‘எவ்வாறு தொடங்குவது’ மிக நீண்ட யோசனைக்கு பிறகு தட்டுத் தடுமாறி கொஞ்சம் நடுநடுங்கி முதல் வார்த்தையை 'டைப்'பினால், பதிவுலக தொடர்பு எல்லைக்கு வெளியே சென்று ஒரு வருடம் மேல் ஆகிவிட்டது என அர்த்தமாகும். எதிரில் பார்க்கும் எதையும் எழுத்தாக்கி பகிரும் வேகம், துடிப்பு, உத்வேகம் எல்லாம் மலையேறி புதுதாய் எழுதவருவதை போன்ற என் போன்றோர் நிலை கொஞ்சம் பரிதாபம்தான். என்னத்த எழுத என்ற சலிப்பு, வேலை பிஸி என்ற முகமூடி போட்டுக்கொள்கிறதோ என்னவோ!
மறுபடி எழுத வந்ததற்கு தோழி ஏஞ்சல் ஒரு முக்கிய காரணம். (எழுத போறிங்களா இல்லையானு பேஸ்புக் இன்பாக்ஸ், ஜிமெயில் போதாதுன்னு போன் செய்தும் ஏகப்பட்ட மிரட்டல்கள்) தவிர எங்க போனிங்க என்ன ஆச்சு என்று அடிக்கடி என்னை "அன்புடன்" விசாரித்துக்கொ ண்டிருக்கும் அந்த நாலு பேருக்கு என் நன்றிகள். மனிதர்களுக்கு எப்போதும் போன், இணையம் என ஏதோ ஒரு தொடர்பில் இருந்தாகவேண்டும்...இல்லனா மத்தவங்க நம்மள சுத்தமா மறந்து போய்டுவாங்க இல்லையா (நினைச்சுகிட்டே இருக்குற அளவுக்கு நாம பெருசா ஒன்னும் பண்ணலன்றது வேற) உயிருடன் இருக்கும் போது ஒருவருக்கு ஒருவர் தொடர்புடன் இல்லையென்றால் மறந்துவிடுவார்கள் என்றால் மரணித்தபின்னால் பெரிதாக என்ன இருக்கப்போகிறது .....முதல் நாள் கண்ணீர் மறுநாள் சோகம் அடுத்தநாள் அவங்க அவங்க சொந்த வேலை கவலை ... நமது பெயரும் அடுத்த சில வருடங்களில் மறந்து போகும் ....இவ்வளவுதான் வாழ்க்கை! இதை புரிந்துக் கொள்ள இமயமலை தேடி ஓட வேண்டியதில்லை, கண் முன் கடந்து போகும் ஒரு மரணம் போதும்...
என்னை பொறுத்தவரை எந்த ஊர்ல இப்ப இருக்கிறேன்னு பக்கத்தில் இருக்கிறவங்க நினைவுப் படுத்துகிற அளவுக்கு அதி பிரமாதமாக போகுது வாழ்க்கை... ஓடி ஓடி களைத்து சாய ஒரு தோள் கிடைக்காதா என ஏங்கி அவ்வாறு கிடைத்தாலும் சாய நேரம் இல்லை போன்றதொரு நிலை.
எதிர்பாராத ஒரு பெரிய இழப்பு அது கொடுத்த வலி சோகம் துக்கம் இவை எல்லாவற்றையும் கடக்க அதிக பிரயத்தனம் எடுத்தும் அதுக்கு வாய்ப்பே இல்லை என்பது தெரிந்ததும் சரி ஒரு ஓரமாக அதுவும் இருந்துவிட்டு போகட்டுமே என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். ஒருவரை இழந்த பிறகே, ‘அவருடன் இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாமே , பிடிச்சதை சமைச்சு கொடுத்திருக்கலாமே, உடன் ஊர் சுற்றி இருக்கலாமே, அட்லீஸ்ட் மாதம் ஒரு முறையேனும் போன் செய்து எப்டி இருக்குற என விசாரித்து இருக்கலாமே என தோன்றுகிறது. இதில் ஒன்றையுமே செய்யாமல் போனபின்பு ஐயோ போயிட்டியே என அரட்டுவதை என் மனசாட்சியே சும்மா நடிக்காதே என பரிகசித்தது. ஆமாம் உண்மை சுடுகிறது. இதுநாள் வரை அப்படிதானே நடந்திருக்கிறேன், நான் எனது வீடு குடும்பம் தொழில் என சுயநலமாகவே வாழ்ந்துவிட்டு அன்றைக்கு துக்க வீட்டில் அழுதது கூட அபத்தமாக தோன்றியது.
மரணமல்ல ஜனனம்!
ஒரு மரணம் எனக்குள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்திவருகிறது... பிறரிடம் இருக்கும் நல்லது தீயது இரண்டில் நல்லதை மட்டுமே பார்க்கத் தொடங்கி இருக்கிறேன்... இதுவரை பிறரின் தவறுகளை மன்னித்த நான் இப்போது அதை மறக்கவும் முயற்சித்து அதில் சிறிது வெற்றியும் பெற்றுவிட்டேன். ஒரு தெளிந்த நீரோடையாக மனதை வைத்துக் கொள்ள முயற்சி செய்கிறேன். உண்மையில் இது மிக பிடித்திருக்கிறது. முன்பை விட அதிகமாக எல்லோரையும் நேசிக்கவேண்டும், இன்னும் அதிகமாக பிறருக்கு உதவவேண்டும், இன்னும் அதிகமாக இந்த சமூகத்திற்காக உழைக்கவேண்டும், தெரிந்த சமூக அவலங்களை எழுத்திலாவது எழுதி வைத்துவிட வேண்டும் என்ற உத்வேகம் ஏற்படுகிறது.
நந்தினி,ஹாசினி ரித்திகா என்ற அழகான பெயர்கள் துக்ககரமாக மாறிப்போனபோது பச்ச குழந்தைகளை போய் எப்படிடா என்னடா வேணும் உங்களுக்கு என கதறியே விட்டேன். இரவுகளில் தூங்கவிடாமல் ஓலமிடும் மனதிடம் இதோ எழுதி ஆதங்கத்தை தீர்த்துவிடுகிறேன் என சமாதானம் செய்வேன். பாலியல் பிரச்சனைகளின் மூலம் எங்கே இருக்கிறது என்பதைப் பற்றி ஓரளவிற்கு தெரியும் என்பதால் குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு கட்டுரையை இனி தொடரலாம்... மூலம் என்று தேடிப்போனால் பேசாப் பொருளா காமம் பற்றி பேசணும் சரி அதை பற்றியும் தொடர்ந்து எழுதலாம்... இதற்கு பெற்றோர்கள் எவ்விதம் காரணமாகிறார்கள் என்பதை தாம்பத்தியம் தொடரில் கொஞ்சம் தொட்டு காட்டலாம்.......அப்படி இப்படி என்று மறுபடி பதிவுகள் எழுத காரணங்களை நானாக யோசித்ததன் விளைவு இதோ எழுத தொடங்கியாயிற்று... எது ஒன்றுக்கும் ஒரு தூண்டுகோல் வேண்டும், தூண்டுகோல் வெளியில் இருந்து வரவேண்டும் என்றில்லை நாமாக உருவாக்கிக் கொள்ளலாம் ... நமக்கு தெரிந்ததை பிறரிடம் கொண்டு சேர்க்கும் முக்கியமான இடத்தில்(பதிவுலகம்) இருந்துக் கொண்டும் வாளாவிருப்பது வீண்தானே.
என்ன செய்துவிடும் எழுத்து
இந்த ஒரு வருடத்தில் எத்தனை எத்தனை நிகழ்வுகள் !! மக்களை எப்போதும் பரபரப்பாக்கி வைத்துவிடுகிறது ஊடக உலகம். அதிலும் சமூக வலைத்தளம் முன்னணி, காபி போட்டு குடிகிறார்களோ இல்லையோ காபி கப் போட்டோ வந்துவிடும். மனித மனம் எப்போதும் பிறரது அங்கீகாரத்திற்காகவே காத்துக்கிடக்கிறது... எல்லோருக்கும் பிடித்தவராக யாராலும் இருக்கமுடியாது என்றாலும் தனக்கென்று ஒரு சிறு கூட்டத்தை சம்பாதித்தே தீரவேண்டும் என்ற ஆசை வெறியாக மாறுவதை கண் முன்னால் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண்களை மதிக்கவேண்டும் என மகளிர்தின வாழ்த்துக்கள் கூறி மறுநாளே இவ மூஞ்சிக்கு ஐநா கேக்குதா என பகடி செய்யும் முரண்பாட்டு மூட்டைகள் நிறைந்த உலகிது! 'எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் ' பாரதி எத்தனை பாடினாலும் போகப் பொருளாகவே பார்த்து பழகிய கண்கள், எம்பி குதிக்கும் டென்னிஸ் வீராங்கனையின் உள்ளாடையை க்ளோஸ்அப்பில் படம் பிடித்து போடும் பத்திரிகை கேமரா அனர்த்தங்கள்.
சிறிய பெரிய எழுத்தாளர்களின் புத்தகங்களை படித்த அனுபவம் கூட இல்லாமல் தான் பதிவுலகம் வந்தேன்...பொன்னியின் செல்வன் பற்றி பலரும் சிலாகிக்கும்போது படிச்சுத்தான் பார்ப்போமே என்று வாங்கி படித்தேன், புத்தகம் படிங்க என்று வற்புறுத்தி ஐந்து புத்தகங்கள் அனுப்பி வைத்தார் நண்பர் ஒருவர் அப்படியாவது எனக்கு எழுத்து கைவராதா என்று... புத்தகங்கள் படித்ததற்கு பிறகு ‘நாம எழுதுறதெல்லாம் ஒரு எழுத்தா’ என்ற பயம் வேறு வந்துவிட்டது. ஆனால் உணர்வுகளை கொட்ட ‘தெரிந்த/பழகிய வார்த்தைகள்’ வேண்டுமே தவிர இலக்கியம் இலக்கணம் தேவையில்லை... வாசிப்பவர்களின் மனதோடு எனது எழுத்துக்கள் பேசினால் போதும்... மேடை ஏறி பரிசுகளை வெல்லவேண்டும் என்று இல்லையே... என்றெல்லாம் மனதை தேற்றி என்னை நானே சமாதானம் செய்து இதோ பேச வந்தேவிட்டேன் மறுபடியும் உங்களின் மனதோடு மட்டும்...
“யார் சூறையாடியது காலத்தை என்னிடமிருந்து
யார் சூறையாடியது ஒன்றாய் இருந்த காலத்தை என்னிடமிருந்து
யார் சூறையாடியது என்னுடையதாய் இருந்த காலத்தை என்னிடமிருந்து
புன்னகைபுரிந்த முற்றிலும் முழுமையான காலம்
எனது ‘நான்’ தூயதாகவும் உண்மையாகவும் இருந்தது அங்குதானே
கவிதை அதுவாகவே தன்னை எழுதிக்கொண்டதும் அங்குதானே !”
-சோஃபியா டி மெல்லோ ப்ரெய்னர்
பிரியங்களுடன்
கௌசல்யா
pic : google
வருக வருக :)herzlich willkommen,Willkommen zum Blog ,Bienvenue,Bienvenido,kalos IRTHATE
பதிலளிநீக்குநானும் 5-6 மாதங்கள் எழுதாமல் திடீரென பிளாக் வந்தப்போ இதை உணர்ந்தேன் .ஆனாலும் நட்புக்கள் யாரும் என்னை மறக்கவில்லை என்பது மிகவும் சந்தோஷம் ..முதல் வார்த்தையை டைப்ப இவ்ளோ தாமதமாச்சா :) சலிப்புக்கள் நம்மை மேற்கொள்ள இடம் கொடுக்க கூடாது ..
பதிலளிநீக்குஉங்களுடைய நேர்மை எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு ..இருக்கும்போது கவனியாது இல்லாதபோது தேடுவது மனித இயல்பு ..ஆகவே சுய பட்சதாபம் வேண்டாம் ..இருக்கும்வரை இடம் பொருள் பார்க்காமல் அன்பை விதைத்து செல்வோம் எந்த இடம் நிலம் ஏற்றுக்கொள்கிறதோ அது அங்கே வளரட்டும் ..
பதிலளிநீக்குபிறரிடம் நல்லதை மட்டும் பார்ப்பது மிகவும் சிறந்ததே குறையில்லா மனிதரில்லை நல்லதை மட்டும் பார்க்கும்போது குறைகள் தெரிவதில்லை
குழந்தைகள் பற்றிய கட்டுரைகளை தொடருங்கள் ..சமூக வலைத்தளங்கள் உதவாத விஷயங்களை பிரபலப்படுத்துவதில் ஒன்றுமிலா விஷயங்களை ஊதி பெரிதாக்குவதில் மிக பெரிய பங்காற்றுகின்றன :) அது ஐநா நடனமாகட்டும் அல்லது அப்பெண்ணின் தந்தையின் இலங்கை பயணமாக இருக்கட்டும் .கோமணத்துடன் இருக்கும் விவசாயியையும் மறக்க செய்யும் ஜிகினாக்களை உச்சத்தில் வைத்துக்காட்டும் .இப்படிப்பட்ட விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருவதை நிறுத்தினாலே போதும் மக்கள் ..நாடு உருப்படும் ..
பதிலளிநீக்குஉங்களின் அன்புக்கும் அக்கறைக்கும் தலைவணங்குகிறேன் தோழி. இனி தொடர்ந்து பதிவுகளிலும் பேசுவோம்
நீக்குகுழந்தைகளின் நலனை பற்றியதுதானே எனது பல பதிவுகளும் என்பதை நீங்கள் அறிவீர்கள், இனியும் அப்படியே இருக்கும்.
மிக்க அன்பும் நன்றியும்
எதிர்பாராத ஒரு பெரிய இழப்பு அது கொடுத்த வலி சோகம் துக்கம் இவை எல்லாவற்றையும் கடக்க அதிக பிரயத்தனம் எடுத்தும் அதுக்கு வாய்ப்பே இல்லை
பதிலளிநீக்குஉண்மை .
karthik amma
வருகைக்கும் கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி,மகிழ்ச்சியும்
நீக்குவாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்.மயக்கமா? கலக்கமா?மனதிலே குழப்பமா? வாழ்க்கையில் நடுக்கமா? எல்லாம் தெளிந்த பின் போனது வராது.இனிய நினைவலைகள் தாலாட்டும்.குழந்தைகளைக் கொஞ்சி மகிழுங்கள். My heartfelt deepest condolences.
பதிலளிநீக்குவருகைக்கு மிக்க நன்றி தோழமை
நீக்குவருக... மீண்டும் பதிவுகள் தருக.
பதிலளிநீக்குஇழப்புகளைக் கடப்பது சிரமம் தான் என்றாலும் கடந்து தானே ஆகவேண்டும். பதிவுகள் மூலம் உங்களை மீட்டெடுக்க முயலுங்கள்.
கண்டிப்பாக ! உங்களின் வார்த்தைகளை மனதினில் வைத்துக் கொள்கிறேன்
நீக்குவருகைக்கு மிக்க அன்பும் நன்றியும் வெங்கட்
மீண்டும் உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி கெளசி. என்னையும் அஞ்சு இதே தூண்டுதல்தான். எழுதனும். கவலைகள்,சோகங்கள் எதிர்பாராத நிலையில் வரும்போது மனம் தாங்கமுடியாது. நானும் உங்களுக்கு ஆறுதல் எப்படி சொல்வது என தெரியவில்லை. நிறைய எழுதுங்க. உங்க தோட்டக்குறிப்பை எதிர்பார்க்கிறேன் கெளசி.
பதிலளிநீக்குபிரியமுடன்..
நமக்கு இப்படி ஒரு தோழி கிடைத்தது நமது பாக்கியம் பிரியா ... இவங்க கொடுக்குற அன்பு தொல்லைகாவது தொடர்ந்து எழுதுவோம்.
நீக்குநன்றியும் அன்பும் தோழி
வருக... மீண்டும் பதிவுகள் தருக நன்றி
பதிலளிநீக்குவருகைக்கு மிக்க நன்றி சகோ
நீக்குஉணர்ந்தபடியே படிப்பவரும்
பதிலளிநீக்குஉணரும்வண்ணம் எழுதுவது
சாதாரண விஷயமில்லை
அது உங்களுக்கு அருமையாக
வாய்த்திருக்கிறது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
உங்களின் அன்புக்கு மிக்க நன்றி சகோ
நீக்குமனதோடு பேச இன்னும் என்ன தயக்கம் ,சீக்கிரம் பேசுங்க :)
பதிலளிநீக்குwelcome back to MANATHODU PESUWOM
பதிலளிநீக்குWe eagerly waited for last one year for your new articles
pls give the link in FACEBOOK too
banu niyaz
Colombo
srilanka
வாழ்க்கைப் பாதையில் இழப்புக்கள், பிரிவுகள், கடமைகள் நிஜம். அதை தெரிந்ததும் கலங்கும் மனம். ஆனால் எழுத்தே எம் போன்றோரை வாழவைக்கும். தொடருங்கள்.
பதிலளிநீக்குthe show must go on.
பதிலளிநீக்குசகோதரி! நலமா? நீண்ட இடைவெளி !காணவில்லையே என்ற கேள்வி ?என்
பதிலளிநீக்குமனதோடு மட்டும் இருந்து கொண்டே இருந்தது!இழப்பு விளவு சோகம் காரணம்
தெயவில்லை!மீண்டு வந்தீர் மீண்டும் வந்தீர் நன்றி!தொடர்வோம்
எழுத்து மனித மனதை உயிப்பிக்கும்/
பதிலளிநீக்குAkka Im gayathri. You knew me as Kavina (kanavil tholaintha nijangal) hw r u ka? Romba naal kalichu unga pathivai padikkiren. Romba arumai... Tq for writing.
பதிலளிநீக்கு