"இந்த ஆம்பளைங்க ஏன் இப்படி இருக்காங்க...????"
ரிங் ஆன செல்போனை ஆன் செய்து ஹலோ சொன்ன அடுத்த செகண்ட் இந்த கேள்வி காதை அறைந்தது? ஆறு மாதத்திற்கு முன்பு ஆலோசனை தேவை என்று இமெயில் மூலம் தொடர்பு கொண்டவர் போன் நம்பர் கேட்கவே கொடுத்தேன். அந்த பெண்தான் எடுத்ததுமே ஒட்டு மொத்த ஆண்களையும் சாடும் கேள்வியை என்னிடம் கேட்டார். அடுத்ததாக '"என் கணவரை டைவர்ஸ் பண்ணப் போறேன், வக்கீலை பார்க்குறதுக்கு முன்னாடி உங்ககிட்ட போனில் ஒரு முறை பேசினா என்னனு தோணிச்சு" என்றார்.
வழக்கம் போல நானும், ஆலோசனைக்கு வருபவர்களை முழுதாக பேசவிடுவதை போன்று இவரையும், 'சரி எல்லாம் சொல்லி முடியுங்கள்' என்றேன். ஒரு மணி நேரமாக அவர் சொன்னதின் மொத்தப் பொருளே இரண்டே வரிகள் தான். கணவர் சலன புத்திக்காரர், வேறு தொடர்பு ஏற்பட்டு இருக்கும் என்று சந்தேகம். "எதை வைத்து சொல்கிறீர்கள்" என்றேன், "முன்பை விட என்மீது மிகுந்த அன்பாக இருக்கிறார். கேட்ட பொருளை உடனே வாங்கி கொடுத்து விடுகிறார். வேறு எங்கோ தவறு நடக்கவே தான் உறுத்தல் ஏற்பட்டு என்னிடம் அன்பைக் கொட்டுகிறார் போல" என்று தனது துப்பறியும் புத்தியை மெச்சிக் கொண்டார். திடீரென பெருகும் அன்புக்கு பின்னால் இப்படியும் காரணங்கள் இருக்கலாம் என்பதை இந்த சமூகம் தெரிந்துக் கொள்ளவேண்டும்.
சில பல ஆலோசனைகளைச் சொல்லி போனை வைத்தேன். அப்போதைய விவாகரத்து முடிவை சிறிது காலம் தள்ளி போடும் அளவிற்கு மனதை மாற்றிவிட்டதாக எனக்கு தோன்றியது. அதன் பிறகு ஆறு மாதமாக தொடர்பு கொள்ளவில்லை. கடந்த வாரம் அவராக தொடர்புக் கொண்டு சொன்னவற்றை சத்தியமாக என்னால் நம்பவே முடியவில்லை.
பெண் எடுத்த வித்தியாசமான ஆயுதம்
"An idle mind is the devil's workshop" என்று சொல்வார்கள். அந்த பெண் பலவிதமாக சிந்தித்து முடிவாக தனது கணவனின் நடவடிக்கையை வேவு பார்க்க ஆரம்பித்துவிட்டார். சந்தேகம் என்பது வந்துவிட்டால் அதன் பிறகு அமைதி என்பது எது?! ஆனால் இவர் கொஞ்சம் வித்தியாசமாக கணவரின் மொபைல் ஐ ஆராய்ச்சி செய்யவில்லை அதற்கு பதிலாக புதிதாக fake ஐடி ஒன்றை பேஸ்புக்கில் ஓபன் செய்து குட் மார்னிங், குட் நைட் சொல்வது, கவிதை எழுத வரும் என்பதால் காதல் கவிதைகளாக தினம் இரண்டு என்று பகிர்ந்திருக்கிறார். பிறகு கணவரின் ப்ரென்ட் லிஸ்டில் இருக்கும் இரண்டு மூன்று நபருக்கு request அனுப்பி இணைத்திருக்கிறார். அப்புறம் என்ன people you may know இவரது கணவரையும் காட்டி இருக்கிறது. இவருக்கு காட்டியதை அவருக்கும் காட்டி இருக்கும் அல்லவா, ஒரு சுபயோக சுபதினத்தில் தானாக வந்து விழுந்திருக்கிறார் request கொடுத்து...!!!
அதன் பிறகுதான் இவரது வாழ்கையில் மிகப் பெரிய டுவிஸ்ட் ! திரைப்படங்களில் நடக்கும் சம்பவங்கள் கற்பனை என்று சொல்லப்பட்டாலும் உண்மை கொஞ்சமாவது இருக்கும். தற்போதைய நமது சமூக சூழல்களில் திரைப்படத்தையும் விஞ்சக்கூடிய பல சம்பவங்கள் இன்றைய நமது குடும்பங்களில் நடந்தேறி வருகிறது என்பது இந்த பெண்மணி தனது கதையை சொல்லும் போது புரிந்தது.
ஆண் எவ்வளவு தான் தனது மனைவியை நேசித்தாலும் தெரிந்தோ தெரியாமலோ வெளியில் புதிதாக ஏற்படும் எதிர்பாலின ஈர்ப்பில் விழுந்துவிடுகிறான், தனது மனசாட்சியிடம் நட்பு தானே என்று சமாளித்தும் விடுவான்...அதிலும் இன்றைய ஆண் பெண் இருவரும் தேடித்தேடி தைரியமாகவே நட்பை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். வாழ்க்கைச் சூழலின் மன அழுத்தம் இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. புதிய உறவை ஆரம்பிப்பது ஆணாக இருந்தாலும் அதை இன்னும் நெருக்கமாக்கி விடுவது பெண். எல்லாவற்றையும் மனைவியிடம் பகிர்ந்துக் கொள்ள முடியாத ஆண்கள் அடுத்த பெண்ணின் சிநேகிதத்தை தேடுகிறார்கள்... கிடைத்ததும் அதில் தொலைந்தும் விடுகிறார்கள்!
ஆறுதலாக பேச அக்கறையாக விசாரிக்க, திரைப்படம் சமூகம் அரசியல் கதை கவிதை பற்றி எல்லாம் விவாதிக்க, மற்றொரு உயிர் ஒன்று தேவைப்படுகிறது அது எதிர்பாலினமாக இருந்தால் ஈர்ப்பு அதிகமாகிறது, ஆணிற்கு ஒரு பெண்ணும் பெண்ணிற்கு ஒரு ஆணும்!! ஏன் இதையெல்லாம் தனது துணையிடம் பேசலாமே என கேட்கலாம். 'இவளுக்கு என்ன தெரியும்' என்ற கணவனின் மெத்தனமும், 'ஆமா நாம பேசுறதை எங்க காதுக் கொடுத்து கேட்கப்போறாரு' என்ற பெண்ணின் சலிப்பும் இருவரையும் நெருக்கமாக பேச விடுவதில்லை. தவிரவும் வீடு என்றால் குழந்தைகள் வளர்ப்பு, கல்வி, EMI உட்பட்ட பொருளாதார சிக்கல்கள், சொந்தங்கள் சார்ந்த உறவு பேணுதல் போன்றவற்றில் உழன்றுக் கொண்டிருக்கும் தம்பதிகள் தங்களுக்கான நேரம் என்ற ஒன்றை ஒதுக்குவதே இல்லை. நேரம் கிடைக்க மாட்டேங்குது என்று நேரத்தின் மேல் தவறைப் போட்டுவிட்டு தப்பித்து விடுகிறார்கள்.
அதேசமயம் வெளியே ஏற்படும் நட்புடன் பேச வேண்டும் என்பதற்காக நேரத்தை உருவாக்கிக் கொள்பவர்களும் இவர்கள் தான். எங்கிருந்தோ முகம் தெரியாத ஒரு நட்பு அனுப்பும் சின்ன டெக்ஸ்ட் மெசேஜ் கொடுக்கும் மகிழ்ச்சி ,உற்சாகம், சிலிர்க்க வைக்கும் 'கிக்' உடனிருக்கும் துணையிடம் ஏன் ஏற்படுவதில்லை ! மனித மூளையின் ஒரு ஓரம் மட்டும் தாறுமாறாக டிசைன் செய்யப்பட்டிருக்கிறதோ என்னவோ ?!!!
ஹார்மோன்களின் முக்கியத்துவம்
நமது மூளையில் இருக்கிற 'ஹைப்போதாலமஸ்' உடலின் உணர்ச்சிகளை தூண்டவும் கட்டுப்படுத்தவும் கூடிய முக்கிய பங்கு வகிக்கிறது. சாப்பிட தூண்டுவது, உடல் சூட்டினை சமநிலை படுத்துவது, நினைவாற்றல், தூக்கம், கோபம், செக்ஸ் குறிப்பாக சொல்லனும்னா ஹார்மோன்களை ஆட்டிவைக்கிறதே இவர் தான்!! எதிர்பாலினத்தவரிடம் ஈர்க்கப்படும்போது டோபோமைன் எனப்படும் மகிழ்ச்சி ஹார்மோன் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இது ஹைபோதாலமஸில் மிகச் சிறப்பு என்று மூளையில் பதிவு செய்யப்பட்டு இருப்பதால் 'எதிர்பாலின ஈர்ப்பு', போதையை போன்றதொரு மெக்கானிஸத்திற்குள் மனிதனைத் தள்ளி விடுகிறது. .
ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரியான ஹார்மோன்கள் அதாவது ஈஸ்ட்ரோஜன், டெஸ்டோஸ்டிரோன், ப்ரோஜெஸ்டிரோன் இருந்தாலும் உறுப்புகள் உள்ளிட்ட வேறுபாடுகள் அவற்றின் இயங்கங்களை பொறுத்து மாறுபடுகின்றன. பாலியல் ஈர்ப்பு சம்பந்தப்பட்ட ஹார்மோன்களான டெஸ்டோஸ்டிரோன், ஈஸ்ட்ரோஜன் போன்றவற்றின் உற்பத்தியை சில சமயம் ஹைபோதாலமஸ் தொந்தரவு செய்துவிடுவதால் மனிதனின் நடத்தையில் மாறுபாடுகள் ஏற்படலாம்.
உடல் ரீதியிலான உறவு ஏற்படவில்லை என்றாலும் அதீத ஈர்ப்பு இருவருக்கிடையில் இருப்பது சாத்தியமா என்றால் ஆம் என்று தான் சொல்லவேண்டும். அந்த நபருடன் பேசும் போதும் மட்டுமே ஏற்படும் மகிழ்ச்சியான மனநிலை தொடர்ந்து அதே நபருடன் அதிக நேரத்தை செலவிடச் சொல்கிறது. ஆனால் அறிவியல் பல சொன்னாலும் இன்றைய மனித மனங்களை இது இப்படிதான் என்று குறிப்பிட்டுச் சொல்வது அறிவியலாலும் முடியாது போல.
எண்ணங்களில் மாறுபாடு
தற்போது பலரும் சொல்லத் தொடங்கிவிட்டார்கள , முக்கியமாக கொரானாவிற்கு பிறகு "இருப்பது ஒரே வாழ்க்கை, காலையில் எழுந்தா தான் நாம உயிரோட இருக்கோம்ன்றதே தெரியுது ...யாருக்கு எப்ப, என்ன ஆகும் என்றே தெரியாத நெலம... இதுல மனசாட்சியாவது மண்ணாங்கட்டியாவது...பாவமாவது புண்ணியமாவது... இருக்கிறவரை அப்படியே ஜாலியா நமக்கு புடிச்ச மாதிரி வாழ்ந்துட்டு போய்டணும் " ---இதை இன்றைய தத்துவம் என்று சொல்வதை விட ஒரு கொள்கையாகவே எண்ணத் தொடங்கிவிட்டார்கள்!!
இதை சொல்வதற்கும் கேட்பதற்கும் நன்றாக இருக்கும், ஆனால் இங்கே நிஜம் வேறு ! ஒரு தம்பதியினர் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதை மட்டுமே சமூகம்/உறவுகள் பார்க்கும் ஆனால் தனது பெற்றோர் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதை அவர்களின் குழந்தைகள் கண்டிப்பாகப் பார்க்கும். பெற்றோரை பார்த்தே ஒரு குழந்தை பாடம் படிக்கிறது. யாருக்காக இல்லை என்றாலும் தனது குழந்தைக்காக ஒவ்வொருவரும் சரியாக வாழ்ந்துதான் ஆக வேண்டும். பிறரை துன்புறுத்தக் கூடிய, கொடுமை விளைவிக்கக் கூடிய ஒரு மகனை/மகளை நாம் இந்த சமூகத்துக்கு கொடுத்துவிட்டுச் செல்கிறோமா அல்லது நல்ல பண்பு, ஒழுக்கம், மனிதத்தன்மை கொண்டவர்களையா என்பதைப்பற்றி பெற்றோர்கள் யோசித்தாக வேண்டும்.
Fake மனிதர்களின் அதீத அன்பு
ஆலோசனைக்கு வந்த பெண்ணும் அவரது கணவரும் chatting செய்ய ஆரம்பித்து அந்தரங்கமாக பேசும் அளவிற்கு தொடர்பு நெருங்கமாகி இருக்கிறது...??!!! போட்டோ கேட்டதற்கு 'என்னை நம்பலைனா பேச வேண்டாம். என் முகத்தை பார்த்து பழகினால் அது உண்மையாக இருக்காது' அப்படி இப்படி என்று செண்டிமெண்டாக தாக்கி இருக்கிறார் இந்த பெண்!
"மன ஆறுதலுக்காக உங்ககிட்ட பேசுறேன் பேச பிடிக்கலைனா விட்டுடுங்க, என்று ஒரு போடு போட்டேன் அதோட ஆள் மறுபடி அந்த பேச்சை எடுப்பதே இல்லை"
"உன் குரலை ஒரு முறை கேட்கணும், ஆம்பள பசங்க கூட பொண்ணு மாதிரி chatting பண்ணி ஏமாத்துவாங்க அதுக்காக கேட்கிறேன்" என்று கேட்டார், அதுக்காக 'ஒரு முறை தான் சரியா' என்று கண்டிசன் போட்டு ஒரு இரண்டு நிமிஷம் வாய்ஸ் சாட்டில் கொஞ்சம் லேசா ஹஸ்கி வாய்ஸ்ல பேச்சை மாத்திப் பேசி அனுப்பினேன். அவரால கண்டுப் பிடிக்க கூட முடியல, தேன் மாதிரி இருக்குன்னு ஒரே வழிசல் வேற. அப்படி பேசி அனுப்பும் போது எனக்கு எவ்ளோ த்ரில் ஆ இருந்துச்சு தெரியுமா ? ஒரே வெட்கமா போச்சு மேடம்"
என்று என்னிடம் சொல்லிச் சிரிக்கிறார் விவாகரத்து பண்ணப்போகிறேன் என்ற முடிவில் இருந்த அந்த பெண்.
கவிதை வழியாக காதலை தினமும் இவர் கொட்ட அதற்கு அவர் இதயம் போட்டு குதூகலிக்க என இரு புறமும் உற்சாகம் கரை புரண்டு ஓடியிருக்கிறது. வீட்டில் இருக்கும் போது கணவர் தனது மனைவிக்கு தெரியாமல் ஆனால் மனைவிக்கே(?) 'குட் மார்னிங் டியர் என்ன பண்ற' என்று மெசெஜ் அனுப்ப, மனைவியும் 'வீட்டுக்காரர் இருக்கிறார் அவர் போனதும் மெசேஜ் பண்றேன் டார்லிங்' என்று பதில் மெசேஜில் சிணுங்க??!!
பருவ வயதில் ஏற்படும் முதல் காதல் அனுபவத்தை விவரிப்பதைப் போல உற்சாகமாக அந்த பெண் பேசப் பேச எனக்கு பைத்தியம் பிடிக்காத குறை . இது எப்படி சாத்தியம் ?!
"ஏங்க இப்படி பண்றிங்க உண்மை தெரிஞ்சா என்னாகும்?"
"ஒன்னும் ஆகாது மேடம். உண்மையை எதுக்கு சொல்லணும் கடைசிவரை தெரியாம பார்த்துப்பேன்... அவர் இப்படி என்கிட்ட பேசுறதால மத்த பொண்ணுங்க கூட பேசவோ பழகவோ வாய்ப்பே இல்லை, அந்த அளவிற்கு அவரை நான் மயக்கி வச்சிருக்கேன்... FB ல கவிதை வரலைனா தவிச்சுப் போய்டுவார். இதனால இணையத்தில இருக்கிற மத்தவங்க எழுதிய கவிதையை லைட் ஆ மாத்தி போஸ்ட் பண்ணிவிடுவேன்... ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன்... வீட்டுவேலைகளை ஜாலியா பண்றேன் குழந்தைகளை சந்தோசமா பாத்துக்குறேன். வீட்டில என் கண் முன்னாடி இருக்காரு, வெளில போனாலும் என்கிட்டே தான் மெசேஜ் பண்ணிப்பேசிட்டு இருக்காரு. 24 மணி நேரமும் ஒன்னாவே இருக்கோம். இதை விட ஒரு பெண்ணுக்கு வேற என்ன வேணும்?!!!"
"என்ன இருந்தாலும் இது தப்பில்லையா" என அப்பாவியாக நான் கேட்க,
"என்னங்க தப்பு என் வீட்டுகாரரைத் தானே லவ் பண்றேன். அவரும் என்னை தானே லவ் பண்றாரு"
உங்களை தான் என்றாலும் அவரது கற்பனையில் வேறு ஒரு பெண் தானே இருப்பார் என்று சொல்லத் தோன்றியது, ஆனால் சொல்லவில்லை. அவரது சந்தோசத்தை எனது லாஜிக் கேள்வியால் சிதைக்க விரும்பவில்லை. சில சுவாரசியங்களை அப்படியே விட்டுவிடுவது தான் நல்லது.
"நல்லா இருக்குங்க... வாழ்த்துகள்" என்று வாழ்த்தி போனை வைத்துவிட்டேன்.
இந்த மனித மனம் தான் எத்தனை விசித்திரமானது...!!! ரத்தமும் சதையுமாய் உடன் இருக்கும் போது வராத/ஏற்படாத காதல் வெற்று எழுத்துக்களைப் பார்த்து ஏற்படுகிறது என்றால் நமது ஆழ்மனதிற்கு எதுதான் தேவை... எதை நோக்கி அது காத்திருக்கிறது... எதற்காக ஏங்குகிறது...?!!!
தொடர்ந்து பேசுகிறேன்...
உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா.
வித்தியாசமான முயற்சி. ஆனால் என் அனுபவத்தில் பெண்ணுக்கு பேசுவதே போதும் என்று தோன்றுவது போல் ஆணுக்கு இருக்காது. குறிப்பிட்ட கால இடைவெளியானதும் நேரில் சந்திக்க நெருக்கடி கொடுப்பார். முடியாது என்று அழுத்தமாய் மறுத்தால் விலகிப் போவார். அருமையா எழுதி இருக்கிறீங்க கௌசல்யா. தொடர்ந்து எழுதுங்கள்
பதிலளிநீக்குஉண்மை. ஆனால் ஒரு சிலர் இருக்கலாம். 'பார்க்காமலே/சொல்லாமலே காதல்' என்பதை போல ! பெரும்பான்மை ஆண்களுக்கு ஒரு கட்டத்தில் வெறுப்பு வந்துவிடும். இதை அந்த பெண்மணியிடம் என்னால் சொல்லவும் முடியவில்லை, போகும் வரை போகட்டுமே என்றுதான் அவரும் இருப்பார் போல.
நீக்குகருத்திட்டமைக்கு நன்றிகள் ரூபினா அக்கா