சனி, ஜூலை 31

குடும்பத்தில் பெண்ணியம் தேவையா...?! தாம்பத்தியம் பாகம் -13




பெரும்பாலான குடும்பத்தை ஆட்டி படைப்பது இரண்டே வார்த்தைகள்தான் , ஒன்று ஆணாதிக்கம் மற்றொன்று பெண்ணுரிமை.  படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் இடத்திற்கு தகுந்தபடி பிரச்சனைகள், இதனை அடிப்படையாக வைத்து வருவதுதான். 'ஈகோ' என்று படித்தவர்கள் மேம்பட்ட ஒரு வார்த்தையை சொல்வார்கள்  .


ஆண், பெண் இருவரும் ஒன்றை புரிந்து கொள்வது இல்லை, அது என்னவென்றால் ஆணாதிக்கம், பெண்ணுரிமை என்பதன் சரியான அர்த்தத்தை , அர்த்தம் என்று சொல்வதைவிட அந்த வார்த்தைகளை எங்கே பயன்படுத்த வேண்டும்....? எங்கே பயன்படுத்த கூடாது.....?! என்பதைத்தான். ( எனக்கு தெரிந்த சில விளக்கங்களை இங்கே சொல்ல எண்ணுகிறேன் இது முழுக்க முழுக்க என் கருத்துகள்.  தவிர யாரையும் மனம் வருந்த செய்வது என் நோக்கம் இல்லை,  எனக்குமே இதில் சில முரண்பாடுகள், வேறுபாடுகள் இருக்கின்றன.  என்னை நான் தெளிவு படுத்தி கொள்ளவுமே இங்கே எழுதுகிறேன், தெரிந்தவர்கள் உங்கள் கருத்தை சொன்னால் பலருக்கும் தங்களை , தங்கள் எண்ணங்களை சரி செய்து கொள்ள உதவியாக இருக்கும். கருத்துகளை  எதிர் பார்க்கிறேன் )

ஆணாதிக்கம்

அது என்ன ஆணாதிக்கம் ? ஒரு ஆண் மற்றொரு ஆணை அதிகாரம் செய்வதையோ...? அல்லது அடக்கி ஆள்வதையோ....?  ஆணாதிக்கமாக சொல்லப்படவில்லை. பெண்களை அடக்கி அவர்கள் மேல் ஆண் என்ற திமிர்வாதத்தை  காட்டுவதையே ஆணாதிக்கம் என்பதாக கருதுகிறேன்.   இன்றைய கால கட்டத்தில் எந்த வீட்டில் ஆணாதிக்கம் தலைதூக்கி இருக்கிறது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மனசாட்சியுடன் சொன்னால் உபயோகமாக இருக்கும்.  இங்கே முக்கியமாக ஒன்றை குறிப்பிட்டே  ஆக வேண்டும், நான் பகிர்ந்து கொண்டு இருப்பது தாம்பத்தியம் பற்றியது. வீட்டிற்கு வெளியே நிலவுகின்ற ஆணாதிக்கம் பற்றி எனக்கும் ஆதங்கம் உண்டு, ஆனால் குடும்பம் என்று பார்க்கும் போது இரண்டையும் ஒன்றாக  போட்டு குழம்பிக்கொள்ள கூடாது.  

ஆணாதிக்கம், பெண்ணுரிமை பற்றி என்னாலும்  பக்கம் பக்கமாக பேச இயலும், மேடை போட்டு மைக் கொடுத்தால் ...!! ஆனால் பெண்ணுரிமை என்று கொடி பிடிக்க குடும்பம், அரசியலும் கிடையாது, வருந்தி பெற்று கொள்ள நாம் உரிமையை, யாருக்கும் விட்டு கொடுக்கவும்  இல்லை.

ஏன் ஏற்பட்டது? எதனால்?

ஆண்கள் பெண்கள் மீது செலுத்தும் ஆதிக்கம் என்பது நேற்று இன்று ஏற்பட்டது இல்லை.  ஆடையின்றி அலைந்த ஆதிகாலத்தில் இயற்கையால் ஏற்படுத்தப்பட்ட தற்செயலாக தீர்மானிக்கப்பட்ட ஒன்றே.  இதை கொஞ்சம் இன்று நன்றாக யோசித்து பார்த்தோம் என்றால் பெண்கள் சரிதான், அப்படியும் இருக்கலாம் என்றாவது சமாதானம்  செய்து கொள்வார்கள்.  ( நான் என்னை சமாதானம் செய்து கொண்டதை போல )

காடுகளில் விலங்குகளுடன் விலங்காக  வாழ்ந்து கொண்டிருந்த அந்த நேரத்தில் ஆண், பெண் இருவருமே வேட்டையாடி தான் தங்களது பசியை ஆற்றி கொண்டு இருந்தார்கள். அப்படி இருந்த ஒரு சில கட்டத்தில் மாதவிடாய் நேரத்தில் ஏற்படக்கூடிய ரத்தவாடையில் கவரப்பட்ட மிருகங்களால் பெண்கள்  பாதிப்புக்கு உள்ளானார்கள். அதனால் ஆண்கள், பெண்களை பாதுகாப்பாக ஒரு இடத்தில் இருக்க வைத்து விட்டு , அவர்கள் வேட்டையாட  சென்றார்கள்.  வேட்டையாடி கொண்டுவந்து பெண்களிடம் கொடுத்து, தங்கள் பெண்களையும்  , குழந்தைகளையும் கவனித்து கொண்டார்கள்.  இப்படித்தான் ஆண்கள் வெளியில் வேலைக்கு செல்வதும், பெண்கள் வீட்டை கவனித்து கொள்வதுமாக இருந்திருக்க வேண்டும்.  


நாளடைவில் மனதளவிலும் ஆண்களுக்கு நாம் தான் பெண்களைவிட உயர்ந்தவர்கள் , நமது தயவு  இல்லாமல் அவர்களால் வாழமுடியாது....நாமே சிறந்தவர்கள்....நமது பேச்சைத்தான் பெண்கள் கேட்கவேண்டும்....எதிர் கேள்வி கேட்ககூடாது...அடங்கி இருக்கவேண்டும் என்பதாக மனதில் பதிந்து இருக்க வேண்டும். அதுவே இன்று வரை பெரிய அளவில் பெண்களை அடக்கி ஆள்வதில் தொடங்கி கொடுமையில் வந்து முடிந்து இருக்கவேண்டும். வேறு என்ன சொல்வது எல்லாம் இயற்கையின் விளைவுகள்.


பெண்ணுரிமை

பெண்களுக்கு எது உரிமை என்று  விளக்குவதே  பெரும்பாடாக இருக்கிறது. தங்களுக்கு என்ன தேவை என்றே தெரியாமல் இருப்பவர்களை என்ன சொல்வது....? கணவனை அடக்குவது மட்டுமே பெண்ணுரிமை என்றே பெரும் பாலான குடும்ப  பெண்கள் எண்ணுகிறார்கள்.  'ஆணுக்கு சரிசமம்' என்ற வார்த்தை இப்போது காலாவதி ஆகிவிட்டது, அதற்கு பதில் 'ஆணை விட தான் எதில் குறைந்து போய் விட்டோம்' என்ற வாதமே பிரதானமாக  இருக்கிறது.  என் விருப்பபடி குடும்பம் நடக்கவேண்டும் என்று ஆண் அதிகாரம் செய்வது போய் இப்போது தன் விருப்பபடி  தன் கணவன் நடக்க வேண்டும் என்ற குரலே பல வீடுகளில் எதிரொலிக்க  தொடங்கி விட்டது.  இது நல்ல முன்னேற்றம் அல்ல என்பது மட்டும் புரிகிறது.  ஆணின் அதிகாரம் ஒரு கட்டத்தில் அமைதி பெரும் ஆனால் பெண்கள்  செய்யும் அதிகாரம்......??!! 

பெண்ணுரிமை கேட்டு வீட்டிற்கு வெளியில் போராடுங்கள், வீட்டுக்குள் வேண்டாமே.... கணவனின் அன்பை கேட்டு  மட்டுமே போராடுங்கள் அதுவும் அன்பாக.... வீட்டில் எதற்கு இடஒதுக்கீடு..... ? அதிகாரம் செய்யும் கணவனையும் உங்கள் அன்பால் கட்டி அரசாளுங்கள்..... ஒரு கட்டத்தில் அந்த ஆணின் அதிகாரம் புறமுதுகை  காட்டி ஓடிவிடும்

கணவனை பார்த்து 'ஆணாதிக்க மனபான்மையுடன் என்னை நடத்துற 'என்று மனைவி குறைபட்டு கொள்வதும் ,  மனைவியை பார்த்து ' நான் ஆண்  அப்படித்தான் இருப்பேன் , நீ அடங்கி இரு ' என்று கணவன் சொல்வதும்  அநாகரீகம்.

ஆண்கள் தங்களது இத்தகைய மனப்பான்மையை வெளிக்காட்டாமல் இயல்பாக மனைவியை கையாளும் போதுதான் அங்கே ஆண்மை கம்பீரம் பெறுகிறது.  மனைவி தன்னை விட எதிலும் தாழ்ந்தவள் இல்லை , அவளது எண்ணத்திற்கும், கருத்திற்கும் கண்டிப்பாக மதிப்பு கொடுக்கவேண்டும் என்று கருத வேண்டும் .    

குடும்பத்தில் ஏற்படக்கூடிய எந்த விசயத்திற்கும் ஆண், தான் மட்டுமே  முடிவு செய்ய வேண்டும் என்று இல்லாமல் மனைவியின் ஆலோசனையையும் கேட்கவேண்டும். இருவரும் கூடி விவாதிக்கும் போதுதான் அந்த விசயத்தின் நல்லது, கெட்டது என்ற இரண்டு பக்கமும்  வெளிவரும், அதனால் அதை கையாள்வதும் சுலபம். தன்னிச்சை முடிவு தவறாக  கூடிய வாய்ப்புகளும் உள்ளது. நாளை இருவரும் சேர்ந்த எடுத்த முடிவு தவறாக இருந்தாலுமே ஒருவர்  மீது ஒருவர் பழி போடாமல்.  'அடுத்து என்ன  செய்யலாம்'  என்று அடுத்த  அடி எடுத்து வைக்க சுலபமாக  இருக்கும்.

தாம்பத்தியத்தில் " பெண்மை தோற்றாலும்  ஆண்மை தோற்றாலும்  அங்கே இறுதியில்  வெல்வது என்னவோ இருவருமேதான் "

இதன் தொடர்ச்சி நாளை மறுநாள் வெளி வரும்.......
                                                                    
                                                                

                                                                                            தாம்பத்தியம் தொடரும்.......


வியாழன், ஜூலை 22

மரங்களை வெட்டுங்கள்





உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால்  நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் '  என்று சொல்வீர்கள்.  அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற  முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள்  நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை. 

மண்ணின் வில்லன் 

அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட  போகிற விஷ மரம்.  தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்'(வேலிகாத்தான் மரம்) தான் அது.  ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே  விளக்கம் சொல்வாரே !

நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை  இங்கு தூவியதாக ஒரு கருத்தும் ,  கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் )  வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'

ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய  பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம்.  முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.

இதன் கொடூரமான குணங்கள்

இவை எந்த  வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது.  பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல  மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக  வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!

இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி  செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!!  இப்படி காற்றின் ஈரபதத்தையும்  , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.

தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே  முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.

உடம்பு முழுதும் விஷம்

இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது.  முக்கியமான விஷயம் ஒன்றும்  உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான்.  இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால்  அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!

ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி  நீரை விஷமாக  மாற்றிவிடுகிறது மற்றொரு புறம்  இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ  முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.

காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற  காற்று மண்டலமே நச்சுதன்மையாக  மாறிவிடுகிறது.

அறியாமை

நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்  என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.

கேரளாவின் விழிப்புணர்வு

நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!!  அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது.   ஆனால்  நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??

ஆராய்ச்சியாளர்களும்,  இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.

நல்ல மரம் ஆரோக்கியம்

வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம்  இல்லையே என்பதே என் ஆதங்கம் .

சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?

இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!  





நன்றி - தினத்தந்தி 

திங்கள், ஜூலை 19

சிறுவயது பாலியல் தீண்டல், பாதிப்புக்கு உள்ளாகும் தாம்பத்தியம் . பாகம் -12





பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்று பார்த்தால் முக்கியமானதும் கொடூரமானதும் ஒன்று உண்டென்றால் அது பெண் குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறைகள்தான்.  மூன்று வயது தொடங்கி நடக்கும் இந்த கொடூரம் அந்த குழந்தையை சுற்றி இருக்கும் நபர்களாலேயே பெரும்பாலும் நடைபெறும். ஆன்மிகத்தில், தெய்வ நம்பிக்கை மற்றும் பண்பாடு, கலாச்சாரத்தில் சிறந்து விளங்குகிறது என்று நாம் பெருமைப்  பட்டு கொண்டு இருக்கிற இதே நாட்டில்தான் இந்த அருவருப்பான ஒழுங்கீனங்களும் அதிகளவில் நடைபெற்றுக்  கொண்டு இருக்கின்றன. 


பெண்களில் பெரும்பாலானவர்கள் சிறு வயதில் ஏதாவது ஒரு சூழ்நிலையிலாவது கட்டாயம் சிறு அளவிலாவது சுற்றி இருக்கும் ஆண்களால் தவறான தொடுதலுக்கு உட்பட்டு இருப்பார்கள். அந்த நேரத்தில்  அவர்களுக்கு அது தவறு என்று உணரமுடியாத பட்சத்தில் தெரியாமல் போய் இருக்கலாம், அல்லது இப்போது மறந்து இருக்கலாம். ஆண்களின் அந்த தொடுதல் தவறானது என்பதை புரியக்கூடிய வயது இல்லை என்பதுதான் ஒரே காரணம்  ஆனால் திருமணத்திற்கு பின்பு கணவனின் அருகாமையில் தொடுதலில் சிறுவயது தவறான தீண்டல் நினைவுக்கு வந்து  அருவருப்புக்கு ஆளாகி குடும்ப வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விடும் பெண்கள் இருக்கிறார்கள் என்பது உண்மை.

பெண் குழந்தைகளுக்கு மட்டும்தான் இந்த கொடுமை என்று இல்லை,  சிறு ஆண் குழந்தைகளும்  இக்கொடுமைக்கு ஆளாகிறார்கள். ஜீரணிக்க முடியாத விஷயம்தான் என்றாலும் இந்த கொடுமைகள் தாமதமாகவே வெளி உலகிற்கு தெரிய வருகின்றன, பல வராமலும் போய் விடுகின்றன. 10, 12  வயது நிரம்பிய சிறுவர்கள் ஆண்களால் மட்டும் அல்ல சில பெண்களாலுமே  பாதிக்க படுகிறார்கள். இதனைப்  பற்றி இன்னும் விரிவாக சொல்வது அவ்வளவு சரியாக இருக்காது என்று எண்ணுகிறேன்.  (ஆனால் கற்பனை இல்லை , நான் கேள்விபட்ட அருவருப்பான நிஜம் ) 

சில பெண்கள் திருமணம், கணவனின் முதல் தொடுதல் என்று வரும் போது அருவருப்புடன்  பயந்து விலகுவது, பல திருமணங்கள், தொடங்கிய கொஞ்ச நாளில் முறிந்து போவதற்கு, ஆண்களால் சிறு வயதில் தெரிந்தோ தெரியாமலோ ஏற்பட்ட பாதிப்பு ஒரு காரணம்.   ஆனால் இதை யாரும் துணிந்து வெளியே சொல்வதும்  இல்லை. அந்த பெண்ணின் பாதிக்கபட்ட மனநிலையை  சரிப்படுத்த, சம்பந்த பட்டவர்கள் முயலுவதும்  இல்லை.


சிறு குழந்தைகள் பாலியல் கொடுமை  


பால் மனம் மாறாத சிறு குழந்தைகளை சிதைத்து சின்னாபின்னப்படுத்த கூடிய அளவிற்கு மனிதம் மிருகமாகி விட்டது நிதர்சனம். சிதைந்து போனபின் அந்த குழந்தையின் உடலில் உயிர் இருக்கும் என்பதற்கு நிச்சயம் இல்லை.  அந்த குழந்தையை பெற்றவளின் இதயம் நொறுங்கி போகாதா ?  அந்த மிருகத்தை பெற்றவளின் நிலை இதை விட கொடுமைதான்.  ஏன் ஏன் இந்த கொடூரம்.....?


இந்த ஈன புத்தி மனித மனதில் எத்தகைய நேரத்தில் நுழைகிறது ?
மனிதனின் உணர்வை மீறிய செயலா ?
இந்த செயல் ஒருவேளை மனச்சிதைவால் நடக்கிறதா ?
அந்த மனச்சிதைவு ஏன் ஏற்படுகிறது ?


இப்படி கேள்விகளை அடுக்கிகொண்டே போகலாம்.  ஆனால் பதில்...?! பதில் கிடைத்தாலும் அதனால் அடையபோவது என்ன? ஒன்றும் இல்லை. இழந்தது இழந்தது தான். இறந்தகாலத்தை மறுபடி நிகழ்காலமாக மாற்றும் விந்தை நடந்தால்  மட்டுமே இந்த பதில்களால் ஆதாயம் .


நடந்த எதையும் மாற்ற முடியாது ஆனால் முடிந்தவரை இனி நடக்காமல் பார்த்து கொள்ளலாம் அல்லவா ?  ஆண், பெண் குழந்தை எந்த பாலினமாக இருந்தாலும் சிறு வயதிலேயே சில விசயங்களில்  பெற்றோர்கள் கவனமாக இருந்தாலே போதும்.  நான்  மறுபடி சொல்லபோவது வேறு ஒன்றும் இல்லை,  திருமணம் பொம்மை விளையாட்டும் இல்லை, குழந்தை பேறு தற்செயல் சமாச்சாரமும் இல்லை.  குழந்தை பெறும்வரை கணவன், மனைவி இருவரின்  கருத்து வேறுபாடுகள் பெரிதாக யாரையும் பாதிக்கப் போவது இல்லை, ஆனால் குழந்தை பிறந்தபின் உங்களது இருவரின் கவனமும், அக்கறையும் அந்த குழந்தையின் மேல் அதிகம் இருப்பது காலத்தின் கட்டாயம்.


பணம் பொருள் சம்பாதிப்பது மட்டுமே உங்கள் குறிக்கோள் என்று இருந்தால் தயவு செய்து குழந்தை பெற்றுக்  (கொல்லாதீர்கள்) கொள்ளாதீர்கள். உங்கள்  பணத்தேவை முடிந்ததும் (முடியுமா ?) பெற்றுக்  கொள்ளுங்கள்.


தவறான தொடுதல்கள் 


சிறுமிகள், சிறுவர்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகாமல் பார்த்து கொள்வது பெற்றவர்களின் தலையான கடமை.  சூழ்நிலையின் மேல் குறை சொல்லி தப்பித்துக்  கொள்வதை போல் பாவம் வேறு இல்லை.  மூன்று  வயதில் இருந்தே குழந்தைகளிடம் , (ஆண், பெண் ) பிறரிடம் பழகும் விதங்களை சொல்லி கொடுக்க வேண்டும். மற்றவர்கள் , அவர்கள் நெருங்கிய உறவினர்களாக  இருந்தாலுமே BAD TOUCH, GOOD TOUCH  பற்றி விளக்கமாக சொல்ல வேண்டும்.  (சில பெற்றோர்களுக்கே இதன் அர்த்தம் புரிவது இல்லை)  எங்கு தொடுவது சரி என்றும் , தவறான மறைவான இடங்கள் எவை என்றும் சொல்லி வைக்க வேண்டும். அப்படி அந்த இடங்களில் யாராவது தொட்டால் உடனே எங்களிடம் சொல்ல வேண்டும் என்பதை அன்பாக அறிவுறுத்துங்கள்.


குழந்தைகளை  பள்ளிக்கூடம் அழைத்து செல்லுகின்ற வாகனஓட்டிகளை பற்றி குழந்தைகளிடம் அடிக்கடி விசாரித்து வையுங்கள்.    நேரம் கிடைக்கும் போது அவர்களிடம் நீங்களும் பேசி நட்பை வளர்த்து கொள்ளுங்கள்.  ஆசிரியர்கள் உங்கள் குழந்தையிடம் எப்படி நடந்து கொள்வார் என்பதையும் அடிக்கடி கேட்டு தெளிவாகி கொள்ளுங்கள் (எந்த புற்றில் எந்த பாம்போ ? )


இந்த கேள்விகள் உங்கள் குழந்தைகள் பதினாறு வயதை தாண்டும் வரை கூட கேட்கலாம்  தப்பில்லை. ( அவர்கள் வளர்ந்தாலும் குழந்தைகள் தான் ) உங்கள் கவனம் இந்தப்படியே இருந்தால் பல சிறுமியரின் பால்யம் இன்பமாகவே இருக்கும். அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனபின் எதிர்வரும் திருமணத்தையும் விரும்பி எதிர்பார்பார்கள்.


அப்படி இல்லாமல் சிறுவயதில் தவறான தொடுதலால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்  பட்டு இருந்தாலும் கண்டிப்பாக அவர்களின் திருமண வாழ்க்கை சோபிக்காது, விளைவு அவர்களின் தாம்பத்தியம் மனநல மருத்துவ வாசலிலும் , அல்லது  கோர்ட் வாசலிலும் தான்  போய் நிற்கும், தவிர்க்க முடியாது...?!!


அக்கறை உள்ள  பெற்றோர்களின் குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள்,  ஆனால் பெற்றோர்களின் கருத்து வேறுபாடால் தனித்து விடப்  படுகின்ற குழந்தைகளின் நிலை....?!!   

தொடர்ந்து பார்போம்.....


தாம்பத்தியம் தொடரும்....

வெள்ளி, ஜூலை 16

கண்டனம்

முன் குறிப்பு:  

ஒரு வழியா 50 பதிவை தாண்டியாச்சு...! இனி சதம் அடிப்பதை பற்றிதான் ஒரே கவலை...!! (அதுக்குனு  ஒரு பதிவ மூணா பிரிச்சு போடும் குறுக்கு முயற்சி ஏதும் செய்றதா  இல்லை, என்று உறுதி கூறுகிறேன்)  நான் அரைசதம் அடித்ததை பெருமையுடன் வாழ்த்திய அனைத்து  நல்ல உள்ளங்களுக்கும்........,  அல்வா கொடுக்கணும் என்றுதான் ஆசை...?! ஆனால் இருட்டு கடையில் ஸ்டாக் தீர்ந்து விட்டதாம். ரெடி பண்ணதும் சொல்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். பார்போம் இந்த போஸ்ட் எழுதி முடிப்பதற்குள் வருகிறதா என்று.

தலைப்பை பற்றிய சிறு விளக்கம்

இதுவரை சில நல்ல விசயங்களைத்தான் எழுதி இருக்கிறேன் என்று திடமா நம்புகிறேன். இனியும் அப்பணி செவ்வனே  தொடரும்...! நம் நாட்டில் நடந்து கொண்டு இருக்கிற விரும்பத்தகாத சில நிகழ்வுகளை கண்டனங்கள் என்ற தலைப்பில் பகிரலாம் என்று உள்ளேன்.  அன்றாடம் நாம் வாழ்க்கையில் சந்திக்கும் அவலங்களை, அதை பற்றிய என் ஆதங்கங்களை இந்த தமிழ் கூறும் பதிவுலகத்திற்கு தெரிய படுத்த எண்ணுகிறேன்.  நான் எழுதும் கண்டனங்களுக்கு எதிர்  பின்னூட்டம் வந்தாலும் அதை புன்னகையுடன் எதிர் கொள்வேன் (அப்படியாவது உங்களை யோசிக்க வைத்து இருக்கிறேனே...?!  ) 

முதல் கண்டனம் -  நைட்டீயா ? மேக்ஸ்சியா ?!

எங்க போடணும், எதுக்கு போடணும் என்று சரியாக தெரிந்து  கொள்ளாமல் கண்ட இடத்துக்கும் நைட்டி என்ற ஆடையை போட்டுக்கொண்டு அலையும் பெண்களுக்கு
எதிராக ( இத படிக்கிற யாரும் பெண்ணுரிமை அப்படி இப்படின்னு ஏதாவது குரல் குடுத்தா, எனக்கு கெட்ட  கோவம் வரும் ஆமா சொல்லிட்டேன்... )

நைட்டி என்ற பெயருக்கே அவமானம்



அழகான , சௌகரியமான ஆடையை தயாரித்து அதற்கு நைட்டி என்று பெயரும் வைத்தவர்கள், இப்போது அது படும்பாட்டை நினைத்தால் நொந்து விடுவார்கள். பகலில்  வெளியில் வேலைக்கு செல்பவர்களும் , வீட்டில் இடுப்பொடிய வேலை செய்கிற பெண்களும்,  இரவில் தூங்க போகும் போதாவது தங்களை கொஞ்சம் ரிலாக்சாக வைத்து கொள்வதற்காக, 6 முழ புடவையை மாற்றி சிம்பிளாக, தளர்வான இந்த உடையை அணிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கபட்டது. (ஸ் ப்பா... என்ன ஒரு நீளமான வாக்கியம் ?!!)  இரவில்  போட வேண்டும் என்பதால் தான்  நைட்டி என்றே  பெயர் வைத்தார்கள்..!! ( என்னவொரு கண்டிபிடிப்பு... கிளாப்ஸ் ப்ளீஸ்) 

நம்ம பெண்களும் தொடக்கத்தில் அப்படித்தான் பயன்படுத்தினார்கள் (இப்ப பாடு படுத்துறாங்க ) அப்புறம் போக போக பகலில் வீட்டில் அணிய தொடங்கினார்கள் . இந்த ஆண்களும் மனைவியிடம் மெதுவாக " நாம் தனியா இருக்கிறப்போ பரவாயில்லைடா , அம்மா, அப்பா இருக்கிறப்போ அவங்க முன்னாடி போகும்போது  மட்டும் புடவையை மாத்திக்கோமா  " என்று சொன்னார்கள். அப்புறம் புடவை  மாத்த நேரம் இல்லை என்று  மேலே  அழகா ஒரு துப்பட்டா போட்டால் போதும் என்று ஆனது.  அப்புறம் கேட்கணுமா நம்ம மாதர்குல மாணிக்கங்களை......? இதுதான் நமது தேசிய உடை என்று கோஷம் போடாத குறையாக  வெளியிலும் போட்டுட்டு போக தொடங்கி விட்டார்கள்.

கொடுமையான விசயங்கள்

இங்கே உதாரணத்துக்கு இரண்டு விசயங்களை சொல்கிறேன். படிச்சிட்டு நீங்களே சொல்லுங்க நான் வருத்தபடுறது நியாயமா இல்லையா என்று ...?! 


பெண்கள் முதலில் இந்த உடையுடன் வாசல் வரை வந்தார்கள், அப்புறம் வாசலை  தாண்டினார்கள், அப்புறம் பக்கத்தில் இருக்கிற கடைதானே...!, இதுக்கு போய் புடவை மாத்தவா என்று போனார்கள்....?! அப்படியே  பக்கத்தில் இருக்கிற கிளினிக் தானே.....??! என்று சென்றே  விட்டார்கள்....?? (அதுவும் ஸ்கூட்டியில்..!!) . என்ன கொடுமைங்க இது ? (கிளினிக்கில் லேடி டாக்டர் கிட்ட வயிறு வலி என்று போனால் அவங்க எப்படி டெஸ்ட்  பண்ணுவாங்க ...?!) ஓ.கே நான் கேட்கல விடுங்க  ( யோசிக்கிறப்ப கஷ்டமா இருக்கு இல்ல? அப்ப நேரில் பார்த்த எனக்கு எப்படி இருக்கும்?  ) 

இதை எல்லாம் விட 2000  ௦ பிள்ளைகள் வரை படித்து கொண்டு இருக்கிற பள்ளிகூடத்துக்கு தங்கள் குழந்தையை இரு சக்கர வண்டியில் கொண்டு வந்து விடுகிற பெண்களை நைட்டில பார்த்து பிரமிச்சு போயிட்டேன்...!! இந்த காட்சி வேற எங்கேயும்  இல்லை படித்தவர்கள் அதிகமானவர்கள் இருக்கிறார்கள் என்று நான் நினைத்து கொண்டு இருக்கிற நம்ம சிங்கார  சென்னையில் தான்....!!? வாழ்க தமிழ் கலாசாரம்....!!

இரண்டாவது 

சமீபத்தில் சென்னையில் எனது  உறவினர் மகனுக்கு பெண் பார்க்க முடிவு செய்து எல்லோருமாக சேர்ந்து ஒரு 10௦ பெண்கள் புடை சூழ பயங்கர பந்தாவாக 2   காரில் சென்றோம்.  இதில் போகும்போது இந்த மைசூர் சில்க்குக்கு பதிலா காஞ்சிவரம் கட்டி இருக்கலாமே என்று பையனோட அம்மாவை குறை வேற ( கிண்டலாத்தான் ) சொல்லிட்டு இருந்தோம். 

நாங்கள் எங்க வந்திட்டு இருக்கிறோம் என்று பெண்ணோட அண்ணன் போன் செய்து கேட்டுட்டே இருந்தார். ( பெண்ணோட அம்மா, அப்பா கிராமத்தில் இருப்பதால் பெண் அண்ணன்  வீட்டில் இருந்து வேலைக்கு போயிட்டு இருந்தாள் )  இதை பார்த்த நான் வரவேற்ப்பு செம கிராண்டா இருக்கப்போகுது என்று பெருமை வேறு பட்டுக்கொண்டேன். 'அடடா பூ வாங்கலையே' என்று வழியில் பூ வாங்கி ஒன்றுபோல சூடி கொண்டோம். 

பெண் வீட்டை நெருங்கி விட்டோம் , பெண்ணோட  அண்ணன் டிப்டாப்பா வாசலில் நின்று வரவேற்றார்.  நாங்கள் அப்படியே அசந்து உள்ள போனோம், அங்கே பெண்ணோட அண்ணி வந்து நின்னு வணக்கம் சொன்னதும் எல்லோரும் அப்படியே ஆடி போய்ட்டோம் ...??!! ( இருங்க கொஞ்சம் மூச்சு வாங்கிக்கிறேன்...ம் .. ம் )  என்னத்த சொல்ல , அண்ணி தேசிய உடையில் (நைட்டி) இருக்காங்க...( அது கொஞ்சம் பளிச்சுன்னு இருந்தாலும் பரவாயில்ல , சாயம் போய், கசங்கி ஒரு மாதிரியா இருந்தது )  

அதற்கு பிறகு நாங்க ஒருத்தரை ஒருத்தர் பார்த்திட்டு பொண்ணு ( நல்லவேளை புடவை கட்டி இருந்தாள் ) கொண்டு வந்த காப்பிய குடிச்சிட்டு கிளம்பி வந்திட்டோம். எனக்கு மனசு கேட்காமல் பெண்ணோட அண்ணாகிட்ட கிளம்பும்போது தனியா 'ஏன் இப்படின்னு' கேட்டேவிட்டேன். அவரும் ரொம்ப கூலா அவங்க  வேலைக்கு போறதால வீட்டில்  இப்படித்தான் இருப்பாங்க , அவளுக்கு இதுதான் comfortable என்றார். (ஆனா புதுசா போன நமக்கு...?) 

நம்ம பெண்கள் ஏன் இப்படி மாறிட்டாங்க..?? புதிதாக ஒருத்தர் வீட்டுக்கு வரும்போது நாம எப்படி இருக்கணும் என்ற அடிப்படை நாகரீகம் கூட மறந்து விட்டதா? மற்றவர்களின் முகசுளிப்பை கூட அலட்சியபடுத்துவது ஏன்..?? எங்கே போய் கொண்டு இருக்கிறது நமது அற்புதமான தமிழ் பண்பாடு..?  மேலை நாடும் பொறாமை படும் நமது விருந்தோம்பல் ஒழுங்கு இப்போது எங்கே...? 

எங்கள் வசதிக்கு ஒரு ஆடை உடுத்த கூட எங்களுக்கு உரிமை  இல்லையா ? என்ற அனாவசியமான விதண்டாவாதம் பேசுவது அநாகரீகம்...  எது உரிமை ? மற்றவர்களின் முகசுளிப்புடன் கூடிய பார்வையில் வலம் வருவது தான் உங்கள் உரிமையா ?  பெண்ணுரிமை என்பதின் உண்மையான அர்த்தம் தெரியாத அறிவிலிகள் தான் இங்கே இப்போது பெருகி கொண்டு இருக்கிறார்கள்.  நமக்கு என்று சில வரைமுறைகள் இருக்கிறது , அதை தாண்ட எண்ணுவதே தவறு என்னும் போது, தாண்டியவர்களை எந்த பட்டியலில் சேர்ப்பது ...??  தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

இந்த மாதிரி சுய சிந்தனை  இல்லாதவர்களை எண்ணியே  எனது முதல் கண்டனம். இன்னும் தொடரும் .....
                                                             **************
நன்றி சொல்ல விட்டுப்போனவர்கள்...மன்னிக்கவும்


தாராபுரத்தான்
ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி
தக்குடுபாண்டி
P. Dhanagopal sir
hamaragana
ரோஸ் விக்
தெய்வசுகந்தி
அம்பிகா
ஹேமா
Jayadeva
Jey  

இவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல.
                                                             ***************

புதன், ஜூலை 14

நன்றி சொல்கிறேன்



   
இது எனது ஐம்பதாவது பதிவு.  

அதனால் வழக்கமான எழுது நடை  இருக்காது. (அப்படி எதிர்பார்த்து வந்தால் நான் பொறுப்பு அல்ல)  எல்லோரும் 100, 150, 200 என்று ஜெட் வேகத்தில் போகும்போது 50 கே இந்த அலட்டலா என்று நினைக்க கூடாது.  என்னை பொறுத்தவரை எண்ணிக்கையை விட சொல்லும் கருத்துகள் கூட இருக்க வேண்டும் என்பதே. (அப்ப நாங்கல்லாம் கருத்தே சொல்லலையா னு கோபபடாதீங்க, கிடைச்ச இந்த சந்தர்பத்தில சுய புராணம் கொஞ்சம் தூக்கலாதான் இருக்கும்... கண்டுகாதீங்க )


எனக்குள் இருக்கும் கொஞ்ச எழுத்து திறமையையும் கண்டு என்னை எழுத ஊக்கபடுத்திய என் அன்பான கணவருக்கு முதலில் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.  என் இந்த பதிவு வரை என்னை உற்சாக படுத்தி  கொண்டிருக்கும் என்னவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் உரித்தாகுக...
   
நான் நவம்பரில் எழுத தொடங்கினாலும் பதிவுகளை பிப்ரவரியில் இருந்துதான் தொடர்ந்து எழுதுகிறேன்.  இந்த ஆறுமாதமாக எனக்கு பலரும் தொடர்ந்து ஆதரவு கொடுத்திட்டு வருகிறீர்கள் அவங்களை எல்லாம்  இந்த இடத்தில் குறிப்பிடுவது எனது கடமை...

ஆதிரன்
எல் .கே
ஆசியா
ஜெய்லானி
ஆனந்தி
கே ஆர் பி செந்தில்
மங்குனி அமைச்சர்
விஜய்
பாலசுப்ரமணியன் tanjore
சுகந்தி
எஸ்
ராஜ் குமார்
காஞ்சி முரளி
பாலசுப்ரமணியன்
சக்தி தாஸ்
சுதந்திரா
பிரியமுடன் பிரபு
தேவா
nj மகேஷ்
சந்த்யா
ஸ்டார்ஜான்
S .மகாராஜன்
பனித்துளி சங்கர்
வாணி
சத்யா  ஸ்ரீதர்
mohammed mafas
நிலாமதி
abuanu
பிரியமுடன் வசந்த்
பாலா
உலவு.காம்
ராச ராச சோழன்
agrose agrose
குமார்
தெம்மாங்கு பாட்டு
தமிழ் பெஸ்ட்
கணேஷ்
chezhi - anbu
சௌந்தர்
யுக கோபிகா
சரண்
சசிகுமார்
தோழி
G3
melbkamal
செந்தில்
மனோ சாமிநாதன்
அப்பாவி தங்கமணி
அம்பிகா
தமிழ் குடும்பம்
தேவன்மாயம்
ஜோதி
ரமேஷ் கார்த்திகேயன்
சந்தோஷ் குமார்
சதீஷ் குமார் தங்கவேலு
S . குமார் 
 .
மிகுந்த மன நிறைவுடன் அனைவரையும் இங்கு நினைவு கூருவதில் சந்தோசம்  அடைகிறேன்.  இந்த உறவுகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்ற பேராசை அதிகம் உண்டு.  என் எழுத்துகளையும் பொறுமையாக வாசித்து , என்னை தொடர்ந்து கொண்டிருக்கும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் கோடி.

முக்கியமாக நண்பர் ஆதிரன் (மகேந்திரன் ) அவர்களுக்கு நான் முதல் மரியாதையை செய்தே ஆக வேண்டும். முதன்முதலில் முகம் அறியா என்னையும் என் எழுத்துகளையும் ஊக்கபடுத்தி முதல் பின்னூட்டம் அளித்தது அவர்தான் . அவரது தமிழ் மிகவும் அருமையாக இலக்கண செறிவுடன் இருக்கும், அவர் என்னை பாராட்டியது எனக்கு பெரும்பேறுதான்.

சொந்த புலம்பல்கள்

ஆரம்ப  காலத்தில் இடுகை, பின்னூட்டம் போன்ற தமிழ் வார்த்தைகள் கூட எனக்கு புரியாத அன்னியமாக தான் தோன்றியது. சென்னை வளர்ப்பு என்ன செய்வது...?! ( அப்ப சென்னையில் வளர்ந்த நாங்க நல்லா எழுதலையான்னு சண்டைக்கு வந்திடாதிங்க . நான் தமிழை கொஞ்சம் சரியா படிக்காம போயிட்டேன் அப்படின்னு வேணா மாத்திக்கிறேன் ) இந்த பதிவுலகத்தை  நினைக்கிறப்ப கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.....(ஒரு வார்த்தை யதார்த்தமா சொல்ல முடியலபா ..?!)

ஆனா நான் ரொம்ப நல்லவ ( நானேதான் ) இப்பவரை யாரும் என் எழுத்தை தவறாக சொல்லலையே...!! ( அப்படியே சொன்னாலும் கவலைபடுறதா இல்ல... ஹா ஹா )
ஒரு வருத்தம் என்னனா என் பதிவுகள் கொஞ்சம் சீரியஸா ( கொஞ்சம் இல்ல நிறைய - மனசாட்சி )  இருக்கிறதால, என்னையும் அப்படியே எண்ணி எல்லோரும் பார்க்கிறதுதான்  ரொம்ப பீலிங்கா இருக்கு.... இனியாவது நம்புங்க நான் ரொம்ப ஜாலியான ஆளுதான். 

இதை பத்தி ஏன் சொல்றேனா, நகைசுவையா எழுதுற பதிவர்கள் என் பதிவையும் படிக்கணும், சீரியஸா இருக்குனு வராம போய்விடகூடாது, வந்து கிண்டலாவது பண்ணிட்டு போங்க என்று இதன் மூலம் அன்பாக கேட்டு  கொள்கிறேன். ( அப்பத்தான் முடி கொட்ட கொட்ட யோசிச்சு, கை வலிக்க வலிக்க டைப் பண்ணதுக்கு கொஞ்சம் ஆறுதலாகவாவது  இருக்கும்...!!?. )

அதைவிட எல்லா பெண்களுக்கு உள்ளேயும்  நகைசுவை உணர்வு உண்டுதான், அமைகிற வாழ்க்கையை பொறுத்துதான் இந்த உணர்வு கூடும் , குறையும் அவ்வளவுதான் வித்தியாசம். ( ஐய்யோடா... இது தாம்பத்தியம் பதிவு இல்லை..... இது வேற.... வேற..... பேச்சை மாத்து.....  மனசாட்சி ...ம் .ம் )

முக்கியமான விஷயம்

எனக்கு பின்னூட்டம் போடுபவர்களுக்கு நான் சரியாக போட இயலாமல் போய் விடுகிறது. அதற்கு முதலில் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நேரம் இன்மை ஒரு காரணம் என்றாலும், சிஸ்டம் அடிக்கடி மக்கர் பண்றது என் பசங்க unlimited ஆ games download பண்ணிடுவாங்க , அதனால் வர்ற so called பிரச்சனைய சரி பண்ணவே வெறுத்து விடும் . மறுபடி அவங்க download பன்றதும் நான் சரி பண்றதுமா தொடர்கதையா போய்ட்டே இருக்கிறது ( இந்த தாம்பத்தியம் தொடர் எப்ப முடியும்...? மனசாட்சி... ஷ் இதெல்லாம் கேட்கபடாது..... சரியா )

அதனால வோட், கமெண்ட் உங்கள் பதிவுகளுக்கு நேரத்துக்கு வராததுக்கு மன்னிச்சி வுட்டுடுங்க.

சக பதிவர்கள்


எல்லோருமே எனக்கு முக்கியமானவர்கள் தான் என்றாலுமே குறிப்பிட்ட சிலரை இங்கே விமர்சித்தே ஆக வேண்டும் ( இதை விட்டா வேற சந்தர்ப்பம் கிடைக்காது )

1 .  ஆதிரன் -----      (முதல் follower  ஆனதே  போதும் என்று சரியாக வருவதே இல்லை.)
தொடர்ந்து வாங்க நண்பா...

2 .  கார்த்திக் (LK)----பதிவு  போட்ட அடுத்த நொடி நண்பர் ஆஜர்...? எனக்குன்னு இல்ல, பலரின் பதிவிலும் நண்பர் தான் முதலில். பல புது பதிவர்களையும் தனது தளத்தில் அறிமுக படுத்தும் நல்ல எண்ணம் கொண்டவர். ( கவிதைக்கு கவிதையில் பதில் எல்லாம் கொஞ்சம் ஓவர்தான் )

3 .  ஆசியா ----------  எனது அன்பான தோழி. இப்ப பக்கத்தில்தான் இருக்காங்க  (அட்ரஸ்
தெரிந்தால் போய் அவங்க சமையலை ஒரு கை பார்க்கலாம்...ம்...!!)

4 .   ஆனந்தி --------  (மீரா ஜாஸ்மினை டிவியில் பாத்தாலும் கூட இவங்க ஞாபகம்தான் வருகிறது!)  இவங்க கமெண்டும் மீரா ஜாஸ்மின் மாதிரி அழகா ,  அடக்கமா, அளவா இருக்கும்...!!?

5 .   சித்ரா ------------  எந்த ப்ளாக் போனாலும் இவங்க முகம்தான் தெரியும்..! அப்படி
சூறாவளி போல் சுழன்று சுழன்று போறாங்க...! இவர்கள் இதன் மூலம் பதிவர்களை ஊக்கபடுத்துறாங்க... தொடரட்டும் அவர்களின் இந்த சமூக  சேவை...!!

6.  சந்த்யா ---------- தாய் மொழி தமிழ் இல்லைனாலும் தமிழை காதலிக்கும் அருமையான தோழி. என் எழுத்துகளை ரசித்து பின்னூட்டம் போடுவார்கள். அன்பிற்கு உரியவர்களில் மிக நெருங்கியவர்.  

7 .  வானதி -------  இவங்க எழுதுவதே கவிதை மாதிரிதான் இருக்கிறது ( இது தெரியாமல் எனக்கு கவிதை எழுத தெரியாதுபா என்று கவலை படுறாங்க ...என்ன சொல்ல ?)

8 . மனோ மேடம்-- எனக்கு முதலில் ராணி கிரீட விருதை அன்பாய் கொடுத்தார்கள். அவங்களுக்கு இங்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லிகிறேன்.  

9 . ஜெய்லானி------ இரண்டு விருதுகள் கொடுத்து என்னை வாழ்த்திய சகோதரனுக்கும் இங்கு நன்றி சொல்லி கொள்கிறேன். 

10 . சௌந்தர் ------- இவரது பதிவுகள் ரசிக்கும்படி  இருக்கும் பேருக்கு ஏற்றபடி...! ( எங்க வோட் போட போனாலும் அங்க முன்னாடியே இவரது வோட்தான் இருக்கும்..?! )

11 .  சசிகுமார் ---- இவரது பிளாக்கர் டிப்ஸ் எனக்கு ஆரம்ப நாட்களில் கை கொடுத்திருக்கிறது அதற்காக இவருக்கும் ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ். 

12 . தமிழ் மதுரம்-- நல்ல இனிமையான தமிழை படிக்கணும் என்றால் இவரது எழுத்தை வாசிக்கலாம். எனக்கு பிடித்த தளங்களில் ஒன்று.  

எனது follower இல்லாதவர்களில் குறிப்பிடத்தக்கவர் சூரியாகண்ணன் -- இவர் தளத்தில்  இருந்தும் சில விசயங்களை கற்று  இருக்கிறேன். என் மூத்த மகன் இவரது ரசிகன்.

அப்புறம் விக்னேஸ்வரி , கீதா, அமைதிசாரல், Menagasathia, Gayathri, யாதவன், .....இன்னும் சொல்லிட்டே போகலாம் . என்னை தொடராமல் தொடர்பவர்கள் இவர்களைப்போல் இன்னும் இருக்கிறார்கள்.... அவர்கள் எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை சொல்லி கொள்கிறேன் . 

வோட் அளித்து என் பதிவுகள் பலரையும் சென்று அடைய  துணை புரிபவர்களையும் பெயர் கூற விட பட்டவர்களையும் இங்கே நினைவு கூர்ந்து நன்றி சொல்லி கொள்கிறேன்.  


மீண்டும் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியும் வணக்கமும்....

(பி.கு)
அடைப்பு குறிக்குள் இருப்பது எல்லாம் ச்சும்மா....தான் .  யாருக்கும் பிடிக்கவில்லை என்றால் பாவம் போகட்டும் என்று விட்டுடுங்க.....!!

பதிவு கொஞ்சம் பெரிதாகிவிட்டது (இதை  தொடர் பதிவா போட்டு இருக்கலாமோ ....?! )


                                                                


  

செவ்வாய், ஜூலை 13

உறங்காத இரவு


                          
                      
                         மற்றுமொரு தூங்காத இரவு
                      
                         உன்னால்.... நீயோ நித்திரையில்...!
                      
                         என்ன பிழை கண்டாய் என்னில்...?
                      
                         நீ எழுதும் எந்த வரியும், எனக்கு
                      
                         தோன்றுமே கவிதையாய்...,
                      
                         நீ எழுதும்போது என் பெயரும்
                      
                         கூட  அழகுதான் , வியந்திருக்கிறேன்
                      
                         பலமுறை....! உனக்கு அப்படி
                      
                         தோன்றாதது விந்தையே..?!
                      
                         ஒத்துகொள் இன்றே, நான்
                      
                         உன்னில் கொண்டிருக்கும் அன்பே
                      
                         பெரிதென்று...! மன்னித்து
                      
                        விட்டு விடுகிறேன் உன்னை...!!

                                                                                                       



சனி, ஜூலை 10

டீன்ஏஜ் கர்ப்பம் யாரால் ...?! தாம்பத்தியம் பாகம் 11




தாம்பத்தியம் பதிவே முக்கியமாக கணவன், மனைவியின் கருத்து வேறுபாடுகளால் பாதிப்புக்கு உள்ளாகும் அவர்களின் குழந்தைகளுக்காக தான்.  அவர்கள் மனதாலும், உடம்பாலும்  படும்பாடுகளை தெளிவு படுத்தத்தான்.  இதுவரை ஆண், பெண் அவர்களின் நிறை, குறைகள் எந்த விதத்தில் குடும்ப உறவில் பங்குபெறுகிறது என்றும் வரதட்சணை கொடுமை போன்ற காரணிகள்,  பெற்றவர்கள், உறவினர்கள், நண்பர்களால் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏற்படக்கூடிய சிக்கல்கள் போன்றவை பற்றியும் பார்த்தோம்.  இனிதான் தாம்பத்திய சீர்குலைவினால் குழந்தைகளின் எதிர்காலம் எப்படி எல்லாம் பாதிக்கப்  படுகிறது என்பதை பார்க்கவேண்டும்.


கணவன் , மனைவி உறவு சீராக இல்லை என்றால் வேறு யாருக்கும் எந்த பாதிப்பும் கிடையாது  ஆனால் நேரடியான பாதிப்பு அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்குத்தான்.  இதை பற்றி கருத்து வேறுபாடு நிறைந்த எந்த பெற்றோரும் எண்ணுவதே கிடையாது என்பதுதான் மிகுந்த சோகம். அவர்கள் பிள்ளைகளின் மனநிலையை பற்றி உண்மையில் கவலைப்  பட்டார்கள் என்றால் வீட்டில் சண்டையே இருக்காது.  பிள்ளைகளும் நல்ல சூழ்நிலையில் நன்றாக வளர்ந்து எதிர்காலத்தில் தங்களது குடும்பத்தையும் அப்படியே பார்த்துக்  கொள்வார்கள்.  இந்த நல்ல மனநிலை வாழையடி வாழையாக தொடரும், அவர்கள் வாழும் சமூகமும் சிறப்பாக இருக்கும்.

சமூகம் என்ன செய்யும்...??
  
பலரும் எந்த பிரச்சனை விஸ்பரூபம் எடுத்தாலும் உடனே சமூகத்தை பழிக்க தொடங்கி விடுவார்கள்....  "வர வர சமூகம் கெட்டுபோய்விட்டது"   என்று சொல்வதை  சுத்த முட்டாள்தனம் என்பேன்.  சமூகம்னா என்ன....?  நீங்களும்  நானும் சேர்ந்ததுதானே....!! நாம சரியா இருக்கிறோம் என்றால் சமூகம் எப்படி கெட்டு  போகும்...??

ஒரு நாலு சுவற்றுக்குள் ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து அன்பையும் பாசத்தையும் பரிமாறி ஒற்றுமையாக இருக்க முடியவில்லை என்றால் சமூகத்தை பற்றி மட்டும் குறை சொல்ல என்ன தகுதி இருக்கிறது....?? இல்லை என்றால் சமுதாயத்தை சீர்படுத்தபோறேன் என்று சொல்கிறவர்கள் முதலில் உங்கள் வீட்டை பாருங்கள் .... அதை சீர்படுத்தினாலே போதும் நாடும், இந்த சமூகமும்  உருப்பட்டு விடும்.
  
வீட்டில் என்ன நடக்கிறது...? நம் குழந்தைகள் எப்படி, என்ன மனநிலையில் வளருகிறார்கள்.? என்றே பலரும் பார்ப்பதே  இல்லை.  ஆண் தனது  ஆண்மை  நிரூபிக்க பட்டுவிட்டது என்பதையும்,  பெண் தான் மலடி இல்லை என்பதை தெரிந்து கொள்ளவும்தான் பிள்ளைப்  பெற்றுக்  கொள்கிறார்களோ என்றே பெரும்பாலும் எனக்கு  தோன்றுகிறது....??!!

தங்கள் பிள்ளைகள் எங்கே போகிறார்கள், யாருடன் பழகுகிறார்கள் என்றே தெரியாமல் முக்கியமாக பெண் பிள்ளையை பெற்ற வீட்டில் இருக்கும் தாய் கவனிப்பதே இல்லை.  இப்போது  இருக்கிற காலகட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றோ அல்லது இரண்டு குழந்தைகளோ தான் இருக்கிறார்கள்,  அந்த இரண்டு பேரை சரியாக வளர்க்க முடியவில்லை என்றால் அதைவிட வேறு என்ன முக்கியமான வேலை பெற்றவர்களுக்கு இருக்கமுடியும்...??

நீங்கள் குடும்பத்திற்காக ஓடி ஓடி சம்பாதித்தாலும் அதை அனுபவிக்க குழந்தைகள் "நல்ல முறையில் வளரவில்லை"  என்றால் நீங்கள் "உழைத்த உழைப்பு விழலுக்கு இறைத்த நீர்தான்"

நீங்கள் இறைத்த நீர் எப்படி வீணாகிறது என்பதற்கு, இரண்டே இரண்டு கொடுமையான, வேதனையான உதாரணங்களையாவது இங்கு குறிப்பிட்டே  ஆகவேண்டும். சாதாரணமாக மேலோட்டமாக சொல்வதைவிட உண்மையில் நடந்தவற்றை விளக்கும்போது நம்பகத்தன்மை  அதிகமாக இருக்கும் என்பது என் கருத்து.

சிறு வயது கர்ப்பம்

சமீபத்தில் ராமநாதபுரத்தில் நடந்த ஒரு சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. ( இது முதல் செய்தி இல்லை, ஏற்கனவே இதே போல் வந்தும் இருக்கின்றன) 15  வயதே நிரம்பிய அந்த  சிறுமி தான் படிக்கும் பள்ளியின் பாத்ரூமில் வைத்து தனக்கு தானே பிரசவம் பார்த்து குழந்தை பெற்று இருக்கிறாள்....??!!  

இந்த விசயத்தில் நாம் யாரை குறை சொல்வது...?

1 .   அவளை கர்ப்பமாக்கிய அந்த முகம் தெரியாத ஆண்,
2 .   அதற்கு விரும்பியோ, விரும்பாமலோ உடன்பட்ட அந்த சிறுமி,
3 .   இருவரும் இணைய காரணமான சூழ்நிலை,

ஆனால் இதை எல்லாம் விட முக்கியமான ஒரு காரணம் அந்த சிறுமியின் பெற்றோர், குறிப்பாக அவளது தாய்..?!!  குழந்தை பிறந்ததில் இருந்து அந்த தாய்க்குத்தான் கவனம் அதிகம் தேவை. ஆனா நாம தான் ஆணும் பெண்ணும் சமம் என்று உரக்க சொல்லிட்டு இருக்கிறோமே.... குழந்தை வளர்ப்பில் தகப்பன் ஏன் பங்கு பெறுவது இல்லை என்று கூட  ஒரு கேள்வி எழும்....  

இப்படிபட்ட விஷயம் பெரிது  ஆனபின் பெற்றோர்கள் இருவரும் ஒருவர்மேல் ஒருவர் குறை சொல்லி 'நீ வளர்த்தது சரி இல்லை' என்று மனைவியை  கணவனும் ,  'ஏன் நான் வளக்கிரப்போ,  நீங்க எங்க போனீங்க, இருந்து வளர்க்க வேண்டியதுதானே' என்று  மனைவி கணவனையும்  குறைச்  சொல்லி சண்டை போடுகிறார்களே தவிர இருவருக்கும் சமமான  கடமை உண்டு என்பதை மறந்து விடுகிறார்கள்.

ஆனால்  " இயற்கை பெண்களுக்கே அதிகப்  பொறுப்பை கொடுத்து இருக்கிறது " என்பதுதான் உண்மை. அதுவும் பெண் குழந்தைகளை பொருத்தமட்டில் , ஒரு தாயால் தான் தனது பெண்ணின் மன உணர்வுகளை துல்லியமாக உணர்ந்து கொள்ளமுடியும்.  தன் மகளின் முகத்தில் சிறு வாட்டமோ, சிறு சலனமோ தென்பட்டாலும் உடனே என்ன 'பொண்ணு சரி இல்லையே' என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு அடுத்த ஒருமணி நேரத்துக்குள் உண்மையை கண்டுப்  பிடித்து விடக்கூடிய சாமார்த்தியம் கொண்டவள் தான் ஒரு தாய்.  

அப்படி இருக்கும்போது இந்த மாணவியின் தாயாரால் தனது மகள் ஒன்பது மாதம் வரை ஒரு குழந்தையை வயிற்றில் சுமந்ததை கண்டுப் பிடிக்க முடியாமல் போனது எவ்வாறு.... இது எப்படி சாத்தியம்.......??!!   

தன் மகளின் நடவடிக்கையில் தெரியும் சின்ன மாற்றத்தை  கண்டுக்  கொள்வதில் இருந்து, வயதுக்கு  வந்த தனது மகளின் மாதவிலக்கு தேதி வரை கணக்கு வைத்து, ஒரு மாதம் சரியாக வரவில்லை என்றாலும் என்ன காரணமாக  இருக்கும் ஒரு வேளை சத்து ஏதும்   குறைவாக இருக்குமோ  என்று மருத்துவரிடம் உடனே அழைத்து சென்று உடம்பை பேணும் அன்றைய தாய்மார்கள் எங்கே.....!!  மகள் கர்ப்பமாகி, குழந்தை பெற்று எடுத்த நாள் வரை கண்டுக் கொள்ளாமல் அலட்சியமாக இருக்கிற இன்றைய தாய்மார்கள் எங்கே .....????   

இதற்கு என்ன காரணம்  இருக்க முடியும்...?? என்று ஆராய்ந்தால் பதில் வேறு ஒன்றும் இல்லை....அந்த வீட்டில் கணவன் மனைவி  உறவாகிய தாம்பத்தியம் சரியாக இல்லை என்பதுதான் அடிப்படை காரணம்.  

தாம்பத்தியம் தாறுமாறாக இருப்பதால்தான் அந்த வீட்டில் வளரும் குழந்தைகளும் திசை மாறிப்  போகிறார்கள் . வீட்டில் கிடைக்காத ஏதோ ஒன்றை வெளியில் தேடுகிறார்கள், ஆண்களுக்கு மது, போதை போன்றவையும், பெண்களாக இருந்தால் கர்ப்பமும் பரிசாக கிடைக்கிறது.  வீட்டில் கிடைக்காத அந்த ஒன்று பெரிதாக வேறு ஒன்றும்  இல்லை 'அன்பு' என்ற அற்புதம்தான்.  இதை ஒரு கணவனும், மனைவியும் தங்கள் குழந்தைகளுக்குக்  கொடுக்காமல் போலியாக ஒரு வாழ்க்கையை வாழ்ந்து தங்களையும் ஏமாற்றி இந்த சமூகத்திற்கு ஒரு மோசமான முன்  உதாரணமாக தங்கள் பிள்ளைகளை நிறுத்துகிறார்கள்.  

இப்படி வளர்ந்த பிள்ளைகளின் எண்ணிக்கை கூடும்போது எப்படி ஒரு சமூகம் நல்ல சமூகமாக இருக்க முடியும்...?   எனவே இனியாவது சமூகத்தை குறை சொல்வதை விடுத்து நம்மை நாம் சரிப்படுத்திக்  கொள்ள முயலுவோம். நாட்டை நாம் பார்க்கும் முன்,  நம் வீட்டை நாடு பார்க்கும் படி  நடந்து கொள்வோம்...!!!?  

தாம்பத்தியத்தில் அடுத்து இதன் தொடர்ச்சியாக சிறுவர்கள், சிறுமியருக்கு  (பெண் குழந்தைகள்) ஏற்படும் பாலியல் கொடுமைகள்......??! 

தொடர்ந்து பேசுகிறேன்  
உங்களின் 
'மனதோடு மட்டும்' கௌசல்யா    

      

  

புதன், ஜூலை 7

கவி மடல்



எனது பிரியத்துக்கு உரிய தோழனின்(கணேஷ்) கல்யாண நாள் இன்று.  எங்களின் நட்பை நினைகூரும் விதமாய் ஒரு கவி மடல் அந்த நண்பனுக்கு......!!

           இன்று உனது கல்யாண நாள், முழுமையாய்
           என்னால் வாழ்த்த இயலவில்லை..!
           வார்த்தைகள் தடுமாறுகின்றன!!
           என்னவாயிற்று எனக்கு.... ?

           என்னை உன் புன்னகையால்
           கவர்ந்தாய்! உன் அன்பு, அக்கறை 
           கலந்த பேச்சால் என் மென்மையை
           உணர வைத்தாய்...!!  
           ஐந்து வருடமாய் என்னை
           சந்தோசபடுத்தி மட்டுமே பார்த்த நீ
           அழவைத்தும் பார்க்கிறாய் !!

            அன்று.... 
             உன் கல்யாணத்திற்கு வர இயலாது
            என்று மறுத்தும்  , வரவழைப்பேன்
            என்ற உன் வார்த்தையின் தீவிரம் 
            புரிந்து ஓடி வந்தேன்...?! என்னை கண்டதும்
            களங்கமின்றி புன்னகை புரிந்தாய்,
            காலில் விழுந்து, என் அன்பையும்
            ஆசியையும் ஒரு சேர பெற்றாய்!!
            அங்கிருந்த சில நிமிட நேரத்தில்,
            பலமுறை நன்றி சொன்னாய் என்
            வருகைக்கு...!! மிரட்டி வர வைத்துவிட்டு
            நன்றியா ? போடா வெங்காயம் என்று
            ஆசிர்வதித்து விட்டு வந்தேன்??!!

            நீ  எனக்கு தூரத்து உறவாம்,
            நட்பால் நெருங்கியதை நாம் அறிவோம் !!            
            மற்றவர்களுக்கு நாம் தாய், மகன்
            உறவு முறைதான்.... அதைவிட
            புனிதமான உறவு, நாங்கள்
            நண்பர்கள் என்பேன்....!! எனக்கு
            சேவகனாய், தோழனாய், சில நேரம்
            தாயாய் யாதுமாகி  நின்றாய்!!

            எங்கோ இருந்தும் நினைவுகளால்
            தொடர்ந்து கொண்டிருப்பாய் !!  சிறு 
            தலைவலிக்கும்,பதறி ஓடி வந்து 
            பணிவிடை புரிவதை
            பார்க்கும்  என்னவர், என்னை மறக்க
            வைத்துவிடாதே என்று செல்லமாய்
            உன் தோளில் தட்ட, இருவரின் அன்பில்
            என் வலி இருந்த இடம் எங்கே
            என்று நான் தேடவேண்டி இருக்கும் ??!!

            அடுத்த  தெருவில் இருக்கும் கடைக்கு 
            போகிறேன் என்று சொன்னாலும், 
            அவரின்றி தனியாக வேண்டாம் 
            நான் வருகிறேன் என்பாய்.....! 
            சிரித்து கொண்டே சொல்வேன்...  
            நீ இருப்பதோ பல மைல் தூரம் தள்ளி என்று...!!!

             உன் கண் மூடித்தனமான அன்பால் 
             பாதிப்பு இல்லை என்றுதான்
             எண்ணினேன், அடுத்தவரிடம் பேசியதை 
             கூட தாங்க முடியாமல் 
             உன்னை நீ  வதைத்து கொண்ட 
             போதுதான் உணர்ந்தேன்...!! 
             பாதிப்பு உனக்கில்லை 
             எனக்குத்தான் என்று ??!

             இரு குழந்தைகள் உனக்கு இருந்தும் நீ 
             குழந்தை தான் எனக்கு....உன் அன்பில்
             நிதானத்துடன் கூடிய நேசம் வர
             இந்த இடைவெளி வேண்டும்தான்!!
             அன்பு கொள்ள வேண்டுமே தவிர 
             தன்னையே கொல்லக்கூடாது....!

( இந்த மடலை முடிக்கும் முன்னே உன்னை அழைத்து வாழ்த்த எண்ணுகிறதே என் மனம்,  என் பேரன்கள்  மருமகளுடன் இன்று போல் என்றும் இணைந்து நீ வாழ வாழ்த்துகிறேன் )
  

சனி, ஜூலை 3

கற்பூரம் மாதிரி



குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்களை விட சிறந்த வழிகாட்டி யாரும் இருக்க முடியாது என்ற உண்மையை எனக்கு உணர வைத்த ஒரு நிகழ்ச்சி. 

குழந்தைகள் எந்த காலத்திலும் குழந்தைகள் தான். அவர்களின் குழந்தைத்தனத்துடன் கூடிய புத்திசாலித்தனம் கூடிக்கொண்டே போகுமே ஒழிய குறைவது இல்லை.  சில நேரம் அவர்கள் தகப்பன்சாமியாக மாறிவிடுவார்கள்.  அந்த நேரம் நாம் குழந்தையாய்  மாறிவிடுவோம். இந்நிலை பலரது வாழ்விலும் சுவாரசியமாக நடந்து இருக்கும்.  என் வீட்டிலும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதில் அனைத்தையும்விட என் மனதை பரவசமாக பெருமை படுத்திய ஒன்று உள்ளது. 

நாங்கள்  வெளியில் எங்கேயும்  பிரயாணம் சென்று கொண்டு இருக்கும் சமயம் ஏதாவது  ஆம்புலன்ஸ் வண்டி எங்களை கடந்து போகும் போது ஒரு கணம் நான் என் கண் மூடி ' இதில் கொண்டு போகபடுபவர்களுக்கு விரைவில் குணமாகி நல்ல சுகம் கிடைக்கவேண்டும் ' என்று கடவுளை வேண்டுவது என் வழக்கம்.  நாங்கள் இருக்கும் பாளைங்கோட்டை பகுதியில்தான் புகழ்பெற்ற கவர்மென்ட் ஹாஸ்பிடல் (Highground Hospital) இருப்பதால் வெளியில் செல்லும் நேரமெல்லாம் ஆம்புலன்ஸ் வண்டியை பார்ப்பது தவிர்க்க முடியாது, நான் வேண்டுவதும் தவறாத ஒன்றுதான்.

ஒருநாள் ஞாயிறு அன்று வீட்டில் இருக்கும் போது மாடியில் விளையாடி கொண்டு இருந்த எனது ஆறு  வயது மகன் வேகமாக மூச்சு வாங்க ஓடி வந்து, " அம்மா  PRAYER  பண்ணினீங்களா " என்றான்.  நான் " ஏன் இல்லையே "  என்றேன்.  " ஐயோ  அம்மா, இப்ப ஆம்புலன்ஸ் வண்டி சத்தம் கேட்டது உங்களுக்கு கேட்கலையா " என்றான்.   நான் பதிலுக்கு " கவனிக்கலையே டா  , உள்ள வேலையா இருந்திட்டேன் " , என்றதற்கு அவன் " ஓ.கே விடுங்க, ஆனா நான் PRAY  பண்ணிட்டேன், அவங்களுக்கு சரியாகி விடும்  " , என்று சட்டென்று சொல்லி விட்டு என் பதிலுக்கு கூட காத்து இருக்காமல்  ஓடி விட்டான். எனக்கு தூக்கி வாரி போட்டு விட்டது.

நான் செய்யும் இந்த சின்ன விஷயம் அவனுக்கு எப்படி தெரிந்தது... ? தானும் அது போல் செய்ய வேண்டும் என்று அவனுக்கு  எப்படி தோன்றியது .....? எல்லாத்தையும் விட மற்றவர்களுக்காக தான் செய்யும் சின்ன பிராத்தனையும் கடவுளை சென்று அடையும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருப்பதை எண்ணி  அவனை பெற்ற தாய்மை உணர்ச்சியில் கண்கலங்கி விட்டேன். 

கிரகித்து கொள்ளும் தன்மை

நமது ஒவ்வொரு செயல்களையும் அவர்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள்...., விசயங்களை அப்படியே உள்வாங்கி கிரகித்து கொள்கிறார்கள்..... அவர்களும் அப்படியே நடக்கணும் என்று முயலுகிறார்கள்...., அப்படியே நடக்கவும் செய்கிறார்கள்....!!  

நமது செயல்கள் நல்லதாக இருப்பின் அவர்களும் நல்லவர்களாக வளருவார்கள், அதை தவிர்த்து அவர்கள் முன்னால் பொய் சொல்லி பேசி நாம் பழகினால் அவர்களும் அதையே பின்பற்றுவார்கள். ஒருநாள் நம்மிடையே பொய் சொல்ல நேரும்போதுதான் , நமக்கு கோபம் வந்து அவர்களை போட்டு அடி வெளுத்து விடுவோம், இதற்கு காரணகர்த்தா நாம் தான் என்பதை உணராமல்...!!    

கணவன், மனைவி தங்கள் கருத்து வேறுபாடுகளை குழந்தைகள் முன்னால் பேசி அவர்களின் மனதில் முரண்பாடுகளை விதைத்து விடுகிறோம்.  இன்னும் சிலர் நெருங்கிய  உறவினர்களை பற்றி குழந்தைகள் முன்னால் பேசிவிடுவார்கள், பின் எப்படி மற்றவர்களுக்கு நம் குழந்தைகள் மதிப்பு கொடுப்பார்கள்..?  பிறகு இந்த குழந்தைகள்  பெரியவர்கள் ஆன பின் அதே அவமரியாதைதான் நமக்கு பரிசாக கிடைக்கும்..!! 

குழந்தைகளை ஈரமண்ணுக்கு  ஒப்பாக கூறுவார்கள். அந்த மண்ணில் படும்  எந்த தடமும் அப்படியே பதிந்து விடும்.  தவிர பச்சை  மரத்தில் சுலபமாக ஆணி இறங்கி விடும் என்பதையும் நாம் மனதில் வைத்து கொள்ள வேண்டும்.  அதனால் பெரியவர்களாகிய நாம் நம் குழந்தைகளுக்கு நல்ல முன் உதாரணமாக இருப்போம்.  

நம் குழந்தைகள் நல்ல மனிதர்களாக வாழவும், எதிர்கால சமுதாயம் சிறப்பாக அமையவும் அவர்கள் மனதில் நல்லதை விதைப்போம்! நல்லதையே நாளை அறுவடை செய்வோம்!!     



போலி உறவுகளின் ஈர்ப்பு...!? தாம்பத்தியம் - பாகம் 33

"இந்த ஆம்பளைங்க  ஏன்  இப்படி இருக்காங்க...????"  ரிங் ஆன செல்போனை ஆன் செய்து ஹலோ சொன்ன அடுத்த செகண்ட் இந்த கேள்வி காதை அறைந்தது? ஆ...