'தாம்பத்தியம்' தொடர் தொடர்பாக வரும் மெயில்களை வாசிக்கும் போதும் கவுன்சிலிங் செய்யும்போதும் தம்பதிகளின் சில பிரச்சனைகளை அறிந்து ஆச்சர்யத்தின் எல்லைக்கு சென்றுவிடுகிறேன். இப்படியெல்லாமா சந்தேகம் வரும்? இதுக்கூடவாத் தெரியாது? அதுவும் குழந்தைகள் பிறந்து இத்தனை வருடம் கழித்தா? இதுக்காகவா விவாகரத்து? என எழும் பல அந்தரங்கக் கேள்விகளுக்கு விடையாக தனியாக ஒரு தொடர் எழுதினால் என்ன என்று தோன்ற.... இதோ எழுதத்தொடங்கியே விட்டேன்...
பாலியல் பற்றிய எனது முந்தைய கட்டுரைகளில் எப்படிங்க ஒரு பெண்ணா தைரியமா இதை எழுதுறிங்க, உங்க துணிச்சலை பாராட்டுகிறேன் என்ற ரீதியில் வரும் கேள்விகள் கோபத்தையும் சிரிப்பையும் ஒன்றாக வரவழைக்கும். உண்மையில் இதற்கான பாராட்டை ஒரு அவமானமாக உணருகிறேன். இயற்கையாக ஆணைவிட அதிக மன தைரியம் கொண்ட பெண் தன் சம்பந்தப்பட்ட பாலியலை பேசுவதற்கு ஏன் தயங்க வேண்டும். பெண்ணின் உணர்வுகள் உணர்ச்சிகள் பெண்ணால் சொல்லப்படும்போது தான் முழுமை பெறும்.
பெண் இதையெல்லாம் செய்யக் கூடாது என்ற கட்டமைப்பை ஏற்படுத்தி அதை மீறும் பெண்களை பெண்ணியவாதி , புரட்சிப்பெண் என்று பெயரிட்டு சக பெண்களை விட்டு அவர்களை தள்ளியே வைத்திருக்கிறது இந்த உலகம். ஒரு ஆண் மருத்துவராக இருந்தாலுமே அவரால் உணர்ந்துக்கொள்ள முடியாத பல விசயங்கள் பெண்ணிடம் உண்டு என்பதை அறியும்போது தான் பெண் என்பவள் போகப்பொருள் அல்ல போற்றப் படவேண்டியவள், என்பதும் பாலியல் அத்துமீறல்களுக்கு மறைமுகமாக பெண் எவ்வாறு காரணமாகிறாள் என்பதையும் உலகம் புரிந்துக் கொள்ளும்.
பாலியலைப் பற்றி பெண் எழுதினால் மட்டுமே இது சாத்தியமாகும். காமம், காதல் பற்றி பெண் அதிகம் பேசவேண்டும், அப்போதுதான் இதுவரை மறைத்து வைக்கப்பட்டுள்ள பக்கங்கள் புரட்டிப் பார்க்கப்படும். தற்போது இணையத்தில் இயங்கிவரும் அத்தனை பெண்களும் பாலியல் பற்றி எழுதவேண்டும், பேசவேண்டும்! அவ்வாறு பெண் பேச முன்வரும்போது இந்த உலகம் தனது வாயைகே கொஞ்சம் மூடிக் கொள்ளட்டும். எனவே இனியாவது அர்த்தமற்ற கேள்விகள் எழாமல் இருக்கட்டும் !!!
பேசாப் பொருளா காமம்?
சித்தர்கள் யோகிகள் புனிதர்கள் முனிவர்கள் பெரியோர்கள் மூத்தோர்கள் ..... என அத்தனை ஆண்களும் பெண் என்றால் பேய், பெண்ணுறுப்பு என்பது எமன், அருவருப்பு அசிங்கம் பாவத்தின் பிறப்பிடம்... அப்டியாக்கும் இப்டியாக்கும் என்று இஷ்டத்திற்கு எக்கச்சக்கமாக எழுதி/பாடி வைத்துவிட்டு சென்றுவிட்டார்கள். அவ்வாறு எழுதியதன் ஒரு காரணம் என்னவென்றால் காமத்தின் மீதான பயம், எங்கே தான் இதிலேயே மூழ்கி விடுவோமோ என்ற பயம். காமத்தில் அவர்களால் முழுமைப் பெற முடியவில்லை, அனுபவித்தால் தானே முழுமை பெற ... காமத்தை முழுமையாக உணராமலேயே தூஷிப்பது ஆதிகாலம் தொட்டு இன்றுவரை தொடருகிறது. அதில் முழுமை பெற்றவர் எவரும் காமத்தை நிந்திப்பதில்லை... அமைதியாகவே இருப்பார்கள். அரைகுறைகள் தான் ஆட்டம் போடும். முன்பு பெண்ணை நேரடியாக நிந்தித்து சமாதானம் செய்துக் கொண்டவர்கள் இன்று கலாசாரத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்.
எதிர் பாலினத்திடம் ஈர்ப்பை ஏற்படுத்தியது இறைவன் (ஆன்மிகம்) என்றும் இயற்கை (நாத்தீகம்) என்றும் ஹார்மோன் (விஞ்ஞானம்) என்றும் ஒவ்வொரு கூட்டமும் ஒன்றை காரணமாக சொன்னாலும் அத்தனை பேரும் ஒன்றாக சொல்வது என்னனா 'காமம் தவறு'. தவறு என்றால் இறைவன் இயற்கை விஞ்ஞானம் அத்தனையும் தவறுதானே. ஈர்ப்பு ஏற்பட்டால்தான் உலகில் ஜனனம் நடைபெறும். உலகின் இயக்கத்திற்கு முக்கியக் காரணமான ஒன்றிற்குத்தான் காமம் என்று பெயரிட்டு அதை தவறு என்றும் பேசாப் பொருள் என்றும் மறைத்து வைத்திருக்கிறோம். மனிதன் என்றால் அவனுக்குள் காம உணர்வு எழவேண்டும், அந்த உணர்வை வெளிப்படுத்தும் முறையில்தான் மனிதர்கள் வேறுபடுகிறார்கள்.
இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்றவர்கள் தான் பூஜை அறைக்கதவை அடைத்துவிட்டும் கடவுள் படத்திற்குத் திரையிட்டு மறைத்தும் உடலுறவு கொள்கிறார்கள். வேடிக்கை மனிதர்கள்! வானத்தை கூரையாகக் கொண்டவர்களும் உடலுறவுக் கொண்டு இவ்வுலகில் வாழத்தான் செய்கிறார்கள். அங்கே எந்த சாஸ்திரமும் சம்பிரதாயமும் கடைபிடிக்கப் படவில்லை. உறவு கொண்ட அன்று கோவிலுக்கு போனால் தீட்டு,தோஷம் என்று கடவுளுக்கு சொந்தக்காரர்களாக காட்டிக் கொள்பவர்கள் இந்த கணினி யுகத்திலும் பஜனைப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். காம எண்ணங்களை மனதில் வைத்துக்கொண்டு பூஜை செய்வதை விட அதை வெளியேற்றிவிட்டு பூஜை செய்வது பெட்டெர் என புரிந்து கொண்டவன் கடவுளின் கருவறையை பள்ளியறையாக்கினான் போலும். மனதில் குப்பையும் ஆடையில் தூய்மையுமாய் அத்தனை அக்கிரமங்களையும் ஆண்டவனின் பெயரால் செய்துக்கொண்டு. சின்னஞ்சிறுமிகளிடம் தங்களது வேட்கையை தணித்துக் கொள்ளும் மனித தன்மையற்ற ஈனனுக்கு பெயர் பாதிரியார்.
புலன்களை அடக்குவது நல்லது என அறிந்ததாலேயே விரதம் என்ற ஒன்றை எல்லா மதத்தினரும் ஏற்படுத்தினார்கள். ஆனால் நம்மவர்களோ எப்போதடா விரத காலம் முடியும், விட்டக்குறை தொட்டக்குறைகளை மறுபடியும் புடிக்கலாம் என்ற எண்ணத்திலேயே பாதி நேரத்தைச் செலவிடுகிறார்கள்.
புலன்களை அடக்குவது நல்லது என அறிந்ததாலேயே விரதம் என்ற ஒன்றை எல்லா மதத்தினரும் ஏற்படுத்தினார்கள். ஆனால் நம்மவர்களோ எப்போதடா விரத காலம் முடியும், விட்டக்குறை தொட்டக்குறைகளை மறுபடியும் புடிக்கலாம் என்ற எண்ணத்திலேயே பாதி நேரத்தைச் செலவிடுகிறார்கள்.
பாலியல் உறவை தவிர்த்தால் தான் புனிதமாக முடியும் என்பது மனிதனாக ஏற்படுத்திக் கொண்ட ஒன்று. முற்றும் துறந்த சாமியார் என்று அழைப்பது சரியல்ல உண்மையில் தங்களின் ஆசைக்கு முற்றும்(The End) போடாதவர்களே இன்றைய சாமியார்கள். ஆரம்பத்தில் கடவுளே சரணம் என்றுதான் வருகிறார்கள்...போகப் போக தங்களின் புலன்களிடம் தோற்றுப் போய் விடுகிறார்கள், அப்புறமென்ன அச்சு பிச்சுனு ஏடாகூடமாக நடந்து நம் போன்றோரிடம் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள். புலன் அடக்கம் என்பது எவ்வாறு ஏற்படும், புலன்களை திருப்திப் படுத்திய பின்தானே. எவ்வாறு திருப்திப் படுத்துவது? இதற்குத்தான் ஈர்ப்பு என்ற ஒன்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
அவரவருக்கு ஒரு நியாயங்களை கட்டுகளை வைத்து பேசுகிறார்களேத் தவிர பொதுவான ஒரு நியதி எல்லோருக்கும் ஏற்றதான ஒன்றை யாரும் சொல்வதில்லை , காமத்தையும் இவ்வாறேதான் பாவிக்கிறார்கள். இறைவனுக்கு காமம் ஆகாதென்றால் ஏன் கோவில் பிரகாரங்களில் கோபுரங்களில் உடலுறவு காட்சிகள். இல்லை இது வேறு காரணத்திற்காக வைக்கப்பட்டது என்று ஆயிரம் காரணங்களைக் கூறினாலும் ஒரே காரணம் இறைவனின் விருப்பம் ஆண் பெண் ஈர்ப்பு. உண்ணக்கூடாத கனியை ஏன் உண்டாக்குவானேன், பிறகு அதை உண்ணாதே என்று ஏன் சொல்வானேன், எல்லாவற்றிலும் ஏதோ ஒரு சூட்சமம் இருக்கிறது தானே!
ஆன்மீகத்திற்கு எதிரானதா காமம்.
ஆன்மீகத்திற்கு எதிரானதா காமம்.
துறவிகளுக்கும் புனிதர்களுக்கும் காம உணர்வு எழும், அடக்கிப் பழகினார்கள் அதனால் சாதாரண மக்களிடம் இருந்து தனித்துத் தெரிந்தார்கள். ஆசைக் கொள்ளாதே என்று உபதேசித்தாலும் அவருக்குள்ளும் ஒரு ஆசை இருக்கத்தானேச் செய்தது, உலக மக்களை உய்விக்க வேண்டுமென்ற ஆசை சொல்லப் போனால் இது சாதாரண ஆசையல்ல பேராசை ! இவ்வாறுதான் காமம் தவிர் தவிர் என்று சொல்லும் போதே காமத்தை எண்ணியவர்களாயினர். காமத்தை உணராமல் மனிதன் வாழவே முடியாது இயற்கையாக எழும் உணர்வை சாதாரணமாக அடக்கமுடியாது அதற்கு மிகுந்த பயிற்சி வேண்டும். புத்தனும் அனுபவித்து அறிந்தப் பின்பே அடக்கினான். வயிற்றில் பசி இறுதி மூச்சு வரை இருப்பதைப் போல காமப் பசியும் இருக்கும், அப்படியெல்லாம் இல்லை நான் உத்தமனாக்கும் என்று சாதிக்கிறவர்கள் ஒன்று பொய் சொல்ல வேண்டும் அல்லது உடல் மனதளவில் ஆரோக்கியக் குறைபாடுகள் கொண்டவராக இருக்கவேண்டும்
ஒன்றை முழுமையாக உணராமல் அனுபவிக்காமல் அதை ஒரேயடியாக மறுத்தோ ஏற்றோ பேச இயலாது. பேசினாலும் அரைவேக்காட்டுத்தனமாக இருக்கும், அத்தகைய அரைகுறைகள் நிரம்பியது தான் நமது சமூகம். காமம் என்றாலே மூன்றாந்தர புத்தகங்களில் இருப்பவை மட்டும் தான் என அடித்து பேசுவார்கள் மெத்த படித்த மேதாவிகள். காமம் சரியாகப் புரிந்துக் கொள்ளப் படாததுதான், குடும்பத்தில் அதிகரித்து வரும் விவாகரத்துகள், பாலியல் வன்கொடுமைகள் அனைத்திற்கும் காரணம்.
பின் குறிப்பு:-
பின் குறிப்பு:-
குடும்பம் முதல் எல்லாவற்றிலும் நடைபெறும் 'குற்றங்களுக்கு' பின்னால் ஒரு காரணமாக காமம் இருக்கிறது என்பதை நான் சொல்லவில்லை மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஒன்றை பற்றி என் அறிவுக்கு எட்டிய அளவிற்கு எழுதுகிறேன்...சொற்குற்றம் பொருள் குற்றம் இருந்தால் சொல்லுங்கள், சரி படுத்தித் தெளிவுப் படுத்திகிறேன். அதற்காக விளக்கம் சொல்கிறேன் பேர்வழி என்று படுத்தி எடுக்காதீர்கள் என அன்பாக வேண்டுகிறேன். :-)
கண்டது கேட்டது உணர்ந்தது என எல்லா அனுபவங்களும் சேர்ந்த இந்த தொடரை மொத்தமாக எழுதி வைத்து வெளியிடலாம் என்ற கான்செப்ட் ஒத்துவரவில்லை... (ஏற்கனவே ஏகப்பட்டது டிராப்ட்ல ஒரு பாராவுடன் நிற்கிறது) :-) எனவே எழுதி உடனுக்கு உடன் வெளியிடுகிறேன், continunity விட்டுப் போச்சே என திட்டாதீர்கள். இது கதையல்ல கட்டுரை தானே சோ அட்ஜெஸ்ட்டுங்க பிளீஸ் ...
தொடர்ந்து பேசுகிறேன்...


