திங்கள், அக்டோபர் 17

கூடன்குளம் - ஒரு நேரடி பார்வை




கூடன்குளம் தனது அடுத்த போராட்டத்தை தொடங்கி போராடிக்  கொண்டிருக்கிறது. இதை  போராட்டம் என்று சொல்வது கூட முரணோ என தோணுகிறது. ஒழுங்குடன் மிக நேர்த்தியாக அமைதியாக கட்டுபாட்டுடன் நடக்கும் ஒன்றை போராட்டம் என்று சொல்வதைவிட மக்களின் எழுச்சி  எனகூறுவது பொருத்தமாக இருக்கும். புத்தியில் போராட்டம் என்றால் அடிதடி ஆர்பாட்டம் என்றே பதியப்பட்டு இருக்கிறதே!? கூடன்குளம் மக்களை குறித்தும், முன்னெடுப்பவர்களை பற்றியும் ஏகப்பட்ட வதந்திகள்...ஊடகங்கள் ஒரு பக்கம் திசை திருப்புகிறது என்றால் மக்களோடு மக்களாக கலந்திருக்கும் சிலர் வாய்க்கு வந்ததை சொல்லி திரிகின்றனர்.(தமிழ் நண்டு கதை இப்போ ஏனோ நினைவுக்கு வருகிறது...!!?)

பல வதந்திகள் உலவினாலும் முக்கியமான சில இங்கே...

* அணுஉலையில் வேலை செய்தவர்களை அடித்து ஊரைவிட்டு அனுப்பி  வைத்ததாகவும்... 

* சாலையில் வண்டிகள் செல்ல வழிவிடாமல் நடுரோட்டில் கற்களையும், முட்களையும் போட்டு வைத்திருப்பதாக, அதனால் தான் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாகவும்...

* ஒரு மத சாரார் தங்களை முன்னிலை படுத்தவும்...
  
* முக்கியமாக அமெரிக்காவில் வசித்தவர், உண்ணாவிரதத்தின் முன்னால் நின்றதால் அமெரிக்காவின் கைக்கூலி இவர் என்றும்...! 

* மக்களை போராட சொல்லி ஒரு சிலர் வற்புறுத்துவதாக, யாரையும் வேலைக்கு செல்லவிடாமல் தடுப்பதாக...

* பணம் கொடுத்து கூட்டத்தை கூட்டுவதாகவும்... 

இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்...

அங்கே அப்படி என்ன அசாதாரண நிலை நிலவுகிறது என்று அறிய நானும் என் கணவரும் நேற்று நேரில் சென்றோம், ரோட்டில்  கற்கள் போடபட்டிருக்கிறது பெரிய வாகனங்கள் செல்லாது என்று கேள்விப்பட்டதால்(?) கார் வசதிபடாது என்று பைக்கில் இருவரும் கிளம்பினோம்...(இது தவறான முடிவு என்று அப்போ தெரியல !)நெல்லையில் நாங்கள் இருக்கும் இடத்தில இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது கூடங்குளம். இரண்டரை மணிநேர பயணம், கடும் வெயில் அப்படியே தலையை சூடாக்க வழி நெடுக குளிர்பானம் பருகி வெயிலை சமாளித்து(வென்று) கூடங்குளத்தை அடைந்தோம். 

ஊரை அடைந்ததும் எங்களை வரவேற்றது அங்கே ஓரமாக கிடந்த கற்கள்...!?  ஊர்முழுதும் ரவுண்டு அடித்தோம். வேறு எந்த அதிகபடியான வித்தியாசமும் எங்களுக்கு தெரியவில்லை. வெகு இயல்பாக இருந்தது ஊர். முதலில் கூடல் பாலாவை பார்க்க சென்றோம்...(இதை பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்)

பெண்கள் கூட்டம் அல்ல வெள்ளம்  


பின் அவரிடம் இருந்து விடைபெற்று கொண்டு மக்கள் கூடி இருக்கும் இடத்திற்கு சென்றோம். போடபட்டிருந்த பந்தல்களில் பெண்கள் கூட்டம் மிக அதிகம். இரு பெண்கள் சேர்ந்து இருந்தாலே அந்த இடம் கலகலப்பாக இருக்கும்...ஆனால் இங்கே பல ஆயிரம் பெண்கள் சிறிதும் சத்தமில்லை...ஒருவருக்கு ஒருவர் பேசுகிறார்கள் ஆனால் சத்தம் கேட்கவே இல்லை...!! 

நாங்கள் சென்ற நேரம் கேரளா திரிச்சூரில் இருந்து ஒரு பெண் கல்லூரிவிரிவுரையாளர்  வந்திருந்து மைக்கில் பேசிகொண்டிருந்தார்...அவரது மலையாள பேச்சை ஒருவர் மொழி பெயர்த்தார், மொழி பெயர்க்க தேவையும்  இருக்கவில்லை,அனைவருக்கும் மொழி புரியவே செய்தது. மொழி வேறாக  இருந்தாலும் மனித உணர்வுகள் ஒன்றுதானே... அவர் 'கேரளமக்கள் உங்கள் கூட இருக்கிறார்கள், அவர்களின் ஆதரவு நிச்சயம் உங்களுக்கு உண்டு, மூடும் வரை ஓயமாட்டோம் ஓயமாட்டோம்' என்று கூற மக்களும் அதை தொடர்ந்து கூறினார்கள். மக்களின் குரல், கைதட்டல் இரண்டும் மிக மெதுவாகவே கேட்டது. (மக்கள் அதிகம் உணர்ச்சிவசபடவில்லை என்பதை புரிந்துகொள்ளமுடிந்தது)  நெருக்கமாக அமர்ந்து இருந்தாலும் அமர்ந்தவர்கள் அப்படியே இருக்கிறார்கள், சிறிதும் சலனமின்றி...


பெண்கள் அருகில் சென்று நான் நின்று கொண்டிருந்தேன், அமர்ந்திருந்த மூன்று பெண்கள் என்னை உட்காரசொல்லி நிழலில் இடம் ஒதுக்கி தந்தனர். கடல்மணலில் அமர்ந்து அமைதியாக ஒவ்வொருவரின் பேச்சையும் கவனித்து கொண்டிருந்தேன். அவர்களிடம் பேசியதில் இருந்து சில.....

காலை ஒன்பது மணிக்கு இந்த பந்தலுக்கு வந்து விடுகிறார்கள். மாலை ஐந்து அல்லது ஆறுமணி வரை இருக்கிறார்கள். இத்தனை மணிக்கு வந்தாக வேண்டும் என்று எந்த கட்டாயமும் யாருக்கு விதிக்க படவில்லையாம். அவர்களின் சூழ்நிலைகளை பொறுத்து எப்பவும் வரலாம் போகலாம். வலியுறுத்தல் இல்லை. 

இதை நேரிலும் நான் பார்த்தேன்...கோவில் திருவிழாவிற்கு வருவதை போல உற்சாகமாக கூட்டங்கூட்டமாக நடந்து வந்துகொண்டே இருந்தார்கள்... இரவிலும் நிறைய பேர் இங்கேயே தங்கிவிடுகிறார்கள். ஒரு பெண்ணிடம், 'தண்ணி, மற்ற வசதிக்கு என்ன பண்ணுவீங்க' என்று கேட்டதும்  ஒரு இடத்தை சுட்டி காட்டினார்...அங்கே இருக்கிறது என... 

அப்போது ஒரு தனியார் பஸ்ஸில் பக்கத்து ஊரில் இருந்து மக்கள் வந்து இறங்கினர். அதை பார்த்ததும் 'அப்ப பிற பஸ்கள் ஏன் வருவது இல்லை' என்று கேட்டதற்கு, 'அது தெரியலைங்க' என்று அப்பாவித்தனமாக கூறினார் ஒரு பெண்மணி.

விவசாயம் தான் இவர்களது முக்கிய தொழில். கூடன்குளத்தை  பொறுத்தவரை இப்பூமி மழை மறைவு பிரதேசம்...வேறு முக்கிய வேலைகள் இல்லாததாலும், மின்சாரம் இங்கே உற்பத்தி செய்யபட்டால் அதனை சார்ந்து வேறு பல தொழிற்சாலைகள் இங்கே உருவாகும், வேலை வாய்ப்புக்கு பஞ்சமிருக்காது என்கிற நியாயமான எதிர்பார்ப்பு அணுஉலை இங்கே அமைய காரணங்கள். அணு உலையிலும் வேலை கிடைக்குமே என்பதும் ஆரம்பத்தில் மக்கள் அமைதியாக இருந்ததுக்கு ஒரு காரணம். இவ்வூர் மக்கள் நாற்பது பேர் மட்டும் அங்கே நிரந்தர வேலையில் இருக்கிறார்கள்.

இடிந்தகரையில்


ஒரு மணி நேரம் அங்கே இருந்துவிட்டு அடுத்து இடிந்தகரை ஊருக்கு சென்றோம். சர்ச் முன்னால் பலர் உண்ணாவிரதம் இருந்தனர். படுத்துக்கொண்டும் அமர்ந்து பேசிக்கொண்டும் இருந்தனர். எங்களை பார்த்ததும் நீங்க எங்கிருந்து வரீங்க ? எந்த இயக்கம்(?) எதுக்கு வந்திருக்கீங்க என்று தொடர் கேள்விகள் கேட்டார் ஒருவர். கேள்விகளுக்கு பின்னே இருந்தவை எங்களுக்கு ஓரளவு தெரியும் ஆதலால் பொறுமையாக 'சும்மா சுத்திபார்க்க வந்தோம்' என்றோம். அவதி பட்டவர்களுக்கு தான் தெரியும் அதன் வேதனை ! வெளியே போடபட்டிருந்த பந்தலில்  ஊர் மக்கள் அமர்ந்திருந்தனர்.

இங்கிருந்து சில அடிகள் தூரத்தில் கடல் இருந்தது.மீன்பிடிக்க செல்லாததால் படகுகள் அனைத்தும் கடலோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அங்கிருந்து பார்க்கும் போது அணுஉலை மிக அருகில் தெரிந்தது. 

கடல் நீரில் சிறிது நேரம் நின்றேன்...'மனிதர்களின் எந்த உணர்வை பற்றியும்  எனக்கு அக்கறை இல்லை, இக்கரையை தொடுவது ஒன்றே என் வேலை' என்பது போல் இருந்தது வேகமாக ஓடிவரும் அலைகளை பார்க்கும் போது !  

வெளியே இருக்கும் சிலர் இந்த விசயத்திற்கு மதசாயத்தை பூசுகிறார்கள். ஆனால் எந்த வேறுபாடும் இவர்களை வேறுபடுத்தவில்லை...அவரவர் நம்பிக்கை அவரவருக்கு என்பதில் மிக தெளிவாக இருக்கிறார்கள்.உண்ணாவிரத்தின் போது சர்ச்சில் காலையில் நடக்கும் பிராத்தனையில் இந்துக்கள் கலந்துகொள்கிறார்கள்...! இங்கே நடைபெற்ற விசுவாமித்திரர்  யாகத்தில் பாதிரியார் கலந்துகொண்டிருக்கிறார் ! 




என்ன முடிவு செய்யபோறாங்க?

'அணுஉலையால் ஆபத்தில்லை' 'உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது' என்பதற்கு  எந்த உத்தரவாதமும் இதுவரை சரியாக கொடுக்கப்படவில்லை.இது ஒரு பக்கம் இருந்தாலும், நம்பிக்கை கொடுக்கப்படும் வரையாவது அணுஉலை வேலைகளை நிறுத்தி வைக்கலாம் என்பதை ஏன் மத்திய அரசு கவனத்தில் கொள்ளவில்லை...?!

கணினியின் முன் அமர்ந்து ஆயிரம் சமாளிப்புகள், சப்பைக்கட்டுகள்,வாதங்கள் ,கருத்துக்கள் பேசலாம் ஆனால் நேரில் அந்த மனிதர்களை பார்க்கும்போது ,அந்த சூழ்நிலையில் சிறிது நேரம் இருந்தபோது எங்களுக்கு ஏற்பட்ட உணர்வுகள், உண்மையில் அதை எழுத்தில் எழுத எனக்கு தெரியவில்லை. மனிதம் அதன் உணர்வுகள் எங்கே என்றாலும் அது மதிக்கப்படவேண்டும்...மனிதன் சுகமாய் வாழவே இந்த மின்சாரம், அதுவே மனிதர்களின் கலக்கத்திற்கும், உயிரினை அச்சுறுத்தும் இடமாக இருக்கிறது என்கிறபோது கைவிடுவதை பற்றி யோசிப்பதில் தவறு என்ன இருக்கிறது...?!!

மனிதத்தை கொன்று மனிதனை வாழவைப்பதை பற்றி பேசுவது  வேடிக்கையாக இருக்கிறது !

அந்த அப்பாவி உயிர்களை அச்சுறுத்தி, பீதியுடன் வாழச்செய்து பெறக்கூடிய மின்சாரம் எதை பூர்த்தி செய்ய...? எதை வளமாக்க ? எதன் விருப்பத்தை நிறைவேற்ற ?  
   
யோசிக்குமா அரசாங்கம் !!?

நேரம் கிடைக்கும் போது முடிந்தால் இதையும் படித்துவையுங்கள் kudankulam2011

பின்குறிப்பு 

பதிவர் கூடல்பாலாவிற்கு என்ன ஆயிற்று ?! அடுத்த பதிவில் பார்க்கலாம்.

  

புதன், அக்டோபர் 12

பெண்களா இப்படி...?!!!


                                            தலை குனியுங்கள் பெண்டிரே(!)
                                            படித்தவளாம்(!) ஆசிரியையாம்(?) 
                                            எதை படித்தாள் ?
                                            எதை பயிற்றுவிக்க ?

                                            வெறி தணிக்க
                                            தேவை ஒரு பிஞ்சு குழந்தை 
                                            பென்சிலை வைத்தும்
                                            பேனாவை கொண்டும் 
                                            ச்சே நினைக்க அருவருப்பான ஒன்றை
                                            நிகழ்த்தி ரசித்த அரக்கிகளே... 

                                            உன் வயிற்றிலும் ஏதும் பிறந்ததா?
                                            நன்றாக இருக்கிறதா ?
                                            இல்லை உன் வெறிக்கு பலியாகி 
                                            மூலையில் கூனி குறுகி கிடக்கிறதா?
                                            உன் வீட்டு ஆண்
                                            உன்னை அடக்க(?)மாட்டாமல் 
                                            அடங்கி கிடக்கிறானா ?

                                            செத்த உடலுடன் 
                                            உறவுகொண்டான் சிங்களவன்... 
                                            அவனுக்கு எந்த விதத்திலும் 
                                            குறைந்தவளில்லையடி  நீ !

                                            வரிந்து கட்டிக்கொண்டு 
                                            பொங்கும் பெண்ணுரிமை வாதிகளே 
                                            எங்கே போனீர்கள்?
                                            இளம் தளிரை சிதைத்த கொடூரம் 
                                            கண்டு கொதிக்கவில்லையா மனம்
                                            கொடி ஏந்தி போராடிக்
                                            கிழித்தெறிய வேண்டாமா
                                            இவர்களின் முகமூடியை...

                                            எங்கே எம் சகோதரர்கள் 
                                            வெட்டி வீசுங்கள் உருண்டோடட்டும் 
                                            நரகறிக்கு அலையும் அரக்கிகள் தலை 
                                            நிமிரட்டும் தாய்மார்களின் குனிந்த தலை!!

                                            மாபாதகம் புரிந்தவர்களுக்கு
                                            பரிந்து கொண்டு வரும்
                                            நாக்குகளை அறுத்தெறிய
                                            வேண்டும் ஒரு கூர்வாள்...

                                            இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 377 
                                            இவ்வழக்கில் பொருந்தாதாம்
                                            முன்ஜாமீன் கொடுத்துவிட்டது
                                            நம் சட்டம்...?!

                                            மாற்றவேண்டுமோ
                                            ஒரு சட்டத்தை...
                                            ஸ்கேனில் எந்த குழந்தை
                                            தெரிந்து கொள்ள தடை இல்லை என...!? 

                                            பெண் குழந்தை பிறந்து பிஞ்சில்
                                            பாதகர் கையில் வதைபடுவதா?
                                            கருவில் மாள்வதா ?
                                            எது உத்தமம் !!?

                                                                 (விரிவான விவரங்கள்  இங்கே  )



கள்ளக்குறிச்சி ஏ.கே.டி பள்ளி யு.கே.ஜி.மாணவியை(குழந்தையை) பாலியல் வன்கொடுமை செய்த பிரின்சிபல் போஸ்கோ, ஆசிரியை போசியா இருவரின் கொடுமையான செயலை படித்தபின் ஏற்பட்ட எனது கோபத்தின் வெளிப்பாடு  மேலே உள்ள வரிகள். சில ஆண்களால் பெண்மைக்கு பாதுகாப்பின்மை ஒருபக்கம் என்றால் பெண்களாலும் பாலியல் வன்கொடுமை என்பதை ஒரு பெண்ணாக ஜீரணிக்க இயலவில்லை. தாய்மைக்கு ஈடு இணை உலகில் வேறில்லை என்ற எண்ணத்தில் மண் அள்ளி போடுவதை போன்ற இவர்களின் செயல் தாய்மார்களை தலை குனிய வைக்கிறது. இக்கொடும் செயல் புரிந்த சம்பந்தப்பட்ட நான்கு பேருக்கும் என் கண்டனங்கள்.

ஏதோ இருவர் செய்ததிற்காக பெண்கள் நாம் ஏன் தலை குனிய வேண்டும் என்று மாறுபட்டு தயவு செய்து எண்ணாதீர்கள். இதை மீடியாக்கள் பெரிது பண்ணாமல் விட்டது எண்ணி சிறிது நிம்மதியாகவே இருக்கிறது...!? படிக்கவே அச்சுறுத்த கூடிய இப்பாதகம் நம் குழந்தைகளுக்கு நேர்ந்தால் அவர்களின் மன நிலை, எதிர்காலம் பற்றி யோசிக்கவே நடுக்கமாக இருக்கிறது.  

மனித உரிமைப்பாதுகாப்பு மையம் மேற்கொண்ட தொடர் முயற்சியின் பயனாக இப்பிரச்சனை நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்தது. இவ்வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு ஒரு மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டதுள்ளது, இவர்கள் விசாரித்து விசாரணையின் இறுதி அறிக்கையை 4 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.  விரைவில் விசாரணை முடிவு தெரியவரும். இந்த அளவிற்கு சென்றபின்னும் இது போன்ற ஒன்று நடைபெறவில்லை என்ற சமாளிப்புகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

இவர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்குவதின் மூலம் மேலும் இச்செயல்கள் நடைபெறுவதை தடுக்கமுடியும் என்று உறுதியாக சொல்ல முடியாது என்றாலும் கடும் தண்டனை வழங்கபட்டே ஆகவேண்டும். பத்திரிகைகள், மகளிர் சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள், பெற்றோர் நல சங்கங்கள் இன்னும் பிறவும் ஓங்கி குரல் கொடுக்க வேண்டும்.





இது போன்றவை எப்போதோ, எங்கோ ஒன்று இரண்டு ஏற்படுவது தானே இதை ஏன் பெரிதுபடுத்தவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள். தெருவிற்கு ஒன்று, ஏன் வீட்டிற்கு ஒன்று கூட இந்த நிமிடம் நடந்துகொண்டிருக்கலாம் எப்படி தெரியும் உங்களுக்கு...குழந்தைகள் தானாக வெளியே சொல்லாதவரை யாருக்கும் தெரியபோவதில்லை...! அவர்கள் சொல்லமாட்டார்கள் என்ற தைரியத்தில் தான் இவை அரங்கேறுகின்றன...?!

இது ஒருநாளில் முடிந்துவிட கூடிய விஷயம் இல்லை, பாதிக்கப்பட்ட குழந்தையின் மனநிலை காலத்துக்கும் சரியாகாது. மற்றொரு செய்தி ஒன்று, பத்து வயது சிறுமி ஒரு கொடூரனால் சிதைக்கப்பட்டு உதிர போக்கு ஏற்பட்டு சிறுமி பிழைக்க வேண்டும் என்றால் அவளது கர்ப்பபை எடுத்தாக வேண்டும் என்று டாக்டர்கள் கூறிவிட, இப்போது எடுக்கப்பட்டுவிட்டது. இனி அவளது எதிர்காலம்...???

உங்கள் வீட்டு குழந்தைகளை மெதுவாய் விசாரித்து பாருங்கள்...நெருங்கிய உறவினர்கள் தொடங்கி பள்ளியின் ஆசிரியர்கள்(ஆசிரியைகள் !?) பள்ளி வாகன ஓட்டுனர்கள், வாட்ச்மேன்,பக்கத்து வீட்டு நபர்கள் மூலம் தவறான தொடுதல் ஏதும் இதுவரை நடந்திருக்கிறதா என பக்குவமாக கேளுங்கள். பெண் குழந்தை என்று மட்டும் இல்லை ஆண் குழந்தைகளும் மிக அதிகமாக இத்தகைய வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். உங்கள் குழந்தைகளிடம் கண்டிப்பாக அறிவுறுத்துங்கள்,  நல்ல தொடுதல் எது, தவறான தொடுதல் எது என்று...இன்னும் சொல்ல போனால் அடுத்தவர் எதற்கு தொடவேண்டும்...?!! பிறரை தொடாமல் பழகு என்றே சொல்லி பழக்கினால் என்ன என்று தோன்றுகிறது.

இன்றைய காலகட்டத்தில் தான் இவை நடைபெறுகிறது என்று சொல்ல முடியாது...! மனிதமனம் அன்றில் இருந்து இன்று வரை அப்படியேதான் இருக்கிறது, என்னவொன்று இப்போது திரைமறைவில் நடப்பவை (சிறிது தாமதம் என்றாலும்) வெளியே வந்துவிடுகிறது...! முன்பு சிறுகுழந்தைகள் தங்களுக்குள் புதைத்துக் கொண்டார்கள். இன்று சொல்ல தொடங்கி இருக்கிறார்கள்...

ஒரு சிலரின் இன்றைய குடும்ப வாழ்க்கை(தாம்பத்தியம்) புரியாத புதிராக இருப்பதற்கு அவர்களின்  சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் கொடுமைகள் ஒரு முக்கிய காரணம் என்று கருதுகிறேன்!! சொல்லபோனால் அடிக்கடி தேவையின்றி கோபபடுவது, சந்தேகம் கொள்வது, அடிப்பது, வசைமொழிகளை வாரி இறைப்பது, தாம்பத்திய உறவில் நாட்டமின்மை, உடலில் சிறிய பெரிய குறைபாடுகள் இப்படி பல...?!! இவை எல்லாம் ஏற்பட அதிக அளவில் கொடுமை அனுபவித்து இருக்கவேண்டும் என்பதில்லை சிறிய அளவிலான தவறான தொடுதல் கூட மனதில் காயத்தை உண்டுபண்ணி நிரந்தர மன ஊனத்தை குடும்ப வாழ்வில் ஏற்படுத்திவிடுகிறது.

இதுக்கு என்ன தீர்வு என்றால் பெற்றோர்கள் தான் மிக மிக கவனமாக தங்கள் குழந்தைகளை பார்த்து கொள்ளவேண்டும். வேறு வழியில்லை...?!!


பிள்ளைகளை பெற்றெடுப்பதும் , சீராட்டி வளர்ப்பதும் பெரிய காரியம் அல்ல அதைவிட இதுபோன்ற கயவர்களிடம் இருந்து நம் குழந்தைகளை காப்பாற்றுவது தான் இன்று பெற்றோருக்கு முன் இருக்கும் முக்கியமான பொறுப்பு !!

இது குறித்து ஏற்கனவே நான் எழுதிய இரண்டு பதிவுகள் 

குழந்தைகளின் மீதான பாலியல் ஈர்ப்பு ஏன் ?

ஒரு அலசல்...குழந்தைகளின்  மீதான பாலியல் ஈர்ப்பு !

பின் குறிப்பு 

இத்தகைய கொடுமை புரிகிறவர்கள் 'மனபிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டவர்களா' என்ற ஒரு வாதம் இருக்கிறது. இந்த பாதகத்தின் கொடுமைகள் பற்றி இன்னும் பலருக்கு தெரியவைக்க வேண்டும் என்பதால் இன்னும் இது குறித்த ஆய்வு கட்டுரைகள் , தகவல்கள் சேகரித்து விரிவாக தொடர்ந்து எழுதுகிறேன்.  நன்றி.



தகவல் - நன்றி வினவு தளம்                                                                                                                              
படங்கள் - நன்றி கூகுள் 

திங்கள், அக்டோபர் 3

பகிர்ந்து பழகுவோம்...!



மனித வாழ்வு இன்று பணம் பணம் என்று பொருளை தேடுவதில் ஓடி முடிந்துவிடுகிறது. வாழ்வதற்கு பணம் தேவை என்பது போய் பணம் தான் வாழ்க்கை என்றாகிவிட்டது. இப்படி பணம் பின்னே மட்டும் ஓடி வாழ்வின் சந்தோசங்களை தொலைத்தவர்கள் பலர். 

இங்கே தேடியது போதாது என்று நாடுவிட்டு கடல் தாண்டி பொருளை தேடி ஓடுபவர்கள் இறுதியில் கண்டது என்ன ?? சிலர் கடல் தாண்டி சென்றவர்கள் பொருளுக்காக செல்கிறார்கள், தங்களின் பொருளாதார தேவைகளை நிறைவேற்ற செல்கிறார்கள்...ஆனால் தன் குடும்பத்தை விட்டு வெளிநாடு சென்று சம்பாதிக்கும் நபர்களின் நிலைமையை கேட்டால் கண்ணில் நீரை வரவழைக்கும். கிடைத்தற்க்கரிய இந்த மனித வாழ்வை தன் பெற்றோர், மனைவி, குழந்தை, உடன்பிறந்தோர் இவர்களுடன் கழிக்க வழியின்றி போய் விடுகிறார்கள். 

வெளிநாட்டில் இருக்கும் தெரிந்தவர் ஒருவர், மாதா மாதம் கணிசமான ஒரு தொகையை மனைவிக்கு அனுப்புவார். மனைவியும் அந்த பணத்தை வைத்து சிறுக சிறுக சேர்த்து ஒரு வீட்டை கட்டினார். இவரும் கிரகபிரவேச நாளை மிக ஆவலாக எதிர்பார்த்து,  வேலைபார்க்கும் கம்பெனியில் லீவ் கேட்டு வரேன் என்று போனில் மனைவியிடம் சொல்லி இருக்கிறார், அதற்கு மனைவி நீங்களாக விடுமுறை எடுத்தால் சம்பளம் பிடித்துவிடுவார்கள், அவங்க லீவ் கொடுக்கும்போது மட்டும் வந்தா போதும் என்று கண்டிசனாக சொல்லிவிட இவர் மிக வேதனை அடைந்துவிட்டார். கடைசியில் இவர் இன்றியே அந்த விழாவும், அதை தொடர்ந்த பெண்ணின் பூப்புனித விழாவும் விமரிசையாக நடந்து முடிந்துவிட்டது. தன் வாழ்வின் பெரிய லட்சியமாக எண்ணிய சொந்த வீட்டின் கிரகசபிரவேசதிற்கும்,ஒரே பெண்ணின் முக்கியமான சந்தோஷ நிகழ்வுக்கும் வர முடியவில்லை என்றதின் பின் என்ன காரணம் இருக்கிறது...?? பணம் பணம் பணம் மட்டுமே...!! 

திருமணம் முடித்து சிறிது நாளில் மனைவியை பிரிந்து வெளிநாடு சென்றவர்கள் பலர். இங்கே அவர்களின் குழந்தை பிறந்து, வளர்ந்து அப்பா என்ற உருவத்தை உணர்வால் தொட்டு உணராமல் நிழல் படத்தில் பார்த்து தெரிந்து கொள்கிறது. தகப்பனின் அணைப்பை குழந்தையும் , பெற்ற குழந்தையின் அருகாமையை  தகப்பனும் உணராமல் வாழ்ந்து என்ன இன்பம் ?!! குழந்தையின் வளர்ச்சியை அருகில் இருந்து காண்பதை போன்ற நிறைவு, மகிழ்ச்சி சொல்லில் அடங்காது. இது போன்ற பெரிய,சின்ன சந்தோசங்களை தொலைத்து வாழ்ந்து என்ன சாதிக்க போகிறோம்...?! 

இவர்கள் ஒரு விதம் என்றால் சில பணம் படைத்தவர்கள் ஆணவத்தால் ஆடும் ஆட்டம் மற்றொரு விதம் ! 

வீடல்ல சத்திரம் 

மிக பெரிய கோடீஸ்வரன் ஒருவன் தங்களது குடும்பத்தினரின் பழைய பங்களா ஒன்றை நிறைய பணம் செலவு செய்து புதுப்பித்துக் கட்டினான்.பெருமிதமாக சொந்தகாரங்களை எல்லாம் வரவழைத்து தடபுடலாக விருந்தளித்து உற்சாகமாக வலம் வந்தான். வீட்டை சுற்றிப் பார்த்த பலரும் ஆஹா ஓஹோ வென புகழ்ந்து தள்ள இவருக்கு பெருமைப் பிடிபடவில்லை. அந்த நேரம் வயதான பெரியவர் ஒருவர் வந்தார், அவரிடம் சென்று மிக ஆணவமாக நெஞ்சை நிமிர்த்தி "வீடு எப்படி இருக்கிறது" என்று கோடீஸ்வரர் கேட்க, அதற்கு பெரியவர் நிதானமாக, ''சத்திரம் நன்றாக இருக்கிறது'' என்று சொல்லவும் இவருக்கு பயங்கர கோபம் வந்துவிட்டது. " எத்தனை கோடி செலவு செய்து வீடு கட்டி இருக்கிறேன், இதை பார்த்து சத்திரம் என்றா சொல்றீங்க, உங்களுக்கு மூளை ஏதும் குழம்பிவிட்டதா'' என ஆக்ரோசமாக கூற,  

''உனக்கு புரியும் படி சொல்கிறேன், இதற்கு முன் இங்கே யார் குடியிருந்தார்கள்'' என்று கேட்டார் பெரியவர் . ''என் தந்தை , அவருக்கு முன் அவரது தந்தை இருந்தார்...இப்படி ஆறு தலைமுறை கண்ட வீடு இது'' என்று மிதப்பாக கோடீஸ்வரர் சொன்னார். அதற்கு பெரியவர் ''அப்போது நான் சொன்னதும் சரி தானே, ஒருவர் சென்றதும்(மறைந்ததும்) அடுத்தவர், பின் அவர் சென்றதும் மற்றொருவர்...அப்ப இது சத்திரம் என்பது தான் சரி'' என்று நிதானமாக கூறினார். இது தான் நிதர்சனம். 

இதை உணர்ந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொள்ளாமல் ஏதோ அகத்தியர் காலத்தில் இருந்து வாழ்ந்து வருவது போலவும் இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழப்போவது போலவும் மனிதர்கள் நடந்துகொள்ளும் விதம் நகைப்பிற்கு உரியது அல்லாமல் வேறு என்ன ?!! நாளை என்பதே நிச்சயம் இல்லாத போது அதற்காக ஓடி ஓடி பொருள் தேடுவதை பற்றி கொஞ்சம் பொறுமையாக யோசித்தால் புரியும். பல கோடி போட்டு கட்டிய வீடு என்பதற்காக இறந்ததும் அவரை அங்கே அடக்கம் செய்யமுடியுமா ?! ஆறு அடி நிலம்  கூட சொந்தமாக தன் இடத்தில் எடுத்துக் கொள்ள உரிமை இல்லை...! 

ஒரு மதம் புதைக்க ஆறு அடி கொடுக்கிறது...மற்றொரு மதமோ சாம்பலாக்கி காற்றில் கரைத்துவிடுகிறது...!

இந்துமதம் இதனாலேயே மனிதனுக்கு நிலையாமையை போதித்தது..... 
அனுபவத்தில் இதை கண்டு தெளிய, ஒரு முறை சாவு நடந்த வீட்டிற்கு சென்று பார்க்க வேண்டும். 

(எங்கோ படித்தது) 

நாளை இறக்க போகிறவர்கள் 
இன்று இறந்தவனுக்காக 
அழுதுகொண்டிருக்கிறார்கள் !

ஓடி கொண்டிருக்கும் ஜீவன் ஒட்டிக் கொண்டிருக்கும் வரை சொந்தங்களும் ஒட்டி கொண்டிருக்கும். அன்பே, உயிரே, கண்ணே, செல்லமே எல்லாம் முடிந்துபோய் பிணம் என்ற ஒற்றை அடையாளமாகி விடுவோம். அவர், அவள், என்பது மாறி அது என்றாகி போவோம். இறந்த பின் ஒருநாளுக்கு மேல கூட வைத்திருக்க மாட்டார்கள்...எடுத்து கொண்டு போனதும், வேக வேகமாக வீட்டை கழுவி விட்டு விடுவார்கள். பிணத்துடன் பீடையும் போகட்டும் என்று மூணு நாளில் விசேசம்(?) வைத்து நன்றாக உணவருந்தி சோகத்தை முடிவுக்கு கொண்டுவந்து விடுவார்கள், அப்புறம் பதினாறு, முப்பது என்று நாள் எண்ணிக்கை வைத்து நினைத்து விட்டு, ஒருநாள் ஒட்டு மொத்தமாக நினைவுகளும் அழிக்கப்பட்டு விடும். இது யதார்த்தம் !

இதே மனித வாழ்வு. இதை உணர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த நாட்கள்  இயற்கையின் அன்பளிப்பு என்று நன்றி சொல்லி பொருளின் பின்னே மட்டும்  ஓடாமல் சம்பாதித்த/சேர்த்த பொருளில் பிறருக்கும் சிறிது கொடுத்து சக மனிதன் சிரிப்பில் பேரின்பம் காண்போம்.   

பணக்காரன் தர்மம் செய்யாமல் நிம்மதியாக இறந்தது இல்லை என்பார்கள் . சம்பாதித்த பொருளை தர்மம் செய்யாமல் இருப்பவர்களுக்கு அனுபவிக்க வாரிசுகளும் ஏனோ இருப்பதில்லை.இது இயற்கையின் அமைப்பா? இறைவனின் தர்மமா ??

இருக்க ஒரு வீடு, பாதுகாப்பிற்கு போதுமான பொருள் சேமிப்பில், போக்குவரத்துக்கு ஒரு வாகனம், போதும் என்ற மனநிறைவு அடைந்து, அதற்கு மேல் வரும் வருமானத்தை வறியவர்கள், எளியவர்களுக்கு பாத்திரத்துக்கு தக்கபடி கொடுத்து வாழ்வின் மிச்ச நாட்களை அர்த்தத்துடன் வாழ்ந்து முடிக்கலாமே...! 

பகைமை மறந்து அன்பால் மனிதர்களை தழுவுவோம்...இயன்றவரை உழைப்பதில் அடுத்தவருக்காக கொஞ்சம் கொடுப்போம்...இருப்பதை பகிர்ந்து வாழ்வோம்...!

'மனிதநேயம்' வார்த்தையின் அர்த்தம் புரிந்து நடந்துகொள்வோம்.ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்...!


                                                                                        

புதன், செப்டம்பர் 21

கொடூரங்களின் மத்தியில் !!


'ரத்தமும் சதையும் கொண்ட உயிரினம் நாம் ' என்பதை இந்த உலகம் அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது...!!காதுகளில் இனி வரும் காலங்களில் துப்பாக்கி சத்தங்கள், மனித ஓலங்கள், கூக்குரல்கள், ஒப்பாரிகள், அபயகுரல்கள் இவை மட்டும் கேட்கக்கூடும்.

தொலைகாட்சி, திரைப்படங்கள், பத்திரிகைகள் எங்கும் கொலை, குண்டுவெடிப்பு, ரத்த சிதறல்கள், ரத்தம் தோய்ந்த உடல் பாகங்கள் !!இன்று இவை எல்லாம் நம் கண்களுக்கு மிக பழகிவிட்டது. இவற்றை  பார்த்து  சாதாரணமாக கடந்து போகக்கூடிய பக்குவத்தை பெற்றுவிட்டோம்...!?  



வரவேற்பரையில்...


குண்டுவெடிப்பில் பல உயிர்கள் கை வேறு கால் வேறாக வெட்டுப்பட்டு, உடம்பு சிதைந்து துடித்து கொண்டிருக்கும் காட்சிகளை வரவேற்பறையில் தொலைகாட்சியில் ஸ்நாக்ஸ் கொறித்துக்கொண்டே பார்க்கிறோம். நிச்சயமாக அந்நேரம் நமது விழிகளில் எவ்வித உணர்ச்சியும் இருக்காது. அதிகபட்சம் அது போன்ற ஒரு காட்சி, நம் வீட்டில் நடந்தால் மட்டுமே துடிக்கிறோம்...!! ஆனால் இனி நம் வீட்டில் நடந்தாலும் வெகு இயல்பாய் தாண்டி சென்றுவிடுவோம் என்றே தோன்றுகிறது.

திரைப்படங்கள் 

சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன்...?! ஆரம்பம் முதல் இறுதிவரை தொடர்ந்து துப்பாக்கி ஒலித்துகொண்டே இருக்கிறது. ரொம்பவே சாதாரணமாக கதாநாயகன்(?) நாலு பேரை கொலை செய்வது எப்படி என்று கற்பனை செய்து ரசிக்கிறார். படம் பார்ப்போருக்கும் எப்போது அவர்களை சுட்டுகொல்வார் என்ற ஆவலை தூண்டியது இயக்குனரின் திறமை...!? காட்சிகளில் ஒவ்வொருவரும் சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்து விழுவதை கூட்டம் ஆர்பரித்து ரசித்து கை தட்டுகிறது. போலீஸ்,ரௌடி,நண்பன்,எதிரி, சகமனிதன் என்று சகட்டுமேனிக்கு துப்பாக்கி வெடித்துக்கொண்டே இருக்கிறது. ஹீரோ கடைசியில் போலீஸ் அதிகாரியை நோக்கி துப்பாக்கியை நீட்டியதுடன் (கிளைமாக்சில் ரத்தம் வேண்டாம் என்று விட்டுவிட்டார் போலும்) சுபம் !!

தியேட்டரை விட்டு வெளியே வந்த கூட்டத்தில் ஒருவர், 'ஹீரோ நல்லவரா கெட்டவரா ?'

* நல்லவர் என்றால் ஏன் கொலை செய்கிறார் ?
* கெட்டவர் என்றால் இவரை ஏன் யாரும் கொல்லவில்லை ?

(நிழல் என்று நன்கு தெரிந்தும் இது போன்ற சந்தேகங்கள் எழுவது ஏனோ ?!)
காட்சிகளை பற்றி சிறிது நேரமாவது பேசுகிறோம்,விவாதிக்கிறோம், அவை நம் மனதில் கொஞ்சமாவது பதியாமல் இருக்காது.

திரைப்படம் பொழுதுபோக்கு தான், இல்லை என்று சொல்லவில்லை. பொழுது போக்காய் கொலை செய்வதை ரசிக்கும் நம் மக்களின் மனநிலை ?!! இது இந்த ஒரு படத்துக்கான விமர்சனம் இல்லை...இதை விட கொடுமையான  படங்களும் இருக்கிறது.

வன்முறையை தூண்டும் விதமாக காட்சிபடுத்தபடும் அல்லது நடைபெறும் எதுவும் சட்டத்தின் பார்வையில் தவறா? இல்லையா ? என்ற சந்தேகம் ஏனோ தேவையில்லாமல் இப்போது வருகிறது.

வன்முறை திரைப்படங்களில் அனுமதி என்கிற அளவுகோலின் அளவு யாருக்காவது தெரியுமா?? சென்சார் என்ற ஒன்று இருக்கிறதா, இல்லை இருந்தும் இல்லையா ??

ரோட்டில் நாலு பேரு ஒருத்தனை வெட்டி வீசினால் அதையும் கண்டு சுலபமாக கடந்து போக கூடிய மனபக்குவம்(?) வந்துவிடுகிறது ?!  காரணம் பலமுறை இத்தகைய காட்சிகளை கண்டு சலித்துவிட்டது அல்லது மனது மரத்துவிட்டது. 

ஐயகோ நம் குழந்தைகள் !!?


ஒருவன் வன்முறையில் ஈடுபடுகிறான் என்றால் அந்த எண்ணம் நேற்றோ இன்றோ தற்செயலாக, அந்த நிமிடத்தில் ஏற்படுவது இல்லை.....சிறுவயதில் அவன் மனதில் எவையெல்லாம் விதைக்கபடுகிறதோ, அவை வளர்ந்து இன்று மரமாக நிற்கிறது.....!?

எல்லா குழந்தைகளும் போட்டி போட்டுக்கொண்டு பிளே ஸ்டேஷன், கம்ப்யூட்டர் கேம்ஸ் என்று விளையாடுகின்றன...கவனமா பாருங்க! அதிகமா அவங்க விளையாடுவது ஷூட்டிங் அல்லது பைட்டிங்  கேம்ஸ் ஆக இருக்கும்.                                      அடுத்தவனை அடிக்கணும் அல்லது கொல்லணும் !!? பைக் ரேஸ் கேம்ல கூட பக்கத்தில் போறவனை காலால் உதைக்கிறமாதிரி ஒரு செட் அப் இருக்கும். பசங்களும் ஒரு வெறியோட உதைசிட்டே சீறி பாய்வாங்க...'நாம ஜெயிக்கணும்னா அடுத்தவனை எட்டி உதைக்கணும்' என்கிற அருமையான தத்துவத்தை பயிலுகிறார்கள் இன்றைய நம் குழந்தைகள் !!?

சுற்றிலும் நடக்கும் இத்தகைய காட்சிகளை பார்த்து வளரும் நம் குழந்தைகளின் மனதில் இக்காட்சிகள் விதைக்கபடுகின்றன. எதிரிகள் பல வடிவங்களில் சுற்றிலும் இருக்கின்றன, இவைகளில் இருந்து நம் குழந்தைகளை எப்படி பாதுகாக்க போகிறோம் ??!

முதியோர் இல்லம் அதிகம், ஏன்?

இந்த காலத்தில் முதியோர் இல்லங்கள் பெருகிவிட்டன என்று வருத்த படுகிறோம். இதில் அதிர்ச்சி, ஆதங்கம் அடைய ஏதும் இல்லை. பெற்றோர்களின் மீது இயல்பாய் இருக்ககூடிய அன்பு பாசம் எல்லாம் எங்கே போனது ?? வன்முறைகளை பார்த்து பார்த்து பழகி போன மனதில் அன்பு, பாசம் போன்ற உணர்ச்சிகள் மரத்துபோனபின் எங்கிருந்து வரும் அக்கறை...?  
இன்றைய குழந்தைகள் இளைஞர்களை மட்டும் குறை சொல்லி நம் தவறுகளை மூடி மறைக்கிறோம்.

நரவேட்டைகளை ரசித்து கைத்தட்ட கூடிய இச்சூழ்நிலையில் வளரும் குழந்தைகள் இப்படிதான் இருப்பார்கள்...!!

அறிவியல் வளர்ந்து விட்டது, இது இன்றைய தலைமுறை என்று பெருமை பட்டுக் கொண்டால் இதன் விளைவை நாம் அனுபவித்துதான் ஆகவேண்டும். 


குழந்தைகளுக்கு நல்ல சூழ்நிலைகளை ஏற்படுத்தி கொடுக்கிறோமா? 

வெளி உலகம் எதையும் கற்றுக்கொடுக்கட்டும் , ஆனால் வீட்டினுள் நல்ல சூழ்நிலைகளை இயன்றவரை ஏற்படுத்தி கொடுக்கலாமே... உயிரின் மதிப்பை உணர செய்யுங்கள். லவ்  பேர்ட்ஸ், நாய், கலர் மீன்கள்,புறா  போன்றவற்றை வாங்கி கொடுங்கள்...அவற்றை பராமரிக்கவும், உணவளிக்கவும் வேண்டும் என பொறுப்புகளை அவர்களிடம் கொடுங்கள்...மிகுந்த ஈடுபாட்டுடன் செய்வார்கள். தினமும் சிறிது நேரம் கண்டிப்பாக அவற்றுடன் இருக்க செய்யுங்கள்...

வளர்க்க வசதி படவில்லை என்றால் மொட்டை மாடியில் ஒரு அகன்ற பாத்திரத்தில் நீர் நிறைத்து வைக்க சொல்லுங்கள். கூடவே சிறிது உணவு பொருளையும் ஒரு தட்டில் வைத்தால் காக்கா, குருவி, மைனா போன்ற பறவை இனங்கள் (பறவைகள் இருந்தால் ?!) வந்து உணவருந்தி விட்டு செல்லும். தினமும் தொடர்ந்து வைத்து வந்தால் அவையும் தவறாது வந்து விடும். பார்க்கவே மிக அற்புத காட்சியாக இருக்கும். குழந்தைகளும் மிக உற்சாகமாகி விடுவார்கள். ஏதாவது பறவைக்கு சிறு அடிபட்டு ரத்தம் வந்தாலும் துடித்து போய் மருந்திட்டு ஆற்றுவார்கள் . அனுபவத்தில் உணர்ந்த அற்புதம் இது !!

'படிக்கவே நேரமில்லை இதுல இது வேறையா' என்று புத்தகத்தை கையில் திணிக்காதீர்கள்...படிப்பை விட மிக மிக முக்கியம் மனித நேயம்! பிற உயிர்களிடத்து அன்பு ! இளம் வயதில் பிற உயிர்களிடம் அன்பை காட்டட்டும்...! நம் குழந்தைகள் வீட்டில் இருக்கும் பல இயந்திரங்களுடன் ஒன்றாக வளர கூடாது...!குழந்தைகள் ஈடு இணையில்லாத மதிப்புள்ள உயிர்கள் !! நாளைய சமுதாயம் அன்பு, பாசம், கருணை, இரக்கம் போன்ற உணர்ச்சிகள் நிறைந்து காணபடட்டும்.

  


வெள்ளி, செப்டம்பர் 16

கூடங்குளத்தில் வெடித்த மக்கள் புரட்சி...!



நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இரண்டாவது அணு உலை கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நேரத்தில் அணு உலை திட்டத்தை கைவிட கோரி தற்போது கூடங்குளம் அருகில் உள்ள இடிந்தகரையில் ஆறாவது நாளாக 10 ஆயிரம் பேருக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இந்த உண்ணாவிரதம் நேற்று பேசி இன்று தொடங்கப்பட்டது இல்லை, பல காலமாக மக்கள் போராடிவருகிறார்கள்...ஒவ்வொரு போராட்டத்திற்கும் பல சமாதானங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது...!! பொறுத்து பார்த்த மக்கள் இப்போது உண்ணாவிரதம் மேற்கொண்டு அமைதியான முறையில் போராடி வருகிறார்கள். காந்திய வழி என்றால் எல்லோருக்கும் உடனே புரிந்துவிடும். யாரோ ஒருவர் போராடுகிறார் என்றால் மக்கள் ஒன்று சேர்ந்து ஆதரவு தருவார்கள், ஆனால் மக்கள் போராடினால் அதற்கு ஆதரவு கிடைப்பது இல்லை என்பது ஒரு சாபக்கேடு ?

முக்கியமாக ஊடகங்கள் பெரிதாக இதை ஏன் கண்டுகொள்ளவில்லை...?! அணு உலைகளை பற்றிய முழு விழிப்புணர்வு நம்மிடையே இல்லையா?  குறிப்பிட்ட சில ஊர்களை பற்றிய பிரச்சனை, நம்ம வீடு பத்திரமாக தானே இருக்கிறது என்கிற மனோபாவமா ?? மத்திய அரசுக்கு, தமிழ்நாடு தானே என்கிற அலட்சியமா ??  

எது எப்படி என்றாலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஆறு நாட்களாக உண்ணாவிரதம் (இதில் 127 பேர் ஆறுநாளும் முழுமையான உண்ணாவிரதம் )இருந்து வரும் வேளையில் ஏன் இன்னும் அரசாங்கத்தால் சரியாக கவனிக்க படவில்லை...??! அவர்களில் சிலர் மயங்கிய நிலையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக வரும் தகவல்கள் யார் காதையும் எட்டவில்லையா??


மக்கள் ஏன் மௌனமாக இருந்தார்கள் ?

ஒரு அணு உலை அமைக்கும் போது ஒன்றும் சொல்லாத மக்கள், மின்சாரம் தயாரிக்க எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்ட பின்னர் இப்போது எதிர்க்க என்ன காரணம்...??! இத்தனை வருடம் என்ன செய்தார்கள் என்று பலரின் மனதிலும் ஒரு கேள்வி இருக்கிறது...?!!

ஆங்கிலேயர்களை ஆரம்பத்தில் வரவேற்கவே செய்தோம், கெடுதல் என்னவென்று தெரியாமல்...!! அதன் பின் எவ்வளவு போராடி வெளியேற்றினோம் என்பதை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன் !!

அணு உலையை பொருத்தவரை நம்ம மக்களின் அறியாமை, இயலாமை அன்றி வேறு என்ன காரணம் இருக்க முடியும்...?! கூடங்குளத்தில் அணு உலை அமைந்தால் இப்பகுதி மக்களுக்கு வேலை கிடைக்கும், குடியிருக்க மாற்று இடங்களும் அமைக்கப்படும் என்று ஆரம்பத்தில் தடுக்காமல் இருந்துள்ளனர்...இப்போது தான் அணு உலை என்றால் என்ன? அதன் கதிரியக்கம் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற தெளிவே வந்திருக்கிறது.இதன் ஆபத்து பற்றி தெரிந்ததால் எதிர்க்கின்றனர்.  சமீபத்தில் ஜப்பானில்  என்ன நடந்தது என்பதை பற்றி அறிந்ததால் கூட இருக்கலாம்.

எது எப்படியோ இப்போது இத்தனை மக்கள் தங்கள் உயிருக்காகவும் எதிர்காலத்தின் மேல் உள்ள அச்சத்தினாலும் போராடி வருகின்றனர்...இனியும் அரசாங்கம் இப்படி அமைதியாக இருக்காமல் உடனடியாக மக்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.

* அணு உலையால் ஆபத்து இருக்கிறதா இல்லையா ?

* அணு உலையால் என்ன நன்மை ?

கேள்விகளுக்கான பதில் மக்களிடம் தெளிவாக எடுத்துரைக்க பட்டதா ??

ஒரு வேளை விபத்து நடந்துவிட்டால் அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்கிற உத்தரவாதம் கொடுக்க முடியுமா ?

கதிரியக்கத்தின் பாதிப்பு உடனே தெரியாது...இன்று ஒன்றும் பிரச்சனை இல்லை என்பதற்காக இதை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கலாமா ??



பூகம்பம், சுனாமி போன்றவைகளை அடிக்கடி சந்தித்து திட மனதை கொண்ட ஜப்பானிய மக்கள் இப்போது ஏற்பட்ட அணு உலை பிரச்சனையால் நிலை குலைந்து உள்ளனர். பல சவால்களை சந்தித்து பல துறைகளிலும் முன்னேற்றம் கண்டு  துரிதமாக செயல்படகூடிய அவங்களே முடியாமல் அணு உலையைச் சுற்றி சுவர்களை கட்டியும், இன்னும் பிற ஏற்பாடுகளையும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

உலக பொருளாதாரத்தில் உயர்ந்த இடத்தில் இருந்த ஜப்பானால் ஒரு பெரிய சீற்றத்தை எதிர்கொள்ள முடியாமல், ஓரளவிற்கு சமாளிச்சிட்டோம் என்கிற மாதிரியான ஒரு நம்பிக்கையை மட்டும் தான் மக்களுக்கு கொடுக்க முடிந்தது. ஆனால் ஒரு பிரச்சனை என்றால், உடனே அடுத்த நாடுகளின் உதவியை நாடக்கூடிய நிலையில் இருக்கும் நாம் ?!!

கூடங்குளம் அணுஉலை குறித்து எழுதப்பட்ட பதிவுகள்

பதிவர் கூடல் பாலா கூடங்குளம் அணு உலை பற்றிய பல பதிவுகளை தொடர்ச்சியாக எழுதி வந்துள்ளார்...தகவல்கள் தெளிவாக தெரியவேண்டும் என்றால் அவரது பதிவுகளை படித்துபாருங்கள். இங்கே சில சுட்டிகளை இணைத்துள்ளேன். 

உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ள கூடல் பாலா அவர்களை நாம் பாராட்டுவோம்,வாழ்த்துவோம்.அவரது பதிவுகள் சில உங்கள் பார்வைக்காக...

அணு உலையால் ஏற்படக்கூடிய 10 முக்கிய பாதிப்புகள் பற்றி தெரிய வேண்டுமா? இங்கே செல்லவும் !

மார்ச் மாதம் 26 ல் நடைபெற்ற போராட்டம் பற்றி படிக்க இங்கே செல்லவும் !

அணு உலையை பற்றிய மேலும் சில அதிர்ச்சி தகவல்கள் படிக்க இங்கே செல்லவும் 

மேலும் ஒரு செய்தி 

வேண்டுகோள் :

கூடங்குளத்திற்காக...கூடுங்கள் நண்பர்களே !

மக்களுக்காக மக்களால் நடத்தப்பட்டு கொண்டு இருக்கும் இந்த போராட்டம் மத்திய மாநில அரசின் பார்வைக்கு இன்னும் சரியாக கொண்டு செல்லப்படவில்லை ?!! இணைய நண்பர்கள் நாம் முன்னெடுப்போம்.....ஒன்று கூடுவோம்.....உரக்க குரல் கொடுப்போம்..... எழுச்சி அலை மோதட்டும்.....மக்களின் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம்.....உண்ணாவிரதம் இருக்கும் அந்த நெஞ்சங்களுக்கு ஆதரவு திரட்டுவோம்.....இடிந்தகரையில் நடக்கும் இந்த போராட்டம் தமிழகம் எங்கும் பரவட்டும்.....! ஒத்துழையுங்கள் பதிவுலக நல்லுள்ளங்களே ! 

அவர்களுக்காக மட்டும் அல்ல இந்த போராட்டம்...ஒட்டுமொத்த தமிழக மக்களுக்காக !! 



திங்கள், செப்டம்பர் 12

'தலையணை மந்திரம்' எனும் கவர்ச்சி நல்லுணர்வுகளின் வெளிப்பாடா?! தாம்பத்தியம் - 26

முன்குறிப்பு :
எனது கடந்த தாம்பத்தியம் தொடரில் சகோ.திரு.அப்பாதுரை அவர்கள் ஒரு பின்னூட்டம் இட்டு இருந்தார்...

//தலையணை மந்திரம் என்ற ஜாடிக்குள் இருக்கும் கவர்ச்சி - நல்லுணர்வுகளின் தீவிர வெளிப்பாடு தானே? தலையணை மந்திரத்துக்கு வாழ்நாள் முழுதும் நிலைக்கும் சக்தி இருந்தால் திருமண உறவுகள் செழிக்குமோ?//

எதையும் நேர்மறையாகப் பார்க்கும் அவரது பண்பிற்கு வணக்கங்கள்.

தலையணை மந்திரம் - அவசியம் தேவை

தலையணை மந்திரம் என்பதின் பின்னால் இருக்கும் கவர்ச்சி திருமண உறவைக்  கெடாமல் வைத்திருக்கும் என்பதில் எனக்கு முழு உடன்பாடு இல்லை. ஒரு மனைவி, கணவனை வசீகரித்து மகிழ கூடிய இடம் தனியறை. இந்த இடத்தில் ஒரு கணவன் தன் மனைவியின் அன்பு பிடிக்குள் அல்லது கட்டுபாட்டுக்குள் போய்விடுவான் என்பது இயல்பு. ஆனால் இந்நிலை அந்நேரம் மட்டுமா அல்லது விடிந்த பின்னருமா என்பது அவரவர் மனநிலைகளைப்  பொறுத்தது. 

மனைவி கணவனை கவர்ச்சியின் மூலம் மட்டுமே தன்னைச்  சுற்றி வரும்படி செய்வது என்பது மிக நல்லதா இல்லையா என்பதே இந்த பதிவில் என் முன் நிற்கும் கேள்வி ? இந்த ஈர்ப்பு சரியென்றால் அவர்களின் வாழ்க்கையில் எடுக்கப்படும் எந்த தீர்மானமும் ஒருதலைபட்சமாகப்  போய்விடக்கூடிய ஆபத்து இருக்கிறது...அப்படி இல்ல, ஒருவரை ஒருவர் கலந்துதான் முடிவு பண்றோம் என்று சொன்னாலும் இறுதி முடிவு சந்தேகமே இல்லாமல் மனைவியுடையதாகவே இருக்கும். ஒருவேளை மனைவியின் முடிவு தவறான தீர்வாக போய்விட்டால்...!?

முந்தைய தலைமுறையில் 

முழுமையான தாம்பத்தியதிற்கு தம்பதிகளின் அன்னியோனியம் மிக முக்கியம், தலையணை மந்திரத்துக்கு வாழ்நாள் முழுதும் நீடிக்கும் சக்தி இருந்திருக்கலாம், ஒரு காலத்தில்...!

அன்றைய பெரியோர்கள் திருமணம் முடிந்தப்  பெண்களுக்குச்  சிலவற்றை அறிவுறுத்தினார்கள்...ஆண்கள் கவனம் வேறு பக்கம் சிதறி விடக்  கூடாது என்பதற்காக சில வார்த்தைகளைச்  சொல்லி வைத்தார்கள். நன்கு கவனிக்கவும்...! வார்த்தைகள் தான் 'தலையணை மந்திரங்கள்' இல்லை. இவை காலப்  போக்கில் ஆணை வசியப்படுத்தும் ஒரு கவர்ச்சி ஆயுதமாக வலுப்பெற்று விட்டன...!!

'அக்கம்பக்கம் திரும்ப விட்டுடாத, உன்னையேச்  சுத்தி வர்ற மாதிரிப்  பக்குவமா நடந்துக்க' என்று சொன்னதின் பின்னால் சில அந்தரங்க சூட்சமங்கள் இருக்கிறது. "ஆண்களின் உடம்பில் வயதாகி ஆயுள் முடியும் வரை கூட விந்து அணுக்கள் சுரக்கும் , எனவே அதன் உந்துதலால் அவர்கள் பெண்ணுடன் இறுதிவரை உறவுக்  கொள்ளவே விரும்புவார்கள். இதற்கு மனைவி நீ சரியாய் ஒத்துழைக்கலைனா வீட்டுக்காரன் அடுத்த பக்கம் திரும்பிவிடுவான்...அதனால உன் அழகால, பேச்சால, வருடுதலால், தொடுதலால், இன்னும் பிறவற்றால் கணவனைப்  பார்த்துக்கோ ,கைக்குள்ள போட்டு வச்சுக்க" என்பது தான் அவர்கள் சொன்னதின் உட்கருத்து.

ஆனால் இன்று அதற்கு வாய்ப்புகள் மிக குறைவு. இன்றைய குடும்பங்கள் இருக்கின்ற சூழல்,பொருளாதாரத்தை நோக்கிய ஓட்டம், சுயநலம் மிகுந்த மனிதர்கள், கவனத்தைத்  திசைத்  திருப்பக்கூடிய ஊடகங்களின் ஆக்கிரமிப்பு, தொலைத்  தொடர்பு வசதிகள், பெருகிவிட்ட ஆடம்பர மோகம், இவற்றின்  பிடியில் சிக்கிக்கொண்ட தம்பதிகள், தங்களுக்கு என்று செலவிடும் நேரம் மிக மிகக்  குறைந்துவிட்டது.அவர்களின் அந்தரங்கமும் அள்ளித்  தெளித்த கோலம் போன்றே ஆகிவிட்டது !

அதனால் இன்றையக்  காலகட்டத்திற்கு அந்த அறிவுரை, மந்திரம் எல்லாம் உதவாது. இத்தகைய மந்திரத்துக்கு (கவர்ச்சிக்கு) மயங்கும் ஆண்கள் இருந்துவிட்டால் நாட்டில் கள்ள உறவுகள், விவாகரத்துக்கள் அதிகரித்து இருக்காதே ?!! இது போன்றவை வீட்டிற்கு வெளியே  மிக தாராளமாக கிடைக்கக்கூடிய காலம் இது. எனவே உடல் கவர்ச்சி மட்டும் போதாது என்பதே எனது உறுதியான முடிவு.

* தலையணை(?) தேவையின்றி போனில் கூட மந்திரம் போட்டு மாங்காய் பறித்துவிடும் காலமிது.

'அகத்தில் அன்பில்லாத பெண்டிரை மனதாலும் தீண்டேன்' என ஆண்கள் உணரும்வரை அவர்களுக்கு ஏற்றபடி இன்றைய பெண்கள் மாறித்தான் ஆகவேண்டும்...!!



இப்போதைய தலையணை மந்திரம்,

* கணவனின் குடும்பத்தினரை கணவனை விட்டு தூரத்  தள்ளி வைக்க, முக்கியமாக கணவனின் பெற்றோர்களை...

* தன் தனிப்பட்ட விருப்பத்தை, தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள

* தன் தவறுகளைக்  கண்டுக்கொள்ளாமல் இருக்க

* தன் சுயத்தைத்  திருப்திப்படுத்த

* பெருமைக்காக

இவை போன்றவைகளுக்காகப்  பயன்படுகிறது. குடும்பத்தின் நல்வாழ்வுக்காக என்பது இப்போது மிக குறைவு !

ஒரு உதாரணம் 

சென்னையில் இருக்கும் மகளுக்கு இங்கிருக்கும் தாய் ஒருவர் செல்பேசினார் , அதுவும் பொது இடத்தில் பஸ்ஸில் !!

என் பதிவுக்கு பாய்ண்ட்ஸ் தேவைப்படுவதால் இப்போதெல்லாம் பொது  இடத்தில் என் காதுகள் கூர்மையாகி விடுகிறது .(அதாங்க ஒட்டு கேட்கிறது)

///"என்னடி எங்க அது (மருமகனைத் தான் !) எங்க ஊர் சுத்தப்  போயாச்சா  ? இன்னைக்கு லீவ் தானே கூட மாட ஒத்தாசைக்கு வச்சுக்கலையா நீ தனியாக்  கிடந்துக்  கஷ்டபடுற(?)"

''சரி சரி எப்போ கடைக்குப்  போன, அவருக்குப்  பிடிச்ச புடவையா ? ஏண்டி இப்படி இருக்கிற?.....அது உனக்கு பிடிச்சாலுமேப்  பிடிக்கலச்  சொல்லு.....அப்பத்தான் எல்லாம் உன் விருப்பப்படி என்று ஆகும்.....ஓ ! நாத்தனார் பையன் வந்திருக்கானா .....அதுதான் கேட்கிறதுக்கு எல்லாம் ம் கொட்ற? (மகளை பேச விட்டாத்தான?) அவன் எதுக்கு இங்கே வரான், இன்டர்வியூவா ஏதோ ஒரு சாக்கு கிளம்பி வந்துறாங்க.....உன் வீட்ல என்ன கொட்டியாக்  கிடக்கு? பரவாயில்லைன்னு சமாளிக்காத.....எல்லாம் உன் நல்லதுக்கு(?) தான் சொல்றேன்"

"இன்னைக்கு இன்டர்வியூ, நாளைக்கு வேலைக் கிடைச்சு, 'வெளிலத்  தங்கினா செலவு ஆகும் இங்கேயே இருக்கட்டும்' னு இவர் சொல்லப்  போறார்.....அதுக்கு முன்னாடி உஷாரா இருந்துக்கோ.....இவங்க எல்லோரையும் பத்து அடி தள்ளி வை, சொல்றதுக்  கேட்குதா முந்தானையில முடிஞ்சி வச்சுக்கோ...இல்லை உன்னை தெருவுக்குக்  கொண்டு வந்துவிடுவான்.....சாயந்தரம் அந்தாளு வந்ததும், நல்லா டிரஸ் பண்ணிட்டு சினிமா ஏதும் போய்ட்டுவா, அனுசரணையா(!) நடந்துக்க.....தகுந்த நேரம் பார்த்து நாத்தனார் மகனைப்  பத்திச்  சொல்லு !"///

இதுபோல பல உதாரணங்கள் இருக்கிறது. போதாததுக்கு டிவி சீரியல்கள் வேற இப்படி நிறையச்  சொல்லிக்  கொடுக்கிறது...!!
  
இது போன்ற எந்த தவறான ஆலோசனைக்கும் தயவுசெய்துச்  செவிசாய்த்து விடாதீர்கள். உங்கள் குடும்ப சந்தோசம் உங்கள் கையில் மட்டும் !! தவறான வழிமுறைகள் எதையும் கைக்கொண்டு குடும்பத்தை நாடகமேடையாக மாற்றிவிடாதீர்கள். நித்தம் ஒரு வேஷம், நித்தம் ஒரு நாடகம் என்பதாக இருக்குமே தவிர குடும்பமாக இருக்காது...!

(உடல் கவர்ச்சி தாண்டிய மந்திரங்கள் பற்றி போனப் பதிவில் சொல்லிவிட்டேன் , நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்)



மெல்ல
என்
தலைகோதி
கை
விரல்களை
சொடுக்கெடுக்கும்
உன் தளர்ந்த விரல்கள்
மட்டும் போதுமடி
என் வயோதிகம்
பிழைத்துக்கொள்ளும்!!

அழகான குடும்ப வாழ்க்கைக்கு ஒருவரின் மேல் ஒருவருக்கு ஒரு ஈர்ப்பு இருந்தாக வேண்டியது அவசியம். முக்கியமாக கணவனும், மனைவியை தன் அன்புப்பிடிக்குள் வைத்தாக வேண்டும். கணவனின் பிடிக்குள் மனைவி இல்லாவிட்டால் எடுத்ததுக்கு எல்லாம் எதிர்வாதம் கிளம்பும். அதை தவிர்க்க மனைவியின் பிரியத்தைச்  சம்பாதியுங்கள். மனைவியை அதிகமாக நேசிக்கிறேன் என்று எண்ணி கொண்டிருந்தால் மட்டும் போதாது, அதை சொல்லில்,செயலில் வெளிப்படுத்துங்கள் !

தாம்பத்தியம் ஒரு வீணை , அதை மீட்டும் விதமாக மீட்டுங்கள் ! சுகமான இசை வெள்ளத்தில் மூழ்கி, வாழ்வை ரசித்து,உணர்ந்து,மகிழ்ந்து வாழுங்கள் ! வாழ்த்துக்கள் !!

*******************************************************************

தம்பதிகளுக்குள் உடல் , மனம் காரணமாக ஏதோ சிறு விருப்பமின்மை என்றாலும் விரைவில் சலித்து வெறுப்பின் எல்லைக்கு போய்விடுகிறார்கள். ஒருவேளை இந்த விருப்பமின்மைகள் மூன்று, நான்கு முறை என தொடர்ந்தால் மனவிரிசல் அதிகரித்து வேறு வடிகால்களை(?) தேடிக் கொள்கிறார்கள்.  

அடுத்த பதிவில் 'இல்லறத்திற்கு உடலுறவு ஏன் அவசியம் ?'  தொடர்ந்து பேசுவோம்...காத்திருங்கள் !!

*******************************************************************


நினைவிற்காக !

ஏற்கனவே விளக்கமாகச்  சொல்லி இருக்கிறேன்...மீண்டும் ஞாபகப் படுத்துகிறேன் . எனது இந்த தொடர் கணவன், மனைவி பற்றியது...ஆண் பெண் என்ற பிரிவினை/பேதம் பற்றி இங்கே பேசப்படவில்லை.பெண்ணைக்  குறைச்  சொல்லி எழுதப்பட்டு இருக்கிறது என்று யாரும் பொங்கிடாதிங்க !? எதைப்  பற்றிச்   சொல்கிறேன் என்றே புரியாமல் விமர்சிப்பவர்களை என்னவென்று சொல்வது...!? தொடரில் சில உண்மைகளைச்  சொல்லும் போது எனக்கும் கசக்கவே  செய்கிறது.

குற்றாலமலையில் இருக்கிற ஆணாதிக்க ஞானசித்தர் வேற 'எது என்றாலும் வெளிப்படையாகச் சொல்லிடு, இல்லைனா பாவம் சேர்ந்துடும்'னு பயமுறுத்துகிறார்...!!! :))


                                                                           *****************

தொடர்ந்து பேசுகிறேன் 
கௌசல்யா  

வியாழன், செப்டம்பர் 8

NASSCOM, திருச்சி மற்றும் நான்...!



திருச்சியில் நான்கு நாள் ட்ரைனிங் ப்ரோகிராம் ஒன்று கடந்த ஆகஸ்ட்  மாதம் 23 லிருந்து 26ம் தேதி வரை நடந்தேறியது. இதனை நடத்தியவர்கள் நாஸ்காம் பவுண்டேஷன் NASSCOM பற்றி பலருக்கும் தெரிந்திருக்கலாம்,  National Association of Software and Service Companies.  இவர்கள் இதுவரை இதுபோன்ற 34 ஒர்க்சாப் நடத்தி இருக்கிறார்கள்.  எங்களுக்கு இதில் பங்குபெற வாய்ப்பு கிடைத்து திருச்சி சென்றோம். இந்த ட்ரைனிங் முக்கியமாக NGO'S அதாவது தொண்டு நிறுவனங்கள், சங்கங்கள், சொசைட்டிகள் போன்றவற்றிற்காக நடத்தப் படுகிறது. அதிலும் புதிதாக நிறுவனம் ஆரம்பித்தவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

இதில் கலந்துக்கொள்ள தகுதி என்றால் ஒரு NGO (Non Governmental Organisation)  வாகவும் , அடிப்படை கணினி அறிவும் பெற்று இருக்கவேண்டும். 

                                  Mr.Vikas Kamble அறிமுக உரை  

ஒர்க்சாப் எதை பற்றியது?

பொதுவாக தொண்டு நிறுவனங்கள் தங்களுக்கு என்று இணையத்தில் ஒரு வெப்சைட்டை உருவாக்குவதில் இருந்து, அதன் வடிவமைப்பு, தள இணைப்புகள், நிறுவனம் மேற்கொள்ளும் சேவை குறித்த செயல்களை தங்கள் தளத்தில் இணைப்பது மற்றும் , பயனாளர்கள்,டோனர்கள்  குறித்த தகவல்களை சேகரிப்பது, புதிய தன்னார்வலர்களை இணைப்பது, தன் நிறுவனத்தின் செயல்பாடுகளை உலக அளவில் கொண்டு சேர்க்க  இன்னும் பல வேலைகளுக்கு இணையத்தை நன்கு கையாளத் தெரிந்த பிறரிடமோ, அல்லது வெப் டிசைனிங் நிறுவனங்களின் உதவியை நாடவேண்டும். இதற்காக அதிக பணம் செலவழிக்க வேண்டும். ஒவ்வொரு முறை ஒரு ஈவன்ட் முடிந்த பின்னும் அதை அப்டேட் செய்ய மீண்டும் அவர்களிடம் செல்ல வேண்டும். நாஸ்காம் பௌண்டேஷனின் இந்த வொர்க்சாப் இது போன்ற பல வேலைகளை செய்ய வெறும் நான்கு நாட்களில் பயிற்றுவிக்க முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறது.  


மேலும் கணினி நம் வாழ்வில் தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்ட இன்றைய நாளில் சமூக பணியில் ஈடுபட்டிருக்கும் தன்னார்வலர்களுக்கு கணினி பற்றிய அறிவு மிக இன்றியமையாதது. முக்கியமாக பண பரிவர்த்தனைகள் பற்றிய கணக்குகளை எப்படி கையாளுவது, டோனர்களிடம் இருந்து உதவிகளை பெறுவது, தன்னார்வலர்களை ஒன்றிணைப்பது என சேவை நிறுவனம் குறித்த அனைத்து பணிகளையும் துரித கதியில் செய்வதற்கு இவர்களின் வழிகாட்டுதல் மிக உதவியாக இருக்கிறது.


                                சின்சியரா நோட்ஸ் எடுக்கிறோம் !
Ms Office 07
Word
Excel 
Power Point
Publisher

Windows Movie Maker


Online Tools
Skype
Face book
Twitter
Survey Monkey
Bigtech
Blog

இன்னும் சிலவும் பயிற்றுவிக்கபட்டன.

Mr.Karim Padaniya 

திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக வளாகத்தில் நடந்தது. பல ஊர்களில் இருந்து வந்திருந்தார்கள். நாஸ்காம் சார்பில் திரு.விகாஸ் காம்ளே(ப்ரோகிராம் மேனேஜர், மும்பை) மற்றும் திரு.கரீம் (டிரைனி, குஜராத்) இருவரும் இணைந்து நடத்தினர். தினமும் நேரம் காலை ஒன்பது மணி முதல் மாலை ஆறு மணி வரை. கற்றதை உடனே அடுத்த ஒரு மணிநேரத்திற்கு  கணினியில் பயிற்சியும் செய்ய வைக்கிறார்கள். காலை, மதியம் உணவும், நடுவில் தேநீர்/பிஸ்கட் உபசரிப்பும் உண்டு. பயிற்சி, உணவு இரண்டிற்கும் சேர்த்து மொத்தமாக ரூபாய் ஆயிரம் கட்டவேண்டும், ஒரு நிறுவனத்தில் இருந்து இரண்டு பேர் கலந்து கொள்ளலாம்.

ConnectIT ன் அடுத்த ஒர்க்சாப் பாண்டிச்சேரி மற்றும் கோயம்புத்தூரில் இந்த மாதம் நடைபெற இருக்கிறது. விருப்பம்/தேவை இருப்பவர்கள் கலந்து கொள்ளுங்கள். ஆறு மாதம்/ அதற்கு மேல் கற்க வேண்டியவற்றை நான்கு நாட்களில் கற்று கொடுத்துவிடுகிறார்கள்...! படித்தவற்றை நினைவில் வைத்து செயலில் காட்டி தங்கள் நிறுவனத்தை நல்முறையில் கொண்டு செல்வது நம் கையில் இருக்கிறது...!

இந்த ஒர்க்சாப் பற்றி மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள இங்கே செல்லவும்

                                    Presentation
                                         
நான்காவது நாளின் முடிவில் ஒவ்வொருவரும் தனி தனி தலைப்புகளில் பிரசென்டேஷன் கொடுத்தோம். வந்திருந்த அனைவரும் தாங்கள் கற்றதை கணினியில் ப்ரோகிராம் தயார் செய்து அதை விளக்கிய விதம் மிக அருமையாக இருந்தது. presentation  கொடுப்பதை பலரும் முதல் அனுபவம் என்று சொன்னாலும், அப்படி தெரியவில்லை என்பதே உண்மை. கணினியில் வடிவமைக்கப்பட்ட தேர்வு ஒன்றையும் அட்டென்ட் செய்தோம். அனைவரின் மார்க் அறிவித்த போது எல்லோருக்கும் அவர்களின் பள்ளி, கல்லூரி நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை...!

இறுதியாக பாரதிதாசன் பல்கலைகழகத்தின் துணை வேந்தர்.அவர்கள் அனைவருக்கும் சர்டிபிகேட் வழங்கினார். அதற்கு முன் தனக்கும் நாஸ்காம் பவுண்டேசன் நிறுவனத்துக்கும் உள்ள தொடர்பு பற்றி கூறிவிட்டு எங்களுக்கு சில வழிகாட்டுதல்களை மிக உற்சாகமாக கூறினார். அவர் எங்களுக்கு வாழ்த்துக்களை சொல்ல, நாங்கள் நன்றிகளை சொல்ல ட்ரைனிங் முடிவுக்கு வந்தது.


'மிக சுவாரசியமாக சென்ற நான்கு நாட்கள்' இறுதிகட்டத்தை நெருங்கவும் ஏதோ ஒரு உணர்வு நெஞ்சை கவ்வியதை உணர முடிந்தது. பல வயதினர் பல ஊர்கள் பல வாழ்வியல் சூழ்நிலைகள் இருந்தும் ஒரே உணர்வில் நான்கு நாட்களை கடந்தோம் ! நட்புகள் தொடரவேண்டும் என்று செல்பேசி எண்கள், இமெயில் முகவரிகளையும் எங்களுக்குள் பரிமாறி கொண்டு பிரியாவிடைபெற்றோம்.  

சில சுவாரசியங்கள் 

அங்கே வந்திருந்த 28 பேரில் ஒருவரும் பிளாக்கர் இல்லை என்பது எனக்கு ஒரு வருத்தம். ஆனா மூன்றாவது நாளில் அந்த வருத்தம் போயே  போச்சு. எப்படின்னு யோசிக்கிறீங்களா தொடர்ந்து படிங்க.....

பிளாக் பத்தி யாருக்கும் தெரியுமா என்று Mr.கரீம் கேட்டபோது நான் கை உயர்த்தி 'தெரியும், எழுதி கொண்டு இருக்கிறேன்' என்றேன். 'ஒகே குட்'னு சொல்லிவிட்டு 'உங்க பிளாக் லிங்க் சொல்லுங்க' என்று ப்ரொஜெக்டர் ஸ்க்ரீனில், பிளாக் ஓபன் பண்றதில் இருந்து ஒவ்வொண்ணா விளக்கம் கொடுத்து, போஸ்ட் எழுதி முடிச்சதும், பப்ளிஷ் பண்ணிய போஸ்ட் இப்படி இருக்கும் 'மனதோடு மட்டும்' தளத்தை சுட்டி காட்டினார். 

'மனதோடு மட்டும்'ல இருந்து 'பயணத்திற்காக வரை' உள்ளதை 'இது பிளாக் டைட்டில் இப்படி டாப்ல இருக்கும்' என்றவுடன் நான் திரு திருன்னு ஒரு முழி முழிச்சேன். அதை சரியா நோட் பண்ணிட்டார் போல ! 'எஸ் கௌசல்யா எனித்திங் ராங் ?'  நான் 'பஸ்ட் ஒன் இஸ் டைட்டில் அண்ட் செகண்ட் ஒன் இஸ் டிஸ்க்ரிப்ஷன்'னு தயங்கிட்டே சொல்லவும். 'ஓ !ஒகே பைன், கௌசல்யா யு டூ ஒன்திங், பெட்டெர் யு கேன் டேக் திஸ் செஷன், உங்க தாய்மொழில பிளாக் இருக்கிறதால மத்தவங்க புரிஞ்சிக்கிறது ஈசியா இருக்கும்' சொல்ல நான் என் கணவரை பார்க்க அவரோ, 'என்ன பாவம் பண்ணினாங்களோ எல்லோரும்' அப்படின்னு சிக்னல் காட்ட...ம்...நம்ம சைடு  இந்த அளவு வீக்கா இருக்கேன்னு நொந்தபடி மெதுவா எழுந்து, உள்ளுக்குள்  உதறல் எடுத்தாலும் ஒருவழியாக சொல்லி(உளறி) முடிச்சேன். சோதனை அதோட முடியல, பிராக்டிகல் நேரத்தில் மறுபடியும் கரீம் சார், 'if anybody have doubt, ask kousalya' கூலா சொல்லிட்டார். 

அப்புறம் என்ன மக்கள் எல்லோரும் பதிவுலக படைப்பாளிகளாக(!) ஆகியே தீருவது என்று முடிவு பண்ணிட்டாங்க. நான் மாத்தி மாத்தி ஒவ்வொருத்தருக்கும் பிளாக் ஓபன் பண்ண ஹெல்ப் செய்கிறேன் என்கிற பேர்ல சுத்தி சுத்தி வந்தேன்...கடைசில ஒரு சிலர் தவிர எல்லோரும் ஓபன் பண்ணிட்டாங்க. ஒரு சிலர் வார்ட்பிரஸ்ல, சிலர் பிளாக்கர்ல. சிலர் அவர்களை பற்றி ஒரு இன்றோ எழுதி போஸ்ட் போட்டுடாங்க. சந்தோசமாக இருந்தது. ஒரு பதிவரும் இல்லையே என்ற ஆதங்கம் இப்ப இத்தனை பேர் பதிவரானதும் போயே போச்சு.

இங்கே நான் ஒன்றை கவனித்தேன், 

           *  பிளாக்கில நாம எழுதினா மத்தவங்க எப்படி வந்து படிப்பாங்க?
           *  போஸ்ட் போட்டதும் யார் எல்லாம் வருவாங்க ?
           *  போன் நம்பர், வீட்டு முகவரி எல்லாம் போடலாமா?
           *  நாம போஸ்ட் எழுதி வச்சது எத்தனை நாள் வரை இருக்கும் ?!! 
           
இது போன்ற நிறைய கேள்விகளும், எனது ஜிமெயில் ஓபன் செய்த போது, அருகில் இருந்தவர்கள் மெயில் தமிழில் டைப் எப்படி பண்றீங்க என்று கேட்டதும் ஆச்சரியம். இத்தனைக்கும் அவர்கள் அனைவரும் ஆபீசில் கம்ப்யூட்டரில் வேலை செய்து வருபவர்கள் !! மேலும் பிளாக் என்ற ஒன்றை பற்றி தெரியாதவர்கள் என்பது ஆச்சர்யம் என்றாலும் இது தான் நிதர்சனம். ஆனால் இது புரிந்தும் பதிவர்கள் என்ற பேரில் நாம (என்னையும் சேர்த்துத்தான் !) பண்ற அலம்பல் கொஞ்ச நஞ்சமா?

நண்பர் ஒருவர் அப்ப அப்ப ஏதாவது குறுக்கு கேள்வி கேட்டு சூழ்நிலையை கககலப்பாக மாற்றினார்.

* Mr.விகாஸ் 'உணவு, தேநீர் உங்களுக்கு ஒகே தானே, ஏதும் குறை இருக்கா?னு கேட்க நண்பர் 'அசைவம் இல்ல, அதுதான் பெரிய குறை' என சொல்ல எல்லோரும் சத்தமா சிரிச்சிட்டோம்.

* ப்ரோபைல்ல ஆணா பெண்ணா என்ற ஆப்ஷன் இருக்குதே நிறுவனம் பேர்ல ஆரம்பிச்சா என்ன போடுறது ?!! (என்னா, ஒரு சந்தேகம் ?!)

* Presentation கொடுக்க வந்த மற்றொருவர், வந்ததும், 'ஆள்காட்டி விரலை தூக்குங்க' என்றதும் நாங்க வேகமா ஆள்காட்டி விரலை உயர்த்தினோம். ஆனா அவர் தூக்கி இருந்ததோ கட்டை விரல் !! இதை கவனிச்சிட்டு நாங்க கேட்க, அவர் நிதானமாக 'எல்லோரின் கவனம் எங்கே இருக்கிறது' என செக் செய்ததாக சொல்ல அசந்துவிட்டோம். எல்லோரின் கவனத்தை தன் பக்கம் திருப்ப அவர் கையாண்ட விதத்தை Mr.கரீம் & Mr.விகாஸ் மிக  ரசித்தார்கள் . 

'சமூகத்தில் பலதரப்பட்ட மக்களின் நடுவில்தான் தன்னார்வலர்களின் பெரும்பாலான நேரம் கழியும். நாம் பேசக்கூடிய விசயங்கள், அவர்களை சென்றடைய நமது 'பேச்சுத் திறன்' மிக முக்கியம். கூட்டத்தினரை நம் பக்கம் திருப்ப கூடிய லாவகம் தெரிய வேண்டியதன் அவசியத்தை இவர் புரிய வைத்துவிட்டார்' என்று Mr.காம்ளே வெகுவாக பாராட்டினார்.
 
* சென்னையில் இருந்து ஒர்க்சாபிற்கு வந்திருந்த திரு.சுப்ரமணி என்பவர் தன் விருப்பத்தின் பேரில் உணவு இடைவேளையில் 'தகவல் அறியும் உரிமை சட்டம்', அதன் முக்கியத்துவம் பற்றி தெளிவாக எடுத்து கூறினார். எங்களின் புரிதலுக்காக என்பதால் தமிழில் சொல்ல தொடங்கினார். உடனே 'ஆங்கிலத்தில் கூறுங்கள் நாங்களும் அறிந்து கொள்கிறோம்'  என்று Mr.கரீம் & Mr.விகாஸ் ஆர்வமாக சொல்லவும் பின் ஆங்கிலத்தில் தொடர்ந்தார். (பாடம் எடுக்க வந்தவர்களுக்கு, நாங்க பாடமும் எடுப்போம்ல...!) 
 
இப்படி நான்கு நாட்களும் பல விசயங்கள் இடைவெளியின்றி கற்றுக்கொண்டே இருந்தோம்.

திருநெல்வேலியின் பார்வையில் திருச்சி !

என் பசங்களுடன் சென்றதால் ஒவ்வொரு நாள் மாலையிலும்  ஊர் சுற்ற கிளம்பிவிடுவோம்.

மலைகோட்டை

உச்சிபிள்ளையார் கோவில் படிஏற மூச்சு வாங்கினாலும் நின்று நின்று மெல்ல உச்சியை அடைந்தோம். அங்கே கம்பீரமாக அமர்ந்திருதார் பிள்ளையார். அங்கிருந்து பார்த்தால் ஊர் விளக்கொளியில் தகதகவென கண்கொள்ளா காட்சி !!

கல்லணை :

கரிகாலன் கட்டிய கல்லணை என்று பசங்களிடம் வரலாற்றை சிறிது நினைவு கூர்ந்தோம். அணையின் கட்டுமானம் பிரமிக்க வைத்தது. இரவில் அந்த பகுதி மிக அற்புதமாக தெரிந்தது.

ஸ்ரீரங்கம் கோவில்

இராமாயாண காவியத்தை கம்பர் அரங்கேற்றிய இடம் இந்த ஸ்ரீரங்கம் என்பதை எண்ணி கோவிலை வலம் வந்தோம். நாங்கள் சென்ற நேரம் உற்சவர் வீதி உலா நடைபெற்றதால் பக்தியுடன் அருகில் கண்டு ரசித்தோம். சுவாமி ரங்கநாதரை பார்க்க இயலவில்லை என்று ஒரு வருத்தம். நடை  சாத்திட்டாங்க. (போனதே ராத்திரி,இதில வருத்தம் வேற ?!)

முக்கொம்பு

பகலில் சென்ற ஒரே இடம் . மிக அற்புதமான காவேரி நதி மூன்றாக பிரியும் இடம். ரொம்ப நேரம் அங்கே இருந்தோம்,திரும்பி வர மனமே இல்லை.     இங்கிருந்து கல்லணை வரை காவிரி நதியின் அழகை அள்ளி எடுத்து கேமராவில் வைத்துகொண்டோம்.

நீதிமன்றம் பக்கத்தில் இருக்கும் ஐயப்பன் கோவில் போகவேண்டும் என இருந்தோம், நேரம் சரியாக வாய்க்கவில்லை.

ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு விதத்தில் மிக பிடித்திருந்தது. சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் திரும்பிய பக்கமெல்லாம் நிறைய பெரிய ஹோட்டல்கள் !!

திருச்சி ரோட்ல குறைந்தது ஒரு 200 பேரிடமாவது பேசி இருப்போம்.  ஸ்ரீனிவாச நகர்(தங்கி இருந்த இடம்) எப்படி போகணும் என்ற ஒரு கேள்வியை மட்டும் ஒரு நாளைக்கு பத்து முறை கேட்டு இருப்போம்,அப்ப மத்த இடங்கள எப்படி விசாரிச்சு இருப்போம்னு பாருங்க !!திருச்சி மக்கள் மிக பொறுமையா லெப்ட், ரைட்,ஸ்ரைட் னு சொன்ன விதம் இருக்கே ! அழகோ அழகு !! முதல் நாள் கேட்ட ஆளிடமே மறுநாளும் கேட்டோமான்னு வேற தெரியல !! எங்க பார்த்தாலும் பாலமா இருக்கு (எது எங்க போகுதுன்னு கண்ணுக்கு தெரிற மாதிரி  போர்ட் வச்சா என்ன மக்களே !?)  ஆனா அடுத்து முறை திருச்சி போனா நான் நிறைய பேருக்கு வழி சொல்வேன் (அந்த அளவு அனுபவப்பட்டாச்சு !)

பொதுவா பார்க்கும் போது ஊர்ல குப்பைகள் அவ்வளவா கண்ணுக்கு படல. சுத்தமாக தெரிந்தது. ஆனா மலைகோட்டை போனபோது பயங்கர மழை. அங்க இருக்கிற ரோட்ல தண்ணி நிறைய தேங்கி மக்கள் நடக்கவே முடியல...ரொம்ப கஷ்டபட்டாங்க ! அந்த தண்ணியும் சாக்கடை கலந்த மாதிரி இருந்தது ! அங்கே ஒருத்தரிடம் கேட்டேன், 'மழை பெய்தா இப்படிதான் மத்த நேரம் பிரச்சனை இல்லை' என்றார். மக்களின் இந்த சகிப்புத்தன்மைதான் அரசியல்வாதிகள், அதிகாரிகளை காப்பாற்றி வருகிறது...!!

எங்கே பார்த்தாலும் பசுமை, கம்பீரமாக பாய்ந்து ஓடும் காவேரிநதி,அழகான கட்டிடங்கள், புகழ்பெற்ற  கல்வி நிறுவனங்கள்,வணிக வளாகங்கள், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கோவில்கள், இனிமையாக பழகும் மக்கள் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்......!! மொத்தத்தில் திருச்சி எங்கள் மனதில் நிரந்தர இடத்தை பிடித்துவிட்டது...!

வாழ்க எம்மக்கள் ! வளர்க அவர்தம் பெருமை !!

பிரியங்களுடன் 

உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா