வியாழன், ஏப்ரல் 19

துப்பு(பி) கெட்ட மனிதர்களே...!!

ஆறு மாதத்தில் மும்பை மாநகராட்சி பெற்ற வருவாய் 2.24 கோடி ரூபாய் !!எப்படி இந்த வருமானம் கிடைத்தது என தெரிந்தால் மற்ற மாநகராட்சியும் முயற்சி செய்யலாம். ஆமாம் எப்படி கிடைத்தது ?! எல்லாம் மும்பை மக்களின் கைங்கரியம் தான், இல்லை இல்லை வாய்(?) சாமார்த்தியம் தான்...!!? விசயம் ஒன்னும் பெரிசா இல்ல சின்னது தான், முடிஞ்ச வரை கண்ட இடத்துல துப்பி வைக்கணும், இதை மக்கள் ஒழுங்கா கடை பிடிச்சதால மாநகராட்சிக்கு வருமானம்...!! 

எந்த அளவு துப்பினாங்களோ அந்த அளவுக்கு வருமானம்தான். அப்படி மாஞ்சி மாஞ்சி துப்பிய மக்களின்  எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா 1 லட்சத்து 10 ஆயிரம் !! பொது இடத்தில் எச்சில் துப்பியதற்காக தலா 200 அபராதம் வாங்கி சேர்த்த பணம் ! இந்த தப்புக்காக இந்தளவு வருமானம் பார்க்க முடியுங்கிறது மக்களாகிய நமக்கு பெருமையோ பெருமை தான். நாடு பொருளாதாரத்துல முன்னேறனும்னா எவ்வளவு வேண்டுமானாலும் துப்புங்க...துப்பிகிட்டே இருங்க...

ஆனா விளைவு...??! தொடர்ந்து படிங்க...

தேசிய பழக்கம் ?!


பாக்கு, பான் பீடா, பான் மசாலா, புகையிலை, வெற்றிலை என எதையாவது மென்றுகொண்டே இருப்பது நம்மவர்களின் பழக்கமாகி விட்டது. இவ்வாறு மெல்லுவதால் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகம்...அசை போடுறதோட மட்டுமில்லாம போற வர்ற இடத்திலெல்லாம் துப்பி அசிங்கப்படுத்துகிறார்கள். கூடவே எச்சில் மூலம் பரவும் கிருமிகள் காற்றில் கலந்து காச நோயை ஏற்படுத்துகிறது...??!

மும்பையில் மட்டும் கடந்த வருடம் 9,168 பேர் இருமல் மற்றும் எச்சில் மூலம்  
பரவும் காச நோயால் பலியாகி உள்ளனர். இதனால்தான் பொது இடங்களில் எச்சில் துப்ப அங்கு தடை விதிக்கப்பட்டது. அபராதம் 200 ரூபாய் பிடிபட்டவர்கள் 6 மாதத்தில் ஒரு லட்சம் பேர் என்றால் பல லட்சம் பேர் தப்பி இருப்பார்கள்...!? யார் யார் எங்கே துப்புகிறார்கள் என உற்று பார்த்துக்கொண்டே இருக்கும் மாநகராட்சி ஊழியர்கள் நிலை பரிதாபம். 'உன் அப்பன் போட்ட ரோடா , நான் அப்படிதான் துப்புவேன்' என விதண்டாவாதம் பண்ணும் இந்திய குடிமகன்களையும் சமாளித்தாக வேண்டும்.


மாநகராட்சிதான் இதில் கவனம் செலுத்தணும் என்றில்லை.அவரவருக்கு சுயகட்டுப்பாடு, ஒழுக்கம் அவசியம். அவ்வாறு துப்புவர்களில் படித்தவர்கள், படிக்காதவர்கள் , ஏழை, பணக்காரன் என்ற எந்த பேதமும் இல்லை...மிக ஒற்றுமையாக எல்லோரும் சேர்ந்தே துப்பி கெடுக்கிறார்கள்.

'பொது இடத்தில் துப்புவது இந்தியர்களின் குணாதிசயம்' சொல்வது யாரோ சாதாரண நபர் அல்ல, மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகளே !!

காச நோய் 

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 8 லட்சம் பேர் காச நோயால் பாதிக்கபடுகின்றனர். ஒரு நாளைக்கு 1000 பேரும்  ஆண்டுதோறும் 4 லட்சம் பேரும் இறக்கின்றனர். கடந்த மாதம் மார்ச் 24 ஆம் தேதி தேசிய உலக காசநோய் தினம் கொண்டாடினார்கள்...இதை கொண்டாட்டம் என்று சொல்லகூடாது 'காசநோயால் இறந்தவர்களை நினைவுகூர்ந்தார்கள்' என்பதே சரி. கொடிய நோயான இது விரைவில் பரவ கூடியது, முக்கியமாக காற்றின் மூலமாக...! காச நோய் பீடித்தவர்களின்  தும்மல், எச்சி, இருமல் மூலமாக பிறருக்கும் தொற்றி விடுகிறது.    

அறிகுறி 

இந்த  நோய் உள்ளவர்களுக்கு முதலில் பசியின்மை தோன்றும், பின் எடை குறைதல் மூச்சு திணறுதல், தொடர் இருமல், சளியுடன் ரத்தம் போன்றவை ஏற்படும்.    

யாருக்கெல்லாம் அதிக ஆபத்து?

80 % நுரையீரலை பாதிக்கிறது. இது போக எலும்பு, மூளை மற்றும் வயிறு போன்ற இடங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எய்ட்ஸ், சர்க்கரை நோய், கல்லீரல் நுரையீரல் பாதிக்கப்பட்டவர்கள், எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் போன்றவர்களைத் தாக்கிறது.



முக்கியமாக, ஒவ்வொரு நோயாளியும் 10 லிருந்து 15 பேருக்கு பரப்பி விடுகிறார்கள்...!!?

ஒருவருக்கு தொடர்ந்து இருமல் இருந்தால் உடனடியாக சளியை பரிசோதனைக்கு கொடுக்க வேண்டும். அதுவும் காலையில் தூங்கி எழுந்ததும் முதலில் வரும் சளியை கொடுத்தால் தான் காசநோய் இருக்கிறதா இல்லையா என கண்டுபிடிக்க முடியும். ஆரம்பத்தில் கண்டுபிடித்துவிட்டால் 6 மாதத்தில் முழுமையாக குணப்படுத்தலாம்.

காசநோய்க்கான மாத்திரைகள் அனைத்தும் அரசு மருத்துமனைகளில் இலவசமாக கொடுக்கப்படுகிறது. காச நோய் பாதிக்கப் பட்ட பெண்களை வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கிற கொடுமையும் நடக்கிறது. சாதாரணமாக எச்சில் துப்புவதின் மூலம் ஆண், பெண், குழந்தைகள் என்று பாகுபாடு இல்லாமல் பரவகூடிய இந்த நோயின் மீது கவனம் கொள்வது மிக அவசியம். 

தயவு செய்து பொது இடங்களில் எச்சில் துப்புவதை தவிருங்கள்...சுத்தம் சுகாதாரம் பற்றி சிறிதாவது அக்கறை கொள்ளுங்கள்...


வாழ பிறந்தவர்கள் நாம், நோயினால் வாட பிறந்தவர்கள் அல்ல...!! 


நோய் வரும் முன் காப்போம்...நோயற்ற வாழ்க்கை வாழ்வோம்...கண்ட இடத்தில் எச்சில் துப்புவதை நிறுத்துவோம்...குறைந்தபட்சம் நிறுத்த முயற்சியாவது செய்வோம்...!!

                                                                   * * * * *


படங்கள்+தகவல் - நன்றி கூகுள் 

புதன், ஏப்ரல் 11

'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...?! தாம்பத்தியம் - 27

முன் குறிப்பு

இதற்கு முந்தைய பாகம் வெளிவந்து 6 மாதம் ஆகிவிட்டது...!! பிற பதிவுகளை விட தாம்பத்தியம் தொடருக்கு அதிக காலம் எடுக்கிறேன் என்றாலும் இனி தொடர்ந்து எழுதுகிறேன். நம்புங்க !! 'ஏன் தாமதம்' என கேட்டு வரும் மெயில்கள் இனி குறையணும்...திட்டு வாங்கி முடியல :) உங்களின் பொறுமைக்கு என் நன்றிகள் ! இந்த பதிவைப்  படித்து கருத்துக்களைக்  கூறுங்கள்...அதன் மூலம் இன்னொரு பதிவுக்கு மேட்டர் கிடைக்கட்டும்... :)

                                                         ************


ஏன் அவசியம் ?!

'செக்ஸ்' பற்றி வெளிப்படையாகப்  பேசுவதும், விவாதிப்பதும் மிகத்  தவறான ஒன்றாகப்  பார்க்கபடுகிறது,  நமது கலாச்சாரத்தில் இதற்கு நாம் கொடுக்கும் இடம் கிட்டத்தட்ட கடைசி, அதே நேரம் உலகிற்கு காமசூத்திரம் கொடுத்ததும் நாம் தான் !! கஜூராகோ கோவில் சிற்பங்களாக கலை வடிவிலும் எழுத்து வடிவிலும் பேசிய நாம்தான், இதனை குழந்தைப்  பெறுவதற்காகவும், அற்ப சந்தோசத்துக்காக என்று ஒதுக்கியே வைத்து விட்டோம்.  இதன் மகத்துவம் புரிந்த முன்னோர்கள் சொல்வதை ஏற்காத நாம் சமீபத்திய அறிவியலாளர்கள் இதன் அவசியம் குறித்துச்  சொல்லும் போது அப்படியா என்று புருவத்தை உயர்த்துகிறோம். மன இறுக்கம், மனஅழுத்தம் குறைந்து ஆரோக்கியத்தை இதன் மூலம் அதிகரிக்கலாம் என்பது எவ்வளவு அருமை!

உடல் எடை போட்டுவிட்டது, சுகர், பிரசர், அப்படி இப்படின்னு பிரச்சனைகளில் இருந்து தம்பதிகள் நிறைவான உடலுறவின் மூலம் தள்ளி இருக்கலாம் என்பது ஆச்சர்யம் தானே ?! மன இறுக்கம் தளர்ந்தாலே உடல் தன்னால் அழகு பெற்றுவிடும்! சிலர் கேட்கலாம், ஒரு சிலர் கண்டபடி இதே நினைப்பாகவே அப்டி இப்டி அலையுறாங்களே அவங்க ரொம்பவே நல்லா இருப்பாங்களே என்று...?!! தன் துணையை தவிர பிறருடனான உறவுகளில் சுகம்,சந்தோசம் இருக்கலாம், ஆனால் மன இறுக்கம் குறைய நிச்சயம் வாய்ப்பேயில்லை மாறாக தவறுச்  செய்கிறோம்(!) என்கிற குற்ற உணர்ச்சியால் மன அழுத்தம் அதிகரிக்கவே செய்யும் !! இந்த சப்ஜெக்ட் இந்த பதிவுக்கு தேவையில்லை என்பதால் இப்போதைக்கு இவ்வளவு போதும் :)

பரிணாம வளர்ச்சி பற்றி சொல்லிய டார்வின்... 

"மூளை, மூட்டுகள், ஜனன உறுப்புகள் உட்பட எந்த ஒரு உறுப்பையும் பயன்படுத்தாமல் விட்டுவிட்டால் , அந்த உறுப்பானது நாளடைவில் அதன் செயல் திறனை இழப்பதோடு மட்டுமின்றி தன்னளவில் சுருங்கி இறுதியில் மறைந்தேப் போகும்"

உறுப்புகளுக்கு ஓரளவு மிதமான இயக்கம் இருந்தாக வேண்டியது அவசியம். முற்றிலும் தவிர்த்தால் உடல் ரீதியாக, மன ரீதியாகப்  பாதிப்புகள் வர வாய்ப்புகள் அதிகம். இதயத்தை மாரடைப்பு ஆபத்தில்  இருந்து பாதுகாப்பளிக்கிறது. வெளிநாடுகளில் இன்னும் ஆராய்ச்சிப்  பண்ணிக் கொண்டே இருக்கிறார்கள், இதன் பயன்கள் வேறு என்னவெல்லாம் இருக்கிறது என்று !!

ஆனால் இதைப்  பற்றி எல்லாம் அக்கறையில்லாமல் ஏனோ தானோவென சம்பிரதாயத்துக்காக சலிப்பாகச்  சென்றுக்  கொண்டிருக்கிறது இன்றைய இயந்திர உலகில் தம்பதியரின் தனிப்பட்ட அந்தரங்கம்.

பணம் , படிப்பு, அந்தஸ்து, கௌரவம் இவை போன்றவற்றுக்கு தற்போது முக்கியத்துவம் கொடுக்கும் இதே காலத்தில் தான் விவாகரத்துகளும் பெருகி வருகின்றன. விவகாரத்துக்  கோரும் தம்பதியரிடம் ஆழமாக விசாரித்து பார்த்தால் ஒன்று புரியும்,அவர்களுக்குள் நடக்கும் பல பிரச்சனைகளுக்கும் அடிப்படையாக, மூலகாரணமாக இருப்பது செக்ஸ் என்பது...!!

பெண்களின் மனோநிலை

உடலுறவைப்  பொறுத்தவரை தனது விருப்பத்தை நேரடியாக வெளிப்படுத்த மாட்டாள். ஒரு சில பெண்கள் சுற்றி வளைத்துப்  பேசிக்  குறிப்பால் உணர்த்தலாம்...கேலியும் கிண்டலுமாக வெளியிடலாம். அவரவர் கணவனின் எண்ணவோட்டங்களை பொறுத்து இது மாறுபடும். பொதுவாக நம் சமூகத்தில் ஆண்களுக்கு பெண்கள் செக்ஸ் பற்றி பேசினால் அவள் அனுபவரீதியாக எல்லாம் அறிந்தவளாக இருப்பாள் என்கிற எண்ணம் உண்டு.ஆண்கள் என்று இல்லை, பெண்ணே மற்றொரு பெண் இவ்விசயத்தை விவரித்துப்  பேசினால் அப்பெண் அனுபவப்பட்டவள் என்று முடிவு பண்ணிவிடுகிறாள்.  இதற்கு அஞ்சியே பல பெண்கள் உறவு குறித்து சந்தேகம் எதுவும் இருப்பினும் வாய் திறக்க மறுக்கிறார்கள். 

இந்த விஷயத்தைப்  பொறுத்தவரை கற்றுக்கொடுக்கும் இடத்தில் இருப்பதைத்  தான் ஆண் விரும்புகிறான். (எந்த காலமாக இருந்தாலும் !)

எனவே பொதுவாக பெண் இவ்விசயம் குறித்து அதிகம் வெளிப்படையாக பேசுவதையும், ஆணுக்கு முன்னரே செயல்படுவதையும் தவிர்த்தல் நல்லதே. ஒரு சிலர் தனது மனைவி செக்ஸ் பற்றி வெளிப்படையாக பேசுவதையும், விவாதிப்பதையும் விரும்புவார்கள். கணவன் மனமறிந்து பேசுவது முக்கியம்.

ஆண்களின் மனநிலை 




உறவை பற்றிய எண்ணம் தோன்றியதும் மனைவி உடனே உடன்பட்டே ஆகவேண்டும் என்பதே பெரும்பாலான கணவர்களின் எதிர்பார்ப்பு.அதற்கு முன் மனைவியின் உடலறிந்து, மனமறிந்து என்பதெல்லாம் இரண்டாம் பட்சமாகி விடுகிறது. பெண்களுக்கு மெதுவாகவே  உடல் கிளர்ந்தெழ தொடங்கும், ஆனால் ஆண் இதனைக்  கவனிப்பது இல்லை. தான் இயங்கி திருப்தி  அடைந்தால் போதும் பெண்ணுக்கு என்று தனியாக திருப்தி அடைதல் இல்லை   என முடிவு செய்துக்  கொள்கிறார்கள், அவளது உணர்வுகளுக்கும் வடிகால் தேவை என்பதை மறந்து...! 

பத்து வருடங்கள் கழிந்தப்  பின் 

தாம்பத்தியத்தில் அந்தரங்க உறவு என்பது மிக முக்கியம் என்றாலும் திருமணம் முடிந்த பத்து ஆண்டுகள் கழிந்த தம்பதியினரின் இது குறித்த விருப்பங்களில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆணின் விருப்பம் ஒரு விதமாகவும் பெண்ணின் விருப்பம் வேறு ஒன்றாகவும் இருக்கின்றன.

உதாரணமாக 

திருமணம் முடிந்த புதிதில் நகைச்சுவையாக பேசக்கூடிய கணவனை மிக விரும்புவாள்  மனைவி...ஆனால் பத்து வருடம் கழிந்த பின் அதே மனைவி கணவனின் நகைச்சுவை பேச்சை அவ்வளவாக ரசிப்பதில்லை. ஒரு காரணம் என்னவென்றால், நம்மிடம் பேசுவதைப்  போலத்தானே பிற பெண்களிடமும் பேசுவார், அது அவ்வளவு நல்லதில்லையே என்ற மனோபாவம் ஒரு காரணம், மற்றொன்று 'இருக்கிற சூழ்நிலைத்  தெரியாம அது என்ன எதுக்கெடுத்தாலும் தத்துபித்துனு உளறிட்டு ?!!' என்பது...

இது போல் முதல் பத்து வருடங்களில் பிடித்தவை எல்லாம், அடுத்து தொடரும் காலங்களில் பிடிக்காமல் வெறுப்பிற்கு இடமாகி விடுகின்றன...! அது போன்றே அந்தரங்க விசயத்திலும் மாற்றம் ஏற்படுகிறது, மற்றவை அவ்வளவாக பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது, ஆனால் உடலுறவு விஷயம் அப்படி அல்ல...இதில் தவறினால் சமயங்களில் குடும்பத்தில் மிகப்  பெரிய பாதிப்புகளையும், பிரிவுகளையும் ஏற்படுத்திவிடக் கூடும்.

அப்படி என்ன இதில் இருக்கிறது ? என்ன என்ன பாதிப்பு ஏற்படும் ? இது என்ன அவ்வளவு முக்கியமா ? இது போன்ற கேள்விகளுக்கான பதில்களைத்  தொடர்ந்துப்  பார்க்கலாம்.....

பெண்களின் விருப்பமின்மை ?! 

பகலில் மனைவிடம் எந்தவித அன்னியோனியமும்  இல்லாமல் இரவில்  மட்டும் தேடும் கணவனை எந்த மனைவியும் விரும்புவதில்லை. ஒருவேளை உறவிற்கு உடன்பட்டாலும் அதில் எவ்வித உணர்ச்சியும் இருக்காது 'என்னவும் செய்துவிட்டுப்  போ' என்கிற விரக்தி மட்டுமே இருக்கும்...இதே நிலை தொடர்ந்து நீடித்தால் உடல் உறுப்புகளில் கடினத்தன்மையும், வலியும் ஏற்படக் கூடும்.

பொதுவாக முப்பத்தைந்து அதற்கு மேல் வயதுள்ள பெண்களில் சிலருக்கு  உறவின் மேல் விருப்பமின்மை தோன்றும்...இதை சில நடவடிக்கைகளை வைத்து கணவர்கள் புரிந்துக் கொள்ளலாம்...

* இவர்களில் பலரும் கருத்தடை சாதனம் பொருத்தியோ, குடும்பக்  கட்டுப்பாடு ஆபரேஷன் செய்தவர்களாகவே இருப்பார்கள். இருந்தும் ஆணுறை அணியச்  செய்து உறவுக்  கொள்ளச் சொல்வார்கள்.

* உறுப்பில் வலி இல்லை என்றாலும் வலிக்கிறது, எரிச்சலாக இருக்கிறது என்பார்கள்.

* தலை வலி, வயிறு வலி போன்ற வெளியேத்  தெரியாத காரணங்கள்.

* தூக்கம் வருகிறது, பசங்க தூங்கல, டயர்டா இருக்கு...

நேரடியாக உறவு பிடிக்கவில்லை என்றுச்  சொல்லத்  தயங்குவார்கள். அப்படி சொல்லிவிட்டால் கணவன் தன்னை வெறுத்துவிடுவானோ என்கிற அச்சம் ஒரு காரணம் !!

கணவனின் புரிதலின்மை 

மனைவி உறவின் மேல் விருப்பம் இல்லை என்பது போல் காட்டிக்கொண்டால் அது போல் கோபம் வேறு எதிலும் ஒரு ஆணிற்கும் வராது. சாதாரண நேரத்தில் மனைவி மீது அன்பை வாரி பொழிபவர்களும், உறவுக்கு 'ரெட் சிக்னல்' என்றதும் எரிமலையாய் பொங்கிவிடுவார்கள்...எதற்காக மறுக்கிறாள், என்ன காரணம் என்று நிதானித்து யோசிக்கக்  கூடிய மனநிலை ஆண்களுக்கு அப்போது இருப்பதில்லை. உடனே நடந்தாகவேண்டும் என்று உறவைப்  பற்றிய ஒரு உந்துதல் மட்டுமே அவர்கள் மனதில் இருக்கும்.

உறவு நடக்காத பட்சத்தில் மனைவி மீது எரிந்து விழுவது, சம்பந்தம் இல்லாமல் திட்டுவது, ஒரு சிலர் ஒரு நிலையை தாண்டி போய் ' உனக்கு வேறு யாருடனோ தொடர்பு இருக்கிறது, அதுதான் என்னை நிராகரிக்கிற' என்று சிறிதும் யோசிக்காமல் நடத்தையில் சேறை வாரி இறைப்பார்கள்.

இதற்கு பிறகு மனைவிக்கு, கணவனின் மேல் இருக்கிற அன்பு மொத்தமாகக்  குறைந்து போகும் என்பதைத்  தவிர வேறு எந்த நல்ல விசயமும் நடக்க போவதில்லை.

உடல் உறவை தவிர்த்தல் என்பது இப்படி சந்தேகத்தில் வந்து முடிந்துவிடக்  கூடிய ஆபத்தும் இருக்கிறது !!?

இத்தகைய விஷயத்தை வெகு சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் கவனமாக கையாளுவது கணவன் மனைவி இருவருக்கும் நல்லது. 

ஒரு உண்மை தெரியுமா??

படுக்கை அறையில் ஆணை விட பெண்ணே அதிக இன்பத்தை பெறுகிறாள்...உடலுறவின் மூலம் அவர்களது ஈஸ்ட்ரோஜன் அதிகரிப்பதால் பெண், உறவை அதிகம் விரும்பவேச்  செய்வாள்...அப்படிப்பட்ட பெண் உறவை தவிர்க்கிறாள் என்றால், எதனால் என்றுப்  புரிந்துக்  கொள்வது ஒரு கணவனின் கடமை...அந்த காரணத்தை அறிந்து சரி செய்துக்  கொள்வது தொடரும் குடும்ப வாழ்க்கைக்கு மிக மிக முக்கியம்.

தொடர்ந்து பேசுகிறேன்...

உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா 

                                                                 * * * * *

படங்கள் - நன்றி கூகுள்

வியாழன், ஏப்ரல் 5

யார் இந்த மாமனிதர் ?! 'இந்தியாவின் பெருமை' ஜாதவ் பயேங் !!

தனி நபர் வளர்த்த காடு

உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது...எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துகொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?!!

கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்...!!

                                                           
                                              மாமனிதருக்கு...என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் !!


யார் இவர் ?

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை 'முலாய்' என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வர பட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால் தான் இந்நிலை என புரிந்து கொண்டபோது இவரது வயது 16 ! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில்  மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம்,முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்...ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார் .

1980 ஆம் ஆண்டில் அசாமில் உள்ள  ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் 'சமூககாடுகள் வளர்ப்பு' திட்டத்தின் படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும்  இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது, பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட இவர் மட்டும் மரகன்றுகளை பராமரித்து கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதனை அப்படியே மறந்துவிட்டனர், அந்த பக்கம் யாரும் எட்டி கூட பார்க்கவில்லை...!

மண்ணை வளப்படுத்த புது யுக்தி - எறும்பு 

200 ஹெக்டேர் பரப்பில் மூங்கில் மட்டும் வளர்த்து வந்த இவர் பிற மரங்களையும் வளர்க்க முயற்சி எடுத்துள்ளார்...ஆனால் மணல் அதற்கு ஏற்றதாக இல்லை என்பதால் தனது கிராமத்தில் இருந்து 'சிவப்பு எறும்பு'களை சேகரித்து எடுத்து வந்து மணல் திட்டில் விட்டு இருக்கிறார். இந்த எறும்புகள் இவரை பலமாக தாக்கியும் மனம் தளராமல் இருந்துள்ளார். இந்த எறும்புகள் மண்ணின் பண்பை நல்லதாக மாற்றக்கூடியவை என்கிறார்...வெகு விரையில் மண்  பயன்பாட்டுக்கு மாறியது. பிறகு அந்த இடம் முழுவதிலும் விதைகளை ஊன்றியும், பிற மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வந்துள்ளார்...இப்படி ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, 30 வருடங்கள் !!

                                        இவர்களுக்கு வானம் தொட்டுவிடும் தூரம் தானோ...?!!
      
இப்படி 2008 வருடம் வரை உலகில் யாருக்கும் தெரியாமல் ஒரு காடு பரப்பளவிலும், உயரத்திலும், அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது.

2008 ஆம் ஆண்டு தற்செயலாக 115 யானைகள் இந்த காட்டு பகுதிக்குள் புகுந்துவிட்டது. அதனை துரத்தி சென்ற வனத்துறையினர் இந்த காட்டை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருகின்றனர். அரசு பதிவேட்டில் இடம் பெறாத இந்த காடு இங்கே எப்படி சாத்தியம் என் வியந்திருக்கின்றனர். முலாய் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்து விஷயம் முழுவதும் அறிந்து மிக மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.

காடு வளர்ப்புக்காக வனத்துறையோ மாநில அரசோ எந்த உதவியும் செய்யாத போது யாரையும் எதிர்பார்க்காமல் தனது சமூக கடமை இது வென எண்ணி இத்தனை வருடங்களாக தனது மண்ணுக்காக உழைத்த இவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.

குடும்பம் 

மரங்களின் மேல் உள்ள அக்கறையினால் சொந்த ஊரை விட்டு இந்த காட்டுக்குள் சிறிய வீட்டை கட்டி தனது மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்ந்து  வருகிறார். வருமானத்திற்க்காக சில மாடுகளை வளர்த்து பாலை கறந்து விற்று குடும்ப செலவை பார்த்து கொள்கிறார்.

டீன் ஏஜ் பருவத்தில் தொடங்கியவர் தற்போது 50 வயதை நெருங்குகிறார். "இந்த காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபட தயார் " என்கிறார் இந்த தன்னலமற்ற மாமனிதர் !!

இவரது தன்னலமற்ற பணி இப்படி இருக்க தற்போது காட்டை பற்றி அறிந்த அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் உரிமை கொண்டாடவும், பாதுகாக்க பட்ட இயற்கை பகுதியாக அறிவிக்கவும் வரிசையில் காத்து இருக்கிறார்கள்.

மரங்கள் மட்டும் அல்ல

                                                 மூங்கிலிலை காடுகளே...!! 


தேக்கு , அகில், சந்தனம், கருங்காலி,ஆச்சா போன்ற மரங்களும், 300 ஹெக்டேர் பரப்பளவில் மூங்கில் காடுகளும் இருக்கின்றன. காட்டு விலங்குகளும் பறவைகளும் அதிக அளவில் இங்கே வாழ்ந்து வருகின்றன...!! 100 யானைகளுக்கு மேற்பட்டவை 6 மாதங்களுக்கு மேல் இங்கே வந்து தங்கி செல்கின்றன. பறவைகள் விலங்குகளின் சொர்க்கபுரி தான்  இந்த 'முலாய் காடுகள்' !! 

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருக்கிறது...இரு ஆண்டுகளுக்கு முன் மிக 'பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டாம் ராபர்ட்' இந்த காட்டிற்கு வந்து படப்பிடிப்பை நடத்திச் சென்றுள்ளார். 'ஆற்றின் நடுவே மணல் திட்டில் இவ்வளவு பெரிய காடு வளர்ந்திருப்பது அதிசயம்' என வியந்திருக்கிறார். 

இப்படி பட்ட ஒரு மனிதர் வெளிநாடுகளில் இருந்தால் இதற்குள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். தங்கள் நாட்டின் பெருமை என ஒரு பட்டமே கொடுத்து கௌரவித்து இருப்பார்கள்...ஆனால் இங்கோ பத்திரிகைகளில் கூட அவ்வளவாக செய்தி வெளியிட படவில்லை...இவரது புகைப்படத்தை மிகுந்த தேடுதலுக்கு பின் தற்போதுதான் கூகுளில் பார்க்கவே  முடிந்தது.


      கரை தொடும் நதி...பச்சை புடவை போர்த்திய மலை...பூலோக சுவர்க்கம் இதுவன்றோ !!

மரம் நடுவதையே ஒரு விழா அளவுக்கு பெரிது படுத்தி புகைபடத்திற்கு முகத்தை காட்டி பெருமைப்பட்டு கொள்ளும் சராசரி மனிதர் போல் அல்ல முலாய். எதையும் எதிர்பார்க்காமல் இந்த மண்ணிற்கு தான் செய்யும் கடமை என சாதாரணமாக கூறும் அவரை அறிந்துகொண்ட பிறகாவது நம் கடமை தனை உணர்ந்து நாம் வாழும் சமூகத்திற்கு நமது சிறிய பங்களிப்பை கொடுப்போம்.

உலக வெப்பமயமாதல் என அச்சப்பட்டு கொண்டு மட்டும் இருக்காமல் செயலிலும் இறங்க வேண்டிய தருணம் இது. ஒரு தனிமனிதரால் ஒரு காட்டையே உருவாக முடிகிறது என்றால் நாம் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு ஒரு மரமாவது ஏன் நட்டு வளர்க்க கூடாது. நகரங்களில் இருப்பவர்கள் இயன்றவரை மொட்டை மாடியில் தோட்டம் போட்டும், தொட்டிகளில் செடிகளை வளர்த்தும் குளிர்ச்சியாக வைத்து நமது சுற்றுச்சூழலை பாதுகாத்துக் கொள்ளலாம்...சிறிது முயன்றுதான் பாருங்களேன்...!!




                 இயற்கையை நேசிப்போம்...!! எங்கும் பசுமை செழிக்கட்டும்...!!


பின்குறிப்பு 

'மனிதருள் மாணிக்கம்' இவர்...! இவரது செயல் பலருக்கும் தெரியவேண்டும். மத்திய மாநில அரசுகள் இவருக்கு விருது கொடுத்து கௌரவிக்க வேண்டும்...என்பதே இங்கே எனது வேண்டுகோள்.

இவரை அறிவதன் மூலம் எல்லோருக்கும் சுற்றுச்சூழலின் மீதான ஒரு கவனமும், மரங்களை வளர்ப்பதன் மேல் ஒரு ஆர்வமும்  வரக்கூடும்...நண்பர்கள் விரும்பினால் தங்கள் தளங்களில் இவரை பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்...


இங்கே இடம்பெற்ற படங்கள் அனைத்தும் முலாய் காடுகளில் எடுக்கப்பட்டது !!



தகவல் -  The Times of India, இணையம் 
படங்கள் - நன்றி கூகுள்
                           

திங்கள், ஏப்ரல் 2

குருதட்சணை - 'மறுபடி பிறந்தேன்...!'



ஒவ்வொரு நாளும் நம்மை சுற்றி நிகழ்பவை பல படிப்பினைகளை கொடுக்கிறது, அதை உற்று கவனிப்பவர்கள் அதில் இருந்து தெளிவினை கற்றுக்கொள்கிறார்கள். தெருவில் எதிர்படும் ஒரு சாதாரண மனிதர் கூட நமது சிந்தனையை லேசாக தூண்டிவிடலாம்...அப்படி இருக்கும்போது நெருங்கி பழகக்கூடிய நண்பர்களில் ஒரு சிலர் நம் பாதையை செம்மை படுத்தலாம். தவறுகளை சுட்டிக்காட்டலாம், ஆலோசனைகளை கொடுக்கலாம், அவர் நம் வாழ்வை முன்னேற்ற உதவலாம். என்னவொன்று அது போன்றவர்களை இனங்கண்டு அவர்களுடன் நம்மை பிணைத்துக்கொண்டு விட வேண்டும். பின் நல்லவை அனைத்தும் தானாக நடைபெறும்.

ஒவ்வொருவருக்கும் யாராவது ஒருவர் வழிகாட்டியாக அமைவார்கள். குழந்தைகள் தங்கள் தந்தையை ஒரு ரோல் மாடலாகவும், இளைஞர்களில் ஒரு சிலர் திரைப்பட கதாநாயகர்கள், ஒரு வி ஐ பி, ஒரு தொழிலதிபர் போல ஆகவேண்டும் என எண்ணுவார்கள் !வெளி தோற்றத்திலும், வாழ்க்கையில் முன்னேறுவதற்கும் அவர்கள் மேற்கொண்ட வழிமுறைகளை இவர்கள் பின்பற்றலாம், அதன் படி நடக்கலாம்.

ஆனால் 'குரு' என்ற ஒருவர் இது போன்றவர் அல்ல, இதற்கு எல்லாம் மேலே !! குரு என்று ஒருவர் நமக்கு இருந்தால் அவர் நமது வெளித்தோற்றத்தை மட்டும் மாற்றுவதில்லை, நமது அகத்தையும் சிறப்பாக பரிமளிக்கச் செய்வார்.

தனக்கு 'இதுதான் வாய்க்கும், வேறு எதற்கும் தான் லாயக்கில்லை' என ஓட்டுக்குள் சுருங்கிய நத்தை போல வாழும் மக்களுக்கு விழிப்பை கொடுத்தால் நிச்சயம் சாதிப்பார்கள்...அதற்கு தேவை ஒரு குரு ! உண்மையில் 'குரு யார்' என்பதும் 'அவரை உணர்வது எப்படி' என்ற வித்தை நமக்கு தெரிந்துவிட்டால் எல்லோருமே சாதனையாளர்கள் தான். ஆனால் ஒரு சிலரின் வாழ்வில் குரு என்பவர் தானாக அமைந்துவிடுவார்...அப்படி தானாக அமைந்த நண்பர் ஒருவர் எனக்கு குருவான அற்புதம் நிகழ்ந்தது இதே பதிவுலகத்தில்...!!

குரு என்பவர் யார்?

சோர்ந்து இருக்கும் போது நம்மை உற்சாகபடுத்துவதும், அழும்போது கண்ணீரை துடைப்பதும் குரு வேலையல்ல...எடுத்ததுக்கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு துள்ளி குதித்து ஆர்ப்பரிப்பது, நிச்சயம் குருவின் வேலையாக இருக்காது...அதிகாரம் செலுத்துவதும், அடிமைபடுத்துவதும், தனது ஆளுமையை திணிப்பதும் குருவின் அடையாளம் அல்ல. 

குருவை வழிக்காட்டி என்று ஒற்றை வார்த்தையில் முடிக்கவும் எனக்கு விருப்பம் இல்ல...போகிறபோக்கில்  இதுதான் வழி, இந்த  விதத்தில்  பயணித்தால்  நன்று  என்று சொல்வதுடன்  வழிகாட்டியின்  கடமை  ஏறக்குறைய  முடிந்துவிடலாம். ஆனால் ஒவ்வொரு மனிதனுக்கும் மிக தேவை 'சுதந்திரம்'.

தன்னை சுற்றி பின்னப்பட்டிருக்கும் தேவையற்ற வலைகளை உடைத்து, வெளியே  வர வைக்க வேண்டியதே குருவின் பணி. அச்சுதந்திரத்தை கொடுப்பதே குருவின் விருப்பமாக இருக்கும். தனியாளாக உலகை எதிர்கொள்ளும் திடத்தை அச்சுதந்திரம் கொடுக்கும்...ஒருவேளைக்கான  உணவை கொடுத்து விடுவதுடன் முடிந்துவிடுவதில்லை, தொடர்ந்து உணவை பெறுவதற்குரிய செயலை/வேலையை ஏற்படுத்தி கொடுப்பதுதான் விழிப்புணர்வு...ஏறக்குறைய இத்தகைய விழிப்பு நிலையில் நம்மை வைத்திருப்பதும் தான் குருவின் வேலை. எல்லை கோடுகளை போட்டுக்கொண்டு அனாவசியமான கட்டுப்பாட்டிற்குள் அமிழ்ந்து கிடக்காமல் அக்கோடுகளை அழித்து வெளியில் கொண்டு வருபவரே குருவின் தகுதியை அடைகிறார்.

இப்படி பட்ட குருவின் இலக்கணங்களுக்கு அப்படியே பொருந்திபோனார் எனது நண்பர். குரு போல் நடந்து கொள்ளவேண்டும் என பிரயத்தனம் எதுவும் எடுத்து என்னிடம் அவர் பழகவும் இல்லை, அந்நிலையில் அவரை வைத்து நான் பேசவும் இல்லை ஆனால் இவை யாவும் இயல்பாய் நடந்தன. ஒரு குருவிற்குரிய தகுதி அவரிடம் இருக்கிறது...மழை வாங்கும் நிலமாக நான் இருக்கிறேன் அவ்வளவே !!

எனது குரு

'சிறகடித்து பற...உனது வானமாய் நான் இருக்கிறேன்' என உற்சாகம் கொடுத்து, அதுவரை எனக்கு புலப்படாமல் என்னுடனிருந்த சிறகுகளை எடுத்து எனக்கு  பூட்டி விட்டார். 'இந்த மனிதர்கள் தான் உலகம், இவர்களுக்கு பிடித்த மாதிரி, இவர்களுக்கு ஏற்றார் போல் தான் இனி வாழ்ந்தாக வேண்டும்' என்று என்னை சுற்றி போட்டு வைத்திருந்த கோடுகளை என்னை வைத்தே அழிக்க வைத்தார். 'உன்னை எதிர்ப்பார்த்து, அதோ நிற்கிறான் எளிய மனிதன் அவனிடம் செல், அவன் தேவை எது என கேட்டு நிறைவேற்றி வை' என எனக்குள் பேசும் குரல் நிச்சயமாக எனது குருவின் குரலாக இருக்கும்.

என்ன தவம் செய்தனை ?!

மனவுலகில் இருந்து புறவுலகிற்கு இழுத்து வந்த சக்தி ! மகா சக்தி...குரு !!

உடல் தொடர்பான, உணர்வு தொடர்பான, மனம் தொடர்பான உறவாக இல்லாமல் இவற்றை எல்லாம் தாண்டி அக நிலையில் பூத்த இந்த உறவு வேறு யாரும் தொடாத ஒரு பரிமாணத்தை தொட்டது. வெகு தொலைவில் இருந்தும் என்னுள் இயங்கி கொண்டிருக்கிறது, என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது.

எனது இலக்கு எது என அவர் நிர்ணயிக்கவில்லை, ஆனால் எனது இலக்கு எது என உணரச்செய்தார் !! ஒரு மனிதனாக இந்த சமூகத்திற்கு என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறாரோ அதை என் மூலம் நிறைவேற்ற குருவால் மட்டுமே முடிகிறது.

பாசாங்கான உலகில், ஒருவர் மேல் மற்றொருவருக்கு எழும் கோபத்தை உடனே வெளிப்படுத்துவதில் இருக்கிறது எங்கள் உறவின் உன்னதம் !! சிரித்து பேசிய நாட்களை விட சண்டையிட்டு மௌனம் சாதித்த நாட்கள் அதிகம். அந்த மௌனத்திலும் பாடம் கற்றுத்தருவது அவருக்கு மட்டுமே சாத்தியம்...!

சிறுவயது முதல் யார் பேச்சையும் கேட்டு நடக்க தயாராக இல்லாதவள் இப்போதும் மாறாமல் அப்படியே தான் இருக்கிறேன், ஆனால் இவர் பேச்சை கேட்காமலேயே நடந்து கொண்டிருக்கிறேன் அவர் சொல்லிய படி...!! என் மனதை சோலைவனமாக மாற்ற அவர் முயற்சிக்கவில்லை ஆனால் பாலைவனம் எது என்பதை உணர்த்தினார், அதை விட்டு ஒதுங்கி போகச் செய்தார்.

குரு என்ற பிம்பத்திற்கு அகங்காரம் இல்லை, அதிகாரம் செய்ய தெரியாது...சாதாரணமாக சொன்னாலே உடனே செய்து விட தூண்டும்.

என் தவறுகளின் காரணம் நான் மட்டுமே, ஆனால் என் நல்லவைகள் அனைத்திலும் சூட்சமமாய் என்றும் நிற்பது குருவானவர் தான் !!

யார் அவர்?!

யாருடன் இருந்தால் மிக வசதியாக உணர்கிறீர்களோ அவர் சரியான குரு அல்ல, யாருடைய அருகாமையில் நீங்கள் மிக அசௌகரியமாக உணர்ந்தாலும் அவரை விட்டு விலக முடியாமல் விரும்பி ஏற்கிறீர்களோ அவர் தான் உண்மையான குரு - சத்குரு

நிதர்சனம் !! ஆரம்பத்தில் நண்பராக தெரிந்த அவர் நாட்கள் செல்ல செல்ல எனக்குள் மாற்றங்களை விதைத்து, என் கட்டுகளை அறுத்தெறிய கூடிய குருவானார். இந்த அற்புதம் ஒரே நாளில் நிகழ்ந்துவிடவில்லை...பல பேச்சுக்கள், விவாதங்கள், கருத்துமோதல்கள்,கோபங்கள், சண்டைகள், மௌனங்கள் எல்லாம் நிகழ்ந்தேறின...அத்தனையிலும் வென்றதென்னவோ குரு தான்.

ஆண் பெண் என்ற பாகுபாடுகள் என்றும் எங்கள் மத்தியில் நினைவுக்கு வந்ததே இல்லை...அப்படி பிரித்து பேதம் பார்க்க ஏனோ எங்களுக்கு தோணவே இல்லை...நேரமும் இல்லை !!

வெறும் எழுத்து, மாற்றங்களை ஏற்படுத்துமா என்பதை அனுபவரீதியில் உணர முடிந்தது... இறுமாப்பை உடைத்து போட்டு ஒன்றுமில்லாமல் செய்யும் ஆற்றல் அவரது எழுத்திற்கு இருக்கிறது என்பது மிக ஆச்சர்யம். அவ்வாறே உடைத்தும் போட்டது.


இந்த பதிவுலகம் சகோதர உறவுகளை, நண்பர்களை கொடுத்திருக்கிறது...கூடவே மிகச்சிறந்த ஒரு குருவையும் கொடுத்திருக்கிறது ! 
எனது குரு யார் என்று இங்கே அடையாளம் காட்ட எனக்கு ஏனோ தோன்றவில்லை. அவரை குறித்து பலருக்கும் பலவித அபிப்பிராயங்கள் இருக்கலாம். அதை எல்லாம் உடைத்து போட நான் விரும்பவில்லை. அது அதுவாகவே இருக்கட்டும் !!  

                                                  குரு பிரம்மா குரு விஷ்ணு
                                                  குரு தேவோ மஹேஸ்வரஹ
                                                  குரு சாட்சாத் பரப்ரம்மா
                                                  தஸ்மை ஸ்ரீ குருவே நமஹா...!

                                                               * * *


எனது பிறந்தநாளான இன்று நண்பரை குறித்து இங்கே பதிவிட கிடைத்த வாய்ப்பை எண்ணி பெருமைபடுகிறேன்...அதே சமயம் அவரை குருவாக அடைய காரணமான பதிவுலகத்தை மிக மதிக்கிறேன்...!  


பிரியங்களுடன் 
கௌசல்யா 





வெள்ளி, மார்ச் 30

மின்சாரம் வேண்டுமாம் மின்சாரம்...?! தொடரும் கூடங்குளத்தின் அவலம் !!


சங்கரன்கோவில் தேர்தல் முடிந்ததும் கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே செயல்படுத்த நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டார். அன்றே அணுமின் நிலையம் திறக்கப்பட்டு ரஷ்ய விஞ்ஞானிகள் 100 மற்றும் பணியாளர்கள் 950 பேரும் பணிக்கு திரும்பினர். வேலைகளும் நடைபெற தொடங்கி விட்டன...எப்படியும் ஆகஸ்டில் உற்பத்தி துவங்கி விடும்...!?

பணிகள் ஒரு பக்கம் விறுவிறுப்பாக தொடங்க மற்றொரு பக்கம் கூடங்குளத்தில் அதிரடி வியூகம் அமைக்கப்பட்டு மக்கள் நாலாபக்கமும் நகரமுடியாத படி சிறை வைக்கப்பட்டனர்...5000 போலிஸ், துணை ராணுவம் !!

11 பேர்களை கைது செய்து கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கைதை எதிர்த்த கூட்டப்புளி கிராம மக்களை சுமார் 178 பேர்களை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்...இதில் 45 பெண்கள், 20 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் !!

இவையெல்லாம் கடந்த வாரம் தினசரியில் தொடர்ச்சியாக வந்த செய்திகள்...! 

* * * * *

ஏன் இத்தனை களேபரம்...?

கூடங்குளம் அணு உலை திறந்தால் மின்சாரம் கிடைக்கும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், பொதுமக்கள் தங்கள் உயிர் பிரச்னையாக எண்ணி போராடி கொண்டிருக்கும் இதனை ஏன் ஒரு மனிதாபிமான அடிப்படையில் பார்க்க கூடாது...?!

இடைதேர்தல் முடியும் வரை போராட்டகாரர்களுக்கு சாதகமாய் இருப்பதை போல் காட்டிக்கொண்டு அதற்கு பின் அதிரடியாய் காரியத்தில் இறங்கி இருக்கிறது. நிச்சயமாக ஒரே நாளில் திட்டமிடப்படவில்லை, முன்னரே திட்டம் தீட்டப்பட்டு தயார் நிலையில் வைத்திருந்து தேர்தல் முடிந்ததும் ஊரை சூழ்ந்து விட்டார்கள்.

இடைதேர்தலுக்கு தமிழ்நாட்டின் அத்தனை அரசியல் கட்சியினரும் சங்கரன்கோவிலில் முகாமிட்டிருந்தார்கள். அங்கே வந்த ஒருவர் கூட 8 மாதங்களாக , 250 நாட்களுக்கு மேலாக மக்கள் போராடி கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு ஒரு ஆறுதலை சொல்வோம் என்று கூட எண்ணி அங்கே செல்லவில்லை. இவர்கள் தானா மக்களின் காவலர்கள்...!? மக்களுக்காக அரசு என்று சொல்வதெல்லாம் மேடை விட்டு இறங்கியதும் மறந்து போய்விடும் போல...கூடங்குளத்தில் போராடி கொண்டிருப்பவர்களும் இந்தியாவை,தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான், யாரோ எவரோ என்பது போல் மத்திய மாநில அரசுகள் எண்ணி செயல்படுவது வருந்ததக்கது.

எத்தகைய போராட்டம் இது ?

மக்களே போராடும் ஒரு அறவழி போராட்டம் இது . அணு உலை நல்லதா கேடா என விவாதங்கள் பேசினது போதும்...பதில் விளக்கம் எதுவாக வேண்டுமானால் இருந்துவிட்டு போகட்டும், ஆனால் அணு உலையின் மீதான மக்களின் அச்சத்தை போக்க வேண்டியது மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு அரசின் கடமை. இதை செய்ய தவறிய அரசு, இப்போது அதிரடியாக காவல்துறையை கட்டவிழ்த்து விட்டு இருப்பது மட்டும் என்ன நியாயம்...?! ஒரு மாநிலத்துக்குள் ஒரு மூலையில் இத்தனை நாளாக நடந்து வருவதை பற்றி துளி கூட அக்கறை இன்றி தங்களை முன்னெடுப்பதில் முன்னணியில் இருக்கின்றன மத்திய மாநில அரசுகள்...!


அமெரிக்காவின் கைக்கூலி உதயகுமார் என்றார்கள்...ரஷ்யாவின் கை இந்தியாவில் ஓங்கிவிடகூடாது அதை தடுக்கவே கூடங்குளம் மக்களை, அணு உலைக்கு அமெரிக்கா எதிராக திருப்பிவிட்டதாகவும்...வெளிநாட்டு பணம் போராட்டத்திற்கு உதவுகிறது...குறிப்பிட மதத்தினரின் தூண்டுதல் இப்படி அப்படினு பல குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டது...அத்தனையும் தாண்டி இறுதியாக தற்போது நக்சல் தீவிரவாதிகளின் தொடர்பு இருக்கிறது என்கிறார்கள்...!! 

பேங்க் கொள்ளை அடித்தவர்களை என்கவுண்டரில் போட்டு தள்ளிய வீரம் செறிந்த தமிழ்நாட்டு போலீசுக்கு நக்சல் தீவிரவாதிகள் ஊடுருவியதும், இத்தனை நாள் போராட்டத்திற்கு உதவியதும் இதுவரை எப்படி தெரியாமல் போனது ?!!!!

8 மாதத்துக்கும் மேலாக நடந்து வரும் இந்த போராட்டத்தில் ஒரு சிறு அசம்பாவிதமும் இல்லாத அளவு மிக அமைதியான முறையில் நடந்து வருகிறது ! இவர்களை பார்த்து காவல்துறை சொல்கிறதாம் 'அணு உலையின் மீது அணு குண்டை வீச முயற்சி செய்தார்கள் அதனால் கைது செய்தோம்' என்று...!?

மக்களை தீவிரவாதிகளை போல் சித்தரித்து நடந்துகொண்டிருக்கும் இந்த களேபரம் பற்றி தமிழகத்தின் பிற பகுதி மக்கள் சிறிதும் அலட்டி கொள்ளவில்லை...இலங்கையில் கொத்து கொத்தாய் தமிழர்கள் பிணமாய் சரிந்த போது வேடிக்கை பார்த்த அதே கூட்டம் தன் தாய் நாட்டிற்குள் நடப்பதையும் கை கட்டி வாய் மூடி வேடிக்கை பார்க்கும் அவலம் ! மக்களுக்காக அரசு என்பது இல்லாமல் அரசு என்ற உயிரற்ற ஒன்றுக்காக இயங்கும் மக்கள் என்று மாறி விட்டது காலத்தின் கோலம். 

வேறு திசை நோக்கி... 

இப்போது பிரச்சனை வேறு திசையை நோக்கி பயணிக்க தொடங்கி விட்டது...மக்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்தி அச்சத்தை போக்குவதற்கு  மாறாக  அவர்களை துன்புறுத்துவது என்பது தொடங்கிவிட்டது.பொதுமக்களின் உயிருக்கும் உடமைக்கும் சேதம் ஏற்படாமல் காக்க வேண்டியதை மறந்து அரசே மக்களுக்கு எதிராக காவல் துறையை முடுக்கி விட்டு இருக்கிறது. பொதுமக்களை காக்கிறோம் என்ற போர்வையில் பிற வெளி ஊர் மக்களிடம் இருந்து இம்மக்கள் தனிமை படுத்த படுகிறார்கள் ! ஒரு போர் சூழல் அளவிற்கு ஊரடங்கு உத்தரவும், காவல் படைகளும் தேவையா என்பதே அங்குள்ள மக்களின் கேள்வி.


இடிந்தகரைக்கு வரும் அத்தனை வழிகளும் அடைக்க பட்டுவிட்டன...பால் விநியோகம், மின் விநியோகம், குடிநீர் விநியோகம் போன்றவரையும் நிறுத்தி அந்த ஊரே ஒரு தனி தீவு போல துப்பாக்கி ஏந்திய காவல்துறையால் சுற்றி வளைக்கபட்டது அதீதமாக இருக்கிறது. பிற ஊர்களில் இருந்து மக்கள் செல்லவும், அங்கிருக்கும் மக்கள் வெளியேறவும் வழியின்றி தவிக்கும் ஒரு நிலை...ஒரு மாநிலத்தில் இருந்து ஒரு பகுதி மட்டும் ஒரு எதிரி நாடு போல் பிரித்து பார்க்கபட்டுவிட்டது.

"அணுமின் நிலையம் பிடிக்காவிட்டால் இழப்பீடு வாங்கிவிட்டு ஊரைவிட்டு வெளியேறி எங்கேயாவது போய் வாழுங்கள் " என்றாராம் அரசியல்வாதி ஒருவர்.

வாழ்வது தமிழ் நாடா அல்லது இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியா என தெரியவில்லை...தமிழர்கள் தங்கள் நாட்டுக்குள்ளேயே சுதந்திரம் மறுக்க படுவது கொடுமையிலும் கொடுமை...இவ்வாறு மக்களை துன்புறுத்தி தான் மின்சாரம் பெற வேண்டுமா என கூடங்குளத்தை ஆதரிப்பவர்கள் சிறிது யோசியுங்களேன்...

தற்போது அதிகரித்திருக்கும் மின்வெட்டை சாதகமாக மாற்றுகிறது அரசு. (ஏன் இதுவும் ஒரு உளவியல் ரீதியிலான மாற்றத்தில் ஒன்றாக இருக்ககூடாது !?) மக்களும் கூடங்குளம் அணுஉலை வந்தால் மின்சாரம் உடனே கிடைத்துவிடும் என்பதை போல ஒரு மாயைக்குள் வந்துவிட்டார்கள். அவ்வாறு வர வைத்தது  ஆட்சியாளர்களின் புத்திசாலித்தனம். உளவியல் ரீதியாக அணு உலை வேண்டும் என்ற நிலைக்கு கூடங்குளம் தாண்டி வெளியில் உள்ள மக்கள் நினைக்க தொடங்கிவிட்டார்கள்...உதயகுமாரை சரணடைய சொல்லி வற்புறுத்துவதாக செய்திகள் வந்தன...பதுங்கு குழியில் இருப்பதை போல 'வெளியே வா , வந்து சரணடை' என்கிறார்கள். உதயகுமார் சாதாரணமாக மக்கள் முன் நடமாடுகிறார், மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்கிறார்...!!? 

(ஒரு பத்திரிகை வேற அப்ப அப்ப சலிக்காமல் செய்தி வெளியிட்டு அவதூறு பரப்பி கொண்டிருக்கிறது. அதை படிகிறவங்களை பைத்தியம் என்று நினைச்சு செய்தி வெளியிடுகிறதா அல்லது செய்தியை படித்து பைத்தியமாகனும்,ஒருத்தனும் தெளிவா புத்தியோட இருக்ககூடாது என முடிவு கட்டி இருக்கா தெரியல...)

அப்பாவி கிராம மக்களை தங்கள் சுயநலத்திற்க்காக பயன்படுத்தபடுகிறார்கள் என பேசபடுகிறது. மூன்று மாதத்திற்கு முன் நான் அங்கு சென்ற போது பத்து வயது சிறுவர், சிறுமிகள் கூட அணு உலை பற்றியும் , அணு கழிவுகள் பற்றியும் தெள்ள தெளிவாக எடுத்து சொன்னார்கள். வயதானவர்கள் படிக்காதவர்கள் என யாவரும் புள்ளிவிவரங்களை புட்டு புட்டு வைக்கிறார்கள். 

'இத்தனை கோடி பணம் செலவு பண்ணியிருக்கு யார் பணம் எல்லாம் மக்களின் பணம்' என ஆதங்கபடுபவர்களிடம் சேது சமுத்திரத் திட்டத்திற்கு கடலில் கொட்டிய பணம் எவ்வளவு என நினைவு இருக்கா ? னு கேட்கணும். ஒவ்வொரு நதியையும் சுத்தபடுத்த என்று பல கோடிகள்,எத்தனை எத்தனை மக்கள் நல்வாழ்வு திட்டங்கள் பாதியில் நிற்கின்றன, அதில் போடப்பட்ட பணம்...இப்படி வீணான பணம் பற்றி ஒரு பெரிய லிஸ்ட் போடலாம்.அப்புறம் இப்ப லேட்டஸ்டா கனிம சுரங்க ஊழல் 10.7 லட்சம் கோடியாம் !! வெளிநாட்டு வங்கியில் இருக்கும் கருப்பு பணம் யாருடையது...?! அந்த பணம் எல்லாம் முதலில் வெளில வரட்டும் அப்புறம் பேசலாம், கூடங்குளத்தில் வீணான பணத்தை பற்றி...

தொடரும் போராட்டம்...

போராட்ட மக்கள் தாங்களாகவே போராட்டத்தை கைவிட வேண்டும் என்பதற்காக என்ன இடைஞ்சல்கள் கொடுக்க முடியுமோ அத்தனையில் கொடுத்து கொண்டிருக்கிறது மத்திய மாநில அரசுகள். உரிமைக்காக குரல் கொடுப்பவர்கள் புரட்சியாளர்கள் என்பது மாறி அவ்வாறு குரல் கொடுப்பவர்கள் யாவரும் தீவிரவாதிகள் என்று சித்தரிக்கபடுவது ஜனநாயக நாடு என்பதில் ஐயத்தை ஏற்படுத்துகிறது.

அகிம்சை வழியில் போராடினால் அதன் முடிவு இதுதான் என்பதை தெரிந்து கொள்ளும் நம் இளைஞர்கள் புரட்சி என ஆயுதங்களை தூக்கக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. இதைத்தானா விரும்புகிறோம்...?!

15 பேர் எட்டுநாளாக இருந்த உண்ணாவிரதம் முடிவிற்கு வந்து விட்டது , ஆனால் 5 கட்டமாக போராட்டம் தொடங்கி இருக்கிறார்கள்...! 

அணுமின் நிலையங்களை அமைக்கும் போது அதை சுற்றி 30 கி.மீ தூரத்தில் வசிக்கும் மக்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்க வேண்டும் என்பது ஒரு நிபந்தனை. இந்த பயிற்சியினை கொடுக்க முதலில் ஏற்பாடு செய்யட்டும்...அதன்பின் தெரிந்துவிடும் இது எத்தகைய தன்மை வாய்ந்தது என்று...! இதுவரை இடிந்தகரை மக்கள் மட்டும் போராட்டத்தில் இருக்கிறார்கள் இனி சுற்றி இருக்கும் பிற கிராமங்களும் போராடபோகின்றன...இது தான் நடக்க போகிறது...!

உண்மையை சொல்லப்போனால் இனிதான் போராட்டம் முழு வேகத்தில் செல்ல போகிறது...

ஐ.நா சபையின் பார்வைக்கு ஒரு தமிழர் கூடங்குளம் பிரச்னையை கொண்டு சென்றிருக்கிறார்...இனி சர்வதேச அளவிலும் இதற்க்கு ஆதரவு கிடைக்ககூடும். கனடாவில் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மார்ச் 26 அன்று நடந்திருக்கிறது.

மக்களின் அவல நிலை 

கிட்டத்தட்ட 20 ஆயிரம் மக்கள் ஒன்றாக கூடி இருக்கும் இடத்தில் ஏற்படக்கூடிய சுற்றுப் புற சுகாதாரக் கேடுகள் எத்தனை ? இதனால் நோய் பரவும் ஆபத்தும் இருக்கிறது.

சாலை வழியாக உணவு பொருட்கள் கொண்டுசெல்ல தடை செய்யபடுவதால் பிற கடலோர கிராம மக்கள் படகுகளில் சென்று உணவு தண்ணீர் போன்றவற்றை கொடுக்கிறார்கள் என்ற செய்தியை கேள்விப்பட்டு ஆறுதல் அடைய முடியவில்லை மாறாக முள்வேலிக்குள் அடைபட்டு கிடந்த நம் ஈழத் தமிழர்களின் அவல நிலைதான் நினைவுக்கு வந்து வேதனை அளிக்கிறது.


லேசா  வியர்த்தாலே என்னடா வாழ்க்கைன்னு சலித்து கொள்பவர்க்கு எங்கே தெரியும், மணலிலும், வெயிலிலும் இவர்கள் படும் அவஸ்தை...!

உண்ணாவிரதம் இருந்தால் முகம் வாடி இருக்கணுமே உடல் சோர்ந்திருக்கனுமே என புகைப்படத்தை உற்று நோக்கி கிண்டலடித்து கும்மாளமிடும் வெட்டி பேச்சு வீணர்கள் அதிகம் உலவும் இடம் என்பதை எண்ணி வருந்துகிறேன் !! ஒரே மாவட்டத்தில் ஒரு பகுதியில் உணவுக்காகவும் , தண்ணீருக்காகவும் கை ஏந்தி எம்மக்கள் நிற்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் என்போன்றோரின் இயலாமை...கொடுந் துயரம் !! 

உழைத்து கௌரவமாக வாழ்ந்த மக்களை தன் குழந்தையின் பசிக்கு பால் கிடைக்காதா என பரிதவித்து கொண்டிருக்கும் தாய்மார்களின் வயிற்றில் எரியும் நெருப்பை எந்த நீர் கொண்டு அணைக்க...!??

உங்களுக்கு தேவை மின்சாரம்...அது யார் பிணத்தின் மீதிருந்து கிடைத்தால் என்ன ?! நாசமாய் போகட்டும்...மனிதம் !?



* * * * *

இப்பதிவு எனது தனிப்பட்ட பார்வை...இம்மக்களின் துயரத்தை நேரில் பார்த்தும் கேட்டும் அறிந்த பின்  ஏற்பட்ட வருத்தத்தை வார்த்தையாக்கி இருக்கிறேன்...!! இப்போராட்டம் இனி தொடர்ந்து பல இடங்களிலும் பரவலாம்...மக்களின் துயரத்துக்கு விடிவு காலம் நிச்சயம் உண்டு என்ற நம்பிக்கை மட்டுமே மிச்சம் இருக்கிறது...!

கூடங்குளம் பற்றிய குறும்படத்தின் லிங்க்...நேரம் இருப்பின் பாருங்கள்...நண்பர்களுக்கும்  பகிருங்கள்...!! நன்றி.
http://www.youtube.com/watch?v=Qe-IN-iA2Yo&feature=share

* * * * *


படங்கள் - நன்றி கூகுள்



செவ்வாய், மார்ச் 27

சென்னைக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை...?!



'தமிழ் நாட்டில் மக்கள் இருக்காங்களா ?' 'இருக்கிறார்கள்...' அப்புறம் 'அவங்க எப்படி இருக்கிறார்கள் ?' 'நோ, இந்த கேள்வி கேட்கபடாது...' கேட்டால் நாங்கள் நடை பிணங்களாக இருக்கிறோம் என பதில் சொல்ல வேண்டி வரும்...! உடனே அடடா அப்படியானு கேட்டு வருந்தி பிரச்சனைய தீர்க்க போறீங்களா என்ன...? யார் நினைச்சாலும் ஒண்ணையும் ஒண்ணும் பண்ண முடியாது...போறபோக்குல என்னை மாதிரி புலம்பிட்டு போக மட்டும் தான் இப்போதைக்கு முடியும். வாட்டி வதைக்கும் மின்சார வெட்டில் ஓரவஞ்சனை பண்றதை தாங்க பொறுத்துக்க  முடியல...!! ஒற்றுமையில் வேற்றுமையை வளர்க்கிறது மின்சார வெட்டு...!!

இதற்கு முந்தைய ஆட்சியில் 4 மணி நேரம் மட்டும் என்ற கணக்கில் எடுத்தார்கள்...ஒரு ஒழுங்கு இருந்தது...ஆனால் இப்போது ஒரு வரைமுறை இல்லை, இஷ்டபடி தடை செய்கிறார்கள். ஒருவேளை முன்னாடி ஆண்டவங்க கஜானாவோடு சேர்த்து , கரண்டையும் காலி பண்ணிட்டு போய்ட்டாங்களா ?!! 
9 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரம் வரை எடுக்கிறார்கள். 

நாளைய  சே குவேராக்கள் , பாரதிகள் , கட்டபொம்மன்கள், குமரன்கள், வாஞ்சிநாதன்கள், ஜான்சி ராணிகள் போன்றவர்கள் எல்லாம் தற்போது இருட்டறையில்...?! 

இரவு நேர அவலம்...

பகலை ஓரளவு சமாளித்துவிடும் மக்கள் இரவு வந்தாலே கிலி பிடித்தது போலாகி விடுகிறார்கள்...மாலை 6.30 இருந்து மின் வெட்டாட்டம்  தொடங்கி விடிய விடிய நடக்கும்...! ஒரு மணி நேரம் மின்சாரம் இருக்கும் அடுத்து ஒரு கட், அரை மணி நேரம் இருக்கும் அடுத்து ஒரு கட்......இப்படியே விடியும் வரை தெளிய வச்சி தெளிய வச்சி...ம்...என்னத்த சொல்ல (மின்சாரம் இருக்கும் போது தூங்கியும், போனதும் எழுவதும் என நடக்கும் போராட்டத்தில் சோர்ந்து மூணு மணிக்கு மேல அசந்து தூங்கி விடுவதால் அப்போது மின் தடை செய்ய பட்டாலும் தெரியாது ) தொடர்ச்சியான தூக்கம் இல்லாமல் காலையில் எழுந்திரிக்க இயலாமல் படு சோர்வாக இருக்கிறது. இதனால் மக்களுக்கு உடல், மன ரீதியாக பாதிப்பு ஏற்படும் என்பது சர்வ நிச்சயம் !

ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் மறுநாள் வேலைகளை எவ்வாறு கவனிப்பது ? கண்கள் எரிய, உடம்பு சோர்ந்து மந்த நிலையில், உற்சாகமின்றி ஒருவித நோய் பீடித்த நிலையில் தவிக்கும் நடுத்தர ஏழை குடும்பங்கள் !

எல்லா மருத்துவமனைகளிலும், எக்ஸ்ரே , ஸ்கேன் சென்டர்களில் ஜெனெரேட்டர் வச்சிருப்பாங்கன்னு சொல்ல முடியாது. அவசரத்திற்கு இவைகளின் உதவி எந்த அளவிற்கு இருக்கும் என தெரியவில்லை. ஒரு சில மருந்து பொருட்கள் வைக்கபட்டிருக்கும் குளிர்சாதன பெட்டிகள் மின் தடையினால் முழு அளவில் பாதுகாப்பு கொடுக்குமா? சந்தேகம் தான்...!

தூக்கம் கெடுவதால்,


அதிகம் பாதிக்கபடுவது பள்ளி, கல்லூரி  மாணவ மாணவிகள் தான். இரவில் படிக்க இயலாதது ஒரு பக்கம் இருந்தாலும், சரியான தூக்கமும் இல்லாமல் மறுநாள் பரிட்சையை எதிர்கொள்ளும் போது சிரமத்துக்கு ஆளாகிறார்கள். குறிப்பாக கண் எரிச்சல், தலைவலி போன்ற சிறு உபாதைகள்...!

வயதான பெரியவர்கள் பொதுவாகவே தூங்குவது சிரமம். இப்போதோ அவர்களின் நிலை மிக பரிதாபம். சொல்லவும், சமாளிக்கவும் இயலாமல் உடல்நிலை குறைவுற்று மருத்துமனை நோக்கி தள்ளபடுகிறார்கள்...

கைகுழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்கள் படும்பாடு அவர்களுக்கே வெளிச்சம்...!! நடு இரவில் மின்சாரம் போனதும் வீறிட்டு எழும் குழந்தைகளை சமாளிப்பது மிக கஷ்டம்...காற்று இல்லாமல் பேப்பர், விசிறி போன்றவற்றால் கை வலிக்க காற்று வீசியே தன் குழந்தைகளை தூங்க வைக்கிறாள் தாய்...

ஒரு முறையும்
தன் புறம்
திருப்ப மாட்டாள்
விசிறியை...
குழந்தை உறங்க
வியர்வையில்
புழுங்கிக்
கொண்டிருக்கிறாள்
தமிழக தாய்...!

வேலைக்கு செல்லும் ஆண்கள், பெண்கள் என அனைவரையும் படுத்தி எடுக்கிறது மின்தடை !!

சென்னைக்கு மட்டுமேன் இந்த முக்கியத்துவம்...?!

மாநிலத்தின் பிற மாவட்டங்களின் நிலை இவ்வாறு இருக்க சிங்கார சென்னையில் மட்டும் 2 மணி நேர மின் தடை...!!??? ஏன் இந்த ஓரவஞ்சனை ?அங்கே இருப்பவர்கள் மட்டும் தான் மக்களா ?! பிற மாவட்ட முதியோர்கள், குழந்தைகள், மாணவர்கள், பொதுமக்கள்  எல்லோரும் சபிக்க பட்டவர்களா??

இந்த வருடம் பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ தேர்ச்சி விகிதம், மதிப்பெண் விகிதம் தென் மாவட்டங்களில் குறையும்...சென்னை மாணவர்கள் மட்டும் முன்னணியில் இருப்பார்களோ...?! 

தமிழ் நாட்டின் தலை நகரம் என்பதும்,அரசு அலுவலகங்கள் மற்றும்  மல்டி நேசனல் கம்பெனிகள், சிறிய மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் வரை இருக்கும் இடம் என்பதாலா? அந்த கம்பெனிகள் நிம்மதியாக மின்சாரம் உபயோகிக்க பிற மாவட்ட தொழில் நிறுவனங்கள் , விவசாயம் நலிந்து போகணுமா?

இந்த கோடை விடுமுறைக்கு தென்மாவட்டங்களுக்கு சென்னை மக்கள் வர தயங்கும் அளவிற்கு மின் பிரச்சனை இருக்கிறது...ஒரே மாநிலத்துக்குள் ஒதுக்கபட்டுவிட்டன பிற மாவட்டங்கள்...மாவட்டங்களுக்கிடையே பிரித்தாளும் போக்கை வளர்க்கும் இது போன்ற நிலை வருத்தத்திற்குரியது...


ஒரு நாட்டை, மக்களை மாட்டு மந்தைகளாக மாற்ற வேண்டுமென்றால்  முதலில் அவர்களின் சிந்திக்கும் திறனை முடக்கி போட்டாக வேண்டும்...இத்தகைய மழுங்கடிக்கும் வேலையை இது போன்ற மின் வெட்டுகள் மிக சரியாக செய்துவிடும் என்பது மட்டும் நல்லா புரியுது...!

இப்படி பகலிலும் ஒழுங்கா செயல்பட முடியாமல் இரவிலும் நன்றாக ஓய்வெடுக்க முடியாமல் சோர்ந்து போன தமிழா, "உனக்கு ஒரு பிரச்சனை என்றால் எவ்வாறு புரட்சி செய்வாய் ? எப்படி போராடுவாய் ?!" அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம், ஒரு ஓரமா காற்றோட்டமான மரத்தடி நிழல்ல ஒரு பாய விரிச்சு படு...அப்படியே மெல்ல கண்ணை மூடு...! நாடு சுபிட்சம் அடைந்துவிடும் !!

கூடங்குளம் தேவை ?!!

இந்த மின்தடை மக்களின் மனதில் வேறு எதை பற்றியும் சிந்திக்க விடாமல் , "கூடங்குளம் அணு உலையை திறந்தால் தான் என்ன ?" என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது. அங்கே நடைபெறும் போராட்டம் இங்கே இருக்கும் சில மாவட்டங்களின் பிரச்சனை என்பதை போலவும், எல்லோருக்காக நடப்பது இல்லை என்பது போலவும் புரிந்துகொள்ள பட்டிருக்கிறது...அணு உலையினால் நன்மையா, கேடா என சிந்திக்க கூடிய தன்மையை இந்த மின்தடை கெடுத்து ஒரு குழப்பநிலையில் வைத்திருக்கிறது. மக்களின் இந்த குழப்பநிலை ஆட்சியாளர்களுக்கு சாதகம் என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை.

 சரி செய்தே ஆகவேண்டும்

சென்னைக்கு மின்தடை அதிக நேரம் இருப்பது சரி இல்லை என ஆயிரம் காரணங்கள்(?!) சொல்லபட்டாலும், பாரபட்சமின்றி எங்கும் ஒரேவிதமான மின்தடை என்பதே ஏற்புடையதாக இருக்கும் என்பதே சாமானிய மக்களின் எண்ணம்.

சென்னைக்கு தற்போது வழங்கி வரும் 22 மணி நேர மின்சாரத்தை குறைத்து பிற இடங்களுக்கு பகிர்ந்து வழங்க வேண்டும்...ஒட்டு மொத்த தமிழ் நாட்டுக்கும் ஒரே விதமான மின்தடை நேரம் என ஒதுக்க வேண்டும்...எங்கும் 4 அல்லது 5 மணி நேர தடை என முறை படுத்தினால் பிற மாவட்ட மக்களும் சற்று தங்களை ஆசுவாசபடுத்தி கொள்வார்கள்...! தொழில் நிறுவனங்கள், விவசாயம் பிரச்சனையின்றி நடைபெறும்...தயவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களா !?

* * * * * * * * *

வேறு திசைக்கு திருப்பி விடப்பட்ட கூடங்குளம் போராட்டம் ?! அடுத்த பதிவில்...

* * * * * * * * *

படங்கள் - நன்றி கூகுள்


வியாழன், மார்ச் 22

அமராவதி...!? கேரளாவின் அலட்சியம் !!


அமராவதி மிக அழகான பெயர் ! அம்பிகாபதியோட அமராவதி இல்லைங்க நம்ம உடுமலை பேட்டை இருக்குதா அங்க இருக்கிற அழகான  ஒரு அணைதான் அமராவதி. மறுபடியும் அணையா ?! ஒரு அணை பிரச்சனைக்கே   இன்னும் விடை தெரியல...இதுல இன்னொரு அணைக்கு என்ன ஆச்சுன்னு நீங்க பதறது புரியுது...புது பிரச்சனை இல்ல ரொம்ப நாளாவே போயிட்டு இருக்கிற ஒண்ணுதான். இன்னும் ஒரு தீர்வும் எட்டபடாமல் இழுத்துகிட்டே போகுது. தமிழன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவானாம்,  யாருக்கு புரியுதோ இல்லையோ மத்த மாநிலத்துக்காரங்க நம்மள நல்லா எடை போட்டு வச்சிட்டாங்க. கர்நாடகத்துகிட்ட காவிர கொடுன்னு கெஞ்சி, கேரளாக்கிட்ட அணையை ஒடச்சிடாதனு  போராடி, ஆந்திராக்கிட்ட கொஞ்சம் தண்ணி கொடுன்னு கை ஏந்தி இன்னும் எத்தனை காலந்தான் நாம இப்படியே இருக்க போறோமோ தெரியல !

அப்படி என்ன பிரச்சனை?!

44 டி எம் சி அளவு தண்ணீரை தேக்கி வச்சிருக்கிற அமராவதி அணைக்கும் ஆபத்து வந்து நாளாகிவிட்டது . திருப்பூர், கரூர் மக்களின் உயிர் நாடியாகவும் 70,000 ஏக்கர் விளைநிலங்களை காப்பாத்துகிற இந்த அணைக்கு தண்ணீர் பாம்பாற்றில் இருந்து வருது. இந்த பாம்பாற்றின் குறுக்கே மறையூர் அருகே கோவில்கடவு பகுதியில் புதிய அணை கட்டணும் என்று கேரளா அரசு 230 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி சட்டசபைல தீர்மானத்தை நிறைவேற்றி வேலையை வேற தொடங்கிட்டதாக சொல்றாங்க ?! (இரண்டு வருடமாக போயிட்டு இருக்கு இந்த விவகாரம் !!)

கேரளாவுக்கு அங்கே சொந்தமான வயல்வெளிகளும் இல்லை வெறும் காடுதான் ! பின் வேறு என்ன தேவைக்காக இருக்கும் என்று பார்த்தால் ஆளாளுக்கு ஒண்ணு சொல்றாங்க...தண்ணியில இருந்து மின்சாரம் தயாரிக்க போறதா ஒரு பேச்சும், தண்ணீரை பாட்டில பிடிச்சி விக்கிற ஒரு தனியார் கம்பெனிக்கு தாரை வார்த்துகிறதுக்காகவும் அணைகட்ட போறாங்கனு சொல்றாங்க.

அடடா அமராவதி!


மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தேனாறு, சின்னாறு, காட்டாறு , பாம்பாறு போன்ற ஆறுகளின் நீரை தேக்கி வைக்க கட்டப்பட்டதுதான் அமராவதி அணை. இதில் அதிகபடியான நீரைத் தருவது, எக்காலத்திலும் ஓடிக்கொண்டிருக்கும் பாம்பாறு தான். இதன் உதவியால் தான் அமராவதி அணை நிறைகிறது.

170 கி.மி நீளம் கொண்ட இந்த ஆறு ஆனைமுடி சிகரங்களில் உற்பத்தியாகிறது. இரண்டு சிகரங்களுக்கிடையே வெள்ளியை உருக்கி விட்டது போல ஓடிவரும் அழகே அழகு !

ஆனைமுடி சிகரத்தில் இருந்து அமராவதி வரை இருக்கக்கூடிய இடங்கள் பாதுகாக்கப்பட்ட வனபகுதிகள் என்ற பட்டியலில் இருக்கிறது. சின்னாறு வனவிலங்குகள் சரணாலயம் , இந்திராகாந்தி தேசிய வனவிலங்கு சரணாலயம் ஆகியவை வேறு அமைந்திருக்கின்றன. இங்கே எது செய்வதாக இருந்தாலும் மத்தியச்சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெறவேண்டும். இவையெல்லாம் தெரிந்தும் என்ன தைரியத்தில் சட்டமன்றத்தில் அணைகட்ட போவதாக தீர்மானம் நிறைவேற்றினார்களோ தெரியவில்லை ?! (ஒருவேளை மத்தியில் பெரும்பாலோர் கேரளாக்காரர்கள் தானே சாதித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் தானோ ?!)

110 ஏக்கர் பரப்பளவில் பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான அனைத்து வேலைகளையும் ஏற்பாடு செய்து வருகிறது...நான்கு வருடத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டுவிடுமாம்.

வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பம்ப் செட்டுகளை வைத்து நீரேற்று விவசாயம் செய்து வருகிறார்கள் தமிழக விவசாயிகள் ! இந்த அணையை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளின் வயிற்றில் கொஞ்சமும் இரக்கமின்றி அடிக்க பார்க்கிறது கேரளா. விவசாயத்திற்கு எவையெல்லாம் பாதிப்பை கொடுக்கிறது என பகுத்தறிந்து அதனை களைந்து விட்டாலே விவசாயத் தொழில் நிமிர்ந்து விடும்.

70,000 ஏக்கர் நிலங்கள் பாதிக்கபடுவதுடன், நூற்றுக்கணக்கான தமிழக கிராமங்கள் குடிநீர் இன்றி தவிக்கும். வனவிலங்குகளும் குடிநீரின்றி அவதியுற நேரும். அமராவதி சர்க்கரை ஆலையை நம்பி உள்ள 10,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வு பாதிக்கப்படலாம்.

நம்ம தலைஎழுத்து நம் மாநிலம் வழியா போனாலும் அள்ளி குடிக்க வகையற்று போய் கொண்டிருக்கிறோம். மேற்கே இருந்து உற்பத்தியாகி கிழக்கு கடலில் கலக்கும் அனைத்து நதிகளும் நமக்கு வேண்டாதவையாக பிறரால் எடுத்துக் கொள்ளபடுகிறது. காலங்காலமாக தண்ணீருக்காக போராடிக் கொண்டே இருக்க வேண்டுமா? ஏன் எந்த அரசும் வாழ்வாதாரமான இப்பிரச்சனையில் ஏகமனதாக ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை. அவரவர் ஆட்சிகாலத்தில் எதையாவது ஒன்னு இரண்டு தற்காலிக சமாதானம் செய்து கொண்டு போய்விடுகிறார்கள், நிரந்தர தீர்வு எட்டபடாமலேயே !!

நெய்யாறு அணை ?!!

எட்டு ஆண்டுகளாக தீர்க்கப்படாத மற்றொரு ஆற்றின் பிரச்சனைஇருக்கிறது. குமரி மாவட்டம் கேரளாவுடன் இருந்த போது நெய்யாறு அணையை திருவாங்கூர், கொச்சி சமஸ்தான அரசு கட்டியது. பின்னர் பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த போது இடதுகரை கால்வாய் முழுக்க முழுக்க தமிழக அரசின் நிதியில் இருந்து கட்டப்பட்டது. குமரி மாவட்டம் நெய்யாறு அணை தண்ணீரை கட்டாயம் பெறுவதற்கான உரிமையும் உள்ளது.

சேமிக்கப்படும் நீரில் 60 % கேரளாவில் இருந்தும், 40 % குமரி மாவட்டத்தில் இருந்தும் வருகிறது. தண்ணீரில் பாதி அளவாவது குமரி மாவட்டத்துக்கு வர வேண்டும் என்ற அடிப்படையில் உருவான திட்டமே நெய்யாறு கால்வாய் திட்டம் . ஒன்பது வருவாய் கிராமங்கள், 9 ஆயிரத்து 204 ஏக்கர் நிலங்களும் 162 குளங்களும்  பாசனம் பெற்றன. 

ஆரம்பத்தில் நிர்ணயித்த படி இந்த கால்வாய் மூலம் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்கியது.ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டு முற்றிலும் நிறுத்த பட்டது...!!?

என்ன ஒரு முரண்பாடு ?! 

மகாராஷ்டிரத்தில் உற்பத்தியாகி கர்நாடகம் வழியாக ஆந்திராவை அடைந்து கடலில் கலக்கும் கிருஷ்ணா நதியின் நடுவே ஆல்மாட்டி என்ற இடத்தில் 173 கொள்ளளவு கொண்ட அணையை கட்டியது கர்நாடகா...உடனே வீறு கொண்டு எழுந்த ஆந்திரா உச்சநீதிமன்றம் சென்று 123 டி.எம்.சி தண்ணீரை தான் தேக்க வேண்டும் என்ற தீர்ப்பை பெற்றுவிட்டது. இதுவரை அந்த அளவைத்தாண்டி தேக்குவதில்லை கர்நாடகா. இதே கர்நாடகா தமிழ்நாட்டுகிட்ட என்ன ஆட்டம் காட்டுது ?!!!

2007 இல் காவேரி நதிநீர் ஆணையத்தின் தீர்ப்பின் படி அமராவதி அணையில் இருந்து ஏற்கனவே 5 டி.எம்.சி மட்டும் பயன்படுத்தி வந்த கேரளாவிற்கு 30 டி.எம்.சி தண்ணீர் ஒதுக்க வேண்டுமாம்...!!!? இதை எதிர்த்து இதுவரை நம் அரசு எதுவும்(?) நடுவர் மன்றத்தை அணுக நடவடிக்கை எடுத்தவில்லை என தெரிகிறது. அந்த தீர்ப்பை வைத்து கொண்டு கேரளா அணைகட்ட போறேன், தண்ணி தரமாட்டோம்னு சொல்லிக்கொண்டு இருக்கிறது...!!!?

உப்பு பெறாத விசயத்துக்கு எல்லாம் கொடிப்பிடிக்கும் ஆளும் கட்சி, எதிர்கட்சிகளும், தேவையற்ற ஈகோ போராட்டங்கள், பதவியை தக்க வைத்துக் கொள்ள எதையும் செய்ய துணியும் அரசியல்வாதிகள், வறட்டு ஜம்பங்கள், காட்டுக் கூச்சல்கள், கேட்டு கேட்டு புளித்துப் போன வாக்குறுதிகள், வீணான ஆர்ப்பாட்டங்கள் விதியே என்று சகித்து  போய் கொண்டிருக்கும் மக்கள் !!!  இத்தனையில் ஒன்று கூட மாற சாத்தியமில்லையா?!

முல்லைபெரியாறு அணை பிரச்சனை என்னவாயிற்று என்று தெரியவில்லை...?! ஐந்து மாவட்ட மக்கள் பாதிப்படைந்து கொண்டிருக்கிறார்கள்...அரசு இதை எல்லாம் கவனித்து, எப்போது நடவடிக்கை எடுத்து நல்லதொரு முடிவை எட்ட போகிறதோ ?!

சேர ,சோழ , பாண்டிய , பல்லவ  மன்னர்கள்  காலத்தில் தமிழ் நாட்டில் மட்டும் 39,000 ஏரிகளை வெட்டினார்களாம். அந்த ஏரிகளின் மேல் தான் இன்று அரசு அலுவலகங்க கட்டடங்களும் , புதிய பேருந்து நிலையங்களும் இருக்கிறது. மிச்ச ஏரிகளில் கருவேலமரங்களையும், தைல மரங்களையும் அரசே வளர்க்கிறது. நிலத்தடி நீர் உறிஞ்சபட்டு வறண்டு போய்விட்டன.மரங்களை வளர்க்க வேறு இடமா இல்லை. ஏரி,குளங்களில் உள்ள மணலை சுரண்டுவது ஒருபக்கம் அமோகமாக நடைபெறுகிறது. தூர்வாருகிறேன் என்று சொல்லி கொள்ளும் நூறுநாள் வேலை தொழிலாளர்கள் உறங்கி கழிக்கிறார்கள் மரத்தடியில்...!

இவர்கள் தூர் வாரி முடிப்பதற்குள் மழை வந்து, நின்றும் போய்விடும்.வழக்கம் போல பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் வீணாக கடலில் சென்று சேர்ந்துவிடும்.உண்மையில் அரசிற்கு அக்கறை இருந்தால், இயந்திரங்களின் உதவி கொண்டு வேகமாக முடிக்கலாம். மக்களின் வாழ்வாதார விசயத்தில் தூங்கி வழிகிறது அரசு இயந்திரம் !! 

நதிகள் இணைப்பு - சுப்ரீம் கோர்ட் உத்தரவு 

2002 இல் பல மாநிலங்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டபோது அப்போது பிரதமராக இருந்த திரு.வாஜ்பாய், வெள்ளப்பெருக்கால் வீணாகும் நதிகளின் தண்ணீரை வறட்சி நிலவும் மாநிலங்களுக்கு திருப்பி விடுவதற்கு வசதியாக நதிகள் இணைப்பு திட்டத்தை கொண்டு வந்தார். இதில் இரண்டு திட்டங்கள் போடப்பட்டன. ஒன்று தீபகற்ப நதிகள் இணைப்பு, மகாநதி, கோதாவரி நதிகளில் வெள்ளம் வந்து வீணாகும் தண்ணீரை கிருஷ்ணா, வைகை, காவேரி உள்ளிட்ட 16 நதிகளுக்கு திருப்பி விடுவது. 2 வது திட்டம் வட இந்தியாவில் ஓடும் கங்கை, பிரம்மபுத்திராவில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை தடுத்து நீர்பாசன வசதிகளை மேம்படுத்தவும், மின்சாரம் தயாரிக்கவும் இந்த பெரிய நதிகளின் குறுக்கே அணைகள் கட்டுவது.

அருமையான இந்த திட்டங்கள் இதுவரை ஏனோ நிறைவேற்றப்படவில்லை. தற்போது சுப்ரீம் கோர்ட் "நதிகள் இணைப்பு திட்டத்தை விரைவாக நிறைவேறவேண்டும்" என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது !!

மத்திய அரசு என்ன செய்ய காத்திருக்கிறதோ ?!!

நதிகள் இணைப்பு என்பது நிறைவேறுதோ இல்லையோ அதற்கு முன் இங்கே தமிழ்நாட்டில் ஓடும் ஆறுகளின் இரு மருங்கிலும் இருக்கும் ஆக்கிரமிப்புகள், அதில் கலக்கும் கழிவு நீர், மணல் கொள்ளை போன்றவற்றில் கவனம் செலுத்தபடவேண்டும். ஏரி,குளம், குட்டைகளை தூர்வாருவதும்,புதிதாக குளங்களை வெட்டுவதும் அவசியம். அப்போதுதான் பூமியில் விழும் மழைநீர் கடலில் சென்று வீணாகாமல் சேகரிக்கப்படும்.மேலும் நமது அணைகளின் மீதுள்ள பிரச்னைகளை அரசாங்கம் முயன்றால் முழுமையாக சரிசெய்ய இயலும். நாட்டின் தற்போதைய இன்றியமையாத முக்கிய பிரச்சனை இதுவே...! கவனிக்குமா மத்திய, மாநில அரசுகள் ?!

என்று தணியும் இந்த தண்ணீர் தாகம்...?!!


இன்று உலக தண்ணீர் தினமாம்...!! அழிவினை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஒவ்வொன்றுக்கும் ஒரு தினத்தை முடிவு செய்து அந்த ஒரு நாளுடன் முடித்து(?) கொண்டிருக்கிறோம்...ஆனால் மற்றவை மாதிரி அல்ல தண்ணீர்....நம் குழந்தைகள் மற்றும் அவர்களின் குழந்தைகள் நம்மிடம் கேட்பார்கள் "எங்களுக்கான தண்ணீர் எங்கே ?" என்று...என்ன பதில் சொல்ல போகிறோம் !?

ஒரு சில நீர் ஆதாரங்களையாவது பாதுகாத்து அவர்களுக்காக விட்டு செல்வோம்...அடுத்த தலைமுறை நம்மை வாழ்த்தட்டும்...!!



* * * * * * * 


எனது இந்த பதிவு கழுகு தளத்தில் வெளிவந்தது.