திங்கள், அக்டோபர் 31

நான் ஏன் பெண்ணாக பிறந்தேன் ?!



இந்த கேள்வியை  தங்களுக்குள்ளாக கேட்காத பெண்களின் எண்ணிக்கை மிக குறைவு . வாழ்நாளில் ஒருமுறை கண்டிப்பாக கேட்ககூடிய சூழ்நிலை ஒன்று உண்டு,  அது பிரசவ வேதனையை  அனுபவிக்கும் அந்த நேரம்!   

நானும் அத்தகைய ஒரு நிலையில் கேட்டேன், கேட்டேன் என்று சொல்வதை விட கத்தி கதறினேன் என்று தான் சொல்வேன். ஹாஸ்பிட்டலில் சேர்த்ததில் இருந்து வலியால் துடித்து கொண்டிருந்தேன், வலி வருவதும் போவதுமாக இருந்ததே ஒழிய எந்த முன்னேற்றமும் இல்லை.  நர்ஸ் வந்து செக்  பண்ணி விட்டு இந்த வலி போதாது இன்னும் கொஞ்சம் வலி வர வேண்டும், அப்போதுதான் குழந்தை பிறக்கும் என்று கூலாக சொல்லிவிட்டு சென்று விட்டார்கள்.  எனக்கு எப்படி இருக்கும்?!  இந்த வலியே உயிர்  போகுது, இதை விட அதிக வலி என்றால் எப்படி இருக்கும்,  நினைக்கும்போதே வலியுடன் இப்போது பயமும் சேர்ந்து விட்டது.  

என் உறவினர்கள் வேறு உட்காராதே, அப்படியே மெதுவாக  நட என்று அன்பாக கட்டளை இட்டார்கள்.  என்ன செய்ய அனுபவஸ்தர்கள் சொல்கிறார்களே என்று பெரிய வயிற்றை தூக்கி கொண்டு நடந்தேன்.     

பிரசவ நாள் நெருங்கியும் வலி ஏற்படவில்லை என்பதால் வலியை அதிகரிக்க ஜெல் என்ற ஒன்றை வைத்தார்கள்,   வைக்கும்போது அது வேற  வித்தியாசமான ஒரு வேதனையாக  இருந்தது.  இது போதாது என்று குளுக்கோஸ் ஒரு கையில் ஏறி கொண்டு இருந்தது.  அதிகம் இல்லை ஒரு 5 பாட்டில் தான்.  ஒரு பாட்டில் முடிந்ததும் நர்ஸ் செக் அப்,  பின்னர் வாக்கிங், மறுபடி ட்ரிப்ஸ், மறுபடி செக் அப் இப்படியாக கிட்டத்தட்ட 36  மணி நேரம் கடந்தது.   இதில் தூக்கம் என்ற ஒன்றை மறந்து விட்டேன்.  'எப்ப குழந்தை பிறக்கும்' என்ற என் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. 

டாக்டர் மறுபடி ஜெல் முயற்சி பண்ணுவோம் என்று சொன்னார்கள்,  நல்ல ஹாஸ்பிடல் என்பதால் சிசரியன்  பற்றி யாருமே அங்கே  பேசவில்லை.  (எனக்கு தான் வேற இடம் போய் இருக்கலாம் என்று தோன்றியது !?) மறுபடி ஜெல் என்றவுடன் பயம் அதிகமாகி விட்டது.  

இந்த நரக வேதனையில் தான் என் மனதில் தோன்றியது " ஏண்டா பெண்ணாக  பிறந்தோம்? "  மனதில் தோன்றியதை வாய் விட்டு கதறி சொல்லிவிட்டேன்,  அதற்க்கு என் அத்தை ' என்ன செய்ய நம்ம தலை எழுத்து, அனுபவிக்கத்தான் வேண்டும் '  என்று அவர்களுக்கு தெரிந்த ஆறுதலை கூறினார்கள்.   எனக்கு அந்த கேள்வி மட்டும் அல்ல வேறு ஒன்றும் தோன்றியது, ' எதை எதையோ கண்டுபிடித்தோம் என்று பெருமை பட்டு கொள்கிறோமே,  வலி இல்லாமல் பிள்ளை பெறுவதற்கு ஒரு மாத்திரை மாதிரி எதையாவது கண்டுபிடிக்கலாம் அல்லவா என்பதுதான் அது'.   

என் கதறல்  தாங்காமல் கடைசியில் ஆபரேஷன் ரூமிற்கு அழைத்து சென்றார்கள். போவதற்கு முன் இனிமா என்ற வேறொரு இம்சை, அதையும் அனுபவித்தேன்.  ஆபரேஷன் செய்யலாமா இல்லை மறுபடி  ஜெல் வைக்கலாமா என்று அவர்களுக்குள் ஒரு ஆலோசனை நடந்தது,    அரைமணி நேரம் கழித்து சரியாக 40 மணிநேர அவஸ்தைக்கு பின் பெரிய வலி ஏற்பட்டது.

என்னை சுற்றி பலர் இருந்தனர், வலி கூட கூட என் கதறலும் கூடுகிறது, பயத்தில் என் கைகள் உதவிக்காக அலைபாயுகிறது ,  தானாக என் கரங்கள் அருகில் இருக்கும் நர்சின் கையை பற்றி அழுத்தியது.  நெஞ்சின் படபடப்பு  அதிகரிக்கிறது, இதயம் அதிக ஆக்சிசனுக்காக துடிக்க என் திறந்த வாய் வேகமாக காற்றை உள்ளிழுக்கிறது. அருகில் இருக்கும்  நர்ஸ் என் காதருகில் வேகமாக உந்தி தள்ளுமாறு கூறினார்கள்.  

என் முழு உடலும் என் கட்டுபாட்டில் இல்லை,  என் கண்கள் நிலை குத்த, கைகள் பரபரக்க, இதயம் துடிக்க, நெஞ்சில் ஒரு பந்துபோல் ஏதோ வந்து அடைக்க, வேகமாக என் மொத்த சக்தியையும் ஒன்று திரட்டி, மரண விளிப்பில் நிற்கையில் உயிர் பிழைக்க மேற்கொள்ளும் கடைசி முயற்சி இதுவென, உள்ளிழுத்த காற்றுடன் அழுத்தம் கொடுத்து உந்தி தள்ள, இதோ குழந்தை பிறந்து விட்டது. என் கதறல் சத்தம் நின்று குழந்தையின் அழுகுரல் தொடங்கியது.   நான் மெதுவாக மூச்சை இழுத்து விட்டு இயல்பு நிலைக்கு வர தொடங்கினேன். 

நர்ஸ் அருகில் வந்து 'உங்களுக்கு ஆண் குழந்தை' என்று சொன்னார்கள். எந்த குழந்தை என்றாலும் பரவாயில்லை , பிறந்தால் சரி என்றுதானே இருந்தேன். அதனால் மனதில் ஒன்றும் பெரிதாக பூ எல்லாம் பூக்கவில்லை,  நர்சிடம் சும்மா லேசாக சிரித்து வைத்தேன்.
இன்னும் விட்டார்களா இந்த நர்ஸ்கள், என்னவோ இன்னும் சரியாக வெளியேறவில்லை என்று என்னை அடுத்த 30   நிமிடத்திற்கு பாடாய் படுத்தினார்கள், தையல் போட்டார்கள்.  என்ன மாதிரியான  விதவிதமான வேதனைகள், வலியில் இத்தனை விதங்களா?, அனுபவித்தேன் கொடூரமாக.....!

இதற்குள் குழந்தையை சுத்தம் செய்து ஒரு வெள்ளை துணியில் சுற்றி வைத்து என்னிடம் கொண்டு வந்து காட்டினர்.  மெதுவாக திரும்பி முகம் பார்த்தேன்...கடவுளே! இது என் குழந்தையா..?  இதன் தாய் நானா..?  நாந்தான் பெற்றேனா..? வெள்ளை துணியில் சிகப்பு ரோஜா மலராய் கண்மூடி என் அருமை மகன்... ! சின்ன சின்ன மணி விரல்கள், இதழ் பிரியா  மல்லிகை  மொட்டுபோல் உதடுகள்,  தாமரை இதழாய் கன்னம், மூடிய இமைக்குள் அலையும் கருவிழிகள்,  வர்ணிக்க வார்த்தைகள் தோணவில்லை,  ஆனந்தத்தில் எனக்கு போதை ஏறி சிறிது மயக்கம் வருவதுபோல் இருந்தது!

என்னே ஆனந்தம்!


இதுவரை நான் அனுபவித்தது வலிகளா இல்லை, என் கண்மணியை தேடி கண்டுபிடிக்க நான் எடுத்த பிரயாசங்களா ....!? ஒரே வினாடியில் என்னை தாய் என்று உணர வைத்தான்.   பால் அருந்த என் அருகில் படுக்க வைத்தனர்,  என் ரத்தம் என் மகனுக்காக பாலாக மாறி அவனை அருந்த வைத்தது....!  

பெண்மை எதுவென இந்த இன்ப வலியை அனுபவிக்கும்போது தான் உணருகிறேன்,  கடவுள் வரம் கொடுத்தால் மீண்டும்  பெண்ணாகவே பிறப்பிக்க வேண்டுவேன் என்பதை... !

பெண்களே இனி ஒரு முறை கூட கூறாதிர்கள் , ' ஏன் பெண்ணாய் பிறந்தேன் என்று '. 

" மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா " 


பின்குறிப்பு அல்ல முக்கிய அறிவிப்பு !!

31.10.2011 இருந்து 06.11.2011 ஞாயிற்றுகிழமை வரை தமிழ்மணத்தில் என்னை நட்சத்திர பதிவராக தேர்ந்தெடுத்துள்ளதாக அறிவித்து அழைப்பு விடுத்திருந்தார்கள். பதிவுலக உறவுகள் உற்சாகம் கொடுப்பார்கள் என்ற தைரியத்தில் நானும் சம்மதித்துவிட்டேன். மாதத்திற்கு நாலு பதிவு எழுதி கொண்டிருக்கும் என்னை தினம் ஒன்றாக ஏழு பதிவு எழுத சொல்லி இருக்கிறார்கள்...!? என்மேல் அவர்கள் கொண்ட நம்பிக்கைக்கு என் நன்றிகளை இங்கே சொல்லிகொள்கிறேன். முதல் பதிவாக எனக்கு பிடித்த பதிவை மீள்பதிவிட்டு இருக்கிறேன். நாளையில் இருந்து புதிய பதிவுகள் வெளிவரும்...ஆதரவு தாருங்கள். நன்றி.

பிரியங்களுடன் 
கௌசல்யா

* மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சு போய்டுமா ?!!  நாளைய பதிவில்..........


   

திங்கள், அக்டோபர் 24

தீபாவளி அன்றும் இன்றும்...!


தீபாவளி என்று சொல்லும் போதே மனசில மத்தாப்பு பூக்கும்...இப்பவே இப்படினா சின்ன வயசில எப்படி இருந்திருக்கும்...!! முக்கியமா பெரியவர்களுக்கான பண்டிகைனு சொல்வதை விட சின்ன குழந்தைகளின் பண்டிகைனு சொல்வது பொருத்தமாக இருக்கும்...

தீபாவளி அன்று...

சின்ன புள்ளையா இருந்தபோ, தீபாவளி வந்தா போதும் நமக்கு கவனிப்பு ரொம்ப பிரமாதமா இருக்கும்......! நமக்காகவே பார்த்து பார்த்து எல்லாம் தயார் பண்ணுவாங்க.....எங்க அம்மா தீபாவளிக்கு இரண்டுநாள் முன்னாடி எப்ப தூங்குவாங்க...? எப்ப எழுதிருப்பாங்க என்றே தெரியாது...எப்பவும் ஒரு நல்ல வாசனை சமையலறையில் இருந்து வந்துட்டே இருக்கும். அப்புறம் தி.நகர் போய் கடை கடையா ஏறி இறங்கி எங்களுக்கு பிடிச்ச மாடல்,கலர்ல தேடி வாங்கிய டிரஸ் தயாரா இருக்கும். புது டிரஸ், பட்டாஸ், அதிரசம், முறுக்கு, ஜாங்கிரி, பாதுசா...பாருங்க இப்ப பலகாரம் பேர் கூட மறந்து போச்சு...

மத்த நாள் அம்மா காலையில எழுப்பினா, 'என்னடா வாழ்க்கை இது'னு புலம்பிட்டே எழுந்திருகிறது, ஆனா தீபாவளி அன்னைக்கு மட்டும் சீக்கிரமாக  எழுந்து விடுவேன்(நைட் தூங்கினாத்தானே...?) அம்மா சொல்றாங்களேனு(!) வேகவேகமா எண்ணெய் தேச்சுகிறதும், குளிக்கிறதும் நமக்கே இது கொஞ்சம் ஓவராத்தான் இருக்கும்...ஆனா எப்ப புது டிரசை போட விடுவாங்கன்னு மனசு பூரா பரபரன்னு இருக்கும். பக்கத்து வீடு, எதிர்வீடு,  அடுத்த  தெருவில  இருக்கிற  வீடுன்னு எல்லா வீட்டுக்கும் பலகாரங்கள் கொடுக்க என்னை அனுப்புவாங்க...அது ஒரு தனி ஜாலியா இருக்கும்...! 

பலகாரம் கொடுக்கிற சாக்குல புது டிரசை காமிக்கிறதுக்கு தான் இந்த அலட்டல்,அவசரம் எல்லாம்...!!கொடுத்துட்டு வீட்டுக்கு திரும்பி வந்தா இங்கேயும் ஒரு பத்து பதினைந்து வீட்டு பலகாரங்கள் டிசைன் டிசைனா டைனிங் டேபிள் மேல நிறைஞ்சி இருக்கும்.

அப்புறம் அம்மா கொடுக்கிற இட்லி, கறி குழம்பு காம்பினேசனை ஒரு வெட்டு வெட்டிட்டு டிவி பார்த்து, தம்பிங்க போடுற வெடிகளை தூரமா இருந்து (பக்கத்துல போக பயம் இல்ல, பட்டாசுக்கு ஒரு மரியாதை? )ரசிக்கிறது என ஒரே ஸ்பெஷல் என்டர்டைன்மென்ட் தான். தம்பிங்க ரொம்ப ஆசை படுறாங்களேனு பொட்டு வெடியை வரிசையா தரையில வச்சு, நீநீநீளமான சுத்தியல் எடுத்து டக் டக்னு அழகா(?) வெடிப்பேன். அப்புறம் மத்தியானம் வாழையிலைல இடம் கொள்ளாம அம்மா வைக்கிற ஐட்டங்களை ஒவ்வொன்னா எடுத்து காலி பண்ணிட்டு மறுபடி தெருவில வெடி போடுற என் குட்டி பிரண்ட்ஸ் கூட ஜாலியா விளையாடி, அன்னைக்கு ரிலீசான படங்கள் பற்றிய கதை பேசி என்று அந்த நாள் மிக இனிதாக கழியும்...

நைட்ல நாம ராக்கெட் விடுறதை விட ஊர்ல மக்கள் விடுற ராக்கெட்டை ரசிக்கிறது செம சூப்பரா இருக்கும்...வானமே ஜெகஜோதியா ஜொலிக்கும். எந்த பக்கம் போறதை பார்க்கிறது ? எதை ரசிக்கிறது ? எதை விடுறது ? எல்லாத்தையும் பார்த்துவிடணும் என்று கால் வலிக்க சுத்தி, கழுத்து வலிக்க பார்த்து, கை வலிக்க தட்டி குதூகளிச்சு...அப்படியே எம்பி வானத்தை தொட்டா என்னனு மனசு குதிக்கும் அந்நேரம் புரிந்தது சுவர்க்கம் வேறு எங்கும் இல்ல என் வீட்டு மொட்டை மாடியில் !!

எல்லாம் அழகாய், நிறைவாய் முடிந்து இரவும் வந்து விழிகளை தூக்கம் தழுவகொள்ளும்...இந்த ஒரு நாளின் உற்சாகம் அடுத்து தொடர்ந்து வரும் நாட்களுக்கு ஒரு சந்தோஷ பூஸ்ட் !!

தீபாவளி இன்று...

அப்படி உற்சாகம் கொடுத்த தீபாவளி இன்று ஒரு சாதாரண நிகழ்வாக மாறி போனது...நம் குடும்பத்தினரிடம் கூட ஆர்வம் குறைந்து போய்விட்டது...பெண்களை பொறுத்தவரை பிற நாட்களை விட பண்டிகை நாட்களில் அதிகரிக்கும் வேலைகள் !! வேலை செல்லும் பெண்கள் என்றால் இன்னும் கஷ்டம் கிடைக்கும் ஒரு நாள் விடுமுறையும் தீபாவளி சமயத்தில் அதிகரிக்கும் வேலை பளுவால் இடுப்பொடிந்து போய்விடும். ஆண்களுக்கு தங்கள் பர்ஸ் காலியாகிவிடுமே என்ற யோசனையில்...!! 

போனஸ் கிடைத்தாலும் இப்போதுள்ள விலைவாசிக்கு எவ்வளவு பணம் வந்தாலும் போதாது. மட்டன் விலை கிலோ 400 தொடபோகிறது, சிக்கன் கிலோ 180  ஆகிவிடும்...சரி அசைவமே வேண்டாம் காய்கறி வாங்கலாம் என்றால் அங்கே அதுக்கு மேல் இருக்கிறது...என்ன செய்வான் சாமானிய மனிதன்...? பட்டாஸ் விலையும் 50% வரை போன வருடத்தை விட விலை ஏறி விட்டதாம். துணிமணிகளின் விலை பற்றி சொல்ல வேண்டியதில்லை, ரெடிமேட் ஜாஸ்தி விலை என்று துணியாக எடுத்து தைக்க கொடுத்தால் தையல் கூலி, துணி வாங்கிய விலையை விட அதிகமாக இருக்கிறது...புதுத்துணி, பட்டாஸ் இவை எல்லாம் இல்லாமல் தீபாவளி கொண்டாடவும் முடியாது...இதை எல்லாம் யோசிக்கிறப்போ ஏண்டா இந்த பண்டிகைகள் வருகிறது என்ற சலிப்பு ஏற்படுவது சகஜம். 

இனி வரும் காலங்களில் தீபாவளி போன்ற பண்டிகைகள் வசதி உள்ளவர்கள் மட்டுமே கொண்டாடும் படியாக மாறி போனாலும் ஆச்சர்யபடுறதுக்கு இல்லை...நடுத்தர குடும்பத்து தாய் தன் மகனை பார்த்து,'தீபாவளி கொண்டாட நாம எல்லாம் ஆசை படலாமா மகனே...? நீ நல்லா படிச்சு நிறைய சம்பாதி அப்ப கொண்டாடலாம் ?' என ஆறுதல் சொல்ல கூடும்...?!!

நம்ம சமுதாயம் கொஞ்சம் கொஞ்சமாக பழைய சந்தோசங்களை இழந்து வருவது போல் இருக்கிறது...என்னதான் சொல்லுங்க நம்ம குழந்தைகளை விட முந்தின தலைமுறையினர் நாம ரொம்ப கொடுத்து வச்சவங்க...!!

நம்ம பசங்களுக்கு பண்டிகைகளின் மேல் ஆர்வம் குறைந்துவிட்டது...ஏன்,எதற்காக கொண்டாடுறோம் என்றும் தெரிந்துகொள்ள அவர்கள் விரும்பவில்லை. அவர்களை பொறுத்தவரை இன்னொரு விடுமுறை நாள் அவ்வளவே...காலையில் பட்டாஸ் போடும்போது இருக்கிற ஆர்வம் கூட நேரம் ஆக ஆக குறைந்துவிடுகிறது...இன்றைய தலைமுறையினருக்கு தொலைக்காட்சியில், கம்ப்யூட்டர், மொபைல், பிளே ஸ்டேஷன் கேம்ஸில் கிடைக்கும் சந்தோசம் பண்டிகைகளை கொண்டாடுவதில் கிடைப்பதில்லையோ...??!  


பெற்றோர்களான என் போன்றோருக்கு   பண்டிகை கொண்டாடி ஆகணும், பசங்களையும் சந்தோசமாக வச்சுக்கணும் என்று கஷ்டப்பட்டு அங்கே இங்கே ஓடி மூச்சுவாங்க எல்லாம் செஞ்சு முடிக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிவிடுகிறது. 

ஒரு உண்மை என்னனா...  

நாம சின்ன புள்ளைகளா இருந்த வரைக்கும் தீபாவளி நல்லா இருந்தது...இப்ப நமக்கு புள்ளைங்க இருக்கிறபோது, தீபாவளியை அவ்வளவாக நம்மால் ரசிக்க இயலவில்லை...!!

உங்கள் மனதோடு கொஞ்சம்...

இந்த தீபாவளி சமயத்தில் நமக்காக எவ்வளவோ செலவு செய்கிறோம். அதில் சிறிய அளவு பணத்தில் உடை, இனிப்பு, வெடி ஏதோ ஒன்றை வாங்கி அருகில், ரோட்டில், தெருவில் பார்க்கும் ஏதோ ஒரு ஏழை சிறுவர், சிறுமிகளுக்கு கொடுங்கள்...பிறகு உங்களுக்கு கிடைக்கும் மனநிறைவை உணர்ந்து அனுபவித்து பாருங்கள் !!

நீங்கள் கொடுங்கள்...அப்போது அவர்கள் விழிகளில் தெரியும், உண்மையான தீபாவளி !! 


என் நேசத்துக்குரிய அனைத்து பதிவுலக உறவுகளுக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!



படங்கள் - நன்றி கூகுள்

சனி, அக்டோபர் 22

பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்...!

கழுகு வலைதளத்தில் நேற்று ஒரு பதிவு பகிரப்பட்டது. அதை பதிவு என்று சொல்வதை விட பதிவர்களுக்கு அதில் ஒரு கோரிக்கை விடப்பட்டது.  அப்பதிவை அவர்களின் அனுமதியுடன் இங்கே பகிர்கிறேன். படித்து உங்களின் மேலான ஒத்துழைப்பை தாருங்கள். நன்றி.

* * * * * * * * *




அன்றாடம் நாம் காணும், கேள்விப்படும் முக்கியான செய்திகளில் ஒன்று சாலை விபத்து. அதுவும் நாட்டில் நடக்கிற விபத்தில் 90 % விபத்து வாகனக்களால்   நடக்கிறது . 


Statistics Related To The Road  Accidents In India

• 93% of all accidents are caused due to human 
factors.
• 80% crashes involve driver inattention within 3 
seconds before the event.
• 30 % talking on phone.
• 300 % dialing phone.
• 400 % drowsiness.
• 28% accidents are rear-end collision.
• 67% of accidental cases to rise by 2020 as per 
WHO.
• 20% of GDP covers the accidental portion.


முகப்பு விளக்குகள் 

இதில்  இரவில்  நடக்கும்  விபத்துக்கள்  மிக  அதிகம். எதிரில் வரும் வண்டிகளில் பளிச்சிடும் விளக்குகள்(HEAD LIGHTS) விபத்துக்களுக்கு முக்கிய காரணம் !! அந்தந்த வாகனங்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப முகப்பில் 4 அல்லது 6 விளக்குகள் வரை எரிய விட்டு செல்கின்றன. இதனால் எதிரில் வருபவர்கள் தடுமாற்றம் அடைந்து சுதாரிப்பதற்குள் விபத்து நடந்து விடுகிறது...

முகப்பு விளக்குகளுக்கு என்னதான் GOVT. RULES படி கருப்பு ஸ்டிக்கர்,,பெயின்ட் -பூசினாலும் சில நாட்களிலேயே அவை பயன் அற்று போய்விடுகிறது. இதை பார்த்து சரிசெய்ய வேண்டிய அதிகாரிகள் --அதை பார்த்தவுடன் சும்மா விட்டுவிடுகிறார்கள். அல்லது சிறிய அளவில் அபராதம் போடுகிறார்கள் ....அத்துடன் சரி .....


இதுக்கு நிரந்தர தீர்வு தான் என்ன ???

"வாகனங்களின் முகப்பு விளக்கை தயாரிக்கும்போதே விளக்குகளின் உள் பக்கம் கருப்பு வண்ணம் பூசி வந்தால்...??!!
இந்த பிரச்சனையை எளிதில் தீர்க்கலாம்....நிச்சயம் விபத்துகளின் எண்ணிக்கை குறையும். இதற்கு அரசு ஒத்துழைக்க வேண்டும். அரசு ஒரே ஒரு ஆணை இடுவதன் மூலம் இதற்கான தீர்வை எட்ட முடியும். சரி அதற்கு நாம் என்ன செய்யலாம்...?

பதிவர்களாகிய நாம் அனைவரும் இணைந்து நமது இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்போம் ... 

National Automotive Testing and R AND D Infrastructure Project.    
Ministry of Road Transport & Highways. 
Chief Minister's Special Cell,,Secretariat, Chennai 600 009. 
Transport Secretaries OF Government of Tamil Nadu . 

இவர்களிடம் நமது கோரிக்கை-ஐ மின் அஞ்சல் அனுப்புவதன் மூலம் நமது குரலினை இவர்களின் செவி சேரச் செய்து இது ப்ற்றிய ஒரு எண்ணத்தை கண்டிப்பாய் அவர்கள் மனதில் பதிய வைக்க முடியும்.

அன்பர்களே...நாம் அனைவரும் ஒரு கோரிக்கை மனுவை இவர்களுக்கு மெயிலாக அனுப்புவோம். அனைத்து மின்னஞ்சல் முகவரிகளையும் கீழே கொடுத்துள்ளோம்.


இந்திய அரசாங்கம்:-

* National Automotive Testing and R AND D Infrastructure Project:- 
* Chief Minister's Special Cell,,Secretariat, Chennai 600 009:-Email: cmcell@tn.gov.in

* Transport Secretaries of Government of Tamil Nadu:-transec@tn.gov.in



அன்பு பதிவர்களே,மெயில் அனுப்புவதோடு இல்லாமல் இந்த கருத்தை இந்தியா முழுவதும் கொண்டு செல்லுங்கள். உங்களின் அனைத்து மாநில நண்பர்கள் அனைவரையும், இதே கருத்தை வலியுறுத்தி மெயில் அனுப்ப சொல்லுங்கள் ...

நாம் முயன்றால் கண்டிப்பாக இதில் ஒரு மாற்றம் கொண்டு வர முடியும் ....நாம் நினைத்தால்...சாதிக்கலாம்!!!!

நிச்சயம் நாம் இந்த விஷயத்தில் தூண்டும் கருவியாய் நின்று அனைத்து இணைய பயன்பாட்டாளர்களையும் ஒன்று சேர்ப்போம்.


மேலும்,ஆக்கபூர்வமான யோசனைகள்,தேவையான மெயில் ID-கள் ,முகவரிகள் தெரிந்தால் பின்னுட்டத்தில் தெரிவிக்கவும் ...

நீங்களாக எழுதி மின்னஞ்சல் செய்யுங்கள் அல்லது கீழ்காணும் பார்மேட்டை உபயோகித்து கொள்ளுங்கள். நன்றி.

மின்னஞ்சல் பார்மேட்

Please save us and others from road accidents by introducing an order that, "all head lights should be manufactured or sold with a black circle inside so that it can’t be removed easily. It should not be allowed to be sold without the black circle inside. Take this obligation as very urgent and do the needful".






வியாழன், அக்டோபர் 20

உண்ணாவிரதத்தின் மற்றொரு முகம்...! கூடல்பாலா !?


எதற்கு எடுத்தாலும் உண்ணாவிரதம் இருக்கிறாங்கபா, நாடு கெட்டுவிட்டது  என்று சலித்து கொள்ளும் சராசரி இந்திய குடிமகன்கள் ஒருமுறை முறையான உண்ணாவிரதம் இருந்து பார்க்கவேண்டும்.அதன்பின் புரியும் இது எத்தகையதொரு வேள்வி, தியாகம் என்று. ஏற்கனவே கூடங்குளத்தில் நடந்து  முடிந்த 11 நாள் உண்ணாவிரதம் எல்லோரும் அறிவோம், அது முடிவுக்கு வந்ததும் அதை அப்படியே மறந்துவிட்டோம். ஆனால் முழு பட்டினி கிடந்த இவர்களின் நிலை...!? உண்ணாவிரதம் இருந்தபின் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவது சற்று சிரமம். இதில் கலந்துகொண்டவர்களில் கூடல்பாலா உடல்நலம் பாதிக்கபட்டுள்ளதாக போனில் பேசும்போது என்னிடம் கூறினார்.

சமூக சேவகி மேதா பட்கருக்கு கை கொடுக்கும் பாலா 

கூடன்குளம் போனபோது முதலில் அவர் வீட்டுக்கு நேரில் சென்று அவரை சந்தித்தோம்...பாலாவும் அவரின் அம்மாவும் அன்புடன் வரவேற்றார்கள். சில சம்பிரதாய பேச்சுக்களுக்கு பின் அவரது உடல்நிலை பற்றி விசாரித்தேன். விரதம் முடிந்ததும் எப்போதும் போல் சாப்பிட தொடங்கி இருக்கிறார், தனது தொழில் நிமித்தமாக வெளியே சென்ற நேரம், திடிரென்று  இவர்  மயங்கி சரிந்ததை பார்த்து அருகில் இருந்தவர்கள் ஹாஸ்பிடலில் சேர்த்து இருக்கிறார்கள். 

தீவிர சிகிச்சைக்குப்பின், இப்போதும் தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டு வருகிறார். குடல் புண்ணாகி அல்சரில் கொண்டுபோய் விட்டு இருக்கிறது. என்னுடன் பேசிகொண்டிருக்கும் போது அடிக்கடி தன் இரு கைகளை நெஞ்சில் வைத்து அமுக்கி பிடித்துவிட்டு கொண்டே இருந்தார். தொடர்ந்து பேசினால் நெஞ்சடைப்பதை போல இருப்பதால் போனில் கூட அவ்வளவாக யாரிடமும் பேச இயலவில்லை என்றார். 

மிக மெதுவாக வித்தியாசமாக நடந்தார், அருகில் இருந்த அம்மாவிடம், 'ஏன் இப்படி நடக்கிறார்' என்று கேட்டேன். 'இப்பதான் இப்படி நடக்கிறான், அவனால் வேகமாக நடக்க இயலவில்லை, அதுதான் நாங்க வெளில எங்கும் அனுப்புறது இல்லை, வீட்டிலையே வச்சுக்கிறோம்' என்றார்.  நாங்கள் வருவது தெரிந்து பாலா சட்டை எடுத்து அணியவும் அவரது நான்கு வயது மகன், 'அப்பா வெளில போறீங்களா, வேண்டாம்பா' என்று கை பிடித்து தடுத்து  இருக்கிறான்...!!? இவருக்கு இப்படி ஆனது தெரிந்ததும் நண்பர்கள் உடனே இரண்டு வாழைதார்களை கொண்டுவந்து கொடுத்திருக்கிறார்கள். பழம், மோர், இளநீர், மற்றும் சுத்தமாக காரம் இல்லாத உணவு போன்றவற்றை மட்டும்  எடுத்துகொள்கிறார்.  


அவரிடம் 'உங்க மனைவி எங்கே?' என்றேன் 'காலையில் உண்ணாவிரத பந்தலுக்கு போயிட்டு மாலையில்  தான் வருவா' என்றார் பாலாவின் அம்மா. இவங்க வீட்டில் இருந்து அந்த இடம் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. தினமும் சலிக்காம நடந்து சென்று வராங்க. ஊரில் இருப்பவர்களில் உடல்நிலை முடியாதவர்களும், மிக வயதானவர்களும் கலந்துகொள்வதில்லை.

எதற்காக இந்த தவ வாழ்க்கை ? யாருக்காக ? தெரிந்தே துன்பம் அனுபவிப்பதற்கு என்ன காரணம் ? யோசித்து பார்த்தால் இவர்களின் தியாகம் புரியும். இதில் சிறிதும் சுயநலம் இல்லை...

நமக்கு தேர்ந்தவரை பாலா ஒரு பதிவர் அவ்வளவே. ஆனால் அணுமின் நிலையத்தை பற்றிய செய்திகளை விரல் நுனியில் வைத்திருக்கிறார். நான் கேள்விகள் கேட்க கேட்க கணினியில் அது தொடர்பான செய்திகளை படங்களுடன் உடனே எடுத்து காட்டி விளக்கினார். கூடங்குளத்தில் நடக்கும் அனைத்தையும்  உடனுக்கு உடன் வெளி உலகத்திற்கு கொண்டு சென்று கொண்டிருக்கிற கூடல் பாலாவிற்கு நாம் நம் பாராட்டுகளை தெரிவிப்போம். வாழ்த்துவோம்.

                                   இதில் ஆரஞ்ச் கலர் ஷர்ட்டில் இருப்பவர் பாலா 


அவர் நிறைய விஷயம் எங்களிடம் பகிர்ந்து கொண்டாலும் அதில் குறிப்பிட்ட சில மட்டும் இங்கே...

*  இது போன்ற பெரிய அணு உலைகள் மக்கள் தொகை மிக குறைவான பகுதியில்(16 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள்)அமைக்கபடவேண்டும். இந்த அணுஉலை மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கிறார்கள் இங்கே...! 30 கிலோ மீட்டருக்குள் 10  லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இருக்கிறார்கள்.

* ஒருவேளை கதிரியக்கம் வெளியானால் கடலில் கலந்து கடல் வளங்கள் அழியும்.

* அணுஉலை கழிவுகள் மண்ணுக்கடியில் புதைக்கபட்டால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும்.மேலும் இவற்றை 24 ,000 ஆண்டுகள் பத்திரமாக பாதுகாக்க வேண்டும்...?!!!  

* அணுஉலைகள் கடல் மட்டத்தில் இருந்து வெறும் 9  மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை வந்த சுனாமி அலைகள் இரண்டு பனை மரம் உயரத்திற்கு மேல் எழும்பியது நினைவு இருக்கலாம். சமீபத்தில்
ஜப்பான் அணு உலையைத் தாக்கிய சுனாமி 20  மீட்டர் உயரம் .மேலும் அணு
உலையில் விபத்துக்கள் நிகழ சுனாமி மட்டும் காரணமாக இருக்காது ,மனித தவறு மூலமாகக்கூட நிகழலாம் . !! 

சுனாமி இங்கே வர வாய்ப்பு இல்லை என்ற சமாளிப்புகள், சமாதானங்கள் , அறிவியல் அறிவிப்புகள் இயற்கையின் முன் செல்லுபடியாகாது...இயற்கை அன்னை எப்போது, எந்த இடத்தை  தன் காலால் எட்டி உதைப்பாள் என யார் அறிவார்...? 2006 ஆம் ஆண்டுக்கு முன் சுனாமி என்ற வார்த்தை இருக்கிறது என்பதாவது நமக்கு தெரியுமா??    

* கூடங்குளத்தில் மின்னுற்பத்தி தொடங்க இன்னும் வேலைகள் பாக்கி இருக்கின்றன...மிச்சமும் முடிந்து உற்பத்தி பணி தொடங்க இன்னும் 1 1/2 அல்லது  2 ஆண்டுகள் ஆகலாம். (இந்த டிசம்பரில் தொடங்கிவிடும் என்று அரசு சொல்கிறது...?!) இதை இப்ப ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு முறை பதிவுலகில் மின்சாரம் பற்றிய பேச்சு வந்தபோது நட்புகள் என்னிடம் சொன்னார்கள், "உங்களுக்கு என்ன, அங்கே பக்கத்தில் கூடங்குளம் இருப்பதால் மின் வெட்டு பிரச்சனை இல்ல...!!?" சதா இணையத்தில் சுத்தி சுத்தி வந்தாலும் நம்மவர்களின் தெளிவு இந்த அளவில் தான் இருக்கிறது.



காற்றாலையின் மூலம் மின் உற்பத்தி 

கூடங்குளத்தில் சுற்றிலும் காற்றாலைகள், அவைகளின் ஒரு மணி நேர மின் உற்பத்தி (ஒரு காற்றாலை, ஒரு மணிநேரம் = 1 1/2 மெகா வாட்) 1,500 மெகா வாட்ஸ் !!

அணுஉலை மின் உற்பத்தியை தொடங்கினால் ஒரு மணி நேரத்துக்கு ஆயிரம் மெகா வாட் மின்சாரம் கிடைக்கும்... (தமிழ்நாட்டுக்கு 45% மின்சாரம் கிடைக்கும் )    

இன்னும் அதிக அளவில் காற்றாலைகளை நிறுவினாலே அபிரிதமான மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். அதைவிடுத்து அணுஉலைகள் நமக்கு தேவையா என முடிவு  செய்யவேண்டிய முக்கியமான தருணமிது. 

ஊரை சுற்றி காற்றலைகளின் அணிவகுப்பால் மின் வெட்டு பிரச்சனை இங்கு கிடையாது.

 கல்பாக்கத்தில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு கதிர்வீச்சு பாதிப்பு என்று வேறு செய்திகள் வருகின்றன...! கூடங்குளத்தில் நடப்பது அவர்களுக்காக மட்டும் அல்ல, எங்கும் அணு உலைகள் தேவை இல்லை என்பதின் ஒட்டுமொத்த போராட்டம் !!


விடை பெற்றேன் 

நலம் விசாரிப்பு, அணுஉலை செய்திகள், பதிவுலகம், அரசாங்கத்தின் நிலை, மீடியாக்கள், கூடங்குளம் மக்கள், அரசியல் இப்படி கலவையாக பலவற்றை மனதில் ஏந்திக் கொண்டு அங்கிருந்து நானும் என் கணவரும் விடை பெற்றோம். 

உண்மையில் அவ்வூர் மக்களின் வெள்ளை பேச்சில் சிறிது நேரம் மயங்கித்தான் போனேன்.

உண்ணாவிரதத்தால் உடல் சுகவீனமானவர்களுக்கு அங்கே இருக்கும் ஒரு  ஹாஸ்பிடல் இலவசமாக வைத்தியம் செய்து வருகிறது.

இப்படி மனித நேயத்தை நேரில் கண்டும், உணர்ந்தும், கேட்டும் இன்னும் நான் என்னை பக்குவபடுத்தி கொண்டேன். இன,மதம், ஏழை, பணக்காரன் எல்லா வேறுபாட்டையும் மறந்து ஒன்று சேர்ந்திருக்கும் இவர்களின் நடுவில்தான் இறைவன் இருக்கிறான். இறைவனை  நேரில்  தரிசித்த   உணர்வில் இன்று நான் இருக்கிறேன். 

மனிதர்களிடம் சண்டை இடாதீர்கள்.....மனிதர்களுக்காக சண்டை இடுங்கள்...!! 

இந்த மானுடம் வெல்லட்டும்...!!     

* * * * * * * * * * * * * * * * * *

நேரம் கிடைக்கும் போது இவற்றையும் படியுங்கள்


கூடங்குளம் அணுமின் நிலையம் : மாற்று தீர்வு இல்லையா ?

*  மாற்று வழிகள் பற்றிய ஒரு பார்வை 



* * * * * * * * * * * * * * * * * * 



திங்கள், அக்டோபர் 17

கூடன்குளம் - ஒரு நேரடி பார்வை




கூடன்குளம் தனது அடுத்த போராட்டத்தை தொடங்கி போராடிக்  கொண்டிருக்கிறது. இதை  போராட்டம் என்று சொல்வது கூட முரணோ என தோணுகிறது. ஒழுங்குடன் மிக நேர்த்தியாக அமைதியாக கட்டுபாட்டுடன் நடக்கும் ஒன்றை போராட்டம் என்று சொல்வதைவிட மக்களின் எழுச்சி  எனகூறுவது பொருத்தமாக இருக்கும். புத்தியில் போராட்டம் என்றால் அடிதடி ஆர்பாட்டம் என்றே பதியப்பட்டு இருக்கிறதே!? கூடன்குளம் மக்களை குறித்தும், முன்னெடுப்பவர்களை பற்றியும் ஏகப்பட்ட வதந்திகள்...ஊடகங்கள் ஒரு பக்கம் திசை திருப்புகிறது என்றால் மக்களோடு மக்களாக கலந்திருக்கும் சிலர் வாய்க்கு வந்ததை சொல்லி திரிகின்றனர்.(தமிழ் நண்டு கதை இப்போ ஏனோ நினைவுக்கு வருகிறது...!!?)

பல வதந்திகள் உலவினாலும் முக்கியமான சில இங்கே...

* அணுஉலையில் வேலை செய்தவர்களை அடித்து ஊரைவிட்டு அனுப்பி  வைத்ததாகவும்... 

* சாலையில் வண்டிகள் செல்ல வழிவிடாமல் நடுரோட்டில் கற்களையும், முட்களையும் போட்டு வைத்திருப்பதாக, அதனால் தான் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாகவும்...

* ஒரு மத சாரார் தங்களை முன்னிலை படுத்தவும்...
  
* முக்கியமாக அமெரிக்காவில் வசித்தவர், உண்ணாவிரதத்தின் முன்னால் நின்றதால் அமெரிக்காவின் கைக்கூலி இவர் என்றும்...! 

* மக்களை போராட சொல்லி ஒரு சிலர் வற்புறுத்துவதாக, யாரையும் வேலைக்கு செல்லவிடாமல் தடுப்பதாக...

* பணம் கொடுத்து கூட்டத்தை கூட்டுவதாகவும்... 

இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்...

அங்கே அப்படி என்ன அசாதாரண நிலை நிலவுகிறது என்று அறிய நானும் என் கணவரும் நேற்று நேரில் சென்றோம், ரோட்டில்  கற்கள் போடபட்டிருக்கிறது பெரிய வாகனங்கள் செல்லாது என்று கேள்விப்பட்டதால்(?) கார் வசதிபடாது என்று பைக்கில் இருவரும் கிளம்பினோம்...(இது தவறான முடிவு என்று அப்போ தெரியல !)நெல்லையில் நாங்கள் இருக்கும் இடத்தில இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது கூடங்குளம். இரண்டரை மணிநேர பயணம், கடும் வெயில் அப்படியே தலையை சூடாக்க வழி நெடுக குளிர்பானம் பருகி வெயிலை சமாளித்து(வென்று) கூடங்குளத்தை அடைந்தோம். 

ஊரை அடைந்ததும் எங்களை வரவேற்றது அங்கே ஓரமாக கிடந்த கற்கள்...!?  ஊர்முழுதும் ரவுண்டு அடித்தோம். வேறு எந்த அதிகபடியான வித்தியாசமும் எங்களுக்கு தெரியவில்லை. வெகு இயல்பாக இருந்தது ஊர். முதலில் கூடல் பாலாவை பார்க்க சென்றோம்...(இதை பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்)

பெண்கள் கூட்டம் அல்ல வெள்ளம்  


பின் அவரிடம் இருந்து விடைபெற்று கொண்டு மக்கள் கூடி இருக்கும் இடத்திற்கு சென்றோம். போடபட்டிருந்த பந்தல்களில் பெண்கள் கூட்டம் மிக அதிகம். இரு பெண்கள் சேர்ந்து இருந்தாலே அந்த இடம் கலகலப்பாக இருக்கும்...ஆனால் இங்கே பல ஆயிரம் பெண்கள் சிறிதும் சத்தமில்லை...ஒருவருக்கு ஒருவர் பேசுகிறார்கள் ஆனால் சத்தம் கேட்கவே இல்லை...!! 

நாங்கள் சென்ற நேரம் கேரளா திரிச்சூரில் இருந்து ஒரு பெண் கல்லூரிவிரிவுரையாளர்  வந்திருந்து மைக்கில் பேசிகொண்டிருந்தார்...அவரது மலையாள பேச்சை ஒருவர் மொழி பெயர்த்தார், மொழி பெயர்க்க தேவையும்  இருக்கவில்லை,அனைவருக்கும் மொழி புரியவே செய்தது. மொழி வேறாக  இருந்தாலும் மனித உணர்வுகள் ஒன்றுதானே... அவர் 'கேரளமக்கள் உங்கள் கூட இருக்கிறார்கள், அவர்களின் ஆதரவு நிச்சயம் உங்களுக்கு உண்டு, மூடும் வரை ஓயமாட்டோம் ஓயமாட்டோம்' என்று கூற மக்களும் அதை தொடர்ந்து கூறினார்கள். மக்களின் குரல், கைதட்டல் இரண்டும் மிக மெதுவாகவே கேட்டது. (மக்கள் அதிகம் உணர்ச்சிவசபடவில்லை என்பதை புரிந்துகொள்ளமுடிந்தது)  நெருக்கமாக அமர்ந்து இருந்தாலும் அமர்ந்தவர்கள் அப்படியே இருக்கிறார்கள், சிறிதும் சலனமின்றி...


பெண்கள் அருகில் சென்று நான் நின்று கொண்டிருந்தேன், அமர்ந்திருந்த மூன்று பெண்கள் என்னை உட்காரசொல்லி நிழலில் இடம் ஒதுக்கி தந்தனர். கடல்மணலில் அமர்ந்து அமைதியாக ஒவ்வொருவரின் பேச்சையும் கவனித்து கொண்டிருந்தேன். அவர்களிடம் பேசியதில் இருந்து சில.....

காலை ஒன்பது மணிக்கு இந்த பந்தலுக்கு வந்து விடுகிறார்கள். மாலை ஐந்து அல்லது ஆறுமணி வரை இருக்கிறார்கள். இத்தனை மணிக்கு வந்தாக வேண்டும் என்று எந்த கட்டாயமும் யாருக்கு விதிக்க படவில்லையாம். அவர்களின் சூழ்நிலைகளை பொறுத்து எப்பவும் வரலாம் போகலாம். வலியுறுத்தல் இல்லை. 

இதை நேரிலும் நான் பார்த்தேன்...கோவில் திருவிழாவிற்கு வருவதை போல உற்சாகமாக கூட்டங்கூட்டமாக நடந்து வந்துகொண்டே இருந்தார்கள்... இரவிலும் நிறைய பேர் இங்கேயே தங்கிவிடுகிறார்கள். ஒரு பெண்ணிடம், 'தண்ணி, மற்ற வசதிக்கு என்ன பண்ணுவீங்க' என்று கேட்டதும்  ஒரு இடத்தை சுட்டி காட்டினார்...அங்கே இருக்கிறது என... 

அப்போது ஒரு தனியார் பஸ்ஸில் பக்கத்து ஊரில் இருந்து மக்கள் வந்து இறங்கினர். அதை பார்த்ததும் 'அப்ப பிற பஸ்கள் ஏன் வருவது இல்லை' என்று கேட்டதற்கு, 'அது தெரியலைங்க' என்று அப்பாவித்தனமாக கூறினார் ஒரு பெண்மணி.

விவசாயம் தான் இவர்களது முக்கிய தொழில். கூடன்குளத்தை  பொறுத்தவரை இப்பூமி மழை மறைவு பிரதேசம்...வேறு முக்கிய வேலைகள் இல்லாததாலும், மின்சாரம் இங்கே உற்பத்தி செய்யபட்டால் அதனை சார்ந்து வேறு பல தொழிற்சாலைகள் இங்கே உருவாகும், வேலை வாய்ப்புக்கு பஞ்சமிருக்காது என்கிற நியாயமான எதிர்பார்ப்பு அணுஉலை இங்கே அமைய காரணங்கள். அணு உலையிலும் வேலை கிடைக்குமே என்பதும் ஆரம்பத்தில் மக்கள் அமைதியாக இருந்ததுக்கு ஒரு காரணம். இவ்வூர் மக்கள் நாற்பது பேர் மட்டும் அங்கே நிரந்தர வேலையில் இருக்கிறார்கள்.

இடிந்தகரையில்


ஒரு மணி நேரம் அங்கே இருந்துவிட்டு அடுத்து இடிந்தகரை ஊருக்கு சென்றோம். சர்ச் முன்னால் பலர் உண்ணாவிரதம் இருந்தனர். படுத்துக்கொண்டும் அமர்ந்து பேசிக்கொண்டும் இருந்தனர். எங்களை பார்த்ததும் நீங்க எங்கிருந்து வரீங்க ? எந்த இயக்கம்(?) எதுக்கு வந்திருக்கீங்க என்று தொடர் கேள்விகள் கேட்டார் ஒருவர். கேள்விகளுக்கு பின்னே இருந்தவை எங்களுக்கு ஓரளவு தெரியும் ஆதலால் பொறுமையாக 'சும்மா சுத்திபார்க்க வந்தோம்' என்றோம். அவதி பட்டவர்களுக்கு தான் தெரியும் அதன் வேதனை ! வெளியே போடபட்டிருந்த பந்தலில்  ஊர் மக்கள் அமர்ந்திருந்தனர்.

இங்கிருந்து சில அடிகள் தூரத்தில் கடல் இருந்தது.மீன்பிடிக்க செல்லாததால் படகுகள் அனைத்தும் கடலோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அங்கிருந்து பார்க்கும் போது அணுஉலை மிக அருகில் தெரிந்தது. 

கடல் நீரில் சிறிது நேரம் நின்றேன்...'மனிதர்களின் எந்த உணர்வை பற்றியும்  எனக்கு அக்கறை இல்லை, இக்கரையை தொடுவது ஒன்றே என் வேலை' என்பது போல் இருந்தது வேகமாக ஓடிவரும் அலைகளை பார்க்கும் போது !  

வெளியே இருக்கும் சிலர் இந்த விசயத்திற்கு மதசாயத்தை பூசுகிறார்கள். ஆனால் எந்த வேறுபாடும் இவர்களை வேறுபடுத்தவில்லை...அவரவர் நம்பிக்கை அவரவருக்கு என்பதில் மிக தெளிவாக இருக்கிறார்கள்.உண்ணாவிரத்தின் போது சர்ச்சில் காலையில் நடக்கும் பிராத்தனையில் இந்துக்கள் கலந்துகொள்கிறார்கள்...! இங்கே நடைபெற்ற விசுவாமித்திரர்  யாகத்தில் பாதிரியார் கலந்துகொண்டிருக்கிறார் ! 




என்ன முடிவு செய்யபோறாங்க?

'அணுஉலையால் ஆபத்தில்லை' 'உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது' என்பதற்கு  எந்த உத்தரவாதமும் இதுவரை சரியாக கொடுக்கப்படவில்லை.இது ஒரு பக்கம் இருந்தாலும், நம்பிக்கை கொடுக்கப்படும் வரையாவது அணுஉலை வேலைகளை நிறுத்தி வைக்கலாம் என்பதை ஏன் மத்திய அரசு கவனத்தில் கொள்ளவில்லை...?!

கணினியின் முன் அமர்ந்து ஆயிரம் சமாளிப்புகள், சப்பைக்கட்டுகள்,வாதங்கள் ,கருத்துக்கள் பேசலாம் ஆனால் நேரில் அந்த மனிதர்களை பார்க்கும்போது ,அந்த சூழ்நிலையில் சிறிது நேரம் இருந்தபோது எங்களுக்கு ஏற்பட்ட உணர்வுகள், உண்மையில் அதை எழுத்தில் எழுத எனக்கு தெரியவில்லை. மனிதம் அதன் உணர்வுகள் எங்கே என்றாலும் அது மதிக்கப்படவேண்டும்...மனிதன் சுகமாய் வாழவே இந்த மின்சாரம், அதுவே மனிதர்களின் கலக்கத்திற்கும், உயிரினை அச்சுறுத்தும் இடமாக இருக்கிறது என்கிறபோது கைவிடுவதை பற்றி யோசிப்பதில் தவறு என்ன இருக்கிறது...?!!

மனிதத்தை கொன்று மனிதனை வாழவைப்பதை பற்றி பேசுவது  வேடிக்கையாக இருக்கிறது !

அந்த அப்பாவி உயிர்களை அச்சுறுத்தி, பீதியுடன் வாழச்செய்து பெறக்கூடிய மின்சாரம் எதை பூர்த்தி செய்ய...? எதை வளமாக்க ? எதன் விருப்பத்தை நிறைவேற்ற ?  
   
யோசிக்குமா அரசாங்கம் !!?

நேரம் கிடைக்கும் போது முடிந்தால் இதையும் படித்துவையுங்கள் kudankulam2011

பின்குறிப்பு 

பதிவர் கூடல்பாலாவிற்கு என்ன ஆயிற்று ?! அடுத்த பதிவில் பார்க்கலாம்.

  

புதன், அக்டோபர் 12

பெண்களா இப்படி...?!!!


                                            தலை குனியுங்கள் பெண்டிரே(!)
                                            படித்தவளாம்(!) ஆசிரியையாம்(?) 
                                            எதை படித்தாள் ?
                                            எதை பயிற்றுவிக்க ?

                                            வெறி தணிக்க
                                            தேவை ஒரு பிஞ்சு குழந்தை 
                                            பென்சிலை வைத்தும்
                                            பேனாவை கொண்டும் 
                                            ச்சே நினைக்க அருவருப்பான ஒன்றை
                                            நிகழ்த்தி ரசித்த அரக்கிகளே... 

                                            உன் வயிற்றிலும் ஏதும் பிறந்ததா?
                                            நன்றாக இருக்கிறதா ?
                                            இல்லை உன் வெறிக்கு பலியாகி 
                                            மூலையில் கூனி குறுகி கிடக்கிறதா?
                                            உன் வீட்டு ஆண்
                                            உன்னை அடக்க(?)மாட்டாமல் 
                                            அடங்கி கிடக்கிறானா ?

                                            செத்த உடலுடன் 
                                            உறவுகொண்டான் சிங்களவன்... 
                                            அவனுக்கு எந்த விதத்திலும் 
                                            குறைந்தவளில்லையடி  நீ !

                                            வரிந்து கட்டிக்கொண்டு 
                                            பொங்கும் பெண்ணுரிமை வாதிகளே 
                                            எங்கே போனீர்கள்?
                                            இளம் தளிரை சிதைத்த கொடூரம் 
                                            கண்டு கொதிக்கவில்லையா மனம்
                                            கொடி ஏந்தி போராடிக்
                                            கிழித்தெறிய வேண்டாமா
                                            இவர்களின் முகமூடியை...

                                            எங்கே எம் சகோதரர்கள் 
                                            வெட்டி வீசுங்கள் உருண்டோடட்டும் 
                                            நரகறிக்கு அலையும் அரக்கிகள் தலை 
                                            நிமிரட்டும் தாய்மார்களின் குனிந்த தலை!!

                                            மாபாதகம் புரிந்தவர்களுக்கு
                                            பரிந்து கொண்டு வரும்
                                            நாக்குகளை அறுத்தெறிய
                                            வேண்டும் ஒரு கூர்வாள்...

                                            இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 377 
                                            இவ்வழக்கில் பொருந்தாதாம்
                                            முன்ஜாமீன் கொடுத்துவிட்டது
                                            நம் சட்டம்...?!

                                            மாற்றவேண்டுமோ
                                            ஒரு சட்டத்தை...
                                            ஸ்கேனில் எந்த குழந்தை
                                            தெரிந்து கொள்ள தடை இல்லை என...!? 

                                            பெண் குழந்தை பிறந்து பிஞ்சில்
                                            பாதகர் கையில் வதைபடுவதா?
                                            கருவில் மாள்வதா ?
                                            எது உத்தமம் !!?

                                                                 (விரிவான விவரங்கள்  இங்கே  )



கள்ளக்குறிச்சி ஏ.கே.டி பள்ளி யு.கே.ஜி.மாணவியை(குழந்தையை) பாலியல் வன்கொடுமை செய்த பிரின்சிபல் போஸ்கோ, ஆசிரியை போசியா இருவரின் கொடுமையான செயலை படித்தபின் ஏற்பட்ட எனது கோபத்தின் வெளிப்பாடு  மேலே உள்ள வரிகள். சில ஆண்களால் பெண்மைக்கு பாதுகாப்பின்மை ஒருபக்கம் என்றால் பெண்களாலும் பாலியல் வன்கொடுமை என்பதை ஒரு பெண்ணாக ஜீரணிக்க இயலவில்லை. தாய்மைக்கு ஈடு இணை உலகில் வேறில்லை என்ற எண்ணத்தில் மண் அள்ளி போடுவதை போன்ற இவர்களின் செயல் தாய்மார்களை தலை குனிய வைக்கிறது. இக்கொடும் செயல் புரிந்த சம்பந்தப்பட்ட நான்கு பேருக்கும் என் கண்டனங்கள்.

ஏதோ இருவர் செய்ததிற்காக பெண்கள் நாம் ஏன் தலை குனிய வேண்டும் என்று மாறுபட்டு தயவு செய்து எண்ணாதீர்கள். இதை மீடியாக்கள் பெரிது பண்ணாமல் விட்டது எண்ணி சிறிது நிம்மதியாகவே இருக்கிறது...!? படிக்கவே அச்சுறுத்த கூடிய இப்பாதகம் நம் குழந்தைகளுக்கு நேர்ந்தால் அவர்களின் மன நிலை, எதிர்காலம் பற்றி யோசிக்கவே நடுக்கமாக இருக்கிறது.  

மனித உரிமைப்பாதுகாப்பு மையம் மேற்கொண்ட தொடர் முயற்சியின் பயனாக இப்பிரச்சனை நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்தது. இவ்வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு ஒரு மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டதுள்ளது, இவர்கள் விசாரித்து விசாரணையின் இறுதி அறிக்கையை 4 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.  விரைவில் விசாரணை முடிவு தெரியவரும். இந்த அளவிற்கு சென்றபின்னும் இது போன்ற ஒன்று நடைபெறவில்லை என்ற சமாளிப்புகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

இவர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்குவதின் மூலம் மேலும் இச்செயல்கள் நடைபெறுவதை தடுக்கமுடியும் என்று உறுதியாக சொல்ல முடியாது என்றாலும் கடும் தண்டனை வழங்கபட்டே ஆகவேண்டும். பத்திரிகைகள், மகளிர் சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள், பெற்றோர் நல சங்கங்கள் இன்னும் பிறவும் ஓங்கி குரல் கொடுக்க வேண்டும்.





இது போன்றவை எப்போதோ, எங்கோ ஒன்று இரண்டு ஏற்படுவது தானே இதை ஏன் பெரிதுபடுத்தவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள். தெருவிற்கு ஒன்று, ஏன் வீட்டிற்கு ஒன்று கூட இந்த நிமிடம் நடந்துகொண்டிருக்கலாம் எப்படி தெரியும் உங்களுக்கு...குழந்தைகள் தானாக வெளியே சொல்லாதவரை யாருக்கும் தெரியபோவதில்லை...! அவர்கள் சொல்லமாட்டார்கள் என்ற தைரியத்தில் தான் இவை அரங்கேறுகின்றன...?!

இது ஒருநாளில் முடிந்துவிட கூடிய விஷயம் இல்லை, பாதிக்கப்பட்ட குழந்தையின் மனநிலை காலத்துக்கும் சரியாகாது. மற்றொரு செய்தி ஒன்று, பத்து வயது சிறுமி ஒரு கொடூரனால் சிதைக்கப்பட்டு உதிர போக்கு ஏற்பட்டு சிறுமி பிழைக்க வேண்டும் என்றால் அவளது கர்ப்பபை எடுத்தாக வேண்டும் என்று டாக்டர்கள் கூறிவிட, இப்போது எடுக்கப்பட்டுவிட்டது. இனி அவளது எதிர்காலம்...???

உங்கள் வீட்டு குழந்தைகளை மெதுவாய் விசாரித்து பாருங்கள்...நெருங்கிய உறவினர்கள் தொடங்கி பள்ளியின் ஆசிரியர்கள்(ஆசிரியைகள் !?) பள்ளி வாகன ஓட்டுனர்கள், வாட்ச்மேன்,பக்கத்து வீட்டு நபர்கள் மூலம் தவறான தொடுதல் ஏதும் இதுவரை நடந்திருக்கிறதா என பக்குவமாக கேளுங்கள். பெண் குழந்தை என்று மட்டும் இல்லை ஆண் குழந்தைகளும் மிக அதிகமாக இத்தகைய வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். உங்கள் குழந்தைகளிடம் கண்டிப்பாக அறிவுறுத்துங்கள்,  நல்ல தொடுதல் எது, தவறான தொடுதல் எது என்று...இன்னும் சொல்ல போனால் அடுத்தவர் எதற்கு தொடவேண்டும்...?!! பிறரை தொடாமல் பழகு என்றே சொல்லி பழக்கினால் என்ன என்று தோன்றுகிறது.

இன்றைய காலகட்டத்தில் தான் இவை நடைபெறுகிறது என்று சொல்ல முடியாது...! மனிதமனம் அன்றில் இருந்து இன்று வரை அப்படியேதான் இருக்கிறது, என்னவொன்று இப்போது திரைமறைவில் நடப்பவை (சிறிது தாமதம் என்றாலும்) வெளியே வந்துவிடுகிறது...! முன்பு சிறுகுழந்தைகள் தங்களுக்குள் புதைத்துக் கொண்டார்கள். இன்று சொல்ல தொடங்கி இருக்கிறார்கள்...

ஒரு சிலரின் இன்றைய குடும்ப வாழ்க்கை(தாம்பத்தியம்) புரியாத புதிராக இருப்பதற்கு அவர்களின்  சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் கொடுமைகள் ஒரு முக்கிய காரணம் என்று கருதுகிறேன்!! சொல்லபோனால் அடிக்கடி தேவையின்றி கோபபடுவது, சந்தேகம் கொள்வது, அடிப்பது, வசைமொழிகளை வாரி இறைப்பது, தாம்பத்திய உறவில் நாட்டமின்மை, உடலில் சிறிய பெரிய குறைபாடுகள் இப்படி பல...?!! இவை எல்லாம் ஏற்பட அதிக அளவில் கொடுமை அனுபவித்து இருக்கவேண்டும் என்பதில்லை சிறிய அளவிலான தவறான தொடுதல் கூட மனதில் காயத்தை உண்டுபண்ணி நிரந்தர மன ஊனத்தை குடும்ப வாழ்வில் ஏற்படுத்திவிடுகிறது.

இதுக்கு என்ன தீர்வு என்றால் பெற்றோர்கள் தான் மிக மிக கவனமாக தங்கள் குழந்தைகளை பார்த்து கொள்ளவேண்டும். வேறு வழியில்லை...?!!


பிள்ளைகளை பெற்றெடுப்பதும் , சீராட்டி வளர்ப்பதும் பெரிய காரியம் அல்ல அதைவிட இதுபோன்ற கயவர்களிடம் இருந்து நம் குழந்தைகளை காப்பாற்றுவது தான் இன்று பெற்றோருக்கு முன் இருக்கும் முக்கியமான பொறுப்பு !!

இது குறித்து ஏற்கனவே நான் எழுதிய இரண்டு பதிவுகள் 

குழந்தைகளின் மீதான பாலியல் ஈர்ப்பு ஏன் ?

ஒரு அலசல்...குழந்தைகளின்  மீதான பாலியல் ஈர்ப்பு !

பின் குறிப்பு 

இத்தகைய கொடுமை புரிகிறவர்கள் 'மனபிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டவர்களா' என்ற ஒரு வாதம் இருக்கிறது. இந்த பாதகத்தின் கொடுமைகள் பற்றி இன்னும் பலருக்கு தெரியவைக்க வேண்டும் என்பதால் இன்னும் இது குறித்த ஆய்வு கட்டுரைகள் , தகவல்கள் சேகரித்து விரிவாக தொடர்ந்து எழுதுகிறேன்.  நன்றி.



தகவல் - நன்றி வினவு தளம்                                                                                                                              
படங்கள் - நன்றி கூகுள் 

போலி உறவுகளின் ஈர்ப்பு...!? தாம்பத்தியம் - பாகம் 33

"இந்த ஆம்பளைங்க  ஏன்  இப்படி இருக்காங்க...????"  ரிங் ஆன செல்போனை ஆன் செய்து ஹலோ சொன்ன அடுத்த செகண்ட் இந்த கேள்வி காதை அறைந்தது? ஆ...