Monday, October 17

11:32 AM
28




கூடன்குளம் தனது அடுத்த போராட்டத்தை தொடங்கி போராடிக்  கொண்டிருக்கிறது. இதை  போராட்டம் என்று சொல்வது கூட முரணோ என தோணுகிறது. ஒழுங்குடன் மிக நேர்த்தியாக அமைதியாக கட்டுபாட்டுடன் நடக்கும் ஒன்றை போராட்டம் என்று சொல்வதைவிட மக்களின் எழுச்சி  எனகூறுவது பொருத்தமாக இருக்கும். புத்தியில் போராட்டம் என்றால் அடிதடி ஆர்பாட்டம் என்றே பதியப்பட்டு இருக்கிறதே!? கூடன்குளம் மக்களை குறித்தும், முன்னெடுப்பவர்களை பற்றியும் ஏகப்பட்ட வதந்திகள்...ஊடகங்கள் ஒரு பக்கம் திசை திருப்புகிறது என்றால் மக்களோடு மக்களாக கலந்திருக்கும் சிலர் வாய்க்கு வந்ததை சொல்லி திரிகின்றனர்.(தமிழ் நண்டு கதை இப்போ ஏனோ நினைவுக்கு வருகிறது...!!?)

பல வதந்திகள் உலவினாலும் முக்கியமான சில இங்கே...

* அணுஉலையில் வேலை செய்தவர்களை அடித்து ஊரைவிட்டு அனுப்பி  வைத்ததாகவும்... 

* சாலையில் வண்டிகள் செல்ல வழிவிடாமல் நடுரோட்டில் கற்களையும், முட்களையும் போட்டு வைத்திருப்பதாக, அதனால் தான் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாகவும்...

* ஒரு மத சாரார் தங்களை முன்னிலை படுத்தவும்...
  
* முக்கியமாக அமெரிக்காவில் வசித்தவர், உண்ணாவிரதத்தின் முன்னால் நின்றதால் அமெரிக்காவின் கைக்கூலி இவர் என்றும்...! 

* மக்களை போராட சொல்லி ஒரு சிலர் வற்புறுத்துவதாக, யாரையும் வேலைக்கு செல்லவிடாமல் தடுப்பதாக...

* பணம் கொடுத்து கூட்டத்தை கூட்டுவதாகவும்... 

இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்...

அங்கே அப்படி என்ன அசாதாரண நிலை நிலவுகிறது என்று அறிய நானும் என் கணவரும் நேற்று நேரில் சென்றோம், ரோட்டில்  கற்கள் போடபட்டிருக்கிறது பெரிய வாகனங்கள் செல்லாது என்று கேள்விப்பட்டதால்(?) கார் வசதிபடாது என்று பைக்கில் இருவரும் கிளம்பினோம்...(இது தவறான முடிவு என்று அப்போ தெரியல !)நெல்லையில் நாங்கள் இருக்கும் இடத்தில இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது கூடங்குளம். இரண்டரை மணிநேர பயணம், கடும் வெயில் அப்படியே தலையை சூடாக்க வழி நெடுக குளிர்பானம் பருகி வெயிலை சமாளித்து(வென்று) கூடங்குளத்தை அடைந்தோம். 

ஊரை அடைந்ததும் எங்களை வரவேற்றது அங்கே ஓரமாக கிடந்த கற்கள்...!?  ஊர்முழுதும் ரவுண்டு அடித்தோம். வேறு எந்த அதிகபடியான வித்தியாசமும் எங்களுக்கு தெரியவில்லை. வெகு இயல்பாக இருந்தது ஊர். முதலில் கூடல் பாலாவை பார்க்க சென்றோம்...(இதை பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்)

பெண்கள் கூட்டம் அல்ல வெள்ளம்  


பின் அவரிடம் இருந்து விடைபெற்று கொண்டு மக்கள் கூடி இருக்கும் இடத்திற்கு சென்றோம். போடபட்டிருந்த பந்தல்களில் பெண்கள் கூட்டம் மிக அதிகம். இரு பெண்கள் சேர்ந்து இருந்தாலே அந்த இடம் கலகலப்பாக இருக்கும்...ஆனால் இங்கே பல ஆயிரம் பெண்கள் சிறிதும் சத்தமில்லை...ஒருவருக்கு ஒருவர் பேசுகிறார்கள் ஆனால் சத்தம் கேட்கவே இல்லை...!! 

நாங்கள் சென்ற நேரம் கேரளா திரிச்சூரில் இருந்து ஒரு பெண் கல்லூரிவிரிவுரையாளர்  வந்திருந்து மைக்கில் பேசிகொண்டிருந்தார்...அவரது மலையாள பேச்சை ஒருவர் மொழி பெயர்த்தார், மொழி பெயர்க்க தேவையும்  இருக்கவில்லை,அனைவருக்கும் மொழி புரியவே செய்தது. மொழி வேறாக  இருந்தாலும் மனித உணர்வுகள் ஒன்றுதானே... அவர் 'கேரளமக்கள் உங்கள் கூட இருக்கிறார்கள், அவர்களின் ஆதரவு நிச்சயம் உங்களுக்கு உண்டு, மூடும் வரை ஓயமாட்டோம் ஓயமாட்டோம்' என்று கூற மக்களும் அதை தொடர்ந்து கூறினார்கள். மக்களின் குரல், கைதட்டல் இரண்டும் மிக மெதுவாகவே கேட்டது. (மக்கள் அதிகம் உணர்ச்சிவசபடவில்லை என்பதை புரிந்துகொள்ளமுடிந்தது)  நெருக்கமாக அமர்ந்து இருந்தாலும் அமர்ந்தவர்கள் அப்படியே இருக்கிறார்கள், சிறிதும் சலனமின்றி...


பெண்கள் அருகில் சென்று நான் நின்று கொண்டிருந்தேன், அமர்ந்திருந்த மூன்று பெண்கள் என்னை உட்காரசொல்லி நிழலில் இடம் ஒதுக்கி தந்தனர். கடல்மணலில் அமர்ந்து அமைதியாக ஒவ்வொருவரின் பேச்சையும் கவனித்து கொண்டிருந்தேன். அவர்களிடம் பேசியதில் இருந்து சில.....

காலை ஒன்பது மணிக்கு இந்த பந்தலுக்கு வந்து விடுகிறார்கள். மாலை ஐந்து அல்லது ஆறுமணி வரை இருக்கிறார்கள். இத்தனை மணிக்கு வந்தாக வேண்டும் என்று எந்த கட்டாயமும் யாருக்கு விதிக்க படவில்லையாம். அவர்களின் சூழ்நிலைகளை பொறுத்து எப்பவும் வரலாம் போகலாம். வலியுறுத்தல் இல்லை. 

இதை நேரிலும் நான் பார்த்தேன்...கோவில் திருவிழாவிற்கு வருவதை போல உற்சாகமாக கூட்டங்கூட்டமாக நடந்து வந்துகொண்டே இருந்தார்கள்... இரவிலும் நிறைய பேர் இங்கேயே தங்கிவிடுகிறார்கள். ஒரு பெண்ணிடம், 'தண்ணி, மற்ற வசதிக்கு என்ன பண்ணுவீங்க' என்று கேட்டதும்  ஒரு இடத்தை சுட்டி காட்டினார்...அங்கே இருக்கிறது என... 

அப்போது ஒரு தனியார் பஸ்ஸில் பக்கத்து ஊரில் இருந்து மக்கள் வந்து இறங்கினர். அதை பார்த்ததும் 'அப்ப பிற பஸ்கள் ஏன் வருவது இல்லை' என்று கேட்டதற்கு, 'அது தெரியலைங்க' என்று அப்பாவித்தனமாக கூறினார் ஒரு பெண்மணி.

விவசாயம் தான் இவர்களது முக்கிய தொழில். கூடன்குளத்தை  பொறுத்தவரை இப்பூமி மழை மறைவு பிரதேசம்...வேறு முக்கிய வேலைகள் இல்லாததாலும், மின்சாரம் இங்கே உற்பத்தி செய்யபட்டால் அதனை சார்ந்து வேறு பல தொழிற்சாலைகள் இங்கே உருவாகும், வேலை வாய்ப்புக்கு பஞ்சமிருக்காது என்கிற நியாயமான எதிர்பார்ப்பு அணுஉலை இங்கே அமைய காரணங்கள். அணு உலையிலும் வேலை கிடைக்குமே என்பதும் ஆரம்பத்தில் மக்கள் அமைதியாக இருந்ததுக்கு ஒரு காரணம். இவ்வூர் மக்கள் நாற்பது பேர் மட்டும் அங்கே நிரந்தர வேலையில் இருக்கிறார்கள்.

இடிந்தகரையில்


ஒரு மணி நேரம் அங்கே இருந்துவிட்டு அடுத்து இடிந்தகரை ஊருக்கு சென்றோம். சர்ச் முன்னால் பலர் உண்ணாவிரதம் இருந்தனர். படுத்துக்கொண்டும் அமர்ந்து பேசிக்கொண்டும் இருந்தனர். எங்களை பார்த்ததும் நீங்க எங்கிருந்து வரீங்க ? எந்த இயக்கம்(?) எதுக்கு வந்திருக்கீங்க என்று தொடர் கேள்விகள் கேட்டார் ஒருவர். கேள்விகளுக்கு பின்னே இருந்தவை எங்களுக்கு ஓரளவு தெரியும் ஆதலால் பொறுமையாக 'சும்மா சுத்திபார்க்க வந்தோம்' என்றோம். அவதி பட்டவர்களுக்கு தான் தெரியும் அதன் வேதனை ! வெளியே போடபட்டிருந்த பந்தலில்  ஊர் மக்கள் அமர்ந்திருந்தனர்.

இங்கிருந்து சில அடிகள் தூரத்தில் கடல் இருந்தது.மீன்பிடிக்க செல்லாததால் படகுகள் அனைத்தும் கடலோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அங்கிருந்து பார்க்கும் போது அணுஉலை மிக அருகில் தெரிந்தது. 

கடல் நீரில் சிறிது நேரம் நின்றேன்...'மனிதர்களின் எந்த உணர்வை பற்றியும்  எனக்கு அக்கறை இல்லை, இக்கரையை தொடுவது ஒன்றே என் வேலை' என்பது போல் இருந்தது வேகமாக ஓடிவரும் அலைகளை பார்க்கும் போது !  

வெளியே இருக்கும் சிலர் இந்த விசயத்திற்கு மதசாயத்தை பூசுகிறார்கள். ஆனால் எந்த வேறுபாடும் இவர்களை வேறுபடுத்தவில்லை...அவரவர் நம்பிக்கை அவரவருக்கு என்பதில் மிக தெளிவாக இருக்கிறார்கள்.உண்ணாவிரத்தின் போது சர்ச்சில் காலையில் நடக்கும் பிராத்தனையில் இந்துக்கள் கலந்துகொள்கிறார்கள்...! இங்கே நடைபெற்ற விசுவாமித்திரர்  யாகத்தில் பாதிரியார் கலந்துகொண்டிருக்கிறார் ! 




என்ன முடிவு செய்யபோறாங்க?

'அணுஉலையால் ஆபத்தில்லை' 'உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது' என்பதற்கு  எந்த உத்தரவாதமும் இதுவரை சரியாக கொடுக்கப்படவில்லை.இது ஒரு பக்கம் இருந்தாலும், நம்பிக்கை கொடுக்கப்படும் வரையாவது அணுஉலை வேலைகளை நிறுத்தி வைக்கலாம் என்பதை ஏன் மத்திய அரசு கவனத்தில் கொள்ளவில்லை...?!

கணினியின் முன் அமர்ந்து ஆயிரம் சமாளிப்புகள், சப்பைக்கட்டுகள்,வாதங்கள் ,கருத்துக்கள் பேசலாம் ஆனால் நேரில் அந்த மனிதர்களை பார்க்கும்போது ,அந்த சூழ்நிலையில் சிறிது நேரம் இருந்தபோது எங்களுக்கு ஏற்பட்ட உணர்வுகள், உண்மையில் அதை எழுத்தில் எழுத எனக்கு தெரியவில்லை. மனிதம் அதன் உணர்வுகள் எங்கே என்றாலும் அது மதிக்கப்படவேண்டும்...மனிதன் சுகமாய் வாழவே இந்த மின்சாரம், அதுவே மனிதர்களின் கலக்கத்திற்கும், உயிரினை அச்சுறுத்தும் இடமாக இருக்கிறது என்கிறபோது கைவிடுவதை பற்றி யோசிப்பதில் தவறு என்ன இருக்கிறது...?!!

மனிதத்தை கொன்று மனிதனை வாழவைப்பதை பற்றி பேசுவது  வேடிக்கையாக இருக்கிறது !

அந்த அப்பாவி உயிர்களை அச்சுறுத்தி, பீதியுடன் வாழச்செய்து பெறக்கூடிய மின்சாரம் எதை பூர்த்தி செய்ய...? எதை வளமாக்க ? எதன் விருப்பத்தை நிறைவேற்ற ?  
   
யோசிக்குமா அரசாங்கம் !!?

நேரம் கிடைக்கும் போது முடிந்தால் இதையும் படித்துவையுங்கள் kudankulam2011

பின்குறிப்பு 

பதிவர் கூடல்பாலாவிற்கு என்ன ஆயிற்று ?! அடுத்த பதிவில் பார்க்கலாம்.

  

Tweet

28 comments:

  1. கூடங்குளம் போராட்டம் பற்றிய உண்மைகளை அறிய விரும்புவர்கள் மற்றும் அறியாமல் விமர்சிப்பவர்கள் தங்களைப்போல் நேரில் வந்து நிகழ்வுகளைக் காண வேண்டும் ....

    ReplyDelete
  2. இந்த அரசாங்கம் எப்போது உண்மையை சொல்லி உள்ளது. இந்த விஷயத்துக்கும் அரசியல் சாயம் பூசும் சில முட்டாள்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் ? மக்கள் விழித்துக்கொள்ளக் கூடாது என்றுதானே?


    இதை செய்தோம், அதை செய்தோம் என்று சொல்கிறார்கள், ஆனால் இதுவரை நாம் இழந்துவிட்டது ஏராளம்.

    வாச்சாத்தி கொடுமைகள் தீர்ப்பு வந்த பின்தான் எனக்கு தெரிய வருகிறது. இதில் தெரிகிறது நம் அரசாங்க லட்சணம். இன்னும் எத்தனை உள்ளதோ.


    மக்கள் நலனை துளியும் சிந்திக்காத அரசு உள்ள இந்த நாட்டில் இருக்கவே வலிக்கிறது. ஆனால் இந்த மக்களுக்கு உழைக்க வேண்டும் என்ற உறுதி மட்டும் உள்ளது.

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. மேலும் பல தகவல்கள் அறிய இயன்றால் இந்த லிங்க் சென்று படிக்கவும்

    http://suryajeeva.blogspot.com/2011/10/blog-post_17.html

    ReplyDelete
  5. அது ஒரு உணர்ச்சிபூர்வமான பயணமாக அமைந்திருக்கும் என்பதை படிக்கும் போதே புரிந்துகொள்ள முடிகிறது

    ReplyDelete
  6. காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்,
    ஞாலத்தின் மாணப் பெரிது.

    தக்கநேரத்தில் தாங்கள் செய்த இச்செயல் போற்றத்தக்கது... சகோ...

    வாழ்த்துகள்.....

    ReplyDelete
  7. அப்துல்கலாம் பத்துநாள் அவகாசம் கேட்டுருக்கிறார், விஞ்ஞானிகள் சோதனை செய்து பார்க்கணுமாம், அப்போ இதுவரை எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமதானே இருந்துருக்காங்க...!!!!?

    ReplyDelete
  8. நேரில் சென்று பார்த்து எழுதிய தங்களுக்கு, பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  9. நேரடித் தகவல்கள்
    அனைவருக்கும் போய்ச் சேரவேண்டும்..

    ReplyDelete
  10. Mika arumaiyana pakirvu ithu,Nanku arainthu ezhuthiyamaiku Nanri.Thanks for voicing ur Concern here.Luv to join U supporting U.

    ReplyDelete
  11. பதிவுக்கு நன்றி
    அரசு இந்த இரு குற்றசாட்டுகளுக்கும் பதில் தருவது இல்லை.

    1.அணு உலையில் பணியாற்றுபவர்களுக்கு கதிர்வீச்சினால் பாதிப்பு ஏற்படுத்துகிறது. சுற்று சூழலும் பாதிக்கப் படுகிறது

    2.அணு உலை பயன்பாடு முடிந்த பிறகு அதனை எப்படிஎங்கே dispose செய்வது?
    நன்றி

    ReplyDelete
  12. உபயோகமான பதிவு கவுசல்யா.

    ReplyDelete
  13. கூடன்குளத்துக்கு நேரில் சென்று அங்கே நிலவும் சூழ்நிலைகளை உங்கள் எழுத்தின் மூலமாக பகிர்ந்தது மிக்க மகிழ்ச்சி. அந்த மக்களுடன் நேரில் பார்த்து உரையாடியதுபோன்ற உணர்வு. பகிர்வுக்கு நன்றி கௌசல்யா அக்கா.

    ReplyDelete
  14. பயணம் நம்மை எப்படியெல்லாம் பக்குவபடுத்தும் என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு

    ReplyDelete
  15. @@ koodal bala said...

    //கூடங்குளம் போராட்டம் பற்றிய உண்மைகளை அறிய விரும்புவர்கள் மற்றும் அறியாமல் விமர்சிப்பவர்கள் தங்களைப்போல் நேரில் வந்து நிகழ்வுகளைக் காண வேண்டும் .//

    கூடங்குளத்தில் நான் அறிந்தவற்றில், உணர்ந்தவற்றில் மிக குறைவாகவே இங்கே பகிர்ந்துள்ளேன்.

    எதுவென்றாலும் மக்களின் உணர்வுகள் மதிக்கப்படவேண்டும்.

    உங்களை நான் அங்கே சந்தித்தது, பேசியது மிகவும் மனதிற்கு நெகிழ்ச்சியாக இருந்தது.

    ReplyDelete
  16. @@ suryajeeva...

    நன்றி சூர்யா

    ReplyDelete
  17. @@ Prabu Krishna said...

    //வாச்சாத்தி கொடுமைகள் தீர்ப்பு வந்த பின்தான் எனக்கு தெரிய வருகிறது. இதில் தெரிகிறது நம் அரசாங்க லட்சணம். இன்னும் எத்தனை உள்ளதோ.//

    ஆமாம் அப்போது அது வெறும் செய்தி. அந்த கொடுமை நடந்து காலம் பல கடந்த பின் தீர்ப்பு என்பது சிறு மன ஆறுதல் அவ்வளவே, ஆனால் கொடுமை அனுபவித்தவர்கள் இத்தனை வருடங்களாக பட்ட வேதனைக்கு பதில்!!?

    //மக்கள் நலனை துளியும் சிந்திக்காத அரசு உள்ள இந்த நாட்டில் இருக்கவே வலிக்கிறது. ஆனால் இந்த மக்களுக்கு உழைக்க வேண்டும் என்ற உறுதி மட்டும் உள்ளது.//

    உங்களை போன்ற இளைஞர்கள் மக்களுக்கு உழைக்க தயாராக இருக்கிறார்கள் என்பதே பெரிய விஷயம் அல்லவா...?! மகிழ்ச்சியாக இருக்கிறது.

    விரைவில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். நம்பிக்கையை விடாமல் இருப்போம்.

    உணர்விற்கு நன்றி பிரபு.

    ReplyDelete
  18. @@ நண்டு @நொரண்டு -ஈரோடு...

    நன்றிங்க.

    ReplyDelete
  19. @@ cinecurrydotcom said...

    //அது ஒரு உணர்ச்சிபூர்வமான பயணமாக அமைந்திருக்கும் என்பதை படிக்கும் போதே புரிந்துகொள்ள முடிகிறது//

    உண்மையில் நான் உணர்ந்தவற்றை அப்படியே வார்த்தையில் சொல்ல இயலவில்லை. நான் மறக்க முடியாத பயணங்களில் ஒன்று.

    வருகைக்கு நன்றிங்க.

    ReplyDelete
  20. @@ ராஜா MVS said...

    //காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்,
    ஞாலத்தின் மாணப் பெரிது.//

    உங்கள் வாழ்த்தை ஏற்றுக்கொண்டேன். ஆனால் நன்றி எதுக்குங்க ? நாமும்/நானும் அவர்களை சேர்ந்தவர்கள் தானே.

    கருதிட்டமைக்கு நன்றிங்க ராஜா.

    ReplyDelete
  21. @@ MANO நாஞ்சில் மனோ said...

    //அப்துல்கலாம் பத்துநாள் அவகாசம் கேட்டுருக்கிறார், விஞ்ஞானிகள் சோதனை செய்து பார்க்கணுமாம், //

    நானும் படிச்சேன் மனோ.

    //அப்போ இதுவரை எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமதானே இருந்துருக்காங்க..//

    முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருப்பாங்க அவங்க பாதுகாப்புக்கு...மக்களுக்கு இல்ல !!

    உணர்விற்கு நன்றி மனோ.

    ReplyDelete
  22. @@ middleclassmadhavi...

    நன்றிங்க



    @@ மகேந்திரன்...

    நன்றி மகேந்திரன்



    @@ MyKitchen Flavors-BonAppetit!...

    மிக்க நன்றிங்க.

    ReplyDelete
  23. @@ சார்வாகன் said...

    //1.அணு உலையில் பணியாற்றுபவர்களுக்கு கதிர்வீச்சினால் பாதிப்பு ஏற்படுத்துகிறது. சுற்று சூழலும் பாதிக்கப் படுகிறது//

    //2.அணு உலை பயன்பாடு முடிந்த பிறகு அதனை எப்படிஎங்கே dispose செய்வது?//

    இதற்க்கு பதிலைத்தான் மக்கள் கேட்கிறார்கள்...இதுவரை சரியான பதில் கிடைக்கவில்லை, வெறும் சமாளிப்புகள் மட்டுமே.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க

    ReplyDelete
  24. @@ adhiran...

    thank u for coming friend.

    ReplyDelete
  25. @@ தேனம்மை லெக்ஷ்மணன்...

    நன்றி தோழி.



    @@ Starjan ( ஸ்டார்ஜன் )...

    நன்றி ஸ்டார்ஜன்.



    @@ Surya Prakash said...

    //பயணம் நம்மை எப்படியெல்லாம் பக்குவபடுத்தும் //

    ஆமாம் கண்டிப்பா. அனுபவத்தில் உணர்ந்தேன்.

    முதல் வருகைக்கு நன்றி சூர்யா பிரகாஷ்.

    ReplyDelete
  26. நேரில் சென்று பார்த்து எழுதிய தங்களுக்கு, பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...