புதன், ஜூலை 14

நன்றி சொல்கிறேன்



   
இது எனது ஐம்பதாவது பதிவு.  

அதனால் வழக்கமான எழுது நடை  இருக்காது. (அப்படி எதிர்பார்த்து வந்தால் நான் பொறுப்பு அல்ல)  எல்லோரும் 100, 150, 200 என்று ஜெட் வேகத்தில் போகும்போது 50 கே இந்த அலட்டலா என்று நினைக்க கூடாது.  என்னை பொறுத்தவரை எண்ணிக்கையை விட சொல்லும் கருத்துகள் கூட இருக்க வேண்டும் என்பதே. (அப்ப நாங்கல்லாம் கருத்தே சொல்லலையா னு கோபபடாதீங்க, கிடைச்ச இந்த சந்தர்பத்தில சுய புராணம் கொஞ்சம் தூக்கலாதான் இருக்கும்... கண்டுகாதீங்க )


எனக்குள் இருக்கும் கொஞ்ச எழுத்து திறமையையும் கண்டு என்னை எழுத ஊக்கபடுத்திய என் அன்பான கணவருக்கு முதலில் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.  என் இந்த பதிவு வரை என்னை உற்சாக படுத்தி  கொண்டிருக்கும் என்னவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் உரித்தாகுக...
   
நான் நவம்பரில் எழுத தொடங்கினாலும் பதிவுகளை பிப்ரவரியில் இருந்துதான் தொடர்ந்து எழுதுகிறேன்.  இந்த ஆறுமாதமாக எனக்கு பலரும் தொடர்ந்து ஆதரவு கொடுத்திட்டு வருகிறீர்கள் அவங்களை எல்லாம்  இந்த இடத்தில் குறிப்பிடுவது எனது கடமை...

ஆதிரன்
எல் .கே
ஆசியா
ஜெய்லானி
ஆனந்தி
கே ஆர் பி செந்தில்
மங்குனி அமைச்சர்
விஜய்
பாலசுப்ரமணியன் tanjore
சுகந்தி
எஸ்
ராஜ் குமார்
காஞ்சி முரளி
பாலசுப்ரமணியன்
சக்தி தாஸ்
சுதந்திரா
பிரியமுடன் பிரபு
தேவா
nj மகேஷ்
சந்த்யா
ஸ்டார்ஜான்
S .மகாராஜன்
பனித்துளி சங்கர்
வாணி
சத்யா  ஸ்ரீதர்
mohammed mafas
நிலாமதி
abuanu
பிரியமுடன் வசந்த்
பாலா
உலவு.காம்
ராச ராச சோழன்
agrose agrose
குமார்
தெம்மாங்கு பாட்டு
தமிழ் பெஸ்ட்
கணேஷ்
chezhi - anbu
சௌந்தர்
யுக கோபிகா
சரண்
சசிகுமார்
தோழி
G3
melbkamal
செந்தில்
மனோ சாமிநாதன்
அப்பாவி தங்கமணி
அம்பிகா
தமிழ் குடும்பம்
தேவன்மாயம்
ஜோதி
ரமேஷ் கார்த்திகேயன்
சந்தோஷ் குமார்
சதீஷ் குமார் தங்கவேலு
S . குமார் 
 .
மிகுந்த மன நிறைவுடன் அனைவரையும் இங்கு நினைவு கூருவதில் சந்தோசம்  அடைகிறேன்.  இந்த உறவுகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்ற பேராசை அதிகம் உண்டு.  என் எழுத்துகளையும் பொறுமையாக வாசித்து , என்னை தொடர்ந்து கொண்டிருக்கும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் கோடி.

முக்கியமாக நண்பர் ஆதிரன் (மகேந்திரன் ) அவர்களுக்கு நான் முதல் மரியாதையை செய்தே ஆக வேண்டும். முதன்முதலில் முகம் அறியா என்னையும் என் எழுத்துகளையும் ஊக்கபடுத்தி முதல் பின்னூட்டம் அளித்தது அவர்தான் . அவரது தமிழ் மிகவும் அருமையாக இலக்கண செறிவுடன் இருக்கும், அவர் என்னை பாராட்டியது எனக்கு பெரும்பேறுதான்.

சொந்த புலம்பல்கள்

ஆரம்ப  காலத்தில் இடுகை, பின்னூட்டம் போன்ற தமிழ் வார்த்தைகள் கூட எனக்கு புரியாத அன்னியமாக தான் தோன்றியது. சென்னை வளர்ப்பு என்ன செய்வது...?! ( அப்ப சென்னையில் வளர்ந்த நாங்க நல்லா எழுதலையான்னு சண்டைக்கு வந்திடாதிங்க . நான் தமிழை கொஞ்சம் சரியா படிக்காம போயிட்டேன் அப்படின்னு வேணா மாத்திக்கிறேன் ) இந்த பதிவுலகத்தை  நினைக்கிறப்ப கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.....(ஒரு வார்த்தை யதார்த்தமா சொல்ல முடியலபா ..?!)

ஆனா நான் ரொம்ப நல்லவ ( நானேதான் ) இப்பவரை யாரும் என் எழுத்தை தவறாக சொல்லலையே...!! ( அப்படியே சொன்னாலும் கவலைபடுறதா இல்ல... ஹா ஹா )
ஒரு வருத்தம் என்னனா என் பதிவுகள் கொஞ்சம் சீரியஸா ( கொஞ்சம் இல்ல நிறைய - மனசாட்சி )  இருக்கிறதால, என்னையும் அப்படியே எண்ணி எல்லோரும் பார்க்கிறதுதான்  ரொம்ப பீலிங்கா இருக்கு.... இனியாவது நம்புங்க நான் ரொம்ப ஜாலியான ஆளுதான். 

இதை பத்தி ஏன் சொல்றேனா, நகைசுவையா எழுதுற பதிவர்கள் என் பதிவையும் படிக்கணும், சீரியஸா இருக்குனு வராம போய்விடகூடாது, வந்து கிண்டலாவது பண்ணிட்டு போங்க என்று இதன் மூலம் அன்பாக கேட்டு  கொள்கிறேன். ( அப்பத்தான் முடி கொட்ட கொட்ட யோசிச்சு, கை வலிக்க வலிக்க டைப் பண்ணதுக்கு கொஞ்சம் ஆறுதலாகவாவது  இருக்கும்...!!?. )

அதைவிட எல்லா பெண்களுக்கு உள்ளேயும்  நகைசுவை உணர்வு உண்டுதான், அமைகிற வாழ்க்கையை பொறுத்துதான் இந்த உணர்வு கூடும் , குறையும் அவ்வளவுதான் வித்தியாசம். ( ஐய்யோடா... இது தாம்பத்தியம் பதிவு இல்லை..... இது வேற.... வேற..... பேச்சை மாத்து.....  மனசாட்சி ...ம் .ம் )

முக்கியமான விஷயம்

எனக்கு பின்னூட்டம் போடுபவர்களுக்கு நான் சரியாக போட இயலாமல் போய் விடுகிறது. அதற்கு முதலில் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நேரம் இன்மை ஒரு காரணம் என்றாலும், சிஸ்டம் அடிக்கடி மக்கர் பண்றது என் பசங்க unlimited ஆ games download பண்ணிடுவாங்க , அதனால் வர்ற so called பிரச்சனைய சரி பண்ணவே வெறுத்து விடும் . மறுபடி அவங்க download பன்றதும் நான் சரி பண்றதுமா தொடர்கதையா போய்ட்டே இருக்கிறது ( இந்த தாம்பத்தியம் தொடர் எப்ப முடியும்...? மனசாட்சி... ஷ் இதெல்லாம் கேட்கபடாது..... சரியா )

அதனால வோட், கமெண்ட் உங்கள் பதிவுகளுக்கு நேரத்துக்கு வராததுக்கு மன்னிச்சி வுட்டுடுங்க.

சக பதிவர்கள்


எல்லோருமே எனக்கு முக்கியமானவர்கள் தான் என்றாலுமே குறிப்பிட்ட சிலரை இங்கே விமர்சித்தே ஆக வேண்டும் ( இதை விட்டா வேற சந்தர்ப்பம் கிடைக்காது )

1 .  ஆதிரன் -----      (முதல் follower  ஆனதே  போதும் என்று சரியாக வருவதே இல்லை.)
தொடர்ந்து வாங்க நண்பா...

2 .  கார்த்திக் (LK)----பதிவு  போட்ட அடுத்த நொடி நண்பர் ஆஜர்...? எனக்குன்னு இல்ல, பலரின் பதிவிலும் நண்பர் தான் முதலில். பல புது பதிவர்களையும் தனது தளத்தில் அறிமுக படுத்தும் நல்ல எண்ணம் கொண்டவர். ( கவிதைக்கு கவிதையில் பதில் எல்லாம் கொஞ்சம் ஓவர்தான் )

3 .  ஆசியா ----------  எனது அன்பான தோழி. இப்ப பக்கத்தில்தான் இருக்காங்க  (அட்ரஸ்
தெரிந்தால் போய் அவங்க சமையலை ஒரு கை பார்க்கலாம்...ம்...!!)

4 .   ஆனந்தி --------  (மீரா ஜாஸ்மினை டிவியில் பாத்தாலும் கூட இவங்க ஞாபகம்தான் வருகிறது!)  இவங்க கமெண்டும் மீரா ஜாஸ்மின் மாதிரி அழகா ,  அடக்கமா, அளவா இருக்கும்...!!?

5 .   சித்ரா ------------  எந்த ப்ளாக் போனாலும் இவங்க முகம்தான் தெரியும்..! அப்படி
சூறாவளி போல் சுழன்று சுழன்று போறாங்க...! இவர்கள் இதன் மூலம் பதிவர்களை ஊக்கபடுத்துறாங்க... தொடரட்டும் அவர்களின் இந்த சமூக  சேவை...!!

6.  சந்த்யா ---------- தாய் மொழி தமிழ் இல்லைனாலும் தமிழை காதலிக்கும் அருமையான தோழி. என் எழுத்துகளை ரசித்து பின்னூட்டம் போடுவார்கள். அன்பிற்கு உரியவர்களில் மிக நெருங்கியவர்.  

7 .  வானதி -------  இவங்க எழுதுவதே கவிதை மாதிரிதான் இருக்கிறது ( இது தெரியாமல் எனக்கு கவிதை எழுத தெரியாதுபா என்று கவலை படுறாங்க ...என்ன சொல்ல ?)

8 . மனோ மேடம்-- எனக்கு முதலில் ராணி கிரீட விருதை அன்பாய் கொடுத்தார்கள். அவங்களுக்கு இங்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லிகிறேன்.  

9 . ஜெய்லானி------ இரண்டு விருதுகள் கொடுத்து என்னை வாழ்த்திய சகோதரனுக்கும் இங்கு நன்றி சொல்லி கொள்கிறேன். 

10 . சௌந்தர் ------- இவரது பதிவுகள் ரசிக்கும்படி  இருக்கும் பேருக்கு ஏற்றபடி...! ( எங்க வோட் போட போனாலும் அங்க முன்னாடியே இவரது வோட்தான் இருக்கும்..?! )

11 .  சசிகுமார் ---- இவரது பிளாக்கர் டிப்ஸ் எனக்கு ஆரம்ப நாட்களில் கை கொடுத்திருக்கிறது அதற்காக இவருக்கும் ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ். 

12 . தமிழ் மதுரம்-- நல்ல இனிமையான தமிழை படிக்கணும் என்றால் இவரது எழுத்தை வாசிக்கலாம். எனக்கு பிடித்த தளங்களில் ஒன்று.  

எனது follower இல்லாதவர்களில் குறிப்பிடத்தக்கவர் சூரியாகண்ணன் -- இவர் தளத்தில்  இருந்தும் சில விசயங்களை கற்று  இருக்கிறேன். என் மூத்த மகன் இவரது ரசிகன்.

அப்புறம் விக்னேஸ்வரி , கீதா, அமைதிசாரல், Menagasathia, Gayathri, யாதவன், .....இன்னும் சொல்லிட்டே போகலாம் . என்னை தொடராமல் தொடர்பவர்கள் இவர்களைப்போல் இன்னும் இருக்கிறார்கள்.... அவர்கள் எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை சொல்லி கொள்கிறேன் . 

வோட் அளித்து என் பதிவுகள் பலரையும் சென்று அடைய  துணை புரிபவர்களையும் பெயர் கூற விட பட்டவர்களையும் இங்கே நினைவு கூர்ந்து நன்றி சொல்லி கொள்கிறேன்.  


மீண்டும் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியும் வணக்கமும்....

(பி.கு)
அடைப்பு குறிக்குள் இருப்பது எல்லாம் ச்சும்மா....தான் .  யாருக்கும் பிடிக்கவில்லை என்றால் பாவம் போகட்டும் என்று விட்டுடுங்க.....!!

பதிவு கொஞ்சம் பெரிதாகிவிட்டது (இதை  தொடர் பதிவா போட்டு இருக்கலாமோ ....?! )


                                                                


  

செவ்வாய், ஜூலை 13

உறங்காத இரவு


                          
                      
                         மற்றுமொரு தூங்காத இரவு
                      
                         உன்னால்.... நீயோ நித்திரையில்...!
                      
                         என்ன பிழை கண்டாய் என்னில்...?
                      
                         நீ எழுதும் எந்த வரியும், எனக்கு
                      
                         தோன்றுமே கவிதையாய்...,
                      
                         நீ எழுதும்போது என் பெயரும்
                      
                         கூட  அழகுதான் , வியந்திருக்கிறேன்
                      
                         பலமுறை....! உனக்கு அப்படி
                      
                         தோன்றாதது விந்தையே..?!
                      
                         ஒத்துகொள் இன்றே, நான்
                      
                         உன்னில் கொண்டிருக்கும் அன்பே
                      
                         பெரிதென்று...! மன்னித்து
                      
                        விட்டு விடுகிறேன் உன்னை...!!

                                                                                                       



சனி, ஜூலை 10

டீன்ஏஜ் கர்ப்பம் யாரால் ...?! தாம்பத்தியம் பாகம் 11







முந்தைய பதிவில் வரதட்சணைக் கொடுமை பற்றி பகிர்ந்தேன்.  எனது 
தாம்பத்தியம் தொடரே முக்கியமாக கணவன், மனைவியின் கருத்து வேறுபாடுகளால் பாதிப்புக்கு உள்ளாகும் அவர்களின் குழந்தைகளுக்காகவே தான் .   அவர்கள் மனதாலும், உடம்பாலும்  படும்பாடுகளைத்  தெளிவு படுத்தத்தான்.  இதுவரை ஆண், பெண் அவர்களின் நிறை, குறைகள் எந்த விதத்தில் குடும்ப உறவில் பங்குபெறுகிறது என்றும் வரதட்சணை கொடுமை போன்ற காரணிகள்,  பெற்றவர்கள், உறவினர்கள், நண்பர்களால் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏற்படக்கூடிய சிக்கல்கள் போன்றவை பற்றியும் பார்த்தோம்.  இனிதான் தாம்பத்திய சீர்குலைவினால் குழந்தைகளின் எதிர்காலம் எப்படி எல்லாம் பாதிக்கப்  படுகிறது என்பதை பார்க்கவேண்டும்.


கணவன் , மனைவி உறவு சீராக இல்லை என்றால் வேறு யாருக்கும் எந்த பாதிப்பும் கிடையாது  ஆனால் நேரடியான பாதிப்பு அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்குத்தான்.  இதை பற்றி கருத்து வேறுபாடு நிறைந்த எந்த பெற்றோரும் எண்ணுவதே கிடையாது என்பதுதான் மிகுந்த சோகம். அவர்கள் பிள்ளைகளின் மனநிலையை பற்றி உண்மையில் கவலைப்  பட்டார்கள் என்றால் வீட்டில் சண்டையே இருக்காது.  பிள்ளைகளும் நல்ல சூழ்நிலையில் நன்றாக வளர்ந்து எதிர்காலத்தில் தங்களது குடும்பத்தையும் அப்படியே பார்த்துக்  கொள்வார்கள்.  இந்த நல்ல மனநிலை வாழையடி வாழையாக தொடரும், அவர்கள் வாழும் சமூகமும் சிறப்பாக இருக்கும்.

சமூகம் என்ன செய்யும்...??
  
பலரும் எந்த பிரச்சனை விஸ்பரூபம் எடுத்தாலும் உடனே சமூகத்தை பழிக்க தொடங்கி விடுவார்கள்....  "வர வர சமூகம் கெட்டுபோய்விட்டது"   என்று சொல்வதை  சுத்த முட்டாள்தனம் என்பேன்.  சமூகம்னா என்ன....?  நீங்களும்  நானும் சேர்ந்ததுதானே....!! நாம சரியா இருக்கிறோம் என்றால் சமூகம் எப்படி கெட்டு  போகும்...??

ஒரு நாலு சுவற்றுக்குள் ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து அன்பையும் பாசத்தையும் பரிமாறி ஒற்றுமையாக இருக்க முடியவில்லை என்றால் சமூகத்தை பற்றி மட்டும் குறை சொல்ல என்ன தகுதி இருக்கிறது....?? இல்லை என்றால் சமுதாயத்தை சீர்படுத்தப் போகிறேன் என்று சொல்கிறவர்கள் முதலில் உங்கள் வீட்டை பாருங்கள் .... அதை சீர்படுத்தினாலே போதும் நாடும், இந்த சமூகமும்  உருப்பட்டு விடும்.
  
வீட்டில் என்ன நடக்கிறது...? நம் குழந்தைகள் எப்படி, என்ன மனநிலையில் வளருகிறார்கள்.? என்றே பலரும் பார்ப்பதே  இல்லை.  ஆண் தனது  ஆண்மை  நிரூபிக்கப் பட்டுவிட்டது என்பதையும்,  பெண் தான் மலடி இல்லை என்பதை தெரிந்துக்  கொள்ளவும் பிள்ளைப்  பெற்றுக்  கொள்கிறார்களோ என்றே பெரும்பாலும் எனக்கு  தோன்றுகிறது....??!!

தங்கள் பிள்ளைகள் எங்கே போகிறார்கள், யாருடன் பழகுகிறார்கள் என்றே தெரியாமல் முக்கியமாக பெண் பிள்ளையை பெற்ற வீட்டில் இருக்கும் தாய் கவனிப்பதே இல்லை.  இப்போது  இருக்கிற காலக்கட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றோ அல்லது இரண்டு குழந்தைகளே   இருக்கிறார்கள்,  அந்த இரண்டு பேரை சரியாக வளர்க்க முடியவில்லை என்றால் அதைவிட வேறு என்ன முக்கியமான வேலை பெற்றவர்களுக்கு இருக்கமுடியும்...??

நீங்கள் குடும்பத்திற்காக ஓடி ஓடி சம்பாதித்தாலும் அதை அனுபவிக்க குழந்தைகள் "நல்ல முறையில் வளரவில்லை"  என்றால் நீங்கள் "உழைத்த உழைப்பு விழலுக்கு இறைத்த நீர்தான்"

நீங்கள் இறைத்த நீர் எப்படி வீணாகிறது என்பதற்கு, இரண்டே இரண்டு கொடுமையான, வேதனையான உதாரணங்களையாவது இங்கு குறிப்பிட்டே  ஆகவேண்டும். சாதாரணமாக மேலோட்டமாக சொல்வதைவிட உண்மையில் நடந்தவற்றை விளக்கும்போது நம்பகத்தன்மை  அதிகமாக இருக்கும் என்பது என் கருத்து.

சிறு வயது கர்ப்பம்

சமீபத்தில் ராமநாதபுரத்தில் நடந்த ஒரு சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. ( இது முதல் செய்தி இல்லை, ஏற்கனவே இதே போல் வந்தும் இருக்கின்றன) 15  வயதே நிரம்பிய அந்த  சிறுமி தான் படிக்கும் பள்ளியின் பாத்ரூமில் வைத்து தனக்கு தானே பிரசவம் பார்த்து குழந்தை பெற்று இருக்கிறாள்....??!!  

இந்த விசயத்தில் நாம் யாரை குறை சொல்வது...?

1 .   அவளை கர்ப்பமாக்கிய அந்த முகம் தெரியாத ஆண்,
2 .   அதற்கு விரும்பியோ, விரும்பாமலோ உடன்பட்ட அந்த சிறுமி,
3 .   இருவரும் இணைய காரணமான சூழ்நிலை,

ஆனால் இதை எல்லாம் விட முக்கியமான ஒரு காரணம் அந்த சிறுமியின் பெற்றோர், குறிப்பாக அவளது தாய்..?!!  குழந்தை பிறந்ததில் இருந்து அந்த தாய்க்குத்தான் கவனம் அதிகம் தேவை. ஆனா நாம தான் ஆணும் பெண்ணும் சமம் என்று உரக்க சொல்லிக்கிட்டு இருக்கிறோமே.... குழந்தை வளர்ப்பில் தகப்பன் ஏன் பங்கு பெறுவது இல்லை என்று கூட  ஒரு கேள்வி எழும்....  

இப்படிப் பட்ட விஷயம் பெரிது  ஆனபின் பெற்றோர்கள் இருவரும் ஒருவர்மேல் ஒருவர் குறைச் சொல்லி 'நீ வளர்த்தது சரி இல்லை' என்று மனைவியை  கணவனும் ,  'ஏன் நான் வளக்கிரப்போ,  நீங்க எங்க போனீங்க, இருந்து வளர்க்க வேண்டியதுதானே' என்று  மனைவி கணவனையும்  குறைச்  சொல்லி சண்டை போடுகிறார்களே தவிர இருவருக்கும் சமமான  கடமை உண்டு என்பதை மறந்து விடுகிறார்கள்.

ஆனால்  " இயற்கை பெண்களுக்கே அதிகப்  பொறுப்பை கொடுத்து இருக்கிறது " என்பதுதான் உண்மை. அதுவும் பெண் குழந்தைகளை பொருத்தமட்டில் , ஒரு தாயால் தனது பெண்ணின் மன உணர்வுகளை துல்லியமாக உணர்ந்து கொள்ளமுடியும்.  தன் மகளின் முகத்தில் சிறு வாட்டமோ, சிறு சலனமோ தென்பட்டாலும் உடனே 'என்ன பொண்ணு சரி இல்லையே' என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு அடுத்த ஒருமணி நேரத்துக்குள் உண்மையை கண்டுப்  பிடித்து விடக்கூடிய சாமார்த்தியம் கொண்டவள் தான் ஒரு தாய்.  

அப்படி இருக்கும்போது இந்த மாணவியின் தாயாரால் தனது மகள் ஒன்பது மாதம் வரை ஒரு குழந்தையை வயிற்றில் சுமந்ததை கண்டுப்பிடிக்க முடியாமல் போனது எவ்வாறு.... இது எப்படி சாத்தியம்.......??!!   

தன் மகளின் நடவடிக்கையில் தெரியும் சின்ன மாற்றத்தை  கண்டுக்  கொள்வதில் இருந்து, வயதுக்கு  வந்த தனது மகளின் மாதவிலக்கு தேதி வரை கணக்கு வைத்து, ஒரு மாதம் சரியாக வரவில்லை என்றாலும் என்ன காரணமாக  இருக்கும் ஒரு வேளை சத்து ஏதும்   குறைவாக இருக்குமோ  என்று மருத்துவரிடம் உடனே அழைத்துச்  சென்று உடம்பை பேணும் அன்றைய தாய்மார்கள் எங்கே.....!!  மகள் கர்ப்பமாகி, குழந்தை பெற்று எடுத்த நாள் வரை கண்டுக் கொள்ளாமல் அலட்சியமாக இருக்கிற இன்றைய தாய்மார்கள் எங்கே .....????   

இதற்கு என்ன காரணம்  இருக்க முடியும்...?? என்று ஆராய்ந்தால் பதில் வேறு ஒன்றும் இல்லை....அந்த வீட்டில் கணவன் மனைவி  உறவாகிய தாம்பத்தியம் சரியாக இல்லை என்பதுதான் அடிப்படை காரணம்.  

தாம்பத்தியம் தாறுமாறாக இருப்பதால்தான் அந்த வீட்டில் வளரும் குழந்தைகளும் திசை மாறிப்  போகிறார்கள் . வீட்டில் கிடைக்காத ஏதோ ஒன்றை வெளியில் தேடுகிறார்கள், ஆண்களுக்கு மது, போதை போன்றவையும், பெண்களாக இருந்தால் கர்ப்பமும் பரிசாக கிடைக்கிறது.  வீட்டில் கிடைக்காத அந்த ஒன்று பெரிதாக வேறு ஒன்றும்  இல்லை 'அன்பு' என்ற அற்புதம்தான்.  இதை ஒரு கணவனும், மனைவியும் தங்கள் குழந்தைகளுக்குக்  கொடுக்காமல் போலியாக ஒரு வாழ்க்கையை வாழ்ந்து தங்களையும் ஏமாற்றி இந்த சமூகத்திற்கு ஒரு மோசமான முன்  உதாரணமாக தங்கள் பிள்ளைகளை நிறுத்துகிறார்கள்.  

இப்படி வளர்ந்த பிள்ளைகளின் எண்ணிக்கை கூடும்போது எப்படி ஒரு சமூகம் நல்ல சமூகமாக இருக்க முடியும்...?   எனவே இனியாவது சமூகத்தை குறை சொல்வதை விடுத்து நம்மை நாம் சரிப்படுத்திக்  கொள்ள முயலுவோம். நாட்டை நாம் பார்க்கும் முன்,  நம் வீட்டை நாடு பார்க்கும் படி  நடந்து கொள்வோம்...!!!?  

தாம்பத்தியத்தில் அடுத்து இதன் தொடர்ச்சியாக சிறுவர்கள், சிறுமியருக்கு  (பெண் குழந்தைகள்) ஏற்படும் பாலியல் கொடுமைகள்......??! 

தொடர்ந்து பேசுகிறேன்...
  
உங்களின் 'மனதோடு மட்டும்
கௌசல்யா    

      

  

புதன், ஜூலை 7

கவி மடல்



எனது பிரியத்துக்கு உரிய தோழனின்(கணேஷ்) கல்யாண நாள் இன்று.  எங்களின் நட்பை நினைகூரும் விதமாய் ஒரு கவி மடல் அந்த நண்பனுக்கு......!!

           இன்று உனது கல்யாண நாள், முழுமையாய்
           என்னால் வாழ்த்த இயலவில்லை..!
           வார்த்தைகள் தடுமாறுகின்றன!!
           என்னவாயிற்று எனக்கு.... ?

           என்னை உன் புன்னகையால்
           கவர்ந்தாய்! உன் அன்பு, அக்கறை 
           கலந்த பேச்சால் என் மென்மையை
           உணர வைத்தாய்...!!  
           ஐந்து வருடமாய் என்னை
           சந்தோசபடுத்தி மட்டுமே பார்த்த நீ
           அழவைத்தும் பார்க்கிறாய் !!

            அன்று.... 
             உன் கல்யாணத்திற்கு வர இயலாது
            என்று மறுத்தும்  , வரவழைப்பேன்
            என்ற உன் வார்த்தையின் தீவிரம் 
            புரிந்து ஓடி வந்தேன்...?! என்னை கண்டதும்
            களங்கமின்றி புன்னகை புரிந்தாய்,
            காலில் விழுந்து, என் அன்பையும்
            ஆசியையும் ஒரு சேர பெற்றாய்!!
            அங்கிருந்த சில நிமிட நேரத்தில்,
            பலமுறை நன்றி சொன்னாய் என்
            வருகைக்கு...!! மிரட்டி வர வைத்துவிட்டு
            நன்றியா ? போடா வெங்காயம் என்று
            ஆசிர்வதித்து விட்டு வந்தேன்??!!

            நீ  எனக்கு தூரத்து உறவாம்,
            நட்பால் நெருங்கியதை நாம் அறிவோம் !!            
            மற்றவர்களுக்கு நாம் தாய், மகன்
            உறவு முறைதான்.... அதைவிட
            புனிதமான உறவு, நாங்கள்
            நண்பர்கள் என்பேன்....!! எனக்கு
            சேவகனாய், தோழனாய், சில நேரம்
            தாயாய் யாதுமாகி  நின்றாய்!!

            எங்கோ இருந்தும் நினைவுகளால்
            தொடர்ந்து கொண்டிருப்பாய் !!  சிறு 
            தலைவலிக்கும்,பதறி ஓடி வந்து 
            பணிவிடை புரிவதை
            பார்க்கும்  என்னவர், என்னை மறக்க
            வைத்துவிடாதே என்று செல்லமாய்
            உன் தோளில் தட்ட, இருவரின் அன்பில்
            என் வலி இருந்த இடம் எங்கே
            என்று நான் தேடவேண்டி இருக்கும் ??!!

            அடுத்த  தெருவில் இருக்கும் கடைக்கு 
            போகிறேன் என்று சொன்னாலும், 
            அவரின்றி தனியாக வேண்டாம் 
            நான் வருகிறேன் என்பாய்.....! 
            சிரித்து கொண்டே சொல்வேன்...  
            நீ இருப்பதோ பல மைல் தூரம் தள்ளி என்று...!!!

             உன் கண் மூடித்தனமான அன்பால் 
             பாதிப்பு இல்லை என்றுதான்
             எண்ணினேன், அடுத்தவரிடம் பேசியதை 
             கூட தாங்க முடியாமல் 
             உன்னை நீ  வதைத்து கொண்ட 
             போதுதான் உணர்ந்தேன்...!! 
             பாதிப்பு உனக்கில்லை 
             எனக்குத்தான் என்று ??!

             இரு குழந்தைகள் உனக்கு இருந்தும் நீ 
             குழந்தை தான் எனக்கு....உன் அன்பில்
             நிதானத்துடன் கூடிய நேசம் வர
             இந்த இடைவெளி வேண்டும்தான்!!
             அன்பு கொள்ள வேண்டுமே தவிர 
             தன்னையே கொல்லக்கூடாது....!

( இந்த மடலை முடிக்கும் முன்னே உன்னை அழைத்து வாழ்த்த எண்ணுகிறதே என் மனம்,  என் பேரன்கள்  மருமகளுடன் இன்று போல் என்றும் இணைந்து நீ வாழ வாழ்த்துகிறேன் )
  

சனி, ஜூலை 3

கற்பூரம் மாதிரி



குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்களை விட சிறந்த வழிகாட்டி யாரும் இருக்க முடியாது என்ற உண்மையை எனக்கு உணர வைத்த ஒரு நிகழ்ச்சி. 

குழந்தைகள் எந்த காலத்திலும் குழந்தைகள் தான். அவர்களின் குழந்தைத்தனத்துடன் கூடிய புத்திசாலித்தனம் கூடிக்கொண்டே போகுமே ஒழிய குறைவது இல்லை.  சில நேரம் அவர்கள் தகப்பன்சாமியாக மாறிவிடுவார்கள்.  அந்த நேரம் நாம் குழந்தையாய்  மாறிவிடுவோம். இந்நிலை பலரது வாழ்விலும் சுவாரசியமாக நடந்து இருக்கும்.  என் வீட்டிலும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதில் அனைத்தையும்விட என் மனதை பரவசமாக பெருமை படுத்திய ஒன்று உள்ளது. 

நாங்கள்  வெளியில் எங்கேயும்  பிரயாணம் சென்று கொண்டு இருக்கும் சமயம் ஏதாவது  ஆம்புலன்ஸ் வண்டி எங்களை கடந்து போகும் போது ஒரு கணம் நான் என் கண் மூடி ' இதில் கொண்டு போகபடுபவர்களுக்கு விரைவில் குணமாகி நல்ல சுகம் கிடைக்கவேண்டும் ' என்று கடவுளை வேண்டுவது என் வழக்கம்.  நாங்கள் இருக்கும் பாளைங்கோட்டை பகுதியில்தான் புகழ்பெற்ற கவர்மென்ட் ஹாஸ்பிடல் (Highground Hospital) இருப்பதால் வெளியில் செல்லும் நேரமெல்லாம் ஆம்புலன்ஸ் வண்டியை பார்ப்பது தவிர்க்க முடியாது, நான் வேண்டுவதும் தவறாத ஒன்றுதான்.

ஒருநாள் ஞாயிறு அன்று வீட்டில் இருக்கும் போது மாடியில் விளையாடி கொண்டு இருந்த எனது ஆறு  வயது மகன் வேகமாக மூச்சு வாங்க ஓடி வந்து, " அம்மா  PRAYER  பண்ணினீங்களா " என்றான்.  நான் " ஏன் இல்லையே "  என்றேன்.  " ஐயோ  அம்மா, இப்ப ஆம்புலன்ஸ் வண்டி சத்தம் கேட்டது உங்களுக்கு கேட்கலையா " என்றான்.   நான் பதிலுக்கு " கவனிக்கலையே டா  , உள்ள வேலையா இருந்திட்டேன் " , என்றதற்கு அவன் " ஓ.கே விடுங்க, ஆனா நான் PRAY  பண்ணிட்டேன், அவங்களுக்கு சரியாகி விடும்  " , என்று சட்டென்று சொல்லி விட்டு என் பதிலுக்கு கூட காத்து இருக்காமல்  ஓடி விட்டான். எனக்கு தூக்கி வாரி போட்டு விட்டது.

நான் செய்யும் இந்த சின்ன விஷயம் அவனுக்கு எப்படி தெரிந்தது... ? தானும் அது போல் செய்ய வேண்டும் என்று அவனுக்கு  எப்படி தோன்றியது .....? எல்லாத்தையும் விட மற்றவர்களுக்காக தான் செய்யும் சின்ன பிராத்தனையும் கடவுளை சென்று அடையும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருப்பதை எண்ணி  அவனை பெற்ற தாய்மை உணர்ச்சியில் கண்கலங்கி விட்டேன். 

கிரகித்து கொள்ளும் தன்மை

நமது ஒவ்வொரு செயல்களையும் அவர்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள்...., விசயங்களை அப்படியே உள்வாங்கி கிரகித்து கொள்கிறார்கள்..... அவர்களும் அப்படியே நடக்கணும் என்று முயலுகிறார்கள்...., அப்படியே நடக்கவும் செய்கிறார்கள்....!!  

நமது செயல்கள் நல்லதாக இருப்பின் அவர்களும் நல்லவர்களாக வளருவார்கள், அதை தவிர்த்து அவர்கள் முன்னால் பொய் சொல்லி பேசி நாம் பழகினால் அவர்களும் அதையே பின்பற்றுவார்கள். ஒருநாள் நம்மிடையே பொய் சொல்ல நேரும்போதுதான் , நமக்கு கோபம் வந்து அவர்களை போட்டு அடி வெளுத்து விடுவோம், இதற்கு காரணகர்த்தா நாம் தான் என்பதை உணராமல்...!!    

கணவன், மனைவி தங்கள் கருத்து வேறுபாடுகளை குழந்தைகள் முன்னால் பேசி அவர்களின் மனதில் முரண்பாடுகளை விதைத்து விடுகிறோம்.  இன்னும் சிலர் நெருங்கிய  உறவினர்களை பற்றி குழந்தைகள் முன்னால் பேசிவிடுவார்கள், பின் எப்படி மற்றவர்களுக்கு நம் குழந்தைகள் மதிப்பு கொடுப்பார்கள்..?  பிறகு இந்த குழந்தைகள்  பெரியவர்கள் ஆன பின் அதே அவமரியாதைதான் நமக்கு பரிசாக கிடைக்கும்..!! 

குழந்தைகளை ஈரமண்ணுக்கு  ஒப்பாக கூறுவார்கள். அந்த மண்ணில் படும்  எந்த தடமும் அப்படியே பதிந்து விடும்.  தவிர பச்சை  மரத்தில் சுலபமாக ஆணி இறங்கி விடும் என்பதையும் நாம் மனதில் வைத்து கொள்ள வேண்டும்.  அதனால் பெரியவர்களாகிய நாம் நம் குழந்தைகளுக்கு நல்ல முன் உதாரணமாக இருப்போம்.  

நம் குழந்தைகள் நல்ல மனிதர்களாக வாழவும், எதிர்கால சமுதாயம் சிறப்பாக அமையவும் அவர்கள் மனதில் நல்லதை விதைப்போம்! நல்லதையே நாளை அறுவடை செய்வோம்!!     



வியாழன், ஜூலை 1

மொட்டை மாடி - கவிதை

 
                                          
                                            அன்றொரு நாள் மொட்டை மாடியில்
                                                    இரவின் அமைதியில் நீயும் நானும்
                                            நம்மை மறந்து பேசிகொண்டிருந்தோம்...
                                                     அன்று முழு நிலவு ஆதலால் நிலவுப்பெண்
                                            தன் ஒளி கற்றையை நாளா புறமும் வீசி
                                                     இரவை பகலாக்கி கொண்டிருந்தாள்.                                           
                                          
                                           பேசிகொண்டிருந்த நீ என்னை பார்ப்பதை விடுத்து
                                                      அவளையே கண் வைத்து நோக்க
                                           பெண்மைக்கே உரிய பொறாமைத்தீ
                                                       என்னுள் எரிய, கோபத்தில் நான்
                                           அவ்விடத்தை விட்டகன்று செல்ல,
                                                       சுதாரித்துக்கொண்ட நீ தள்ளிச்சென்ற
                                             
                                            என்னை உன் வலு கரத்தால் பற்றி இழுத்து
                                                       அணைத்துக்கொள்ள, சினம் தணியாத
                                            நான் திமிர,  தரையில் அமர்ந்த நீ என்னை
                                                        உன் மடியில் சாய்த்து, முகத்தை நிமிர்த்தி
                                            'நிலவைப்பார்' என்றாய்.  வெறுப்பாய் நான்
                                                        மேலே நோக்க.....,   என்னால்  இயலவில்லை 
                                              
                                            அங்கிருந்து என் கண்ணை அகற்ற!
                                                       முழு  நிலவாய், அழகாய், தென்னங்கீற்றின் 
                                            ஊடாய் பளிரென்று சிரித்து கொண்டிருந்தவள்
                                                        என்னையும் அல்லவா மயக்கி விட்டாள்!
                                            'இப்படித்தான் மாட்டிக்கொண்டேன் நானும்' 
                                                         என்றார் என்னவர் விஷமசிரிப்புடன் !!  
                                                
                                            மெய் உணர்ந்து மடியில் நானும் 
                                                          கண்மூட, அந்தோ என்னாயிற்று...?
                                            மறைந்துவிட்டாள் நிலாப்பெண்
                                                          மேகத்திற்குள்.... என்ன செய்வாள்
                                            அவளும் பெண்தானே ? 
                                                            வந்துவிட்டது பொறாமை..??!!


                                                                     ******

புதன், ஜூன் 30

வரதட்சணைக் கொடுமை - தாம்பத்தியம் பாகம் -10











பல திருமண உறவுகள் முறிய காரணம் - வரதட்சணை


இதற்கு முந்தைய பதிவு இருமனம் இணையும் திருமணம் 


வரதட்சணை என்னும் கொடுமை 

பல திருமண உறவுகளும் பாதியில் முறிவதற்கு  முக்கியப்  பங்கு வகிப்பது வரதட்சணை என்ற கொடுமைதான் என்பதை மறுப்பதற்கு இல்லை.  சாதாரணமாக இருந்த இந்த பழக்கம் இப்போது கொடுமைப்  படுத்தி வாங்க வேண்டிய நிலைக்கு மாறிவிட்டது.  எதிர்பார்த்ததில் கொஞ்சம் குறைந்தாலும் வீட்டுக்கு வந்த மருமகளை கொடுமைப்  படுத்தும் கோரமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.  இந்த முறை யாரால் ஏற்படுத்தப்பட்டது, ஏன் ஏற்படுத்தப்பட்டது என்று விவாதிப்பதை விட இந்த பழக்கம் எந்த அளவு கணவன், மனைவி உறவைக்  கெடுக்கிறது என்று தான் இங்கு பார்க்கவேண்டும்.  

பெற்றோர்களே ஒரு விதத்தில் காரணம்

எந்த மகனும் எனக்கு இவ்வளவு மதிப்பு இருக்கிறது, அதனால் இந்த தொகை கேளுங்கள் என்று விரும்புவது இல்லை.  தன்மானம் உள்ள எந்த ஆணும் தனக்கு ஒரு விலையை நிர்ணயிப்பதை விரும்பமாட்டான்.  ஆனால் பெற்றோர் செய்யும் தவறு பிள்ளையின் தலையில்...!! 

பெண்ணிற்கு சீதனமாக சில பொருள்களை வாங்கிக்  கொடுப்பது அவர்களின் விருப்பம் ஆனால் இதிலும் தகுதிக்கு மீறி பலவற்றையும் வலிந்துக்  கேட்பது இப்போது சாதாரணமாகி விட்டது.  ஒருவேளை அவர்களின் மகனே ஏன் என்று கேள்வி கேட்டால், " நீ  சும்மா இரு, உனக்கு ஒன்றும் தெரியாது, இது எல்லாம் உன் நல்லதுக்கு தான் " என்று கூறி அவனது வாயை அடைத்து  விடுவார்கள்.  ஆனால் அப்போது அவர்களுக்கே தெரியாது, இப்படி வலுகட்டாயமாக பெண் வீட்டாரிடம் வாங்கிய பொருட்கள் இருக்கும்  தைரியத்தில்  தான் அந்த  பெண் அவர்களின் மகனுடன்  தனிக்குடித்தனம் செல்ல வசதியாக இருக்கும் என்று....??!!

தனிக்குடித்தனம் திட்டமே இந்த பொருட்களை வைத்துதான் உருவாகிறது என்பது பாவம் அவர்கள் அறியமாட்டார்கள்.  ஆக ஒரு குடும்பம் பிளவு பட எவையெல்லாம் துணை புரிகிறது பாருங்கள்.  பல வீட்டிலும் இந்த பொருட்கள் படும் பாடு சொல்லி முடியாது.  பெண் வாழ கொடுக்கப்படும் சீதனம் குடும்பத்தைப் பிரிக்க துணை புரிவது கொடுமைதான்!!

கௌரவ பிரச்சனை 

சில பெண்களையும் சும்மா சொல்லக் கூடாது, ஒரு கல்யாணம் முடிவு ஆனவுடன் முதலில் மாப்பிள்ளை வீட்டினரை  கேட்பது, " பெண்ணுக்கு  எத்தனை சவரன்  போடப்  போகிறார்களாம் ? " ஒருவேளை கொஞ்சம் கம்மியா  இருந்துவிட்டது என்றால் "இவ்வளவுதானா? உங்க பையன் கை நிறைய சம்பாதிக்கிறான், இந்த வீட்டுக்கு வர அவளுக்கு கொடுத்து வச்சிருக்கணும்" அப்படி இப்படின்னு எதையாவது சொல்லி அவர்களை இன்னும் அதிகமாக கேட்கச்  சொல்லி மறைமுகமாகத்  தூண்டுவார்கள். இந்த பையனின் அம்மாவோ அடடா எல்லாம் பேசி முடித்து விட்டோமே கல்யாண நாளும் நெருங்கி விட்டதே என்ன பண்ண என்று பலவாறு யோசித்து குழம்பி விடுவார்கள். 


கடைசியில் பெண்ணின் கழுத்தில் தாலி ஏறும் சமயம் பெண்ணை பெற்றவர்களை demand செய்வது. மேல கேட்டதை கொடுத்தால் தான் பெண் கழுத்தில் பையன் தாலி கட்டுவான் என்று சொல்லி அன்பாக மிரட்டுவது....?!  இது இன்றும்  சில இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. 


ஆனால் இது  எல்லாத்தையும் விட ஒரு முக்கியமான கட்டத்தில் பையன் வீட்டார் செயல் படும் விதம் இருக்கிறதே... ரொம்ப கேவலம்!! (யதார்த்ததிற்கும் ஒரு  அளவு இல்லையா என்று நீங்கள் நினைத்தாலும் சொல்லி ஆகவேண்டிய கட்டாயம்  உள்ளது) முதன் முதலாக புதுப்பெண் தன் கணவனை தனிமையில்  சந்திக்கும் அந்த நேரத்தில் அந்த பையனின் வீட்டாரால் தடுக்கப் படுகிறாள்.  வரவேண்டியவை வரும் வரை சந்திக்க வாய்ப்பில்லை என்று மறைமுகமாக அவளுக்கு அறிவுறுத்தப்  படும்போது அந்த பெண்ணின்  மனநிலையும் அறையின் உள்ளே இருக்கும் ஆணின் மனநிலையும் என்னாகும்...? அப்படி கொடுத்து விட்டுத்தான் கணவனை சந்திக்க வேண்டும் என்றால் இந்த உறவின் புனிதத்திற்கு என்ன அர்த்தம்? சிந்திப்பார்களா இந்த மாதிரியுள்ள  பெற்றவர்கள்?! 

பெற்றவர்களின் இந்த செயலால் தான் அந்த பெண் தனிக்குடித்தனம் கிளம்பும்போது அந்த கணவனும் மனம் வெறுத்துக்  கிளம்புகிறான். சில ஆண்களுக்கே தனது பெற்றோர்களின் செயல்கள் பிடிக்காமல் வேறு வழி இன்றி பிரிந்துச்  செல்கிறார்கள். பழி என்னவோ வழக்கம்போல் பெண்ணின் மேல் !!

சாபக்கேடான வசைமொழிகள் 

வரதட்சணை ஒரு கலாச்சாரமாக மாறிவிட்டது என்பது போல் தோன்றினாலும் ஆண்கள் நினைத்தால் மாற்றிவிட முடியும் என்பது என் கருத்து. தான் ஒரு விலைப்பொருளாக மாற்றப்படுவதை முடிந்தவரை மாற்றலாம்.  ஆனால் இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது,  சீர்திருத்தம் என்ற பெயரில் சிலர் வரதட்சனை  வாங்க மாட்டேன் என்று சொன்னாலும், இந்த பெண் வீட்டார் படுத்தும் பாடு இருக்கே பாவம்தான் அந்த ஆண்கள். "இவனிடம் ஏதாவது குறை இருக்கும் அதை மறைக்கத்தான் வேண்டாம்னு சொல்றான்" அப்படின்னு தங்களது கற்பனை குதிரையை தட்டிவிட்டு கதை பரப்பி விடுவார்கள்.  

என்னதான் செய்வது 

என்னவொரு மனிதாபிமானம் அற்ற பேச்சுகள் ? இப்படி பேசினால் எந்த ஆண் தான் முன் வருவான்...? அப்ப திருந்த வேண்டியது இந்த சமுதாயமா ? சமுதாயம் என்பது என்ன? ஆண் பெண் சேர்ந்த நாம்தானே சமுதாயம், அப்படி இருக்க ஆண்கள் குறைச் சொன்னாலும் பரவாயில்லை, தைரியமாக முன் வரவேண்டும், இளம்பெண்களும் அந்த ஆண்களை முழு மனதாய் வரவேற்க வேண்டும்.  சிறிது சிறிதாக சமுதாய மாற்றம் நிகழும். (கேட்பதற்கு நன்றாகதான் இருக்கிறது , நடக்கணுமே).  எந்த நல்ல மாற்றமும் உடனே நடந்து விடாது.... ஆனால் சிறு உளிதான் மலையைப்  பெயர்க்கிறது என்பதை மனதில் வைத்தால் போதும், நாளைய சமுதாயம் சீராகும்.         

வாங்குபவர்கள் திருந்தும் முன், கொடுப்பவர்கள் முதலில் திருந்த வேண்டும்.

வன்கொடுமை சட்டம் படும் பாடு

கணவன் மனைவி உறவில் பிரிவு ஏற்பட  வரதட்சணை கொடுமை ஒரு காரணமாக இருந்தாலும்,  அதில் இருந்து பெண்களைப்  பாதுகாப்பதற்காக போடப்பட்ட ஒரு சட்டம் இதைவிட மோசமாக வேற ரூபத்தில் குடும்பங்களை பந்தாடுகிறது. எதை பெண்களுக்கு பாதுகாப்பு என்று நினைக்கிறோமோ அதை சில பெண்கள் தங்களுக்கு சாதகமாக எடுத்து கொண்டு கணவனையும், அவனது குடும்பத்தினர்களையும் படுத்தும் பாடு இப்போது அதிகமாகிக்  கொண்டுப்  போகிறது.


சில சின்னச் சின்ன, நாலு  சுவற்றுக்குள் முடிய வேண்டிய விசயத்துக்கும் உடனே மகளீர் காவல் நிலையம் போகத் தொடங்கி விட்டார்கள்.  அப்படி போகும்போது அந்த கணவன் மேல் தவறு இல்லை என்றாலுமே தண்டனை அனுபவிக்க வேண்டியதாகி விடுகிறது. அவனுடன் சேர்ந்து ஒன்றும்  தெரியாத அப்பாவிகளும் தண்டனைக்கு பலி ஆகிறார்கள். சில பெண்களின் செயல்களை ஜீரணிக்கவே முடியாது, ஒன்றும் இல்லாத விசயத்துக்கும் கணவன் மேல் தாறு மாறாக, எழுத்தில் எழுத முடியாத அளவிற்கு கற்பனையாக கதை கட்டி புகார் கொடுக்கிறார்கள். சில  பெண்கள் பொய் அதிகம் பேச தொடங்கியதால் ஆண்கள் படும்பாடு  மிகவும் வருத்தத்திற்கு உரியது. 


பெண்ணின் பேச்சிற்கே பெரும்பாலும் முக்கியத்துவம் கொடுக்க படுகிறது, ஆணின் உண்மைகூட அங்கே எடுபடாமல் போய்விடுகிறது.  ஒரு பெண் நினைத்தால் எதுவும் செய்ய முடியும் என்ற அளவில் இருந்தால் அப்பாவி ஆண்களின் நிலைமை....??  தாலி கட்டிய கணவன் என்ற உறவிற்க்கே கேவலத்தை ஏற்படுத்தும் சில பெண்களால் மற்ற நல்ல பெண்களுக்கும் அவப்பெயர் தான்.  


கணவன் கிழித்த கோட்டை தாண்டாத பெண்கள் இருக்கும் நம் நாட்டில்தான் இந்த மாதிரி கீழ்த்தரமான எண்ணம் கொண்ட மனைவிகளும் இருக்கிறார்கள். ஆண்களை அடக்கி வைக்க வேண்டும் என்று எண்ணியே பல  பெண்கள் உறுதி பூண்டு இருக்கிறார்கள்,  ஆண்கள்  ஒன்றும் இவர்களின் அடிமை இல்லையே, இருந்தும் இந்த மாதிரி சட்டங்களை சொல்லி பயமுறுத்தியே கணவர்களை பலரும் அடக்கி வைத்து இருக்கிறார்கள்.  


இந்த மாதிரி இருக்கும் வீடுகளில் எப்படி நல்ல தாம்பத்தியத்தை எதிர் பார்க்க முடியும்.....??! 


இன்னும் வரும்.....!


                        தாம்பத்தியம் அடுத்த பாகம்  தொடரும்.....