தமிழனாய் பிறக்க வேண்டும் என்று யாரும் தவம் இருக்கவில்லை...இருந்தும் பிறந்துவிட்டு ஏன் பிறந்தோம் என்று எண்ணி வெந்தே உருக்குலைந்து அழிந்து போய் கொண்டிருக்கிறான்.
"தமிழன் என்று சொல்லடா, தலை அறுபட்டு சாவுடா"
கடல் கடந்த தீவில் தான் தமிழன் செத்து கொண்டிருக்கிறான் என்றால் இங்கிருந்து மீன் பிடிக்க கடலுக்கு போகும் தமிழனும் வேட்டையாடப் படுகிறான்.
இலங்கை அரக்கர்களின் உயிர் பறிக்கும் வெறி என்று தீரும்....??
இராவணன் ஒருவனை அழிக்க கடவுள் அவதாரம் எடுத்தது பழைய கதை..... இப்போது தீவெங்கும் நிறைந்து கிடக்கும் பல இராவணன்களை அழிக்க ஏன் எந்த கடவுளும் இதுவரை அவதாரம் எடுக்கவில்லை....கடவுளுக்கும் உயிர் பலி பிடித்து போய் விட்டதோ ??
வேதனைபட்டே சலித்துவிட்டது !!?
என்றோ ஒருநாள் என்றால் வருத்தப்படலாம், கண்ணீர் விடலாம்.... இதுவே வாடிக்கை என்றால் சலிப்பாக இருக்கிறது வருத்தப்படவும்.....?!! அரசிற்கு மட்டும் சலிப்பதே இல்லை அறிக்கை விடவும், மத்திய அரசிற்கு கடிதங்களை எழுதவும்.....?!!
தமிழக மீனவன் இலங்கை மீனவர்களாலும், இலங்கை கடற்படையினராலும் கொல்லப்பட்டு கொண்டிருக்கிறான். ஒவ்வொரு மீனவன் கொல்லப்படும் போதும், இன உணர்வால் தமிழகம் துடிப்பதும், மத்திய அரசுக்கு குரல் கொடுப்பதும், அறிக்கைகள் மாறி மாறி பறப்பதும், ஒரு வார காலத்திற்கு பரபரப்பாக இருக்கும். வழக்கம் போல இலங்கை அரசு "இனிமேல் இதுபோல் நடக்காது" என்று உறுதி (?) அளிப்பதுடன் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி (செத்தவனுக்கும் சேர்த்துத்தான்...?!) வைக்கப்படும்.
வழக்கம் போல போராடி வெறுத்துப்போன மீனவர்களும் தங்களை ஆசுவாசபடுத்திக்கொண்டு தொடர்ந்து கடலுக்கு செல்வார்கள், உயிருக்கு உத்திரவாதம் இல்லாமல்....!? (பாழும் வயிறு இருக்கிறதே ??)
சில நாட்களுக்கு முன் ஜெகதாபட்டினத்தில் இருந்து சென்ற மூன்று மீனவர்களை இலங்கை கடற்படையினர் கண்மூடித் தனமாக சுட்டதில் ஒருவர் உயிர் இழந்துவிட்டார். 'சம்பந்தப்பட்ட இடத்தில் எங்கள் கப்பலே செல்லவில்லை' என்று இலங்கை தூதர் சொல்கிறார். உயிர் பிழைத்த இருவரும் சுட்டவர்கள் இலங்கைப்படையினர் தான் என்று சொல்கிறார்கள்...பொய் பேசுவது அரக்கர்களுக்கு சாதாரணம் தானே ?!!
முரண்பாடு
பல முறை இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் வந்துவிட்ட பின்னரும், ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களை பத்திரமாக அழைத்து வந்து பாதுகாத்து திருப்பி அனுப்புகிறார்கள். இதுதான் நாம் ?!! ஆனால் இனி ஒருத்தரையாவது நம்ம கடற்படை சுட்டு கொல்லணும்... அப்போது தான் இழப்பின் வலி அவர்களுக்கும் புரியும் என்கிற கோபம் வருகிறது.
இன்னும் அதிகமாக நமது எல்லையில் கடற்படை கப்பல்கள் சுற்றி வரவேண்டும்.....அவர்கள் கையில் இருக்கும் துப்பாக்கிகள் ரவைகள்(குண்டுகள்) நிரப்பப்பட்டு இருக்க வேண்டும்....அதைவிட அவைகளுக்கு கோபத்தைக் காட்ட தெரியணும்.....! வெறுப்பை உமிழ தெரிய வேண்டும்....!!
நமது எல்லை !
வரையறுக்க பட்டுள்ள இந்திய எல்லைக்குள் தான் நம் மீனவர்கள் மீன் பிடிக்கிறார்கள். சில பதட்டமான பகுதிகளை தவிர பிற பகுதிகளில் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று இலங்கை தெரிவித்த பின்னும், அந்த பக்கம் செல்ல அஞ்சி ஒருவரும் செல்வதில்லை. இருந்தும் நமது எல்லைக்குள் வந்து சர்வ சாதாரணமாக சுட்டு விட்டு செல்கிறார்கள். மீன் வேட்டைக்கு போன இடத்தில் மனிதன் வேட்டையாட படுகிறான் ?!!
ஐந்து நாட்களுக்கு முன் வேதாரண்யம் பகுதியில் உள்ள புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்த மூன்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றபோது அவர்களை சுற்றி வளைத்து பிடித்த இலங்கை கடல்படையினர், மூவரையும் கடலில் குதிக்க சொல்லி இருக்கின்றனர்...அதில் இருவர் குதித்து விட ஜெயக்குமார் என்ற மீனவர் தனது ஒரு கை ஊனமாக இருப்பதால் நீந்த இயலாது, தன்னை விட்டுவிடும் படி கெஞ்சி கேட்டு இருக்கிறார், சிறிதும் மனம் இறங்காத கல் நெஞ்சக் காரர்கள் அவரது கழுத்தை கயிற்றால் கட்டி இறுக்கி கொன்றுவிட்டார்கள்.
இவ்வளவிற்கும், கோடியக்கரையில் இருந்து 11 கடல் மைல் தூரத்தில் தான் அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்ததாக சொல்கிறார்கள் , இலங்கை கடல் எல்லை 15 வது கடல் மைலில் இருந்துதான் தொடங்குகிறது \. எவ்வளவு தைரியமாக நமது பகுதிக்குள் வந்து வேட்டையாடுகிறார்கள்...?! நம்பிக்கை நம் அரசின் மீதும் (கண்டுக்க மாட்டாங்க ?) எவ்ளோ அடிச்சாலும் தாங்கும் தமிழனின் மீதும் (நாதியற்றவன் ?)
தமிழன் ரத்தம் குடிக்கும் காட்டேரிகள் !? இந்த கொடூர செயலுக்கு ஏன் இன்னும் ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. தடுத்து நிறுத்த முடியா கோழைகள் அரசா, தமிழனா ?? ஏழை மீனவன் உயிர் என்ற இளப்பமா ? மாநில அரசு வெறும் முகாரி ராகம் பாடினால் மட்டும் போதாது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிரந்தரமாக என்று தான் முடிவு எடுக்க போகிறார்களோ தெரியவில்லை தேர்தல் வேற நெருங்கி வருகிறது.....??!
பிப்ரவரி மாதத்தில் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க போகிறது என்று சொல்கிறார்கள்.(நிறைய தமிழன் வருவான் என்று எதிர்பார்த்து கொண்டிருக்க போகிறது அங்கிருக்கும் துப்பாக்கிகள்...?!!)
தமிழர்களை கொன்று குவிக்கும் நாட்டுடன் மத்திய அரசு நட்புறவு பாராட்டுகிறது. தமிழனுக்கு எதிரி வெளியில் இல்லை.....?! இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்தால் சிறையடைப்பு, நாளை இங்கிருக்கும் தமிழர்களுக்காக குரல் கொடுத்தாலும் சிறையடைப்பு என்ற நிலை வரும் முன் பிழைத்து கொள்ளுங்கள் என் மக்களே !!
ஏசி ரூமில் ஹாயாக அமர்ந்து மீன் குழம்பு, மீன் வறுவல் ருசித்து கொண்டிருக்கும் பெரியோர்களே ! ஒரு நொடி நிதானியுங்கள்.....'அந்த மீனில் பாவப்பட்ட தமிழக மீனவனின் கண்ணீர் இருக்கலாம்... சில நேரம் ரத்தமும் !?'
பதிவுலக நண்பர்களே நாம் கண்டனம் என்று தெரிவிக்காவிட்டாலும் பரவாயில்லை .....ஒரு குரல் கொடுங்கள்..... அரசின் காதில் விழுகிறதா பாப்போம்....விழாவிட்டாலும் பரவாயில்லை.....'நம் இனத்திற்காக குரல் கொடுத்தோம்' என்று திருப்தியடையட்டும் நம் இயலாமை.....?!!
படம் - நன்றி கூகுள்









