புதன், பிப்ரவரி 3

இறுதிச்சுற்று...!



ஆரம்பம் முதல் இறுதி வரை மிக ரசித்த படம்... ரித்திகா இந்த பெண்ணை எங்கே கண்டுப் பிடித்தார்கள் என்று ஆச்சர்யப் பட வைத்தார். படத்தை பார்க்கும் முன் விஜய் சூப்பர் சிங்கரில் கெஸ்ட்டா இந்த பெண்ணை பார்த்தப் போது ரொம்ப ரொம்ப சிம்பிளாக நடிகை என்ற  எந்த அடையாளமும் இல்லாமல் வந்து அமர்ந்தார். மாதவனுக்கு இந்த சின்ன பொண்ணு ஜோடியா என்ன படமோ எப்படி இருக்குமோ என்று ஒரு சலிப்பு எனக்கு. பொதுவாக ரிலீஸ் ஆகுகிற படமெல்லாம் பார்க்கிற வழக்கம் இல்லை ரொம்ப யோசிச்சு செலக்ட் பண்ணிப் பார்ப்பேன்

ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை 'ஆவி கோவை' தனது பேஸ்புக் ஸ்டேடஸில் மாதவனின் நடிப்பை சிலாகித்ததை  பார்த்ததும் இந்த படத்தை பார்த்தால் என்ன என்று தோன்றியது. அன்னைக்கு எனது வேலைகள்  முடிந்து  வெட்டியாக வேறு இருந்ததால் நானும் கணவரும் உடனே  கிளம்பியும் விட்டோம். தியேட்டரில் சொற்பக் கூட்டத்தை பார்த்ததும் அடடா தப்பா Choose  பண்ணிட்டோமோ அரண்மனை 2 (ஹவுஸ் புல்) போய் இருக்கலாமோ,  சரி எதுனாலும் நேருக்கு நேராச் சந்திப்போம் என்ற வீராவேசத்துடன் உள்ளே சென்று சீட்டில் அமர்ந்தேன்.

சும்மாச் சொல்லக் கூடாது ஆரம்பம் முதல் சீன் பை சீன் திரையுடன் என்னை ஒன்ற வைத்துவிட்டது. ரித்திகாவை எப்படி பாராட்ட என்றே தெரியவில்லை அந்த பொண்ணு நடிச்சிருக்குனுலாம் சொல்ல முடியாது, என் கணவரிடம் சொன்னேன், இந்த பொண்ணு ஒரு ஸ்போர்ட்ஸ்வுமன் ஆக இருப்பாளோ என்று... அந்த அளவிற்கு ரொம்ப சாதாரணமாக அனைத்தையும் கையாண்டாள்.  அந்த பேச்சு(டப்பிங்கா   நம்ப முடியவில்லை) அந்த ஸ்டைல் அந்த நடை அந்த பார்வை... கண்ணா அது என்னமா உணர்ச்சியை வெளிக் காட்டுது. நடனமா நளினமா என்று இமைக் கொட்டாமல் பார்த்தேன். ஒவ்வொரு அசைவும் தனித் தனியாக ரசிக்கவைத்தது. இதற்கு முன்  ஷோபாவை இப்படி ரசித்திருக்கிறேன்.

பொதுவாக மாதவன் அடிக்குரல்ல பேசுற  படத்தை தவிர்த்துவிடுவேன், டிவியில் படம் போட்டாலும் பார்க்க மாட்டேன். உருவத்துக்கும் குரலுக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி இருக்கும். இந்த படத்துல ரொம்பவே ஸ்மார்ட்.  இறுக்கமா இருக்கணும் அதே நேரம் இயல்பாவும் தெரியணும் என்பதைப் பார்வையாளனிடம் வெளிப்படுத்திய விதத்தில் மாதவன் நடிப்பு அட்டகாசம். நடிப்பை பொறுத்தவரை நம் தமிழ் திரையுலகம் இவரை அவ்வளவாக பயன்படுத்தவில்லை என்ற வருத்தம் ஏற்பட்டது.

நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்த  படம், அவரும் தனது பாத்திரத் தன்மையை உள்வாங்கி மன உணர்வுகளை முகத்தில் அருமையாக வெளிப் படுத்தி இருந்தார். தமிழ் நாட்டு மீனவப் பெண்ணுக்கு வடநாட்டுப் பெண் சாயல் எப்படி என யோசிப்பதற்கும் ஒரு சிறு கதை வைத்தது அழகு.   நாசர் ராதாரவி உள்பட நடித்த அனைவருமே நடிப்பில் அவ்வளவு கச்சிதம்  நடிகர்களுக்குள் இருக்கும் நடிப்பை   கதைக்கு ஏற்றப் படி வெளிக் கொணர்ந்து  நடிக்க வைத்தது  இயக்குனரின் திறமை.     

திருமதி. சுதாவின் இயக்கம் மிக பாராட்டத்தக்க ஒன்று...ஒவ்வொரு பிரேமிலும் அவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார். அவரது உழைப்பு வீண் போகவில்லை, இணைய உலகமே கொண்டாடித் தீர்க்கிறது. ஆனால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடைய வேண்டுமே என்ற ஆதங்கம் எனக்கு. ஒரு குத்து பாட்டு, டாஸ்மாக் விளம்பரப் பாடல், ரத்தம் தெறிக்கத் தெறிக்க கொ*லைவெறித் தாக்குதல், அம்பது பேரை தூக்கி வீசுற ஹீரோயிச  சண்டை, காதைப் பிளக்கும் இசை, வெளிநாட்டில் ஒரு பாடல் இதெல்லாம்  தான்  படத்தின் இலக்கணம் என தமிழ் ரசிகனின் புத்தியில் பதிந்துவிட்டது.  தற்போது பேய்களின் காலம் வேறு, அதுவும் சிறு குழந்தைகளை ஈர்பதற்காக காமெடியை கலந்துக் கட்டி பேய் பிசாசுக்களை தாராளமாக நடமாட விட்டிருக்கிறார்கள். இப்போதெல்லாம் பேய் பிசாசு என்று ஒன்றும் இல்லை எல்லாம் சும்மா லுலுலாயிக்குனுச் சொன்னா சின்னப்பசங்க எங்க கேட்குறாங்க .    சினிமா சொல்றது மூடநம்பிக்கை என்றாலும் நம்பித் தொலைக்குறாங்களே .

இறுதிச்சுற்று காக்கா முட்டை போன்ற படங்கள் குறிஞ்சிப் பூக்கள் போல... சினிமாவைக் கொண்டாடும் ரசிகர்கள் இந்த படத்தையும் கொண்டாடவேண்டும்.  சம்பந்தப் பட்டவர்களை பாராட்டி உற்சாகப் படுத்த வேண்டும். விளையாட்டுத்துறையில் நிலவும் அரசியலைச் சாடுகிறார்கள். இந்த படத்தில் சமூகத்திற்கான அறிவுரைகளை வசனங்களின் மூலமாகச் சொல்லவில்லை ஆனால் உணர்த்துகிறார்கள்.  கடந்த வாரம் ஆஸ்திரேலியாவை வென்று கோப்பையை கைப்பற்றிய  பெண்கள் கிரிக்கெட் அணியை பற்றி எத்தனை பேருக்கு தெரியும், எத்தனை பேர்கள் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் போட்டோம், என்னையும் சேர்த்துதான். இப்படித்தான் இருக்கிறது நமது சமூக அக்கறை எல்லாம். முடிந்தவரை நல்ல தமிழ் சினிமாக்களை வாழ்த்துவோம் பாராட்டுவோம்.    (சினிமாவைப் பற்றிய பதிவில் வேறெப்படி நான் சொல்ல) :-)

சுவாரசியத் துளிகள் 

ரித்திகா ஒரு குத்துச்சண்டை வீரர் என்பது படம் பார்த்தப்பிறகு தான் தெரிந்தது . முதலிலேயே தெரியாமல் இருந்ததும் நல்லதுதான், விமர்சனங்கள்  படிக்காமல் படம் பார்ப்பது சுவாரசியமானது என்பதை போல...  

நாயகி நாயகனை புரிந்துக் கொண்டப்பின்  இருவரும் அருகருகே இருக்கும் சந்தர்ப்பங்களில் அது குத்துச் சண்டை பயிற்சியாக இருந்தாலும் மெல்லிய நேச இழை நிழலாடியது அற்புதம். ஒளிக்காட்சி அமைப்பு மனதை ஈர்த்தது.  

குரு சிஷ்யை  காதல் எப்போதுமே தனித்துவமானது...உடல் தாண்டிய உணர்வு ரீதியிலான நேசத்தை பரிமாறியும் சமயங்களில் பரிமாற முடியாமல் தவிக்கும் தவிப்பை அனுபவித்தவர்களால் மட்டுமே உணர  முடியும்.  குருவின் ஒற்றைப்பார்வை ஒற்றைப்புன்னகை 'ம்' என்ற ஒற்றை வார்த்தை(?) ஏதோ ஒன்று போதும் சிஷ்யைகள்  ஜீவித்துக் கொள்ள...!  குரு தனக்குச் செய்ததற்கு நன்றி பாராட்ட, தான் எதைக் கொடுப்பது என்றெல்லாம் அதிகம் யோசிக்காமல், வெற்றி பெற்றதும் குருவையும்  தன்னையும் அழிக்க முயன்ற சந்தர்ப்பவாதி எதிரியை இரண்டு குத்தில்  தரையில் வீழ்த்தி, எதிர்வரும் அத்தனை பேரையும் மோதி ஒதுக்கித் தள்ளி , குருவிடம் நேராக  ஓடிச்சென்றுத் தன்னை முழுவதுமாய் ஒப்படைத்து சரணாகதி அடைந்த அந்த ஒரு நொடி... எனது சுவாசத்தை நான் மறந்த தருணம் அது !!!

'நீ  எனக்காகச் செய்யும் விசயமெல்லாம்  காதல் இல்லாமல் வேறென்ன?'  

விழிகளில் வழியும் எனது  கண்ணீரில் இருக்கிறது பெண்ணே உனது கேள்விக்கான எனது பதில்...!!

* * * * * * * * * * 
 பிரியங்களுடன்...

உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா 





வெள்ளி, ஜனவரி 29

பெண்களின் குடிப்பழக்கத்தால் சமூகம் சீரழியும் ??!!





பெண்களை வைத்து இதோ அடுத்து ஒரு விவாதம் தொடங்கியாகிவிட்டது. பெண்களைப்  பேசுப்பொருளாக்கி விவாதிப்பதில் இருக்கும் சுவாரசியம் வேறு எதிலும் இல்லை என்பதை ஊடகங்கள் நன்கு புரிந்து வைத்திருக்கின்றன. தற்போதைய  தலைப்பு பெண்களும் குடியும்... ஒரு பெண் டிவி ஷோவில் குடித்தால் என்ன தப்பு என்று கேட்டுவிட்டாள், உடனே பத்திக்கிச்சு சமூக வலைத்தளம். விதவிதமாக Memes ரெடி பண்ணித்  தாளித்துக் கொண்டிருக்கிறார்கள் பெண்களை.  தாளிப்பவர்களில் எத்தனை பேர் குடியை முகர்ந்து கூட பார்க்காத மகாத்மாக்களோ தெரியவில்லை.  விஷயம் இப்போது  எப்படி திசைத்  திரும்புகிறது என்றால் 'குடிப்பழக்கம் சரி ஆனால் பெண்கள் குடிப்பது தவறு'  

சில  நாட்களுக்கு முன்னர் கரூரில் ஒரு பள்ளி மாணவன் குடி*போதையால் மயங்கி விழுந்துக் கிடக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் போட்டிப்போட்டுப்  பகிரப்பட்டு வந்தது. பள்ளி சீருடையுடன் இருந்ததே அப்போது பலரின் கவனத்தை வெகுவாக பாதித்தது. பள்ளி மாணவர்கள் குடி*போதைக்கு  அடிமையாகி ரொம்ப காலமாச்சு. சங்கரன்கோவில் அருகில் ஒரு கிராமத்தில் 9 வது  படிக்கும் இரு  மாணவர்களுக்கும்  சண்டை, காரணம் இருவரும் ஒரே மாணவியைக்  காதலித்தது. குடி*போதையில்  கையில் கத்தியுடன் மலையடிவாரத்தில் கட்டிப் புரண்டுப்  போட்ட சண்டையை காவல்துறை தலையிட்டு அவசர அவசரமாக சமாதானம் செய்து அவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைத்தது. எங்கே இது சாதிச் சண்டையாக மாறிவிடுமோ என்ற கவலை காவல்துறைக்கு !  மாணவர்கள் சார்ந்த இரு பிரிவினருக்கும் பல வருட பகைமை  உண்டு.

குடித்தால் தான் நண்பர்கள் மத்தியில் கௌரவம், குடிப்பது தைரியம் வீரம் இப்படி இன்னும் என்ன கண்றாவி புரிதல்கள்(?) இருக்கிறதோ அத்தனையையும் சினிமா நமது மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்துவிட்டது.  குடிக்கவைத்து சிறுகச்  சிறுக மக்களைக்   கொன்று அவர்களின் சடலங்கள் மீதேறி நின்று கைக் கொட்டிச் சிரிக்கும் அரசுகள்  வீழ்வதற்குள் இங்கே நாசமாகிப்  போவார்கள்  நம் மாணவ செல்வங்கள் ! பெர்த்டே பார்ட்டி பியருடன் என்ற  கலாச்சாரம்(?) கல்லூரியை  மட்டுமல்ல பள்ளிகளுக்கும் பரவி ரொம்பநாள் ஆச்சு. அதுபோக வாரம் ஒரு முறை வீக் எண்டு செலிபிரேசன் என்ற கண்றாவி  (கலாச்சாரம்=கண்றாவி) வேறு,

இரு தினங்களுக்கு முன் திருப்பூரில் ஆறாம் வகுப்பு மாணவன் ஒன்றாம் வகுப்பு மாணவனை அடித்தேக்  கொன்று*விட்டான். நினைத்துப்  பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது. எவ்ளோ வன்மம் அந்த மாணவனுக்குள் இருந்தால் இத்தகைய கொடூர*த்தை நிகழ்த்த முடியும். அவன் வாழும் சமூகம் அவனுக்குள் விதைத்தது இதை தானா ?  டிவி ஷோவில் குடிகாரத் தகப்பனால் வன்கொடுமைச்  செய்யப்பட்ட சிறுமி தகப்பனை நோக்கிக்  கேட்கிறாள், 'அருகில் படுத்திருப்பது மகளா மனைவியா என்பது கூடவாத்  தெரியாது என்று. குடி*போதையின் விபரீதத்தை சொல்ல இது ஒன்று போதும்?!

சிறந்த பள்ளிகளை தேடி அதிக பணம் கட்டி சேர்த்துவிட்டதுடன் தங்கள் கடமை முடிந்து விட்டதாக எண்ணி பணத்தின் பின் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் இன்றைய பெற்றோர்கள். தனது மகன்/மகள் எங்கே செல்கிறார்கள், யாருடன் பழகுகிறார்கள் என்றெல்லாம் கவனிக்க அவர்களுக்கு நேரம் இல்லாமல் போய்விட்டது. பள்ளி குழந்தைகள் மது அருந்தத் தொடங்கிவிட்டார்கள் என்பது நல்ல செய்தி அல்ல.  விடுமுறை தினத்தன்று  குழந்தைகளுடன் செலவழிப்பதை விட தங்கள் நண்பர்களுடன் இணைந்து தண்ணி அடிக்க செல்லும் பொறுப்பற்ற தகப்பன்கள் அதிகரித்துவிட்டார்கள்.  இதில் வேண்டுமானால் தற்போது தாய்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.  பெற்றோர்கள்  தங்களை ரிலாக்ஸ் செய்வதில் வைக்கும் கவனத்தை தங்களின் குழந்தைகளின்  மீது வைக்கவில்லை என்றால் அந்த குழந்தைகளின் எதிர்காலம் 'சிறுவர் சிறைச்சாலை'யில் கழிவதை யாராலும் தடுக்க முடியாது.

இரண்டு நாளா நீயா நானா வீடியோவை ஷேர் பண்ணி  ஐயையோ ஒரு பெண் இப்டி பேசலாமா, அது எப்டி பொம்பளக்  குடிக்குறது நாடு என்னாவறது சமூகம் கெட்டு குட்டி சுவராப்  போச்சேனு கதறிக்  கதறி அழுவுறாங்க. பெண் குடிக்கலாமா அதுவும் தமிழ் பெண் குடிக்கலாமா என்ற கேள்விகளை பார்த்தால் அழுவதா சிரிப்பதா என்றுத்  தெரியவில்லை.  அந்த பெண் விவாதத்திற்கு பேசினாலே ஒழிய தான் குடிக்கிறேன் அதனால் பேசுகிறேன் என்று சொல்லவில்லை. இதைக்  கூட புரிந்துக் கொள்ளாமல் அந்த பெண்ணின் புறத் தோற்றத்தை வைத்தும் கேலிகிண்டல் செய்து தங்களின் ஆணாதிக்க வெறியைச்  சொறிந்துக் கொண்டிருக்கிறார்கள்.

குடிப்பதில் என்ன ஆண் பெண் வித்தியாசம்... விஷ*த்தை யார் குடித்தாலும்  சாவுதான்.  ஆனால்  இதை ஆண்களால் ஒத்துக் கொள்ள முடியாது, இவங்க தான் புதுசா கண்டுப்பிடிச்ச மாதிரி பொண்ணுக்கு  கர்ப்பப்பை இருக்கு,    குடிச்சா அது கெட்டுப் போய்டும் குழந்தைக்கும் பாதிப்புனு என்னா பேச்சுன்றிங்க ...சகிக்கல! அப்புறம் பொண்ணு குடிச்சா பாலியல் ரீதியிலான துன்பத்துக்கு ஆளாவாளாம். பாலியல் கொடுமை அதிகரிக்க பெண் குடிப்பதும் ஒரு காரணமாம். அப்படினா இந்த ஆம்புளைங்க மூக்கு முட்ட குடிச்சிட்டு போறப்போ எதிர்ல பெண் வந்தாக்  கண்டுக்காம தலையைக்  குனிஞ்சிகிட்டு அப்டியே நேரா வீட்டுக்கு போய் குப்புறப்படுத்துடுவாங்கப்  போல... பெண்  குடிப்பதைக்  கண்டித்தும் ஆண் தனது குடிப்பழக்கத்தை நியாயப் படுத்தவும் எப்படி  எல்லாம் சமாளிக்கிறார்கள்

குடிகார ஆண்கள்.  . மதுப்பாட்டில்களை புகைப்படமெடுத்து சமூக வலைத்தளங்களில் போடுவதும், குடியைப்  பற்றிய   உற்சாகப்பேச்சுக்களை  ஸ்டேடஸ்/கமெண்ட்ஸ்  என்று போடுபவர்களும் சமூகத்தைக்  கெடுக்கும் படு பாதகர்கள். மதுவை விற்கும் அரசின் செயல் கயமைத்தனம் என்றால் மதுவை  மறைமுகமாக உற்சாகப் படுத்தும் உங்களில் சிலரின் செயலுக்கு என்ன பெயர்? கையில் பியர் பாட்டிலை வைத்திருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படத்தைச்  சிறிதும் வெட்கமின்றிப்  பகிர்ந்து கேவலமாய்  திட்டித்தீர்த்துவிட்டு  வாரக்கடைசியில் 'என்னடா மச்சி இன்னைக்கு பார்ட்டி எங்க' என ஸ்டேடஸ் போடும் அதி உன்னதமான ஆண்கள் நிறைந்த உலகமிது. பேஸ்புக்கில் பரவலாக சனிக்கிழமை (வீக் எண்டு)இரவைப் பற்றிய பேச்சுக்கள்/உளறல்கள் நிறைந்திருக்கும்.  இதை விட சிறந்த பொறு*க்கித்தனம் வேறில்லை. 

மக்களின்  நிகழ்காலத்தைச்  சிதைத்து எதிர்காலம் என்ற ஒன்றே  இல்லாமல் போக்கும் குடியை மட்டும் ஏன் எதிர்க்க முடியவில்லை. ஆண் பெண் சமத்துவம் வேண்டும் என்று பேசுபவர்கள் கூட ஒரு பெண் குடியை பற்றி பேசியதும் உடனே புரட்சி புடலங்காயா மாறிடுவாங்க.

புதுமைப் பெண்களே !

உங்களுக்கு விருப்பம் வசதி இருந்தால் மது அருந்துங்கள் ஆனால் ஆணுக்கு பெண் சமம் என்பதை மது அருந்துவதன் மூலம் நிரூபிப்பதாக சொல்லிக் கொண்டுத்  திரியாதீர்கள். ஒரு பெண் மரத்திலோ தரையிலோ சாய்ந்து கண் மூடி இருக்கும் போட்டோவை பேஸ்புக்கில் பகிர்ந்ததும் வரும் முதல் கமென்ட் என்ன மட்டை ஆகிடிங்களா? இன்னைக்கு ஓவரா? ஆண்கள் இப்படி கேட்கவேண்டும் என்றே போட்டோவை பகிரும் பெண்கள் ஒரு தனி ரகம், எதை/யாரை  பற்றியும் அக்கறை இல்லாத இவர்களை நான் பெரிதாக கண்டுக்கொள்வதில்லை.  குடித்தால் என்ன தப்பு என்று பேசிய நீயா நானா பெண்ணும் இவர்களும் ஒன்று.  எதில் சமத்துவம் வேண்டும் என்பதேப்  புரியாத பெண்களால் தான் பெண்மை மேலும் மேலும் கேலிக்கு உரியதாக மாறிக் கொண்டிருக்கிறது.    

அரசின் பொறுப்பின்மை 

மதுக் குடிப்பது தனிமனித ஒழுக்கம் சம்பந்தப் பட்டது என்றாலும் அரசே அதை ஊக்குவிப்பது வேதனை. ஊருக்கு ஒதுக்குபுறமாக இருந்த சாராயக் கடைகள் இன்று வீதிக்கு ஒன்று என்ற அளவில் குடியிருப்புப்  பகுதியையும் விடாமல் பள்ளிக்கு அருகில் மருத்துவமனைக்கு அருகில் என்று எதைப்  பற்றியும் யோசிக்காமல் இஷ்டத்திற்குப்   பெருகிவிட்டதை எவ்வாறு நியாயப்படுத்துவது. இந்த அரசு கைக்கெட்டிய தூரத்தில் டாஸ்மாக் கடையை வைத்துவிட்டு குடிக்காதே குடி பழக்கம் உடலுக்கு கேடு என்று பிரச்சாரம் செய்கிறது, பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவதைப்  போல .

பெண்களின் முன்னேற்றத்தை ஜீரணிக்க ஆண்களால் முடியவில்லை பிற பெண்களாலும் முடியவில்லை. நம் சமூகத்தின் சாபக் கேடு இது. எல்லாவற்றிலும் சமத்துவத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் பெண் குடியிலும் சமத்துவத்தை நாடிவிட்டால் என்னாவது என்பது தான் பெரும்பாலோரின் கேள்வி.

ஆண்கள் தான் இதில் அதிகமாக மிரண்டு விட்டார்கள் என்பதை அவர்களின் கருத்துகளின் மூலம் புரிகிறது, எங்கே தனது மனைவி 'வரும் போது எனக்கு ஒரு பகார்டி ஆப்பிள் பிளேவர் வாங்கிட்டு வாங்க' என்று கேட்டுவிடுவாளோ, அவளுக்கு ஆம்லெட், மட்டன் சுக்கா ரெடி பண்ணிக் கொடுக்கும் நிலைமை தனக்கு வந்துவிடுமோ என்ற பயம். மத்தபடி கலாச்சாரமாவது மண்ணாங்கட்டியாவது.  சுய ஒழுக்கம்  கட்டுப்பாடு நாகரீகம் ஆண் பெண் எல்லோருக்கும் வேண்டும், அளவுக்கு மீறி யார் குடித்தாலும் பாதிப்பு சம்பந்தப்பட்டவங்களுக்கு தான். பெண் குடிப்பது சமூகத்தைப்  பாதிக்கும் என்றால் ஆண் குடிப்பது சமூகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டுச்  செல்லுமா என்ன ?!!

ஆண் குடித்து தெருவில் புரண்டால் ஒதுங்கிச் செல்லும் சமூகம் பெண் குடித்து புரளும் போது சுற்றி நின்று வேடிக்கைப் பார்க்கிறது துணி எப்போது விலகும் என்று. பாலியல் வறட்சிக் கொண்ட மனிதர்களுக்கு அந்த இடத்தில் பெண் குடித்துவிட்டாள் என்பதை விட பிறவற்றின் மீதுதான் அதிக கவனம்.

பாலியல் வன்*புணர்வு செய்யப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக்குகிற சமூகத்தில், பெண் குடிப்பதற்கு மதுவைப் பழிக்காமல் பெண்ணை பழிப்பதுத் தானே வழமை 

பெண்கள் குடிப்பதற்கு வக்காலத்து அல்ல இந்த பதிவு  ஆனால் பெண்கள் எல்லாம் குடிக்கிறார்கள் என்ற கூப்பாடு ஏன். அதுதான் பிரச்சனை.  பெண்களைக்  குடிக்காதீர்கள் என்று வற்புறுத்த  'குடிக்கும்'  எந்த ஆண்களுக்கும் உரிமை இல்லை.  வேண்டுமானால் உங்கள் வீட்டுப் பெண்களைக்  குடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதுவே சமூகத்திற்கு நீங்கள் செய்யும் பெரிய உபகாரமாக இருக்கட்டும்!!  

 


புதன், டிசம்பர் 23

பெண்ணியவாதிகள் சிலரின் ஆதிக்க வக்கிரங்கள்...!!?




எனக்கு இந்த ஒரு விசயத்தில் மட்டும் எப்பொழுதும்  ஒரே குழப்பம் இந்த பெண்ணியவாதிகள் ஆண்களுக்கு எதிரானவர்களா பெண்களுக்கு  எதிரானவர்களா? பெண்ணுக்கு இழிவு ஏற்பட்டுவிட்டது என்றதும் சிலிர்த்து எழும் பெண்ணியவாதிகள் என்கிற ஒரு குரூப், தங்களின் எழுத்து, பேச்சின் வாயிலாக 'ஏய் ஆணாதிக்க வர்க்கமே' என ஆரம்பித்து கிழி கிழி என கிழித்துத் தொங்கவிட்டுவிடுவார்கள்... இதை நன்றாக கூர்ந்துக் கவனித்தோம் என்றால் அங்கே பரிதாபமாகத் தொங்கிக் கொண்டிருப்பது சாட்சாத்  பெண்மை?! பெண்ணுரிமையை  பேணுகிறோம் என்று கூறிக் கொண்டே பெண்மையை இழிவுப்படுத்துவதில் பெண்ணியவாதிகளுக்கு நிகர் அவர்களேதான்.   

ஆம் போற்றப்படவேண்டியவள் தூற்றப்படுகிறாள் ஆண்களாலும் ஒரு சில பெண்களாலும்... அவர்கள் பெண்ணுக்குரிய மதிப்பை, மாண்பை குறைத்துக்கொள்ள சிறிதும் அஞ்சுவதில்லை. சிலரின் போகப்பொருள் சிலரின் கேலிப் பொருள் சிலரின் பொழுதுபோக்கு இப்படி பெண்மையை எப்படியும் பயன்படுத்திக்கொள்ளலாம், உண்மையில்  இதை தட்டிக் கேட்கவும் கண்டிக்கவும் யாருமில்லை. ஆண்கள் தான் தங்களுக்கு எதிரிகள் என்று எண்ணிக் கொண்டே சில பெண்கள் நடந்துக் கொள்ளும் விதம் சகபெண்களாலேயே சகித்துக்கொள்ள முடிவதில்லை.

பெண்ணுரிமை பெண்ணியம் பேசுபவர்கள் தங்களின் தன்முனைப்பை பொதுவெளியில் நிலைநாட்ட துடிக்கிறார்களே  தவிர சக பெண்ணிற்கு உதவுவதாக இல்லை. அதிலும் இவர்களின்  கருத்துகள் பெண்ணை மேலும் மேலும் அவமானப் படுத்துவதாகத்தான் இருக்கிறது. இவர்களை போன்றோரின் கருத்துகளால் பெண் என்றாலே இப்படித்தான் என்ற எண்ணத்தை வலுவாக எல்லோரின் மனதிலும் பதிய வைக்கிறார்கள். எந்தவொரு பெண்ணுக்கெதிரான நிகழ்வு என்றாலும் சம்பந்தப்பட்ட நிகழ்வின் முன் பின் சூழல்கள்  எதையும் அலசி ஆராயாமல் பொத்தாம் பொதுவாக ஆணாதிக்கம் என குற்றம் சாட்டுவது அவர்களின் முக்கியமான பொழுதுப் போக்கு.

தற்போது பரபரப்பான விசயமாக மாறிப் போன பீப் சாங் பிரச்சனையில்  சம்பந்தப் பட்டவர்களின் மீது வழக்குகள், கைது நடவடிக்கை என வந்துக் கொண்டிருக்கும் செய்திகள் ஓகே ரகம் என்றால் இதை குறித்து எழுதப்பட்ட விமர்சனங்கள் ஐயகோ ரகம். நிர்மலா கொற்றவை, லீனா மணிமேகலை, குட்டி ரேவதி போன்றோரின் எழுத்துக்களை படிக்க நேர்ந்தது.  அதிலும்  கொற்றவை எழுதிய கட்டுரையை மூன்று பாராக்களுக்கு மேல் இயல்பாக  படிக்க இயலவில்லை.  முன்பு நண்பர் ஒருவர்  எழுதிய கிராமத்து கதையில் சில வசைச்  சொற்கள் இடம் பெற்றிருந்தன, கதையை வாசிக்கும் போதே, 'இது போன்ற வார்த்தைகளை நானும் வாசிக்க நேர்ந்துவிட்டது, ஏன் இந்த வார்த்தைகள் போடாமல் எழுத முடியாதா' என்றதற்கு கிராமத்து மனிதர்கள் சாதாரணமாக உபயோகிக்கும் வார்த்தைகளான இவை  இருந்தால் தான் கதை அதன் இயல்பு குன்றாமல் இருக்கும் என்று அவர் சொன்ன சமாதானத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.   கண்களாலும் மனதாலும் வாசித்து பெரிய பாவத்தை செய்ததைப் போல படபடப்பாகிவிட்டது.  

ஒரு ஊருக்கு சாதாரணமாக சொல்லாக தெரிவது பிற ஊர்களுக்கு தவறு, குற்றமாக இருப்பது யதார்த்தம் என்றாலும் பாலியலை மட்டுப்படுத்தும் கேவலப்படுத்தும் வார்த்தைகளை பொதுவெளியில் இயங்குபவர்கள் தவிர்த்தல் நலம் என்பது எனது கருத்து. உடல் ரீதியில் பெண்ணை துன்புறுத்துவதற்கும் உடல் உறுப்பு வார்த்தைகளை பிரயோகிப்பதற்கும் உள்ள ஒரே வித்தியாசம் முன்னது உடலை வருத்துகிறது பின்னது  மனதை வருத்துகிறது. இரண்டுக்குமான வலி என்பது பொது.

அதுபோன்ற ஒரு வலி, பதட்டம்  கொற்றவை அவர்களின் கட்டுரையை படிக்கும் போது ஏற்பட்டது. எதை சிம்பு அனிருத் செய்ததாக குற்றம் சாட்டுகிறோமோ அதே வார்த்தையை பலமுறை பலவிதமாக அழுத்தம் திருத்தமாக சொல்வதுதான் எதிர்வினையா ? ஆண் சொன்ன போது தவறாக தெரிந்த ஒன்று பெண் சொன்னதும் சரி என்றாகிவிடுமா? 

முற்போக்கு பெண்ணியவாதிகள் 

சிம்பு அனிருத் செய்ததற்கு அவர்கள் வீட்டுப் பெண்களை தெருவுக்கு இழுத்து 'அந்த வார்த்தைக்கு அபிநயம் பிடித்து ஆடுவாயா' என்றெல்லாம் கேவலப்படுத்துவது கொஞ்சமும் நியாயம் இல்லை... எந்தவொரு வாக்குவாதத்தின் போதும்  பிறர் வீட்டுப் பெண்களின் பத்தினித்  தன்மையை விலை பேசுவது ஆண்களின்  அதிகபட்ச தாக்குதலாக இருக்கும் அதுபோன்ற ஒன்றை பெண்ணியவாதிகளும் செய்வது வேதனை. ஒட்டுமொத்த தாக்குதலும் சிம்பு அனிருத் வீட்டு பெண்களை நோக்கி மட்டுமே வசதியாக அந்த வீட்டு ஆண்களை மறந்துவிட்டார். பெண்ணுக்கு சார்பாக பேசுகிறோம் என்ற போர்வையில் பெண்மையை விலைபேசுவது வக்கிரத்தின் உச்சம்?! இதுதானா  பெண்ணியம்??!!   

ஆணோ பெண்ணோ சிந்தனையில் நாகரீகம் இருந்தால் தான் வார்த்தை பிரயோகமும் நாகரீகமாக இருக்கும் மாறாக சிந்தனையே வக்கிரமாக இருந்தால் அவர்களின் செயலும் அவ்வாறே... மனதில் இத்தனை அசிங்கத்தை வைத்துக் கொண்டிருக்கும் எவ்வாறு இவர்களால் பொதுவெளியில் பிறரை நேர்மையாக எதிர்க் கொள்ளமுடியும்.  சிம்பு அனிருத் இருவரின் வளர்ப்பு சரியில்லை, பண்பு இல்லை இப்படி ஏகப்பட்ட இல்லைகளை சொன்னவரின் எழுத்தில்  'எதுவுமே' இல்லை. 

அந்த பாடலை பற்றிய இவரது விமர்சனம் அருவருப்பாக குமட்டலை ஏற்படுத்துகிறது... இங்கே லிங்க் கொடுப்பது இந்த பதிவின் உண்மைத் தன்மைக்காகத்தான்,    http://saavinudhadugal.blogspot.qa/2015/12/blog-post.html

பாதிக்கப்படும் பெண்களுக்கு பக்கபலமாக இருப்பது பெண்ணியவாதிகள் என்பது  பலரின் எண்ணமாக இருந்தால் இனியாவது மாற்றிக் கொள்ளுங்கள். பெண்ணியவாதிகளையும் பிற பெண்களையும் ஒன்றாக இணைத்து இனிமேலும் தயவுசெய்து பேசாதீர்கள்.  ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடுவில் பிளவை ஏற்படுத்தவே  பிறந்தவர்கள் அவர்கள்.   'பெண் மேக்கப் செய்வது ஆணை உடலுறவுக்கு அழைப்பதற்காக' என்று பகிரங்கமாக பொது ஊடகத்தில் டாக்டர் ஷாலினியால் சொல்லமுடிகிறது என்றால் பெண்ணியவாதிகளுக்கு இந்த சமூகம் கொடுத்து வைத்திருக்கும் அந்தஸ்தை புரிந்துக் கொள்ளலாம். நாளையே  ஒரு ஆண் இப்படி சொன்னால் இதே ஷாலினி 'என்ன ஒரு ஆணாதிக்க வக்கிரம் என்று அந்த ஆணை நோக்கி  வாளையும் வீசக் கூடும்.    

பெண்ணியவாதிகள், சமூகம் விதித்த கட்டுப்பாடுகளில் இருந்து வெளியே வருவதாக எண்ணிக் கொண்டு சமூகத்திற்கு எதிர் திசையில் போகிறார்கள், எதிர்த்து செய்கிறார்கள். ஆறறிவு உள்ள மனிதர்கள் என்பதை மறந்துவிட்டு சுய சிந்தனை அற்று வாய்க்கு வந்ததையும்  நினைப்பதை எல்லாம் பேசுவதும் உடல் உறுப்புகளை இழிவு செய்வதும் சாதி மத ரீதியிலான தாக்குதலுமா  கருத்து சுதந்திரம் ? 

பெண்களை பற்றிய கட்டுரையில் சாதிக்கு என்ன வேலை, இவ்வாறுதான் சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் எதற்கோ எதையோ இழுத்து பத்தாததுக்கு பெரியாரையும் துணைக்கு அழைத்துக் கொள்வார்கள். அவர் ஏதோ அப்போதையை சூழலுக்கு தனக்கு சரி தவறு என்று பட்டதை எல்லாம் சொல்லி எழுதி வைத்துவிட்டு போய்விட்டார். அப்போதைய சூழலா இப்போதும்  இருக்கிறது? 

ரொம்ப வெளிப்படையாக பேசுவது தான் பெண்ணுரிமை என்ற கட்டமைப்பை இவர்களாக ஏற்படுத்திக்  கொள்வார்கள் , இத்தகையவர்களுக்கு  ஆதரவாக சில ஆண்கள் இருப்பார்கள், ஆனால்  அவர்களுக்கு தெரியாது தங்களையும் சேர்த்தே தான் பெண்ணியவாதிகள் திட்டித் தீர்க்கிறார்கள் என்று. பெண்ணியவாதிகளின் கட்டுரைகள் கவிதைகளை பகிர்ந்தும் விருப்ப கருத்திட்டும்  தான் ஆணாதிக்கவாதி அல்ல என்று காட்டிக் கொள்வதில்  ஆண்களுக்கு அவ்வளவு விருப்பம். பெண்ணியவாதிகள் என்ன சொன்னாலும் வாவ் என்ன ஒரு தைரியமான எழுத்து என்று ஜால்ரா தட்டும் ஆண்கள் பாவம் ... பச்சை பச்சையா பெண் பேசினால் அது தைரியம்,வீரம்  என்றால் தெருகுழாயடியில் சண்டைப் பிடிப்பவர்கள் அத்தனை பேருமே வீரம் செறிந்த போராளிகள்தான் (ஜான்சிராணி வேலுநாச்சியார் போன்றோர்  மன்னிக்க) 

பெண்ணியவாதிகள் பேசாமல் இருந்தாலே போதும், ஆண்களை சாடுவதாக கூறிக் கொண்டே அத்தனை எதிர் வினையும் பெண்களின் மேல் மட்டுமே காட்டும் இவர்கள் தான் முற்போக்கு பெண்ணியவாதிகள். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண் வர்க்கத்தை வார்த்தைகளால் வன்கொடுமை செய்து வக்கிரங்களை பரப்பும் இத்தகைய பெண்ணியவாதிகளுக்கு கட்டுப்பாடு ஒன்றும் கிடையாதா ? 

பெண்கள் சாதாரணமாக பேசவும்  எழுதவும்  கூசும் வார்த்தைகளை சுலபமாக கையாளத் தெரிவதில் என்ன பெருமை வேண்டிக் கிடக்கு... ... ஒரு ஆண் எப்படி இருக்கவேண்டும் என பாடம் எடுத்தவர்கள் ஒரு பெண் எப்படி இருக்கவேண்டும் என்று தெரியாமலா இருப்பார்கள்... ஆனால் தான் தனித்து தெரியவேண்டும் என்பதன் வெளிப்பாடு தான் அந்த வீட்டுக்கு பெண்களை வார்த்தையால் வம்புக்கு இழுத்தது... 

இப்படி பட்ட முற்போக்கு பெண்ணியம் பேசத்தெரியாத பெண்கள் நிறைய நிறைய  எழுதவேண்டும் என்பதே இந்த பதிவின் மூலம் எனது சிறு வேண்டுகோள்...அப்போதுதான் பெண் என்றால் யார் அவள் எழுத்து எவ்வளவு நாகரிகமானது என்பதை உலகம் தெரிந்துக் கொள்ளும் மாறாக முற்போக்கு பெண்ணியவாதிகள் சூழ் இணையம் மிக ஆபத்தானது... பெண் பற்றிய இவர்களது கருத்துக்களை வைத்து பெண் என்றால் இவர்களைப் போன்றோர் தான் என்ற தவறான பிம்பத்தை உடைத்தாக வேண்டும்... ஆண் என்றால் பெண் மோகம் கொண்டு அலைபவன் மட்டும்தான் என்ற கருத்தியலையும் பெண் தான் உடைக்கவேண்டும். இன்னும் எத்தனை காலத்திற்கு தான் மனு சாஸ்திரத்தையும் பெரியார் சொன்னதையும் கட்டி அழுவார்களோ தெரியவில்லை.

பிறரைவிட பொதுவெளியில் இயங்கும் ஆண் பெண் இருவருக்குமே பொறுப்புகள் அதிகம் இருக்கிறது. தகுந்த காரணக்  காரியம் இல்லாமல் போகிறபோக்கில் ஒரு கருத்தை தெளித்துவிட்டு போய்விட முடியாது... சுற்றி சுழலும் உலகத்திற்கு பதில் சொல்லியாக வேண்டும். மாறாக என்  எழுத்து என் உரிமை என்று உளறிக் கொண்டிருந்தால் பிறரால் தவிர்க்கப் படுவார்கள் அல்லது  கேலிக்கு ஆளாகி விரைவில் காணாமல் போய்விடுவார்கள்.

பெண்களை மேலும் மேலும் இழிவுப்படுத்தும் முற்போக்கு பெண்ணியவாதிகளுக்கு எனது  வன்மையான கண்டனங்கள் !!!


pic - google

திங்கள், டிசம்பர் 21

உதவுவதில் முன்னிலை - இஸ்லாம்

சென்னை கடலூரை முடக்கிப் போட்ட மழை வெள்ளம் அம்மக்களை மட்டுமல்ல தொலைதூரத்தில் இருக்கும் மக்களையும் மனதளவில் புரட்டிப் போட்டுவிட்டது.  இதுவரை தான் தனது என்று இருந்தவர்களையும் நிறையவே யோசிக்கவைத்திருக்கிறது.  வெள்ளத்தில் தத்தளித்த மக்களை காப்பாற்றுவதிலும் நிவாரண பணிகளை கவனிப்பதிலும் ஈடுபட்ட இளைஞர்கள் தன்னார்வலர்கள் முஸ்லிம் அமைப்பினர் சமூக வலைதள நண்பர்கள் என்று பல பெயர்களில் சொன்னாலும் அவர்கள் அனைவரையும் தேவதூதர்கள் என்றே இனி அழைக்கலாம்.   பிரதிபலன் பாராது உதவிய அத்தனை அன்புள்ளங்களுக்கும் நன்றி என்ற ஒற்றை வார்த்தை சொல்வதை விட  அவற்றை நினைவில் வைத்துக் கொள்வது நமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும். அதிலும் தீவிரவாதிகள் போன்றே  கட்டம் கட்டப்பட்ட இஸ்லாம் சமூக மக்களை பற்றி எழுதாமல் இருப்பது எனக்குள் மனிதநேயம் மரித்துவிட்டதை  போல உணருகிறேன். இஸ்லாமின் ரிஷிமூலம், நதிமூலம் பற்றியே பேசி பேசி சிறுபான்மையினரை சிறுமைப்படுத்துவதை விட அவர்களின் தற்போதைய  சேவைகளை அடிக்கடி பேசுவது எதிர்கால சமூகக் கட்டமைப்பிற்கு நன்மை பயக்கும்.     




நெருங்கிய முஸ்லிம் நட்பு என்று ஒருவர் நம் எல்லோருக்குமே  இருப்பார்கள். அவர்களின் பண்பட்ட குணத்தை அறியும் ஒரு வாய்ப்பு சென்னையில் எனது கல்லூரி காலத்தில் கிடைத்தது. மலையாளம், தெலுங்கு பேசும் தோழிகள், உருது பேசும் முஸ்லிம் தோழி உட்பட நாங்கள் ஆறு பேர். எப்போதும் கலகலப்பான பேச்சுக்களுடன் சுற்றி வருவோம்.  மற்ற தோழிகள்  ஆண்களை பற்றிய கிண்டல் கேலி என தொடங்கினால் இஸ்லாமிய தோழி 'உங்களுக்கு இதை தவிர வேற பேச்சே இல்லையா'  என்று சலித்து எனது கையை பிடித்து இழுத்து அந்த இடத்தைவிட்டு அழைத்துச் சென்றுவிடுவாள்.  கல்லூரியில் படித்த ஐந்து வருடமும் இதே கதைதான் அவர்கள் பேச நாங்கள் ஓட என்று. ஒருமுறை இந்து மத தோழி  விநாயகரை குறித்து மிக ஆபாசமாக கிண்டல் செய்துவிட  இஸ்லாமிய தோழிக்கு வந்ததே கோபம், கத்து கத்து என்று கத்தித் தீர்த்துவிட்டாள், கிண்டல் செய்த தோழி மன்னிப்பு கேக்கும்வரை விடவில்லை... அப்போதில் இருந்தே பிற மதத்தின் நம்பிக்கைகளை மதிக்கும் இஸ்லாமிய மக்களின் மதப்பற்று எனக்கு மிகப் பிடித்துவிட்டது. இன்றும் பிள்ளையார் சதுர்த்தி வந்தால் இஸ்லாமிய தோழிதான் எனது நினைவுக்கு வருவாள்.

ஒருவர் பிறப்பால் ஒரு மதத்தை சேர்ந்தவராக இருப்பார், ஆனால் அந்த மதத்தின் கொள்கைகளை கோட்பாடுகளை எல்லாம் சரியாக தெரிந்து வைத்திருப்பார் என்பது சந்தேகம்தான். உதாரணமாக இந்து மதத்தை சேர்ந்தவர்களில் எத்தனை பேருக்கு தங்களின் புனித நூல் பகவத் கீதை என்று தெரியும்?!  (அதையும் விட இந்து என்றால் யார் என்ற சிறு குழப்பமும் சமீப காலத்தில் ஏற்பட்டுவிட்டது) சர்டிபிகேட்டில் இந்து என்று இருக்கிறது மற்றபடி இறைவழிபாடு என்பது எவ்வாறு என்பது தெரியாமலேயே பலர் உண்டு இங்கே, கடவுளே இல்லை என்பவர்களின் சான்றிதல்களிலும் இந்து என்று இருக்கும். ஆக கடவுளுக்கும் மதத்துக்குமே சம்பந்தம் இல்லை ஆனால் இஸ்லாமில் அப்படி அல்ல,  எல்லோரும் ஒருமித்து கோட்பாடுகளை பின்பற்றுகிறார்கள்.  விதிவிலக்குகள் மனிதராக உலவும் அனைவரிடத்திலும் உண்டு அதற்கு மதத்தை குறை சொல்வது சரியல்ல.

சிறுவயதில் இருந்தே புனித நூலை படிக்க வைப்பது, ஐந்து முறை தொழுகை, வெள்ளிக்கிழமை தொழுவது, ரம்ஜான் நோம்பை தீவிரமாக கடைப்பிடிப்பது என்ற (மற்ற  மதத்தினரை விட) இவர்கள் காட்டும் ஈடுபாடு, அக்கறை அலாதியானது. இதை அடிக்கடி என் கணவரிடமும் மகன்களிடமும் சொல்லி பெருமைப்படுவேன்.  ஒருமுறை எனது மகனின் இஸ்லாமிய நண்பன் உடுமலைபேட்டையில் இருந்து இருநாட்கள் விடுமுறையில் வந்திருந்தான்,  டிவி கேம் விளையாடிக் கொண்டிருந்தவன் எதையோ நினைத்ததை போல வேகவேகமாக குளித்து உடைமாற்றி என்னிடம் வந்து ஆன்டி ஒரு மேட் கொடுங்க பிரே பண்ணனும் என்றான். எங்கிருந்தாலும் வெள்ளிக்கிழமை என்பதை மறவாமல் தனி அறைக்குள் சென்று அமைதியாக இறைவனை வணங்கும் இந்த பற்றைத்தான் உலகம் சொல்கிறது மதவெறி என்று ! 

ஒரே மதம் அன்பையும் ஆத்திரத்தையும் ஊட்ட முடியுமா ? அவ்வாறு வெறியை ஏற்படுத்தும் மதத்தை மனிதர்கள் விரும்புவார்களா என்ன... அதை விரும்புவர்கள் மனிதர்களாக இருப்பார்களா என்ன?  எப்படி இருப்பினும் இந்தியா மத சார்பற்ற நாடு என்பதை இந்த மழை வெள்ளம் தமிழக மக்களுக்கு நினைவுபடுத்திவிட்டது. 

முஸ்லிம் துலுக்கன் என்றெல்லாம் சொல்லி அவர்களின் மீது ஒரு பயத்தை வெறுப்பை வளர்த்தது யார் என்பதை தமிழக மக்கள் முக்கியமாக சென்னை கடலூர் மக்கள் புரிந்துக் கொண்டார்கள்.  மதத்தை வைத்து தியாக உள்ளம் கொண்ட மக்களை பெருவாரியான மக்களிடம் இருந்து  சுலபமாக பிரித்துவிடலாம் என கனவு கண்டவர்கள் இனியாவது அச்சப்பட்டு தலையை குனிந்துக் கொள்ளவேண்டிய தருணமிது. இஸ்லாமியர்களுக்கு ஒன்று என்றால் ஒட்டுமொத்த மக்களும் குரல் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை ஒன்று புதிதாக ஏற்படுகிறது. 

வெள்ளம் வடிந்ததும் மக்கள் உதவி செய்தவர்களை மறந்துவிடுவார்கள் என்ற அரசியல்வியாதிகளின் நினைப்பில் ஆயிரம் டன் மண் விழ வேண்டும்.  நம்மிடையே மதத்தின் பெயரால் பிரிவினைகளை ஏற்படுத்துவது யார், அவர்களின் நோக்கம் என்ன  என்பதை மக்கள் புரிந்துக் கொள்ளும் காலம் நெருங்கி விட்டது.  இஸ்லாமியர்களை குறித்த தவறான சித்தரிப்புகளை கற்பிதங்களையும் உடைத்தெறிந்துவிட்டது மழை என்றே தோன்றுகிறது.  

நாம் ஒன்றுப் பட்டால் ஏற்படக்கூடிய நன்மை என்ன என்ற விழிப்புணர்வை விதைக்கவேண்டியது இளைஞர்களின் கையில் இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியான செய்திகள் தகவல்களை பதிவிடுவதன் மூலம் இது சாத்தியமாகலாம். 

ஏன்  இந்த பாராமுகம் 

ஊடக வெளிச்சம் பேர் பணம் புகழ் எதற்காகவும் இவங்க எல்லோரும் ஓடி ஓடி பாடுபடவில்லை... அவர்களின் மதம் போதிக்கும் தியாகம் மனித நேயம் இதற்காக மட்டும் தான். ஆனால் ஊடகங்கள் இவர்களின் மீது வெளிச்சத்தை பாய்ச்ச மிகவும் யோசிக்கிறது தயங்குகிறது ஏன் அஞ்சுகிறது என்றுகூட சொல்லலாம்.  அதனால்தான் எந்த பிரதிபலனும் பார்க்காமல் இவர்கள் உழைக்க இவர்களின் படத்தை போட்டு தன்னார்வலர்கள் என்று குறிப்பிடுகிறது, இஸ்லாம் அமைப்பு என்று சொன்னால் என்னவாம். சிறு பான்மையினர் என்ற குறுகிய வட்டத்திற்குள் இவர்களை அடைத்து அடக்கி வைப்பதை பல காலமாக ஒரு கூட்டம் செய்து வந்திருக்கிறது, அதை மற்றவர்களும் கவனிக்க வில்லை, அவரவர் வேலை அவரவருக்கு அதனால்தான் சிலரின் சூழ்ச்சி பலருக்கும் பெரிதாக தெரியவில்லை. 

பழைய படங்களில் வரும் ரௌடிகள் ஜேம்ஸ் பீட்டர் என்ற பெயரில் இருந்ததற்கு காரணமும் பிற மதத்தினரின் மீதான பார்வை தவறாகத் தான் இருக்கவேண்டும் என்பதாக இருக்கும்.  நம்மை அறியாமலேயே நமது ஆழ்மனதில் மிக சாதூர்யமாக இவை எல்லாம் பதிய வைக்கப் பட்டிருக்கின்றன, அதனால் தான் முஸ்லிம் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் கிருஸ்தவர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று ஒவ்வொரு சாதி மதத்துக்கும் ஒரு அடையாளத்தை  ஏற்படுத்தி விட்டார்கள்.  இத்தகைய போலி பிம்பத்திற்குள் இருந்து என்று நாம் வெளிவரப் போகிறோம் என்று தெரியவில்லை. அதற்கான ஒரு நேரத்தை இயற்கை உருவாக்கி விட்டது. மழை வெள்ளத்தில் ஓடி ஓடி முதலில் தனது கரத்தை நீட்டியது தீவிரவாதி என்று அழைக்கப்பட்ட முஸ்லிம் சகோதரர்கள் தான்.   இந்த சேவையை செய்தியை பதிந்து வைக்க வில்லையென்றால்  வரலாறு தனது இஷ்டத்திற்கு ஏற்றவாறு எழுதிக் கொள்ளும் அல்லது எழுதி விடுவார்கள் பிரிவினைவாதிகள்.  

பல ஆயிரம் உயிர்களை காப்பாற்றிய அவர்கள் தான் தொடர்ந்து குப்பைகளை அகற்றுகிறோம் சுத்தப்படுத்துகிறோம் பேர்வழி என்று நாற்றம் குடலைப் பிடுங்கும் சாக்கடையில் கையை விட்டு அள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். துப்புரவு தொழிலாளி வீட்டு வராண்டாவில் நின்றால் கூட தீட்டு என்று பின் வாசல் கதவை திறந்துவிடும் மனிதர்கள் வாழும் மண்ணில் தான் இவர்களும் வாழுகிறார்கள்.  நினைத்து பார்க்கவே கை எடுத்து வணங்கத் தோன்றுகிறது.  தன்னலம் பார்க்காத மனிதநேயத்தை எந்த மதம் வலியுறுத்தினாலும் அதை பின்பற்றுவது என்பது அவ்வளவு எளிதல்ல ஆனால் இவர்கள் பின் பற்றுகிறார்கள் அதையும் மிக தீவிர மாகவே... ஆமாம் இவர்கள் தீவிர வாதிகள் தான், மனித நேயத்தை விதைப்பதில் ...! 

சேவை எல்லாம் பண்ணவில்லை, விளம்பரம் பண்ணாங்க , மதப் பிரசாரம் பண்ணாங்க என்று ஆதாரத்தை போட்டிப் போட்டு ஷேர் பண்ணும் மனிதர்களை கண்டால் சிரிப்புத்தான் வருகிறது. யாரோ ஒருவர் செய்வதை மொத்த இன மக்களுக்குமான ஆதாரமாக கொள்ளும் சின்னபுத்தி இது. ஒருவேளை அப்படியே செய்தாலும்தான் என்ன, அதில் பிறருக்கு என்ன  பிரச்சனை, அதாக்கும் இதாக்கும் என்று போட்டோ ஷாப் விளம்பர யுக்தியால்  ஆட்சியை பிடித்ததை விடவா இவர்கள் செய்துவிட போகிறார்கள்.  மதம் மாற்றுபவர்கள் பிரசங்கம் செய்ததுமே உடனே வணங்கிக்கொண்டிருக்கிற    கடவுளை குப்பையில் தூக்கி போட்டு விட்டு அடுத்த மதத்துக்கு ஜம்ப் பண்றாங்க என்றால் பிரச்சனை மதத்தில் இல்லை பக்குவம் இல்லாத மனிதர்கள் இடத்தில்தான் பிரச்சனை இருக்கிறது.

இந்த கூட்டத்தில் வசதியான வீட்டை சேர்ந்தவர்கள் பலர் இருந்தும் தங்களின் அடையாளத்தை மறைத்து அல்லது மறந்து இஸ்லாமிய அமைப்பின் கீழ் சேவை புரிந்தது எனக்கு மிகுந்த வியப்பை கொடுத்தது. நான் பார்த்தவரை  யாரும் கேமரா எங்க இருக்கிறது என கவனிக்க கூட இல்லை மொத்த கவனமும் மக்களை மீட்பதில் ...! வியத்தக்க அம்சம் என்னவென்றால் அவர்களின் பணியில் ஒரு கட்டுக் கோப்பு ஒழுங்கைப் பார்த்தேன். இவர்களின் பணிகளை பார்த்து ஜீரணிக்க முடியாமல் இவர்களை குறை சொல்லும் கூட்டம் இங்கு நிறைந்திருந்தாலும் அந்த  கூச்சல் இங்கே யாருக்கும் இனியும் விழாது மக்கள் நேரடியாக பார்த்துவிட்டார்கள் உணர்ந்துவிட்டார்கள் பிரித்தாளும் சூழ்ச்சி செய்வது யார் நன்மை செய்வது யார் என்பதையும் புரிந்துக் கொண்டார்கள் என்றே நினைக்கிறேன். 

ஜெயின் இன மக்களின் சேவை வட சென்னை மக்களை நெகிழச் செய்தது.  இந்து முஸ்லிம் கிறிஸ்துவம் என யாரும் மதம் பார்க்கவில்லை என்ன சாதி என்று பார்க்கவில்லை ஓடி ஓடி அவர்கள் தேடியது எங்காவது உயிர் தவிக்கிறதா துடிக்கிறதா என்றுதான். இதுதான் மனித நேயம். இத்தனை நாளாக தொலைந்தே போய்விட்டது என நினைத்த மனித நேயத்தை வெளிக்கொணர்ந்த மழையை என்னால் வாழ்த்தத்தான் முடிகிறது, திட்ட தோன்றவில்லை.

வோட் போட்டு ஜெயிக்கவைத்த மக்களை காப்பாற்றவேண்டிய கடமை தங்களுக்கு இருக்கிறது என்ற எண்ணமே இல்லாமல் ஓடி ஓடி ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடிய அரசுக்கு முன் பாதிக்கப் பட்ட மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்கள் என்று தேடித் தேடி உதவிய இஸ்லாமியர்களின்  தன்னலமற்ற சேவை அசரவைக்கிறது. இதை இணையத்தில் உலவும் நாம் எழுதி வைக்காவிட்டால் முன்பு வரலாற்றை திரித்தவர்கள் இப்போதும் திரிக்கத்தொடங்கி விடுவார்கள் நூலை... பலரும் தானே உதவினார்கள் என்றாலும்  இஸ்லாமிய மக்களின் மீது பலரின் பொது பார்வையும் தவறாகவே இருப்பதால் அவர்களின் சேவையை கட்டாயம் நாம் எழுதவேண்டும். அதன்மூலமாக பார்வையின் கோணத்தை மக்கள் மாற்றிக் கொள்ளும் அதிசயம் நடக்கலாம்.

இதோ பாதிக்கப் பட்ட மக்களை அம்போ என்று விட்டுவிட்டு தேர்தல் கூட்டணி பற்றி பேச ரெடி ஆகிட்டாங்க... பல லட்சம்,கோடி கை மாறும்... மக்களை மேலும் மேலும் முட்டாள் ஆக்குவது எப்படி என்பதை கூட்டணி போட்டு தீர்மானிக்க தொடங்கிவிட்டார்கள். 

மழை வெள்ளத்தின் மிச்சமாக துரத்தும் வாழ்வாதார கவலைகளை சுமந்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு உதவிக்கொண்டிருக்கும் அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நெஞ்சம் நெகிழ்ந்து  விழிகள் கலங்கி எனது நன்றியை காணிக்கை யாக்குகிறேன். அன்பு சகோதர சகோதரிகளே  உங்களின்  குடும்பம் இனி வரும் சந்ததிகளும் மிக சிறப்பாக வாழவேண்டும்  என ஏக இறையான இயற்கையை பிரார்த்திக்கிறேன்.

மதத்தை குறிப்பிட்டு இஸ்லாமிய மக்களை வசைபாடக்  கற்றுக் கொடுத்த சமூகம் இனி அவர்களின் மனிதநேய தொண்டை பார்த்து இவன்தாண்டா முஸ்லிம் ,முஸ்லிம் என்றால் இப்படிதான் இருப்பான் என்று பேசட்டும் பேசவேண்டும். 

இனி  எங்காவது குண்டு வெடித்தால் தீவிரவாதி என்று சொல்லுங்கள் முஸ்லிம் என்று சொல்லாதீர்கள் !! 

photo courtesy : google
(முஸ்லிம் மக்களின் படங்களை தேடாதீர்கள்...  தங்களின் அடையாளத்தை தொலைத்து எங்காவது யாருக்காவது உதவி புரிந்துக் கொண்டிருப்பார்கள்  தேடி களைத்துவிடாதீர்கள், என்னை போல!!
   

வெள்ளி, டிசம்பர் 11

சிம்புவின் சைக்கோத்தனம் - Ban Beep Song



எவ்வளவு ஆபாசமாகவும் படம் எடுக்கலாம், மிக வக்கிரமாக  பெண்களை வர்ணிக்கலாம், பெண்ணை இழிவுப் படுத்தி வசனங்களால் வன்புணர்வு செய்யலாம், நடிகைகளின் ஆடைகளை கிழித்து அலங்கோலப்படுத்தி பேஷன் இது என காட்டலாம், பாடல் வரிகளில் நேரடியாக பெண்ணை கேவலமாக வசை பாடி கவிதை என கொக்கரிக்கலாம் ...இது எல்லாமே சாத்தியம் இன்றைய சினிமாக்களில்!? யாரும் இங்கே கேள்வி கேட்க மாட்டார்கள், ஏன் அதில் நடிக்கும்  பெண்ணுக்கே அதை பற்றி எந்த கவலையும் இல்லை. பணம் புகழ் மட்டுமே முக்கியம் தன்மானம் சுயகௌரவம் எல்லாம் வெறும்  வார்த்தைகளாகிவிட்டன! 

இப்படிதான் ஒரு சினிமா எடுக்கப்படவேண்டும் என்ற எந்த சட்ட திட்டமும் திரைத்துறைக்கு கிடையாது, எடுத்து முடித்த பிறகும் தணிக்கை துறை சர்டிபிகேட் கொடுத்து தனது கடமையை முடித்துக்கொள்ளும். வக்கிரம் வன்முறை ஆபாசத்தில் ஊறிய சினிமாக்களால் சீரழியும் இளைய சமுதாயத்தை பற்றி நினைக்கக் கூட இங்கே நமக்கும் நேரமில்லை. அதனால்தான் கொளுத்திவிட்டு கொழுப்பெடுத்துத் திரிகிறார்கள் சிம்பு, அனிருத் போன்ற ஆட்கள்.     

சிம்புவுக்கு ஏற்பட்ட காதல்கள் எல்லாம் தோல்வி ஆனதன் பலனை சம்பந்த பட்ட பெண் அனுபவிக்கிறதோ இல்லையோ நாம்  நன்றாகவே  அனுபவிக்கிறோம், இவனது காதல் தோல்விகளை(?) காரணமாக வைத்து தொடரும் அவனது படங்கள், பாடல்கள் அனைத்திலும் பெண்களை இழிவுப் படுத்தி வக்கிரமாக வசனம் பாடல் என எழுதி ஆபாச நடனம் அமைத்து என்று தனது மன வக்கிரத்தை ஒவ்வொன்றாக மேடை ஏற்றிக் கொண்டிருக்கும் சிம்புவின் சமீபத்திய அழிச்சாட்டியம் அனிருத் இசையில்  பாடி யூ டுயூப்பில் வெளிவந்திருக்கும்  'BEEP SONG'  

சிம்பு நல்ல திறமையான மனிதரின் மகன்...அப்பாவைப் போன்றே சிம்புவும்  திறமைசாலிதான்  ஆனால் மன  பக்குவமின்மையால் தடம் மாறி வாய்க்கு வந்ததை எல்லாம் பொது வெளியில் படையல் போடும் லெவலுக்கு போய்விட்டது மகா கேவலம்.  காதலித்ததாக சொன்ன நயன்தாரா  சோர்ந்துப் போகாமல் சிம்புவை சிறிதும் லட்சியம் செய்யாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று வரிசையாக படங்களில் நடித்து முன்னேறி சினிமாவில் இன்றைக்கு நம்பர் ஒன் நடிகை,  ஆனால்  சிம்புவோ  இன்னும் ஆரம்பிச்ச இடத்திலேயே நிற்கும் பரிதாபம்...?!!

காதலில் தோல்வி கண்டவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க என்று செல்வது  நல்ல மனிதர்களின் குணம் ஆனால் தான்  ஒரு  மன நோயாளி என்பதற்கு தற்போதைய உதாரணம் இந்த பாடல்.  கேலி செய்யும் ஆண்களை பெண்கள்  'நீயெல்லாம் அக்கா தங்கச்சி கூட பிறக்கல' என்று திட்டுவார்கள், ஆனால் கூட பிறந்த தங்கச்சி, பெத்த அம்மா  இருந்தும் பெண்ணை கேவலப் படுத்தும் இந்த பாடல் எந்த எண்ணத்தில் பாடப்பட்டிருக்கும்  என்று நினைத்துப் பார்க்கவே கூசுகிறது.    அவர்கள் இதை கேட்டு இருப்பார்களா கேட்டும் ஒன்றும் சொல்லவில்லையா ? உடன் நடிக்கும் நடிகையை தொட்டுக்கூட  நடிக்காத அப்பாவிற்கு (டி.ராஜேந்தர்) இப்படி ஒரு பிள்ளை ... அந்த அப்பாவும்  இந்த பாடலை கேட்டும்  பெருசா ரியாக்சன் காட்டாம  தொலையுது சனியன் என்று இருந்துவிட்டார் போல

எவண்டி உன்ன பெத்தான் அவன் கைல கிடைச்சா செத்தான் என்று பாடியபோது ரசித்த அதே கூட்டம் தான் இந்த பாடலையும் ரசிக்கிறது...ரசிக்கப் போகிறது. ஆகச் சிறந்த பாடலான கொலவெறி பாடலை போல இதையும்  ஹிட் ஆக்காமல் ரசிகர்களும் ஓயப் போவதில்லை.  பெண்ணைத் திட்டி வசனம் பாடல் வைத்தால் அதை எல்லோரும் விரும்புவார்கள் குறிப்பாக இளைஞர்கள் என்ற எண்ணம் இருக்கவேதான் இது போன்றவை பிரபலமாகின்றன.  ஆனால் தாய் மனைவி அக்கா தங்கை என்று பெண்களுடன் இணைந்து நன்றாக வாழ்கிற எந்த ஒரு நல்ல ஆண்மகனும் இந்த பாடலை காரித்துப்புவானே தவிர ரசிக்க மாட்டான். 

எனக்கு என்ன கவலை என்றால் நாளையே இந்த பாடல் சூப்பர் சிங்கரிலும், சன் சிங்கரில் சின்ன சின்ன குழந்தைகளினால் பாடப்படுமே , பாடுவதற்கு முன் பலமுறை மனப் பாடம் செய்வார்களே,  நினைச்சுப் பார்க்கவே கலக்கமாக இருக்கிறது.

சினிமாக்களில் வசனம் என்றால் கூட சில நொடிகளில் கேட்டதும் மறந்துவிடலாம், ஆனால் பாடலாக வரும்போது பலமுறை ஒலிக்கும், கேட்டு கேட்டு மக்களுக்கும் பழகிவிடும், நாளை வீட்டில் சாதாரணமாக பேசப்படும் ஒரு வார்த்தையாக இந்த வார்த்தை மாறிவிடும்!!???

இன்னொரு கொடுமை என்னவென்றால் மழை வெள்ளப் பாதிப்பை பற்றிய செய்திகளை  பின்னுக்கு தள்ளி அந்த இடத்தை இந்த பாட்டு பிடித்துக் கொண்டதுதான். 

இந்த பாட்டுக்கு எதிர்வினை காட்டினால் அதுவே இதற்கு ஒரு விளம்பரம் ஆகிவிடும் என்ற எண்ணத்தை புறம் தள்ளிவிட்டது எனது கோபம். உடல் முறுக்கி நெளியும் சிறு புழுவென எனது எதிர்ப்பை இங்கே காட்டிவிட்டேன். எதிர்ப்புகள் பல ஒன்று சேர்ந்தால் அந்த பாடல் நீக்கப்படவும் ஒரு வாய்ப்பு இருக்கிறது.  மது வேண்டாம் என்ற பாட்டிற்கு சிறை இந்த பாட்டிற்கு குறைந்தபட்சமாக தடை... ???!!!

#BAN BEEP SONG#


திங்கள், நவம்பர் 30

தண்ணீருக்காக பலதாரமணம்...??!!

உலகின் பல பகுதிகளில் வெவ்வேறு காரணங்களுக்காக பலதாரமணம் புரிவர். இவ்விசயத்தில் ஒவ்வொரு நாட்டுக்கும் மதத்துக்கும் கூற வித்தியாசம் உண்டு.   இந்தியாவைப் பொறுத்தவரை பலதாரமணம் சட்டப்படி குற்றம்.  மலைஜாதி மக்களில் இந்த பழக்கம் இருக்கிறது என கேள்வி பட்டு இருக்கிறேன். ஆனால் மற்றவர்கள் சட்டத்தை அலட்சியம் செய்துவிட்டு  தெரிந்தும் தெரியாமலும் பலதார மணம் புரிவது  உண்டு.  பண வசதியைப் பொருத்தும்  ஜாதி மதம் நோய் மரணம் உடல் குறைபாடு என்று ஏதோ ஒரு காரணத்தை சொல்லி இரண்டு மூன்று பேரை கல்யாணம் செய்வதும் உண்டு.  சட்டத்தின் பார்வைக்கு வராதவரை இவை ஏதும் பிரச்சனையாக இருந்ததும் இல்லை.  அரசியல்வாதியாக இருந்தால் ஒருத்தரை மனைவி என்றும் மற்றொருவரை துணைவி என்றும் சொல்லி சமாளித்து  கொள்ளலாம். 

ஆனால் ஒரு ஊரில் உள்ள அத்தனை பேரும்  பலதாரமணம் புரிகிறார்கள் என்பதை அறியும் போது முதலில் ஆச்சர்யமாக இருந்தது, உண்மை தெரிந்ததும்  மிக அதிர்ச்சியாக இருக்கிறது. இது ஏதோ  அயல்நாட்டில் நடக்கவில்லை நமது இந்தியாவின் இதயபகுதியான மகாராஷ்டிராவில் (Dengalmal village) உள்ள ஒரு ஊரில் நடக்கிறது,  பலதாரமணம் ஒன்றே அவர்களின் பிரச்சனை தீருவதற்கான ஒரே வழி  !!!??



தானே மாவட்டத்தில்  டெங்கல்மல் என்ற ஊரில் அரசாங்கத்தின் குடிநீர் விநியோகம் என்பது ஐந்து நாட்களுக்கு ஒரு முறை டேங்கர் லாரியில் வரும் ஆயிரம் லிட்டர் கலங்கிய நீர் மட்டுமே...அதை பிடிக்க ஒரே சமயத்தில் பலரும் போட்டிப்போட்டுக் கொண்டு   முட்டி மோத, இதற்கு காத்துகிடந்து மல்லு கட்டுவதை  விட கிணறு தூரமாக இருந்தாலும் பரவாயில்லை என்று பல பெண்கள் நடையை கட்டி விடுகிறார்கள். அந்த ஊரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில்  உள்ள மலையடிவாரத்தில் இருக்கும் இரண்டு கிணறுகள் மட்டும்தான்  இவர்களின் ஒரே நீர் ஆதாரம்.  பலமணி நேர நடையும் பலமணி நேர காத்திருப்பும் இருந்தால் தான் இரண்டு குடம் தண்ணீர் கிடைக்கும்.  40 டிகிரி வெயிலிலும் அடர்ந்த இரவுகளிலும் தண்ணீரை நாடி  நடந்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்த ஊரின் ஆண்கள் வாழ்வதற்கான பொருளாதாரத்தை தேட பெண்கள் தண்ணீர் மனைவிகளாக மாறுகின்றனர்.
 

அந்த ஊரை சேர்ந்த ஒருவர் சொல்கிறார், இது சட்டப்படி குற்றம் என்பது தெரியும் ஆனால் என்ன செய்வது யார் எங்களுக்கு தண்ணீர் கொடுப்பது,  அரசாங்கம் எங்களுக்கு தண்ணீர் கொடுக்காமல் தவறு செய்கிறது , அதனால் தண்ணீர் தேவைக்காக மூன்று மனைவிகளை மணந்து நானும் ஒரு தவறு செய்யவேண்டியதாகிறது. இது எங்களின் தவறல்ல அரசாங்கத்தின் தவறு என்று கூறும் அந்த வெள்ளந்தியானவரின் குரலில் ஒலிப்பது தண்ணீரின் தாகம்.  வீட்டிற்குள் நுழையும் புது பெண்தான் இள வயதின் காரணமாக தண்ணீர் கொண்டு வரும் பொறுப்பிற்கு மாறுகிறார். இவரின் முதல் இரு மனைவிகள் சமையல் குழந்தைகளை வளர்ப்பது  மாடுகளை கவனிப்பது விவசாயத்தில் கணவருக்கு உதவுவது என்றிருக்க மூன்றாவது மனைவி தண்ணீர் சுமக்கிறார்.  



தண்ணீருக்கான போர் இனி வரவேண்டும் என்பதில்லை இந்தியாவில் ஏற்கனவே பலகாலமாக நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.   பிரசவம் முடிந்து குழந்தை பிறந்த  பத்தாவது நாள் முதலே  தண்ணீர் கொண்டுவர கட்டாயப் படுத்தப்  படுகிறார்கள்.  இத்தகைய தண்ணீர் மனைவிகளுக்கு முதுகு வலி, கழுத்துவலி, கருவுருதலில் பிரச்சனை, வளர்ச்சி குறைபாடு, வழுக்கை (தலையில் சுமப்பதால்)  இன்ன பிறவும் ஏற்படுகின்றன. பெண்களை தவிர சிறு வயதினரும் பள்ளிகளுக்கு செல்லாமல்  தண்ணீர் சுமக்கிறார்கள். இள வயதிலேயே  மனமும் உடலும் சோர்வுற்று நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அவர்களின் எதிர்காலம் சூன்யமாவதை பற்றி யாருக்கிங்கே கவலை...?! 

இது இந்தியாவில் ஒரு மாநிலத்தில் உள்ள  ஒரு கிராமத்தின் அவலநிலை  மட்டுமல்ல.  இது போல் பல ஊர்கள் இருக்கின்றன. ஆட்சி பொறுப்பேற்கும்  அத்தனை ஆட்சியாளர்களும் சரமாரியாக வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள் , இவர் வந்தால் விடிந்துவிடும் என்று நம்பி ஓட்டு போட்டு ஆட்சி கட்டிலில் உட்கார வைத்துவிடுகிறார்கள்.  ஆனால் குறைந்தபட்ச தேவைகளான  குடிநீர், கழிவறை வசதி போன்ற அடிப்படை வசதிகளை கூட செய்துத் தராமல் டிஜிடல் இந்தியா கோஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  

பொழியும் மழை நீர் வடிய தேவையான வடிகால் வசதி இன்றி தெருவெங்கும் தேங்கி பலவித தொற்று நோய்கள்  பரவுகிறது.  பருவக்காலத்தை கணக்கிட்டு மழை நீரை சேமிக்கும்  ஏரி குளங்களை பாதுகாத்து தூர் வாரி வைக்கலாம். (ஏரி குளத்தையே காணும்  அப்புறம் எங்க தூர் வார ...?) எவ்வளவு மழை பெய்தாலும் அவ்வளவும் கடலுக்கு சென்று சேருகிறது. நீர் சேமிப்பு, நீர் மேலாண்மை பற்றிய அரசாங்கத்தின் அலட்சியம் மேலும் தொடர்ந்தால் இன்று டெங்கல்மல் கிராமத்தின் நிலை தான் இன்னும் சில வருடங்களில் மொத்த இந்தியாவிற்கும் நடக்கும். 
    
டிஜிடல் இந்தியாவின் மறுபக்கம் தண்ணீரை தேடும் அவலம் !!?

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் : முடிந்தால் டெங்கன்கல் ஊரை பற்றிய செய்தியை பகிர்ந்துக் கொள்ளுங்கள்... Let's work together, spread the story and make the government take notice  

ஆங்கிலத்தில் உள்ள இந்த லிங்க்கை ஷேர் செய்தால் கூட போதுமானது. 

http://www.indiatimes.com/news/india/waterwives-men-marry-multiple-women-and-leave-them-by-the-wells-in-this-indian-village-233693.html

நேரம் இருப்பின் யூ டியூபில் உள்ள இந்த விடியோவை பாருங்கள்.


பின்குறிப்பு :-

இங்கே மழை வெள்ளம்னு ஆயிரம் பிரச்சனை இருக்கு, அதை பத்தி கவலை இல்ல, எங்கயோ குடிக்க தண்ணீ இல்லன்னு சொல்ல வந்துட்டாங்க என்பது  உங்களின் எண்ணமாக இருக்கலாம். அதை பற்றி பேசவும் எழுதவும் ஏன் ஓடோடிச் சென்று உதவி செய்யவும்தான்  நீங்க இருக்கிங்களே  என்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது. அதுதான் சொந்த மாநிலத்தை பற்றிய கவலையை உங்களிடம் விட்டு விட்டு அடுத்த மாநிலத்தை பற்றி பேசுகிறேன்.  புரிதலுக்கு நன்றி. 

- கௌசல்யா  

நன்றி 
கட்டுரை :- ஆங்கில இணையப் பத்திரிகைகள்  
படங்கள் - கூகுள் 

சனி, நவம்பர் 28

சகிப்புத்தன்மைக்கு வந்த சோதனை... !

A test of endurance- சகிப்புத்தன்மைக்கு வந்த சோதனை



இந்தியா சகிப்புத்தன்மை உள்ள நாடு என்ற ஒரு நல்ல பேரு நம்ம  நாட்டுக்கு உண்டு, அந்த பேரை சூட்டியதும் நாமதான். ஏகப்பட்ட இனம் மதம் சாதி இங்க இருக்கு, ஆனாலும் நாம ஒற்றுமையா இருக்கிறோம் அப்டினு நாட்டுக்கு வெளில இருக்கிறவங்கள விட நாமதான் மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லி பெருமைப்பட்டுக்குவோம். ஆனா சொல்றதோட சரி  செயலில் இல்லை அதுதான் நம்ம பிரச்சனையே.

ரோட்ல நடந்து போறப்போ மேல மழை தண்ணிய அடிச்சிட்டு போற பைக் காரன நடந்து போறவனும்,  கார்ல போறவனை பைக் காரனும் கெட்ட வார்த்தையால திட்டித்  தீர்க்கிற நாம  தான் இப்ப சகிப்புத் தன்மையை பற்றி பேசுகிறோம். திட்டுவதால் மேல விழுந்த தண்ணீ உடனே காயாது என்பது தெரிந்தாலும் திட்டினால் தான் அப்போதைக்கு நமது மனசு ஆறும். இப்படிதான் கூட்ட நெரிசலில் பஸ்ல தெரியாமல் கால் மிதி படுவது, மேல இடிபடுவது என்று தினமும் நாம் சந்திக்கும் அத்தனையிலும் எதிர்வினை ஆற்றவில்லை என்றால் நாமெல்லாம் மனுஷ லிஸ்ட்லயே சேர்த்தி இல்ல. அப்படிப்பட்ட நாம சகிப்புத்தன்மையை பற்றி இப்ப கிளாஸ் எடுக்கிறோம். குறைந்தபட்சம்  ஊர்ல எத்தனை பேர் ஆம்புலன்ஸ்க்கு வழிவிடுறாங்க. அதுவும்தவிர  ஆம்புலன்ஸ் பின்னாடியேப்  போனா சுலபமா நமக்கும் வழி கிடைக்கும் என்று போகிற ஜந்துக்கள் எல்லாம் சகிப்புத்தன்மை, தேசபக்தி என்று பேசுதுகள் !!?

சமீப காலமாக  இந்தியா என்றால் இந்து என்ற கூச்சல் அதிகரித்திருப்பதற்கு காரணம் மோடி அரசு என்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது அவர்கள் அப்படி நடக்காவிட்டால்தான் ஆச்சர்யம்.  இத்தனை காலமாக பிற மதத்தினரின் காலடியில் நாடு இருந்ததைப்  போலவும் அதை மீட்பதே தங்களின் தலையாய கடமை என்பதுமான அவர்களின் செயல் முட்டாள்தனம் தவிர வேற என்ன. இந்துமதம் பிரதான மதம், மற்றவை அதன் அடிப்பொடிகள் அடங்கிக்  கிடக்கவேண்டும் மீறினால் அடக்கப் படுவீர்கள். இதுதான் இன்றைய நிஜம்.  இந்து மதத்தை விட்டு வெளியேப்  போனவர்கள் தான் கிறிஸ்துவம் முஸ்லிம் புத்தம்  என்றால் ஏன் சென்றார்கள் இந்து மதத்தில் ஏதோ பிடிக்கவில்லை அல்லது அடுத்த மதத்தில் ஏதோ பிடித்திருக்கிறது என்பது தானே அர்த்தம். அவ்வாறு விரும்பிச்  சென்றவர்களை திரும்பி அழைக்க இந்து மதத்தில் உள்ள நல்லதை மீண்டும் மீண்டும் அழுத்தமாக சொல்லி வலியுறுத்தலாம். அதை விடுத்து பிற மதத்தினர் ஒரு கருத்தைக்  கூறினாலும் அதற்கு கண் காது மூக்கு எல்லாம் வைத்து தேசிய பாதுகாப்புச்  சட்டத்தை பாய்ச்சும் லெவலுக்கு கொண்டுப்  போவது மதவெறி அல்லாமல் வேறு என்ன?!

என்னே தேசபக்தி

இத்தனை காலமாக இல்லாத தேசபக்தி இப்ப திடீர்னு பொத்துக்கிட்டு ஊத்துது, தேசபக்தி ஒரு சாராருக்கு மட்டும் சொந்தமானது என்றால் மத்தவங்க எல்லாம் தேசத்தை(தேசபக்தியை) அடகு வச்சா சாப்ட்டுறாங்க.  பிற மதத்தினரை தேசத்துரோகி என்று  கட்டம் கட்டிவிடுவதில் காட்டும் தீவிரத்தை நாட்டின் வளர்ச்சியில் காட்டினால் நல்லது. ஆனால் அதை செய்ய மாட்டார்கள், ஒவ்வொரு கட்சிக்கும் அரசியல் செய்ய ஏதோ ஒன்று தேவை. மொத்தத்தில் பொதுசனம் பற்றிய அக்கறை யாருக்கும் இங்கே  சுத்தமாக இல்லை.

நாமெல்லோருமே ஏதோ ஒருசமயத்திலாவது நாட்டை குறை சொல்பவர்கள் தான். நாடாடா இதுன்னு காரி துப்பியவர்களும் உண்டு. வாய்ப்பு கிடைத்தால் வெளிநாட்டிற்கு சென்று செட்டில் ஆகவும் பலருக்கும் ஆசைதான். இக்கரைக்கு அக்கரை பச்சை தானே.  அப்படிப்பட்ட ஆட்கள் இன்று அமீர்கானை வாரி தூற்றுவதைப்  பார்த்தால் வியப்பாக இருக்கிறது. அமீர்கான் சொன்னது  'முஸ்லிம்களுக்கு இப்படியே பிரச்னை தொடர்ந்தால் நாமும் நாட்டை விட்டு போகவேண்டி இருக்குமா என்று என் மனைவி என்னை கேட்டார்' என்பதை தனது பேச்சோடுப்   பேச்சாக குறிப்பிட்டார். இந்த பேச்சுக்குள்  மீடியாக்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்றமாதிரி காரச்சார பொடியை தூவ அவ்வளவு தான் பத்திக்கிச்சு. ஒரு இந்து இதை சொல்லி இருந்தால் கதையே வேற ஆனா சொன்னது ஒரு முஸ்லிம் ஆச்சே.  

அமீரின் பிகே , சத்யமேவ ஜெயதே ப்ரோகிராம் பற்றி எல்லாம் அலசி ஆராய்ந்து வரிஏய்ப்பு பிரச்சனையை மறைக்க பிளான் பண்ணியே அமீர் இப்டி பேசினார்னு ஒரு வாரமாக மீடியாக்கள், சமூகத் தளங்களிலும் கருத்து சொல்றேன்னு ஆளாளுக்கு தங்களின் மத துவேசத்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். வரி ஏய்ப்பு செய்தார் என்றால் அதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை அரசு எடுக்க வேண்டியது தானே, மாறாக மத துவேசத்தை கையில் எடுத்து கொடும்பாவி எரிப்பு , பாடை கட்டுறது என்று கீழ்த்தரமா ஏன் இறங்கணும்.  இதையெல்லாம் அரசு செய்யவில்லை சில குரூப்புகள் என்றால் அவர்களை மத்திய அரசு தடுக்காமல் ஏன் வேடிக்கைப் பார்க்கிறது? அவர்களால் ஏற்படும் வன்முறை சம்பவங்களில் இருந்து  பொதுமக்களை  பாதுகாப்பது அரசின் கடமை அல்லவா?  ....... இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் நானும் தேசத்துரோகி ஆகிவிடுவேனோ!?  

எது சகிப்புத்தன்மை 

அப்புறம் அம்பேத்காரை எதற்கு இவ்விசயத்தில்  இழுக்கிறார்கள் என்று தான் என் புத்திக்கு  எட்ட மாட்டேன்றது. முஸ்லிம் மக்களுடன் சகோதர அன்பை பாராட்டி மகிழ்ந்தவர், முஸ்லிம் லீக் வேட்பாளராக போட்டியிட்டு முதல் வெற்றியைப்  பெற்றவர். மத பேதம் பார்க்காமல் பழகிய/வாழ்ந்த அவரது பெயரை தங்களின் தேவைக்கு இப்போதைய அரசியல்வாதிகள் உபயோகிக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாளில் காந்தியை கொன்ற  கோட்சேவுக்கு சிலை வைப்பார்கள், அவர் ஒரு போராளி என்று மாணவர்களின் பாட புத்தகத்தில்  எழுதியும்  வைப்பார்கள்.  

பிற மதத்தினரின் நம்பிக்கைகளை இழிவுபடுத்துவது, எதை சாப்பிடுவது என்பதிலும் மூக்கை நுழைப்பது,....என்பதெல்லாம் மிக அநாகரீகமான செயல்கள். கருத்துரிமை பேச்சுரிமை எழுத்துரிமை  எல்லாம் இந்த நாட்டில் பிறந்த எல்லோருக்கும்  உண்டு. ஒரு பிரபலம் சாதாரணமாக பேசினால் பெரிதாக்குவதும், எளியமக்கள் 'வாழும் உரிமை'க்கு குரல் கொடுத்தால் கண்டுக் கொள்ளப்படாததும் தற்போதைய நிலை.  நீ  சொல்லும் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும் அதை சொல்வதற்கான உரிமை உனக்கு உண்டு அதை நான் மதிக்கிறேன் என்று சொல்வதற்கு பெயர் தான் சகிப்புத் தன்மை.

இதை ஆட்சியில் இருப்பவர்கள் முதலில் உணரவேண்டும். அதை விடுத்து சொன்னவர் என்ன சாதி என்ன மதம் என்று அலசி ஆராய்ந்து ஓ நீ அந்த மதமா அதுதான் அப்படி பேசுகிறாய் என தரம் பிரிப்பது அநாகரீகம். இதை அரசு , மீடியா தனி நபர்  யார் செய்தாலும் தவறுதான் தவிர்க்கப் படவேண்டிய ஒன்று. சகிப்புத்தன்மை உள்ள நாடு என்று கூச்சலிட்டுக் கொண்டே இருந்தால் போதாது... செயல்களில் காட்டவேண்டும் முக்கியமாக ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இனிமேலாவது இதை செயல்படுத்தினால் நல்லது. ஆனால் அதற்கு சிறிதும் வாய்ப்பே இல்லை.  

சமூக வலைத்தளங்களில் அமீர்கானை இழுத்துவச்சு படு கேவலமாக  கும்மி அடிக்கிறவங்களைப்  பார்த்தால் வெறுப்பாக இருக்கிறது. கண் முன்னாடி நடக்குற கொடுமையை வேடிக்கை பார்த்துட்டு போற நமக்கெல்லாம் சகிப்புத்தன்மைப்  பற்றி பேச என்ன அருகதை இருக்கு   தனிநபரை தாக்குவதாக கூறிக் கொண்டு அவரது மதத்தை தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்... இவர்களை போன்ற மத வெறியர்களுக்குத்  தேவை ஒரு சந்தர்ப்பம்...அது யார் மூலமாக எவ்வகையில் ஏற்பட்டாலும் தங்களின் மன வக்கிரங்களை வெளிக் காட்டியேத் தீருவார்கள்... அரசிற்கு எதிராக கருத்துக்களைத் தெரிவிப்பவர் முஸ்லிமாக இருந்தால் பாகிஸ்தானுக்கு ஓடணும், கிறிஸ்துவராக இருந்தால்  ஜெருசலமிற்கு  ஓடணும் என்பதை சட்டமாக்கி விடுவார்கள் போல ! ஒரு ஜனநாயக நாட்டில் அரசை குறைக் கூற, விமர்சிக்க பொதுமக்களுக்கு உரிமை இல்லை. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் பொதுமக்களை பொறுத்தவரை 'ம்' என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் ??!!!


சொற்களை சிறை வைத்தீர்கள்
பிரியங்களை கல்லெறிந்தீர்கள்
கருணையை கழுவேற்றினீர்கள்
இவையெல்லாம் பிரபஞ்சம் சாட்சியாக
நீங்கள் தான் பரிசளித்தீர்கள்
உடலில் இருக்கும் சொச்ச உயிரை
கொஞ்சம் மிச்சம் வையுங்கள்
உங்களுக்கு பின்னால் கடவுள் வேற நிற்கிறான் !

(பேஸ்புக்கில் நண்பர் செய்தாலி அவர்கள் எழுதிய இந்த கவிதையை இன்று காலை படிக்க நேர்ந்தது.  எளிமையான இந்த வரிகள் பல அர்த்தங்களை எனக்கு உணர்த்தியது. நன்றி செய்தாலி !!)  

சகிப்புத்தன்மையை சகித்துக்கொள்ளப்  பழகிக் கொண்டோமென்றால் இங்கே வாழ்தல் இனிது !!!


புரிந்தவர்களுக்கு...
கௌசல்யா