புதன், மார்ச் 18

வீட்டுத்தோட்டம் ரொம்ப ரொம்ப ஈசிதான் - 5 இயற்கை உரம் தயாரிப்பு

வீட்டுத்தோட்டம் போடுவதே ரசாயன உரத்தில் இருந்து தப்புவதற்கு தான். அதனால் காய்கறி தோட்டத்துக்கு வேதி உரம் எதையும் வாங்கி போட்டுடாதிங்க. உரம், மருந்து , வளர்ச்சி ஊக்கி என அனைத்தையும் இயற்கை முறையில் நாமே தயாரிக்கலாம்.

இயற்கை உரம் என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது மாடு!! அடடா சிட்டியில் மாட்டுக்கு எங்க போகனு கேட்கிறீங்களா? மாட்டின் பயன்பாடு  தெரிந்துவிட்டால் எங்கே கிடைக்கும் என்று அந்த இடங்களை தேடிச் சென்று விடுவீர்கள். அவை கிடைக்கும் வாய்ப்பு பெற்றவர்கள் அது தொடர்பான முறைகளையும் இயலாதவர்கள் அது தவிர்த்த வேறு முறைகளை கையாளலாம், அதில் ஒன்றுதான் சமையலறை  கழிவுகள்  உரம். இந்த வீட்டுத்தோட்டம் தொடர் 'சுலபமாக' தோட்டம் போடுவதை பற்றியது என்பதால் கையில்/அருகில்  கிடைப்பதை வைத்தே சிறப்பாகச் செய்ய முயற்சி செய்வோம். 

Compost bin - Khamba




கிச்சனில் சேரும் காய்கறிக் கழிவுகளை இதில் போடவேண்டும். மூன்று பாகமாக இருக்கும் இதில் முதலில் மேலே உள்ள பாகத்தில் செய்தித்தாளை விரித்து அதன் மீது கழிவுகளை போட்டு வாருங்கள். கழிவுகள் போடப் பட்டதும் மற்றொரு செய்தித்தாளை கழிவுகளின் மேல் விரித்து khamba மூடியை மூடுங்கள். ஒரு பாகம் நிரம்பியதும் அப்படியே தூக்கி கீழ் பாகமாக வைத்துவிட்டு காலியாக இருப்பதை மேலே வைத்து இப்போது இதில் கழிவுகளை சேகரியுங்கள். மிச்ச இரண்டும் நிரம்புவதற்குள் முதலில் போடப்பட்டது உரமாகியிருக்கும்.  பொதுவாக உரமாக மாற  மூன்று  மாதம் ஆகும்.

khamba இல் காய்ந்த இலைச் சருகுகள், காய்கறிக்  கழிவுகள் போன்றவற்றை போடலாம்.  முடிந்தால் வாரம் ஒரு முறை ஒரு சிறிய குச்சியால் கழிவுகளை கிளறிவிடுங்கள். கழிவுகளில் maggot எனப்படும் சிறு புழுக்கள் உருவாகும், இவைகள் தான் கழிவுகளை மக்க வைப்பவை. உரமாகியதும் இவை பெரும்பாலும் மடிந்துவிடும் அல்லது flies ஆக மாறி வெளியேறிவிடும். kampa முறையில் காய்கறிக்கழிவுகளை உரமாக்குவதால் bad smell ஏதும் இல்லை.



Khambaவில் உரம் தயாரிக்க  சில டிப்ஸ்

* மரத்தூளும் தேங்காய் நார் கழிவும்(coco peat)  காய்கறிக்கழிவில் உள்ள  அதிக நீரை எடுத்துக் கொண்டு உரமாவதை துரிதப் படுத்தும். எனவே இவற்றில் எது கிடைத்தாலும் வாங்கி கழிவுகளின் மீது தூவி விடுங்கள்.

* உரமாவதை துரிதப் படுத்த புளித்த தயிர் / பஞ்சகவ்யா/ தண்ணீரில் கரைத்த சாணம் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

* maggots அதிகம் இருந்தால் அதன் உற்பத்தியை கட்டுப்படுத்த சிறிதளவு வேப்பந்தூள் அல்லது மிளகாய்த் தூளை தூவலாம்.

* உரம் அதிக ஈரமாக இருந்தால் நிழலான இடத்தில் இரண்டுநாள் உலர்த்தலாம்.

* கழிவுகளை மேல் விளிம்பு வரை போட்டு அடைக்கக் கூடாது, காற்று செல்ல வசதியாக சிறிது இடம் இருக்க வேண்டும்.

* உரத்திற்கு நைட்ரஜன் (சமையலறை கழிவுகள்) கார்பன்(காய்ந்த இலைகள்) இரண்டும் தேவை... இலைகள் கிடைக்கவில்லைஎன்றால் பழைய செய்தித்தாள் (கிழித்து தண்ணீரில் நனைத்தது) உபயோகிக்கலாம்.

* காய்கறி, பழக் கழிவுகளை அப்படியே போடாமல் பெரிய துண்டுகளை சிறிதாக்கி போடுங்கள்.  

மூன்று மாதம் கழித்து உரம் தயாராகியதும் கடைகளில் கிடைக்கும் vegitable basket(துளைகள் உள்ளது) வைத்து  உரத்தை சலித்து எடுத்து சேமித்து வைத்து தேவைப்படும்போது உபயோகிக்கலாம். Khamba கிடைக்க வாய்ப்பில்லாதவர்கள் மண் பானையை பயன்படுத்துங்கள். அதில் காற்று உள்ளே செல்ல சிறு துளைகளை கவனமாக ஏற்படுத்தவேண்டும். இரண்டு துளைகள் போடமுடிந்தாலும் போதும். (சந்தேகம் இருந்தால் கமெண்டுங்க அல்லது மெயிலுங்க)

செடிகள்  செழிப்பாக  வளர ...

* காலாவதியான மாத்திரைகளை தூள் செய்து போடலாம். உபயோகம் இல்லாத டானிக், சிரப் போன்றவற்றை தண்ணீரில் கரைத்து ஊற்றலாம்.(பூச்செடிகளுக்கு மட்டும்)


* வீட்டில் சேகரமாகும் டீத்தூள் தவிர அருகில் டீக்கடை இருந்தால் அவர்களிடம் ஒரு பிளாஸ்டிக் பக்கெட் கொடுத்து அதில் உபயோகித்த டீத்தூளை போடச்சொல்லுங்கள். (கடைக்காரர் நண்பராக இருந்தால் வசதி) :-)

* அதே  மாதிரி பரோட்டா கடையில் ஒரு பிளாஸ்டிக் பையை கொடுத்து வைத்தால் முட்டை ஓடுகளை வாங்கிக்கொள்ளலாம். இதை தூள் செய்து போடலாம்.கால்சியம் சத்து செடிகளுக்கு அவசியம். 

முள்ளங்கி  

* வாழைப்பழத்தோல் சிறந்த உரம். காயவைத்து துண்டுகளாக கட் பண்ணி மிக்ஸியில் போட்டு தூளாக்கி செடிகளுக்கு தூவலாம். முக்கியமாக தக்காளிக்கு அவசியம் போடவேண்டும். செடிகளுக்கு தேவையான  பொட்டாசியம் சத்தை இது கொடுக்கும்.

* அரிசி ஊறவைத்த/கழுவும் நீரையும், சாதம் வடித்த நீரை ஆறவைத்தும்   ஊற்றலாம். 

* கடைகளில் கடலைப் பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்கு என்று கிடைக்கும். அதை வாங்கி அப்படியே நொறுக்கி போடலாம், ஊறவைத்து கரைத்தும்  போடலாம். ஒரு செடிக்கு ஒரு ஸ்பூன் அளவு என்று வைத்துக் கொள்ளுங்கள்.

* ஒவ்வொரு செடிக்கும் ஒரு ஸ்பூன் எப்சம் சால்ட்டை தண்ணீரில் கரைத்து ஊற்றலாம். இந்த சால்ட் மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

மீன்கழிவில் இருந்து வளர்ச்சி ஊக்கி

மீனை  சுத்தப்படுத்தியதும் வீணாகும் மீன் கழிவை சேகரித்து  (கடைகளில் கிடைக்கும்) அதே அளவிற்கு வெல்லம் சேர்த்து ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் போட்டு அதன் மூடியால்  டைட்டாக  மூடி விடுங்கள். இரண்டு நாள் கழித்து திறந்து லேசாக கிளறி விடுங்கள். பிறகு மறுபடியும் நன்றாக மூடி அப்படியே வைத்துவிடுங்கள். bad smell இருக்கவே இருக்காது.  இருபது நாட்கள் கழித்து எண்ணெய் போன்று மேலே மிதப்பதை வடித்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். மீன் வளர்ச்சி ஊக்கி ரெடி.  ஒரு லிட்டர் வளர்ச்சி ஊக்கி, பத்து லிட்டர் தண்ணீர் (1:10) சேர்த்து செடிகளுக்கு தெளிக்கவும், செடி அருகில் ஊற்றவும் செய்யலாம். தேவைப் படும்போது தயாரித்து பயன்படுத்துங்கள்.

பிளாஸ்டிக் கவரில் முட்டைகோஸ் 
படித்ததை அனுபவத்தில் அறிந்து, பயன்பெற்று இங்கே பகிர்கிறேன். எல்லோருக்கும் எல்லாம் வசதி படவில்லை என்றாலும், வீட்டுத்தோட்டம் தொடரில் சொல்லப்பட்டிருப்பதில் உங்களுக்கு சௌகரியப்படுவதை மட்டும் பார்த்துக்கொண்டால் போதுமானது.

நேரம் இருந்தால் வீட்டுத் தோட்டம் பற்றிய இந்த வீடியோ பாருங்க...
   
http://www.youtube.com/watch?v=FBmLZ0zwu88

நான் Khamba வை கோயம்புத்தூரில் வாங்கினேன். இதை பற்றிய விவரங்கள் தேவையென்றால் கோவை தெலுங்குப் பாளையத்தை சேர்ந்த திரு. ராஜேந்திரன் அவர்களை தொடர்புக் கொள்ளுங்கள் அவரின் மொபைல் எண் : 9944309603.

ஆன்லைனில் வாங்க பிளீஸ் கிளிக் - www.dailydump.org

Happy Gardening ...


பிரியங்களுடன்
கௌசல்யா
mail id : kousalyaraj10@gmail.com

படங்கள் - எங்கள் பால்கனி தோட்டத்தில் எடுத்தவை 



திங்கள், மார்ச் 9

பேசாப் பொருளா ...காமம் !? ஒரு அறிமுகம்

'தாம்பத்தியம்' தொடர் தொடர்பாக வரும் மெயில்களை வாசிக்கும் போதும் கவுன்சிலிங் செய்யும்போதும்  தம்பதிகளின் சில பிரச்சனைகளை அறிந்து   ஆச்சர்யத்தின் எல்லைக்கு சென்றுவிடுகிறேன். இப்படியெல்லாமா  சந்தேகம் வரும்? இதுக்கூடவாத்  தெரியாது? அதுவும் குழந்தைகள் பிறந்து இத்தனை வருடம் கழித்தா? இதுக்காகவா விவாகரத்து?  என எழும் பல அந்தரங்கக் கேள்விகளுக்கு விடையாக தனியாக ஒரு தொடர் எழுதினால் என்ன என்று தோன்ற.... இதோ எழுதத்தொடங்கியே  விட்டேன்...


தொடருக்குள் போகும்முன் சில வரிகள் புரிதலுக்காக...

பாலியல் பற்றிய எனது முந்தைய கட்டுரைகளில் எப்படிங்க ஒரு பெண்ணா தைரியமா இதை எழுதுறிங்க, உங்க துணிச்சலை பாராட்டுகிறேன் என்ற ரீதியில் வரும் கேள்விகள் கோபத்தையும் சிரிப்பையும் ஒன்றாக வரவழைக்கும். உண்மையில் இதற்கான பாராட்டை ஒரு அவமானமாக உணருகிறேன். இயற்கையாக  ஆணைவிட அதிக மன தைரியம் கொண்ட பெண் தன் சம்பந்தப்பட்ட பாலியலை பேசுவதற்கு ஏன் தயங்க வேண்டும். பெண்ணின் உணர்வுகள் உணர்ச்சிகள் பெண்ணால் சொல்லப்படும்போது தான் முழுமை பெறும்.

பாலியல் உறவுகளைப் பற்றி ஆண் பேசலாம், பெண்ணின் அங்கங்களை வர்ணித்து கவிதைகள் எழுதலாம் ஆனால் இதையே ஒரு பெண் செய்தால் உடனே சமூகம் வெகுண்டு எழும் அப்பெண்ணை பழிக்கும் தூஷிக்கும். அவ்வளவு ஏன்  இதை வைத்தே அந்த பெண்ணின் தரத்தை அவர்களாகவே நிர்ணயித்துவிடுவார்கள். இதுதான் காலகாலமாக நடந்து வருகிறது.

பெண் இதையெல்லாம் செய்யக் கூடாது என்ற கட்டமைப்பை ஏற்படுத்தி அதை மீறும் பெண்களை பெண்ணியவாதி , புரட்சிப்பெண் என்று பெயரிட்டு சக பெண்களை விட்டு அவர்களை தள்ளியே வைத்திருக்கிறது இந்த உலகம்.   ஒரு  ஆண்  மருத்துவராக இருந்தாலுமே அவரால் உணர்ந்துக்கொள்ள முடியாத பல விசயங்கள் பெண்ணிடம் உண்டு என்பதை அறியும்போது தான் பெண் என்பவள் போகப்பொருள் அல்ல போற்றப் படவேண்டியவள், என்பதும்  பாலியல் அத்துமீறல்களுக்கு மறைமுகமாக பெண் எவ்வாறு காரணமாகிறாள்  என்பதையும் உலகம் புரிந்துக் கொள்ளும்.  

பாலியலைப்  பற்றி பெண்  எழுதினால் மட்டுமே இது சாத்தியமாகும். காமம், காதல் பற்றி பெண் அதிகம் பேசவேண்டும், அப்போதுதான் இதுவரை மறைத்து வைக்கப்பட்டுள்ள பக்கங்கள் புரட்டிப் பார்க்கப்படும். தற்போது இணையத்தில் இயங்கிவரும் அத்தனை பெண்களும் பாலியல் பற்றி எழுதவேண்டும், பேசவேண்டும்! அவ்வாறு பெண் பேச முன்வரும்போது இந்த உலகம் தனது வாயைகே  கொஞ்சம் மூடிக் கொள்ளட்டும். எனவே  இனியாவது அர்த்தமற்ற கேள்விகள் எழாமல்  இருக்கட்டும் !!!

பேசாப் பொருளா காமம்?   

அற்புதமான ஒரு விஷயம் எவ்வாறு  அசிங்கமான தவறான அருவருப்பான குற்றமாக தவிர்க்கக்கூடிய - மறைக்கக் கூடிய  ஒன்றாக மாறியது அல்லது மாற்றப்பட்டது... யாரால் ஏன் எப்போது என்ற கேள்விகள் எனக்குள் எழும் ...அதற்கான விடையை தேடும் ஒரு தேடல் இந்த தொடர் என்று சொல்வதை விட காமத்தைப்  பற்றிய அரைகுறை கணிப்புகளினால் சமூகத்தில் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளை அலசும் ஒரு தொடர் என்று வைத்துக்கொள்வோம்.



சித்தர்கள் யோகிகள் புனிதர்கள் முனிவர்கள் பெரியோர்கள் மூத்தோர்கள் ..... என அத்தனை ஆண்களும்  பெண் என்றால் பேய், பெண்ணுறுப்பு என்பது எமன்,  அருவருப்பு அசிங்கம் பாவத்தின் பிறப்பிடம்... அப்டியாக்கும்  இப்டியாக்கும் என்று இஷ்டத்திற்கு எக்கச்சக்கமாக எழுதி/பாடி வைத்துவிட்டு சென்றுவிட்டார்கள்.  அவ்வாறு எழுதியதன் ஒரு காரணம் என்னவென்றால் காமத்தின் மீதான பயம், எங்கே தான் இதிலேயே மூழ்கி விடுவோமோ என்ற பயம்.  காமத்தில் அவர்களால் முழுமைப்  பெற முடியவில்லை, அனுபவித்தால் தானே முழுமை பெற ... காமத்தை முழுமையாக  உணராமலேயே தூஷிப்பது ஆதிகாலம் தொட்டு இன்றுவரை தொடருகிறது. அதில் முழுமை பெற்றவர்  எவரும் காமத்தை நிந்திப்பதில்லை... அமைதியாகவே  இருப்பார்கள். அரைகுறைகள் தான் ஆட்டம் போடும்.  முன்பு பெண்ணை நேரடியாக நிந்தித்து சமாதானம் செய்துக் கொண்டவர்கள் இன்று கலாசாரத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்.    

 எதிர் பாலினத்திடம் ஈர்ப்பை ஏற்படுத்தியது இறைவன் (ஆன்மிகம்) என்றும் இயற்கை (நாத்தீகம்) என்றும் ஹார்மோன் (விஞ்ஞானம்) என்றும்  ஒவ்வொரு கூட்டமும்  ஒன்றை காரணமாக சொன்னாலும் அத்தனை பேரும் ஒன்றாக சொல்வது என்னனா 'காமம் தவறு'. தவறு என்றால் இறைவன் இயற்கை விஞ்ஞானம் அத்தனையும் தவறுதானே. ஈர்ப்பு ஏற்பட்டால்தான் உலகில் ஜனனம் நடைபெறும். உலகின் இயக்கத்திற்கு முக்கியக்  காரணமான ஒன்றிற்குத்தான் காமம் என்று பெயரிட்டு அதை தவறு என்றும் பேசாப்  பொருள் என்றும் மறைத்து வைத்திருக்கிறோம். மனிதன் என்றால் அவனுக்குள் காம உணர்வு எழவேண்டும், அந்த உணர்வை வெளிப்படுத்தும் முறையில்தான் மனிதர்கள் வேறுபடுகிறார்கள்.

இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்றவர்கள் தான் பூஜை அறைக்கதவை அடைத்துவிட்டும் கடவுள் படத்திற்குத்  திரையிட்டு மறைத்தும் உடலுறவு கொள்கிறார்கள். வேடிக்கை மனிதர்கள்! வானத்தை  கூரையாகக்  கொண்டவர்களும் உடலுறவுக் கொண்டு இவ்வுலகில் வாழத்தான்  செய்கிறார்கள். அங்கே எந்த சாஸ்திரமும் சம்பிரதாயமும் கடைபிடிக்கப் படவில்லை.  உறவு கொண்ட அன்று கோவிலுக்கு போனால் தீட்டு,தோஷம்  என்று கடவுளுக்கு சொந்தக்காரர்களாக காட்டிக் கொள்பவர்கள் இந்த கணினி யுகத்திலும் பஜனைப் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.  காம எண்ணங்களை  மனதில் வைத்துக்கொண்டு பூஜை செய்வதை விட அதை வெளியேற்றிவிட்டு பூஜை செய்வது பெட்டெர் என புரிந்து கொண்டவன் கடவுளின் கருவறையை பள்ளியறையாக்கினான் போலும். மனதில் குப்பையும் ஆடையில் தூய்மையுமாய் அத்தனை அக்கிரமங்களையும் ஆண்டவனின் பெயரால் செய்துக்கொண்டு. சின்னஞ்சிறுமிகளிடம் தங்களது வேட்கையை தணித்துக் கொள்ளும் மனித தன்மையற்ற ஈனனுக்கு  பெயர் பாதிரியார்.

புலன்களை அடக்குவது நல்லது என அறிந்ததாலேயே விரதம் என்ற ஒன்றை எல்லா மதத்தினரும்  ஏற்படுத்தினார்கள். ஆனால் நம்மவர்களோ எப்போதடா விரத காலம் முடியும், விட்டக்குறை தொட்டக்குறைகளை மறுபடியும்  புடிக்கலாம் என்ற எண்ணத்திலேயே பாதி நேரத்தைச்  செலவிடுகிறார்கள். 

பாலியல் உறவை தவிர்த்தால் தான் புனிதமாக முடியும் என்பது மனிதனாக ஏற்படுத்திக் கொண்ட ஒன்று. முற்றும் துறந்த சாமியார் என்று அழைப்பது சரியல்ல உண்மையில் தங்களின்  ஆசைக்கு முற்றும்(The End) போடாதவர்களே இன்றைய சாமியார்கள். ஆரம்பத்தில் கடவுளே சரணம் என்றுதான் வருகிறார்கள்...போகப்  போக தங்களின் புலன்களிடம் தோற்றுப் போய் விடுகிறார்கள், அப்புறமென்ன அச்சு பிச்சுனு ஏடாகூடமாக நடந்து நம் போன்றோரிடம் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள். புலன் அடக்கம் என்பது எவ்வாறு ஏற்படும், புலன்களை திருப்திப் படுத்திய பின்தானே. எவ்வாறு திருப்திப் படுத்துவது? இதற்குத்தான் ஈர்ப்பு என்ற ஒன்று  ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.  

அவரவருக்கு ஒரு நியாயங்களை கட்டுகளை வைத்து பேசுகிறார்களேத்  தவிர பொதுவான ஒரு நியதி எல்லோருக்கும் ஏற்றதான ஒன்றை யாரும் சொல்வதில்லை , காமத்தையும் இவ்வாறேதான் பாவிக்கிறார்கள். இறைவனுக்கு காமம் ஆகாதென்றால் ஏன் கோவில் பிரகாரங்களில் கோபுரங்களில் உடலுறவு காட்சிகள். இல்லை இது வேறு காரணத்திற்காக வைக்கப்பட்டது என்று ஆயிரம் காரணங்களைக்  கூறினாலும் ஒரே காரணம் இறைவனின் விருப்பம் ஆண் பெண் ஈர்ப்பு. உண்ணக்கூடாத கனியை ஏன் உண்டாக்குவானேன், பிறகு  அதை உண்ணாதே என்று ஏன் சொல்வானேன், எல்லாவற்றிலும் ஏதோ ஒரு சூட்சமம் இருக்கிறது தானே!

ஆன்மீகத்திற்கு எதிரானதா  காமம்.

துறவிகளுக்கும்  புனிதர்களுக்கும் காம உணர்வு எழும், அடக்கிப் பழகினார்கள் அதனால் சாதாரண மக்களிடம் இருந்து தனித்துத்  தெரிந்தார்கள். ஆசைக் கொள்ளாதே என்று உபதேசித்தாலும் அவருக்குள்ளும் ஒரு ஆசை இருக்கத்தானேச்  செய்தது, உலக மக்களை உய்விக்க வேண்டுமென்ற ஆசை சொல்லப் போனால் இது சாதாரண ஆசையல்ல பேராசை ! இவ்வாறுதான் காமம் தவிர் தவிர் என்று சொல்லும் போதே காமத்தை எண்ணியவர்களாயினர். காமத்தை உணராமல் மனிதன் வாழவே முடியாது இயற்கையாக எழும் உணர்வை சாதாரணமாக அடக்கமுடியாது அதற்கு மிகுந்த பயிற்சி வேண்டும். புத்தனும் அனுபவித்து அறிந்தப் பின்பே அடக்கினான். வயிற்றில் பசி இறுதி மூச்சு வரை இருப்பதைப்  போல காமப் பசியும் இருக்கும், அப்படியெல்லாம் இல்லை நான் உத்தமனாக்கும் என்று சாதிக்கிறவர்கள் ஒன்று பொய் சொல்ல வேண்டும் அல்லது உடல் மனதளவில் ஆரோக்கியக்  குறைபாடுகள்  கொண்டவராக இருக்கவேண்டும் 

ஒன்றை முழுமையாக உணராமல் அனுபவிக்காமல் அதை ஒரேயடியாக  மறுத்தோ ஏற்றோ  பேச இயலாது. பேசினாலும் அரைவேக்காட்டுத்தனமாக இருக்கும், அத்தகைய அரைகுறைகள் நிரம்பியது தான் நமது சமூகம். காமம் என்றாலே மூன்றாந்தர புத்தகங்களில் இருப்பவை மட்டும் தான் என அடித்து பேசுவார்கள் மெத்த படித்த மேதாவிகள்.  காமம் சரியாகப் புரிந்துக் கொள்ளப் படாததுதான்,  குடும்பத்தில் அதிகரித்து வரும்  விவாகரத்துகள், பாலியல் வன்கொடுமைகள் அனைத்திற்கும் காரணம்.

பின் குறிப்பு:-

குடும்பம் முதல் எல்லாவற்றிலும் நடைபெறும் 'குற்றங்களுக்கு' பின்னால் ஒரு காரணமாக காமம் இருக்கிறது என்பதை நான் சொல்லவில்லை மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஒன்றை பற்றி என் அறிவுக்கு எட்டிய அளவிற்கு எழுதுகிறேன்...சொற்குற்றம் பொருள் குற்றம் இருந்தால் சொல்லுங்கள், சரி படுத்தித்  தெளிவுப் படுத்திகிறேன். அதற்காக விளக்கம் சொல்கிறேன் பேர்வழி என்று படுத்தி எடுக்காதீர்கள் என அன்பாக வேண்டுகிறேன்.  :-)

கண்டது கேட்டது உணர்ந்தது என எல்லா அனுபவங்களும் சேர்ந்த இந்த தொடரை  மொத்தமாக எழுதி வைத்து வெளியிடலாம் என்ற கான்செப்ட் ஒத்துவரவில்லை... (ஏற்கனவே ஏகப்பட்டது டிராப்ட்ல ஒரு பாராவுடன்  நிற்கிறது) :-) எனவே எழுதி உடனுக்கு உடன் வெளியிடுகிறேன், continunity விட்டுப் போச்சே  என திட்டாதீர்கள். இது கதையல்ல கட்டுரை தானே சோ அட்ஜெஸ்ட்டுங்க  பிளீஸ் ...


தொடர்ந்து பேசுகிறேன்...
உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா



Paintings - Thanks Google 

புதன், மார்ச் 4

பிளஸ் டூ பொதுத் தேர்வு - ஏன் இந்த ஆர்ப்பாட்டம் ??!!


பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை சுற்றிலும் இருக்கிறவங்க  ஏன் இப்படி கொலைவெறி புடிச்சு அலையுறாங்கனு நிஜமாவே எனக்கு புரியல. எந்த பேப்பரை பிரிச்சாலும் டிசைன் டிசைனா அறிவுரைகள்  ஆலோசனைகள் !  வேர்ல்ட் கப் கிரிக்கெட் பைனல், இந்தியா பௌலிங்க்னு வச்சுகோங்க, ஒரு விக்கெட் விழுது அந்த நேரம் நம்மாளுங்க வலது கைல ரிமோட் இருந்துச்சுனு வைங்க , மேட்ச் முடியுற வரை கை வலிச்சாலும் ரிமோட்ட கையை மாத்தாம கீழ வைக்காம இருக்குறது... கூப்டாலும் திரும்பாம சேர்ல கம் போட்டு ஒட்டுன மாதிரி அசையாம இருக்குறது......அப்டி இப்டி ஏகப்பட்ட  short time சென்டிமென்ட்ஸ் இருக்கும்.  அதுக்கு சிறிதும் குறைந்ததில்லை.... இன்றைய மாணவர்களை எல்லோரும்  படுத்தும் பாடு. 




தேர்வை தைரியமாக எதிர்க் கொள்ள வழிமுறைகள் என்று  ஒரு பெரிய லிஸ்ட்... இந்த வழிமுறைகளை பின்பற்றினால் டன் கணக்கில் தைரியம் கிடைச்சு மலையை பொறட்டி தூக்கி அடுத்தவன் தலைல  போட்டுடலாம்னா பார்த்துக் கோங்க என்பதை போன்ற ஓவர் பில்டப்க்கள் !! 

அப்புறம் பெற்றோர்களே இது உங்களுக்கு நல்லா கவனியுங்க -  இருக்குற அத்தனை காய்கறியையும் முக்கியமா பாவக்காய விட்டுடக்கூடாது அப்டியே அரைச்சு உப்பு மிளகு போட்டு பசங்க காலைல எழுந்ததும் கொடுங்க... குடிச்சதும் மூளை அப்டியே ஜிவ்னு உஷாராகி போன ஜென்மத்து ஞாபகத்தையே கொண்டு வரும் அப்புறமென்ன சும்மா ஒரு டைம் வாசிச்சு விட்டா போதும் மூளை அப்படியே கபால்ன்னு புடிச்சுக்கும்.  அப்புறம் காரத்தை சுத்தமா குறைங்க... எண்ணெய் 2 ஸ்பூனுக்கு மேல நோ நோ தான், ஆவில வேக வச்சதுனா பெட்டர்  -  தேர்வு நேர சமையல் குறிப்புகள் என்று  ஒரு லிஸ்ட். 

மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்வது எப்படி  என்ற மனநல மருத்துவரின் அறிவுரைகள் ஆலோசனைகள் வேறு. யோகா தியானம் எதையும் விட்டுடக் கூடாது...  இப்படி பொதுத்தேர்வை மையப் படுத்தி பக்கம்பக்கமாக எழுதி இருக்கிறார்கள்... அப்பப்பா தலை உடம்பு எல்லாம் சுத்தறது!  ஏற்கனவே பெற்றோர்கள் ஒரு வருஷமா பிபி மாத்திரையும் கையுமா இருக்காங்க, அது போதாது என்று இந்த ஊடகங்கள் வேறு பீதியை கிளப்பி பெற்றோர்களை அதிக மன உளைச்சலுக்கு ஆளாக்க அவங்களும் அதை அப்படியே தங்களின் குழந்தைகளின் மீது காட்ட பிள்ளைகளின் நிலையோ மனநோய் பீடித்த நிலை. 

இதெல்லாம் விட ஒரு பெரிய கொடுமை என்னனா மாணவ மாணவிகளை மொத்தமா கோவில்ல  உக்கார வச்சு, லிட்டர் கணக்குல நெய்யை ஹோம குண்டத்துல கொட்டி யாகம் வளர்க்குறாங்க... இந்து பேப்பரில் வந்த  போட்டோவை பார்த்தால் மாணவிகளின் கண்களில் பக்தியை விட பயம்தான் தெரிகிறது. மிரண்டு போய் இருக்கிறார்கள். அப்புறம் ஒரு கூட்டம் மாணவ மாணவர்களை நிக்கவச்சு கண்ணை மூட சொல்லி பரிசுத்த ஆவியை நேரா அவங்க மேல இறக்குறாங்க ... இன்னொரு பக்கம் சர்வ மத பிரார்த்தனை என்று ஊர் ஊருக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதை போல நடந்துக் கொண்டிருக்கிறது.  

இப்படி சுத்தி சுத்தி ஆளாளுக்கு மாணவர்களுக்கு பயத்தை, பதட்டத்தை வரவழைச்சுட்டு  கடைசியா அசால்ட்டா கொடுப்பாங்க பாருங்க ஒரு லெக்சர், பரிட்சையில் தோல்வி அடைந்தாலும் தற்கொலை செய்துக் கொள்ளாதீர்கள்...  படிப்பு ஒன்றுதான் வாழ்க்கை இல்லை என்று அப்டியே ஒரு பல்டி! இவ்வளவு நாள் நீங்களாம் எங்கடா இருந்திங்க, தேர்வுக்கு முன்னாடியே ஊர் உலகத்தை கூப்ட்டு மேடை போட்டு இதை சொல்லவேண்டியதுதானே . அப்பலாம் விட்டுட்டு ஒரு உயிர் போனதும் உண்மையை இப்டி கொட்டுறிங்களே என்று கத்த தோணும். சரி இப்போவாவது தெளிஞ்சுதேனு சந்தோசப்பட முடியாது... மறுபடி அடுத்த வருஷம் பழையபடி முதல்ல இருந்து ஆரம்பிப்பாங்க......

இந்த ஆர்பாட்டங்களை எல்லாம் பாக்கறப்ப எனக்கு நாலு தடவை விஷம் குடிச்சு ஆறு தடவை தூக்குல தொங்கி பத்து தடவை ரயில முன்னாடி பாய்ஞ்சுனு  மாத்தி மாத்தி தற்கொலை பண்ணிக்கணும் போல இருக்கு. ஏ சமூகமே ஏ பள்ளிக்கூடமே ஏ அரசே ஏ அவனே ஏ இவனே என் இந்த குழந்தைகளை இவ்ளோ கொடுமைப்படுத்துரிங்க. பாவம் விட்டுடுங்க இன்றைய மாணவர்களை !!! பிளஸ் 1 பாடமே நடத்தாமல் பிளஸ் 2 பாடத்தை இரண்டு வருடமாக படிக்க வைத்து எப்போது பொதுத் தேர்வு வரும், முடித்துத் தொலைக்க என அவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் ...

ஒரு நிறுவனத்தில் உயர் அதிகாரியா வேலை பாக்குற என் தோழி தனது பிளஸ் 2 மகளின் தேர்வை முன்னிட்டு ஒரு வாரத்திற்கு முன்னாடியே லீவ் போட்டு மகளின் அருகில் அமர்ந்து படி  படி என்றபடி  இருக்கிறாள். மாற்றாந்தாய் கொடுமைனு  சொல்வாங்களே அதை இப்ப  என் தோழியின்  வீட்டில்  பார்க்கலாம்.

பள்ளிக்கூடமும், வீடு, சமூகமும் கொடுக்கும் மன அழுத்தங்களால் ஒவ்வொரு மாணவனும் ஒரு மனநோயாளிப் போலவே காட்சியளிக்கிறார்கள். மாணவிகள் ஓரளவு பரவாயில்லை, மௌனமாக சமாளித்து விடுகிறார்கள் ஆனால் மாணவர்கள் நிலைதான் மிக பரிதாபம்.  வீட்டில் இருந்து மூச்சுத்திணறி வெளியே வந்தால் தெருவில் போற வர்றவங்க எல்லாம் அட்வைஸ் கொடுக்க ஆரம்பிச்சுடுறாங்க.... மூணு பேர் சேர்ந்து நின்றாலே படிக்குற பசங்களுக்கு ரோட்ல என்ன வேலை என விரட்டப் படுகிறார்கள்...  வீடு பள்ளி சமூகம் எல்லாம் துரத்த வேறு எங்கே செல்வார்கள் ... யோசிங்க !?

நேத்து பேப்பரில் பார்த்தேன். பொதுத்தேர்வு நடக்குற பள்ளிக் கூடங்களில் நடமாடும் மருத்துவக் குழு ஒன்று சகல ஏற்பாடுகளுடன் தயாராக நிற்குமாம். இந்த காட்சியை பார்த்துட்டு உள்ள போற மாணவி வினாத்தாளை கையில் வாங்கியதும் மயங்கி விழாமல் இருந்தால் ஆச்சர்யம் !! 

பெற்றோர்களே !

எல்லாம் என் குழந்தைகளின் நல்லதுக்கு தானே என்று உங்களின் பைத்தியக்கார செயலுக்கு நியாயம் கற்பித்துக் கொள்ளாதீர்கள்... இந்த ஒரு வருடத்தில் அவர்கள் தொலைத்த குழந்தைத்தனம் சந்தோசம் நிம்மதியை உங்களால் திருப்பிக் கொடுக்க முடியுமா? கண்ணுக்கு தெரியாத எதிர்காலத்திற்காக நிகழ்கால ஜடங்களாக மாற்றிவிடாதீர்கள். 

இதோ நாளை தேர்வு... இப்போதும் இத படிச்சியா அத நோட் பண்ணிக்கோ என்று ஆளாளுக்கு படுத்தி எடுக்காதீர்கள் பிளீஸ்... இத்தனை நாளா அவங்களை வளைச்சு வளைச்சு  கண்காணிச்சுட்டு இருந்தது போதும்...  இனிமேலாவது  சுதந்திரமா  விடுங்க ... இறுக்கம் தவிர்த்து  பிரீயா மூச்சு விடட்டும்... அப்போதுதான் படித்தவரை  சரியாக எழுதமுடியும்... தேர்வை விட நமக்கு நம் குழந்தைகள் முக்கியம் மறந்துவிடாதீர்கள் !!!   

நாளைக்கு பிளஸ் 2 தேர்வை எழுதப் போகும் மாணவர்களுக்கு நாம் சொல்லக் கூடியது ஒன்றே ஒன்றுதான்... 

'படிச்சிருக்கிறோம் எக்ஸாம் எழுதப் போறோம்' என்ற மனநிலையோடு  மட்டும் சந்தோசமாக தேர்வை  எதிர்க் கொள்ளுங்கள் ... என் அன்பு வாழ்த்துக்கள் !!! 



திங்கள், மார்ச் 2

வாழ்தல் இனிது ...!

'பிறந்துவிட்டோம் அதனால் வாழ்கிறோம்' என்று நாட்களை கடத்திக் கொண்டிருந்தாலும் 'அடடா ஏன் இப்படி, வாழத்தானே வாழ்க்கை' என்று  கையை பிடித்து இழுத்து வந்து எங்கே சிரிங்க எங்கே ரசிங்க என்று உற்சாகப் படுத்துபவர்கள் சூழ வாழ்வது வரம். அதே வரம் இரட்டிப்பாய் கிடைத்தால் எப்படி இருக்கும் இப்படித்தான் இருக்கும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் எனது குழந்தைகள்.  அரிதாய்  கிடைத்த இந்த வாழ்க்கையின்  ஒவ்வொரு  நிமிடத்தையும்  பெற்றோரை அனுபவிக்க  வைத்து   ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்  !!   

முதல் வரம் 

பிளஸ் 2 படிக்கும் எனது மூத்த மகன் பள்ளியில் 'பிரிவு உபச்சார விழா'விற்காக A Tribute to Teachers  என்ற ஆறு நிமிட வீடியோ ஒன்றை தயாரித்தான். மூன்று நண்பர்களுடன் ஆலோசனை செய்து  கம்ப்யூட்டர் சம்பந்தமான வேலைகளை இவன் செய்து முடித்தான்.சும்மா செய்து பார்ப்போமே என்று செய்த இவனது முதல் முயற்சி  ஸ்கூல் பிரின்சிபால் , ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரின் பாராட்டையும் பெற்றதில் அம்மாவா எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. வீடியோ ரெடி  ஆகும் வரை நாலுபேரை தவிர வேறு யாருக்கும் தெரியாமல் இவர்கள் மறைக்கப் பட்ட பாட்டை நேரில் பார்த்து சிரித்துக் கொண்டே இருப்பேன். ஸ்கூல் எதிரில்  தான் எங்களின் வீடு என்பதால் பசங்க வருவதும் போவதுமாக இருக்கும்.  ஆசிரியர்களின் போட்டோக்களை பழைய குரூப் போட்டோக்களில் இருந்தும்  மாணவர்களின் போட்டோக்களை அவர்களின்  பேஸ்புக்(!) ப்ரோபைலில் இருந்தும் சம்பந்தப்பட்ட இசை, காட்சிகளை நெட்டில் எடுத்தும் இணைத்திருந்தான். தங்களின் போட்டோக்களை பார்த்தவர்களுக்கு ஒரு ஆச்சர்ய சந்தோசம் கூடவே மனதை தொட்ட கான்செப்ட்,  இவனது கையை பிடித்து வாழ்த்தி சந்தோஷத்தில் கத்தி தீர்த்துவிட்டார்கள்.

ஒரு வாரத்தில் பப்ளிக் எக்ஸாம் , அந்த டென்ஷனை குறைக்க இந்த வீடியோ தயாரிப்பு  உதவும் என்பதை போல அவனும் ஜாலியாக இந்த வீடியோ பண்ணிய விதம் எனக்கு ரொம்ப பிடிச்சது. முதலில் சிலைட் ஷோ பண்ண போவதாக இருந்தான், பிறகு என்ன நினைத்தானோ ஒரு கான்செப்டுடன் ஆறு நிமிட விடியோவானது. அதில் புகைப்படம் கிடைக்காமல் விடுபட்ட ஆசிரியர்களுக்கு  சாரி சொன்ன விதம், மூன்று நண்பர்களின் பெயரை சேர்த்தவன் தனது பெயரை (சந்தோஷ்) போடாமல் sam workshop என்று முடித்திருந்தான். காரணம் கேட்டதற்கு 'எதுக்குமா  பேரு, பண்ணினது யாருன்னு யோசிக்கட்டுமே' என்று சிரித்தான்.

 ஸ்கூல்ல ஒரு டீச்சர்,  'பப்ளிக் எக்ஸாம்  வச்சிட்டு இதை பண்ண வீட்டுல எப்டி அலோ பண்ணினாங்க' னு கேட்டதுக்கு 'என் பக்கத்துல உக்காந்து என்கரேஜ் பண்ணுனதே எங்க அம்மாதானே' என்றதும் டீச்சர் அப்படியே சைலென்ட்.  you tube யில் வீடியோவை ராத்திரி  அப்லோட் செய்த மறுநாள் எழுதிய கெமிஸ்ட்ரி மாடல் எக்ஸாமில் 93 சதவீத மதிப்பெண். சந்தோசமாக பரிட்சையை எதிர்க் கொள்ளனும் என்பதற்கு இதை விட வேறென்ன உதாரணத்தை நான் சொல்ல.:-) வீடியோவில்  பப்ளிக் எக்ஸாம் பற்றிய இடத்தில் விஜய் டயலாக் வர சிரிப்பை என்னால் கண்ட்ரோல் பண்ண முடியல. அந்த இடத்திற்கு பொருத்தமாக இருந்தது என்பதை விட அவனது மனநிலை அது என்பது எனக்குதானே தெரியும் :-) (ஒரு வருசமா இந்த பரீட்சையை சொல்லியே  ஸ்கூல் கொடுக்குற டார்ச்சரால எப்படா முடிச்சு தொலைப்போம்னு இல்ல இருக்கிறான்) :-)

நேரம் இருப்பின் வீடியோ பாருங்க.




இன்றைய குழந்தைகளின் ஆர்வம் ஈடுபாடு அலாதியானது தான். அதிலும் நம் பிள்ளை செய்கிறது என்றால் உலகத்திலேயே அதுதானே  ரொம்ப ரொம்ப பெரிசு இல்லையா :-)

இரண்டாவது வரம்

கடந்த வெள்ளிகிழமை(20/2/15)பிறந்தநாள் அன்று ஹாஸ்டலில் நண்பர்கள் போட்டிப் போட்டு பரிசுகள் கொடுத்து வாழ்த்தியதும் சந்தோஷத்தில்  கண் கலங்கி அழுதிருக்கிறான் எங்களின் இளைய மகன் விஷால். கிப்ட்ஸ்  எதையும் பிரிக்காமல் அப்படியே வீட்டுக்கு எடுத்துவந்தவன் என் முன்னால் வேகவேகமாக பிரித்தான். ஒவ்வொரு கிப்டும் வெள்ளை காகிதத்தால் சுற்றப்பட்டு சிகப்பு நிற ரிப்பனால் கட்டப்பட்டிருந்தது.  டியர் விஷால், ஹேப்பி பர்த்டே என்று எழுதி இருந்தவை அனைத்தும் ஓவியம்.  பேக்கிங்கின் உள்ளே இருந்தவை வெறும் பொருளாக எனக்கு தெரியவில்லை ... அங்கே சில பொருட்களின்  வடிவில் அமைதியாக உட்கார்ந்திருந்தது  நேசம் !!  நட்பிற்கு உருவம் கொடுத்தால் அது இப்படி இந்த புகைப்படத்தில் இருப்பதைப் போலத்தான்  இருக்கும் !!





ரெசிடென்சியல் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் பரிசு பொருள்கள் வாங்க  கடைகளுக்கு எவ்வாறு செல்ல முடியும். ஆனாலும் தங்களின் நேசத்தை இவ்வாறேனும்  வெளிப்படுத்துவோம் என்று  தங்களிடம் இருக்கும் பொருட்களில் கையில் அகப்பட்டதை எல்லாம் எடுத்து பேக்கிங் செய்து பரிசளித்த அச்சிறு குழந்தைகளின் முன்னால் பெரிய மால்களில் இருக்கும் பொருள்கள் கட்டாயம் தலைகுனிந்துதான் ஆகவேண்டும்.  கிப்ட் கொடுத்ததும் என் மகன் அழுததின் காரணம் எனக்கும் புரிந்தது. ஹாஸ்டலில் இருந்தால் என்ன  நண்பனுக்கு பரிசளித்தே ஆகணும் என்று ரகசியக்கூட்டம் போட்டு முடிவு செய்தபின்னர் என்ன பொருளை கொடுக்க என்றெல்லாம் அதிகம் யோசிக்கவில்லை அவர்கள்... மூன்று நாளாக  அதுவும் என் மகனுக்கு தெரியக்கூடாது சஸ்பென்சாக இருக்கணும் என்று ஒளிந்திருந்து பேக் செய்திருக்கிறார்கள்.

மகன் விடுமுறை முடிந்து ஹாஸ்டலுக்கு சென்றபின் தான், இந்த பொருட்களை  மறுபடி எப்போது பார்த்தாலும்  அழகிய அத்தருணம் அவனுக்கு நினைவுக்கு வருமே என்று போட்டோ எடுத்தேன்.  முன்பே இந்த யோசனை இருந்தால் பிரிக்கும் முன்பே எடுத்திருக்கலாம்.பேக்கிங்கை அவ்வளவு அழகாய் நேர்த்தியாய் செய்திருந்தார்கள்   ஆறாவது  மட்டுமே படிக்கும் அச்சிறு குழந்தைகள் !!

ஹாஸ்டலுக்கு ஒவ்வொரு திங்கள்கிழமை மாலையும் போன் செய்து நமது குழந்தையுடன் பேசலாம்...   அவ்வாறு என் மகனுடன் பேசும்போதெல்லாம் தவறாமல் இரண்டு எண்களையாவது கொடுத்து 'இந்த நம்பருக்கு போன் பண்ணி அவங்க பையனுக்கு உடனே போன் பண்ண சொல்லுங்க, ரொம்ப நேரமா வெயிட் பண்றான் என் பிரெண்ட்' என்பான் அக்கறையுடன். பொருள் தேடும் அவசரத்தில் ஹாஸ்டலில் இருக்கும் குழந்தையிடம் பேசணும் என்பதையே மறந்துவிடுகிறார்களே பெற்றோர்கள்.

பொருளின் பின்னே ஓடி ஓடி ஒருநாள் திரும்பிப் பார்க்கும் போது அங்கே நம்  குழந்தைகள் இருக்க மாட்டார்கள், நம் குழந்தைகளின்  சாயலில் வளர்ந்த ஒரு இயந்திரம் அங்கே  இருக்கும், கூடவே முதியோர் இல்லத்திற்கான முகவரியும்...!!  இதை புரிந்துக் கொண்டால் குழந்தைகளுடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் கொண்டாடுவோம். நமது குழந்தைகளுடன் இருக்கும் நேரத்தை எவ்வளவு விலை  கொடுத்தாலும் மீண்டும்  வாங்கவே  முடியாது.  நமது எல்லா வேலைகளையும் விட மிக மிக முக்கியம் குழந்தைகளுடன் நாம் செலவழிக்கும் கொஞ்சம் நேரம்  மட்டுமே.

'இருபது பேருக்கு மேல் இருக்கும், உங்க மகனுக்கு வந்த பரிசுகளைப் போல இங்க வேற யாருக்கும் இப்படி நடக்கல' என்று ஹாஸ்டல் வார்டன் என் கணவரிடம் ஆச்சர்யப் பட்டதை அறிந்ததும்  இத்தனை பேரின் அன்பை சம்பாதித்த மகனை இழுத்து அணைத்துக் கொண்டேன்.  சக மனிதர்களை நேசிக்கும் இந்த ஒரு பண்பு போதும் படிப்பு பணம் புகழ் அனைத்தும் தானாகவே  அவனிடம் மண்டியிட்டு விடும்.  

பையனின் பிறந்தநாளுக்கு நான் எழுதிய போஸ்ட் பார்த்து  கமெண்ட்ஸிலும் பேஸ்புக் இன்பாக்சிலும் போன் செய்தும் வாழ்த்திய நட்புகளின் அன்பில் நெகிழ்ந்து விட்டேன். அதிலும் போனில் அழைத்து  'போஸ்ட்ட  காலைல போடுறத விட்டுட்டு, போடவா வேண்டாமான்னு சாயங்காலம் வரைக்கும்  யோசிச்சி போட்டிங்களாக்கும்' என்று  என் தலையில் நறுக்குனு குட்டிய அன்பு நண்பர், எனது மகனின் வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து அவனை வாழ்த்தி மகிழ்ந்த அன்பு நண்பர் கே.ஆர்.பி.செந்தில்   போன்றவர்களை பெற்றிருக்கிறேன் என்பதை விட இந்த வாழ்க்கையில் சந்தோசம் வேறென்ன இருக்கப் போகிறது.



அன்புள்ளங்கள் சூழ வாழ்வது வரம் !! ஆம்... வாழ்தல் இனிது !!!


பிரியங்களுடன்
கௌசல்யா ...





போலி உறவுகளின் ஈர்ப்பு...!? தாம்பத்தியம் - பாகம் 33

"இந்த ஆம்பளைங்க  ஏன்  இப்படி இருக்காங்க...????"  ரிங் ஆன செல்போனை ஆன் செய்து ஹலோ சொன்ன அடுத்த செகண்ட் இந்த கேள்வி காதை அறைந்தது? ஆ...