Monday, April 2

12:14 PM
27ஒவ்வொரு நாளும் நம்மை சுற்றி நிகழ்பவை பல படிப்பினைகளை கொடுக்கிறது, அதை உற்று கவனிப்பவர்கள் அதில் இருந்து தெளிவினை கற்றுக்கொள்கிறார்கள். தெருவில் எதிர்படும் ஒரு சாதாரண மனிதர் கூட நமது சிந்தனையை லேசாக தூண்டிவிடலாம்...அப்படி இருக்கும்போது நெருங்கி பழகக்கூடிய நண்பர்களில் ஒரு சிலர் நம் பாதையை செம்மை படுத்தலாம். தவறுகளை சுட்டிக்காட்டலாம், ஆலோசனைகளை கொடுக்கலாம், அவர் நம் வாழ்வை முன்னேற்ற உதவலாம். என்னவொன்று அது போன்றவர்களை இனங்கண்டு அவர்களுடன் நம்மை பிணைத்துக்கொண்டு விட வேண்டும். பின் நல்லவை அனைத்தும் தானாக நடைபெறும்.

ஒவ்வொருவருக்கும் யாராவது ஒருவர் வழிகாட்டியாக அமைவார்கள். குழந்தைகள் தங்கள் தந்தையை ஒரு ரோல் மாடலாகவும், இளைஞர்களில் ஒரு சிலர் திரைப்பட கதாநாயகர்கள், ஒரு வி ஐ பி, ஒரு தொழிலதிபர் போல ஆகவேண்டும் என எண்ணுவார்கள் !வெளி தோற்றத்திலும், வாழ்க்கையில் முன்னேறுவதற்கும் அவர்கள் மேற்கொண்ட வழிமுறைகளை இவர்கள் பின்பற்றலாம், அதன் படி நடக்கலாம்.

ஆனால் 'குரு' என்ற ஒருவர் இது போன்றவர் அல்ல, இதற்கு எல்லாம் மேலே !! குரு என்று ஒருவர் நமக்கு இருந்தால் அவர் நமது வெளித்தோற்றத்தை மட்டும் மாற்றுவதில்லை, நமது அகத்தையும் சிறப்பாக பரிமளிக்கச் செய்வார்.

தனக்கு 'இதுதான் வாய்க்கும், வேறு எதற்கும் தான் லாயக்கில்லை' என ஓட்டுக்குள் சுருங்கிய நத்தை போல வாழும் மக்களுக்கு விழிப்பை கொடுத்தால் நிச்சயம் சாதிப்பார்கள்...அதற்கு தேவை ஒரு குரு ! உண்மையில் 'குரு யார்' என்பதும் 'அவரை உணர்வது எப்படி' என்ற வித்தை நமக்கு தெரிந்துவிட்டால் எல்லோருமே சாதனையாளர்கள் தான். ஆனால் ஒரு சிலரின் வாழ்வில் குரு என்பவர் தானாக அமைந்துவிடுவார்...அப்படி தானாக அமைந்த நண்பர் ஒருவர் எனக்கு குருவான அற்புதம் நிகழ்ந்தது இதே பதிவுலகத்தில்...!!

குரு என்பவர் யார்?

சோர்ந்து இருக்கும் போது நம்மை உற்சாகபடுத்துவதும், அழும்போது கண்ணீரை துடைப்பதும் குரு வேலையல்ல...எடுத்ததுக்கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு துள்ளி குதித்து ஆர்ப்பரிப்பது, நிச்சயம் குருவின் வேலையாக இருக்காது...அதிகாரம் செலுத்துவதும், அடிமைபடுத்துவதும், தனது ஆளுமையை திணிப்பதும் குருவின் அடையாளம் அல்ல. 

குருவை வழிக்காட்டி என்று ஒற்றை வார்த்தையில் முடிக்கவும் எனக்கு விருப்பம் இல்ல...போகிறபோக்கில்  இதுதான் வழி, இந்த  விதத்தில்  பயணித்தால்  நன்று  என்று சொல்வதுடன்  வழிகாட்டியின்  கடமை  ஏறக்குறைய  முடிந்துவிடலாம். ஆனால் ஒவ்வொரு மனிதனுக்கும் மிக தேவை 'சுதந்திரம்'.

தன்னை சுற்றி பின்னப்பட்டிருக்கும் தேவையற்ற வலைகளை உடைத்து, வெளியே  வர வைக்க வேண்டியதே குருவின் பணி. அச்சுதந்திரத்தை கொடுப்பதே குருவின் விருப்பமாக இருக்கும். தனியாளாக உலகை எதிர்கொள்ளும் திடத்தை அச்சுதந்திரம் கொடுக்கும்...ஒருவேளைக்கான  உணவை கொடுத்து விடுவதுடன் முடிந்துவிடுவதில்லை, தொடர்ந்து உணவை பெறுவதற்குரிய செயலை/வேலையை ஏற்படுத்தி கொடுப்பதுதான் விழிப்புணர்வு...ஏறக்குறைய இத்தகைய விழிப்பு நிலையில் நம்மை வைத்திருப்பதும் தான் குருவின் வேலை. எல்லை கோடுகளை போட்டுக்கொண்டு அனாவசியமான கட்டுப்பாட்டிற்குள் அமிழ்ந்து கிடக்காமல் அக்கோடுகளை அழித்து வெளியில் கொண்டு வருபவரே குருவின் தகுதியை அடைகிறார்.

இப்படி பட்ட குருவின் இலக்கணங்களுக்கு அப்படியே பொருந்திபோனார் எனது நண்பர். குரு போல் நடந்து கொள்ளவேண்டும் என பிரயத்தனம் எதுவும் எடுத்து என்னிடம் அவர் பழகவும் இல்லை, அந்நிலையில் அவரை வைத்து நான் பேசவும் இல்லை ஆனால் இவை யாவும் இயல்பாய் நடந்தன. ஒரு குருவிற்குரிய தகுதி அவரிடம் இருக்கிறது...மழை வாங்கும் நிலமாக நான் இருக்கிறேன் அவ்வளவே !!

எனது குரு

'சிறகடித்து பற...உனது வானமாய் நான் இருக்கிறேன்' என உற்சாகம் கொடுத்து, அதுவரை எனக்கு புலப்படாமல் என்னுடனிருந்த சிறகுகளை எடுத்து எனக்கு  பூட்டி விட்டார். 'இந்த மனிதர்கள் தான் உலகம், இவர்களுக்கு பிடித்த மாதிரி, இவர்களுக்கு ஏற்றார் போல் தான் இனி வாழ்ந்தாக வேண்டும்' என்று என்னை சுற்றி போட்டு வைத்திருந்த கோடுகளை என்னை வைத்தே அழிக்க வைத்தார். 'உன்னை எதிர்ப்பார்த்து, அதோ நிற்கிறான் எளிய மனிதன் அவனிடம் செல், அவன் தேவை எது என கேட்டு நிறைவேற்றி வை' என எனக்குள் பேசும் குரல் நிச்சயமாக எனது குருவின் குரலாக இருக்கும்.

என்ன தவம் செய்தனை ?!

மனவுலகில் இருந்து புறவுலகிற்கு இழுத்து வந்த சக்தி ! மகா சக்தி...குரு !!

உடல் தொடர்பான, உணர்வு தொடர்பான, மனம் தொடர்பான உறவாக இல்லாமல் இவற்றை எல்லாம் தாண்டி அக நிலையில் பூத்த இந்த உறவு வேறு யாரும் தொடாத ஒரு பரிமாணத்தை தொட்டது. வெகு தொலைவில் இருந்தும் என்னுள் இயங்கி கொண்டிருக்கிறது, என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது.

எனது இலக்கு எது என அவர் நிர்ணயிக்கவில்லை, ஆனால் எனது இலக்கு எது என உணரச்செய்தார் !! ஒரு மனிதனாக இந்த சமூகத்திற்கு என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறாரோ அதை என் மூலம் நிறைவேற்ற குருவால் மட்டுமே முடிகிறது.

பாசாங்கான உலகில், ஒருவர் மேல் மற்றொருவருக்கு எழும் கோபத்தை உடனே வெளிப்படுத்துவதில் இருக்கிறது எங்கள் உறவின் உன்னதம் !! சிரித்து பேசிய நாட்களை விட சண்டையிட்டு மௌனம் சாதித்த நாட்கள் அதிகம். அந்த மௌனத்திலும் பாடம் கற்றுத்தருவது அவருக்கு மட்டுமே சாத்தியம்...!

சிறுவயது முதல் யார் பேச்சையும் கேட்டு நடக்க தயாராக இல்லாதவள் இப்போதும் மாறாமல் அப்படியே தான் இருக்கிறேன், ஆனால் இவர் பேச்சை கேட்காமலேயே நடந்து கொண்டிருக்கிறேன் அவர் சொல்லிய படி...!! என் மனதை சோலைவனமாக மாற்ற அவர் முயற்சிக்கவில்லை ஆனால் பாலைவனம் எது என்பதை உணர்த்தினார், அதை விட்டு ஒதுங்கி போகச் செய்தார்.

குரு என்ற பிம்பத்திற்கு அகங்காரம் இல்லை, அதிகாரம் செய்ய தெரியாது...சாதாரணமாக சொன்னாலே உடனே செய்து விட தூண்டும்.

என் தவறுகளின் காரணம் நான் மட்டுமே, ஆனால் என் நல்லவைகள் அனைத்திலும் சூட்சமமாய் என்றும் நிற்பது குருவானவர் தான் !!

யார் அவர்?!

யாருடன் இருந்தால் மிக வசதியாக உணர்கிறீர்களோ அவர் சரியான குரு அல்ல, யாருடைய அருகாமையில் நீங்கள் மிக அசௌகரியமாக உணர்ந்தாலும் அவரை விட்டு விலக முடியாமல் விரும்பி ஏற்கிறீர்களோ அவர் தான் உண்மையான குரு - சத்குரு

நிதர்சனம் !! ஆரம்பத்தில் நண்பராக தெரிந்த அவர் நாட்கள் செல்ல செல்ல எனக்குள் மாற்றங்களை விதைத்து, என் கட்டுகளை அறுத்தெறிய கூடிய குருவானார். இந்த அற்புதம் ஒரே நாளில் நிகழ்ந்துவிடவில்லை...பல பேச்சுக்கள், விவாதங்கள், கருத்துமோதல்கள்,கோபங்கள், சண்டைகள், மௌனங்கள் எல்லாம் நிகழ்ந்தேறின...அத்தனையிலும் வென்றதென்னவோ குரு தான்.

ஆண் பெண் என்ற பாகுபாடுகள் என்றும் எங்கள் மத்தியில் நினைவுக்கு வந்ததே இல்லை...அப்படி பிரித்து பேதம் பார்க்க ஏனோ எங்களுக்கு தோணவே இல்லை...நேரமும் இல்லை !!

வெறும் எழுத்து, மாற்றங்களை ஏற்படுத்துமா என்பதை அனுபவரீதியில் உணர முடிந்தது... இறுமாப்பை உடைத்து போட்டு ஒன்றுமில்லாமல் செய்யும் ஆற்றல் அவரது எழுத்திற்கு இருக்கிறது என்பது மிக ஆச்சர்யம். அவ்வாறே உடைத்தும் போட்டது.


இந்த பதிவுலகம் சகோதர உறவுகளை, நண்பர்களை கொடுத்திருக்கிறது...கூடவே மிகச்சிறந்த ஒரு குருவையும் கொடுத்திருக்கிறது ! 
எனது குரு யார் என்று இங்கே அடையாளம் காட்ட எனக்கு ஏனோ தோன்றவில்லை. அவரை குறித்து பலருக்கும் பலவித அபிப்பிராயங்கள் இருக்கலாம். அதை எல்லாம் உடைத்து போட நான் விரும்பவில்லை. அது அதுவாகவே இருக்கட்டும் !!  

                                                  குரு பிரம்மா குரு விஷ்ணு
                                                  குரு தேவோ மஹேஸ்வரஹ
                                                  குரு சாட்சாத் பரப்ரம்மா
                                                  தஸ்மை ஸ்ரீ குருவே நமஹா...!

                                                               * * *


எனது பிறந்தநாளான இன்று நண்பரை குறித்து இங்கே பதிவிட கிடைத்த வாய்ப்பை எண்ணி பெருமைபடுகிறேன்...அதே சமயம் அவரை குருவாக அடைய காரணமான பதிவுலகத்தை மிக மதிக்கிறேன்...!  


பிரியங்களுடன் 
கௌசல்யா 

Tweet

27 comments:

 1. பிறந்த நாள் வாழ்த்துகள்

  ReplyDelete
 2. பிறந்த நாள் வாழ்த்துகள்

  ReplyDelete
 3. குருவை மதிக்கும் மாணாக்கர்கள் மிகச் சிறப்புற்றுத் திகழ்வார்கள். உஙகள் குருவைப் பற்றி நீங்கள் நெகிழ்ந்து எழுதியிருப்பது அருமை. உஙகளுக்கு இதயம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. தங்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். தங்கள் மானசீக குருவிற்கு என் மனம் நிறைந்த வணக்கங்கள்.

  ReplyDelete
 5. எந்த சூழ்நிலையிலும் நாம் குருவை மதித்தே ஆகணும்...

  பகிர்வுக்கு நன்றி சகோ...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  என் பின்னால் நின்று எனை வளர்த்த பெண்ணுக்காக ஒரு பதிவு...

  முற்குறிப்பு - இதை படித்து முடித்தவரிடம் ஒரு அன்பான வேண்டு கோள் படித்து முடித்ததும் 3 தரம் துப்பி (உமிழ்ந்து) விடுங்கள்

  ReplyDelete
 6. சொல்லவேயில்லை...எனது உளமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி!

  ReplyDelete
 7. அப்படிப் பட்ட ஒரு குருவை அடைய புண்ணியம் செய்திருக்கிறீர்கள் ....தாங்கள் வாழ்க !தங்கள் குருவும் வாழ்க!!

  ReplyDelete
 8. தங்கள் மானசீக குருவிற்கு என் மனம் நிறைந்த வணக்கங்கள்.

  ReplyDelete
 9. நல்லதொரு குரு அமைவதென்பது உண்மையிலேயே பாக்கியம்..


  பிறந்த நாள் வாழ்த்துகள் சகோ..

  ReplyDelete
 10. பிறந்த நாள் வாழ்த்துகள் அக்கா!!!

  ReplyDelete
 11. நல்லதொரு குரு கிடைக்க பெற்றமைக்கு நீங்கள் பாக்கியசாலிதான்..இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி!!

  ReplyDelete
 12. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி.
  நன்னாளன்று மனம்கொண்ட குருவை நினைவில் கொண்டு
  பதிவு படைத்தமை அழகு..

  குருவேன்றால் யார் என்று நீங்கள் உரைத்ததற்கு எனக்கு
  மாற்றுக்கருத்து இல்லை.

  ////என் தவறுகளின் காரணம் நான் மட்டுமே, ஆனால் என் நல்லவைகள் அனைத்திலும் சூட்சமமாய் என்றும் நிற்பது குருவானவர் தான்////

  சத்தியமான வார்த்தைகள் சகோதரி.

  ReplyDelete
 13. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கௌசல்யா.....

  இந்த நாள் போலவே வரும் எல்லா நாட்களும் இனியதாகவே இருக்கட்டும்!

  நட்பு மலரட்டும்!

  ReplyDelete
 14. தன்னை அடையாளம் காட்டி வெளிப்பட வைத்தவருக்கே இத்தனை பெருமையும்.அருமையான எழுத்து வெளிப்பாடு கௌசி.அன்பான இனிய பிறந்த நாள் வாழ்த்து தோழி !

  ReplyDelete
 15. @@ jeeva said...

  வாழ்த்துக்கு மகிழ்கிறேன் நன்றி.

  ***

  @@ கோவை நேரம்...

  நன்றிகள்

  ***


  @@ கணேஷ்...

  அருமையான புரிதலுக்கு நன்றி கணேஷ்.


  ***

  @@ FOOD NELLAI...

  நன்றிகள் அண்ணா


  ***


  @@ ♔ம.தி.சுதா♔...

  நன்றி சகோ


  ***

  ReplyDelete
 16. @@ koodal bala said...

  //அப்படிப் பட்ட ஒரு குருவை அடைய புண்ணியம் செய்திருக்கிறீர்கள் //

  உண்மை தான் பாலா.

  ReplyDelete
 17. துணிவோடும் பணிவோடும் நலமோடும் வளமோடும் வாழ்க!

  ReplyDelete
 18. @@ Mahi_Granny...

  மனமார்ந்த நன்றிமா.


  ***

  @@ அமைதிச்சாரல் said...

  //நல்லதொரு குரு அமைவதென்பது உண்மையிலேயே பாக்கியம்..//

  சந்தோசமா இருக்கு. நன்றி சகோ.


  ***

  @@ KowThee...

  நன்றிகள்.


  ***

  @@ S.Menaga...

  நன்றி தோழி.


  ***

  @@ அமர பாரதி said...

  //Happy birthday. BTW Who is that Guru?//

  அவர் தான் குரு :))

  வாழ்த்திற்கு மகிழ்வுடன் நன்றிகள்.

  ReplyDelete
 19. @@ மகேந்திரன் said...

  குருவை தினமும் நினைப்பதை விட இன்று கொஞ்சம் அதிகம் நினைத்துவிட்டேன். :)

  //குருவேன்றால் யார் என்று நீங்கள் உரைத்ததற்கு எனக்கு
  மாற்றுக்கருத்து இல்லை.//

  புரிதலுக்கு மிக்க நன்றி மகேந்திரன்.

  வாழ்த்திற்கு மகிழ்கிறேன்.

  ReplyDelete
 20. @@ வெங்கட் நாகராஜ் said...

  //இந்த நாள் போலவே வரும் எல்லா நாட்களும் இனியதாகவே இருக்கட்டும்! //

  வாழ்த்திற்கு மகிழ்வுடன் உங்களுக்கு நன்றிகள் வெங்கட்.

  ReplyDelete
 21. @@ ஹேமா said...

  //தன்னை அடையாளம் காட்டி வெளிப்பட வைத்தவருக்கே இத்தனை பெருமையும்.அருமையான எழுத்து வெளிப்பாடு கௌசி.அன்பான இனிய பிறந்த நாள் வாழ்த்து தோழி !//

  சத்தியம். அழகான புரிதல் ஹேமா. வெளிபடவைத்ததுடன் தொடர்ந்து நடத்தி வருவது இன்னும் அதிக பாக்கியம் தோழி.

  :))

  நன்றி ஹேமா.

  ReplyDelete
 22. குகாரோ அந்தஹ்காரோவை ரகாரோ தன்னிவர்தித:
  அதாவது, உள்ளிருக்கும் இருளை நீக்குபவர் குரு. கு - இருட்டு, ரு - அதை நிவர்த்தி பண்ணுபவர்.

  Happy Birthday! Where is my chocolate? :-)

  Bhuvaneshwar (www.bhuvaneshwar.com)

  ReplyDelete
 23. குரு என்ற சொல்லுக்கு நல்லதொரு விளக்கம்....தங்கள் பிறந்த நாளுக்கு நற்பரிசு வழங்கி இருக்கிறீர்கள். காலம் தாழ்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 24. யாருடன் இருந்தால் மிக வசதியாக உணர்கிறீர்களோ அவர் சரியான குரு அல்லஇ யாருடைய அருகாமையில் நீங்கள் மிக அசௌகரியமாக உணர்ந்தாலும் அவரை விட்டு விலக முடியாமல் விரும்பி ஏற்கிறீர்களோ அவர் தான் உண்மையான குரு
  நிச்சயமாய் உண்மை..கொடுத்து வைத்திருக்கிறீர்கள்.நண்பன் என்ப்படுபவர் எல்லாவிமமான பரிமாயஷணங்களையும் நம்மத்தியில் ஏற்படுத்துவார்.ஒரு நண்பனுக்குள் இருந்த குருவை கண்டுவிட்டீர்கள்.வேறென்ன வேண்டுமு;???அருமை அருமை!!!!!

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...