வெள்ளி, மார்ச் 30

மின்சாரம் வேண்டுமாம் மின்சாரம்...?! தொடரும் கூடங்குளத்தின் அவலம் !!


சங்கரன்கோவில் தேர்தல் முடிந்ததும் கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே செயல்படுத்த நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டார். அன்றே அணுமின் நிலையம் திறக்கப்பட்டு ரஷ்ய விஞ்ஞானிகள் 100 மற்றும் பணியாளர்கள் 950 பேரும் பணிக்கு திரும்பினர். வேலைகளும் நடைபெற தொடங்கி விட்டன...எப்படியும் ஆகஸ்டில் உற்பத்தி துவங்கி விடும்...!?

பணிகள் ஒரு பக்கம் விறுவிறுப்பாக தொடங்க மற்றொரு பக்கம் கூடங்குளத்தில் அதிரடி வியூகம் அமைக்கப்பட்டு மக்கள் நாலாபக்கமும் நகரமுடியாத படி சிறை வைக்கப்பட்டனர்...5000 போலிஸ், துணை ராணுவம் !!

11 பேர்களை கைது செய்து கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கைதை எதிர்த்த கூட்டப்புளி கிராம மக்களை சுமார் 178 பேர்களை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்...இதில் 45 பெண்கள், 20 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் !!

இவையெல்லாம் கடந்த வாரம் தினசரியில் தொடர்ச்சியாக வந்த செய்திகள்...! 

* * * * *

ஏன் இத்தனை களேபரம்...?

கூடங்குளம் அணு உலை திறந்தால் மின்சாரம் கிடைக்கும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், பொதுமக்கள் தங்கள் உயிர் பிரச்னையாக எண்ணி போராடி கொண்டிருக்கும் இதனை ஏன் ஒரு மனிதாபிமான அடிப்படையில் பார்க்க கூடாது...?!

இடைதேர்தல் முடியும் வரை போராட்டகாரர்களுக்கு சாதகமாய் இருப்பதை போல் காட்டிக்கொண்டு அதற்கு பின் அதிரடியாய் காரியத்தில் இறங்கி இருக்கிறது. நிச்சயமாக ஒரே நாளில் திட்டமிடப்படவில்லை, முன்னரே திட்டம் தீட்டப்பட்டு தயார் நிலையில் வைத்திருந்து தேர்தல் முடிந்ததும் ஊரை சூழ்ந்து விட்டார்கள்.

இடைதேர்தலுக்கு தமிழ்நாட்டின் அத்தனை அரசியல் கட்சியினரும் சங்கரன்கோவிலில் முகாமிட்டிருந்தார்கள். அங்கே வந்த ஒருவர் கூட 8 மாதங்களாக , 250 நாட்களுக்கு மேலாக மக்கள் போராடி கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு ஒரு ஆறுதலை சொல்வோம் என்று கூட எண்ணி அங்கே செல்லவில்லை. இவர்கள் தானா மக்களின் காவலர்கள்...!? மக்களுக்காக அரசு என்று சொல்வதெல்லாம் மேடை விட்டு இறங்கியதும் மறந்து போய்விடும் போல...கூடங்குளத்தில் போராடி கொண்டிருப்பவர்களும் இந்தியாவை,தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான், யாரோ எவரோ என்பது போல் மத்திய மாநில அரசுகள் எண்ணி செயல்படுவது வருந்ததக்கது.

எத்தகைய போராட்டம் இது ?

மக்களே போராடும் ஒரு அறவழி போராட்டம் இது . அணு உலை நல்லதா கேடா என விவாதங்கள் பேசினது போதும்...பதில் விளக்கம் எதுவாக வேண்டுமானால் இருந்துவிட்டு போகட்டும், ஆனால் அணு உலையின் மீதான மக்களின் அச்சத்தை போக்க வேண்டியது மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு அரசின் கடமை. இதை செய்ய தவறிய அரசு, இப்போது அதிரடியாக காவல்துறையை கட்டவிழ்த்து விட்டு இருப்பது மட்டும் என்ன நியாயம்...?! ஒரு மாநிலத்துக்குள் ஒரு மூலையில் இத்தனை நாளாக நடந்து வருவதை பற்றி துளி கூட அக்கறை இன்றி தங்களை முன்னெடுப்பதில் முன்னணியில் இருக்கின்றன மத்திய மாநில அரசுகள்...!


அமெரிக்காவின் கைக்கூலி உதயகுமார் என்றார்கள்...ரஷ்யாவின் கை இந்தியாவில் ஓங்கிவிடகூடாது அதை தடுக்கவே கூடங்குளம் மக்களை, அணு உலைக்கு அமெரிக்கா எதிராக திருப்பிவிட்டதாகவும்...வெளிநாட்டு பணம் போராட்டத்திற்கு உதவுகிறது...குறிப்பிட மதத்தினரின் தூண்டுதல் இப்படி அப்படினு பல குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டது...அத்தனையும் தாண்டி இறுதியாக தற்போது நக்சல் தீவிரவாதிகளின் தொடர்பு இருக்கிறது என்கிறார்கள்...!! 

பேங்க் கொள்ளை அடித்தவர்களை என்கவுண்டரில் போட்டு தள்ளிய வீரம் செறிந்த தமிழ்நாட்டு போலீசுக்கு நக்சல் தீவிரவாதிகள் ஊடுருவியதும், இத்தனை நாள் போராட்டத்திற்கு உதவியதும் இதுவரை எப்படி தெரியாமல் போனது ?!!!!

8 மாதத்துக்கும் மேலாக நடந்து வரும் இந்த போராட்டத்தில் ஒரு சிறு அசம்பாவிதமும் இல்லாத அளவு மிக அமைதியான முறையில் நடந்து வருகிறது ! இவர்களை பார்த்து காவல்துறை சொல்கிறதாம் 'அணு உலையின் மீது அணு குண்டை வீச முயற்சி செய்தார்கள் அதனால் கைது செய்தோம்' என்று...!?

மக்களை தீவிரவாதிகளை போல் சித்தரித்து நடந்துகொண்டிருக்கும் இந்த களேபரம் பற்றி தமிழகத்தின் பிற பகுதி மக்கள் சிறிதும் அலட்டி கொள்ளவில்லை...இலங்கையில் கொத்து கொத்தாய் தமிழர்கள் பிணமாய் சரிந்த போது வேடிக்கை பார்த்த அதே கூட்டம் தன் தாய் நாட்டிற்குள் நடப்பதையும் கை கட்டி வாய் மூடி வேடிக்கை பார்க்கும் அவலம் ! மக்களுக்காக அரசு என்பது இல்லாமல் அரசு என்ற உயிரற்ற ஒன்றுக்காக இயங்கும் மக்கள் என்று மாறி விட்டது காலத்தின் கோலம். 

வேறு திசை நோக்கி... 

இப்போது பிரச்சனை வேறு திசையை நோக்கி பயணிக்க தொடங்கி விட்டது...மக்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்தி அச்சத்தை போக்குவதற்கு  மாறாக  அவர்களை துன்புறுத்துவது என்பது தொடங்கிவிட்டது.பொதுமக்களின் உயிருக்கும் உடமைக்கும் சேதம் ஏற்படாமல் காக்க வேண்டியதை மறந்து அரசே மக்களுக்கு எதிராக காவல் துறையை முடுக்கி விட்டு இருக்கிறது. பொதுமக்களை காக்கிறோம் என்ற போர்வையில் பிற வெளி ஊர் மக்களிடம் இருந்து இம்மக்கள் தனிமை படுத்த படுகிறார்கள் ! ஒரு போர் சூழல் அளவிற்கு ஊரடங்கு உத்தரவும், காவல் படைகளும் தேவையா என்பதே அங்குள்ள மக்களின் கேள்வி.


இடிந்தகரைக்கு வரும் அத்தனை வழிகளும் அடைக்க பட்டுவிட்டன...பால் விநியோகம், மின் விநியோகம், குடிநீர் விநியோகம் போன்றவரையும் நிறுத்தி அந்த ஊரே ஒரு தனி தீவு போல துப்பாக்கி ஏந்திய காவல்துறையால் சுற்றி வளைக்கபட்டது அதீதமாக இருக்கிறது. பிற ஊர்களில் இருந்து மக்கள் செல்லவும், அங்கிருக்கும் மக்கள் வெளியேறவும் வழியின்றி தவிக்கும் ஒரு நிலை...ஒரு மாநிலத்தில் இருந்து ஒரு பகுதி மட்டும் ஒரு எதிரி நாடு போல் பிரித்து பார்க்கபட்டுவிட்டது.

"அணுமின் நிலையம் பிடிக்காவிட்டால் இழப்பீடு வாங்கிவிட்டு ஊரைவிட்டு வெளியேறி எங்கேயாவது போய் வாழுங்கள் " என்றாராம் அரசியல்வாதி ஒருவர்.

வாழ்வது தமிழ் நாடா அல்லது இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியா என தெரியவில்லை...தமிழர்கள் தங்கள் நாட்டுக்குள்ளேயே சுதந்திரம் மறுக்க படுவது கொடுமையிலும் கொடுமை...இவ்வாறு மக்களை துன்புறுத்தி தான் மின்சாரம் பெற வேண்டுமா என கூடங்குளத்தை ஆதரிப்பவர்கள் சிறிது யோசியுங்களேன்...

தற்போது அதிகரித்திருக்கும் மின்வெட்டை சாதகமாக மாற்றுகிறது அரசு. (ஏன் இதுவும் ஒரு உளவியல் ரீதியிலான மாற்றத்தில் ஒன்றாக இருக்ககூடாது !?) மக்களும் கூடங்குளம் அணுஉலை வந்தால் மின்சாரம் உடனே கிடைத்துவிடும் என்பதை போல ஒரு மாயைக்குள் வந்துவிட்டார்கள். அவ்வாறு வர வைத்தது  ஆட்சியாளர்களின் புத்திசாலித்தனம். உளவியல் ரீதியாக அணு உலை வேண்டும் என்ற நிலைக்கு கூடங்குளம் தாண்டி வெளியில் உள்ள மக்கள் நினைக்க தொடங்கிவிட்டார்கள்...உதயகுமாரை சரணடைய சொல்லி வற்புறுத்துவதாக செய்திகள் வந்தன...பதுங்கு குழியில் இருப்பதை போல 'வெளியே வா , வந்து சரணடை' என்கிறார்கள். உதயகுமார் சாதாரணமாக மக்கள் முன் நடமாடுகிறார், மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்கிறார்...!!? 

(ஒரு பத்திரிகை வேற அப்ப அப்ப சலிக்காமல் செய்தி வெளியிட்டு அவதூறு பரப்பி கொண்டிருக்கிறது. அதை படிகிறவங்களை பைத்தியம் என்று நினைச்சு செய்தி வெளியிடுகிறதா அல்லது செய்தியை படித்து பைத்தியமாகனும்,ஒருத்தனும் தெளிவா புத்தியோட இருக்ககூடாது என முடிவு கட்டி இருக்கா தெரியல...)

அப்பாவி கிராம மக்களை தங்கள் சுயநலத்திற்க்காக பயன்படுத்தபடுகிறார்கள் என பேசபடுகிறது. மூன்று மாதத்திற்கு முன் நான் அங்கு சென்ற போது பத்து வயது சிறுவர், சிறுமிகள் கூட அணு உலை பற்றியும் , அணு கழிவுகள் பற்றியும் தெள்ள தெளிவாக எடுத்து சொன்னார்கள். வயதானவர்கள் படிக்காதவர்கள் என யாவரும் புள்ளிவிவரங்களை புட்டு புட்டு வைக்கிறார்கள். 

'இத்தனை கோடி பணம் செலவு பண்ணியிருக்கு யார் பணம் எல்லாம் மக்களின் பணம்' என ஆதங்கபடுபவர்களிடம் சேது சமுத்திரத் திட்டத்திற்கு கடலில் கொட்டிய பணம் எவ்வளவு என நினைவு இருக்கா ? னு கேட்கணும். ஒவ்வொரு நதியையும் சுத்தபடுத்த என்று பல கோடிகள்,எத்தனை எத்தனை மக்கள் நல்வாழ்வு திட்டங்கள் பாதியில் நிற்கின்றன, அதில் போடப்பட்ட பணம்...இப்படி வீணான பணம் பற்றி ஒரு பெரிய லிஸ்ட் போடலாம்.அப்புறம் இப்ப லேட்டஸ்டா கனிம சுரங்க ஊழல் 10.7 லட்சம் கோடியாம் !! வெளிநாட்டு வங்கியில் இருக்கும் கருப்பு பணம் யாருடையது...?! அந்த பணம் எல்லாம் முதலில் வெளில வரட்டும் அப்புறம் பேசலாம், கூடங்குளத்தில் வீணான பணத்தை பற்றி...

தொடரும் போராட்டம்...

போராட்ட மக்கள் தாங்களாகவே போராட்டத்தை கைவிட வேண்டும் என்பதற்காக என்ன இடைஞ்சல்கள் கொடுக்க முடியுமோ அத்தனையில் கொடுத்து கொண்டிருக்கிறது மத்திய மாநில அரசுகள். உரிமைக்காக குரல் கொடுப்பவர்கள் புரட்சியாளர்கள் என்பது மாறி அவ்வாறு குரல் கொடுப்பவர்கள் யாவரும் தீவிரவாதிகள் என்று சித்தரிக்கபடுவது ஜனநாயக நாடு என்பதில் ஐயத்தை ஏற்படுத்துகிறது.

அகிம்சை வழியில் போராடினால் அதன் முடிவு இதுதான் என்பதை தெரிந்து கொள்ளும் நம் இளைஞர்கள் புரட்சி என ஆயுதங்களை தூக்கக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. இதைத்தானா விரும்புகிறோம்...?!

15 பேர் எட்டுநாளாக இருந்த உண்ணாவிரதம் முடிவிற்கு வந்து விட்டது , ஆனால் 5 கட்டமாக போராட்டம் தொடங்கி இருக்கிறார்கள்...! 

அணுமின் நிலையங்களை அமைக்கும் போது அதை சுற்றி 30 கி.மீ தூரத்தில் வசிக்கும் மக்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்க வேண்டும் என்பது ஒரு நிபந்தனை. இந்த பயிற்சியினை கொடுக்க முதலில் ஏற்பாடு செய்யட்டும்...அதன்பின் தெரிந்துவிடும் இது எத்தகைய தன்மை வாய்ந்தது என்று...! இதுவரை இடிந்தகரை மக்கள் மட்டும் போராட்டத்தில் இருக்கிறார்கள் இனி சுற்றி இருக்கும் பிற கிராமங்களும் போராடபோகின்றன...இது தான் நடக்க போகிறது...!

உண்மையை சொல்லப்போனால் இனிதான் போராட்டம் முழு வேகத்தில் செல்ல போகிறது...

ஐ.நா சபையின் பார்வைக்கு ஒரு தமிழர் கூடங்குளம் பிரச்னையை கொண்டு சென்றிருக்கிறார்...இனி சர்வதேச அளவிலும் இதற்க்கு ஆதரவு கிடைக்ககூடும். கனடாவில் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மார்ச் 26 அன்று நடந்திருக்கிறது.

மக்களின் அவல நிலை 

கிட்டத்தட்ட 20 ஆயிரம் மக்கள் ஒன்றாக கூடி இருக்கும் இடத்தில் ஏற்படக்கூடிய சுற்றுப் புற சுகாதாரக் கேடுகள் எத்தனை ? இதனால் நோய் பரவும் ஆபத்தும் இருக்கிறது.

சாலை வழியாக உணவு பொருட்கள் கொண்டுசெல்ல தடை செய்யபடுவதால் பிற கடலோர கிராம மக்கள் படகுகளில் சென்று உணவு தண்ணீர் போன்றவற்றை கொடுக்கிறார்கள் என்ற செய்தியை கேள்விப்பட்டு ஆறுதல் அடைய முடியவில்லை மாறாக முள்வேலிக்குள் அடைபட்டு கிடந்த நம் ஈழத் தமிழர்களின் அவல நிலைதான் நினைவுக்கு வந்து வேதனை அளிக்கிறது.


லேசா  வியர்த்தாலே என்னடா வாழ்க்கைன்னு சலித்து கொள்பவர்க்கு எங்கே தெரியும், மணலிலும், வெயிலிலும் இவர்கள் படும் அவஸ்தை...!

உண்ணாவிரதம் இருந்தால் முகம் வாடி இருக்கணுமே உடல் சோர்ந்திருக்கனுமே என புகைப்படத்தை உற்று நோக்கி கிண்டலடித்து கும்மாளமிடும் வெட்டி பேச்சு வீணர்கள் அதிகம் உலவும் இடம் என்பதை எண்ணி வருந்துகிறேன் !! ஒரே மாவட்டத்தில் ஒரு பகுதியில் உணவுக்காகவும் , தண்ணீருக்காகவும் கை ஏந்தி எம்மக்கள் நிற்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் என்போன்றோரின் இயலாமை...கொடுந் துயரம் !! 

உழைத்து கௌரவமாக வாழ்ந்த மக்களை தன் குழந்தையின் பசிக்கு பால் கிடைக்காதா என பரிதவித்து கொண்டிருக்கும் தாய்மார்களின் வயிற்றில் எரியும் நெருப்பை எந்த நீர் கொண்டு அணைக்க...!??

உங்களுக்கு தேவை மின்சாரம்...அது யார் பிணத்தின் மீதிருந்து கிடைத்தால் என்ன ?! நாசமாய் போகட்டும்...மனிதம் !?



* * * * *

இப்பதிவு எனது தனிப்பட்ட பார்வை...இம்மக்களின் துயரத்தை நேரில் பார்த்தும் கேட்டும் அறிந்த பின்  ஏற்பட்ட வருத்தத்தை வார்த்தையாக்கி இருக்கிறேன்...!! இப்போராட்டம் இனி தொடர்ந்து பல இடங்களிலும் பரவலாம்...மக்களின் துயரத்துக்கு விடிவு காலம் நிச்சயம் உண்டு என்ற நம்பிக்கை மட்டுமே மிச்சம் இருக்கிறது...!

கூடங்குளம் பற்றிய குறும்படத்தின் லிங்க்...நேரம் இருப்பின் பாருங்கள்...நண்பர்களுக்கும்  பகிருங்கள்...!! நன்றி.
http://www.youtube.com/watch?v=Qe-IN-iA2Yo&feature=share

* * * * *


படங்கள் - நன்றி கூகுள்



செவ்வாய், மார்ச் 27

சென்னைக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை...?!



'தமிழ் நாட்டில் மக்கள் இருக்காங்களா ?' 'இருக்கிறார்கள்...' அப்புறம் 'அவங்க எப்படி இருக்கிறார்கள் ?' 'நோ, இந்த கேள்வி கேட்கபடாது...' கேட்டால் நாங்கள் நடை பிணங்களாக இருக்கிறோம் என பதில் சொல்ல வேண்டி வரும்...! உடனே அடடா அப்படியானு கேட்டு வருந்தி பிரச்சனைய தீர்க்க போறீங்களா என்ன...? யார் நினைச்சாலும் ஒண்ணையும் ஒண்ணும் பண்ண முடியாது...போறபோக்குல என்னை மாதிரி புலம்பிட்டு போக மட்டும் தான் இப்போதைக்கு முடியும். வாட்டி வதைக்கும் மின்சார வெட்டில் ஓரவஞ்சனை பண்றதை தாங்க பொறுத்துக்க  முடியல...!! ஒற்றுமையில் வேற்றுமையை வளர்க்கிறது மின்சார வெட்டு...!!

இதற்கு முந்தைய ஆட்சியில் 4 மணி நேரம் மட்டும் என்ற கணக்கில் எடுத்தார்கள்...ஒரு ஒழுங்கு இருந்தது...ஆனால் இப்போது ஒரு வரைமுறை இல்லை, இஷ்டபடி தடை செய்கிறார்கள். ஒருவேளை முன்னாடி ஆண்டவங்க கஜானாவோடு சேர்த்து , கரண்டையும் காலி பண்ணிட்டு போய்ட்டாங்களா ?!! 
9 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரம் வரை எடுக்கிறார்கள். 

நாளைய  சே குவேராக்கள் , பாரதிகள் , கட்டபொம்மன்கள், குமரன்கள், வாஞ்சிநாதன்கள், ஜான்சி ராணிகள் போன்றவர்கள் எல்லாம் தற்போது இருட்டறையில்...?! 

இரவு நேர அவலம்...

பகலை ஓரளவு சமாளித்துவிடும் மக்கள் இரவு வந்தாலே கிலி பிடித்தது போலாகி விடுகிறார்கள்...மாலை 6.30 இருந்து மின் வெட்டாட்டம்  தொடங்கி விடிய விடிய நடக்கும்...! ஒரு மணி நேரம் மின்சாரம் இருக்கும் அடுத்து ஒரு கட், அரை மணி நேரம் இருக்கும் அடுத்து ஒரு கட்......இப்படியே விடியும் வரை தெளிய வச்சி தெளிய வச்சி...ம்...என்னத்த சொல்ல (மின்சாரம் இருக்கும் போது தூங்கியும், போனதும் எழுவதும் என நடக்கும் போராட்டத்தில் சோர்ந்து மூணு மணிக்கு மேல அசந்து தூங்கி விடுவதால் அப்போது மின் தடை செய்ய பட்டாலும் தெரியாது ) தொடர்ச்சியான தூக்கம் இல்லாமல் காலையில் எழுந்திரிக்க இயலாமல் படு சோர்வாக இருக்கிறது. இதனால் மக்களுக்கு உடல், மன ரீதியாக பாதிப்பு ஏற்படும் என்பது சர்வ நிச்சயம் !

ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் மறுநாள் வேலைகளை எவ்வாறு கவனிப்பது ? கண்கள் எரிய, உடம்பு சோர்ந்து மந்த நிலையில், உற்சாகமின்றி ஒருவித நோய் பீடித்த நிலையில் தவிக்கும் நடுத்தர ஏழை குடும்பங்கள் !

எல்லா மருத்துவமனைகளிலும், எக்ஸ்ரே , ஸ்கேன் சென்டர்களில் ஜெனெரேட்டர் வச்சிருப்பாங்கன்னு சொல்ல முடியாது. அவசரத்திற்கு இவைகளின் உதவி எந்த அளவிற்கு இருக்கும் என தெரியவில்லை. ஒரு சில மருந்து பொருட்கள் வைக்கபட்டிருக்கும் குளிர்சாதன பெட்டிகள் மின் தடையினால் முழு அளவில் பாதுகாப்பு கொடுக்குமா? சந்தேகம் தான்...!

தூக்கம் கெடுவதால்,


அதிகம் பாதிக்கபடுவது பள்ளி, கல்லூரி  மாணவ மாணவிகள் தான். இரவில் படிக்க இயலாதது ஒரு பக்கம் இருந்தாலும், சரியான தூக்கமும் இல்லாமல் மறுநாள் பரிட்சையை எதிர்கொள்ளும் போது சிரமத்துக்கு ஆளாகிறார்கள். குறிப்பாக கண் எரிச்சல், தலைவலி போன்ற சிறு உபாதைகள்...!

வயதான பெரியவர்கள் பொதுவாகவே தூங்குவது சிரமம். இப்போதோ அவர்களின் நிலை மிக பரிதாபம். சொல்லவும், சமாளிக்கவும் இயலாமல் உடல்நிலை குறைவுற்று மருத்துமனை நோக்கி தள்ளபடுகிறார்கள்...

கைகுழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்கள் படும்பாடு அவர்களுக்கே வெளிச்சம்...!! நடு இரவில் மின்சாரம் போனதும் வீறிட்டு எழும் குழந்தைகளை சமாளிப்பது மிக கஷ்டம்...காற்று இல்லாமல் பேப்பர், விசிறி போன்றவற்றால் கை வலிக்க காற்று வீசியே தன் குழந்தைகளை தூங்க வைக்கிறாள் தாய்...

ஒரு முறையும்
தன் புறம்
திருப்ப மாட்டாள்
விசிறியை...
குழந்தை உறங்க
வியர்வையில்
புழுங்கிக்
கொண்டிருக்கிறாள்
தமிழக தாய்...!

வேலைக்கு செல்லும் ஆண்கள், பெண்கள் என அனைவரையும் படுத்தி எடுக்கிறது மின்தடை !!

சென்னைக்கு மட்டுமேன் இந்த முக்கியத்துவம்...?!

மாநிலத்தின் பிற மாவட்டங்களின் நிலை இவ்வாறு இருக்க சிங்கார சென்னையில் மட்டும் 2 மணி நேர மின் தடை...!!??? ஏன் இந்த ஓரவஞ்சனை ?அங்கே இருப்பவர்கள் மட்டும் தான் மக்களா ?! பிற மாவட்ட முதியோர்கள், குழந்தைகள், மாணவர்கள், பொதுமக்கள்  எல்லோரும் சபிக்க பட்டவர்களா??

இந்த வருடம் பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ தேர்ச்சி விகிதம், மதிப்பெண் விகிதம் தென் மாவட்டங்களில் குறையும்...சென்னை மாணவர்கள் மட்டும் முன்னணியில் இருப்பார்களோ...?! 

தமிழ் நாட்டின் தலை நகரம் என்பதும்,அரசு அலுவலகங்கள் மற்றும்  மல்டி நேசனல் கம்பெனிகள், சிறிய மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் வரை இருக்கும் இடம் என்பதாலா? அந்த கம்பெனிகள் நிம்மதியாக மின்சாரம் உபயோகிக்க பிற மாவட்ட தொழில் நிறுவனங்கள் , விவசாயம் நலிந்து போகணுமா?

இந்த கோடை விடுமுறைக்கு தென்மாவட்டங்களுக்கு சென்னை மக்கள் வர தயங்கும் அளவிற்கு மின் பிரச்சனை இருக்கிறது...ஒரே மாநிலத்துக்குள் ஒதுக்கபட்டுவிட்டன பிற மாவட்டங்கள்...மாவட்டங்களுக்கிடையே பிரித்தாளும் போக்கை வளர்க்கும் இது போன்ற நிலை வருத்தத்திற்குரியது...


ஒரு நாட்டை, மக்களை மாட்டு மந்தைகளாக மாற்ற வேண்டுமென்றால்  முதலில் அவர்களின் சிந்திக்கும் திறனை முடக்கி போட்டாக வேண்டும்...இத்தகைய மழுங்கடிக்கும் வேலையை இது போன்ற மின் வெட்டுகள் மிக சரியாக செய்துவிடும் என்பது மட்டும் நல்லா புரியுது...!

இப்படி பகலிலும் ஒழுங்கா செயல்பட முடியாமல் இரவிலும் நன்றாக ஓய்வெடுக்க முடியாமல் சோர்ந்து போன தமிழா, "உனக்கு ஒரு பிரச்சனை என்றால் எவ்வாறு புரட்சி செய்வாய் ? எப்படி போராடுவாய் ?!" அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம், ஒரு ஓரமா காற்றோட்டமான மரத்தடி நிழல்ல ஒரு பாய விரிச்சு படு...அப்படியே மெல்ல கண்ணை மூடு...! நாடு சுபிட்சம் அடைந்துவிடும் !!

கூடங்குளம் தேவை ?!!

இந்த மின்தடை மக்களின் மனதில் வேறு எதை பற்றியும் சிந்திக்க விடாமல் , "கூடங்குளம் அணு உலையை திறந்தால் தான் என்ன ?" என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது. அங்கே நடைபெறும் போராட்டம் இங்கே இருக்கும் சில மாவட்டங்களின் பிரச்சனை என்பதை போலவும், எல்லோருக்காக நடப்பது இல்லை என்பது போலவும் புரிந்துகொள்ள பட்டிருக்கிறது...அணு உலையினால் நன்மையா, கேடா என சிந்திக்க கூடிய தன்மையை இந்த மின்தடை கெடுத்து ஒரு குழப்பநிலையில் வைத்திருக்கிறது. மக்களின் இந்த குழப்பநிலை ஆட்சியாளர்களுக்கு சாதகம் என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை.

 சரி செய்தே ஆகவேண்டும்

சென்னைக்கு மின்தடை அதிக நேரம் இருப்பது சரி இல்லை என ஆயிரம் காரணங்கள்(?!) சொல்லபட்டாலும், பாரபட்சமின்றி எங்கும் ஒரேவிதமான மின்தடை என்பதே ஏற்புடையதாக இருக்கும் என்பதே சாமானிய மக்களின் எண்ணம்.

சென்னைக்கு தற்போது வழங்கி வரும் 22 மணி நேர மின்சாரத்தை குறைத்து பிற இடங்களுக்கு பகிர்ந்து வழங்க வேண்டும்...ஒட்டு மொத்த தமிழ் நாட்டுக்கும் ஒரே விதமான மின்தடை நேரம் என ஒதுக்க வேண்டும்...எங்கும் 4 அல்லது 5 மணி நேர தடை என முறை படுத்தினால் பிற மாவட்ட மக்களும் சற்று தங்களை ஆசுவாசபடுத்தி கொள்வார்கள்...! தொழில் நிறுவனங்கள், விவசாயம் பிரச்சனையின்றி நடைபெறும்...தயவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களா !?

* * * * * * * * *

வேறு திசைக்கு திருப்பி விடப்பட்ட கூடங்குளம் போராட்டம் ?! அடுத்த பதிவில்...

* * * * * * * * *

படங்கள் - நன்றி கூகுள்


வியாழன், மார்ச் 22

அமராவதி...!? கேரளாவின் அலட்சியம் !!


அமராவதி மிக அழகான பெயர் ! அம்பிகாபதியோட அமராவதி இல்லைங்க நம்ம உடுமலை பேட்டை இருக்குதா அங்க இருக்கிற அழகான  ஒரு அணைதான் அமராவதி. மறுபடியும் அணையா ?! ஒரு அணை பிரச்சனைக்கே   இன்னும் விடை தெரியல...இதுல இன்னொரு அணைக்கு என்ன ஆச்சுன்னு நீங்க பதறது புரியுது...புது பிரச்சனை இல்ல ரொம்ப நாளாவே போயிட்டு இருக்கிற ஒண்ணுதான். இன்னும் ஒரு தீர்வும் எட்டபடாமல் இழுத்துகிட்டே போகுது. தமிழன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவானாம்,  யாருக்கு புரியுதோ இல்லையோ மத்த மாநிலத்துக்காரங்க நம்மள நல்லா எடை போட்டு வச்சிட்டாங்க. கர்நாடகத்துகிட்ட காவிர கொடுன்னு கெஞ்சி, கேரளாக்கிட்ட அணையை ஒடச்சிடாதனு  போராடி, ஆந்திராக்கிட்ட கொஞ்சம் தண்ணி கொடுன்னு கை ஏந்தி இன்னும் எத்தனை காலந்தான் நாம இப்படியே இருக்க போறோமோ தெரியல !

அப்படி என்ன பிரச்சனை?!

44 டி எம் சி அளவு தண்ணீரை தேக்கி வச்சிருக்கிற அமராவதி அணைக்கும் ஆபத்து வந்து நாளாகிவிட்டது . திருப்பூர், கரூர் மக்களின் உயிர் நாடியாகவும் 70,000 ஏக்கர் விளைநிலங்களை காப்பாத்துகிற இந்த அணைக்கு தண்ணீர் பாம்பாற்றில் இருந்து வருது. இந்த பாம்பாற்றின் குறுக்கே மறையூர் அருகே கோவில்கடவு பகுதியில் புதிய அணை கட்டணும் என்று கேரளா அரசு 230 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி சட்டசபைல தீர்மானத்தை நிறைவேற்றி வேலையை வேற தொடங்கிட்டதாக சொல்றாங்க ?! (இரண்டு வருடமாக போயிட்டு இருக்கு இந்த விவகாரம் !!)

கேரளாவுக்கு அங்கே சொந்தமான வயல்வெளிகளும் இல்லை வெறும் காடுதான் ! பின் வேறு என்ன தேவைக்காக இருக்கும் என்று பார்த்தால் ஆளாளுக்கு ஒண்ணு சொல்றாங்க...தண்ணியில இருந்து மின்சாரம் தயாரிக்க போறதா ஒரு பேச்சும், தண்ணீரை பாட்டில பிடிச்சி விக்கிற ஒரு தனியார் கம்பெனிக்கு தாரை வார்த்துகிறதுக்காகவும் அணைகட்ட போறாங்கனு சொல்றாங்க.

அடடா அமராவதி!


மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தேனாறு, சின்னாறு, காட்டாறு , பாம்பாறு போன்ற ஆறுகளின் நீரை தேக்கி வைக்க கட்டப்பட்டதுதான் அமராவதி அணை. இதில் அதிகபடியான நீரைத் தருவது, எக்காலத்திலும் ஓடிக்கொண்டிருக்கும் பாம்பாறு தான். இதன் உதவியால் தான் அமராவதி அணை நிறைகிறது.

170 கி.மி நீளம் கொண்ட இந்த ஆறு ஆனைமுடி சிகரங்களில் உற்பத்தியாகிறது. இரண்டு சிகரங்களுக்கிடையே வெள்ளியை உருக்கி விட்டது போல ஓடிவரும் அழகே அழகு !

ஆனைமுடி சிகரத்தில் இருந்து அமராவதி வரை இருக்கக்கூடிய இடங்கள் பாதுகாக்கப்பட்ட வனபகுதிகள் என்ற பட்டியலில் இருக்கிறது. சின்னாறு வனவிலங்குகள் சரணாலயம் , இந்திராகாந்தி தேசிய வனவிலங்கு சரணாலயம் ஆகியவை வேறு அமைந்திருக்கின்றன. இங்கே எது செய்வதாக இருந்தாலும் மத்தியச்சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெறவேண்டும். இவையெல்லாம் தெரிந்தும் என்ன தைரியத்தில் சட்டமன்றத்தில் அணைகட்ட போவதாக தீர்மானம் நிறைவேற்றினார்களோ தெரியவில்லை ?! (ஒருவேளை மத்தியில் பெரும்பாலோர் கேரளாக்காரர்கள் தானே சாதித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் தானோ ?!)

110 ஏக்கர் பரப்பளவில் பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான அனைத்து வேலைகளையும் ஏற்பாடு செய்து வருகிறது...நான்கு வருடத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டுவிடுமாம்.

வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பம்ப் செட்டுகளை வைத்து நீரேற்று விவசாயம் செய்து வருகிறார்கள் தமிழக விவசாயிகள் ! இந்த அணையை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளின் வயிற்றில் கொஞ்சமும் இரக்கமின்றி அடிக்க பார்க்கிறது கேரளா. விவசாயத்திற்கு எவையெல்லாம் பாதிப்பை கொடுக்கிறது என பகுத்தறிந்து அதனை களைந்து விட்டாலே விவசாயத் தொழில் நிமிர்ந்து விடும்.

70,000 ஏக்கர் நிலங்கள் பாதிக்கபடுவதுடன், நூற்றுக்கணக்கான தமிழக கிராமங்கள் குடிநீர் இன்றி தவிக்கும். வனவிலங்குகளும் குடிநீரின்றி அவதியுற நேரும். அமராவதி சர்க்கரை ஆலையை நம்பி உள்ள 10,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வு பாதிக்கப்படலாம்.

நம்ம தலைஎழுத்து நம் மாநிலம் வழியா போனாலும் அள்ளி குடிக்க வகையற்று போய் கொண்டிருக்கிறோம். மேற்கே இருந்து உற்பத்தியாகி கிழக்கு கடலில் கலக்கும் அனைத்து நதிகளும் நமக்கு வேண்டாதவையாக பிறரால் எடுத்துக் கொள்ளபடுகிறது. காலங்காலமாக தண்ணீருக்காக போராடிக் கொண்டே இருக்க வேண்டுமா? ஏன் எந்த அரசும் வாழ்வாதாரமான இப்பிரச்சனையில் ஏகமனதாக ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை. அவரவர் ஆட்சிகாலத்தில் எதையாவது ஒன்னு இரண்டு தற்காலிக சமாதானம் செய்து கொண்டு போய்விடுகிறார்கள், நிரந்தர தீர்வு எட்டபடாமலேயே !!

நெய்யாறு அணை ?!!

எட்டு ஆண்டுகளாக தீர்க்கப்படாத மற்றொரு ஆற்றின் பிரச்சனைஇருக்கிறது. குமரி மாவட்டம் கேரளாவுடன் இருந்த போது நெய்யாறு அணையை திருவாங்கூர், கொச்சி சமஸ்தான அரசு கட்டியது. பின்னர் பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த போது இடதுகரை கால்வாய் முழுக்க முழுக்க தமிழக அரசின் நிதியில் இருந்து கட்டப்பட்டது. குமரி மாவட்டம் நெய்யாறு அணை தண்ணீரை கட்டாயம் பெறுவதற்கான உரிமையும் உள்ளது.

சேமிக்கப்படும் நீரில் 60 % கேரளாவில் இருந்தும், 40 % குமரி மாவட்டத்தில் இருந்தும் வருகிறது. தண்ணீரில் பாதி அளவாவது குமரி மாவட்டத்துக்கு வர வேண்டும் என்ற அடிப்படையில் உருவான திட்டமே நெய்யாறு கால்வாய் திட்டம் . ஒன்பது வருவாய் கிராமங்கள், 9 ஆயிரத்து 204 ஏக்கர் நிலங்களும் 162 குளங்களும்  பாசனம் பெற்றன. 

ஆரம்பத்தில் நிர்ணயித்த படி இந்த கால்வாய் மூலம் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்கியது.ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டு முற்றிலும் நிறுத்த பட்டது...!!?

என்ன ஒரு முரண்பாடு ?! 

மகாராஷ்டிரத்தில் உற்பத்தியாகி கர்நாடகம் வழியாக ஆந்திராவை அடைந்து கடலில் கலக்கும் கிருஷ்ணா நதியின் நடுவே ஆல்மாட்டி என்ற இடத்தில் 173 கொள்ளளவு கொண்ட அணையை கட்டியது கர்நாடகா...உடனே வீறு கொண்டு எழுந்த ஆந்திரா உச்சநீதிமன்றம் சென்று 123 டி.எம்.சி தண்ணீரை தான் தேக்க வேண்டும் என்ற தீர்ப்பை பெற்றுவிட்டது. இதுவரை அந்த அளவைத்தாண்டி தேக்குவதில்லை கர்நாடகா. இதே கர்நாடகா தமிழ்நாட்டுகிட்ட என்ன ஆட்டம் காட்டுது ?!!!

2007 இல் காவேரி நதிநீர் ஆணையத்தின் தீர்ப்பின் படி அமராவதி அணையில் இருந்து ஏற்கனவே 5 டி.எம்.சி மட்டும் பயன்படுத்தி வந்த கேரளாவிற்கு 30 டி.எம்.சி தண்ணீர் ஒதுக்க வேண்டுமாம்...!!!? இதை எதிர்த்து இதுவரை நம் அரசு எதுவும்(?) நடுவர் மன்றத்தை அணுக நடவடிக்கை எடுத்தவில்லை என தெரிகிறது. அந்த தீர்ப்பை வைத்து கொண்டு கேரளா அணைகட்ட போறேன், தண்ணி தரமாட்டோம்னு சொல்லிக்கொண்டு இருக்கிறது...!!!?

உப்பு பெறாத விசயத்துக்கு எல்லாம் கொடிப்பிடிக்கும் ஆளும் கட்சி, எதிர்கட்சிகளும், தேவையற்ற ஈகோ போராட்டங்கள், பதவியை தக்க வைத்துக் கொள்ள எதையும் செய்ய துணியும் அரசியல்வாதிகள், வறட்டு ஜம்பங்கள், காட்டுக் கூச்சல்கள், கேட்டு கேட்டு புளித்துப் போன வாக்குறுதிகள், வீணான ஆர்ப்பாட்டங்கள் விதியே என்று சகித்து  போய் கொண்டிருக்கும் மக்கள் !!!  இத்தனையில் ஒன்று கூட மாற சாத்தியமில்லையா?!

முல்லைபெரியாறு அணை பிரச்சனை என்னவாயிற்று என்று தெரியவில்லை...?! ஐந்து மாவட்ட மக்கள் பாதிப்படைந்து கொண்டிருக்கிறார்கள்...அரசு இதை எல்லாம் கவனித்து, எப்போது நடவடிக்கை எடுத்து நல்லதொரு முடிவை எட்ட போகிறதோ ?!

சேர ,சோழ , பாண்டிய , பல்லவ  மன்னர்கள்  காலத்தில் தமிழ் நாட்டில் மட்டும் 39,000 ஏரிகளை வெட்டினார்களாம். அந்த ஏரிகளின் மேல் தான் இன்று அரசு அலுவலகங்க கட்டடங்களும் , புதிய பேருந்து நிலையங்களும் இருக்கிறது. மிச்ச ஏரிகளில் கருவேலமரங்களையும், தைல மரங்களையும் அரசே வளர்க்கிறது. நிலத்தடி நீர் உறிஞ்சபட்டு வறண்டு போய்விட்டன.மரங்களை வளர்க்க வேறு இடமா இல்லை. ஏரி,குளங்களில் உள்ள மணலை சுரண்டுவது ஒருபக்கம் அமோகமாக நடைபெறுகிறது. தூர்வாருகிறேன் என்று சொல்லி கொள்ளும் நூறுநாள் வேலை தொழிலாளர்கள் உறங்கி கழிக்கிறார்கள் மரத்தடியில்...!

இவர்கள் தூர் வாரி முடிப்பதற்குள் மழை வந்து, நின்றும் போய்விடும்.வழக்கம் போல பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் வீணாக கடலில் சென்று சேர்ந்துவிடும்.உண்மையில் அரசிற்கு அக்கறை இருந்தால், இயந்திரங்களின் உதவி கொண்டு வேகமாக முடிக்கலாம். மக்களின் வாழ்வாதார விசயத்தில் தூங்கி வழிகிறது அரசு இயந்திரம் !! 

நதிகள் இணைப்பு - சுப்ரீம் கோர்ட் உத்தரவு 

2002 இல் பல மாநிலங்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டபோது அப்போது பிரதமராக இருந்த திரு.வாஜ்பாய், வெள்ளப்பெருக்கால் வீணாகும் நதிகளின் தண்ணீரை வறட்சி நிலவும் மாநிலங்களுக்கு திருப்பி விடுவதற்கு வசதியாக நதிகள் இணைப்பு திட்டத்தை கொண்டு வந்தார். இதில் இரண்டு திட்டங்கள் போடப்பட்டன. ஒன்று தீபகற்ப நதிகள் இணைப்பு, மகாநதி, கோதாவரி நதிகளில் வெள்ளம் வந்து வீணாகும் தண்ணீரை கிருஷ்ணா, வைகை, காவேரி உள்ளிட்ட 16 நதிகளுக்கு திருப்பி விடுவது. 2 வது திட்டம் வட இந்தியாவில் ஓடும் கங்கை, பிரம்மபுத்திராவில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை தடுத்து நீர்பாசன வசதிகளை மேம்படுத்தவும், மின்சாரம் தயாரிக்கவும் இந்த பெரிய நதிகளின் குறுக்கே அணைகள் கட்டுவது.

அருமையான இந்த திட்டங்கள் இதுவரை ஏனோ நிறைவேற்றப்படவில்லை. தற்போது சுப்ரீம் கோர்ட் "நதிகள் இணைப்பு திட்டத்தை விரைவாக நிறைவேறவேண்டும்" என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது !!

மத்திய அரசு என்ன செய்ய காத்திருக்கிறதோ ?!!

நதிகள் இணைப்பு என்பது நிறைவேறுதோ இல்லையோ அதற்கு முன் இங்கே தமிழ்நாட்டில் ஓடும் ஆறுகளின் இரு மருங்கிலும் இருக்கும் ஆக்கிரமிப்புகள், அதில் கலக்கும் கழிவு நீர், மணல் கொள்ளை போன்றவற்றில் கவனம் செலுத்தபடவேண்டும். ஏரி,குளம், குட்டைகளை தூர்வாருவதும்,புதிதாக குளங்களை வெட்டுவதும் அவசியம். அப்போதுதான் பூமியில் விழும் மழைநீர் கடலில் சென்று வீணாகாமல் சேகரிக்கப்படும்.மேலும் நமது அணைகளின் மீதுள்ள பிரச்னைகளை அரசாங்கம் முயன்றால் முழுமையாக சரிசெய்ய இயலும். நாட்டின் தற்போதைய இன்றியமையாத முக்கிய பிரச்சனை இதுவே...! கவனிக்குமா மத்திய, மாநில அரசுகள் ?!

என்று தணியும் இந்த தண்ணீர் தாகம்...?!!


இன்று உலக தண்ணீர் தினமாம்...!! அழிவினை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஒவ்வொன்றுக்கும் ஒரு தினத்தை முடிவு செய்து அந்த ஒரு நாளுடன் முடித்து(?) கொண்டிருக்கிறோம்...ஆனால் மற்றவை மாதிரி அல்ல தண்ணீர்....நம் குழந்தைகள் மற்றும் அவர்களின் குழந்தைகள் நம்மிடம் கேட்பார்கள் "எங்களுக்கான தண்ணீர் எங்கே ?" என்று...என்ன பதில் சொல்ல போகிறோம் !?

ஒரு சில நீர் ஆதாரங்களையாவது பாதுகாத்து அவர்களுக்காக விட்டு செல்வோம்...அடுத்த தலைமுறை நம்மை வாழ்த்தட்டும்...!!



* * * * * * * 


எனது இந்த பதிவு கழுகு தளத்தில் வெளிவந்தது.

செவ்வாய், மார்ச் 20

காணக் கிடைக்கவில்லை...! சிட்டுகுருவி !!


பூமியில் காணப்படும் செடி, கொடி, மரங்கள் முதல் மிருகங்கள், பறவைகள், பூச்சி இனங்கள் போன்றவற்றுடன் மனிதனும் இணைந்த இணைப்பே பல்லுயிரியம் (Bio diversity) எனப்படுகிறது. இவை அனைத்தும் சரிவிகிதத்தில் இருக்கவேண்டும். 


ஆனால்... மனிதனை தவிர மற்றவை அனைத்தும் தங்கள் பங்கை சிறப்பாக செய்து வரும் போது 'ஆறறிவு படைத்த மனிதன்' தனது சுயநலத்திற்க்காக மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலும் பிறவற்றுக்கு ஆபத்தாக முடிந்துவிடுகிறது.


எங்கும் படபடவென்று தன சிறகுகளை விரித்து சுறுசுறுப்பாக பறந்து கொண்டிருக்கும் சிட்டுகுருவி இன்று எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. கிராமங்களிலும் காணமுடிவதில்லை. 


உலக சிட்டுக்குருவிகள் தினம்  

அழிவினை நோக்கி சென்றுகொண்டிருக்கும் ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு தினத்தை ஏற்படுத்தி கொண்டாடி கொண்டிருக்கிறோம். வெறும் நினைவுகளை மட்டுமே அசை  போட்டு கொண்டிருக்கும் இந்நிலை நிச்சயமாக மனித வாழ்க்கைக்கு நிறைவை தராது. மனிதனை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஒவ்வொன்றும் மனிதனை விட்டு விடைபெற்று சென்று கொண்டிருப்பது காலத்தின் கோலம் அன்றி வேறென்ன...?! பாலையும் தண்ணீரையும் பிரித்தறியும் அன்ன பறவையை காவியங்களில் பார்த்திருக்கலாம், அவை கற்பனைதானோ !?

எங்கும் மனிதர்கள்...ஒருவரோடு ஒருவர் இடித்துகொள்ளும் அளவிற்கு பெருகிவிட்டார்கள்...அதனால் பிற உயிரினங்கள் தங்களுக்கான இடம் பறிபோய்விட்டது என்ற வருத்தத்தில் அழிந்து போய் கொண்டிருக்கின்றனவோ என்னவோ...?

மனிதன் சற்றும் யோசிக்காமல் மரங்களை வெட்டுகிறான், மணலை அள்ளி ஆறுகளை அழிக்கிறான், சுற்றுபுறத்தை மாசு படுத்துகிறான், பசுமை காடுகளை பாலைவனமாக மாற்றிவிட்டன...நம்முடன் இருந்த பல உயிரினங்கள் ஒவ்வொன்றாக நம்மை விட்டு விலகி போய்கொண்டே இருக்கின்றன...

இயற்கை ஆர்வலர்கள் இதனை பாதுகாக்க தற்போது கணக்கெடுப்பதாக இருக்கிறார்கள்...! கண் கெட்ட பின்.......என்றாகிவிட்டது. சக உயிரில் அக்கறை இல்லாதவர்கள் சக மனிதனை எவ்வாறு மதிப்பார்கள் என தெரியவில்லை...

அழிய என்ன காரணம் ?!


செல்போன் கதிரியக்கத்தால் குருவிகளின் கருத்தரிக்கும் தன்மை பாதிக்க படுவதாக சொல்லபட்டாலும் மாசுபட்ட சுற்றுப்புறசூழலும், முன்பு எங்கும் சிந்தி சிதறி கிடந்த  உணவு தானியங்களின் பற்றாக்குறையும் ஒரு முக்கிய காரணம். முன்பு நிலத்தை சிறிது தோண்டினாலும் மண் புழுக்களை பார்க்கலாம், ஆனால் இப்போது வேதி உரங்கள் போடப்பட்ட மண்ணில் உயிர் சத்து இல்லாமல் புழுக்களை காணமுடிவதில்லை. மேலும் வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஈயம் கலவாத பெட்ரோல் புழு பூச்சிகளை அழித்துவிடுகிறது, குஞ்சு குருவிகளுக்கு இவை நல்லதொரு உணவு. 

சோடியம் விளக்குகளாலும் அழிகின்றன என சொல்கிறார்கள். ஆனால் இவை மட்டும் தான் உண்மையான காரணங்களா என தெரியவில்லை. மனிதரின் அலட்சியம் ஒன்று மட்டும்தான் காரணம் என நினைக்க தோன்றுகிறது. ஒரு பொருள் காணவில்லை என்றானபின் தான் அதன் மேல் அதிக அக்கறை வந்து தேட தொடங்குகிறோம்...அது போன்றுதான் மனிதனை எப்போதும் சுத்தி சுத்தி வந்து வளையமிட்ட சிட்டுக்குருவிகளை சட்டை செய்யாமல் இருந்தோம்...வெகு தாமதமாக அவை குறைந்து போனதை உணர்ந்து 'அடடா இப்படி ஆகிபோச்சே என்ன செய்யலாம்' என தவிக்கிறான் மனிதன்...?!    

இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறேன்...


சிட்டுகுருவிகளுக்காக ஒரு செல்ட்டர் ஒன்று அமைத்து வளர்க்கலாம் (முக்கியமாக செல்போன் டவர் இல்லாத இடத்தில் )என யோசித்தேன். அவ்வாறு வளர்க்கலாமா ? இது போன்ற கூண்டுகளில் அவை வளருமா? என பலரிடமும் ஆலோசனை கேட்ட பின்னே முயற்சிகள் மேற்கொண்டேன்.   வெளியிடங்களில் அவை அழிந்துவருகின்றன என்பதால் இயன்றவரை ஒரு பத்து குருவிகளையாவது பாதுகாக்கலாம் என சொந்த ஊரில் மரங்கள் அடர்ந்த எங்களின் பண்ணை வீட்டில் பெரிய மரங்களை உள்ளடக்கி பிரமாண்ட கம்பி வலை கூண்டு ஒன்றை அமைக்க ஏற்பாடுகள் செய்து விட்டேன். பறவைகள் அதனுள் சுதந்திரமாக பறக்ககூடிய அளவில் இருக்கவேண்டும் எனவும் அதன் உள்ளேயே பறவைகளுக்கான உணவு, நீர் போன்றவற்றை தினமும் வைத்து பராமரிக்கவேண்டும் என்ற அளவிலே நிர்மாணித்தேன்...!  


ஆனால்...


சிட்டுகுருவி தேவை என பலரிடம் மூன்று மாதங்களுக்கும் மேலாக கேட்டு கொண்டிருக்கிறேன். கிராம புறங்களில் இதற்கென இருப்பவர்களிடம் சொல்லி வைத்தேன், பிடித்து தாருங்கள் பணம் கொடுத்து பெற்றுகொள்கிறேன் என்று...இதுவரை ஒரு சிட்டுக்குருவியும் கிடைக்கவில்லை...?!!   


காணக் கிடைக்கவில்லை என்ற பதில்களை விட எங்கே தேடுவது என்பதே கேள்வி குறியாகிவிட்டது. நமது சிறுவயதில் இருந்து நம்முடன் ஒன்றாக வாழ்ந்து வந்துகொண்டிருந்த ஒரு இனம் இன்று முற்றிலும் அழியும் கட்டத்திற்கு   வந்துவிட்டது...நாளை நம் குழந்தைகள் சிட்டுக்குருவியை புகைப் படங்களில் மட்டுமே பார்ப்பார்கள் என்பது நிச்சயம்...!  


தேடுதல் தொடரும்...கிடைக்கும் வரை...!!!


பின் குறிப்பு 


உலக சிட்டுக்குருவிகள் தின வாழ்த்துக்கள் பரிமாறிக்கொள்ளும் இந்நாளில் மீதம் இருக்கும் இயற்கையின் அரிய உயிரினங்களையாவது அழிய தொடங்கும் முன்பே அவற்றின்  மீது அக்கறை செலுத்த தொடங்குவோம்...!


படங்கள் - நன்றி கூகுள்


திங்கள், மார்ச் 19

மத்திய அரசே ! கண்டன தீர்மானத்திற்கு ஆதரவு கொடு...!


இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை குழுவில் தீர்மானம் கொண்டுவரபடுவதற்க்கு ஆதரவு தெரிவிப்பதில் மௌனம் சாதிக்கும் மத்திய அரசு !!?



" இலங்கையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த உள்நாட்டு போர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக முடிவுக்கு வந்தது. அப்போது 40 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் கூட்டங்கூட்டமாக ஈவு இரக்கமின்றி கொடூரமான முறையில் இனப் படுகொலை செய்யப்பட்டனர். சிங்கள அரசின் வெறித்தனமான மனிதத் தன்மை அற்ற கொலைவெறி ஆட்டங்கள் சானல் 4  லின் மூலம் தற்போது வெளி உலகிற்கு வந்திருக்கின்றன. சர்வதேச சமுதாயம்  இதைக் கண்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியது "-பத்திரிகை  செய்தி 

இப்படி சில வரிகளில் நடந்த அத்தனை கொடுமைகளையும் சொல்லிவிட முடியும் ஆனால் மனித உணர்வு உள்ள யாரும் இதை ஒரு செய்தியாக சாதாரணமாக படித்து விட்டு சென்றுவிட இயலாது. கொடூர கொலைகள் !!அந்த விடியோ காண தைரியம் இல்லாமல் ஒரு சில போட்டோக்களை பார்த்தே மனம் நடுங்குகிறது. நடந்தது நடந்து போச்சு, இனி நடப்பதை பார்ப்போம்  என்று சமாதானம் சொல்ல வாய்ப்பே இல்லாத கொடூர நிகழ்வுகள் இவை. 

கண்டன தீர்மானம் 

இதுநாள் வரை கண்டுகொள்ளாத நாடுகளும் இப்போது இலங்கையை ஒரு வித வெறுப்புடன் நோக்க தொடங்கியுள்ளன என்பதற்கு ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கொண்டுவந்துள்ள கண்டன தீர்மானம் ஒரு சாட்சி.   

இந்த தீர்மானம் நிறைவேற வேண்டுமென்றால் மனித உரிமைகள் சபையில் 24 நாடுகளின்  வாக்குகள்  இருந்தால்  மட்டுமே  முடியும் . இலங்கைக்கு எதிராக 22 நாடுகள் தயாராக இருக்கின்றன. ரஷ்யா, சீனா இலங்கைக்கு ஆதரவாக இருக்கின்றன. இத்தீர்மானம் வெற்றி பெற்றுவிட்டால் இன அழிப்புக்கு பதில் சொல்ல கூடிய கட்டத்திற்கு இலங்கை வந்துவிடும். விசாரணைகள், பொருளாதார தடைகள் என்று பாயும். ராஜபக்சே என்னும் அரக்கனின் ஆட்டத்தை அடக்க இது ஒரு சந்தர்ப்பமாக கூட இருக்கும்.  

S. M. கிருஷ்ணா  சொல்கிறார்   "இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்காக உறுப்பினர்கள் அவையில் வெளியிட்ட கவலை, உணர்வுகளை நானும் பகிர்ந்து கொள்கிறேன். இலங்கையில் போர் முடிவுக்கு வந்த நாள் முதல் அந்நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு உதவிகளைச் செய்ய வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டு இந்திய அரசு செயல்பட்டு வருகிறது " என்று 

யாருக்கு வேண்டும் இவர்களின் கவலை,பரிதாப அறைகூவல்கள், இன்னுமா நாம் இவற்றை எல்லாம் நம்பிக்கொண்டிருக்க வேண்டும். எதை சொன்னாலும் நம்பிவிடுவார்கள் மக்கள் என்பதே அரசியல்வாதிகளின் எண்ணம். ஆனால் அரசுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டால் என்னாகும் என்பதை புரிந்துகொள்ள மறந்துவிடுகிறார்கள்.

"இலங்கை அரசு உண்மையான அக்கறையுடன் செயல்பட்டு தமிழ்ச் சமூகத்தினரின் குறைகளைத் தீர்க்கும் என்ற நம்பிக்கையைத்தான் இந்திய அரசு வைக்க முடியும்"  - எஸ்.எம்.கிருஷ்ணா 

கொந்தளித்து கொண்டிருக்கும் நம் மன உணர்வுகளை சட்டை செய்யாமல் எத்தகைய அசட்டையான பதில் இது !!?

சிங்கள இனவாத வெறிபிடித்த அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த இது ஒரு சந்தர்ப்பம். இனியும் மத்திய அரசு மௌனம் சாதித்து கொண்டும் அலட்சியமான பதில்களை சொல்லிக் கொண்டும்  இருந்தால் தமி(ழ்)ழக மக்கள் வேடிக்கைப் பார்க்க மாட்டார்கள் என்பதை உணர்த்தியாக வேண்டும்.

புதிய தலைமுறையில், சுதர்சன நாச்சியப்பன் (இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினர்)

"இலங்கையில் நடந்தது அனைத்தும் விபத்து தான்... விபத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு...நாங்கள் முதலுதவி செய்கிறோம்... விபத்து ஏன் நடந்தது எப்படி நடந்தது... ஆராய்வது எங்கள் வேலையல்ல... அதை இலங்கை பார்த்து கொள்ளும் "என்கிறார். தமிழ்நாட்டுல இருந்து இவரை தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பின மக்களுக்கு நல்லா கொடுக்கிறார் விளக்கம்...?!!

எப்படி இப்படி ஒரு பொறுப்பற்ற பதிலை சொல்ல முடிகிறது என தெரியவில்லை. பெண்களும், பிஞ்சு குழந்தைகளும் கொத்துகொத்தாக கொல்லப்பட்டதுக்கு பேர் கொலை இல்லாம வேறென்ன...?!  இதை விபத்து என்று சொல்ல எப்படி மனம் வருகிறது. 

மத்திய அரசின் தயக்கம் 

இத்தீர்மானத்தை இலங்கைக்கு எதிராக மத்திய அரசு ஆதரித்தால் நாளையே இலங்கை 'இந்தியா சொல்லித்தான் இன படுகொலையை நாங்கள் செய்தோம்' என்ற உண்மையை சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில் தான் இந்த விசயத்தில் மத்திய அரசு சமாளிக்கிறதோ என சந்தேகம் வருவது இயற்கை. 

பொதுவாக பார்த்தால் அமெரிக்கா செய்திருக்கும் மனிதஉரிமை மீறல்கள் மிக அதிகம் என்றபோதிலும் இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்திருப்பதின் உள்நோக்கம் எதுவாக இருப்பினும், இத்தீர்மானத்தை இந்தியா கண்டிப்பாக ஆதரித்தே ஆகவேண்டும். மக்களுக்காகவே இந்த அரசு என்று சொல்லிகொண்டிருக்கும் தமிழக அரசும், மக்களுக்காக எதையும் செய்வோம் என்று மார் தட்டிகொள்ளும் எதிர்கட்சிகளும் இந்த ஒரு விசயத்திலாவது ஒன்றாக இணைந்து மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். 

மக்களுக்கு எதிராக யார், எந்த நாடாக இருந்தாலும் கொலைபாதக செயலை செய்தால் அதை இந்திய அரசு எதிர்த்தே ஆகும் என்பதை உலகுக்கு தெரியபடுத்த வேண்டும். இப்போது இலங்கைக்கு எதிராக தீர்மானம் என சொல்லும் அமெரிக்காவே நாளை மனிதஉரிமை மீறல் செய்தாலும் அதையும் இந்தியா எதிர்க்கும் என்பதை அழுத்தமாக பதிவு செய்தாக வேண்டும். இந்தியா காந்தியம் பேசிகொண்டிருந்தால் மட்டும் போதாது...

அனைத்து தமிழ் நெஞ்சங்களும் ஓங்கி நமது குரலை தெரிவிக்க வேண்டிய  ஒரு நேரம் இது. நம் சகோதர உறவுகளுக்கு ஆதரவாக நாம் இருக்கிறோம் என்பதை இதன் மூலம் தெரிவித்து அவர்களுக்கு தைரியம் கொடுப்போம். 

ஒன்றிணைந்து நமது குரல் ஒலிக்கட்டும் மூடிக்கிடக்கும் செவிகள் திறக்கும் வரை...மத்திய அரசு இத்தீர்மானத்திற்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என்றே வலியுறுத்துவோம்...!! 

வாழ்க எம்மக்கள் ! ஓங்குக தமிழ் மக்களின் ஒற்றுமை !!


முக்கிய குறிப்பு


உலகமெங்கும் தமிழர்கள் இத்தீர்மானத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என வற்புறுத்தி,வலியுறுத்தி கண்ணீர் விட்டு கொண்டிருக்கும் இந்த நிலையில், இதில் இருக்கும் சில அரசியல் தந்திரங்கள் இவையாகவும்  இருக்கலாம், அது என்ன என்று அவசியம் படித்துத்தான் பாருங்களேன்... 


காய்கள் நகர்த்தும் காங்கிரஸ் ! ஐநாவில் அரங்கேறப் போகும்  இலங்கை எதிர்ப்பு நாடகம்...!

வெள்ளி, மார்ச் 16

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் - அவலங்களின் உச்சம் !?






முன்னுரை 

திருநெல்வேலியில் இருந்து சொந்த ஊரான சங்கரன்கோவிலுக்குப் போகவே ரொம்ப யோசனையாக இருக்கிறது. இந்த அரசியவாதிகள் காமெடி பண்றாங்களா, சீரியஸா இருக்காங்களா என்றே புரிய மாட்டேன்குது.  என்னவோ போங்க மக்களே !! ரொம்பப் படுத்தி எடுக்கிறாங்க...பேசாம 144  ஊரடங்கு உத்தரவு போட்டாத் தேவல...அமைதியா வீட்டுக்குள்ள இருப்போம் !வெளில தலைக் காட்ட முடியல, எங்கிருந்தோ ஒரு பத்து பேர் ஓடி வந்து 'அம்மா நல்லா நினைவு வச்சுகோங்க, ஞாபகமா(?) இதில தான் ஒட்டு போடணும் மறந்துராதிங்க' அப்படி இப்படின்னு என்னை அம்னீசியா பேசண்ட் லெவெலுக்கு கொண்டுப் போய்டுறாங்க...!?

என் பார்வையில் அதீதமாகப் பட்ட சிலவற்றை என் பார்வையாக இங்கே பகிர்கிறேன்.


எதற்கு இந்த வீணான ஆர்பாட்டங்கள் ?!

இடைதேர்தல் ஒரு தொகுதிக்கு நடைபெறுவதாக எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள்...ஆனால் தமிழ்நாட்டிற்கே தேர்தல் நடைபெற போவதைப்  போல் எங்கும் ஒரே பரபரப்பு. தமிழ்நாட்டை அடுத்து ஆளப்போவது யார் என்று நிர்ணயிக்க போவதே இந்த தேர்தல் தானோ என்பதைப் போல மொத்த அரசியல் கட்சியினரும் சங்கரன்கோவிலில் குவிந்திருக்கின்றனர்.

அரசியல் பற்றி அனா ஆவனா தெரியாத என்னையும் இந்த தேர்தல் ரொம்ப யோசிக்க வைத்துவிட்டது. எனக்கும் இந்த தேர்தலுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை அங்கே எனக்கு ஓட்டுரிமை இருக்கு என்பதே. 15 வருடமாக பழகிப்போன ஊரில் இப்போது திரும்பிய திசை எங்கும் புதுப்புது முகங்கள்...எல்லோரும் உரக்கப்  பேசுகிறார்கள், வேகவேகமாக நடக்கிறார்கள், எங்கே செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள், எதற்கு செல்கிறார்கள்...குழப்பத்தில் பாதி மக்கள் , ரொம்ப தெளிவாக மீதி மக்கள்(?) சந்தோசம், வருத்தம், குழப்பம், எல்லாம் சரிவிகிதத்தில் கலந்து ஒரு வித்தியாசமான மனநிலையில் இருக்கிறார்கள் என்று மட்டும் தெரிகிறது. 

வாசலில் மாதக்கணக்கில் காத்துக்கிடந்தாலும் தங்கள் முகத்தை  காட்டக்  கூட நேரம் இல்லாத மாண்புமிகுக்கள் இப்போது சர்வ சாதாரணமாக பத்தடிக்குப்  பத்தடி தூரத்தில் தெருவில் மக்களுக்கு முன்னே கடந்துச்  செல்கிறார்கள்...திருநெல்வேலி ராஜபாளையம் மெயின் ரோட்டில் தலையை குனிந்துக்கொண்டு போனால் எதிரில்  இடித்து கொள்ளும் நபர் அனேகமாக ஒரு மாண்புமிகு அமைச்சர், எம் எல் ஏ,  மேயராக இருக்கலாம். எதற்கும் நிமிர்ந்து போவதே நல்லது...! பின்ன இப்ப இடிச்சிட்டுப்  போனா சிரிச்சிட்டுப்  போய்டுவாங்க, ஆனா உங்க அட்ரெஸ் நோட் பண்ணப்பட்டு தேர்தல் முடிந்ததும் வீட்டிற்கு ஆட்டோ அனுப்படலாம்...! (வேற ஒன்னும் இல்ல, கூப்பிட்டு உங்களைப்  பாராட்டத்தான் !!)

சில துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள், இப்போது இருப்பவர்களும் எப்போதும்  கிளம்ப நேரும் என தயாராகவே  இருக்கிறார்கள் போல. தமிழகத்தைச்  சேர்ந்த எல்லா கட்சியினரும் வட்டம் , மாவட்டம், சதுரம், செவ்வகம் என்று தேர்தல் வேலையை மாய்ந்து மாய்ந்து பார்க்கிறார்கள்...ஊரில் இருக்கும் பல வீடுகள் வாடகைக்கு என வலிந்துப்  பெறப்படுகின்றன, ஒரு சில வீடுகளுக்கு வீடு கட்டிய செலவை விட அதிக வாடகை கொடுக்கப்படுகிறது...மக்களும் வாழ்க்கையில் சம்பாதிக்க இப்படி ஒரு வழியா என்ற ஒரு சந்தோஷ அதிர்வில் வீட்டினைக்  கொடுத்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன். (தேர்தல் முடிந்த பின் வீடு எனக்கே சொந்தம் என்று எழுதி வாங்காமல் இருந்தால் சரி...எதுவும் நடக்கலாம் ?!!)
வீட்டிற்கு வெளியே, கட்சியினர் இருவர் என ஒவ்வொருவர் வீட்டு வாசலிலும் இருக்கிறார்கள். மக்களின் நடவடிக்கை அனைத்தும் ஏறக்குறைய ஏதோ ஒரு கட்சியினரின் கண்காணிப்பில் !! தீப்பெட்டி ஆபிஸ், தறி செட் , சினிமா, கோவில், திருவிழா, டீக்கடை அரட்டை என ரொம்பவே இயல்பாக வாழ்வை எதிர்கொண்டு வாழ்ந்து வருகிற சங்கரன்கோவில் தொகுதி மக்களுக்கு இந்த திடீர் ஆர்பாட்டங்கள் என்னதென்று புரியாத  ஒரு அதீத குழப்பத்தை ஏற்படுத்தி  இருப்பது  அந்த ஊர் பிரஜை, என்னால் நன்கு உணர முடிகிறது. இந்த குழப்பத்தின் விளைவு எப்படியும் இருக்கலாம். இது போன்ற ஒரு நெருக்கடியான மனநிலையை ஏற்படுத்தும் இன்றைய அரசியல்வாதிகளை என்னவென்று சொல்வது...?!

'தேர்தல் என்பது மக்கள் சுயமாக சிந்தித்து கட்சிகளின் நிறைகுறைகளை சீர் தூக்கி வாக்கு அளிப்பது' என்ற அடிப்படை மாறி வற்புறுத்தல்கள், வலியுறுத்தல்கள் என்பதாக இன்று இருக்கிறது. 'சென்டிமெண்டல் மிரட்டல்கள்' என்று கூட சொல்ல தோணுகிறது.

ஒரே தெருவில் இந்த பக்கம் ஒரு கட்சி, அந்த பக்கம் மற்றொரு கட்சி பிரச்சாரம் இரண்டையும் ஒரு சேர கேட்கும் மக்களின் மனநிலை என்னவாக இருக்கும். நேரில் அனுபவித்த எனக்கு எரிச்சல் தான் வந்தது. ஒன்னுமே புரியலன்னு சொல்ல முடியல, எல்லாமே புரியல. ஏன் எதற்கு இந்த ஆர்பாட்டம் , இந்த தேர்தல் ஒன்று தான் தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கப்  போகிறதா ?! கட்சிகள் இதில் வெற்றி பெற்று எதை நிலைநிறுத்தத்  துடிக்கின்றன ?! 

தமிழ் நாட்டின் அத்தனை முன்னால், இந்நாள் அமைச்சர்கள், எம்.பி க்கள், எம் எல் ஏக்கள், மேயர்கள், சேர்மன், கவுன்சிலர்கள், பல துறை சேர்ந்த அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள்,அடிமட்ட,மேல்மட்ட கட்சி செயலாளர்கள், தமிழகம் முழுவதிலும் இருந்து வந்துள்ள தொண்டர்கள் மற்றும் பத்திரிக்கைத்துறை, தொலைக்காட்சி நிருபர்கள்,  நடிக, நடிகையர்கள் இன்னும் இதில் சொல்ல விடுபட்டுப்போனவர்கள் அநேகம் என்று உள்ளூர் மக்களை விட மூன்று மடங்கு மக்களால் இத்தொகுதி மூச்சுத்  திணறி விழிப் பிதுங்கிக்  கொண்டிருக்கிறது.

தேர்தல் வேலைப் பார்க்கிறோம் என்று இத்தனை பேர் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், தற்போது தமிழகத்தின் தலைப்  போகிற பிரச்னை இது மட்டும்தான் என்பது போல் துடிக்கும் அரசியல்வாதிகள், மக்களின் பிரச்சனை எதிலும் தலையிடவில்லை.

*பரமக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு எத்தனை அமைச்சர்கள் நேரில் போய் மக்களைச்  சந்தித்தார்கள் ?

* முல்லை பெரியாறு அணைக்கு இத்தனை கூட்டமும் குரல் கொடுத்ததா?!

* மூன்று மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் கூடங்குளம் மக்கள் போராட்டத்துக்கு எத்தனை அமைச்சர்கள் நேரில் சென்றார்கள். மக்களுக்காக மக்கள் நடத்தும் போராட்டம் தானே அதற்கு ஏன் மக்கள் பிரதிநிதி என்று சொல்லிக்கொள்ளும் ஒருவரும் துணை நிற்கவில்லை. 

அவைக்கூட போகட்டும் , ஆனால் குறைந்தபட்சம்.....

இங்கே நெல்லையில் சித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் கல்விக்காக ஒரு மாதத்திற்கும் மேலாக செய்து வரும் உள்ளிருப்பு போராட்டத்தை ஒரு அமைச்சரும் ஏன் கண்டுக்கொள்ளவில்லை?! ( மாணவர்களாக கோர்டில் முறையீடு செய்து நல்லதொரு தீர்ப்பைப்  பெற்றுவிட்டார்கள்)

குடிநீருக்காக அன்றாடம் அலைகிற மக்களுக்காக தங்களது சிங்காசனத்தை விட்டு இறங்கி வராத இவர்கள் ஒரு எம் எல் ஏ சீட்டுக்காக இரு வாரமாக மக்களிடம் கை ஏந்தி பிச்சை எடுத்து கொண்டிருக்கிறார்கள். இது போன்ற ஒரு அவலம் வேறன்ன இருக்கிறது ?!!

தன் கட்சி வெற்றி பெறவேண்டும் என்பதற்காக சுய கௌரவம் என்பது இல்லாமல் மக்கள் கால்களில் விழும் இவர்கள் தேர்தல் முடிந்ததும் காக்கா கூட்டங்களைப்  போல சிதறி ஓடி விடுவார்கள். இத்தனை ஆர்ப்பாட்டங்களையும் பார்த்து பொழுதுபோக்கிய மக்கள் வழக்கம் போல தீப்பெட்டி ஆபிஸ், தறி செட், பீடி உருட்ட என தங்களின் வயிற்று பாட்டை பார்க்க போய்விடுவார்கள்
இந்த தேர்தலால் பாமர மனிதனுக்கு கிடைக்கக் கூடிய நன்மை என்ன? அதிக அளவு பணம் நடமாடுகிறது...அவ்வளவும் மக்கள் பணம். மக்களுக்கு தானே போகிறது என்று சமாதானம் செய்துக்  கொள்ள முடியவில்லை. இப்படி திடிரென்று கிடைக்கக்கூடிய பணம் நிச்சயமாக அவனது வறுமையை போக்க போவதில்லை, மாறாக அந்த பணம் டாஸ்மார்க் மூலமாக மீண்டும் அரசின் கைகளுக்கு தான் போகப்  போகிறது. உழைக்காமல் கிடைத்த பணம் உற்சாக செலவிற்கு போகும் என்பதுதானே நியதி ?!! டாஸ்மார்க் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது, குடிக்க வைத்தே வாக்காளனின் சிந்திக்க கூடிய மூளையை மழுங்கடித்து கொண்டிருக்கிறார்கள் நம் அரசியல்வாதிகள்.

மக்களுக்கு சிந்திக்கும் திறன் அறவே இல்லை என்றே முடிவு கட்டிவிட்டார்கள். தேர்தல் வரை நெருக்கடிக்கு ஆளாகும் மக்களை பற்றி யாரும் கவலை பட போவதில்லை. மக்களை சுயமாக சிந்திக்கவும் விடப் போவதில்லை. தங்களை முன்னிறுத்துவது மட்டுமே நோக்கமாக இருக்கும் இவர்களா மக்களின் பிரச்சனைகளைத்  தீர்க்கப்  போகிறார்கள்...?!

தேர்தல் கமிசன் ?!!

தமிழகம் முழுவதும் தேர்தலை நடத்த முடிந்தவர்களுக்கு  ஒரு தொகுதியில் நடத்த ஏன் இத்தனை பரபரப்பு, அல்லோகலம் என்பது தான் புரியவில்லை. 50 கிலோமீட்டர் தள்ளி நடக்க போகிற ஒரு தேர்தலுக்காக திருநெல்வேலியின் ஏதோ ஒரு சிறிய தெருவின் சுவற்றில் எழுதி இருக்கும் அரசியல் வாசகங்களை அழித்து கொண்டிருக்கிறார்கள். வேடிக்கையாக இருக்கிறது. தேர்தல் பணியாளர்கள் மாற்றபட்டுகொண்டே இருக்கிறார்கள், எதற்காக யார் வசதிக்காக ?! 

பத்திரிகை செய்திகளில் தவறாமல் தினம் இடம் பெற்று விடுகிறது இத்தனை லட்சம் இன்று பிடிபட்டது என்று. அது அரசியல்வாதியிடம் இருந்து என்றா ?! இல்லவே இல்லை. சோதனையில் பிடிபடுபவர்கள் அத்தனை பேரும்  வியாபாரிகளும், சிறு தொழிலதிபர்களும் தான். அரசியல்வாதிகள் புத்திசாலிகள், பணத்தை பல வழிகளில் சம்பாதிக்க தெரிந்தவர்களுக்கு அதை ஊருக்குள் கொண்டு வரும் வழியா தெரியாது...?! தேர்தல் கமிசனும் தான் சரியாக வேலை செய்வதாக காட்ட இப்படி ஏதாவது செய்தி வெளியிட்டு ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

பதட்டமான வாக்குசாவடிகள் ?!!

தேர்தல் நடக்க இருக்கின்ற 242 வாக்குசாவடிகளும் பதட்டமானவை என முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தி.  கடந்த வருட தேர்தலில் 16 வாக்கு சாவடிகள் பதட்டமானவை என்றார்கள், இப்போது அனைத்தும் பதட்டமானவை என்றால் எங்கே இருக்கிறது தவறு ?

* ஒரே வருடத்தில் ஊர் அந்த அளவிற்கு மோசமாக மாறிவிட்டதா ?

அல்லது

* இனி நடக்க போகிறவைகளுக்காக முன்கூட்டியே பூசிமெழுக வசதியாக இப்படி ஒரு செய்தி பரப்பப்படுகிறதா ?

எது உண்மை ? யார் விளக்குவது ? தேர்தல் கமிசன் எந்த விதத்தில் செயல் படுகிறது என்பதே சந்தேகத்திற்கிடமாக இருக்கிறது.

தீவிர சோதனை ?!!

ஆங்காங்கே நடுவழியில் பேருந்துகள் நிறுத்தப்பட்டு போலீசாரால் ஒவ்வொரு சீட்டாக சோதிக்கபடுகிறது. பயணிக்கும் கிராம மக்கள் என்னமோ ஏதோனு  ஒரு வித பதட்டத்துக்கு ஆளாகிறார்கள்...! இந்திய பாகிஸ்தான் எல்லை போல ஆகிபோச்சு சங்கரன்கோவில் !!

வீடு வீடாக புகுந்து சோதிக்கும் கொடுமையும் நடந்து கொண்டிருக்கிறது...! பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபடுவதை பற்றி துளியும் அக்கறைகொள்ளாத தேர்தல் கமிசன் !!

மக்களை நெருக்கடிக்கும், பதட்டத்துக்கும், அச்ச உணர்வுக்கும் ஆட்படுத்துவது தான் ஜனநாயக முறைப்படி ஆட்சி நடக்கும் ஒரு நாட்டின் லட்சணமா ?!!

இந் நாட்டின் மன்னர்கள் நாங்கள் ?!! 

இந்தியாவில் இருக்கும் விலையுர்ந்த அத்தனை விதமான மாடல் வாகனங்களையும் சங்கரன்கோவில் தொகுதியில் ஒரே சமயத்தில் பார்க்க முடிகிறது. வீட்டு வாசல்ல நிற்கிற  காரை பார்த்து பெருமிதமா பக்கத்து வீட்டுல சொல்லி பெருமைபட்டுகிற எம் மக்களின் வெகுளித்தனத்தை தங்களுக்கு சாதகமாக மாற்ற முயன்றுகொண்டிருக்கிறார்கள் அரசியல்வாதிகள்.

நாலாபுறமும் கரைவேட்டி அரசியல்வாதிகளுக்கு நடுவே வெண்ணிற கதராடையில் காந்தியவாதி ஒருத்தர் தேர்தலில் நிற்கிறார்...வெகு நிதானமாக அமைதியாக காந்திய கொள்கைகளை சொல்லி வாக்கு கேட்கிறார். தனக்கு ஓட்டு போட்டால் பூரண மதுவிலக்கை(?) கொண்டுவருவதாக சொல்கிறார். நாடு தற்போது எதன் பின்னே ஓடிகொண்டிருக்கிறது என்பதை அறிந்து சொல்கிறாரா, அறியாமல் சொல்கிறாரா என தெரியவில்லை...!(ஆனால் அவரோட நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...!!)

இப்படி மக்களை பாடாய்படுத்தி ஒரு தேர்தலை நடத்தி அதில் வெற்றி(?) பெற்றதாக பெருமை பட்டுக்கொள்ள போகிறார்கள். வழக்கம் போல இந்த நாட்டின் மன்னர்கள் நாங்கள் பட்டாஸ் வெடித்து கொண்டாடபோகிறோம் !!

வாழ்க ஜனநாயகம் ! வாழ்க மக்கள் !!

பின்குறிப்பு

இனி இடைதேர்தலே வரகூடாது என்பது போல் இந்த தேர்தலில் மக்கள் அவதி பட்டுவிட்டார்கள்...ஆனால் வெகு விரைவில் பக்கத்துலையே மற்றொரு இடைதேர்தல் வரபோவதை தவிர்க்க முடியுமா என்ன?! விரைவில் அந்த இடைதேர்தலில் சந்திப்போம்...!

வழக்கம் போல இந்த தேர்தலுக்கும் ஓட்டுரிமையை (மட்டும்) கையில் வைத்துகொண்டு முழித்து கொண்டிருக்கும் வெகு சாதாரணமான ஒரு வாக்காளன்...


* * * * *
எனது இந்த பதிவு கழுகு இணைய தளத்தில் வெளிவந்தது





படங்கள் -  நன்றி கூகுள்


செவ்வாய், மார்ச் 6

என்னவாயிற்று நம் குழந்தைகளுக்கு ?!


இன்றைய மாணவர்களின் உலகம் எங்கே செல்கிறது ? தனது ஆசிரியை ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த மாணவன், சென்னையை போல இங்கயும் உங்களை கொலை செய்துவிடுவோம் என மிரட்டிய மாணவர்கள், வகுப்பறையில் தூக்கில் தொங்கிய மாணவன், பிளேடால் கையை கிழித்த மாணவன், இதெல்லாம் போதாது என்று நெல்லையை சேர்ந்த 8 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறான்...!!?

எதனால் இப்படி?!

பொருளாதார வசதி பெருகிவிட்ட இன்றைய காலத்தில் கை விரல் நுனியில் உலகத்தை கொண்டுவந்து விடும் இணையம், கம்ப்யூட்டர், டிவி, சினிமா போன்ற பொழுதுபோக்குகள் என சுற்றிலும் குழந்தைகளின் உலகம் வண்ணமயமாக இருக்கிறது. ஆனால் அவர்களின் மனது எந்த நிலையில் இருக்கிறது...எதை சிந்திக்கிறது...எதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது எண்ணி பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ள பட்டிருக்கிறோம் . 

மாணவன் தவறு செய்தால் பெற்றோர்கள் பள்ளியை கை காட்டுகிறார்கள், பள்ளிகள்  ஆசிரியர்களை கைகாட்ட , ஆசிரியர்கள் கல்வி முறையை கைகாட்ட , கல்வி முறைக்கு காரணம் அரசாங்கத்தில் வந்து முடிகிறது...இப்படி ஒவ்வொருத்தரும் அடுத்ததின் மேல் பழியை போட்டு தப்பிவிடுகிறார்கள் அல்லது நழுவி விடுகிறார்கள். ஆனால் தொடரும் அவலங்களை தடுத்து நிறுத்த போவது யார் ? கண் முன்னே சிதைந்து சின்னாபின்னமாகிக் கொண்டு போகும் இன்றைய மாணவச் செல்வங்களை காப்பாற்ற வேண்டாமா ? இவர்கள் தானே நாளைய உலகை ஆளப் போகிறவர்கள், ஆனால் எப்படி ஆள முடியும் இவர்களால்...குப்பைகள் சேகரிக்கும் தொட்டியாக மனதை வைத்துள்ளார்களே ?!

ஏதோ ஒரு மாணவன் முதல் மாணவனாக வந்துவிட்டான் என பெருமை பாராட்டி அவன் பின்னால் ஓடும் சமூகம் பிற மாணவர்களின் மனநிலை பற்றி சிறிதாவது யோசிக்கிறதா ?

நெல்லை மாணவனின் தற்கொலை முயற்சி

பாளையங்கோட்டையை சேர்ந்த மார்டின் ஆரோக்கியராஜ் இவருடைய 13 வயது மகன் ஏர்கன் எனப்படும் துப்பாக்கியை வைத்து நெற்றிப் பொட்டில் தன்னைத் தானே சுட்டு கொண்டான். அலறி அடித்து மாடிக்கு சென்ற பெற்றோர்கள் ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு ஓடி இருக்கிறார்கள்.படிப்பு சரியாக வரவில்லை, தேர்வில் நல்ல மார்க் வாங்கவில்லை, அந்த வருத்தத்தில் சாக முடிவு செய்தததாக கூறி இருக்கிறான்.

இதில் எங்கே நடந்தது தவறு ? பள்ளியிலா, கல்வி முறையிலா எதில் தவறு...?! இவை இரண்டையும் விட தவறின் பக்கம் பெற்றோர்களே அதிகம் இருக்கிறார்கள் என்பது எனது கருத்து.


இன்றைய பெற்றோர்களே ?!!!

படிப்பு மட்டும் தான் வாழ்க்கை  என பிள்ளைகள் மனதில் பதிய வைத்த பெற்றோர் தான் முக்கிய காரணம். சரியாக படிக்கவில்லை, மார்க் குறைவாக எடுக்கிறான் என்று பெற்றோரை அழைத்து சுட்டி காட்ட வேண்டியது பள்ளியின் கடமை. ஆனால் பெற்றோர் என்ன செய்ய வேண்டும்...?!


தங்கள் பிள்ளைக்கு படிப்பில் நாட்டம் இல்லை என்று தெரிந்ததும், " ஏண்டா இப்படி இருக்கிற, அந்த பையனை பாரு, எல்லா சப்ஜெச்டிலும் 90 க்கு மேல, அவனுக்கு மட்டும் எப்படி முடியுது, நீ கேட்டதெல்லாம் வாங்கி தரேனே, இருந்தும் ஏண்டா இப்படி இருக்கிற, எனக்குன்னு வந்து பிறந்தியே ,மத்தவங்க முன்னாடி மானத்தை வாங்கிட்டியே...அப்படி இப்படின்னு பையனை படுத்தி எடுக்கிறார்கள் பெற்றோர்கள். தங்களது டென்ஷனை பையனின் மீது திணித்து அவனை மன அழுத்தத்தில் விழ வைத்து விடுகிறார்கள்...

இது போன்ற ஒரு நிலை நமது குழந்தைக்கு ஏற்பட்டால் கலவரமடைந்து விடாமல் நிதானமாக பொறுமையாக அணுகி பாருங்கள்...

* படிப்பது மனதில் பதியவில்லையா

* படிப்பின் மீது விருப்பம் இல்லையா ? அல்லது வேறு எதன் மீதும் விருப்பம் இருக்கிறதா

* பள்ளி/ஆசிரியர்கள் பிடிக்கவில்லையா?

* அவர்கள் நடத்துவது புரியவில்லையா?

* நாங்க சொல்லி கொடுத்தா பிடிக்குமா?

இப்படி எல்லாம் கேட்டு விட்டு எதற்கும் சரியாக பதில் வரவில்லை என்றால்

" கொஞ்சம் விருப்பம் வைத்தால் சுலபமாக படித்து விடலாம்...உன்னை முதல் மாணவனாக வா என சொல்லவில்லை...ஆனால் போதுமான அளவு படிச்சா போதும், குறைவான மார்க் தான் எடுக்கிறான் என்று ஆசிரியர் புகார் பண்ணினால் அவர்களை நான் பேசி சமாளித்து கொள்கிறேன்...இனி அதை பற்றி கவலைபடாத...ஜாலியா படி...நிறைய விளையாடு...எந்த சப்ஜெக்ட் பிடிக்குதுன்னு சொல் அதையே 11 வது வகுப்பிலும் எடுப்போம்...உன் சந்தோசம் தான் எங்களுக்கு முக்கியம் , உன் மார்க் இல்லை...இதை மனசுல வச்சுக்கோ" சரியாக படிக்காத உங்கள் பிள்ளையிடம் இந்த விதத்தில் சொல்லி பாருங்கள். நீங்கள் எதிர்பார்த்தே இராத  ஒரு மேஜிக் விரைவில் நடக்கும்.

பாண்டிச்சேரியில் மனநல ஆலோசகர் ஒருவர் கவுன்செலிங் கொடுப்பதற்காக சென்றிருக்கிறார். குழுமி இருந்த மாணவர்களிடம்,

" என்ன தப்பு செய்தாலும் தண்டனை  கிடையாது, அப்படின்னு சொன்னா யார் யார் என்ன என்ன தப்பு பண்ணுவீங்க " என்றார்.

* சாக்லேட் திருடி தின்பேன்

* அப்பா மூக்கு கண்ணாடியை உடைப்பேன்

* சாம்பாரில் உப்பு அள்ளி போடுவேன், போன்ற பதில்களை தொடர்ந்து ஒரு சிறுவன் " என் அம்மா அப்பாவை குத்தி கொள்வேன்" என்றான்...! நம்பித்தான் ஆகணும் நடந்து உண்மை இது.

காரணம் கேட்டதற்கு, " பகல் புல்லா ஸ்கூல்ல படிச்சிட்டு வந்தா வீட்டிலும் படி படினு நச்சரிக்காங்க, அப்புறம் டியூசன் , ஹிந்தி ஸ்பெஷல் கோச்சிங் எல்லாம் முடிய 9 மணி ஆகிடும்...சனி, ஞாயிறும் புல்லா ஹோம்வொர்க் கொடுப்பாங்க  ...அதை செய்ய லேட் ஆனா வீட்ல ஒரே திட்டு...இந்த அப்பா அம்மா எனக்கு வேண்டாம் "

அங்கிருந்த ஒருத்தர் முகத்திலும் சிறிதும் சலனமில்லை, வெறித்தபடி இருந்தனர், அவனது பெற்றோர் உட்பட...!! அப்புறம் அந்த பையனுக்கு மட்டும் தனியா கவுன்செலிங் கொடுத்திருக்காங்க...!

ஆகையால்,

" உங்கள் குழந்தை எதுவாக ஆகவேண்டும் என நீங்க எண்ணுகிறீர்களோ அதை அவர்கள் மேல் திணிக்காதீர்கள்...தாங்கள் என்னவாக வேண்டும் என குழந்தைகள் எண்ணுகிறார்களோ அதற்கு நீங்கள் உறுதுணையாக இருங்கள், அது போதும் "

தற்கொலைகள் ?!!

கோவை மாவட்டம் உடுமலை அருகே உள்ள பள்ளியின் விடுதியில் ஆசிரியர் தன்னை துன்புறுத்துகிறார் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டான் பிளஸ் 1 மாணவன். இது ஒரு வகையான பழிவாங்கும் மனோநிலை. ஆசிரியரை பலி வாங்குவதாக எண்ணி தன்னை மாய்த்து கொள்ளும் இத்தகைய செயல் மிகவும் ஆபத்தான ஒன்று. வெளியே பார்க்கும் போது சாதாரணமாக காணப்படும் குழந்தைகளின் மனதில் இதை போன்ற எத்தனை ஆபத்துகள் ஒளிந்திருக்குமோ தெரியவில்லை.

பெற்றோரின் அதீத கண்டிப்பால் வீட்டைவிட்டு வெளியேறும் மாணவர்களும் இருக்கிறார்கள். பெற்றோரின் கவனிப்பு சரி இன்மையால் வன்முறைக்கு மாறுபவர்களும் உண்டு.

அதிக அழுத்தத்தை மாணவர்களால் சமாளிப்பது இயலாது...பெற்றோரின் மிதமிஞ்சிய எதிர்பார்ப்பு தன் பிள்ளை மிக உயர்ந்த நிலைக்கு வந்துவிடவேண்டும் அது கல்வியால் மட்டும் தான் முடியும் என்பது என்னை பொறுத்தவரை ஒரு தவறான கண்ணோட்டம்.

ஒரு பக்கம் பெற்றோர்களின் படி படி என்ற வற்புறுத்தல் மற்ற்றொரு பக்கம் தங்கள் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சியை பெற வேண்டும் என்று நெருக்கும் பள்ளி இவற்றுக்கிடையே தத்தளிக்கிறார்கள். அவர்களின் மெல்லிய இதயம் பாதிப்புக்குள்ளாகிறது. ஒரு சில பிள்ளைகள் நன்றாக படித்து நெருக்கடியை சுலபமாக சமாளித்துவிடுகிறார்கள். இவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. சுமாராக படிக்ககூடியவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.


அதிக மதிப்பெண்கள் எடுப்பவர்கள் மட்டும் அறிவாளிகள் அல்ல. யாராக இருந்தாலும் தன்னம்பிக்கை, முயற்சி,உழைப்பும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றிப் பெற முடியும். பள்ளிப்படிப்பை கூட தாண்டாத பலர் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு சென்றிருக்கிறார்கள் என்பதை குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து புரியவைக்க வேண்டும். அது போன்றவர்களின் வாழ்க்கை வரலாறை குழந்தைகளுக்கு எடுத்து சொல்லி தன்னம்பிக்கையை ஊட்ட வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை.


பக்குவபடுத்துங்கள் !! 


தனிமனித ஒழுக்கம் என்றால் என்னவென்று உணராத நாம் தான் பிள்ளைகளை குறை சொல்கிறோம். "ஆமாம், அந்த டீச்சருக்கு வேற வேலை இல்லை, எதையாவது சொல்லி கொண்டே இருக்குங்க, நீ கண்டுக்காத விடு " என்று சொல்லும் பெற்றோரும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். "நானே என் பிள்ளையை அடித்ததில்லை, ஆசிரியர் எப்படி உன்னை அடிக்கலாம்" என்று கூறினால் அந்த பிள்ளைக்கு எப்படி தன் ஆசிரியர் மேல் மரியாதை வரும், ஆசிரியர் தனது நன்மைக்கு தான் கண்டிக்கிறார் என்பது எப்படி புரியும்?!! அறிவுறுத்தும் தனது ஆசிரியரை ஒரு எதிரி போல் தான் எதிர்கொள்வார்கள். 

ஆசிரியருக்கும் மாணவனுக்கும் நடுவில் பெற்றோர் பாலமாக இருக்கவேண்டும்.ஆசிரியரை மதிக்க வேண்டும், யாராக இருந்தாலும் அவர்களிடம் இருக்கும் நல்லதை மட்டும் தான் நாம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். ஒருவேளை ஆசிரியரிடமே தவறு இருந்தாலும், கண்டிப்பில் குறை இருந்தாலும் அதை நம் குழந்தைகள் சுலபமாக சமாளித்துவிடுவார்கள், பெரிது படுத்த மாட்டார்கள்.  அவர்களின் மனம் பக்குவபட்டுவிடும். இந்த பக்குவ பட்ட மனநிலைக்கு நம் பிள்ளைகளை தயார் படுத்தி வைத்துவிட்டால் போதும், அதிக பாட சுமையோ, ஆசிரியரின் அதீத கண்டிப்பா எதுவுமே அவர்களை அசைக்காது, தெளிவாக இருப்பார்கள்.

 "ஐயோ உலகம் இப்போ மோசமா இருக்கே என் பிள்ளை இதன் நடுவில் எப்படி, என்ன பாடுபட போறானோ " என்று கவலைபடாமல் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் கொஞ்சம் மெனகிடத்தான் வேண்டும்.


எந்த சூழ்நிலையையும், எத்தகைய மனிதர்களையும் சமாளிக்க கூடிய விதத்தை குழந்தைகள் மனதில் அவர்கள் வயதின் ஒவ்வொரு கட்டத்திலும் பதிய வைக்க வேண்டும்...சிறிய வயதில் பதிந்தவை நாம் உடன் இல்லாத போதிலும் அவர்களுக்கு கைகொடுக்கும்.

பின்குறிப்பு :

அதிக வேலை பளுவின் காரணமாக முந்தைய பதிவில் சொன்னது போல உடனே அடுத்த பதிவை வெளியிட இயலவில்லை. குழந்தைகள் பற்றி இன்னும் நிறைய எழுதலாம் , அந்த அளவிற்கு இன்று இப்பிரச்சனை மிக முக்கியமானதாக இருக்கிறது. முடிந்த வரை தொடர்ந்து எழுதுகிறேன். மெயில்/பின்னூட்டம் மூலம் கருத்துக்கள் கூறிய உள்ளங்களுக்கும் தோழி ஏஞ்சலின்க்கும் என் நன்றிகள். 


படங்கள் - நன்றி கூகுள்