எனக்கு இந்த ஒரு விசயத்தில் மட்டும் எப்பொழுதும் ஒரே குழப்பம் இந்த பெண்ணியவாதிகள் ஆண்களுக்கு எதிரானவர்களா பெண்களுக்கு எதிரானவர்களா? பெண்ணுக்கு இழிவு ஏற்பட்டுவிட்டது என்றதும் சிலிர்த்து எழும் பெண்ணியவாதிகள் என்கிற ஒரு குரூப், தங்களின் எழுத்து, பேச்சின் வாயிலாக 'ஏய் ஆணாதிக்க வர்க்கமே' என ஆரம்பித்து கிழி கிழி என கிழித்துத் தொங்கவிட்டுவிடுவார்கள்... இதை நன்றாக கூர்ந்துக் கவனித்தோம் என்றால் அங்கே பரிதாபமாகத் தொங்கிக் கொண்டிருப்பது சாட்சாத் பெண்மை?! பெண்ணுரிமையை பேணுகிறோம் என்று கூறிக் கொண்டே பெண்மையை இழிவுப்படுத்துவதில் பெண்ணியவாதிகளுக்கு நிகர் அவர்களேதான்.
ஆம் போற்றப்படவேண்டியவள் தூற்றப்படுகிறாள் ஆண்களாலும் ஒரு சில பெண்களாலும்... அவர்கள் பெண்ணுக்குரிய மதிப்பை, மாண்பை குறைத்துக்கொள்ள சிறிதும் அஞ்சுவதில்லை. சிலரின் போகப்பொருள் சிலரின் கேலிப் பொருள் சிலரின் பொழுதுபோக்கு இப்படி பெண்மையை எப்படியும் பயன்படுத்திக்கொள்ளலாம், உண்மையில் இதை தட்டிக் கேட்கவும் கண்டிக்கவும் யாருமில்லை. ஆண்கள் தான் தங்களுக்கு எதிரிகள் என்று எண்ணிக் கொண்டே சில பெண்கள் நடந்துக் கொள்ளும் விதம் சகபெண்களாலேயே சகித்துக்கொள்ள முடிவதில்லை.
தற்போது பரபரப்பான விசயமாக மாறிப் போன பீப் சாங் பிரச்சனையில் சம்பந்தப் பட்டவர்களின் மீது வழக்குகள், கைது நடவடிக்கை என வந்துக் கொண்டிருக்கும் செய்திகள் ஓகே ரகம் என்றால் இதை குறித்து எழுதப்பட்ட விமர்சனங்கள் ஐயகோ ரகம். நிர்மலா கொற்றவை, லீனா மணிமேகலை, குட்டி ரேவதி போன்றோரின் எழுத்துக்களை படிக்க நேர்ந்தது. அதிலும் கொற்றவை எழுதிய கட்டுரையை மூன்று பாராக்களுக்கு மேல் இயல்பாக படிக்க இயலவில்லை. முன்பு நண்பர் ஒருவர் எழுதிய கிராமத்து கதையில் சில வசைச் சொற்கள் இடம் பெற்றிருந்தன, கதையை வாசிக்கும் போதே, 'இது போன்ற வார்த்தைகளை நானும் வாசிக்க நேர்ந்துவிட்டது, ஏன் இந்த வார்த்தைகள் போடாமல் எழுத முடியாதா' என்றதற்கு கிராமத்து மனிதர்கள் சாதாரணமாக உபயோகிக்கும் வார்த்தைகளான இவை இருந்தால் தான் கதை அதன் இயல்பு குன்றாமல் இருக்கும் என்று அவர் சொன்ன சமாதானத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. கண்களாலும் மனதாலும் வாசித்து பெரிய பாவத்தை செய்ததைப் போல படபடப்பாகிவிட்டது.
ஒரு ஊருக்கு சாதாரணமாக சொல்லாக தெரிவது பிற ஊர்களுக்கு தவறு, குற்றமாக இருப்பது யதார்த்தம் என்றாலும் பாலியலை மட்டுப்படுத்தும் கேவலப்படுத்தும் வார்த்தைகளை பொதுவெளியில் இயங்குபவர்கள் தவிர்த்தல் நலம் என்பது எனது கருத்து. உடல் ரீதியில் பெண்ணை துன்புறுத்துவதற்கும் உடல் உறுப்பு வார்த்தைகளை பிரயோகிப்பதற்கும் உள்ள ஒரே வித்தியாசம் முன்னது உடலை வருத்துகிறது பின்னது மனதை வருத்துகிறது. இரண்டுக்குமான வலி என்பது பொது.
அதுபோன்ற ஒரு வலி, பதட்டம் கொற்றவை அவர்களின் கட்டுரையை படிக்கும் போது ஏற்பட்டது. எதை சிம்பு அனிருத் செய்ததாக குற்றம் சாட்டுகிறோமோ அதே வார்த்தையை பலமுறை பலவிதமாக அழுத்தம் திருத்தமாக சொல்வதுதான் எதிர்வினையா ? ஆண் சொன்ன போது தவறாக தெரிந்த ஒன்று பெண் சொன்னதும் சரி என்றாகிவிடுமா?
முற்போக்கு பெண்ணியவாதிகள்
சிம்பு அனிருத் செய்ததற்கு அவர்கள் வீட்டுப் பெண்களை தெருவுக்கு இழுத்து 'அந்த வார்த்தைக்கு அபிநயம் பிடித்து ஆடுவாயா' என்றெல்லாம் கேவலப்படுத்துவது கொஞ்சமும் நியாயம் இல்லை... எந்தவொரு வாக்குவாதத்தின் போதும் பிறர் வீட்டுப் பெண்களின் பத்தினித் தன்மையை விலை பேசுவது ஆண்களின் அதிகபட்ச தாக்குதலாக இருக்கும் அதுபோன்ற ஒன்றை பெண்ணியவாதிகளும் செய்வது வேதனை. ஒட்டுமொத்த தாக்குதலும் சிம்பு அனிருத் வீட்டு பெண்களை நோக்கி மட்டுமே வசதியாக அந்த வீட்டு ஆண்களை மறந்துவிட்டார். பெண்ணுக்கு சார்பாக பேசுகிறோம் என்ற போர்வையில் பெண்மையை விலைபேசுவது வக்கிரத்தின் உச்சம்?! இதுதானா பெண்ணியம்??!!
சிம்பு அனிருத் செய்ததற்கு அவர்கள் வீட்டுப் பெண்களை தெருவுக்கு இழுத்து 'அந்த வார்த்தைக்கு அபிநயம் பிடித்து ஆடுவாயா' என்றெல்லாம் கேவலப்படுத்துவது கொஞ்சமும் நியாயம் இல்லை... எந்தவொரு வாக்குவாதத்தின் போதும் பிறர் வீட்டுப் பெண்களின் பத்தினித் தன்மையை விலை பேசுவது ஆண்களின் அதிகபட்ச தாக்குதலாக இருக்கும் அதுபோன்ற ஒன்றை பெண்ணியவாதிகளும் செய்வது வேதனை. ஒட்டுமொத்த தாக்குதலும் சிம்பு அனிருத் வீட்டு பெண்களை நோக்கி மட்டுமே வசதியாக அந்த வீட்டு ஆண்களை மறந்துவிட்டார். பெண்ணுக்கு சார்பாக பேசுகிறோம் என்ற போர்வையில் பெண்மையை விலைபேசுவது வக்கிரத்தின் உச்சம்?! இதுதானா பெண்ணியம்??!!
ஆணோ பெண்ணோ சிந்தனையில் நாகரீகம் இருந்தால் தான் வார்த்தை பிரயோகமும் நாகரீகமாக இருக்கும் மாறாக சிந்தனையே வக்கிரமாக இருந்தால் அவர்களின் செயலும் அவ்வாறே... மனதில் இத்தனை அசிங்கத்தை வைத்துக் கொண்டிருக்கும் எவ்வாறு இவர்களால் பொதுவெளியில் பிறரை நேர்மையாக எதிர்க் கொள்ளமுடியும். சிம்பு அனிருத் இருவரின் வளர்ப்பு சரியில்லை, பண்பு இல்லை இப்படி ஏகப்பட்ட இல்லைகளை சொன்னவரின் எழுத்தில் 'எதுவுமே' இல்லை.
அந்த பாடலை பற்றிய இவரது விமர்சனம் அருவருப்பாக குமட்டலை ஏற்படுத்துகிறது... இங்கே லிங்க் கொடுப்பது இந்த பதிவின் உண்மைத் தன்மைக்காகத்தான், http://saavinudhadugal.blogspot.qa/2015/12/blog-post.html
பாதிக்கப்படும் பெண்களுக்கு பக்கபலமாக இருப்பது பெண்ணியவாதிகள் என்பது பலரின் எண்ணமாக இருந்தால் இனியாவது மாற்றிக் கொள்ளுங்கள். பெண்ணியவாதிகளையும் பிற பெண்களையும் ஒன்றாக இணைத்து இனிமேலும் தயவுசெய்து பேசாதீர்கள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடுவில் பிளவை ஏற்படுத்தவே பிறந்தவர்கள் அவர்கள். 'பெண் மேக்கப் செய்வது ஆணை உடலுறவுக்கு அழைப்பதற்காக' என்று பகிரங்கமாக பொது ஊடகத்தில் டாக்டர் ஷாலினியால் சொல்லமுடிகிறது என்றால் பெண்ணியவாதிகளுக்கு இந்த சமூகம் கொடுத்து வைத்திருக்கும் அந்தஸ்தை புரிந்துக் கொள்ளலாம். நாளையே ஒரு ஆண் இப்படி சொன்னால் இதே ஷாலினி 'என்ன ஒரு ஆணாதிக்க வக்கிரம் என்று அந்த ஆணை நோக்கி வாளையும் வீசக் கூடும்.
பெண்ணியவாதிகள், சமூகம் விதித்த கட்டுப்பாடுகளில் இருந்து வெளியே வருவதாக எண்ணிக் கொண்டு சமூகத்திற்கு எதிர் திசையில் போகிறார்கள், எதிர்த்து செய்கிறார்கள். ஆறறிவு உள்ள மனிதர்கள் என்பதை மறந்துவிட்டு சுய சிந்தனை அற்று வாய்க்கு வந்ததையும் நினைப்பதை எல்லாம் பேசுவதும் உடல் உறுப்புகளை இழிவு செய்வதும் சாதி மத ரீதியிலான தாக்குதலுமா கருத்து சுதந்திரம் ?
பெண்களை பற்றிய கட்டுரையில் சாதிக்கு என்ன வேலை, இவ்வாறுதான் சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் எதற்கோ எதையோ இழுத்து பத்தாததுக்கு பெரியாரையும் துணைக்கு அழைத்துக் கொள்வார்கள். அவர் ஏதோ அப்போதையை சூழலுக்கு தனக்கு சரி தவறு என்று பட்டதை எல்லாம் சொல்லி எழுதி வைத்துவிட்டு போய்விட்டார். அப்போதைய சூழலா இப்போதும் இருக்கிறது?
ரொம்ப வெளிப்படையாக பேசுவது தான் பெண்ணுரிமை என்ற கட்டமைப்பை இவர்களாக ஏற்படுத்திக் கொள்வார்கள் , இத்தகையவர்களுக்கு ஆதரவாக சில ஆண்கள் இருப்பார்கள், ஆனால் அவர்களுக்கு தெரியாது தங்களையும் சேர்த்தே தான் பெண்ணியவாதிகள் திட்டித் தீர்க்கிறார்கள் என்று. பெண்ணியவாதிகளின் கட்டுரைகள் கவிதைகளை பகிர்ந்தும் விருப்ப கருத்திட்டும் தான் ஆணாதிக்கவாதி அல்ல என்று காட்டிக் கொள்வதில் ஆண்களுக்கு அவ்வளவு விருப்பம். பெண்ணியவாதிகள் என்ன சொன்னாலும் வாவ் என்ன ஒரு தைரியமான எழுத்து என்று ஜால்ரா தட்டும் ஆண்கள் பாவம் ... பச்சை பச்சையா பெண் பேசினால் அது தைரியம்,வீரம் என்றால் தெருகுழாயடியில் சண்டைப் பிடிப்பவர்கள் அத்தனை பேருமே வீரம் செறிந்த போராளிகள்தான் (ஜான்சிராணி வேலுநாச்சியார் போன்றோர் மன்னிக்க)
பெண்ணியவாதிகள் பேசாமல் இருந்தாலே போதும், ஆண்களை சாடுவதாக கூறிக் கொண்டே அத்தனை எதிர் வினையும் பெண்களின் மேல் மட்டுமே காட்டும் இவர்கள் தான் முற்போக்கு பெண்ணியவாதிகள். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண் வர்க்கத்தை வார்த்தைகளால் வன்கொடுமை செய்து வக்கிரங்களை பரப்பும் இத்தகைய பெண்ணியவாதிகளுக்கு கட்டுப்பாடு ஒன்றும் கிடையாதா ?
பெண்கள் சாதாரணமாக பேசவும் எழுதவும் கூசும் வார்த்தைகளை சுலபமாக கையாளத் தெரிவதில் என்ன பெருமை வேண்டிக் கிடக்கு... ... ஒரு ஆண் எப்படி இருக்கவேண்டும் என பாடம் எடுத்தவர்கள் ஒரு பெண் எப்படி இருக்கவேண்டும் என்று தெரியாமலா இருப்பார்கள்... ஆனால் தான் தனித்து தெரியவேண்டும் என்பதன் வெளிப்பாடு தான் அந்த வீட்டுக்கு பெண்களை வார்த்தையால் வம்புக்கு இழுத்தது...
இப்படி பட்ட முற்போக்கு பெண்ணியம் பேசத்தெரியாத பெண்கள் நிறைய நிறைய எழுதவேண்டும் என்பதே இந்த பதிவின் மூலம் எனது சிறு வேண்டுகோள்...அப்போதுதான் பெண் என்றால் யார் அவள் எழுத்து எவ்வளவு நாகரிகமானது என்பதை உலகம் தெரிந்துக் கொள்ளும் மாறாக முற்போக்கு பெண்ணியவாதிகள் சூழ் இணையம் மிக ஆபத்தானது... பெண் பற்றிய இவர்களது கருத்துக்களை வைத்து பெண் என்றால் இவர்களைப் போன்றோர் தான் என்ற தவறான பிம்பத்தை உடைத்தாக வேண்டும்... ஆண் என்றால் பெண் மோகம் கொண்டு அலைபவன் மட்டும்தான் என்ற கருத்தியலையும் பெண் தான் உடைக்கவேண்டும். இன்னும் எத்தனை காலத்திற்கு தான் மனு சாஸ்திரத்தையும் பெரியார் சொன்னதையும் கட்டி அழுவார்களோ தெரியவில்லை.
பிறரைவிட பொதுவெளியில் இயங்கும் ஆண் பெண் இருவருக்குமே பொறுப்புகள் அதிகம் இருக்கிறது. தகுந்த காரணக் காரியம் இல்லாமல் போகிறபோக்கில் ஒரு கருத்தை தெளித்துவிட்டு போய்விட முடியாது... சுற்றி சுழலும் உலகத்திற்கு பதில் சொல்லியாக வேண்டும். மாறாக என் எழுத்து என் உரிமை என்று உளறிக் கொண்டிருந்தால் பிறரால் தவிர்க்கப் படுவார்கள் அல்லது கேலிக்கு ஆளாகி விரைவில் காணாமல் போய்விடுவார்கள்.
பெண்களை மேலும் மேலும் இழிவுப்படுத்தும் முற்போக்கு பெண்ணியவாதிகளுக்கு எனது வன்மையான கண்டனங்கள் !!!
pic - google