வெள்ளி, மார்ச் 30

10:17 AM
21


சங்கரன்கோவில் தேர்தல் முடிந்ததும் கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே செயல்படுத்த நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டார். அன்றே அணுமின் நிலையம் திறக்கப்பட்டு ரஷ்ய விஞ்ஞானிகள் 100 மற்றும் பணியாளர்கள் 950 பேரும் பணிக்கு திரும்பினர். வேலைகளும் நடைபெற தொடங்கி விட்டன...எப்படியும் ஆகஸ்டில் உற்பத்தி துவங்கி விடும்...!?

பணிகள் ஒரு பக்கம் விறுவிறுப்பாக தொடங்க மற்றொரு பக்கம் கூடங்குளத்தில் அதிரடி வியூகம் அமைக்கப்பட்டு மக்கள் நாலாபக்கமும் நகரமுடியாத படி சிறை வைக்கப்பட்டனர்...5000 போலிஸ், துணை ராணுவம் !!

11 பேர்களை கைது செய்து கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கைதை எதிர்த்த கூட்டப்புளி கிராம மக்களை சுமார் 178 பேர்களை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்...இதில் 45 பெண்கள், 20 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் !!

இவையெல்லாம் கடந்த வாரம் தினசரியில் தொடர்ச்சியாக வந்த செய்திகள்...! 

* * * * *

ஏன் இத்தனை களேபரம்...?

கூடங்குளம் அணு உலை திறந்தால் மின்சாரம் கிடைக்கும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், பொதுமக்கள் தங்கள் உயிர் பிரச்னையாக எண்ணி போராடி கொண்டிருக்கும் இதனை ஏன் ஒரு மனிதாபிமான அடிப்படையில் பார்க்க கூடாது...?!

இடைதேர்தல் முடியும் வரை போராட்டகாரர்களுக்கு சாதகமாய் இருப்பதை போல் காட்டிக்கொண்டு அதற்கு பின் அதிரடியாய் காரியத்தில் இறங்கி இருக்கிறது. நிச்சயமாக ஒரே நாளில் திட்டமிடப்படவில்லை, முன்னரே திட்டம் தீட்டப்பட்டு தயார் நிலையில் வைத்திருந்து தேர்தல் முடிந்ததும் ஊரை சூழ்ந்து விட்டார்கள்.

இடைதேர்தலுக்கு தமிழ்நாட்டின் அத்தனை அரசியல் கட்சியினரும் சங்கரன்கோவிலில் முகாமிட்டிருந்தார்கள். அங்கே வந்த ஒருவர் கூட 8 மாதங்களாக , 250 நாட்களுக்கு மேலாக மக்கள் போராடி கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு ஒரு ஆறுதலை சொல்வோம் என்று கூட எண்ணி அங்கே செல்லவில்லை. இவர்கள் தானா மக்களின் காவலர்கள்...!? மக்களுக்காக அரசு என்று சொல்வதெல்லாம் மேடை விட்டு இறங்கியதும் மறந்து போய்விடும் போல...கூடங்குளத்தில் போராடி கொண்டிருப்பவர்களும் இந்தியாவை,தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான், யாரோ எவரோ என்பது போல் மத்திய மாநில அரசுகள் எண்ணி செயல்படுவது வருந்ததக்கது.

எத்தகைய போராட்டம் இது ?

மக்களே போராடும் ஒரு அறவழி போராட்டம் இது . அணு உலை நல்லதா கேடா என விவாதங்கள் பேசினது போதும்...பதில் விளக்கம் எதுவாக வேண்டுமானால் இருந்துவிட்டு போகட்டும், ஆனால் அணு உலையின் மீதான மக்களின் அச்சத்தை போக்க வேண்டியது மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு அரசின் கடமை. இதை செய்ய தவறிய அரசு, இப்போது அதிரடியாக காவல்துறையை கட்டவிழ்த்து விட்டு இருப்பது மட்டும் என்ன நியாயம்...?! ஒரு மாநிலத்துக்குள் ஒரு மூலையில் இத்தனை நாளாக நடந்து வருவதை பற்றி துளி கூட அக்கறை இன்றி தங்களை முன்னெடுப்பதில் முன்னணியில் இருக்கின்றன மத்திய மாநில அரசுகள்...!


அமெரிக்காவின் கைக்கூலி உதயகுமார் என்றார்கள்...ரஷ்யாவின் கை இந்தியாவில் ஓங்கிவிடகூடாது அதை தடுக்கவே கூடங்குளம் மக்களை, அணு உலைக்கு அமெரிக்கா எதிராக திருப்பிவிட்டதாகவும்...வெளிநாட்டு பணம் போராட்டத்திற்கு உதவுகிறது...குறிப்பிட மதத்தினரின் தூண்டுதல் இப்படி அப்படினு பல குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டது...அத்தனையும் தாண்டி இறுதியாக தற்போது நக்சல் தீவிரவாதிகளின் தொடர்பு இருக்கிறது என்கிறார்கள்...!! 

பேங்க் கொள்ளை அடித்தவர்களை என்கவுண்டரில் போட்டு தள்ளிய வீரம் செறிந்த தமிழ்நாட்டு போலீசுக்கு நக்சல் தீவிரவாதிகள் ஊடுருவியதும், இத்தனை நாள் போராட்டத்திற்கு உதவியதும் இதுவரை எப்படி தெரியாமல் போனது ?!!!!

8 மாதத்துக்கும் மேலாக நடந்து வரும் இந்த போராட்டத்தில் ஒரு சிறு அசம்பாவிதமும் இல்லாத அளவு மிக அமைதியான முறையில் நடந்து வருகிறது ! இவர்களை பார்த்து காவல்துறை சொல்கிறதாம் 'அணு உலையின் மீது அணு குண்டை வீச முயற்சி செய்தார்கள் அதனால் கைது செய்தோம்' என்று...!?

மக்களை தீவிரவாதிகளை போல் சித்தரித்து நடந்துகொண்டிருக்கும் இந்த களேபரம் பற்றி தமிழகத்தின் பிற பகுதி மக்கள் சிறிதும் அலட்டி கொள்ளவில்லை...இலங்கையில் கொத்து கொத்தாய் தமிழர்கள் பிணமாய் சரிந்த போது வேடிக்கை பார்த்த அதே கூட்டம் தன் தாய் நாட்டிற்குள் நடப்பதையும் கை கட்டி வாய் மூடி வேடிக்கை பார்க்கும் அவலம் ! மக்களுக்காக அரசு என்பது இல்லாமல் அரசு என்ற உயிரற்ற ஒன்றுக்காக இயங்கும் மக்கள் என்று மாறி விட்டது காலத்தின் கோலம். 

வேறு திசை நோக்கி... 

இப்போது பிரச்சனை வேறு திசையை நோக்கி பயணிக்க தொடங்கி விட்டது...மக்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்தி அச்சத்தை போக்குவதற்கு  மாறாக  அவர்களை துன்புறுத்துவது என்பது தொடங்கிவிட்டது.பொதுமக்களின் உயிருக்கும் உடமைக்கும் சேதம் ஏற்படாமல் காக்க வேண்டியதை மறந்து அரசே மக்களுக்கு எதிராக காவல் துறையை முடுக்கி விட்டு இருக்கிறது. பொதுமக்களை காக்கிறோம் என்ற போர்வையில் பிற வெளி ஊர் மக்களிடம் இருந்து இம்மக்கள் தனிமை படுத்த படுகிறார்கள் ! ஒரு போர் சூழல் அளவிற்கு ஊரடங்கு உத்தரவும், காவல் படைகளும் தேவையா என்பதே அங்குள்ள மக்களின் கேள்வி.


இடிந்தகரைக்கு வரும் அத்தனை வழிகளும் அடைக்க பட்டுவிட்டன...பால் விநியோகம், மின் விநியோகம், குடிநீர் விநியோகம் போன்றவரையும் நிறுத்தி அந்த ஊரே ஒரு தனி தீவு போல துப்பாக்கி ஏந்திய காவல்துறையால் சுற்றி வளைக்கபட்டது அதீதமாக இருக்கிறது. பிற ஊர்களில் இருந்து மக்கள் செல்லவும், அங்கிருக்கும் மக்கள் வெளியேறவும் வழியின்றி தவிக்கும் ஒரு நிலை...ஒரு மாநிலத்தில் இருந்து ஒரு பகுதி மட்டும் ஒரு எதிரி நாடு போல் பிரித்து பார்க்கபட்டுவிட்டது.

"அணுமின் நிலையம் பிடிக்காவிட்டால் இழப்பீடு வாங்கிவிட்டு ஊரைவிட்டு வெளியேறி எங்கேயாவது போய் வாழுங்கள் " என்றாராம் அரசியல்வாதி ஒருவர்.

வாழ்வது தமிழ் நாடா அல்லது இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியா என தெரியவில்லை...தமிழர்கள் தங்கள் நாட்டுக்குள்ளேயே சுதந்திரம் மறுக்க படுவது கொடுமையிலும் கொடுமை...இவ்வாறு மக்களை துன்புறுத்தி தான் மின்சாரம் பெற வேண்டுமா என கூடங்குளத்தை ஆதரிப்பவர்கள் சிறிது யோசியுங்களேன்...

தற்போது அதிகரித்திருக்கும் மின்வெட்டை சாதகமாக மாற்றுகிறது அரசு. (ஏன் இதுவும் ஒரு உளவியல் ரீதியிலான மாற்றத்தில் ஒன்றாக இருக்ககூடாது !?) மக்களும் கூடங்குளம் அணுஉலை வந்தால் மின்சாரம் உடனே கிடைத்துவிடும் என்பதை போல ஒரு மாயைக்குள் வந்துவிட்டார்கள். அவ்வாறு வர வைத்தது  ஆட்சியாளர்களின் புத்திசாலித்தனம். உளவியல் ரீதியாக அணு உலை வேண்டும் என்ற நிலைக்கு கூடங்குளம் தாண்டி வெளியில் உள்ள மக்கள் நினைக்க தொடங்கிவிட்டார்கள்...உதயகுமாரை சரணடைய சொல்லி வற்புறுத்துவதாக செய்திகள் வந்தன...பதுங்கு குழியில் இருப்பதை போல 'வெளியே வா , வந்து சரணடை' என்கிறார்கள். உதயகுமார் சாதாரணமாக மக்கள் முன் நடமாடுகிறார், மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்கிறார்...!!? 

(ஒரு பத்திரிகை வேற அப்ப அப்ப சலிக்காமல் செய்தி வெளியிட்டு அவதூறு பரப்பி கொண்டிருக்கிறது. அதை படிகிறவங்களை பைத்தியம் என்று நினைச்சு செய்தி வெளியிடுகிறதா அல்லது செய்தியை படித்து பைத்தியமாகனும்,ஒருத்தனும் தெளிவா புத்தியோட இருக்ககூடாது என முடிவு கட்டி இருக்கா தெரியல...)

அப்பாவி கிராம மக்களை தங்கள் சுயநலத்திற்க்காக பயன்படுத்தபடுகிறார்கள் என பேசபடுகிறது. மூன்று மாதத்திற்கு முன் நான் அங்கு சென்ற போது பத்து வயது சிறுவர், சிறுமிகள் கூட அணு உலை பற்றியும் , அணு கழிவுகள் பற்றியும் தெள்ள தெளிவாக எடுத்து சொன்னார்கள். வயதானவர்கள் படிக்காதவர்கள் என யாவரும் புள்ளிவிவரங்களை புட்டு புட்டு வைக்கிறார்கள். 

'இத்தனை கோடி பணம் செலவு பண்ணியிருக்கு யார் பணம் எல்லாம் மக்களின் பணம்' என ஆதங்கபடுபவர்களிடம் சேது சமுத்திரத் திட்டத்திற்கு கடலில் கொட்டிய பணம் எவ்வளவு என நினைவு இருக்கா ? னு கேட்கணும். ஒவ்வொரு நதியையும் சுத்தபடுத்த என்று பல கோடிகள்,எத்தனை எத்தனை மக்கள் நல்வாழ்வு திட்டங்கள் பாதியில் நிற்கின்றன, அதில் போடப்பட்ட பணம்...இப்படி வீணான பணம் பற்றி ஒரு பெரிய லிஸ்ட் போடலாம்.அப்புறம் இப்ப லேட்டஸ்டா கனிம சுரங்க ஊழல் 10.7 லட்சம் கோடியாம் !! வெளிநாட்டு வங்கியில் இருக்கும் கருப்பு பணம் யாருடையது...?! அந்த பணம் எல்லாம் முதலில் வெளில வரட்டும் அப்புறம் பேசலாம், கூடங்குளத்தில் வீணான பணத்தை பற்றி...

தொடரும் போராட்டம்...

போராட்ட மக்கள் தாங்களாகவே போராட்டத்தை கைவிட வேண்டும் என்பதற்காக என்ன இடைஞ்சல்கள் கொடுக்க முடியுமோ அத்தனையில் கொடுத்து கொண்டிருக்கிறது மத்திய மாநில அரசுகள். உரிமைக்காக குரல் கொடுப்பவர்கள் புரட்சியாளர்கள் என்பது மாறி அவ்வாறு குரல் கொடுப்பவர்கள் யாவரும் தீவிரவாதிகள் என்று சித்தரிக்கபடுவது ஜனநாயக நாடு என்பதில் ஐயத்தை ஏற்படுத்துகிறது.

அகிம்சை வழியில் போராடினால் அதன் முடிவு இதுதான் என்பதை தெரிந்து கொள்ளும் நம் இளைஞர்கள் புரட்சி என ஆயுதங்களை தூக்கக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. இதைத்தானா விரும்புகிறோம்...?!

15 பேர் எட்டுநாளாக இருந்த உண்ணாவிரதம் முடிவிற்கு வந்து விட்டது , ஆனால் 5 கட்டமாக போராட்டம் தொடங்கி இருக்கிறார்கள்...! 

அணுமின் நிலையங்களை அமைக்கும் போது அதை சுற்றி 30 கி.மீ தூரத்தில் வசிக்கும் மக்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்க வேண்டும் என்பது ஒரு நிபந்தனை. இந்த பயிற்சியினை கொடுக்க முதலில் ஏற்பாடு செய்யட்டும்...அதன்பின் தெரிந்துவிடும் இது எத்தகைய தன்மை வாய்ந்தது என்று...! இதுவரை இடிந்தகரை மக்கள் மட்டும் போராட்டத்தில் இருக்கிறார்கள் இனி சுற்றி இருக்கும் பிற கிராமங்களும் போராடபோகின்றன...இது தான் நடக்க போகிறது...!

உண்மையை சொல்லப்போனால் இனிதான் போராட்டம் முழு வேகத்தில் செல்ல போகிறது...

ஐ.நா சபையின் பார்வைக்கு ஒரு தமிழர் கூடங்குளம் பிரச்னையை கொண்டு சென்றிருக்கிறார்...இனி சர்வதேச அளவிலும் இதற்க்கு ஆதரவு கிடைக்ககூடும். கனடாவில் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மார்ச் 26 அன்று நடந்திருக்கிறது.

மக்களின் அவல நிலை 

கிட்டத்தட்ட 20 ஆயிரம் மக்கள் ஒன்றாக கூடி இருக்கும் இடத்தில் ஏற்படக்கூடிய சுற்றுப் புற சுகாதாரக் கேடுகள் எத்தனை ? இதனால் நோய் பரவும் ஆபத்தும் இருக்கிறது.

சாலை வழியாக உணவு பொருட்கள் கொண்டுசெல்ல தடை செய்யபடுவதால் பிற கடலோர கிராம மக்கள் படகுகளில் சென்று உணவு தண்ணீர் போன்றவற்றை கொடுக்கிறார்கள் என்ற செய்தியை கேள்விப்பட்டு ஆறுதல் அடைய முடியவில்லை மாறாக முள்வேலிக்குள் அடைபட்டு கிடந்த நம் ஈழத் தமிழர்களின் அவல நிலைதான் நினைவுக்கு வந்து வேதனை அளிக்கிறது.


லேசா  வியர்த்தாலே என்னடா வாழ்க்கைன்னு சலித்து கொள்பவர்க்கு எங்கே தெரியும், மணலிலும், வெயிலிலும் இவர்கள் படும் அவஸ்தை...!

உண்ணாவிரதம் இருந்தால் முகம் வாடி இருக்கணுமே உடல் சோர்ந்திருக்கனுமே என புகைப்படத்தை உற்று நோக்கி கிண்டலடித்து கும்மாளமிடும் வெட்டி பேச்சு வீணர்கள் அதிகம் உலவும் இடம் என்பதை எண்ணி வருந்துகிறேன் !! ஒரே மாவட்டத்தில் ஒரு பகுதியில் உணவுக்காகவும் , தண்ணீருக்காகவும் கை ஏந்தி எம்மக்கள் நிற்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் என்போன்றோரின் இயலாமை...கொடுந் துயரம் !! 

உழைத்து கௌரவமாக வாழ்ந்த மக்களை தன் குழந்தையின் பசிக்கு பால் கிடைக்காதா என பரிதவித்து கொண்டிருக்கும் தாய்மார்களின் வயிற்றில் எரியும் நெருப்பை எந்த நீர் கொண்டு அணைக்க...!??

உங்களுக்கு தேவை மின்சாரம்...அது யார் பிணத்தின் மீதிருந்து கிடைத்தால் என்ன ?! நாசமாய் போகட்டும்...மனிதம் !?



* * * * *

இப்பதிவு எனது தனிப்பட்ட பார்வை...இம்மக்களின் துயரத்தை நேரில் பார்த்தும் கேட்டும் அறிந்த பின்  ஏற்பட்ட வருத்தத்தை வார்த்தையாக்கி இருக்கிறேன்...!! இப்போராட்டம் இனி தொடர்ந்து பல இடங்களிலும் பரவலாம்...மக்களின் துயரத்துக்கு விடிவு காலம் நிச்சயம் உண்டு என்ற நம்பிக்கை மட்டுமே மிச்சம் இருக்கிறது...!

கூடங்குளம் பற்றிய குறும்படத்தின் லிங்க்...நேரம் இருப்பின் பாருங்கள்...நண்பர்களுக்கும்  பகிருங்கள்...!! நன்றி.
http://www.youtube.com/watch?v=Qe-IN-iA2Yo&feature=share

* * * * *


படங்கள் - நன்றி கூகுள்



Tweet

21 கருத்துகள்:

  1. அணு உலையின் மீதான மக்களின் அச்சத்தை போக்க வேண்டியது மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு அரசின் கடமை. இதை செய்ய தவறிய அரசு, இப்போது அதிரடியாக காவல்துறையை கட்டவிழ்த்து விட்டு இருப்பது மட்டும் என்ன நியாயம்...?!//

    நியாயம் நேர்மை கருமை எருமை இதெல்லாம் இருந்தால் நாங்கள் அரசியல்வியாதிகள் இல்லை....

    பதிலளிநீக்கு
  2. அணுமின் நிலையம் பிடிக்காவிட்டால் இழப்பீடு வாங்கிவிட்டு ஊரைவிட்டு வெளியேறி எங்கேயாவது போய் வாழுங்கள் " என்றாராம் அரசியல்வாதி ஒருவர்.//

    மிகப்பெரிய போராட்டவியாதி அவர், தோழர் வேறாம் போங்கடா உங்க கம்யூனிஸ நாட்டுக்கு, நீயெல்லாம் ஒரு மக்கள் நலம் விரும்பியே கிடையாது, ஒரு உத்திரவாதம் இல்லாமல் மப்புல பேசினாரோ என்னவோ...

    பதிலளிநீக்கு
  3. (ஏன் இதுவும் ஒரு உளவியல் ரீதியிலான மாற்றத்தில் ஒன்றாக இருக்ககூடாது !?)//

    சத்தியமான உண்மை இது, இது எல்லாருக்கும் தெரியும் ஆனால் வெளியே சொல்லமாட்டார்கள்....!!!

    பதிலளிநீக்கு
  4. (ஒரு பத்திரிகை வேற அப்ப அப்ப சலிக்காமல் செய்தி வெளியிட்டு அவதூறு பரப்பி கொண்டிருக்கிறது. அதை படிகிறவங்களை பைத்தியம் என்று நினைச்சு செய்தி வெளியிடுகிறதா அல்லது செய்தியை படித்து பைத்தியமாகனும்,ஒருத்தனும் தெளிவா புத்தியோட இருக்ககூடாது என முடிவு கட்டி இருக்கா தெரியல...)//

    ஹா ஹா ஹா ஹா ஒரு மார்க்கமாத்தான் இருக்காங்க போல, ஒருவேளை ரஷ்யாகாரன்கிட்டே இருந்து பணம் வாங்கி இருக்கலாம் # டவுட்டு...!

    பதிலளிநீக்கு
  5. இத்தனை கோடி பணம் செலவு பண்ணியிருக்கு யார் பணம் எல்லாம் மக்களின் பணம்' என ஆதங்கபடுபவர்களிடம் சேது சமுத்திரத் திட்டத்திற்கு கடலில் கொட்டிய பணம் எவ்வளவு என நினைவு இருக்கா ? னு கேட்கணும். ஒவ்வொரு நதியையும் சுத்தபடுத்த என்று பல கோடிகள்,எத்தனை எத்தனை மக்கள் நல்வாழ்வு திட்டங்கள் பாதியில் நிற்கின்றன, அதில் போடப்பட்ட பணம்...இப்படி வீணான பணம் பற்றி ஒரு பெரிய லிஸ்ட் போடலாம்.அப்புறம் இப்ப லேட்டஸ்டா கனிம சுரங்க ஊழல் 10.7 லட்சம் கோடியாம் !! வெளிநாட்டு வங்கியில் இருக்கும் கருப்பு பணம் யாருடையது...?! அந்த பணம் எல்லாம் முதலில் வெளில வரட்டும் அப்புறம் பேசலாம், கூடங்குளத்தில் வீணான பணத்தை பற்றி...//

    பதில் சொல்லுங்கய்யா உத்தமமா ஆட்சி செய்யும் உத்தமபத்தினங்களா???

    பதிலளிநீக்கு
  6. உழைத்து கௌரவமாக வாழ்ந்த மக்களை தன் குழந்தையின் பசிக்கு பால் கிடைக்காதா என பரிதவித்து கொண்டிருக்கும் தாய்மார்களின் வயிற்றில் எரியும் நெருப்பை எந்த நீர் கொண்டு அணைக்க...!??//

    தெற்கேயும் வடக்கேயும் ஆட்சி செய்வதும் அம்மாக்கள்தான், சர்வாதிகாரம் வாழ்க அதுவும் தன் சொந்த மக்களிடம் போங்கடா நீங்களும் உங்க சனநாயகமும்...!!

    பதிலளிநீக்கு
  7. சரியான நேரத்தில் இடப்பட்ட இடுகை இது என் போன்றவர்களின் மனநிலையும் இதுதான் சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்.....!

    பதிலளிநீக்கு
  8. செயற்கையான மின்வெட்டை உருவாக்கி ,அதிகார வர்கத்தை வைத்து பயமுறுத்தி கூடங்குளம் போராட்டத்தை ஒடுக்கப் பார்க்கிறார்கள் .......ஆனால் அது நடக்காது!

    பதிலளிநீக்கு
  9. கூடங்குளம் அணுமின் உலையால் மின்பஞ்சம் தீர்ந்து விடுமென்று வெளியூர் மக்களை உளவியல் ரீதியாக நம்ப வைத்திருக்கிறது அரசு. -சரியாகச் சொன்னீர்கள். இந்தப் போராட்டம் நாளை கோபத்தின் உச்சத்தில் ஆயுதப் போராட்டமாக மாறிவிடக் கூடாதென்ற உஙகள் ஆதங்கம் எனக்கும் உண்டு. மக்களை அடக்கி ஒடுக்கி எதைச் சாதித்துவிட முடியும் இந்த அரசினால்.. சிந்திக்க சிந்திக்க மிஞ்சுவது வேதனையே...

    பதிலளிநீக்கு
  10. செயற்கையான மின்வெட்டை உருவாக்கி ,அதிகார வர்கத்தை வைத்து பயமுறுத்தி கூடங்குளம் போராட்டத்தை ஒடுக்கப் பார்க்கிறார்கள் .......ஆனால் அது நடக்காது!
    அணுமின் நிலையங்களை அமைக்கும் போது அதை சுற்றி 30 கி.மீ தூரத்தில் வசிக்கும் மக்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்க வேண்டும் என்பது ஒரு நிபந்தனை. இந்த பயிற்சியினை கொடுக்க முதலில் ஏற்பாடு செய்யட்டும்...அதன்பின் தெரிந்துவிடும் இது எத்தகைய தன்மை வாய்ந்தது என்று...! இதுவரை இடிந்தகரை மக்கள் மட்டும் போராட்டத்தில் இருக்கிறார்கள் இனி சுற்றி இருக்கும் பிற கிராமங்களும் போராடபோகின்றன...இது தான் நடக்க போகிறது...!

    பதிலளிநீக்கு
  11. அரசியல்வாதிகள் நடிப்பார்கள். இங்கு அரசு இயந்திரமும் சிறப்பாக நடிக்கிறது....

    வேற என்னத்த சொல்ல?

    பதிலளிநீக்கு
  12. @@ MANO நாஞ்சில் மனோ...

    //நியாயம் நேர்மை கருமை எருமை இதெல்லாம் இருந்தால் நாங்கள் அரசியல்வியாதிகள் இல்லை....//

    இப்படியே பழகி போச்சு...

    //மிகப்பெரிய போராட்டவியாதி அவர், தோழர் வேறாம் போங்கடா உங்க கம்யூனிஸ நாட்டுக்கு, நீயெல்லாம் ஒரு மக்கள் நலம் விரும்பியே கிடையாது, ஒரு உத்திரவாதம் இல்லாமல் மப்புல பேசினாரோ என்னவோ//

    ம்ம்..எந்த கட்சி என்றாலும் அரசியலுக்குனு ஒரு தனி குணம் வந்துவிடுமோ என்னவோ ?!

    //சத்தியமான உண்மை இது, இது எல்லாருக்கும் தெரியும் ஆனால் வெளியே சொல்லமாட்டார்கள்....!!!//

    உண்மையை சொல்லவும் ஏன் தயங்கணும் ?! பொய் சொல்ல தயங்காம வருவாங்க. :)

    //தெற்கேயும் வடக்கேயும் ஆட்சி செய்வதும் அம்மாக்கள்தான், சர்வாதிகாரம் வாழ்க அதுவும் தன் சொந்த மக்களிடம் போங்கடா நீங்களும் உங்க சனநாயகமும்...!!//

    சீக்கிரம் நிறம் வெளுக்க கூடிய காலம் வரும்...அதுவரை வேறு வழியின்றி காத்திருப்போம் !

    * * *

    விரிவாக, கருத்துக்களை வெளிப்படையாக கூறிய உங்களுக்கு என் வணக்கங்கள் மனோ.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  13. @@ koodal bala said...

    //செயற்கையான மின்வெட்டை உருவாக்கி ,அதிகார வர்கத்தை வைத்து பயமுறுத்தி கூடங்குளம் போராட்டத்தை ஒடுக்கப் பார்க்கிறார்கள் .......ஆனால் அது நடக்காது!//

    சுயநலமற்ற போராட்டத்தின் வெற்றி தாமதமானாலும் நிச்சயம் கிடைத்தே தீரும். நம்புவோம்

    * * *

    நன்றி பாலா.

    பதிலளிநீக்கு
  14. @@ கணேஷ் said...

    //கூடங்குளம் அணுமின் உலையால் மின்பஞ்சம் தீர்ந்து விடுமென்று வெளியூர் மக்களை உளவியல் ரீதியாக நம்ப வைத்திருக்கிறது அரசு. -சரியாகச் சொன்னீர்கள். இந்தப் போராட்டம் நாளை கோபத்தின் உச்சத்தில் ஆயுதப் போராட்டமாக மாறிவிடக் கூடாதென்ற உஙகள் ஆதங்கம் எனக்கும் உண்டு.//

    அமைதியாக நடக்கும் போராட்டத்தையே தீவிரவாதம் ரேஞ்சுக்கு பில்டப் பண்றாங்க...அடுத்து எந்த குண்டை தூக்கி போட போறாங்களோ ?! :(

    //மக்களை அடக்கி ஒடுக்கி எதைச் சாதித்துவிட முடியும் இந்த அரசினால்.. சிந்திக்க சிந்திக்க மிஞ்சுவது வேதனையே...//

    அணு உலை தேவையா இல்லையா என்பதை விட மக்களின் நிலைதான் மிக வருத்தத்தை கொடுக்கிறது. விரைவில் அனைத்தும் நல்ல முடிவுக்கும் வரும். பார்ப்போம்.

    * * *

    நன்றி கணேஷ்

    பதிலளிநீக்கு
  15. @@ koodal kanna...

    வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. @@ தமிழ்வாசி பிரகாஷ் said...

    //அரசியல்வாதிகள் நடிப்பார்கள். இங்கு அரசு இயந்திரமும் சிறப்பாக நடிக்கிறது....//

    நாடகமே உலகம் என்பதை மிக சரியாக உணர்த்துகிறார்கள் நம் அரசியல்வாதிகள் !! வேதனை.

    * * *

    நன்றி பிரகாஷ்

    பதிலளிநீக்கு
  17. கூடங்குளம் செயல்படலேன்னா நாம எல்லாம்
    திரும்ப அந்த காலத்துக்கே போயிடுவோம் என்ற ஒரு
    மாயையை உருவாக்கி அதில்.. அரசியல் லாபமும்
    தங்கள் வீட்டிற்கு வெளிச்சமும் தேடுகிறார்கள்
    சுயநலமற்ற அரசியல்வாதிகள்..

    பதிலளிநீக்கு
  18. @@ மகேந்திரன் said...

    //கூடங்குளம் செயல்படலேன்னா நாம எல்லாம்
    திரும்ப அந்த காலத்துக்கே போயிடுவோம் என்ற ஒரு
    மாயையை உருவாக//

    உண்மை.

    வேறு மாற்று வழிகளே இல்லாததை போன்று மக்களை அச்சுருத்தும் அணுஉலை வந்துதான் ஆகணுமா அதிகாரத்தில் இருப்பவர்கள் சிந்திப்பது இல்லை...

    தலைமைக்கு எடுத்து சொல்ல ஒரு மனிதாபிமானி கூடவா இல்லை,எண்ணும் போது வருத்தமாக இருக்கிறது.

    * * *

    நன்றி மகேந்திரன்

    பதிலளிநீக்கு
  19. கூடங்குளம் மின் திட்டம் செயல்படுவதில் பயம் கொள்கின்றனர் என்பது தானே அங்கே பிரச்சனை. உடனே தமிழக அரசு என்ன செய்து இருக்க வேண்டும்???

    அந்த மக்களின் பிரச்சனையை அதாவது பயத்தை நீக்கும் பொருட்டு "தமிழக சட்டமன்றம் இனி குளிர்கால கூட்ட்த்தொடர் அங்கே ஒரு கட்டிடம் கட்டி அதிலே நடத்தப்படும். அந்த காலங்களில் தமிழக முதல்வரும், அமைச்சர்களும் அங்கேயே தங்கி பணிபுரிவர், இனி தமிழ்நாட்டுக்கு வரும் முக்கிய வெளிநாட்டு விருந்தினர்கள் எல்லாருக்கும் ஒரு பத்து நாட்கள் தங்குவது போல இருந்தால் கூடங்குளம் பகுதியில் தமிழக அரசு விருந்தினர் மாளிகை கட்டி அங்கே தங்க வைக்கப்படுவர், தமிழக அளவிலான மாநில விளையாட்டுப்போட்டிகள் கூடங்குளத்தில் நடத்தப்படும், அத்தனை ஏன் தமிழக முதல்வர் இனி ஓய்வெடுக்க கொடநாட்டுக்கு போகாமல் கூடங்குளம் மட்டுமெ போவார்" என சொல்லிப்பாருங்கள். அந்த மக்கள் தெளிவடைந்து உங்களுக்கு மின்சாரம் உற்பத்திக்கு வழி விடுகின்றார்களா என பார்ப்போம். அதை செய்ய தமிழக அரசு தயாரா?

    இது நான் படித்த ஒரு பதிவின் ஒரு பகுதி தான்... முழு பதிவினை படிக்க http://abiappa.blogspot.in/2012/02/blog-post.html

    பதிலளிநீக்கு
  20. என்ன இங்கே ஒரே சத்தம்? அண்ணன் வந்துட்டேன்.......
    ---
    எவ்வளவு தான் எடுத்து சொன்னாலும் புரியாத மாதிரி நடிச்சா என்னதான் பண்ண முடியும்?
    ஆயிரத்தெட்டு அறிக்கை விட்டாச்சு, கூடங்குளம் பாதுகாப்பானது பயப்பட தேவை இல்லை என்று. விஞ்ஞானிகளும் சொல்லி விட்டார்கள். அதுவும் நம் நாட்டு இந்திய, தென் இந்திய, தமிழக விஞ்ஞானிகள். அதையும் நம்ப தயாராக இல்லை. பிறகு என்ன செய்வது?
    ஜனநாயகம் என்ற போர்வையில் கூட்டம் கூட்டி கூப்பாடு போட்டுகொண்டே இருந்தால் எதனை நாள் தான் பொறுமை காப்பது? யாரையும் நம்ப மாட்டோம், எங்கள் வழிக்கு நீங்கள் வர வேண்டும், பேச்சு வார்ஹைக்கு இடமே இல்லை என்றால் அது முறையா? இப்படிப்பட்டவர்களை சட்டம் எனும் இரும்புக்கரம் கொண்டு அடக்குவது தான் சரி.
    இந்த மின்வெட்டு யதேச்சையாக நிகஹ்ழ்ந்ததாக இருக்காது. இப்படி பண்ணினால் தான் கூடங்குளத்துக்கு மக்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என்று பண்ணியதாகவே இருக்கலாம்.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...