திங்கள், மார்ச் 19

10:23 AM
3


இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை குழுவில் தீர்மானம் கொண்டுவரபடுவதற்க்கு ஆதரவு தெரிவிப்பதில் மௌனம் சாதிக்கும் மத்திய அரசு !!?" இலங்கையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த உள்நாட்டு போர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக முடிவுக்கு வந்தது. அப்போது 40 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் கூட்டங்கூட்டமாக ஈவு இரக்கமின்றி கொடூரமான முறையில் இனப் படுகொலை செய்யப்பட்டனர். சிங்கள அரசின் வெறித்தனமான மனிதத் தன்மை அற்ற கொலைவெறி ஆட்டங்கள் சானல் 4  லின் மூலம் தற்போது வெளி உலகிற்கு வந்திருக்கின்றன. சர்வதேச சமுதாயம்  இதைக் கண்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியது "-பத்திரிகை  செய்தி 

இப்படி சில வரிகளில் நடந்த அத்தனை கொடுமைகளையும் சொல்லிவிட முடியும் ஆனால் மனித உணர்வு உள்ள யாரும் இதை ஒரு செய்தியாக சாதாரணமாக படித்து விட்டு சென்றுவிட இயலாது. கொடூர கொலைகள் !!அந்த விடியோ காண தைரியம் இல்லாமல் ஒரு சில போட்டோக்களை பார்த்தே மனம் நடுங்குகிறது. நடந்தது நடந்து போச்சு, இனி நடப்பதை பார்ப்போம்  என்று சமாதானம் சொல்ல வாய்ப்பே இல்லாத கொடூர நிகழ்வுகள் இவை. 

கண்டன தீர்மானம் 

இதுநாள் வரை கண்டுகொள்ளாத நாடுகளும் இப்போது இலங்கையை ஒரு வித வெறுப்புடன் நோக்க தொடங்கியுள்ளன என்பதற்கு ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கொண்டுவந்துள்ள கண்டன தீர்மானம் ஒரு சாட்சி.   

இந்த தீர்மானம் நிறைவேற வேண்டுமென்றால் மனித உரிமைகள் சபையில் 24 நாடுகளின்  வாக்குகள்  இருந்தால்  மட்டுமே  முடியும் . இலங்கைக்கு எதிராக 22 நாடுகள் தயாராக இருக்கின்றன. ரஷ்யா, சீனா இலங்கைக்கு ஆதரவாக இருக்கின்றன. இத்தீர்மானம் வெற்றி பெற்றுவிட்டால் இன அழிப்புக்கு பதில் சொல்ல கூடிய கட்டத்திற்கு இலங்கை வந்துவிடும். விசாரணைகள், பொருளாதார தடைகள் என்று பாயும். ராஜபக்சே என்னும் அரக்கனின் ஆட்டத்தை அடக்க இது ஒரு சந்தர்ப்பமாக கூட இருக்கும்.  

S. M. கிருஷ்ணா  சொல்கிறார்   "இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்காக உறுப்பினர்கள் அவையில் வெளியிட்ட கவலை, உணர்வுகளை நானும் பகிர்ந்து கொள்கிறேன். இலங்கையில் போர் முடிவுக்கு வந்த நாள் முதல் அந்நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு உதவிகளைச் செய்ய வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டு இந்திய அரசு செயல்பட்டு வருகிறது " என்று 

யாருக்கு வேண்டும் இவர்களின் கவலை,பரிதாப அறைகூவல்கள், இன்னுமா நாம் இவற்றை எல்லாம் நம்பிக்கொண்டிருக்க வேண்டும். எதை சொன்னாலும் நம்பிவிடுவார்கள் மக்கள் என்பதே அரசியல்வாதிகளின் எண்ணம். ஆனால் அரசுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டால் என்னாகும் என்பதை புரிந்துகொள்ள மறந்துவிடுகிறார்கள்.

"இலங்கை அரசு உண்மையான அக்கறையுடன் செயல்பட்டு தமிழ்ச் சமூகத்தினரின் குறைகளைத் தீர்க்கும் என்ற நம்பிக்கையைத்தான் இந்திய அரசு வைக்க முடியும்"  - எஸ்.எம்.கிருஷ்ணா 

கொந்தளித்து கொண்டிருக்கும் நம் மன உணர்வுகளை சட்டை செய்யாமல் எத்தகைய அசட்டையான பதில் இது !!?

சிங்கள இனவாத வெறிபிடித்த அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த இது ஒரு சந்தர்ப்பம். இனியும் மத்திய அரசு மௌனம் சாதித்து கொண்டும் அலட்சியமான பதில்களை சொல்லிக் கொண்டும்  இருந்தால் தமி(ழ்)ழக மக்கள் வேடிக்கைப் பார்க்க மாட்டார்கள் என்பதை உணர்த்தியாக வேண்டும்.

புதிய தலைமுறையில், சுதர்சன நாச்சியப்பன் (இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினர்)

"இலங்கையில் நடந்தது அனைத்தும் விபத்து தான்... விபத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு...நாங்கள் முதலுதவி செய்கிறோம்... விபத்து ஏன் நடந்தது எப்படி நடந்தது... ஆராய்வது எங்கள் வேலையல்ல... அதை இலங்கை பார்த்து கொள்ளும் "என்கிறார். தமிழ்நாட்டுல இருந்து இவரை தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பின மக்களுக்கு நல்லா கொடுக்கிறார் விளக்கம்...?!!

எப்படி இப்படி ஒரு பொறுப்பற்ற பதிலை சொல்ல முடிகிறது என தெரியவில்லை. பெண்களும், பிஞ்சு குழந்தைகளும் கொத்துகொத்தாக கொல்லப்பட்டதுக்கு பேர் கொலை இல்லாம வேறென்ன...?!  இதை விபத்து என்று சொல்ல எப்படி மனம் வருகிறது. 

மத்திய அரசின் தயக்கம் 

இத்தீர்மானத்தை இலங்கைக்கு எதிராக மத்திய அரசு ஆதரித்தால் நாளையே இலங்கை 'இந்தியா சொல்லித்தான் இன படுகொலையை நாங்கள் செய்தோம்' என்ற உண்மையை சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில் தான் இந்த விசயத்தில் மத்திய அரசு சமாளிக்கிறதோ என சந்தேகம் வருவது இயற்கை. 

பொதுவாக பார்த்தால் அமெரிக்கா செய்திருக்கும் மனிதஉரிமை மீறல்கள் மிக அதிகம் என்றபோதிலும் இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்திருப்பதின் உள்நோக்கம் எதுவாக இருப்பினும், இத்தீர்மானத்தை இந்தியா கண்டிப்பாக ஆதரித்தே ஆகவேண்டும். மக்களுக்காகவே இந்த அரசு என்று சொல்லிகொண்டிருக்கும் தமிழக அரசும், மக்களுக்காக எதையும் செய்வோம் என்று மார் தட்டிகொள்ளும் எதிர்கட்சிகளும் இந்த ஒரு விசயத்திலாவது ஒன்றாக இணைந்து மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். 

மக்களுக்கு எதிராக யார், எந்த நாடாக இருந்தாலும் கொலைபாதக செயலை செய்தால் அதை இந்திய அரசு எதிர்த்தே ஆகும் என்பதை உலகுக்கு தெரியபடுத்த வேண்டும். இப்போது இலங்கைக்கு எதிராக தீர்மானம் என சொல்லும் அமெரிக்காவே நாளை மனிதஉரிமை மீறல் செய்தாலும் அதையும் இந்தியா எதிர்க்கும் என்பதை அழுத்தமாக பதிவு செய்தாக வேண்டும். இந்தியா காந்தியம் பேசிகொண்டிருந்தால் மட்டும் போதாது...

அனைத்து தமிழ் நெஞ்சங்களும் ஓங்கி நமது குரலை தெரிவிக்க வேண்டிய  ஒரு நேரம் இது. நம் சகோதர உறவுகளுக்கு ஆதரவாக நாம் இருக்கிறோம் என்பதை இதன் மூலம் தெரிவித்து அவர்களுக்கு தைரியம் கொடுப்போம். 

ஒன்றிணைந்து நமது குரல் ஒலிக்கட்டும் மூடிக்கிடக்கும் செவிகள் திறக்கும் வரை...மத்திய அரசு இத்தீர்மானத்திற்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என்றே வலியுறுத்துவோம்...!! 

வாழ்க எம்மக்கள் ! ஓங்குக தமிழ் மக்களின் ஒற்றுமை !!


முக்கிய குறிப்பு


உலகமெங்கும் தமிழர்கள் இத்தீர்மானத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என வற்புறுத்தி,வலியுறுத்தி கண்ணீர் விட்டு கொண்டிருக்கும் இந்த நிலையில், இதில் இருக்கும் சில அரசியல் தந்திரங்கள் இவையாகவும்  இருக்கலாம், அது என்ன என்று அவசியம் படித்துத்தான் பாருங்களேன்... 


காய்கள் நகர்த்தும் காங்கிரஸ் ! ஐநாவில் அரங்கேறப் போகும்  இலங்கை எதிர்ப்பு நாடகம்...!

Tweet

3 கருத்துகள்:

 1. 40 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் கூட்டங்கூட்டமாக ஈவு இரக்கமின்றி கொடூரமான முறையில் இனப் படுகொலை செய்யப்பட்டனர்.//

  இரண்டு லட்சத்துக்கும் மேலான தமிழ் மக்கள்'ப்பா ரத்த கண்ணீர் அன்னைக்கு இருந்தே வடிச்சு பதிவு எழுதிட்டு இருக்கேன், அறம் பாடி எழுதும் எழுத்துக்கு கண்டிப்பா தீர்வு உண்டுய்யா அதில் எனக்கு நம்பிக்கை இருக்கு, உப்பை தின்னவன் தண்ணி குடிக்கணும் கவுசல்யா வெயிட் காட் இஸ் கிரேட்.......!!!

  பதிலளிநீக்கு
 2. //ஓங்குக தமிழ் மக்களின்
  ஒற்றுமை !!//
  ஒற்றுமை ஓங்கட்டும்.

  பதிலளிநீக்கு
 3. இது பற்றி கடந்த ஒரு வார காலத்தில் நான்கு கவிதைகள் எழுதியுள்
  ளேன்!
  கட்சிகளோ ஒன்று பட்டுக் குரல்
  கொடுக்கத் தயாராய் இல்லாத அவலநிலை!
  முடிந்தால் படித்துப்பாருங்கள்.

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...