Tuesday, July 23

12:00 PM
22ஆண் பெண் யாராக இருந்தாலும் பருவ வயதில் காதலில் விழுவதும், காதலை கடந்து போவதும் சகஜம். சிலர் திருமணத்தில் இணைவர், பலர் வேறு ஒருவருடன் திருமணத்தில் இணைவர். இதில் ஒரு பெண்ணை காதலித்து வேறு பெண்ணை மணக்கும் ஆணுக்கு அவ்வளவாக பிரச்சனை இருக்காது. ஆனால் ஒருவரை காதலித்து மற்றொருவரை மணக்கும் பெண் ஆரம்பம் முதலே குழப்பத்தில் ஆழ்ந்துவிடுகிறாள். காதலனை எப்படி மறக்க  என்பது ஒரு பக்கம் என்றாலும் அக்காதலை கணவனிடம் சொல்லவா  மறைக்கவா என்ற கேள்வி ஒரு பக்கம் !!

ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்தேன் என்று எல்லா ஆண்களும் தன் மனைவியரிடம் சொல்கிறார்களா என தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக பெரிய அளவில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பில்லை. பொதுவாக ஒரு ஆணின் கடந்த காலத்தை பெண் பெருந்தன்மையுடன்  கடந்துவிடுகிறாள்.(விதிவிலக்கின் சதவீதம் குறைவு) 

அதை போல ஒரு பெண் தனது கடந்தகால காதலை கணவனிடம் சொல்ல முடியுமா? சொன்னால் நிலைமை என்ன? சொல்லாமல் மறைத்தாலும் என்றாவது ஒரு நாள் யாரோ ஒருவரின் மூலமாக கணவனின்  காதுக்கு விஷயம் தெரியவரலாம். யார் மூலமோ தெரிந்து பிரச்சனையாவதை விட நாமே சொல்லிவிடுவது பெட்டர் என்று சில பெண்கள் சொல்லிவிடுகிறார்கள் ...அவ்வாறு சொன்ன ஒரு பெண்ணின் நிலை இன்று மிக பரிதாபம். சந்தேகம் கொண்டு தேளாய் கொட்டுகிறான் கணவன், உறவினர்களிடம் போனில் பேசினாலும்  'அவன்கிட்ட தானே பேசுற, உருகி உருகி காதலிச்சிட்டு எப்படி மறக்க முடியும்?' 'அவன விட்டுட்டு என்னை கல்யாணம் பண்ணிகிட்ட அப்போ அவனுக்கு உண்மையா இல்ல, இப்போ எனக்கு மட்டும் எப்படி உண்மையா இருக்க முடியும்?' 'காதல் எதுவரை கை வரையா இல்ல அதுக்கு மேலயா?' என்று வித விதமான கொடிய வார்த்தைகளால் தினமும் அர்ச்சனை. துன்புறுத்தல் தொடர இப்போது விவாகரத்துதான் ஒரே முடிவு என்ற நிலை.

பருவ வயதில் காதல் வந்தது தவறா ? தன் காதலை ஏற்காமல் வற்புறுத்தி இவரை திருமணம் செய்வித்த பெற்றோரின் தவறா ?  கணவனிடம் எதையும் மறைக்காமல் உண்மையாக வாழ எண்ணிய தனது தவறா ? இப்படி பல கேள்விகளுக்குள் தன்னை புதைத்துக்கொண்டிருக்கிறாள்...

இன்றைய சூழலில் பல குடும்பங்களில் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் இச்சிக்கலில் இருந்து எப்படி மீள்வது என்பது ஆண் பெண்ணின் பரஸ்பர புரிதலை பொறுத்து அமைகிறது.  இந்த விசயத்தில் எப்படி  கவுன்சிலிங்  கொடுத்தேன்?! என்பது ஒரு புறம் இருக்கட்டும். இதுவரை கணவரிடம் சொல்லாமல் இருக்கிறோமே என்ற குற்றவுணர்ச்சியுடன் உள்ள பெண்கள் அல்லது கடந்த காலத்தை பற்றிய குழப்பத்துடன் திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள் அவர்களுக்கு  இங்கே சொல்லப் போகிறவைகள் உபயோகப்படலாம். தொடர்ந்து வாசியுங்கள்... 

ஆண்களின் கடந்த காலம் எப்படி இருந்தாலும்  அட்ஜெஸ்ட் செய்து வாழ பெண்கள் பழகிக் கொள்வார்கள். இந்த பக்குவம் ஆண்களிடம் உள்ளதா என்பது ஒரு கேள்விக் குறியே !

நம் திரைப் படங்களில் ஏற்கனவே ஒருவரால் காதலித்து கைவிடப்பட்ட கதாநாயகியை திருமணம் செய்யும் கதாநாயகன் தியாகச்சீலனை போல காட்டப்படுவான். அப்புறம் மறுமணத்திற்கு தயாராகும் கதாநாயகிக்கு குழந்தை இருக்காது, அதாவது முதல் கணவன் முதலிரவுக்கு முன்னரே இறந்துவிடுவான் அல்லது குடும்ப வாழ்விற்கு தகுதி இல்லாதவனாக இருப்பான். திரைப்படங்கள் என்றில்லை நம் சமூகமே இப்படித்தான் பெண்ணை சித்தரித்து வைத்திருக்கிறது.

நம் சமூகத்தில் ஆண்கள் பலருடன்  நட்பாக இருக்கலாம், காதலிக்கலாம், சில பல திருமணங்கள் கூட செய்து கொள்ளலாம். அவர்களின் மதிப்பு எவ்விதத்திலும் குறைவதில்லை. நான் ஆம்பளை என்பதில் அடங்கிவிடுகிறது அத்தனையும்...! ஆனால் பெண்கள் தாங்கள் காதலித்ததையே மறைத்தாக வேண்டும் !! காதல் வயப்பட்டவள் என்றால் அவள் இங்கே மதிப்பிழந்தவளாக  கருதப்படுகிறாள். பெண் என்பவள் ஒருவனுக்காகவே பிறந்து அவனுக்காகவே வாழ்ந்து அவனுடனே இறந்து விடவேண்டும் என்ற ஆழ்மன புதைகுழியில் இருந்து இன்னும் வெளிவரவில்லை இந்த சமூகம். (அதனால்தானோ என்னவோ பல முறைதவறிய பொருந்தா காதல்கள்,  கல்யாணங்கள் !)

காதல்

காதல் என்பது அழகான ஒரு உணர்வு. பலரின் மனதிலும் முதல் காதல் ஒன்று என்றும் இருக்கும். அந்த காதல் உங்களை அழகாய் பார்த்துக் கொள்ளும் சோர்வுறும் நேரம் தட்டி எழுப்பி உற்சாகப்படுத்தும். தோளில் சாய்த்து ஆறுதல் படுத்தும். நிகழ்கால குடும்பச் சுமைகளை உங்களிடம் இருந்து பகிர்ந்து எதிர்காலத்தை பற்றிய ஆவலை ஏற்படுத்தி வாழவைக்கும்.  கணவரிடம் கடந்த காலத்தை வெளிப்படுத்தும் போது அதன் அழகு , இயல்பு ஒருவேளை குறைந்துபோகக் கூடும். காதலில் உண்மையான வடிவம் சிதைந்து போகக் கூடும். கணவனுக்கு உண்மையாக இருப்பதாக எண்ணிக் கொண்டு கடந்த காலத்தை சொல்வது புத்திசாலித்தனம் அல்ல. உண்மையாக இருப்பது என்பது வேறு உண்மையைப் போட்டு உடைப்பது என்பது வேறு. உண்மையை சொல்லி அதுவரை தெளிவாக இருக்கும் கணவனின் மனதில் குழப்பத்தை குடி வைத்து விடகூடாது. அதன்பின் ஆயிரம் சத்தியங்கள் செய்தாலும் குழப்பத்தை வெளியேற்றுவது மிக கடினம்.

தீக்குளிக்கச்  சொல்லும் ராமன்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதற்காக நாம் சீதையாகிவிட முடியாது. கடந்தகாலத்தை கூறி... நிகழ்காலத்தை நரகமாக்கி... எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி விடாதீர்கள் !!

பொய் சொல்லக் கூடாதே தவிர உண்மையை மறைப்பதில் தவறில்லை. 

பொய் சொல்லக்கூடாது என்றால் காதல் அனுபவம் உண்டா என்று கணவன் கேட்கும் போது என்ன செய்வது என யோசிக்கிறீர்களா ? இந்த கேள்வி வந்தவுடனே உஷாராகி விட வேண்டியதுதான். பரந்த உள்ளம் கொண்ட ஒரு ஆண் தன் மனைவியின் கடந்த காலத்தை ஆராய விரும்ப மாட்டான், அவளாக சொல்லாதவரை !  மீறி கேட்கிறான் என்றால் இவனை போன்றவர்களிடம் பொய் சொல்வதை தவிர வேறு வழியில்லை. பின் வேறு யாரோ மூலமாக தெரியவந்தாலும் 'ஆமா அதை நானே மறந்துவிட்டேன், மறந்த ஒன்றை பற்றி இப்போது  ஏன் பேசணும் ...இப்போது என் சிந்தனை எல்லாம் நீங்க, குழந்தைகள் பற்றி மட்டும்தான்' என்று கூறி அத்துடன்  முற்றுபுள்ளி வைத்துவிடுங்கள்.  

பெண்களே...

திருமணத்திற்கு முன் பல நம்மை கடந்து சென்றிருக்கும். பெற்றோரின் கருத்து வேறுபாடுகள், யாரோ ஒருவரின் தவறான தொடுதல், ஏமாற்றம், தோல்வி இப்படி ஏதாவது இருக்கலாம் இதை எல்லாம் அப்படியே சொல்லிவிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நிகழ்கால நிம்மதியான வாழ்க்கைக்கு ஆண், பெண் யாருடைய கடந்த (கசந்த)காலமும் தேவையில்லை. இது உங்கள் இருவருக்கும் மட்டுமேயான ஒரு புதிய வாழ்க்கை. இதில் தேவையற்றபழையன கழிதல் வேண்டும். இந்த வாழ்க்கையில் குழந்தைகள், நெருங்கிய உறவினர்கள் இவர்களுடன் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பதை பற்றிய பேச்சுக்கள் மட்டும்தான் கணவன் மனைவியரிடம் இருக்க வேண்டும். 

கண்ணைவிட்டு மறைந்த கடந்த காலம் பற்றிய கவலை இன்றி
கண்ணுக்கே தெரியாத எதிர்காலம் பற்றிய அதிக எதிர்பார்ப்பும் இன்றி
கண்முன் தெரியும் நிகழ்காலத்தில் எவ்வாறு சந்தோசமாக வாழ்வது என்பதை  பற்றி மட்டுமே நினையுங்கள்...பேசுங்கள்... வாழ்வு வளமாகும்... தாம்பத்தியம் மகிழ்ச்சி வெள்ளத்தில் கரைபுரண்டு ஓடட்டும்...........

இது ஆண்களுக்காக...

பெண் நம்மை போன்ற உயிரும் உணர்வும் உள்ளவள், பருவ வயதில் உண்டாகும் ஈர்ப்புக்கு ஆளாவது சகஜம் தான்' என்று ஒத்துக் கொள்ளும் உயர்ந்த உள்ளம் உங்களுக்கு வேண்டும்.  தன் மனைவியானவள் தன் கடந்தகால காதலை தெரிவித்தால் 'பரவாயில்லை போனது போகட்டும், உன் தவறு ஏதுமில்லை...கடந்த காலத்தை காதலனுடன் சேர்த்து தூக்கிப் போட்டுவிடு... இனி உனக்கு நான்தான் எனக்கு நீ தான்' என்று பெண்ணின் மனதில் இருக்கும் குற்றவுணர்ச்சியை முதலில் போக்குங்கள். ஆண்கள் இந்த விசயத்தில் கட்டாயம் மாறித்தான் ஆகவேண்டும். உண்மையை வெளிப்படையாக சொன்ன மனைவியின் வெள்ளை மனதை புரிந்து அகமகிழ்ந்து அணைத்துக் கொள்ளும் அளவு மனம் பக்குவப்பட்டாக வேண்டும். அப்போதுதான் மனைவியும் கணவனிடம் தான் எதையும் மறைக்கவில்லை என்ற ஒரு மனநிம்மதியுடன் தன்னை புரிந்துக் கொண்ட கணவனை போற்றுவாள், மனதார முழுமையாக காதலிக்கத் தொடங்குவாள் அந்த நொடியில் இருந்து ...!  இனிவரும் நாட்கள் நிச்சயமாக நலமுடன் அமையும்.   

* * *

ஒரு ஆண் தனது கடந்த காலத்தை மனைவிடம் "சொல்லாமல் தவிர்ப்பதா? சொல்லி தவிப்பதா?" எப்படி என்றும் பாக்கணுமே :) அதையும் பார்த்துடுவோம் இனி வரும் பதிவில் ... 

தொடர்ந்து பேசுகிறேன்...
உங்களின் 'மனதோடு மட்டும்'

கௌசல்யா

Tweet

22 comments:

 1. பெண்கள் சொல்வது நல்லது என்றே நினைக்கின்றேன். அதனால் ஆணுக்கு தனக்கு உயிர் ஆபத்து எவனால் வரகூடிய வாய்ப்பு அதிகம் என்பதை அறிந்துகொள்ளலாம்.
  நாட்டு நடப்புகள் அப்படித்தானே இருக்கின்றது

  ReplyDelete
 2. புரிய வைக்க வேண்டும்...! இருபாலரும்...!

  ReplyDelete
 3. ***ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்தேன் என்று எல்லா ஆண்களும் தன் மனைவியரிடம் சொல்கிறார்களா என தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக பெரிய அளவில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பில்லை. பொதுவாக ஒரு ஆணின் கடந்த காலத்தை பெண் பெருந்தன்மையுடன் கடந்துவிடுகிறாள்.(விதிவிலக்கின் சதவீதம் குறைவு) ***

  இது பெருந்தன்மையா??? நீங்கதான் காதல் என்கிறது ஒரு அழகான உணர்வுனு சொல்றீங்க, அப்புறம் எதுக்கு இதுல "பெருந்தன்மை" எல்லாம் வருது?? ஒரு அழகான தவிர்க்க முடியாத கடந்தகால உறவை புரிந்து கொள்கிறாள்னு சொல்லுங்க!

  ReplyDelete
 4. ***ஆண்களின் கடந்த காலம் எப்படி இருந்தாலும் அட்ஜெஸ்ட் செய்து வாழ பெண்கள் பழகிக் கொள்வார்கள்.****

  எவனைவேணா எப்போவேணா கழட்டிவிட்டுட்டு புதுசா ஒருவனை, வசதியானவனை கட்டிக்கிட்டு நிம்மதியாகவும் வாழ்றவங்களும் பெண்கள்தான்.

  அந்தப் "பெருமையை"யும் சேர்த்துச் சொல்லுங்க!

  காலங்காலமாக நெறையா இளவர்சன்கள் திரிகிறானுக.

  பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதேனு பொலம்பிக்கிட்டு!!!  ***இந்த பக்குவம் ஆண்களிடம் உள்ளதா என்பது ஒரு கேள்விக் குறியே !***

  ஆண்கள் உண்மையான உணர்வுகளை கொட்டிடுறாங்க போல பாவம். பெண்கள் அதை மறைந்து ஏமாத்துறாங்களோ என்னவோ? ஆண்களும் நடிக்கணும்னு சொல்றீங்களா???


  ReplyDelete
 5. ***நம் சமூகத்தில் ஆண்கள் பலருடன் நட்பாக இருக்கலாம், காதலிக்கலாம், சில பல திருமணங்கள் கூட செய்து கொள்ளலாம். அவர்களின் மதிப்பு எவ்விதத்திலும் குறைவதில்லை.***

  பேசாமல் மதிப்புக் கூடும்னு சொல்லுங்க!!! என்ன இப்போ???

  ReplyDelete
 6. அருமையான கட்டுரை...
  எல்லாருக்குமே வாலிபவயதில் காதல் வருவது என்பது இயற்கை...

  திருமணத்திற்குப் பின் இருவரும் மனம்விட்டுப் பேசிக் கொள்வது நல்லது...

  ReplyDelete
 7. ****ஆனால் பெண்கள் தாங்கள் காதலித்ததையே மறைத்தாக வேண்டும் !! காதல் வயப்பட்டவள் என்றால் அவள் இங்கே மதிப்பிழந்தவளாக கருதப்படுகிறாள். பெண் என்பவள் ஒருவனுக்காகவே பிறந்து அவனுக்காகவே வாழ்ந்து அவனுடனே இறந்து விடவேண்டும் என்ற ஆழ்மன புதைகுழியில் இருந்து இன்னும் வெளிவரவில்லை இந்த சமூகம். (அதனால்தானோ என்னவோ பல முறைதவறிய பொருந்தா காதல்கள், கல்யாணங்கள் !)***

  ஆமா, நீங்க எந்தக்காலத்தில் இருக்கீங்க?

  நீயா நானா?, நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி போன்ற ரியாலிட்டி ஷோ எல்லாம் பார்க்கிறது இல்லையா?

  "தோசை சுடத் தெரியலைனு" சொல்றான் ஒருத்தன். அதுக்கு பதில் "நாங்க தோசை மட்டுமா சுடுறோம்?" என்பது- உலகறிய!!

  எனக்கு வேலைக்கு போய் வரத்தான் சரியா இருக்கு சமைக்க எல்லாம் முடியாது! ரொம்ப வேர்க்கிது?னு ஒப்பாரி வைக்கிறாள் விதவிதமாக சமையல்க்காரியை வைத்து சமைத்து உண்ணும் ஒரு அம்மா!!!

  இதைத்தான் ஆணும் செய்துகொண்டு இருந்தான்!! அப்போ மட்டும் வீட்டர்சிகள் சமப்பதை ஏதோ பெரிய சாதனையாக சொல்லிக்கிட்டு இருந்தீங்க?

  டி வி, சீரியல் எல்லாம் வந்ததும்தான் தெரியுது பெண்களுடைய "பெருந்தன்மை" "தியாக மனப்பான்மை" எல்லாம். எவன் எப்படியும் சாகிறான் நான் சீரியல் பார்த்தே ஆகனும்னு நிக்கிறாங்க இன்றைய தாய்க்குலங்கள்.

  இவர்கள் இன்றைய பெண்கள்!!

  நீ வெ ஒர் கோடி, சூர்யாவுடன் டாண்ஸ் ஆடும் பெண்களையும், கமலஹாசனுடன் டாண்ஸ் ஆடும் மணமான பெண்களும் நடிகைகள் இல்லை!!

  கவுதமி கமலுடன் வந்து உலகத்துக்கு அறிவுரை சொல்வது கமலஹாசன் தவறில்லை!

  நீங்க இதையெல்லாம் பார்க்காமல் அந்தக்காலத்து அடுத்த வீட்டுப்பெண், களத்தூர் கண்ணம்மா போன்ற சினிமாக்களைப் பத்தியும் வாரியார் பேசுறதையும் பேசிக்கிட்டு இருக்கீங்க?

  கண்ணைத் திறந்து உலகைப்பாருங்க!! இணையதள உலகில் உங்க பதிவை எல்லாம் வாசிக்க நேரமில்லாமல், யாரோ ஒரு ஆணிடம் ஆண்லைன் சாட் செய்துகொண்டு பிஸியாக இருக்கிறாள் இன்றைய பெண்!! இதுதான் நிதர்சனம்!!

  When the freedom is given, women proved that they can be worse than men in abusing freedom! That is the fact!

  ReplyDelete
 8. பெண் நம்மை போன்ற உயிரும் உணர்வும் உள்ளவள், பருவ வயதில் ****உண்டாகும் ஈர்ப்புக்கு ஆளாவது சகஜம் தான்' என்று ஒத்துக் கொள்ளும் உயர்ந்த உள்ளம் உங்களுக்கு வேண்டும். தன் மனைவியானவள் தன் கடந்தகால காதலை தெரிவித்தால் 'பரவாயில்லை போனது போகட்டும், உன் தவறு ஏதுமில்லை...****

  அப்போ அவனையே கட்டிக்க வேண்டியதுதானே??

  எதுக்கு இன்னொருவரிடம் வாழ்க்கைப்படணும்? அந்த அழகான காதலை "அசிங்கமான" உறவாக ஆக்கணும்?

  காதலிச்சவனை கல்யாணம் பண்ணாதது தப்பு இல்லையா??

  ஏன்?? னு விளக்கம் சொல்லுங்க!!

  ReplyDelete
 9. கேரளாவில் இதை ஆணும் பெண்ணும் சகஜமாக எடுத்துக் கொள்கிறார்கள், என்ன.... கல்யாணத்திற்கு பிறகு ஒழுங்காக இருக்கவேண்டும் என்பதுதான் அவர்களின் கோட்பாடு...!

  ReplyDelete
 10. @@ சங்கவி...

  நன்றிகள் சதீஷ்.

  ReplyDelete
 11. @@Anonymous said...

  //பெண்கள் சொல்வது நல்லது என்றே நினைக்கின்றேன். அதனால் ஆணுக்கு தனக்கு உயிர் ஆபத்து எவனால் வரகூடிய வாய்ப்பு அதிகம் என்பதை அறிந்துகொள்ளலாம்.//

  இப்போலாம் பெண்களே கத்தி எடுத்துட்டாங்க. நாம எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் :)

  //நாட்டு நடப்புகள் அப்படித்தானே இருக்கின்றது//

  நாட்டு நடப்பு பத்தி எல்லாம் நல்லா தெரிஞ்சி வச்சிருக்கிங்க, பேர் சொல்றதுதான் நல்ல பழக்கம்னு தெரியலையேங்க உங்களுக்கு. :)

  எனிவே வந்ததுக்கு நன்றிங்க அனானி

  ReplyDelete
 12. @@திண்டுக்கல் தனபாலன்...

  //புரிய வைக்க வேண்டும்...! இருபாலரும்...!//

  கண்டிப்பாக... இருபாலரும் புரிந்து கொள்வது நல்லது.

  நன்றிகள் தனபாலன் சார்.

  ReplyDelete
 13. நல்ல பதிவு. என்னைப் பொறுத்த வரையில் பெண்கள் தன்னுடைய கணவரிடம் அல்லது ஆணிடம் முதல் காதலை சொல்லாமலிருப்பது நல்லது. பெரும்பான்மையான ஆண்கள் பக்குவமில்லாதவர்கள். பெண்கள் வேறு வழியில்லாமல்தான் அனுசரித்துச் செல்கிறார்கள். திருமணம் நடந்து ஆண்டுகளானாலும் நாயகிக்கு கன்னி கழியாமல் நாயகனுக்கு சமர்ப்பிப்பது போலவே இரண்டு பெண்களுடன் ஒரு ஆண் நடனமாடுவதும் சாதாரணமாக இருக்கிறது. கதாநாயகியுடன் இரண்டு ஆண் நடிகர்கள் ஆடுவதை நினைத்துப் பார்த்தால் !! ???

  ReplyDelete
 14. @@வருண்...

  எனக்கு உங்களின் கோபம் ஆதங்கம் புரிகிறது. இதுக்கு பதில் சொல்றதுக்கு முன்னாடி ஒரு சிறு விளக்கம் கொடுத்துகிறேன். சரியா ?

  தாம்பத்தியம் தொடர் தம்பதிகளின் மனமுறிவுக்கு, பிரிவுக்கு என்னவெல்லாம் காரணங்கள் அதை முடிந்தவரை எப்படியெல்லாம் சமாளிக்கலாம் என்பதை பற்றியது மட்டும்தான். இதில் ஆண் பெண் என்று பார்க்காமல் தம்பதிகள் என்றுதான் பார்க்கவேண்டும். அடுத்ததாக இதே நிலையில் ஆண் இருந்தால் என்னவாகும் என்றும் எழுத இருக்கிறேன். பிரச்சனை அதிகரிப்பது எதனால் ? அதை எப்படி குறைக்கலாம் என்பதாகத்தான் இங்கே எழுத விரும்புகிறேன்.

  என்னிடம் வந்த பெண் 'குற்றவுணர்வு மனதை அழுத்த கணவரிடம் சொல்லிவிட்டேன், இப்போ அதே எங்களின் பிரிவுக்கு காரணமாகிவிட்டது' என்று சொன்னாள். காதல் என்பது தவறு பெரிய குற்றம் என்று எண்ணும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

  நீங்கள் இங்கே குறிப்பிட்ட பெண்களை போன்றவர்களும் இருக்கிறார்கள், இல்லை என்று சொல்லவில்லை ஆனால் அவர்களின் சதவீதம் குறைவு என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

  //எதுக்கு இன்னொருவரிடம் வாழ்க்கைப்படணும்? அந்த அழகான காதலை "அசிங்கமான" உறவாக ஆக்கணும்?

  காதலிச்சவனை கல்யாணம் பண்ணாதது தப்பு இல்லையா??///

  இது அவளாக எடுக்கும் முடிவாக சொல்ல முடியாதே... குடும்பச் சூழல், அவள் பெற்றோரின் முடிவு அல்லவா ? உண்மையாக நேசித்திருந்தால் அந்த காதல் இறுதிவரை ஏதோ ஒரு ஓரமாக இருக்கத்தான் செய்யும். இது ஆண் பெண் இருவருக்கும் பொது.

  பக்குவம் சில ஆண்களிடம் இல்லாததால் தான் தாம்பத்தியம் கோர்ட் வரை செல்கிறது.

  //இது பெருந்தன்மையா???//

  அந்த அழகான உணர்வை அனுபவித்த 'கணவரின் மேல் எந்த தவறும் இல்லை, சகஜம் தான்' என்று கடந்து செல்வது பல பெண்களால் முடியும் பல ஆண்களால் முடியாது அதனால் பெருந்தன்மை என்றேன் .

  //ஆமா, நீங்க எந்தக்காலத்தில் இருக்கீங்க?

  நீயா நானா?, நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி போன்ற ரியாலிட்டி ஷோ எல்லாம் பார்க்கிறது இல்லையா?//

  நானும் நீங்க வாழ்ற இதே காலத்தில் தான் இருக்கிறேன் வருண். என்ன ஒன்னு உண்மையில் இங்கே நீங்க குறிப்பிட்டு இருக்கிற டிவி நிகழ்ச்சிகள் எதையும் நான் பார்ப்பதில்லை. நேரமில்லை ஒரு காரணம் என்றாலும் விருப்பம் இல்லை.

  எனக்கு ஒன்னு மட்டும் புரியல அது ஏன் எல்லாரும் நீயா நானா, சீரியல், வெ.ஒரு கோடி பற்றியே பேசுறிங்க. அதில் வருபவர்கள்தான் ஒட்டுமொத்த பெண்களின் பிரதிநிதிகளா ???!!! விளம்பர ரேட்டிங்காகவும், பணம் சம்பாதிக்கவும் அவங்க எப்படியும் நடந்துக் கொள்வார்கள். அதை தாண்டியும் யதார்த்த உலகம் இருக்கிறது, இப்படி டிவி,டிவிட்டர், பேஸ்புக்கில் 'மட்டும்' சுற்றி வருபவர்களுக்கு சராசரி மக்களின் ஆசாபாசங்கள், உணர்வுகள் புரிவது சிரமம்.

  டிவி சீரியல்களை வைத்து பெண்களின் நிலை,குணம் தீர்மானிக்கப் படுகிறது என்று சொல்வது உங்களுக்கே கொஞ்சம் நெருடலாக இல்லையா வருண்?

  வீட்டில் இருக்கும் பெண்கள் பொழுதுபோக சீரியல்களை பார்க்க போக இப்ப இதுவே ஒரு மேனியா ஆகிவிட்டது. இந்த பழக்கத்தை அந்த வீட்டு ஆண் நினைத்தால் மாற்ற முடியும் ஆனால் மாற்ற மாட்டார்கள். ஏன் லேட் , அது என்ன ஆச்சு இது என்ன ஆச்சு என்று கேள்விகேட்பதை/யோசிப்பதை விட டிவிக்குள் பெண்கள் தொலைந்து போவதையே நிறைய ஆண்கள் விரும்புகிறார்கள் என்பதுதான் உண்மை. சொல்லப் போனால் பெண்களை விட ஆண்கள் அதிகமாக சீரியல் பார்க்கிறார்கள் என்றும் நினைக்கிறேன் :) (இதை வச்சும் ஒரு போஸ்ட் எழுதலாம் போலயே வருண்) :)

  //நீங்க இதையெல்லாம் பார்க்காமல் அந்தக்காலத்து அடுத்த வீட்டுப்பெண், களத்தூர் கண்ணம்மா போன்ற சினிமாக்களைப் பத்தியும் வாரியார் பேசுறதையும் பேசிக்கிட்டு இருக்கீங்க?//

  எனக்கு ரொம்பபப வயசாச்சுனு சொல்றிங்களா? :)

  //கண்ணைத் திறந்து உலகைப்பாருங்க!! இணையதள உலகில் உங்க பதிவை எல்லாம் வாசிக்க நேரமில்லாமல், யாரோ ஒரு ஆணிடம் ஆண்லைன் சாட் செய்துகொண்டு பிஸியாக இருக்கிறாள் இன்றைய பெண்!! இதுதான் நிதர்சனம்!!//

  இருக்கலாம் வருண். எனக்கும் ஓரளவு தெரியும். ஆனால் பெற்றோரிடமோ, வேறு யாரிடமோ பகிர முடியாமல் இணையத்தை நாடுபவர்கள் தொடரை படித்துவிட்டு ஆலோசனைக்காக போன், மெயில் மூலமாக தொடர்பு கொண்டு என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெரியவர் அவர் மகனின் பிரெண்ட் சொன்னதாக சொல்லி தனது மகளின் பிரச்சனை பற்றி எனக்கு கால் பண்ணி பேசினதை ஒரு உதாரணத்திற்கு சொல்லலாம் .

  //When the freedom is given, women proved that they can be worse than men in abusing freedom! That is the fact!//

  ஏற்றுக்கொள்கிறேன், சுதந்திரம் என்பதன் பொருள் புரியாத அரைகுறைகள் அப்படித்தான் என்பதை...!

  * * *
  வழக்கம்போல கடகடன்னு வரிசையா பின்னூட்டங்கள்...!! :)

  எழுத நிறைய விசயங்கள் கொடுத்திருக்கிங்க. முடிந்தவரை எழுத முயற்சிக்கிறேன்.

  என்னை இன்னும் அதிகம் யோசிக்க வைத்ததற்கு என் அன்பான நன்றிகள் வருண்.

  ReplyDelete
 15. @@MANO நாஞ்சில் மனோ said...

  //கேரளாவில் இதை ஆணும் பெண்ணும் சகஜமாக எடுத்துக் கொள்கிறார்கள், என்ன.... கல்யாணத்திற்கு பிறகு ஒழுங்காக இருக்கவேண்டும் என்பதுதான் அவர்களின் கோட்பாடு...!//

  இதுதான் வாழ்வியல் முறை. இப்படியே எங்கும் இருந்து விட்டால் மிக நன்றாக இருக்கும்.

  விட்டுக்கொடுத்தல் என்பதன் அருமையான பொருள் பலருக்கு புரிவதே இல்லை மனோ. அதுதான் பிரச்சனை.

  ...

  கருதிட்டமைக்கு நன்றி மனோ.

  ReplyDelete
 16. @@தமிழானவன்...

  இன்றைய திரைப்படங்கள் ஒரு உதாரணத்திற்காக எடுத்து கூட பேச முடியாத அளவு இருக்கின்றன ...

  வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி.

  ReplyDelete
 17. சுவாரசியமான கட்டுரை.
  உங்கள் அறிவுரையை ஏற்கமுடியவில்லை. கணவன் கேட்டால் உண்மையைச் சொல்லிவிடுவதே சரி. அந்த உண்மையை கணவனால் ஏற்கமுடியாவிட்டால் திருமணத்திலிருந்து விலகுவது எவ்வளவோ நல்லது. பத்து வருடங்களுக்குப் பிறகு, "நானே மறந்துட்டேன்.." போன்ற சமாதானங்கள் எடுபடாது. சந்தேகக் குணமுள்ள கணவர்களால் எந்தக் காலத்திலும் ஏற்க முடியாது. நரகத்தை நாலு பிள்ளைகள் பெற்ற பின் அனுபவிப்பதற்கு பதில் திருமணமான புதிதிலேயே தெரிந்து கொண்டு விலகுவது பெண்ணின் மன நிலைக்கு மிகவும் நல்லது.

  ReplyDelete
 18. கணவனின் பழைய காதல் விஷயத்தில் பெண்களுக்குப் பெருந்தன்மை எல்லாம் கிடையாது. அதே போல் தன்னுடைய காதல் விஷயத்தில் பெண்களுக்குத் துணிச்சலும் கிடையாது. சரியான கழுத்தறுப்பு கேசுங்க. தானும் வாழாது, தான் காதலித்தவனையும் நம்பாது நடுவில் திக்கித் திணறி பரிதாபம் தேடிய/தேடும் பெண்களைத் தான் அதிகம் அறிவேன். போதாக்குறைக்கு எல்லாவற்றுக்கும் தயாராக ஒரு சாக்கு வைத்திருப்பார்கள். என்னால உன் வாழ்வுக்கு எதுவும் தொந்தரவு வந்துடக்கூடாதே என்று உலக மகா தியாகிகள் போல நடிப்பு வேறே.. என்னத்த சொல்றது போங்க!

  உங்கள் அறிவுரையையே எடுத்துக் கொள்வோம். முதலில் பொய் சொல்லச் சொல்கிறீர்கள் (உண்மையை மறைப்பது என்ற போர்வையில்); பிறகு சாக்கு சொல்லச் சொல்கிறீர்கள்.

  பழைய காதலைத் தேவையில்லாமல் தெரியப் படுத்தவேண்டிய அவசியம் இருதரப்புக்குமே இல்லை. அப்படிச் சொல்வதாக இருந்தால் இயல்பாக ஏற்றுச் செல்லும் பக்குவம் இரு தரப்புக்குமே தேவை.

  ReplyDelete
 19. வருண் இந்தப் பின்னு பின்னுராறே!

  ReplyDelete
 20. குற்ற உணர்வு உறுத்துவதால் சொன்னாராமா? காதலிக்கும் பொழுது இதைப் பற்றி யோசிக்க வேண்டாமா? காதலிப்பது குற்றம் என்றல்லவா நினைத்துக் காதலித்திருக்கிறார்! இவருடைய காதலரைப் பற்றிய மிக மோசமான கருத்து வைத்திருக்கிறாரே!காதலருடன் பழகியதைக் குற்றமாகக் கருதும் இவர் போன்றவர்கள் காதலிப்பதால் தான் பிரச்சினையே உருவாகிறது..:)

  ReplyDelete
 21. என்னுடைய கருத்தும் இதுவே ~கடந்தகாலத்தை கூறி... நிகழ்காலத்தை நரகமாக்கி... எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி விடாதீர்கள்~

  இங்க ராமனும் இல்லை சீதையும் இல்லை...அன்று முகபுத்தகம், வாட்ஸ்அப், கைப்பேசி இல்லை..நல்லா இருக்கற குடும்பத்தில பிரச்சனை வர்ற மாதிரி செய்யாம இருந்தா சரி!!

  இன்று பெண்களுக்கு இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் ஆண்களுக்கும் இருக்கு..

  குற்றத்தை ஆண் செய்தாலும் பெண் செய்தாலும் அது தவறுதான்...ஆனா காதல் குற்றமில்ல தான்!! தவற திரும்ப செய்யாமலிருந்தா சரிதான்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...