திங்கள், டிசம்பர் 21

12:03 PM
32

சென்னை கடலூரை முடக்கிப் போட்ட மழை வெள்ளம் அம்மக்களை மட்டுமல்ல தொலைதூரத்தில் இருக்கும் மக்களையும் மனதளவில் புரட்டிப் போட்டுவிட்டது.  இதுவரை தான் தனது என்று இருந்தவர்களையும் நிறையவே யோசிக்கவைத்திருக்கிறது.  வெள்ளத்தில் தத்தளித்த மக்களை காப்பாற்றுவதிலும் நிவாரண பணிகளை கவனிப்பதிலும் ஈடுபட்ட இளைஞர்கள் தன்னார்வலர்கள் முஸ்லிம் அமைப்பினர் சமூக வலைதள நண்பர்கள் என்று பல பெயர்களில் சொன்னாலும் அவர்கள் அனைவரையும் தேவதூதர்கள் என்றே இனி அழைக்கலாம்.   பிரதிபலன் பாராது உதவிய அத்தனை அன்புள்ளங்களுக்கும் நன்றி என்ற ஒற்றை வார்த்தை சொல்வதை விட  அவற்றை நினைவில் வைத்துக் கொள்வது நமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும். அதிலும் தீவிரவாதிகள் போன்றே  கட்டம் கட்டப்பட்ட இஸ்லாம் சமூக மக்களை பற்றி எழுதாமல் இருப்பது எனக்குள் மனிதநேயம் மரித்துவிட்டதை  போல உணருகிறேன். இஸ்லாமின் ரிஷிமூலம், நதிமூலம் பற்றியே பேசி பேசி சிறுபான்மையினரை சிறுமைப்படுத்துவதை விட அவர்களின் தற்போதைய  சேவைகளை அடிக்கடி பேசுவது எதிர்கால சமூகக் கட்டமைப்பிற்கு நன்மை பயக்கும்.     
நெருங்கிய முஸ்லிம் நட்பு என்று ஒருவர் நம் எல்லோருக்குமே  இருப்பார்கள். அவர்களின் பண்பட்ட குணத்தை அறியும் ஒரு வாய்ப்பு சென்னையில் எனது கல்லூரி காலத்தில் கிடைத்தது. மலையாளம், தெலுங்கு பேசும் தோழிகள், உருது பேசும் முஸ்லிம் தோழி உட்பட நாங்கள் ஆறு பேர். எப்போதும் கலகலப்பான பேச்சுக்களுடன் சுற்றி வருவோம்.  மற்ற தோழிகள்  ஆண்களை பற்றிய கிண்டல் கேலி என தொடங்கினால் இஸ்லாமிய தோழி 'உங்களுக்கு இதை தவிர வேற பேச்சே இல்லையா'  என்று சலித்து எனது கையை பிடித்து இழுத்து அந்த இடத்தைவிட்டு அழைத்துச் சென்றுவிடுவாள்.  கல்லூரியில் படித்த ஐந்து வருடமும் இதே கதைதான் அவர்கள் பேச நாங்கள் ஓட என்று. ஒருமுறை இந்து மத தோழி  விநாயகரை குறித்து மிக ஆபாசமாக கிண்டல் செய்துவிட  இஸ்லாமிய தோழிக்கு வந்ததே கோபம், கத்து கத்து என்று கத்தித் தீர்த்துவிட்டாள், கிண்டல் செய்த தோழி மன்னிப்பு கேக்கும்வரை விடவில்லை... அப்போதில் இருந்தே பிற மதத்தின் நம்பிக்கைகளை மதிக்கும் இஸ்லாமிய மக்களின் மதப்பற்று எனக்கு மிகப் பிடித்துவிட்டது. இன்றும் பிள்ளையார் சதுர்த்தி வந்தால் இஸ்லாமிய தோழிதான் எனது நினைவுக்கு வருவாள்.

ஒருவர் பிறப்பால் ஒரு மதத்தை சேர்ந்தவராக இருப்பார், ஆனால் அந்த மதத்தின் கொள்கைகளை கோட்பாடுகளை எல்லாம் சரியாக தெரிந்து வைத்திருப்பார் என்பது சந்தேகம்தான். உதாரணமாக இந்து மதத்தை சேர்ந்தவர்களில் எத்தனை பேருக்கு தங்களின் புனித நூல் பகவத் கீதை என்று தெரியும்?!  (அதையும் விட இந்து என்றால் யார் என்ற சிறு குழப்பமும் சமீப காலத்தில் ஏற்பட்டுவிட்டது) சர்டிபிகேட்டில் இந்து என்று இருக்கிறது மற்றபடி இறைவழிபாடு என்பது எவ்வாறு என்பது தெரியாமலேயே பலர் உண்டு இங்கே, கடவுளே இல்லை என்பவர்களின் சான்றிதல்களிலும் இந்து என்று இருக்கும். ஆக கடவுளுக்கும் மதத்துக்குமே சம்பந்தம் இல்லை ஆனால் இஸ்லாமில் அப்படி அல்ல,  எல்லோரும் ஒருமித்து கோட்பாடுகளை பின்பற்றுகிறார்கள்.  விதிவிலக்குகள் மனிதராக உலவும் அனைவரிடத்திலும் உண்டு அதற்கு மதத்தை குறை சொல்வது சரியல்ல.

சிறுவயதில் இருந்தே புனித நூலை படிக்க வைப்பது, ஐந்து முறை தொழுகை, வெள்ளிக்கிழமை தொழுவது, ரம்ஜான் நோம்பை தீவிரமாக கடைப்பிடிப்பது என்ற (மற்ற  மதத்தினரை விட) இவர்கள் காட்டும் ஈடுபாடு, அக்கறை அலாதியானது. இதை அடிக்கடி என் கணவரிடமும் மகன்களிடமும் சொல்லி பெருமைப்படுவேன்.  ஒருமுறை எனது மகனின் இஸ்லாமிய நண்பன் உடுமலைபேட்டையில் இருந்து இருநாட்கள் விடுமுறையில் வந்திருந்தான்,  டிவி கேம் விளையாடிக் கொண்டிருந்தவன் எதையோ நினைத்ததை போல வேகவேகமாக குளித்து உடைமாற்றி என்னிடம் வந்து ஆன்டி ஒரு மேட் கொடுங்க பிரே பண்ணனும் என்றான். எங்கிருந்தாலும் வெள்ளிக்கிழமை என்பதை மறவாமல் தனி அறைக்குள் சென்று அமைதியாக இறைவனை வணங்கும் இந்த பற்றைத்தான் உலகம் சொல்கிறது மதவெறி என்று ! 

ஒரே மதம் அன்பையும் ஆத்திரத்தையும் ஊட்ட முடியுமா ? அவ்வாறு வெறியை ஏற்படுத்தும் மதத்தை மனிதர்கள் விரும்புவார்களா என்ன... அதை விரும்புவர்கள் மனிதர்களாக இருப்பார்களா என்ன?  எப்படி இருப்பினும் இந்தியா மத சார்பற்ற நாடு என்பதை இந்த மழை வெள்ளம் தமிழக மக்களுக்கு நினைவுபடுத்திவிட்டது. 

முஸ்லிம் துலுக்கன் என்றெல்லாம் சொல்லி அவர்களின் மீது ஒரு பயத்தை வெறுப்பை வளர்த்தது யார் என்பதை தமிழக மக்கள் முக்கியமாக சென்னை கடலூர் மக்கள் புரிந்துக் கொண்டார்கள்.  மதத்தை வைத்து தியாக உள்ளம் கொண்ட மக்களை பெருவாரியான மக்களிடம் இருந்து  சுலபமாக பிரித்துவிடலாம் என கனவு கண்டவர்கள் இனியாவது அச்சப்பட்டு தலையை குனிந்துக் கொள்ளவேண்டிய தருணமிது. இஸ்லாமியர்களுக்கு ஒன்று என்றால் ஒட்டுமொத்த மக்களும் குரல் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை ஒன்று புதிதாக ஏற்படுகிறது. 

வெள்ளம் வடிந்ததும் மக்கள் உதவி செய்தவர்களை மறந்துவிடுவார்கள் என்ற அரசியல்வியாதிகளின் நினைப்பில் ஆயிரம் டன் மண் விழ வேண்டும்.  நம்மிடையே மதத்தின் பெயரால் பிரிவினைகளை ஏற்படுத்துவது யார், அவர்களின் நோக்கம் என்ன  என்பதை மக்கள் புரிந்துக் கொள்ளும் காலம் நெருங்கி விட்டது.  இஸ்லாமியர்களை குறித்த தவறான சித்தரிப்புகளை கற்பிதங்களையும் உடைத்தெறிந்துவிட்டது மழை என்றே தோன்றுகிறது.  

நாம் ஒன்றுப் பட்டால் ஏற்படக்கூடிய நன்மை என்ன என்ற விழிப்புணர்வை விதைக்கவேண்டியது இளைஞர்களின் கையில் இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியான செய்திகள் தகவல்களை பதிவிடுவதன் மூலம் இது சாத்தியமாகலாம். 

ஏன்  இந்த பாராமுகம் 

ஊடக வெளிச்சம் பேர் பணம் புகழ் எதற்காகவும் இவங்க எல்லோரும் ஓடி ஓடி பாடுபடவில்லை... அவர்களின் மதம் போதிக்கும் தியாகம் மனித நேயம் இதற்காக மட்டும் தான். ஆனால் ஊடகங்கள் இவர்களின் மீது வெளிச்சத்தை பாய்ச்ச மிகவும் யோசிக்கிறது தயங்குகிறது ஏன் அஞ்சுகிறது என்றுகூட சொல்லலாம்.  அதனால்தான் எந்த பிரதிபலனும் பார்க்காமல் இவர்கள் உழைக்க இவர்களின் படத்தை போட்டு தன்னார்வலர்கள் என்று குறிப்பிடுகிறது, இஸ்லாம் அமைப்பு என்று சொன்னால் என்னவாம். சிறு பான்மையினர் என்ற குறுகிய வட்டத்திற்குள் இவர்களை அடைத்து அடக்கி வைப்பதை பல காலமாக ஒரு கூட்டம் செய்து வந்திருக்கிறது, அதை மற்றவர்களும் கவனிக்க வில்லை, அவரவர் வேலை அவரவருக்கு அதனால்தான் சிலரின் சூழ்ச்சி பலருக்கும் பெரிதாக தெரியவில்லை. 

பழைய படங்களில் வரும் ரௌடிகள் ஜேம்ஸ் பீட்டர் என்ற பெயரில் இருந்ததற்கு காரணமும் பிற மதத்தினரின் மீதான பார்வை தவறாகத் தான் இருக்கவேண்டும் என்பதாக இருக்கும்.  நம்மை அறியாமலேயே நமது ஆழ்மனதில் மிக சாதூர்யமாக இவை எல்லாம் பதிய வைக்கப் பட்டிருக்கின்றன, அதனால் தான் முஸ்லிம் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் கிருஸ்தவர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று ஒவ்வொரு சாதி மதத்துக்கும் ஒரு அடையாளத்தை  ஏற்படுத்தி விட்டார்கள்.  இத்தகைய போலி பிம்பத்திற்குள் இருந்து என்று நாம் வெளிவரப் போகிறோம் என்று தெரியவில்லை. அதற்கான ஒரு நேரத்தை இயற்கை உருவாக்கி விட்டது. மழை வெள்ளத்தில் ஓடி ஓடி முதலில் தனது கரத்தை நீட்டியது தீவிரவாதி என்று அழைக்கப்பட்ட முஸ்லிம் சகோதரர்கள் தான்.   இந்த சேவையை செய்தியை பதிந்து வைக்க வில்லையென்றால்  வரலாறு தனது இஷ்டத்திற்கு ஏற்றவாறு எழுதிக் கொள்ளும் அல்லது எழுதி விடுவார்கள் பிரிவினைவாதிகள்.  

பல ஆயிரம் உயிர்களை காப்பாற்றிய அவர்கள் தான் தொடர்ந்து குப்பைகளை அகற்றுகிறோம் சுத்தப்படுத்துகிறோம் பேர்வழி என்று நாற்றம் குடலைப் பிடுங்கும் சாக்கடையில் கையை விட்டு அள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். துப்புரவு தொழிலாளி வீட்டு வராண்டாவில் நின்றால் கூட தீட்டு என்று பின் வாசல் கதவை திறந்துவிடும் மனிதர்கள் வாழும் மண்ணில் தான் இவர்களும் வாழுகிறார்கள்.  நினைத்து பார்க்கவே கை எடுத்து வணங்கத் தோன்றுகிறது.  தன்னலம் பார்க்காத மனிதநேயத்தை எந்த மதம் வலியுறுத்தினாலும் அதை பின்பற்றுவது என்பது அவ்வளவு எளிதல்ல ஆனால் இவர்கள் பின் பற்றுகிறார்கள் அதையும் மிக தீவிர மாகவே... ஆமாம் இவர்கள் தீவிர வாதிகள் தான், மனித நேயத்தை விதைப்பதில் ...! 

சேவை எல்லாம் பண்ணவில்லை, விளம்பரம் பண்ணாங்க , மதப் பிரசாரம் பண்ணாங்க என்று ஆதாரத்தை போட்டிப் போட்டு ஷேர் பண்ணும் மனிதர்களை கண்டால் சிரிப்புத்தான் வருகிறது. யாரோ ஒருவர் செய்வதை மொத்த இன மக்களுக்குமான ஆதாரமாக கொள்ளும் சின்னபுத்தி இது. ஒருவேளை அப்படியே செய்தாலும்தான் என்ன, அதில் பிறருக்கு என்ன  பிரச்சனை, அதாக்கும் இதாக்கும் என்று போட்டோ ஷாப் விளம்பர யுக்தியால்  ஆட்சியை பிடித்ததை விடவா இவர்கள் செய்துவிட போகிறார்கள்.  மதம் மாற்றுபவர்கள் பிரசங்கம் செய்ததுமே உடனே வணங்கிக்கொண்டிருக்கிற    கடவுளை குப்பையில் தூக்கி போட்டு விட்டு அடுத்த மதத்துக்கு ஜம்ப் பண்றாங்க என்றால் பிரச்சனை மதத்தில் இல்லை பக்குவம் இல்லாத மனிதர்கள் இடத்தில்தான் பிரச்சனை இருக்கிறது.

இந்த கூட்டத்தில் வசதியான வீட்டை சேர்ந்தவர்கள் பலர் இருந்தும் தங்களின் அடையாளத்தை மறைத்து அல்லது மறந்து இஸ்லாமிய அமைப்பின் கீழ் சேவை புரிந்தது எனக்கு மிகுந்த வியப்பை கொடுத்தது. நான் பார்த்தவரை  யாரும் கேமரா எங்க இருக்கிறது என கவனிக்க கூட இல்லை மொத்த கவனமும் மக்களை மீட்பதில் ...! வியத்தக்க அம்சம் என்னவென்றால் அவர்களின் பணியில் ஒரு கட்டுக் கோப்பு ஒழுங்கைப் பார்த்தேன். இவர்களின் பணிகளை பார்த்து ஜீரணிக்க முடியாமல் இவர்களை குறை சொல்லும் கூட்டம் இங்கு நிறைந்திருந்தாலும் அந்த  கூச்சல் இங்கே யாருக்கும் இனியும் விழாது மக்கள் நேரடியாக பார்த்துவிட்டார்கள் உணர்ந்துவிட்டார்கள் பிரித்தாளும் சூழ்ச்சி செய்வது யார் நன்மை செய்வது யார் என்பதையும் புரிந்துக் கொண்டார்கள் என்றே நினைக்கிறேன். 

ஜெயின் இன மக்களின் சேவை வட சென்னை மக்களை நெகிழச் செய்தது.  இந்து முஸ்லிம் கிறிஸ்துவம் என யாரும் மதம் பார்க்கவில்லை என்ன சாதி என்று பார்க்கவில்லை ஓடி ஓடி அவர்கள் தேடியது எங்காவது உயிர் தவிக்கிறதா துடிக்கிறதா என்றுதான். இதுதான் மனித நேயம். இத்தனை நாளாக தொலைந்தே போய்விட்டது என நினைத்த மனித நேயத்தை வெளிக்கொணர்ந்த மழையை என்னால் வாழ்த்தத்தான் முடிகிறது, திட்ட தோன்றவில்லை.

வோட் போட்டு ஜெயிக்கவைத்த மக்களை காப்பாற்றவேண்டிய கடமை தங்களுக்கு இருக்கிறது என்ற எண்ணமே இல்லாமல் ஓடி ஓடி ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடிய அரசுக்கு முன் பாதிக்கப் பட்ட மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்கள் என்று தேடித் தேடி உதவிய இஸ்லாமியர்களின்  தன்னலமற்ற சேவை அசரவைக்கிறது. இதை இணையத்தில் உலவும் நாம் எழுதி வைக்காவிட்டால் முன்பு வரலாற்றை திரித்தவர்கள் இப்போதும் திரிக்கத்தொடங்கி விடுவார்கள் நூலை... பலரும் தானே உதவினார்கள் என்றாலும்  இஸ்லாமிய மக்களின் மீது பலரின் பொது பார்வையும் தவறாகவே இருப்பதால் அவர்களின் சேவையை கட்டாயம் நாம் எழுதவேண்டும். அதன்மூலமாக பார்வையின் கோணத்தை மக்கள் மாற்றிக் கொள்ளும் அதிசயம் நடக்கலாம்.

இதோ பாதிக்கப் பட்ட மக்களை அம்போ என்று விட்டுவிட்டு தேர்தல் கூட்டணி பற்றி பேச ரெடி ஆகிட்டாங்க... பல லட்சம்,கோடி கை மாறும்... மக்களை மேலும் மேலும் முட்டாள் ஆக்குவது எப்படி என்பதை கூட்டணி போட்டு தீர்மானிக்க தொடங்கிவிட்டார்கள். 

மழை வெள்ளத்தின் மிச்சமாக துரத்தும் வாழ்வாதார கவலைகளை சுமந்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு உதவிக்கொண்டிருக்கும் அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நெஞ்சம் நெகிழ்ந்து  விழிகள் கலங்கி எனது நன்றியை காணிக்கை யாக்குகிறேன். அன்பு சகோதர சகோதரிகளே  உங்களின்  குடும்பம் இனி வரும் சந்ததிகளும் மிக சிறப்பாக வாழவேண்டும்  என ஏக இறையான இயற்கையை பிரார்த்திக்கிறேன்.

மதத்தை குறிப்பிட்டு இஸ்லாமிய மக்களை வசைபாடக்  கற்றுக் கொடுத்த சமூகம் இனி அவர்களின் மனிதநேய தொண்டை பார்த்து இவன்தாண்டா முஸ்லிம் ,முஸ்லிம் என்றால் இப்படிதான் இருப்பான் என்று பேசட்டும் பேசவேண்டும். 

இனி  எங்காவது குண்டு வெடித்தால் தீவிரவாதி என்று சொல்லுங்கள் முஸ்லிம் என்று சொல்லாதீர்கள் !! 

photo courtesy : google
(முஸ்லிம் மக்களின் படங்களை தேடாதீர்கள்...  தங்களின் அடையாளத்தை தொலைத்து எங்காவது யாருக்காவது உதவி புரிந்துக் கொண்டிருப்பார்கள்  தேடி களைத்துவிடாதீர்கள், என்னை போல!!
   
Tweet

32 கருத்துகள்:

 1. மிக நல்ல பதிவு. வாழ்த்துக்கள். மனித நேயம், மதங்களை தாண்டி எல்லா நேரங்களிலும் சிறந்து விளங்க ஆண்டவனை வேண்டுகின்றே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லா மதங்களும் வலியுறுத்துவது அன்பை மட்டுமே...மனிதர்கள் தங்களுக்கு ஏற்றவாறு திரித்துக் கொள்கிறார்கள். இனி மாறும் நம்புவோம்.

   நன்றி.

   நீக்கு
 2. என் மதம் உன் மதம், ஆண்டவன் எந்த மதம்? மதங்கள் மனிதத்தையும் மனித நேயத்தையும்தான் வளர்க்க வேண்டும்.மனிதம் மதம் பிடித்தால் உன்மத்தம் கொள்ள வைத்து விடும்.மதி கேடான செயல்களில் வீழ்த்தி விடுபவர்களுடைய மாய வலைதனில் வீழ்ந்திட வேண்டாம்.நான் மதமும் ஜாதியும் பாராமல் மருத்துவமனைகளில் பலருக்கும் உதவி செய்தவன்,ஆனால் இதைப் பலருக்கும் தம்பட்டம் அடிப்பதில் விருப்பம் இல்லை. இப்பதிவு கண்டவுடன் பகிர வேண்டும் எனத் தோன்றியதனால் பதிவு செய்தேன்.இப்பொழுதும் பண்டிகைக் காலங்களில் எமது இல்லத்தில் பிற மத நண்பர்களுக்கு விருந்து வைப்பதிலும் அவர்களது பண்டிகை விசேஷங்களில் நாங்கள் பங்கெடுத்துக் கொள்வதும் தமிழ்நாட்டில் மனிதம் தழைத்திருப்பதை உணர வைக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களின் சேவையை மதிக்கிறேன்...பாராட்டுகிறேன். உங்களை போன்றே பலரும் வெளியே சொல்லிக் கொள்ள விரும்புவதில்லை , தங்களின் மனதிற்கு நிறைவை தரும் நற்காரியங்களை சத்தமின்றி செய்து வருகிறார்கள். அத்தகையோர்கள் எல்லோருமே மேன்மக்கள்.

   வாழ்த்துக்கள்

   வருகைக்கு என் நன்றி.

   நீக்கு
 3. வாவ்!!! கை கொடுங்கள்! பதிவு அருமை! மதங்களின் மீது எந்தப் பிழையும் இல்லை. எல்லா மதங்களும் நல்லதைத்தான் மனிதத்தைதான் போதிக்கின்றது. மதம் என்ற பெயரில் "மதத்தில்" ஏறி "மதம்" பிடித்து அலைந்து மனிதத்தைத் தொலைப்பவர்கள் மனிதர்கள்தான். ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்கு ஒட்டுமொத்த மக்களையும் ஒதுக்குவது என்பது எத்தனைக் கேவலம். ஆனால் அந்தப் பிரிவினை கூட மக்கள் செய்வதில்லை. அதற்குத் தூண்டுதல் யார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. சுயநலக்காரர்களே!

  வாழ்த்துகள் பாராட்டுகள்! அருமையான பதிவிற்கு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்கு ஒட்டுமொத்த மக்களையும் ஒதுக்குவது என்பது எத்தனைக் கேவலம்//

   காலகாலமாக இதுதான் நடந்து வருகிறது.

   தொடரும் தங்களின் வருகைக்கு என் அன்பான நன்றி.

   நீக்கு
 4. அருமையான பதிவு கௌஸ் ..சுயநலக்காரர்களின் சூழ்ச்சி வலையில் பலர் இன்று மனிதம் மறந்து இயல்பை தொலைத்து இல்லாத ஒன்றுக்காக போட்டி போட்டு அலைகின்றனர் ..அந்த போட்டியில் சக சகோதரனை தூற்றி குத்தி கிழித்து ரணப்படுத்தி வேடிக்கை பார்க்கிரார்கள் .இனியாவது மனிதம் மட்டுமே நிலையானது என்றுணர்ந்து தெளிவடைய வேண்டும் அனைவருமே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இனியாவது மனிதம் மட்டுமே நிலையானது என்றுணர்ந்து தெளிவடைய வேண்டும்//

   மக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு வேண்டும் ஏஞ்சல் ... ஒரு சாராரை மட்டுமே கைநீட்டி விடுவதால் மற்றவர்கள் செய்வது மறைந்துவிடுகிறது அல்லது மறைத்துவிடுகிறார்கள்.

   இன்னும் நிறைய பதிவுகள் வரவேண்டும்பா ...தொடர்ந்து எழுதுவோம் ...நன்றி தோழி

   நீக்கு
 5. அருமை சகோ மிகவும் அருமையான கட்டுரை மதம் மறந்தால் மனிதம் தழைக்கும் இதோ தொடங்கி விட்டது ஜாதி மதம் மறப்போம் மனிதநேயம் வளர்ப்போம் இனியெனும்.. அரசியல் வியாதிகளின் மூகமூடிகளை கிழிப்போம்.

  எல்லா மதங்களிலும் நல்லவரும் உண்டு கெட்டவனும் உண்டு இதை ஏற்பவன் அறிவாளி மறுப்பவன் மூடன்
  தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //எல்லா மதங்களிலும் நல்லவரும் உண்டு கெட்டவனும் உண்டு//

   இந்த புரிதல் பக்குவம் மக்களுக்கு வந்துவிட்டால் அரசியல்வாதிகளுக்கு இங்கே வேலை இல்லாமல் போய்விடுமே !! அதனால்தான் வரவிடாமல் பார்த்துக் கொள்வதில் கவனமாக இருக்கிறார்கள். மாறும் நம்புவோம்.

   வருகைக்கு என் நன்றிகள்.

   நீக்கு
 6. May peace and blessings of the Almighty be upon you and your family..

  Excellent write-up, thank you for posting this...


  பதிலளிநீக்கு
 7. அருமையான கட்டுரை.... வாழ்த்துக்கள் சகோதரி....

  பதிலளிநீக்கு
 8. அருமையான கட்டுரை. கடல்கடந்த இஸ்லாமின என்றாலும் உங்களது எழுத்துக்கள் தீவிரவாத பட்டத்தை சுமந்த எமது உல்லங்களை நெகிழவைத்தது. நன்றி, வாழ்த்துக்கள் சகோதரி....

  பதிலளிநீக்கு
 9. காய்தல் உவத்தலில்லாத உள்ளது உள்ளதுபடியான பதிவு.. ஊடகங்களால் தீவிரவாதிகளாக, பயங்கரவாதிகளாக காலந்தோறும் சித்தரிக்கப்பட்டு அதனால் பலவித அல்லல்களை அனுபவித்து வரும் பெரும்பான்மை முஸ்லிம் சமூகத்தின் உள்ளக்கிடங்கை எடுத்துக் காட்டுகிற பதிவு. நன்றி.

  பதிலளிநீக்கு
 10. உரிய நேரத்தில் உண்மையை எடுத்துக் காட்டிய பதிவு!வாழ்த்துகள்! நலமா சகோதரி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நலம் ஐயா...தாங்கள் நலம் தானே!
   வருகைக்கு நன்றிகள் ஐயா.

   நீக்கு
 11. உண்மைதான் சகோதரியாரே
  அனைத்து மதங்களிலும் நல்லவர் உண்டு
  தீயவரும் உண்டு
  அருமையான பதிவு சகோதரியாரே

  பதிலளிநீக்கு
 12. வரலாற்று சிறப்புமிக்க அருமையான பதிவு. ஏனென்றால் சில விசமிகள் நாளை வரலாற்றை மாற்றி திரித்து எழுதுவார்கள். இஸ்லாம் மனிதநேயத்தையே வலியுறுத்துகிறது அதைதான் முஸ்லிமுகளும் கடைபிடிக்கின்றனர். எல்லா மதத்திலும் சில கயவர்கள் இருப்பார்கள் இதை வைத்து ஒரு சமூகத்தையே குற்றம் சுமத்துவது என்ன நாயம். சில ஊடகங்களும் இந்துகளில் சில புல்லுருவிகளும் தொடர்ந்து குற்றம் சுமத்தியே வருகின்றனர். தங்களை போன்று அனைவரும் உண்மையை புரிந்து கொள்ளவேண்டும் என்பதே அனைத்து இஸ்லாமிய மக்களின் ஆவல்.

  M. செய்யது
  Dubai

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //சில விசமிகள் நாளை வரலாற்றை மாற்றி திரித்து எழுதுவார்கள்.// கண்டிப்பாக பல காலமாக இதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது. இவ்வளவு இணைய வசதி வந்துவிட்ட காலத்தில் நாமும் உண்மையை எழுதாமல் விட்டுவிட்டால் சரியல்லவே , இன்னும் நிறைய எழுதவேண்டும்.

   //அனைவரும் உண்மையை புரிந்து கொள்ளவேண்டும் //
   பாதிக்கப் பட்ட மக்கள் புரிந்திருப்பார்கள் என்றே எண்ணுகிறேன்.

   வருகைக்கு நன்றிகள்

   நீக்கு
 13. அருமையான கட்டுரை சகோதரி

  பதிலளிநீக்கு
 14. அருமையான ஒரு பதிவு சகோதிரியே!. .நன்றிகள்!. நம்மிடையே பிரிவினையை உண்டாக்கும் சமூக விரோதிகளை இப்பொழுதாவது இந்த சமூகம் அடையாளம் கண்டு கொள்ளட்டும்.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...