" பண்ணவில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

   பொதுவான ஒரு விசயத்தை அலசும்போது, என் வீட்டையும், உங்கள் வீட்டையும், இங்கே கலந்து கொள்ளும் வாசகர்களின் வீட்டையும் "பிறர் வீட்டில்" அடக்கித்தான் நாம் பொத்தாம் பொதுவாகப் பேசுகிறோம் என்பதை நீங்க புரிந்து கொள்ளுங்கள்.

   மற்றபடி எனக்கு ரொம்ப நேரம் இப்போ கிடைப்பதில்லை. இதோட நிறுத்திக்கிறேன்.

   கற்பு காமம், கடவுள் பத்தி எல்லாம் பேசுவது வெட்டிப்பேச்சு அதைவிட உருப்படியான காரியம் பண்ண ஆயிரம் இருக்கு என்று உணர்ந்து வேறு உலகில் சஞ்சாரிப்பதால் இதற்கு நேரம் இல்லை. :) செலெக்டிவாக ஒரு சில பதிவுக்குத்தான் பின்னூட்டம் எழுத முடியுது.

   மறுபடியும் பார்க்கலாம் இன்னொரு தருணத்தில்..Thanks for everything. :)

   நீக்கு
 7. பதில்கள்
  1. வருகைக்கும் வாசிப்பிற்கும் எனது அன்பான நன்றிகள்

   நீக்கு
 8. சகோதரியே அருமையான அளாவளவல் ஆரோக்கியமானது கூட பெண்கள் காமத்தை அடுத்தவரிடம் பகிர்வதற்கு பதிலாக தமக்கு உரியவரிடமே இதை தெரிவித்தால் அது ஆரோக்கியமான மற்றும் அவலமில்லா உறவு.மேலும் எல்லா தேவைகள் பற்றியும் கணவரோடு கலந்துரையாடல் பண்ணலாம்.அது முறையான காமமே அதற்காக கணவன் அவளை பரத்தை என நினைக்க மாட்டான். என் சொந்த அனுபவம் நாம் எவ்வளவு தான் கெஞ்சி கேட்டாலும் தம்பத்திய திருப்தி பத்தி கேட்டால் ம்ம்ம்ம் என்ற வார்த்தை மிறி அவளிடம் வேறு வார்த்தைகள் வருவதில்லை.பிறகு எப்படி நாங்கள் பெண்களின் இச்சை பற்றி தெரிந்து கொள்வது சகோதரியே முன்னோர்கள் பழிக்காதிர்கள் கமாத்துக்கு சாஸ்திரம் எழுதியவர்கள் நாம் என்பதை மறக்க வேண்டாம் பெண்களின் முதல் குரல் கொடுத்தவர்கள் ஆண்கள் என்பதையும் மறவாதீர்கள்
  நன்றி சில பல புரிதலை தந்தமைக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ம்ம்ம்ம் என்ற வார்த்தை மிறி அவளிடம் வேறு வார்த்தைகள் வருவதில்லை//

   இதுதாங்க பதில். :-)

   ஆணின் தேவையை தீர்ப்பதற்கு பெயர் தான் உடலுறவு என்ற அறியாமை கொண்ட பெண்கள் இக்காலத்திலும் இருக்கிறார்கள் நம்புங்கள். உறவு விசயத்தில் தனக்கு இன்பம் என்று ஒன்று ஏற்படுமா அது எப்படி இருக்கும் என்றே தெரியாத பெண்ணிடம் திருப்தியா என்று கேட்டால் ம்ம்ம் என்றுதான் பதில் வரும்.

   பெண்ணை திருப்தி படுத்துவது என்பதை விட மகிழ்விப்பது எப்படி என்று கற்றுக்கொண்டு அல்லது தெரிந்துக் கொண்டு பெண்ணை அணுகவேண்டும். பெண் எப்படி நடந்துக் கொண்டால் கணவனுக்கு மிக பிடிக்கும் என்பதை மனைவிக்கு உணரவையுங்கள். நான் எப்படி நடந்துக் கொண்டால் உனக்கு பிடிக்கும் என்று தனிமையில் கேளுங்கள், கண்டிப்பாக சொல்வார்கள்...

   தோள் சாய்த்து மென்மையாக அணைத்து அப்புறம் பேசச்சொல்லுங்கள்...ஆறுதலை அன்பாக கொடுக்கும் கணவனின் கை பிடிக்குள் அடங்கும் பெண் அத்தனையையும் உளறிக் கொட்டுவாள். :-)

   வாழ்த்துக்கள் சகோதரரே !

   காமத்திற்கு சாஸ்திரம் தான் எழுதிவிட்டோமே என்ற பெருமிதத்தோடு நிறுத்திக் கொண்டார்கள் நம்மவர்கள், செயல் படுத்த முயலவில்லை என்பதே உண்மை.

   நன்றி.

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...