புதன், டிசம்பர் 7

ஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'



இதுவரை கட்டுரைப்  போல பதிவுகள் எழுதி இருந்தாலும் கதை எழுதியதில்லை. (எழுதத் தெரியவில்லை என்பதே உண்மை) ஆனால் என் மனதை மிகவும் பாதித்த ஒரு பெண்ணின் வாழ்க்கையைப்  பற்றி எழுதவேண்டுமென நீண்ட நாட்களாக ஒரு எண்ணம் இருந்தது. தவிர இதை எழுதுவதற்கு  ஒரு முக்கிய காரணம் அவள் என் நெருங்கிய சினேகிதி...! தனது மனக்  குமுறல்களை டைரியிலும்  என்னிடமும் தவறாதுக்  கொட்டிவிடுபவள்...அனைத்தையும் சேர்த்து ஒரு கதையாக(?) என் தோழியின் சுய சரிதையை இங்கே பதிகிறேன் அவளின் அனுமதியுடன்...(அவரது வேண்டுகோளுக்கிணங்க பெயரும் ஊரும் மட்டும் தவிர்க்கப்படுகிறது)

முன் அறிமுகம் !

சந்தோசமான வாழ்க்கை எல்லோருக்கும்  அமைந்துவிடுவதில்லை, பிரச்சனைகளின் நடுவில் வாழ்பவர்களில் ஒரு சிலர் ஒரு கட்டத்தில் மீண்டு எழுந்துவிடுவார்கள் ஒரு சிலரால் முடிவதில்லை. அந்த ஒரு சிலரில் இவளும்  ஒருத்தி. சிறுவயதில் மனதைப்  பாதித்த சம்பவங்கள் திருமணம் முடிந்தபின்னரும் ஏன் வயதான பின்னர் கூட மனதை அழுந்த செய்யும்.அதிலும் இந்த பெண்ணைப்  பொறுத்தவரை சிறு வயதில் மனதை பாதித்தவைகள் திருமணத்திற்கு பின்னரும் தொடருவது வேதனை ! அன்பான கணவன் , குழந்தைகள், செல்வச்செழிப்பான வாழ்வு என எல்லாம் இருந்தும் எதுவுமே தனதில்லை என்பதைப்  போல எந்த வித பிடிப்பும் இல்லாமல் வாழ்ந்து வருகிறாள்.

யார் இவள் ?

சிறு வயதில் இருந்து எனக்கு அவளைத்  தெரியும்...ஒருவர் குடும்பத்தை பற்றி மற்றொருவருக்கு நன்கு பரிட்சயம் உண்டு.நடுவில் சில வருடங்கள் பெற்றோரின் வற்புறுத்தலுக்காக அவளது சொந்த ஊரில் இருக்கும் ஹாஸ்டலில் தங்கி தனது பள்ளிப் படிப்பை தொடர்ந்தாள்...பின் கல்லூரி வாழ்வின் போது மீண்டும் இருவரும் சந்திக்க நேர்ந்தது...இன்று வரை தொடருகிறது எங்களின் நட்பு. 

தாம்பத்தியம் தொடரை நான் எழுத மிக முக்கிய காரணம் என் தோழி தான். இப்போது உங்களுக்கு ஓரளவிற்கு புரிந்திருக்கலாம், அவள் வாழ்வில் எதனால் பிரச்னை என்று ?! ஆம். அவளது பெற்றோரின் கருத்து வேறுபாடுகளால் ஏற்படும் சண்டைகள் ! இது ஒரு பக்கம் என்றால் இவற்றின் நடுவே வேறு சில இம்சைகள்(?) இவையும் சேர்ந்துக்  கொண்டு இவள் மனதை அதிகம் பாதித்தன, கண்டபடி யோசிக்க வைத்தன...

சில அனுபவங்கள்  

தனது பத்தாவது வயதில் திருமணமான ஒரு ஆணின் பாலியல் ரீதியிலான தவறானத்  தொடுதல்...ஹாஸ்டலில் பிளஸ் 1 படித்த போது லெஸ்பியன் பற்றிய அர்த்தம் புரியாமல் அதைப்  பற்றி அறிய நேரிட்ட சூழல்...இப்படி வயதிற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் கிடைத்தன சில கசப்பான அனுபவங்கள் !

இதற்கிடையில் இவளது வாழ்வில் அழகான காதல் ஒன்றும் வந்து(!) போனது(?) ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லாமல் ஆறு வருடமாக வளர்த்த காதல், பிறகு ஒருநாள் முதல் முறையாக இருவரும் நேரில் சந்தித்து தங்கள் விருப்பங்களை வெளியிட்ட அக்கணத்திலேயே அந்த அழகான காதல் முடிவுக்கும் வந்து விட்டது ?!!

ஆமாம். காதலைச்  சொன்ன அத்தருணத்திலேயே இருவரும் பரஸ்பரம் பிரிந்து விட்டனர்...அதன் பின் இந்த நிமிடம் வரை இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதே இல்லை...ஆனால் அந்த காதல் இன்னும் ஆத்மார்த்தமாக வாழ்ந்து கொண்டிருக்கிறது இருவரின் நெஞ்சிலும் என்பதை அறிவேன்...!

இப்படி அவளது பல வித்தியாசமான சம்பவங்களை எவ்வித ஜோடனையும் இன்றி அப்படியே பதிய வைக்க எண்ணுகிறேன்.

'இவள்' உங்களுக்கு பிடிக்கலாம், பிடிக்காமல் போகலாம்...ஆனால் நிச்சயம் உங்கள் மனதைப்  பாதிப்பாள்...'இவள்' மட்டும் என்று இல்லை இவளைப்  போன்று பலர் நம்மிடையே இருக்கிறார்கள், நமக்கு  தெரிய வாய்ப்பில்லை...! 'இவள்' ஒருவேளை நம் முன்னே நடமாடி கொண்டிருக்கலாம்,நம்முடன் பேசிக்கொண்டிருக்கலாம், பழகிக்  கொண்டிருக்கலாம்...ஒரு தோழியாக, சகோதரியாக...

ரகசியமாக தனக்குள்ளே இன்னொரு(?)வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கும் இவளைப்  போன்றோர் தங்களது சுயத்தை, மனதைத்  தாங்களாக எங்கும் வெளிப் படுத்த விரும்ப மாட்டார்கள்...ஒருவேளை இவளைப்  போன்ற சாயலில் யாராவது உங்களிடம் பேசும்போது ஒரு பலவீனமான கணத்தில் சில வேதனைகளைக்  கொட்டி இருக்கலாம், அதை அசட்டைச்  செய்யாமல் ஒரு ஆறுதல் வார்த்தைச்  சொல்லி ஒரு சின்னப்  புன்னகையைப்  பரிசளியுங்கள்...அவளது கனவுத் தோட்டத்தில் பூக்கும் பூக்களும் மணம் வீசிவிட்டுப்  போகட்டும்...!!

இந்த 'இவள்' பிடித்தால் தொடர்ந்துப்  படியுங்கள், பிடிக்காவிட்டாலும் தொடர்ந்து படியுங்கள்...ஒரு பெண்ணின் மென் உணர்வுகளை புரிந்து கொள்ள...

முன் அறிமுகம் ஒரு வழியாக முடிந்து விட்டது. :) என் தோழியே தனது கதையைச்  சொல்வதாக எழுதி இருக்கிறேன்...உங்களுடன் இனி அவள் பேசுவாள்...நான் விடைப் பெறுகிறேன்...!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *


இவள்...!

'Born with a Silver spoon in my mouth' என்று சொல்கிற மாதிரியான குடும்பத்தில் இரண்டாவது பெண்ணாகப்  பிறந்தேன். குழந்தையில் குண்டா(!) அழகா இருப்பேனாம், இப்பவும் போட்டோவுலப்   பார்த்தா எனக்கே பெருமை தாளாது...என்னைத்  தூக்கி வச்சுகிறதுக்குனே ரசிகர்கள் கூட்டம் அலையுமாம்...!


ஐந்து வயது வரை மிகச்  செல்லமாக வளர்ந்தேன்...வளர்க்கப்பட்டேன்...!அதற்கு பின் விதி ஒரு ஜோசியக்காரன் வடிவத்தில்  வந்தது...எதிர்காலத்தில எனக்கும் அம்மாவுக்கும் ஒத்தே போகாதாம், எப்பவும் எதிர்த்து பேசுவேனாம்...நடப்பேனாம்...வீட்டிற்கு அடங்க மாட்டேனாம்...!இப்படி வாய்க்கு வந்ததை உளறிக்  கொட்டி இருக்கிறான்...என் மேல அவனுக்கு என்ன கோபமோத்  தெரியல...?! நான்  வளரும் சூழலைப்  பார்க்கிற யாரும் ஈசியா சொல்லிடலாம், இப்படி அதிகச்  செல்லமா வளர்த்தாப்  பின்னாடிச்  சொன்ன பேச்சைக்  கேட்க மாட்டானு...! ஆனால் என் அம்மா புதுசா அவன் எதையோ சொல்லிட்ட மாதிரி அதுக்கு அப்புறமா என்னை கொஞ்சம் யோசனையோடயே   டீல் பண்ணத்  தொடங்கிட்டாங்க...! 

மத்தபடி என்னைக்  கவனிக்கிற விதத்தில எந்த குறையும் இருக்காது... கலர்கலரா கவுன் அதே நிறத்தில பிளாஸ்டிக் கம்மல், வளையல், பொட்டு, ரிப்பன் என்று பார்த்து பார்த்து வாங்கி அலங்கரிப்பாங்க...பள்ளி விழாக்களில் நான்தான் ஸ்பெஷல்...எல்லாம் அம்மாவின் ட்ரைனிங் !! 

பள்ளியில் படிக்கும் போது பள்ளி ஆண்டு விழாவிற்கு அப்போதைய கவர்னர் பட்வாரி அவர்கள் வரவழைக்கப்பட்டிருந்தார். அவரை வரவேற்கும் விதமான  பாடல் ஒன்றுக்கு நானும் இன்னும் மூன்று பேரும் நடனம் ஆட ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருந்தோம், விழாவிற்கு முதல் நாள் காலையில் என் காலில் கொலுசு போடும் இடத்தில் எதனாலோ ஒரு பெரியக்  கட்டி வந்துவிட்டது...வலி இல்லை ஆனா பார்க்க ஒரு மாதிரியாக  இருந்தது.

முட்டி வரை உள்ள கவுன் தைச்சுத்  தயாரா இருக்கு, ஆனா என் கால் இப்படி இருக்கிறதால கவுன் மாடல் டிரஸ் செட் ஆகாது, என்ன பண்ணலாம் என யோசனையில் இருக்கும் போது என் அம்மா உடனே எல்லோருக்கும் மேக்ஸி (நைட்டி மாதிரியான கால்வரை உள்ள மாடல் டிரஸ்)  போடச்  சொல்லிடலாம் என சொல்லவும், எங்க ஆசிரியை கொஞ்சம் யோசிச்சாங்க... உடனே என் அம்மா "நானே நாலு பேருக்கும் மொத்தமா வாங்கிக்  கொடுத்துவிடுகிறேன்" அப்படின்னு சொல்லிடாங்க...அப்பவே கடைக்கு போய், நல்லா அழகா பிரில் வச்ச வேற வேற கலர்ல ஒரே மாதிரியான மேக்ஸி வாங்கி கொடுத்தாங்க...அதை போட்டுகிட்டுச்  சிறப்பா ஆடி முடிச்சோம்.

இப்படி என்னை அருமையாக்  கவனித்துக்  கொண்டாலும் அம்மாவின் மனதோரத்தில் சிறு கசப்பு இருந்துகொண்டே வந்திருக்கிறது...அதை நானே உணர்ந்துக்  கொள்ள கூடிய சூழல் ஒன்றும் வந்தது...


பொதுவாக விடுமுறை நாள் அன்று சோம்பலாய் விடியும் மாணவ மாணவர்களின் பொழுதுகள் !

அப்படிதான் எனக்கும் ஒருநாள் காலைப்  பொழுது விடிந்தது...கலைந்துக்  கிடந்த முடிகளை ஒன்று சேர்த்து கிளிப் போட்டு, தலைக்கு மேல் கைகளை உயர்த்தி சோம்பல் முறித்துக்கொண்டே மெல்ல எழுந்தேன்...இன்னும் சற்று நேரத்தில் என் தலையில் இருந்து ரத்தம் கொப்பளிக்கப்  போகிறது என தெரியாமல்...!? 

                                                                   * * * * ** * * * *

'இவள்' உங்களுடன் தொடர்ந்து பேசுவாள்...




படங்கள்- நன்றி கூகுள் 




திங்கள், டிசம்பர் 5

இவர்கள் வாழ்வில் வேண்டும்...நல்ல மாற்றம் !

இவர்கள் ?!

நம் சமூகத்தில் தான் இவர்களும் இருக்கிறார்கள், நமக்கு தெரிந்தவர்கள் தான்...நம்மை சேர்ந்தவர்கள் தான், ஆனால் வேண்டாதவர்கள் போல தனித்தே பார்க்கபடுகிறார்கள். இவர்களின் பெயர் ஊனமுற்றவர்கள் ! தோற்றத்தில் முழு மனிதனாக காட்சியளித்தும் மனதில் ஊனமுடன் அலைகிறார்கள் பலர்...! ஒருத்தரை எந்த விதத்தில் எல்லாம் காயப்படுத்தலாம், வார்த்தையால் எப்படி சிதைக்கலாம், வதைக்கலாம் என்ற எண்ணத்துடன் உலவும் மனிதர்கள், நெருங்கிய நட்பிடம் கூட துரோகம் இழைக்கும்  குறுகிய புத்தி கொண்ட மனிதர்கள், இவர்களே உண்மையில் ஊனமுற்றவர்கள் !!

'ஊனமுற்றவர்கள்' என்று பெயரில் கூட ஊனம் இருக்கக்கூடாது என 'மாற்றுத் திறனாளிகள்' என்று பெயரை மாற்றினார்கள்...ஆனால் பெயரை மாற்றினால் மட்டும் போதுமா...இவர்களின் வாழ்க்கையில் மாற்றம் கொண்டுவர வேண்டாமா...?! அதற்காக அரசோ, தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ என்னவெல்லாம் செய்கின்றன, அவை உண்மையில் இவர்களுக்கு பயன் கொடுக்கிறதா என்பதை பற்றி நாம் யோசித்திருக்கிறோமா ?! 

ஒரே டிக், 'ஓஹோ'ன்னு வாழ்க்கை... சாத்தியமா ?!

இதில் அதிகம் யோசிக்க என்ன இருக்கிறது, அதுதான் எந்த ஒரு வேலைக்கான விண்ணப்பத்திலும் இவர்களுக்கு என்று ஒரு கட்டம் ஒதுக்க பட்டு இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? 'அதில் பேனாவால் ஒரு டிக் செய்து விட்டால் போதும் இவர்களின் வாழ்க்கையில் வெளிச்சம் கிடைத்துவிடும்' என்று உங்களை போலத்தான் நானும் நினைத்துகொண்டிருந்தேன்...ஆனால் உண்மை வேறுவிதமாக இருக்கிறதே !

சிறப்பு சலுகைகள் முன்னுரிமைகள் என்பது எல்லாம் சிரமபடாமல் உடனே கிடைத்து விடுவதில்லை...இதில் நிறைய முரண்பாடுகள், வேறுபாடுகள் , வேதனைகள் இருக்கின்றன... சலுகை பெற வேண்டி அரசு அலுவலக வாசலில் காத்து கிடக்கும்(?) இவர்களை போன்ற ஒவ்வொருவரிடமும் ஓராயிரம் வேதனை சம்பவங்கள் இருக்கின்றன...


சமீபத்தில் இளைஞன் ஒருவனிடம் பேசிகொண்டிருந்த போது,' சே...நல்லா படிச்சும் வேலைக்கு நாயா அலையறத பார்க்கும் போது ஒரு மாற்றுத்திறனாளியாக பிறந்திருக்கலாம்(?), அவங்களுக்கு தான் எவ்வளவு சலுகைகள்...எங்கே போனாலும் முன்னுரிமைதான். ம்...கொடுத்து வச்சவங்க' என்றார். நானும் வந்த கோபத்தை காட்டிக்கொள்ளாமல், 'அப்ப ஒன்னு பண்ணுங்க, ஒரு காலை வெட்டிகோங்க, உடனே அரசு வேலை கிடைச்சிடும்' என்றேன் மெதுவாக. 'ஐயோ அது எப்படி முடியும், ஒரு காலை வச்சி எப்படி நடக்க, சிரமமா இருக்குமே' என சொல்ல 'இதுதான், இந்த வலி,சிரமத்திற்கு  தான் சலுகைகள் கொடுக்கபடுகிறது, ஒரு பத்து நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு நடந்து பாருங்க, அப்ப புரியும் கண் தெரியாதோரின் வேதனை!?' என சொல்லி அப்போதைக்கு அப்பேச்சுக்கு முற்று புள்ளி வைத்தேன். ஆனால் யோசித்துப்பார்க்கும் போது,

இவரை போன்றுதான் நம்மில் பலரும் இருக்கிறோம்.

தவிரவும் இந்த வலிக்கு தான் அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சலுகைகள், உதவிகள் செய்கின்றனவா...?!

உதவி என்பது எதற்காக...?!

உதவி என்பது சம்பந்தப்பட்டவர்களின் மனம், உடல் வலியை குறைப்பதற்காக, நீக்குவதற்காக, ஆறுதல் அளிப்பதற்காக, அவர்களின் கண்ணீரை முழுதாக துடைப்பதற்காக இருக்கவேண்டும். மாறாக இத்தனை பேருக்கு இத்தனை எண்ணிக்கையில், இவற்றை கொடுத்தோம் என்று கணக்கு காட்டுவதற்காக, பெருமைப்பட்டு கொள்வதற்காக என்பதை போல இருக்ககூடாது...

முன்னுரிமை என்று போட்டிருக்கும் வேலை வாய்ப்புகளை  பொறுத்தவரை போனதும் அப்படியே வேலையை தூக்கி கையில் கொடுத்துவிட மாட்டார்கள் ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து செல்ல இவர்கள் எடுக்கும் பிரயாசங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வலிகள் கொடுக்க கூடியவை, ரத்த கண்ணீரை வரவழைப்பவை.

நமது அரசு செய்வனவற்றில் சில...

* இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 41 மற்றும் 46 ஆவது பிரிவுகள் ஊனமுற்ற சமூதாயத்தின் நிலையை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றன. 

* குரூப் சி, குரூப் டி தேர்வுகளில் 3  சதவீதம் வாய்ப்பு.

* வயது வரம்பில் பத்து ஆண்டுகள் சலுகை.      

* மத்திய பெட்ரோலிய அமைச்சகம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின்  டீலர்ஷிப்பு ஏஜென்சிகளில் 15 சதவீதம்.   

* சுய தொழில் செய்வதற்கு 6,500 வரை எந்த பிணையும் இல்லாமல் 4 % வட்டியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடனுதவி.

* செயற்கை உறுப்புகள் இலவசமாக.

* பேருந்து, ரயில்களில் பயணம் செய்ய சலுகை.

இவை எல்லாம் முறைப்படி கிடைக்க வேண்டுமென்றால் அதற்கு அடையாள அட்டை வேண்டும்.

அடையாள அட்டை

ஒவ்வொரு மாவட்ட மறுவாழ்வு மையங்களும் இதனை வழங்குகின்றன. இருப்பினும் இன்னும் இந்த அடையாள அட்டை சரி வர கிடைக்க பெறாமல் அவதி படுபவர்கள் பலர். இந்த அட்டையை வெகு சுலபமாக வாங்கி விட முடியாது...பல சான்றிதல்களை ஆதாரமாக காண்பிக்க வேண்டும். அந்த சான்றிதல்கள் வாங்க முதலில் நடையா நடக்கணும்...!!? அரசு கேட்கும் ஒரு சில ஆவணங்கள் இல்லை என்று பல முறை இவர்கள் திருப்பி அனுப்ப படுகின்றனர். இங்கே இந்த சான்றிதல், அங்கே அந்த சான்றிதல் வாங்கி வா என அலைகழிக்க படுகின்றனர்...சாதாரணமான மக்களுக்கு இதை போன்ற நிலை என்றால் கூட ஓரளவிற்கு பொறுத்து கொள்ளலாம், ஆனால் வலியுடன் இருக்கும் இவர்களை அலைகழிப்பது எந்த விதத்தில் நியாயம்...?!



அடையாள அட்டை வேண்டும் என்று விண்ணப்பிக்க இரு கால்களையும் பாதிக்கு மேல இழந்து தவழ்ந்து வரும் ஒருவரிடம், 'நீ போய் நடக்க இயலாதவன் என்று மருத்துவரிடம் சான்றிதல் வாங்கிவா' என்று திருப்பி அனுப்பி வைக்க படுகிறார் என்பதை கொஞ்சம் யோசித்து பாருங்கள்...அவர் வரும் கோலத்தை பார்த்தாலே தெரியும், நடக்க இயலாதவர் என்று, இதை நிரூபிக்க அவர் இப்படியே தவழ்ந்து சென்று மருத்துவரை பார்த்து சான்றிதல் வாங்க வேண்டுமா...!!?

இதற்காக ஒரு மருத்துவரை அங்கேயே நியமிக்கலாம் அல்லது மாற்றுதிறனாளிகள் இருக்கும் இடத்திற்கு(வீட்டிற்கு) அரசு பணியாளர் ஒருவர் சென்று இதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுக்கலாம்...சம்பந்தப்பட்டவர்கள் இதை பற்றி யோசிக்கலாமே...!!


இதை பற்றி நண்பர் ஒருவருடன் பேசிகொண்டிருந்த போது 'ஏன் இவர்களுக்கு நாம் உதவ கூடாது' என்று தோணியது...உடனே இதை குறித்து நெல்லையில் உள்ள அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது...

"நீங்கள் கேட்கும் ஒவ்வொருவர் பற்றிய அனைத்து விவரங்களையும் எங்கள் தொண்டு நிறுவனத்தின் மூலம் நான் சேகரித்து கொண்டு வந்து தருவதின் மூலம் மாற்றுதிறனாளிகள் அலைச்சல் குறையுமே, எனக்கு இதற்க்கு நீங்கள் அனுமதிப்பீர்களா" என்று வினவினேன். அதற்கு அவர்கள் சொன்ன பதில் "நாங்களே பார்த்து கொள்கிறோம், மிக்க நன்றி...!" என்பதுதான்.

செயற்கை உறுப்புகள்

அரசும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மாற்றுத்திரனாளிகளுக்கு செயற்கை கை கால்களை வழங்கி வருகிறார்கள், இது தான் நமக்கு தெரியும், இதன் பின்னால் உண்மையில் இருப்பது வலி மட்டுமே. ஆம் இவர்களுக்கு கொடுக்ககூடியது  கனம் கூடியதாகவும், உடலுடன் இணைக்கும் இடத்தில் வலி தருவதாகவும் இருக்கிறது. சமயங்களில் அதிக அழுத்தம் ஏற்பட்டு புண்ணாகி விட கூடும். சுலபத்தில் அசைக்கவும் இயலாது. இதன் விலை நாலாயிரம். ஆனால் இலகு ரகத்தில் செய்யப்படும்  காலிபர் செயற்கை உறுப்புகள் மெல்லியதாக கனம் இன்றி அணிந்திருப்பதே தெரியாத அளவிற்கு இருக்கும். ஆனால் விலை அதிகம்.

வலியை அதிகரிக்ககூடிய ஒன்றை அதிக எண்ணிக்கையில் கொடுப்பதை விட இலகு ரக காலிபர் உறுப்புகளை சிலருக்கு கொடுத்தாலும் வாழ்வின் இறுதி வரை நிம்மதியாக வாழ்வார்கள். கவனிக்குமா அரசும் பிற தொண்டு நிறுவனங்களும்...?!!

அரசே தயாரித்து இலவசமாக அல்லது சலுகை விலையில் இதனை வழங்கலாம்...மாற்றுத்திரனாளிகளுக்கு மிக உபயோகமாக இருக்கும். நமது இன்றைய அரசு தாயுள்ளத்துடன் இந்த உதவியை செய்தால் இவர்களின் வாழ்விலும் வெளிச்சம் கிடைக்கும், இவர்களின் வெள்ளை உள்ளம் வாழ்த்தும்...! அவர்களும் வாழ்வார்கள்...!

கேள்வி பட்டேனுங்க...!

ஒரு பெரிய தன்னார்வ தொண்டு நிறுவனம் சமீபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை, கால்களை வழங்கியது.

பிரமாதமாய் போஸ் கொடுத்து போட்டோ எடுத்தாங்க...! அங்கே கொடுக்கப்பட்டது கனம் கூடிய சாதாரண உறுப்புகள் !! 250 பேருக்கு செயற்கை உறுப்புகள் கொடுத்தால் ஆறு பாய்ண்ட்ஸ் கிடைக்குமாம் அது கிடைச்சாத்தான் குறிப்பிட்ட அந்த உயர் பதவிக்கு போக முடியுமாம். 'அதனால் எனக்கு எண்ணிக்கை தான் முக்கியம், அதிக விலையில் கொஞ்ச பேருக்கு கொடுப்பதைவிட (குறைந்த விலையில்) அதிக பேருக்கு கொடுத்ததாக கணக்கு காட்டுவது தான் எனக்கு நல்லது' என்றாராம் அந்த பொது நல தொண்டர் (?!)

சேவை என்பது தங்களின் அந்தஸ்து உயரும், வசதி பெருகும், புகழ் கிடைக்கும் என்ற சுயநலத்துக்காக என்றால் என்ன மனிதர்கள் இவர்கள்...?!

என்னவெல்லாம் செய்யலாம்... 

மொத்த மக்கள் தொகையில் இவர்களின் எண்ணிக்கை 10 கோடி !! தமிழ்நாட்டில் 2 இலட்சம் பேர் இருக்கிறார்கள்...!! 

இத்தனை பேருக்கு இந்தியா முழுவதும் வெறும் 25 அலுவலங்கள், 18 தொழிற்பயிற்சி மறுவாழ்வு மையங்கள் இருக்கின்றன, இவை மட்டும் போதாது...இந்த அமைப்புகள் சென்னை போன்ற நகர்ப்புறங்களில் வாழ்பவர்க்கே அதிகம் பயன்படுகிறது...உதவிக்காக காத்திருப்பவர்கள் கிராமப்புறங்களில் தான் அதிகம் இருக்கிறார்கள்...அனைத்து உதவிகளும் அவர்களுக்கும் போய் சேர வேண்டும். 

* முதலில் இவர்களை பரிதாபமாக பார்ப்பதை நாம் நிறுத்தவேண்டும். அவர்களுக்கு தேவை நமது பரிதாபமோ கண்ணீரோ அல்ல, அவர்களின் தோளை  தட்டி கொடுக்க கூடிய ஒரு கரம் !

* அவர்கள் இழப்பினை நம்மால் ஈடு செய்ய முடியாது ஆனால் எதனை இழந்தவர்கள் என்பதை அறிந்து அதற்கு ஏற்றார் போல் மட்டும் வேலை வாய்ப்பினை கொடுக்கலாம். 

* இவர்களுக்கு தேவை இலவசம் அல்ல !அரசு இவர்களை கவனித்துக்கொள்ளும் என்று எண்ணாமல் சுய தொழில் செய்பவர்கள் மற்றும் பிற அனைத்து நிறுவனங்களும் இவர்களை (தகுந்த)வேலையில் அமர்த்தலாம்.

* நாம் கண் தானம் செய்வதின் மூலம் பார்வை இழந்தவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றலாம். இறந்த பின்னும் நம் கண்கள் பார்க்குமே, இவர்களின் மூலம்...!

இவர்களும் நம்மவர்களே !!


மாற்றுத்திறனாளிகளிடம் ஏராளமான திறமைகள் இருக்கின்றன. செயலாற்றும் புத்திசாலித்தனம் அதிகம் உடையவர்கள்., அனைத்தையும் விட உடல்  குறைவற்ற நம்மை விட அதிக தன்னம்பிக்கை உடையவர்கள்... உடனே எதற்கும் சோர்ந்து போகாமல் நேர்மையாக சிந்தித்து செயலாற்ற கூடியவர்கள். இவர்களின் உழைக்கும் திறனுக்கு முன் நாமெல்லாம் மிக சாதாரணம்.  அவர்களால் எதை செய்ய முடியுமோ அந்த வேலையை அவர்களிடம் கொடுத்தால் விரைந்து செயலாற்றி முடிப்பார்கள். இவர்களை நம்மை விட்டு தனியே பிரித்து பார்க்காமல் நம் தோளோடு தோள் சேர்த்து அவர்களின் கை கோர்த்து நடக்க வேண்டும். அப்போதுதான் நம்மிடையே இருக்கும் கர்வம்,சுயநலம், தன்னிரக்கம், துரோக சிந்தனை போன்ற அழுக்குகள் கழுவப்படும்.

நம் போன்றோர் செருப்பு போட்டு கொண்டு போகும் 'பொது கழிப்பறை' போன்ற இடங்களுக்கு இவர்களை போன்ற ஒரு சிலர் தவழ்ந்து போவதை பார்க்கும் போது வேதனை படாமல் இருக்க இயலவில்லை...

உடலில் தான் குறை ஆனால் உணர்வுகள் எல்லாம் நம்மை போன்றது தானே...அசிங்கத்தை பார்த்தால் நமக்கு ஏற்படும் அசுயை எண்ணங்கள் அவர்களுக்கும் உண்டு தானே, அதையும் சகித்துக்கொண்டு வாழும் இவர்கள் மேல் நாம் எல்லோரும் அக்கறை எடுக்கலாமே, மாறாக இவர்களை ஒதுக்கி வைப்பது, மரியாதை குறைவாக நடத்துவது, அசட்டை செய்வது போன்றவை கட்டாயம் தவிர்க்கப்படவேண்டும்.

கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று அரசு இவர்களுக்காக சிலவற்றை அறிவித்தது, வெறும் அறிவிப்புடன் நின்று விடாமல் உடனே செயலில் நடத்தி காட்ட வேண்டும்...! எது ஒன்றும் இவர்களின் வலியை குறைப்பதாக இருக்க வேண்டுமே தவிர வலியை அதிகரிப்பதாக இருக்ககூடாது என்பதே எனது வேண்டுகோள் !!


பிரியங்களுடன்
கௌசல்யா 



படங்கள் -நன்றி கூகுள் 

திங்கள், நவம்பர் 21

என்னை காப்பாத்துங்க...! ஒரு அபலையின் அழுகுரல் !!!


பக்கத்துல ஒரு மனுசன் ஐயோ அம்மானு கதறிட்டு கிடந்தாலும் காது கேட்காத மாதிரியே ஒரு சிலரு இருந்தாலும், ஐயோ பாவம்னு அனுதாப பட, உதவி செய்ய கோடி பேர் இருக்கிறாங்க...அதுவும் என்ன போல அடுத்தவங்களுக்காக உசுற கைல பிடிச்சிட்டு ஓடிட்டு இருக்கிறதாலத்தான் நாட்ல மழையே பெய்யுது...ஆங் !மழைன்னு சொன்னப்ப ஞாபகம் வருது, அப்ப அப்ப என் உசுற இந்த மழைதான் காப்பாத்திட்டு வருது...இதுவும் என்னை கைவிட்டுடா என் நிலமை அவ்ளோதான்.

யார் இப்படி தன்னந்தனியா புலம்பரதுன்னு யோசிக்கிறீங்களா...?! நான்தான் ஆறு...ம்...வற்றாத ஜீவ நதினு நீங்க பெருமையா பேசுற தாமிரபரணி தான் நானு !! என்னடா ஒரு ஆறு புலம்புதுன்னு சிரிக்காதிங்க...முழுசா படிச்சா என்னை இப்படி புலம்ப வைக்கிறதே உங்களை போன்ற சில மனுசங்கதானு புரிஞ்சி தலை குனிவீங்க...!

நானும் யாராவது என்ன காப்பாத்த வருவாங்களானு காத்து கிடந்ததுதான் மிச்சம், ஒருத்தரும் எட்டி பார்க்கல...?! கலெக்டர், மந்திரி, எம்எல்ஏனு  பெரிய பெரிய ஆளுங்கலாம் என்ன கண்டுக்காம போனாலும் பொது சனங்க எம்மேல எம்புட்டு பாசம் வச்சிருக்காங்க தெரியுமா...?! ஆனா பாவம், அவங்க ரொம்ப அப்பாவிங்க, என் நிலைய பாத்து கண்கலங்கிறதோட முடிச்சுகுவாங்க, அதுதான் இங்க வந்தா நீங்களாவது என் நிலமைய பார்த்து என்னை காப்பாத்துவீங்கனு வந்திருக்கேன்...

பெருமையும், சீரழிவும்

திருநெல்வேலி அல்வாக்கே என்னாலத்தான் ருசி (ஒரு சுய விளம்பரந்தேன் !) அப்படின்னு வெளில பேசிகிறாங்க ! ஆனா இப்போ இருக்கிற தண்ணிய குடிச்சி பாருங்க, சப்புன்னு இருக்கும்...!? முன்னாடி எல்லாம் காடு கழனிக்கு போற விவசாய சனங்க, தண்ணிய அப்படியே அள்ளி குடிச்சி, 'ஆஹா எம்புட்டு ருசி சோறு கூட வேணாம்ல, வயிறு நிறைஞ்சு போச்சு'னு சந்தோசமா சொல்லுவாக...ம்...அதெல்லாம் ஒரு காலம் !


பொதிகை மலையில் பொறந்து அப்படியே நெல்லையை செழிப்பாக்கிட்டு, தூத்துக்குடி மாவட்டம் புன்னை காயல்ல போய் கடலோட கலந்துடுறேன்.....போற பாதை எல்லாம் செழிப்பா பச்சை பசேல்னு இருக்கும்...ஆனா இப்போ கரையோரத்தில கால் வைக்க முடியாத படி சேறும், சகதியுமா குப்பையும், கூளமா நிறைஞ்சு கிடக்குது...ஆத்துல சில இடத்தில அமலை செடிவேற நிறைய வளந்து மூடி கிடக்குது. மாநகராட்சி ஊருக்குள்ள பன்றிகள வளர்க்க தடை போட்டதால அதுங்க எல்லாம் என் கரையோர ஊர்கள்ல குடும்பமா கும்மாளம் போடுதுங்க...இதால கொசுங்க பெருகி போச்சு குழந்தை குட்டிகளுக்கு நோய் வந்திடுமேனு எனக்குதான் கவலையா இருக்கு...

ஆலை கழிவையும் கொண்டு வந்து கொட்டுறாங்க...தொழிற்சாலை கழிவு நீரை ஆத்துல விடுறாங்க...இதை எல்லாம் யாரு கண்டுகிறாங்க ? தட்டி கேட்குறதும் இல்ல ?!

அட படுபாவிகளா !

இன்னொரு பக்கம் என் மடியில கை வைக்கிற பாவிகளை என்னனு சொல்ல ...அவனுங்கள அந்த காமாட்சிதான் பாக்கணும் ! ஜே சி பி எந்திரத்தை வச்சு மணலை அள்ளி கொண்டு போறாங்க...ஐயோ ! எனக்கு வலிக்குதேனு கத்தி கதறினாலும் அரக்க சென்மங்க காதுல எங்க விழுது...?! இதை பாக்குற சனங்களோ இவன் உருபடுவானானு சாபம் போடுறாங்க...ஆனா எப்படி எதுக் கிறதுன்னு அவங்க பயப்படுறத பார்த்து என் வலியை பொறுத்துகிறேங்க...! 


இந்த மணல் கேரளாவுக்கு லாரி லாரியா போவுது...அந்த சனங்க ரொம்ப புத்திசாலிங்க, எங்க இருந்து மணல் வந்தா என்ன, நம்மூரை நல்லா பார்த்துபோம்னு இருக்காங்க...அங்கிருந்து மாலத்தீவுக்கு வேற போகுதாம்...இது எனக்கெப்படி தெரியும்னு பாக்குறீங்களா, இந்த லாரி டிரைவர்கள் பேசுவதை அப்ப அப்ப கொஞ்சம் கேட்பேன், இப்படிதான் என் பொது அறிவு வளருதுங்க...!

ஆமாம் தெரியாமத்தான் கேட்குறேன், மணலை அள்ளி வேற வேற இடத்தில மலையா குவிச்சு வச்சிருக்காங்களே, அரசாங்கத்தோட ஆளுக யாரும் பார்த்து எப்படி ஆத்து மணல் இங்க வந்ததுன்னு கேட்க மாட்டாங்களா ? இதை பறிமுதல் செய்ய சட்டத்தில இடம் இல்லையா ? (ஓட்டைதான் இருக்குனு சொல்றீங்களா, நீங்க சொன்னா சரிதான் !) 

என்ன ஒரு புத்திசாலித்தனம் ?!


எங்க ஊரு பக்கம் சொல்வாங்க..."கள்ளன் பெருசா, காப்பான் பெருசா" னு. இந்த கள்ளங்க எப்படி எல்லாம் பிளான் போடுறாங்க தெரியுமா... 'மணல் எடுக்க தடை போடுறீங்க சரி, ஆனா நாங்க ஆத்து பக்கத்துல நிலம் வாங்கி, அப்புறம் அந்த பட்டா இடத்தில மணலை வேண்டிய மட்டும் அள்ளுவோம், இப்ப என்ன பண்ணுவீங்களாம்'னு சிரிக்கிறானுங்க...?! அட முட்டா பசங்களே! இப்படி நிலத்த வாங்கி கடும் ஆழத்துல தோண்டுறீங்களே, நாளைக்கு ஆத்துல வெள்ளம் வந்தா ஊருக்குள்ள வந்துடுமேனு கொஞ்சமாவது யோசிசீங்களா...?!! உங்க சுயநலத்துக்காக எத்தன பேர் உசிரோட விளையாடுறீங்க...!? நீங்க நல்லா இருப்பீங்களா !



கைவிட்டுடாதிங்க...

இது ஏதோ புலம்பல்னு கண்டுக்காம விட்டுடாதிங்க...பறந்து விரிந்து ஊருக்கு நடுவில கம்பீரமா ஓட்டிட்டு இருந்த நான், இன்னும் கொஞ்ச நாள்ல ஒரு கோடா , ஒரு புள்ளியா சுருங்கி போனாலும் போய்டுவேன்...! மணல் எடுக்குற சாக்குல எங்களை கொஞ்ச கொஞ்சமா ஆக்கிரமிச்சிட்டு இருக்கிற மணல் கொள்ளையர்களை கூட்டமா சேர்ந்து தட்டி கேளுங்க, போராட்டம் பண்ணுங்க ...ஆரம்பத்தில எதிர்ப்பு இருந்தாலும் தொடர்ந்து நீங்க கொடுக்கிற டார்ச்சர்ல அவனுங்க இந்த கொள்ளை தொழிலையே மறந்துறணும்...ஊர் கூடி தேர் இழுத்தா தேர் நகராமலா போய்டும்...!? முயன்றுதான் பாருங்களேன்...!!

இது என்னோட தனிப்பட்ட வேதனைனு இல்ல, என்னப் போல பல ஆறுகளும் இப்படி தான் அழிஞ்சிட்டு வருது...சனங்களின் தாகத்தை தீர்த்து, விவசாயத்துக்கு உதவி செஞ்சி, ஊருக்கே சோறு போடுற எங்க நிலைமை ரொம்ப மோசமா போயிட்டே இருக்குது...! இனியாச்சும் யாராவது கவனம் எடுத்து, சீரழிஞ்சி செத்துக்கிட்டு இருக்கிற எங்கள வாழ வையுங்கனு என் எல்லா உடன்பிறப்பு சார்பில கேட்டுகிறேன்...

இப்ப மழைகாலம் வேற எல்லா தண்ணியும் கெட்டு போய் கிடக்கு...பிளாஸ்டிக் கேன்ல வாங்கினாலும் அதையும் சுட வச்சு குடிங்க...எங்க ஊருகாரவுக உணவு உலகத்தில சங்கரலிங்கம் ஐயாவோட இந்த பதிவை படிச்சி பாருங்க...அவர் சொல்றது உங்க நல்லதுக்கு தான்னு நினைச்சி அதை அப்படியே கடைபிடிங்க... உங்க புள்ள குட்டிகளை நோய் நொடி அண்டாம பத்திரமா பார்த்துகோங்க சனங்களே...

இத்தனை நேரம் பொறுமையா என் வேதனைகளை கேட்ட உங்க நல்ல மனசுக்கு நீங்க எல்லோரும் ரொம்ப நல்லா இருக்கணும்னு மனசார வாழ்த்துறேன்...முடிஞ்சா மத்தவுககிட்டையும் இதை கொஞ்சம் எடுத்து சொல்லுங்க...உங்களுக்கு புண்ணியமா போகும்...!

இப்படிக்கு 
தாமிரபரணி ஆறு
திருநெல்வேலி.

* * * * * * * * *



தலைப்பு - நன்றி சங்கரலிங்கம் அண்ணா    
படங்கள் - நன்றி கூகுள்     

சனி, நவம்பர் 19

ஒரு நாட்டின் எதிர்காலம் இவர்கள் கையில்...!



நவம்பர் 14 குழந்தைகள் தினம்,  'முன்னாள் பாரத பிரதமர் நேரு குழந்தைகள் மிக நேசித்ததால், அவரது பிறந்த தினத்தை குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம்' இத்தினம் கொண்டாடபடுவதின் காரணம் நமக்கு தெரிந்து இது ஒன்றுதான். ஆனால் உண்மையில் குழந்தைகளின் கையில் தான் ஒரு நாட்டின் எதிர்காலம் உள்ளது என்பதை உணர்த்தவே இந்த தினம்.


விழா

இத்தினம் முக்கியமாக பள்ளிகளில் சிறப்பாகக் கொண்டாடப்படும். ஆசிரியர்களைப் பொறுத்தவரை விழாவினை எப்படி சிறப்பாக நடத்துவது என்பதிலும், பல்வேறு போட்டிகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்வதில் குழந்தைகளின் சிந்தனைகள் இருக்கும்...ஆனால் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு எந்தவித சலனமும் இன்றி வருடத்தின் மற்றொரு நாள் இது என்பதாகப் போய்விடுகிறது...!!? 

'குழந்தைகள் தினம்' கொண்டாடுவது முக்கியம் இல்லை...குழந்தைகளை கொண்டாடுவோம் முதலில்...!!

சிறையில் நம் குழந்தைகள் 

சிறைப்பட்ட வண்ணத்துப்பூச்சி பார்க்க அழகாக இருக்கும் ஆனால் அதன் சிறகுகள் ஒடிக்கப்பட்டிருப்பதை அது அறியாது. இன்றைய குழந்தைகளும் தாங்களாகவே சிறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டார்கள்.கம்ப்யூட்டர் கேம்ஸ், தொலைக்காட்சி இன்னும் பிற அறிவியல் சாதனங்களின் ஆக்கிரமிப்பில் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.ஒரு சிலர் தமது வேலைக்கு இடைஞ்சல் வந்துவிட கூடாது என்று அந்த கதவை தட்டுவதுக் கூட இல்லை, அப்புறம் எங்கே திறப்பது...?!

உடலுக்கு சுறுசுறுப்பை தரும் விளையாட்டுகள் சுத்தமாக குறைந்துவிட்டன...பாட்டி, தாத்தாவிடம் கதை கேட்கும் கொடுப்பினை நம் குழந்தைகளுக்கு இல்லை...ஜங்க் புட் சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்கொள்ளும் தவறான பழக்கம்...உறவினர்கள் வீட்டுக்கு செல்லும் பழக்கம் இல்லை, தங்களின் உறவுகள் யார் எவர் என்றே அறியாத பரிதாபம் !   

பல வீடுகளில் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட தனிமை சிறையில் குழந்தைகள் ! சில நிமிட நேரங்கள் கூட குழந்தைகளிடம் செலவு பண்ண நேரம் இன்றி பொருளாதார தேடலுக்குப் பின்னே சில பெற்றோர்கள் !

கண்ணில் தெரியுது வானம் என்று நாம் சொல்லிக்கொண்டிருக்கும் போது இவர்கள் தொட்டே விடுகிறார்கள்...எங்கும் வேகம்...எதிலும் வேகம் என்று இருக்கிற இவர்களை நாம் கவனமாக பாதுகாக்க வேண்டாமா...?!! உணவு, உடை, படிப்பு கொடுப்பதுடன் தங்கள் கடமை முடிந்துவிடுகிறது என்று எண்ணுவது தவறு அல்லவா ? நல்ல சமுதாயத்தை உருவாக்குவதும் ஒவ்வொரு பெற்றோரின் முக்கிய கடமை தானே ?!

பாட்டு, நடன போட்டிகள்

எல்லா டிவி சேனல்களிலும் ஏதாவது குழந்தைகளுக்கான போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தங்கள் குழந்தையும் பங்குபெறவேண்டும் என்ற சில பெற்றோரின் ஆர்வத்தில் தவறு இல்லை. ஆனால் இதற்காக தன் அன்றாட வேலைகளை தங்கள் விருப்பபடி செய்யவிடாமல் பெற்றோர்  இழுத்த இழுப்புக்கெல்லாம் இழுபடும் பிள்ளைகள் பாவம்.தன் குழந்தை ஜெயிக்கவேண்டும் என்று திணிக்கப்படுபவை, தோல்வி அடைந்துவிட்டால் பெற்றோரின் அதிக எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ய இயலாமல் மன அழுத்தத்தில் விழ வைத்துவிடுகிறது. தவிர பலர் முன் தோற்றுவிட்டோம் என்பது ஒருவித சுயபச்சாதாபத்தை, தாழ்வுமனப்பான்மையை  ஏற்படுத்திவிடுகிறது. அதிலும் போட்டியில் எலிமிநேஷன் என்றதும் அவர்கள் முகத்தில் தெரியும் அச்சமும், செலக்ட் ஆகவில்லை என்றால் ஏற்படும் கலக்கமும் டிவியில் பார்க்கும் நமக்கே வேதனையாக இருக்கும்.

வெற்றி தோல்வி இரண்டையும் சமமாக எதிர்கொள்ளகூடிய அளவிற்கு மனதை தயார் செய்த பின்னர் இது போன்ற போட்டிகளில் பங்குக்  கொள்ளவைப்பது நல்லது. 

அர்த்தம் புரிகிறதோ இல்லையோ குழந்தைகள் பாட்டு போட்டியில் பாடும் இன்றைய ஒரு சில சினிமா பாடல்கள் கேட்கும் போது சங்கடமாகவும், கூச்சத்தில் நெளியவும் வைக்கிறது. இது போன்ற பாடல்களுக்கு பதிலாக பாரதியார், பாரதிதாசன், பாடல்களோ, ஆழ்வார், நாயன்மார்களின் பாசுரங்கள் இன்னும் பல... இவைகளைப் பாட வைக்கலாமே...அதன் மூலம் அப்பாடல்கள் மனதில் பதியும்...மனதில் பதிந்தவை அவர்களை நல் வழிபடுத்தும் !! 

சில பள்ளிகளில் சினிமா பாடல்களுக்கு குழந்தைகளை ஆட வைப்பதில்லை, அது போன்ற பள்ளிகளை பாராட்டலாம்.

குழந்தைகளை குழந்தைகளாக எண்ணாமல் இதை செய் அதை செய் என்று வறுபுறுத்தி வயதுக்கு மீறியவற்றை செய்யும் போது நம் மனது மகிழவே செய்கிறது...ரசிக்கிறோம்...அதே குழந்தைகள் நாளை பெற்றோரை எதிர்த்து நடக்கும் போது அதையும் ரசிக்க நம்மால் முடியுமா ?! 

என்னவெல்லாம் செய்யலாம்...?!


குழந்தைகள் தினத்தன்று ஆதரவற்ற குழந்தைகளை பள்ளி குழந்தைகளுடன் இணைத்து பெரிய விழாவாக கொண்டாடலாம். அப்போது ஆதரவற்ற குழந்தைகள் என்று ஒரு இனம்(?) இருக்கிறதா என்பது நம் குழந்தைகளுக்கு தெரியவரும்...அவர்களை அணைத்து செல்லவேண்டும், அவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் வளர இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.

உலகெங்கும் குழந்தைகள் மீதான குற்றங்கள்/கொடுமைகள்  பெருகிவிட்டன...இதை பற்றி யாரும் பெரிதாக அக்கறைப் பட்டதாக தெரியவில்லை...அங்கே ஒன்றும் இங்கே ஒன்றும் தானே நடக்கிறது என்று மெத்தனமாக இருக்கும் இந்த நிலை மாறினால் நல்லது.

குழந்தைகள் தினம் கொண்டாடும் நம் இந்திய அரசு குழந்தைகள் மீதான குற்றங்களை தடுக்க பெரிய அளவில் எந்த முயற்சியும் எடுத்து வருவதாக எனக்கு தெரியவில்லை...(தெரிந்தவர்கள் சொல்லலாமே...)குழந்தைகளுக்கு என்று நல சங்கங்கள் இருக்கிறதா ? அவை என்ன செய்கின்றன ?! குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தட்டி கேட்கவோ அல்லது அவற்றை களையவோ முயற்சி செய்கிறதா சங்கங்களும், அரசும் ?!!

மூன்று வயது குழந்தையும் பாலியல் கொடுமைக்கு ஆளாகிறது...இதை குறித்த விழிப்புணர்வு பெற்றோர்களுக்கும் வேண்டும்...பள்ளிகளில் குழந்தைகளுக்கு அடுத்தவர்களிடம் நடந்து கொள்ளும் விதம் பற்றியும் குட் டச், பேட் டச் பற்றியும் சொல்லி கொடுக்க வேண்டும். ஒருவர் தவறான இடத்தில் தொடுகிறார் என்றால் உடனே எதிர்ப்பை காட்ட தெரிய வேண்டும், பெற்றோரிடம் சொல்லவேண்டும் என்பதை அவர்களுக்கு நாம் அறிவுறுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு தண்டனை கடுமையாக்க பட்டால் இவை குறையுமா ? 

இவர்களும் குழந்தைகளே !

* முறையான கல்வி பெற வசதி இல்லாதவர்கள்
* ஆதரவற்ற அநாதை குழந்தைகள் 
* பாலியல் கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகள் 
* குழந்தை தொழிலாளர்கள் 
* சரிவிகித ஊட்டச்சத்து இன்றி நோயில் பிடியில் அவதிப்படும் குழந்தைகள்   
* பிச்சை எடுக்கும்(எடுக்க வைக்கப்படும்) குழந்தைகள்
* குப்பை பொறுக்கும் குழந்தைகள் 

ஆதரவின்றி தெருவில் சுற்றிக்கொண்டிருக்கும் குழந்தைகள் அநேகர் !இத்தகைய குழந்தைகளை பார்க்கும் போது நம்மால் இயன்ற ஒரு உதவியை செய்யலாம், அவர்களிடம் பேசி சம்மதிக்க வைத்து பள்ளிகளில் சேர்த்துவிடலாம்...அல்லது இதற்கென இருக்கும் தொண்டு நிறுவனங்களை தொடர்பு கொண்டு இவர்களை ஒப்படைக்கலாம். நமக்கென்ன வந்தது, இதை செய்ய போனால் வேறு ஏதும் பிரச்சனை வந்துவிடுமோ என அச்சம் கொள்ளாமல் இயன்றவரை நமக்கு தெரிந்தவர்கள் மூலமாக நல்ல இடங்களில் சேர்த்துவிடுவது நல் இதயம் உள்ள எல்லோரின் கடமை.

தொண்டு நிறுவனங்களின் வேலை இதுவென ஒதுங்கி கொள்ளாமல், தனி நபர் ஒவ்வொருவரும் உதவ முன் வரவேண்டும்.

நம்மில் பலரும் செய்வது பிறந்த நாள், நினைவுநாளின் போது அநாதை ஆசிரமங்களுக்கு சென்று இனிப்பும், உணவும் கொடுப்பது, இத்துடன் கடமை முடிந்துவிடுகிறது என்று நமது சுயம் திருப்திப்பட்டு கொள்கிறது.உணவு மட்டும் அவர்களை திருப்திப்படுத்தி விடுமா ? ஒரு சிலர் இத்தகைய நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட தொகையை கொடுப்பதும் உண்டு. ஆனால் இவை மட்டும் போதுமா ?!! யோசியுங்கள் !!

நம் குழந்தைகளின் மீது வைக்கும் அதே அன்பை பிற ஆதரவற்ற குழந்தைகளின் மீதும் செலுத்துவோம். அக்குழந்தைகளுக்கும் இப்பூமியில் அனைத்தையும் பெறவும், வாழவும் உரிமை இருக்கிறது...!! அவ்வுரிமையை நாம் மதிப்போம்...எந்த குழந்தைகளாக இருந்தாலும் குழந்தைகளை குழந்தைகளாக மட்டுமே பார்ப்போம்...!! அவர்கள் நலனில் அக்கறை காட்டுவோம்...!!

இக்கட்டுரை அதீதத்தில் வெளிவந்தது...நன்றி அதீதம்.

வருடம் தவறாமல் குழந்தைகள் தினம் கொண்டாடுபவர்களே ! இனிமேல் தினங்களை விட்டு விட்டு குழந்தைகளை எப்போது கொண்டாட போகிறீர்கள் ?
                                                                  -கவிக்கோ அப்துல் ரகுமான்

நாளை நவம்பர் 20 ஆம் தேதி சர்வதேச குழந்தைகள் தினம்...உலகம் முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாட படுகிறது...!

நம் குழந்தைகளை நாம் கொண்டாடுவோம்...! அனைத்து குழந்தை செல்வங்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்...



வெள்ளி, நவம்பர் 18

ஏன் இந்த வெளிநாட்டு மோகம்...!?




பெரும்பாலான இளைஞர்கள் படித்து முடித்ததும் உடனே தேடுவது ஒரு நல்ல வேலை...! கல்லூரியை விட்டு வெளியில் வந்ததும் அரசாங்கமோ, பெரிய கம்பெனியோ 'இந்தா அப்பாயின்மென்ட் ஆர்டர்' என்று தூக்கி கொடுத்து விடாது. வேலைக்கான தகுதியை வளர்த்து கொள்வதுடன், தனக்கு தகுந்த வேலையை தேடுவதும் அவசியம். ஆனால் வெளியிடங்களில் வேலை தேடியே சோர்ந்து போய் விடுகிறான் நம் இளைஞன். எதற்கெல்லாமோ, எதன் பின்னாலோ ஓடி நாட்களை வீணாக கழிப்பவர்கள், வேலை மட்டும் உடனே கிடைத்துவிட வேண்டும் என்று ஆசை படுவது என்ன நியாயமோ தெரியவில்லை.

அதுவும் ஒருசிலர் படிக்கும் போதே வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்கிற ஆசையை, ஆர்வத்தை வளர்த்து கொள்கிறார்கள்...இங்கே தகுந்த வேலையோ சம்பளமோ கிடைக்காது என்கிற விதமாக இருக்கும் அவர்களின் பேச்சுக்கள் எல்லாம்...!?

வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் வசதியானவர்களை பற்றி இங்கே சொல்லவில்லை...இந்த நாட்டில் வேலை கிடைக்கவில்லை என்று அப்பாவிடமோ, அடுத்தவரிடம் கடன் வாங்கியோ விமானத்தை பிடிக்கும் இளைஞனை சொல்கிறேன்...கடன் வாங்கி வெளிநாட்டை தேடி செல்வதை விட அதே பணத்தை வைத்து சொந்த ஊரில் சிறு தொழிலை தொடங்கலாமே என ஏன் யோசிப்பதில்லை...?! பிழைக்க வழி வகை தெரியவில்லையா ?? துணிச்சல் இல்லையா ?? முன்ன பின்ன தெரியாத ஊரில் வாழ தைரியத்துடன் செல்லும் இளைஞனுக்கு, அந்த துணிச்சலை மூலதனமாக வைத்து சொந்த நாட்டில் உழைத்து  சம்பாதிக்க தெரியவில்லை எனும் போது வருத்தம் ஏற்படுகிறது.

நம் நாட்டை குறை சொல்ல ஆயிரம் காரணங்களை அடுக்கலாம். ஆனால் ஏன் இங்கே உழைக்க முடியவில்லை என்ற கேள்விக்கு சரியான பதில் இருக்கிறதா ? அப்படி உங்களுக்கு சாதகமாக பதில் வைத்திருந்தாலும், இங்கே இருக்கும் மற்றவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதையும் சொல்ல வேண்டி வருமே...?!  அரசாங்கம்,  ஊழல், லஞ்சம் என்று எந்த வித சமாளிப்பும் தேவையில்லை. உழைக்க கூடிய திறன் , மனோதிடம், உத்வேகம், தன்னம்பிக்கை, சுய மரியாதை இருந்தால் எங்கேயும் வாழ முடியும். கை நிறைய சம்பாதிக்க முடியும். 

ஆயிரம் வசதிகள் இருந்தாலும் சொந்த நாட்டில் சொந்த பந்தங்களுடன், மனைவி குழந்தைகளுடன் ஒன்றாக வாழும் வாழ்க்கைக்கு ஈடு இணை ஏதும் இல்லை. 

* மனைவி குழந்தைகளை விட்டு சென்று, பல வருடம் கழித்து திரும்பி வரும் சிலருக்கு,நெருங்கிய அந்த உறவுகளே அன்னியமாகி விட்டதை போல தெரியும் சோகம் மிக கொடுமை ?!

* முதலில் அன்பை பொழிந்த உறவுகள், வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தை அனுபவித்த பின்னர், வெறும் பணம்காய்ச்சி மரமாக மட்டுமே உங்களை பார்க்க கூடிய நிலை சகஜம் !!

* பணத்தின் ருசி கண்டவர்கள் ஒரு சிலரின் மூணு வருட அக்ரீமென்ட் முடிந்த பிறகும் மீண்டும் போக சொல்லி வற்புறுத்துவது வேதனை !

இன்னும் இருக்கிறது சொல்வதற்கு...(அடுத்த பதிவில் பார்த்துக்கலாம்னு இத்தோட நிறுத்திக்கிறேன்)

வெளிநாட்டு வேலையை பற்றி இப்படி என்னை ஆதங்கப்பட வைத்துவிட்டது நேற்று நடந்த ஒரு சிறிய சம்பவம்... 



உழைக்க என்ன வெட்கம் ?!

சொந்த தொழில், மாதம் செலவு போக வருமானம் 20,000 ரூபாய்...!! இரண்டு  வருடத்தில்,வந்த வருமானத்தில் சொந்தமாக இரு ஆட்டோ (லோன் ), கூட வேலை செய்ய துணைக்கு மற்றொருவர் மட்டுமே !! அப்படி என்ன வேலை என்கிறீர்களா ?? 

இஸ்திரி கடை நடத்துகிறார்...என்னங்க நம்ப முடியவில்லையா?? நானும் இதை வேறு யாரும் என்னிடம் சொல்லி இருந்தால் நம்பி இருக்க மாட்டேன், நேரில் சென்று பேட்டி எடுக்காத குறையாக விவரங்களை கேட்டு தெரிந்துகொண்ட பிறகே நம்பினேன்... 

நேற்று என் கணவர் வீட்டில் மின்சாரம் இல்லாத போது , அவசரமாக வெளில  அயன்(கரண்ட் அயனிங் அண்ட் கரி பெட்டி அயனிங் இரண்டும் இருக்கும்) பண்ணிட்டு வரேன்னு ஒரு ஷர்ட், பேன்ட் எடுத்து சென்றவர், போன வேகத்தில் திரும்பி வந்துவிட்டார்...'என்னாச்சுங்க' என்றேன். 'இரண்டு நாள் ஆகுமாம், எனக்கு இப்ப தேவை. சரி பரவாயில்லை அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்'னு கிளம்பிட்டார். எனக்கு ஆச்சர்யம் "ஒரு அரைமணி, ஒரு மணி நேரம் வெயிட் பண்ண சொன்னா பரவாயில்லை, இரண்டு நாள் என்றால் எப்படிங்க ?!"

"கடைல ஒரு இடம் பாக்கி இல்லாம வரிசையா பெரிய பெரிய பேக்ல துணிகள் இருக்கு, இருக்கிற துணிய பார்த்தா ஒரு வாரம் ஆகும் போல...!?" 

என கணவர் சொல்லவும் அப்படி என்ன ஸ்பெஷல் அந்த கடைல என்று எனக்கு ஒரு ஆர்வம் வந்து விட்டது. மாலையில் அந்த வழியாக போனபோது போய் விசாரித்தே விட்டேன். 

(வேலை மும்மரத்தில் இருந்ததால் எனது கேள்விக்கு பதில்கள் இன்ஸ்டால்மென்டில் வந்தன.கால் வலித்தாலும் பரவாயில்லை...முழுதும் தெரிந்து கொள்ளாமல் விடுவதாயில்லை) 

B.com படித்திருக்கிறார், ஒரு வருடம் இப்படி அப்படி என்று கழித்துவிட்டு, வேறு உதவி ஏதும் கிடைக்காத காரணத்தால், எங்க ஏரியாவில் இருக்கும் அக்கா வீட்டிற்கு வந்திருக்கிறார். அக்கா வீட்டின் வாசல் மர நிழலில், வண்டியில் ஒருவர் இஸ்திரி போட்டு கொண்டிருந்திருக்கிறார். அவரது வண்டியை சுற்றி ஏகப்பட்ட துணி பேக்குகள் இருக்குமாம். சில நாட்கள் வண்டியை ஓரமாக விட்டு விட்டு போய் விடுவாராம்.அந்த ஏரியாவில் அரசாங்க வேலையில் உள்ளவர்கள் அதிகம், கொஞ்சம் வசதியானவர்கள் உள்ள ஏரியா. 'இஸ்திரி போட ஆள் வராத போது எல்லோரும் என்ன செய்வாங்க' என்று யோசித்திருக்கிறார். ஒரு சுப முகூர்த்த நாளில் 'ஏன் இந்த தொழிலை நாம் செய்ய கூடாது' என்ற சிந்தனை தோன்றி இருக்கிறது. 

முறையான வேலை (துணிகளை சரியாக மடித்து வைக்கும் லாவகம்) தெரியாத போதும், ஒரு மாதம் வீட்டில் பழகி பார்த்திருக்கிறார். அக்கா கணவரின் உதவியால் வண்டி, இஸ்திரி பெட்டி, கரி எல்லாம் தயார்.  ஏற்கனவே அங்கே ஒருவர் இருப்பதால், அக்கா வீட்டு வாசல் சரிபடாது என்று அடுத்த தெருவில், வேப்பமரம் இருக்கும் இடமாக பார்த்து வண்டியை நிறுத்தி இருக்கிறார். 

அடுத்த ஸ்டெப் கஸ்டமர்களை தேடுவது...

புதிய நபர்களை நம்பி யாரும் துணிகளை கொடுக்க மாட்டார்கள்...அதற்காக தனது துணிகளை எடுத்து வந்து ஒவ்வொன்றாக மெதுவாக அயன் செய்வாராம். அவரது ஒரு சட்டை பல முறை அயன் செய்ய பட்டு இருக்குமாம் !(தொழில் பழகின மாதிரியும் ஆச்சு, பாக்கிறவங்களுக்கு யார் வீட்டு துணியவோ அயன் பண்றான்  என்று நினைக்கவும் வசதி ஆச்சு) இப்படி இவரது பிளான் வொர்க் அவுட் ஆகி, ஒரு பெண்மணி தனது குழந்தைகள் துணிகளை கொண்டு வந்து கொடுத்திருக்காங்க...இவர் அவரை அக்கானு கூப்பிட்டு  மிகுந்த மரியாதையாக, அன்பாக பேசி இருக்கிறார் (முதல் போனி ஆச்சே !) 

அந்த பெண் அப்படியே அடுத்த பெண்களிடமும் போய் 'பார்த்தா நல்ல பையனா இருக்கிறான், உங்க துணி எல்லாம் கொடுங்க, அயன் பண்ணுவான்' அப்படின்னு இவரது விளம்பர பிரதிநிதி ஆகிடாங்க. இப்படியே தொழில் பிக் அப் ஆகி மெய்ன் ரோட்டில் ஒரு கடையை வாடகைக்கு பிடித்து தொழிலை விரிவு படுத்தி விட்டார். அப்புறம் என்ன ஒரே ஏறு முகம் தான், அடுத்து புதிதாக இரு ஆட்டோ வாங்கி சம்பளத்திற்கு டிரைவர்களை அமர்த்திவிட்டார். இப்போது அதில் இருந்தும் வருமானம் வருகிறது...

திருமணத்திற்கு பெண் தயாராக இருக்கிறதாம், இவர்தான் இன்னும் ஒரு வருடம் போகட்டும் என்று இருக்கிறாராம். 

* * *

என்ன விவரங்கள் போதுமா இன்னும் வேண்டுமா ?! இப்ப மறுபடியும் முதலில் இருந்து படிங்க...என்னோட ஆதங்கம் சரிதானா ? இல்லையானு ?

* நெல்லையில் மதுரம் ஹோட்டல் அருகில் ஒரு கடை இருக்கிறது, இங்கே எப்படி என்றால், அக்கம் பக்கத்தில் வீடுகளில் இருந்து கொண்டு வந்து போடும்  துவைக்க/தேய்க்க வேண்டிய துணிகளை மொத்தமாக சேகரித்து ஒரு மினி ஆட்டோவில் ஏற்றி நாகர்கோவிலுக்கு(!) கொண்டு செல்கிறார்கள், அங்கே ரெடி ஆனதும் , மறுபடி எடுத்து வந்து கஸ்டமர்களுக்கு  கொடுக்கிறார்கள்...இந்த வேலை தினமும் நடக்கிறது...துணிகளும் வந்து குவிந்து கொண்டே இருக்கிறது...!!   

இப்படி ஒவ்வொரு இளைஞரும் உத்வேகத்துடன் உழைக்க தயாராகிவிட்டால் வெளிநாடு செல்வது  என்பது பழங்கதையாகி விடுமல்லவா ? 

இஸ்திரி வேலை என்று இல்லை, எத்தனையோ சிறு தொழில்கள் மலிந்து கிடக்கின்றன...அரசின் மானியம் வேறு இருக்கிறது...எதற்கு யாரை எப்படி அணுக வேண்டும் என்பது தெரிந்து விட்டால் போதும். 

சொல்ல போனால் அரசின் உதவியே தேவையில்லை...சுயமாக பல தொழில்கள் செய்யலாம். படித்த சிலர் கிராமத்தில் தங்கள் படிப்பின் உதவி கொண்டு விவசாயம் பார்த்து வருகிறார்கள்...! சொந்த ஊரில் சொந்த பந்தங்களுடன், தன் குடும்பத்தினர் புடை சூழ வாழும் ஒரு வாழ்க்கை எவ்வளவு அர்த்தமுள்ளதாக மகிழ்ச்சியாக இருக்கும்...?! வெளிநாட்டு வருமானம் அளவு இல்லை என்றாலும் ஒரு நிறைவு இருக்கும் அல்லவா ?! கணவன் ஓர் இடம் மனைவி, குழந்தை  ஓர் இடம் என்பது கசப்பான ஒரு வாழ்க்கை தானே ?(அப்படி வாழ்பவர்களை மட்டும் !)

என்ன செய்வது, எங்க தலைஎழுத்து இப்படி வெளிநாட்டில் லோல் படணும் என்று  இருக்கிறது என்று சலித்து கொள்ளாதீர்கள், உங்களுக்கு நீங்கள் தான் எஜமானன் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிக்கும் உரிமையும் உங்களது தானே ?! அப்புறம் என்ன ?! வேறு யாருக்கோ உங்களின் உழைப்பும், சக்தியும் வீணாகிறது, அதை உங்கள் சொந்த முன்னேற்றத்துக்கு பயன் படுத்தினால் அபரீதமான வளர்ச்சியை காணவும் முடியும், இறுதி வரை நிம்மதியான ஒரு வாழ்க்கையும் வாழலாம்...!? சிந்தியுங்கள் எம் தேசத்து இளைஞர்களே !! 

வாழ நினைத்தால் வாழலாம்...!வழியா இல்லை நம் பூமியில்...!!


பி.கு.

எனக்கு தெரிந்த சிலரின் வேதனையான வாழ்க்கையை நேரில் பார்த்து , அதன் மீதான என் ஆதங்கம் தான் இந்த பதிவு. யார் மனதையும் புண்படுத்துவது என் விருப்பமல்ல . வருத்தபடுத்தி இருந்தால் மன்னிக்கவும்.


படங்கள் _ நன்றி கூகுள்     

ஞாயிறு, நவம்பர் 6

விடைபெறுகிறேன்...!


நன்றி கூறும் இடத்திற்கு வந்துவிட்டது எனது நட்சத்திர வாரம் ! ஆரம்பத்தில் எப்படி எழுத போகிறோம் என்று பிரமிப்பாக இருந்தது, இப்போது மிக வேகமாக நாட்கள் முடிந்துவிட்டதை போல தோணுகிறது. என்னால் இயன்றவரை தமிழ்மணம் நிர்வாகிகள் கொடுத்த பணியை முடித்திருக்கிறேன் என நினைக்கிறேன்.வந்த வேலை முடிந்தது, கிளம்பிட்டேன்...! போறதுக்கு முன்னாடி உங்க கிட்ட கொஞ்சம் பேசிட்டு போகலாம்னு பார்க்குறேன். (அப்ப ஒரு வாரமா பேசி தொல்லை பண்ணியதுக்கு பேர் என்னவாம்...!?) 

மாதத்துக்கு நாலு பதிவுகள் எழுதிகொண்டிருக்கிற என்னால் தினம் ஒன்று எழுத இயலுமா என ஒரு தயக்கம் இருந்தது...எதை பற்றி எழுதுவது என்று யோசிக்கவே ஒருநாளின் பகல் பொழுது போய்விட்டது, இரவில் எழுதி காலையில் போஸ்ட் செய்வதற்குள் சிந்தனை முழுதும் அதை சுற்றி  வந்ததென்னவோ நிஜம். (ஆமாம் அது எப்படிப்பா தினம் ஒரு போஸ்ட் போடுறீங்க...!?) உண்மையில் அவ்வாறு எழுதுபவர்கள் ரொம்ப பெரிய எழுத்தாளர்கள் என்பதை விட மிக சிறந்த சிந்தனாவாதிகள் !! (ம்...நான் இன்னும் வளரணுமோ...!?)

என் தமிழின் மீது எனக்கு திருப்தி இருந்ததில்லை...பேசுவதை அப்படியே எழுத்தில் கொண்டு வர தெரிந்தால் போதும் என்று எழுத வந்துவிட்டேன்...?!(முன்னாடியே தமிழை ஒழுங்கா படிசிருக்கலாமோ என்று எண்ண வைத்துவிட்டது இந்த பதிவுலகம் !!)  இங்கே பலரின் பதிவுகளை படிக்கும் போது மிக வியந்திருக்கிறேன்...மிக ரசித்து படிப்பேன் அவர்களின் எழுத்துக்களை, அங்கிருந்து கொஞ்சம் தமிழையும் கற்றுகொள்வேன். 

இங்கே நான் கற்றதும்,பெற்றதும் மிக அதிகம்.

எனக்கு மிக பிடித்த ஒரு வாக்கியம்

"பிறர் உன்னிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று விரும்புகிறாயோ அப்படி முதலில் நீ நட "  இயன்றவரை இப்படி நடக்க வேண்டும் என முயற்சிக்கிறேன்...

நமக்கு பிடித்த மாதிரி மத்தவங்களை நடந்துகொள்ள சொல்லி வற்புறுத்த முடியாது, நாமும் அவர்களுக்கு பிடித்த மாதிரி முழுமையாக மாற்றிக்கொள்ள இயலாது. முக்கியமாக நமக்கு பிடித்த கருத்துக்கள் பிறருக்கு படு அபத்தமாக தவறாக தெரியலாம், அதற்காக நம் கருத்தை மாற்றிக்கொண்டே இருப்பது நம் சுயத்தை இழப்பது போல... 

அதுக்காக நம் நண்பர்களிடத்தில் 'நான் இப்படித்தான் இருப்பேன் , பிடிச்சா என் கூட பேசு, பழகு இல்லைனா அதுதான் வாசல் போயிட்டே இரு' என்பது ஏற்புடையது அல்ல.

'நீ செய்றது பிடிக்கலைனாலும் பரவாயில்லை நீ என் நண்பன் சகித்துகொள்வேன்' என்பது ஒரு விதம்.

என் நண்பன் தவறு செய்தால், நட்பு உடைந்தாலும் பரவாயில்லை என்று நேரடியா அதை சுட்டி காட்டி உணர்த்துவது என்பது மற்றொரு விதம்.

என்னை பொறுத்தவரை சகித்து கொள்வதை விட சுட்டி காட்டுவது தான் சிறந்த நட்பு !

ஆனால் நமக்கு மிக பிடித்தவர்களிடத்தில் இன்னும் அதிகமா அதீத அன்பு என்கிற பெயரில் உரிமை எடுத்துக்கொள்ளும் போது பிரச்சனைகள் வந்துவிடுகிறது...! அது போன்ற நேரத்தில் பேசி மனவருத்தம் ஏற்படுத்தி கொள்வதை விட மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. மௌனம் பல நேரம் நம்மை காக்கும் ஒரு ஆயுதம் !

நம் வாயில் இருந்து வரும் வார்த்தைகளே நம்மை பிறரிடம் உருவகபடுத்துகிறது. கோபமாக பேசும்போதும் அதில் கொஞ்சம் அன்பை கலந்து பேசினால் மனம் வருத்தம் கொள்ளாது.இந்த சமூகத்தில் எல்லோரிடமும் நம்மால் நேசம் கொள்ள இயலாது, ஆனால் இங்கே பதிவுலகத்தில் இருக்கும் சிறுகூட்டத்தினரை நேசிக்க நம்மால் நிச்சயம் இயலும். தூய அன்பால் எல்லோரையும் பிணைத்து கொள்வோம்.

யாராக இருந்தாலும் அவர்களிடம் நிறைய எதிர்பார்த்து பழகும்போது பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்...இப்படி இரு அப்படி இரு என்பதை விட அவர்களின் இயல்பை அடிப்படை குணத்தை அப்படியே ஏற்றுகொள்வது மிக சிறப்பு. ஒவ்வொருவரின் தனித்தன்மையும்  போற்றப்படவேண்டும்...மதிக்கப்படவேண்டும் !




எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் இந்த ஒரு வார காலமாக எனக்கு வாழ்த்துக்களை சொல்லி ஒவ்வொரு பதிவின் போதும் பின்னூட்டம் இட்டு உற்சாக படுத்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மகிழ்வுடன் என் நன்றிகள் !! 


எனக்கு இந்த சந்தர்ப்பத்தை கொடுத்த தமிழ்மணம் நிர்வாகிகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும் !!

அப்பாதுரை 
தேவா
கார்த்திக் (எல்.கே)
தருமி
FOOD சங்கரலிங்கம் 
வை.கோபாலகிருஷ்ணன்
சௌந்தர்
ஜோதிஜி திருப்பூர்
சென்னை பித்தன் 
ராமலக்ஷ்மி 
சே.குமார்
மணிஜி 
வல்லி சிம்ஹன்
கே.ஆர்.விஜயன் 
மகேந்திரன்
முனைவர்.இரா.குணசீலன்
ஷைலஜா 
வேடந்தாங்கல் கருன்
வியபதி
என் ராஜபாட்டை-ராஜா
தோழி பிரஷா 
ஹேமா
துளசி கோபால்
மாதேவி
யோகன் பாரிஸ் 
கணேஷ்
ஓசூர் ராஜன்
நம்பிக்கை பாண்டியன்
புதுகை தென்றல்
புலவர் சா. இராமானுசம் 
பாண்டியன்ஜி 
அரசன்
தமிழ்கிழம் 
இராஜராஜேஸ்வரி
வெளங்காதவன்
தெய்வசுகந்தி
கணேஷ்மூர்த்தி 
சந்திரகெளரி
மாய உலகம் 
நிரூபன்
விச்சு
சத்ரியன்
அமைதிசாரல்
தங்கம் பழனி
இம்சைஅரசன் பாபு
அம்பாலடியாள்   
கவிதை வீதி சௌந்தர் 
அன்புடன் அருணா 
r.selvakumar
koodalbala
Siva
Shiva
angelin
asiya omar
suryajeeva
M.R.
rufina rajkumar
Starjan 
Dhans
nellai ram
Shangar
rajpraba
Robin
Mykitchen Flavours
AT.Mayuran
Lingesh
Muruganandan M .K
Bala
Velu.G
V.Radhakrishnan 



நாளையில் இருந்து தமிழ்மணம் நட்சத்திரமாக ஜொலிக்க போகும் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !


விடைபெறும் முன்... 

மனிதர்கள் யாராக எத்தகைய குணத்தை கொண்டவராகவும் இருக்கலாம்...அது எனக்கு முக்கியம் இல்லை...நான் மனிதர்களை மதிக்கிறேன்...அதனால் உங்களை அதிகமாய் நேசிக்கிறேன் ! 


இதன்படி என் மனதை நான் தயார் செய்துவைத்து கொண்டிருப்பதால் தான் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது...இந்த மகிழ்ச்சி என்னை சுற்றி இருப்பவர்களையும் நிச்சயம் மகிழ்ச்சிவுறச் செய்யும் என்று நம்புகிறேன் !!

இன்னும் பேசுவேன்...உங்களின் மனதோடு மட்டும்...........

பிரியங்களுடன்
கௌசல்யா




சனி, நவம்பர் 5

உங்களை நேசிக்கிறேன்...!!





இங்கே குறிப்பிடப்பட்டு இருக்கும் யாவருக்கும் நான் ஒரு வகையில் கடமை பட்டு இருக்கிறேன்.ஒருவேளை இதனை நான் மறந்தாலும் என் எழுத்துக்கள் நினைவுபடுத்த வேண்டும் என்பதற்காகவே  இங்கே ஒரு பதிவாக பதிகின்றேன். 

சேவை நிறுவனம் ஒன்றை இவ்வளவு சீக்கிரம் நாங்கள் தொடங்கியதற்கு  பதிவுலகம் ஒரு மிக பெரிய காரணம் என்பதை நான் பெருமையாக சொல்வேன்.  இந்த பதிவுலகின் மூலம் எனக்கு கிடைத்த உறவுகள் எனக்கு நேரடியாகவும், மறைமுகமாக உதவி வருகிறார்கள் எனபதை இந்த தமிழ் மணம் நட்சத்திர சிறப்பு வாரத்தில் பகிர்ந்து கொண்டால் ஒரு நிறைவாக இருக்குமென உணருகிறேன்.

ஒரு இனிய மாற்றம்   

வீடு, பாக்டரி, தொழில் என்று ஒரே விதமாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை பதிவுலகம் ஏற்படுத்தியது.பல புது உறவுகளின் அறிமுகம் நல்ல நட்புகள், சகோதர உறவுகள் இங்கே கிடைத்தன. 

அதில் முக்கியமான ஒருவர்  உணவு உலகம் சங்கரலிங்கம் அண்ணன்.   ஒருநாள் அவரிடம் 'தொண்டு நிறுவனம் ஆரம்பிக்கணும் என்ற ஒரு கனவு பலவருடமாக இருக்கிறது' என்று பேச்சுவாக்கில் சொன்னேன். உடனே சிறிதும் தயங்காமல் இதனை பற்றி ஆலோசனை கூற எனது மாமா ஒருவர் இருக்கிறார் என்றார். சொன்னதுடன் நில்லாமல் திரு. சிதம்பரபாண்டியன் (Rtd.District Registrar) அவர்களிடம் என்னை அறிமுகபடுத்தி வைத்தார். உண்மையில் அதுவரை போனில் மட்டும் பேசிகொண்டிருந்த நான், அன்று தான் அண்ணனையும் நேரில் சந்தித்தேன். அந்த நாள், அந்த முதல் சந்திப்பு என் வாழ்வை எப்படி மாற்றிப்போட வைக்க போகிறது என்று கனவிலும் நான் எண்ணவில்லை. 

சிதம்பரம் சார்

மூவரும் இரண்டு மணி நேரம் மேல் பேசினோம், பலகாலம் பழகியதை போன்று இருந்தது  அந்த முதல் சந்திப்பு...! சிதம்பரம் சார் பற்றி சொல்லவேண்டும் என்றால் ஒரு தொடர் பதிவு போடலாம்...! அவ்வளவு விஷய ஞானம் இருக்கிறது அவரிடம்... மிக அற்புதமான மனிதர். திருக்குறளை நன்கு கற்று தேர்ந்தவர். குறளின் படியே பேசுகிறார், அதன் படியே வாழ்கிறார் என்று கூட சொல்லலாம். வாழ்வியலோடு தொடர்பு படுத்தி அவர் பேச பேச எனக்குள் இருந்த அறியாமைகள் சில, மெல்ல நழுவி அவர் பாதம் சென்று மண்டியிட்டுவிட்டது...! 

வார்த்தைக்கு வார்த்தை மனித நேயம், சக மனிதரின் மீதான நேசம் பற்றியே   அவரது பேச்சு இருந்தது. எதை தேடி சென்றேனோ அதையும் பெற்று, அதற்கு அதிகமாகவும் பெற்றேன். அதற்கு பிறகு எங்களின் தொண்டு நிறுவனம் தொடங்கப்பட்டு, அரசாங்கத்தின் பதிவுக்கு பின் இனிதே சேவைகளும் செய்யப்பட்டு வருகிறது.

எந்த ஒரு செயலும் பலரின் ஒத்துழைப்பு இல்லாமல் முழுமையாய் செயல் வடிவம் பெறாது. அதுபோல் எனது நல்லவைகளின் பின்னால் இப்போது இருக்கும் பதிவுலக மாமனிதர்கள் சிலரை இங்கே நினைவுகூறுகிறேன்...


பதிவுலகில் முதல் பின்னூட்டம் மூலம் அறிமுகமான இவர் இன்று எனது இனிய நண்பர். எழுத்தாளர், புத்தகம் எழுதி வெளியிட்டு உள்ளார். சிறந்த அழகிய தமிழில் பேசுபவர்.. காக்கிசட்டை வேலை பளுவிற்கு நடுவிலும் பிற தொண்டு நிறுவனங்கள்  பற்றி நிறைய ஆலோசனைகள் கொடுத்து கொண்டிருக்கிறார். எங்கள் நிறுவனத்தின் பெயரை செலக்ட் செய்யும் வேலையை இவரிடம் கொடுத்ததும் கொஞ்சமும் தாமதிக்காமல் ஓகே செய்து கொடுத்தார்.  


டிரஸ்டின் வேலைகள் இப்போது எந்த நிலையில் இருக்கிறது என்பதை ஆர்வமாக கேட்டு தெரிந்துகொள்வார். அத்துடன் நில்லாமல் 'கௌசல்யா நீ இன்னும் நிறைய செய்வ' என்று பேசும் ஒவ்வொருமுறையும் என்னை தவறாது உற்சாகபடுத்தி கொண்டே இருப்பவர்.எவ்வளவு பிஸியாக இருந்தாலும் நான் போன் செய்தால் உடனே எடுத்து பேசுவார். நானும் எல்லாம் பேசிமுடித்துவிட்டு(?), 'அண்ணா இப்ப பிரீதானே நான் ஒன்றும் தொந்தரவு செய்யலையே (இத முதல்ல கேட்டு இருக்கணும்...!?) என்றால் 'படப்பிடிப்பில இருக்கிறேன்மா, என் பக்கத்தில் இருந்தவர்கள் பேச்சு நீடிப்பதை பார்த்து ஒவ்வொருவராக எழுந்து சென்றுவிட்டார்கள்' என்று சிரித்துக்கொண்டே சொல்வார். 'அச்சோ அண்ணா இதை முன்னாடியே சொல்லி இருக்கலாமே' என்றால் 'நீ அனாவசியமா கால் பண்ண மாட்டே, அதான் எடுத்தேன் என்பார்...! (என்ன தவம் செய்தனை !!)

தேர்தல் முடிந்ததும் 'கருவேலமரம்' சம்பந்தமாக முக்கியமான அரசியல் பிரமுகர் ஒருவருடன் என்னை அறிமுகபடுத்தி வைப்பதற்கு ஏற்பாடு செய்து வருகிறார். 


தொடர்ந்து எனது பதிவுகளுக்கு தனது பின்னூட்டங்களின் மூலம் சிறப்பு சேர்க்கும் சகோதரன் இவர். என்னை அதிகம் சிந்திக்கவைக்கும் வலிமை இவரது சொற்களுக்கு இருக்கிறது. எனது சேவை குறித்து தெரிந்தபின் அதன் முழு விவரமும் மெயிலின் மூலம் அவராக கேட்டு என்னை உற்சாக படுத்தி வருகிறார்.உதவிகள் வேறு எதுவும் வேண்டும் என்றால் ஏற்பாடுகள் செய்து தருகிறேன் என்று தானாக மனமுவந்து சொல்லவும் ஒரு மனம் வேண்டும் அது இவரிடம் இருக்கிறது. 


இனிமையான சகோதரர். நெல்லை பதிவர் சந்திப்பின் போது வருகை தரும் அனைவரிடமும் சிறு சேவை ஒன்றுக்காக பணம் கலெக்ட் செய்து அதை கருணை இல்லத்திற்கு வழங்க வேண்டும் என்ற என் விருப்பத்தை முதலில் இவரிடம் தான் சொன்னேன். அதற்கு அவர் 'தாராளமா செய்யலாம் சகோ, எல்லோரும் நிச்சயம் மகிழ்ச்சியுடன் சம்மதிப்பார்கள்' என்று எனக்கிருந்த சிறு  தயக்கத்தையும் களைந்து உற்சாக படுத்தினார். அவரது இந்த ஊக்கம் தான் இன்று வரை நான் தொடரும் சேவைகளுக்கு முதல் காரணமாக இருக்கிறது என்பதை மறுக்கவியலாது.

திவான்ஜி

சங்கரலிங்கம் அண்ணாவின் நண்பர். நகைச்சுவையாய் அர்த்தங்களுடன் பேசும் இவரது பேச்சில் அடுத்தவரின் மீதான நேசம் அப்பட்டமாக தெரியும் . உறவுகளின் உன்னதம் புரிந்து அதன்படி வாழ்ந்து கொண்டிருக்கும் சிறந்த  மனிதர். எல்லோரும் பேசிகொண்டிருக்கும் போது, என் கணவர் சாதாரணமாக கைகட்டிக் கொண்டு இருந்தாலும் 'பாஸ் நான் இருக்கிறேன். தைரியமா இருங்க, வீட்ல இருக்கிற மாதிரி இங்கேயும் ஏன் இப்படி பயந்து நடுங்கி கைகட்டிட்டு...! ' என்று என்னை அப்ப அப்ப வாரிவிடுவதில் சமர்த்தர்.  கருணை இல்லத்தில் கேம்ப் நடத்தியபோது லேப் டெக்னீஷியன்ஸ் ஏற்பாடு செய்து கொடுத்தார்.


இவனது பிறந்தநாள் வந்தபோது உனக்காக ஒரு வாழ்த்து கவிதை எழுதணும் என்று போனில் சொன்னதும், 'ஐயோ அக்கா வேண்டாம், கவிதை எழுதி அதை நான் படிச்சி.......அந்த விபரீதம் வேண்டாம் விட்டுடுங்க பிளீஸ்...' என்று கிண்டலடித்து சிரிக்க வைத்தான். 'அப்ப சரிவிடு எழுதல,  இந்த சந்தோசமும் உற்சாகமும் உன்னுடன் இறுதிவரை இருக்க வாழ்த்துகிறேன்' என்றேன். 'அதுகூட நீங்களும் என்கூட கடைசிவரை இருக்கணும் அக்கா' என்று சொல்லி நெகிழவைத்து விட்டான்.


ஒரு உணர்வு பூர்வமான நட்பு எங்களுடையது. ஒரே ஊர் என்பதால் பிரியத்தின் அளவு சிறிது கூடி இருக்கலாம்...!இப்பவும் அடிக்கடி சங்கரலிங்கம் அண்ணனிடம், 'கௌசல்யா அடுத்து என்ன பண்ண போறாங்க' என்று விசாரிக்க தவறுவதே இல்லை. 


நாஸ்காம்(NASSCOM) ஒர்க்ஷாப் செல்ல இவர்களும் ஒரு காரணம். அவர்களது உறவினர் மூலமாக இந்த ஒர்க்சாப் பற்றி எங்களுக்கு தெரியவந்தது. அதன் பின்னே திருச்சி சென்றோம். மிகுந்த சமூக சேவை ஆர்வம் கொண்டவர். முதியோர்களின் வசதிக்காக ஒரு இல்லம் பற்றிய ஒரு ஐடியா ஒன்றை சொல்லி இருக்கிறார். தகுந்த சமயம் வாய்த்ததும் ஆரம்பிக்க வேண்டும். அடிக்கடி பல தகவல்களை சொல்லி உற்சாக படுத்திகொண்டு வரும் அன்பான அக்கா இவர்கள்.


லோகோ வடிவமைக்கவேண்டும் என்றதும் உடனே தயார் செய்துகொடுத்தவர். உங்கள் சேவையில் எனது பங்காக இது இருக்கட்டும் என்று மகிழ்வுடன் சொன்ன அறிவார்ந்த சகோதரர்.


இவரை பற்றி எழுதணும் என்றவுடன், ஏற்கனவே இங்கே எழுதப்பட்ட வார்த்தைகள் எல்லாம் தங்களை ஒருமுறை சரிபார்த்து கொள்கின்றன...சரிதானா என்று?!! 

சண்டையில் தொடங்கிய எங்கள் அறிமுகம் நட்பாக மாறி இன்றுவரை ஒரு தெளிந்த நீரோடையாக ஓடிக்கொண்டிருக்கிறது. கற்றுகொடுத்து வழிகாட்டுவதில் குரு, கண்டிப்பதில் தந்தை, அன்பு காட்டுவதில் அன்னை, ஆலோசனை கூறுவதில் சகோதரன் எல்லாம் சேர்ந்தவர் நண்பர் தேவா !  'சொசைட்டிக்கு ஏதாவது செய்யணும் கௌசல்யா' என்று எனக்குள் இருக்கும் சேவை உணர்விற்கு எண்ணெய் வார்த்து கொண்டே இருப்பவர். எனது அத்தனை சேவையிலும் ஆத்மார்த்தமாக இருந்து வருபவர்.

எங்கள் சேவை நிறுவனத்திற்கு வந்த ஒரு கல்வி உதவி  வேண்டுகோள் மனுவை பற்றி இவரிடம் சொன்னதும் கழுகின் மூலம் செய்வோம் என்று எனக்கு நம்பிக்கை கொடுத்து பிற கழுகு குழும நண்பர்கள் உதவியோடு அதற்கு உரிய ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கிறார். 

ஸ்டார்ட் மியுசிக் ராமசாமி இவர் கருவேலமரம் பற்றிய ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை பாபு மூலமாக எனக்கு கொடுத்தார்.அடுத்து நான் மேற்க்கொள்ளபோகும் கருவேலமரம் பற்றிய பிராஜெக்டுக்கு உதவியாக இருக்கும்.

மற்றும் கல்விக்கு உதவி என்றதும் நான் தருகிறேன் என உடனே கழுகு குழுமத்தில் அறிவித்த வலைச்சரம் சீனா ஐயா ,தம்பி சௌந்தர், உங்கள் சேவையில் என்னையும் இணைத்து கொள்ளுங்கள் என அன்பாக கூறிய பலே பிரபு, கூடங்குளம் பிரச்சனையில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திகொண்டிருக்கும் கூடல்பாலா, கழுகு குழும நண்பர்கள் என சுற்றி சுற்றி நிறைய மிக மிக அற்புத மனிதர்கள்...(லிஸ்ட்ல நிறைய பேர் இருக்காங்க...பதிவுல இடம் பத்தாது !) இதோ இப்ப தமிழ்மணம், சிறு அறிமுகம் கூட இல்லாத எனக்கு கொடுத்திருக்கும் இந்த அங்கீகாரம்.........இப்படி இங்கே காணும் அத்தனை மனிதர்களும் என் வாழ்நாட்களை அர்த்தமுள்ளதாக்கி கொண்டிருக்கிறார்கள்.......!!

இந்த மாதிரி நல்ல உள்ளங்கள் கொண்ட மனிதர்கள் கிடைக்க பெற்ற யாராக இருந்தாலும் நிச்சயம் சாதிப்பார்கள் தான் வாழும் சமூகத்தை நேசிப்பார்கள் அதன் முன்னேற்றத்துக்காக, வளர்ச்சிக்காக உற்சாகமாக உழைப்பார்கள் !!

எனது தெய்வம் எந்த கோவிலிலும் அடைபட்டு இருக்கவில்லை...இதோ இங்கே இருக்கும் உங்கள் அனைவரிடத்தும் இருக்கிறது என்பதை நான் மெய்யாகவே காண்கிறேன்...உணர்கிறேன்...தலை வணங்குகிறேன் !





படங்கள் - நன்றி கூகுள்