திங்கள், மார்ச் 8

PM 7:20
7

மனதைப் பாதித்ததை எழுதவேண்டும்  என முடிவு செய்து விட்டேன் ஆனால் எப்படி ஆரம்பிப்பது என்ற குழப்பத்தில் முதல் வரியோடு மல்லுக்கட்டிகொண்டு இருக்கிறேன்,அதனால் நீங்களும் 'ஆரம்பத்தை' அசட்டை செய்துவிட்டு தொடர்ந்து படிங்க. இந்த எழுத்தும் வாழ்க்கையும் ஓன்று , நமது எண்ணம் போல் வாழ்க்கை அமைவது இல்லை, சிந்திப்பதை எல்லாம் அப்படியே எழுத்தில் கொண்டு வர முடிவதும் இல்லை. ஏதோ வாழ்கிறோம், வெளியே நிறைவாய் வாழ்வதாய்  ஒரு போர்வையை சுற்றிக்கொண்டு வித்தை காட்டிக்கொண்டிருக்கிறோம். சுற்றி இருப்பவர்கள் நம்மை ரசிக்கிறார்களா அல்லது கேலி செய்து  நகைக்கிறார்களா என்பதும் தெரியாது. ஆனாலும் அடுத்த நொடி என்ன நடக்கும் என்றே தெரியாத இந்த வாழ்வு ஒரு சுவாரசியம்.

சமீபத்தில் என்னை மிக யோசிக்க வைத்த ஒரு பெண்ணின்   உணர்வுகளை வரிகளாக்கி பார்த்துவிடவேண்டும் என்ற எனது  விருப்பமே இந்த பதிவு. 

* * *


ஜமீலா எனது பெயர் 

அழகானவள் என்ற அர்த்தம் வருவதால் ஜமீலா என்ற பெயர் எனக்கு மிக பிடிக்கும். அதனால் ஜமீலா என்றே அழையுங்கள். 

சுயசரிதை எழுதவேண்டும் என எனக்கு ஒரு ஆசை...மற்றவர்கள் எழுதும் சுயசரிதையில் மனிதர்களின் மணம்(!) வீசும் ,எங்களது  சுயசரிதையின் எந்த பக்கத்தை திறந்தாலும் சமூகத்தின் நாற்றம் மூக்கை துளைக்கும்.
ஆம் ஒவ்வொரு ஜமீலாவும் சுயசரிதை எழுதவேண்டும், எழுதினால் அங்கே பல பெரிய மனிதர்களின் கருப்பு பக்கங்கள், பச்சை வண்ணம் உடுத்தி பல்லை காட்டி கொண்டிருக்கும்...! ஏறக்குறைய அத்தனை ஜமீலாக்களின் கதையும் ஒரே மாதிரி தான் இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவை. என்னவொன்று  எங்களின் தேவை எது என்பதை வருபவர்கள்  முடிவு செய்கிறார்கள். இப்போது புரிந்திருக்குமே எனது தொழில் எது என்பது !

பெண் இந்த வார்த்தைக்கு தான் எத்தனை வசீகரம் ! பெண்ணாய்  பிறக்க மாதவம் செய்துவிட வேண்டுமம்மா !  ஆனா ஒரு பெண் பெண்ணாக வாழ என்ன தவம் செய்யணும் !? பெண் என்றால் அவளிடம்  நால்வகை குணம் இருக்கணுமாம். நாலுமே இல்லாதவ  பெண் இல்லை என்றால் நானும் பெண் இல்லை ?! பூக்களை சுற்றிவரும் வண்டுகள் தன் வழி மறப்பதில்லை, அது போல் பெண்ணை சுற்றும் ஆண்களும் நிறுத்த போவதில்லை. அப்படி நிறுத்திவிட்டால் என்னை போன்றவர்களின் நிலை ! நானும் வாழ்ந்தாக வேண்டும் , பெண்மையை விலை பேசி விற்கிறேன் என்கிறார்கள், என் வேலை எது என்பது என் முடிவு என் உரிமை தானே. அவர்களுக்கு என்ன தெரியும் எனக்குள்ளே கொதித்துக் கொண்டிருக்கும் நெருப்பை பற்றி. அதனால் தான்  வந்தவனின் தணல் சுடுவதில்லை, தணித்து விடுகிறேன்...தணிந்தும் விடுகிறது...நெருப்பை நெருப்பால்...!!

சில நொடியில் களையப்படும், கலைக்கப்படும்  என தெரிந்தே பார்த்து பார்த்து அலங்கரிப்பேன்...சில நொடிகளாவது எனக்காய் செலவிடுவதில் எனக்கு கொள்ளை ஆசை...விற்பனை பொருளாச்சே, கறை(?) படிந்து இருந்தால் பார்க்க நன்றாகவா இருக்கும்...!?

அவனுக்காக சிரித்து, அவனுக்காக அழுது அவன் சொல்லும் காதல் வசனங்களுக்கு பொய்யாய் மயங்கி, பொய்யாய் கிறங்கி , பொய்யாய் உளறி ஒரு கட்டத்தில் உண்மையாக காதலித்தும் விடுகிறேன்! காதலுடன் காலில் விழுந்து 'கரை தேற்ற வந்த கிருஷ்ணபகவான் நீ' என்றதும், கீதையை கையில் கொடுத்துவிட்டுச் சென்று விடுகிறான்  !!

அவ்வப்போது காதல் வந்து போகிறது...எது காதல் என்ற குழப்பம் மட்டும் இன்னும் தீர்ந்தப்பாடில்லை....காதலைக் கரைக்கும் இடமும், காமத்தில் கரையும் இடமும் ஒன்று போலவேத் தெரிகிறது...ஏமாற்றங்கள் வலிகள் பழகிப் போயின...மரத்துப்போன மனதும் உடலும் சாய ஒரு தோளை  தேடித் தேடி சோர்ந்துப் போகிறது...!!

என் குரலும் பேச்சும் கவிதை மாதிரி இருக்குனு வந்தவங்க சொல்வாங்க...?! கவிதை எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணினது கூட இல்லை. என் வாழ்க்கை பலர் எழுதிய ஒரு கவிதை...பல வண்ணங்கள் குழைத்து பலரால் தீட்டப்பட்ட ஓவியம்..!! எனது  வாழ்க்கையை எழுதி பார்க்கணும்னு தோணுது. இதை கவிதையா பார்க்காதிங்க, ஆமாம் இது கவிதை அல்ல என் வாழ்க்கை !!

அஞ்சு பத்துக்கு அலைந்தேன் 
சில காலம் 
ஒதுக்குப்புற முட்புதரில் முள்ளோடு முள்ளாய்
என்னை கிடத்தியிருக்கிறேன் 
பல காலம்...


சிறிது ஒதுக்கிய மாராப்பு
சற்று கோணலான புன்னகை 
ஒட்டவைத்த முகத்தோடு
நெடுஞ்சாலை மரமாய்
சில நாட்கள்...

செத்துப்போன குடிகாரக் கணவன் 
கொடுத்த பரிசென உருக்குலைந்த உடல் 
ஏற்ற வேலை இதுவென ஆசி கூறி 
வாழ(?) வழிகாட்டினர்
ஊரில் உள்ள நல்லவர்கள் !
                                                 
குழந்தைகள் வீட்டில் பசியாற
ஊர் பசியாற்ற வாழ்த்தி
அனுப்பியது விதியும் !

ஆரம்பத்தில்
சரியாக படியாத வியாபாரம் 
இப்போது வெகு ஜோர்  
நினைவாய் சொல்லிவிடுவேன்
'அவசியம் அடுத்தமுறை வா
சிறிது குறைத்துக் கொள்கிறேன்
பணத்தை!' 
                     
தேர்ந்த வியாபாரி ஆனேன்
தேடி போகவில்லை
தேடி வரவைக்கிறேன் வரவை...!?

சத்தியங்கள் பல மரணித்தலும்
சத்தியங்கள் சில உயிர்பித்தலும்
ஒரு சேர நிகழும் எனதருகில்...
இரண்டிலும் சாட்சி என்னவோ
பெண்தான் !

பணம் புகழ் திமிர் கர்வம் 
இதோ 
மண்டியிட்டு கிடக்கின்றன
என் காலடியில்
சில உளறல்களின் வடிவில்...

சற்று முன்வரை ராமனாம்
சலிக்காமல் சொல்கிறார்கள்...
ஒரே விதமாய் வேடந்தரிக்க
எப்படி முடிகிறது 
ஆண்கள் எல்லோராலும் !?

ஒரே வசனம்
தவறாமல் ஒப்பித்தார்கள்
'மனைவி மனைவியாய்
நடந்துக் கொள்ள மாட்டாள்'

'ஒருநாளாவது நல்ல கணவனாய்
நடந்தது உண்டா நீ ?!'
கேட்க எழும் நாவை
அடக்கிக் கொள்வேன்
எனக்கு வியாபாரம் முக்கியம்  !

ஏனோ
பாறை வெடிப்புகளில்
பதுங்கிக்கொள்கிறது 
பலரது ஆண்மை!

ஏனோ
நால்வகை குணம் விற்று
விற்பனையாகிறது 
சிலரது பெண்மை !

இன்றும் 
எதிர்பார்த்து 
வாசலில் காத்திருக்கிறேன் - அலங்கார
வசீகரங்களுடன்...
வசீகரன் தேவை இல்லை எனக்கு  
வசதி இருக்கிறவன் போதும் !


**************
விலைப்பொருளாகிப் போன பெண்மை  

பெண்களுக்கு என்றே பிரதானமாக உயர்வாக சொல்லப்படும் பெண்மை ஒரு சிலருக்கு மட்டும்  கடை தெருவில் கூவி கூவி விற்கப்படும் விற்பனை பொருளாக  மாறிவிடுகிறது...! காரணங்களை தேடினால் ஆதி மூலக்கதைகள் பலவற்றை சொல்லி சமாதானம் செய்வார்கள்... ஆணை திருப்தி படுத்தவென்றே படைக்கப்பட்ட பெண்கள் இருக்கும்போது பெண்ணை திருப்திப்படுத்த ஆண்கள் ஏன் இருக்க கூடாது என உரிமை பேசும் காலம் இது ...அவ்வாறும்(!) இருக்கிறார்கள் என்று தெரிய வரும் போது ஓரளவு சமாதானம் ஆகிவிட்டது மனது...!!  ஆணுக்கு பெண் இளைப்பில்லை காண் !!

முன்பு இலை மறை காயாக இருந்த சமூக அவலங்கள் இன்று வண்ண ஆடை உடுத்தி பூனை நடை நடக்கின்றன...பெண்களுக்கே  பெண்மையின்  அர்த்தம் புரியவில்லை. ஆதிக்க அடிமைத்தனத்தில் இருந்து எழுந்துவிட்டதாக எண்ணிக்கொண்டு ஆடை, ஆபரணங்கள், ஆடம்பர மோகம் இவற்றிற்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் பெண்கள் ஒரு பக்கம்...தன்னை தானே விற்றுக்கொண்டு  பிழைப்பு நடத்தும் பெண்கள் மற்றொரு  பக்கம்... இதில் எங்கே இருக்கிறது பெண்மை...?!!

பாலியல் தொழிலில் ஈடுபட வறுமை ஒரு காரணம் ஆனால் இது மட்டுமே காரணம் அல்ல. சமூகத்தின் பாலியல் வறட்சி இவர்களை போன்றோர்களை உருவாக்கிவிடுகிறது . விபசாரம் ஒரு பாவம் என்று யார் சொன்னாலும் அது நடந்துக் கொண்டுதானே இருக்கிறது.  நாட்டில் பல பாவங்கள் அதிகரிக்காமல் போவதற்கு ஜமீலா   போன்றோர் ஒரு பெரிய காரணம் .

பாலியல் பற்றிய புரிதல் படித்தவர்களிடத்தில் கூட சரியாக இல்லை. உடலின் தேவைப் பூர்த்தியானால் அனைத்திலும் முழுமை பெற்றுவிட்டதான ஒரு மாயைக்குள்  மனிதர்கள் சுலபமாக விழுந்து விடுகிறார்கள். ஆனால் உடலின் தேவை அன்றி மனதும் முழுமை பெறவேண்டும். அடக்கி வைக்கப்படும் எது ஒன்றும் சிறு வாய்ப்பு கிடைத்தாலும் அதிக ஆக்ரோஷமாக வெளிப் படுவதை போன்றது தான் காமத்தை அடக்கி வைப்பதும் !! மேலும் காமத்தை முறையாக அணுகவும் அறியவும் வேண்டும், மாறாக அச்சத்துடன் ஒரு குற்ற உணர்ச்சியுடன் அறிய முற்படும்போது, மனஅழுத்தம்  தான் அதிகரிக்கும். அறிதலும் புரிதலும் தெளிவும் இல்லாமல் தான் மனித புத்தி வக்கிரமாக காமத்தைப் பார்க்கிறது, அணுகுகிறது...!!!   

உடல் ஒரு இயந்திரம் என்றால் அதை இயக்கும்  கருவி மனது, மனதை வசீகரித்து, தூண்டி திருப்தி செய்துகொண்டே உடலை அணுகும் போது அங்கே காமம் அதிகரித்து அதிர்வுகள் ஏற்பட்டு உச்சம் அடையும்போது மனம் உடல் இரண்டும் அமைதி அடையும்.

பாலியல் இச்சைகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது...! பாலுறவு மானுடத்தின் அடிப்படை தேவை, அவை நிறைவானவையாக இல்லாத போது நிறைவு எங்கே என்ற தேடல் சகஜம் தானே ?! தேடல் ஒன்றுடன் முடிவது இல்லை என்பது இயற்கை. தேவையை தீர்க்கும் அவசியம் ஏற்பட்டால் வடிகால்களை தேடுகிறார்கள், சமயங்களில் வடிகாலாக மாறியும் விடுகிறார்கள். ஒன்றை கொடுத்து ஒன்றை பெறுவதுதானே வியாபாரம், வியாபாரம் போலாகி போனது வாழ்க்கை !!

பெண்களால் முடியாது

ஆண்களை போல பெண்கள் பாலியல் குறித்த விசயங்களை கூட பேசமுடியாது. நிறைவான பாலுறவு என்பது ஒரு அடிப்படை மானுட தேவை. கண்டிப்பாக பெண்களுக்கும் பாலியல் இச்சைகள் உண்டு, காமத்தை பற்றி நன்கு புரிந்தவள் அதை உணர்ந்து, சூழலுக்கு ஏற்ப தன்னை காத்து அச்சூழலை  இலகுவாக கடந்து சென்றுவிடுவாள் ஆனால் புரியாத பெண் தன்னையும் தொலைத்து பெண்சமூகத்திற்கு அவப்பெயரை தேடிக் கொடுத்துவிடுகிறாள். இன்றும் கற்பு ஒரு பொருள் என்ற ரீதியில் பெண்ணே யோசித்துக் கொண்டிருக்கிறாள், என்ன செய்வது அரைகுறையாக புரிந்துக் கொள்ளப்படும் எதுவுமே ஆபத்துத் தான்.

ஒரு மானுட ஆதார விஷயத்திற்கு எவ்வளவு முகமூடிகள், கதைப்பின்னல்கள், குடும்பம் என்கிற அமைப்புகள், வன்புணர்வுகள், அத்துமீறல்கள். பெண்களுக்கு கற்பு என்ற ஒன்றை கற்பித்தவன் பெரிய சூத்ரதாரியாக இருந்திருக்க வேண்டும். மிக அழுத்தமான, ஆழமான அரசியலை வெகு சுலபமாக தள்ளிவிட்டு, அதன்மூலம் தன் தேவைகளை காலங்காலமாக ஆண்கள் நிறைவேற்றிக் கொண்டு வருகிறார்கள்.  இன்று மேற்குலக நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட பாலியல் தொழிலாளிகள்  மீது பிரயோகிக்கப்படும் வக்கிரங்களை/ வன்முறையை எப்படிப் பார்ப்பது. தங்கள் துணையுடன் ஈடுபடமுடியாத fantasy க்களை வக்கிரமான எதிர்பார்ப்புக்களை காசு கொடுத்துப் பண்ணுகிறார்கள் என்றா? அவ்வளவு கொடுமைகள் திரை மறைவில் பெண்மைக்கு  இழைக்கப் படுகிறது, வித வித மான உறவு நிலைகளை நிகழ்த்திப் பார்த்து தனது ஆழ்மன விகாரங்களை வெளிப் படுத்தி திருப்தி அடைகிறார்கள்.  விபசாரத்திற்காக நாடு விட்டு நாடு சிறுமிகள் கடத்தல் வெகு காலமாக சர்வ சாதாரணமாக  நடந்துவருகிறது.   பெண்மை விலை போவதை பற்றி  யாருக்கும் அக்கறை இல்லை, ஏன் 'பெண்'ணுக்கே இல்லை.  

தற்போது பாலியல் தொழிலாளியை தேடிப் போகணும் என்கிற தேவை குறைந்து தங்களைச் சுற்றியே தீர்த்துக் கொள்கிறார்களோ  என்ற ஒரு கேள்வியுடன் கட்டுரையை முடிக்கிறேன்.  கேள்வி புரியாதவர்களுக்கு  'பிறனில்  விழையாமை'  குறள்களை நினைவுப் படுத்துகிறேன்.  வள்ளுவர் இதை  ஆண்களுக்காக எழுதினாலும் விளக்கம் என்பது ஆண் பெண் இருவருக்கும் பொதுவே.






மகளிர் தின வாழ்த்துக்கள் 

தொடர்ந்து பேசுகிறேன் 
உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா 



Tweet

7 கருத்துகள்:

  1. அற்புதம்...மீண்டும் ஒருமுறை படிக்கத் துவங்குகிறேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் புரிதலுக்கும் அன்பும் நன்றியும்

      நீக்கு
  2. மகளிர் தினத்தில் சிறப்பானதொரு கட்டுரை. ஜமீலாக்கள் நிறைந்த உலகமிது! அவர்களை உருவாக்குபவர்களும் நிறைந்தே இருக்கிறார்கள்.

    பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட் நாகராஜ் நலம் தானே ...

      வருகை தந்து வாசித்தமைக்கு மகிழ்வுடன் நன்றிகள்

      நீக்கு
  3. பாவம் ஜமீலாக்கள் .
    நீண்ட இடைவெளிக்குப்பின் உங்கள் பதிவு .தொடர்ந்து எழுதுங்க   

    பதிலளிநீக்கு
  4. அக்கா, வணக்கம். மிக நீண்ட காலம் கழித்து இங்கே வருகிறேன். 😊 நலமா?

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...