Tuesday, December 20

1:04 PM
35






அறிவியல் கண்டுபிடிப்புகள் மக்களுக்கு பயன்படவேண்டும் என்பதற்காகதான். ஆனால் சில கண்டுபிடிப்புகள் இன்று நம் வாழ்வாதாரத்தை பாதிக்க கூடிய அளவிலேயே இருக்கின்றன. அதில் ஒன்று தான் நம் மண்ணை, சுற்றுச்சூழலை பாழ்படுத்திக் கொண்டிருக்கும் பிளாஸ்டிக் என்னும் அரக்கன் ! முன்பு துணிப் பைகள் அதிலும் மஞ்சள் நிறப் பைகள் எங்கும் புழக்கத்தில் இருக்கும். இப்போதோ பல நிறத்தில் விதவிதமான பிளாஸ்டிக் பைகள் வந்துவிட்டன...

எது ஒன்றும் ஆரம்பத்தில் அறிமுகமாகும் போது அதன் பின்விளைவுகள் பற்றி யாரும் அக்கறை கொள்வதில்லை, போக போகவே அதன் தீமைகள் புரிந்து 'இப்படி ஆகிபோச்சே' என்று வருந்துகிறோம். பிளாஸ்டிக்கை பொறுத்தவரை இதனால் உருவாக்கப்பட்ட பொருட்களின் பயன்பாடு அதிகம், ஆனால் முறைப்படி அதன் கழிவுகளை அப்புறப்படுத்துவதில்தான் நமக்கு சரியான திட்டமிடல் இல்லை.

சுயநல கழிவுகள் !?

தன்னுடைய வீட்டின் நடுவில் சிறிய காகித குப்பை, ஏன் சிறு முடி விழுந்து கிடந்தாலும் உயிரே போற மாதிரி உடனே அப்புறபடுத்த தெரிந்த மனிதனுக்கு, பொது இடங்கள், காடுகள், நீர்நிலைகள், விளை நிலங்களிலும் யோசிக்காமல் வீசி எறியப்படும் பிளாஸ்டிக்கை பற்றிய அக்கறை ஏன் இல்லை...?!! 

சட்டத்தின் மூலமே ஒவ்வொன்றையும் சரி கட்டணும் என்றால் மனிதனுக்கு இருக்கும் சிந்திக்கும் திறன் எதற்கு ? எப்போதும் தீமைகளை பற்றி யாராவது எடுத்து சொல்லி கொண்டே இருக்க வேண்டுமா ? மனித குலத்திற்கு தீமை என்று தெரிந்ததும் அதை தவிர்க்க வேண்டாமா? இன்னும் எத்தனை காலத்திற்கு தான் திருந்துங்க,மாறுங்க என்று குரல் கொடுத்து கொண்டே இருப்பது ? 

பிளாஸ்டிக்கை ஒழிக்கணும் என்று ஒரு சாரார் குரல் கொடுத்து வந்தாலும் பலரின் செவியை இது எட்டுவதே இல்லை...ஆனால் அரசு, தொண்டு நிறுவனங்கள் மட்டும் பிளாஸ்டிக் வேண்டாம் என்று குரல் கொடுத்தால் போதுமா? தனி மனிதன் என்ன செய்கிறான்...?! தன் வீட்டை மட்டும் சுத்தமாக வைத்து கொண்டால் போதும் என்ற 'சுயநல கழிவுகள் கொண்டவன்' எப்போது மாறுவது...!?


தன் வீட்டு குப்பையை கூட அடுத்த வீட்டின் வாசலில் கொட்டுபவன் முதலில் மாற வேண்டும். பிளாஸ்டிக்கின் உபயோகம் முடிந்ததும் கொஞ்சமும் யோசிக்காமல் தூக்கி வீசுபவனுக்கு இதன் தீமையை பற்றிய விழிப்புணர்வு வேண்டும். நச்சு என தெரிந்தும் 'தனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை' என்று எண்ணுவான் என்றால் அவனை போல தாய் மண்ணின் துரோகி வேறு ஒருவரும் இருக்க முடியாது.

 "நாளை இங்கே வாழப்போகும் சுயநல மனிதனின் குழந்தைகள், குடிநீர் கிடைக்காமல்,சுகாதாரம் இல்லாத,சுவாசிக்கத் திணறி, நோய்களின் கூடாரமாகி போன உடலுடன், வாழவே தகுதி இல்லாத பூமியில் உழன்று சிதைந்து சின்னாபின்னமாகி போவார்கள்" இது இதுதான் இந்த பூமித்தாயின் சாபமாக இருக்க கூடும்...!?

பொறுமையின் இலக்கணமான பூமித்தாயை இதுக்கு மேல நாம் கொடுமைபடுத்த முடியாது...!  

நம்மை பாதுகாத்து பேணி வளர்த்து கொண்டிருக்கும் இயற்கை அன்னையை போற்றுவோம்.

எல்லாம் சரிதான்,பிளாஸ்டிக் பொருளால் என்ன தீமைனு சொல்லாம இருந்தா எப்படின்னு நினைகிறீங்களா...?!அதுதான் எல்லோருக்கும் நன்றாகவே தெரியுமே ! அதான் இங்கே சொல்லல ! பொதுவா என்னதான் பேரணி, முகாம், கருத்தரங்கம்னு மாத்தி மாத்தி பண்ணினாலும் மக்களும், கடைகாரர்களும் புரிஞ்சிக்கலையேனு வருத்தம்  இருக்கு...!! (அந்த வருத்தத்தை உங்களை தவிர வேற யார்கிட்ட போய் நான் சொல்வேன் !)

* இங்க பக்கத்தில இருக்கிற கன்னியாகுமரி மக்கள் இந்த பிளாஸ்டிக் விசயத்தில் கவனமா,விழிப்புணர்வாக இருந்து கட்டுபடுத்திட்டு வர்றாங்க...கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஆர்வமா செயல்பட்டாலும் மக்கள் ஒத்துழைக்கலைனா எந்த நல்லதையும் நடைமுறை படுத்தவே முடியாது. நெல்லையில் இருந்து அங்கே செல்பவர்கள் விட்டுட்டு போற பிளாஸ்டிக்தான் அவர்களை கொஞ்சம் இம்சை படுத்துகிறது !! 

நாங்கள் நடத்தின பேரணி !

பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமையை குறித்து ஒரு விழிப்புணர்வு பேரணி நடத்தவேண்டும் என்ற எனது நெடு நாள் எண்ணத்தின்படி நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் கடந்த 13 ஆம் தேதி அன்று எங்கள் ஈஸ்ட் தொண்டு நிறுவனத்தின்(EAST TRUST) சார்பில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினோம். ஆறு பள்ளிகளை சேர்ந்த ஆயிரம் மாணவ மாணவிகள் வந்திருந்தனர்.

                                        தினசரியில் வந்த படம் + செய்தி

சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவி திருமதி.ச.முத்துசெல்வி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைக்க, ஆணையாளர் திரு.ம. செந்தில்முருகன் முன்னிலை வகிக்க நகராட்சியின் சுகாதார அலுவலர் திரு வே.குருசாமி, மேலாளர் திரு ஆ.இராஜாமணி,கவுன்சிலர் திருமதி ஜெயலக்ஷ்மி,  ஆசிரியர்கள் வே.சங்கர்ராம் மற்றும் ச.நாராயணன், பல்வேறு  பள்ளிகளை சேர்ந்த ஆசிரிய, ஆசிரியைகள்,நகராட்சி பணியாளர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக ஜப்பானின் ஹேப்பி சைன்ஸ் இந்தியா அசோசியேஷன் மேலாளர் Mr. யோஷிகிரோ மோரி, மற்றும் நண்பர்கள்  வந்திருந்தனர்.

விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பேனர்கள் ஏற்கனவே தயாராக வைத்திருந்தோம், வந்திருந்த மாணவர்களிடம் கொடுத்ததுடன் வேலை முடிந்ததுன்னு இருந்தேன். மாணவர்களில் ஒருவன் 'மேடம் நாங்க என்ன சொல்லி கோஷம் போட' புத்திசாலித்தனமா கேட்டான்...அப்போ வேகமா என்கிட்ட வந்த என் கணவர் 'சேர்மன் உட்பட மத்த எல்லோரும் தயார் நிலையில இருக்கிறாங்க, பேரணி முன்னாடி போகாம இங்கே என்ன பண்ணிட்டு இருக்கிற ?'னு கேட்க(அவர்கிட்ட எப்படி சொல்ல, 'எல்லாம் சரியா பண்ணிடுவேன் யு டோன்ட் வொர்ரி'னு தைரியம் கொடுத்தவளாச்சே !) 'இதோ வந்துடுறேன், நீங்க போங்க'னு சமாளிச்சு அனுப்பினேன்.


வாசகம் எழுதி கொடுக்க பேப்பர், பேனா வேணுமே என்ன பண்ணனு சுத்தியும் ஒரு லுக் விட்டு ஒரு ஆசிரியர் ஷர்ட் பாக்கெட்ல இருந்த பேனாவை பிடுங்காத குறையா வாங்கி,  ஆசிரியை ஒருவரிடம் பேப்பரை வாங்கி துண்டு துண்டா கிழிச்சு(?) பின்னாடி 'பிளாஸ்டிக்கை தூக்கி எறி, காகிதத்தை கையில் எடு', 'பிளாஸ்டிக்கை ஒழிப்போம்' , 'மரம் வளர்ப்போம்' அப்படி இப்படின்னு தோணுறதை எல்லாம் கடகடன்னு எழுதி வரிசைல கடைசில இருந்து 'யார் குரல் கம்பீரமா இருக்கும்'னு கேட்டு அவங்க கைல கொடுத்துட்டு அப்படியே முன்னாடி (ஓடி) போய் சேர்ந்தேன். இதில சில பசங்க, 'பரவாயில்லை மேடம் பேனர்ல இருக்கிறதை அப்ப அப்ப திருப்பி பார்த்து சொல்லிகிறோம்'னு ஆறுதல் வேற !! (ம்...புத்திசாலி புள்ளைங்க !)  


முதல் முறையாக நடத்துறோம்,நல்ல முறையில் நடத்தி முடிக்க வேண்டுமே என்கிற பதட்டம் உள்ளுக்குள் இருந்தாலும் பல பேரணிகளை நடத்திய அனுபவம்(!?) இருக்கிற மாதிரியே எவ்ளோ நேரம் தான் சமாளிக்கிறது...முடியல சாமி !! :) பேரணியில நடந்து போகும் போது, சேர்மன் மேடம் வழியில, கடைல தென்படுற அத்தனை பேரையும் பார்த்து 'பிளாஸ்டிக் இனி பயன்படுத்தாதிங்க சரியா' என சொல்லி வணக்கம் போட்டுட்டே வந்தாங்க...! அவங்க இந்த அளவு ஆர்வமா ஒத்துழைப்பு கொடுப்பாங்கன்னு நான் எதிர்பார்கவே இல்லை.




மாணவர்களையும் சும்மா சொல்ல கூடாது, என்னமா உற்சாகமா இருக்காங்க...?! 'பிளாஸ்டிக் ஒழிக', 'காகிதம் வாழ்க', 'மரம் வாழ்க'ன்னு எக்ஸ்ட்ரா பிட் எல்லாம் போட்டு கலக்கிட்டாங்க...! மெயின் ரோட்ல வாகனங்கள் ஓரமாக ஒதுங்கி வழிவிட கம்பீரமாக ஒவ்வொரு இடமாக பேரணி கடந்து சென்றது...இறுதியாக தொடங்கிய இடத்திற்கு வந்து சேர்ந்தது.


பின்னர் திருமண மண்டபம் ஒன்றில் கருத்தரங்கம் ஒன்றிற்கும் ஏற்பாடு செய்திருந்தோம்...அதன் விவரங்கள் அடுத்த பதிவில்... 



Tweet

35 comments:

  1. நல்நோக்கத்திற்கான முன்முனைபபிற்காக நன்றியும், வாழ்த்துகளும் மேடம்...

    ReplyDelete
  2. அருமையான முயற்சி. இந்த பிளாஸ்டிக்க்கு மாற்று என்பதை அரசு அதிகமாக விளம்பரப் படுத்த வேண்டும். அப்போதுதான் நிலைமை மாறும். மக்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டும் இதன் ஆபத்தை.

    என்னைப் பொறுத்த வரை. தேவைக்கு அதிகமாய் அடிக்கடி இப்போது பிளாஸ்டிக் பைகளை கடைகளில் வாங்குவது இல்லை. கூடிய விரைவில் வாங்கவே கூடாது என்ற முடிவு இருக்கும்.

    ReplyDelete
  3. மோர் சூப்பர் மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பைகளுக்கு ரெண்டு ரூபாய் அதிகம் வசூலிக்கிறார்கள்... இதற்க்கு பயந்து அதிக நபர்கள் பைகளை தாங்களே கொண்டு சென்று விடுகிறார்கள்.. இவர்கள் அதிகம் வசூலிக்கட்டும், ஆனால் அதை துணிப் பையாகவே கொடுத்தால் என்ன குறைந்து விடும்?

    ReplyDelete
  4. கலக்குறீங்க கௌசல்யா! உங்க கணவருக்கும் என் பாராட்டுக்களை சொல்லிடுங்க

    ReplyDelete
  5. ஐரோப்பிய நாடுகளில் மறுசுழற்ச்சி செய்கின்றார்கள். அதுபோல் ஏதாவது செய்தால் சிறப்புத்தான். முயற்ச்சியை கைவிடாது முடிவி காணுங்கள் . பதிவுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  6. பாராட்டுக்கள் கெளசல்யா. தொடருங்கள்.

    ReplyDelete
  7. நல்லதொரு முயற்சியை முன்னெடுத்து செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். பக்கத்துல இருந்து பங்கெடுத்துக்க முடியாம தூரத்தில சென்னைல இருக்கனேன்னு இருக்கு எனக்கு.

    ReplyDelete
  8. நல்ல நோக்கத்துடன் செய்யும் செல்யல் .உங்க முயற்ச்சிக்கு வாழ்த்துகள் சகோ.இது பொழ மேலும் பல நல்ல காரியங்கள் செய்ய வாழ்த்துகள் .!!

    ReplyDelete
  9. மறு சுழற்சி, அதிக விலை போன்றவை கூட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைக்க உதவி செய்யும் ,,,,, எல்லாத்துக்கும் வாட் டாக்ஸ் போடறாங்க , இதுக்கு ஒரு ரெண்டு டாக்ஸ் சேத்து போட்டா நல்லா இருக்கும் ............

    உங்கள் பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள் அக்கா ......

    ReplyDelete
  10. எங்களை சுற்றியுள்ள சூழலினை ஒருபோது அவதானிபதில்லை. தற்போது மனித இனம் எதிர் நோக்கிய மிகப்பொரிய ஆபத்து சூழல் மாசடைதல் , நிலத்தடி நீர் அசுத்தமடைதல் போன்ற எளிய சூழலியல் பிரச்சினைகளே.. மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமானது. பாரட்ட தக்க முயற்சி

    ReplyDelete
  11. அருமையான முயற்சி கவுசல்யா, வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...!!!

    ReplyDelete
  12. தொடரட்டும் உங்கள் சேவை.பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. விழிப்புணர்வு பதிவு.
    பகிர்வுக்கு நன்றி .
    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. விழிப்புணர்வு பேரணியின் நீளம், உங்கள் உழைப்பின் ஆழம் சொல்கிறது. தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்த்துக்கள் ஜோதிராஜ் & கௌசல்யா.

    ReplyDelete
  15. கணினி முதல் கழிப்பறை வரை பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளது.
    பயன்பாட்டிலிருந்து முற்றிலும் அகற்றுவது நடவாத காரியம்.
    கையாளுவதில் கவனம் கொண்டால் போதுமானது ...Plastic Enginner

    ReplyDelete
  16. @@ சிசு...

    நன்றிகள்

    ReplyDelete
  17. @@ Prabu krishna...

    கருத்துக்களுக்கு நன்றி பிரபு

    ReplyDelete
  18. @@ suryajeeva said...

    //மோர் சூப்பர் மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பைகளுக்கு ரெண்டு ரூபாய் அதிகம் வசூலிக்கிறார்கள்...
    இதற்க்கு பயந்து அதிக நபர்கள் பைகளை தாங்களே கொண்டு சென்று விடுகிறார்கள்..//

    பரவாயில்லையே...நல்லா இருக்கே :)

    //இவர்கள் அதிகம் வசூலிக்கட்டும், ஆனால் அதை துணிப் பையாகவே கொடுத்தால்//

    ம்...மிக நல்ல யோசனை. கடைபிடித்தால் அருமையாக இருக்கும்...பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு பெரும்பாலும் குறைந்து விடும்.செய்யணுமே...!!

    கருத்துக்களுக்கு நன்றி சூர்யா

    ReplyDelete
  19. @@ rufina rajkumar...

    வாழ்த்துக்கு நன்றி அக்கா.

    ReplyDelete
  20. @@ சந்திரகௌரி said...

    உங்க ஆலோசனைக்கு நன்றிகள் தோழி.

    ReplyDelete
  21. @@ ராமலக்ஷ்மி...

    நன்றிகள் தோழி.

    ReplyDelete
  22. @@ கணேஷ் said...

    //பக்கத்துல இருந்து பங்கெடுத்துக்க முடியாம தூரத்தில சென்னைல இருக்கனேன்னு இருக்கு எனக்கு.//

    அதுக்கென்ன சென்னையிலும் ஒரு பேரணியை நடத்திடுவோம். விழிப்புணர்வு எங்கும் தேவை தானே ?!

    நன்றிகள் கணேஷ்.

    ReplyDelete
  23. @@ இம்சைஅரசன் பாபு...

    வாழ்த்துக்கு நன்றி பாபு.

    ReplyDelete
  24. @@ Surya Prakash said...

    கருதிட்டமைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சூர்யப்ரகாஷ்

    ReplyDelete
  25. @@ சாய் பிரசாத்...

    கருதிட்டமைக்கு மிக்க நன்றிகள்
    சாய் பிரசாத்.

    ReplyDelete
  26. @@ MANO நாஞ்சில் மனோ...

    நன்றி மனோ

    ReplyDelete
  27. @@ asiya omar...

    நன்றி தோழி.

    ReplyDelete
  28. @@ நண்டு @நொரண்டு -ஈரோடு...

    நன்றிங்க.

    ReplyDelete
  29. @@ FOOD NELLAI said...

    //விழிப்புணர்வு பேரணியின் நீளம், உங்கள் உழைப்பின் ஆழம் சொல்கிறது. //

    எல்லாம் உங்களின் வழிகாட்டுதல் அண்ணா.

    நன்றிகள்

    ReplyDelete
  30. @@ பாஸ்கரன் சுப்ரமணியன் said...

    //கணினி முதல் கழிப்பறை வரை பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளது.
    பயன்பாட்டிலிருந்து முற்றிலும் அகற்றுவது நடவாத காரியம். //

    நம் வாழ்விற்கு குந்தகம் விளைவிக்கிறது என்று தெரிந்த பின்னரும் குறைக்காமல்/நிறுத்தாமல் இருப்பது சரி யன்று. நிச்சயம் அனைவரும் கை கொடுத்தால் அகற்றிவிடலாம் நம்பிக்கை இருக்கிறது.

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள் பாஸ்கரன்

    ReplyDelete
  31. ரொம்ப நாளைக்கு பின் உங்க வலை தலித்தை நான் கண்டுபிடிக்க நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும் ......யுரேக்கா ......தச்சை கண்ணன்

    ReplyDelete
  32. இந்தியர்கள்னாலே அசுத்தமானவ்ர்கள்னுதான் உலகம் சொல்லுது.சுத்தம் தெரியாதவர்கள்.அமெரிக்காவில் ஒரு நீக்ரோவிற்கு இருக்கும் மரியாதை இந்திய கறுப்பினத்திற்கு இறுப்பதில்லை.

    ReplyDelete
  33. @@ kannan said...

    நலமா கண்ணன் ?

    //ரொம்ப நாளைக்கு பின் உங்க வலை தலித்தை நான் கண்டுபிடிக்க நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும் //

    அடடா...!! என் பெயர் மட்டும் நினைவில் இருந்தாலே போதுமே பிளாக் கண்டுபிடிசிடலாம்...

    தச்சை கண்ணன் என்ற பெயர் எங்கே ரொம்ப நாளா காணும் என்று இருந்தேன்...

    இப்பவாவது வந்து சேர்ந்தீர்களே மிக்க மகிழ்ச்சி.

    நன்றிகள்

    ReplyDelete
  34. @@ மழை said...

    //இந்தியர்கள்னாலே அசுத்தமானவ்ர்கள்னுதான் உலகம் சொல்லுது.//

    ஒரு சிலதை வைத்து மொத்தமாக அப்படி எப்படி சொல்லமுடியும்...ம்...இந்த பெயரை மக்கள் நினைச்சா மாத்தலாம், ஆனா அதுக்கு நிறைய பாடுபடனும்.

    வருகைக்கு நன்றிகள்

    ReplyDelete
  35. என் மண்ணான தின்னவேலியில் இந்த விழிப்புணர்வு, அதுவும் ஒரு பெண் முன்னெடுத்துச் செல்வது என்பது நானே செய்வதுபோல பெருமையா இருக்கு. மனமார்ந்த பாராட்டுகள்!!

    //பக்கத்தில இருக்கிற கன்னியாகுமரி மக்கள் இந்த பிளாஸ்டிக் விசயத்தில் கவனமா,விழிப்புணர்வாக இருந்து கட்டுபடுத்திட்டு வர்றாங்க//
    ரொம்ப கரெக்டுங்க. நம்ம் ஊர் கலெக்டரும் ஏன் இதை முன்மாதிரியா எடுத்து இப்படியொரு ஆணை பிறப்பிக்கக்கூடாதுங்கிறதுதான் என் ஆதங்கமும்!!


    உங்கள் அமைப்பின்மூலம் இதை வலியுறுத்த முடியுமா பாருங்களேன்!!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...