அமராவதி மிக அழகான பெயர் ! அம்பிகாபதியோட அமராவதி இல்லைங்க நம்ம உடுமலை பேட்டை இருக்குதா அங்க இருக்கிற அழகான ஒரு அணைதான் அமராவதி. மறுபடியும் அணையா ?! ஒரு அணை பிரச்சனைக்கே இன்னும் விடை தெரியல...இதுல இன்னொரு அணைக்கு என்ன ஆச்சுன்னு நீங்க பதறது புரியுது...புது பிரச்சனை இல்ல ரொம்ப நாளாவே போயிட்டு இருக்கிற ஒண்ணுதான். இன்னும் ஒரு தீர்வும் எட்டபடாமல் இழுத்துகிட்டே போகுது. தமிழன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவானாம், யாருக்கு புரியுதோ இல்லையோ மத்த மாநிலத்துக்காரங்க நம்மள நல்லா எடை போட்டு வச்சிட்டாங்க. கர்நாடகத்துகிட்ட காவிர கொடுன்னு கெஞ்சி, கேரளாக்கிட்ட அணையை ஒடச்சிடாதனு போராடி, ஆந்திராக்கிட்ட கொஞ்சம் தண்ணி கொடுன்னு கை ஏந்தி இன்னும் எத்தனை காலந்தான் நாம இப்படியே இருக்க போறோமோ தெரியல !
அப்படி என்ன பிரச்சனை?!
கேரளாவுக்கு அங்கே சொந்தமான வயல்வெளிகளும் இல்லை வெறும் காடுதான் ! பின் வேறு என்ன தேவைக்காக இருக்கும் என்று பார்த்தால் ஆளாளுக்கு ஒண்ணு சொல்றாங்க...தண்ணியில இருந்து மின்சாரம் தயாரிக்க போறதா ஒரு பேச்சும், தண்ணீரை பாட்டில பிடிச்சி விக்கிற ஒரு தனியார் கம்பெனிக்கு தாரை வார்த்துகிறதுக்காகவும் அணைகட்ட போறாங்கனு சொல்றாங்க.
அடடா அமராவதி!
மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தேனாறு, சின்னாறு, காட்டாறு , பாம்பாறு போன்ற ஆறுகளின் நீரை தேக்கி வைக்க கட்டப்பட்டதுதான் அமராவதி அணை. இதில் அதிகபடியான நீரைத் தருவது, எக்காலத்திலும் ஓடிக்கொண்டிருக்கும் பாம்பாறு தான். இதன் உதவியால் தான் அமராவதி அணை நிறைகிறது.
170 கி.மி நீளம் கொண்ட இந்த ஆறு ஆனைமுடி சிகரங்களில் உற்பத்தியாகிறது. இரண்டு சிகரங்களுக்கிடையே வெள்ளியை உருக்கி விட்டது போல ஓடிவரும் அழகே அழகு !
ஆனைமுடி சிகரத்தில் இருந்து அமராவதி வரை இருக்கக்கூடிய இடங்கள் பாதுகாக்கப்பட்ட வனபகுதிகள் என்ற பட்டியலில் இருக்கிறது. சின்னாறு வனவிலங்குகள் சரணாலயம் , இந்திராகாந்தி தேசிய வனவிலங்கு சரணாலயம் ஆகியவை வேறு அமைந்திருக்கின்றன. இங்கே எது செய்வதாக இருந்தாலும் மத்தியச்சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெறவேண்டும். இவையெல்லாம் தெரிந்தும் என்ன தைரியத்தில் சட்டமன்றத்தில் அணைகட்ட போவதாக தீர்மானம் நிறைவேற்றினார்களோ தெரியவில்லை ?! (ஒருவேளை மத்தியில் பெரும்பாலோர் கேரளாக்காரர்கள் தானே சாதித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் தானோ ?!)
110 ஏக்கர் பரப்பளவில் பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான அனைத்து வேலைகளையும் ஏற்பாடு செய்து வருகிறது...நான்கு வருடத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டுவிடுமாம்.
வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பம்ப் செட்டுகளை வைத்து நீரேற்று விவசாயம் செய்து வருகிறார்கள் தமிழக விவசாயிகள் ! இந்த அணையை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளின் வயிற்றில் கொஞ்சமும் இரக்கமின்றி அடிக்க பார்க்கிறது கேரளா. விவசாயத்திற்கு எவையெல்லாம் பாதிப்பை கொடுக்கிறது என பகுத்தறிந்து அதனை களைந்து விட்டாலே விவசாயத் தொழில் நிமிர்ந்து விடும்.
70,000 ஏக்கர் நிலங்கள் பாதிக்கபடுவதுடன், நூற்றுக்கணக்கான தமிழக கிராமங்கள் குடிநீர் இன்றி தவிக்கும். வனவிலங்குகளும் குடிநீரின்றி அவதியுற நேரும். அமராவதி சர்க்கரை ஆலையை நம்பி உள்ள 10,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வு பாதிக்கப்படலாம்.
நம்ம தலைஎழுத்து நம் மாநிலம் வழியா போனாலும் அள்ளி குடிக்க வகையற்று போய் கொண்டிருக்கிறோம். மேற்கே இருந்து உற்பத்தியாகி கிழக்கு கடலில் கலக்கும் அனைத்து நதிகளும் நமக்கு வேண்டாதவையாக பிறரால் எடுத்துக் கொள்ளபடுகிறது. காலங்காலமாக தண்ணீருக்காக போராடிக் கொண்டே இருக்க வேண்டுமா? ஏன் எந்த அரசும் வாழ்வாதாரமான இப்பிரச்சனையில் ஏகமனதாக ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை. அவரவர் ஆட்சிகாலத்தில் எதையாவது ஒன்னு இரண்டு தற்காலிக சமாதானம் செய்து கொண்டு போய்விடுகிறார்கள், நிரந்தர தீர்வு எட்டபடாமலேயே !!
நெய்யாறு அணை ?!!
எட்டு ஆண்டுகளாக தீர்க்கப்படாத மற்றொரு ஆற்றின் பிரச்சனைஇருக்கிறது. குமரி மாவட்டம் கேரளாவுடன் இருந்த போது நெய்யாறு அணையை திருவாங்கூர், கொச்சி சமஸ்தான அரசு கட்டியது. பின்னர் பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த போது இடதுகரை கால்வாய் முழுக்க முழுக்க தமிழக அரசின் நிதியில் இருந்து கட்டப்பட்டது. குமரி மாவட்டம் நெய்யாறு அணை தண்ணீரை கட்டாயம் பெறுவதற்கான உரிமையும் உள்ளது.
எட்டு ஆண்டுகளாக தீர்க்கப்படாத மற்றொரு ஆற்றின் பிரச்சனைஇருக்கிறது. குமரி மாவட்டம் கேரளாவுடன் இருந்த போது நெய்யாறு அணையை திருவாங்கூர், கொச்சி சமஸ்தான அரசு கட்டியது. பின்னர் பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த போது இடதுகரை கால்வாய் முழுக்க முழுக்க தமிழக அரசின் நிதியில் இருந்து கட்டப்பட்டது. குமரி மாவட்டம் நெய்யாறு அணை தண்ணீரை கட்டாயம் பெறுவதற்கான உரிமையும் உள்ளது.
சேமிக்கப்படும் நீரில் 60 % கேரளாவில் இருந்தும், 40 % குமரி மாவட்டத்தில் இருந்தும் வருகிறது. தண்ணீரில் பாதி அளவாவது குமரி மாவட்டத்துக்கு வர வேண்டும் என்ற அடிப்படையில் உருவான திட்டமே நெய்யாறு கால்வாய் திட்டம் . ஒன்பது வருவாய் கிராமங்கள், 9 ஆயிரத்து 204 ஏக்கர் நிலங்களும் 162 குளங்களும் பாசனம் பெற்றன.
ஆரம்பத்தில் நிர்ணயித்த படி இந்த கால்வாய் மூலம் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்கியது.ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டு முற்றிலும் நிறுத்த பட்டது...!!?
என்ன ஒரு முரண்பாடு ?!
மகாராஷ்டிரத்தில் உற்பத்தியாகி கர்நாடகம் வழியாக ஆந்திராவை அடைந்து கடலில் கலக்கும் கிருஷ்ணா நதியின் நடுவே ஆல்மாட்டி என்ற இடத்தில் 173 கொள்ளளவு கொண்ட அணையை கட்டியது கர்நாடகா...உடனே வீறு கொண்டு எழுந்த ஆந்திரா உச்சநீதிமன்றம் சென்று 123 டி.எம்.சி தண்ணீரை தான் தேக்க வேண்டும் என்ற தீர்ப்பை பெற்றுவிட்டது. இதுவரை அந்த அளவைத்தாண்டி தேக்குவதில்லை கர்நாடகா. இதே கர்நாடகா தமிழ்நாட்டுகிட்ட என்ன ஆட்டம் காட்டுது ?!!!
2007 இல் காவேரி நதிநீர் ஆணையத்தின் தீர்ப்பின் படி அமராவதி அணையில் இருந்து ஏற்கனவே 5 டி.எம்.சி மட்டும் பயன்படுத்தி வந்த கேரளாவிற்கு 30 டி.எம்.சி தண்ணீர் ஒதுக்க வேண்டுமாம்...!!!? இதை எதிர்த்து இதுவரை நம் அரசு எதுவும்(?) நடுவர் மன்றத்தை அணுக நடவடிக்கை எடுத்தவில்லை என தெரிகிறது. அந்த தீர்ப்பை வைத்து கொண்டு கேரளா அணைகட்ட போறேன், தண்ணி தரமாட்டோம்னு சொல்லிக்கொண்டு இருக்கிறது...!!!?
உப்பு பெறாத விசயத்துக்கு எல்லாம் கொடிப்பிடிக்கும் ஆளும் கட்சி, எதிர்கட்சிகளும், தேவையற்ற ஈகோ போராட்டங்கள், பதவியை தக்க வைத்துக் கொள்ள எதையும் செய்ய துணியும் அரசியல்வாதிகள், வறட்டு ஜம்பங்கள், காட்டுக் கூச்சல்கள், கேட்டு கேட்டு புளித்துப் போன வாக்குறுதிகள், வீணான ஆர்ப்பாட்டங்கள் விதியே என்று சகித்து போய் கொண்டிருக்கும் மக்கள் !!! இத்தனையில் ஒன்று கூட மாற சாத்தியமில்லையா?!
முல்லைபெரியாறு அணை பிரச்சனை என்னவாயிற்று என்று தெரியவில்லை...?! ஐந்து மாவட்ட மக்கள் பாதிப்படைந்து கொண்டிருக்கிறார்கள்...அரசு இதை எல்லாம் கவனித்து, எப்போது நடவடிக்கை எடுத்து நல்லதொரு முடிவை எட்ட போகிறதோ ?!
சேர ,சோழ , பாண்டிய , பல்லவ மன்னர்கள் காலத்தில் தமிழ் நாட்டில் மட்டும் 39,000 ஏரிகளை வெட்டினார்களாம். அந்த ஏரிகளின் மேல் தான் இன்று அரசு அலுவலகங்க கட்டடங்களும் , புதிய பேருந்து நிலையங்களும் இருக்கிறது. மிச்ச ஏரிகளில் கருவேலமரங்களையும், தைல மரங்களையும் அரசே வளர்க்கிறது. நிலத்தடி நீர் உறிஞ்சபட்டு வறண்டு போய்விட்டன.மரங்களை வளர்க்க வேறு இடமா இல்லை. ஏரி,குளங்களில் உள்ள மணலை சுரண்டுவது ஒருபக்கம் அமோகமாக நடைபெறுகிறது. தூர்வாருகிறேன் என்று சொல்லி கொள்ளும் நூறுநாள் வேலை தொழிலாளர்கள் உறங்கி கழிக்கிறார்கள் மரத்தடியில்...!
இவர்கள் தூர் வாரி முடிப்பதற்குள் மழை வந்து, நின்றும் போய்விடும்.வழக்கம் போல பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் வீணாக கடலில் சென்று சேர்ந்துவிடும்.உண்மையில் அரசிற்கு அக்கறை இருந்தால், இயந்திரங்களின் உதவி கொண்டு வேகமாக முடிக்கலாம். மக்களின் வாழ்வாதார விசயத்தில் தூங்கி வழிகிறது அரசு இயந்திரம் !!
நதிகள் இணைப்பு - சுப்ரீம் கோர்ட் உத்தரவு
2002 இல் பல மாநிலங்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டபோது அப்போது பிரதமராக இருந்த திரு.வாஜ்பாய், வெள்ளப்பெருக்கால் வீணாகும் நதிகளின் தண்ணீரை வறட்சி நிலவும் மாநிலங்களுக்கு திருப்பி விடுவதற்கு வசதியாக நதிகள் இணைப்பு திட்டத்தை கொண்டு வந்தார். இதில் இரண்டு திட்டங்கள் போடப்பட்டன. ஒன்று தீபகற்ப நதிகள் இணைப்பு, மகாநதி, கோதாவரி நதிகளில் வெள்ளம் வந்து வீணாகும் தண்ணீரை கிருஷ்ணா, வைகை, காவேரி உள்ளிட்ட 16 நதிகளுக்கு திருப்பி விடுவது. 2 வது திட்டம் வட இந்தியாவில் ஓடும் கங்கை, பிரம்மபுத்திராவில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை தடுத்து நீர்பாசன வசதிகளை மேம்படுத்தவும், மின்சாரம் தயாரிக்கவும் இந்த பெரிய நதிகளின் குறுக்கே அணைகள் கட்டுவது.
அருமையான இந்த திட்டங்கள் இதுவரை ஏனோ நிறைவேற்றப்படவில்லை. தற்போது சுப்ரீம் கோர்ட் "நதிகள் இணைப்பு திட்டத்தை விரைவாக நிறைவேறவேண்டும்" என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது !!
மத்திய அரசு என்ன செய்ய காத்திருக்கிறதோ ?!!
நதிகள் இணைப்பு என்பது நிறைவேறுதோ இல்லையோ அதற்கு முன் இங்கே தமிழ்நாட்டில் ஓடும் ஆறுகளின் இரு மருங்கிலும் இருக்கும் ஆக்கிரமிப்புகள், அதில் கலக்கும் கழிவு நீர், மணல் கொள்ளை போன்றவற்றில் கவனம் செலுத்தபடவேண்டும். ஏரி,குளம், குட்டைகளை தூர்வாருவதும்,புதிதாக குளங்களை வெட்டுவதும் அவசியம். அப்போதுதான் பூமியில் விழும் மழைநீர் கடலில் சென்று வீணாகாமல் சேகரிக்கப்படும்.மேலும் நமது அணைகளின் மீதுள்ள பிரச்னைகளை அரசாங்கம் முயன்றால் முழுமையாக சரிசெய்ய இயலும். நாட்டின் தற்போதைய இன்றியமையாத முக்கிய பிரச்சனை இதுவே...! கவனிக்குமா மத்திய, மாநில அரசுகள் ?!
என்று தணியும் இந்த தண்ணீர் தாகம்...?!!
இன்று உலக தண்ணீர் தினமாம்...!! அழிவினை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஒவ்வொன்றுக்கும் ஒரு தினத்தை முடிவு செய்து அந்த ஒரு நாளுடன் முடித்து(?) கொண்டிருக்கிறோம்...ஆனால் மற்றவை மாதிரி அல்ல தண்ணீர்....நம் குழந்தைகள் மற்றும் அவர்களின் குழந்தைகள் நம்மிடம் கேட்பார்கள் "எங்களுக்கான தண்ணீர் எங்கே ?" என்று...என்ன பதில் சொல்ல போகிறோம் !?
ஒரு சில நீர் ஆதாரங்களையாவது பாதுகாத்து அவர்களுக்காக விட்டு செல்வோம்...அடுத்த தலைமுறை நம்மை வாழ்த்தட்டும்...!!
* * * * * * *
எனது இந்த பதிவு கழுகு தளத்தில் வெளிவந்தது.
Excellent post
பதிலளிநீக்கும்ம்ம்ம் அடுத்த உலகப்போர் தண்ணீருக்காகவே நடக்கும்னு தோணுது....!!!
பதிலளிநீக்குதெரிந்து கொள்ள வேண்டிய பகிர்வு.
பதிலளிநீக்குதமிழ்நாட்டில் தோன்றும் ஆறு நதி ஏதாவது இருக்கிறதா? கூவம் மட்டுந்தானா?
பதிலளிநீக்கு