வெள்ளி, டிசம்பர் 9

12:22 PM
31திருநெல்வேலி சாலைகளில் பறக்கும் இருசக்கர வாகனங்களில் பயணிப்பது யார் என்றே இனி கண்டுபிடிக்க முடியாது...ஏன்னா இப்ப எங்க தலை ஹெல்மெட்டுக்கு மாறியாச்சு...!! :) எங்கு காணினும் ஹெல்மெட் தலைகள்...பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது...

அது எப்படி மக்களுக்கு தங்கள் உயிர் மேல் அக்கறை வந்துடுசானு கேட்கபடாது...மக்கள் உயிர் மேல எங்க புது கமிஷனருக்கு அக்கறை அதிகம்...நல்ல மனிதர்.புதிதாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக திரு. கருணாசாகர் அவர்கள் பதவி ஏற்றதும் போட்ட முக்கியமான உத்தரவே ஹெல்மெட் அணிவது இனி கட்டாயம் என்பதுதான். 


ஒரு வாரம் அவகாசம் கொடுத்தார். எத்தனை நாள் அவகாசம் கொடுத்தாலும் நமக்கு கடைசி நாள்ல முட்டி மோதி கூட்டத்தோட கூட்டமா எதையும் வாங்குறதுதான் பழக்கம்...! நாம தான் அப்படினா ஊரே அப்படிதான் இருக்கு...ஹெல்மெட் வாங்குற இடத்தில செம கூட்டம்...! 

பழசு ஒன்னு உபயோகம்(?) இல்லாம ஸ்டோர் ரூமில இருக்கு, என்ன கொஞ்சம் தூசி அடைஞ்சி போய் பார்க்க ஒரு மாதிரியா இருந்தாலும் 'பரவாயில்லை அதையே தூசி தட்டி போட்டுகோங்க' சொன்னா இவர் கேட்டாதானே...(சிக்கனத்தில  பெண்களை அடிச்சிக்கவே முடியாது ஆமாம் !)

ம்...நான் சொல்றத கேட்ட மாதிரி தெரியல...!! ஆனா சும்மா சொல்ல கூடாதுங்க என்னவர் செம புத்திசாலி...நெல்லையில் இப்ப நம்பர் ஒன் பிசினஸ் எது என்றால் ஹெல்மெட் தான்...பிளாட்பாரம், திருமண மண்டபம் என்று குவிச்சு போட்டு விக்கிறாங்க...விலை இஷ்டம்போல சொல்றாங்க...ஆளுக்கு ஏத்தமாதிரி 600 ல இருந்து 1,500 , 1,800, 2000௦ என்று விக்கிறாங்க...மக்களும் வேற வழி இல்லாம (புலம்பிட்டே தான்)வாங்குறாங்க...! 

ஆனா பக்கத்து மாவட்டத்துக்கு ஒரு வேலையா போன கணவர் அங்கேயே  ஹெல்மெட் வாங்கிவிட்டார். விலை 500 மட்டுமே...நெல்லையில் தான் அதிக விலை, அடுத்த மாவட்டத்தில கம்மியா இருக்கும்னு பிளான் பண்ணி வாங்கின என் கணவர் புத்திசாலிதான்...ஆனா வாங்கிட்டு வந்து இதை சொன்னதும் எனக்கு செம கோபம்...நாம சரியாதானே பண்ணி இருக்கிறோம் எதுக்கு இப்படி முறைக்கிறானு அவருக்கு ஒரே யோசனை ! பின்ன என்னங்க வாங்கினது தான் வாங்கினார், கூட நாலு வாங்கிட்டு வந்திருந்தா அதை அக்கம் பக்கத்துல கொடுத்து இரண்டு மடங்கு அதிக பணம் பார்த்திருப்பேனே...! (என்னதான் சொல்லுங்க இந்த ஆண்களுக்கு சாமார்த்தியம் போதவே போதாது !)


* * * * * * * * * * * * * * * 


என்னங்க படிச்சாச்சா ? இனி நேரா விசயத்துக்கு வரேன்...(அப்ப இப்ப வரை சொன்னது !!?) மேலே சொன்னவை நகைசுவை மாதிரி சொன்னாலும் பலபேரின் பேச்சுக்கள் இப்படிதான் இருக்கிறது...எது எதுக்கோ அனாவசியமா பணம் செலவு செய்வது ஆனா உயிரின் பாதுகாப்பு பற்றிய இந்த விசயத்தில ரொம்ப யோசிச்சு மிச்சம் பிடிக்கிறது...?!! 


தலை கவசம் அவசியம் என்று அரசு சொல்வது நமது நம்மைக்காகத்தான் என்பதை முதலில் நாம் உணரவேண்டும். வீட்டில் கிடக்கும் பழையதை தூசி தட்டி போடுவது, பிளாட்பாரத்தில் நூறு, இருநூறுக்கு மலிவாக  கிடைக்கிறதே என்று வாங்கி சாமாளிப்பதும் புத்திசாலித்தனம் அல்லவே அல்ல...


ஹெல்மெட் பற்றிய சில தகவல்கள் 
பைபர் கிளாஸ், பைண்டர் ரெசின், யூ.வி.ஸ்டேபிலைசெர் இவற்றின் உதவியுடன் பல அடுக்குகளாக கொண்டு தயாரிக்கபடுகிறது.இதில் ஒவ்வொன்றும் பல தரத்தில் இருக்கிறது. நல்ல தரமான பொருட்கள்  பயன்படுத்தப்பட்டு தயாரிக்க பட்டதை வாங்கவேண்டும். இதை நம்மால் அறிந்து கொள்ள இயலாது என்கிற போது ஒரே வழி சிறந்த கம்பெனிகளின் நேரடி விற்பனை நிலையங்களையே அணுகி வாங்குவதுதான். சாலை ஓரங்களில் விற்கபடுபவை எந்த அளவிற்கு தரமானவை என்று சொல்ல முடியாது. 


* எடை 800 கிராமுக்கும் 2  கிலோவுக்கும் இடைப்பட்டதாக இருக்கும் தரமானவைகள்.


* உள்ளே இருக்கும் துணியை விலக்கி பார்த்தால் கரடு முரடாகவோ, மணல் துகள்கள் இருந்தாலோ வாங்காதீர்கள். இது போலி.


*எடை அதிகமுள்ள ஹெல்மெட் தவிர்த்துவிடுங்கள்...இஞ்ஜக்சன் மோல்டிங் வகையில் கிடைக்கிறது...விலை அதிகம், ஆனால் அணிந்திருப்பது அவ்வளவாக சுமையாக தெரியாது. 


தரமில்லாத ஹெல்மெட் போட்டும் பிரயோசனம் இல்லை, விபத்து நடக்கும்போது அது உடைந்து விட்டால் தலைக்கும் சேர்ந்து அதிக பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. எனவே விலையை பார்க்காமல் தரத்தை பார்த்து வாங்குங்கள். நம் விலைமதிப்பற்ற உயிர்க்கு முன்னால் வெறும் பணம் பெரிதில்லை. 


ஏன் அணியவேண்டும்?! 

சாலை விபத்துகளில் அதிகமாக நடப்பது இருசக்கரவாகனத்தால் என்கின்றனர். எனவே அவசியம் ஹெல்மெட் அணிவது உயிரிழப்பை தடுக்கும். 


ஹெல்மெட் அணிவதினால் கழுத்தில் பாதிப்பு ஏற்படுகிறது என்பது எல்லாம் சும்மா என்று ஆய்வுகள் சொல்கின்றன. எனவே நம்பாதிர்கள். உண்மையில் இதை அணிவதனால் தலைக்கு பாதுக்காப்பு என்பதுடன் மறைமுகமாக வேறு பல நன்மைகள் இருக்கின்றன என்பதை யோசித்து பார்த்தால் புரியும். 


* பிற வாகனங்களின் இருந்து வரும் காதை கிழிக்கும் ஹார்ன் சப்தம், வாகனங்களின் இரைசல் ஒலி போன்றவற்றில் இருந்து பாதுகாக்கிறது.  


* மார்கழி மாத குளிரில் இருந்து ஓரளவு தப்பிக்கும் காது.


* தூசிகள், மாலை இரவு நேரங்களில் சாலையில் எதிர்வரும் பூச்சிகளில் இருந்து கண்ணையும் காதையும் காத்துக்கொள்ளலாம். 


* மிக முக்கியமா செல்போன் அடிச்சா கேட்காது, வைபிரேசன் மூலம் தெரிந்தாலும் வண்டி ஓட்டிகொண்டு போகும் போது பேச முடியாது !! (அதுதான் நாங்க ஹெட் போன் போட்டுப்போமே என்கிறீர்களா ! ம்...விதி யாரை விட்டது!) 


தெருவுக்கு தெரு இங்கே போலிஸ் நிற்கிறார்கள் போடாதவர்களை பிடித்து ஸ்பாட் பைன் போடுகிறார்கள், வழக்கும் பதிவு செய்யபடுகிறது. கமிஷனர் உத்தரவு போட்டதற்காக அணியவேண்டும் என்பதை விட நம் உயிர் முக்கியம் என்பதை உணர்ந்து அணியவேண்டும்...நெல்லையில் தானே இந்த உத்தரவு கடுமையாக்கபட்டிருக்கிறது. நமக்கு இல்லையே என்று நினைக்காமல் ஹெல்மெட் வாங்கி அணியுங்கள்...அனைத்து ஊர்களுக்கும்  உத்தரவு போட பட்டு இருந்தாலும் இன்னும் சரி வர கடைபிடிக்க படவில்லை. 


சிலர் சொல்வாங்க இதை போட்டுட்டு வெயில்ல போக முடியல, வியர்வையால் பெரும் சிரமமாக இருக்கிறது என்று. சின்ன சின்ன அவஸ்தை, அசௌகரியம் முக்கியமா? வாழ்க்கை முக்கியமா? என யோசித்து பாருங்கள்...நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் !!

புரிந்து கொண்டு செயல் படுங்கள்...பெறுவதற்க்கறிய இந்த மானிட பிறப்பை சரியாக வாழ்ந்து முடிக்கும் முன்னே, அனாவசியமாக சாலையோரத்தில் உயிரை விட்டு விடகூடாது...


ஹெல்மெட் அணிந்து பயணியுங்கள்...வீட்டில் உங்கள் மனைவியும் குழந்தைகளும் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துகொள்ளுங்கள் என்றும் எப்போதும்...!!


அரசு தொடர்ந்து முழு உத்வேகத்துடன் ஹெல்மெட் அணிவதை கட்டாயம் செயல்படுத்தபடவேண்டும்...உத்தரவிடும் போது இருக்கும் கண்டிப்பு,அதே வேகம் தொடர்ந்து இருக்க வேண்டும்...


நெல்லையில் இதை அருமையாக நடைமுறைபடுத்தி கொண்டிருக்கும் எங்கள் கமிஷனருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்...! 

                                  தலை கவசம் அல்ல உயிர் கவசம் !! 

                                                              * * * * * * * * * 

ஹெல்மெட் பற்றிய தகவல்கள், படங்கள் - நன்றி கூகுள் 
Tweet

31 கருத்துகள்:

 1. சரியா சொன்னீங்க .
  பயனுள்ள தகவல் .
  தகவலுக்கு நன்றி.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. நல்ல பயனுள்ள தகவல், பகிர்விற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. நீங்க சொல்றது சரி... தரமான கம்பெனியோட ஹெல்மெட்டை வாங்கிப் போட்டா வெயிட்டாவே தெரியாது. நான் தவறாம போட்டுக்கறேன். அதேசமயம் ஹெல்மெட் போடறது எவ்வளவு முக்கியமோ... அவ்வளவு வண்டிய காட்டுத்தனமான வேகத்துல ஓட்டாம, நிதானமான வேகத்துல ஓட்டறதும். பயனுள்ள விஷயங்களைச் சொல்லியிருக்கற உங்களுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 4. ஹெல்மெட் பற்றிய விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி...

  ஆனா எங்க ஊர்ல பொண்ணுங்க வண்டியில போறப்ப என்ன செய்றாங்கன்னு ஒரு பதிவு போட்டிருக்கேன். அவங்கள என்ன செய்யலாம்?

  வாசிக்க:
  இப்படியா துப்பட்டா போடறது? சின்ன பீப்பா, பெரிய பீப்பா அரட்டை

  பதிலளிநீக்கு
 5. நீங்க இப்படி சொல்றீங்க, பன்னாட்டு நிறுவனங்கள் செய்யும் கூத்தை பாருங்கள்

  http://www.youtube.com/watch?v=w6O4D80qCJQ

  பதிலளிநீக்கு
 6. வீட்டில் உங்கள் மனைவியும் குழந்தைகளும் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துகொள்ளுங்கள் என்றும் எப்போதும்...!!//
  இதை எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டால் போதும் எல்லாம் சரியாகிடும்

  பதிலளிநீக்கு
 7. மக்களுக்கு உபயோகமான பதிவு, கமிஷனருக்கு வாழ்த்துக்கள்..!!!

  பதிலளிநீக்கு
 8. ஆஹா ஹெல்மேட்டுல இம்புட்டு மேட்டர் இருக்கா, எனக்கு இது புதுசு, விபரங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி..!!!

  பதிலளிநீக்கு
 9. நாங்களும் மாறிடுவோம்.. ஹெல்மெட் பற்றி நல்ல தகவல்கள்.

  பதிலளிநீக்கு
 10. பயனுள்ள விழிப்புணர்வு பதிவு //ஹெல்மெட் அணிவதை கட்டாயம் செயல்படுத்தபடவேண்டும்...உத்தரவிடும் போது இருக்கும் கண்டிப்பு,அதே வேகம் தொடர்ந்து இருக்க வேண்டும்...//


  மேலும் இதுவும் முக்கியம்
  ...........
  வேகம் ஹெல்மட் அணிவதில்/வாங்குவதில் உத்தரவை பின்பற்றுவதில் இருக்கட்டும் .வாகனம் ஓட்டும்போது வேண்டவே வேண்டாம்.

  பதிலளிநீக்கு
 11. பயனுள்ள தகவல் .
  தகவலுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 12. நகைச்சுவையாகத்தொடங்கிப் பின் நல்ல செய்திகளைப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.நன்றி.

  பதிலளிநீக்கு
 13. அருமையான, பயனுள்ள பதிவு.
  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 14. அன்பு சகோதரி,
  அருமையான விழிப்புணர்வுப் பதிவுக்கு நன்றி.
  தலைக்கவசம் உயிர் காக்கும் கவசம் என்பதை
  நாம் புரிந்துகொள்ள வேண்டும். பணத்தை மிச்சப்படுத்துகிறேன் பேர்வழி
  என்று சொல்லி தரமில்லாததை வாங்கி உபயோகிப்பது நமக்கு தான் கேடு.

  எப்படி பார்த்து வாங்குவது, ஏன் அணிகிறோம் என்று நல்லா சொல்லியிருகீங்க.
  நன்றிகள் பல.

  பதிலளிநீக்கு
 15. இதையும் சொல்லிடறேன்.. ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டும். (நிரூபிக்க புகைப்படம் எல்லாம் அனுப்ப முடியாது.)

  பதிலளிநீக்கு
 16. // தலை கவசம் அல்ல உயிர் கவசம் !! //

  இவ் வரிகளே பதிவின் கருத்து
  முழுவதையும் உள்ளடக்கி விட்டது!
  நன்று! நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 17. "கூட 4 வாங்கிவந்திருந்தா, அக்கம் பக்கத்துல வித்துக்கிடலாமுல்ல......"
  எங்க அக்காவ பார்த்தமாதிரியே இருக்கு. பெண் புத்தி அற்புதம்

  பதிலளிநீக்கு
 18. @@ நண்டு @நொரண்டு -ஈரோடு...

  நன்றிகள்

  பதிலளிநீக்கு
 19. @@ கணேஷ்

  நீங்க சொல்றது ரொம்ப சரி. பிற அவயங்கள் அடி பட்டாலும் பாதிப்பு அதிகம் தான் என்பதை மனதில் கொண்டு பொதுவாக எங்கும் நிதானமாக கவனமாக செல்வது நல்லது.

  பதிலளிநீக்கு
 20. @@ தமிழ்வாசி பிரகாஷ் said...


  //ஆனா எங்க ஊர்ல பொண்ணுங்க வண்டியில போறப்ப என்ன செய்றாங்கன்னு ஒரு பதிவு போட்டிருக்கேன். அவங்கள என்ன செய்யலாம்?//

  உங்களுக்கு தெரிஞ்சவங்களா இருந்தா கூப்ட்டு புத்தி சொல்லுங்க... ?! :))

  நன்றி பிரகாஷ்

  பதிலளிநீக்கு
 21. @@ suryajeeva said...


  //நீங்க இப்படி சொல்றீங்க, பன்னாட்டு நிறுவனங்கள் செய்யும் கூத்தை பாருங்கள்

  http://www.youtube.com/watch?v=w6O4D80qCJQ//  இதை என்னனு சொல்ல...ஒரு பக்கம் ஹெல்மெட் அணியுங்கள் என்று உத்தரவு, மற்றொரு பக்கம் இது போன்ற விளம்பரங்களை அனுமதிக்கும்/கண்டுகொள்ளபடாத நிலை...!!

  விளம்பரங்கள் பத்தி பேசணும்னா நிறைய சொல்லலாம்...கொஞ்சமும் பொருத்தமில்லாத கவர்ச்சி சார்ந்த விளம்பரங்கள் அதிகம் ! சிலவற்றை பார்க்கும் போது சென்சார் போர்ட் என்ன செய்கிறது ?? இதை கட்டுபடுத்தாதா? என எரிச்சல் வருகிறது.

  பதிலளிநீக்கு
 22. @@ rufina rajkumar said...

  //இதை எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டால் போதும் எல்லாம் சரியாகிடும்//

  ஆமாம் அக்கா.

  கருத்திட்டமைக்கு நன்றிகள்

  பதிலளிநீக்கு
 23. @@ MANO நாஞ்சில் மனோ said...

  //ஆஹா ஹெல்மேட்டுல இம்புட்டு மேட்டர் இருக்கா, எனக்கு இது புதுசு, விபரங்கள் தெரிந்து கொண்டேன்//


  நன்றி மனோ

  பதிலளிநீக்கு
 24. @@ விச்சு...

  நன்றி  @@ angelin...

  நன்றி தோழி  @@ சிநேகிதி...

  நன்றி தோழி  @@ சென்னை பித்தன்...

  நன்றிகள்  @@ Rathnavel...

  நன்றிகள் ஐயா  @@ மகேந்திரன்...

  நன்றிகள்

  பதிலளிநீக்கு
 25. @@ அப்பாதுரை said...

  //இதையும் சொல்லிடறேன்.. ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டும். ///

  இதற்க்கு பதிவில் இருக்கிறதே ஒரு பதில் :))

  //சின்ன சின்ன அவஸ்தை, அசௌகரியம் முக்கியமா? வாழ்க்கை முக்கியமா? என யோசித்து பாருங்கள்...//

  இதை கொஞ்சம் மாத்தி இப்படி சொல்லலாம்...

  வழுக்கை முக்கியமா ? வாழ்க்கை முக்கியமா ?? :))

  //நிரூபிக்க புகைப்படம் எல்லாம் அனுப்ப முடியாது.)//

  ஓ...!! இதான் மேட்டரா ?!! அப்ப சரி, இப்ப நல்லாவே புரிஞ்சிடுச்சு !! :))

  பதிலளிநீக்கு
 26. @@ புலவர் சா இராமாநுசம்...

  நன்றிகள் அப்பா...

  பதிலளிநீக்கு
 27. @@ MOHAMED YASIR ARAFATH said...

  //"கூட 4 வாங்கிவந்திருந்தா, அக்கம் பக்கத்துல வித்துக்கிடலாமுல்ல......"
  எங்க அக்காவ பார்த்தமாதிரியே இருக்கு. //


  அக்காவுக்கு என் வாழ்த்துக்கள். :))

  அம்புட்டு விவரமானவுக நாங்க ஆமா ...! :))

  பதிலளிநீக்கு
 28. பயனுள்ள தகவல்கள்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 29. Dear All,
  Major Death are caused by Head Injuries during accidents. My father has escaped from Major Head Injury because of Good Quality Helmets.... Do not think twice to buy a good quality helmet... Alegendra Automobiles have good collection of Helmets.

  பதிலளிநீக்கு
 30. அழைப்பிதழ்:

  உங்களது இந்த இடுகையை, இன்றைய வலைச்சரத்தில் ”காந்தள் மலர் - விழிப்புணர்வுச் சரம்” என்ற தலைப்பின் அறிமுகம் செய்திருக்கிறேன்.

  http://www.blogintamil.blogspot.in/2012/04/blog-post_07.html

  வலைச்சரத்திற்கு வந்து பார்வையிட அன்புடன் அழைக்கிறேன்.

  நட்புடன்

  வெங்கட்.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...