Tuesday, December 27

12:53 PM
17முந்தைய  பதிவின் தொடர்ச்சி......விழிப்புணர்வு பேரணி முடிந்ததும் மாணவ மாணவியர், ஆசிரியர்கள் அனைவருக்கும்  ஸ்நாக்ஸ்,  ஐஸ்க்ரீம், தேநீர் வழங்கப்பட்டது. சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் கருத்தரங்கம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. எனது கணவர் வந்திருந்த அனைவரையும் வரவேற்று , பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி கூறி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர்கள் திரு. சங்கர்ராம் மற்றும் திரு.நாராயணன் இருவரும் பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகளை பற்றி மிக அருமையாக எடுத்துரைத்தனர். அவர்கள் சொன்ன பல விசயங்கள் மிக முக்கியமானவையாக இருந்தன...அனைவருக்கும் மனதில் பதியும் விதத்தில் இருந்தது. மாணவ மாணவர்களுக்கு எந்த விதத்தில் சொன்னால் புரியுமோ அந்த விதத்தில் குட்டி கதை, ஒரு பாடல் இவற்றுடன் சொன்னது அசத்தல்.  இறுதியில் இரு ஆசிரியர்களுக்கும் பொன்னாடை போர்த்திய போது பசங்க பக்கமிருந்து இருந்து பயங்கர அப்ளாஸ்...!!பரிசு பொருட்கள் மற்றும் மரக் கன்றுகள் 

ஒவ்வொரு பள்ளியிலும் படிப்பில் முதல், இரண்டாம், மூன்றாம் இடத்தை பிடித்த மாணவ மாணவிகள் 102 பேருக்கு ஸ்கூல் பேக் மற்றும் ஜாமென்ட்ரி பாக்ஸ் சிறப்பு அழைப்பாளர் Mr. Mori (Japan) அவர்களால் கொடுக்கப்பட்டது.


                                         
மற்றும் மாணவர்களிடம் மரகன்றுகளை கொடுத்து அவரவர்  பள்ளிகளில் நடவேண்டும் என்றும், அவற்றை தண்ணீர் ஊற்றி பேணி வளர்ப்பது அவர்களின் பொறுப்பு என்றும் அறிவுறுத்தப்பட்டது. மாணவ  மாணவிகள் போட்டி போட்டு கொண்டு பெற்றுச்  சென்றார்கள்.

இறுதியாக என் கணவர் நன்றியுரை வழங்கினார். அனைவரும் எழுந்து நிற்க தேசிய கீதம் இசைக்க விழா இனிதே நிறைவு பெற்றது.

எவ்வாறு நடத்தி முடிக்க போகிறோம் என்று ஒரு பதட்டம் இருந்துகொண்டே இருந்தது...ஆனால் நிகழ்ச்சிகள் அனைத்தும் நாங்க நினைத்ததை விட நன்றாக நடந்து, இன்னும் பல சமூக பணிகளை செய்வதற்கு எனக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்தது.

மனதை கவர்ந்தவை !

பேரணியின் போது பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகளை குறித்து எழுதப்பட்ட துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.

=> அதை படித்து பார்த்த மாணவர்களில் சிலர் 'மேடம் எனக்கும் கொடுங்க,  வீட்டுக்கு கொண்டு போய் படிச்சி காட்டுறேன், அவங்களும் தெரிஞ்சிக்கட்டும்' சொல்லி என்னிடம் பெற்று கொண்டார்கள். அந்த வாக்கியங்களை எழுத நான் கொண்ட மெனக்கிடலின் பலன் எனக்கு கிடைத்த நிறைவு ஏற்பட்டது.

=> ஆசிரியர் பேசியபோது இறுதியாக மாணவர்களிடம் 'எல்லோருக்கும் புரிந்ததா ?' என்று கேட்கவும், மாணவர்கள் கோரசாக ஒரே குரலில் " பிளாஸ்டிக் பயன்படுத்த மாட்டோம் சார்" என்ற பதில் எனக்கு மிகுந்த ஆச்சர்யம் ! 'புரிந்ததா' என்று கேள்வி கேட்டால் 'புரிந்தது' என்று பதில் வரும் என்று எதிர்பார்த்தேன், ஆனா ஆசிரியர் சொன்னவற்றை உள்வாங்கி கொண்டு அவர்கள் பதில் அளித்த விதம் மனதை தொட்டது.  

=> மரக்கன்றுகளை கொடுத்ததும், 'இது என்ன வகை மரம்' என்று ஆர்வமாக விசாரித்து பெற்று கொண்டார்கள் !

எதையும் தெரிந்து கொள்ளவேண்டும், அதை நடைமுறையில் செயல் படுத்த வேண்டும் என்கிற அவர்களின் ஆர்வத்தை நேரில் கண்டு பிரமித்தேன். இன்றைய 'மாணவர்கள் விளையாட்டுத் தனமாக இருப்பார்கள் என்ற தவறான எண்ணத்தை மாற்றிகொண்டாகவேண்டும்' எனக்குள் சொல்லிகொண்டேன் !!

எங்கள் தொண்டு நிறுவனத்தின் மூலம் சுற்றுச்சூழலுக்காக மேற்கொண்ட முதல் நிகழ்வு இது...இதனை தொடர்ந்து வேறு பல திட்டங்கள், திட்ட வடிவில் இருக்கின்றன. ஒவ்வொன்றாக முறைப்படி செயல் படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றேன்...!!

                                              * * * * * * * * * * * * * * * * * * * *
சுற்றுச்சூழல் !!

நாளைய உலகின் அழிவிற்கு உலக வெப்பமயமாதல் முக்கிய காரணம், இதை ஏற்படுத்தியதும் மனிதன் தான்.


மனிதன் எப்போதும் தன்னை பற்றி மட்டுமே நினைப்பவனாக இருக்கிறான்...தன்னை உயர்ந்தவனாகவும் இயற்கை, பிற உயிர்கள் போன்றவற்றை தன்னை விட மிக கீழானதாகவும் எண்ணி கொண்டிருக்கிறான். அதன் காரணமாகத்தான் நாசமானது, இன்றைய சுற்றுச்சூழல்  !! 


தனக்கு எது சாதகம் என்று பார்த்தானே தவிர ஒருபோதும் இயற்கைக்கு சாதகமாக அவன் சிந்தனை, செயல்கள் இருந்ததில்லை !!?
நாம் பிறந்த போது இருந்த பூமி வேறு இப்போது இருப்பது வேறு. மூன்று புறமும் நீரால் சூழப்பட்டும் குடிநீர் பற்றாகுறை ! குடிநீருக்காக மாநிலங்களிடையே நடக்கும் பிரச்சனை நாளை இரு நாடுகளிடையே போராக மாறக்கூடும் !!

தண்ணீருக்காக பிறரை நம்பி இருக்கவேண்டிய நிலையை அரசும் மக்களும் நினைத்தால் மாற்றமுடியும். நம்மிடம் இருக்கும் நீர் நிலைகளை தூர் வாரியும், ஆழப்படுத்தியும், பல ஏரி, குளம், குட்டைகளை வெட்டியும் மழை நீரை சேமித்து வைக்கலாம். பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்ச்சி செய்தோ அல்லது முற்றிலும் தவிர்த்தோ அதனால் ஏற்படக்கூடிய தீமையை தவிர்க்கலாம்.


ஒவ்வொரு பத்து கி.மீ சாலை விரிவாக்க பணிக்கும் வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கை சுமார் 2 ,000 !!!!?  


சுலபமாக வெட்ட தெரிந்த மனிதனுக்கு அதை வெட்ட தனக்கு என்ன உரிமை இருக்கிறது என்ற சிந்தனை இல்லையே...?!


இது நம்ம பூமி, இனி நன்றாக பார்த்துகொள்வோம்


வாழ்க்கை ஒரு முறை...இயன்றவரை, நம்மால் இயன்ற நல்லதை செய்து நிறைவாய் வாழ்ந்து முடிப்போம்...!

                                                        * * * * * * * * * * * * * * * * * * * *
பிரியமானவர்களே !


சுற்றுச்சூழலுக்கென்று புதியதொரு தளம் !

இணையத்தின் துணை மிக அவசியம் என்பதை உணர்ந்ததின் காரணமாக சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்தான செயல்கள், திட்டங்கள் போன்றவற்றை பகிர்ந்து கொள்ள தளம் ஒன்றை தொடங்கி உள்ளேன். தற்போது இதில், சமூக அக்கறை கொண்ட இளைஞர்கள் பிரபுகிருஷ்ணா(பலே பிரபு) , சூர்யபிரகாஷ் மற்றும் செல்வகுமார் அண்ணா (செல்வா ஸ்பீக்கிங்)  போன்றோரும் இணைந்து செயலாற்ற உள்ளார்கள்.

(தளத்தை பற்றி மற்றொரு பதிவில் விரிவாக பகிர்கிறேன்.)


மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஒரு பக்கம் இருந்தாலும் களமிறங்கி பணியாற்றுவது சுற்றுச்சூழலை பொறுத்தவரை மிக அவசியம் என நினைக்கிறேன். இப்பணியாற்ற எனக்கு கைகொடுக்க கூடிய சமூக ஆர்வம் உள்ளவர்களை தற்போது இனம் கண்டு வருகிறேன். விரைவில் வலிமையான 'பசுமைப் போராளிகள் படை' ஒன்றை திரட்டி விடலாம் என நம்புகிறேன்.

நாட்டை ஒரு வழி பண்ணாம விடகூடாது என்று முடிவே பண்ணியாச்சு :))

உங்களின் வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும் எனக்கு என்றும் வேண்டும், தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்...

கௌசல்யா

Tweet

17 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...