Monday, October 24

3:35 PM
41


தீபாவளி என்று சொல்லும் போதே மனசில மத்தாப்பு பூக்கும்...இப்பவே இப்படினா சின்ன வயசில எப்படி இருந்திருக்கும்...!! முக்கியமா பெரியவர்களுக்கான பண்டிகைனு சொல்வதை விட சின்ன குழந்தைகளின் பண்டிகைனு சொல்வது பொருத்தமாக இருக்கும்...

தீபாவளி அன்று...

சின்ன புள்ளையா இருந்தபோ, தீபாவளி வந்தா போதும் நமக்கு கவனிப்பு ரொம்ப பிரமாதமா இருக்கும்......! நமக்காகவே பார்த்து பார்த்து எல்லாம் தயார் பண்ணுவாங்க.....எங்க அம்மா தீபாவளிக்கு இரண்டுநாள் முன்னாடி எப்ப தூங்குவாங்க...? எப்ப எழுதிருப்பாங்க என்றே தெரியாது...எப்பவும் ஒரு நல்ல வாசனை சமையலறையில் இருந்து வந்துட்டே இருக்கும். அப்புறம் தி.நகர் போய் கடை கடையா ஏறி இறங்கி எங்களுக்கு பிடிச்ச மாடல்,கலர்ல தேடி வாங்கிய டிரஸ் தயாரா இருக்கும். புது டிரஸ், பட்டாஸ், அதிரசம், முறுக்கு, ஜாங்கிரி, பாதுசா...பாருங்க இப்ப பலகாரம் பேர் கூட மறந்து போச்சு...

மத்த நாள் அம்மா காலையில எழுப்பினா, 'என்னடா வாழ்க்கை இது'னு புலம்பிட்டே எழுந்திருகிறது, ஆனா தீபாவளி அன்னைக்கு மட்டும் சீக்கிரமாக  எழுந்து விடுவேன்(நைட் தூங்கினாத்தானே...?) அம்மா சொல்றாங்களேனு(!) வேகவேகமா எண்ணெய் தேச்சுகிறதும், குளிக்கிறதும் நமக்கே இது கொஞ்சம் ஓவராத்தான் இருக்கும்...ஆனா எப்ப புது டிரசை போட விடுவாங்கன்னு மனசு பூரா பரபரன்னு இருக்கும். பக்கத்து வீடு, எதிர்வீடு,  அடுத்த  தெருவில  இருக்கிற  வீடுன்னு எல்லா வீட்டுக்கும் பலகாரங்கள் கொடுக்க என்னை அனுப்புவாங்க...அது ஒரு தனி ஜாலியா இருக்கும்...! 

பலகாரம் கொடுக்கிற சாக்குல புது டிரசை காமிக்கிறதுக்கு தான் இந்த அலட்டல்,அவசரம் எல்லாம்...!!கொடுத்துட்டு வீட்டுக்கு திரும்பி வந்தா இங்கேயும் ஒரு பத்து பதினைந்து வீட்டு பலகாரங்கள் டிசைன் டிசைனா டைனிங் டேபிள் மேல நிறைஞ்சி இருக்கும்.

அப்புறம் அம்மா கொடுக்கிற இட்லி, கறி குழம்பு காம்பினேசனை ஒரு வெட்டு வெட்டிட்டு டிவி பார்த்து, தம்பிங்க போடுற வெடிகளை தூரமா இருந்து (பக்கத்துல போக பயம் இல்ல, பட்டாசுக்கு ஒரு மரியாதை? )ரசிக்கிறது என ஒரே ஸ்பெஷல் என்டர்டைன்மென்ட் தான். தம்பிங்க ரொம்ப ஆசை படுறாங்களேனு பொட்டு வெடியை வரிசையா தரையில வச்சு, நீநீநீளமான சுத்தியல் எடுத்து டக் டக்னு அழகா(?) வெடிப்பேன். அப்புறம் மத்தியானம் வாழையிலைல இடம் கொள்ளாம அம்மா வைக்கிற ஐட்டங்களை ஒவ்வொன்னா எடுத்து காலி பண்ணிட்டு மறுபடி தெருவில வெடி போடுற என் குட்டி பிரண்ட்ஸ் கூட ஜாலியா விளையாடி, அன்னைக்கு ரிலீசான படங்கள் பற்றிய கதை பேசி என்று அந்த நாள் மிக இனிதாக கழியும்...

நைட்ல நாம ராக்கெட் விடுறதை விட ஊர்ல மக்கள் விடுற ராக்கெட்டை ரசிக்கிறது செம சூப்பரா இருக்கும்...வானமே ஜெகஜோதியா ஜொலிக்கும். எந்த பக்கம் போறதை பார்க்கிறது ? எதை ரசிக்கிறது ? எதை விடுறது ? எல்லாத்தையும் பார்த்துவிடணும் என்று கால் வலிக்க சுத்தி, கழுத்து வலிக்க பார்த்து, கை வலிக்க தட்டி குதூகளிச்சு...அப்படியே எம்பி வானத்தை தொட்டா என்னனு மனசு குதிக்கும் அந்நேரம் புரிந்தது சுவர்க்கம் வேறு எங்கும் இல்ல என் வீட்டு மொட்டை மாடியில் !!

எல்லாம் அழகாய், நிறைவாய் முடிந்து இரவும் வந்து விழிகளை தூக்கம் தழுவகொள்ளும்...இந்த ஒரு நாளின் உற்சாகம் அடுத்து தொடர்ந்து வரும் நாட்களுக்கு ஒரு சந்தோஷ பூஸ்ட் !!

தீபாவளி இன்று...

அப்படி உற்சாகம் கொடுத்த தீபாவளி இன்று ஒரு சாதாரண நிகழ்வாக மாறி போனது...நம் குடும்பத்தினரிடம் கூட ஆர்வம் குறைந்து போய்விட்டது...பெண்களை பொறுத்தவரை பிற நாட்களை விட பண்டிகை நாட்களில் அதிகரிக்கும் வேலைகள் !! வேலை செல்லும் பெண்கள் என்றால் இன்னும் கஷ்டம் கிடைக்கும் ஒரு நாள் விடுமுறையும் தீபாவளி சமயத்தில் அதிகரிக்கும் வேலை பளுவால் இடுப்பொடிந்து போய்விடும். ஆண்களுக்கு தங்கள் பர்ஸ் காலியாகிவிடுமே என்ற யோசனையில்...!! 

போனஸ் கிடைத்தாலும் இப்போதுள்ள விலைவாசிக்கு எவ்வளவு பணம் வந்தாலும் போதாது. மட்டன் விலை கிலோ 400 தொடபோகிறது, சிக்கன் கிலோ 180  ஆகிவிடும்...சரி அசைவமே வேண்டாம் காய்கறி வாங்கலாம் என்றால் அங்கே அதுக்கு மேல் இருக்கிறது...என்ன செய்வான் சாமானிய மனிதன்...? பட்டாஸ் விலையும் 50% வரை போன வருடத்தை விட விலை ஏறி விட்டதாம். துணிமணிகளின் விலை பற்றி சொல்ல வேண்டியதில்லை, ரெடிமேட் ஜாஸ்தி விலை என்று துணியாக எடுத்து தைக்க கொடுத்தால் தையல் கூலி, துணி வாங்கிய விலையை விட அதிகமாக இருக்கிறது...புதுத்துணி, பட்டாஸ் இவை எல்லாம் இல்லாமல் தீபாவளி கொண்டாடவும் முடியாது...இதை எல்லாம் யோசிக்கிறப்போ ஏண்டா இந்த பண்டிகைகள் வருகிறது என்ற சலிப்பு ஏற்படுவது சகஜம். 

இனி வரும் காலங்களில் தீபாவளி போன்ற பண்டிகைகள் வசதி உள்ளவர்கள் மட்டுமே கொண்டாடும் படியாக மாறி போனாலும் ஆச்சர்யபடுறதுக்கு இல்லை...நடுத்தர குடும்பத்து தாய் தன் மகனை பார்த்து,'தீபாவளி கொண்டாட நாம எல்லாம் ஆசை படலாமா மகனே...? நீ நல்லா படிச்சு நிறைய சம்பாதி அப்ப கொண்டாடலாம் ?' என ஆறுதல் சொல்ல கூடும்...?!!

நம்ம சமுதாயம் கொஞ்சம் கொஞ்சமாக பழைய சந்தோசங்களை இழந்து வருவது போல் இருக்கிறது...என்னதான் சொல்லுங்க நம்ம குழந்தைகளை விட முந்தின தலைமுறையினர் நாம ரொம்ப கொடுத்து வச்சவங்க...!!

நம்ம பசங்களுக்கு பண்டிகைகளின் மேல் ஆர்வம் குறைந்துவிட்டது...ஏன்,எதற்காக கொண்டாடுறோம் என்றும் தெரிந்துகொள்ள அவர்கள் விரும்பவில்லை. அவர்களை பொறுத்தவரை இன்னொரு விடுமுறை நாள் அவ்வளவே...காலையில் பட்டாஸ் போடும்போது இருக்கிற ஆர்வம் கூட நேரம் ஆக ஆக குறைந்துவிடுகிறது...இன்றைய தலைமுறையினருக்கு தொலைக்காட்சியில், கம்ப்யூட்டர், மொபைல், பிளே ஸ்டேஷன் கேம்ஸில் கிடைக்கும் சந்தோசம் பண்டிகைகளை கொண்டாடுவதில் கிடைப்பதில்லையோ...??!  


பெற்றோர்களான என் போன்றோருக்கு   பண்டிகை கொண்டாடி ஆகணும், பசங்களையும் சந்தோசமாக வச்சுக்கணும் என்று கஷ்டப்பட்டு அங்கே இங்கே ஓடி மூச்சுவாங்க எல்லாம் செஞ்சு முடிக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிவிடுகிறது. 

ஒரு உண்மை என்னனா...  

நாம சின்ன புள்ளைகளா இருந்த வரைக்கும் தீபாவளி நல்லா இருந்தது...இப்ப நமக்கு புள்ளைங்க இருக்கிறபோது, தீபாவளியை அவ்வளவாக நம்மால் ரசிக்க இயலவில்லை...!!

உங்கள் மனதோடு கொஞ்சம்...

இந்த தீபாவளி சமயத்தில் நமக்காக எவ்வளவோ செலவு செய்கிறோம். அதில் சிறிய அளவு பணத்தில் உடை, இனிப்பு, வெடி ஏதோ ஒன்றை வாங்கி அருகில், ரோட்டில், தெருவில் பார்க்கும் ஏதோ ஒரு ஏழை சிறுவர், சிறுமிகளுக்கு கொடுங்கள்...பிறகு உங்களுக்கு கிடைக்கும் மனநிறைவை உணர்ந்து அனுபவித்து பாருங்கள் !!

நீங்கள் கொடுங்கள்...அப்போது அவர்கள் விழிகளில் தெரியும், உண்மையான தீபாவளி !! 


என் நேசத்துக்குரிய அனைத்து பதிவுலக உறவுகளுக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!படங்கள் - நன்றி கூகுள்

Tweet

41 comments:

 1. ஏழையின் விழியில் தீப ஒளியைக் காணலாம் !

  ReplyDelete
 2. ஒரு உண்மை என்னனா...

  நாம சின்ன புள்ளைகளா இருந்த வரைக்கும் தீபாவளி நல்லா இருந்தது...இப்ப நமக்கு புள்ளைங்க இருக்கிறபோது, தீபாவளியை அவ்வளவாக நம்மால் ரசிக்க இயலவில்லை...!!//

  ஹே ஹே ஹே ஹே கரிக்ட்டு....

  ReplyDelete
 3. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. மனங்கனிந்த வாழ்த்துக்கள்.

  விலைவாசிக்கு ஏற்ப பணவரவும் அதிகரித்திருக்கிறதே? தேவைகளைச் சுருக்கத் தெரியாதவரை விலைவாசியைக் குறைசொல்லிக் கொண்டிருப்போம்.

  கடைசிவரிகளின் செய்தி மனதைத் தொட்டது. கொடுப்பதில் கிடைக்கும் நிறைவு அனுபவித்தால் மட்டுமே தெரியும். உண்மை.

  ReplyDelete
 5. இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி.

  ReplyDelete
 6. //'தீபாவளி கொண்டாட நாம எல்லாம் ஆசை படலாமா மகனே...? நீ நல்லா படிச்சு நிறைய சம்பாதி அப்ப கொண்டாடலாம் ?' என ஆறுதல் சொல்ல கூடும்...?!!//

  அருமை

  ReplyDelete
 7. தீபாவளி நல் வாழ்த்துக்கள் கௌசல்யா உங்களுக்கும் உங்கள் அன்பு கணவருக்கும்

  ReplyDelete
 8. @@ சத்ரியன் said...

  //ஏழையின் விழியில் தீப ஒளியைக் காணலாம் !//

  உண்மை. நன்றிகள் சத்ரியன்.

  ReplyDelete
 9. @@ MANO நாஞ்சில் மனோ...

  //ஹே ஹே ஹே ஹே கரிக்ட்டு//

  உண்மையை உரக்க சொல்லிடீங்க...

  நன்றி மனோ.

  ReplyDelete
 10. @@ அப்பாதுரை said...

  //விலைவாசிக்கு ஏற்ப பணவரவும் அதிகரித்திருக்கிறதே?//

  ஆனால் ஒரு சாதாரண கிராமத்து விவசாயியின் வருமானத்தை நாம் அதிகம் என்று சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோம்...இன்னும் இந்த விலைவாசி, பணவரவு இரண்டையும் ஒற்றுமை படுத்தி நிறைய சொல்லலாம்.

  இயன்றால் இதை பற்றி ஒரு பதிவு எழுத முயற்சிக்கிறேன்.(எப்போதும் ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டு ஒரு பதிவு எழுதுற அளவு யோசிக்க வைக்கிறீங்களே சகோ...!!) :))

  //தேவைகளைச் சுருக்கத் தெரியாதவரை விலைவாசியைக் குறைசொல்லிக் கொண்டிருப்போம். //

  மனிதனின் ஆசைகள் அதிகரித்துவிட்டது. மற்றவர்களை பார்த்து வாழ ஆசைபடுபவன் தன் வரவு என்ன தேவை என்ன என்று யோசிப்பதே இல்லை. (வேற வழியில்லை சகோ,இதை பற்றி பதிவு எழுதியே ஆகவேண்டும்)

  வாழ்த்துகள் + நன்றிகள்

  ReplyDelete
 11. @@ மகேந்திரன்...

  உங்களுக்கும் வாழ்த்துக்கள் மகேந்திரன்

  ReplyDelete
 12. @@ suryajeeva...

  நன்றி சூர்யா

  ReplyDelete
 13. @@ நாய்க்குட்டி மனசு...

  நன்றிகள் அக்கா. கண்டிப்பா என்னவரிடமும் உங்கள் வாழ்த்தை சொல்லிவிடுகிறேன்.

  ReplyDelete
 14. Interesting Post.Dear Blogger Friend,Wish U a Warm and Happy Diwali.Let the Day of Lights be celebrated with taste-filled delights,Safe and Delicious Memorable Moments - Regards, Christy Gerald

  ReplyDelete
 15. குழந்தை பருவத்திற்கே சில நிமிடங்கள் அழைத்துச் சென்றுவிட்டீர்கள் ....

  ReplyDelete
 16. மிக நல்ல பகிர்வு.தீபாவளி வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. தீபாவளி மகிழ்ச்சியை மலரும் நினைவுகளா பகிர்ந்திருக்கிங்க... வாழ்த்துகள்

  ReplyDelete
 18. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 19. @@ MyKitchen Flavors-BonAppetit!...

  thank u.  @@ koodal bala...

  நன்றி பாலா  @@ அம்பாளடியாள்...

  நன்றி.  @@ asiya omar...

  நன்றி தோழி.
  @@ தமிழ்வாசி - Prakash...

  நன்றி பிரகாஷ்
  @@ Chitra ...

  நன்றி சித்ரா.

  ReplyDelete
 20. வாழ்வில் வயிற்றுக்கே வழியில்லாமல் திண்டாடுபவர்களை கண்டுகொள்ளாமல் நிறைய நாட்களை கொண்டாடுகிறோம்.... கொஞ்சமாவது மனிதாபிமானத்தை உணர்ந்தால் மனம்மகிழ்ச்சி அடையும் என்பது முற்றிலும் உண்மையே... !

  அதை அழகாக எடுத்துரைத்துள்ளீர்கள்...பகிர்வுக்கு நன்றி சகோ!
  தங்களுக்கும், தங்களை போன்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சந்தோசமும் வளமும் பெருகட்டும்...

  ReplyDelete
 21. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
 22. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...

  ReplyDelete
 23. தீபாவளி சந்தோசம் ஒருநாள் மட்டும் என்றாகிவிட்டது. எல்லோரும் இப்ப ரொம்பவே மாறிட்ட்டாங்க. என்ன செய்ய.. ரொம்ப இயல்பான கட்டுரை; அருமையா எழுதியிருக்கீங்க கவுசல்யா.

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த தீபஒளி திருநாள் வாழ்த்துகள். சந்தோசமும் மகிழ்ச்சியும் பெருகட்டும்.

  ReplyDelete
 24. அன்பான இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

  நாம் சிறு குழந்தைகளாக இருந்த போது நமக்கு தீபாவளி தந்த மகிழ்ச்சி இப்போது சுத்தமாக நமக்கும் இல்லை நம் குழந்தைகளுக்கும் இல்லை தான்.

  ஏழை எளியவர்களுக்குக் கொடுப்பதில் தான் உண்மையான தீபாவளியின் மகிழ்ச்சியை உணர முடியும் என்ற உண்மையைத் தாங்கள் கூறியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 25. @@ மாய உலகம் Disse:

  //வாழ்வில் வயிற்றுக்கே வழியில்லாமல் திண்டாடுபவர்களை கண்டுகொள்ளாமல் நிறைய நாட்களை கொண்டாடுகிறோம்.... கொஞ்சமாவது மனிதாபிமானத்தை உணர்ந்தால் மனம்மகிழ்ச்சி அடையும் என்பது முற்றிலும் உண்மையே... !//

  புரிதலான அருமையான கருத்துக்கும்,உணர்விற்கும் நன்றி ராஜேஷ்.

  ReplyDelete
 26. @@ காந்தி பனங்கூர்...

  உங்களுக்கும் வாழ்த்துக்கள். நன்றி

  ReplyDelete
 27. @@ ரெவெரி...

  நன்றிகள்

  ReplyDelete
 28. @@ Starjan ( ஸ்டார்ஜன் ) said...

  //தீபாவளி சந்தோசம் ஒருநாள் மட்டும் என்றாகிவிட்டது. எல்லோரும் இப்ப ரொம்பவே மாறிட்ட்டாங்க. //

  நிறைவான மகிழ்ச்சி என்பது பிறருக்கு(உதவி), கொடுத்து பெறுவதே !

  நன்றி ஸ்டார்ஜன்

  ReplyDelete
 29. @@ வை.கோபாலகிருஷ்ணன் said...


  //நாம் சிறு குழந்தைகளாக இருந்த போது நமக்கு தீபாவளி தந்த மகிழ்ச்சி இப்போது சுத்தமாக நமக்கும் இல்லை நம் குழந்தைகளுக்கும் இல்லை தான்.//

  குழந்தைகளின் மகிழ்ச்சி இப்போது நாம் கொண்டாடும் பண்டிகையில் குறைந்து விட்டது. அவர்களின் உலகம் தனி என்றாகி விட்டது.

  உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 30. நாங்க ஏதோ வந்தமா சொல்லிட்டுப் போனமானு இருக்குறோம்.. யோசிக்கிறது நீங்கதானே?

  ReplyDelete
 31. @@ அப்பாதுரை said...

  //நாங்க ஏதோ வந்தமா சொல்லிட்டுப் போனமானு இருக்குறோம்..//

  ஏதோ என்கிற மாதிரி நீங்க சொல்லமாட்டீங்க என்பது எனக்கு நல்லா தெரியும் சகோ.

  //யோசிக்கிறது நீங்கதானே?//

  யோசிக்கவைக்கிறது நீங்கதானே ?!!

  மகிழ்கிறேன் :))

  ReplyDelete
 32. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 33. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 34. ஹூம்!அதெல்லாம் அந்தக்காலம். இப்பவெல்லாம்,அந்தக்கோலாகல்ம் மிஸ்ஸிங்க்!

  ReplyDelete
 35. நாம வளந்துட்டோம்ங்க.. அதுனால்தான் இப்பத்திய தீவாளி இனிக்கலையோ என்னவோ :-))

  ReplyDelete
 36. நீங்க கடைசியா சொன்னது உண்மை... சின்ன குழந்தைகள்தான் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகின்றன. நாம் ஏதோ எதிர்பார்ப்பிலேயே இருந்துவிடுகிறோம்.

  ReplyDelete
 37. இந்த தீபாவளி சமயத்தில் நமக்காக எவ்வளவோ செலவு செய்கிறோம். அதில் சிறிய அளவு பணத்தில் உடை, இனிப்பு, வெடி ஏதோ ஒன்றை வாங்கி அருகில், ரோட்டில், தெருவில் பார்க்கும் ஏதோ ஒரு ஏழை சிறுவர், சிறுமிகளுக்கு கொடுங்கள்...பிறகு உங்களுக்கு கிடைக்கும் மனநிறைவை உணர்ந்து அனுபவித்து பாருங்கள் !!

  உண்மைதான் சகோ உங்கள் மனதில் இருந்து வெளிப்பட்ட இந்த
  உணர்வை நான் மிகவும் பாராட்டுகின்றேன் .இல்லாதவர்களின்
  சிரிப்பில் இறைவனையும் காண முடியும் .அதற்கு நாங்கள்
  உதவும்போது மன நிறைவும் கூடவே வரும் என்பதில் துளியும்
  ஐயமில்லை .வாழ்த்துக்கள் உங்கள் வீடுகளிலும் இன்பம் தங்க .
  மிக்க நன்றி பகிர்வுக்கு ....

  ReplyDelete
 38. @@ ராமலக்ஷ்மி...

  நன்றிகள் தோழி.
  @@ சே.குமார்...

  நன்றி குமார்.  @@ சென்னை பித்தன்...

  நன்றிங்க.  @@ அமைதிச்சாரல்...

  நன்றி

  ReplyDelete
 39. @@ விச்சு...

  வருகைக்கு நன்றிங்க.  @@ அம்பாளடியாள்...

  மிக்க நன்றி தோழி.

  ReplyDelete
 40. நல்லா கொண்டாடியிருக்கீங்க தீபாவளியை!

  ReplyDelete
 41. நட்ட்சத்திரா வாழ்த்ட்துகளும்ம்
  இனிய தீபாவளீ நல்
  வாழ்த்துகளூம்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...