திங்கள், டிசம்பர் 6

இது கண்டனம் அல்ல விழிப்புணர்வு....!

    காதலியை, மனைவியை
    தாயாய் உயர்த்தி மகிழும் நல்லவர் 
    வாழும் இங்கே தான் 
    வேறு சில புல்லுருவிகள் !
  
    அன்பு, அக்கறை காட்ட வீட்டில் 
    அவளுக்கும்  ஆட்கள்  உண்டு 
    என்பதை மறந்து வீழ்த்த எண்ணிய 
    உன் அறியாமை என்னே !
  
    பெண் வீழ்ந்தாள்  என்று நினைத்தாயோ
    வார்த்தைகளை கொண்டு ஆடை உரிக்கும்
    உன் வித்தை புரியா
    பேதையவள் அன்றோ !
  
    தாய்க்கும் தாரதிற்க்கும்
    வித்தியாசம் உண்டென்பதை
    உணரா மூடன் நீ அன்றோ !
  
    அடுத்தவன் பெண் தானே
    எடுத்தாள சுலபம் என்று எண்ணியது
    உன் மடமை அன்றோ !
  
    உன் வீட்டு பெண்ணை அடுத்தவன் பார்த்தால்
    மட்டுமே வெகுண்டெழும்  உன் ஆண்மை
    என்ன  வேடிக்கையடா,மானிடா !?
  
    காதலை விட புனிதமான நட்பை 
    காமத்திற்கு என்றே கடைவிரிக்கும் 
    கூட்டத்தின் தலைவன் பதவி உனக்கே !
  
    பாரதியின் ரௌத்ரம் பழகினால் 
    மட்டும் போதாது பெண்ணே....
    செயலிலும் காட்டு,
    அழிந்தொழியட்டும் கயமை ! 
    களை எடுக்க ஏன் தயக்கம்
    தோள் கொடுக்க நல்லவர் பலர் 
    உண்டு இங்கே !
  
    'தேரா  மன்னா' இயம்பிய 
    வழி வந்தவள் அன்றோ நீ !
    உள்ளே கொந்தளிக்கும்
    நெருப்பை  அள்ளி எறி
    எரிந்து சாம்பலாகட்டும்
    அற்ப பதர்கள்... !!

இதை நான் சொல்லியே ஆகணும்...!!

பதிவுலக தோழி ஒருவர் சொல்லி வருத்தப்பட்ட ஒரு நிஜ நிகழ்வு,,,,பதிவுலகம் வந்த புதிதில் ஆண் பதிவர்  ஒருவர் ஒரு பெண் பதிவரிடம் நட்பாக பேசி பழகி இருக்கிறார்....அன்பாகவும், அக்கறையாகவும் வலிய... வழிய...அறிவுரைகளை வாரி வழங்கி இருக்கிறார்.....!?  காலை வணக்கம் சொல்வதில் இருந்து இரவு வணக்கம் சொல்வது வரை அந்த  ஆண் பதிவரின் நட்பு  தொடர்ந்து இருக்கிறது......!

நாள் செல்ல செல்ல இந்த நட்பு அதிகரித்து சாட் பண்ணவில்லை என்றால் ஏன் பண்ணவில்லை...? வேறு புது நண்பர்களுடன் பேச தொடங்கியாச்சா...? அப்படி வேறு யாரிடமும் நீங்க பேச கூடாது என்ற மாதிரியான டார்ச்சர்கள் வர தொடங்கி இருக்கின்றன...! நட்பு கொஞ்சம் பாதை மாறுவதை உணர்ந்து,  நட்பை  முறித்து கொள்ளலாம் என்ற முடிவிற்கு அந்த  பெண் பதிவர் வந்ததை தெரிந்து டார்ச்சர் இன்னும் அதிகரித்து இருக்கிறது...கடைசியில் இந்த விவகாரம் அந்த பெண் பதிவரின் கணவன் காதிற்கு போய்விட்டது....அதன் பின் பிரச்சனை வேறு விதமாக திரும்பி விட்டது...தன் மனைவியை சந்தேகப்பட தொடங்கிவிட்டார்....மூணு மாதம் கழித்து அந்த பதிவரின் கணவன் இப்போது கோர்டில் போய் நிற்கிறார்.....!? பெண் பதிவரோ மன உளைச்சலில் சிக்கி பிளாக் எழுதுவதை தற்சமயம்  நிறுத்திவிட்டார். 

வேறு மாதிரியான பிரச்சனைகளையும் இந்த நபர்கள் ஏற்படுத்துகிறார்கள். ஒருவேளை பெண் பதிவர் நட்பை முறித்துக்கொண்ட பின் அந்த பதிவரை பற்றி மற்றவர்களிடம் இந்த பெண் அப்படி, இப்படி என்று கதை வேறு கட்டி விடுகிறார்கள்...(என்ன செய்து இந்த மாதிரியான ஆட்களுக்கு புரிய வைப்பது என்று புரியாமல் தான் இந்த பதிவை எழுதுகிறேன்.) 

வேலையற்ற சில வீணர்களின் விளையாட்டால் இணையத்தில் பெண்கள் இப்படியும் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் புதிய பெண் பதிவர்கள் ரொம்பவே கவனமாக பேசவேண்டியது அவசியம். அக்கறையாக, அன்பாக பேசுகிறாரே என்று நெருங்கி நட்பு பாராட்டி விடாதீர்கள். மேலும் இந்த மாதிரி முகம் தெரியாத ஆட்களிடம் இருந்து வரும் அளவுக்கு மீறி வரும் பாசம் எதில்  போய் முடியும் என்று நான் சொல்ல வேண்டியது இல்லை...! கண்ணுக்கு முன் நிற்கும் எதிரியை சமாளித்து விடலாம், ஆனால் இதை போன்ற மறைமுகமாக நட்பு என்ற போர்வையில் பழகும் நபர்கள் மிக ஆபத்தானவர்கள்.

மறுத்தல் அவசியம்

உங்க மெயில் id பெரும்பாலும் கொடுக்காமல் இருந்தால் நலம்...மீறி கொடுத்தாலும் சொந்த விசயங்களை பேசாமல் தவிர்ப்பது நல்லது...செல்போன் எண்ணையும் கொடுக்காமல் தவிர்க்கலாம் .எந்த கேள்விக்கும் நாகரீகமாக மறுப்பு சொல்வது பின்னால் பிரச்சனைகள் வருவதை தடுக்கும்.....சிலருக்கு பொழுது போக்கே பெண்களின் மெல்லிய  உணர்வுகளோடு விளையாடுவது தான்.....?!

செல்போனில் ஏதாவது நம்பரை டயல் பண்ண வேண்டியது, எதிர்புறத்தில் பெண் குரல் கேட்டால் "சாரிங்க என் பிரண்ட்  நம்பருக்கு டயல் பண்ணினேன், தப்பா உங்களுக்கு வந்துவிட்டது, சரி விடுங்க....நீங்க என்ன பண்றீங்க.....உங்க குரல் காலேஜ் பொண்ணு வாய்ஸ் மாதிரி இருக்கு...எந்த காலேஜ்  படிக்கிறீங்க....?" இந்த மாதிரி உரையாடல் நீண்டு கொண்டே போகும். உடனே கட் பண்ணினாலும் கண்ட நேரத்தில் மெசேஜ் அனுப்பி டார்ச்சர் தொடரும். இந்த ராங் கால் விஷயத்தால் பெண்களில் சிலர் பாதிக்க படுகிறார்கள். 

இதைப்போலத்தான் இணையத்திலும் பெண் பதிவர்களுக்கு தொல்லைகள் தொடருகின்றன.....இந்த சங்கடங்களை வெளியில் சொல்ல இயலாமல் மனதிற்குள் புழுங்கி மன அழுத்தத்திற்கு ஆளாகிவிடுகிறார்கள்.  இரு பெண் தோழிகளிடம் (பதிவர்கள்) இடையே கூட இந்த மாதிரி ஆட்கள் சிண்டு முடித்து, பிரித்து விடுகிறார்கள். அவர்களை பொறுத்தவரை இது பொழுது போக்கு, ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு....?!! அவர்கள் பாதிப்பு அடைந்தால் அவர்களின் குடும்பமும் பாதிக்கும் என்பதை உணருவார்களா இந்த மாதிரியான ஆட்கள்...??! 

   
" படித்த, நாகரீகமான, பகட்டான மனிதருக்குள்ளும் ஒரு நரி ஒளிந்திருக்கலாம் " 

எச்சரிக்கை !!



சனி, நவம்பர் 27

பதிவர் எழுதிய நூல் - ஒரு அறிமுகம்


இந்த பதிவு வாழ்க்கைக்கு மிக அவசியமான விஷயத்தை பற்றி விரிவாக சொல்லகூடிய ஒரு நூலை பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.  தமிழில் அந்தரங்க உறவை பற்றி பல நூல்கள் வெளி வந்திருக்கலாம், ஆனால் நான் குறிப்பிட கூடிய இந்த நூல் மற்றவற்றை விட சற்று மாறுபட்டது என்று சொல்வேன். இந்த நூலை பற்றி நான் சொல்வதற்கு ஒரு முக்கியமான காரணம் அவர் சக பதிவர் என்பதுதான். அவரது பதிவுகள் பலவற்றை நான் படித்து இருக்கிறேன். பதிவுகளை நகைச்சுவையுடனும்,  நவீன அறிவியல் ஆய்வுகள் பாலியல் உறவுகள்  பற்றி என்ன சொல்கிறது என்பதையும் விரிவான விளக்கத்துடன் எழுதி இருப்பார். அவரது அந்த பதிவுகள் தான் இன்று அவரை ஒரு எழுத்தாளராகவும் உயர்த்தி  இருக்கிறது.

யார் இவர்.....? 

அவரது பெயர் ஹரிநாராயணன், அவர் பத்மஹரி என்ற பெயரில் பதிவுகள் எழுதி வருகிறார். கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலிருப்பு கிராமம் தான் இவரது சொந்த ஊர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உயிரிதொழில்நுட்பவியலில் முதுகலைப்பட்டம் பயின்று முதலிடத்தையும், தங்கபதக்கத்தையும் வென்றவர். தற்போது ஜப்பானில் புற்றுநோய் ஸ்டெம் செல் குறித்த ஆய்வை (Ph.D) தொடர்ந்து வருகிறார். பெண்களின் மார்பகப்புற்று நோய்க்கான அடிப்படைக் காரணங்களை அறியும் முயற்சியில்  ஈடுபட்டுள்ளார். ஒரு தமிழனாய் இவரது ஆய்வு பயணம் மேலும் தொடர்ந்து சாதனை நிகழ்த்த நாம் இவரை வாழ்த்துவோம்.

நூலை குறித்த எனது விமர்சனம்

 உலகின் பல்வேறு நாடுகளில் நடத்தப்படும் அறிவியல் மற்றும் மருத்துவ துறை சார்ந்த ஆய்வுகளில் இருந்து மிக முக்கியமான தகவல்களைத் தொகுத்து எழுதப்பட்ட தமிழின் முதல் நூல் என்பதில் சந்தேகம் இல்லை. கொஞ்சமும் ஆபாச கலப்பு இல்லாமல்,  மிக எளிமையான எழுத்து நடையில் எழுத பட்டிருக்கிறது. மேலும் செக்ஸ் என்பது உடம்பில் ஏற்படும் ரசாயன மாற்றத்தால் தான் என்பது எல்லோருக்கும் தெரியும். இதை ஒரு ஆராய்ச்சியாளரான இவர்  அறிவியலுடன் சம்பந்த படுத்தி எழுதி இருப்பது செக்ஸ் பற்றிய குழப்பங்களையும், பயத்தையும் கண்டிப்பாக போக்கும் என்பது நூலை படித்த பின் எனக்கு தோன்றிய ஒரு எண்ணம்.

செக்ஸ் பற்றி பேசுவதே பெரிய குற்றம் என்ற மனோபாவம் நம்மிடையே இருப்பதால் தான் பல புரிதல்கள்  இல்லாமல் தாம்பத்தியம் பல வீடுகளில்  தள்ளாடி கொண்டு இருக்கிறது. சில தெளிவுகள் நிச்சயம் தேவை. அதற்கு இந்த நூல் கண்டிப்பாக உதவும்.

ஹார்மோன்களுடன் தொடர்புடைய சில நோய்கள், பாலியல் உறவுகளின் இயல்பு, பாலியல் வக்கிரங்கள், குற்றங்கள் போன்றவற்றையும், திருநங்கைகள், ஓரினச்சேர்கையாளர்கள், பாலியல் குற்றவாளிகள் உருவாக காரணம் என்ன என்பதையும் எழுதியுள்ளார். இவற்றை  பற்றி சமீபத்திய ஆய்வுகள் என்ன சொல்கிறது என்பதையும் சேர்த்து எழுதி இருப்பதன் மூலம்  சொல்லப்பட்டு இருக்கும் விசயத்தின் நம்பகத்தன்மையை புரிந்து கொள்ளமுடிகிறது.


மேலும் சில சுவாரசிய துளிகள்

* கள்ளகாதல் எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் ஒரு காரணமாக மரபணுக்கள் இருக்கின்றன என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது...

40 %  மரபணுக்கள் காரணம்
60 %  வளர்க்கப்பட்ட விதம் மற்றும் சுற்றுபுறசூழல்

மரபணுக்களில் இருந்தால் இதை தவிர்க்க என்ன செய்யலாம் என்பதற்கு தீர்வையும் சொல்லி இருக்கிறார்.

* பெண்கள் வயதாக வயதாக பிறருக்கு உதவுவதையும், சேவை செய்வதையும் விரும்புகிறார்கள் என்பதை ஆய்வு சொல்கிறது.

*  திருமணதிற்கு பின் பலவருடங்களாக தான் குடும்பத்துக்கு உழைக்கும் பெண்கள் முதுமையில் அவர்களுடைய ஆசாபாசங்கள், லட்சியங்கள் போன்றவற்றிற்காக அதிக நேரம் செலவிடவே விரும்புகிறார்கள்...... தீர செயல்களை புரிய துணிகிறார்கள்...!

* பெண்கள் உள்ளுணர்வு மிக்கவர்கள், முகபாவங்கள் சைகைகள் போன்றவற்றில் ஒளிந்திருக்கும் பேசாத வார்த்தைகளின் அர்த்தங்களை கண்டறியும் திறன் பெற்றவர்கள் என்பதை ஆய்வுகள் நிரூபிக்கின்றன...


நூலின் உள்ளே…..
பாலியல் சுவாரசியங்கள்!
முத்தமும் வைரஸும்.
மதுவும் செக்ஸும்…..
அரிதான பாலியல் உடலியக்கங்களும், விளைவுகளும்!
திருநங்கைகள்/அரவாணிகள் பற்றிய முழுவிவரங்கள்; அறிவியல் பின்புலத்திலிருந்து மருத்துவம் வரை…..
ஓரினச்சேர்க்கையாளர்கள்; ஏன் பிறக்கிறார்கள், எப்படி உருவாகிறார்கள் இன்னும் பல தகவல்கள்…..
சமுதாயத்தின் சில பாலியல் பேரவலங்கள்/வக்கிரங்களும், தீர்வுகளும்!
கள்ள உறவுகள்; அதிர வைக்கும் அறிவியல் பின்புலம், உளவியல் காரணங்கள் மற்றும் தீர்வுகள்…..
பீடோஃபீலியா; குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை: காரணங்கள், தீர்வுகள்…..
பாலியல் புதிர்கள்!
உச்சகட்டம்; புதிரா புனிதமா?: உச்சகட்டம் குறித்த பலவகையான விளக்கங்கள் மற்றும் பயன்கள்…..
இதில் முத்தமும் வைரசும் என்பதை படிக்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.....முத்தம் கொடுத்தால் பரவுகிற கிருமி ஒண்ணு இருக்கிறதாம்...(இதற்கு மேல் இங்கே விரிவாக சொன்னால் நூலை படிக்கும் போது சுவாரசியம் இருக்காது... ) ஆனால் ஒரே ஆடவனை/கணவனை  கர்ப்பம் தரிப்பதற்கு ஆறு மாதங்களுக்கு  முன் மனைவி முத்தமிட்டால் சைட்டோமேகாலோ வைரசுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை அப்பெண் பெற்று விடுகிறாள் என்கிறது ஆய்வு.  கருவுற்றபின் பிறக்க போகும் குழந்தையையும் ஆபத்தான வைரசிடம் இருந்து காப்பாற்றுகிறதாம்.


(முத்தம் கொடுப்பதிலும் கலந்திருக்கிறது
காதல் வைரஸ். ஒருவனுக்கு ஒருத்தி என்ற
கலாச்சாரம்தான் சரியானது என்பதை 
அறிவியலும் அங்கீகரிக்கும் அதிசயம்.....!)

ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரம் தான் சரி என்பதை அறிவியலும் அங்கீகரிக்கிறதை புரிந்து கொள்ள முடிகிறது....! (இந்த இடத்தில் லிவிங் டுகெதர்  நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பில்லைங்க ......?!)  

ஜேம்ஸ்பாண்டையும் விட்டுவைக்கவில்லை இவர்....! ஒவ்வொரு தலைப்பும் வித்தியாசம் தான், படிக்கவும்  வெகு சுவாரசியமாக இருக்கிறது.

சமீப காலமாக  மருத்துவரிடம்  கவுன்செல்லிங் செல்வது அதிகரித்து வருகிறது , அப்படி செல்பவர்கள் இந்த நூலை படித்தால் தெளிவு பெறுவார்கள் என்பது நிச்சயம்....

ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டு இருக்கிறது...
நூலின் விலையும் அதிகம் இல்லை 130/- மட்டுமே  

இந்த நூல் கிடைக்குமிடம்:
Blackhole Media  Publication Limited,
No.7/1, 3-rd Avenue, Ashok nagar,
Chennai-600 083. India
மேலும் அனைத்து ஊர்களிலும் இந்த நூல் கிடைக்கிறது.

இந்த நூல் வேண்டுவோர், உடனே தொடர்பு கொள்க.மின்னஞ்சல்:admin@blackholemedia.in  
செல்பேசி:+91 9600086474 ,+91 9600123146



புதன், நவம்பர் 24

' வேண்டும் பாதுகாப்பு ' - ஆண்கள்



'நவம்பர் 19 '  ஒரு முக்கியமான நாள் ஆண்களை பொறுத்தவரை....! பெண்கள் தினம் ஒன்று இருப்பது போல் ஆண்களுக்கும் ஒரு தினம் இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது, ஏன் சில ஆண்களுக்கே கூட தெரியாமல் இருக்கலாம். ஆண்களைக் கௌரவபடுத்தவும்,ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்காகவும் தான் உலகம் முழுவதும் இந்த தினம் கொண்டாடபடுகிறது....இதை படிக்கும் போது ஆண்களுக்கு என்ன ஆனது, நல்லாதானே இருக்கிறார்கள்.....இந்த உரிமை, பாதுகாப்பு என்ற வார்த்தையெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலையா என்று நினைக்கலாம்....! ஆனால் பதிவை தொடர்ந்து படிக்கும் போதுதான்  நான் சொல்வது எந்த அளவிற்கு சரி என்பது புரியும்.


இன்றைய அவசர யுகத்தில் ஆண்கள் குடும்பத்திலும், வெளியிலும் பல பொறுப்புகளை கவனித்து வந்தாலும் அவர்களின் தியாகங்கள் பெரும்பாலும் மறக்கடிக்கபடுகின்றன அல்லது மறைக்கப் படுகின்றன.  அதை நினைவு கூறி 'ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்த நாளை கொண்டாடுவதில் என்ன தவறு இருக்க முடியும்' என்ற கேள்வியை முன் வைத்து இந்த தினம் கொண்டாடி முடிக்கப்பட்டுவிட்டது.            


எனது தாம்பத்திய தொடரின்  ஒரு பதிவில்  'ஒரு ஆதங்கத்தில் ஆண்களும் எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கூடிய சீக்கிரம் போராட போகிறார்கள்' என்று எழுதி இருந்தேன். ஆனால் அது இவ்வளவு சீக்கிரம்  நடக்கும் என்று நினைக்கவில்லை. இப்போது ஆண்கள் சங்கம் சார்பில் எங்களுக்கும்  பாதுகாப்பு சட்டம்  கொண்டு வர வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாம். இது நாளிதழில் வந்த செய்தி. 

எவ்வளவு காலம் தான் இந்த ஆண்களும் பொறுமையா இருப்பார்கள்....?!!

ஏன் இந்த நிலை..?

முன்பு ஆண்கள், பெண்களை அடிமை படுத்தினார்கள் என்பது உண்மையாக இருக்கலாம் ஆணாதிக்க உலகம் என்றும் பெயரும் வைத்தார்கள். என்னை பொறுத்த வரை இந்த ஆணாதிக்கம், பெண்ணுரிமை என்ற வார்த்தைகளில்  என்றும் முழு உடன்பாடு இருந்தது இல்லை. (தவிரவும் இந்த பதிவிற்கு அதை பற்றிய வாதங்களும் , கருத்துக்களும் தேவை இல்லை என்பதால் ஒரு சில வார்த்தைகளுடன் நிறுத்தி கொள்வது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்) பெண் உடல்ரீதியாக, மன ரீதியாக துன்புறுத்த பட்டாள், பல திறமைகள் அவளிடம் இருந்தும்  வீட்டுக்குள்ளேயே முடக்கி வைக்க பட்டாள். அப்புறம் நம்ம பாரதியார் வந்தார், புதுமை பெண்களாக மாறவேண்டும் என்றார். 'அடிமை விலங்குகளை அறுத்து எறிந்து விட்டு வெளியே வாருங்கள் புதுமைகளை சமையுங்கள்' என்று பெண்களுக்காக குரல் எழுப்பினார், புதுமை கவிஞன் நம் பாரதி.

இன்றைய நம் பெண்களும் இது தான் பாரதி சொன்ன புதுமை போல என்று புரிந்துக்கொண்டு பலவிதங்களில் தங்களை மாற்றிக்கொண்டு நடை பயிலுகிறார்கள். அவர்களுக்கு தவறாக தெரியாத வரை எதுவும் தவறில்லை தான் . ஆண்களுடன் எல்லா துறைகளிலும் பெண்கள் போட்டி போட்டு கொண்டு முன்னேறி கொண்டே செல்கிறார்கள். சந்தோசமாக இருக்கிறது. 'ஆணிற்கு பெண் இளைப்பில்லைக் காண்'  என்பதை நிரூபித்து கொண்டிருக்கிறார்கள். ஒரு பெண்ணாக பெருமையாக இருக்கிறது. ஆனால் இன்றைய சில பெண்களால் பல ஆண்களும் கடுமையாக அவதி படுகிறார்கள் என்பதை எண்ணி வருந்துகிறேன். 

அரசாங்கமும் பெண்களுக்கு சாதகமான பல சட்டங்களை இயற்றிக்கொண்டே இருக்கிறது. இந்த பதிவிற்கு அவசியமான இரண்டு சட்டங்களை இங்கே குறிபிடுகிறேன்.

1. வரதட்சணை கொடுமை 
2. குடும்ப வன்முறை தடுப்பு சட்டம்.

இரண்டும் பெண்களுக்கு பாதுகாப்பு தரும் மிக முக்கியமான சட்டங்கள் தான். இதே சட்டங்கள் ஆண்களை படுத்தும் பாடு சொல்லி முடியாது. சில பெண்கள் தங்களின் சுயநலத்திற்காக இந்த சட்டங்களை பயன்படுத்துகிறார்கள் என்பது தான் பாதிக்கப்பட்ட ஆண்களின் வேதனைக்கு காரணம். தன்  கணவன் மேல் ஏதும் காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டால் உடனே அந்த பெண் கொஞ்சமும் யோசிக்காமல் போலீஸ்  ஸ்டேஷன் சென்று தன் கணவன் மேல் புகார் கொடுத்து விடுகிறாள்.

அங்கேயும் இந்த ஆணை ஒருதலை பட்சமாகவே தான் விசாரிக்கின்றனர். இன்னும் சொல்ல போனால் சில இடங்களில் விசாரிப்பதே இல்லை. பெண் வந்து புகார் செய்து விட்டால் அந்த ஆண் குற்றவாளி தான் என்ற கண்ணோட்டத்திலேயே பார்க்கப் படுகிறான். அவனது சொல், வாதம்  பெரும்பாலும் ஏற்க படுவதில்லை  என்பதே உண்மை. சில நேரம் அந்த ஆணுடன் அவனது அம்மா, அப்பா , உடன் பிறந்தோர் போன்றோரும் சேர்த்தே  குற்றவாளி ஆக்கப்பட்டு தண்டிக்க படுகிறார்கள். (மாமியார், நாத்தனார் போன்ற பெண்களும் இந்த சட்டத்தால் பாதிக்கபடுகிறார்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.....!)

என்னை மிகவும் பாதித்த  ஒரு உண்மை சம்பவம் ஒன்று,

கடந்த  மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்தது. எனது உறவினர் ஒருவரின்  மகனுக்கு அப்போது திருமணம் முடிந்து ஆறு மாதமே முடிந்த சமயத்தில் மகனுக்கும் மருமகளுக்கும் நடந்த ஒரு சண்டையின் முடிவில் அந்த பெண் கொஞ்சமும் யோசிக்காமல் தனக்கு தீவைத்து கொண்டு இறந்து விட்டாள். திருமணம் முடிந்த ஆறு மாதத்திற்குள்  இந்த சம்பவம் நடைபெற்றதால், போலீஸ் விசாரணையின் முடிவில் அந்த பெண்ணின் கணவன், மாமனார், மாமியார், கணவனின் தம்பி உள்பட நாலு பேரையும் குற்றவாளிகள் என்று கைது செய்து விட்டார்கள். இதில் பரிதாபம்  என்னவென்றால் இதில் கொஞ்சமும் சம்பந்த படாதவன்  இந்த கணவனின் தம்பி. அவன்  அப்போது  ஹாஸ்டலில் தங்கி மருத்துவ  கல்லூரியில் படித்து கொண்டிருந்தான்   

அதற்கு பிறகு இரண்டு வருடங்களாக கோர்ட், கேஸ் என்று பல்வேறு அலைகழிப்புக்கு பிறகு இப்போது விடுதலை செய்யப் பட்டுள்ளனர். அந்த பெண்ணின் அவசர புத்தியும், பிடிவாதமும் தான் அவளது தற்கொலைக்கு காரணம் என்றும் அவளது கணவன் மற்றும் வீட்டினர் அப்பாவிகள் என்றும் தீர்ப்பளித்து உள்ளனர். (திருமணத்திற்கு முன்பே அந்த பெண் தனது தாழ்வு மனப்பான்மையால் இரு முறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றபட்டு இருக்கிறாள் என்பது  பின்னர் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது....!?)
(பையனின் வீட்டாரும் பெண் வீட்டார் கொடுத்த அத்தனை சீதனங்களையும் பெண் இறந்த சில நாட்களில் கொடுத்து விட்டனர்..... தன் பெண்ணை பற்றி சரியாக தெரிந்து இருந்தும் பெண் இறந்த வருத்தத்தில் புகார் கொடுத்து இருக்கிறார்கள்)

காரணம் எதுவாகவும் இருந்து விட்டு போகட்டும்...இரண்டு வருடமாக இந்த நால்வரும் பட்ட அவமானங்கள்,சந்தித்த ஏளன பார்வைகள், அனுபவித்த இன்னல்கள், மன உளைச்சல்கள்.......என்னவென்று சொல்வது....?!!மருத்துவம் படித்து வந்த அந்த பையனின் படிப்பு நின்றுவிட்டது....இப்போது வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறான் . அந்த பெண் ஒரே நாளில் தன்  வாழ்க்கையை முடித்து நிம்மதி அடைந்து விட்டாள்...ஆனால் இவர்கள் இன்று வரை நடைபிணங்களாக வாழ்ந்து வருகிறார்கள். பல உதாரணங்கள் இருக்கின்றன இது போல்.


இந்த மாதிரியான சென்சிடிவான விசயங்களில் நிதானமாக ஆராய்ந்து  அனைத்தையும், சம்பந்த பட்ட இரண்டு  பக்கங்களையும் விசாரிக்க வேண்டியது முக்கியம்.  

குடும்ப வன்முறை தடுப்பு சட்டம்

தன் கணவனை கட்டுபடுத்த சில பெண்கள் எடுக்கும் ஒரு ஆயுதம் தான் இந்த குடும்ப வன்முறை தடுப்பு சட்டம். ஆண், பெண் இருவருக்கும் இடையிலான பெரும்பாலான பிரச்னைகள்  எல்லாம் செக்ஸ் குற்றங்களாகவே பார்க்க படுவதால் பல ஆண்களும் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர். பிடிக்காத ஆண் மேல் செக்ஸ் புகார் கொடுத்து ஆண்களை சில பெண்கள் பழி வாங்குகின்றனர். 

அப்படி எல்லாம் இல்லை என்று மறுப்பு சொல்ல முடியாத அளவிற்கு சில புள்ளி விவரங்கள் இதை நிரூபிக்கின்றன...

சில புள்ளி விவரங்கள் 

*  கடந்த 12 ஆண்டுகளில் மனைவியால் விளைந்த கொடுமையால் 1,70,000 மணமான ஆண்கள்  தற்கொலை செய்துள்ளனர்.  

*  2001   ஆம் ஆண்டு வரை 13 லட்சம் ஆண்கள் வேலை  இழந்துள்ளனர்......!?

*  திருமணம் ஆன மூணு ஆண்டுகளுக்குள் 98 சதவீத ஆண்கள் பலவிதமான சித்திரவதைக்கு ஆளாகின்றனர்.  

*  ஆண்டுக்கு 80 லட்சம் ஆண்கள் பல்வேறு குற்றசாட்டுகளுக்காக கைதாகின்றனர். இதில் 85 சதவீத கைது தேவை இல்லாதவை என்று தேசிய போலீஸ் கமிசன் கருத்து தெரிவித்துள்ளது....!? கைதான நபர்களில் இருபது சதவீத பேர் மீதான குற்றம் மட்டும்தான் நிரூபிக்கப்பட்டுள்ளது.....! 

* இந்த புள்ளிவிவரங்களை வைத்து ஆண்கள் மீதான குற்றங்களை விசாரித்து நியாயமான தீர்ப்பு வழங்க ஆண்களுக்கான தேசிய கமிசன் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

ஆண்கள் சங்கம் தங்களது கோரிக்கைகள் என்று சிலவற்றை முன் வைத்துள்ளன அதில் சில......


* பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவிக்கும் அரசுகள், ஆண்கள் விசயத்தில் அக்கறை காட்டுவதில்லை. 

* கள்ள உறவு, அதன் தொடர்பான கொலைகளை தடுத்திட இ.பி.கோ 497 சட்டத்தினை திருத்தி ஆண், பெண் இருவருக்கும் தண்டனை வழங்கிட வேண்டும்.

* குடும்ப வன்முறை சட்டம் 205 ஐ நீக்க வேண்டும்

இவை எல்லாம் சமீபத்தில் ஆண்கள் சங்கம் மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பிய கோரிக்கைகள்....
                                                                                                                               நன்றி - நாளிதழ்கள்   
ஆண்களுக்கு மறுக்கப்படும் சில நல்லவைகள்

* பெண்களின் பலவகை நோய்களையும் கண்டறிய கட்டாய ஸ்க்ரீனிங் (screening) செயல்பாடுகள் இருக்கின்றன. ஆனால் ஆண்களை மட்டுமே தாக்கும் ப்ராஸ்ட்ரேட் புற்றுநோய், இதய அடைப்பு போன்ற நோய்களை ஆரம்பத்தில் கண்டறியக்கூடிய வசதி  இல்லை என்பது ஆண்களின் வருத்தம். இந்த வசதி இல்லாததால் பல மரணங்கள் ஊக்கிவிக்கபடுகின்றன. 

* சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகள் முடிந்தும் ஆண்கள் நலனுக்காக என்று இந்திய அரசு ஒரு ரூபாய் கூட செலவழிக்கவில்லை என்பது நல்ல செய்தி இல்லை....!

*  குடும்ப வன்முறை என்பதே ஆண் தான் செய்வான் பெண்கள் செய்யவே மாட்டார்கள் என்று திட்டவட்டமாக சட்டத்தில் இருக்கிறதாம்...!?

*  விவாகரத்து பெறும் போதும் சட்டரீதியாக குழந்தைகள் தந்தையரிடம் வளர பெரும்பாலும் அனுமதி  மறுக்கபடுகிறது (பெண் குழந்தைகள் விதிவிலக்கு) ஏன் தாய்க்கு இருக்கும் அதே பாசமும் அன்பும், அக்கறையும் அந்த தந்தைக்கு இருக்காதா....?? தந்தையை பிரிந்து  வாழும் அந்த குழந்தைக்கு தந்தை என்ற உறவின் மீதே வெறுப்பு வந்து விடுவதை தவிர்க்க முடியாது. எதிர்காலத்தில் தந்தை என்ற உறவை அறியாத இளம் சமூகம் உருவாகும் அபாயமும் உள்ளது. 

*  பல பணிகளுக்கு  ஆண்கள் மறுக்கபடுகிறார்கள்.

*  பெண்களும் நன்றாக சம்பாதித்து வரும் இன்றைய காலகட்டத்தில் விவாகரத்திற்கு  பின் ஆண் அதிக அளவில் ஜீவனாம்சம் (குழந்தைகளை காரணம் வைத்து) கொடுக்க வேண்டி இருக்கிறது வாழ் நாள் முழுதும்...!  

இதை போல் பல விசயங்கள் இன்னும் இருக்கின்றன...!  

'இந்திய ஆண்கள் முன்னேற்ற இயக்கம்' என்னும் அமைப்பு துவங்கப்பட்டு ஆண்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வருகிறது....! 






சனி, நவம்பர் 20

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.....!


எனக்கு ஒரு நாலு நாளாக ஒரு பெரிய பிரச்சனை.....அதை யோசிச்சு யோசிச்சு தலைவலி வந்தது தான் மிச்சம்.....! ஆனால் இன்னும் குழப்பம் தான் வருகிறது ஒரு தீர்வும் வரவில்லை. என்ன செய்யலாம் என்று யோசிச்ச போது தான் பதிவுலகம் நினைவு வந்தது.சரி தான் நம்ம பிரச்னையை அபாயரட்சர்களிடம் சொல்லி தீர்வு பெறுவோம் என்று இங்கே சொல்ல வந்திருக்கிறேன் . நல்லா படிச்சிட்டு ஏதோ ஒரு வழி சொல்லுங்க நண்பர்களே.

ஓ.கே நேரடியா விசயத்துக்கு வருகிறேன். இது  எறும்புகள் பத்தின ஒரு சீரியசான ஒரு விசயங்க.  எறும்பை எல்லோருக்கும் நல்லாவே தெரியும் அதனால் நான் புதுசா அவங்களை  அறிமுகபடுத்த வேண்டாம்னு நினைக்கிறேன். எனக்கு இந்த எறும்புகளால் ஒரு சிக்கல்..... அடடா இருங்க ஓடிடாதிங்க....! (எங்க வீட்டுக்கு எறும்பு வந்திச்சி, என்னை மட்டும் கடிச்சிடிச்சி, ஏன்னு தெரியல அப்படின்னு உலகத்தில் நடக்காத ஒன்ன சொல்லி உங்களின் பொறுமையை நான் சோதிக்க  விரும்பவில்லை...!)  இது வேற மாதிரியான ஒரு  மேட்டர்.....!

ஐந்து நாளுக்கு முன்னால காப்பி போட செல்பில இருக்கிற சர்க்கரை டப்பாவை எடுக்கும் போது கை தவறி கீழே போட்டுட்டேன். கொட்டியது போக மிச்சத்தை மறுபடி டப்பால போட்டு வச்சிட்டு, கீழே இருக்கிற சர்க்கரையை ஓரமா ஒதுக்கிட்டு மத்த வேலையை பார்க்க போயிட்டேன். சாயங்காலம் வரைக்கும் இதை அப்படியே மறந்திட்டேன். ( சிஸ்டம் கிட்ட வந்து  உட்காந்தா என்னையே மறந்துடுறேன், சர்க்கரையை  எப்படி  நினைப்பேன் ....?!)

அப்புறம் சாயங்காலம் பசங்க வந்த பிறகு டிபன் பண்ண kitchen போனப்பதான் அடடா சர்க்கரையை காலையில கொட்டினோமே எறும்பு படை திரட்டி வந்து  இருக்குமேன்னு பதட்டமா பார்த்தா, என்ன ஆச்சர்யம்.....சர்க்கரை அப்படியே இருக்கு ஒரு எறும்பு கூட அதன் மேல இல்லை....! (நாம வீட்டை ரொம்ப சுத்தமா வச்சிருக்கோம் அதுதான் எறும்பு இல்லை அப்படின்னு ஒரே பெருமை தான் போங்க....ஆனா இது ரொம்ப நேரம் நீடிக்கல.....அந்த இடத்துக்கு கொஞ்ச தள்ளி  தூரத்தில் இவங்க லைன் கட்டி போயிட்டு இருக்காங்க......! அந்த  நேரம் ஆரம்பிச்சக்  குழப்பம்  தாங்க எனக்கு இப்பவரை தீரல...!!

ஏன் எறும்பு சர்க்கரை கிட்ட வரல...? சரி இன்னும் ஒருநாள் வருதான்னு பார்ப்போம் , அப்புறம் சுத்தம் படுத்திக்கலாம்னு அப்படியே விட்டுட்டேன் சர்க்கரையை....! (எல்லாம் ஒரு ஆராய்ச்சிதான்....?!) மூணு நாள் ஆச்சு...ஆனா ஒரு எறும்பு கூட அந்த திசை பக்கம் எட்டி கூட பார்க்கல....என்னுடைய ஆச்சரியமும், குழப்பமும் ஜாஸ்தியானது தான் மிச்சம்....ஏன் சர்க்கரை கிட்ட வரலன்னு புரியவே இல்லை.

சரி கணவர் கிட்ட சொல்வோம் என்று ஆர்வத்தோடு போய் சொன்னேன்.....அதுக்கு அவர், " சர்க்கரையை அஜாக்கிரதையா கீழே கொட்டினது  முதல தவறு, அதையும் மூணு நாளா கிளீன் பண்ணாம இருந்தது இரண்டாவது தவறுன்னு..........."  லிஸ்ட் போட்டு திட்ட ஆரம்பிச்சிட்டார்......!! அடடா, என்னடா இவர் நம்மளோட ஆராய்ச்சி புத்தியை பத்தி புரிஞ்சிக்காம இருக்காரே என்று ஒரே பீலிங்கா போச்சு.....!?

அதுதான் உங்ககிட்ட இதை கேட்கலாம்னு வந்திருக்கிறேன்....என் சந்தேகங்களை சொல்றேன்......தெளிவுபடுத்துங்கள்.....

சந்தேகம் 1 : மனிதர்களை மாதிரி எறும்புகளுக்கு சர்க்கரை வியாதி வந்திக்குமோ....?

சந்தேகம் 2  : சர்க்கரையில் இனிப்பு தன்மை குறைந்து விட்டதா.....?

சந்தேகம் 3  : எறும்புக்கே  பிடிக்கலேன்னா நமக்கு மட்டும் எப்படி பிடிக்கும்....?

சந்தேகம் 4 : இப்போது எல்லாம் காபி குடித்தால் தான் தலைவலியே வருகிறது. அதற்கு காரணம் இந்த சர்க்கரையா  இருக்குமோ....??

முக்கியமான 
சந்தேகம் 1 :  எறும்புக்கு பிடிக்காத வேதி பொருள் ஏதும் அதில் கலந்திருக்கா...??

சந்தேகம் 2 : அப்படி பட்ட வேதி பொருள் என்னவாக இருக்கும் ...?

சந்தேகம் 3 :  அந்த வேதி பொருள் கலந்த சர்க்கரையை நாம் உபயோகித்தால் நம் உடம்பிற்கு பாதிப்பு ஏதும் வருமா.....?? அப்படினா அது என்ன பாதிப்பு...?

முன்பு எல்லாம் இப்போது வருவது போல் வெள்ளை வெளேர் என்று இருக்காது...கொஞ்சம் நிறம் கம்மியாக பழுப்பு நிறத்தில் தான் இருக்கும். இப்படி வெள்ளையாக இருப்பதற்காக ஏதும் சேர்ப்பார்கள் என்று நினைக்கிறேன்.  

தெரிந்தவர்கள் இதனை பற்றி விளக்கமாக கூற வேண்டும் என்று தான் என் சந்தேகங்களை இங்கே கேட்கிறேன்....என்னை மாதிரி தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.  

பொதுவா அதில் பிரச்சனை இருக்கோ இல்லையோ சர்க்கரை சேர்ப்பதை குறைத்து கொண்டால் மிக நல்லது.  அதற்கு பதிலாக வெல்லம், கருப்பட்டி போன்றவற்றை தூள் செய்து வைத்து கொண்டு உபயோகித்து வந்தால் உடலுக்கு நல்லது. (அப்பாடி கடைசில ஒரு மெசேஜ் சொல்லிட்டேன்...!)







வாசலில் 'அழகு தேவதை நீ....!'







புதன், நவம்பர் 17

வரப்போகிறது ஒரு யுத்தம்....!


"2030 ம் ஆண்டில், உலகில் பாதி பேருக்கு குடிநீர் கிடைக்காது....தண்ணீரை மையமாக வைத்து நாடுகள் ஒன்றை ஒன்று அடித்து கொள்ள கூடும்......! இஸ்ரேல், சூடான், மத்திய ஆசியா என்று உலகம் முழுதும் யுத்தம் பரவ கூடும்"  இதை  நான் சொல்ல வில்லை.....! நம்ம ஐ. நா தான் சொல்கிறது....இதற்கு மாற்று ஏற்பாடு செய்தே  ஆக வேண்டும், அதுவும் உடனே என்று எச்சரிக்கை விடுக்கிறது....!!? அதற்கான ஆலோசனையாக மழை நீர் சேகரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இரண்டையும் சொல்கிறது......!!

2030 வர இன்னும் 20 வருடம் இருக்கே என்று மெத்தனமாக இருக்காமல் அப்போது அவதி பட போகிறவர்கள் நம் பிள்ளைகள் தான் என்று சுயநலமாக எண்ணியாவது முயற்சிகளை இன்றே எடுத்தாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அரசாங்கம் மட்டுமே முயற்சி செய்தால் போதாது....!? தனிப்பட்ட ஒவ்வொரு நபரும் அக்கறை கொள்ளவேண்டும்......(நம்ம வீட்டை பார்க்கவே நேரம் போதவில்லை. இது வேறையா என்று புலம்புவர்களை தவிர்த்து !)

முதலில் எந்த விதங்களில் எல்லாம் நீர் ஆதாரங்களை அதிகரிக்கலாம் என்று பார்க்கலாம்....! மழைநீர் சேகரிப்பு பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன். அடுத்து முக்கியமானது ஆறுகளில் ஓடும் தண்ணீரை பாதுகாத்து கொள்வது.....அதனை பற்றி இங்கே பார்க்கலாம். 

விவசாயிகளின் முக்கிய தேவைகளில் ஒன்று ஆற்று நீர்......

'ஆற்று வளம் ஒரு நாட்டு வளம் ' என்று விவசாயிகள் சொல்வார்கள். ஆற்று வளம் நன்றாக இருந்தால் தான் நாட்டில் விவசாயமும், குடிநீரின் தேவையும் பூர்த்தி ஆகும். இது எல்லோருக்கும் தெரியும் ஆனால் நம்ம ஊரில் இருக்கும் ஆறுகளின் நிலைமையை  நினைத்தால் பரிதாபம் தான் வருகிறது.  எனக்கு தெரிந்த ஒரு ஆற்றை பற்றி சொல்ல வேண்டும் என்றால் நெல்லை மாவட்டத்தில் உற்பத்தியாகி, ஓடி தூத்துக்குடி வழியாக கடலில் கலக்கும் தாமிரபரணி ஆற்றை பற்றி சொல்லலாம். இந்த ஆறு ஒன்று தான் இப்போதைக்கு ஓரளவிற்கு குடிநீர் தேவையை தீர்த்து வைக்கிறது. ஆனால் இந்த ஆற்றின்  நிலைமை இப்போது பெருமையா சொல்லிக்கிற  மாதிரி இல்லை.

மணல் வளம்

ஆற்றுக்கு மிக இன்றியமையாதது அங்கே இருக்கும் மணல் தான் ஆனால் அந்த மணலை கொஞ்ச கொஞ்சமா சுரண்டி கொண்டிருக்கிறார்கள். முக்கியமான விஷயம் என்னனா இங்கே மணல் எடுக்கிறதே தவறு, இந்த மணலும் நமக்கு பயன்படாம பக்கத்து மாநிலமான கேரளாவிற்கு கடத்த படுகிறது. (அவங்க எப்பவுமே ரொம்ப விவரமான புத்திசாலிங்க...!) அவங்க மாநில ஆற்றில் மணல் எடுக்க கூடாதுன்னு தடை விதித்துவிட்டார்கள். (பின்ன எப்படி அவங்க ஊர்ல கட்டிடம் கட்டுவாங்க....?! அதுக்குதான் தமிழ் நாடு பக்கத்தில இருக்கிறதே......?! மணலை கடத்தி கொண்டு வந்திட்டா போச்சு)

ஆனால் நாம, அதுதாங்க தமிழன் தன் வீட்டை பற்றி நினைக்காமல் அள்ளிக்கொண்டு போய் அங்கே கொட்டிட்டு வராங்களே....! எல்லாம் விசயத்திலும் நாம எல்லா பக்கமும் சுரண்ட பட்டு கொண்டே இருக்கிறோம், அதுவும் தன் கையை வைத்தே தன் கண்ணை குத்துவது போல் அதுக்கு துணை செல்பவர்களை என்னவென்று சொல்வது....!?

இப்படி மணல் எடுப்பதால் ஆற்றின் நீரின் அளவும் குறைந்து கொண்டே செல்கிறது. மணல் நிறைய இருந்தால் தான் மழை பெய்யும்போது தண்ணீர் பூமிக்குள் நன்றாக இறங்கும், நீரின் ஓட்டமும் சீராக இருக்கும். ஆற்றின் ஜீவன் போல் இருக்கும் இந்த மணலை திருடுபவர்களை கொலைகாரர்கள் என்று சொல்லகூட  தகுதியானவர்கள் தான்.  மணல்  எடுக்கும் போது எந்திரங்களை வைத்து பெரிய பள்ளம் ஏற்படும் அளவிற்கு தோண்டுகிறார்கள்....இதனால் நீரின் ஓட்டமும் திசை மாறி ஒழுங்கின்றி சென்று வீணாகி போய்விடுகிறது. இன்னும் சொல்ல போனால் இவர்களாகவே நிரந்தரமாக ஆற்றின் நடுவே ரோடு வேற போட்டு விடுகிறார்கள். மீன் வளம் வேறு பாதிக்க படுகிறது....இப்படி கேடுகளை  சொல்லிட்டே போகலாம்....

அரசாங்கம் என்ன செய்கிறது ??

தாமிரபரணி ஆற்றை பொறுத்தவரை 'இனி எந்திரங்களை பயன்படுத்தி மணல் எடுக்க கூடாது' என்று அரசாங்கம் கடுமையான உத்தரவு போட்டு இருக்கிறது. குறைந்தது இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்த ஆற்றில் மணல் எடுப்பதை தடை செய்யவேண்டும் என்று ஆய்வு செய்த அதிகாரிகள் அறிக்கையில் சொல்லி இருக்கிறார்கள். இனி இதை    சரியாக கவனித்து கடத்தலை தடுக்க வேண்டியது சம்பந்த பட்ட அதிகாரிகளின் கையில் தான் இருக்கிறது. மேலும் விவசாயிகளின் மூலம் பொது  நல வழக்கு போடப்பட்டதால் தான் தாமிரபரணி ஆறும் அரசாங்கத்தின் பார்வைக்கு சென்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நமக்கு என்ன என்ற போக்கு கொஞ்சம் மறைய தொடங்கிவிட்டது என நினைக்கிறேன் . பொது மக்களும் கொஞ்சம் விழிப்பாக இருப்பது அவசியம் ஆகிறது. இரவில் தான் இந்த கடத்தல் முழு வேகத்தில் நடக்கிறது....அதை தெரிந்து கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் விழிப்பாக இருந்தால் இந்த மணல் திருட்டை தடுக்கலாம்.

குடிநீர் தேவைக்கு முக்கிய ஆதாரமான ஆறுகளின் மணல் வளத்தை குறையாமல் பாதுகாத்து கொள்வது மிக மிக அவசியம். இப்போதே பல இடங்களில் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதி படுகிறார்கள்....இனியும் நாம் இந்த மணல் கடத்தல் விசயத்தில் விழித்து  கொள்ளவில்லை என்றால் நிலைமை இன்னும் மோசமாக போய்விடும்.  

நாட்டில இருக்கிற எவ்வளவோ பிரச்சனைகளில் இதுவே முக்கியமானதாக தோன்றுகிறது....! உயிர் வாழ ஆதாரமான தண்ணீர் பற்றாக்குறையை முதலில் சரி செய்ய முயலுவோம்.....! இனி வரும் சந்ததிகளுக்கு தண்ணீரை கொஞ்சம் விட்டு செல்வோம்.....! தண்ணீருக்காய் நாடுகள் ஒன்றுக்கொன்று அடித்து கொள்ளும் என்பதை நினைக்கையில் வருத்தமே வருகிறது.....! 


அடுத்து நீரின் பற்றாக்குறைக்கு வேறு ஒரு முக்கிய காரணமாக இருப்பது சுற்றுச்சூழல் இதனை பற்றி இனி தொடரும் பதிவுகளில் பாப்போம்... 







படம் உதவி : சௌந்தர்


வாசலில் 'துளிகள்....!'

ஞாயிறு, நவம்பர் 14

இன்று மட்டும் தான் குழந்தைகள் தினமா..?



எல்லோருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்...குழந்தைகளை நாம் வாழ்த்த வேண்டும்.....ஆனால் 'இந்த ஒரு நாளில் மட்டும் நாம் நம் குழந்தைகளை வாழ்த்தினால் போதுமா ?' என்ற கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன்...யோசித்து கொண்டே பதிவை தொடர்ந்து படியுங்கள்.


ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்காக படும் பாடு கொஞ்ச நஞ்சம் அல்ல. குழந்தை பிறந்து நடக்க தொடங்கியது முதல் அவர்களின் டென்ஷன் அதிகரிக்க தொடங்கி விடும். கணவன் சம்பாத்தியம் மட்டும் போதுமா என்று மனைவியும் வேலைக்கு செல்ல தொடங்குவார்கள். நிற்க நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்..... இன்றைய ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்காக என்னவெல்லாம் செய்கிறோம் என்று ஒரு லிஸ்ட் போடுவோமே....



* கணவன், மனைவி இருவரும் போட்டி போட்டு கொண்டு பொருள் தேட உழைக்கிறோம்.



* பிள்ளைகள் பெயரில் பாங்கில் பணம் சேர்த்து வைக்கிறோம்.



* நகரத்தில் இருப்பதிலேயே சிறந்த பள்ளி எதுவென்று சல்லடை போட்டு அலசாத குறையா தேடி சேர்க்கிறோம். (டொனேசன் அதிகமா  கொடுத்து இடம் பிடிச்சேன்...?! சலிப்பாக பெருமை பட்டு கொண்டுதான்...!) 



* இன்னும் நல்லா படிக்க வேண்டுமே என்று ஸ்பெஷல் கிளாஸ், கோச்சிங் கிளாஸ் என்று வேறு சேர்த்துவிடுகிறோம்.



* தன் குழந்தை எல்லா கலைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று டான்ஸ், பாட்டு, கராத்தே, குங்க்பூ, ஸ்கேடிங்....இப்படி பல கிளாஸ்களில் சேர்த்து விடுகிறோம். (அவங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ...!) 



* பண்டிகை விசேச நாட்களில் விலை கூடுதலான துணியா பார்த்து பார்த்து வாங்கி அணிவித்து மகிழ்கிறோம்..(பக்கத்து வீட்டு குழந்தை போட்டு இருக்கிற டிரெஸ்ஸை விட விலை கூடுதலா...! ) 



* குழந்தைகள் அதிகம் உண்ண விரும்பும் பிஸ்சா, பர்கர், நூடுல்ஸ் போன்றவற்றை வாங்கி கொடுக்கிறோம். (உடம்பிற்கு இவை ஆரோக்கியம் இல்லை என்றாலும் குழந்தை விரும்புதே என்று...!)



ஒரு பெற்றோரா இதை விட வேற என்னங்க செய்ய முடியும்....?! உண்மைதான் ஆனால் உங்களிடம் நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரலையே.......! 



பதில் : இன்னும் யோசிச்சிட்டு இருக்கிறோம்....!?



சரி விடுங்க நானே சொல்றேன்....என் பதில் சரிதானா என்று மட்டும் சொல்லுங்க... 



உங்கள் குழந்தைகளின் நலனுக்காக ஓடி ஓடி எல்லாம் செய்றீங்க, மிக சிறந்த பெற்றோர் நீங்க தான், ஆனால் ஒண்ணு தெரியுமா...?? 



'உங்கள் குழந்தை உண்மையில் சந்தோசமா இருக்கா ? ஒரு நாளாவது இந்த கேள்வியை உங்க குழந்தைகளிடம் கேட்டு இருக்கீங்களா...?? இது வரை கேட்கவில்லை என்றால் இன்னைக்கு கண்டிப்பாக கேளுங்க...! நீங்கள் அவர்களுக்காக செய்ய கூடிய எல்லாம் விசயமும் அவர்களுக்கு பிடித்து இருக்கிறதா என்று இன்று கேளுங்க....! 



உங்களின் விருப்பங்களை அவர்கள் மேல் திணித்து வளர செய்வதை விட அவர்களின் விருப்பங்கள் என்னவென்று அறிந்து, அதையும் தெரிந்து கொண்டு  அதன் படி வளர்ப்பது நன்மை பயக்கும். நம் குழந்தைகள் நம்மை விட புத்திசாலிகள். 



குழந்தைகளை ரசித்து கொண்டாட இந்த ஒரு தினம் போதாது....தினம் தினம் ரசியுங்கள், செல்லமாய் உச்சியில் முத்தமிடுங்கள், உற்சாக படுத்துங்கள், பாராட்டுங்கள் நம் பிள்ளைகள் தானே சந்தோசமாக இருந்து விட்டு போகட்டுமே....! என்ன நான் சொல்ற பதில் சரிதானே...? மறுபடியும் யோசிச்சு பாருங்கள், சரியாதான் இருக்கும்....! 



குழந்தையை முதலில்  'குழந்தையா சந்தோசமாக இருக்க விடுங்கள்' என்று இந்த நாளில் உங்களிடம் கேட்டு கொள்கிறேன்.



சரிங்க நான் இத்துடன் முடிக்கிறேன்...என் பசங்களை இன்னைக்கு இன்னும் நான் கொஞ்சவில்லை...அப்புறம் கோவிச்சுக்க போறாங்க......




உங்களுக்கும் , உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும்.... என்னுடைய மற்றும்  என் இரு சுட்டி வாண்டுகளின் 'குழந்தைகள் தின வாழ்த்துக்கள்'   
  
                                                   

வெள்ளி, நவம்பர் 12

ஆபத்தான கலாச்சாரம்.....!



நம் இந்திய கலாச்சாரம் பிற நாட்டினரும் பார்த்து பொறாமை பட கூடிய அளவில் தான் இருந்தது சிறிது காலம் வரை....!? அதிலும் முக்கியமாக நமது திருமண முறை, பல ஜாதி, மதத்தினர் இருந்தாலும் அவர்களுக்கு தகுந்த மாதிரியான சம்பிராதயங்கள்,  கட்டுபாடுகள், கலாச்சாரங்கள் என்று மிகவும்  நல்ல முறையில் அமைந்திருந்தது.'புனிதம்' என்று இன்று வரை நினைத்து மதித்து கொண்டிருந்த ஒரு பண்பாடு இப்போது வேறு விதமாக போய் கொண்டிருக்கிறது....!!?

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான திருமண வழக்கங்கள். மோதிரம், தாலி என்று எந்த முறையில் நடந்தாலும் எல்லா திருமணங்களும் பதிவு செய்ய பட்டுதான் வருகிறது, அதுவே கணவன், மனைவி இருவருக்கும் ஒரு சமூதாய அங்கீகாரமாகும்.  அதுவே முறையான திருமணமாக இருக்கிறது .எல்லாவற்றிலும் மேலை நாட்டினரை பார்த்து முன்னேறி (பின்னேறி) பழகி போன சிலரால் ஒரு புது கலாச்சாரத்தையும் பின்பற்றுவது என்பதும்  சரியானதாகவே தான் தெரிகிறது போலும். 

அப்படிப்பட்ட ஒரு புது கலாசாரம் தான் LIVING TOGETHER  என்று சொல்லகூடிய ஒன்று.  மனதிற்கு பிடித்த ஆண், பெண் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்வது....!!எப்போது இருவருக்கும் ஒத்து போகவில்லையோ அப்போதே பரஸ்பரம் பேசி  'இனி நண்பர்களாக மட்டும் இருப்போம்' என்று சொல்லி பிரிவது....?! இது என்ன கொடுமைங்க...!!? சென்னை போன்ற பெரிய நகரங்களில் இந்த கலாசாரம் பரவி கொண்டிருக்கிறது என்பதை பத்திரிக்கைகளின் மூலம் தெரிந்து அதிர்ச்சியாகிவிட்டது.

ஒருவேளை  இந்த மாதிரியான வாழ்க்கையில் தவறி குழந்தை ஏதும் பிறந்து விட்டால், பிரிந்த பின் அந்த குழந்தையை என்ன செய்வார்கள்....! ஏதும் பிரச்னை என்றால் உதவிக்கு யாரிடம் செல்வார்கள்....?! இது எந்த அளவுக்கு  அந்த பெண்ணிற்கு பாதுகாப்பை கொடுக்கும்......? அல்லது எதுவரை...??! முறையான திருமணம் முடித்த  கணவன் மனைவி இருவருக்கும் இடையில் பிரச்னை என்றால் வீட்டு பெரியவர்கள் பேசி தீர்த்து வைப்பார்கள், அல்லது முடியாத பட்சத்தில் போலீஸ் ஸ்டேஷன், அதையும் மீறி போனால் கோர்ட்  உதவியை  நாடுவார்கள்.

ஆனால் இது எதை பற்றியும் ஒரு கவலை இல்லாமல் படித்து நல்ல வேலையில் இருக்கும் நாகரீகமானவர்களிடம் இத்தகைய புதிய கலாசாரம் இப்போது வேகமாக பரவிக்கொண்டு வருகிறது.  இது மிகவும் ஆபத்தான, அதே சமயம் வருத்தப்பட கூடிய ஒரு நிகழ்வு.

இந்த முறையானது 'நமது கலாசாரத்திற்கு களங்கம் கற்பிக்கும்' என்று சிலர் கொதிக்கும் அதே நேரம், இந்த மாதிரியான சீர் கேட்டையும்  'தனி மனித சுதந்திரம்' என்று சப்பை கட்டு கட்டி விதண்டாவாதம் செய்கிறார்கள் வேறு சிலர்.

இப்படி பட்ட ஒரு முறை தவறு என்றே உச்சநீதிமன்றம் சமீபத்தில் கூறி உள்ளது. இந்த மாதிரி சேர்ந்து வாழ்பவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு இல்லை. மேலும் இந்த மாதிரி வாழ்பவர்களுக்கு ஏதும் பிரச்சனை என்றால் கோர்டில் வழக்கு தொடர்ந்தாலும் செல்லுபடியாகாது. மேலும் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் இந்த மாதிரியான உறவுகள் வராது என்றும் திடமாக தீர்ப்பு அளித்துவிட்டனர்.  இந்த தீர்ப்பு தான் இப்போது நம்மவர்களின் பொழுது போக்கு நேர பேச்சே....!

எது கலாசாரம்...?

இனி வரும் தலைமுறையினர் பண்பாடு  , கலாசாரம்னு சொல்றங்களே அப்படினா என்ன என்று கேட்க கூடிய நிலையில் இருப்பது வருத்தம் தான்.  பெரியவர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு படிப்பை கற்க வைப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல், ஒழுக்கம், பண்பாடு, விருந்தோம்பல் பண்பு, நம் கலாசாரம் போன்றவற்றையும் சொல்லி கொடுக்க வேண்டும். (இதை கற்று கொடுக்க ஏதாவது கோச்சிங் சென்ட்டர் இருந்தா தேவலை....?!!) நம் வீட்டில் கல்லூரி செல்லும் பிள்ளைகளோ, அல்லது வேலைக்கு சென்று கை நிறைய சம்பாதிக்கும் பிள்ளைகளோ  இருந்தால் இனியாவது அவர்கள் மேல் ஒரு கண் வைத்து கவனியுங்கள்....சொல்லமுடியாது உங்கள் பிள்ளை வீட்டுக்கு வெளியே ஒரு வீட்டை ரெடி செய்து குடும்பம் நடத்தி கொண்டிருக்கலாம்...!?? (உண்மையை சொல்றேங்க...!?) 

யோசியுங்கள் பெற்றோர்களே !

பிள்ளைகள் இப்படி செய்வதற்கு பெற்றோர்கள்  எப்படி காரணமாவார்கள் என்று நினைக்ககூடாது. வீட்டில் கிடைக்காத  அன்பு, அரவணைப்பு, பாசம் இந்த மாதிரியான முறையில் கிடைக்கலாம் என்று போகலாம்...! மேலும் இது  முழுவதும் உடல் தேவைக்காக மட்டும் தான்  என்று ஒதுக்கி விடமுடியாது. அதற்கு வேறு வழிகள் இருக்கின்றன. எல்லோரின் மனதுமே  ஒரு சின்ன அங்கீகாரம், ஆதரவாய் சாய ஒரு தோள், அன்பாய் தலை வருட ஒரு கரம், நிம்மதியாய் உறங்க ஒரு மடி இவற்றுக்காக தான் ஏங்குகிறது என்று கருதுகிறேன்..... இல்லை என்று யாரும் மறுக்க முடியாது  அல்லவா  ....?!

இதை தேடித்தான் ஓடுகிறார்கள், அவர்களாகவே இப்படி ஒன்றை ஏற்படுத்தி நிம்மதி, சந்தோசம் காண முயலுகிறார்கள், அவசர முடிவு   என்று தாமதமாக உணர்ந்து அதில் இருந்து அதே அவசரமாக விடுபடுகிறார்கள்....ஆனால் பிரச்சனை அத்துடன் முடிந்து விடுவதில்லை....பழகிய நாட்களின் எண்ணங்களில் இருந்து அவர்களால் முழுதும் விடுபட இயலாது.....விளைவு குற்ற உணர்ச்சி, ஏமாற்றம், வேதனை கடைசியில் மன அழுத்தத்தில் கொண்டு போய் விட்டு விடுகிறது.....!!? என்ன படிச்சி, என்ன சம்பாதித்து என்ன பலன்....இனி வாழ்க்கையின் பக்கங்கள் அனைத்தும் வெறும் வெள்ளை காகிதம் போன்றது தான்....!?        

என்ன முடிவு...?

மற்ற மாநிலத்தவர்களை விடுங்கள்...தமிழர்களுக்கு என்று பெரிய பாரம்பரிய கலாசாரம் இருக்கிறது. அதை எல்லாம் மறந்து போக போய்தான் இந்த மாதிரி சீர்கேடான  புது நாகரீகம் தலையெடுக்க தொடங்கிவிட்டது. என்ன செய்து இதனை நிறுத்த போகிறோம் அல்லது தடுக்க போகிறோம்...? நாடு முழுவதும் யோசிக்க வேண்டிய சர்ச்சைக்குரிய  ஒரு விஷயம் இது. பல பட்டிமன்றங்கள் கூட நடை பெறலாம், இப்படி சேர்ந்து வாழ்வதை சட்ட பூர்வமாக அங்கீகரிக்க வேண்டுமா அல்லது தடுத்து நிறுத்த
வேண்டுமா என்று ...??







வாசலில் விடை கொடு.....!