Wednesday, September 10

9:20 AM
10

பெண்களுக்கு தைரியத்தை கொடுப்பது ஜீன்ஸ் ஆ புடவையா என்று பட்டிமன்றம் வைத்தால் தோற்பது புடவையாகத் தான் இருக்குமோ என்று புடவைகளின் சார்பாக புலம்ப ஆரம்பித்ததின் விளைவே எனது இக்கட்டுரை! மூன்று வருடங்களுக்கு முன் ‘ஆபத்தான கலாச்சாரம்’ என்று நான் எழுதிய பதிவுக்கு ஒரு தோழி எதிர்பதிவு(கள்) எழுதி இருந்தார், அதில் ஜீன்ஸ் உடையை ஆஹா ஓஹோ னு புகழ்ந்து தள்ளி இருந்தார். வெளிநாட்டில் வசிக்கும் அவர் அப்படி எழுதியதில் எனக்கு பெரிதாக வியப்பேதுமில்லை... அதற்குப்பின் ஜீன்ஸை பற்றி அதிசயப்படும்படியான ஒரு எழுத்தை இப்போதுதான் படிக்கிறேன். ஆனந்த விகடனில் ‘பேசாத பேச்செல்லாம்’ தொடரின் போன வார(3-9-14) கட்டுரையை தெரியாமப்படிச்சுத் தொலைச்சுட்டேன் அதுல இருந்து மண்டைக்குள்ள ஒரு வண்டு இருந்து  பிராண்டிட்டே இருக்கு. சரி நம்ம கருத்து என்னாங்கிரதையும் பதிய வச்சுடுவோம்னு இதோ எழுதியே முடிச்சுட்டேன். அந்த மகா அற்புதக் கட்டுரையை படிக்காதவங்களுக்காக அதுல சிலவரிகள அங்க இங்க குறிப்பிட்டு இருக்கிறேன். (நன்றி விகடன்)

கட்டுரையாசிரியர் தனது ஆறு வயது மகள் தனக்கு பிடித்த உடையை தேர்ந்தெடுக்கும் உரிமை/சுதந்திரத்தை கொடுத்திருக்கிறார் என்பதை கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தார். பாராட்டவேண்டிய ஒரே விஷயம் இதுமட்டும்தான். அதுக்குபிறகு அந்த கட்டுரை சென்றவிதம் ஒரு வித எரிச்சலை ஏற்படுத்தியது......   அந்த பெண் குழந்தை விளையாடுறப்போ தன்னோட டிரஸ் மேல ஒரு துண்டை தாவணியா  போட்டுகிட்டு சமைக்குற மாதிரி, குழந்தை(பொம்மை) வளர்க்குற மாதிரியும் விளையாண்டுச்சாம், அதே குழந்தை குட்டி டிரௌசர் போட ஆரம்பிச்சப்ப ரொம்ப வீரமா தைரியமா கைல கேமரா புடிச்சிட்டு காடு  மலை எல்லாம் சுத்துவேன்னு சொல்லிச்சாம். இதுல இருந்து கட்டுரையாசிரியர்  புரிஞ்சிகிட்டது என்னனா “சர்வ நிச்சயமா நம் உடைக்கும் , நம் எண்ணத்துக்கும் தொடர்பு இருக்கு” அப்டின்றதானாம்.. புடவை கட்டுனா சமையல்கட்டோட நம்ம எண்ணம் நின்னு போயிடுமாம். புடவைல இருந்து அப்டியே சுடி, சல்வார் னு ஒவ்வொன்னா மாறி ஜீன்ஸ் போட்டப்போ மனசு அப்டியே ச்ச்ச்சும்மா ஜிவ்வுனு அதோ அந்த பறவைய போல பற, இதோ இந்த மானை போல ஓடு, எமனே எதிர்ல வந்தாலும் எட்டி உத ன்ற மாதிரி வீரமும் தைரியமும் நமக்குள்ள போட்டிபோட்டு வந்துடுமாம். 

‘புடவைய கட்டிண்ட்டு இனியும் வீட்டுக்குள்ள கோழையை போல அடங்கி கிடக்காதிங்க பெண்களே ...ஜீன்ஸ் போட்டுக்கிட்டு சுதந்திர வானில் ஒரு பறவையாய் பறந்துத்திரியுங்கள்’ என்று பெண்களுக்கு அறைகூவல் விடுக்கும் இவரை கண்டிப்பா பெண்ணிய இயக்கங்கள் எல்லாம் ஒன்னுக் கூடி ஒரு பாராட்டுவிழா நடத்தியே ஆகணும். புடவையை பத்தி ஒரு பெரிய லெக்ட்சர் வேற கொடுத்திருந்தாங்க, அப்டியே அசந்தே போயிட்டேன்.

புடவை என்னும் மகாஇம்சை

புடவை கட்டுனா நிமிசத்துக்கு ஒரு முறை இழுத்து இழுத்து விட்டுகிட்டு, வயிறு,இடிப்பு தெரியுதான்னு அட்ஜெஸ்ட் பண்ணுவதால வேலைல கவனம் சிதறிப் போயிடுமாம். குனிய முடியாது, வேகமா நடக்க முடியாது, வண்டி ஓட்ட முடியாது பஸ்ல ஏற முடியாது... இப்படி ஏகப்பட்ட முடியாதுகள் !!! அதைவிட முக்கியமா  வேலைக்கு போற பெண்கள் ரெஸ்ட் ரூம் போறதும், நாப்கின் மாத்துறதும் மகா கொடுமையா இருக்குமாம். புடவை ஈரமாயிட்டா காயுற வரை அங்கேயே நிக்கணுமாம் என்று எழுதியது எல்லாம் ரொம்பவே ஓவர்! . சொல்லப்போனால் இது போன்ற சமயத்தில் புடவை ஒருவிதத்தில் வசதியும் சுகாதாரமானதும் என்பது பெண்களுக்கு புரியும், பெண்ணியவாதிகளுக்குப் புரியாது. (அதும்தவிர புடவை கசங்கிடும் என்றும் காரணம் சொல்லமுடியாது, ஏன்னா அந்த நாட்களில் மொட மொடன்னு கஞ்சி போட்ட காட்டன் புடவையோ, பட்டு புடவையோ நாம கட்ட மாட்டோம்)

கடைசியா நம்மூர் காலநிலைக்கு புடவை கொஞ்சமும் செட் ஆகாதுன்னு ஒரே போடா போட்டாங்க...(ஜீன்ஸ் அப்படியே ச்ச்சும்மா சில்லுனு இருக்குமாமாம்)

* பெண்கள் பிறர் முன் கம்பீரமா தெரியனுமா, ஜீன்ஸ் அணியுங்கள்

* தேங்காய் வேணுமா, ஜீன்ஸ் போடுங்க, அதாவது தென்னை மரத்துல ஏறி தேங்காய் பறிக்கச் சொன்னாலும் பறிக்க தோணும்.

* ஓடலாம் ஆடலாம் மலை ஏறலாம் பைக் ஓட்டலாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். (சமையல் மட்டும் செய்யக்கூடாது தெய்வக்குத்தம் ஆகிடும் ஆமா)

* வெட்கம் பயம் கண்டிப்பா இருக்கவே இருக்காது. துணிச்சல் பொங்கும். எவனாவது கிண்டல் பண்ணினாலும் என்னடா நினைச்சுட்டு இருக்கேனு சட்டையை புடிச்சு கேட்க முடியும். ஆனா தாவணி, சேலை கட்டினா பயத்துல நடுங்கியே செத்துடுவாள். (இந்த இடத்துல சமீபத்திய பாலியல் கொடுமைகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை)L

* யாரையும் லவ் பண்ணலாம், அதுமட்டுமில்லாம லவ் பண்றத பத்தி வீட்ல சொல்ற அளவுக்கு தைரியத்தையும் ஜீன்ஸ் கொடுக்கும். (ஜீன்ஸ் போடும் பெண்களின் பெற்றோர்கள் கொடுத்து வச்சவங்க)

ம்ம்...என்னத்த சொல்ல !! இப்படியெல்லாம் ஜீன்ஸ்ஸோட பெருமைகளை பாயிண்ட் பாயிண்டா புட்டு புட்டு வச்சது சாட்சாத் அந்த கட்டுரையாசிரியரே தான். (அடைப்பு குறிக்குள் இருப்பது மட்டும் அடியேன்)

இவ்வளவையும் சொல்லிட்டு பாலியல் வன்முறை உடையால் ஏற்படுவது இல்லை என்று சில கருத்துக்களை சொல்லி இருந்தாங்க. எனது கருத்தும் இதே தான் என்றாலும், ஜீன்ஸ் குறித்தான அவர்களின் எண்ணத்திற்கு சாதகமாகவே இக்கருத்தையும் சொன்னதாக எனக்கு தோன்றியது.

ஆகச் சிறந்த கட்டுரையின் இறுதி வரியில் 'சோர்வைத் தொடருவதும், புத்துணர்ச்சியுடன் ஓடத்தொடங்குவதும் நம் தேர்வில் இருக்கிறது தோழிகளே' என்று அந்த கட்டுரையை முடித்திருப்பதன் மூலம் ஜீன்ஸ் மட்டுமே தேர்ந்தெடுங்கள் என்று குறிப்பால் உணர்த்திவிட்டார். (ஒருவேளை ஜீன்ஸ் கடை ஏதும் புதுசா திறந்திருக்கிறாரா என்று தெரியவில்லை)J

பெண்ணியம் மட்டுமே பேசும் பெண்களே...

பூ, பொட்டு, புடவை, வளையல், கம்மல் இதெல்லாம் போட்டுகொள்வது பெண்ணடிமைத்தனம் என்றுச் சொல்லி இதை எல்லாம் தவிர்த்து ஜீன்ஸ் போட்டு இதுதான் பெண்ணியம் அப்படினு என்ன கர்மத்தையும் சொல்லிக்கோங்க...ஆனால்  நமது பாரம்பரியத்தை நமது அடையாளத்தை கேலி செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். 

ஜீன்ஸ் என்பது மேல்நாட்டினர் உடை, அவர்கள் நாட்டின் குளிர்காலதிற்கு ஏற்றாற்போல் வடிவமைத்திருக்கிறார்கள். அன்றில் இருந்து இன்று வரை ஒவ்வொன்றாக அவர்களை பின்பற்றி வருவது ஒன்று மட்டும் தான் நாகரீகம் என்று இருப்பவர்கள் இருந்துவிட்டு போங்கள், ஜனநாயக நாடு இது, ஆனால் நமது பாரம்பரிய உடையை அவமானபடுத்துவது என்ற உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது ??!!

பெண்கள் என்றால் அவங்க ஓடணும் , பாடணும் , ஆடணும் என்று புதிதாக  ஒரு பிம்பத்தை பெண்ணுக்கு ஏற்படுத்தும் இது போன்ற முயற்சிகள் தேவையற்றது. ஒரு கட்டுரை நல்லதை விதைக்காவிட்டாலும் பரவாயில்லை அபத்தங்களை பேசாமலாவது இருக்கலாம்.

நீங்கள் புதுமையானவர்கள் என்பதற்காக நம் பழமையை குறைச் சொல்லாதீர்கள்...பலரும் பெரிதும் மதிக்கும் மேற்குலகமே இன்று நம்மை பார்த்து மாறிக் கொண்டிருக்கிறார்கள்...ஏன் நாமே இன்று இயற்கை விவசாயம், கம்பு சோளம், திணை, குதிரவாலி, சாமை என்று மாறிக் கொண்டிருக்கிறோமே... 

எந்த உடையாக இருந்தாலும் அதை அணிபவரின் அப்போதைய மனநிலையைப் பொறுத்தே அன்றைய அவரது செயல்பாடு இருக்கலாம். அதுக்காக உடை அணிந்ததும் வீரம் வரும் என்பது எல்லாம் மகா அபத்தம். ஒருவரின் கல்வி, அறிவு, திறமை இவை தராத தைரியத்தையா உடை கொடுத்துவிடும். அவயங்களை மிகவும் இறுக்கிப் பிடிக்காத நாகரீகமான எந்த உடையும் பெண்ணுக்கு கம்பீரத்தை கொடுக்கும். அனைத்தையும் விட அவரவர் உடலுக்கு பொருத்தமான உடையை தேர்ந்தெடுத்து அணிவது மிக முக்கியம். ஜீன்ஸ், சுடி, சல்வார், புடவை எதாக இருந்தாலும் அணியும் விதத்தை பொருத்தே பெண்ணுக்கு அழகையும் கம்பீரத்தையும் கொடுக்கும். நாம் பார்க்கும் வேலைக்கு ஏற்ப உடையை தேர்ந்தெடுத்து அணியலாம், உடலுக்கு சிறிதும் பொருந்தாத உடைகளை அணிந்தால் அதுவே கேலிக்கூத்தாகிவிடும்,அது புடவையாக இருந்தாலுமே...

நவநாகரீக உடைகள் மட்டும்தான் பெண்ணுக்கு தைரியத்தை கொடுக்கும் என்று குருட்டாம்போக்கில் எழுதப் படும் இது போன்ற கட்டுரைகள் உண்மையில் ஆபத்தானவை.

பெண்களின் சாதனை உடையால் மட்டுமே நிர்ணயிக்கப் படுவதில்லை  

புடவை கட்டத்தெரியாது (தெரியும்றது வேற விஷயம்) என்று சொல்வதே 90களில் பெருமையாக தெரிந்தது, ஆனால் நகரங்களில் இப்போது புடவையே தேவையில்லை என்று தூக்கி எறிவதைபோன்ற எழுத்துக்கள் பேச்சுகள் அதிகரித்து வருவதைப் போல இருக்கிறது. பொருளாதாரத் தேவைக்கென்று யாரையும் சார்ந்து நிற்காமல் சுயத்தொழில் மூலமாக உழைத்து தன் குடும்பத்தை உயர்த்தி உன்னத நிலைக்கு கொண்டுவந்த பல பெண்கள் இன்று நம் கண்முன்னே பெண்மையை பெருமைப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கிராமங்களில் கூட இன்று எந்த பெண்ணும் வருமானம் இல்லாமல் இருப்பதில்லை, மகளிர் குழுக்கள் மூலம் லோன் பெற்று சுயதொழிலை தொடங்கி  அசத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பலரும் நவநாகரீக உடை அணிந்தவர்கள் அல்ல.

அதுவும் தவிர கட்டுரையில் குறிப்பிட்ட மாதிரி, புடவை கட்ட நேரமாகும் என்பது எல்லாம் ஒரு காரணமே இல்லை, இன்றைய பெண்கள் மேக்கப் என்ற பெயரில் முகத்திற்கு மட்டும் செலவு செய்வது குறைந்தபட்சம் ஒருமணிநேரம் (நீயா நானா ல இளம்பெண்கள்  சொன்ன ஸ்டேட்மென்ட்). முகத்துக்கு அவ்ளோ நேரம் செலவு பண்ற பெண்கள் புடவை கட்ட ஒரு பத்து நிமிஷம் செலவு செய்வதில் தப்பில்லை. 

புடவைக்கு ஆதரவாக என்பதற்காக இப்பதிவினை நான் எழுதவில்லை, புடவை பெண்ணடிமைத்தனத்தின் அடையாளம் என்பது போன்று குறிப்பிட்டு இருக்கும் இந்த கட்டுரையை குறித்த எனது கோபத்தை, ஆதங்கத்தை இங்கே வரிகளாக்கி இருக்கிறேன். அவ்வளவே! 

இறுதியாக 

ஜீன்ஸ் அணிவதால் உடல் ரீதியிலான பல பிரிச்னைகள் ஏற்படக்கூடும் என்பது  மருத்துவர்களின் கடுமையான  எச்சரிக்கை .  மக்கள் நலனில் அக்கறை இருக்கிறது என்பதை போன்று 'டாக்டர் விகடன்' வெளியிடும் விகடன் குழுமம் இது போன்ற படு அபத்தமான கட்டுரையை எப்படி பிரசுரித்தது என்று புரியவில்லை. இளைஞர்கள் பலர் விரும்பிப்  படிக்கும் பிரபலமான பத்திரிக்கையான விகடனின் இந்நிலை வருத்ததிற்குரியது.  

ஜீன்ஸ் அணிவதால் ஏற்படும் உடல் உபாதைகள் குறித்து தெரிந்துக் கொள்ள இங்கே  கிளிக் செய்யுங்கள் 

கட்டுரையாசிரியர் ப்ரியா தம்பி அவர்களே 

உங்களுக்கு சரியென்றுப் படுவதை ஒட்டுமொத்த பெண்களின் கருத்தாக எழுதுவது எப்படி சரியாகும். ஜீன்ஸ் தைரியம் தரும் என்று எழுதி இளம் சமூதாயத்தை குழப்பாதீர்கள். பெண்களின் ஆடை இன்னைக்கு கடும் விமர்சனத்துக்கும் விவாதத்திற்கு உள்ளாகிவிட்டது என்பதை மனதில் வைத்து அதீத அக்கறையுடன் எழுத வேண்டிய சூழலில் இருக்கிறோம்...உங்களை பலரும் வாசிக்கிறார்கள் என்று ஒரு சார்பாக மட்டும் தயவு செய்து இனியும் எழுதி விடாதீர்கள். மிக அருமையான ஆளுமை நீங்கள், வாய்ப்பை சரிவர பயன்படுத்திக் கொள்ளுங்கள். பெண்களை பற்றி பேச நிறைய இருக்கிறது, எதுவும் பேசப்படாமல் போய்விடக் கூடாது ...தொடர்ந்து பேசுங்கள்...நாங்கள் பேசாத பேச்சையெல்லாம் ...! நன்றி தோழி.பிரியங்களுடன்
கௌசல்யா 
Tweet

10 comments:

 1. இந்திரா காந்தி கட்டியது புடவையா? ..... ஜீன்ஸா? சின்ன டவுட்?

  ReplyDelete
 2. In USA 1927, there were commercials saying smoking females feel more confident and courageous.....

  ReplyDelete
 3. கேன்சர் நிலைய மருத்துவர்,நம் முதல்வர்,மம்தா,மத்திய அமைச்சர் ஸ்ரீரங்கம் ,இத்தாலிய பெண் என்று விமர்சிக்கப்படும் திருமதி சோனியா இவர்கள் எல்லாம் புடவையில்தான் சாதித்துள்ளனர்.அந்த காலத்து பெண்கள் சாதித்ததை விட இந்த காலத்து பெண்கள் அதிகமாக சாதித்து விட்டனரா என்ன.குறை குடங்கள் கூத்தாடுகின்றன..

  ReplyDelete
 4. சினிமா படங்களில் கோழையா இருக்கிற நாயகனுக்கு மந்திரிச்சு தாயத்தை கடடிவிட்டதும் வீரம் வந்துடும். அது போல பொண்ணுகளுக்கு ஜீன்ஸ் போட்டதும் வீரம் வந்துடுமோ என்னவோ.

  ReplyDelete
 5. முதலில் பிடிங்க ஒரு பூங்கொத்தை :) அருமையான எழுத்து .
  விகடன் பத்திரிகையில் வந்ததா இந்த ஜீன்ஸ் புராணம் :)
  இப்போ அந்த ஆசிரியருக்கு சில கேள்விகள் :)
  முதல் விஷயம் ஆறு வயசு குழந்தைக்கு ஜீன்ஸ் ??? அது அழகாக frock போடும் வயதுங்க ...
  நீங்களே எதற்கு பிள்ளைங்களை முற்ற வைக்கிறீங்க ??
  ஏற்கனவே தொல்லைகாட்சிகளின் ஆதிக்கத்தில் ஆறு எல்லாம் பதினாறு இருபத்தாறு ரேஞ்சுக்கு யோசிக்குதுங்க
  மழலையை அந்த பருவத்தை பிள்ளைகளை அனுபவிக்க விடுங்க !!

  ReplyDelete
 6. //“Once I had asked God for one or two extra inches in height, but instead he made me as tall as the sky, so high that I could not measure myself.” //


  இதை சொன்னது யார் தெரியுமா ? மலாலா எனும் சிறு பெண் உலகை தன்னை நோக்கி திரும்பி பார்க்க வைத்த சிறு பெண் ..தைரியம் என்பது உடையால் வரவில்லை இவளுக்கு// determination ,சாதிக்கணும் என்ற வெறி இன்று அவளை உயர்த்தியிருக்கு ..ஐநா சபையில் பேச அவளுக்கு சந்தர்ப்பமும் கிடைச்சிருக்கு
  அதே போல அவள் அணிந்த முழு உடை அவளுக்கு ஒரு தடையாகவும் இல்லை ..

  நமது முதல்வர் ஜீன்ஸ் போட்டா சாதிச்சார் ???
  இப்பவும் இரும்பு மனுஷியாகத்தானே வலம் வரார் !!

  ReplyDelete
 7. ஆகஸ்ட் மாதம் unicef மகளிரும் காலநிலை மாற்றமும் என்ற மாநாட்டில்( இந்தோனேஷியாவில் )
  நம் நாட்டை சேர்ந்த சூர்யமணி பகத் பங்குபெற்றார் .அவரது உடை ..

  //BALI, Indonesia (Thomson Reuters Foundation) - With her long black hair, dimples and slight frame swathed in a colourful sari, Suryamani Bhagat’s graceful appearance belies the nerves of steel required to become an environmental heroine in a deeply patriarchal society. //
  அவர் இரும்பு போன்ற நரம்பு தான் வேணும்னு சொல்லியிருக்கார் போராட ..ஜீன்ஸ் இல்லைங்கோ ஆசிரியரே :)

  ReplyDelete
 8. ஜீன்ஸ் ஒரு உடை அவ்ளோதான் ..உங்களுக்கு உங்க பிள்ளை ஜீன்ஸ் போட விருப்பம்னா போடுக்க விடுங்க அதை விட்டு உங்கள் சொந்த கருத்துக்களை public media vil திணிக்காதீங்க ..ஏற்கனவே மக்கள் சோஷியல் மீடியாவால் ரொம்பவே குழம்பி போயிருக்காங்க !! ஸ்கூல் யூனிபார்ம் கூட ஜீன்ஸ் ஆக்கிடுவாங்க உங்க புண்ணியத்தில் :)
  அன்னை தெரசாவிடம் இல்லாத கம்பீரமா ??

  ReplyDelete
 9. @@ கருத்துக்களை பகிர்ந்த நட்புகளுக்கு என் அன்பான நன்றிகள்

  ReplyDelete
 10. (ஒருவேளை ஜீன்ஸ் கடை ஏதும் புதுசா திறந்திருக்கிறாரா என்று தெரியவில்லை)// செம பதிவு பெண்ணியம் என்கிற பெயரில் இப்படி அரைகுறை ,இறுக்க ஆடைகள் அணிந்து கொண்டு சுத்ந்திரம் என்கிற வார்த்தையின் அர்த்தத்தைச் சுருக்கும் அரைகுறைகள் அவசியம் படிக்க வேண்டிய பதிவு

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...