சனி, ஏப்ரல் 8

போலி உறவுகளின் ஈர்ப்பு...!? தாம்பத்தியம் - பாகம் 33






couple showing fake love in relationship



"இந்த ஆம்பளைங்க  ஏன்  இப்படி இருக்காங்க...????" 

ரிங் ஆன செல்போனை ஆன் செய்து ஹலோ சொன்ன அடுத்த செகண்ட் இந்த கேள்வி காதை அறைந்தது? ஆறு மாதத்திற்கு முன்பு  ஆலோசனை தேவை என்று இமெயில் மூலம் தொடர்பு கொண்டவர் போன் நம்பர் கேட்கவே  கொடுத்தேன். அந்த பெண்தான் எடுத்ததுமே ஒட்டு மொத்த ஆண்களையும் சாடும்  கேள்வியை என்னிடம் கேட்டார். அடுத்ததாக '"என் கணவரை  டைவர்ஸ் பண்ணப் போறேன், வக்கீலை பார்க்குறதுக்கு முன்னாடி உங்ககிட்ட போனில் ஒரு முறை பேசினா என்னனு தோணிச்சு" என்றார். 

வழக்கம் போல நானும், ஆலோசனைக்கு வருபவர்களை முழுதாக பேசவிடுவதைப்  போன்று இவரையும், 'சரி எல்லாம் சொல்லி முடியுங்கள்' என்றேன். ஒரு  மணி  நேரமாக அவர் சொன்னதின் மொத்தப் பொருளே இரண்டே வரிகள் தான். கணவர் சலனப்  புத்திக்காரர், வேறு தொடர்பு ஏற்பட்டு இருக்கும் என்று சந்தேகம். "எதை வைத்து சொல்கிறீர்கள்" என்றேன், "முன்பை விட என்மீது மிகுந்த அன்பாக இருக்கிறார். கேட்ட பொருளை உடனே வாங்கி கொடுத்து விடுகிறார். வேறு எங்கோ தவறு நடக்கவே தான் உறுத்தல் ஏற்பட்டு என்னிடம் அன்பைக் கொட்டுகிறார் போல" என்று தனது துப்பறியும் புத்தியை மெச்சிக் கொண்டார்.  திடீரெனப்  பெருகும் அன்புக்கு பின்னால் இப்படியும் காரணங்கள் இருக்கலாம்  என்பதை இந்த சமூகம் தெரிந்துக் கொள்ளவேண்டும்!

சில பல ஆலோசனைகளைச்  சொல்லி போனை வைத்தேன். அப்போதைய விவாகரத்து முடிவை சிறிது காலம் தள்ளிப்  போடும் அளவிற்கு மனதை மாற்றிவிட்டதாக எனக்கு தோன்றியது. அதன் பிறகு ஆறு மாதமாக தொடர்புக்  கொள்ளவில்லை. கடந்த  வாரம் அவராக தொடர்புக் கொண்டு சொன்னவற்றைச்  சத்தியமாக என்னால் நம்பவே  முடியவில்லை.

பெண் எடுத்த வித்தியாசமான ஆயுதம் 

"An idle mind is the devil's workshop"   என்று சொல்வார்கள்.   அந்த பெண் பலவிதமாக சிந்தித்து முடிவாக தனது கணவனின் நடவடிக்கையை வேவுப்  பார்க்க ஆரம்பித்துவிட்டார்.  சந்தேகம் என்பது வந்துவிட்டால் அதன் பிறகு அமைதி என்பது எது?!  ஆனால் இவர் கொஞ்சம் வித்தியாசமாக கணவரின் மொபைல் ஐ ஆராய்ச்சிச் செய்யவில்லை அதற்கு பதிலாக புதிதாக fake ஐடி ஒன்றை பேஸ்புக்கில் ஓபன் செய்து  குட் மார்னிங், குட் நைட் சொல்வது, கவிதை எழுத வரும் என்பதால் காதல் கவிதைகளாக தினம் இரண்டு என்று பகிர்ந்திருக்கிறார். பிறகு  கணவரின் ப்ரெண்ட்  லிஸ்டில் இருக்கும் இரண்டு மூன்று நபருக்கு request அனுப்பி இணைத்திருக்கிறார். அப்புறம் என்ன people you may know  இவரது கணவரையும் காட்டி இருக்கிறது. இவருக்கு காட்டியதை அவருக்கும் காட்டி இருக்கும் அல்லவா, ஒரு சுபயோக சுபதினத்தில் தானாக வந்து விழுந்திருக்கிறார் request கொடுத்து...!!!

அதன் பிறகுதான் இவரது வாழ்கையில் மிகப் பெரிய டுவிஸ்ட் ?! திரைப்படங்களில் நடக்கும் சம்பவங்கள் கற்பனை  என்று சொல்லப்பட்டாலும் உண்மை   கொஞ்சமாவது இருக்கும்.  தற்போதைய நமது சமூக சூழல்களில் திரைப்படத்தையும் விஞ்சக்கூடிய பல சம்பவங்கள் நமது குடும்பங்களில் நடந்தேறி வருகிறது என்பது இந்த பெண்மணி தனது கதையைச்  சொல்லும் போது புரிந்தது. 

ஆண் எவ்வளவு தான் தனது மனைவியை நேசித்தாலும் தெரிந்தோ தெரியாமலோ வெளியில் புதிதாக ஏற்படும் எதிர்பாலின ஈர்ப்பில் விழுந்துவிடுகிறான், தனது மனசாட்சியிடம் நட்பு தானே  என்று சமாளித்தும் விடுவான்...அதிலும் இன்றைய ஆண் பெண் இருவரும் தேடித்தேடி  தைரியமாகவே   நட்பை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். வாழ்க்கைச் சூழலின் மன அழுத்தம் இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. புதிய உறவை ஆரம்பிப்பது ஆணாக இருந்தாலும் அதை இன்னும் நெருக்கமாக்கி விடுவது பெண். எல்லாவற்றையும் மனைவியிடம் பகிர்ந்துக் கொள்ள  முடியாத ஆண்கள் அடுத்த பெண்ணின் சிநேகிதத்தைத்  தேடுகிறார்கள்... கிடைத்ததும் அதில் தொலைந்தும் விடுகிறார்கள்!

ஆறுதலாக பேச அக்கறையாக விசாரிக்க, திரைப்படம் சமூகம் அரசியல் கதை கவிதை பற்றி எல்லாம் விவாதிக்க, மற்றொரு உயிர் ஒன்று தேவைப்படுகிறது அது எதிர்பாலினமாக இருந்தால் ஈர்ப்பு அதிகமாகிறது, ஆணிற்கு ஒரு பெண்ணும் பெண்ணிற்கு ஒரு ஆணும்!! ஏன் இதையெல்லாம் தனது துணையிடம் பேசலாமே என கேட்கலாம்.  'இவளுக்கு என்ன தெரியும்' என்ற கணவனின் மெத்தனமும், 'ஆமா நாம பேசுறதை எங்க காதுக் கொடுத்து கேட்கப்போறாரு' என்ற பெண்ணின் சலிப்பும் இருவரையும் நெருக்கமாக பேச விடுவதில்லை. தவிரவும் வீடு என்றால் குழந்தைகள் வளர்ப்பு, கல்வி,  EMI உட்பட்ட  பொருளாதார சிக்கல்கள், சொந்தங்கள் சார்ந்த உறவு பேணுதல் போன்றவற்றில் உழன்றுக் கொண்டிருக்கும் தம்பதிகள் தங்களுக்கான நேரம் என்ற ஒன்றை ஒதுக்குவதே இல்லை. நேரம் கிடைக்க மாட்டேங்குது என்று நேரத்தின் மேல் தவறைப் போட்டுவிட்டுத்  தப்பித்து விடுகிறார்கள்.  

அதேசமயம் வெளியே ஏற்படும்  நட்புடன் பேச வேண்டும் என்பதற்காக நேரத்தை உருவாக்கிக் கொள்பவர்களும் இவர்கள் தான்.  எங்கிருந்தோ முகம் தெரியாத ஒரு நட்பு அனுப்பும்  சின்ன டெக்ஸ்ட் மெசேஜ்  கொடுக்கும் மகிழ்ச்சி ,உற்சாகம், சிலிர்க்க வைக்கும்  'கிக்'  உடனிருக்கும் துணையிடம் ஏன் ஏற்படுவதில்லை !   மனித மூளையின் ஒரு ஓரம் மட்டும் தாறுமாறாக  டிசைன் செய்யப்பட்டிருக்கிறதோ என்னவோ ?!!! 

ஹார்மோன்களின் முக்கியத்துவம் 

நமது மூளையில் இருக்கிற 'ஹைப்போதாலமஸ்' உடலின் உணர்ச்சிகளை தூண்டவும் கட்டுப்படுத்தவும் கூடிய முக்கியப்  பங்கு வகிக்கிறது. சாப்பிடத்  தூண்டுவது,  உடல் சூட்டினை  சமநிலைப்  படுத்துவது, நினைவாற்றல், தூக்கம், கோபம், செக்ஸ் குறிப்பாக சொல்லணும்னா  ஹார்மோன்களை ஆட்டிவைக்கிறதே இவர் தான்!!  எதிர்பாலினத்தவரிடம் ஈர்க்கப்படும்போது டோபோமைன் எனப்படும் மகிழ்ச்சி ஹார்மோன் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இது ஹைபோதாலமஸில் மிகச் சிறப்பு என்று மூளையில் பதிவுச்  செய்யப்பட்டு இருப்பதால்  'எதிர்பாலின ஈர்ப்பு', போதையை போன்றதொரு  மெக்கானிஸத்திற்குள் மனிதனைத் தள்ளி விடுகிறது.  .

ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரியான ஹார்மோன்கள் அதாவது ஈஸ்ட்ரோஜன், டெஸ்டோஸ்டிரோன், ப்ரோஜெஸ்டிரோன் இருந்தாலும் உறுப்புகள் உள்ளிட்ட வேறுபாடுகள் அவற்றின் இயங்கங்களை பொறுத்து மாறுபடுகின்றன. பாலியல் ஈர்ப்பு சம்பந்தப்பட்ட ஹார்மோன்களான     டெஸ்டோஸ்டிரோன், ஈஸ்ட்ரோஜன் போன்றவற்றின்  உற்பத்தியை சில சமயம் ஹைபோதாலமஸ் தொந்தரவு செய்துவிடுவதால் மனிதனின் நடத்தையில் மாறுபாடுகள் ஏற்படலாம். 

உடல் ரீதியிலான உறவு ஏற்படவில்லை என்றாலும் அதீத ஈர்ப்பு இருவருக்கிடையில் இருப்பது சாத்தியமா என்றால் ஆம் என்று தான் சொல்லவேண்டும்.  அந்த நபருடன் பேசும்போது மட்டுமே ஏற்படும் மகிழ்ச்சியான மனநிலை தொடர்ந்து அதே நபருடன் அதிக நேரத்தைச்  செலவிடச் சொல்கிறது. ஆனால் அறிவியல் பல சொன்னாலும் இன்றைய மனித மனங்களை இது இப்படிதான் என்று குறிப்பிட்டுச் சொல்வது அறிவியலாலும் முடியாது போல. 

எண்ணங்களில் மாறுபாடு   

தற்போது பலரும் இவ்வாறு சொல்லத் தொடங்கிவிட்டார்கள் , (கொரானாவிற்கு பிறகு)  "இருப்பது ஒரே வாழ்க்கை, காலையில் எழுந்தா தான் நாம உயிரோட இருக்கோம்ன்றதே தெரியுது ...யாருக்கு எப்ப, என்ன ஆகும் என்றே தெரியாத நெலம... இதுல மனசாட்சியாவது மண்ணாங்கட்டியாவது...பாவமாவது புண்ணியமாவது... இருக்கிறவரை அப்படியே ஜாலியா நமக்கு புடிச்ச மாதிரி வாழ்ந்துட்டு போய்டணும் " இதை  இன்றையத்  தத்துவம் என்று சொல்வதை விட ஒரு கொள்கையாகவே எண்ணத் தொடங்கிவிட்டார்கள்!!

இதை  சொல்வதற்கும் கேட்பதற்கும் நன்றாக இருக்கும், ஆனால் இங்கே நிஜம்  வேறு !  ஒரு தம்பதியினர் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதை மட்டுமே சமூகம்/உறவுகள்  பார்க்கும் ஆனால் தனது பெற்றோர் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதை அவர்களின் குழந்தைகள் கண்டிப்பாகப் பார்க்கும்.  பெற்றோரை பார்த்தே ஒரு குழந்தை பாடம் படிக்கிறது. யாருக்காக இல்லை என்றாலும் தனது குழந்தைக்காக ஒவ்வொருவரும் சரியாக வாழ்ந்துதான் ஆக வேண்டும்.  பிறரை துன்புறுத்தக் கூடிய, கொடுமை விளைவிக்கக் கூடிய ஒரு மகனை/மகளை நாம் இந்த சமூகத்துக்கு கொடுத்துவிட்டுச் செல்கிறோமா அல்லது நல்ல பண்பு, ஒழுக்கம்,  மனிதத்தன்மை கொண்டவர்களையா என்பதைப்பற்றி  பெற்றோர்கள் யோசித்தாக வேண்டும். 

Fake மனிதர்களின்  அதீத அன்பு  

ஆலோசனைக்கு வந்த பெண்ணும் அவரது கணவரும் chatting செய்ய ஆரம்பித்து அந்தரங்கமாக  பேசும் அளவிற்கு தொடர்பு நெருங்கமாகி இருக்கிறது...??!!! போட்டோ கேட்டதற்கு 'என்னை நம்பலைனாப்  பேச வேண்டாம். என் முகத்தை பார்த்து பழகினால் அது உண்மையாக இருக்காது' அப்படி இப்படி என்று செண்டிமெண்டாக தாக்கி இருக்கிறார் இந்த பெண்! 

"மன ஆறுதலுக்காக உங்ககிட்ட பேசுறேன் பேசப்  பிடிக்கலைனா விட்டுடுங்க, என்று ஒரு போடு போட்டேன், அதோட ஆள் மறுபடி அந்த பேச்சை எடுப்பதே இல்லை"  

"உன் குரலை ஒரு முறை கேட்கணும், ஆம்பளப்  பசங்க கூட பொண்ணு  மாதிரி chatting பண்ணி ஏமாத்துவாங்க அதுக்காக கேட்கிறேன்" என்று கேட்டார், அதுக்காக 'ஒரு முறை தான் சரியா' என்று கண்டிசன் போட்டு ஒரு இரண்டு நிமிஷம் வாய்ஸ் சாட்டில் கொஞ்சம் லேசா ஹஸ்கி வாய்ஸ்ல பேச்சை மாத்திப் பேசி அனுப்பினேன். அவரால கண்டுப்பிடிக்க கூட முடியல, தேன் மாதிரி இருக்குன்னு   ஒரே வழிசல் வேற.  அப்படி பேசி அனுப்பும் போது எனக்கு எவ்ளோ த்ரில் ஆ இருந்துச்சு தெரியுமா ? ஒரே வெட்கமா போச்சு மேடம்" 

என்று என்னிடம் சொல்லிச் சிரிக்கிறார் விவாகரத்து பண்ணப்போகிறேன் என்ற முடிவில் இருந்த  அந்த பெண்.

கவிதை வழியாக  காதலை தினமும் இவர் கொட்ட அதற்கு அவர்  இதயம் போட்டு  குதூகலிக்க என இருப்புறமும் உற்சாகம் கரைப்  புரண்டு ஓடியிருக்கிறது. வீட்டில் இருக்கும் போது கணவர் தனது மனைவிக்கு தெரியாமல் ஆனால் மனைவிக்கே(?) 'குட் மார்னிங் டியர் என்ன பண்ற' என்று மெசெஜ் அனுப்ப, மனைவியும் 'வீட்டுக்காரர் இருக்கிறார், அவர் போனதும் மெசேஜ் பண்றேன் டார்லிங்' என்று பதில் மெசேஜில் சிணுங்க??!! 

பருவ வயதில் ஏற்படும் முதல் காதல் அனுபவத்தை விவரிப்பதைப் போல உற்சாகமாக அந்த பெண் பேசப் பேச எனக்கு பைத்தியம் பிடிக்காதக்  குறை . இது எப்படி சாத்தியம் ?!  

"ஏங்க இப்படி பண்றிங்க, உண்மை தெரிஞ்சா என்னாகும்?"

"ஒன்னும் ஆகாது மேடம். உண்மையை எதுக்கு சொல்லணும் கடைசிவரை தெரியாமப்  பார்த்துப்பேன்... அவர் இப்படி என்கிட்ட பேசுறதால மத்த பொண்ணுங்க கூட  பேசவோப்  பழகவோ  வாய்ப்பே இல்லை, அந்த அளவிற்கு அவரை நான் மயக்கி வச்சிருக்கேன்... FB ல கவிதை வரலைனா தவிச்சுப் போய்டுவார். இதனால இணையத்தில  மத்தவங்க எழுதிய  கவிதையை லைட் ஆ மாத்தி  போஸ்ட் பண்ணிவிடுவேன்... ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன்... வீட்டுவேலைகளை ஜாலியாப்  பண்றேன், குழந்தைகளை சந்தோசமாப்  பாத்துக்குறேன். வீட்டில என் கண் முன்னாடி இருக்காரு,  வெளில போனாலும் என்கிட்டே தான் மெசேஜ் பண்ணிப்பேசிட்டு இருக்காரு. 24 மணி நேரமும் ஒன்னாவே இருக்கோம். இதை விட ஒரு பெண்ணுக்கு வேற என்ன வேணும்?!!!" 

"என்ன இருந்தாலும் இது தப்பில்லையா" என அப்பாவியாக  நான் கேட்க,  

"என்னங்க தப்பு என் வீட்டுக்காரரைத் தானே லவ் பண்றேன். அவரும் என்னை தானே லவ் பண்றாரு" 

உங்களைத்  தான் என்றாலும் அவரது கற்பனையில் வேறு ஒரு பெண் தானே இருப்பார் என்று சொல்லத் தோன்றியது,  ஆனால் சொல்லவில்லை. அவரது சந்தோசத்தை எனது லாஜிக் கேள்வியால் சிதைக்க விரும்பவில்லை. சில சுவாரசியங்களை அப்படியே விட்டுவிடுவது தான் நல்லது. 

"நல்லா இருக்குங்க... வாழ்த்துகள்" என்று வாழ்த்திப்  போனை வைத்துவிட்டேன்.

இந்த மனித மனம் தான் எத்தனை விசித்திரமானது...!!! ரத்தமும் சதையுமாய் உடன் இருக்கும் போது வராத/ஏற்படாத காதல் வெற்று எழுத்துக்களைப் பார்த்து ஏற்படுகிறது என்றால் நமது ஆழ்மனதிற்கு எதுதான் தேவை... எதை நோக்கி அது காத்திருக்கிறது... எதற்காக ஏங்குகிறது...?!!! 

தொடர்ந்துப்  பேசுகிறேன்...


உங்களின் 'மனதோடு மட்டும்'

கௌசல்யா. 

திங்கள், மார்ச் 8

ஜமீலா - பெண்மை ஒரு விலைப்பொருள்...??!

மனதைப் பாதித்ததை எழுதவேண்டும்  என முடிவு செய்து விட்டேன் ஆனால் எப்படி ஆரம்பிப்பது என்ற குழப்பத்தில் முதல் வரியோடு மல்லுக்கட்டிக் கொண்டு இருக்கிறேன்,அதனால் நீங்களும் 'ஆரம்பத்தை' அசட்டை செய்துவிட்டு தொடர்ந்துப்  படிங்க. இந்த எழுத்தும் வாழ்க்கையும் ஒன்று , நமது எண்ணம் போல் வாழ்க்கை அமைவது இல்லை, சிந்திப்பதை எல்லாம் அப்படியே எழுத்தில் கொண்டு வர முடிவதும் இல்லை. ஏதோ வாழ்கிறோம், வெளியே நிறைவாய் வாழ்வதாய்  ஒரு போர்வையை சுற்றிக்கொண்டு வித்தை காட்டிக்கொண்டிருக்கிறோம். சுற்றி இருப்பவர்கள் நம்மை ரசிக்கிறார்களா அல்லது கேலிச்  செய்து  நகைக்கிறார்களா என்பதும் தெரியாது. ஆனாலும் அடுத்த நொடி என்ன நடக்கும் என்றே தெரியாத இந்த வாழ்வு ஆகச் சிறந்த ஒரு சுவாரசியம்.

சமீபத்தில் என்னை மிக யோசிக்க வைத்த ஒரு பெண்ணின்   உணர்வுகளை வரிகளாக்கி பார்த்துவிடவேண்டும் என்ற எனது  விருப்பமே இந்த பதிவு. 

* * *


ஜமீலா எனது பெயர் 

அழகானவள் என்ற அர்த்தம் வருவதால் ஜமீலா என்ற பெயர் எனக்கு மிக பிடிக்கும். அதனால் ஜமீலா என்றே அழையுங்கள். 

சுயசரிதை எழுதவேண்டும் என எனக்கு ஒரு ஆசை...மற்றவர்கள் எழுதும் சுயசரிதையில் மனிதர்களின் மணம்(!) வீசும் ,எங்களது  சுயசரிதையின் எந்த பக்கத்தை திறந்தாலும் சமூகத்தின் நாற்றம் மூக்கைத்  துளைக்கும்.
ஆம் ஒவ்வொரு ஜமீலாவும் சுயசரிதை எழுதவேண்டும், எழுதினால் அங்கே பல பெரிய மனிதர்களின் கருப்புப்  பக்கங்கள், பச்சை வண்ணம் உடுத்திப்  பல்லைக்  காட்டிக்  கொண்டிருக்கும்...! ஏறக்குறைய அத்தனை ஜமீலாக்களின் கதையும் ஒரே மாதிரி தான் இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவை. என்னவொன்று  எங்களின் தேவை எது என்பதை வருபவர்கள்  முடிவு செய்கிறார்கள். இப்போது புரிந்திருக்குமே எனது தொழில் எது என்பது !

'பெண்' இந்த ஒரு வார்த்தைக்குத்  தான் எத்தனை வசீகரம் ! பெண்ணாய்  பிறக்க மாதவம் செய்துவிட வேண்டுமம்மா !  ஆனால்  ஒரு பெண் பெண்ணாக வாழ என்ன தவம் செய்யணும் !? பெண் என்றால் அவளிடம்  நால்வகை குணம் இருக்கணுமாம். நாலுமே இல்லாதவ  பெண் இல்லை என்றால் நானும் பெண் இல்லை ?! பூக்களைச்  சுற்றிவரும் வண்டுகள் தன் வழி மறப்பதில்லை, அது போல் பெண்ணைச்  சுற்றும் ஆண்களும் நிறுத்தப்  போவதில்லை. அப்படி நிறுத்திவிட்டால் என்னைப்  போன்றவர்களின் நிலை ! நானும் வாழ்ந்தாக வேண்டும் , பெண்மையை விலைப்  பேசி விற்கிறேன் என்கிறார்கள், என் வேலை எது என்பது என் முடிவு என் உரிமை தானே. அவர்களுக்கு என்ன தெரியும் எனக்குள்ளே கொதித்துக் கொண்டிருக்கும் நெருப்பைப்  பற்றி. அதனால் தான்  வந்தவனின் தணல் சுடுவதில்லை, தணித்து விடுகிறேன்...தணிந்தும் விடுகிறது...நெருப்பை நெருப்பால்...!!

சில நொடியில் களையப்படும், கலைக்கப்படும்  என தெரிந்தேப்  பார்த்துப்  பார்த்து அலங்கரிப்பேன்...சில நொடிகளாவது எனக்காய் செலவிடுவதில் எனக்கு கொள்ளை ஆசை...விற்பனை பொருளாச்சே, கறை(?) படிந்து இருந்தால் பார்க்க நன்றாகவா இருக்கும்...!?

வந்தவனுக்காகச்  சிரித்து, அவனுக்காக அழுது அவன் சொல்லும் காதல் வசனங்களுக்கு பொய்யாய் மயங்கி, பொய்யாய் கிறங்கி , பொய்யாய் உளறி ஒரு கட்டத்தில் உண்மையாகக்  காதலித்தும் விடுகிறேன்! காதலுடன் காலில் விழுந்து 'கரைத் தேற்ற வந்த கிருஷ்ணபகவான் நீ' என்றதும், கீதையை கையில் கொடுத்துவிட்டுச் சென்று விடுகிறான்  !!

அவ்வப்போது காதல் வந்துப்  போகிறது...எது காதல் என்ற குழப்பம் மட்டும் இன்னும் தீர்ந்தப்பாடில்லை....காதலைக் கரைக்கும் இடமும், காமத்தில் கரையும் இடமும் ஒன்றுப்  போலவேத் தெரிகிறது...ஏமாற்றங்கள் வலிகள் பழகிப் போயின...மரத்துப்போன மனதும் உடலும் சாய ஒரு தோளைத்   தேடித் தேடிச்  சோர்ந்துப் போகிறது...!!

என் குரலும் பேச்சும் கவிதை மாதிரி இருக்குனு வந்தவங்கச்  சொல்வாங்க...?! கவிதை எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணினது கூட இல்லை. என் வாழ்க்கை பலர் எழுதிய ஒரு கவிதை...பல வண்ணங்கள் குழைத்து பலரால் தீட்டப்பட்ட ஓவியம்..!! எனது  வாழ்க்கையை எழுதிப்  பார்க்கணும்னு தோணுது. இதை கவிதையா பார்க்காதிங்க, ஆமாம் இது கவிதை அல்ல என் வாழ்க்கை !!

அஞ்சு பத்துக்கு அலைந்தேன் 
சில காலம் 
ஒதுக்குப்புற முட்புதரில் முள்ளோடு முள்ளாய்
என்னைக்  கிடத்தியிருக்கிறேன் 
பல காலம்...


சிறிது ஒதுக்கிய மாராப்பு
சற்றுக்  கோணலான புன்னகை 
ஒட்டவைத்த முகத்தோடு
நெடுஞ்சாலை மரத்தோடு 
மரமாய் சில நாட்கள்...

செத்துப்போன குடிகாரக் கணவன் 
கொடுத்தப்  பரிசென உருக்குலைந்த உடல் 
ஏற்ற வேலை இதுவென ஆசி கூறி 
வாழ(?) வழிகாட்டினர்
ஊரில் உள்ள நல்லவர்கள் !
                                                 
குழந்தைகள் வீட்டில் பசியாற
ஊர் பசியாற்ற வாழ்த்தி
அனுப்பியது விதியும் !

ஆரம்பத்தில்
சரியாக படியாத வியாபாரம் 
இப்போது வெகு ஜோர்  
நினைவாய் சொல்லிவிடுவேன்
'அவசியம் அடுத்தமுறை வா
சிறிது குறைத்துக் கொள்கிறேன்
பணத்தை!' 
                     
தேர்ந்த வியாபாரி ஆனேன்
தேடிப்  போகவில்லை
தேடி வரவைக்கிறேன் வரவை...!?

சத்தியங்கள் பல மரணித்தலும்
சத்தியங்கள் சில உயிர்பித்தலும்
ஒரு சேர நிகழும் எனதருகில்...
இரண்டிலும் சாட்சி என்னவோ
பெண்தான் !

பணம் புகழ் திமிர் கர்வம் 
இதோ 
மண்டியிட்டுக்  கிடக்கின்றன
என் காலடியில்
சில உளறல்களின் வடிவில்...

சற்று முன்வரை ராமனாம்
சலிக்காமல் சொல்கிறார்கள்...
ஒரே விதமாய் வேடந்தரிக்க
எப்படி முடிகிறது 
ஆண்கள் எல்லோராலும் !?

ஒரே வசனம்
தவறாமல் ஒப்பித்தார்கள்
'மனைவி மனைவியாய்
நடந்துக் கொள்ள மாட்டாள்'

'ஒருநாளாவது நல்ல கணவனாய்
நடந்தது உண்டா நீ ?!'
கேட்க எழும் நாவை
அடக்கிக் கொள்வேன்
எனக்கு வியாபாரம் முக்கியம்  !

ஏனோ
பாறை வெடிப்புகளில்
பதுங்கிக்கொள்கிறது 
பலரது ஆண்மை!

ஏனோ
நால்வகை குணம் விற்று
விற்பனையாகிறது 
சிலரது பெண்மை !

இன்றும் 
எதிர்ப்பார்த்து 
வாசலில் காத்திருக்கிறேன் - அலங்கார
வசீகரங்களுடன்...
வசீகரன் தேவை இல்லை எனக்கு  
வசதி இருக்கிறவன் போதும் !


**************
விலைப்பொருளாகிப் போன பெண்மை  

பெண்களுக்கு என்றே பிரதானமாக உயர்வாக சொல்லப்படும் பெண்மை ஒரு சிலருக்கு மட்டும்  கடைத்  தெருவில் கூவிக்  கூவி விற்கப்படும் விற்பனை பொருளாக  மாறிவிடுகிறது...! காரணங்களை தேடினால் ஆதி மூலக்கதைகள் பலவற்றைச்  சொல்லி சமாதானம் செய்வார்கள்... ஆணை திருப்தி படுத்தவென்றேப்  படைக்கப்பட்ட பெண்கள் இருக்கும்போது பெண்ணை திருப்திப்படுத்த ஆண்கள் ஏன் இருக்க கூடாது என உரிமை பேசும் காலம் இது ...அவ்வாறும்(!) இருக்கிறார்கள் என்று தெரிய வரும் போது ஓரளவு சமாதானம் ஆகிவிட்டது மனது...!!  ஆணுக்கு பெண் இளைப்பில்லைக்  காண் !!

முன்பு இலை மறைக்  காயாக இருந்த சமூக அவலங்கள் இன்று வண்ண ஆடை உடுத்தி பூனை நடை நடக்கின்றன...பெண்களுக்கே  பெண்மையின்  அர்த்தம் புரியவில்லை. ஆதிக்க அடிமைத்தனத்தில் இருந்து எழுந்துவிட்டதாக எண்ணிக்கொண்டு ஆடை, ஆபரணங்கள், ஆடம்பர மோகம் இவற்றிற்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் பெண்கள் ஒரு பக்கம்...தன்னைத்  தானே விற்றுக்கொண்டு  பிழைப்பு நடத்தும் பெண்கள் மற்றொரு  பக்கம்... இதில் எங்கே இருக்கிறது பெண்மை...?!!

பாலியல் தொழிலில் ஈடுபட வறுமை ஒரு காரணம் ஆனால் இது மட்டுமே காரணம் அல்ல. சமூகத்தின் பாலியல் வறட்சி இவர்களை போன்றோர்களை உருவாக்கிவிடுகிறது . விபசாரம் ஒரு பாவம் என்று யார் சொன்னாலும் அது நடந்துக் கொண்டுதானே இருக்கிறது.  நாட்டில் பல பாவங்கள் அதிகரிக்காமல் போவதற்கு ஜமீலா  போன்றோர் ஒரு பெரிய காரணம் .

பாலியல் பற்றிய புரிதல் படித்தவர்களிடத்தில் கூட சரியாக இல்லை. உடலின் தேவைப் பூர்த்தியானால் அனைத்திலும் முழுமைப்  பெற்றுவிட்டதான ஒரு மாயைக்குள்  மனிதர்கள் சுலபமாக விழுந்து விடுகிறார்கள். ஆனால் உடலின் தேவை அன்றி மனதும் முழுமைப்  பெறவேண்டும். அடக்கி வைக்கப்படும் எது ஒன்றும் சிறு வாய்ப்புக்  கிடைத்தாலும் அதிக ஆக்ரோஷமாக வெளிப்படுவதைப்  போன்றது தான் காமத்தை அடக்கி வைப்பதும் !! மேலும் காமத்தை முறையாக அணுகவும் அறியவும் வேண்டும், மாறாக அச்சத்துடன் ஒரு குற்ற உணர்ச்சியுடன் அறிய முற்படும்போது, மனஅழுத்தம்  தான் அதிகரிக்கும். அறிதலும் புரிதலும் தெளிவும் இல்லாமல் தான் மனித புத்தி வக்கிரமாக காமத்தைப் பார்க்கிறது... அணுகுகிறது...!!!   

உடல் ஒரு இயந்திரம் என்றால் அதை இயக்கும்  கருவி மனது, மனதை வசீகரித்து, தூண்டி,  திருப்தி செய்துக் கொண்டே உடலை அணுகும் போது அங்கே காமம் அதிகரித்து அதிர்வுகள் ஏற்பட்டு, உச்சம் அடையும்போது மனம் உடல் இரண்டும் அமைதி அடையும்.

பாலியல் இச்சைகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது...! பாலுறவு மானுடத்தின் அடிப்படைத்  தேவை, அவை நிறைவானவையாக இல்லாதப்  போது நிறைவு எங்கே என்ற தேடல் சகஜம் தானே ?! தேடல் ஒன்றுடன் முடிவது இல்லை என்பது இயற்கை. தேவையை தீர்க்கும் அவசியம் ஏற்பட்டால் வடிகால்களைத்  தேடுகிறார்கள், சமயங்களில் வடிகாலாக மாறியும் விடுகிறார்கள். ஒன்றைக்  கொடுத்து ஒன்றைப்  பெறுவதுதானே வியாபாரம், வியாபாரம் போலாகிப்  போனது இன்றைய வாழ்க்கை !!

பெண்களால் முடியாது

ஆண்களைப்  போல பெண்கள் பாலியல் குறித்த விசயங்களைப்   பேசக்கூட முடியாது. நிறைவான பாலுறவு என்பது ஒரு அடிப்படை மானுடத்  தேவை. கண்டிப்பாக பெண்களுக்கும் பாலியல் இச்சைகள் உண்டு, காமத்தை நன்கு புரிந்தவள் அதை உணர்ந்து, சூழலுக்கு ஏற்பத்  தன்னைக்  காத்து அச்சூழலை  இலகுவாகக்  கடந்துச்  சென்றுவிடுவாள், ஆனால் அதை பற்றிய புரிதல் இல்லாத பெண் தன்னையும் தொலைத்து பெண் சமூகத்திற்கு அவப்பெயரை தேடிக் கொடுத்து விடுகிறாள். இன்றும் கற்பு ஒரு பொருள் என்ற ரீதியில் பெண்ணே யோசித்துக் கொண்டிருக்கிறாள், என்ன செய்வது அரைகுறையாக புரிந்துக் கொள்ளப்படும் எதுவுமே ஆபத்துத் தான்.

ஒரு மானுட ஆதார விஷயத்திற்கு எவ்வளவு முகமூடிகள், கதைப்பின்னல்கள், குடும்பம் என்கிற அமைப்புகள், வன்புணர்வுகள், அத்துமீறல்கள். பெண்களுக்கு கற்பு என்ற ஒன்றைக்  கற்பித்தவன் பெரிய சூத்ரதாரியாக இருந்திருக்க வேண்டும். மிக அழுத்தமான, ஆழமான அரசியலை வெகுச்   சுலபமாகத்  தள்ளிவிட்டு, அதன்மூலம் தன் தேவைகளைக்  காலங்காலமாக ஆண்கள் நிறைவேற்றிக் கொண்டு வருகிறார்கள்.  இன்று மேற்குலக நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட பாலியல் தொழிலாளிகள்  மீது பிரயோகிக்கப்படும் வக்கிரங்களை/ வன்முறையை எப்படிப் பார்ப்பது. தங்கள் துணையுடன் ஈடுபடமுடியாத fantasy க்களை வக்கிரமான எதிர்பார்ப்புக்களை காசு கொடுத்துப் பண்ணுகிறார்கள் என்றா? அவ்வளவு கொடுமைகள் திரை மறைவில் பெண்மைக்கு  இழைக்கப் படுகிறது, விதவிதமான உறவு நிலைகளை நிகழ்த்திப் பார்த்து தனது ஆழ்மன விகாரங்களை வெளிப்படுத்தி திருப்தி அடைகிறார்கள்.  விபசாரத்திற்காக நாடு விட்டு நாடு, சிறுமிகள் கடத்தல் வெகு காலமாக சர்வ சாதாரணமாக  நடந்துவருகிறது.   பெண்மை விலைப்  போவதைப்  பற்றி  யாருக்கும் அக்கறை இல்லை, ஏன் 'பெண்'ணுக்கே இல்லை.  

தற்போது பாலியல் தொழிலாளியைத்  தேடிப் போகவேண்டும்  என்கிற தேவைக்  குறைந்து  தங்களைச் சுற்றியேத்  தீர்த்துக் கொள்கிறார்களோ  என்ற ஒரு கேள்வியுடன் கட்டுரையை முடிக்கிறேன்.  கேள்வி புரியாதவர்களுக்கு  'பிறனில்  விழையாமை'  குறள்களை நினைவுப் படுத்துகிறேன்.  வள்ளுவர் இதை  ஆண்களுக்காக எழுதினாலும் விளக்கம் என்பது ஆண் பெண் இருவருக்கும் பொதுவே.






மகளிர் தின வாழ்த்துக்கள் 

தொடர்ந்து பேசுகிறேன் 
உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா 



திங்கள், ஜூலை 17

கண்ணகிக்கும் காமம் உண்டு


அன்பின் புதிய வாசகர்கள்  பேசாப் பொருளா காமம்   அறிமுகப்பதிவு , 2 ஆம் பாகம்    வாசித்தப் பிறகு இப்பதிவைத்  தொடருவது ஒரு புரிதலைக் கொடுக்கும். நன்றி.

* * * * *

ஆலோசனைக்காக என்னிடம் வந்த ஒரு நடுத்தர வயது பெண்மணி மிகுந்த தயக்கத்திற்கு பிறகு  உணர்ச்சிகளால் தனக்கு  ஏற்படும் அவஸ்தையை கண்கலங்க கூறத் தொடங்கினார்... இதுவரை யாரிடமும் இதை பற்றி  சொல்லாத அவர் எனது தாம்பத்தியம் பதிவுகளை படித்தப்  பிறகு என்னை நாடி இருக்கிறார் ... அவரது கண்ணீர்  தன்னை விட வயது குறைந்த பெண்ணிடம் இதை சொல்கிறோமோ என்பதால் இருக்கலாமே தவிர பிரச்சனைக்கானது அல்ல என்பது புரிந்தது.    வசதிக்கு குறைவில்லாத வீடு, இந்த மாத லாபத்தை இரட்டிப்பாக்க வேறு எதில் இன்வெஸ்ட் பண்ணலாம் என்ற சிந்தனையில் தூங்க வரும் கணவர். முதுகு காட்டி உறங்கும் கணவரை பார்த்தபடி தூங்க முயற்சி செய்யும் ஒவ்வொரு இரவும் தூக்கமின்றியே கழிந்திருக்கிறது. எண்ணத்தை வேறு பக்கம் திருப்பி கடவுள் பூஜை தியானம் எல்லாம் முயற்சித்தும் தோல்வியே. உணர்ச்சிகளின் அதி உந்துதலில் ஏற்படுகிற  'ஆத்திரத்தில் உடல் உறுப்புகளை அப்படியே பிச்சி எறிஞ்சிடலாம்னு வெறி வருது, எனக்கு மட்டும் ஏன் இப்படி, நான் சராசரி பெண் இல்லையா எனக்கு காமவெறி பிடிச்சிருக்கா' என கேட்டவர் இறுதியாக 'நானும் கண்ணகிதான் மேடம், இவரை தவிர வேறு யாரையும் மனதாலும் நினைச்சது இல்லை'  என்று முடித்து மௌனமானபோது பல பெண்களின் பிரதிநிதியாக தான் எனக்கு அவர் தோன்றினார்.

'எல்லோருக்கும் இது இயல்புதான்  நீங்க உடலளவில் மிக  ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் அவ்வளவுதான் பெரிதாக வேறு ஒன்றும் இல்லை'  என்று சமாதானம் செய்து சில முக்கிய உபாயங்களைச்  சொல்லி அனுப்பினேன்.
பணம் செல்வாக்கு அந்தஸ்து புகழ் எல்லாம் இருந்தும்/இல்லாமலும்  உணர்ச்சிகளோடு ஒவ்வொரு நாளும் மல்லுகட்டுகிறார்கள் பெண்கள். வெளியே சொல்ல வாய்ப்பில்லாததால் பிறருக்கு தெரிய வாய்ப்பில்லை. பெரும்பாலான கணவர்கள்  மனைவியின் தேவையறிந்து நடந்துக் கொள்வதில்லை.  உணர்ச்சி ஏற்பட்டாலும் கணவன் தப்பா எடுத்துப்பாரோ   என தனக்குள் வைத்து புழுங்கி கொள்கிறாள்... கண்ணகி இல்லை என்றாகிவிடுவோமோ என்ற பயம் மனைவிகளுக்கு ! தனது மனைவி கண்ணகி மாதிரி இருக்கவேண்டும் என்பது  ஆண்களின் வசதிக்காக ஏற்படுத்தப் பட்டது.

கண்ணகி ஒரு டிஸைன்! பத்தினி  ஒரு பிராண்ட் !!  

சிறு வயதில் காலில் கட்டப்பட்ட  சிறிய  சங்கிலியை வளர்ந்த  பின்னும்  உடைக்கத்    தெரியாத கோவில் யானையின்  நிலைக்கு சற்றும் குறைந்தது இல்லை பெண்களின் நிலை. பிறந்தது  முதல் 'நீ இப்படி நடக்கணும்' என்ற சமூக சங்கலியால் கட்டி பயிற்றுவிக்கப்பட்ட  பெண்ணால் வளர்ந்து பின்னும் தன்னால் இச்சங்கிலியை உடைத்து வெளியேற இயலாது என்றே இருந்துவிடுகிறாள். அதிலும் குறிப்பாக தனது உடலுக்குள் நிகழும்/எழும்   உணர்வுகளையும் அலட்சியப் படுத்தி அடக்கிவிடுகிறாள்...அதன் கொடிய விளைவுகளை அவளும் அறிவதில்லை  சமூகமும் கண்டுக் கொள்வதில்லை... பிறன்மனை செய்திகள் வெளிவந்ததும் குய்யோ முறையோ என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறது...இந்த சமூகத்தால் அதிகபட்சம் இதை மட்டும்தான் செய்யமுடியும்...தீர்வுகளைத்  தேடத் தெரியாத முட்டாள் சமூகம் இது !

உணர்ச்சிகளுடன் போராடிப் போராடி தோற்று தனக்குள்ளேயே சுருண்டு  கணவனிடம் கூட தெரிவிக்க தைரியமற்று ஏதோ பெயருக்கு வாழ்ந்து ஒருநாள் செத்தேப்  போகிறாள். தைரியம் உள்ள பெண்களும் கண்ணகி கான்செப்ட்டுக்கு பிரச்சனையாகி விடும் என்று 'மறைவில் நடத்தி' பத்தினி பிராண்ட்டை காத்துக் கொள்கிறார்கள்.  தங்களுக்கு பிடித்த மாதிரி வாழும்  பெண்கள் மிக மிக சந்தோசமாக வாழ்கிறார்கள், மாறாக வாழ்வதைப்  போலவே  நடிக்கிறார்கள் கண்ணகிகள் !

ஒரிஜினல் கண்ணகி கதையில் திருமணம் முடிந்த சில நாட்களில் தாம்பத்தியம் என்றால் என்னவென்று முழுமையாக அறிவதற்குள் உணர்வுகளைத்  தூண்டிவிட்டவன் பிரிந்துச்  சென்றுவிடுகிறான். அதன் பிறகான ஒவ்வொரு இரவையும் இன்னதென்று தெரியாத உணர்ச்சிக்  குவியலுக்குள் புதையுண்டு விடியலில் உள்ளுக்குள் கனன்ற நெருப்பை நீரூற்றி அணைத்திருக்கக் கூடும்.  கணவன் வேறோருவளிடம் இருக்கிறான் அவளிடம் இன்பம் துய்க்கிறான்  என்பதும்  உணர்வுகளை அதிகப்படுத்தி இருக்கலாம், (இருந்தும் அத்தனையையும் உள்ளுக்குள் மறைத்து பிறந்தவீடு போதித்தவைகளை அடிப்பிறலாமல் நிறைவேற்றி இருக்கிறாள்)  ஒருநாள் திரும்பி வந்தவனைக்  கண்டு குதூகலித்த அவளது உணர்வுகளின் ஆர்ப்பரிப்பு,  அடுத்ததாக  கோவலன் மாண்டதும் இனி வரவே வழியில்லை என்றானப் பின் ஒட்டுமொத்த உடலியக்கமும் ஸ்தம்பித்து வெறுப்பை உமிழ அது கட்டுக்கடங்காத பெரும் நெருப்பாக மாறி இருக்கலாம்... ஆம் மதுரையை எரித்தது கண்ணகியின் காமமாகக்  கூட இருக்கலாம்,   ஆனால் கற்பு என்று சொன்னால் தானே  கண்ணகி தெய்வம் ஆவாள்.  ஆணாதிக்கச்  சமூகம் தனது  வசதிக்காக சிலப்பதிகாரம் எழுத  நமது சமூகம்  'புனிதம்' என்ற போர்வையை போர்த்திக் கொண்டது.   கோவலன் ஒருவனை மட்டுமே தனக்கானவனாக வரித்து காமத்தை தனக்குள் எரித்து அவன் நினைவாக மட்டுமே வாழ்ந்து மறைந்த தாசிக்குலத்தில் பிறந்த மாதவியை பத்தினி லிஸ்டில் சேர்க்க ஏனோ நம்மால் முடியவில்லை!?

கண்ணகி விசயத்தில்  இப்படியும் நடந்திருக்கலாம், மாதவியிடம் சென்று திரும்பிய கோவலனை ஏற்றுக் கொண்டதால் தான் கண்ணகி பத்தினியானாள், கண்ணகி பத்தினியாக வேண்டும் என்றால் மாதவி என்றொருவள் தேவை,  ஆண் செய்யும் துரோகத்தை மனைவி என்பவள் ஏற்றுக்  கொண்டாக வேண்டும் என்பதை பெண்களின் மனதில் பதிய வைக்க கிடைத்தவள் தான் இந்த கண்ணகி. நடக்கவே முடியவில்லை என்றாலும் கூடையில் சுமந்துச்  சென்று தாசி வீட்டில் விட்டால் தான் அவள் பத்தினி.  பெண்ணை தெய்வமாக்கி மூலையில் உட்கார வைப்பதன் பின்னணியில் இருப்பது ஆணின் பெருந்தன்மை அல்ல  ஆதி பயம்.

எல்லா காலத்திலும் கண்ணகிகள் இருக்கிறார்கள் , என்னவொன்று அவர்கள் மதுரைக்கு மாற்றாக தன்னையே எரித்துக் கொண்டிருக்கிறார்கள். சமயங்களில் உடன் இருப்பவர்களையும் சேர்த்து எரித்து விடுகிறார்கள்... ஏற்படும் அத்தனை சமூக அவலங்களுக்கும் இது மறைமுகக் காரணமாகிறது. குழந்தை வளர்ப்பில் இருந்து அவளது பொறுப்பில் இருக்கும் அத்தனையிலும் குளறுப்படிகள் ஏற்படுகின்றன. ஆரோக்கியம் குறைந்த வீடுகள் ஒட்டுமொத்த சமூகத்தையும் நோயாளியாக்கி விடுகிறது.

கற்பு என்ற ஒன்று இருக்கிறது என்றும் அதற்கு 'நெறி' வகுத்தவர்கள்  கண்டிப்பாக பெண்ணுடன் அன்னியோனியமாக சரிக்கு சமமான உரிமையை பகிர்ந்து வாழ்ந்தவர்களாக இருக்க முடியாது. கண்ணகி  சென்று, திரும்பி வந்தால் ஏற்றுக் கொள்ளக் கூடிய கோவலன்கள் இருந்தால் அதுவே சம  தர்ம சமூகம் !

பெண்களின் காமம் பேசப்படுவதே இல்லை ஆண்களின் காமம் 'அவன் ஆம்பள அப்படித்தான்' என்பதில் மறைந்துவிடும். ஆனால் பெண்களின் காமம் வலுக்கட்டாயமாக ஆணுக்குள் அடக்கிவைக்கப் படுகிறது. அவனை மீறி வெளிப்படக் கூடாது அப்படி வெளிப்பட்டால் அது காம வெறி, அவளுக்கு பெயர் வேசி. நடுஇரவில் 'இப்படித்   திரும்பு' என்று கணவன் சொல்வதைப்  போல மனைவி சொல்ல முடியாது. காமத்தை மறைக்கத் தெரிந்தவள் மட்டுமே பத்தினி.   'அவனுக்கு தேவை என்றால் படு' என்பதே காலக்காலமாக பெண்ணின் மனதில் பதிய வைக்கப் பட்டிருக்கிறது. இதில் இருந்து வெளிவர பெண்ணும் விரும்புவதில்லை. சில பெண்கள் மட்டும் ஆணுக்கு கட்டுப்பட்டவள் இல்லை நான் சுதந்திரமானவள் என பிரகடனப்படுத்தி பெண்ணியவாதியாகிறார்கள். வெகுசீக்கிரத்தில் அவர்களும் பெண்ணுக்கு வியாதியாகி விடுகிறார்கள் !!??

குழந்தை வளர்ப்பிலும் வீட்டுப் பராமரிப்பிலும் பெண்களின் காமம் கரைந்துவிடுவதாக எண்ணும் ஆண்களும் ஏன் பெண்களுமே  மாறவேண்டும். ஆண் பெண் இருவருமே தனது தேவை எது என உணர்த்த வேண்டும் பரஸ்பர தேவைகளை வெளிப்படுத்தி திருப்தி அடைவதுதான் ஒரு நல்ல தாம்பத்தியம். சந்தோசமான தம்பதிகளிடம் வளரும் குழந்தைகளால் தான் நல்ல வீடும் நல்ல சமூகமும் உண்டாகும். 

அடக்கி வைக்கப்பட்ட பெண்ணின்  உணர்ச்சிகள்  கண்டிப்பாக ஒரு கட்டத்தில் வெளிப் பட்டேத் தீரும் ஆனால் அது எதிர்கொள்ளவே முடியாத உக்கிர கோபம் வெறுப்பு எரிச்சல் கலந்த  கடுஞ்சொற்களாக/வாதங்களாக  இருக்கும்.  எப்போதும் அமைதியாக இருப்பவள் ஏன் இன்று இவ்வாறு  நடக்கிறாள் என்ற குழப்பத்தில் ஆண் அதிர்ந்துப்  போவான், கூடவே அந்த பெண்ணுக்கும் தான் ஏன் இப்படி நடக்கிறோம் என்பது தெரியாதது தான் உச்சபட்ச பரிதாபம்.  விவாகரத்து கள்ளக்காதல் முதல் மாமியார் மருமகள் பிரச்சனைகள் வரை ஏதோ ஒரு வடிவத்தில் அங்கே பெண்களின் காமம் மறைந்திருக்கிறது. மனைவியை புரிந்து மதித்து உணர்வுகளை  திருப்திப்படுத்தும் ஆண்  இருக்கும் வீட்டில் அதே ஆண் சகல சந்தோசங்களையும் அனுபவிக்கிறான். அவன் வெளி விடும் ஒவ்வொரு மூச்சும் சந்தோஷத் தூறலாய் மழையாய் அந்த வீட்டை மூழ்கடிக்கும்.

மனைவிக்கும்  நடு இரவில் விழிப்பு ஏற்படும் என்பதைப்  புரிந்து உணர்ந்து நடக்கும் கணவன் இருக்கும் வீட்டில்தான்  நல்லவை மட்டுமே நடக்கும்!!!


                                                                              * * * * *

ஆண்கள் நெருங்கினால் விலகும்/வெறுக்கும்  பெண்களை குறித்தும் பேசியாக வேண்டுமே !

தொடர்ந்து பேசுகிறேன்...

உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா.

செவ்வாய், ஜூலை 11

வீட்டுத்தோட்டம் - தக்காளி வளர்ப்பதில் சில எளிய முறைகள் + டிப்ஸ்

ஒரு தக்காளி செடியில் இருந்து வேறு சில தக்காளி செடிகளை உருவாக்கலாம்...

ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா ? எனக்கு முதலில் இதை கேள்விப்  பட்டபோது அவ்வாறுதான் இருந்தது. தோட்டக்கலையை பொறுத்தவரை நாம் தினமும் புதுப்  புது பாடங்களைக்  கற்றுக் கொண்டே இருக்கலாம். நாம சும்மா இருந்தாலும், இந்த இயற்கை தூண்டிக் கொண்டே இருக்கும் இப்படி முயற்சி செய்யலாமா அப்படி முயற்சி செய்யலாமா என்று! இயற்கையின் தூண்டுதலால் மேலும் மேலும் பல வளர்ப்பு முறைகளை முயற்சித்து பார்த்துக் கொண்டிருப்பேன். அதில் ஒரு முறை தான் தக்காளிக் கிளைகளின் மூலம் புது செடியை உருவாக்குவது... இந்த முறைப்படி பயிரிடுவதால் வருடம் முழுவதும் தக்காளிக்குத்  தட்டுப்பாடில்லை.

க்ளோனிங் முறை

தக்காளியின் ஒவ்வொரு கிளைக்கும் தனியாக வேர்களை பரப்பக்  கூடிய அளவிற்குப்  போதுமான செல்கள் இருக்கின்றன என்பது ஒரு அதிசயம்.
ஒரு தக்காளி செடியில் இருந்து இரண்டு மடங்கு அறுவடையை எடுத்துவிடலாம். ஒரு தக்காளி விதை முளைத்து பலன் தர 2 மாதம் ஆகிறது ஆனால் இந்த முறை  என்றால் 1 மாதம் போதும்.

கிளைகளை கட் பண்ணும் முறை

வளர்ந்தச்  செடியின் பக்கக்  கிளைகளை சிறு கத்தி அல்லது சிசர் வைத்து நறுக்கி எடுத்து மேலே  இரண்டு இலைகளை மட்டும் விட்டுவிட்டு இலை பூ மொட்டு போன்ற மற்றவற்றை அகற்றிவிடவேண்டும்.  கிளைத்தண்டு  ஆறு இஞ்ச் நீளம் இருந்தால் நலம்.

என் வீட்டுத்தோட்டத்து தக்காளி செடி

நாலு இஞ்ச் உயரம் மட்டுமே உள்ள சிறிய தொட்டியை எடுத்துக்கொண்டு அதில் கோகோபீட் மண்புழு உரம் கலந்த மண்ணை நிரப்பி நடுவே விரல்  வைத்து ஒரு துளை ஏற்படுத்தி அதில் தக்காளி தண்டை வைத்து மெதுவாக மண்ணை அழுத்திவிடுங்கள்...இந்த தொட்டியை ஜன்னலின் ஓரத்தில் வெயில் படும் இடத்தில் வைத்து தண்ணீர் தெளிக்க வேண்டும் போதுமான அளவிற்கு வெயில் கிடைத்ததும்(ஒரு வாரம் போதும்)  வேறு தொட்டிக்கு  இடம் மாற்றிவிடுங்கள்.  அவ்வளவுதான். இதன் தாய்ச்செடி  காய்த்து முடியும் நேரத்தில் இது பலன் கொடுக்கத் தொடங்கி விடும்...

மற்றொரு முறை

pic-google

மேலே இரு இலைகளை விட்டுவிட்டு  நறுக்கப்பட்ட கிளையை   நீர் நிரம்பிய கண்ணாடி  ஜாடி அல்லது டம்ளரில் வைத்து  விடுங்கள். இதனை ஜன்னல் ஓரத்தில் வைத்து தினமும் நீரை மட்டும் மாற்றி வாருங்கள், நான்கு நாளில்  வேர் விட ஆரம்பித்து விடும் நன்கு வேர் விட்டதும்  வேறு தொட்டிக்கு மாற்றிவிடுங்கள்.  இந்த முறையில் செடி பலன் தர சிறிது காலம் அதிகமாகுமே தவிர உற்பத்தியில் எந்த குறைவும் இருக்காது.

இந்த இரு  முறைகளின் படி செய்து வந்தால்  வருடம் முழுவதும் நம் வீட்டில் இருந்து தக்காளி  பழங்களைப்  பறித்துக் கொண்டே இருக்கலாம்.

என் வீட்டுத்தோட்டம் - பறிக்க தயார் நிலையில்

தக்காளிச் செடியில்  பூச்சிகள் தாக்கத் தொடங்கியதும் செடியின் அந்த பகுதி  'சிஸ்டமின்' என்ற ஹார்மோனை சுரந்து பூச்சிகள் மேலும் முன்னேறாதபடி தடுத்துவிடுகின்றன. இது தக்காளியின்   சிறப்பு குணம். 

 பொதுவான டிப்ஸ் 

 * விதைகளை  கடையில் வாங்குவதை தவிருங்கள். வீட்டில் இருக்கும்  நன்கு கனிந்த  தக்காளியை  பிசைந்து விதைகளை சேகரித்து  கோகோபீட்+மண்+மண்புழு உரம் நிரப்பிய தொட்டியில் போட்டு நீர் தெளித்து வந்தால் போதும் விதைகள் முளைத்து விடும். சிறிது வளர்ந்ததும்   வேருடன் அப்படியே எடுத்து தனித்தனியாக வேறு வேறு தொட்டிகளில் நட்டு விடுங்கள்.தக்காளியை குறுக்கு வாட்டில் வெட்டி மண்ணில் புதைத்து வைத்தாலும்போதும் விதைகள்முளைத்து வந்துவிடும்.

* குளிர் காலத்தில் வீட்டினுள் இருக்கும் தக்காளி செடிக்கு தண்ணீரும் உரமும் தவறாது கொடுத்து வரவேண்டும். தண்ணீர் ஊற்றும் போது லேசாக செடியை அசைத்து விட்டால் மகரந்த சேர்க்கைக்கு உதவியாக இருக்கும்.

* பக்கக் கிளைகளை   எடுத்துவிடுவது தாய்செடிக்கு மிக சிறந்த நன்மையை  கொடுக்கிறது , சத்துக்கள் பிற கிளைகளுக்கு பரவுவது தடுக்கப் பட்டு தாய் செடி மிகுந்த செழிப்புடன் வளரும். விரைவில் பூ பூத்து காய் காய்ப்பதுடன் மட்டுமல்லாமல் அகன்று விரிந்தும் உயரமாகவும் வளரும்.

* தக்காளி செடி நடும் போதே அதனுடன் ஒரு குச்சியைச்  சேர்த்து கட்டிவிடுங்கள்... இல்லையென்றால் செடி காற்றில் அசைந்து மண்ணில்  வேர் பிடிப்பது பாதிக்கப்படும்.

* முட்டை ஓடுகளை சேகரித்து வைத்துக் கொண்டு மிக்ஸ்யில் போட்டு தூள் செய்துக்கொள்ளுங்கள்.வாரத்திற்கு ஒருமுறை  ஒரு ஸ்பூன் ஒரு செடிக்கு என கொடுங்கள் . முட்டை ஓட்டில்  கால்சியம் இருப்பதால்  தக்காளி செடிக்கு நல்ல ஊட்டத்தை கொடுக்கிறது.

* வாழைப்பழத்  தோல்களை சிறிதுச்  சிறிதாக நறுக்கிக்   காய வைத்து மிக்ஸ்யில் போட்டு தூளாக்கி வைத்துக் கொள்ளுங்கள்...இதையும் ஒரு ஸ்பூன் வீதம் 

* சத்துக்களை உறிஞ்சிவிடும் எனச் சொல்லப்படும் suckers என்பவை செடியின் பக்கவாட்டில் வளருவது.  அவை சிறிதாக வளரும்போதே   அதனை கிள்ளி  அகற்றிவிடுங்கள். இது காய் கொடுக்காது என்பதால் இதனை வளரவிடுவது சரியல்ல. இதனை அகற்றியப்பிறகு   செடியின் வளர்ச்சி அபரீதமாக இருக்கும், தக்காளியும் நிறைய காய்க்கும்.

(pic - google) sucker

* தக்காளிச் செடியைப் பொறுத்தவரை பூச்சிகளை அழிக்க தக்காளி இலைகளே போதும். இலைகளில் இருக்கும் விஷம் பூச்சிகளை கொன்றுவிடும், பூச்சிகள் தென்பட்டால் இலைகளை அரைத்து சாறு எடுத்து பூச்சிகளின் மீது தெளிக்கவேண்டும்.

* தவிர 3G (greenchilli, ginger, garlic)என்று சுருக்கமாக சொல்லப்படுகிற பூண்டு +இஞ்சி+பச்சை மிளகாய் மூன்றையும் சம அளவு எடுத்து மிக்ஸியில் அரைத்து  வடிகட்டிய  சாறை  தண்ணீர்(1-10)  சேர்த்து  கலந்து செடியின் மீது  தெளித்தால் பூச்சிகள்  அழிந்துவிடும்.  

* பழுத்த ,காய்ந்த இலைகளை உடனுக்குடன் அகற்றிவிடுங்கள்.  அழுகிய  தண்டுகள் கிளைகளையும் எடுத்துவிடுங்கள். செடி எப்பொழுதும் சுத்தமாக பசுமையாக இருக்குமாறுப்  பார்த்துக் கொள்ளுங்கள்.

* தக்காளிக்கு வெயில் மிக பிடிக்கும். 14 - 18 மணி நேர நேரடி சூரிய ஒளி கட்டாயம் தேவை. பசுமைக்குடிலில்  செடிகள் இருந்தால் செயற்கையான முறையிலாவது வெளிச்சம் வர செய்யவேண்டும்.

* காய் காய்க்கத் தொடங்கியதும்  தண்ணீர்  விடுவதை முறைப்படுத்த வேண்டும். ஆழமாக வேர் வரை தண்ணீர் சென்று தொட்டியின் துவாரங்கள் மூலம் வெளியேறுகிறதா என கண்காணிக்க வேண்டும். துளைகள் அடைத்திருந்தால் சிறு குச்சியால் குத்தி சரிப்  படுத்த வேண்டும்.

* எப்போது தண்ணீர் ஊற்றினாலும் செடியின் மீது தெளிப்பதை போல ஊற்றவேண்டும்...இலை, தண்டு கிளைகள் தண்ணீரால் நனைவது சிறப்பு.

* தக்காளிச்  செடியை நடும்போது ஆழமாக நடவேண்டும், அப்போதுதான் நிறைய வேர்கள் உருவாக்கி செடியை பலமுள்ளதாக்கும்.தொட்டியின் ஆழம் கம்மியாக இருந்தால் செடியை சிறிது வளைத்து மண் அணைத்து வைக்கலாம். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, மண்ணுக்குள் இருக்கும் செடியின் பக்கக் கிளைகளை அகற்றிவிடவேண்டும்.

இப்போதைக்கு இவைப்  போதும் என நினைக்கிறேன் ... ஆரம்ப நிலையில் இருக்கும் வீட்டுத் தோட்ட ஆர்வலர்களுக்காகப்  பதிவை எளிமையாக்கி இருக்கிறேன்... வேறு சந்தேகங்கள் ஏதும் இருப்பின் கமென்ட்,மெயிலில் கேளுங்கள். நன்றி.



Happy Gardening !!

கௌசல்யா


செவ்வாய், ஏப்ரல் 4

மனதோடு மட்டும்...!



‘எவ்வாறு தொடங்குவது’ மிக நீண்ட யோசனைக்கு பிறகு தட்டுத் தடுமாறி கொஞ்சம் நடுநடுங்கி முதல் வார்த்தையை 'டைப்'பினால்,   பதிவுலகத்  தொடர்பு எல்லைக்கு வெளியேச்  சென்று ஒரு வருடம் மேல் ஆகிவிட்டது என அர்த்தமாகும். எதிரில் பார்க்கும் எதையும் எழுத்தாக்கி பகிரும் வேகம், துடிப்பு, உத்வேகம் எல்லாம் மலையேறி புதிதாய் எழுதவருவதைப்  போல  என் போன்றோர் நிலை கொஞ்சம் பரிதாபம்தான். என்னத்த எழுத என்ற சலிப்பு, வேலை பிஸி என்ற முகமூடி போட்டுக்கொள்கிறதோ என்னவோ!

மறுபடி எழுத வந்ததற்கு தோழி  ஏஞ்சல் ஒரு முக்கிய காரணம். (எழுத போறிங்களா இல்லையானு பேஸ்புக் இன்பாக்ஸ், ஜிமெயில் போதாதுன்னு போன் செய்தும் ஏகப்பட்ட மிரட்டல்கள்) தவிர எங்க போனிங்க என்ன ஆச்சு என்று அடிக்கடி என்னை "அன்புடன்" விசாரித்துக்கொண்டிருக்கும் அந்த நாலு பேருக்கு என் நன்றிகள். மனிதர்களுக்கு எப்போதும் போன், இணையம் என ஏதோ ஒரு தொடர்பில் இருந்தாகவேண்டும்...இல்லனா மத்தவங்க நம்மள சுத்தமா மறந்து போய்டுவாங்க இல்லையா (நினைச்சுகிட்டே இருக்குற அளவுக்கு நாம பெருசா ஒன்னும் பண்ணலன்றது வேற) உயிருடன் இருக்கும் போது ஒருவருக்கு ஒருவர் தொடர்புடன் இல்லையென்றால் மறந்துவிடுவார்கள் என்றால் மரணித்தப் பின்னால் பெரிதாக என்ன இருக்கப்போகிறது  .....முதல் நாள்  கண்ணீர் மறுநாள் சோகம் அடுத்தநாள் அவங்க அவங்க சொந்த வேலை கவலை ... நமது பெயரும் அடுத்த சில வருடங்களில் மறந்துப்  போகும் ....இவ்வளவுதான் வாழ்க்கை! இதை புரிந்துக் கொள்ள இமயமலை தேடி ஓட வேண்டியதில்லை, கண் முன் கடந்து போகும் ஒரு மரணம் போதும்...  

என்னைப்  பொறுத்தவரை எந்த ஊர்ல இப்ப இருக்கிறேன்னு பக்கத்தில் இருக்கிறவங்க நினைவுப் படுத்துகிற அளவுக்கு அதி பிரமாதமாகப்  போகுது வாழ்க்கை...  ஓடி ஓடி   களைத்துச்  சாய ஒரு தோள் கிடைக்காதா என ஏங்கி அவ்வாறு  கிடைத்தாலும் சாய நேரம் இல்லை போன்றதொரு நிலை.  

எதிர்பாராத ஒரு பெரிய இழப்பு அது கொடுத்த வலி சோகம் துக்கம் இவை எல்லாவற்றையும் கடக்க அதிகப்  பிரயத்தனம் எடுத்தும் அதுக்கு வாய்ப்பே இல்லை என்பது தெரிந்ததும் சரி ஒரு ஓரமாக அதுவும் இருந்துவிட்டு போகட்டுமே என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். ஒருவரை இழந்த பிறகே, ‘அவருடன் இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாமே , பிடிச்சதைச்  சமைச்சு  கொடுத்திருக்கலாமே, உடன் ஊர் சுற்றி இருக்கலாமே, அட்லீஸ்ட் மாதம் ஒரு முறையேனும் போன் செய்து எப்டி இருக்குற என விசாரித்து இருக்கலாமே என தோன்றுகிறது. இதில் ஒன்றையுமே செய்யாமல் போனப் பின்பு ஐயோ போயிட்டியே என அரட்டுவதை என் மனசாட்சியே சும்மா நடிக்காதே என பரிகசித்தது. ஆமாம் உண்மைச்  சுடுகிறது. இதுநாள் வரை அப்படிதானே நடந்திருக்கிறேன், நான் எனது வீடு குடும்பம் தொழில் என சுயநலமாகவே வாழ்ந்துவிட்டு அன்றைக்கு துக்க வீட்டில் அழுதது கூட அபத்தமாக தோன்றியது.

மரணமல்ல ஜனனம்!

ஒரு மரணம் எனக்குள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்திவருகிறது... பிறரிடம் இருக்கும் நல்லது தீயது இரண்டில் நல்லதை மட்டுமே பார்க்கத் தொடங்கி இருக்கிறேன்... இதுவரை பிறரின் தவறுகளை மன்னித்த நான்  இப்போது அதை மறக்கவும் முயற்சித்து அதில் சிறிது வெற்றியும் பெற்றுவிட்டேன். ஒரு தெளிந்த நீரோடையாக மனதை வைத்துக் கொள்ள  முயற்சி செய்கிறேன். உண்மையில் இது மிக பிடித்திருக்கிறது. முன்பை விட அதிகமாக எல்லோரையும் நேசிக்கவேண்டும், இன்னும் அதிகமாக பிறருக்கு உதவவேண்டும், இன்னும் அதிகமாக  இந்த சமூகத்திற்காக   உழைக்கவேண்டும், தெரிந்த சமூக அவலங்களை எழுத்திலாவது எழுதி வைத்துவிட வேண்டும் என்ற உத்வேகம் ஏற்படுகிறது.

நந்தினி,ஹாசினி ரித்திகா என்ற அழகான பெயர்கள் துக்கக்கரமாக மாறிப்போனபோது பச்ச குழந்தைகளை போய் எப்படிடா என்னடா வேணும் உங்களுக்கு என கதறியே விட்டேன். இரவுகளில் தூங்கவிடாமல் ஓலமிடும் மனதிடம் இதோ எழுதி ஆதங்கத்தை தீர்த்துவிடுகிறேன் என சமாதானம் செய்வேன். பாலியல்  பிரச்சனைகளின்  மூலம் எங்கே இருக்கிறது என்பதைப் பற்றி ஓரளவிற்கு தெரியும் என்பதால்  குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு கட்டுரையை இனி தொடரலாம்... மூலம் என்று தேடிப்போனால் பேசாப்  பொருளா காமம் பற்றி பேசணும் சரி அதை பற்றியும் தொடர்ந்து எழுதலாம்... இதற்கு  பெற்றோர்கள் எவ்விதம் காரணமாகிறார்கள் என்பதை  தாம்பத்தியம் தொடரில் கொஞ்சம் தொட்டுக்  காட்டலாம்.......அப்படி இப்படி என்று மறுபடி பதிவுகள் எழுத காரணங்களை நானாக யோசித்ததன் விளைவு இதோ எழுத தொடங்கியாயிற்று... எது ஒன்றுக்கும் ஒரு தூண்டுகோல் வேண்டும், தூண்டுகோல்  வெளியில் இருந்து வரவேண்டும் என்றில்லை நாமாக உருவாக்கிக் கொள்ளலாம் ... நமக்கு தெரிந்ததை பிறரிடம் கொண்டு சேர்க்கும் முக்கியமான இடத்தில்(பதிவுலகம்) இருந்துக் கொண்டும் வாளாவிருப்பது வீண்தானே.

என்ன செய்துவிடும் எழுத்து 

இந்த ஒரு வருடத்தில் எத்தனை எத்தனை நிகழ்வுகள் !! மக்களை எப்போதும் பரபரப்பாக்கி வைத்துவிடுகிறது ஊடக உலகம். அதிலும் சமூக வலைத்தளம் முன்னணி, காபி போட்டு குடிகிறார்களோ இல்லையோ காபி கப் போட்டோ வந்துவிடும். மனித மனம் எப்போதும் பிறரது அங்கீகாரத்திற்காகவே காத்துக்கிடக்கிறது... எல்லோருக்கும் பிடித்தவராக யாராலும் இருக்கமுடியாது என்றாலும் தனக்கென்று ஒரு சிறு கூட்டத்தை சம்பாதித்தே தீரவேண்டும் என்ற ஆசை வெறியாக மாறுவதை கண் முன்னால்  பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண்களை மதிக்கவேண்டும் என மகளிர்தின வாழ்த்துக்கள் கூறி மறுநாளே இவ மூஞ்சிக்கு ஐநா கேக்குதா என பகடி செய்யும் முரண்பாட்டு மூட்டைகள் நிறைந்த உலகிது!  'எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் ' பாரதி எத்தனை பாடினாலும் போகப் பொருளாகவே  பார்த்து பழகிய கண்கள், எம்பி குதிக்கும் டென்னிஸ் வீராங்கனையின் உள்ளாடையை க்ளோஸ்அப்பில் படம் பிடித்து போடும் பத்திரிகை கேமரா அனர்த்தங்கள்.  

சிறிய பெரிய எழுத்தாளர்களின் புத்தகங்களை படித்த அனுபவம் கூட இல்லாமல் தான் பதிவுலகம் வந்தேன்...பொன்னியின் செல்வன் பற்றி பலரும் சிலாகிக்கும்போது படிச்சுத்தான் பார்ப்போமே என்று வாங்கிப்  படித்தேன், புத்தகம் படிங்க என்று வற்புறுத்தி ஐந்து புத்தகங்கள் அனுப்பி வைத்தார் நண்பர் ஒருவர் அப்படியாவது எனக்கு எழுத்து கைவராதா என்று...  புத்தகங்கள் படித்ததற்கு பிறகு  ‘நாம எழுதுறதெல்லாம் ஒரு எழுத்தா’ என்ற பயம்  வேறு வந்துவிட்டது. ஆனால் உணர்வுகளை கொட்ட ‘தெரிந்த/பழகிய வார்த்தைகள்’  வேண்டுமே தவிர இலக்கியம் இலக்கணம் தேவையில்லை... வாசிப்பவர்களின் மனதோடு எனது எழுத்துக்கள் பேசினால் போதும்... மேடை ஏறி பரிசுகளை வெல்லவேண்டும் என்று இல்லையே... என்றெல்லாம் மனதைத்  தேற்றி என்னை நானே சமாதானம் செய்து இதோ பேச வந்தேவிட்டேன் மறுபடியும் உங்களின் மனதோடு மட்டும்...

“யார் சூறையாடியது காலத்தை என்னிடமிருந்து
யார் சூறையாடியது ஒன்றாய் இருந்த காலத்தை என்னிடமிருந்து
யார் சூறையாடியது என்னுடையதாய் இருந்த காலத்தை என்னிடமிருந்து
புன்னகைபுரிந்த முற்றிலும் முழுமையான காலம்
எனது ‘நான்’ தூயதாகவும் உண்மையாகவும் இருந்தது அங்குதானே
கவிதை அதுவாகவே தன்னை எழுதிக்கொண்டதும் அங்குதானே !”

-சோஃபியா டி மெல்லோ ப்ரெய்னர்

 பிரியங்களுடன்
கௌசல்யா

pic : google 

திங்கள், பிப்ரவரி 29

கடனுக்காக மனைவி பலியாவதை அறிந்தும் அறியாத கணவர்கள் ?! தாம்பத்தியம் - 32


'பணம்' இது ஒன்றிற்காக மனிதன் எதையும் செய்வான் என்பதை கண் முன்னே காணும் துர்பாக்கிய நிலை நமக்கு இன்று. நாளை என்ன நடக்கும் என்று தெரியாத உலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பதையே மனிதன் சமயங்களில் மறந்துவிடுகிறான். ஒரே பாடல் ஓஹோனு வாழ்க்கை சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்பதை நம்பாமல் மனிதன் ஆடும் ஆட்டத்தில் அவன் குடும்பத்தினரே அதிகம் அவதிக்குள்ளாகிறார்கள். முக்கியமாக இறுதிவரை கை விடமாட்டான் என்றெண்ணிய கணவன் பணத்திற்காக தன்னை பலியிடுவதை அறியாமலேயே மனைவி இருப்பது இன்றைய குடும்பங்களில் சகஜமான ஒன்றாகி விட்டதோ என அச்சம் ஏற்படுகிறது.

குடும்பத்தில் கணவன்/மனைவி தனது பணியின் காரணமாகவோ சொந்த விஷயமாகவோ  செய்து வரும் விசயங்கள் தங்களின் துணைக்கு தெரியாமல் இருப்பது எவ்வளவு பெரிய விபரீதத்தில் கொண்டுபோய் விடும் என்பதை நம்மில் பலரும் அறியாமல் இருக்கிறோம்.   நமக்கெல்லாம் நடந்தபிறகு தானே ஞானோதயம் பிறக்கும், வரும்முன் காப்பது என்ற ஒன்றே தற்போது  இல்லாமல் போய்விட்டது. இன்றைய நாள் முடிந்தது நாளையை நாளை பார்த்துக் கொள்ளலாம் என்ற அசட்டுத் தனம் நல்லது அல்ல.

சொந்தத் தொழில் செய்பவர்கள், அரசாங்க வேலை பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் பணத்திற்காக அகலக் கால் வைப்பது வெகு சாதாரணமாகி விட்டது. இருப்பதை வைத்து திருப்தியாக வாழலாம் என்ற காலம் மலையேறிவிட்டது. எதில் இன்வெஸ்ட் பண்ணினால் பணம் பல மடங்காகும் என யோசிக்காதவர்கள் இல்லை. கடன் வாங்கியாவதுத்  தொழிலை பெரிதாக்கணும் என்ற ஆசை, வெறியாக மாறி பல குடும்பங்களை நிம்மதியில்லாமல் செய்துக் கொண்டிருக்கிறது. நன்றாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் குடும்பத்தின் ஒத்துமொத்த சந்தோசமும்  ஒரு சில நிமிடங்களில் தொலைந்துச்  சிதைந்துப் போக ஆண் காரணமாகிறான். இதை ஆண்கள் விரும்பிச்  செய்கிறார்களா? அல்லது மனைவியின் வற்புறுத்தலா? அல்லது  மனைவியின் மீதான அதிக அன்பா? என தெரியவில்லை.  ஆனால் என்றாவது ஒருநாள் எல்லோரின் முன்பும் அவமானப்பட்டு தலைக் கவிழ்ந்து நிற்பது அந்த பெண் தான்.....

அப்படி அந்த கணவன் என்ன தான் செய்து விட்டான் என்கிறீர்களா ? மனைவியின் பெயரில்  கார், வீடு, நிலம், தோட்டம் என சொத்துக்களை வாங்குவது அல்லது தன் பெயரில் இருந்து மனைவியின்  பெயருக்கு மாற்றுவது. பெரும்பாலான அப்பர் மிடில்கிளாஸ் குடும்பங்களில் இதுதான் நடை முறை.  நல்லது தானே. இதில் என்ன பிரச்னை உங்களுக்கு என தோன்றுகிறதா ... 

எல்லாம் நன்றாக சென்றுக் கொண்டிருக்கும் வரை எந்த பிரச்சனையும்  இல்லை. மனைவிக்கும் பெருமையாக இருக்கும், உறவினர்கள்/நண்பர்கள்  முன்னிலையில்  கணவன், 'என் பெயரில் எதுவும் இல்லப்பா எல்லாம் என் மனைவி பேர்ல தான் இருக்கு' என்று சொல்லும்போது...!  இதே கணவன் ஒரு சூழ்நிலையில் மனைவியின் கையொப்பம் இட்ட காசோலையை கொடுத்து வட்டிக்கு பணம் கடன் வாங்குவான்.  ஒன்று பலவாகி ...மனைவியும் கணவன் தானே அவருக்கு தெரியாதா என கேட்கும் போதெல்லாம் கையெழுத்து போட்டுக் கொடுக்கிறாள் என்றால் அவள் தலையில் அவளே மண்ணை அள்ளி போட்டுக்கொள்கிறாள் என்று அர்த்தம் !

எங்களுக்கு தெரிந்த நண்பர் ஒருவரது குடும்பம் வசதியானது, சொந்த தொழில், அருமையான மனைவி  ஆண் ஒன்று பெண் ஒன்று என இரு குழந்தைகளுடன் சந்தோசமான நிறைவான வாழ்க்கை. வெளியில் இருந்து பார்க்கும் எங்களுக்கு தெரிந்தது இவை மட்டும் தான். கடந்த வருடம்  நண்பர்  ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார். துக்கத்திற்கு வந்தவர்களில் கடன்காரர்களின் எண்ணிக்கைத்தான் அதிகம். அத்தனை பேரும் கணவரை இழந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும்  மனைவியை சூழ்ந்துக்  கொண்டு எனக்கு கொடுக்க வேண்டியப்  பணத்தை எப்போ தர போறிங்க...? சீக்ரம் கொடுக்க ஏற்பாடு பண்ணுங்க? இவருக்கு இப்படி திடீர் சாவு வரும்னு எதிர்பார்கலையே, எங்களுக்கு ஒரு பதிலை சொல்லிட்டு மறுவேலை பாருங்க' என்ற மிரட்டும் விதத்திலுமாக பலரும் மாறி மாறி பேச நிலைகுலைந்துப் போய்விட்டார் மனைவி. இத்தனை பேரிடமா பணம் வாங்கி இருப்பார்? ஆதாரம் என்ன? மனதில் தோன்றியதை கேட்டும் விட்டார். எல்லோரின் ஒட்டு மொத்த பதில் 'உங்களின்  கையெழுத்து போடப்பட்ட  பிளாங்க் செக் கொடுத்திருக்கிறார்'

கணவர் கேட்கிறார் என்பதற்காக சரியாக விசாரிக்காமல் கேட்டதும்  கையெழுத்து போட்டு கொடுத்ததன் பலன் இதுவென மிக தாமதமாக புரிந்து கொண்டார் மனைவி.  வந்தவர்கள் சொன்ன கணக்குப் படி பார்த்தால் தொகை 2 கோடியை தாண்டுமாம். எல்லோரையும் பார்த்து ஒரு நாலு  மாசம் டைம் கொடுங்க, அடைச்சிடுறேன்' என மெல்லிய குரலில் கூற இவ்வளவு நாள் நெருங்கிப் பழகிய மனிதனின் சடலத்தை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்து 'சொன்னப்படி கொடுத்துடுங்கமா' என்று சொல்லிவிட்டு கடந்துச்  சென்றே விட்டது அந்த கூட்டம்.

துக்கத்திற்கு வந்த உறவினர்களின்  கூட்டம் அகன்றதும்  கணவரின் டைரியில் விவரங்கள் ஏதும் எழுதி வைத்திருக்கிறாரா என   தேடித் பார்த்திருக்கிறார்.  வங்கியில் லோன் வாங்கியது உட்பட ஒரு சில கணக்குகள் மட்டுமே இருந்தன. வாய் மூலமாக நம்பிக்கையின் பெயரில் வாங்கியவையே  அதிகம் என்ற உண்மை புரிந்து அதிர்ந்துவிட்டார். இன்சூரன்ஸ் பணம், வங்கி சேமிப்பு, நகைகள் மூலமாக  ஓரளவு கடன் தொகை அடைக்கப்பட்டது. 'நான் ஜாமீன் போட்டு வாங்கிக் கொடுத்தது மேடம்' என்று அவரது கம்பெனியின் மேனேஜரும் ஒரு செக்கை நீட்ட யாரை நம்பி எந்த காரியத்தை ஒப்படைப்பது என திணறிவிட்டார். குழப்பத்தின் உச்சத்தில் ஆறு மாதங்கள் ஓடி விட்டது, . அப்போது கோர்ட்டில் இருந்து இவரது பெயருக்கு ஒரு நோட்டிஸ் வந்தது செக் மோசடி என்று !!

நன்றாக சென்றுக் கொண்டிருந்த நிறுவனத்தின் லாபத்தை கணக்கில் கொண்டு புதிதாக இரண்டு தொழில்களில் கணவர் முதலீடு செய்திருக்கிறார். மேலும் வெளியே தெரிந்தவர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கி இருக்கிறார், இறக்கும் வரை வட்டியை சரியாக கட்டியே வந்திருக்கிறார், இன்னும் இரண்டு வருடங்களில் வட்டியுடன் அசலையும் அடைத்துவிடலாம் என்று அவர்  கணக்கு போட்டிருக்கிறார். ஆனால் விதியின் கணக்கு ?!

'பெண்' என்றால் 

இப்படியாக ஏற்படும் பிரச்சனை ஒரு விதம் என்றால் அடுத்தவருக்கு ஜாமீன் கையெழுத்து போடுவது அல்லது அடுத்தவருக்காக  இவர் கடன் பெற்றுத் தருவது என மற்றொரு விதம் இருக்கிறது. இது மிக ஆபத்தானது, இதில் இருவருக்கும் நடுவில் நடைபெற்ற பணப்பரிவர்த்தனை  கணவன் சொல்லாமல் மனைவிக்கு தெரிய வாய்ப்பே இல்லை. பணம் திருப்பித் தருவது தாமதமானால் கணவன் இருக்கும்/இல்லாத பட்சத்தில் மனைவியை மிரட்டுவது கண்டிப்பாக நடக்கும், கொடுமை என்ன வென்றால் சம்பந்தப் பட்ட இருவருமே இவரை சாடுவார்கள். ஏதுமறியா மனைவி என்ன செய்வார்?  பேச்சுக்கு வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம் என் முன் வைத்தா என் கணவரிடம் பணத்தை கொடுத்தீர்கள், எனக்கு இதை பற்றி ஒன்றும் தெரியாது' என்று ஆனால் 'நீதானமா அவரோட மனைவி உனக்கு சம்பந்தம் இல்லைனா எப்படி' என தொடங்கும் பேச்சு ஒரு கட்டத்தில் ஆபாசப் பேச்சாக மாறும். எதிரில் நிற்பது 'பெண்' எப்படி வேண்டுமானாலும் திட்டலாம் என்பது நமது சமூகத்தின் சாபக்கேடு ஆயிற்றே.

பணத்தேவை அவசரம் என்றால் வெகு சுலபமாக செக் கொடுத்து பெற்றுக் கொள்கிறார்கள், சில காலம் கழித்து கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை என்றதும் சிறிதும் யோசிக்காமல் கோர்ட் படியேறி விடுகிறார்கள். பெண் பெயரில் கொடுக்கப்  பட்ட செக் என்றால் அவசியம் பெண் நீதிமன்றம் சென்றாக   வேண்டும்,  எனக்கு இங்கெல்லாம் சென்று  பழக்கமில்லை என்று சமாளிக்க முடியாது. கூண்டில் ஏறி நின்று  நான் சொல்வதெல்லாம் உண்மை என்று சத்தியம் செய்து தான் ஆகவேண்டும்.

கணவன் இறந்தப்பின் அந்த  மனைவி படும் துன்பம் கொஞ்ச நஞ்சமில்லை... அடுப்படி, வாசப்படி, குழந்தைகள் என்று இருந்தவர் தற்போது கோர்ட்டுக்கும் வக்கீல் வீட்டுக்குமாக அலைந்துக் கொண்டிருக்கிறார். சொத்துகளின் மீது வாங்கப்பட்ட கடன் என்பதால் அவற்றை விற்பதும் சிக்கலாக இருக்கிறது... சந்தர்ப்பவாதிகள் மிக குறைவான விலைக்கு கேட்பதுவும் நடக்கிறது.

கணவனின் சந்தோசத்தில் பங்கு கொண்டவர் கஷ்டத்திலும் பங்கு கொண்டால்  என்ன என்ற கேள்வி எழலாம். கணவருக்காக எதையும் செய்யலாம் தான் ஆனால் நேற்று வரை மனைவி என்பவள் தன்னில் சரிபாதி எதாக இருந்தாலும் இருவருக்கும் தெரிந்தே இருக்கவேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் வேலை  புருஷ லட்சணம்  என்பதை போல கணவர்கள் இருந்தால் அவர்களின் மனைவி உண்மையில் பரிதாபத்துக்கு உரியவர்கள் தான்.

பிசினஸ் மக்களுக்கு கடன் வாங்குவது என்பது ஒரு வகை பணப் பரிமாற்றம் அவ்வளவு தான். பிசினஸ் பொறுத்தவரை அவர் செய்தது அனைத்தும் சரியே. ஆனால் குடும்பத்தை நடுத்தெருவில் அல்லவா அவர் நிறுத்திவிட்டு  போய்விட்டார். யாருக்கு எப்போது என்ன நேரும் என்று சொல்லமுடியாது. நிலையாமை என்பதை அடிக்கடி நினைத்துப் பார்த்தால்  இது போன்ற சிக்கல்கள் ஏற்படாது. மனைவியின் பெயருக்கு இடம் வாங்குவதும், தனது சொத்தை எழுதி வைப்பதும்  பெரிதல்ல, அதை பற்றிய முழு வரவு செலவையும் மனைவியிடம் அவ்வபோது சொல்லிவிடவேண்டும். அப்படியெல்லாம் ஒவ்வொன்றையும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்பவர்கள் மனைவியின் பெயருக்கு சொத்துக்களை மாற்றாமல் இருப்பது உத்தமம்.

யாருக்காக சம்பாத்தியம் 

தனது பெயரில் கணவருக்கு சொத்துக்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்ட கணக்குகளை   வீட்டினருக்கு தெரியும் அளவில் எழுதி வைக்கவேண்டும். கம்பெனியின் நிர்வாகத்திற்காக மேனேஜர், அக்வுண்டன்ட், ஆடிட்டர் , குடும்ப வக்கீல் என்று பலர் இருந்தாலும் யாரையும் நம்பமுடிவதில்லை. பண வரவு செலவுகளைப் பொறுத்தவரை கணவன் மனைவி இருவருக்கும் தெரிந்திருப்பது நல்லது.

குடும்ப நண்பரின் மனைவி படித்தவராக இருந்தும் தொழில் சம்பந்தமான பண பரிவர்த்தனைகளை மனைவிடம் பகிர்ந்துக் கொள்ளாதது  சுத்த அசட்டுத்தனம். தொழிலை விரிவுப் படுத்துகிறேன் பேர்வழி என்று அகலக்கால் வைப்பது அவரவர் விருப்பம். கடனுக்கு ஈடாக  மனைவியின் செக்கை பயன்படுத்துவதும் தவறில்லை, ஆனால் அதன் முழு விவரத்தையும்  மனைவிக்கு தெரிவித்து விடவேண்டும்.  'பொம்பளைங்கிட்ட எல்லாத்தையுமா சொல்லிக்கிட்டு இருப்பாங்க' என்பதே 'இன்றும்' பல ஆண்களின் எண்ணமாக இருக்கிறது.    

கணவன் மனைவி உறவு என்பது ஒளிவுமறைவு அற்ற வெளிப்படையான ஒன்றாக இருக்கவேண்டும். இருவரில் யாரோ ஒருவர் தனக்கு பிடித்த மாதிரி மட்டும் சுயநலமாக செயல்படுவதால் நேரக் கூடிய இன்னல்களால் நேரடியான பாதிப்பு அவர்களின் குழந்தைகளுக்குதான். டீன்ஏஜ் பிள்ளைகள் வீட்டில் இருந்தால் அவர்களுக்கும் வீட்டின் பொருளாதார நிலை தெரிந்திருப்பது நல்லது. பல சமூக அவலங்கள் பணத்தால் தான் ஏற்படுகிறது  என்ற நினைவில் வைத்து ஒவ்வொன்றையும் கவனமாக கையாளவேண்டும்.

சம்பாதிப்பதும் சொத்து சேர்ப்பதும் குடும்பத்தினரின் நிம்மதியான வாழ்வுக்காகத்தான். நமது இருப்பும் இறப்பும் நல்ல நினைவுகளாக மட்டுமே பதிய வேண்டும், அது ஒன்றுதான் நமது வாழ்வை அர்த்தமுள்ளதாகும்.

தனது பெயரில் சொத்துகள் இருப்பதால் மனைவி கணவருக்கு கொடுக்கும் நெருக்கடிகள் பற்றி அடுத்த பதிவில்...

தொடர்ந்து பேசுகிறேன்...

உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா.

  



திங்கள், பிப்ரவரி 8

ஒரு பதிவும் எதிர்வினையும் எனது நிலைப்பாடும்...!

Liquor drinking is injuries to health



பெண்கள் மது குடிப்பது தொடர்பான எனது  பதிவு ஒரு சிலருக்கு சரியானப் புரிதலை ஏற்படுத்தவில்லை என்று நினைக்கிறேன். நண்பர் வருண் நெகடிவ் வோட் போட்டு தனது எதிர்ப்பைத் தெரிவித்து இருந்தார். அவ்வாறு நேரடியாக தெரிவிக்காதவர்கள் இருந்தால் அவர்களுக்கும்  இந்த பதிவு ஒரு புரிதலைக் கொடுக்கலாம், அல்லது கொடுக்காமலும் போகலாம் ஆனால் தெளிவுப் படுத்துகிறேன் பேர்வழி என எழுதுவது எனது ஆகச் சிறந்த கடமையாகிவிட்டது தற்போது ! :-)  

///நீங்க புதுமைப் பெண்களுக்கு,புருஷன் குடிச்சான்னா நீயும் அவனைவிட ரெண்டு மடங்கு குடி! அப்போத்தான் அந்த நாய் திருந்தும் என்பதுபோல் அறிவுரை சொல்வது மொத்தமாக எல்லோரும் நாசமாப்போவதுக்கு வழி வகுப்பது.///

இது போன்ற ஒரு அறிவுரையை எனது பதிவில் நான் குறிப்பிடவில்லை...அதுவும் தவிர  அந்த பதிவிலேயேக் குறிப்பிட்டு இருந்தேன், 'பெண்கள் குடிப்பதற்கு நான் வக்காலத்து வாங்கவில்லை, ஆணுக்கு சமம் என்பதைக் குடிப்பதன் மூலம் பெண்கள் நிரூப்பிக்கக் கூடாது' என்று.  நண்பர் வருணின் மொத்த கருத்துரையும் தவறானப் புரிதலின் காரணமாக வெளிவந்தவை. புரிதலின்மை என்பதற்காக ஒவ்வொருத்தருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருப்பதும்  இயலாத காரியம்.  இருப்பினும் மதுவைக் குறித்து சமயம் வாய்க்கும்போதே எழுதிவிட வேண்டும்  என்பது எனது எண்ணம். ஏனென்றால் என்னிடம் ஆலோசனைக்கு வருபவர்களின்   பிரச்சனையின்  மூலக் காரணம்  மது. ஏதோ ஒன்றை மறக்க/நினைக்க மதுவைத்  தொடுகிறார்கள் பிறகு விடமுடியாமல் தொடருகிறார்கள்.   

மது அருந்துவதை குற்றம் என்று சட்டம் சொல்லவில்லை அதனால்தான்   அரசாங்கம்  விற்கிறது.  டாஸ்மாக் வாசலில் பெண்கள் குடிக்கக்கூடாது, பெண்களுக்கு இங்கே மது விற்கப்படாது என்ற போர்டு இல்லை. பெண்கள் மதுக் குடிப்பதை பற்றிய கவலை அரசிற்கே இல்லை அதுவும் பெண் ஆட்சி செய்யும் மாநிலத்தில்... அப்படி இருக்க ஆண் குடித்து கும்மாளம் போட்டால்  ஒதுங்கிப்போகும் ஆண்கள், பெண் என்றதும்  கேலி கிண்டல் கூச்சல் கூப்பாடுப் போடுவதும், அதிலும் பெண் குடித்தால் என்ன தவறு என்று கேட்ட  பெண்ணை, நாலு பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்வதுதான் சரி  என்று சொல்வதும் வக்கிரத்தின் உச்சம். 

பெண் குடிப்பதால் பல பிரச்சனைகள் ஏற்படும் என்பது எனக்கும் தெரியும். ஆணுக்கு ஏற்படுவதை விட அதிகமான பிரச்சனைகள் உளரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஏற்படும்.   ஒரு குடும்பம் ஆண் குடித்தாலும் தெருவுக்கு வரும், பெண் குடித்தாலும் தெருவுக்கு வரும். மேல் தட்டு மக்களில் ஆண் பெண் குடிப்பது தற்போது ஒரு கலாச்சாரமாக மாறிவிட்டது. பார்ட்டிகளில் குடிப்பது தான் அவர்களை பொறுத்தவரை நாகரீகம்.  அவர்கள் குடிப்பதால் அவர்களுக்கோ சமுதாயத்திற்கோ பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை... (அவர்கள் குடித்து விட்டு கார் ஒட்டி ஆளைக் கொன்*றாலும், சாட்சிச் சொன்ன எளியவர் பாதிக்கப்படுவாரேத் தவிர கொன்*றவர் சகல சௌபாக்கியத்தோடு வாழலாம்)  அதே சமயம் மதுவால் எளிய மக்களின் வாழ்வாதாரமே தற்போது கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது. அவர்களின் வீடுகளில் யாரோ ஒருவராவது குடிக்கு அடிமையாகி இருக்கிறார்கள்.  அதிகரித்துவிட்ட குடிப்பழக்கத்தால் பெண்கள் தான் அதிகளவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி பாதிக்கப்படுகிறாள்.  கொ*லை கொள்*ளை பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் புரியும் அத்தனை பேரும் குடிப் பழக்கம் உள்ளவர்களாகவே இருக்கிறார்கள்... இருப்பார்கள் !
   
என்னைப் பொறுத்தவரை பிரச்சனைக்கு என்ன காரணம் என்று பார்க்கவேண்டுமே தவிர பிரச்சனைக்குரியவர்களைத் தூற்றுவது  சரியல்ல.   பெண் குடிக்கிறாள் என்று கூச்சலிடுவதை விட அவளும் குடிக்கத் தொடங்கியதற்குக் காரணம் என்ன என்று பார்க்கவேண்டும்.   அவள் குடிப்பதைத் தடுக்க அல்லது குறைக்க முயற்சிச் செய்வதை விட்டுவிட்டு குடிக்கிறாளே என்று கூச்சலிட்டு அவளை இழிவுப் படுத்துவதால் பிரச்சனை இன்னும் தீவிரமாகும். ஏனென்றால்  பெண்ணுக்கு எதிராக எதை செய்தாலும் சொன்னாலும் அதை மீற வேண்டும் என்பது  பெண்களின் புத்தியில் புதிதாகப் பதிந்துவிட்டது.   குடிப்பது தவறு என்று அவளுக்கும் நன்கு தெரியும், ஆனால் அதை ஆண் கேவலப்படுத்தும் போது குடித்தால் என்ன தப்பு என்று எதிர்த்துக் கேட்கிறார்கள் செய்கிறார்கள். ஆண்டாண்டு காலமாக பெண்ணை  அடிமையாக நடத்தியதன் விளைவு இது.  கர்சீப் கூடவே கூடாது என்று வற்புறுத்திப் பாருங்கள், நாளையே கர்சீப் உடுத்தும் போராட்டம் தொடங்கிவிடவும் வாய்ப்பு இருக்கிறது. முத்தப்போராட்டதை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள் என்று எண்ணுகிறேன்.  

///This is how it started among men too. First 1% started consuming, now it is almost 100% The same thing would happen with women. I dont understand why women should be treated "gently" and "alcohol should be blamed" rather than blaming consuming women.
I am completely against your view in this issue, my respectable friend, Mrs.Raj! We should not use two different balances to weigh men and women's alcohol consumption. Let us blame the consumer not the ethyl alcohol, even if it is a "poor woman"! Then only it is fair after all.///

மது அருந்தாத ஆண்கள் குடித்து கும்மாளம் போடும் ஆண்களை திட்டி தீர்க்காமல் பெண்களை மட்டும் திட்டுவது ஏன்? பெண்கள் குடித்தால் சீரழியும் சமூகம் ஆண்கள் குடித்தால் வளர்ச்சி அடையுமா என்ன ?  சமூகத்தின் மீது இதுவரை  இல்லாத அக்கறை பெண் குடிக்கிறாள் என்றதும் வந்துவிடுகிறது  அதுவே நம் வீட்டுப்பெண்ணாக  இருந்தால் பொதுவெளியில் இழுத்து வைத்து கும்மி அடிக்க மாட்டோம்.   ஒவ்வொரு ஆணும் உங்கள் வீட்டுப் பெண்கள் குடிப்பவர்கள் என்பதை அறிந்தால் விமர்சனத்தை அங்கே இருந்து தொடங்குங்கள்.  திருத்துங்கள்.  வளமாகட்டும் நம் சமூகம்.

மது என்னும் அரக்கன் 

உடுமலைபேட்டையில் நாங்கள் குடியிருந்த போது தெருவில் குப்பைகளைச் சேகரிக்கும்  பெண்கள் வேலை முடிந்ததும் ஒரு ஓரமாக சுற்றி அமர்ந்து  மிக கேசுவலாக இடுப்பில் இருக்கும் பாட்டிலை  எடுத்து ஆளுக்கு ஒரு கிளாஸில் ஊற்றி பேசிக் கொண்டே மெதுவாக அருந்துவார்கள். பெண்கள் குடிப்பதை நேரடியாக முதல் முறை பார்த்ததும் மிகவும் ஆச்சர்யம் + அதிர்ச்சி !   அவர்களிடம் சென்று ஆணுக்கு பெண் சமம் என்பதை நிரூபிக்க இப்படி குடிக்கிறீர்களா என்று கேட்பது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் பெண்கள் குடிக்க பெண்ணுரிமையைக் காரணம் காட்டுவது. 

என்றோ ஒருநாள் மதுவை கையில் எடுப்பதற்கும். தினமும் குடிக்காமல் இருக்க முடியாது என்ற நிலைக்கும் வித்தியாசம் அதிகம். ஆண்கள் அளவிற்கு பெண்களால் தினமும் குடிக்க முடியுமா என்ற சந்தேகம்  உடுமலைபேட்டையில் நீங்கியது.  செய்யும் வேலையில் ஏற்படும் களைப்பை /உடல் வலியை மறக்கலாம் என்று மதுவை நாடும்  ஏழை எளிய பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.  கணவன் மனைவி இருவரும் சேர்ந்துக் குடிக்கும் குடும்பங்களும் உண்டு.  மதுவை கையில் எடுத்தால் தான் அன்றைய தினம் நன்கு தூங்கி மறுநாள் வேலைக்கு ஆயுத்தமாக முடிகிறது  என தலையில் அடித்து சத்தியம் செய்வார்கள் போல...

தினமும் வேலை பார்த்து சம்பாதிக்கும் பணத்தில் கணிசமான தொகையை குடிக்க என்று ஒதுக்குகிறார்கள். எங்கள் வீட்டிற்கு கட்டிட வேலைக்கு வந்தவர்களிடம் ஐநூறு ரூபாய் சம்பளத்தை அப்படியே சேர்த்து வச்சா கம்பியூட்டர் வேலை பாக்குறவங்க  அளவு மாச வருமானம் வரும் அப்புறமென்ன கவலை என்றதற்கு  ' வீட்ல முன்னூறு ரூபா கொடுப்பேன் மிச்சம் என் செலவுக்கு உடம்பு வலிக்கு மருந்து போட்டாத்தான் நாளைக்கு வேலைக்கு வரமுடியும்' என்று அவ்வளவு பொறுப்பாக(?) பதில் சொன்னார்கள். மது உடல் வலி போக்கும் மருந்து என புரிந்து வைத்திருக்கும் எளிய மக்களிடம் எதை சொல்லி மது குடிக்காதீர்கள் என சொல்வது.  அற்ப ஆயுசு என்றாலும் எல்லோரும் ஒரு நாள் சாகத்தானே போகிறோம் என்று தத்துவம் பேசுகிறார்கள்.

சந்தோஷம்,  திரில் கிடைக்கும் என்பதற்காகக் குடிக்கத் தொடங்கும்  படித்த பெண்கள் ஒரு கட்டத்தில் முழுமையாய் போதையில் மூழ்கி விடும் வாய்ப்பு இருக்கிறது.   அப்படிப் பட்டவர்களை எவ்வாறு மீட்டெடுக்கப் போகிறோம் . ஒரு பிரச்சனையின் வேர் எங்கே இருக்கிறது அதை களைவது எவ்வாறு என்று தான் வலியுறுத்த வேண்டுமே தவிர வீணான வெட்டிப் பேச்சுக்களில்     பெண்ணை துகில் உரித்து வன்*புணர்வு செய்துவிடுவேன் என்று மிரட்டுவதில் இல்லை என்பதை இளைய சமூகம் புரிந்துக் கொள்ளவேண்டும்.

நண்பர் பயப்படுகிற  மாதிரி ஒரு சதவீத குடிக்கும் பெண்கள் அதிக சதவீதத்தை எட்டும் என்ற பயம் எனக்கும் இருக்கிறது. அதனால் தான் சொல்கிறேன் மது விற்பனையை முறைப்படுத்த வேண்டும் அல்லது மதுவிலக்கைக் கொண்டு வரவேண்டும்.  கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கும் மதுவை மாநிலம் தாண்டியோ , உள்ளூரில் திருட்டுத் தனமாகவோ எல்லா பெண்களாலும் வாங்க முடியாது.  அப்படியென்றால் குடிக்கும் பெண்களின் சதவீதம் அதிகரிக்க வாய்ப்பில்லை தானே.

பொண்ணுங்களாம் குடிக்கிறார்கள் என்று கூச்சல் போடும் போது  அதுவரை தெரியாதவர்களுக்கு அது ஒரு விளம்பரம் ஆகிவிடுகிறது. சில நாட்களுக்கு முன் என்னை பார்க்க வந்த ஒரு இளம்பெண், இப்ப கேர்ள்ஸ் டிரிங்க்ஸ் பண்றாங்களாம்  குடிச்சா என்ன மேடம் தப்பு, அப்டி அதுல என்ன இருக்கு குடிச்சு பார்ப்போமேனு எனக்கு தோணிக்கிட்டே  இருக்கு'. என்று பேச்சோடுப் பேச்சாகச்  சொன்னாள். உண்மை என்ன தெரியுமா அந்த பெண் ஏற்கனவே குடிப்பழக்கம் உள்ளவள், அதற்கு நியாயம் கற்பிக்க என்னிடம் இப்படி கேட்கிறாள். இதே மனநிலை நிறைய பெண்களுக்கு இருக்கிறது ஆண் வேண்டாம் என்று எதையெல்லாம் சொல்கிறானோ அதை எல்லாம் செய்து பார்க்கணும் என்ற எண்ணம்.  அது உடை தொடங்கி  குடி என்று  தொடருகிறது.  இதற்கு தான் நான் அஞ்சுகிறேன். எதிர்பாலினம் எதிரி பாலினமாக மாறிக் கொண்டிருக்கும் விபரீதத்தை நேரில் பார்த்துக் கொண்டிருப்பதால் எனக்கு ஏற்பட்ட அச்சம் இது...

நான் பதிவில் குறிப்பிட்ட 'வற்புறுத்த' என்ற வார்த்தை முக்கியம். மது அருந்தினால் ஆரோக்கியம் கெடும் என அறிவுறுத்தலாம் ஆனால் வற்புறுத்துவது என்பது எதிர்விளைவையே கொடுக்கக்கூடும். எதை வலியுறுத்த முயலுகிறோமோ அது வலிமையாகிக் கொண்டேப்  போகிறது.

எனது நிலைப்பாடு :-

பெண்களுக்கு ஒன்று என்றால்  கண்மூடித்தனமாகப் பொங்குவதல்ல  எனது வேலை... காலங்காலமாக பெண் அடிமைப்பட்டுக்  கிடக்கிறாள் ஆதரவு தந்து இரக்கம் காட்டுங்கள் என்று கெஞ்சவும் நான் வரவில்லை... சொல்லப் போனால் உங்களின் கழிவிரக்கம் பெண்ணுக்கு தேவையேயில்லை.  பெண் அனைத்தையும் விட மேலானவள்...இந்த  மனித சமுத்திரத்தின் வேரானவள் !

விதிவிலக்குகள் இருக்கலாம் அதை தவிர்த்து  பெண்ணை விமர்சிக்கலாம்  நாகரீகமாக... பெண்ணை  கிண்டல் செய்யலாம்  நட்பாக... பெண்ணைப்  பற்றி பேசலாம்  வெளிப்படையாக...!  ஒவ்வொரு பெண்ணை விமர்சிக்கும் முன்பும் உங்கள் வீட்டுப் பெண்களை தயவுசெய்து  நினைத்துக் கொள்ளுங்கள் தரக்குறைவான வார்த்தைகளைத்  தவிர்க்கலாம் !!! இதைத்தான் ஆண் பெண் இருவரிடமும் எதிர்பார்க்கிறேன்.

பெண் குடித்தால் அவள் உடல் மனம் பாதிக்கப் படும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், பலருக்கும்  பெண்களை இழிவுப் படுத்த இது இன்னொரு வழி அவ்வளவே.  ஆண் குடிகாரனாக மாறுவதற்கும் பெண்ணே காரணம் என குற்றம் சாட்டவும் ஒரு கூட்டம் இங்கே உண்டு. குழந்தைப் பெறும் பெண் குடிப்பது குழந்தையைப் பாதிக்கும் என்பதே பலரின் ஆகச் சிறந்த அறிவுரை, அப்படியென்றால் குழந்தைகளைப் பெற்று வளர்த்து  35/40 வயதைத் தாண்டிய பெண் குடிக்கலாம் என்றால் ஒத்துக்கலாமா ? ஆண் பெண் யார்  (அளவுக்கு மீறி) குடித்தாலும் பிரச்சனைத் தான் என்று செய்யப்படும் விழிப்புணர்வு ஒன்றுதான் தற்போது சமூகத்திற்கு அவசியம். அதை விடுத்து பெண்ணை கைக்காட்டிவிட்டு ஆண் தப்பித்துக்கொள்வதை  சமூக வலைத்தளத்தில் இயங்குபவர்கள்  ஊக்குவிக்கக் கூடாது.

தவிர இன்னும் எத்தனை காலத்திற்கு தான் பெண்ணை கிள்ளுக் கீரையாக கருதுவீர்கள், எது சரி எது தவறு என்று அவளுக்குப் பகுத்தறியத்  தெரியும். தெரிந்தே தவறுவது ஆண் பெண் எல்லோருக்கும் பொது. பெண்ணைப் பற்றிய எந்த விமர்சனமும் எல்லை  மீறி பெண்மையைக் கேவலப்படுத்தி  துன்புறுத்தும் அளவிற்குப் போகக் கூடாது. அவ்வாறு போகும் போதெல்லாம் பெண்கள் குரல் கொடுக்கத்தான் செய்வார்கள்.  

குறிப்பு :-

நண்பர் வருணின் பின்னூட்டத்தின் தொடர்ச்சியாக  இந்த பதிவை எழுதினேன், ஆனால் எழுதி முடித்ததும் பொதுவான ஒரு பதிவாக மாறி இதைப் பற்றி இன்னும் நிறைய எழுதவேண்டும் என்றும் தோன்றிவிட்டது. கருத்துக்களில் என்ன எதிர் நேர்? எதாக இருந்தாலும் என்னை யோசிக்கவும்  எழுதவும்   வைப்பது  நல்லது தானே. அதற்காக நண்பர் வருணுக்கு என் அன்பான நன்றிகள்!


போலி உறவுகளின் ஈர்ப்பு...!? தாம்பத்தியம் - பாகம் 33

"இந்த ஆம்பளைங்க  ஏன்  இப்படி இருக்காங்க...????"  ரிங் ஆன செல்போனை ஆன் செய்து ஹலோ சொன்ன அடுத்த செகண்ட் இந்த கேள்வி காதை அறைந்தது? ஆ...