செவ்வாய், ஜனவரி 13

AM 11:04
10

"18 வயதிற்கு குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் 40 சதவீதமாக இருக்கிறது. இவர்களை கவனிக்காமல் விட்டுவிட்டால் எதிர்காலச் சமுதாயத்தின் நிலை மிக மோசமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நமது நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான அத்தனை பிரச்சனைகளிலும் உடனடித் தீர்வு காணப்படவேண்டியது அவசியம். கட்டுப் படுத்த முடியாத தொழில்நுட்ப வளர்ச்சியின் காலத்தில் கிடைக்கும் நன்மைகளுக்கு சரிசமமாய் தீமைகளும் இருக்கின்றன" என்றெல்லாம் கவலை தெரிவித்திருப்பவர் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி. சஞ்சய் கிஷன் அவர்கள்.

அவரது கவலை அர்த்தமுள்ளது, இந்த கவலை ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கவேண்டும். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின்  நீரோட்டத்தில் உங்கள் பிள்ளைகள் மிதக்கப் போகிறார்களா?  மூழ்க போகிறார்களா? சற்று சிந்தித்துப் பாருங்கள். 



நாம்  அனுபவிக்காததை நம் பிள்ளைகளாவது அனுபவிக்கட்டும் என்ற பெருந்தன்மை தான் அனைத்து பிரச்சனைகளின்  ஆணிவேர். நீங்கள் அனுபவிக்காத சந்தோசத்தை அனுபவிக்கட்டும் என எண்ணுவது சரி அது எத்தகைய சந்தோசம் என்பதில் கவனம் மிக மிக அவசியம்.

டீன் ஏஜ் பிள்ளைக்கு  அனைத்து சமூக வலைத்தளங்களிலும் அக்கவுன்ட் இருப்பதில் தவறொன்றும் இல்லை, ஆனால் அதில் அவர்கள் எவ்விதமாக நடைபோடுகிறார்கள் என்ற கட்டாய கவனிப்பு தேவை.   நம் பிள்ளைதானே தவறென்ன செய்யப்போகிறான்/ள்  என்ற மெத்தனம் இனியும் வேண்டாம். இன்றைய டீன் ஏஜ் பிள்ளைகளின் கவனத்தை திசை திருப்புவதில் முக்கியமானவை செல்போன், இணையம், சினிமா இவை மூன்றும். தவறுகள் ஏற்படவும் அவை தொடரவும் அதிகமாக துணை புரிகின்றன. அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றம் தவிர்க்க முடியாதது மட்டுமல்ல, தேவையானதும் கூட ...ஆனால் அதை நாம் கையாளுவதை பொறுத்தே நன்மை தீமைகளின் சதவீதம் அமைகிறது. 

வளர்ந்தாலும் பெற்றோருக்கு அவர்கள் இன்னும் குழந்தைகள் தான், பிறந்த குழந்தையை வளர்க்கும் போது கவனம் வைத்ததை விட அதிகளவு கவனத்தை டீன்ஏஜிலும் வைத்தே ஆகவேண்டும் என்பது  காலத்தின் கட்டாயம்.

தவறுகளின் ஆரம்பம் 

மாணவன் ஏதாவது தவறு செய்துவிட்டால் உடனே பலரும் சுட்டிக் காட்டுவது ஆசிரியர்களை நோக்கியே... தங்களின் ஒரு குழந்தையை சரியாக வளர்க்க முடியாத பெற்றோர் நாற்பது குழந்தைகளுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியரை குறை சொல்வது எவ்விதம் சரி. வெகு சுலபமாக ஆசிரியர்களை கைகாட்டிவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்கள். பள்ளியில் தானே அதிக நேரம் இருக்கிறார்கள் என்ற சப்பைக்கட்டு வேறு. எந்த இடத்தில், எவ்வளவு நேரம் இருக்கிறார்கள் என்பதை விட முக்கியம் பெற்றோர்களின் வளர்ப்பு எத்தகையது என்பதே.  தவறு செய்யும் குழந்தையை கண்டிக்க தவறினால் அதுவே பல பெரிய தவறுகளின் ஆரம்பமாகிறது. தவறும் குழந்தைகளை கண்டிக்கும் ஆசிரியர்களை ஆள் வைத்து அடிக்கும் அளவிற்கு இன்றைய பெற்றோர் மாறிப் போனது வருத்தத்திற்குரியது. 

குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுத்தால் போதும் என்று பெருமிதம் கொள்வோர் அதிகம், அதனால் பிள்ளைகளின் வாழ்க்கை திசை மாறுவதையும் அவர்கள் கவனிப்பதில்லை. அவ்வாறு அவர்களை திசை மாற்றுவதில் முக்கியமானவை செல்போன் பைக் இணையம் சினிமா.   


பள்ளிக் குழந்தைகளின் கைகளில் விதவிதமான செல்போன்கள்...வாங்கி தருபவர்கள் பெற்றோர்! அதன் மூலம் பேஸ்புக் வாட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக தளங்களில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். தங்களுக்கென்று தனி உலகத்தை படைத்துக் கொண்டு பெற்றோர்களிடம் இருந்து தனித்தே இருக்கிறார்கள். பெற்றோர்களும் இதை பெரிதுப்படுத்துவதில்லை.. 'ஒருவருக்கு ஒரு காதல்' என்று இல்லாமல் பல சிம் பல காதல் என்றாகிப்போனது.

கிராமத்திற்கு சென்றால் நேரில் கண்கூடாகப் பார்க்கலாம் ஏதோ ஒரு மரத்தடி அல்லது கோவிலில் அரசு கொடுத்த விலையில்லா மடிகணினியை சுற்றி அமர்ந்து பள்ளிமாணவர்கள் விரும்பத்தகாத காட்சிகளை கண்டுக்களிக்கிறார்கள். நகரத்தில் தனி அறையில் மகன் /மகள் படிக்கிறான் என்ற எண்ணத்தில்  வெளியே பெற்றோர், உள்ளே நடப்பதோ வேறு. வரைமுறையற்ற இணையவெளியில் உலவும் இவர்களுக்கு எது சரி எது தவறு என்ற விழிப்புணர்வை கொடுக்கவேண்டிய பெற்றோர் கண்டும்காணாமல் இருப்பது பல விபரீதங்களுக்கு வழிவகுக்கிறது.  
   

மொபைல் போன் அதிகம் உபயோகிப்பதால் தூக்கமின்மை, அமைதியின்மை ஏற்பட்டு மறதியில் முடியலாம்.  தவிர கம்ப்யூட்டர் உட்பட அனைத்து நவீன சாதனங்களையும் தூங்க செல்லும் வரை உபயோகித்தால்  இதே பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. மாணவர்கள் படிப்பில் கவனம் சிதற இதுவும் ஒரு காரணம். .

என் குழந்தை எந்த தவறும் செய்யமாட்டான்/ள் என்ற அசட்டுத்தனமான நம்பிக்கை வைத்துக் கொள்ளாதீர்கள். இன்றையநாளில் இத்தகைய நம்பிக்கை ஆபத்தானது. எங்கள்  வீட்டிற்கு எதிரில் இருக்கும் நகரின்  பெரிய பள்ளியின் 12ம் வகுப்பு மாணவர்கள் ஒரு இருபது பேர் காம்பவுண்ட் சுவரின் அருகே  மரத்தடியில் காலை ஐந்தரை மணிக்கெல்லாம் வந்து கூடி விடுவார்கள், ஏழரை மணிவரை மொபைல் போனில் பாட்டு கேட்பது, வீடியோ, பேஸ்புக் என்று அரட்டை அடிப்பார்கள். இது தினமும் நடக்கும் காட்சி. இக்கூட்டத்தில் ஒரு மாணவன் (மூன்று மாணவிகளுடன் காதல் ?!)தனியாக சென்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போனில் பேசிக்கொண்டிருப்பான். அதே பள்ளியில் படிக்கும் என் மகனிடம் 'இந்த பசங்க மாதிரி கட் அடிக்காம  கேர்ள்ஸ்தான்  ஒழுங்கா ட்யூஷனுக்கு போய் படிக்கிறாங்க'  என்றேன் அவன் சிரித்துக் கொண்டே சொன்னான், 'இவங்க டியூசன் கட் அடிச்சிட்டு பேசுறாங்க, அவங்க டியூசன்ல போய் பேசுறாங்க அவ்ளோதான் வித்தியாசம் !?'

பள்ளி  மாணவர்களுக்கு எதுக்கு செல்போன்? ஏதாவது அவசரம் உதவி என்றால் செல்போன் அவசியம் என்கிறார்கள், செல்போன் வருவதற்கு முன் நாமெல்லாம் தினம்  செத்து செத்தா பிழைத்தோம்?! மேலும் பல பள்ளிகளில் செல்போன், பைக் இரண்டுக்கும் அனுமதி இல்லை ஆனால் இரண்டும் அவர்களிடம் இருக்கிறது...ஒன்று அமைதியாக(சைலென்ட் மோட்) பையில், மற்றொன்று அடுத்த தெரு மரத்தடியில்...! இரண்டையும் வாங்கிக் கொடுப்பது பெற்றோர்கள். ஒருமணி நேரத்திற்கும் மேலாக போனில் இவர்களால் பேசமுடிகிறது என்றால் தவறு எங்கே இருக்கிறது.  நம்ம குழந்தைகள் சரியாக டியூசன்,ஸ்கூல் அட்டென்ட் பண்ணுகிறார்களா என்று அந்த இருபது பேரில் ஒருவனின் பெற்றோர் கூடவா  கவனிக்க மாட்டார்கள். பெற்றோர்களின் இத்தகைய மெத்தன அலட்சியப் போக்கு வருத்தத்திற்குரியது. 

ஆசிரியர்கள் வகுப்பு நேரத்தில் சொல்லிக்கொடுப்பதை மாணவர்கள்  அக்கறையுடன் கவனித்துப் படித்தாலே போதும் , தனியாக எதற்கு  டியூசன்? அதுவும் அதிகாலை ஐந்தரை மணிக்கு ஸ்கூலில் டியூசன் க்கு செல்லும் மாணவ மாணவிகள் 9-4 ரெகுலர் கிளாஸ் அட்டென்ட் செய்துவிட்டு அதன் பின் மாலை நேர  டியூஷன் முடித்து  வீடு வர இரவு எட்டு, ஒன்பது  மணிக்கு மேல் ஆகிறது. மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் பற்றி சிறிதும் அக்கறை இன்றி ஸ்கூல் டியூஷன் செல்லாதவர்களை பிரைவேட் டியூஷனில் பெற்றோர்கள் சேர்த்துவிடுகிறார்கள். சேர்த்துவிட்டால் மட்டும் போதும், குழந்தைகள் படித்து விடுவார்கள் என்ற பெற்றோர்களின் நம்பிக்கை, சுத்த முட்டாள்தனம்.

சினிமா 

வன்முறை, வக்கிரம், ஆபாசம், விரசம், இரட்டை அர்த்த வசனங்கள் இவைதான்  இன்றைய சினிமா. குழந்தைகளை கட்டி போட்டு வைத்திருக்கும் சினிமா அவர்களின்  மனதில் காதல் என்ற விச(ய)த்தை விதைக்கிறது.  பள்ளி  மாணவர்கள் காதலிப்பதை போல படமெடுபவர்களின் வீட்டு பிள்ளைகள் காதல் திருமணம் செய்தால் மட்டும் பெற்றோருக்கு துரோகம் ,  அவமானம் என்று கண்ணீர் விடுகிறார்கள். ஏதேதோ காரணம் சொல்லி பிரித்தும் விடுகிறார்கள். ஆனால் அவர்கள் எடுத்த படங்களை பார்த்து திசை மாறும் குழந்தைகளை பற்றி யாருக்கும் இங்கே அக்கறையில்லை.  அநேக படங்கள் டீன்ஏஜ் காதலை நியாயப்படுத்துவதை போன்றே எடுக்கப் படுகின்றன. ...இதெல்லாம் சினிமாவில் மட்டும்  தான் சாத்தியம் என்பதை டீன் ஏஜ் குழந்தைகளுக்கு  யார் புரிய வைப்பது.? 

மாணவர்களின் பெரும்பாலான பொழுதுகள் இன்று சினிமாவைச்  சுற்றி மட்டுமே பின்னப்பட்டிருக்கிறது...சினிமா ஒரு பொழுது போக்கு என்ற கட்டத்தை தாண்டி சினிமா தான் வாழ்க்கை என்று என்று வந்ததோ அன்றே நம் மாணவர்கள் தொலைந்துவிட்டார்கள்...தங்களின் வாழ்க்கையை தொலைத்துவிட்டார்கள். இன்றைய மாணவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு நடிகனின் ரசிகர்கள், அவ்வாறு காட்டிக்கொண்டால்தான்  மாணவர்கள் மத்தியில் மரியாதை கிடைக்கிறதாம்??!

தொடர்ந்து பேசுகிறேன்...
உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா  
Tweet

10 கருத்துகள்:

  1. அருமையான பதிவு ..நிறைய பெற்றோர் இந்த எலெக்ட்ரானிக் சாமான்களை ஒரு போட்டிக்குனே வாங்கிதறாங்க ..பிள்ளைகளுக்கு எத்தனை அக்கவுண்ட் இருந்தாலும் பேரன்டல் மானிட்டரிங் இருக்கணும் .எதிலும் ஒரு அளவுகோல் வரையறை இருக்கணும் .அதிக அன்பும் அதிக கண்டிப்பும் கூடவே கூடாது

    பதிலளிநீக்கு
  2. arumaiyaan pathivu thozhi...petrorgal kandithu valarpathu illai...

    பதிலளிநீக்கு
  3. அருமையான பகிர்வு.
    தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. @@Angelin ...

    உண்மைதான். அதிக கண்டிப்பும் அதிக அன்பும் கூடவே கூடாது.

    தினமும் சிறிது நேரமாவாது குழந்தைகளுடன் அமர்ந்து பேசவேண்டும், அவர்களின் நிலை பற்றி புரிந்துக் கொள்ள இது உதவும்.

    நன்றி தோழி...தொடர்ந்துப் பேசுவோம்.

    பதிலளிநீக்கு
  5. @@Elini Palanisamy...

    தங்களின் வருகைக்கு மகிழ்கிறேன் ...

    நன்றி. தொடர்ந்து வாருங்கள்...கருத்துக்களை தெரிவியுங்கள்

    பதிலளிநீக்கு
  6. @@கரந்தை ஜெயக்குமார்...

    தங்களுக்கும் என் அன்பான பொங்கல் வாழ்த்துகள் !

    நன்றி.

    பதிலளிநீக்கு
  7. @@திண்டுக்கல் தனபாலன்...

    //தற்சமயம் 90% சினிமா பதிவர்கள்.//

    ஊடகங்களின் கைங்கரியம் அது :-)

    இவை மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    நன்றிகள் சார்.

    பதிலளிநீக்கு
  8. @@-'பரிவை' சே.குமார்...

    உங்களுக்கும் என் அன்பான பொங்கல் வாழ்த்துகள் குமார்.

    நன்றி.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...