Saturday, July 10

6:20 PM
38
தாம்பத்தியம் பதிவே முக்கியமாக கணவன், மனைவியின் கருத்து வேறுபாடுகளால் பாதிப்புக்கு உள்ளாகும் அவர்களின் குழந்தைகளுக்காக தான்.  அவர்கள் மனதாலும், உடம்பாலும்  படும்பாடுகளை தெளிவு படுத்தத்தான்.  இதுவரை ஆண், பெண் அவர்களின் நிறை, குறைகள் எந்த விதத்தில் குடும்ப உறவில் பங்குபெறுகிறது என்றும் வரதட்சணை கொடுமை போன்ற காரணிகள்,  பெற்றவர்கள், உறவினர்கள், நண்பர்களால் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏற்படக்கூடிய சிக்கல்கள் போன்றவை பற்றியும் பார்த்தோம்.  இனிதான் தாம்பத்திய சீர்குலைவினால் குழந்தைகளின் எதிர்காலம் எப்படி எல்லாம் பாதிக்க படுகிறது என்பதை பார்க்கவேண்டும்.


கணவன் , மனைவி உறவு சீராக இல்லை என்றால் வேறு யாருக்கும் எந்த பாதிப்பும் கிடையாது  ஆனால் நேரடியான பாதிப்பு அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்குத்தான்.  இதை பற்றி கருத்து வேறுபாடு நிறைந்த எந்த பெற்றோரும் எண்ணுவதே கிடையாது என்பதுதான் மிகுந்த சோகம். அவர்கள் பிள்ளைகளின் மனநிலையை பற்றி உண்மையில் கவலை பட்டார்கள் என்றால் வீட்டில் சண்டையே இருக்காது.  பிள்ளைகளும் நல்ல சூழ்நிலையில் நன்றாக வளர்ந்து எதிர்காலத்தில் தங்களது குடும்பத்தையும் அப்படியே பார்த்து கொள்வார்கள்.  இந்த நல்ல மனநிலை வாழையடி வாழையாக தொடரும், அவர்கள் வாழும் சமூகமும் சிறப்பாக இருக்கும்.

சமூகம் என்ன செய்யும்...??
  
பலரும் எந்த பிரச்சனை விஸ்பரூபம் எடுத்தாலும் உடனே சமூகத்தை பழிக்க தொடங்கி விடுவார்கள்....  "வர வர சமூகம் கெட்டுபோய்விட்டது"   என்று சொல்வதை  சுத்த முட்டாள்தனம் என்பேன்.  சமூகம்னா என்ன....?  நீங்களும்  நானும் சேர்ந்ததுதானே....!! நாம சரியா இருக்கிறோம் என்றால் சமூகம் எப்படி கெட்டு  போகும்...??

ஒரு நாலு சுவற்றுக்குள் ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து அன்பையும் பாசத்தையும் பரிமாறி ஒற்றுமையாக இருக்க முடியவில்லை என்றால் சமூகத்தை பற்றி மட்டும் குறை சொல்ல என்ன தகுதி இருக்கிறது....?? இல்லை என்றால் சமுதாயத்தை சீர்படுத்தபோறேன் என்று சொல்கிறவர்கள் முதலில் உங்கள் வீட்டை பாருங்கள் .... அதை சீர்படுத்தினாலே போதும் நாடும், இந்த சமூகமும்  உருப்பட்டு விடும்.
  
வீட்டில் என்ன நடக்கிறது...? நம் குழந்தைகள் எப்படி, என்ன மனநிலையில் வளருகிறார்கள்.? என்றே பலரும் பார்ப்பதே  இல்லை.  ஆண் தனது  ஆண்மை  நிரூபிக்க பட்டுவிட்டது என்பதையும்,  பெண் தான் மலடி இல்லை என்பதை தெரிந்து கொள்ளவும்தான் பிள்ளை பெற்று கொள்கிறார்களோ என்றே பெரும்பாலும் எனக்கு  தோன்றுகிறது....??!!

தங்கள் பிள்ளைகள் எங்கே போகிறார்கள், யாருடன் பழகுகிறார்கள் என்றே தெரியாமல் முக்கியமாக பெண் பிள்ளையை பெற்ற வீட்டில் இருக்கும் தாய் கவனிப்பதே இல்லை.  இப்ப இருக்கிற காலகட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றோ அல்லது இரண்டு குழந்தைகளோ தான் இருக்கிறார்கள்,  அந்த இரண்டு பேரை சரியாக வளர்க்க முடியவில்லை என்றால் அதைவிட வேறு என்ன முக்கியமான வேலை பெற்றவர்களுக்கு இருக்கமுடியும்...??

நீங்கள் குடும்பத்திற்காக ஓடி ஓடி சம்பாதித்தாலும் அதை அனுபவிக்க குழந்தைகள் "நல்ல முறையில் வளரவில்லை"  என்றால் நீங்கள் "உழைத்த உழைப்பு விழலுக்கு இறைத்த நீர்தான்"

நீங்கள் இறைத்த நீர் எப்படி வீணாகிறது என்பதற்கு, இரண்டே இரண்டு கொடுமையான, வேதனையான உதாரணங்களையாவது இங்கு குறிப்பிட்டே  ஆகவேண்டும். சாதாரணமாக மேலோட்டமாக சொல்வதைவிட உண்மையில் நடந்தவற்றை விளக்கும்போது நம்பகத்தன்மை  அதிகமாக இருக்கும் என்பது என் கருத்து.

சிறு வயது கர்ப்பம்

சமீபத்தில் ராமநாதபுரத்தில் நடந்த ஒரு சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. ( இது முதல் செய்தி இல்லை, ஏற்கனவே இதே போல் வந்தும் இருக்கின்றன) 15  வயதே நிரம்பிய அந்த  சிறுமி தான் படிக்கும் பள்ளியின் பாத்ரூமில் வைத்து தனக்கு தானே பிரசவம் பார்த்து குழந்தை பெற்று இருக்கிறாள்....??!!  

இந்த விசயத்தில் நாம் யாரை குறை சொல்வது...?

1 .   அவளை கர்ப்பமாக்கிய அந்த முகம் தெரியாத ஆண்,
2 .   அதற்கு விரும்பியோ, விரும்பாமலோ உடன்பட்ட அந்த சிறுமி,
3 .   இருவரும் இணைய காரணமான சூழ்நிலை,

ஆனால் இதை எல்லாம் விட முக்கியமான ஒரு காரணம் அந்த சிறுமியின் பெற்றோர், குறிப்பாக அவளது தாய்..?!!  குழந்தை பிறந்ததில் இருந்து அந்த தாய்க்குத்தான் கவனம் அதிகம் தேவை. ஆனா நாம தான் ஆணும் பெண்ணும் சமம் என்று உரக்க சொல்லிட்டு இருக்கிறோமே.... குழந்தை வளர்ப்பில் தகப்பன் ஏன் பங்கு பெறுவது இல்லை என்று கூட  ஒரு கேள்வி எழும்....  

இப்படிபட்ட விஷயம் பெரிது  ஆனபின் பெற்றோர்கள் இருவரும் ஒருவர்மேல் ஒருவர் குறை சொல்லி 'நீ வளர்த்தது சரி இல்லை' என்று மனைவியை  கணவனும் ,  'ஏன் நான் வளக்கிரப்போ,  நீங்க எங்க போனீங்க, இருந்து வளர்க்க வேண்டியதுதானே' என்று  மனைவி கணவனையும்  குறை சொல்லி சண்டை போடுகிறார்களே தவிர இருவருக்கும் சரி சமமான  கடமை உண்டு என்பதை மறந்து விடுகிறார்கள்.

ஆனால்  " இயற்கை பெண்களுக்கே அதிக பொறுப்பை கொடுத்து இருக்கிறது " என்பதுதான் உண்மை. அதும் பெண் குழந்தைகளை பொருத்தமட்டில் , ஒரு தாயால் தான் தனது பெண்ணின் மன உணர்வுகளை துல்லியமாக உணர்ந்து கொள்ளமுடியும்.  தன் மகளின் முகத்தில் சிறு வாட்டமோ, சிறு சலனமோ தென்பட்டாலும் உடனே என்ன 'பொண்ணு சரி இல்லையே' என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு அடுத்த ஒருமணி நேரத்துக்குள் உண்மையை கண்டு பிடித்து விடக்கூடிய சாமார்த்தியம் கொண்டவள் தான் ஒரு தாய்.  

அப்படி இருக்கும்போது இந்த மாணவியின் தாயாரால் தனது மகள் ஒன்பது மாதம் வரை ஒரு குழந்தையை வயிற்றில் சுமந்ததை கண்டு பிடிக்க முடியாமல் போனது எவ்வாறு.... இது எப்படி சாத்தியம்.......??!!   

தன் மகளின் நடவடிக்கையில் தெரியும் சின்ன மாற்றத்தை  கண்டு கொள்வதில் இருந்து, வயதுக்கு  வந்த தனது மகளின் மாதவிலக்கு தேதி வரை கணக்கு வைத்து, ஒரு மாதம் சரியாக வரவில்லை என்றாலும் என்ன காரணமாக  இருக்கும் ஒரு வேளை சத்து ஏதும்   குறைவாக இருக்குமோ  என்று மருத்துவரிடம் உடனே அழைத்து சென்று உடம்பை பேணும் அன்றைய தாய்மார்கள் எங்கே.....!!  மகள் கர்ப்பமாகி, குழந்தை பெற்று எடுத்த நாள் வரை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருக்கிற இன்றைய தாய்மார்கள் எங்கே .....????   

இதற்கு என்ன காரணம்  இருக்க முடியும்...?? என்று ஆராய்ந்தால் பதில் வேறு ஒன்றும் இல்லை....அந்த வீட்டில் கணவன் மனைவி  உறவாகிய தாம்பத்தியம் சரியாக இல்லை என்பதுதான் அடிப்படை காரணம்.  

தாம்பத்தியம் தாறுமாறாக இருப்பதால்தான் அந்த வீட்டில் வளரும் குழந்தைகளும் திசை மாறி போகிறார்கள் . வீட்டில் கிடைக்காத ஏதோ ஒன்றை வெளியில் தேடுகிறார்கள், ஆண்களுக்கு மது, போதை போன்றவையும், பெண்களாக இருந்தால் கர்ப்பமும் பரிசாக கிடைக்கிறது.  வீட்டில் கிடைக்காத அந்த ஒன்று பெரிதாக வேறு இல்லை 'அன்பு' என்ற அற்புதம்தான்.  இதை ஒரு கணவனும், மனைவியும் தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்காமல் போலியாக ஒரு வாழ்க்கையை வாழ்ந்து தங்களையும் ஏமாற்றி இந்த சமூகத்திற்கு ஒரு மோசமான முன்  உதாரணமாக தங்கள் பிள்ளைகளை நிறுத்துகிறார்கள்.  

இப்படி வளர்ந்த பிள்ளைகளின் எண்ணிக்கை கூடும்போது எப்படி ஒரு சமூகம் நல்ல சமூகமாக இருக்க முடியும்...?   எனவே இனியாவது சமூகத்தை குறை சொல்வதை விடுத்து நம்மை நாம் சரி படுத்தி கொள்ள முயலுவோம். நாட்டை நாம் பார்க்கும் முன்,  நம் வீட்டை நாடு பார்க்கும் படி  நடந்து கொள்வோம்...!!!?  

தாம்பத்தியத்தில் அடுத்து இதன் தொடர்ச்சியாக சிறுவர்கள், சிறுமியருக்கு  (பெண் குழந்தைகள்) ஏற்படும் பாலியல் கொடுமைகள்......??! 

பின் குறிப்பு: மேலே படத்தில் தோன்றுவது "சிறு வயது(Teenage) பெண்ணின் கையில் இருப்பது கர்ப்பத்தை உறுதி செய்யும் கருவி"    

      

  
Tweet

38 comments:

 1. அருமையான் ..அவசியமான் இக்காலத்தில் ....தேவையான் பதிவு. பகிர்வுக்கு நன்றி. மேலும் தொடருங்கள்.

  ReplyDelete
 2. /நீங்கள் குடும்பத்திற்காக ஓடி ஓடி சம்பாதித்தாலும் அதை அனுபவிக்க குழந்தைகள் "நல்ல முறையில் வளரவில்லை" என்றால் நீங்கள் "உழைத்த உழைப்பு விழலுக்கு இறைத்த நீர்தான்"//


  இது பலருக்கு தெரிவதில்லை. பணத்தின் பின் சென்று வாழ்கையை விட்டு விடுகின்றனர்.

  ReplyDelete
 3. இது இன்றைய பெண்களுக்கு தெரிவதில்லை. பெண்ணுரிமை பேசி மற்றவற்றை கோட்டை விடுகின்றனர்

  ReplyDelete
 4. கௌஸ், நீங்கள் சொல்வது சரி தான். இந்த சினிமாகாரர்களுக்கும் இதில் பெரும் பங்கு இருக்கு என்று நான் சொல்வேன். கண்டதையும் படம், கலைச்சேவை என்ற பெயரில் காட்டுவது.
  ஒரே வீட்டில் எப்படி மகளின் உடலியல் மாற்றங்களை கவனிக்காமல் எப்படி ஒரு தாய் இருப்பார்.

  இங்கு அமெரிக்காவில் 13, 14 வயதில் பிள்ளைகள் பெறுவது மிகவும் சகஜம். பெற்ற பின் அவர்களுக்கு பிள்ளைகளை வளர்க்க ஏது பணம். பெரும்பாலும் தத்துக் கொடுத்து விடுவார்கள். எப்படி தாங்கிக் கொள்வார்களோ தெரியவில்லை. பாவமாக இருக்கும்... குழந்தை, பெற்றோர் இருவரையும் பார்க்க .

  ReplyDelete
 5. 'நீ வளர்த்தது சரி இல்லை' என்று மனைவியை கணவனும் , 'ஏன் நான் வளக்கிரப்போ, நீங்க எங்க போனீங்க, இருந்து வளர்க்க வேண்டியதுதானே'

  இருவருக்கும் சரி சமமான கடமை உண்டு// சரியா சொன்னிங்க

  ReplyDelete
 6. "ஒரு நாலு சுவற்றுக்குள் ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து அன்பையும் பாசத்தையும் பரிமாறி ஒற்றுமையாக இருக்க முடியவில்லை என்றால் சமூகத்தை பற்றி மட்டும் குறை சொல்ல என்ன தகுதி இருக்கிறது....?? இல்லை என்றால் சமுதாயத்தை சீர்படுத்தபோறேன் என்று சொல்கிறவர்கள் முதலில் உங்கள் வீட்டை பாருங்கள் .... அதை சீர்படுத்தினாலே போதும் நாடும், இந்த சமூகமும் உருப்பட்டு விடும்."
  ரொம்ப சரியா சொன்னிங்க கௌசல்யா ..
  நல்ல பதிவு எல்லா பெற்ற்றோரும் கட்டாயம் படிக்க வேண்டும் ...தொடர்ந்து எழுதி எல்லோர்க்கும் நல்ல வழி காட்ட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. தேவையான் பதிவு. நன்றி.

  ReplyDelete
 8. தேவையான் பதிவு.நன்றி.

  ReplyDelete
 9. நிலாமதி...

  கருத்துக்கு நன்றிங்க...

  ReplyDelete
 10. ஆண் தனது ஆண்மை நிரூபிக்க பட்டுவிட்டது என்பதையும், பெண் தான் மலடி இல்லை என்பதை தெரிந்து கொள்ளவும்தான் பிள்ளை பெற்று கொள்கிறார்களோ என்றே பெரும்பாலும் எனக்கு தோன்றுகிறது....??!!//

  இது தான் யதார்த்தம். உங்களின் இக் கருத்தினை யாராலும் மறுக்க முடியாது. எத்தனையோ குடும்பங்களில் வறுமை நிலை இருந்தும், குடும்பத்தைக் கொண்டு செல்லப் போதிய பணவசதி இல்லாத சந்தர்ப்பத்திலும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் எனும் ஒரே நோக்கிற்காகப் பெறுபவர்களும் இருக்கிறார்கள்.

  கல்வியறிவு அதிகமுள்ளவர்களிடம் இப்படியான பழக்கங்கள் இல்லை. ஆனால் கல்வியறிவு குறைவான பாமரமக்கள் மத்தியில் நீங்கள் சொல்வது போலவே மலடி.. குழந்தையின்மை போன்ற விடயங்கள் சமூகத்தின் மத்தியில் செல்வாக்குச் செலுத்துகின்றது.

  ReplyDelete
 11. LK...

  வீட்டுக்கு வெளியே பெண்ணுரிமை வேண்டும் என்று போராடுவதை நான் குறை சொல்லவில்லை. அப்படி போராடித்தான் பல உரிமைகளை பெற்றோம் , நான் மறுக்கவில்லை. ஆனால் குடும்பத்தில் பெண்ணுரிமை வாதம் என்பது தேவை இல்லை என்பதே என் தாய்மையான வேண்டுகோள்... வீடு போராட்ட களமும் இல்லை...

  ஆண்கள் எது சொன்னாலும் ஆணாதிக்கம் பேசுகிறார்கள் என்று சொல்வது எப்படி முரண்பாடோ அதேபோல் எடுத்ததுக்கு எல்லாம் பெண்ணுரிமை பேசுவது அந்த உரிமையை அவமதிப்பது போல் உள்ளது.

  தாம்பத்தியத்தையும் அரசியலாக்கி விடாதீர்கள் என்பதுதான் என் பதிவே..

  ReplyDelete
 12. மிக அருமயான பதிவு அனைத்து பெற்றோர்களும் படிக்க வேன்டிய விஷயத்தை சிறப்ப எழுதிருக்கீங்க.

  ReplyDelete
 13. எந்தக் குழந்தையும் மண்ணில் பிறக்கையில் நல்ல குழந்தைகளே!
  அவர்கள் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே எனும் கவிஞனின் வாக்கினை இவ் விடத்தில் நினைவு கூருவது சாலச் சிறந்தது.


  வெளிநாடுகளைப் பொறுத்தவரை பாலியல் கல்வியும் , பாலியல் உறவுகள் பற்றிய போதிய விழிப்புணர்வும் சமூகத்தின் மத்தியில் ஏற்படுத்தப்படுகின்றது. வீதிகளிலும், பாடசாலை வழாகங்களிலும் தவறான கருக்கட்டலைத் தடுக்கும் ஆணுறை போன்ற பொருட்கள் தானியங்கி இயந்திரங்கள் மூலமாக (Atomatic Machine) பணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளும் வகையில் வைக்கப்படுகின்றன.
  ஆனாலும் ஒரு சில இடங்களில் இவ்வாறான தவறான குழந்தைப் பேறுகள் இடம் பெறச் செய்கின்றன. காரணம் எமது மக்கள் போதியளவு பாலியல் பற்றிய, தவறான கர்ப்பம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதுவே ஆகும்.

  சிறு பிள்ளைகள் கர்ப்பம் தரிக்கிறார்கள் என்றால் அது அவர்களின் பெற்றோரின் தவறே. பெண் பிள்ளைகளிற்கு அவர்களின் பருவ மாற்றங்களையும், உடல் உணர்வுகளைப் பற்றிய விடயங்களையும் எடுத்துச் சொல்ல வேண்டிய பொறுப்பு நமது நாடுகளைப் பொறுத்தவரை பெற்றோரையே சாரும்.
  இப்படி விழிப்புணர்வுடன் பொற்றோர் இருந்தால் 15 வயதுச் சிறுமி இறக்கவேண்டி ஏற்பட்டிருக்காது.

  மற்றைய விடயம் கிராமங்கள் தோறும் இளைஞர்களுக்கும், ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடாத்த வேண்டும்.


  உங்கள் பதிவு நிகழ்காலத்தில் எதிர்காலத்தைத் தொலைத்து விட்டவர்களினைப் பற்றிய விழிப்புணர்வாய் அமைந்துள்ளது.
  தொடருங்கோ.

  ReplyDelete
 14. vanathy...

  //இங்கு அமெரிக்காவில் 13, 14 வயதில் பிள்ளைகள் பெறுவது மிகவும் சகஜம். பெற்ற பின் அவர்களுக்கு பிள்ளைகளை வளர்க்க ஏது பணம். பெரும்பாலும் தத்துக் கொடுத்து விடுவார்கள். எப்படி தாங்கிக் கொள்வார்களோ தெரியவில்லை. பாவமாக இருக்கும்... குழந்தை, பெற்றோர் இருவரையும் பார்க்க .//

  வருத்தமாக இருக்கு வானதி. குழந்தை என்ற கடவுளின் பரிசு எப்படி எல்லாம் கை மாறுகிறது. கலாசாரம் பேசுகிற நம் ஊரும் இப்ப இப்படி போய்கொண்டு இருப்பதை பார்க்கும் போது தாயுள்ளம் நமக்குத்தான் பதறுகிறது தோழி.

  இந்த கருத்துக்கு நான் எப்படிப்பா நன்றி சொல்வது..?!

  ReplyDelete
 15. சௌந்தர்...

  வாங்க நண்பரே... நன்றி!!

  ReplyDelete
 16. sandhya...

  //நல்ல பதிவு எல்லா பெற்றோரும் கட்டாயம் படிக்க வேண்டும் ...தொடர்ந்து எழுதி எல்லோர்க்கும் நல்ல வழி காட்ட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்//

  இந்த பதிவை படிக்கும் பெண்கள் என்ன சொல்வார்கள் என்ற சிறு தயக்கம் எனக்குள் இருந்தது உண்மையே.. ஆனால் என் தயக்கத்தை உங்கள் வார்த்தை தூக்கிபோட்டு விட்டது...

  உங்களை மாதிரி தோழிகள் இருக்கும் போது நான் இன்னும் உற்சாகமாக எழுதுவேன்பா.

  நன்றி சந்த்யா.

  ReplyDelete
 17. கோவைகுமரன்...

  வணக்கம் குமரன்,. உங்களின் வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 18. தமிழ் மதுரம்...

  உங்களை பற்றி மிகவும் ஆச்சரிய படுகிறேன். அனைத்து விசயங்களை பற்றியும் பல விவரங்களை நுனி விரலில் வைத்து இருப்பது போல் கருத்துகளை சொல்றீங்க...!!
  பொறுமையாக மென்மையாக உங்கள் கருத்துகளை சொல்வதை பார்க்கும் போது நம் சமுதாயத்தின் மீது உங்களுக்கு உள்ள அக்கறையும், ஆதங்கத்தையும் உணரமுடிகிறது நண்பரே....

  உங்கள் கருத்துகள் என்னை இன்னும் அதிகமாக சிந்திக்க வைக்கிறது. என்னை ஊக்குவிக்கும் உங்கள் நட்புக்கு நன்றிகள் பல.

  ReplyDelete
 19. Gayathri...

  நன்றி தோழி.

  ReplyDelete
 20. தமிழ் மதுரம்...


  //சிறு பிள்ளைகள் கர்ப்பம் தரிக்கிறார்கள் என்றால் அது அவர்களின் பெற்றோரின் தவறே. பெண் பிள்ளைகளிற்கு அவர்களின் பருவ மாற்றங்களையும், உடல் உணர்வுகளைப் பற்றிய விடயங்களையும் எடுத்துச் சொல்ல வேண்டிய பொறுப்பு நமது நாடுகளைப் பொறுத்தவரை பெற்றோரையே சாரும்.//


  என் பதிவின் மொத்த விளக்கமே இதுதான் நண்பரே. இங்கு எனக்கு பின்னூட்டம் போட்டவர்கள் இதை புரிந்து கொண்டதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே...!

  நன்றி கமல்.

  ReplyDelete
 21. தாம்பத்தியம் பற்றிய உங்கள் ஒவ்வொரு இடுகையும் அருமை...தவறாமல் படித்து வருகிறேன்..சிலவற்றிற்கு மட்டும் பின்னுட்டம் கொடுக்க உயலவில்லை...பகிர்வுக்கு நன்றிங்க..தொடருங்கள்!!

  ReplyDelete
 22. நல்ல பதிவு.......வாழ்த்துகள் (உங்க வலைப்பக்கம் அருமையா இருக்கிறது படிப்பதற்கு நல்ல இருக்கு இதற்கும் வாழ்த்துகள்)

  ReplyDelete
 23. உங்களது gmail-யை பார்க்கவும்

  ReplyDelete
 24. Mrs.Menagasathia...

  நன்றிங்க. பின்னூட்டம் கொடுக்கலைனாலும் பரவாயில்லை... நீங்கள் தொடர்ந்து படித்து வருவதே எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் தவறாமல் வோட் போட்டுவிடுங்கள், அப்போதுதான் இந்த பதிவு பலரையும் சென்று அடையும். நன்றி தோழி.

  ReplyDelete
 25. rk guru...

  வலைப்பக்கம் நல்லா இருக்கு என்று சொன்னதுக்காகவும், உங்கள் வாழ்த்துக்கும் நன்றி....

  ReplyDelete
 26. என் மனைவிடம் நேற்று சிறிய சண்டை உங்கள் பதிவை படித்து திருந்தி விட்டேன்
  வாழ்க வளமுடன்

  நெல்லை நடேசன்
  அமீரகம்

  ReplyDelete
 27. எப்பவும் போல நல்ல பதிவு அக்கா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 28. Hi Kousalya,

  You well-done as well, Parent should be an example to their child………becoz, to the Child world start from their parent (particularly from mother). Therefore, parent need to be observing their child in detail. My thought is ……………Child made wrong it is fully of parents.

  Thank you once again Kousalya for your kind service of community.

  Best Wishes,
  P.Dhanagopal

  ReplyDelete
 29. கெளசல்யா. மிக மிக தற்காலத்திற்கு தேவையான அவசியமான பதிவு.

  இச்சம்மபவத்தை எந்தோழி மோகனா படித்திவிட்டு உடனே கிழிறங்கிவந்து ஏன்பா எங்கேப்பா போகுது உலகம் இப்படியும் தாயிருப்பாளா கவனிக்காது.

  15 வயதுகுழந்தைக்கு தெரியாதா தன்னையார் இப்படியாக்கியதெனெ அடிகொண்டேபோனார் கேள்விகளை.

  இதற்காக கவிதை எழுதுங்கள் என அவர்முகத்தில் தெரிந்த கோபத்தை பார்கனுமே!

  என்ன சொல்வதுன்னே தெரியலை.
  மொத்தத்தில் கலிகாலம் முத்திபோய் முக்தியடைந்துவிட்டது.

  .///அவளை கர்ப்பமாக்கிய அந்த முகம் தெரியாத ஆண்//

  இந்த காலத்தில் எப்படி சாத்தியம் அதான் புரியலை.

  நல்ல பதிவு புரிந்த்கொண்டு வாழ்ந்தால். நம் வாழ்க்கை நமக்கு..

  ReplyDelete
 30. நல்ல பதிவு.
  நகர்ப்புற குடும்பங்களில் குழந்தைகளுக்கு ஒதுக்கப்படும் நேரம் குறைந்து வருவதும் கவலைக்குரிய விஷயம்

  ReplyDelete
 31. NADESAN...

  நீங்க நம்ம ஊரா...?! வருகைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 32. அன்புடன் மலிக்கா...

  //மொத்தத்தில் கலிகாலம் முத்திபோய் முக்தியடைந்துவிட்டது.//

  உண்மை.

  ஆனால் காலத்துக்கு ஏற்றாற்போல் பெற்றவர்கள் நாம் இன்னும் கவனமாக இருந்தால் போதும் என்றே நினைக்கிறேன். வருகைக்கு நன்றிங்க.

  ReplyDelete
 33. P. Dhanagopal...

  மீண்டும் உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி.
  //My thought is ……………Child made wrong it is fully of parents. //

  முக்கால்வாசி அப்படித்தான், மிச்சம் சுற்றுபுறம், இவைதான் ஒரு குழந்தையின் நடவடிக்கைகளை முடிவு செய்கின்றன என்றே தோன்றுகிறது... நாம் மிக கவனமாக இருந்தாலே போதும் சில தவறுகளை ஆரம்பத்திலேயே தடுத்து விடலாம்.

  தொடர்ந்து வாங்க சார், உங்களின் வார்த்தைகள் எனக்கு ஊக்கத்தை கொடுக்கிறது.நன்றி

  ReplyDelete
 34. Rajasurian...


  உங்களின் முதல் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 35. நல்ல சிந்தனை பதிவுங்க... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 36. அப்பாவி தங்கமணி...

  வாழ்த்துக்கு நன்றி தோழி.

  ReplyDelete
 37. குழந்தைகளின் வளர்ப்பில் தகப்பனுக்கும் பங்கு உண்டு என்பது அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டிய விசயம்.ஆனால் ஒரு பெண் வளர்ப்பில் தகப்பனை விட தாய்க்கு தான் அதிக பொறுப்பு இருக்கிறது.தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி

  ReplyDelete
 38. //இப்படி வளர்ந்த பிள்ளைகளின் எண்ணிக்கை கூடும்போது எப்படி ஒரு சமூகம் நல்ல சமூகமாக இருக்க முடியும்...? //

  சாட்டையடி...! மேலும் மேலும் ஆராயப்பட வேண்டிய கேள்வி இது? இப்போது ஓஷோவின் ‘பெண்ணின் பெருமை’ என் வாசிப்பிலிருக்கிறது. இப்போது தான் உங்களின் வலைப்பூவைப் பார்க்கிறேன். ஆரோக்கியமான பதிவு... நிறைய உண்மைகளை நான் இங்கு பார்க்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள். அனைவரின் மனப்பாங்கினையும் வெளிப்படுத்திக் கொள்ளவும், தேவைப்பட்டால் பக்குவப்படுத்திக் கொள்ளவும் ஒரு நல்ல வாய்ப்பாக இது இருக்கிறது. மேலும் மேலும் மெருகேற என் வாழ்த்துக்கள். ஒரு பெண்ணாக, தாயாக நீங்கள் இந்தப் பதிவை தொடர்வது மிகப் பொருத்தமாக இருக்கிறது, பக்குவமாகவும் இருக்கிறது. இதை பதிவிட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!!!!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...