செவ்வாய், ஏப்ரல் 30

11:42 AM
21


சாதி மறுப்பவர்களும் சாதி கொடி பிடிப்பவர்களும் அவர்கள் கருத்தில் நிலையாக நிற்கிறார்கள் , ஆனால் அடிப்படையில் இருவருக்கும் அதிக வேறுபாடில்லை. தான் பிறரை விட மேம்பட்டவன், வித்தியாசமானவன்,  எப்படியாவது தான் முக்கியத்துவம் பெறவேண்டும் என்ற முயற்சி மட்டும் தான் அங்கே தெரிகிறது.  

முகநூலில் சில  நாட்களுக்கு முன் ஒரு புகைப்படம் ஷேர் செய்திருந்தார்கள்.  அந்த புகைப்படம் 'கீதாவீரமணி பிராமணாள் ஹோட்டல்' என்று எழுதிய பெயர் பலகை...! இதை பார்த்த பலரும் ஆவேசமாக தங்கள் கருத்துக்களை(படு மோசமாக) கூறியிருந்தனர். (இது சாதி பெயரா வர்ணம் சம்பந்தப்பட்டதா என்பது இல்லை எங்கே பிரச்சனை) இது சாதிய அடையாளத்தை குறிக்கிறது இது மிக தவறு என்பதாகத்தான் அங்கே விவாதம் நடந்தது. இந்த ஹோட்டல் இருக்கும் அதே ஊரில் தான் சிவகாசி நாடார் மெஸ், சைவ பிள்ளைவாள் மெஸ், செட்டியார் மெஸ் போன்றவையும் இருக்கின்றன.  ஒருவரின் பெயருக்கு பின்னாடி சாதி பெயர் போடக்கூடாது, பெயர் பலகையில் சாதி பெயர் இருக்கக்கூடாதுனு கூச்சல் கேட்கும் போது எனக்கு ரொம்ப அன்னியமா தோணுது !!?

என் கேள்வி ஒன்றுதான் 

பெயர் பலகையிலும், தனது பெயரின் பின்னாலும் சாதிப்பெயர் வச்சாத்தான் என்ன தவறு ?

இதை எடுக்க சொல்லி வற்புறுத்துவதோ, மோசமான கருத்துக்களை மாறி மாறி முன்வைப்பதாலோ பெரிதாக என்ன நடந்துவிட போகிறது?!! நம் சமூகத்தில் சாதிய எண்ணங்கள் ஆழ வேரூன்றி  புண்பட்டு புரையோடிக் கிடக்கிறது. அதை எதிர்த்து என்ன செய்துவிட முடியும் நம்மால்...?! இணையத்தில் ஒருத்தர் முகம், மற்றொருவர் அறியாத நிலையில் சாதி பெயரை வைத்தது தவறு என கிண்டலும் கேலியுமாக கூச்சலிடுவது சம்பந்தப்பட்ட பிரிவினரின் மனதில் காயத்தை ஏற்படுத்தும். இங்கே இப்படி கூச்சலிடுபவர்களால் தெருவில் இறங்கி இதை தைரியமாக சொல்ல இயலுமா...? நிச்சயமாக முடியவே முடியாது !! 

சாதிக் கலவரம்

சமீபத்தில்  நடந்த கலவரத்தை குறித்து சமூகத் தளங்களில் பலரும் ஆவேசமாக கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதில் எத்தனை பேர் உண்மையாக சாதியை வெறுப்பார்கள். சாதி மறுப்பு கவிதைகளும் பதிவுகளும் காரசாரமாக எழுதலாம், நிஜ வாழ்வில் சாதியை மறுத்து இருக்க இயலுமா? இருப்பார்களா ? நிச்சயம் முடியாது. அப்புறம் எதற்கு இந்த வீண் ஆர்ப்பாட்டம் ?!

இரு சக்கர வாகனம் ஒன்றில் இருந்த பெயர் சாதியை குறிக்கிறது என்று வெகுண்டு எழுந்த  உணர்வாளர்கள் உடனே தங்கள் எதிர்ப்பை பலவாறு தெரிவித்து அப்பெயரை மாற்ற வைத்துவிட்டார்கள். நல்ல விஷயம் தான். அதே சமயம் இந்த போராட்ட வேகத்தை மற்றதில் காட்டுவார்களா ? உதாரணமாக " பள்ளியில் சாதி பெயரை குறிப்பிட மாட்டோம் "  இதை போராடி மாற்றினால் உண்மையில் பாராட்டுக்கு உரியவர்கள். அதை விட்டுவிட்டு  உயிரில்லாத பெயர் பலகையிலும், வண்டியில்  போட்டதை எடுங்க என்று போராடுவதில் என்ன இருக்கிறது. இதை பற்றி முகநூலில் ஒருவரின் கம்மென்ட் "

"நரேஷ் அய்யர் எனும் திரையிசைப் பாடகர் தமிழ் பாடல்கள் பாடி வருகிறார்
அவரையும் பாடக்கூடாதென கையெழுத்து வேட்டை தொடங்கலாமா ?"

கேலிக் கூத்தாகி போனது தமிழனின் இன்றைய நிலை !!

சாதியை பற்றி காரசாரமாக விவாதிப்பவர்களே ! இவர்களை பற்றியும் கொஞ்சம் பேசுங்களேன்...!! அப்படியாவது விடியுமா இவர்களது கிழக்கு...??!

பல கிராமங்களில் இரட்டை குவளை முறை இன்றும் தொடருகிறது ...! கையால் கழிவறை கழிவுகளை அள்ளுகிற மனிதர்களும் உண்டு இங்கே...! எங்கே, சிறிது  அவர்களை பற்றியும்  பேசுங்கள். அந்நிலை மாறவேண்டும் என கூச்சலிடுங்கள், போராடுங்கள். மனிதர்களிடையே ஒரு பிரிவினர் ஒதுக்கி வைக்கப்பட்டு சிதைக்கப்படுகிறார்களே அவர்களை பற்றியும் நினையுங்கள். அதை விடுத்து சாதியை வெறுப்பதை போன்ற முகமூடி அணிந்து  'இந்த நூற்றாண்டில் இது என்ன கேவலம்' என கூச்சலிடும் வெட்டி பேச்சு வீணர்களாக மட்டும்  இருக்காதீர்கள்...?? 

நீ என்ன செய்தாய்?

சாதி வேண்டாம் என்பவர்கள் தங்கள் குழந்தைகளை சாதி குறிப்பிடாமல் பள்ளியில் சேர்த்தார்களா? பள்ளி, அரசு வேலையில் சலுகை ஏதும் வேண்டாம் என கூறி இருக்கிரார்களா? அங்கெல்லாம்  சாதி தேவைபடுகிறதே !  சாதிவாரி கணக்கெடுப்பு அரசு செய்கிறது. கேட்டால் அப்போதுதான் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு செய்வதற்கு வசதியாக இருக்குமாம். அரசாங்கம் மனிதனை இந்த சாதி அந்த சாதி என தனித்து பார்க்க ஒரு காரணம் சொல்லும் போது, சாதியை முன்னிலைப் படுத்துபவர்களுக்கும்  ஏதோ ஒரு காரணம் இருக்கும், இருந்துவிட்டு போகட்டுமே ? அதில் உங்களுக்கு ஏன் வருத்தம் ?!

கலப்புமணம்

கலப்பு மணம் புரிந்தால் சாதி மறைந்துவிடும் என்கிறார்கள். கலப்பு மணம் புரிந்தால் சலுகைகள் , வேலை வாய்ப்புகள் என அரசு கொடுக்கிறது. ஆனால் இந்த சலுகைக்காக கலப்பு மணம்  பயன்பட்டது அன்றி வேறு நல்லவை ஒன்றும் நடக்கவில்லை. இதனால் சாதி மறைந்ததா ?! நிச்சயமாக மறைய வாய்ப்பே இல்லை. கலப்பு மணம் புரிந்த தம்பதிகளில் கணவன் எந்த சாதியோ அது அவர்கள் குழந்தைகளின் சாதியானது. இந்த விதத்திலும் ஏதோ ஒரு சாதி தொடரத்தானே செய்கிறது. கலப்பு மணத்தில் பெண் சாதி மறைந்து ஆண் சாதி தொடர்கிறது. மற்றபடி சாதியே மறைந்தது என்று சொல்ல இயலாது. சொல்லப்போனால் இரு வேறு  சாதி மணம் முடித்திருந்தால் குடும்பத்தில் வேறு ஏதோ பிரச்சனை என்றாலும், "உன்ன போய்  கட்டினேன் பாரு, உன் சாதி புத்தி தானே உனக்கும்"    என்று மாறி மாறி சாதி குறித்த சண்டையாக அது மாறிவிடுகிறது.

நடைமுறையில்...

காலங்காலமாக ஊறிப்போன ஒரு உணர்வு(?) இது. புதிதாய் ஒருவர் அறிமுகமானதும் இவர் எந்த சாதிகாரராக இருக்கும், ஒருவேளை நம்மாளா இருக்குமோ என எண்ணத் தொடங்கிவிடுகிறது மனித மனம். வீட்டு வாடகைக்கு ஆள் வைப்பது என்றாலும் எந்த சாதி என்று முதலில் கேட்டுவிட்டுதான் பிறவற்றை பேசுவார்கள். ஒருசில படித்தவர்கள் நேரடியாக கேட்காமல் சொந்த  ஊரு எது , எந்த தெரு என்று சுத்தி வளைச்சு கேட்டு 'இந்த துறையில் வேலை பாக்குறவர் உங்க சொந்தகாரரா' என்பதில் வந்து முடிந்துவிடும். அந்த சோகால்ட்  சொந்தகாரரை வைத்து 'இவர் இன்னார்' என்று முடிவுக்கு வருவார்கள்.

கடவுளை தேடவும் சாதி 

இந்த தலைப்பில் சொல்லனும்னா நிறைய சொல்லலாம். ஆனா அது வேறு ஒரு வம்பில் கொண்டு போய் விட்டு விடும்...!!? எனக்கு கொஞ்சமா தெரிஞ்ச ஒரு விஷயம் பற்றி மட்டும் சொல்றேன்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆடி தபசு என்று பெரிய திருவிழா ஒன்று உண்டு. கொண்டாடப்படும் 12 நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சாதிக்கு என்று ஒவ்வொரு நாளையும் ஒதுக்கிவிடுவார்கள். அந்த நாளில் சம்பந்தப்பட்ட சமூதாயத்தினர் மட்டும் ஒன்று சேர்ந்து ஸ்பெஷல் பூசை, தேரோட்டம் இருக்கும். சாதி பெயரை கொட்டை எழுத்தில் போஸ்டரில் எழுதி போட்டு இருப்பாங்க...அந்த போஸ்டரின் முன்பு வைத்து பாட்டு கச்சேரி, மேடை பேச்சு அப்டி இப்படி என்று எல்லா கொண்டாட்டங்களும் நடக்கும். ஒருத்தர் கண்ணுக்கும் இது பெரிதாக தெரிவது இல்லை. வெளியே பேசிக்கொள்ளும் போதும் இன்னைக்கு எங்காளுக 'மண்டகபடி' என்று சொல்வதில் இருக்கும் பெருமை, சந்தோசம் வேறு எதிலும்(!) இருக்காது.

இந்த மண்டகபடி அன்று சில மண்டையுடை(?) சம்பவங்களும் ஏதோ இரு சாதிக்கு நடுவில்  நடக்கும். போன வருடம் இந்த சாதியில் ஒருத்தர் தலை போனா இந்த வருடம் எதிர் பார்ட்டில ஒருத்தர் தலை போகும்.(எங்கும் கொலை பார்த்து கேட்டு இப்டி சாதாரணமா சொல்ற அளவுக்கு நிலைமை ஆகிபோச்சு ?!!) காவல்துறைக்கு ஆடி தபசு முடியும்வரை தூக்கம் இருக்காது...யாருக்கு என்ன நடக்கபோகிறதோ என்று...!! இப்படி இருந்தாலும் வருடந்தோறும் நடக்கத்தான் செய்கிறது...சாதியை முன்னிறுத்தி கடவுளை வணங்குவதும் தொடரத்தான் செய்கிறது...!!

பள்ளிகளில் சாதி

கல்வி ஒன்றால் தான் இது போன்றவற்றை களைய முடியும் என்பது எல்லாம் பொய். தென் மாவட்டத்தில் ஒரு பிரபல பள்ளியின் பெயரே ஒரு சாதியின் பேரை கொண்டு தான் இருக்கிறது...(அதுபோன்ற பள்ளிகள் நிறைய இருக்கிறது) இன்று வரை அதன் பெயரை மாற்றவேண்டும் என்று ஏன் ஒருவருக்கும் தோணவில்லை...வேறு ஒன்றுமில்லை, நமக்கு பழகி போய்விட்டது...! இப்படி இருக்கும் போது சாதி பெயரை எழுதாதே என்பது அபத்தம். கல்வி பயில போகும் இடத்தில் 'சாதி என்ன' என்ற கட்டத்தை பூர்த்தி செய்தால் தான் கல்வியே கிடைக்கும். இந்த நிலை மாறினால் தான் சாதியை ஒழிப்பதை(?) பற்றி சற்று யோசிக்கவாவது முடியும்.

பொருளாதார முன்னேற்றம் சாதியை ஒழித்துவிடும் என்றாலும் நம் நாட்டில் அத்தகைய நிலை வரும் நாள் எந்நாளோ ?!

இரு சொ(நொ)ந்தஅனுபவம்

* எனது இரண்டாவது மகன்(9 வயது)ஒருநாள் மாலையில் பள்ளிவிட்டு  வந்ததும் 'நான் என்ன காஸ்ட்'என்றான்...நான் ஜெர்க்காகி 'என்னடா இது புதுசா?',

'மிஸ் கேட்டாங்கமா ' என்றான்.

மறுநாள் பள்ளிக்கு சென்று அந்த ஆசிரியையிடம், "ஏங்க சின்ன பையன் கிட்ட எதை கேட்கிறதுன்னு இல்லையா?? அவன் என்ன சாதின்னு ஆபீஸ் பைல்ல இருக்குமே எடுத்து பார்த்துக்க வேண்டியது தானே ?"

அதுக்கு அவங்க " இல்லைங்க பையனும் தெரிஞ்சி வச்சுகிட்டா நல்லதுதானே" என்றதும் எனக்கு BP எகிறி " எதுங்க நல்லது? சாதி தெரிஞ்சிக்கிறதா, பசங்களுக்குள்ள இப்பவே நான் இந்த சாதி, அவன் அந்த சாதினு பேசிக்கிறது நல்லதாங்க...?! பாடத்தை மட்டும் சொல்லி கொடுங்க அது போதும்"னு சொல்லிட்டு, அப்படியே பள்ளி தாளாலரிடம் ஒரு புகாரை(?) அளித்துவிட்டு வந்தேன். ஒரு ஆசிரியை சாதிபற்றி பேசுவதும் அதை மாணவர்கள் அவசியம் தெரிஞ்சிக்கணும் என்ற அளவில் தான் நம் சமூக அமைப்பு இருக்கிறது.

* எங்க பாக்டரிக்கு பக்கத்து கிராமங்களில் இருந்து  தொழிலாளர்கள் வருவாங்க, வயதான பெரியவர்களை சின்ன பொண்ணுங்க 'ஏய் இங்க வா, போ' னு கூப்பிடுவாங்க. சொந்தகாரங்க போலனு ஆரம்பத்துல இருந்தேன். போக போகத்தான் இது சாதி குறித்தான ஒருவிதமான மரியாதை என்று புரிந்தது.  (யார் எந்த சாதின்னு நீங்களே புரிஞ்சிகோங்க) ஒரு நாள் மொத்தமா எல்லோரையும் கூப்ட்டு 'இங்க பாருங்க உங்க ஊர்ல எப்படி வேணும்னா கூப்ட்டு பேசுங்க, ஆனா இங்க எல்லோரும் ஒண்ணுதான் வயசுக்கு மரியாதை கொடுத்து பேசணும்'னு கொஞ்சம் அதட்டி சொன்னேன்.(இதை ஏன் பெரிசு படுத்துறனு என் மாமி டோஸ் விட்டது தனி கதை)

அதுக்கு பிறகு பாக்டரி உள்ளே இருக்கும் போது 'வாங்க போங்க' சாயங்காலம்  கம்பெனி வண்டியில ஏறிய உடனேயே 'வா போ'னு மாறிடும். அவ்வாறு அழைத்து பேசுவதில் அவ்வளவு சந்தோசம்,நிறைவு. இதை என்னவென்று சொல்ல ? யார் இதை மாற்ற ? மாறவே மாறாது என்பதே வேதனையான நிதர்சனம் !! 

என்னத்த சொல்ல...

சாதி குறித்த அடிப்படையே இங்கே தவறா இருக்கு. சாதி வேண்டாம் என்று சொல்றவங்களுக்கு ஒரு காரணம் இருப்பது போல வேண்டும் என்று சொல்றவங்களுக்கும் ஒரு காரணம் இருக்கு...

'சாதி வேண்டும்' என்று சொல்பவர்களை கூட உண்மையை சொல்றாங்க என எடுத்துக்கலாம். ஆனால் சாதி வேண்டாம் என்பவர்களை பற்றி ரொம்பவே யோசிக்கவேண்டும். ஏன்னா 'வேண்டாம்' என்று சொல்வதற்கு முன் தன்னை சுய மதிப்பீடு செய்யணும்... தன் குழந்தைக்கு பள்ளியில் சாதி குறிப்பிடவில்லை, அதே இனத்தில் திருமணம் முடிக்கவில்லை, சாதியை முன்னிறுத்தி சலுகை எதுவும் பெறவில்லை. இதற்கு எல்லாம் 'இல்லை' என்று சொன்னால் 'சாதி வேண்டாம்' என்று சொல்வதிலும் உண்மை இருக்கிறது எனலாம்.

அரசியல்வாதிகள்

சாதிகளை நிலைப்படுத்தி மக்களை பிரிக்கும் வழிகளை அரசியல்வாதிகள் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றனர். சாதி குறித்த முடிவான கொள்கையை வெளிப்படையாக யாராலும் கூறமுடியாது. குழப்பநிலையையே விரும்புகின்றனர். பிறந்ததிலிருந்து இறக்கின்ற வரை சாதி தேவைப்படுகின்றது. அடக்கம் செய்ய தனிப்பட்ட சுடுகாடுகள் ! சாதி அடிப்படையில் தேர்தல்! அந்தந்த சாதியை  சேர்ந்தவர்களே அந்தந்த இடங்களின்  வேட்பாளர்கள்...! 

மேடையில், சாதியத்துக்கு எதிராக  வலுவாக பேசிய ஒருவர்  தன் பேச்சை நிறைவு செய்யும் போது எப்படிச் சொல்லி முடிக்கிறார் என்றுதான் பாருங்களேன்...!!

"நான் உங்கள் வேட்பாளர்
நீங்கள் என்னை தேர்ந்தெடுத்தால்
சாதிகளை ஒழிப்பேன்
வீதிகளில் உள்ள
சாதிகளின் பெயர்களை அழிப்பேன்
சாதி என்ற வார்த்தை உள்ள பக்கத்தை
அகராதியில் இருந்து கிழிப்பேன்
நீ அந்த சாதி
நான் இந்த சாதி
என்று
பேசுவோரால் தான் தேசம் கெட்டுவிட்டது!
எனவே
சாதியில்லாத
சமூகத்தை அமைக்க
எனக்கே ஓட்டுப் போடுங்கள்..."

என கூறியவர் பேச்சை முடிக்கும் போது

"நினைவிருக்கட்டும்
நான் உங்கள் சாதிக்காரன்...!!?"                              


* * * * * * * * *

பின் குறிப்பு

சாதியை குறித்து சமூக வலை தளங்களில் நடக்கும் விவாதங்கள் ஆரோக்கியமானதாக இல்லை. மாறாக ஒருத்தரை ஒருத்தர் சாடி எழுத்துப் போர் புரிகிறார்கள். படித்தவர்களிடையே ஒரு தெளிவு இல்லை என்ற போது புண்பட்டு புரையோடி கிடக்கும் சமூகத்தில் நல்ல மாற்றத்தை கொண்டு வருவது யார் ? தயவு செய்து இதை நாம் உணர்ந்து கவனமாக வார்த்தைகளை கையாளவேண்டும். மாற்ற முடியாதது என்று எதுவும் இல்லை, மாற்றலாம் அதே நேரம் மனித நேயம் மிக முக்கியம். மனிதத்தை தொலைத்து இங்கே எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.  

* * * * *
படம் : நன்றி கூகுள்
கவிதை :நன்றி (யாரோ ஒரு யதார்த்த கவிஞர்)


Tweet

21 கருத்துகள்:

  1. இறுதிப் பகுதி யதார்த்தம்

    பதிலளிநீக்கு
  2. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இருந்துவரும் சாதிய உணர்வு ஒரே நாளில் மறைந்துவிடாது, இன்னும் ஒரு சில தலைமுறைகள் பிடிக்கும். அதற்காக சாதி என்பது மறையவே மறையாது, அதற்கான முன்னெடுப்புகள் எதுவும் மேற்கொள்ளக்கூடாது என்பது சரியல்ல. கடந்த தலைமுறையை ஒப்பிடும்போது இளைய தலைமுறைக்கு சாதி உணர்வு குறைவுதான், அடுத்த தலைமுறையில் இன்னும் மாற்றங்கள் எற்படும். சாதி வேண்டாம் என்று சொல்வதால் ஒருவரின் மனம் புண்படும் என்றால், அந்த மனம் புண்பட்டுவிட்டுப் போகட்டும்.

    பதிலளிநீக்கு
  3. தான் அரசியல்வாதி என்பதை முடிவில் நீரூபித்து விட்டார்...!

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா2:58 PM, ஏப்ரல் 30, 2013

    அருமையான கருத்துக்கள் நண்பா..சாதிகள் வேண்டாம் என்று சொல்லும் ஆட்சியாளர்கள் ,அரசியல்வாதிகள் நினைத்தால் மட்டும்தான் அரசின் சாதிய கொள்கைகளை மாற்றமுடியும்.ஆனால் மாற்றமாட்டார்கள்..ஊர் இரண்டு பட்டால்தானே கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.

    பதிலளிநீக்கு
  5. ஆமாம், சாதியை ஒழிக்க முடியாது! மதத்தை ஒழிக்க முடியாது! கருத்து வேற்றுமையை எதுவும் செய்ய முடியாது! வலியவர்கள் எளியவர்களை ஆள்வதையும் ஒண்ணும் செய்ய முடியாது! அறியாமையையும் அகற்ற முடியாது! னு பேசாமல்ப் போயிடலாம். ஆனால், இவ்ளோ தூரம் நீங்க "அனலைஸ்" செய்து அதை இதுபோல் "சாயை ஒழிப்பதென்பது நக்கிற காரியம் இல்லை" என்பதுபோல் பதிவிடுவதால், சாதீயம் சரி என்று நம்புபவர்களுக்கு ஆதரவாகவும் ஆறுதலாகவும் உங்க பதிவு அமைகிறது என்று ஒரு குற்றச்சாட்டை அன்புடனும், மரியாதையுடனும் உங்கள்மேல் வைக்கிறேன்! நீங்க இல்லைனு மறுக்க முடியுமா?

    பதிலளிநீக்கு
  6. @@எல்.கே...

    நன்றி கார்த்திக்.


    பதிலளிநீக்கு
  7. @@Robin said...

    //அதற்காக சாதி என்பது மறையவே மறையாது, அதற்கான முன்னெடுப்புகள் எதுவும் மேற்கொள்ளக்கூடாது என்பது சரியல்ல.//

    சரியான முன்னெடுப்புகள் ஏதும் எடுத்த மாதிரி தெரியலையே ராபின், மாறாக ஊக்குவிப்பதுதான் அதிகரித்திருக்கிறது. இங்கே சில கிராமங்களில் ஒரு இருக்கமான நிலையில் மக்கள் இருப்பதை வெளி உலகம் அறிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இப்படித்தான் இருக்கும் மாறாது என்பது மக்கள் மனதிலும் பதிந்துவிட்டது. இதை மாற்ற முயற்சிகள் மேற்கொண்டால் நலம்.

    //கடந்த தலைமுறையை ஒப்பிடும்போது இளைய தலைமுறைக்கு சாதி உணர்வு குறைவுதான், அடுத்த தலைமுறையில் இன்னும் மாற்றங்கள் எற்படும்.//

    உண்மைதான். மாற்றம் ஏற்படவேண்டும் என்பதே எனது விருப்பமும்...

    //சாதி வேண்டாம் என்று சொல்வதால் ஒருவரின் மனம் புண்படும் என்றால், அந்த மனம் புண்பட்டுவிட்டுப் போகட்டும்.//

    சாதி வேண்டாம் என்று சொல்லுங்கள் சொல்வதற்கு முன் சொல்பவர் தனது சாதியை விட்டு வெளியில் வந்தவராக இருக்கவேண்டும், ஒன்றை சொல்வதற்கு முன் அதை சொல்வதற்கு நமக்கு தகுதி வேண்டுமல்லவா?!

    சாதிக்காக மனித மனங்களை வருத்த வேண்டாம் என்கிறேன் நண்பா.

    கருத்துக்கு நன்றிகள் ராபின்.

    பதிலளிநீக்கு
  8. @@திண்டுக்கல் தனபாலன் said...

    //தான் அரசியல்வாதி என்பதை முடிவில் நீரூபித்து விட்டார்...!//

    அரசியல் பண்ணி ஆகணுமே. அப்படித்தான் இருப்பார்கள்.

    நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  9. @@kaliaperumalpuducherry said...

    //சாதிகள் வேண்டாம் என்று சொல்லும் ஆட்சியாளர்கள் ,அரசியல்வாதிகள் நினைத்தால் மட்டும்தான் அரசின் சாதிய கொள்கைகளை மாற்றமுடியும்.ஆனால் மாற்றமாட்டார்கள்.//

    உண்மை. மக்களை இப்படியே வைத்திருப்பதில் தான் அவர்களின் கவனம் இருக்கிறது.

    ...
    உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  10. @@ வருண் said...

    //ஆனால், இவ்ளோ தூரம் நீங்க "அனலைஸ்" செய்து அதை இதுபோல் "சாயை ஒழிப்பதென்பது நக்கிற காரியம் இல்லை" என்பதுபோல் பதிவிடுவதால், சாதீயம் சரி என்று நம்புபவர்களுக்கு ஆதரவாகவும் ஆறுதலாகவும் உங்க பதிவு அமைகிறது என்று ஒரு குற்றச்சாட்டை//

    பதிவு இப்படி ஒரு பொருள் தருகிறதா?

    நாம என்னதான் வேண்டாம் வேண்டாம்னு சொன்னாலும் எல்லா பக்கமும் சாதி பெரிசு படுத்தப் படுவதை பார்க்கும் போது எங்க இது மாற போகுது என்ற ஒரு சலிப்பு, ஆதங்கம், வருத்தம் நிறைய உண்டு எனக்கு. அதை வார்த்தைகளாக்கினேன். அவ்வளவுதான்.

    இது அத்தகையவர்களுக்கு ஆதரவாக அமைகிறது என்றால் அதற்கு என் ஆழ்ந்த வருத்தங்கள்.

    என்னை பொருத்தவரை சாதி இரண்டொழிய வேறில்லை என்பதே !

    ...

    மனதில் பட்டதை வெளிப்படையாக தெரிவித்தமைக்கு நன்றிகள் வருண்.



    பதிலளிநீக்கு
  11. மதமும் சாதியும் மனிதனை பிரிக்கவே செய்கிறது. ஆனாலும் புலிவாலைப் பிடித்ததைப்போல் விடமுடியாமல் தவிக்கிறார்கள் என்பது தான் உண்மை

    பதிலளிநீக்கு
  12. ***மனதில் பட்டதை வெளிப்படையாக தெரிவித்தமைக்கு நன்றிகள் வருண்.***

    நீங்க என்னை சரியாப் புரிந்து கொள்வீங்கணு நம்பிக்கையின் பேரில்தான் எழுதினேன். அதேபோல் புரிந்து கொண்டீர்கள், நன்றி!.

    முந்தைய என் பின்னூட்டத்தில் உள்ள எழுத்துபிழை (கொலை) க்காக வருந்துகிறேன்! :(

    எனக்கென்னவோ, "கற்பெல்லாம் ஒண்ணும் இல்லை சும்மா சொல்லிக்கிட்டு அலையிறோம்" என்றும் "நம்மில் யாரு கல்யாணத்திற்கு முன்னால உடலுறவு கொள்ளவில்லை?" என்றும் குஷ்பு சுஹாஷினி போன்ற அரைவேக்காட்டுப் பெண்ணியவாதிகள் பேசுவதால் நம்ம இன்னும் கொஞ்சம் நாசமாப் போவதுக்குத்தான் வழி வகுக்கிறார்கள் இந்த பெண்ணியவாதிகளின் "தன்னலையை சமாளிக்கும்" நிலைப்பாடு என்று தோன்றும்.

    அதேபோல் சாதி உணர்வு/ சாதி வெறி கொண்டு மற்றவரை மட்டமாகவும், அவ்ர்களை தன்னைப்போல் மதிக்காமல், அடக்கி ஆளணும்னு வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணகான பாமர தமிழ் மக்கள் வாழும் நம் சமூகத்தில் நமக்கு நிச்சயம் பெரிய பொறுப்பு இருக்கு!

    அதென்னவென்றால்..உள்மனதில் இதெல்லாம் ஒழியுமா? என்ற பயம் நமக்கு இருந்தாலும் அதைச் சத்தமாக இந்தப் பாமரர்களுக்கு கேட்கும்படி சொல்லும்போது, "நம் ஆதங்கம்" அவர்களால் தவறுதலாக எடுக்கப்பட்டு அவர்களை இன்னும் தவறான பாதையில் ஊக்குவித்துவிடுமோ?! என்கிற ஐயம்!

    அதனால் இதைப்பத்தி பேசாமலே விட்டுவிடுவது நல்லது. அந்தவகையில், நம் ஆதங்கத்தை தவறாக இந்த முட்டாள்கள் புரிந்துகொள்ள, பயன்படுத்த வாய்ப்பளிக்காமல் பொறுப்புடன் நாம் நடந்து கொள்கிறோம் என்பது என் தாழ்மையான எண்ணம்.

    புரிதலுக்கு நன்றிங்க கெளசல்யா!

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா11:39 PM, மே 02, 2013

    Ur essay is misplaced. There are only two groups of Castes in TN. One: Non dalits, 2, Dalits.

    All members of no.1 don't clash with no.2. Only a selection from them clash: e.g. Maravars in South and Vanniars in North.

    The reasons for their clash is out of focus here. The point is - dalits clash with others or others clash with dalits. U have missed this point.

    Thus, there are no caste clashes among others. All of them sport their caste and caste feelings, want their caste men in politics. But they don't clash among themselves because they share the booty and spoils: lands, property, money and politics. More powerful politics are there at village level than in Fort St George. U can terrorise ppl. The Non dalits terrorise the dalits there; but in Fort St George, they walk as venerable humans.

    Since all non dalits live amicably with caste tags, there is no question of castes being a villain in their society.

    Your whole essay treats caste as villain for the whole society. Naivete.

    Only dalits are villains to the rest of the society. Their villainy arises from their new-found status of being government brahmins.

    If Government stops molly-coddling them, they will become the old dalits and go back to cheris to be obedient with the rest of the society. The politicians do so because they want their votes. Deprive dalits of voting rights and other rights like Education. Politicans wont depend on them. They wont talk about castes at all; and you can become happy. Isn't your grievance that the politicians encourage castes ?

    You must be bold to face this truth: It is Dalits vs. Non dalits.

    பதிலளிநீக்கு
  14. சாதி ஒழிப்பாளர் எல்லாருக்கும் ஒரு கேள்வி, காந்தியவாதி, காந்திய சிந்தனை, மகாத்மா காந்தி அப்படி என்றால் என்ன? குஜராத் மானிலத்தில் வைசியர்களின் உட்பிரிவில் உள்ள வாசனை திரவியங்களை விற்ப்பனை செய்யும் ஒரு உட்பிரிவு சாதியின் பெயர்தான் காந்தி. சாதி ஒழிப்பாளர்களே நீங்கள் எல்லாம் மோகந்தாஸ் என்றுதானே சொல்லவேண்டும் ஏன் காந்தி என்று சொல்கிறீர்கள். ஒரு மாமனிதரை அவரின் பெயரை மறைத்துவிட்டு அவரது சாதியைமட்டுமே அவரின் அடையாளமாக பயன்படுத்தும் உங்களுக்கு எல்லாம் அறிவு எங்கே எதை XXXXXXX ?

    பதிலளிநீக்கு
  15. Also a post to show tat caste is not in Hinduism alone :
    http://hayyram.blogspot.in/2010/06/blog-post.html

    பதிலளிநீக்கு
  16. எந்த ஒன்று மீண்டும் மீண்டும் பெசப்படுகின்றதோ அல்லது விமர்சனம் செய்யப்படுகின்றதோ அது மேலும் வளரும் சாதி சாதிப் பிரச்சனை என்று சாதியைப் பற்றி பேசி பேசித் தான் மக்கள் சாதியில் ஊறிப்போய் இருக்கின்றார்கள் அவர்களை அவர்களாக இருக்க விட்டால் சாதியைப் பற்றிய பேச்சு நிறுத்தப்பட்டால் சாதி மெல்ல மறையும்


    50-100 150 ஆண்டுகளுக்கு முன்பும் கலப்பு திருமணம் நடந்தது

    பதிலளிநீக்கு
  17. சாதி என்பதும் சரித்திரம் போல தொடரும் தரித்திரமே

    பதிலளிநீக்கு
  18. பெயரில்லா10:01 AM, மே 12, 2013

    மக்களாட்சியில் அரசுக்கு வானளாவிய அதிகாரம் உண்டு
    ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும்.. சாதி இனி கிடையாது .. அதை போற்றுபவர்களுக்கு சிறை தண்டனை உண்டு என்று ..
    எதிர்ப்புகளும், வசவுகளும் வரத்தான் செய்யும் ..
    அரசுக்கு இதை சமாளிக்க மக்கள் அதிகாரம் கொடுத்து உள்ளனர்
    அதன் பின் இன்னார் தான் இதை செய்ய வேண்டும் என்பது இருக்காது
    பொருளாதார நிலை மட்டுமே அரசின் உதவி கிடைக்க ஏற்கப்படும் அளவு கோள் .
    இதை செய்ய எந்த அரசுக்கும் துணிவில்லை வாக்கு வங்கி அரசியலால்.
    துணிவான அரசு இதை செய்யும். மக்களின் ஒன்று பட்ட சக்தியை வெளி கொண்டுவரும் .
    இந்தியா உலகில் நிமிர்த்து நிற்கும்.மனித சக்தியை சரியாக பயன்படுத்தாமல் விட்டதை சரி செய்ய முடியும்

    பதிலளிநீக்கு
  19. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_3791.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...