திங்கள், நவம்பர் 21

என்னை காப்பாத்துங்க...! ஒரு அபலையின் அழுகுரல் !!!


பக்கத்துல ஒரு மனுசன் ஐயோ அம்மானு கதறிட்டு கிடந்தாலும் காது கேட்காத மாதிரியே ஒரு சிலரு இருந்தாலும், ஐயோ பாவம்னு அனுதாப பட, உதவி செய்ய கோடி பேர் இருக்கிறாங்க...அதுவும் என்ன போல அடுத்தவங்களுக்காக உசுற கைல பிடிச்சிட்டு ஓடிட்டு இருக்கிறதாலத்தான் நாட்ல மழையே பெய்யுது...ஆங் !மழைன்னு சொன்னப்ப ஞாபகம் வருது, அப்ப அப்ப என் உசுற இந்த மழைதான் காப்பாத்திட்டு வருது...இதுவும் என்னை கைவிட்டுடா என் நிலமை அவ்ளோதான்.

யார் இப்படி தன்னந்தனியா புலம்பரதுன்னு யோசிக்கிறீங்களா...?! நான்தான் ஆறு...ம்...வற்றாத ஜீவ நதினு நீங்க பெருமையா பேசுற தாமிரபரணி தான் நானு !! என்னடா ஒரு ஆறு புலம்புதுன்னு சிரிக்காதிங்க...முழுசா படிச்சா என்னை இப்படி புலம்ப வைக்கிறதே உங்களை போன்ற சில மனுசங்கதானு புரிஞ்சி தலை குனிவீங்க...!

நானும் யாராவது என்ன காப்பாத்த வருவாங்களானு காத்து கிடந்ததுதான் மிச்சம், ஒருத்தரும் எட்டி பார்க்கல...?! கலெக்டர், மந்திரி, எம்எல்ஏனு  பெரிய பெரிய ஆளுங்கலாம் என்ன கண்டுக்காம போனாலும் பொது சனங்க எம்மேல எம்புட்டு பாசம் வச்சிருக்காங்க தெரியுமா...?! ஆனா பாவம், அவங்க ரொம்ப அப்பாவிங்க, என் நிலைய பாத்து கண்கலங்கிறதோட முடிச்சுகுவாங்க, அதுதான் இங்க வந்தா நீங்களாவது என் நிலமைய பார்த்து என்னை காப்பாத்துவீங்கனு வந்திருக்கேன்...

பெருமையும், சீரழிவும்

திருநெல்வேலி அல்வாக்கே என்னாலத்தான் ருசி (ஒரு சுய விளம்பரந்தேன் !) அப்படின்னு வெளில பேசிகிறாங்க ! ஆனா இப்போ இருக்கிற தண்ணிய குடிச்சி பாருங்க, சப்புன்னு இருக்கும்...!? முன்னாடி எல்லாம் காடு கழனிக்கு போற விவசாய சனங்க, தண்ணிய அப்படியே அள்ளி குடிச்சி, 'ஆஹா எம்புட்டு ருசி சோறு கூட வேணாம்ல, வயிறு நிறைஞ்சு போச்சு'னு சந்தோசமா சொல்லுவாக...ம்...அதெல்லாம் ஒரு காலம் !


பொதிகை மலையில் பொறந்து அப்படியே நெல்லையை செழிப்பாக்கிட்டு, தூத்துக்குடி மாவட்டம் புன்னை காயல்ல போய் கடலோட கலந்துடுறேன்.....போற பாதை எல்லாம் செழிப்பா பச்சை பசேல்னு இருக்கும்...ஆனா இப்போ கரையோரத்தில கால் வைக்க முடியாத படி சேறும், சகதியுமா குப்பையும், கூளமா நிறைஞ்சு கிடக்குது...ஆத்துல சில இடத்தில அமலை செடிவேற நிறைய வளந்து மூடி கிடக்குது. மாநகராட்சி ஊருக்குள்ள பன்றிகள வளர்க்க தடை போட்டதால அதுங்க எல்லாம் என் கரையோர ஊர்கள்ல குடும்பமா கும்மாளம் போடுதுங்க...இதால கொசுங்க பெருகி போச்சு குழந்தை குட்டிகளுக்கு நோய் வந்திடுமேனு எனக்குதான் கவலையா இருக்கு...

ஆலை கழிவையும் கொண்டு வந்து கொட்டுறாங்க...தொழிற்சாலை கழிவு நீரை ஆத்துல விடுறாங்க...இதை எல்லாம் யாரு கண்டுகிறாங்க ? தட்டி கேட்குறதும் இல்ல ?!

அட படுபாவிகளா !

இன்னொரு பக்கம் என் மடியில கை வைக்கிற பாவிகளை என்னனு சொல்ல ...அவனுங்கள அந்த காமாட்சிதான் பாக்கணும் ! ஜே சி பி எந்திரத்தை வச்சு மணலை அள்ளி கொண்டு போறாங்க...ஐயோ ! எனக்கு வலிக்குதேனு கத்தி கதறினாலும் அரக்க சென்மங்க காதுல எங்க விழுது...?! இதை பாக்குற சனங்களோ இவன் உருபடுவானானு சாபம் போடுறாங்க...ஆனா எப்படி எதுக் கிறதுன்னு அவங்க பயப்படுறத பார்த்து என் வலியை பொறுத்துகிறேங்க...! 


இந்த மணல் கேரளாவுக்கு லாரி லாரியா போவுது...அந்த சனங்க ரொம்ப புத்திசாலிங்க, எங்க இருந்து மணல் வந்தா என்ன, நம்மூரை நல்லா பார்த்துபோம்னு இருக்காங்க...அங்கிருந்து மாலத்தீவுக்கு வேற போகுதாம்...இது எனக்கெப்படி தெரியும்னு பாக்குறீங்களா, இந்த லாரி டிரைவர்கள் பேசுவதை அப்ப அப்ப கொஞ்சம் கேட்பேன், இப்படிதான் என் பொது அறிவு வளருதுங்க...!

ஆமாம் தெரியாமத்தான் கேட்குறேன், மணலை அள்ளி வேற வேற இடத்தில மலையா குவிச்சு வச்சிருக்காங்களே, அரசாங்கத்தோட ஆளுக யாரும் பார்த்து எப்படி ஆத்து மணல் இங்க வந்ததுன்னு கேட்க மாட்டாங்களா ? இதை பறிமுதல் செய்ய சட்டத்தில இடம் இல்லையா ? (ஓட்டைதான் இருக்குனு சொல்றீங்களா, நீங்க சொன்னா சரிதான் !) 

என்ன ஒரு புத்திசாலித்தனம் ?!


எங்க ஊரு பக்கம் சொல்வாங்க..."கள்ளன் பெருசா, காப்பான் பெருசா" னு. இந்த கள்ளங்க எப்படி எல்லாம் பிளான் போடுறாங்க தெரியுமா... 'மணல் எடுக்க தடை போடுறீங்க சரி, ஆனா நாங்க ஆத்து பக்கத்துல நிலம் வாங்கி, அப்புறம் அந்த பட்டா இடத்தில மணலை வேண்டிய மட்டும் அள்ளுவோம், இப்ப என்ன பண்ணுவீங்களாம்'னு சிரிக்கிறானுங்க...?! அட முட்டா பசங்களே! இப்படி நிலத்த வாங்கி கடும் ஆழத்துல தோண்டுறீங்களே, நாளைக்கு ஆத்துல வெள்ளம் வந்தா ஊருக்குள்ள வந்துடுமேனு கொஞ்சமாவது யோசிசீங்களா...?!! உங்க சுயநலத்துக்காக எத்தன பேர் உசிரோட விளையாடுறீங்க...!? நீங்க நல்லா இருப்பீங்களா !



கைவிட்டுடாதிங்க...

இது ஏதோ புலம்பல்னு கண்டுக்காம விட்டுடாதிங்க...பறந்து விரிந்து ஊருக்கு நடுவில கம்பீரமா ஓட்டிட்டு இருந்த நான், இன்னும் கொஞ்ச நாள்ல ஒரு கோடா , ஒரு புள்ளியா சுருங்கி போனாலும் போய்டுவேன்...! மணல் எடுக்குற சாக்குல எங்களை கொஞ்ச கொஞ்சமா ஆக்கிரமிச்சிட்டு இருக்கிற மணல் கொள்ளையர்களை கூட்டமா சேர்ந்து தட்டி கேளுங்க, போராட்டம் பண்ணுங்க ...ஆரம்பத்தில எதிர்ப்பு இருந்தாலும் தொடர்ந்து நீங்க கொடுக்கிற டார்ச்சர்ல அவனுங்க இந்த கொள்ளை தொழிலையே மறந்துறணும்...ஊர் கூடி தேர் இழுத்தா தேர் நகராமலா போய்டும்...!? முயன்றுதான் பாருங்களேன்...!!

இது என்னோட தனிப்பட்ட வேதனைனு இல்ல, என்னப் போல பல ஆறுகளும் இப்படி தான் அழிஞ்சிட்டு வருது...சனங்களின் தாகத்தை தீர்த்து, விவசாயத்துக்கு உதவி செஞ்சி, ஊருக்கே சோறு போடுற எங்க நிலைமை ரொம்ப மோசமா போயிட்டே இருக்குது...! இனியாச்சும் யாராவது கவனம் எடுத்து, சீரழிஞ்சி செத்துக்கிட்டு இருக்கிற எங்கள வாழ வையுங்கனு என் எல்லா உடன்பிறப்பு சார்பில கேட்டுகிறேன்...

இப்ப மழைகாலம் வேற எல்லா தண்ணியும் கெட்டு போய் கிடக்கு...பிளாஸ்டிக் கேன்ல வாங்கினாலும் அதையும் சுட வச்சு குடிங்க...எங்க ஊருகாரவுக உணவு உலகத்தில சங்கரலிங்கம் ஐயாவோட இந்த பதிவை படிச்சி பாருங்க...அவர் சொல்றது உங்க நல்லதுக்கு தான்னு நினைச்சி அதை அப்படியே கடைபிடிங்க... உங்க புள்ள குட்டிகளை நோய் நொடி அண்டாம பத்திரமா பார்த்துகோங்க சனங்களே...

இத்தனை நேரம் பொறுமையா என் வேதனைகளை கேட்ட உங்க நல்ல மனசுக்கு நீங்க எல்லோரும் ரொம்ப நல்லா இருக்கணும்னு மனசார வாழ்த்துறேன்...முடிஞ்சா மத்தவுககிட்டையும் இதை கொஞ்சம் எடுத்து சொல்லுங்க...உங்களுக்கு புண்ணியமா போகும்...!

இப்படிக்கு 
தாமிரபரணி ஆறு
திருநெல்வேலி.

* * * * * * * * *



தலைப்பு - நன்றி சங்கரலிங்கம் அண்ணா    
படங்கள் - நன்றி கூகுள்     

சனி, நவம்பர் 19

ஒரு நாட்டின் எதிர்காலம் இவர்கள் கையில்...!



நவம்பர் 14 குழந்தைகள் தினம்,  'முன்னாள் பாரத பிரதமர் நேரு குழந்தைகள் மிக நேசித்ததால், அவரது பிறந்த தினத்தை குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம்' இத்தினம் கொண்டாடபடுவதின் காரணம் நமக்கு தெரிந்து இது ஒன்றுதான். ஆனால் உண்மையில் குழந்தைகளின் கையில் தான் ஒரு நாட்டின் எதிர்காலம் உள்ளது என்பதை உணர்த்தவே இந்த தினம்.


விழா

இத்தினம் முக்கியமாக பள்ளிகளில் சிறப்பாகக் கொண்டாடப்படும். ஆசிரியர்களைப் பொறுத்தவரை விழாவினை எப்படி சிறப்பாக நடத்துவது என்பதிலும், பல்வேறு போட்டிகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்வதில் குழந்தைகளின் சிந்தனைகள் இருக்கும்...ஆனால் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு எந்தவித சலனமும் இன்றி வருடத்தின் மற்றொரு நாள் இது என்பதாகப் போய்விடுகிறது...!!? 

'குழந்தைகள் தினம்' கொண்டாடுவது முக்கியம் இல்லை...குழந்தைகளை கொண்டாடுவோம் முதலில்...!!

சிறையில் நம் குழந்தைகள் 

சிறைப்பட்ட வண்ணத்துப்பூச்சி பார்க்க அழகாக இருக்கும் ஆனால் அதன் சிறகுகள் ஒடிக்கப்பட்டிருப்பதை அது அறியாது. இன்றைய குழந்தைகளும் தாங்களாகவே சிறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டார்கள்.கம்ப்யூட்டர் கேம்ஸ், தொலைக்காட்சி இன்னும் பிற அறிவியல் சாதனங்களின் ஆக்கிரமிப்பில் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.ஒரு சிலர் தமது வேலைக்கு இடைஞ்சல் வந்துவிட கூடாது என்று அந்த கதவை தட்டுவதுக் கூட இல்லை, அப்புறம் எங்கே திறப்பது...?!

உடலுக்கு சுறுசுறுப்பை தரும் விளையாட்டுகள் சுத்தமாக குறைந்துவிட்டன...பாட்டி, தாத்தாவிடம் கதை கேட்கும் கொடுப்பினை நம் குழந்தைகளுக்கு இல்லை...ஜங்க் புட் சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்கொள்ளும் தவறான பழக்கம்...உறவினர்கள் வீட்டுக்கு செல்லும் பழக்கம் இல்லை, தங்களின் உறவுகள் யார் எவர் என்றே அறியாத பரிதாபம் !   

பல வீடுகளில் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட தனிமை சிறையில் குழந்தைகள் ! சில நிமிட நேரங்கள் கூட குழந்தைகளிடம் செலவு பண்ண நேரம் இன்றி பொருளாதார தேடலுக்குப் பின்னே சில பெற்றோர்கள் !

கண்ணில் தெரியுது வானம் என்று நாம் சொல்லிக்கொண்டிருக்கும் போது இவர்கள் தொட்டே விடுகிறார்கள்...எங்கும் வேகம்...எதிலும் வேகம் என்று இருக்கிற இவர்களை நாம் கவனமாக பாதுகாக்க வேண்டாமா...?!! உணவு, உடை, படிப்பு கொடுப்பதுடன் தங்கள் கடமை முடிந்துவிடுகிறது என்று எண்ணுவது தவறு அல்லவா ? நல்ல சமுதாயத்தை உருவாக்குவதும் ஒவ்வொரு பெற்றோரின் முக்கிய கடமை தானே ?!

பாட்டு, நடன போட்டிகள்

எல்லா டிவி சேனல்களிலும் ஏதாவது குழந்தைகளுக்கான போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தங்கள் குழந்தையும் பங்குபெறவேண்டும் என்ற சில பெற்றோரின் ஆர்வத்தில் தவறு இல்லை. ஆனால் இதற்காக தன் அன்றாட வேலைகளை தங்கள் விருப்பபடி செய்யவிடாமல் பெற்றோர்  இழுத்த இழுப்புக்கெல்லாம் இழுபடும் பிள்ளைகள் பாவம்.தன் குழந்தை ஜெயிக்கவேண்டும் என்று திணிக்கப்படுபவை, தோல்வி அடைந்துவிட்டால் பெற்றோரின் அதிக எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ய இயலாமல் மன அழுத்தத்தில் விழ வைத்துவிடுகிறது. தவிர பலர் முன் தோற்றுவிட்டோம் என்பது ஒருவித சுயபச்சாதாபத்தை, தாழ்வுமனப்பான்மையை  ஏற்படுத்திவிடுகிறது. அதிலும் போட்டியில் எலிமிநேஷன் என்றதும் அவர்கள் முகத்தில் தெரியும் அச்சமும், செலக்ட் ஆகவில்லை என்றால் ஏற்படும் கலக்கமும் டிவியில் பார்க்கும் நமக்கே வேதனையாக இருக்கும்.

வெற்றி தோல்வி இரண்டையும் சமமாக எதிர்கொள்ளகூடிய அளவிற்கு மனதை தயார் செய்த பின்னர் இது போன்ற போட்டிகளில் பங்குக்  கொள்ளவைப்பது நல்லது. 

அர்த்தம் புரிகிறதோ இல்லையோ குழந்தைகள் பாட்டு போட்டியில் பாடும் இன்றைய ஒரு சில சினிமா பாடல்கள் கேட்கும் போது சங்கடமாகவும், கூச்சத்தில் நெளியவும் வைக்கிறது. இது போன்ற பாடல்களுக்கு பதிலாக பாரதியார், பாரதிதாசன், பாடல்களோ, ஆழ்வார், நாயன்மார்களின் பாசுரங்கள் இன்னும் பல... இவைகளைப் பாட வைக்கலாமே...அதன் மூலம் அப்பாடல்கள் மனதில் பதியும்...மனதில் பதிந்தவை அவர்களை நல் வழிபடுத்தும் !! 

சில பள்ளிகளில் சினிமா பாடல்களுக்கு குழந்தைகளை ஆட வைப்பதில்லை, அது போன்ற பள்ளிகளை பாராட்டலாம்.

குழந்தைகளை குழந்தைகளாக எண்ணாமல் இதை செய் அதை செய் என்று வறுபுறுத்தி வயதுக்கு மீறியவற்றை செய்யும் போது நம் மனது மகிழவே செய்கிறது...ரசிக்கிறோம்...அதே குழந்தைகள் நாளை பெற்றோரை எதிர்த்து நடக்கும் போது அதையும் ரசிக்க நம்மால் முடியுமா ?! 

என்னவெல்லாம் செய்யலாம்...?!


குழந்தைகள் தினத்தன்று ஆதரவற்ற குழந்தைகளை பள்ளி குழந்தைகளுடன் இணைத்து பெரிய விழாவாக கொண்டாடலாம். அப்போது ஆதரவற்ற குழந்தைகள் என்று ஒரு இனம்(?) இருக்கிறதா என்பது நம் குழந்தைகளுக்கு தெரியவரும்...அவர்களை அணைத்து செல்லவேண்டும், அவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் வளர இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.

உலகெங்கும் குழந்தைகள் மீதான குற்றங்கள்/கொடுமைகள்  பெருகிவிட்டன...இதை பற்றி யாரும் பெரிதாக அக்கறைப் பட்டதாக தெரியவில்லை...அங்கே ஒன்றும் இங்கே ஒன்றும் தானே நடக்கிறது என்று மெத்தனமாக இருக்கும் இந்த நிலை மாறினால் நல்லது.

குழந்தைகள் தினம் கொண்டாடும் நம் இந்திய அரசு குழந்தைகள் மீதான குற்றங்களை தடுக்க பெரிய அளவில் எந்த முயற்சியும் எடுத்து வருவதாக எனக்கு தெரியவில்லை...(தெரிந்தவர்கள் சொல்லலாமே...)குழந்தைகளுக்கு என்று நல சங்கங்கள் இருக்கிறதா ? அவை என்ன செய்கின்றன ?! குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தட்டி கேட்கவோ அல்லது அவற்றை களையவோ முயற்சி செய்கிறதா சங்கங்களும், அரசும் ?!!

மூன்று வயது குழந்தையும் பாலியல் கொடுமைக்கு ஆளாகிறது...இதை குறித்த விழிப்புணர்வு பெற்றோர்களுக்கும் வேண்டும்...பள்ளிகளில் குழந்தைகளுக்கு அடுத்தவர்களிடம் நடந்து கொள்ளும் விதம் பற்றியும் குட் டச், பேட் டச் பற்றியும் சொல்லி கொடுக்க வேண்டும். ஒருவர் தவறான இடத்தில் தொடுகிறார் என்றால் உடனே எதிர்ப்பை காட்ட தெரிய வேண்டும், பெற்றோரிடம் சொல்லவேண்டும் என்பதை அவர்களுக்கு நாம் அறிவுறுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு தண்டனை கடுமையாக்க பட்டால் இவை குறையுமா ? 

இவர்களும் குழந்தைகளே !

* முறையான கல்வி பெற வசதி இல்லாதவர்கள்
* ஆதரவற்ற அநாதை குழந்தைகள் 
* பாலியல் கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகள் 
* குழந்தை தொழிலாளர்கள் 
* சரிவிகித ஊட்டச்சத்து இன்றி நோயில் பிடியில் அவதிப்படும் குழந்தைகள்   
* பிச்சை எடுக்கும்(எடுக்க வைக்கப்படும்) குழந்தைகள்
* குப்பை பொறுக்கும் குழந்தைகள் 

ஆதரவின்றி தெருவில் சுற்றிக்கொண்டிருக்கும் குழந்தைகள் அநேகர் !இத்தகைய குழந்தைகளை பார்க்கும் போது நம்மால் இயன்ற ஒரு உதவியை செய்யலாம், அவர்களிடம் பேசி சம்மதிக்க வைத்து பள்ளிகளில் சேர்த்துவிடலாம்...அல்லது இதற்கென இருக்கும் தொண்டு நிறுவனங்களை தொடர்பு கொண்டு இவர்களை ஒப்படைக்கலாம். நமக்கென்ன வந்தது, இதை செய்ய போனால் வேறு ஏதும் பிரச்சனை வந்துவிடுமோ என அச்சம் கொள்ளாமல் இயன்றவரை நமக்கு தெரிந்தவர்கள் மூலமாக நல்ல இடங்களில் சேர்த்துவிடுவது நல் இதயம் உள்ள எல்லோரின் கடமை.

தொண்டு நிறுவனங்களின் வேலை இதுவென ஒதுங்கி கொள்ளாமல், தனி நபர் ஒவ்வொருவரும் உதவ முன் வரவேண்டும்.

நம்மில் பலரும் செய்வது பிறந்த நாள், நினைவுநாளின் போது அநாதை ஆசிரமங்களுக்கு சென்று இனிப்பும், உணவும் கொடுப்பது, இத்துடன் கடமை முடிந்துவிடுகிறது என்று நமது சுயம் திருப்திப்பட்டு கொள்கிறது.உணவு மட்டும் அவர்களை திருப்திப்படுத்தி விடுமா ? ஒரு சிலர் இத்தகைய நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட தொகையை கொடுப்பதும் உண்டு. ஆனால் இவை மட்டும் போதுமா ?!! யோசியுங்கள் !!

நம் குழந்தைகளின் மீது வைக்கும் அதே அன்பை பிற ஆதரவற்ற குழந்தைகளின் மீதும் செலுத்துவோம். அக்குழந்தைகளுக்கும் இப்பூமியில் அனைத்தையும் பெறவும், வாழவும் உரிமை இருக்கிறது...!! அவ்வுரிமையை நாம் மதிப்போம்...எந்த குழந்தைகளாக இருந்தாலும் குழந்தைகளை குழந்தைகளாக மட்டுமே பார்ப்போம்...!! அவர்கள் நலனில் அக்கறை காட்டுவோம்...!!

இக்கட்டுரை அதீதத்தில் வெளிவந்தது...நன்றி அதீதம்.

வருடம் தவறாமல் குழந்தைகள் தினம் கொண்டாடுபவர்களே ! இனிமேல் தினங்களை விட்டு விட்டு குழந்தைகளை எப்போது கொண்டாட போகிறீர்கள் ?
                                                                  -கவிக்கோ அப்துல் ரகுமான்

நாளை நவம்பர் 20 ஆம் தேதி சர்வதேச குழந்தைகள் தினம்...உலகம் முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாட படுகிறது...!

நம் குழந்தைகளை நாம் கொண்டாடுவோம்...! அனைத்து குழந்தை செல்வங்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்...



வெள்ளி, நவம்பர் 18

ஏன் இந்த வெளிநாட்டு மோகம்...!?




பெரும்பாலான இளைஞர்கள் படித்து முடித்ததும் உடனே தேடுவது ஒரு நல்ல வேலை...! கல்லூரியை விட்டு வெளியில் வந்ததும் அரசாங்கமோ, பெரிய கம்பெனியோ 'இந்தா அப்பாயின்மென்ட் ஆர்டர்' என்று தூக்கி கொடுத்து விடாது. வேலைக்கான தகுதியை வளர்த்து கொள்வதுடன், தனக்கு தகுந்த வேலையை தேடுவதும் அவசியம். ஆனால் வெளியிடங்களில் வேலை தேடியே சோர்ந்து போய் விடுகிறான் நம் இளைஞன். எதற்கெல்லாமோ, எதன் பின்னாலோ ஓடி நாட்களை வீணாக கழிப்பவர்கள், வேலை மட்டும் உடனே கிடைத்துவிட வேண்டும் என்று ஆசை படுவது என்ன நியாயமோ தெரியவில்லை.

அதுவும் ஒருசிலர் படிக்கும் போதே வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்கிற ஆசையை, ஆர்வத்தை வளர்த்து கொள்கிறார்கள்...இங்கே தகுந்த வேலையோ சம்பளமோ கிடைக்காது என்கிற விதமாக இருக்கும் அவர்களின் பேச்சுக்கள் எல்லாம்...!?

வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் வசதியானவர்களை பற்றி இங்கே சொல்லவில்லை...இந்த நாட்டில் வேலை கிடைக்கவில்லை என்று அப்பாவிடமோ, அடுத்தவரிடம் கடன் வாங்கியோ விமானத்தை பிடிக்கும் இளைஞனை சொல்கிறேன்...கடன் வாங்கி வெளிநாட்டை தேடி செல்வதை விட அதே பணத்தை வைத்து சொந்த ஊரில் சிறு தொழிலை தொடங்கலாமே என ஏன் யோசிப்பதில்லை...?! பிழைக்க வழி வகை தெரியவில்லையா ?? துணிச்சல் இல்லையா ?? முன்ன பின்ன தெரியாத ஊரில் வாழ தைரியத்துடன் செல்லும் இளைஞனுக்கு, அந்த துணிச்சலை மூலதனமாக வைத்து சொந்த நாட்டில் உழைத்து  சம்பாதிக்க தெரியவில்லை எனும் போது வருத்தம் ஏற்படுகிறது.

நம் நாட்டை குறை சொல்ல ஆயிரம் காரணங்களை அடுக்கலாம். ஆனால் ஏன் இங்கே உழைக்க முடியவில்லை என்ற கேள்விக்கு சரியான பதில் இருக்கிறதா ? அப்படி உங்களுக்கு சாதகமாக பதில் வைத்திருந்தாலும், இங்கே இருக்கும் மற்றவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதையும் சொல்ல வேண்டி வருமே...?!  அரசாங்கம்,  ஊழல், லஞ்சம் என்று எந்த வித சமாளிப்பும் தேவையில்லை. உழைக்க கூடிய திறன் , மனோதிடம், உத்வேகம், தன்னம்பிக்கை, சுய மரியாதை இருந்தால் எங்கேயும் வாழ முடியும். கை நிறைய சம்பாதிக்க முடியும். 

ஆயிரம் வசதிகள் இருந்தாலும் சொந்த நாட்டில் சொந்த பந்தங்களுடன், மனைவி குழந்தைகளுடன் ஒன்றாக வாழும் வாழ்க்கைக்கு ஈடு இணை ஏதும் இல்லை. 

* மனைவி குழந்தைகளை விட்டு சென்று, பல வருடம் கழித்து திரும்பி வரும் சிலருக்கு,நெருங்கிய அந்த உறவுகளே அன்னியமாகி விட்டதை போல தெரியும் சோகம் மிக கொடுமை ?!

* முதலில் அன்பை பொழிந்த உறவுகள், வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தை அனுபவித்த பின்னர், வெறும் பணம்காய்ச்சி மரமாக மட்டுமே உங்களை பார்க்க கூடிய நிலை சகஜம் !!

* பணத்தின் ருசி கண்டவர்கள் ஒரு சிலரின் மூணு வருட அக்ரீமென்ட் முடிந்த பிறகும் மீண்டும் போக சொல்லி வற்புறுத்துவது வேதனை !

இன்னும் இருக்கிறது சொல்வதற்கு...(அடுத்த பதிவில் பார்த்துக்கலாம்னு இத்தோட நிறுத்திக்கிறேன்)

வெளிநாட்டு வேலையை பற்றி இப்படி என்னை ஆதங்கப்பட வைத்துவிட்டது நேற்று நடந்த ஒரு சிறிய சம்பவம்... 



உழைக்க என்ன வெட்கம் ?!

சொந்த தொழில், மாதம் செலவு போக வருமானம் 20,000 ரூபாய்...!! இரண்டு  வருடத்தில்,வந்த வருமானத்தில் சொந்தமாக இரு ஆட்டோ (லோன் ), கூட வேலை செய்ய துணைக்கு மற்றொருவர் மட்டுமே !! அப்படி என்ன வேலை என்கிறீர்களா ?? 

இஸ்திரி கடை நடத்துகிறார்...என்னங்க நம்ப முடியவில்லையா?? நானும் இதை வேறு யாரும் என்னிடம் சொல்லி இருந்தால் நம்பி இருக்க மாட்டேன், நேரில் சென்று பேட்டி எடுக்காத குறையாக விவரங்களை கேட்டு தெரிந்துகொண்ட பிறகே நம்பினேன்... 

நேற்று என் கணவர் வீட்டில் மின்சாரம் இல்லாத போது , அவசரமாக வெளில  அயன்(கரண்ட் அயனிங் அண்ட் கரி பெட்டி அயனிங் இரண்டும் இருக்கும்) பண்ணிட்டு வரேன்னு ஒரு ஷர்ட், பேன்ட் எடுத்து சென்றவர், போன வேகத்தில் திரும்பி வந்துவிட்டார்...'என்னாச்சுங்க' என்றேன். 'இரண்டு நாள் ஆகுமாம், எனக்கு இப்ப தேவை. சரி பரவாயில்லை அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்'னு கிளம்பிட்டார். எனக்கு ஆச்சர்யம் "ஒரு அரைமணி, ஒரு மணி நேரம் வெயிட் பண்ண சொன்னா பரவாயில்லை, இரண்டு நாள் என்றால் எப்படிங்க ?!"

"கடைல ஒரு இடம் பாக்கி இல்லாம வரிசையா பெரிய பெரிய பேக்ல துணிகள் இருக்கு, இருக்கிற துணிய பார்த்தா ஒரு வாரம் ஆகும் போல...!?" 

என கணவர் சொல்லவும் அப்படி என்ன ஸ்பெஷல் அந்த கடைல என்று எனக்கு ஒரு ஆர்வம் வந்து விட்டது. மாலையில் அந்த வழியாக போனபோது போய் விசாரித்தே விட்டேன். 

(வேலை மும்மரத்தில் இருந்ததால் எனது கேள்விக்கு பதில்கள் இன்ஸ்டால்மென்டில் வந்தன.கால் வலித்தாலும் பரவாயில்லை...முழுதும் தெரிந்து கொள்ளாமல் விடுவதாயில்லை) 

B.com படித்திருக்கிறார், ஒரு வருடம் இப்படி அப்படி என்று கழித்துவிட்டு, வேறு உதவி ஏதும் கிடைக்காத காரணத்தால், எங்க ஏரியாவில் இருக்கும் அக்கா வீட்டிற்கு வந்திருக்கிறார். அக்கா வீட்டின் வாசல் மர நிழலில், வண்டியில் ஒருவர் இஸ்திரி போட்டு கொண்டிருந்திருக்கிறார். அவரது வண்டியை சுற்றி ஏகப்பட்ட துணி பேக்குகள் இருக்குமாம். சில நாட்கள் வண்டியை ஓரமாக விட்டு விட்டு போய் விடுவாராம்.அந்த ஏரியாவில் அரசாங்க வேலையில் உள்ளவர்கள் அதிகம், கொஞ்சம் வசதியானவர்கள் உள்ள ஏரியா. 'இஸ்திரி போட ஆள் வராத போது எல்லோரும் என்ன செய்வாங்க' என்று யோசித்திருக்கிறார். ஒரு சுப முகூர்த்த நாளில் 'ஏன் இந்த தொழிலை நாம் செய்ய கூடாது' என்ற சிந்தனை தோன்றி இருக்கிறது. 

முறையான வேலை (துணிகளை சரியாக மடித்து வைக்கும் லாவகம்) தெரியாத போதும், ஒரு மாதம் வீட்டில் பழகி பார்த்திருக்கிறார். அக்கா கணவரின் உதவியால் வண்டி, இஸ்திரி பெட்டி, கரி எல்லாம் தயார்.  ஏற்கனவே அங்கே ஒருவர் இருப்பதால், அக்கா வீட்டு வாசல் சரிபடாது என்று அடுத்த தெருவில், வேப்பமரம் இருக்கும் இடமாக பார்த்து வண்டியை நிறுத்தி இருக்கிறார். 

அடுத்த ஸ்டெப் கஸ்டமர்களை தேடுவது...

புதிய நபர்களை நம்பி யாரும் துணிகளை கொடுக்க மாட்டார்கள்...அதற்காக தனது துணிகளை எடுத்து வந்து ஒவ்வொன்றாக மெதுவாக அயன் செய்வாராம். அவரது ஒரு சட்டை பல முறை அயன் செய்ய பட்டு இருக்குமாம் !(தொழில் பழகின மாதிரியும் ஆச்சு, பாக்கிறவங்களுக்கு யார் வீட்டு துணியவோ அயன் பண்றான்  என்று நினைக்கவும் வசதி ஆச்சு) இப்படி இவரது பிளான் வொர்க் அவுட் ஆகி, ஒரு பெண்மணி தனது குழந்தைகள் துணிகளை கொண்டு வந்து கொடுத்திருக்காங்க...இவர் அவரை அக்கானு கூப்பிட்டு  மிகுந்த மரியாதையாக, அன்பாக பேசி இருக்கிறார் (முதல் போனி ஆச்சே !) 

அந்த பெண் அப்படியே அடுத்த பெண்களிடமும் போய் 'பார்த்தா நல்ல பையனா இருக்கிறான், உங்க துணி எல்லாம் கொடுங்க, அயன் பண்ணுவான்' அப்படின்னு இவரது விளம்பர பிரதிநிதி ஆகிடாங்க. இப்படியே தொழில் பிக் அப் ஆகி மெய்ன் ரோட்டில் ஒரு கடையை வாடகைக்கு பிடித்து தொழிலை விரிவு படுத்தி விட்டார். அப்புறம் என்ன ஒரே ஏறு முகம் தான், அடுத்து புதிதாக இரு ஆட்டோ வாங்கி சம்பளத்திற்கு டிரைவர்களை அமர்த்திவிட்டார். இப்போது அதில் இருந்தும் வருமானம் வருகிறது...

திருமணத்திற்கு பெண் தயாராக இருக்கிறதாம், இவர்தான் இன்னும் ஒரு வருடம் போகட்டும் என்று இருக்கிறாராம். 

* * *

என்ன விவரங்கள் போதுமா இன்னும் வேண்டுமா ?! இப்ப மறுபடியும் முதலில் இருந்து படிங்க...என்னோட ஆதங்கம் சரிதானா ? இல்லையானு ?

* நெல்லையில் மதுரம் ஹோட்டல் அருகில் ஒரு கடை இருக்கிறது, இங்கே எப்படி என்றால், அக்கம் பக்கத்தில் வீடுகளில் இருந்து கொண்டு வந்து போடும்  துவைக்க/தேய்க்க வேண்டிய துணிகளை மொத்தமாக சேகரித்து ஒரு மினி ஆட்டோவில் ஏற்றி நாகர்கோவிலுக்கு(!) கொண்டு செல்கிறார்கள், அங்கே ரெடி ஆனதும் , மறுபடி எடுத்து வந்து கஸ்டமர்களுக்கு  கொடுக்கிறார்கள்...இந்த வேலை தினமும் நடக்கிறது...துணிகளும் வந்து குவிந்து கொண்டே இருக்கிறது...!!   

இப்படி ஒவ்வொரு இளைஞரும் உத்வேகத்துடன் உழைக்க தயாராகிவிட்டால் வெளிநாடு செல்வது  என்பது பழங்கதையாகி விடுமல்லவா ? 

இஸ்திரி வேலை என்று இல்லை, எத்தனையோ சிறு தொழில்கள் மலிந்து கிடக்கின்றன...அரசின் மானியம் வேறு இருக்கிறது...எதற்கு யாரை எப்படி அணுக வேண்டும் என்பது தெரிந்து விட்டால் போதும். 

சொல்ல போனால் அரசின் உதவியே தேவையில்லை...சுயமாக பல தொழில்கள் செய்யலாம். படித்த சிலர் கிராமத்தில் தங்கள் படிப்பின் உதவி கொண்டு விவசாயம் பார்த்து வருகிறார்கள்...! சொந்த ஊரில் சொந்த பந்தங்களுடன், தன் குடும்பத்தினர் புடை சூழ வாழும் ஒரு வாழ்க்கை எவ்வளவு அர்த்தமுள்ளதாக மகிழ்ச்சியாக இருக்கும்...?! வெளிநாட்டு வருமானம் அளவு இல்லை என்றாலும் ஒரு நிறைவு இருக்கும் அல்லவா ?! கணவன் ஓர் இடம் மனைவி, குழந்தை  ஓர் இடம் என்பது கசப்பான ஒரு வாழ்க்கை தானே ?(அப்படி வாழ்பவர்களை மட்டும் !)

என்ன செய்வது, எங்க தலைஎழுத்து இப்படி வெளிநாட்டில் லோல் படணும் என்று  இருக்கிறது என்று சலித்து கொள்ளாதீர்கள், உங்களுக்கு நீங்கள் தான் எஜமானன் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிக்கும் உரிமையும் உங்களது தானே ?! அப்புறம் என்ன ?! வேறு யாருக்கோ உங்களின் உழைப்பும், சக்தியும் வீணாகிறது, அதை உங்கள் சொந்த முன்னேற்றத்துக்கு பயன் படுத்தினால் அபரீதமான வளர்ச்சியை காணவும் முடியும், இறுதி வரை நிம்மதியான ஒரு வாழ்க்கையும் வாழலாம்...!? சிந்தியுங்கள் எம் தேசத்து இளைஞர்களே !! 

வாழ நினைத்தால் வாழலாம்...!வழியா இல்லை நம் பூமியில்...!!


பி.கு.

எனக்கு தெரிந்த சிலரின் வேதனையான வாழ்க்கையை நேரில் பார்த்து , அதன் மீதான என் ஆதங்கம் தான் இந்த பதிவு. யார் மனதையும் புண்படுத்துவது என் விருப்பமல்ல . வருத்தபடுத்தி இருந்தால் மன்னிக்கவும்.


படங்கள் _ நன்றி கூகுள்     

ஞாயிறு, நவம்பர் 6

விடைபெறுகிறேன்...!


நன்றி கூறும் இடத்திற்கு வந்துவிட்டது எனது நட்சத்திர வாரம் ! ஆரம்பத்தில் எப்படி எழுத போகிறோம் என்று பிரமிப்பாக இருந்தது, இப்போது மிக வேகமாக நாட்கள் முடிந்துவிட்டதை போல தோணுகிறது. என்னால் இயன்றவரை தமிழ்மணம் நிர்வாகிகள் கொடுத்த பணியை முடித்திருக்கிறேன் என நினைக்கிறேன்.வந்த வேலை முடிந்தது, கிளம்பிட்டேன்...! போறதுக்கு முன்னாடி உங்க கிட்ட கொஞ்சம் பேசிட்டு போகலாம்னு பார்க்குறேன். (அப்ப ஒரு வாரமா பேசி தொல்லை பண்ணியதுக்கு பேர் என்னவாம்...!?) 

மாதத்துக்கு நாலு பதிவுகள் எழுதிகொண்டிருக்கிற என்னால் தினம் ஒன்று எழுத இயலுமா என ஒரு தயக்கம் இருந்தது...எதை பற்றி எழுதுவது என்று யோசிக்கவே ஒருநாளின் பகல் பொழுது போய்விட்டது, இரவில் எழுதி காலையில் போஸ்ட் செய்வதற்குள் சிந்தனை முழுதும் அதை சுற்றி  வந்ததென்னவோ நிஜம். (ஆமாம் அது எப்படிப்பா தினம் ஒரு போஸ்ட் போடுறீங்க...!?) உண்மையில் அவ்வாறு எழுதுபவர்கள் ரொம்ப பெரிய எழுத்தாளர்கள் என்பதை விட மிக சிறந்த சிந்தனாவாதிகள் !! (ம்...நான் இன்னும் வளரணுமோ...!?)

என் தமிழின் மீது எனக்கு திருப்தி இருந்ததில்லை...பேசுவதை அப்படியே எழுத்தில் கொண்டு வர தெரிந்தால் போதும் என்று எழுத வந்துவிட்டேன்...?!(முன்னாடியே தமிழை ஒழுங்கா படிசிருக்கலாமோ என்று எண்ண வைத்துவிட்டது இந்த பதிவுலகம் !!)  இங்கே பலரின் பதிவுகளை படிக்கும் போது மிக வியந்திருக்கிறேன்...மிக ரசித்து படிப்பேன் அவர்களின் எழுத்துக்களை, அங்கிருந்து கொஞ்சம் தமிழையும் கற்றுகொள்வேன். 

இங்கே நான் கற்றதும்,பெற்றதும் மிக அதிகம்.

எனக்கு மிக பிடித்த ஒரு வாக்கியம்

"பிறர் உன்னிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று விரும்புகிறாயோ அப்படி முதலில் நீ நட "  இயன்றவரை இப்படி நடக்க வேண்டும் என முயற்சிக்கிறேன்...

நமக்கு பிடித்த மாதிரி மத்தவங்களை நடந்துகொள்ள சொல்லி வற்புறுத்த முடியாது, நாமும் அவர்களுக்கு பிடித்த மாதிரி முழுமையாக மாற்றிக்கொள்ள இயலாது. முக்கியமாக நமக்கு பிடித்த கருத்துக்கள் பிறருக்கு படு அபத்தமாக தவறாக தெரியலாம், அதற்காக நம் கருத்தை மாற்றிக்கொண்டே இருப்பது நம் சுயத்தை இழப்பது போல... 

அதுக்காக நம் நண்பர்களிடத்தில் 'நான் இப்படித்தான் இருப்பேன் , பிடிச்சா என் கூட பேசு, பழகு இல்லைனா அதுதான் வாசல் போயிட்டே இரு' என்பது ஏற்புடையது அல்ல.

'நீ செய்றது பிடிக்கலைனாலும் பரவாயில்லை நீ என் நண்பன் சகித்துகொள்வேன்' என்பது ஒரு விதம்.

என் நண்பன் தவறு செய்தால், நட்பு உடைந்தாலும் பரவாயில்லை என்று நேரடியா அதை சுட்டி காட்டி உணர்த்துவது என்பது மற்றொரு விதம்.

என்னை பொறுத்தவரை சகித்து கொள்வதை விட சுட்டி காட்டுவது தான் சிறந்த நட்பு !

ஆனால் நமக்கு மிக பிடித்தவர்களிடத்தில் இன்னும் அதிகமா அதீத அன்பு என்கிற பெயரில் உரிமை எடுத்துக்கொள்ளும் போது பிரச்சனைகள் வந்துவிடுகிறது...! அது போன்ற நேரத்தில் பேசி மனவருத்தம் ஏற்படுத்தி கொள்வதை விட மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. மௌனம் பல நேரம் நம்மை காக்கும் ஒரு ஆயுதம் !

நம் வாயில் இருந்து வரும் வார்த்தைகளே நம்மை பிறரிடம் உருவகபடுத்துகிறது. கோபமாக பேசும்போதும் அதில் கொஞ்சம் அன்பை கலந்து பேசினால் மனம் வருத்தம் கொள்ளாது.இந்த சமூகத்தில் எல்லோரிடமும் நம்மால் நேசம் கொள்ள இயலாது, ஆனால் இங்கே பதிவுலகத்தில் இருக்கும் சிறுகூட்டத்தினரை நேசிக்க நம்மால் நிச்சயம் இயலும். தூய அன்பால் எல்லோரையும் பிணைத்து கொள்வோம்.

யாராக இருந்தாலும் அவர்களிடம் நிறைய எதிர்பார்த்து பழகும்போது பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்...இப்படி இரு அப்படி இரு என்பதை விட அவர்களின் இயல்பை அடிப்படை குணத்தை அப்படியே ஏற்றுகொள்வது மிக சிறப்பு. ஒவ்வொருவரின் தனித்தன்மையும்  போற்றப்படவேண்டும்...மதிக்கப்படவேண்டும் !




எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் இந்த ஒரு வார காலமாக எனக்கு வாழ்த்துக்களை சொல்லி ஒவ்வொரு பதிவின் போதும் பின்னூட்டம் இட்டு உற்சாக படுத்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மகிழ்வுடன் என் நன்றிகள் !! 


எனக்கு இந்த சந்தர்ப்பத்தை கொடுத்த தமிழ்மணம் நிர்வாகிகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும் !!

அப்பாதுரை 
தேவா
கார்த்திக் (எல்.கே)
தருமி
FOOD சங்கரலிங்கம் 
வை.கோபாலகிருஷ்ணன்
சௌந்தர்
ஜோதிஜி திருப்பூர்
சென்னை பித்தன் 
ராமலக்ஷ்மி 
சே.குமார்
மணிஜி 
வல்லி சிம்ஹன்
கே.ஆர்.விஜயன் 
மகேந்திரன்
முனைவர்.இரா.குணசீலன்
ஷைலஜா 
வேடந்தாங்கல் கருன்
வியபதி
என் ராஜபாட்டை-ராஜா
தோழி பிரஷா 
ஹேமா
துளசி கோபால்
மாதேவி
யோகன் பாரிஸ் 
கணேஷ்
ஓசூர் ராஜன்
நம்பிக்கை பாண்டியன்
புதுகை தென்றல்
புலவர் சா. இராமானுசம் 
பாண்டியன்ஜி 
அரசன்
தமிழ்கிழம் 
இராஜராஜேஸ்வரி
வெளங்காதவன்
தெய்வசுகந்தி
கணேஷ்மூர்த்தி 
சந்திரகெளரி
மாய உலகம் 
நிரூபன்
விச்சு
சத்ரியன்
அமைதிசாரல்
தங்கம் பழனி
இம்சைஅரசன் பாபு
அம்பாலடியாள்   
கவிதை வீதி சௌந்தர் 
அன்புடன் அருணா 
r.selvakumar
koodalbala
Siva
Shiva
angelin
asiya omar
suryajeeva
M.R.
rufina rajkumar
Starjan 
Dhans
nellai ram
Shangar
rajpraba
Robin
Mykitchen Flavours
AT.Mayuran
Lingesh
Muruganandan M .K
Bala
Velu.G
V.Radhakrishnan 



நாளையில் இருந்து தமிழ்மணம் நட்சத்திரமாக ஜொலிக்க போகும் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !


விடைபெறும் முன்... 

மனிதர்கள் யாராக எத்தகைய குணத்தை கொண்டவராகவும் இருக்கலாம்...அது எனக்கு முக்கியம் இல்லை...நான் மனிதர்களை மதிக்கிறேன்...அதனால் உங்களை அதிகமாய் நேசிக்கிறேன் ! 


இதன்படி என் மனதை நான் தயார் செய்துவைத்து கொண்டிருப்பதால் தான் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது...இந்த மகிழ்ச்சி என்னை சுற்றி இருப்பவர்களையும் நிச்சயம் மகிழ்ச்சிவுறச் செய்யும் என்று நம்புகிறேன் !!

இன்னும் பேசுவேன்...உங்களின் மனதோடு மட்டும்...........

பிரியங்களுடன்
கௌசல்யா




சனி, நவம்பர் 5

உங்களை நேசிக்கிறேன்...!!





இங்கே குறிப்பிடப்பட்டு இருக்கும் யாவருக்கும் நான் ஒரு வகையில் கடமை பட்டு இருக்கிறேன்.ஒருவேளை இதனை நான் மறந்தாலும் என் எழுத்துக்கள் நினைவுபடுத்த வேண்டும் என்பதற்காகவே  இங்கே ஒரு பதிவாக பதிகின்றேன். 

சேவை நிறுவனம் ஒன்றை இவ்வளவு சீக்கிரம் நாங்கள் தொடங்கியதற்கு  பதிவுலகம் ஒரு மிக பெரிய காரணம் என்பதை நான் பெருமையாக சொல்வேன்.  இந்த பதிவுலகின் மூலம் எனக்கு கிடைத்த உறவுகள் எனக்கு நேரடியாகவும், மறைமுகமாக உதவி வருகிறார்கள் எனபதை இந்த தமிழ் மணம் நட்சத்திர சிறப்பு வாரத்தில் பகிர்ந்து கொண்டால் ஒரு நிறைவாக இருக்குமென உணருகிறேன்.

ஒரு இனிய மாற்றம்   

வீடு, பாக்டரி, தொழில் என்று ஒரே விதமாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை பதிவுலகம் ஏற்படுத்தியது.பல புது உறவுகளின் அறிமுகம் நல்ல நட்புகள், சகோதர உறவுகள் இங்கே கிடைத்தன. 

அதில் முக்கியமான ஒருவர்  உணவு உலகம் சங்கரலிங்கம் அண்ணன்.   ஒருநாள் அவரிடம் 'தொண்டு நிறுவனம் ஆரம்பிக்கணும் என்ற ஒரு கனவு பலவருடமாக இருக்கிறது' என்று பேச்சுவாக்கில் சொன்னேன். உடனே சிறிதும் தயங்காமல் இதனை பற்றி ஆலோசனை கூற எனது மாமா ஒருவர் இருக்கிறார் என்றார். சொன்னதுடன் நில்லாமல் திரு. சிதம்பரபாண்டியன் (Rtd.District Registrar) அவர்களிடம் என்னை அறிமுகபடுத்தி வைத்தார். உண்மையில் அதுவரை போனில் மட்டும் பேசிகொண்டிருந்த நான், அன்று தான் அண்ணனையும் நேரில் சந்தித்தேன். அந்த நாள், அந்த முதல் சந்திப்பு என் வாழ்வை எப்படி மாற்றிப்போட வைக்க போகிறது என்று கனவிலும் நான் எண்ணவில்லை. 

சிதம்பரம் சார்

மூவரும் இரண்டு மணி நேரம் மேல் பேசினோம், பலகாலம் பழகியதை போன்று இருந்தது  அந்த முதல் சந்திப்பு...! சிதம்பரம் சார் பற்றி சொல்லவேண்டும் என்றால் ஒரு தொடர் பதிவு போடலாம்...! அவ்வளவு விஷய ஞானம் இருக்கிறது அவரிடம்... மிக அற்புதமான மனிதர். திருக்குறளை நன்கு கற்று தேர்ந்தவர். குறளின் படியே பேசுகிறார், அதன் படியே வாழ்கிறார் என்று கூட சொல்லலாம். வாழ்வியலோடு தொடர்பு படுத்தி அவர் பேச பேச எனக்குள் இருந்த அறியாமைகள் சில, மெல்ல நழுவி அவர் பாதம் சென்று மண்டியிட்டுவிட்டது...! 

வார்த்தைக்கு வார்த்தை மனித நேயம், சக மனிதரின் மீதான நேசம் பற்றியே   அவரது பேச்சு இருந்தது. எதை தேடி சென்றேனோ அதையும் பெற்று, அதற்கு அதிகமாகவும் பெற்றேன். அதற்கு பிறகு எங்களின் தொண்டு நிறுவனம் தொடங்கப்பட்டு, அரசாங்கத்தின் பதிவுக்கு பின் இனிதே சேவைகளும் செய்யப்பட்டு வருகிறது.

எந்த ஒரு செயலும் பலரின் ஒத்துழைப்பு இல்லாமல் முழுமையாய் செயல் வடிவம் பெறாது. அதுபோல் எனது நல்லவைகளின் பின்னால் இப்போது இருக்கும் பதிவுலக மாமனிதர்கள் சிலரை இங்கே நினைவுகூறுகிறேன்...


பதிவுலகில் முதல் பின்னூட்டம் மூலம் அறிமுகமான இவர் இன்று எனது இனிய நண்பர். எழுத்தாளர், புத்தகம் எழுதி வெளியிட்டு உள்ளார். சிறந்த அழகிய தமிழில் பேசுபவர்.. காக்கிசட்டை வேலை பளுவிற்கு நடுவிலும் பிற தொண்டு நிறுவனங்கள்  பற்றி நிறைய ஆலோசனைகள் கொடுத்து கொண்டிருக்கிறார். எங்கள் நிறுவனத்தின் பெயரை செலக்ட் செய்யும் வேலையை இவரிடம் கொடுத்ததும் கொஞ்சமும் தாமதிக்காமல் ஓகே செய்து கொடுத்தார்.  


டிரஸ்டின் வேலைகள் இப்போது எந்த நிலையில் இருக்கிறது என்பதை ஆர்வமாக கேட்டு தெரிந்துகொள்வார். அத்துடன் நில்லாமல் 'கௌசல்யா நீ இன்னும் நிறைய செய்வ' என்று பேசும் ஒவ்வொருமுறையும் என்னை தவறாது உற்சாகபடுத்தி கொண்டே இருப்பவர்.எவ்வளவு பிஸியாக இருந்தாலும் நான் போன் செய்தால் உடனே எடுத்து பேசுவார். நானும் எல்லாம் பேசிமுடித்துவிட்டு(?), 'அண்ணா இப்ப பிரீதானே நான் ஒன்றும் தொந்தரவு செய்யலையே (இத முதல்ல கேட்டு இருக்கணும்...!?) என்றால் 'படப்பிடிப்பில இருக்கிறேன்மா, என் பக்கத்தில் இருந்தவர்கள் பேச்சு நீடிப்பதை பார்த்து ஒவ்வொருவராக எழுந்து சென்றுவிட்டார்கள்' என்று சிரித்துக்கொண்டே சொல்வார். 'அச்சோ அண்ணா இதை முன்னாடியே சொல்லி இருக்கலாமே' என்றால் 'நீ அனாவசியமா கால் பண்ண மாட்டே, அதான் எடுத்தேன் என்பார்...! (என்ன தவம் செய்தனை !!)

தேர்தல் முடிந்ததும் 'கருவேலமரம்' சம்பந்தமாக முக்கியமான அரசியல் பிரமுகர் ஒருவருடன் என்னை அறிமுகபடுத்தி வைப்பதற்கு ஏற்பாடு செய்து வருகிறார். 


தொடர்ந்து எனது பதிவுகளுக்கு தனது பின்னூட்டங்களின் மூலம் சிறப்பு சேர்க்கும் சகோதரன் இவர். என்னை அதிகம் சிந்திக்கவைக்கும் வலிமை இவரது சொற்களுக்கு இருக்கிறது. எனது சேவை குறித்து தெரிந்தபின் அதன் முழு விவரமும் மெயிலின் மூலம் அவராக கேட்டு என்னை உற்சாக படுத்தி வருகிறார்.உதவிகள் வேறு எதுவும் வேண்டும் என்றால் ஏற்பாடுகள் செய்து தருகிறேன் என்று தானாக மனமுவந்து சொல்லவும் ஒரு மனம் வேண்டும் அது இவரிடம் இருக்கிறது. 


இனிமையான சகோதரர். நெல்லை பதிவர் சந்திப்பின் போது வருகை தரும் அனைவரிடமும் சிறு சேவை ஒன்றுக்காக பணம் கலெக்ட் செய்து அதை கருணை இல்லத்திற்கு வழங்க வேண்டும் என்ற என் விருப்பத்தை முதலில் இவரிடம் தான் சொன்னேன். அதற்கு அவர் 'தாராளமா செய்யலாம் சகோ, எல்லோரும் நிச்சயம் மகிழ்ச்சியுடன் சம்மதிப்பார்கள்' என்று எனக்கிருந்த சிறு  தயக்கத்தையும் களைந்து உற்சாக படுத்தினார். அவரது இந்த ஊக்கம் தான் இன்று வரை நான் தொடரும் சேவைகளுக்கு முதல் காரணமாக இருக்கிறது என்பதை மறுக்கவியலாது.

திவான்ஜி

சங்கரலிங்கம் அண்ணாவின் நண்பர். நகைச்சுவையாய் அர்த்தங்களுடன் பேசும் இவரது பேச்சில் அடுத்தவரின் மீதான நேசம் அப்பட்டமாக தெரியும் . உறவுகளின் உன்னதம் புரிந்து அதன்படி வாழ்ந்து கொண்டிருக்கும் சிறந்த  மனிதர். எல்லோரும் பேசிகொண்டிருக்கும் போது, என் கணவர் சாதாரணமாக கைகட்டிக் கொண்டு இருந்தாலும் 'பாஸ் நான் இருக்கிறேன். தைரியமா இருங்க, வீட்ல இருக்கிற மாதிரி இங்கேயும் ஏன் இப்படி பயந்து நடுங்கி கைகட்டிட்டு...! ' என்று என்னை அப்ப அப்ப வாரிவிடுவதில் சமர்த்தர்.  கருணை இல்லத்தில் கேம்ப் நடத்தியபோது லேப் டெக்னீஷியன்ஸ் ஏற்பாடு செய்து கொடுத்தார்.


இவனது பிறந்தநாள் வந்தபோது உனக்காக ஒரு வாழ்த்து கவிதை எழுதணும் என்று போனில் சொன்னதும், 'ஐயோ அக்கா வேண்டாம், கவிதை எழுதி அதை நான் படிச்சி.......அந்த விபரீதம் வேண்டாம் விட்டுடுங்க பிளீஸ்...' என்று கிண்டலடித்து சிரிக்க வைத்தான். 'அப்ப சரிவிடு எழுதல,  இந்த சந்தோசமும் உற்சாகமும் உன்னுடன் இறுதிவரை இருக்க வாழ்த்துகிறேன்' என்றேன். 'அதுகூட நீங்களும் என்கூட கடைசிவரை இருக்கணும் அக்கா' என்று சொல்லி நெகிழவைத்து விட்டான்.


ஒரு உணர்வு பூர்வமான நட்பு எங்களுடையது. ஒரே ஊர் என்பதால் பிரியத்தின் அளவு சிறிது கூடி இருக்கலாம்...!இப்பவும் அடிக்கடி சங்கரலிங்கம் அண்ணனிடம், 'கௌசல்யா அடுத்து என்ன பண்ண போறாங்க' என்று விசாரிக்க தவறுவதே இல்லை. 


நாஸ்காம்(NASSCOM) ஒர்க்ஷாப் செல்ல இவர்களும் ஒரு காரணம். அவர்களது உறவினர் மூலமாக இந்த ஒர்க்சாப் பற்றி எங்களுக்கு தெரியவந்தது. அதன் பின்னே திருச்சி சென்றோம். மிகுந்த சமூக சேவை ஆர்வம் கொண்டவர். முதியோர்களின் வசதிக்காக ஒரு இல்லம் பற்றிய ஒரு ஐடியா ஒன்றை சொல்லி இருக்கிறார். தகுந்த சமயம் வாய்த்ததும் ஆரம்பிக்க வேண்டும். அடிக்கடி பல தகவல்களை சொல்லி உற்சாக படுத்திகொண்டு வரும் அன்பான அக்கா இவர்கள்.


லோகோ வடிவமைக்கவேண்டும் என்றதும் உடனே தயார் செய்துகொடுத்தவர். உங்கள் சேவையில் எனது பங்காக இது இருக்கட்டும் என்று மகிழ்வுடன் சொன்ன அறிவார்ந்த சகோதரர்.


இவரை பற்றி எழுதணும் என்றவுடன், ஏற்கனவே இங்கே எழுதப்பட்ட வார்த்தைகள் எல்லாம் தங்களை ஒருமுறை சரிபார்த்து கொள்கின்றன...சரிதானா என்று?!! 

சண்டையில் தொடங்கிய எங்கள் அறிமுகம் நட்பாக மாறி இன்றுவரை ஒரு தெளிந்த நீரோடையாக ஓடிக்கொண்டிருக்கிறது. கற்றுகொடுத்து வழிகாட்டுவதில் குரு, கண்டிப்பதில் தந்தை, அன்பு காட்டுவதில் அன்னை, ஆலோசனை கூறுவதில் சகோதரன் எல்லாம் சேர்ந்தவர் நண்பர் தேவா !  'சொசைட்டிக்கு ஏதாவது செய்யணும் கௌசல்யா' என்று எனக்குள் இருக்கும் சேவை உணர்விற்கு எண்ணெய் வார்த்து கொண்டே இருப்பவர். எனது அத்தனை சேவையிலும் ஆத்மார்த்தமாக இருந்து வருபவர்.

எங்கள் சேவை நிறுவனத்திற்கு வந்த ஒரு கல்வி உதவி  வேண்டுகோள் மனுவை பற்றி இவரிடம் சொன்னதும் கழுகின் மூலம் செய்வோம் என்று எனக்கு நம்பிக்கை கொடுத்து பிற கழுகு குழும நண்பர்கள் உதவியோடு அதற்கு உரிய ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கிறார். 

ஸ்டார்ட் மியுசிக் ராமசாமி இவர் கருவேலமரம் பற்றிய ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை பாபு மூலமாக எனக்கு கொடுத்தார்.அடுத்து நான் மேற்க்கொள்ளபோகும் கருவேலமரம் பற்றிய பிராஜெக்டுக்கு உதவியாக இருக்கும்.

மற்றும் கல்விக்கு உதவி என்றதும் நான் தருகிறேன் என உடனே கழுகு குழுமத்தில் அறிவித்த வலைச்சரம் சீனா ஐயா ,தம்பி சௌந்தர், உங்கள் சேவையில் என்னையும் இணைத்து கொள்ளுங்கள் என அன்பாக கூறிய பலே பிரபு, கூடங்குளம் பிரச்சனையில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திகொண்டிருக்கும் கூடல்பாலா, கழுகு குழும நண்பர்கள் என சுற்றி சுற்றி நிறைய மிக மிக அற்புத மனிதர்கள்...(லிஸ்ட்ல நிறைய பேர் இருக்காங்க...பதிவுல இடம் பத்தாது !) இதோ இப்ப தமிழ்மணம், சிறு அறிமுகம் கூட இல்லாத எனக்கு கொடுத்திருக்கும் இந்த அங்கீகாரம்.........இப்படி இங்கே காணும் அத்தனை மனிதர்களும் என் வாழ்நாட்களை அர்த்தமுள்ளதாக்கி கொண்டிருக்கிறார்கள்.......!!

இந்த மாதிரி நல்ல உள்ளங்கள் கொண்ட மனிதர்கள் கிடைக்க பெற்ற யாராக இருந்தாலும் நிச்சயம் சாதிப்பார்கள் தான் வாழும் சமூகத்தை நேசிப்பார்கள் அதன் முன்னேற்றத்துக்காக, வளர்ச்சிக்காக உற்சாகமாக உழைப்பார்கள் !!

எனது தெய்வம் எந்த கோவிலிலும் அடைபட்டு இருக்கவில்லை...இதோ இங்கே இருக்கும் உங்கள் அனைவரிடத்தும் இருக்கிறது என்பதை நான் மெய்யாகவே காண்கிறேன்...உணர்கிறேன்...தலை வணங்குகிறேன் !





படங்கள் - நன்றி கூகுள் 

வெள்ளி, நவம்பர் 4

அனுபவம் புதுமை...!



அனுபவம் புதுமை


கூட்டுக்  குடும்பமா அப்படினா ? என்று புருவத்தை உயர்த்த வேண்டியதாக இருக்கிறது இப்போது...!?'இளைப்பாறும் சோலைவனம்' போன்ற கூட்டுக்குடும்பத்தில் நான் வசித்து வந்த காலம் என்னால் என்றும் மறக்க இயலாத ஒன்று. திருமணத்தின் போது, 'பெரிய குடும்பத்தில் குடுக்குறோம், போன வேகத்தில சூட்கேசை தூக்கிட்டு வரப் போறா' என்கிற பயம் என் அம்மாவுக்கு அதிகம் (தன் பொண்ணு மேல அவ்வளவு நம்பிக்கை !) ஆனா எனக்கு பெரிசா வித்தியாசம் எதுவும் தெரியல, இன்னும் சொல்லப்  போனால் ரொம்ப ஜாலியாக  இருந்தேன். எங்க அம்மாவுக்கே ஒரு கட்டத்தில் சந்தேகம் வந்துவிட்டது, எப்படி நம்ம பொண்ணு இப்படி இருக்கிறாள் என்று...! அந்த அளவிற்கு கூட்டுக்குடும்பம் எனக்கு பிடித்துவிட்டது. உதாரணத்துக்கு  இரண்டு விஷயம் மட்டும் சொல்றேன்...படிச்சிட்டு நீங்களே சொல்லுங்க.

குடும்பத்து உறுப்பினர்கள் மொத்தம் எத்தனை பேர் ? யார், யாருக்கு என்ன உறவு? என்ன பேரு ? இது புரியவதற்குள் ஒரு மாதம் ஓடிவிட்டது ! இதில் இருவர் உருவம் வேறு ஒரே மாதிரி இருக்கும், இவருன்னு அவரையும் அவருன்னு இவரையும் கூப்பிட்டு அந்த காமெடி/குழப்பம் வேற ! மாமனார், மாமியார் இருவரையும் சேர்த்து ஐந்து குடும்பங்கள் ஒரு வீட்டுக்குள்...! பதினாறு உறுப்பினர்கள் ! நாலு தனித் தனி வீடுகள் சேர்ந்து ஒரு பெரிய வீடு, ஒரே தலை வாசல். எதிர்காலத்தில் தனி வீடாகப்  பிரிக்க வேண்டும் என்றால் அதிக சிரமப்படாமல் பிரித்துக்கொள்ளும் அளவில் அறைகள், கதவுகள் வடிவமைக்கப்பட்டு இருந்தது. (எல்லாம் எங்க மாமனார் பிளான் !!) 

ஒரு அறையில் சமையல் நடக்கும்...என் கணவரின் மூன்று அண்ணன்கள் அவங்க அவங்க குடும்பத்துடன் வந்து உணவருந்தி விட்டுச்  செல்லும் விதம் பார்க்க ஜோரா இருக்கும். மூன்று அக்காக்களும் சமையலை ஆளுக்கு ஒரு வேலையாக பிரித்துப்  பார்த்துப்பாங்க. நான் கடைக்குட்டி(!) மருமகள் என்பதால் வீட்டில் எந்த பெரியப்  பொறுப்பான வேலையும் கிடையாது...எங்கள் தீப்பெட்டி பாக்டரியை விசிட் செய்யும் வேலை மட்டும்தான்.      

என் கணவர் மற்றும் அவரது அண்ணன்களுக்கு நான் மருமகள் முறை என்பதால் என்னிடம் எப்பவும் ஒரே கிண்டலும் கேலியுமாக இருப்பார்கள்.மாமியார் எனக்கு பாட்டி முறை , அதனால் மாமியார் என்கிற பயம் எல்லாம் சுத்தமா கிடையாது. (பயப்படுகிற ஐடியாவும் எனக்கு இல்ல...! நம்ம வளர்ப்பு அப்படி !) ஆனால் மாமனார்(தாத்தா) பக்கத்தில கூட போக மாட்டேன், மரியாதைதான் (அவர் தோற்றம் அப்படி கம்பீரமாக இருக்கும் !) 

இன்னொரு காரணமும் இருக்கு, அதையும் சொல்லிடுறேன்...! ஒருநாள் பாக்டரிக்கு சரக்கு கொண்டு வந்த லாரி டிரைவர் ஒரு துண்டுச்  சீட்டை என்னிடம் கொடுத்தார். நானும் அதை பொறுப்பா பக்கத்தில் இருந்த மாமனாரிடம் கொடுத்தேன் 'நீயே  படி' என்றார், 

'1,200 ரூபாய்  கொடுத்து விடவும் என்று இருக்கு' என்றேன். 

'வேற என்ன போட்டு இருக்கு' என்று அழுத்திக்  கேட்டார், 

'வேற இல்லையே இது மட்டும் எழுதி கீழே கையெழுத்துப்  போட்டு இருக்கு' என்றேன். 

'அது எப்படி கொண்டா இங்கே' என்றார்.

பார்த்துட்டு "நீ மெட்ராஸ்ல என்னத்த பெரிசா படிச்ச இங்கே 'எதுப்பு'ன்னு போட்டு இருக்கிறது கண் தெரியலையா ?" திட்ட தொடங்கிட்டார். 

எனக்கு ஒன்னும் புரியல...'அப்படினா என்ன'னு கேட்டேன் 

'இது தெரியாதா ? இதுதான் உங்க மெட்ராஸ் படிப்பின் லட்சணம்' அப்படி இப்படின்னு செம ரைடு !! கண்கலங்க விறுவிறுன்னு உள்ளே போய்ட்டேன், ஒரே அழுகை !! அப்புறம் கணவர்கிட்ட அர்த்தம் கேட்டுத்  தெரிஞ்சிக்கிட்டேன். ஆனாலும் நான் படிச்ச தமிழ்ல இது இல்லையேனு ஒரே பீலிங் ! ( உங்க யாருக்கும் தெரிஞ்சா பின்னூட்டத்தில் சொல்லுங்களேன் !!)

நெகிழ்ச்சியான சந்தர்ப்பங்கள் ! 

நான் கன்சீவ் ஆனபோது மருத்துவர் பழங்கள் சாப்பிடச்  சொன்னாரே என்று என் கணவரை வாங்கி வர சொன்னேன்...சரி என்று கிளம்பிச்  சென்றவர் திரும்பி வந்து பிளாஸ்டிக் கவரை நீட்டினார், நானும் ஆவலாய் வாங்கிப்  பார்த்தா உள்ளே ஒரே ஒரு பழம் இருக்கு...! என்னடா இவ்வளவு கஞ்சமா இருக்கிறாரேன்னு கோபம் வந்துடுச்சு...நான் கத்தவும்(!) சிரிச்சிக்கிட்டே போய்ட்டார். அப்புறம் ஒரு வாண்டு வந்து நடந்த கதையை விலாவரியா சொல்லிச்சு...

வீட்ல எங்களுக்கு கடைசி அறை கொடுத்திருந்தாங்க...எங்க அறைக்கு வரணும் என்றால் ஒரு பத்து அறைகளை வரிசையா கடந்து வரணும்...இரண்டு கையில் இரண்டு பேக்  நிறைய பழம்  வாங்கி வந்தவர், முதல் அறையில் இருந்த அப்பா அம்மா கிட்ட ஆளுக்கு ஒண்ணா எடுத்து கொடுத்திட்டு, எதிர்ப்படும் ஒவ்வொருத்தருக்கும் எடுத்துக்  கொடுத்துக்கிட்டே வந்திருக்கிறார், என்கிட்டே வந்தபோது  ஆல்ரெடி பேக் காலி, ஒரு அக்கா தனக்கு கொடுத்ததில் ஒரு பழத்தைப்  போட்டு அனுப்பி இருக்காங்க. எல்லாம் தெரிந்து அடசேன்னு எரிச்சல்...இந்த மாதிரி சூழ்நிலையில் எப்படிடா நம்ம குழந்தை ஆரோக்கியமா வளரப்போகுதுன்னு ரொம்ப பெரிய அளவுல கவலைப்பட தொடங்கிட்டேன். 

கொஞ்ச நேரம் கழிச்சு என் ரூம் ஜன்னலுக்கு அந்த பக்கத்தில் அவரோட அண்ணன் மெதுவாக கூப்பிட்டார்...அவர் கைல ஒரு பேக் நிறைய ஆப்பிள் !! 'என்ன மாமா இது என்ன' என்றேன், " உனக்குத்தான் வாங்கினேன், தலைவாசல் வழியாக வந்தா உனக்கு வந்துச்  சேராது என்று தெரியும், அதுதான் இப்படி ஜன்னல் பக்கம் வந்தேன், இந்தாமா எடுத்து உள்ள வச்சுக்கோ, அப்ப அப்ப எடுத்து சாப்பிட்டுக்கோ " அப்படியே வாயடைத்து நின்றுவிட்டேன். அதுக்கு அப்புறம் சாயங்காலம் வெளில போயிட்டு வரும்போது எனக்கு ஒரு பேக் தன் பிள்ளைகளுக்கு ஒரு பேக் என மாமா வாங்கி வருவது வாடிக்கையாகிவிட்டது...!

என் மாமாக்கள் இப்படி என்றால் எங்க அக்காக்கள் பண்ணிய கலாட்டா வேறு விதம் !!

joint family

வீடு பாக்டரி எல்லாம் ஒரே தெருவில் இருக்கிறது . மாமா , அக்கா எல்லோரும் காலையில் வீட்டில் முடிக்க வேண்டிய வேலைகளை முடித்துவிட்டு அவங்க அவங்க பாக்டரியை கவனிக்க போய்விட வேண்டும். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பொறுப்புகள் ஒதுக்கப்பட்டு இருக்கும். சும்மா இருக்கிறேன் என்று வீட்டில்  இருந்துவிட  வாய்ப்பில்லை. (அதனால சீரியல் பார்க்கும் பழக்கமே யாருக்கும் இல்லை !!) 

கர்ப்பமாக  இருக்கும் பெண்ணுக்கு நல்லது என்று சாம்பார் வைக்கும் போது பருப்பு வெந்ததும் அதில் கொஞ்சம் கிண்ணத்தில் எடுத்து நெய் கலந்து பாத்திர ஷெல்பில் வைத்து மேல ஒரு பெரிய பாத்திரத்தை கவிழ்த்தி மூடி வச்சிடுவாங்க...பாக்டரில நான் இருக்கும் இடம் தேடி வந்து 'கௌசல்யா இந்த ஷெல்பில, இந்த பாத்திரம் அடியில் பருப்பு வச்சிருக்கிறேன், சாப்பிட போகும்போது அதை எடுத்துக்க' என்று ஒரு குரல் கொடுத்துட்டு  போய்டுவாங்க. புதன் , ஞாயிறு இருநாளும் அசைவம் செய்வாங்க. வீட்டில்  எல்லோரும் அசைவம் விரும்பிச்  சாப்பிடுவாங்க,  சீக்கிரம் காலியாகிவிடும் என்பதால் சமைச்சதும் வழக்கம் போல எனக்காக தனியாக  எடுத்து  வச்சிடுவாங்க. அப்புறம் எனக்கு ஒரு சவுண்ட் !

ஒரு நாள் பாக்டரில ஒரு பிரச்சனை என்று சீரியஸாக  கவனிச்சிக்கிட்டு இருந்தேன், அப்போ பெரிய அக்கா வந்து,'கௌசல்யா மூணாவது செல்பில இந்த பாத்திரம் அடியில சிக்கன் இருக்கு, சாப்டுக்கோ' என்றார்கள். 'சரிக்கா' என்று சொல்லிட்டு வேலையைத்  தொடர்ந்தேன், கொஞ்ச நேரம் கழிச்சு இரண்டாவது அக்கா வந்து 'கௌசல்யா முதல் செல்பில இருக்கு எடுத்து சாப்பிடு' னு சொல்லவும் மூத்த அக்கா வச்சதை இவங்க மாத்தி எடுத்து வச்சிட்டாங்களா என்று ஒரு குழப்பம்...சரி போய் பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன், ஒரு கால் மணி நேரம் கழிச்சு சின்ன அக்கா 'கௌசல்யா குக்கருக்கு அடியில இருக்கு, போய் சாப்பிடு டைம் ஆச்சு' னு சொல்லவும் இன்னைக்கு என்ன இது இப்படின்னு 'சரிக்கா நீங்க போங்க, நான் போறேன்' சொல்லிட்டு கிளம்பினேன். 

சமையல் அரை பக்கம் நுழையவும் என் மாமியார் சவுண்ட் பெரிசா கேட்டுச்சு...அக்காக்களுக்கு ஒரே திட்டு என்ன சமையல் செய்றாங்க , குழம்பில கறியே இல்ல, கறி பத்தாதுனா கூட வாங்கிட்டு வர சொல்ல வேண்டியதுதானே...?!   (எனக்கு தனியா எடுத்து வைப்பது அவங்களுக்கு தெரியாது...!)  அக்காக்கள் என்மேல இருக்கிற அக்கறையில அன்னைக்கு பார்த்து மூணு பேரும் போட்டிப்  போட்டு எடுத்து வச்சிடாங்க, ஒருத்தர் வச்சதை மத்தவங்க கிட்ட சொல்லல...பகல் நேர வேலை டென்ஷன்ல இதை மறந்துட்டாங்க போல...உள்ளே போய் மூணு கிண்ணமும் எடுத்து ஒண்ணாச்  சேர்த்தா அரைகிலோவுக்கு மேல இருக்கு...!! 

அன்னைக்குப்  பார்த்து பசியோட லேட்டா சாப்பிட வந்த மாமியாருக்கு ,கொஞ்சமா இருந்த வெறும் குழம்பைப்  பார்த்து கோபம் வராம சிரிப்பா வரும் !!?

நைட் மாமனார், மாமியார் தூங்கிய பிறகு வழக்கம் போல முற்றத்தில உட்கார்ந்து பகல்ல நடந்த இந்த கறிக்குழம்பு கதையைச்  சொல்லி சிரிச்ச சிரிப்பில அந்த தெருவே  அதிர்ந்து போச்சு !! 

நான் காட்டன் சாரி விரும்பி கட்டுவேன் என்பதால் ஒரு மாமா தன் இன்சார்ஜில் இருக்கும் தறி கூடத்தில் தயாராகும் புடவையில் நல்ல டிசைன், கலர் புடவை நெய்ததும் எடுத்துக்  கொடுப்பார் (அக்காக்கள் காட்டன் கட்ட மாட்டார்கள்) அந்த புது புடவையை நான் கட்டிக்கிட்டு எங்கள் தறி கூடத்திற்கு ஒரு நடமாடும் விளம்பரம் போல சுத்திச்  சுத்தி வருவதைப்  பார்த்து ஒரே கிண்டல், கலாட்டானு ஏரியா கிறுகிறுத்துப்  போய்விடும் !!  

இது போல சின்ன சின்ன அழகான நெகிழ்ச்சியான பல சம்பவங்கள் !! கூட்டுக்குடும்பத்து குதூகலங்கள் அனுபவித்தவர்களுக்குத்  தான்  தெரியும் அது மனதிற்கு எந்த அளவிற்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் கொடுக்கும் என்று !!

இன்னும் இரண்டு அண்ணன்கள் தனியாக அதே ஊரில் வேறு இடத்தில் இருக்கிறார்கள். மாதத்திற்கு ஒரு முறை அவங்க இரு குடும்பமும் வந்து ஒரே இடத்தில் சமையல் செய்து ஒண்ணா எல்லோரும் வட்டமாக அமர்ந்து பேசி சிரிச்சிக்கிட்டே சாப்பிடுவோம்.   அந்த நாள் நேரம் போறதே தெரியாது...சாயங்காலம் எல்லா குடும்பத்துக்  குழந்தைகளும் ஒண்ணா விளையாடுவதை ரசிச்சுப்  பார்த்துக்கிட்டு இருப்போம்.  

கணவன் மனைவியருக்குள் ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் உடனே மத்தவங்க அவங்க முகத்தைப்  பார்த்து கண்டுப்பிடிச்சி அது என்ன என்று விசாரித்துப்  பேசி சரி பண்ணி விடுவார்கள். என் மாமியாருக்கு அப்போது  75 வயது இருக்கும் ஆனாலும் தினம் குறைந்தது 300 ரூபாய்க்கு வருமானம் பார்த்துடுவாங்க ...எப்படினா பாக்டரியின்  பெரிய அடுப்பில் வேலை முடிந்ததும் எறிந்த விறகை தண்ணித்  தெளிச்சு வச்சிடுவாங்க, எல்லாம் கரி ஆனதும் சுத்தம் பண்ணி எடுத்து வித்துடுவாங்க. நேரில் ஒருத்தர் வந்து வாங்கிட்டு போய்டுவார். (அவங்க அப்படி தண்ணீர் தெளிச்சு வைக்கலைனா, அது அப்படியே சாம்பலாக  வீணாகப்  போய்விடும், வேஸ்ட் தானே என்று நாங்க யாரும் இதை பெரிசா நினைக்க மாட்டோம்) ஆனால் என் மாமியார் உழைப்பின் அருமையை எங்களுக்கு உணர்த்திக்கொண்டே இருந்தார்கள்.

இன்று எங்கள் கூட்டு குடும்பத்தின் நினைவுகளை நினைக்க ஒரு சந்தர்ப்பம் வழங்கிய இந்த பதிவுலகத்திற்கு என் சந்தோசமான நன்றிகள் !!

இப்படிப் பட்ட எங்கள் வீட்டிற்கு ஒருநாள் திருடன் வந்தான், அவனால் நாங்க பட்ட அழகான(?!) ஒரு அவஸ்தையை உங்களுக்கு நேரம் இருந்தால் படித்துத்தான் பாருங்களேன்...திருடன் வந்த வேளை !!






படங்கள் -நன்றி கூகுள்



   

வியாழன், நவம்பர் 3

இந்த பெண்களே இப்படித்தான்...!!!



பெண்கள் எப்போதும் அதிகம் பேசிக்கொண்டிருப்பார்கள் என்ற பொதுவான ஒரு பேச்சு/எண்ணம் உண்டு.  பெரும்பாலானப் பேச்சுக்கள் ஆண்களால் பல நேரம் புரிந்துக்கொள்ளப் படுவதில்லை. ஏன் பிற பெண்களுக்கே புரிவதில்லை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதம்.

பெண் ஒரு ஆணை புரிந்துக் கொண்ட அளவு அந்த பெண்ணை ஆணால் புரிந்துக்கொள்ள முடிவதில்லை. அதற்கு ஆண் முயலுவதில்லை என்பதே உண்மை. பொறுமையும் இல்லை. பாரதியை செல்லம்மா புரிந்துக்கொண்ட அளவு அவர் புரிந்துக்கொண்டாரா? இவ்வளவு ஏன் நம் தாயை நம் தந்தை புரிந்துக் கொண்டிருப்பாரா ? நிச்சயமாக இல்லை. முழுவதும் புரிந்துக் கொள்ள இயலாது பெண் மனதை. 

தன் மனைவிக்கு எது பிடிக்கும் என்றேத் தெரியாமல் முப்பது வருட தாம்பத்தியத்தை கடந்துவிடும் ஆண்கள் பல பேர். ஆனால் ஒரு பெண் ஒரு ஆணுடன் பேசும் அரைமணி நேரத்தில் அவனது முழு குணத்தையும் எடைப்போட்டு விடுவாள். தான் என்ன புரிந்துக் கொண்டோம் என்பதை அந்த ஆணிடம் கடைசிவரை தெரிவிக்கவும் விரும்பமாட்டாள்.  

ஆணுடனான பெண்ணின் பேச்சுக்கள் 

அதிகம் பேசுவாள் ஆனால் அர்த்தமே இருக்காது என்பார்கள். அந்த அர்த்தம் பிறருக்கு சீக்கிரம் பிடிபடாது அதுதான் நிஜம். ஒரு பெண் பேசிக்கொண்டே இருக்கும் வரை பிரச்சனை இல்லை. எந்த இடத்தில் மௌனிக்கிறாளோ   அங்கே அவள் மனதில் எதிரில் இருக்கும் நபரை பற்றிய எதிர்மறை எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும். இதை ஆண்கள் புரிந்துக்கொள்ளாமல் நம்ம பேச்சை ரசிக்கிறாள் போல என்று தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார்கள் அந்த ஆணைப் பார்த்து அங்கே பெண்மை நகைக்கவேச் செய்யும்...!

* உன்னைத் தவிர வேறு எந்த பெண்ணுடனும் பேசுவது இல்லை என்று சொல்லும் எந்த ஆணையும் பெண் நம்ப மாட்டாள், அவளுக்கு நன்கு தெரியும் இது சுத்தப்பொய் என்று. 

* சுயத்தம்பட்டம் அடிக்கும் ஆணை எந்த பெண்ணுக்கும் பிடிக்காது. அப்படிப் பட்ட ஆண்கூட பேசும் போது பெரும்பாலும் அமைதியாகவே இருப்பாள், ஒரு கட்டத்துக்கு மேல் இவளும் கூட சேர்ந்து கொண்டு 'ஆமாம் நீங்க ஆஹா, ஓஹோ' என்பாள், நம்மள புகழ்கிறாள் போல என்று அந்த ஆண் இன்னும் அதிகமா உளற அன்றே அந்த ஆணின் நட்பிற்கு முற்றுப்புள்ளி  வைத்துவிடுவாள். 

* அதே நேரம் அதிகமாக தன்னை புகழ்கிற எந்த ஆணையும் பிடிக்காது. இது தெரியாமல் 'உன் குரல் குயில் மாதிரி இருக்கு, நீ அப்படியாக்கும், இப்படியாக்கும்' என்று கதை விடுகிற ஆணை தவிர்க்க மாட்டாள் , தொடர்ந்துப் பேசுவாள் ஆனால் மனதில் அவன் மேல் மரியாதை சுத்தமாக இருக்காது...!

மறைமுகமாக பேசுகிறாள் ஏன் ?

பெண் பல நேரம் சுத்தி வளைத்து பேசுவாள், நேரடியாக எதையும் சொல்ல மாட்டாள். எதிரில் இருக்கும் ஆணுக்கு பொருள் புலப்பட அதிக சிரமப்படும் அளவிற்கு இருக்கும். ஆனால் பெண்கள் தெளிவாகத்தான் இருப்பார்கள், ஆண்கள் ஊகிக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.  இதை கொஞ்சம் யோசித்து பார்த்தால் பல நல்ல விசயங்கள் அதில் மறைந்திருப்பதை உணரலாம். 

=> சில சிக்கலான விஷயத்தை நேரடியாக சொல்லும்போது அதை எதிர்கொள்கிற பக்குவம் எதிரில் இருக்கும் நபருக்கு இல்லாமல் இருக்கும். விசயத்தையும் சொல்லணும் அதேநேரம் அவங்க மனதும் பாதிக்கக் கூடாது என்பதற்காக சுத்தி வளைத்துச் சொல்வாள். இது போல் எல்லோரிடமும் பேச மாட்டாள் பெரும்பாலும் தனக்கு பிடித்தவர்களிடம் மட்டும். உறவை வளர்ப்பதற்கு இது உதவும். 

=> தவிரவும் எதிரில் இருப்பவர் அதிக கோபப்படுபவராக இருந்தால் அப்படிப் பட்டவர்களிடம் எதை ஒன்றையும் சுத்தி வளைத்துத் தான் பேசுவாள், இதன் மூலம் அவர்களின் கோபத்தைத் தவிர்க்க பார்க்கிறாள் என்பது பொருள்.

=>கருத்து வேறுபாடு ஏற்படாமல் இருக்கவும் அவர் மீது ஆதிக்கம் செலுத்தாமல், இணைந்துப் போக விரும்புவதால் இப்படி பேசுவாள். மொத்தத்தில் அவருடனான சண்டையை தவிர்க்கவே இது போன்ற பேச்சினை கையாளுகிறாள். 

=> இத்தகைய மறைமுகப் பேச்சை ஒரு பெண் மற்றொரு பெண்ணிடம் பேசினால் அப்பெண் புரிந்துக் கொள்கிறாள், ஆனால் ஆண்களால் இது முடிவதில்லை. ஆண்களுக்கு இந்த மறைமுக பேச்சை புரிந்துக்கொள்ளும் ஆற்றல் சுத்தமாக இல்லை...! தர்மசங்கடம் என்ன என்றால் ஆணும் தனது மறைமுகப் பேச்சை புரிந்துக்கொள்ளணும் என்று எதிர்பார்த்து ஏமாந்துப் போய்விடுகிறாள்...!!
  
இதில் சில நேரம் சிக்கலும் ஏற்பட்டு விடும் 

ஆண்களைப் பொறுத்தவரை நேரடியாக பேசிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போய்விடுவார்கள்.

=> பெண்களின் இது போன்ற பேச்சு அவர்களுக்கு குழப்பத்தைக் கொடுத்து விடுகிறது, இப்பேச்சில் முதிர்ச்சி இல்லை,நோக்கமும் இல்லை என்று சலிப்புடன் கூடிய வெறுப்பு ஏற்பட்டு விடுகிறது. சம்பந்தப்பட்ட பெண்ணின் மீது குறையையும் , குற்றத்தையும் வைத்துவிடுகின்றனர் ஆண்கள். முடிவில்  பெண்ணுடன் கருத்துவேறுபாடுகளை  ஏற்படுத்திவிடுகிறது. 

=> தவிரவும் வேலை செய்யும் இடத்தில் இது போன்ற பேச்சுக்கள் அவ்வளவாக வரவேற்கப்படுவதில்லை. அங்கே நேரடியான பதில்கள் தான் வேண்டும். அப்போதுதான் சம்பந்தப்பட்டவர்களிடம் சரியாகப் போய் சேரும். 

=> வேலை செய்யும் இடத்தில் ஒரு ஆணிடம் இப்படி பேசி அது புரியவில்லை என்றாலும் புரிந்ததுபோல் ஆமாம் என்று சொல்லிவிடுவார்கள். இதை வைத்து பெண் முடிவுக்கு வந்துவிட கூடிய விபரீதம் இருக்கிறது. அதனால் அங்கே இது போன்ற பேச்சுக்களை பெண்கள் தவிர்ப்பது நல்லது. 

சூப்பர் பவர் 

*ஒரு பிரச்சனையின் முடிவு தவறாக போய்விட்டால் அதையே சிந்தித்துக்கொண்டு சோர்ந்து விட மாட்டார்கள் அடுத்த ஆல்டர்நேடிவ் எதுவென பார்த்துகொண்டு போய்க் கொண்டே இருப்பார்கள்...!  கைவசம் எப்பவும் பல ஆல்டர்நேடிவ் ஐடியாக்கள் இருக்கும் !! 

* எத்தகைய சிக்கலான விசயத்தையும் வெகு சுலபமாக தாண்டிச் சென்று விடுவார்கள். பிறரின் பார்வையில் பெண் அதையே நினைத்து புலம்பிக் கொண்டிருப்பது போல் தோன்றும் உண்மையில் அவள் மனது இதில் இருந்து எப்படி வெளியில் வருவது என்பதைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கும் இதை ஆண்கள் அறிய மாட்டார்கள். 

* சமாளிப்பதில் வல்லவர்கள். தவறு செய்திருந்தாலும் அதை அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் மனசுக்கு பிடித்தவர்களிடத்தில் மட்டும் விரைவில் தவறை ஒப்பு கொண்டு சரணாகதி அடைந்துவிடுவார்கள்...!!

* பெண்கள் ரகசியத்தை காப்பாற்ற தெரியாதவர்கள் என்பார்கள். உண்மைதான் சிறு சிறு அல்ப விஷயத்தை மனதில் வைத்துக்கொள்ள மாட்டார்கள் வெளியில் சொல்லி விடுவார்கள் ஆனால் முக்கியமான அல்லது தங்களை  பற்றிய ரகசியத்தை உயிர் போனாலும் வெளிவிட மாட்டார்கள்...! மிக நெருங்கியவர்களிடம் கூட சொல்லமாட்டார்கள். 

* ஒரு விஷயத்தை மறைக்கணும் என்று ஒரு முறை முடிவு செய்துவிட்டால் இறைவனே முயன்றாலும் தெரிந்துக் கொள்ள முடியாது.  

* பெண்களின் மனம் ஒரு சமயத்தில் பல விஷயங்களை அசை போடும். ஒவ்வொரு விசயத்திற்கும் பல தீர்வுகளை யோசித்து வைத்து விடுவார்கள். (என்ன ஒன்று சமயத்தில் இதில் எந்த தீர்வு சரியாக வரும் என்பதை செலக்ட்  பண்ணாமல் விட்டுவிடுவார்கள். ஆண்கள் தான் பெண்கள் சொல்லும் தீர்வுகளை கவனம் எடுத்து கேட்டுக்கொள்ளவேண்டும்.) 

சில கேள்விகள் வேறு அர்த்தங்கள் !

* ஆணிடம் ஒன்றை எதிர்பார்த்து வேறு ஒன்றை பேசுவார்கள்...நீ என்னை விரும்புகிறாயா என்ற கேள்வி கேட்டால் ஆமாம் இல்லை என்ற நேரடி பதிலுக்காக இருக்காது...அன்பு காட்டுவதில் எங்கையோ தவறி விட்டாய் என்பதை குறிப்பால் உணர்த்தவே இந்த கேள்வி...!

* கோபமாக இல்லை என்று சொன்னால் ரொம்ப கோபமான இருக்கிறேன், சமாதானப்படுத்து என்று அர்த்தம்.

* எனக்கு மனசு சரியில்லை வருத்தமாக இருக்கிறது என்றால் நீயும் வருந்து என்று அர்த்தம்.

* 'எந்த அளவிற்கு என்னை பிடிக்கும்' என்று கேட்டால் அவனுக்கு பிடிக்காத எதையோ செய்திருக்கிறாள், 'என்னை பிடிக்கும் அல்லவா அட்ஜஸ்ட் பண்ணிக்கோ' என்று அர்த்தம் !

* 'பாக்கெட்டில் எவ்வளவு பணம் இருக்கிறது' என்று கேட்டால் ஏதோ விலை உயர்ந்த பொருள் வாங்க அடி போடுகிறாள் என்று அர்த்தம் !! :)

* 'அழகாக இருக்கிறேனா' என்று கேட்டால், தான் மட்டும் உன் கண்ணிற்கு அழகாக தெரியவேண்டும் என்று அர்த்தம். :)

இப்படி பெண்ணின் பேச்சிற்குப் பின்னால் இருக்கும் உண்மையான அர்த்தம் புரியாமல் அவஸ்தைப்படும் ஆண்களுக்கு இப்ப முடிஞ்ச அளவிற்கு ஏதோ சிலவற்றை சொல்லி இருக்கிறேன். ஒரு அகராதி தொகுக்கும் அளவிற்கு உள்ளதால் இனி வரும் காலங்களில் சொல்லலாம் என நினைக்கிறேன்...! :)) எதற்கும் கொஞ்சம் பார்த்துப் பக்குவமா நடந்துகோங்க...ஏன்னா பெண் ஒரு புதிர் !!





படங்கள்- நன்றி கூகுள் 

புதன், நவம்பர் 2

யாருக்கு அறிவுரை... ?!!

Child rearing
அறிவுரை குழந்தைக்கா நமக்கா ?



மாறி வரும் இன்றையச்  சூழலுக்கு ஏற்றபடி நேற்றைய குழந்தைகளான இன்றைய பெற்றோர்களுக்கு தான் அறிவுறுத்த வேண்டியது  இருக்கிறது.
குழந்தைகள் மிகுந்த புத்திசாலிகள், கணினி யுகத்தின் வேகத்திற்கு  ஏற்ப  சிந்திக்கக்  கூடிய  ஆற்றல்  மிக்கவர்கள் . ஆனால்  அவர்களுக்கு  வழிகாட்டுகிறோம்  என்று  பெற்றோர்கள் படுத்தும் பாடு இருக்கே அப்பப்பா !! பாவம் குழந்தைகள் !! அதிக பாடச்சுமை, பெற்றோர்களின் அதிக எதிர்பார்ப்புகள், போட்டி உலகத்தில் தங்களை முன்னிறுத்த எடுக்கும் முயற்சிகள் அத்தனையையும் சமாளித்து வளர்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இச்சூழ்நிலையில் பெற்றோர்கள் அவர்களுக்கு பக்கபலமாக ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். ஆனால் உண்மையில் பல வீடுகளில் என்ன நடக்கிறது......?!!

கொஞ்சம் யோசியுங்களேன் 

குழந்தைகளுடன் செலவழிக்கும் நேரங்கள் மிகக் குறைந்துவிட்டது. பொருளாதாரத் தேவைக்காகவும், வாழ்க்கை வசதியை பெருக்கவும் நிமிட முள்ளை விட வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் பெற்றோர்களே ஒரு நிமிடம் நிதானியுங்கள்,

உங்களின் இந்த ஓட்டம் யாருக்காக ? எதற்காக ? 

வெகு சுலபமாகச்  சொல்வீர்கள் என் பிள்ளைகளுக்காக என்று . ஆனால் இது வெறும் சமாளிப்பு !!

முழுக்க முழுக்க உங்களின் சந்தோசத்துக்காக, பிறர் முன் கௌரவமாக வாழ வேண்டும் என்ற அந்த ஆசைக்காக ! குழந்தைகளின் வசதிக்காக கார்  வாங்கினேன், வீடு கட்டினேன், இதைச்  செய்தேன், அதைச்  செய்தேன் என்று இனியும் சொல்லாதிங்க. எந்த குழந்தையும் எனக்கு வீடு கட்டி வையுங்கள், பேங்கில் பணம் போட்டு வையுங்கள் என்று கேட்டதா ? (சின்ன குழந்தைக்கு என்ன தெரியும் என்று அறிவு பூர்வமா பதில் சொல்லக்  கூடாது !) வீடு,  பேங்க் பேலன்ஸ் முக்கியம் தான். ஆனால் அதற்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவது நல்லது அல்ல. கண்ணுக்கு தெரியாத எதிர்காலம் என்ற ஒன்றுக்காக ஓடி ஓடி சம்பாதித்து பொருள் சேர்க்கும் நீங்கள், கண்முன் இருக்கும் நிகழ்காலத்தில் என்ன செய்கிறீர்கள்...??!

முதலில் உங்கள் குழந்தையின்  இன்றையத்  தேவை என்ன என அறிந்து அதை முதலில் நிறைவேற்றுங்கள். குழந்தையை அருகில் அழைத்து மெதுவாக பொறுமையாகக்  கேட்டுப்  பாருங்கள் ' உனக்கு என்னமா வேண்டும் என்று ' குழந்தை சொல்லும் 'என்கூட விளையாடணும்', 'என்னை வெளியே கூட்டி போங்க' !! வீட்டிற்குள் நுழையும் அப்பாவை பார்த்ததும் ஓடி வரும் குழந்தை அப்பா 'இன்னைக்கு கிளாஸ்ல ஹரிணி இல்ல அவ.....'என்று எதையோச்  சொல்ல ஆரம்பிக்கும் போதே 'அப்பா டியர்டா இருக்கேன்,தொந்தரவு பண்ணாத ' என்று வெறுப்பாகச்  சொல்லாமல் ஒரு இரண்டு நிமிடம் காது கொடுத்துக்  கேளுங்கள் அல்லது வெயிட் பண்ணு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு மறுபடி வந்து கட்டாயம் என்னவென்றுக்  கேளுங்கள். குழந்தையும் மிகுந்த ஆர்வமாகிச்  சொல்ல தொடங்கும். 

தன் பேச்சை பெற்றோர்கள் விரும்பிக்  கேட்கிறார்கள் என்ற எண்ணம் அக்குழந்தையின் மனதில் ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கும். தவிரவும், பள்ளியில் குழந்தையின் நடவடிக்கை, ஆசிரியர்களின் அணுகுமுறைகள்  எப்படி இருக்கிறது, ஏதும் பிரச்சனைகள் ஏற்படுகிறதா என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.  முதலில் உங்கள் குழந்தையின் சின்ன சின்ன தேவையை நிறைவேற்றுங்கள். அப்புறம் பார்க்கலாம் வீடும் காரும்...! 

நாம் இருவர் நமக்கு ஒருவர் !

இன்று பல வீடுகளில் ஒரு குழந்தை தான், காரணம் கேட்டால் 'இத ஒன்னு வளர்த்தாப்  போதாதா இருக்கிற விலைவாசியில' என்று பதில் வரும். ஆனால் முந்தைய தலைமுறை பெற்றோர்கள் நாலு, ஐந்து குழந்தைகளைப்  பெற்றார்கள், படிக்க வைத்தார்கள், திருமணம் முடித்து கொடுத்தார்கள் !! அன்றைய விலைவாசிக்குத்  தக்கதாகத்தான் அப்போதைய அப்பாக்களின் சம்பளமும் இருந்தது. பின் அவர்களுக்கு எப்படி சாத்தியமாயிற்று ? காரணம் அவர்களிடம் தேவைக்கு மீறிய ஆசைகள், ஆடம்பரம், போட்டி மனப்பான்மை இல்லை. முக்கியமாக வாழ்க்கை வசதியைப் பெருக்க அவசரம் காட்டவில்லை . ஒவ்வொரு செயலையும் நிதானித்துத் தீர்மானித்தார்கள். இப்போது கணினிகாலம் அதற்கு ஈடு கொடுத்து ஓடி கொண்டிருக்கிறோம். 

தவறில்லை ஆனால் இந்த ஓட்டத்தை சற்று நிறுத்தி குழந்தைகளுடன் சிறிது நேரம் செலவழியுங்கள். அந்த நேரங்கள் வானவில் நிமிடங்கள் ரசிக்க/பார்க்க  தவறிவிட்டோம் என்றால் க்ஷண நேரத்தில் மறைந்து விடும்.

நாம்  மாறுவோம்

*  தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி, பெரியம்மா, பெரியப்பா, மாமா, அத்தை போன்ற உறவுகளின் பெயர்கள் மறந்து/மறைந்து வருகிற காலம் இது. வீட்டுக்கு ஒரு பிள்ளை என்ற நிலையில் அடுத்த தலைமுறையினருக்கு இந்த உறவுகள் கூட இல்லாமல் போகலாம் !! அதனால் விடுமுறை நாட்களில் பார்க், பீச் , சினிமா என்று போவதை விட உறவினர்களின் இல்லத்திற்கு அழைத்து செல்லலாம். அவர்களை நம் வீட்டிற்கு வரவழைக்கலாம். சிறு சிறு மனஸ்தாபங்கள் இருந்தாலும் நம் குழந்தைகளுக்காக அதை மறந்து உறவுகளின் உன்னதத்தை உணர்த்தலாம். நம்மை பார்த்து நம் குழந்தைகள் கற்றுக் கொள்ளட்டும்.

*  'தொலைகாட்சிப்  பார்க்காதே' என்று சொல்வதற்கு பின்னால் சீரியல் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்ற ஆதங்கம் இருப்பதாகத்தான் தோன்றுகிறது. பார்க்க அனுமதியுங்கள். டிஸ்கவரி, ஜியாக்கிரபி போன்ற சேனல்கள் பார்க்கட்டும். கார்ட்டூன்(சில தவிர்த்து) பார்ப்பதால் என்ன பாதிப்பு வந்துவிட போகிறது...? அதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி பார்க்க செய்யுங்கள். இயன்றால் அவர்களுடன் அவற்றை சிறிது நேரம் நீங்களும் பாருங்கள் இவ்வாறு செய்வதின் மூலம் நமது மன அழுத்தம் குறைந்து குழந்தைகளுடன் குழந்தையாக மாறி விடுவோம். அவர்களும் ரிலாக்சாக பீல் பண்ணுவார்கள்.

* குழந்தைகளுக்கான நீதிநெறி கதை புத்தகங்களை வாங்கிக்கொடுத்து வாசிக்க செய்யலாம் . 

*  கல்வி தொடர்பான டிவிடிக்களை போட்டு பார்த்தால் குழந்தைகள் விரைவாக அந்த பாடங்களை கிரகித்து கொள்வார்கள் என்று நாம் எண்ணுவோம், ஆனால் இப்படி திரைகளை பார்த்து தெரிந்து கொள்வதைவிட மற்றவர்களுடன் பேசி பழகும் குழந்தைகளின் மூளை சுறுசுறுப்பாக இயங்குகிறது, விரைவாக எதையும் கற்றுக் கொள்கிறார்கள்  என்று ஆய்வு சொல்கிறது. அதனால் அக்கம் பக்கம் குழந்தைகளுடன் ஒரு ஆரோக்கியமான நட்பை ஏற்படுத்தி கொடுங்கள். நன்கு விளையாடட்டும், பேசி பழகட்டும்.

*  உடலுக்கு பயிற்சி தரக்கூடிய ஷட்டில் காக் , ரிங் பால், ஸ்கிப்பிங், த்ரோ பால்  போன்ற விளையாட்டுகளை அவர்களுடன் இணைந்து விளையாடுங்கள், அவர்களையும்  விளையாட உற்சாகபடுத்துங்கள்.

*  இப்போதுள்ள குழந்தைகளின் முக்கிய பிரச்சனை ஞாபக மறதி, இதற்கு ஒரு எளிய வழியாக பகல் நேர தூக்கத்தைச்  சொல்கிறார்கள் வல்லுனர்கள். தூங்கி எழுந்தபின் எதையும் கற்றுகொண்டால் அது எளிதாக மூளையில் பதியும். விடுமுறை நாட்களில் முடிந்த வரை பகலில் சிறிது நேரம் தூங்க வைத்து பழக்குங்கள். 

*  சில அம்மாக்கள் தங்கள்  குழந்தைகளைக்  காப்பாற்றுவதாக எண்ணி குழந்தைகளின் சில தவறுகளை கணவரிடம் மறைப்பார்கள். இது தவறான வளர்ப்பு முறை. அவ்வாறு செய்யும் போது அம்மா ஒண்ணும் சொல்ல மாட்டாங்க, அம்மாவை எப்படியும் சமாளித்து விடலாம் என்று துணிச்சலாக தவறுகளைச்  செய்ய தொடங்குவார்கள்.  

*  சில வீடுகளில் கணவனுக்கு தெரியாமல் மனைவியும், மனைவிக்கு தெரியாமல் கணவனும் தங்கள் குழந்தைகளுக்குப்  பொருட்களை வாங்கி கொடுப்பார்கள். இதுவும் சரியன்று. எதுவாக இருந்தாலும் இருவரும் இணைந்தே, இருவரின் விருப்பத்தின் பெயரிலேயே குழந்தைகளுக்கான பொருட்கள் வாங்கப்பட வேண்டும். 

*  சிலர் கண்டிப்பதில் ஒரு கொள்கையை வைத்திருப்பார்கள், அதாவது குழந்தை ஒரு தவறை செய்து விட்டால் ஒருவர்(அப்பா) கண்டிக்க வேண்டும் என்றும் மற்றொருவர்(அம்மா)  சமாதானம் படுத்தணும் என்றும்...! ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது...அப்பாவிற்கு தவறாகப்  படுவது அம்மாவிற்கு சாதாரணமாகப்   படுகிறதே என்று குழந்தை கொஞ்சம் குழம்பி யோசிக்க ஆரம்பித்துவிடும். தவறு என்றால் இருவருக்கும் தவறுதான். இருவரும் கண்டிக்க வேண்டும். 

*  பொதுவாக ஒரு குழந்தையிடம் பலரும் சகஜமாக கேட்கும் கேள்வி உனக்கு அம்மா பிடிக்குமா ? அப்பா பிடிக்குமா ? உண்மையில் இந்த கேள்வியே அபத்தம். அம்மா, அப்பா இருவரும் வேறு வேறு அல்ல, இருவரும் ஒருவரே...இருவருக்கும் சம அளவில் மரியாதையும், அன்பும் கொடுக்கப்பட வேண்டும். இதை முதலில் குழந்தைக்குப்  புரிய வைக்க வேண்டும். 

குழந்தைகளை குழந்தையாக எண்ணி நடந்து கொண்டாலே போதும். வயதிற்கு மீறிய எதிர்பார்ப்பை அவர்கள் மீது திணிக்காமல் இருங்கள். அவர்களுக்கு வழியை மட்டும் காட்டுங்கள், கூடவேச்  செல்ல வேண்டும் என்பது தேவை இல்லை. 

Child rearing



எனது இக்கட்டுரை கழுகில் வெளிவந்தது.
படங்கள் - நன்றி கூகுள்