Wednesday, February 3

12:04 PM
12ஆரம்பம் முதல் இறுதி வரை மிக ரசித்த படம்... ரித்திகா இந்த பெண்ணை எங்கே கண்டு பிடித்தார்கள் என்று ஆச்சர்யப் பட வைத்தார். படத்தை பார்க்கும் முன் விஜய் சூப்பர் சிங்கரில் கெஸ்ட்டா இந்த பெண்ணை பார்த்த போது ரொம்ப ரொம்ப சிம்பிளாக நடிகை என்ற  எந்த அடையாளமும் இல்லாமல் வந்து அமர்ந்தார். மாதவனுக்கு இந்த சின்ன பொண்ணு ஜோடியா என்ன படமோ எப்படி இருக்குமோ என்று ஒரு சலிப்பு எனக்கு. பொதுவாக ரிலீஸ் ஆகுகிற படமெல்லாம் பார்க்கிற வழக்கம் இல்லை ரொம்ப யோசிச்சு செலக்ட் பண்ணி பார்ப்பேன்

ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை 'ஆவி கோவை' தனது பேஸ்புக் ஸ்டேடஸில் மாதவனின் நடிப்பை சிலாகித்ததை  பார்த்ததும் இந்த படத்தை பார்த்தால் என்ன என்று தோன்றியது. அன்னைக்கு எனது வேலைகள்  முடிந்து  வெட்டியாக வேறு இருந்ததால் நானும் கணவரும் உடனே  கிளம்பியும் விட்டோம். தியேட்டரில் சொற்ப கூட்டத்தை பார்த்ததும் அடடா தப்பா Choose  பண்ணிட்டோமோ அரண்மனை 2 (ஹவுஸ் புல்) போய் இருக்கலாமோ,  சரி எதுனாலும் நேருக்கு நேரா சந்திப்போம் என்ற வீராவேசத்துடன் உள்ளே சென்று சீட்டில் அமர்ந்தேன்.

சும்மா சொல்லக் கூடாது ஆரம்பம் முதல் சீன் பை சீன் திரையுடன் என்னை ஒன்ற வைத்துவிட்டது. ரித்திகாவை எப்படி பாராட்ட என்றே தெரியவில்லை அந்த பொண்ணு நடிச்சிருக்குனுலாம் சொல்ல முடியாது, என் கணவரிடம் சொன்னேன், இந்த பொண்ணு ஒரு ஸ்போர்ட்ஸ்வுமன் ஆக இருப்பாளோ என்று... அந்த அளவிற்கு ரொம்ப சாதாரணமாக அனைத்தையும் கையாண்டாள்.  அந்த பேச்சு(டப்பிங்கா   நம்ப முடியவில்லை) அந்த ஸ்டைல் அந்த நடை அந்த பார்வை... கண்ணா அது என்னமா உணர்ச்சியை வெளிக் காட்டுது. நடனமா நளினமா என்று இமைக் கொட்டாமல் பார்த்தேன். ஒவ்வொரு அசைவும் தனித் தனியாக ரசிக்கவைத்தது. இதற்கு முன்  ஷோபாவை இப்படி ரசித்திருக்கிறேன்.

பொதுவாக மாதவன் அடிக்குரல்ல பேசுற  படத்தை தவிர்த்துவிடுவேன், டிவியில் படம் போட்டாலும் பார்க்க மாட்டேன். உருவத்துக்கும் குரலுக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி இருக்கும். இந்த படத்துல ரொம்பவே ஸ்மார்ட்.  இறுக்கமா இருக்கணும் அதே நேரம் இயல்பாவும் தெரியணும் என்பதை பார்வையாளனிடம் வெளிப்படுத்திய விதத்தில் மாதவன் நடிப்பு அட்டகாசம். நடிப்பை பொறுத்தவரை நம் தமிழ் திரையுலகம் இவரை அவ்வளவாக பயன்படுத்தவில்லை என்ற வருத்தம் ஏற்பட்டது.

நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்த  படம், அவரும் தனது பாத்திர தன்மையை உள்வாங்கி மன உணர்வுகளை முகத்தில் அருமையாக வெளிப் படுத்தி இருந்தார். தமிழ் நாட்டு மீனவப் பெண்ணுக்கு வடநாட்டுப் பெண் சாயல் எப்படி என யோசிப்பதற்கும் ஒரு சிறு கதை வைத்தது அழகு.   நாசர் ராதாரவி உள்பட நடித்த அனைவருமே நடிப்பில் அவ்வளவு கச்சிதம்  நடிகர்களுக்குள் இருக்கும் நடிப்பை   கதைக்கு ஏற்றப் படி வெளிக் கொணர்ந்து  நடிக்க வைத்தது  இயக்குனரின் திறமை.     

திருமதி. சுதாவின் இயக்கம் மிக பாராட்டத்தக்க ஒன்று...ஒவ்வொரு பிரேமிலும் அவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார். அவரது உழைப்பு வீண் போகவில்லை, இணைய உலகமே கொண்டாடித் தீர்க்கிறது. ஆனால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடைய வேண்டுமே என்ற ஆதங்கம் எனக்கு. ஒரு குத்து பாட்டு, டாஸ்மாக் விளம்பர பாடல், ரத்தம் தெறிக்க தெறிக்க கொலைவெறி தாக்குதல், அம்பது பேரை தூக்கி வீசுற ஹீரோயிச  சண்டை, காதைப் பிளக்கும் இசை, வெளிநாட்டில் ஒரு பாடல் இதெல்லாம்  தான்  படத்தின் இலக்கணம் என தமிழ் ரசிகனின் புத்தியில் பதிந்துவிட்டது.  தற்போது பேய்களின் காலம் வேறு, அதுவும் சிறு குழந்தைகளை ஈர்பதற்காக காமெடியை கலந்துக் கட்டி பேய் பிசாசுக்களை தாராளமாக நடமாட விட்டிருக்கிறார்கள். இப்போதெல்லாம் பேய் பிசாசு என்று ஒன்றும் இல்லை எல்லாம் சும்மா லுலுலாயிக்கு னு சொன்னா சின்னப்பசங்க எங்க கேட்குறாங்க .    சினிமா சொல்றது மூடநம்பிக்கை என்றாலும் நம்பி தொலைக்குறாங்களே .

இறுதிச்சுற்று காக்கா முட்டை போன்ற படங்கள் குறிஞ்சி பூக்கள் போல... சினிமாவை கொண்டாடும் ரசிகர்கள் இந்த படத்தையும் கொண்டாடவேண்டும்.  சம்பந்தப் பட்டவர்களை பாராட்டி உற்சாகப் படுத்த வேண்டும். விளையாட்டுத்துறையில் நிலவும் அரசியலை சாடுகிறார்கள். இந்த படத்தில் சமூகத்திற்கான அறிவுரைகளை வசனங்களின் மூலமாக சொல்லவில்லை ஆனால் உணர்த்துகிறார்கள்.  கடந்த வாரம் ஆஸ்திரேலியாவை வென்று கோப்பையை கைப்பற்றிய  பெண்கள் கிரிக்கெட் அணியை பற்றி எத்தனை பேருக்கு தெரியும், எத்தனை பேர்கள் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் போட்டோம், என்னையும் சேர்த்துதான். இப்படித்தான் இருக்கிறது நமது சமூக அக்கறை எல்லாம். முடிந்தவரை நல்ல தமிழ் சினிமாக்களை வாழ்த்துவோம் பாராட்டுவோம்.    (சினிமாவைப் பற்றிய பதிவில் வேறெப்படி நான் சொல்ல) :-)

சுவாரசியத் துளிகள் 

ரித்திகா ஒரு குத்துச்சண்டை வீரர் என்பது படம் பார்த்தப்பிறகு தான் தெரிந்தது . முதலிலேயே தெரியாமல் இருந்ததும் நல்லதுதான், விமர்சனங்கள்  படிக்காமல் படம் பார்ப்பது சுவாரசியமானது என்பதை போல...  

நாயகி நாயகனை புரிந்துக் கொண்டப்பின்  இருவரும் அருகருகே இருக்கும் சந்தர்ப்பங்களில் அது குத்துச் சண்டை பயிற்சியாக இருந்தாலும் மெல்லிய நேச இழை நிழலாடியது அற்புதம். ஒளிக்காட்சி அமைப்பு மனதை ஈர்த்தது.  

குரு சிஷ்யை  காதல் எப்போதுமே தனித்துவமானது...உடல் தாண்டிய உணர்வு ரீதியிலான நேசத்தை பரிமாறியும் சமயங்களில் பரிமாற முடியாமல் தவிக்கும் தவிப்பை அனுபவித்தவர்களால் மட்டுமே உணர  முடியும்.  குருவின் ஒற்றைப்பார்வை ஒற்றைப்புன்னகை 'ம்' என்ற ஒற்றை வார்த்தை(?) ஏதோ ஒன்று போதும் சிஷ்யைகள்  ஜீவித்துக் கொள்ள...!  குரு தனக்கு செய்ததற்கு நன்றி பாராட்ட தான் எதைக் கொடுப்பது என்றெல்லாம் அதிகம் யோசிக்காமல், வெற்றி பெற்றதும் குருவையும்  தன்னையும் அழிக்க முயன்ற சந்தர்ப்பவாதி எதிரியை இரண்டு குத்தில்  தரையில் வீழ்த்தி, எதிர்வரும் அத்தனை பேரையும் மோதி ஒதுக்கி தள்ளி , குருவிடம் நேராக  ஓடிச்சென்று தன்னை முழுவதுமாய் ஒப்படைத்து சரணாகதி அடைந்த அந்த ஒரு நொடி... எனது சுவாசத்தை நான் மறந்த தருணம் அது !!!

'நீ  எனக்காக செய்யும் விசயமெல்லாம்  காதல் இல்லாமல் வேறென்ன?'  

விழிகளில் வழியும் எனது  கண்ணீரில் இருக்கிறது பெண்ணே உனது கேள்விக்கான எனது பதில்...!!
Tweet

12 comments:

 1. தங்கள் பார்வையில் படத்தை அழகாக சொல்லியுள்ளீர்கள், பார்க்கத் தான் ஆசை,

  பார்ப்போம்.நன்றிமா

  ReplyDelete
 2. அருமையான விமர்சனம் சகோதரி. நேற்றுத்தான் பார்த்தேன். வெகு நாட்களுக்குப் பிறகு நல்லதொரு படத்தைப் பார்த்த நிறைவு. நீங்கள் சொல்லியிருப்பது போல் இது பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் என்றெல்லாம் இல்லை என்றாலும் குறைந்தது எல்லா தரப்பு மக்களையும் அடைந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. காதைச் செவிடாக்கும் குத்துப்பாடல் காலமாயிற்றே. அதெல்லாம் இல்லாத ஒரு படம் என்றால்...

  கீதா: ஆவியின் தளத்தில் பட விமர்சனம் பார்த்தேன். எனக்கு என்னமோ தாரை தப்பட்டை மனதைத் தொடவில்லை பாலா படம் என்றாலும் பார்க்கும் ஆர்வம் இல்லை. இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம்தான். பார்க்க வேண்டும். எல்லோருமே பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் தருவதாகத்தான் தெரிகின்றது. மேடி நல்ல கலைஞன். ஆனால் அவரைத் திரையுலகம் உபயோகித்துக் கொள்ளவில்லை என்பதே எனது கருத்தும் உங்கள் கருத்து போல...நல்ல விமர்சனம். பகிர்வுக்கு மிக்க நன்றி தோழி

  ReplyDelete
  Replies
  1. தாரை தப்பட்டை பார்க்கவில்லை, நண்பர்களின் விமர்சனங்களை படித்து திகிலாக இருக்கிறது. :-)

   தொடரும் வருகைக்கு நன்றிகள்

   Delete
 3. படம் பார்க்கத் தூண்டும் விமர்சனம்
  நன்றி சகோதரியாரே
  தம +1

  ReplyDelete
 4. இந்தப் படத்தைப் பற்றி நண்பர்கள் நிறைய சொன்னார்கள். அப்போதே பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இப்போது உங்கள் விமர்சனத்தையும் பார்த்தப் பின் உடனடியாக கிளம்பி விட்டேன்.
  த ம 7

  ReplyDelete
 5. Good reviews. tamil cinema industry not using good actors. it's mostly focus "aaluma doluma and I am waiting" than good story and screen play.

  ReplyDelete
 6. அருமையான விமர்சனம் அக்கா...

  ReplyDelete
 7. நல்லதோர் விமர்சனம். படம் பார்க்கவில்லை. பார்க்கத் தோன்றுகிறது.

  ReplyDelete
 8. அழகான விமர்சனம். நீன்ங்கள் சொல்வதால் பார்க்கத் தோன்றுகிறது. மாதவனுக்கு இறுதிச் சுற்றாக இல்லாமல் மறு சுற்றாக இருக்க வேண்டூம். நன்றி கௌசல்யா.

  ReplyDelete
 9. நேர்த்தியான பதிவு, நன்றி,

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...