Friday, January 29

3:44 PM
29பெண்களை வைத்து இதோ அடுத்து ஒரு விவாதம் தொடங்கியாகிவிட்டது. பெண்களை பேசுப்பொருளாக்கி விவாதிப்பதில் இருக்கும் சுவாரசியம் வேறு எதிலும் இல்லை என்பதை ஊடகங்கள் நன்கு புரிந்து வைத்திருக்கின்றன. தற்போதைய  தலைப்பு பெண்களும் குடியும்... ஒரு பெண் டிவி ஷோவில் குடித்தால் என்ன தப்பு என்று கேட்டுவிட்டாள், உடனே பத்திக்கிச்சு சமூக வலைத்தளம். விதவிதமாக Memes ரெடி பண்ணி தாளித்துக் கொண்டிருக்கிறார்கள் பெண்களை.  தாளிப்பவர்களில் எத்தனை பேர் குடியை முகர்ந்து கூட பார்க்காத மகாத்மாக்களோ தெரியவில்லை.  விஷயம் இப்போது  எப்படி திசை திரும்புகிறது என்றால் 'குடிப்பழக்கம் சரி ஆனால் பெண்கள் குடிப்பது தவறு'  

சில  நாட்களுக்கு முன்னர் கரூரில் ஒரு பள்ளி மாணவன் குடிபோதையால் மயங்கி விழுந்துக் கிடக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் போட்டிப்போட்டு பகிரப்பட்டு வந்தது. பள்ளி சீருடையுடன் இருந்ததே அப்போது பலரின் கவனத்தை வெகுவாக பாதித்தது. பள்ளி மாணவர்கள் குடிபோதைக்கு  அடிமையாகி ரொம்ப காலமாச்சு. சங்கரன்கோவில் அருகில் ஒரு கிராமத்தில் 9 வது  படிக்கும் இரு  மாணவர்களுக்கும்  சண்டை, காரணம் இருவரும் ஒரே மாணவியை காதலித்தது. குடிபோதையில்  கையில் கத்தியுடன் மலையடிவாரத்தில் கட்டிப் புரண்டுப்  போட்ட சண்டையை காவல்துறை தலையிட்டு அவசரஅவசரமாக சமாதானம் செய்து அவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைத்தது. எங்கே இது சாதிச் சண்டையாக மாறிவிடுமோ என்ற கவலை காவல்துறைக்கு !  மாணவர்கள் சார்ந்த இரு பிரிவினருக்கும் பல வருட பகைமை  உண்டு.

குடித்தால் தான் நண்பர்கள் மத்தியில் கௌரவம், குடிப்பது தைரியம் வீரம் இப்படி இன்னும் என்ன கண்றாவி புரிதல்கள்(?) இருக்கிறதோ அத்தனையையும் சினிமா நமது மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்துவிட்டது.  குடிக்கவைத்து சிறுக சிறுக மக்களை  கொன்று அவர்களின் சடலங்கள் மீதேறி நின்று கைக் கொட்டிச் சிரிக்கும் அரசுகள்  வீழ்வதற்குள் இங்கே நாசமாகி போவார்கள்  நம் மாணவ செல்வங்கள் ! பெர்த்டே பார்ட்டி பியருடன் என்ற  கலாச்சாரம்(?) கல்லூரியை  மட்டுமல்ல பள்ளிகளுக்கும் பரவி ரொம்பநாள் ஆச்சு. அதுபோக வாரம் ஒரு முறை வீக் எண்டு செலிபிரேசன் என்ற கண்றாவி  (கலாச்சாரம்=கண்றாவி) வேறு,

இரு தினங்களுக்கு முன் திருப்பூரில் ஆறாம் வகுப்பு மாணவன் ஒன்றாம் வகுப்பு மாணவனை அடித்தே கொன்றுவிட்டான். நினைத்து பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது. எவ்ளோ வன்மம் அந்த மாணவனுக்குள் இருந்தால் இத்தகைய கொடூரத்தை நிகழ்த்த முடியும். அவன் வாழும் சமூகம் அவனுக்குள் விதைத்தது இதை தானா ?  டிவி ஷோவில் குடிகாரத் தகப்பனால் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி தகப்பனை நோக்கி கேட்கிறாள், 'அருகில் படுத்திருப்பது மகளா மனைவியா என்பது கூடவா தெரியாது என்று. குடிபோதையின் விபரீதத்தை சொல்ல இது ஒன்று போதும்?!

சிறந்த பள்ளிகளை தேடி அதிக பணம் கட்டி சேர்த்துவிட்டதுடன் தங்கள் கடமை முடிந்து விட்டதாக எண்ணி பணத்தின் பின் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் இன்றைய பெற்றோர்கள். தனது மகன்/மகள் எங்கே செல்கிறார்கள், யாருடன் பழகுகிறார்கள் என்றெல்லாம் கவனிக்க அவர்களுக்கு நேரம் இல்லாமல் போய்விட்டது. பள்ளி குழந்தைகள் மது அருந்தத் தொடங்கிவிட்டார்கள் என்பது நல்ல செய்தி அல்ல.  விடுமுறை தினத்தன்று  குழந்தைகளுடன் செலவழிப்பதை விட தங்கள் நண்பர்களுடன் இணைந்து தண்ணி அடிக்க செல்லும் பொறுப்பற்ற தகப்பன்கள் அதிகரித்துவிட்டார்கள்.  இதில் வேண்டுமானால் தற்போது தாய்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.  பெற்றோர்கள்  தங்களை ரிலாக்ஸ் செய்வதில் வைக்கும் கவனத்தை தங்களின் குழந்தைகளின்  மீது வைக்கவில்லை என்றால் அந்த குழந்தைகளின் எதிர்காலம் 'சிறுவர் சிறைச்சாலை'யில் கழிவதை யாராலும் தடுக்க முடியாது.

இரண்டு நாளா நீயா நானா வீடியோவை ஷேர் பண்ணி  ஐயையோ ஒரு பெண் இப்டி பேசலாமா, அது எப்டி பொம்பள குடிக்குறது நாடு என்னாவறது சமூகம் கெட்டு குட்டி சுவரா போச்சேனு கதறி கதறி அழுவுறாங்க. பெண் குடிக்கலாமா அதுவும் தமிழ் பெண் குடிக்கலாமா என்ற கேள்விகளை பார்த்தால் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.  அந்த பெண் விவாதத்திற்கு பேசினாலே ஒழிய தான் குடிக்கிறேன் அதனால் பேசுகிறேன் என்று சொல்லவில்லை. இதை கூட புரிந்துக் கொள்ளாமல் அந்த பெண்ணின் புறத் தோற்றத்தை வைத்தும் கேலிகிண்டல் செய்து தங்களின் ஆணாதிக்க வெறியை சொறிந்துக் கொண்டிருக்கிறார்கள்.

குடிப்பதில் என்ன ஆண் பெண் வித்தியாசம்... விஷத்தை யார் குடித்தாலும்  சாவுதான்.  ஆனால்  இதை ஆண்களால் ஒத்துக் கொள்ள முடியாது, இவங்க தான் புதுசா கண்டுப்பிடிச்ச மாதிரி பொண்ணுக்கு  கர்ப்பப்பை இருக்கு,    குடிச்சா அது கெட்டுப் போய்டும் குழந்தைக்கும் பாதிப்புனு என்னா பேச்சுன்றிங்க ...சகிக்கல! அப்புறம் பொண்ணு குடிச்சா பாலியல் ரீதியிலான துன்பத்துக்கு ஆளாவாளாம். பாலியல் கொடுமை அதிகரிக்க பெண் குடிப்பதும் ஒரு காரணமாம். அப்படினா இந்த ஆம்புளைங்க மூக்கு முட்ட குடிச்சிட்டு போறப்போ எதிர்ல பெண் வந்தா கண்டுக்காம தலையை குனிஞ்சிட்டு அப்டியே நேரா வீட்டுக்கு போய் குப்புறப்படுத்துடுவாங்க போல... பெண்  குடிப்பதை கண்டித்தும் ஆண் தனது குடிப்பழக்கத்தை நியாயப் படுத்தவும் எப்படி  எல்லாம் சமாளிக்கிறார்கள்

குடிகார ஆண்கள்.  . மதுப்பாட்டில்களை புகைப்படமெடுத்து சமூக வலைத்தளங்களில் போடுவதும், குடியை பற்றிய   உற்சாகப்பேச்சுக்களை  ஸ்டேடஸ்/கமெண்ட்ஸ்  என்று போடுபவர்களும் சமூகத்தைக்  கெடுக்கும் படு பாதகர்கள். மதுவை விற்கும் அரசின் செயல் கயமைத்தனம் என்றால் மதுவை  மறைமுகமாக உற்சாகப் படுத்தும் உங்களில் சிலரின் செயலுக்கு என்ன பெயர்? கையில் பியர் பாட்டிலை வைத்திருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படத்தை சிறிதும் வெட்கமின்றி பகிர்ந்து கேவலமாய்  திட்டித்தீர்த்துவிட்டு  வாரக்கடைசியில் 'என்னடா மச்சி இன்னைக்கு பார்ட்டி எங்க' என ஸ்டேடஸ் போடும் அதி உன்னதமான ஆண்கள் நிறைந்த உலகமிது. பேஸ்புக்கில் பரவலாக சனிக்கிழமை (வீக் எண்டு)இரவைப் பற்றிய பேச்சுக்கள்/உளறல்கள் நிறைந்திருக்கும்.  இதை விட சிறந்த பொறுக்கித்தனம் வேறில்லை. 

மக்களின்  நிகழ்காலத்தை சிதைத்து எதிர்காலம் என்ற ஒன்றே  இல்லாமல் போக்கும் குடியை மட்டும் ஏன் எதிர்க்க முடியவில்லை. ஆண் பெண் சமத்துவம் வேண்டும் என்று பேசுபவர்கள் கூட ஒரு பெண் குடியை பற்றி பேசியதும் உடனே புரட்சி புடலங்காயா மாறிடுவாங்க.

புதுமைப் பெண்களே !

உங்களுக்கு விருப்பம் வசதி இருந்தால் மது அருந்துங்கள் ஆனால் ஆணுக்கு பெண் சமம் என்பதை மது அருந்துவதன் மூலம் நிரூபிப்பதாக சொல்லிக் கொண்டு திரியாதீர்கள். ஒரு பெண் மரத்திலோ தரையிலோ சாய்ந்து கண் மூடி இருக்கும் போட்டோவை பேஸ்புக்கில் பகிர்ந்ததும் வரும் முதல் கமென்ட் என்ன மட்டை ஆகிடிங்களா? இன்னைக்கு ஓவரா? ஆண்கள் இப்படி கேட்கவேண்டும் என்றே போட்டோவை பகிரும் பெண்கள் ஒரு தனி ரகம், எதை/யாரை  பற்றியும் அக்கறை இல்லாத இவர்களை நான் பெரிதாக கண்டுக்கொள்வதில்லை.  குடித்தால் என்ன தப்பு என்று பேசிய நீயா நானா பெண்ணும் இவர்களும் ஒன்று.  எதில் சமத்துவம் வேண்டும் என்பதே புரியாத பெண்களால் தான் பெண்மை மேலும் மேலும் கேலிக்கு உரியதாக மாறிக் கொண்டிருக்கிறது.    

அரசின் பொறுப்பின்மை 

மதுகுடிப்பது தனிமனித ஒழுக்கம் சம்பந்தப் பட்டது என்றாலும் அரசே அதை ஊக்குவிப்பது வேதனை. ஊருக்கு ஒதுக்குபுறமாக இருந்த சாராயக் கடைகள் இன்று வீதிக்கு ஒன்று என்ற அளவில் குடியிருப்பு பகுதியையும் விடாமல் பள்ளிக்கு அருகில் மருத்துவமனைக்கு அருகில் என்று எதை பற்றியும் யோசிக்காமல் இஷ்டத்திற்கு  பெருகிவிட்டதை எவ்வாறு நியாயப்படுத்துவது. இந்த அரசு கைக்கெட்டிய தூரத்தில் டாஸ்மாக் கடையை வைத்துவிட்டு குடிக்காதே குடி பழக்கம் உடலுக்கு கேடு என்று பிரச்சாரம் செய்கிறது, பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவதை போல 

பெண்களின் முன்னேற்றத்தை ஜீரணிக்க ஆண்களால் முடியவில்லை பிற பெண்களாலும் முடியவில்லை. நம் சமூகத்தின் சாபக் கேடு இது. எல்லாவற்றிலும் சமத்துவத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் பெண் குடியிலும் சமத்துவத்தை நாடிவிட்டால் என்னாவது என்பது தான் பெரும்பாலோரின் கேள்வி.

ஆண்கள் தான் இதில் அதிகமாக மிரண்டு விட்டார்கள் என்பதை அவர்களின் கருத்துகளின் மூலம் புரிகிறது, எங்கே தனது மனைவி 'வரும் போது எனக்கு ஒரு பகார்டி ஆப்பிள் பிளேவர் வாங்கிட்டு வாங்க' என்று கேட்டுவிடுவாளோ, அவளுக்கு ஆம்லெட், மட்டன் சுக்கா ரெடி பண்ணிக் கொடுக்கும் நிலைமை தனக்கு வந்துவிடுமோ என்ற பயம். மத்தபடி கலாச்சாரமாவது மண்ணாங்கட்டியாவது.  சுய ஒழுங்கு கட்டுப்பாடு நாகரீகம் ஆண் பெண் எல்லோருக்கும் வேண்டும், அளவுக்கு மீறி யார் குடித்தாலும் பாதிப்பு சம்பந்தப்பட்டவங்களுக்கு தான். பெண் குடிப்பது சமூகத்தை பாதிக்கும் என்றால் ஆண் குடிப்பது சமூகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லுமா என்ன ?!!

ஆண் குடித்து தெருவில் புரண்டால் ஒதுங்கிச் செல்லும் சமூகம் பெண் குடித்து புரளும் போது சுற்றி நின்று வேடிக்கைப் பார்க்கிறது துணி எப்போது விலகும் என்று. பாலியல் வறட்சிகொண்ட மனிதர்களுக்கு அந்த இடத்தில் பெண் குடித்துவிட்டாள் என்பதை விட பிறவற்றின் மீதுதான் அதிக கவனம்.

பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக்குகிற சமூகத்தில், பெண் குடிப்பதற்கு மதுவை பழிக்காமல் பெண்ணை பழிப்பது தானே வழமை 

பெண்கள் குடிப்பதற்கு வக்காலத்து அல்ல இந்த பதிவு  ஆனால் பெண்கள் எல்லாம் குடிக்கிறார்கள் என்ற கூப்பாடு ஏன். அதுதான் பிரச்சனை.  பெண்களை குடிக்காதீர்கள் என்று வற்புறுத்த  'குடிக்கும்'  எந்த ஆண்களுக்கும் உரிமை இல்லை.  வேண்டுமானால் உங்கள் வீட்டுப் பெண்களை குடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதுவே சமூகத்திற்கு நீங்கள் செய்யும் பெரிய உபகாரமாக இருக்கட்டும்!!   


Tweet

29 comments:

 1. அருமை சவுக்கடியான வார்த்தைகளைக் கொண்டு சமூகத்தை சாடிய விதம் னன்று குடிப்பதில் ஆணென்ன பெண்ணென்ன உண்மையான கேள்வி விசம் இருவருக்கும் பொதுதானே அருமையான பதிவுக்கு வாழ்த்துகள் சகோ
  தமிழ் மணம் 2

  ReplyDelete
  Replies
  1. ஆணையோ பெண்ணையோ சாடாமல் சமூகத்தை சாடியிருக்கிறேன் என்ற உங்களின் புரிதலுக்கு வணங்குகிறேன்.

   அன்புடன் எனது நன்றிகள் ஜி

   Delete
 2. சரி, மதுவை அருந்தாத ஆண்கள், குடித்துக் கும்மாளம் போடும் பெண்களையாவது விமர்சிக்கலாமா? இல்லை அங்கேயும் அந்த அப்பாவி அல்கஹாலைத் தான் திட்டணுமா?

  தப்பு யார் செய்தாலும் தப்புதான். அது ஆணோ பெண்ணோ என் தாயோ, தமக்கையோ இல்லை அன்புத்தங்கையோ. அவர் பெண் என்பதால் விமர்சிக்கக் கூடாது என்பதில் எந்த நியாயமும் இல்லை.

  This is how it started among men too. First 1% started consuming, now it is almost 100% The same thing would happen with women. I dont understand why women should be treated "gently" and "alcohol should be blamed" rather than blaming consuming women.

  I am completely against your view in this issue, my respectable friend, Mr.Raj! We should not use two different balances to weigh men and women's alcohol consumption. Let us blame the consumer not the ethyl alcohol, even if it is a "poor woman"! Then only it is fair after all.

  I seriously think you are making mistake here by defending the "wrong people"!

  ReplyDelete
 3. ***பெண்கள் குடிப்பதற்கு வக்காலத்து அல்ல இந்த பதிவு ஆனால் பெண்கள் எல்லாம் குடிக்கிறார்கள் என்ற கூப்பாடு ஏன். அதுதான் பிரச்சனை.***

  I dont believe this. I think you do not understand what you are doing as you happened to be a "woman"!

  ***பெண்களை குடிக்காதீர்கள் என்று வற்புறுத்த 'குடிக்கும்' எந்த ஆண்களுக்கும் உரிமை இல்லை.***

  I think you assume all men drink. That's is not TRUE. Even if one who does not consume alcohol, criticizes women for drinking, I dont think you are in a "mind-set" to accept their criticism. You would rather ask them to fix the men first. விதி உங்களிடமும் விளையாடுகிறது. பாவம் நீங்க என்ன செய்வீங்க? :(

  ReplyDelete
 4. உங்க பதிவுக்கு ஒரு நெகட்டிவ் ஓட்டு மனமுவந்து அளிக்கிறேன்! புரிதலுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வாங்க வருண்.

   உங்களுக்கு எதிர்வினை காட்டுகிற மாதிரி எனது பதிவு இருந்தால் அதுதான் பதிவுக்கு கிடைச்ச வெற்றி. கூடவே மைனஸ் வோட் போட்டு உங்களின் எதிர்ப்பை காட்டினிங்க பாருங்க, சோ இந்த முறை வருணின் வருகை எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுக்கிறது. :-)

   உங்கள் கேள்விகள் திட்டுகளுக்கு(!) ஒரு தனி பதிவாக சொல்லலாம்னு பார்க்கிறேன். :-) இது உங்கள் கருத்துக்களுக்கு நான் கொடுக்கும் மரியாதை. வேலை பளுவுக்கு நடுவில் விரைவாக போஸ்ட் போட முயற்சிக்கிறேன், சரியா. அடுத்த பதிவில் சந்திப்போம் :-)

   நன்றி வருண்.

   Delete
 5. “பெண்களின் குடிப்பழக்கத்தால் சமூகம் சீரழியும்” சரி, இதுநாள் வரையிலான ஆண்களின் குடிப்பழக்கத்தால் சமூகம் அப்படியே எழுந்து நின்றதா நண்பரே? தலைப்பே ஒருதலைப்பட்சமமாக இருக்கிறதே! முதலில் கட்டுரையின் தலைப்பை மாற்றுங்கள், அப்புறமாகப் படித்துவிட்டு எழுதுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தலைப்பை மட்டும் படித்துவிட்டு பதிவை படிக்காமல் விட்டு விட்டீர்களே , படியுங்கள் உண்மை என்னவென்று புரியும். கேள்வி குறியிட்டு கேள்வியாக்கினேன் பதில் அல்ல அது.

   பாட்டிலின் லேபிளில் குடி பழக்கம் உடல் நலத்திற்கு கேடு என்று எழுதி இருப்பதை மட்டும் பார்த்துவிட்டு உள்ளே இருப்பதை குடிக்காமல் விட்டுவிட்டார்கள் என்றால் மிக நன்றாக இருக்கும், நான் இந்த போஸ்ட் எழுதவேண்டிய அவசியமே வந்திருக்காது. :-)

   பதிவை படியுங்கள் சகோ அது குறித்து கருத்திடுங்கள் பதில் சொல்கிறேன்.

   நன்றி

   Delete
 6. பெண்ணையே குற்றவாளியாக்குற சமூகம்,,,, உண்மையே இங்கு எதைப் பற்றியும் கவலை இல்லாத ஜடங்கள் பெண் என்ன சொன்னாள், என்ன செய்தாள் என்று அதனையே ,,,,
  தங்கள் புரிதல் சரிமா, மகிழ்ச்சியாக இருக்கு, தொடருங்கள்,,நன்றி.

  ReplyDelete
  Replies
  1. புரிதலுக்கு நன்றி தோழி...

   Delete
 7. சொன்னவர் குடிக்கலைனா என்னங்க மகேசுவரி? குடிக்கிற பெண்களுக்கு வக்காலத்து வாங்குகிறார். குடிச்சா என்ன? நீ என்ன யோக்கியமா?னு சொல்லி ஊக்குவிக்கிறார்! இவர் குடிக்கலைனா இவர் ஏன் அந்த விசயத்தைப் பத்தி கவலைப்படணும்? இவர் தோழிகள் குடிக்கிறாங்களா? குடிகாரிகள் எல்லாம் அவளுக்கு கதைதட்டிக்கொண்டு இருப்பது உங்கள் காதுக்கு விழவில்லை! அதான் பரிதாபம்!

  இதே பதிவுலகில் ஒரு பெண், பெண்கள் சுய இன்பம் பத்தி ஒரு கட்டுரை எழுதுகிறார். I really dont care about her personal situation- whatever it is! உடனே அக்கட்டுரைக்கு முதல்ப்பரிசு கொடுக்கும் வெக்கங்கெட்ட ஆண்கள் இருக்கத்தன் செய்றாங்க. இதே கட்டுரையை ஒரு ஆம்பளை "மிகவும் நாகரிகமாக" எழுதினால் என்ன நடக்கும்? காறி உமிழ்வீர்கள்.

  அதாவது பெண் செய்தால் தப்பில்லை. ஏனென்றால் பெண் ஒடுக்கப்பட்டவள். ஆணால் ஏறி மிதிக்கப்பட்டவள்.அதனால் அவளுக்கென்று நியாயம்!

  இதுதானே உங்கள் வாதம்??

  பெண் குடித்தால் சீரழியமாட்டாள்?! ஏனென்றால் 100% ஆண்கள் ஏர்படுத்தும் சீரழிவைவிட இன்று 1-2% ஏற்படுத்தும் சீரழிவு ஒன்றுமே இல்லை! சரி, இதே 1%, நாளை 100% ஆவதுக்கு வித்திடுவது திருமதி கெள்சல்யா ராஜ், மற்றும் மகேசுவரிதான் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏற்றுக்கொள்வீர்களா? மாட்டீர்களா? ஏன்? நீங்கள் பெண் என்பதால் நாமங்க இதையும் "சரியாகப் புரிந்து" கொள்ளணூமா?

  ஓ அப்படியெல்லாம் எதுவும் நடக்காது,வருண்! என்றெல்லாம் வெட்டி விவாதம் செய்ய வேண்டாம்!

  You guys just dont realize what you are doing. It is as simple as that!

  ReplyDelete
  Replies
  1. Kudos varun :) this morning i was thinking about that same Endometriosis issue .soon we shall discuss this issue ..

   Delete
  2. //இதே பதிவுலகில் ஒரு பெண், பெண்கள் சுய இன்பம் பத்தி ஒரு கட்டுரை எழுதுகிறார்.//

   பரிசு கிடைத்தபிறகு தகவல் கிடைத்து அந்த பதிவை வாசித்தேன்...சத்தியமாக சொல்றேன் செம எரிச்சல் கோபம் ஆத்திரம் எல்லாம் ஏற்பட்டது. மருத்துவர் வேறு அவரது அம்மாவிடம் இதை எல்லாம் சொல்லிக் கொடுக்கலையா என்று கேட்டார் என்று குறிப்பிட்டதை படித்து என்ன கன்றாவி இது. இதை எல்லாம் அப்படியே தோழி ஏஞ்சலிடம் சொல்லி வருத்தப்பட்டேன். பதில் போஸ்ட் எழுதவும் ஆரம்பித்தேன், வேலை அதிகரிப்பில் அப்படியே விட்டுவிட்டேன். நேரம் கிடைக்கட்டும் கண்டிப்பாக எழுதுவேன்.

   மற்றவற்றிற்கு அடுத்த பதிவில் சந்திப்போம் :-)

   Delete
  3. of course she was brave to write a controversial issue ..that's why
   ..none would dare to write like that ..but the reality is what would a poor girl do who lives in a hut? in such case... marriage or mastubation is not a solution for endometriosis there are several factors ,menstrual health and so on ..shall stop this here ..we shall discuss this in kousalyas next post :)

   Delete
  4. //that's why ....i appreciate her //

   Delete
  5. இந்த அளவுக்கு தைரியமாக என்னை போன்ற கோழையையும் அந்த விஷயத்தை பொதுவில் கலந்துரையாட வைத்தது அந்த பெண்ணின் தைரியமான பதிவுதான் மேலும் கௌசியின் பதிவு இன்னும் ஆழமாக பெண்மையை அவர்களின் வேதனையை அனைவரும் குறிப்பா ஆண்கள் புரிந்து கொள்ள உதவும் என நம்புகிறேன் ..looking forward to read your post :)

   Delete
  6. வணக்கம் வருண் சார்,,

   எனக்கு தங்கள் அளவுக்கு சொல்ல தெரியவில்லை என்றே நினைக்கிறேன். அவர் குடிக்கிற பெண்களுக்கு வக்காலத்து வாங்குகிறார் என்ற தங்கள் வார்த்தைகள் தான் எனக்கு புரியலங்க,,,
   அவர் இப்படித் தான் சொன்னார் என்று நான் புரிந்துக்கொண்டேன்,,“
   அதாவது,,, இதை ஏன் இப்படி பெரிதுபடுத்துகிறிர்கள் என்று,,
   தவறு யார் செய்தாலும் தவறு தான்,, அதில் ஆணென்னா பெண்ணா,,
   தாங்கள் சொல்லும் அக்கட்டுரை நான் இன்னும் வாசிக்கவில்லை,, பார்க்கிறேன்.
   பெண் செய்தால் தப்பில்லை,, அவர் அப்படி சொன்னதாக நான் புரிந்துக்கொள்ளவில்லை,,,

   இன்றைய இந்த நிலைக்கு ஊடகங்கள் தான் காரணம். எங்கோ நடப்பதை இப்படி வெளிச்சம் போட்டு,, அதைப்பற்றியே பேசி,,

   அதாவது பெண் செய்தால் தப்பில்லை. ஏனென்றால் பெண் ஒடுக்கப்பட்டவள். ஆணால் ஏறி மிதிக்கப்பட்டவள்.அதனால் அவளுக்கென்று நியாயம்!,,,,,,,,,,,,,,,,

   இது நிச்சயம் இல்லை வருண் சார்,,,

   இந்த கழிவிரக்கமே பெண்களுக்கு வேண்டாம் என்கிறேன்.

   தங்களின், இந்த விகிதாச்சாரம் பெருகிடுமோ என்று கவலைப்படும் தங்களைப் போன்றோர்,, காணும் இடங்களில் நாலு அறை, நாலு சாத்துவிடுங்கள்,,

   பெண் குடித்தால் சீரழிய மாட்டாள் என்ற விவாதத்திற்கே இங்கு வழியில்லை,,, ஏன் பெண் பெண் பெண்ணே செய்துவிட்டாள் என்று கூப்பாடு போடுகிறீர்கள் என்று தான்,,,
   தவறு யார் செய்தாலும் தவறு தான்,, இதில் பெண் பெண்ணே என்று வேண்டாமே,,


   Delete
  7. //இதை ஏன் இப்படி பெரிதுபடுத்துகிறிர்கள் என்று,,
   தவறு யார் செய்தாலும் தவறு தான்,, அதில் ஆணென்னா பெண்ணா,,//

   எனது ஒட்டு மொத்த பதிவின் உட்கருத்தை மிக அருமையாக புரிந்துக் கொண்டமைக்கு தலை வணங்குகிறேன் தோழி.

   //இந்த விகிதாச்சாரம் பெருகிடுமோ என்று கவலைப்படும் தங்களைப் போன்றோர்,, காணும் இடங்களில் நாலு அறை, நாலு சாத்துவிடுங்கள்,, //

   Well said !!


   Delete
 8. வணக்கம் டீச்சர் :)
  அது என்ன பிரச்சினைன்னா அந்த பொண்ணு குடிச்சா உனக்கும் சங்குதான் எனக்கும் சங்குதான்னு சொல்லியிருந்தா இத்தனை பிரச்சினை வந்திருக்காது

  ReplyDelete
  Replies
  1. அட இது நல்லா இருக்கே ஷாட் அண்ட் ஸ்வீட் :-)

   Delete
 9. எந்த காலத்திலும் குடிகாரங்களை நான் சப்போர்ட் செய்யவே மாட்டேன் .அது ஆணோ பெண்ணோ .நம்ம நாட்டு மக்கள் தொலைகாட்சியிலோ சினிமாவிலோ டிவிலையோ ஒரு விஷயத்தை பார்த்தா அதை உடனே செய்ரவங்கதானே ?
  ஒரு நடிகனுக்கு வழுக்கை விழுந்தின்னு முன்னதலையை வழிச்சி விட்டதும் எங்க நாட்டில்தான்
  இன்னோர் நடிகனுக்கு நரைமுடி கண்டதும் அதேபோல கிரே டின்டிங் அடிசிட்டுபோறதும் இதே நாட்லதான் ..இப்போ அந்த பொண்ண கூப்பிட்டு அதுக்கு எதோ பாராட்டு பரிசு வேற குடுத்தா அதை பாக்கிறவங்க ரோல்மாடலா எடுக்காதுங்கன்னு என்ன நிச்சயம் !!

  ReplyDelete
  Replies
  1. அந்த விவாதத்தில் பேசுச்சே அந்த பெண்ணுக்கு நீயாநானாவில் அன்னிக்கு பரிசு கொடுத்தாங்க
   அதை பார்த்து இதுதான் பெருமை இதுதான் சரியான வழி என்று யாரும் நினைத்துவிடகூடாது :(

   Delete
 10. நம்ம நாட்டில் நல்ல விஷயத்த விட கெட்ட விஷயம்தான் உடனடியா மக்களை சென்றடையும்

  ஒரு சட்டக்கல்லூரி மாணவி நந்தினி டாஸ்மாக்கை மூட சொல்லி போராட்டம் நடத்தறா அவளுக்கு இத்தனை பப்ளிசிட்டி இல்லை :( உனக்கு மப்புன்ன எனக்கும் அதே மப்புன்ன்ற இந்த விஷயத்துக்கு எவ்ளோ பப்ளிசிட்டி பாருங்க

  ReplyDelete
 11. ஏஞ்சலின்: உங்க கருத்துக்கு நன்றி. நான் சொல்ல வருவது உங்க இருவருக்குமே அழகாகப் புரியும். அதை நான் சொல்வதுபோல் சொன்னால்தான் கெளசல்யா அவர்களை “குறைகாட்டி” சொன்னால்தான் இதில் என்ன பிரச்சினைனாவது வாசிப்போர் பார்ப்பாங்க.

  ஆம்பளைங்க குடிக்கிறாங்கதான். யாரும் இல்லைனு சொல்லவில்லை! குடி அதிகமாகிக்கொண்டே போகுது. எவன் குடிக்கலை?குடிக்கிறதுபெரிய தப்பெல்லாம் இல்லைனு சொல்றஅளவுக்கு இன்னைக்கு வந்து நிக்கிது.

  இவனுக எல்லாம் யோக்கியமா? வந்துட்டானுக தண்ணியப் போட்டுட்டுபெண்கள் குடிக்கக்கூடாதுனு அறிவுரை சொல்ல வெளக்கெண்ணைகள்! இதுபோல் குடிக்கும் பெண்களுக்கு வக்காலத்து வாங்குவது போல்( உங்களையே அறியாமல்) விவாதிப்பது ஒரு தவறான அனுகுமுறை!

  இதனால் நீங்க நாசமாப்போன ஆம்பளைகளையும் திருத்தப் போவதில்லை! மேலும் பல குடிகாரிகளை உருவாக்க வித்திடுறீங்க!

  · கல்லூரிகளில் குடிக்கும் பெண்களை கூட உள்ள நண்பர்களே தன் தேவைக்கு பயன்படுத்திக் கொள்வது நடக்குது. தான் கெடுக்கப்படுவதே தெரியாமல் கெடுக்கப் படுறாங்க.
  · கர்ப்பம் தரித்த பெண்கள் குடிப்பதால் குழந்தை பாதிக்கப்படும். கர்ப்பமாக்கிய ஆண் குடித்தால் குழந்தை நலம் பாதிக்கப் படுவதில்லை. ஏன்னென்றால் அந்த ஆண் நாய் குழந்தையை தன் வயிற்றில் சுமக்கவில்லை


  ஆண்கள் குடிப்பதைபதிவுலகில் பகிரும்போது அவர்கள் செய்வது தப்புனு பல முறை விவாதிச்சு இருக்கோம். சமிபத்தில் பதிவுலகில் அதுபோல் குடிப்பதைப் பத்தி பதிவெழுதுவதே குறைந்து விட்டது.குடிக்கிறது ஒரு பக்கம் தப்புனா, அதுக்கு பப்லிசிட்டி கொடுப்பது அதைவிடத் தப்பு.

  இதை பல பதிவர்கள் உணர்ந்து அதைப்பற்றி பேசுவதையே பதிவுலகில் தவிர்க்கிறாங்க! இது ஒரு நல்ல முன்னேற்றம்.

  இச்சூழலில் நீங்க புதுமைப் பெண்களுக்கு,புருஷன் குடிச்சான்னா நீயும் அவனைவிட ரெண்டு மடங்கு குடி! அப்போத்தான் அந்த நாய் திருந்தும் என்பதுபோல் அறிவுரை சொல்வது மொத்தமாக எல்லோரும் நாசமாப்போவதுக்கு வழி வகுப்பது.

  மாறாக குடிகாரனான அவனை டைவோர்ஸ் பண்ணிட்டு உன் பிள்ளையை அப்பனைப்போல் இல்லாமல் நல்லவனாய் வளரவை! புதுமை பெண் என்றால் குடிக்கிறதும், கும்மாளம் போடுவதும் இல்லைனு முகத்தில் அறைவதுபோல் சொல்லணும்!

  இப்போ பார்த்தீங்கன்னா யு எஸ் ல அதிகமாக புகை பிடிப்போர் பெண்கள்தான். மேலும் குடிக்கிறதுலயும் போட்டிக்குத்தான் நிக்கிறாங்க. நம்ம ஊரில் ஈவன் வேலைக்குப்போகும் பெண்கள் குடிப்பது, புகை பிடிப்பதெல்லாம் மிகக் குறைவாகவே இருந்துச்சு. இப்போ புதுசாக ஐ டி கலச்சரில் ஆளாளுக்கு கிளாசும் வைனுமா அலையுதுக.

  எவ எப்படிப் போனா நமக்கென்ன?னு போயிடலாம்தான். இல்லைனா இவளுகளும் ஆம்பளைகள்போல் 100% குடிக்கட்டும்! அப்போத்தான் ஆம்பளைகளை கை காட்டாமல் மூடிக்கிட்டு இருப்பாளுகனு கூட ஒரு கணக்குப் போடலாம்!

  ஆனால் சமூக அக்கறை உள்ளவர்கள் அதை செய்ய மாட்டாங்க!

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
 12. கௌசல்யா உங்களுக்குக் குடோஸ்! சமூகத்தை நோக்கி வீசியிருக்கும் வீச்சரிவாள்! ஆணென்ன, பெண் என்ன யார் குடித்தாலும் கேடு கேடுதான். ஒன்று பார்த்தீர்களா குடிப்பதில் மட்டும் ஸ்டேட்டஸ் இல்லை....ஹும் என்னத்த சொல்ல...ஒரே ஒரு வித்தியாசம்..பாவப்பட்டவன் காய்ச்சின சாராயம் குடிக்கிறான்...வசதி உள்ளவர்கள் டாஸ்மாக் பக்கம் அதான் அரசே வாங்க வாங்க வந்து குடிங்கனு ஏதோ பொட்டிக்கடை மாதிரி மூலை முக்கெல்லாம் கடை போட்டுருக்கே.....உயர்தட்டு மக்களுக்கு உயர்தர சரக்கு...எல்லாமே சரக்குதான்....என்று ஆகிய சூழலில் குழந்தைகளும் உள்ளாகியிருப்பதுதான் உச்சக்கட்டக் கொடுமை. பெற்றோர்கள்தான் இதற்குக் காரணம் முழுக்காரணம்..

  ஹைலைட்டட் வரிகள் செம..தோழி...

  நல்ல பதிவு தோழி..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஒரு பிரச்சனையின் வேர் எங்கே இருக்கிறது அதை களைவது எவ்வாறு என்பதை தான் வலியுறுத்த வேண்டுமே தவிர வீணான வெட்டி பேச்சுகளில், பெண்ணை துகில் உரிப்பதில், வன்புணர்வு செய்துவிடுவேன் என்று மிரட்டுவதில் இல்லை என்பதை இந்த சமூகம் என்று புரிந்துக் கொள்ளுமோ தெரியவில்லை.

   உங்களின் கருத்திற்கு என அன்பான நன்றிகள் தோழி கீதா

   Delete
 13. தங்களது வலைப்பூவில் பெண்கள், சமூக அவலங்கள், தாம்பத்யம் பற்றிய பதிவுகளை வாசித்து வந்தேன். ஆனால் தங்களது இப்பதிவு பெண்களின் முன்னேற்றத்தைக் குறிப்பிட்டு எழுதப்படவில்லை என்பது வருத்தத்தை அளிக்கிறது.

  ~புதுமைப் பெண்களே!
  உங்களுக்கு விருப்பம் வசதி இருந்தால் மது அருந்துங்கள் ஆனால் ஆணுக்கு பெண் சமம் என்பதை மது அருந்துவதன் மூலம் நிரூபிப்பதாக சொல்லிக் கொண்டு திரியாதீர்கள்~

  இங்கு தாங்கள் சொல்ல வருவதென்ன? இதுபோன்ற வாக்கியங்கள் எந்தச் சமூகத்தையும் உயரச் செய்யாது, இங்க ஆல்ரெடி இருக்கிற பிரச்சனை போதாதுனு இதுவேற...

  பெண்ணியம் பெண் முன்னேற்றம் என்பது ஆண்களுக்கெதிராக மது அருந்துவதில்தான் இருக்கிறாதா? புதுமைப்பெண்கள் என்று குறிப்பிட்டது இன்னும் வேதனை.

  பெண்களை சமமாக பாவித்து மரியாதையளிக்கும் ஆண்கள் வெகுகுறைவென்றாலும் எண்ணிக்கையில் இருக்கவே செய்கிறார்கள்.

  மது அருந்தாத ஆண்களும் இங்கு வாழ்ந்து கொண்டுதான் உள்ளனர். முன்பு குறிப்பிட்டதைப் போன்று ஆல்ரெடி இங்கு பெண்களுக்கெதிராக கற்பழிப்பு, வன்கொடுமை, பலாத்காரம் என்று ஆயிரம் பிரச்சனைகள் இதில் மது அருந்தும் ``புதுமைப் பெண்களும்`` சேர்ந்தால் இன்னும் நன்றாக இருக்கும்..வேதனை..
  நல்லத பத்தி எழுத எவ்வளவோ இருக்கு...நல்ல கருத்துக்களைச் சொல்லாவிட்டாலும் குறையில்லை தவறான கருத்துகளைப் பகிர்வது வேதனையே...

  பையன், புருஷன் எங்க விழுந்துகடக்கறான் என்பது போல், பொண்ணு மனைவி எங்க கிடக்கறானு தேட வேண்டிய காலம் ரொம்ப தூரத்தில இல்ல!!!

  You have all the rights to write what you want to write..no one is there to stop..but பல நல்ல கருத்துக்களைப் பகிர்ந்த தங்களுடைய வலைப்பூவிற்கு இந்தப் பதிவு பொருத்தமானதான இல்லை...

  Hope you will not delete this comment..

  ‘இன்றைய பெண்களின் நிலை` என்ற தலைப்பில் நான் எழுதிய பதிவை இங்கு வாசிக்கலாம்.
  http://entamilpayanam.blogspot.ae/2016/03/blog-post_1.html

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்

   முதலில் உங்களுக்கு எனது அன்பான நன்றியும் பாராட்டுகளும்...

   ஒரு நாளின் அதிக மணித்துளிகளை எனது பல பதிவுகளை வாசிப்பதற்கு ஒதுக்கி இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்... அனைத்து பின்னூட்டங்களையும் வாசித்தேன்...அருமையாக பதிவுகளை உள்வாங்கி இருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.

   பாராட்டு எதற்கென்றால் மனதில் தோன்றியதை அப்படியே எழுதியமைக்காக !

   ///இங்கு தாங்கள் சொல்ல வருவதென்ன? இதுபோன்ற வாக்கியங்கள் எந்தச் சமூகத்தையும் உயரச் செய்யாது, இங்க ஆல்ரெடி இருக்கிற பிரச்சனை போதாதுனு இதுவேற...

   பெண்ணியம் பெண் முன்னேற்றம் என்பது ஆண்களுக்கெதிராக மது அருந்துவதில்தான் இருக்கிறாதா? புதுமைப்பெண்கள் என்று குறிப்பிட்டது இன்னும் வேதனை. ////

   இந்த பதிவை நீங்கள் சரியாக புரிந்துக் கொள்ளவில்லையோ என எண்ணுகிறேன். பெண்கள் குடிக்கிறார்கள் என்பதை விட ஐயோ குடிகிரார்களே என்ற கூச்சல் தான் இணையத்தில் விரவிக் கிடக்கிறது... அந்த கூச்சலைதான் நான் வெறுக்கிறேன். அவர்களும் குடிக்கத் தொடங்கியதர்கான காரணங்களை பற்றி பேசலாமே...ஆனால் எனக்கு தெரிந்து அப்படி யாரும் பேசியதாக தெரியவில்லை என்பதன் வருத்தம், ஆதங்கம் தான் இந்த பதிவு.

   புதுமைபெண்கள் என்று குறிப்பிட்டது வஞ்சபுகழ்ச்சிக்காக... அந்த வாக்கியங்கள் சமூகத்தை உயர செய்வதற்கு என்பதற்காக என குறிப்பிடவில்லை , சமூக சீர்கேடுகளை அப்படியே சொல்வதற்கும் இழிவாக விமர்சிபதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

   //நல்லத பத்தி எழுத எவ்வளவோ இருக்கு...நல்ல கருத்துக்களைச் சொல்லாவிட்டாலும் குறையில்லை தவறான கருத்துகளைப் பகிர்வது வேதனையே...//

   நல்லத பத்தி மட்டும் எழுதுவது என் வேலையில்லை அன்பு நண்பரே 'எனது பெரும்பாலான பதிவுகள் குறைகளை சொல்லி நிறைவுகளை தேடியே பயணிக்கும் ...இயன்றவரை தீர்வுகளை கொடுக்க முயற்சிக்கும். அவ்வளவே !!

   //பையன், புருஷன் எங்க விழுந்துகடக்கறான் என்பது போல், பொண்ணு மனைவி எங்க கிடக்கறானு தேட வேண்டிய காலம் ரொம்ப தூரத்தில இல்ல!!!//

   எஸ் இதற்கு தான் நான் அஞ்சுகிறேன். ஆணுக்கு பிரச்சனை என்றால் குடிக்கிறான், எங்களுக்கும் பிரச்சனை அதுதான் குடிக்கிறோம் என்று என்னிடம் ஒரு பெண் சொன்னதை போல உங்களிடமும் சொன்னால் நீங்க என்ன பதில் சொல்லி அனுபுவீர்களோ அதே பதிலைத்தான் நானும் சொல்லி அனுப்பினேன்.

   //You have all the rights to write what you want to write..no one is there to stop..but பல நல்ல கருத்துக்களைப் பகிர்ந்த தங்களுடைய வலைப்பூவிற்கு இந்தப் பதிவு பொருத்தமானதான இல்லை...//

   நிச்சயமாக :-) கசப்பையும் விழுங்கித் தானே ஆகவேண்டும்... தேவை என்றால் :-)

   //Hope you will not delete this comment..//

   நம்பிக்கைக்கு நன்றி.

   //‘இன்றைய பெண்களின் நிலை` என்ற தலைப்பில் நான் எழுதிய பதிவை இங்கு வாசிக்கலாம்.
   http://entamilpayanam.blogspot.ae/2016/03/blog-post_1.html//

   அவசியம் வாசிக்கிறேன்.

   தங்களின் வருகைக்கும் தொடருவதற்கும் எனது அன்பின் நன்றிகள் பல

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...