வியாழன், ஜனவரி 29

9:43 AM
12


இதற்கு முந்தையப்  பதிவுகள்

வீட்டுத்தோட்டம் - 1 
வீட்டுத்தோட்டம் - 2 
வீட்டுத்தோட்டம் - 3

வீட்டுத் தோட்டம் என்பது சுவையான, சத்துள்ள, இரசாயனத்தன்மை அற்ற காய்கறிகளை உற்பத்தி செய்வது மட்டுமல்ல...பழையப்  பொருட்களை மறு சுழற்சி செய்வதும் தான். பழைய பிவிசி பைப் , பிளாஸ்டி டப்பாக்கள் , பெயின்ட் வாளி, ஓட்டை உடைசல் பாத்திரங்கள், அட்டைப் பெட்டிகள்  மட்டுமல்ல வீணாக குப்பைக்கு போகும் சமையலறைக்  கழிவுகள், காய்கறிக் கழிவுகள், காய்ந்த இலைத் தழைகள், முட்டை ஓடு, தேயிலை, காபி தூள் கழிவுகள் போன்றவற்றை மறுஉபயோகம் செய்வதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு மிக பெரிய  நன்மையை செய்தவர்களாகிறோம். (இனி யாரும் உங்களைப் பார்த்து நீ பொறந்த இந்த மண்ணுக்கு பெருசா என்ன  செஞ்ச னு கேக்கவே முடியாது) :-)

எங்களின்  வீட்டை சுற்றி நிறைய இடம் அதுவும் வளமான செம்மண் இருப்பதால் தொட்டிகளில் காய்கறித்தோட்டம் போட வாய்ப்பில்லை.  ஆனால் தொட்டியில் வளர்த்துப் பார்க்க  ஒரு சந்தர்ப்பம் தற்போது அமையவே பயன்படுத்திக் கொண்டேன். இது எனக்கு முற்றிலும் ஒரு இனிய அனுபவமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது. அவற்றை இங்கே பகிருகிறேன். நிச்சயமாக  எனது இந்த அனுபவங்கள் உங்களுக்கு பயன்படும். 
  
பால்கனித் தோட்டம்

ஒரு சொந்த வேலையாக உடுமலைபேட்டையில்  ஏழு  மாதம் தங்கவேண்டிய சூழல். மாடியில் வீடு, முன்னாடி சிறிய பால்கனி, நல்ல காற்றோட்டமான இடம் மனதை வசீகரிக்க தோட்ட வேலையை ஆரம்பித்துவிட்டேன். தினமும் ஒரு மணி நேரம் இங்கே செலவு செய்கிறேன். நான்கு மாதம் ஆகிறது... தற்போது இங்கே இருப்பவை பாகற்காய், சுரைக்காய், தட்டைபயிறு, சௌசௌ, அவரைக்காய் போன்ற கொடி வகைகள், தக்காளி, மிளகாய், கத்தரிக்காய், முட்டைகோஸ், முள்ளங்கி போன்ற செடி வகைகள், மணத்தக்காளி, மஞ்சள் கரிசிலாங்கண்ணி, பச்சை, சிகப்பு பசலை கீரைகள், பாலக் கீரை,  புளிச்சக் கீரை, பொன்னாங்கண்ணி, புதினா  போன்ற கீரை வகைகள், பிரண்டை, லெமன் கிராஸ், வெற்றிலை , துளசி, சோற்றுக் கற்றாழை, கற்பூரவல்லி (ஓமவல்லி) போன்ற மூலிகைகள் இவை தவிர  அன்னாசி , 2 ரோஜா செடிகள், changing ரோஸ் ஒன்று, செவ்வந்தி, இரண்டு வகை செம்பருத்தி, நான்கு வகை குரோட்டன்ஸ், மற்றும் ஒரு அவகோடா, ஒரு செண்பக மரக்கன்று, செவ்வாழை கன்று, இரண்டு பாக்கு மரக்கன்றும் (ஊர் போனதும் மண் தரையில் எடுத்து வைக்கவேண்டும்) இருக்கின்றன.  

அட்டைப் பெட்டியில் பாகற்காய் கொடி  

அனைத்தும் பிளாஸ்டிக் தொட்டிகள், அட்டைப் பெட்டிகள்,  மினரல் வாட்டர் கேன்கள், அரிசி சாக்குகள் , பிளாஸ்டிக் கவர்கள் தவிர கையில் கிடைக்கும் எந்த பொருளும் தொட்டியாக மாறிவிடும். இளநீர் குடிச்சதும் அவற்றையும்    தொட்டியாக மாற்றியாச்சு.

முக்கியமாக இவை எதற்கும் மண் போடவில்லை. உடுமலைபேட்டை,பொள்ளாச்சியை சுற்றி  தேங்காய் நார் கழிவு (coco peat) கம்பெனிகள் இருப்பதால் அவர்களிடம் coco peat blocks வாங்கி
அதனுடன் ஊரில் இருந்து கொண்டு வந்த மக்கிய ஆட்டுச் சாணம் கலந்திருக்கிறேன். இவை இரண்டும் தவிர கிச்சன் கழிவுகள் அனைத்தையும் உரமாக மாற்றிப் போட்டுவிடுவேன்.  அரிசி கழுவிய தண்ணீர், மீன், சிக்கன், மட்டன் கழுவிய தண்ணீர் , முட்டை ஓடுகள் என அனைத்தும் பால்கனிக்கு வந்துவிடும். தேங்காய் நார் கழிவு நீரை பிடித்துவைத்து கொள்வதால் மூன்று  நாள் தண்ணீர் ஊற்றவில்லை என்றாலும் செடிகள் வாடுவதில்லை. coco peat இன் எடை லேசாக இருப்பதால்  தொட்டிகளின் கனம் தாங்காமல் பால்கனி  டமால்னு கீழே விழுந்துவிடும் என்ற பயம் இல்லவே இல்லை :-)

மிதிப் பாகற்காய் என்ற ஒரு வகை , சுவை மிகுந்தது 

பூக்கள் பூக்கத் தொடங்கியதும் வண்ணத்துப்பூச்சிகள் வந்து குடித்தனம் நடத்தத் தொடங்கிவிட்டன. தேன்சிட்டு ஒன்று ரெகுலர் விசிட்டர்,  வீட்டினுள்ளே பரவும் பூக்களின் மணம்  அவ்ளோ ரம்யம் !! தக்காளி, பாகற்காய், அவரைக்காய் காய்த்து தற்போது சமையலறைக்கும் வந்துவிட்டன. புதினாவை இருமுறை துவையலுக்கும் மூன்று முறை பிரியாணிக்கு சேர்க்கவும் பறித்தாகிவிட்டது. பறிக்க பறிக்க வேக வேகமாக வளருவதே ஒரு அழகுதான்.

செடிகளில் எறும்பு தெரிந்தால் மஞ்சள் பொடி, பெருங்காயத்தூள் தூவுவேன். பூச்சிகள் இருந்தால் பூண்டு,பச்சை மிளகாய், இஞ்சி மூன்றையும் அரைத்து சாறு  எடுத்து தண்ணீர் கலந்து தெளிப்பேன்.  வேப்ப இலைகளை அரைத்து கலந்த தண்ணீரையும் தெளிக்கலாம். இன்னும் பல முறைகள் இருக்கின்றன...அடுத்தடுத்த பதிவுகளில் ஒவ்வொன்றாக சொல்கிறேன்.

மாடியில் தோட்டம் போடுவதால் பூச்சிகளின் தொல்லை சுமார் 70 சதவீதம் குறையும் என்கிறார்கள்.

எளிய பந்தல்  முறை


கொடி படர ஆரம்பித்தப்போது ...

பாகற்காய் பந்தல் போட பால்கனியில் வசதி இல்லை. ஸ்லாபில் மழை நீர் வடிய அரை அடி நீள பிவிசி பைப் இரு பக்கமும் இருந்தது.  இரண்டுக்குமாய் கட்டுக்கம்பியை இழுத்து கட்டினேன். (4 அடி நீளத்திற்கு கட்டு கம்பியை 14 துண்டு  வெட்டி வைத்துக் கொண்டேன்)  ஓரத்தில் இருந்து ஒவ்வொரு கம்பியாக  கட்டி தொங்க விட்டேன். கீழ் நுனியில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை கட்டினேன்,   கம்பி வளையாமல் ஸ்ட்ரைடாக இருப்பதற்காக. (பாட்டில்களில் cocopeat + compost  நிரப்பி புதினா,தக்காளி , பசலை கீரைகளை நட்டு வைத்திருக்கிறேன்) இப்படி வரிசையாக ஏழு  கம்பிகளையும் கட்டி பாட்டில்களை தொங்க விட்ட பின் குறுக்காக  மிச்ச ஏழு கம்பிகளையும் சிறிது இடைவெளி விட்டு கட்டினேன்.  குறுக்கும் நெடுக்கும் இணைக்க கம்பியை சிறிது வளைத்து ஒரு சுற்று சுற்றினால் போதும். அவ்வளவுதான்.  பந்தல் ரெடி.  இருக்கும் இடத்திற்கு ஏற்ப நமது கற்பனையை சிறிது கலந்தால் போதும், எத்தகைய சிறு இடத்திலும் தோட்டம் போட்டுவிடலாம்.

காய்கறிக் கழிவு உரம்

கடைகளில் இதற்கென மண் கலன்கள் கிடைக்கின்றன. கிடைக்காதவர்கள் வீட்டில் இருப்பதை வைத்தே தயாரிக்கலாம். மண் தொட்டி, மண்பானையையும் பயன்படுத்தலாம். நான் பழைய இருபது லிட்டர் மினரல் வாட் கேன் ஒன்றின் அடி பகுதியில் சிறு துளை இட்டு அதனடியில் ஒரு பிளாஸ்டிக் பிளேட்  என தயார் செய்தேன்.. மேல் பகுதி வழியாக கழிவுகளை போட்டுக் கொண்டு வர  கழிவு நீர் பிளேட்டில் சேகரமாகும். வாரம் ஒரு முறை அதை எடுத்து தண்ணீர் கலந்து செடிகளுக்கு ஊற்றலாம். கழிவு நீர் வீரியம் ஜாஸ்தி என்பதால் அப்படியே ஊற்றக் கூடாது, செடி கருகிவிடும்.  maggot எனப்படும் புழுக்கள் கழிவுகளில் உருவாகும், இவைதான் கழிவுகளை மக்க வைப்பவை. கழிவுகள் போடப்பட்டதும் கேனின் வாய் பகுதியை மூடி விட  வேண்டும். ஒரு நீளமான குச்சியால் கிளரிவிடலாம்.  கேன் நிறைந்ததும் அடுத்த கேனில் போட்டுவரவேண்டும்.  அறுபது நாளில் அதிகபட்சம் மூன்று மாதத்தில் உரம் தயாராகிவிடும். கருமைநிறமாக மாறி இருக்கும் உரத்தை கேனின் வாய்பகுதி வழியாக எடுக்கலாம்.

( காய்கறிக் கழிவுகளை உரமாக மாற்றும்  Kamba என்னும் compost bin ஒன்றை கோயம்புத்தூரில் வாங்கினேன். அதை பற்றிய விவரம்  அடுத்த பதிவில்...)

இயற்கையான முறையில் விளைந்த காய்கறிகள் வெறும் உணவு பொருள் மட்டுமல்ல, நமது ஆரோக்கியத்தை பாதுகாக்கும் மூலிகை மருந்துப் பொருள்கள்.

இந்த காய்கறிகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மருத்துவ செலவு மிச்சம் என்பதை விரைவில் தெரிந்துக் கொள்வீர்கள்.


தோட்டம் போடுவது பொழுதுபோக்கு, சந்தோசம்  தவிர தேவையான காய்கறிகள்,பழங்கள்  கைக்கெட்டும் தூரத்தில் ப்ரெஷாக கிடைக்கும் என்றளவில் இருந்த என் எண்ணம் பசுமைவிடியல் அமைப்பு ஆரம்பித்ததும் இயற்கையின் மீதான ஈடுபாடு தீவிரமடைந்து தற்போது இயற்கை விவசாயம் செய்ய  நிலம் வாங்குவதில் முடிந்திருக்கிறது. அது மட்டுமில்லாமல்  பலரையும் வீட்டுத்தோட்டத்தின் பால் அவசியம் இழுத்தே ஆகவேண்டும் என்ற விருப்பத்தில் எனக்கு தெரிந்த குறிப்புகள் தகவல்களை பலர் கேட்க சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.  

பசுமைவிடியல் பேஸ்புக் தளத்திலும் பகிர்ந்து வருகிறேன்.  வீட்டுத்தோட்டம் பற்றிய இந்த தொடரை தொடர்ந்து எழுத உங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இயலாது...படித்துவிட்டு தோன்றும் சந்தேகங்கள் , உங்களுக்கு தெரிந்த தகவல்களை மெயில், கமென்ட் மூலமாக தெரிவியுங்கள். பலரையும் இதில் ஈடுபட வைப்போம். வெறும் நாலே  மாதத்தில் சிறிய இடத்தில்  பால்கனியில் இத்தனை வகையான செடிகொடிகளை வளர்ப்பது சாத்தியம் என்றால் உங்களாலும் முடியும் தானே  ... இதுவரை வீட்டுத்தோட்டம் போடவில்லை என்றால் இன்றேனும் ஆரம்பியுங்கள்...



ஆரோக்கியமான குடும்பமாக எல்லோரின் குடும்பமும் இருக்கவேண்டும் என்ற நமது விருப்பம் சிறிதாவது நிறைவேறும் என்ற  நம்பிக்கையில் ...

ப்ரியங்களுடன்
கௌசல்யா
மெயில் ஐடி : kousalyaraj10@gmail.com


Tweet

12 கருத்துகள்:

  1. நல்ல கட்டுரை. வாழ்த்துக்கள்.
    பூச்சி தாக்குதலை தடுப்பது எப்படி என்று கூறவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயற்கையான முறையில் பூச்சிகளின் தாக்குதலை கட்டுப் படுத்த பலமுறைகள் இருக்கின்றன.

      விரிவாக அடுத்த பதிவில் கண்டிப்பாக பகிர்கிறேன்...

      வருகைக்கும் வாசிப்பிற்க்கும் என் நன்றிகள் !

      நீக்கு
  2. என்னவொரு அழகு.... அதுவும் ஏழே மாதங்களில்...

    ஆர்வம் தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோட்டம் ஆரம்பித்து நாலு மாதம் முடிந்து ஐந்தாவது மாதம் தொடங்கி இருக்கிறது .

      நன்றிகள் தனபாலன் சார்.

      நீக்கு
  3. பெயரில்லா10:19 AM, ஜனவரி 31, 2015

    superb idea.eppadi maintain panrathu.

    பதிலளிநீக்கு
  4. என்னுடைய ஆர்வத்திற்குக்கு நீங்களும்,ஏஞ்சலினும் தான் காரணம்,நன்றி தோழி !! படங்களை பார்க்கும் போதே ஆசையா இருக்குப்பா..

    பதிலளிநீக்கு
  5. இன்று தான் உங்கள் தளத்திற்கு வந்தேன் .....அருமையான பதிவு... பல பயனுல்ல தகவல்கள் ..பகிற்விற்கு நன்றி...வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. அழகாக ஆர்வத்தைத் தூண்டும் வகையில் எளிமையாகவும் பகிர்ந்திருக்கிறீர்கள். நன்றி..

    பதிலளிநீக்கு
  7. மாடியில் செடிக்கு விடப்படும் தண்ணீர் சிந்தாமல் இருக்க ஒவ்வொரு தொட்டிக்கு கீழேயும் 10ரூபாய்
    பிளாஸ்டிக் தட்டு வைக்கலாம்

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...