வியாழன், ஜூன் 23

நெல்லையில் உறவுகளின் உற்சாகம் !



கடந்த இரு வாரங்களாக பதிவர் சந்திப்பிற்கான ஏற்பாடுகளை சிந்திக்கவும், செயல்படுத்தவும் நாங்கள் எடுத்த பிரயாசங்கள் பெரிதல்ல என்று நிரூபித்தது நேச நெஞ்சங்களின் வருகை. எத்தனை போன் கால்ஸ், எத்தனை மெயில்கள், சாட்டிங், நேரில் நடந்த சிறு சந்திப்புகள் அனைத்தையும் ஊதித் தள்ளிவிட்டது நண்பர்களின் உற்சாகமும் அவர்கள் கொடுத்த ஒத்துழைப்பும்...!!

எப்போதும் எதையோ தேடி ஓடிகொண்டே இருக்கிற இந்த வாழ்க்கையில் நாம் சற்று இளைப்பாறும் ஒரு சோலைவனம், நல்ல நட்புகளின் இந்த சங்கமம் ...! பதிவர்கள் சந்திப்பு என்றாலும் ஒரு குடும்ப விழா போன்று தாத்தா,அப்பா,அக்கா, அண்ணன், தம்பி, அக்கா,தங்கை, நண்பன்,தோழி என்று பல உறவுகள் ஒன்று சேர்ந்தது எனலாம். அன்று பல உறவுகள் புதிதாய் மலர்ந்தது ஒரு இனிய அனுபவம். 

சிறிதும் முன் அறிமுகம் இல்லாத பதிவர்களை தான் நான் கடந்த வெள்ளிகிழமை அன்று (சங்கரலிங்கம் அண்ணா, சித்ரா, பாபு தவிர்த்து) சந்தித்தேன். இருந்தும் பல காலம் பழகியவர்களை போன்று ஒவ்வொருவரும் நடந்த கொண்ட விதம் மீண்டும் மறு சந்திப்பு என்று வரும் என எண்ண வைத்துவிட்டது.  ஆரம்பம் முதல் முடிவு வரை சிறிதும் இடைவெளி இன்றி சிரிப்பு பட்டாசுகள் வெடித்துக்கொண்டே இருந்தன.....

வந்திருந்து சந்திப்பை பெருமை படுத்திய உறவுகளுக்கு நன்றி சொல்வதில் மகிழ்கிறேன் !


முதலில் சங்கரலிங்கம் அண்ணனுக்கு என் பாராட்டுகள்...ஒரே ஊர்காரர் என்றாலும் அறிமுகமானது பதிவுலகம் மூலமாகத்தான் . சில மாதங்களுக்கு முன் அவரது தளத்தை, என் தளத்தில் அறிமுகம் செய்வதில் தொடங்கியது எங்களின் நேச உறவு. விழிப்புணர்வு வேண்டும், சமூக அக்கறை வேண்டும் என்று இணையத்தின் முன் அமர்ந்து குரல் கொடுப்பதுடன் திருப்தி பட்டுகொள்கிறோம், ஆனால் நடைமுறையில் அதை சாதித்துக் கொண்டிருக்கிறார் இவர். ஆரம்பத்தில் பதிவுகளை எழுதுவதுடன் மட்டும் இருந்த இவர் அதன் பின் பல நட்புகளை வளர்த்து இன்று பதிவர்கள் சந்திப்பை வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் வரை வந்திருக்கிறார் என்பது பெருமையான ஒன்று. அண்ணா உங்களுக்கு என் நன்றிகள்.

பலரும் சந்திப்பில் நடந்தவற்றை ஏற்கனவே பகிர்ந்துவிட்டதால், என் நினைவில் இருப்பவை சிலவற்றை இங்கே சொல்கிறேன்....

Dr.கந்தசாமி சார் - கோயம்புத்தூரில் இருந்து வந்திருந்தார்.  தனது பதிவுகளை மற்றவர்கள்  காபி பேஸ்ட் செய்து கொள்ள அனுமதி வழங்கி இருப்பதாக சொன்னார். 'பிறருக்கு உபயோகமாக இருக்கத்தானே பதிவுகள் எழுதுகிறேன், அதை அவர்கள் எடுத்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே' என்று சொன்னவுடன் கைதட்டல் அதிர்ந்தது. உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

சீனா ஐயா பல பல பதிவர்களை வலைசரத்தில் அறிமுகம் செய்ய பெரிய காரணமாக இருக்கிறார்...ஆனால் நான் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை என்று தன்னடக்கத்தோடு சொன்னபோது மிக வியந்தோம். வலைச்சரத்தில் உங்களை அறிமுகம் செய்திருக்கிறாங்க என்று எனக்கு மெயில் வந்தபோது அங்கே அறிமுகம் செய்ற அளவிற்கு நாம எழுதுறோமா என்று சிறு மிதப்பு வந்ததென்னவோ உண்மை...! அவர் தலைமை வகித்து சிறப்பித்தமைக்கு என் நன்றிகள் !

பலாபட்டறை சங்கர், மணிஜி - சென்னையில் இருந்து இவ்வளவு தூரம் வந்திருந்து சந்திப்பை பெருமைபடுத்தினார்கள். பதிவுலகத்தின் மீதான தங்களின் பார்வையை/பங்களிப்பை எங்களுடன் பகிர்ந்துகொண்டார்கள். இணையம் என்பது டைரி போன்றது, பல வருடங்கள் கழித்து நாமே இதை எடுத்து படிக்கும் போது கிடைக்கும் நிறைவு மிக பெரிது, மேலும் நமக்கு பின் நம் வாரிசுகள் இதை படித்து தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்றார் சங்கர். சந்திப்பின் இறுதிவரை அப்ப அப்ப தன் கருத்துக்களை தெரிவிக்க தவறவில்லை. கூகுள் பஸ்ஸில் பதிவர்கள் அதிக நேரம் செலவிடுவதால் பதிவுலகத்தில் பதிவுகள் குறைந்து வருகிறது என்பது உண்மைதான், பதிவுகள் எழுதுவதை குறைக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தினார். சங்கர் அவர்களின் கருத்துக்கள் மிக உபயோகமாக இருந்தன, நினைவில் வைத்துக்கொண்டேன்.(முக்கியமாக செந்தில் சாரை நன்றாக உற்சாக படுத்தினார்...!!) என் நன்றிகள் !

செந்தில்குமார் - பலரும் இவரை படாதபாடு படுத்திவைக்க கொஞ்சமும் முகம் சுளிக்காமல் எதிர் கொண்ட பாங்கு இவர் ஒரு தெளிந்த நீரோடை என்பதை காட்டியது. (என்ன செந்தில் சார் ??இது போதுமா? ) அவர் மீது வைக்கும் குற்றசாட்டுகளை எங்கள் முன் பகிர்ந்துகொண்டதுடன் தன்னிலை விளக்கம் கொடுத்தார். உண்மையில் இந்த மாதிரி தன்னை பற்றி மற்றவர் முன் எடுத்துரைக்க எல்லோராலும் இயலாது. ரொம்ப வெளிப்படையாக, இயல்பாக எந்தவித மேல்பூச்சும் இல்லாமல் சொன்ன விதம் அருமை. இந்த சந்திப்பிற்கு பின் வரும் அவரது பதிவுகளில் ஒரு மாற்றம் தெரியும். கண்டுபிடிங்க !!

பதிவு போடாமல் எப்படி இங்கே அதுவும் வெள்ளிகிழமை வந்தார் என்ற என் ஆச்சரியத்தை உடைத்துபோட்டது அடுத்து அவர் சொன்ன வார்த்தை...'இன்னைக்கு போட வேண்டிய பதிவை அப்பவே போட்டு இருப்பாங்க' அட கடவுளே பதிவு போட என்று ஒரு ஆபீஸ் வச்சு நடத்துறார் போல.....!! இவர் ஒருத்தர் இருக்கும் வரை பதிவுலகம் எப்படி சாகும்...வாழும் நன்றாகவே  வாழும்...!! விழாவை நகைசுவையாக கொண்டு சென்றதில் இவரின் பங்கு அதிகம். அதற்காக ஒரு ஸ்பெஷல் நன்றி.


                               செல்வா பக்கத்தில் செந்தில் சார் ! 


பெசொவி- ஒரு வழியாக தனது உண்மையான பெயரை சொல்லிவிட்டார்...தூத்துக்குடியில்  (மத்திய அரசு) வேலை பார்த்து வருவதாக சொன்னதால் நான் சும்மா இருக்காமல் 'அப்ப நல்லதா போச்சு, ஒரு உதவி தேவை படுது, உங்களை பார்க்க வரணும்' என்றேன்...அதற்கு அவரும் 'செய்யலாமே... நீங்க என்னைக்கு வரீங்கன்னு முன்கூட்டியே சொல்லிடுங்க' என்றார். நானும் ஆர்வமாகி 'கண்டிப்பா சொல்லிடுறேனு' சொல்ல, அதுக்கு அவர் 'அப்பத்தான் அன்னைக்கு நான் ஊர்ல இருக்கமாட்டேன்'  சொன்னதும் ரொம்ப வருத்தமா போச்சு. ம்ம்...இருக்கட்டும் சொல்லாம ஒரு நாள் போகணும்...!! நடுநடுவே நகைச்சுவையை வாரி கொட்டிகொண்டே இருந்ததுக்காக  சிரிச்சிட்டே ஒரு நன்றி !



 மத்தவங்க பேச்சை கிண்டல் பண்ணி சிரிச்சிட்டு இவர் மட்டும் ரொம்ப சீரியஸா பேசுறாராம் - பெசொவி 


சித்ரா - ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக பேசக்கூடிய அன்பான ஒரு தோழி. அமெரிக்காவில் இருந்து போனில் அவங்க பேசினா எனக்கு வாய் வலிக்கும் !  அது எப்படின்னு கேட்ககூடாது...ஒரு அரைமணி நேரம் அவங்க கிட்ட பேசி பாருங்க அப்ப தெரியும். ஒரு சோக கதை என்னனா, நானும் அவங்களும் போன வாரம் அண்ணனின் ஆபீசில் வைத்து சந்திப்பு விசயமா ஆலோசனை பண்ணினோம்.....அதற்கு மறுநாள் அந்த ஆபீசை இடிச்சிட்டு இருக்காங்க, 'என்ன அண்ணா ஆச்சு'ன்னு கேட்டா, 'நேத்து நீங்க போன பின்னாடி சுவர் விரிசல் விட்டு ரொம்ப டேமேஜ் ஆகி விட்டது , அதுதான் பில்டிங் முழுதும் இடிச்சிட்டு புதுசா கட்டபோறாங்க' !!?

                                                     
                       என்ன கொடுமை இது...!?

இப்ப அண்ணனின் ஆபீஸ் வேற இடத்தில் இயங்குகிறது. இந்த சந்திப்பு நடக்க ஒரு முக்கிய காரணம் சித்ராவின் நெல்லை வருகை என்பதால் பெரிய நன்றிகள் தோழி.

பாபு - இவருடன் நான்கு மாதங்களாக தான் பேசிட்டு இருக்கிறேன், என்றாலும் ஒரு சகோதர வாஞ்சையுடன் இவர் பேசுவது பல வருடங்கள் பழகியது போன்ற உணர்வை தரும். இந்த சந்திப்பிற்கு இவரது பங்கு அதிகம், கோவில்பட்டியில் இருந்து குடும்பத்துடன் வந்து சந்திப்புக்கான  ஏற்பாடுகளை பேசிவிட்டு சென்றார். சந்திப்பு நடந்த அன்று அவரது கம்ப்யூட்டர்  சென்டரின் பத்தாமாண்டு நிறைவு விழா, அதைவிட இந்த சந்திப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தார். அந்த அன்பிற்கு நன்றி சொன்னால் நல்லா இருக்காது. உங்களை பாராட்டுகிறேன் சகோ.

வெடிவால் சகாதேவன் - இவர் ஒரு சீனியர் பதிவர் என்பதை விட இவரது குடும்பமே பதிவர்கள் குடும்பம் தான், கோமு மேடம், ராமலக்ஷ்மி... இவரது பங்கெடுப்பு சிறப்பாக இருந்தது. இவருக்கு என் நன்றிகள்.


சகாதேவன் சார் பக்கத்தில ஜெயந்த், அட பாபுவை கவர் பண்றாரா ? 


ஷர்புதீன் - எல்லா பிளாக்குக்கும் மார்க் போட்டு கொண்டு சென்றவர் இவர் தான். வித்தியாசமாக இருக்கட்டுமே என்று அப்படி செய்ததாக கூறினார். அவர் பிளாகிற்கு 55 மதிப்பெண் கொடுத்து கொண்டாராம், (அது எப்படி அவருக்கு நாம தானே மதிப்பெண் போடணும் ?!) இவரிடமும் கலகலப்பிற்கு குறைவில்லை. . .இந்த சந்திப்பிற்கு மார்க் போட்டதாக கூறினார்...எத்தனை மார்க் என்பதை சொல்லவில்லை...! அவர யாரும் பார்த்தா கொஞ்சம் கேட்டு சொல்லுங்க. இவரும் அப்ப அப்ப கலாய்ச்சிட்டு இருந்தார். உங்களுக்கு என் நன்றிகள்.   

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ரத்னவேல் நடராஜன் இவர் தனது மனைவியுடன் வந்திருந்து விழாவை சிறப்பித்தார். இருவருக்கும் என் நன்றிகள்.

பதிவு ரொம்ப பெரிசா போற மாதிரி இருக்கு...அதனால அடுத்த பாகம் போட வேண்டியது தான் வேற வழியில்லை.......பொறுத்துக்கோங்க.

கலந்துரையாடலின் போது கிடைச்ச கொஞ்ச கேப்ல ஹாலை விட்டு வெளியே வந்தேன். அப்போ ரொம்ப சீரியஸா போட்டோகிராபர் நம்ம ஜெயந்த்கிட்ட பேசிட்டு இருந்தார்... அவங்களை கிராஸ் பண்ணும் போது காதில் விழுந்தது (நம்புங்க ஒட்டு கேட்கல !! )

போட்டோகிராபர் - உள்ளே எல்லோரும் மொக்கை மொக்கைனு அடிக்கடி சொல்றாங்களே அப்படினா என்னங்க ?

முதலில் நொந்துபோன ஜெயந்த் பின்பு மெதுவா ரிலாக்சாகி பொறுமையா மொக்கை எனப்படுவது யாதெனில் .....என்று விளக்க ஆரம்பித்தார்...!

போட்டோகிராபர் படபோற அவஸ்தையை எண்ணி வருத்தபட்டுகொண்டே  உள்ளே வந்துவிட்டேன். 

அடுத்த பாகத்தில், இங்கே விடுபட்ட மற்றவர்கள் பற்றியும்...சிறு சமூக சேவை என்று ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தோம், அதன் முழு விவரத்தையும் பகிர்கிறேன்.                       

                           *************************

செவ்வாய், ஜூன் 14

திருநெல்வேலியில் திருவிழா !




'திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' -  சம்பந்தர்
'தண்  பொருநைப் புனல்நாடு'  -  சேக்கிழார்
பொன்திணிந்த  புனல் பெருகும் பொருநைத் திருநதி - கம்பர்

என்று சான்றோர்கள் பாடி பரவசம் அடைந்த பூமி இந்த திருநெல்வேலி !! ஆசியாவின் மிகப் பெரிய சிவன் கோவில், இங்கே உள்ள நெல்லையப்பர் கோவில் என்பது ஒரு சிறப்பு.சிவபெருமானின் ஐம்பெரும் சபைகளில் 'தாமிர சபை' என்று போற்றப்படுவதும் இந்த கோவில் தான்.


திருநெல்வேலி என்றால் இலக்கியம் சுவைத்த டி.கே.சி, விடுதலை உணர்வு தந்த வ.உ.சி, எட்டயபுரத்து பாரதி, உனக்கேன் தரவேண்டும் வட்டி என ஆங்கிலேயரிடம் உறுமிய  கட்டபொம்மன், ஆங்கிலேயரை முதன் முதலில் எதிர்த்த மன்னன் பூலித்தேவன், வாஞ்சிநாதன் இப்படி பலரும் நினைவுக்கு வரலாம்.....! பலருக்கு  பாளையங்கோட்டை ஜெயில் நினைவுக்கு வரலாம்.....! முக்கியமாக எல்லோருக்கும் அல்வா நினைவுக்கு வரும்.....!  

இப்ப எதுக்கு இந்த பில்டப்னா,  இனிமேல் பதிவுலகத்திற்கு திருநெல்வேலி என்றால் 'பதிவர்கள் சந்திப்பு' நினைவுக்கு வரணும், வரும்.....!! (இது கொஞ்சம் ஓவர்தான்...!! )

எங்க ஊர்ல விஷேசமுங்க !

ஆம் மக்களே வரும் வெள்ளிகிழமை அன்று சென்னை, மதுரை, கோவில்பட்டி, ஈரோடு, கோயம்புத்தூர், கோபி,விருதுநகர் இன்னும் ஊர்களில் இருந்தெல்லாம் பதிவர்கள் நெல்லை நோக்கி வராங்க.....! 

பதிவுலகம் மூலமாக முகம் தெரிந்தும் தெரியாமலும் நட்புகள் கொண்டாடி வருகிறோம். பின்னூட்டங்கள் மற்றும் நம்மை தொடருவதின் மூலம் பலர் நம்மை பற்றி அறிந்திருப்பார்கள். அப்படி  அறிந்தவர்கள் தெரிந்தவர்களாக மாற உதவுகிறது  'பதிவர்கள் சந்திப்பு'. 

அது போன்ற ஒரு சந்திப்பு இங்கே திருநெல்வேலியில் நடைபெற இருக்கிறது. 'உணவு உலகம்' திரு சங்கரலிங்கம் அண்ணன் அவர்கள் தலைமையில் வரும்  17.06.2011 வெள்ளி அன்று, பதிவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம். இது தொடர்பாக அவரது மெயிலுக்கு பத்தாம் தேதிக்குள் வருகையை குறித்து பதிவு செய்ய சொல்லி இருந்தோம்....பத்து பேர் முதல் பதினைந்து பேர் வருவார்கள் என்ற நினைத்தோம். ஆனால்  வருவதாக விருப்பம் தெரிவித்து வந்த மெயில்களை பார்த்து பிரமித்துவிட்டோம். எங்களின் பொறுப்பு  கூடியதாக உணரும் அதே நேரம் மிகவும் சந்தோசமாக அந்நாளை எதிர்பார்க்கிறோம். 

                      இடம்: மிதிலா ஹால்,A/C.
                       ஹோட்டல் ஜானகிராம்,
                        மதுரை ரோடு,
                        திருநெல்வேலி சந்திப்பு.
                        நாள்: 17.06.2011 
                        நேரம்: காலை 10.00 மணி


நிகழ்ச்சி நிரல் 


காலை 10௦.00 மணி --- வரவேற்புரை, பதிவர்கள் ஒரு சுய அறிமுகம்

காலை 11 .00 மணி --- செல்வாவின் நகைச்சுவை நேரம்

 அதன்பின்னர் கலந்துரையாடல், அது முடிந்ததும் 1 மணிக்கு மதிய உணவு இத்துடன் சந்திப்பு நிறைவு பெறுகிறது.

இந்த பதிவர்கள் சந்திப்பில் ஒரு சிறந்த ஒன்றாக சிறிய சமூக சேவை ஒன்றினை செய்யலாம் என்று யோசித்து வைத்துள்ளோம்...வரும் நண்பர்களின் ஒத்திசைவுக்கு பின் செயல் படுத்தப்படும்.....!
                                                       
நிகழும் நிகழ்வுகளை பதிவுலக நண்பர்கள் ஆன்லைனில் கண்டுகளிக்க நாற்று நிரூபன் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளார். புகைப்படம் எடுக்க போடோகிராபர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது , அதில் கலந்து கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் தவிர்த்துவிடலாம், கட்டாயம் இல்லை. 



அப்புறம் முக்கியமாக, பதிவர்கள் சந்திப்பு என்று சொன்னாலும், உண்மையில் இது ஒரு குடும்ப விழா...விரும்பம் உள்ளவர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ளலாம்.    

வலைச்சரம் - சீனா ஐயா 
உணவுஉலகம் -சங்கரலிங்கம் 
சாமியின் மன அலைகள் Dr.P. கந்தசாமி 
வெடிவால் - சகாதேவன் 
சங்கவி - சதீஷ் 
அட்ரா சக்க - செந்தில்குமார்
கோமாளி செல்வா 
தமிழ்வாசி - பிரகாஷ் 
எறும்பு - ராஜகோபால்
ஜயவேல் சண்முக வேலாயுதம் 
அன்புடன் எ.மு.ஞானேந்திரன் 
நெல்லை நண்பன் - ராம்குமார் 
வெறும்பய -ஜெயந்த் 
நான் ரசித்தவை - கல்பனா 
ரசிகன் ஷர்புதீன்
ஜோசபின் பாபா 

இவர்கள் அனைவரும் வருகிறார்கள்...இவர்கள் தவிர மற்றவர்கள் புதன்கிழமை (நாளை) கன்பர்ம் செய்து,  சொல்வதாக இருக்கிறார்கள். மேலும் வர விருப்பம் இருக்கிறவர்கள், உணவுஉலகம் ஐடிக்கு மெயில் பண்ணுங்கள்...முக்கியமாக நெல்லையில் வேறு யாரும் பதிவர்கள் இருக்கிறார்களா என தெரியவில்லை...அப்படி இருந்தால் அவசியம் தொடர்பு கொள்ளவும்.

உணவு உலகம் சங்கரலிங்கம் அண்ணா  அவர்களின் மெயில் ஐடி   unavuulagam@gmail.com  
அவரது செல் எண் 9442201331.

ஒரு வித்தியாசமான அனுபவமாகவும், நம் நட்பை பரிமாறிக்கொள்ள கிடைத்த ஒரு சந்தர்ப்பமாகவும் இந்த பதிவர்கள் சந்திப்பு இருக்கும்.


அப்புறம் ஒண்ணச் சொல்லியே ஆகணும் - குற்றாலம் 


தென்பொதிகைச் சாரலில் அமைந்துள்ளது குற்றால மலை, இதில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் உள்ளன.....இந்த செடிகள் மீது பட்டு விழும்  மழைத்துளிகள் பின்னர் அருவியாக ஓடி வருவதால் அருவி நீரில் அந்த மூலிகை செடிகளின் மருத்துவ குணமும் கலந்து வருகிறது என்பதும் அதில் நீராடுவதால் உடலுக்கு ஆரோக்கியம் என்பது தனிச் சிறப்பு.   

இப்போது சீசன் களைகட்ட தொடங்கிவிட்டது. தென் மேற்கு பருவக்காற்று குளிர்ச்சியாக வீசி, குற்றாலத்தில் சாரல் மழையை  பெய்வித்து கொண்டிருக்கிறது .....!! அனைத்து  அருவிகளிலும் தண்ணீர் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது .....


வெள்ளிகிழமை பதிவர் சந்திப்பு என்றால் சனி, ஞாயிறு இரண்டு தினங்களும் மூலிகை கலந்து வரும் அருவிகளில் நீராடி அற்புதமான அனுபவத்தை பெற ஒரு நல்ல சந்தர்ப்பம்.  இது போன்ற சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது அனுபவித்து கொள்ளவேண்டும்...! (அவரவர் சொந்த செலவில்...?!) என்ன நான் சொல்றது...?! சரி தானே.....?!!


நெல்லையும் நாங்களும் உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலாக இருக்கிறோம்.  எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து இணையம் என்ற கடலில் வந்து விழுந்த நதிகள் நாம் ! நம்மிடையே இருக்கலாம் பல வேற்றுமைகள், இருந்தும் ஒன்றிணைகின்றோம்  நட்பு என்ற அற்புதத்தால் !! சகோதர பாசத்தையும், தோழமை அன்பையும், மனித மாண்பையும் போற்றுவோம் !!  

கலந்து கொள்ள இயலாத தோழமைகளிடம் இருந்து வாழ்த்துக்களையும், ஆசிர்வாதங்களையும்  எதிர்பார்கின்றோம்...!

தமிழர்களாய், தமிழால் ஒன்றுபடுவோம் !
அன்பால் மனிதர்களை வசப்படுத்துவோம் ! 
நட்பால் உலகை வெல்வோம் !

வெல்க தமிழ் ! வாழ்க தமிழர்கள் ! வளர்க அவர்தம் புகழ் !






படங்கள் - கூகுள் 

செவ்வாய், ஜூன் 7

தாம்பத்தியம் - 24 - மனைவியரே ! ஏன் இப்படி?

முன்னுரை 

தாம்பத்தியம் தொடர், குடும்பத்தில் ஏற்படும் சிக்கலுக்கு காரணமான பிரச்னைக்குரிய கணவன், மனைவி இவர்களின் நிறை, குறைகளை பற்றி சொல்லும் ஒரு பதிவு. பெற்றோர்களின் கருத்துவேறுபாடுகளால் பாதிக்கப்படும் குழந்தைகளின் மனநிலையை மனதில் வைத்தே எழுதி வருகிறேன். பாதிக்கப்படும் குழந்தைகள் வளர்ந்த பின்னும் அந்த பாதிப்பில் இருந்து அவ்வளவாக மீண்டு வருவது இல்லை என்பது வருத்தத்திற்கு உரிய விஷயம். பாதிக்கப்பட்ட இன்றைய குழந்தைகள், நாளைய பெற்றோர்களாக மாறும் போது அவர்களின் மனநிலை...?! குழந்தைகளின் நலனை மனதில் வைத்தாவது தம்பதிகள் பரஸ்பரம் அன்பை பரிமாறி வாழக்கூடாதா என்கிற ஆதங்கம் இத்தொடரில் எழுத்துக்களாய்...!!


கணவன் மனைவி சம்பந்த பட்ட குடும்ப விசயத்தில் ஆண், பெண் என்று  பாகுபடுத்தி பார்ப்பதே தவறு. பெண்ணுரிமை, ஆணாதிக்கம் என்று குரல் கொடுக்கலாம் தவறில்லை ஆனால் அதற்கான இடம் குடும்பம் அல்ல !!

பொதுவாக இப்படி பெண்ணுரிமை, சம உரிமை  என்று குரல் கொடுத்து கொண்டிருப்பதால் வீட்டிலும், குடும்பத்திலும் அது எதிரொலித்து எல்லா பிரச்சனைக்கும் ஒரு மூல காரணமாக அமைந்துவிடுகிறது. குடும்பம்  வேற...மேடை பேச்சு வேற... புரிந்து கொண்ட பெண்களின் இல்லங்களில் குதூகலமும், புரிந்து கொள்ளாமல் கொடி பிடிப்பவர்களின் வீட்டில் குளறுபடிகளும் கும்மி அடிக்கின்றன !!

மனைவி கணவனுக்கு சமம் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். பலரது வீடுகளிலும் மனைவியின் கை தானே ஓங்கி இருக்கிறது...சில வீடுகளில் மனைவி தனக்கு தேவையான உரிமையை மட்டும்  எடுத்துக்கொள்கிறாள், சில வீடுகளில் வலிந்து பெற்றுக்கொள்கிறாள், பல வீடுகளிலும் முழு உரிமையையும் எடுத்துகொண்டு குடும்பத்தை வழி நடத்துகிறாள்...இதுதான் இன்றைய நிதர்சனம்.ஆண்கள் விட்டுகொடுத்து கொஞ்சம் ஒதுங்கி இருக்கிறார்கள், அவர்கள் ஆளுமை செய்த காலம் குடும்பத்தை பொறுத்தவரை மிக குறைந்து விட்டது. (ஒரு சில விதிவிலக்குகள் உண்டு)

அத்தகைய பெண்களில் சிலர் 'தான் சொல்வதே சரி' என்பது போல் நடந்து சிக்கல்களை உருவாக்கி கொண்டே செல்கிறார்கள்.

குடும்பத்தைக் கெடுக்கும் அறிவுரைகள் ?!!
  
மனப்பொருத்தம் என்பது ஏதோ கடையில் வாங்கும் பொருளல்ல...இரு மனமும் பொருந்தியதே திருமணம் என்று பெரியவர்கள் சொல்லி வச்சாங்க. இப்போது திருமணம் ஒருவழியாக பொருந்திவிடுகிறது, ஏனோ இரு மனங்கள்  பொருந்துவதே இல்லை. பெரியவர்கள் பார்த்து வைத்த திருமணம், காதல் திருமணம் எதுவாக இருந்தாலும் மனம் பொருந்தவில்லை என்றால் அது நரக வாழ்க்கை. மனம் பொருந்தாமைக்கு கணவன் மனைவி மட்டும் காரணம்  இல்லை,பெண்களை பொறுத்தவரை திருமணத்தின் போதே அவர்களுக்கு ஓதப்படும் தவறான அறிவுரைகள்....!!?

* கணவனை கைக்குள் போட்டுக்கோ
* மாமியார், நாத்தனாரை தூரமா வை.
* கொஞ்ச நாள் போனதும் தனிக்குடித்தனம் போற வழியைப் பாரு. 
* எந்த முடிவும் நீ எடு, அடக்கி வை.

இந்த நான்கில் ஒன்றாவது நிச்சயம் எல்லா குடும்பத்திலும் திருமணத்தின் போது  பெண்ணின் காதில் ஓத படுபவை.....இல்லை என்று யாரும் மறுக்க முடியாது.

இப்படி வலுகட்டாயமாக பதிய வைக்கப்படுபவை, புது பெண்ணின் மனதில் எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதை யாரும் உணருவதே இல்லை.
கணவன் நல்லவனாக இருந்தாலும் இந்த எண்ணங்களே மனதை ஆக்கிரமித்து விடுவதால், கணவனை ஒரு தவறான கண்ணோட்டத்தில் பெண் அணுக தொடங்குகிறாள். திருமண முடிந்த ஆரம்பத்தில் இது அவ்வளவாக வெளியே வருவதில்லை, போக போக கணவனை தன் கட்டுக்குள் வைத்துக் கொள்ளணும் என்கிற எண்ணம் தலை எடுக்க தொடங்கும்.

இன்றைய பெண்களுக்கு ஆணை விட நாம் எதில் குறைந்தவர்கள் என்ற எண்ணம் அதிகம். ஆனால் இதை குடும்பத்தில் நிலைநாட்ட துடிப்பது சரியன்று. தவிரவும் ஆணுக்கு சமம் என்றால் சம மரியாதை கொடுக்க வேண்டுமே,அதுவும் இல்லை, தனக்கு(ள்) அடங்க வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம்...?!

அது என்ன ஆம்பளைங்க என்றாலே ஏதோ வேற்றுக்கிரக ஜந்து மாதிரி பார்க்கிறது...?!!! திருமணம் முடிந்த நாளில் இருந்து  கணவனை எப்படி எல்லாம் தன் வழிக்கு கொண்டு வரலாம் என்று பிளான் போடுவார்கள் சிலர் !! என்னவோ அதுவரை கணவன் ஒன்றும் தெரியாத முட்டாளாக இருந்தது போலவும், இவங்க புத்தி சொல்லி திருத்துற மாதிரியும்,  இப்படி பண்ணு, அப்படி பண்ணு என்று அட்வைஸ் பண்றதா பார்த்தா......!? பாவம் அப்படிப்பட்ட பெண்ணை திருமணம் முடித்த ஆண். எல்லாவற்றிலும் பெண்ணின் பேச்சை கேட்கணும் என்றால் அந்த கணவனின் தனித்தன்மை என்ன ஆகும்? 

ஒரு சில ஆண்கள் மனைவியின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளாதவனாக, அடக்கி ஆளும் மனம் படைத்தவனாக இருக்கலாம், அதற்காக ஒட்டு மொத்த ஆண்களையும் அதே கண்ணோட்டத்தில் அணுகுவது அநியாயம். (ஒரு வேளை கணவன் அடக்கி ஆளும் மனம் கொண்டவனாக இருந்தாலும், மனைவியால் சந்தோசமாக குடும்பம் நடத்த இயலும் அது எவ்வாறு என்று பிறிதொரு சமயத்தில் பகிர்கிறேன்.....!)

என்ன குறை கண்டாய் பெண்ணே ?

ஆண், பெண் யாராக இருந்தாலும் 100 சதவீதம் நிறைகள் உள்ளவர் என்று சொல்ல முடியாது. அப்படி இருக்கும் போது கணவனிடம் மட்டும் நூறு சதவீத நிறைகள் இருக்கணும் என்று எதிர்பார்காதிங்க...! ஒரு பெண்ணிடம் உங்க கணவன் எப்படி என்று கேட்டு பாருங்க, "அய்யோ அவரா, அதையேன் கேட்குறீங்க..... வேலை  விட்டு வந்தாலும்  வீட்ல இருக்கறதே இல்ல, எப்பவும் நண்பர்கள் கூட வெட்டி பேச்சு தான், வீட்ல ஒரு துரும்பை கூட அசைக்கிறது இல்லை...எல்லாம் நான்தான் பார்க்க வேண்டி இருக்கு, இந்த மனுசனை கட்டிட்டு என்ன சுகத்தை கண்டேன்......" இப்படி.....கேட்டவங்க  காது தீப்பிடிக்கிற அளவு போயிட்டே இருக்கு.....இதுவா நல்ல தாம்பத்தியம் ? இல்லவே இல்லை...!

பொதுவா குறைகளை பட்டியல் போடுவதை மனைவிகள் நிறுத்தவேண்டும்.....பதிலுக்கு கணவனும் மனைவியின் குறைகளை பட்டியல் போட தொடங்கிவிட்டால் இதற்கே பொழுது சரியாக இருக்கும், குடும்பம் நடத்த முடியாது. வீட்டில் குறை சொல்வது போதாது என்று உறவினர்கள் ,அக்கம்பக்கமும் சொல்லிவிடுவதால் சின்ன விஷயம் , பெரிய பிரச்னை அளவிற்கு போய்விடும். அடுத்தவர்களுக்கு நம் வீட்டு பிரச்னை ஒரு பொழுது போக்கு வாய்க்கு வந்ததை சொல்லிவிட்டு போய்விடுவார்கள், ஆனால் அதை பெரிதாக எண்ணிக்கொண்டு சில பெண்கள் குடும்பத்தில் விரிசலை ஏற்படுத்திவிடுகிறார்கள்.

ஒரு கணவனிடம் குறை என்றால் உதாரணதிற்கு குடிப்பழக்கம்.....

திருமணதிற்கு முன் ஒரு ஆண் குடிக்கிறார் என்றால் அதற்கு அவர் மட்டுமே பொறுப்பாகிறார்/காரணம். ஆனால் திருமணதிற்கு பின் கணவர் குடிக்க தொடங்குகிறார் அல்லது அதிகமாக குடிக்கிறார் என்றால் அதற்கு முழு பொறுப்பு அவரது மனைவி என்பேன்....அது எப்படி அவருக்கு தொழில்/வேலை  நெருக்கடி இருக்கலாம், மன அழுத்தம் காரணமா குடிக்கலாம் அல்லது புதிய நண்பர்களின் வற்புறுத்தல் காரணமாக இருக்கலாம் என்று நினைக்கலாம். ஆனால் இது போன்ற எந்த காரணமாக இருந்தாலும் மனைவியின் அன்பும், அரவணைப்பும், முக்கியமாக புரிதலும் சரியான அளவில் கணவருக்கு கொடுக்கப்பட்டு வந்தால் அங்கே எந்த கெட்டப்பழக்கமும் ஏற்பட வழியே இல்லை. பழக்கம் ஏற்பட்டாலும் அதை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்துவிடமுடியும். 'என் கணவன் சரியில்லை' என்று குறை சொல்லி புலம்பும் பெண்களுக்கு எனது ஒரே பதில் "தவறுகளின் ஆரம்பம் நீங்கதான்"

சண்டை போடும்போது ஆண்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்று அவர்களை குறைத்து எடை போட்டுவிடாதீர்கள்...!சகித்துக்கொண்டு  இருக்கிறாங்க அவ்வளவு தான். ஆனால் இந்த சகிப்புத்தன்மையும் ஒரு அளவிற்கு தான்.  அளவை தாண்டும் போது கரையை உடைத்துக்கொண்டு போகும் வெள்ளத்தை போல கடந்து சென்றே விடும்.....அப்புறம் தலை கீழாக  நின்றாலும் உங்க பக்கம் திருப்ப முடியாது. ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

கணவனிடம் இருக்கும் குறைகளை ஒதுக்கி வைத்து விட்டு இருக்கும் அவரிடம் நிறைகளை கவனத்தில் வையுங்கள். கூடுமானவரை இருக்கும் குறைகளை, நிறைகளாக மாற்ற முயலுங்கள்.....( 'இந்த மனுஷனிடம் நிறையா ? அப்படியெல்லாம் ஒண்ணுகூட இல்ல...!') நல்லா யோசிங்க.....! ஒண்ணு, இரண்டு எங்காவது ஒளிந்து கொண்டிருக்கும்.....!! நிறைகளை அடிக்கடி சொல்லி உற்சாகப் படுத்துங்கள்.....! 

முக்கியமாக சின்ன சின்ன பாராட்டுகள் ! இதற்காக மேடை போடணும், மைக் வைக்கணும்னு அவசியம் இல்ல...அன்றாட வாழ்வில் கேசுவலாக சொல்லலாம்.....சொல்லித்தான் பாருங்களேன் ........!! 

ஒரு சில டிப்ஸ்.....

கணவரிடம்,

* எந்த பிரச்னைக்கும் டக்குனு தீர்வு சொல்றீங்க, எப்படிப்பா இப்படி...சூப்பர் !

* உங்க டிரெஸ்ஸிங் சென்ஸ்,சான்சே இல்ல போங்க அபாரம் !

* நடை கம்பீரமா இருக்குங்க ! நெற்றியில் விழும் முன் முடி செம அசத்தல்பா !

* பேசுறப்ப நடுநடுவே சிரிக்கும் இந்த சிரிப்பு என்னை ரொம்ப ஈர்க்குதுங்க ! நீங்க இல்லாதபோதும் அந்த சிரிப்பு என் காதில் கேட்டுட்டே இருக்குங்க !! (ஒருவேளை லவ் பண்ணி இருந்தால் அப்போ இதை விட ஓவரா சொல்லி இருப்பீங்களே !! இப்பவும் சொல்லுங்க, தப்பு இல்ல...!)

இதே ரீதியில் சொல்லி பாருங்க.....(அப்புறம் ரிசல்ட் என்னனு என்கிட்டே சொல்ல வேண்டாம், ரிசல்ட் எப்படி  இருக்கும் என்று எனக்கு நல்லா தெரியும் !! ) 

இது தாங்க வாழ்க்கை...இப்படி சிம்பிளா, ஜாலியா வாழ்ந்து வாழ்க்கையை முடிக்கிறதை விட்டுட்டு,   எப்பவும் கணவரை குறை சொல்லி அழுது புலம்பி நீங்களும் மன அழுத்தத்தில விழுந்து , அவரையும் வேற ஒண்ணுல விழ வச்சிட்டு, குழந்தைகளை பற்றியும் சுத்தமா மறந்துவிட்டு என்ன வாழ்க்கை வாழ்றீங்க.....!!? கொஞ்சம் யோசிச்சு பாருங்க ...!!


************************************************************************

'மனைவியரே ! ஏன் இப்படி...?!' முடியவில்லை, தொடருகிறது.....!?


தாம்பத்தியத்தில் அடுத்து வருவது ,ஆண்களை பற்றி என்ன நினைச்சிட்டு இருக்கீங்க ? காத்திருங்கள்....

************************************************************************






படங்கள் - கூகுள் 



இன்றைய சிறகடிப்பில் கழுகு !



புதன், ஜூன் 1

தாம்பத்தியம் பாகம் 23 - கணவன்/மனைவி பாதை மாற காரணம்




மனப்பொருத்தம் இல்லாமை



ஜாதக பொருத்தம் சரியாக  இருக்கிறதா என்று பார்த்து சேர்த்து வைப்பதுடன் பெற்றோரின்  கடமை முடிந்துவிடுகிறது. வேறுபட்ட இரு குடும்ப பாரம்பரியங்களில் , சூழ்நிலைகளில் வாழ்ந்தவர்கள் இனி புதியதொரு சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டாக வேண்டும். புது சூழல் , புது உறவுகள், புது பழக்க வழக்கங்கள் எல்லாவற்றையும் அனுசரித்து பழகி கொள்வார்கள். அதன் பின் பல வருடங்கள் இணைந்து வாழ்ந்து வந்தாலும் அவர்கள் புரிதலுடன் தான் வாழ்கிறார்கள் என்று முடிவிற்கு வந்துவிட முடியாது. பல உட்பூசல்கள் நீருபூத்த நெருப்பாய் கனன்று கொண்டிருப்பது வெளியே பெரும்பாலும் தெரிவதில்லை. 

கணவன்/மனைவி ஒருத்தருக்கு கருப்பு நிறம் பிடிக்கும் , மற்றொருவருக்கு  வெள்ளை நிறம்...இப்படி நிறத்தில் தொடங்கி பலவற்றிலும் விருப்பங்கள் எதிரும் புதிருமாக ! விருப்பங்கள் வேறுபட்டாலும் இருவரையும் இணைப்பது  அன்பு என்னும் மகா சக்தி. ஆனால் இந்த அன்பை அடிக்கடி புதுப்பித்துக்  கொள்ளவேண்டும்...நம்ம மனைவி தானே என்று திருப்தி பட்டு கொண்டிருந்தால் மட்டும் போதாது. அதை வெளிப்படுத்தியாக வேண்டும் நேரம் கிடைக்கும் போதெல்லாம்...!! ஆனால் எத்தனை தம்பதிகள் இதை புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் விடை மிக சொற்பமே !!? 

கணவன் மனைவி இருவரையும் சேர்த்து சொல்வதை விட இருவரின் மனநிலைகளை பற்றியும் தனித் தனியா பார்க்கலாம் என்று நினைக்கிறேன் (அவ்ளோ மேட்டர் இருக்கு இதில.....!! )

இன்றைய கணவர்கள் !?

இதை படிக்கிற ஆண்கள் தினசரி வாழ்கையில் எப்படி இருக்கிறீர்கள் என்று ஒரு நிமிடம் நிதானமாக யோசித்து பாருங்கள்...(எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் சரியா வருதானு பாருங்க)

காலையில், சுடு தண்ணீர் காலில் கொட்டிய மாதிரி அரக்கபரக்க எழுவதில் இருந்து, குளித்து அவசர அவசரமாக மனைவி கொடுக்கிற டிபனை (சிலர் சாப்பிடுவதும் இல்லை!) நின்றுகொண்டே உள்ளே தள்ளிட்டு , வேலைக்கு கிளம்பி ஓடுவீங்க, அங்கே  போயும் அந்த வேலை, இந்த வேலைன்னு பார்த்துவிட்டு அதீத சோர்வா வீட்டுக்கு வருவீங்க. அந்த நேரம் பார்த்து  உங்கள் குழந்தை உங்களிடம் ஏதும் சொல்ல வந்தா 'அம்மாவிடம் போ,  நான் டயர்டா இருக்கிறேன்'னு சொல்லிட்டு...கொஞ்ச டிவி பார்த்திட்டு இரவு உணவை முடிச்சிட்டு படுத்துவிடவேண்டியது...நடு இரவில் விழிப்பு வந்தால் , கண்டிப்பா விழிப்பு வரும்... அப்போதுதான் அருகில் மனைவி ஒருத்தி இருப்பது நினைவுக்கு வரும்... அப்புறம் என்ன... அந்த கடமையையும் ஒரு ஐந்து நிமிசத்தில முடிச்சிட்டு தூங்கிட வேண்டியது.....இது தான் இன்றைய பெரும்பாலான கணவர்களின் வாழ்க்கை முறை ! எப்படிப்பட்ட விபரீத வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்பது தெரியுமா ??

சிலரிடம் உங்க வாழ்க்கை எப்படி போகிறது என்று கேட்டால் போதும் வாய் வலிக்கும் அளவிற்கு அளந்து விடுவார்கள்.எனக்கு பெரிய லட்சியம் இருக்கு, இதை இப்படி செட்டில் பண்ணனும், அதை அப்படி செட்டில் பண்ணனும்', 'இரண்டு கிரௌன்ட்ல வீடு கட்டிட்டு இருக்கிறேன்', அப்புறம் 'அதுல இன்வெஸ்ட் பண்ணி இருக்கிறேன்', 'இதில லோன் வாங்கி இருக்கிறேன்', 'இன்சுரன்ஸ் இத்தனை லட்சத்துக்கு எடுத்து இருக்கிறேன்', என்று போயிட்டே இருக்கும்......இதுவா வாழ்க்கை ? இதில் மட்டும் நிறைவு கிடைத்து விடுமா ?

இந்த மாதிரியான நபர்களை பொறுத்தவரை வாழ்க்கையின் அர்த்தம் இதுதான். பொருளாதாரத்தில் முன்னேறிவிட்டால் அனைத்தும் முழுமை அடைந்துவிடும் என்பது மாதிரியான எண்ணங்களே மனதை ஆக்கிரமித்து இருக்கிறது.....! பொருள் பின்னே ஓடியே மனஅழுத்தம் அதிகரித்து, தாம்பத்திய வாழ்வில் தோல்வியை தழுவி தங்களின் வாழ்நாட்களை கசப்பாக கழித்து ஏனோ தானோவென்று முடித்துவிடுகிறார்கள்.....! ஆனால் இவர்களின் மனகோளாருகளால் பாதிக்கப்படும் அவர்கள் குழந்தைகளின் நிலை !!?

நான் என் மனைவியை அன்பாக தான் வைத்திருக்கிறேன் என்று ஒரு மிதப்பில் இருக்கும் ஆண்கள் பலர் உண்டு...உண்மையில் எப்படி அன்பாக வைத்திருக்கிறீர்கள் ? எந்த விதத்தில் ? என்று கேட்டால் வரும் பதில் மிக அபத்தமாக இருக்கும்.....! அதனால் அவ்வளவையும் இங்கே விரிவாக சொல்வதைவிட மிக முக்கியமான ஒன்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.....

'என் மனைவியை ரொம்ப காதலிக்கிறேன்', 'அவர்களை சந்தோசமாக வைத்திருக்கிறேன்' என்று வரும் பதிலின் உண்மை தன்மை என்ன தெரியுமா? ஆண்கள் ஒரு அரைமணி நேரம் தங்களை ரிலாக்ஸ் பண்ணி கொள்கிறார்கள் அவ்வளவே ! இதில் மனைவியின் சந்தோசம் எங்கே இருக்கிறது ? அல்லது ஒரு நாளாவது 'என்னுடன் இருக்கும் இந்த தனிமையான நேரம் உனக்கு சந்தோசத்தை கொடுக்கிறதா என்று கேட்டு இருக்கிறீர்களா ?' கேட்டுபாருங்கள் , வரும் பதிலில் உடைந்து போய்விடும் உங்களின் ஆண்மை !!

அந்த ஒரு அரைமணி நேரம் !!

உங்களின் தேவையை தீர்க்கும் அந்த ஒரு அரைமணி நேரம் நிச்சயம் பெண்ணிற்கு மகிழ்வை கொடுக்கவே கொடுக்காது. பின் என்ன செய்வது ? உங்களின் அந்த அரைமணி நேரத்திற்கு முன் ஒரு அரைமணி நேரம் மனைவிக்காக ஒதுக்குங்கள், நீங்கள் பெரிய அதிகாரியாக இருக்கலாம்,தொழில் அதிபராக இருக்கலாம்..... ஆனால் தனிமையான அந்த நேரத்தில் உங்கள் மனைவியின் கணவன் மட்டுமே என்பது நினைவில் இருக்கட்டும்.'அன்று வீட்டில்/அலுவலகத்தில் என்ன நடந்தது, அதை பற்றி சொல்லு' என்று கேளுங்கள்.உங்களின் அன்றைய அலுவல் வேலை பற்றியும் சொல்லுங்கள், ஆமாம் அது எல்லாம் அவளுக்கு தெரியாது, சொன்னாலும்  புரியவும் புரியாது என்று எண்ணாதீர்கள்.

பதிவர்களுக்கு புரிகிற மாதிரி ஒரு உதாரணம் சொல்றேன்.

நீங்கள் கவிதைகள் எழுத தெரிந்தவராக இருந்தால் அதை பற்றி சொல்லுங்கள் உனக்கு எழுத தெரியுமா என்று வினவுங்கள். அவளுக்கு இதில் எல்லாம் ஆர்வம் இல்லை என்று சப்பைக்கட்டு கட்டுவதை இனியாவது நிறுத்துங்கள்...இன்றைய இளம் மனைவிகள் பல திறமைகளை உள்ளுக்குள் வைத்திருப்பார்கள் , வெளிக்காட்ட சந்தர்ப்பம் கிடைக்காததால் வெற்று காகிதம் என்று அலட்சிய படுத்திவிடாதீர்கள்..... பல கவிதைகள் அந்த காகிதத்தில் எழுத பட்டு இருக்கலாம் , ஆண் என்ற கண்ணிற்கு அது தெரியாமல் இருக்கலாம். யாருக்கு தெரியும் அவை உங்களின் (கிறுக்கல்) கவிதைகளை விட அற்புதமாக இருக்கலாம் !!

விளையாட்டாய் கேட்டுப்பாருங்கள் 'என்னை பற்றி இரு வரி கவிதை சொல்' என்று அசந்து போய் விடுவீர்கள் இத்தனை நாள் இதை இழந்துவிட்டோமே என்று வருந்தும் நிலைக்கு தள்ளப்படலாம். ஒரு உதாரணத்துக்கு கவிதை என்று சொன்னேன், பேச்சு கொடுத்து பாருங்கள் பல புதையல்கள் வெளிவரலாம். கருத்துக்களை பரிமாறுங்கள், அவர்களையும் பேசவையுங்கள்...பேச்சின் ஊடே அவள் விரல் பிடித்து மெல்ல நீவி, 'இன்னைக்கு வேலை ஜாஸ்தியாடா' என்று கேட்டுபாருங்கள், அந்த நொடி மிதக்க தொடங்குபவள் விடியும் வரை உங்களில் கரைந்து மயங்கி கிடப்பாள். இது தாங்க பெண்மை. இத விட்டு விட்டு  எத்தனை கோடி பணம் தலையில் கொட்டினாலும் அந்த சந்தோசம் எல்லாம் சில நொடிகளில் (நாட்களில்...!) முடிந்துவிடும். ஆனால் நான் குறிப்பிட்ட அந்த அரைமணி நேரம் வாழ்வின் இறுதிவரை காதலால் நிறைத்து விடும்.


இந்த மாதிரி சில நிமிடங்கள் மனைவிக்காக ஒதுக்க முடியாதா என்று கேள்வி கேட்கிறேன், ஒதுக்க முடியாதவர்கள் அதன் விளைவை கண்டிப்பாக சந்தித்து தான் தீருவார்கள்...வழக்கம் போல அது என்ன விளைவு என்று யோசியுங்கள்...

                                                                                                         *****************

அடுத்த பாகத்தில் 'மனைவிகளே ஏன் இப்படி ?' அடுத்த பதிவு படிச்சா நிச்சயம் பெண்களுக்கு கோபம் வரலாம்...ஆனால் என்ன செய்வது, குறைகள் எங்கே அதிகம் இருக்கிறதோ அதை சொல்லிதானே ஆகணும்...?!!     காத்திருங்கள்.....!!

                                                                                                          *****************

படங்கள் - நன்றி கூகுள் 



கழுகு - கே.ஆர். பி செந்திலுடன் ஒரு சந்திப்பு!



வெள்ளி, ஏப்ரல் 8

அன்னா ஹசாரே...!!


சென்ற பதிவில் 'ஊழலற்ற இந்தியா சாத்தியமா' என்று கேள்வி எழுப்பி இருந்தேன்..அதில் மூணு பின்னூட்டத்தை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்... 

* ராஜ நடராஜன் அவர்கள் 

//இந்தியா 50/50 மட்டுமே தற்போதைக்கு.இரும்பை கொஞ்சம் ஓங்கி அடித்தால் விகிதாச்சாரம் மாற சந்தர்ப்பம் இருக்குது// 

* அடுத்ததாக என்னுடைய பல பதிவுகளுக்கும் பின்னூட்டத்தில் விளக்கமாக கருத்துகளை தெரிவிப்பத்தின் மூலம் என்னை உற்சாகபடுத்தி கொண்டிருக்கும் சகோதரர் அப்பாதுரை அவர்கள் ஒரு கருத்தை கூறி இருந்தார்...  

//ஊழல் அலையாக வரும் பொழுது நனையாமல் நகர்வதற்கு முயற்சி, வேகம், தொலைநோக்கு, தன்னம்பிக்கை எல்லாமும் வேண்டும். பொதுமக்களில் 90%க்கு மேல் இந்த நான்கில் மூன்று குறை என்பது என் கணிப்பு.//  

* கோபி 
//மிகப்பெரிய அளவில் ஒரு புரட்சி நடந்தால் ஒழிய இந்த ஊழலற்ற அரசு இந்தியாவில் அமைவதற்கு வாய்ப்பே இல்லை என்று தோன்றுகிறது// 


பலரும் எதிர்பார்த்த ஒரு புரட்சி, ஒரு எழுச்சி தற்போது நம்ம இந்திய நாட்டில் உதயமாகி இருக்கிறது. இதில் நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்றால், ஊழலற்ற இந்தியா சாத்தியமே !!

இளைஞனே விழித்திடு இக்கணமே.....!

ஊழலற்ற இந்தியா சாத்தியம் என்ற நம்பிக்கை அதிகமாகிறது அதற்கு ஒரே காரணம் அன்னா ஹசாரே !! 

யார் இவர் என்று இப்போதுதான் உலகம் பார்க்க தொடங்கி  இருக்கிறது...அதிலும் இந்தியாவே இப்போதுதான் இவரை கண்டு சிறிது புருவம் உயர்த்தி  இருக்கிறது...இந்திய ராணுவத்தில் 15 ஆண்டு காலம் பணி  புரிந்தவர் என்று சொல்வதை விட எல்லையில் நின்று போராடியவர் எனலாம். பின் அதில் இருந்து விலகியவர் தனது சொந்த கிராமமான ராலேகாவன் சித்திக்கு வந்து தனது மக்களுக்காக வாழ தொடங்கினார். அப்போது அவரது வயது 39 மட்டுமே ! மக்கள்  அடிப்படை வசதி கூட இல்லாமல் அவதியுறுவதை எண்ணி வருந்திய அவர் அப்போதே மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயலாற்றினார்...! கிராம மக்களின் நிலை மேன்பட முயன்ற அவர் தலைவிரித்தாடும் லஞ்ச லாவண்யங்களை கண்டு மனம் வருந்தி அதற்காக போராட தொடங்கினார். முப்பது வருடங்களாக போராடி வருகிறார். 

கடந்த மூன்று தினங்களாக 'ஊழல் ஒழிப்பு சட்டம்' லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டி இவர் 'சாகும் வரை உண்ணாவிரதம்' இருக்கிறார்.  இந்த 72 வயதிலும் 15 நாட்கள் வரையிலும் கூட எந்த பிரச்சனையும் இன்றி உண்ணாவிரதம் இருக்க இயலும் என்ற உறுதியில் இருக்கும் இந்த இளைஞருக்கு ஆதரவு பெருகி வருகிறது. 400 க்கு மேற்பட்ட இடங்களில் இது போன்ற உண்ணாவிரத போராட்டங்கள் நடைபெற்று வருகிறது என்று அவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்....இதில் முக்கியமாக நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் எந்த அரசியல்வாதியையும் அருகில் சேர்க்க வில்லை இவர்...! இந்த தைரியம் நம் இளைஞர்களுக்கு வர வேண்டும். இனிமேல் வரலாம், வரும்.....

முதல் முறையாக ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது ஊழலுக்கு எதிராக குரல்கள் ! பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் பெரும்பாலும் அரசியல்வாதிகளின் சொந்தமாகிவிட்டதால் அவை நிச்சயம் இவரை கண்டுகொள்ளாது...இன்றைய தினசரியில் கூட பிரச்சார செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து இந்த செய்தி கடைசி பக்கத்தில் அதுவும் ஒரு ஓரத்தில் சிறியதாக வெளி இடபட்டிருந்தது.....சினிமா செய்திகளுக்கு முழு பக்கம்...! கேவலம் மாற்ற முடியாது இவர்களை.....போகட்டும் விட்டு தள்ளுவோம்.

ஆனால் இணையம் அப்படி அல்ல...தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக பெரும் முயற்சி எடுத்து குரல் கொடுத்த பதிவுலகம் இதற்கும் தங்களின் முழு ஆதரவை தெரிவிக்க வேண்டும்.....!! இயன்றவரை என்று சொல்வதை விட அவசியம் பதிவுகளை வெளியிட்டும், பஸ்சிலும், முகநூலிலும், ட்விட்டரிலும் நம் ஆதரவை தெரிவிப்போம்.....

விளையாட்டுகளில் மட்டும் நம் தேசபற்று வெளிவரும் என்ற சிலரின் எண்ணங்களை உடைத்து போடுவோம்.....ஒன்றாக கை கோர்ப்போம் !



காந்தீயவழியில் இவர் மேற்கொண்டிருக்கும் இந்த போராட்டத்திற்கு நாம் வாழ்த்துக்களை சொல்லிக்கொண்டு அவருக்கு ஆதரவு தோள் கொடுப்போம். 

வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் ! வெல்லட்டும் இந்த அறப்போராட்டம் !

வாழ்க பாரதம் ! 

இந்த போராட்டத்தை பற்றி இன்னும் விவரங்கள் தெரியவேண்டும் என்றால் இந்த சுட்டிகளை பார்க்கவும்

இவருக்கு ஆதரவாக  Click here to sign the petition !     


இங்கே சென்று சைன் பண்ணலாம்.




கழுகின் அக்னி பார்வை !
சா'தீயே' நீ ஒழிந்து போ.......ஒரு தொலை நோக்கு பார்வை!

புதன், ஏப்ரல் 6

ஊழலற்ற இந்தியா சாத்தியமா ?



இன்னும் சில தினங்களில் தேர்தல்
வீதிக்கு வீதி பிரச்சாரங்கள் 
வறட்டு பேச்சுக்கள் 
செல்லரித்துப்போன அறிக்கைகள்
திரைக்கு பின் நடித்தவர்கள் 
இன்று மக்கள் முன்.....!!
வாக்காளன் ஏமாளி அதிலும் தமிழன் 
ஏமாளிகளின் தலைவன் !
அரங்கேறும் நாடகங்கள் ஒரு பக்கம் 
விமர்சிக்கும் பண்பாளர்கள் மற்றொரு பக்கம் !
காரசார விவாதங்கள் நடந்தென்ன லாபம்
முடிவு ஊழலுக்கு சாதகம் தான் !!

அரசியல் என்றாலே ஊழல் என்றாகிவிட்டது...நம்மில் பலருக்கும், நடப்பவை அனைத்தையும்  பார்க்கும்போது வெறுப்பும், எரிச்சலும் வருவது நியாயம் தான். ஆனால் இவனுக்கு வாக்களிக்காதே , அவனுக்கு வாக்களிக்காதே என்றும் எனக்கு வாக்களிக்க மனம் இல்லை என்றும் சொல்வதால் எதையும், யாரையும்  தடுத்து நிறுத்த இயலுமா நம்மால் ? முடியாது..... நடப்பது நடந்தே தீரும், நான் வாக்கு போடவில்லை என்றால் மற்றொருவன்.....! எப்படியும் கிழக்கில் சூரியன் உதித்தே தீரும் , மாற்ற இயலுமா ?? 

இந்த பதிவுலகம் முதல் தெருவோர டீக் கடை பெஞ்சு வரை திரும்பும் திசை எல்லாம் வீண் வாதங்கள், புலம்பல்கள், சாடல்கள், தனிமனித தாக்குதல்கள் !! இந்த ஜன சமுத்திரத்தில் இருந்துகொண்டுத் துப்பினால் அது நம் மீதும் விழும் என்பதை மறந்தே போனோம்.....?! 

இருக்கும் கட்சிகள் அனைத்தையும் குறை சொல்லிக்கொண்டே இருந்தால் என்ன மாற்றம் வந்து விடும்...? பேசி பேசி வீணாய் போவதுதான் தமிழனின் தலை எழுத்தா ? அதை தவிர தமிழன் மூளை வேறு ஒன்றையும் சிந்திக்காதா ?? வெட்டிப் பேச்சினால் எதை சாதிக்கமுடியும் ? ஆனால் நாம் நினைத்தால் முயன்றால் நிச்சயம் மாற்றம் கொண்டு வர முடியும்.....

எவ்வாறு ??

இங்கே தவறுகள் தட்டிக் கொடுக்கப்படுகின்றன, யாரால் மக்களால்...?!
'நமக்கென்ன' என்கிற அலட்சிய மனப்பான்மை கொண்ட நமக்கு  விமர்சிக்க மட்டும் என்ன தகுதி இருக்கிறது ?! 

அரசியல்வாதிகளை வளர்த்துவிட்டது மக்கள்..... 
அவர்களின் ஊழலை கண்டுகொள்ளாதது மக்கள்.....
ஊழல் கண்டதும் வேர் அறுக்காதது யார் தவறு ?

தேர்தலின்  போது மட்டும் குரல் கொடுப்பவனாகவும், தேர்தல் முடிந்ததும் சொந்த வேலை பார்க்க சென்றுவிடும் சராசரியாக இனியும் இருக்கணுமா?? யோசியுங்கள் !!

ஆட்சிக்கு வருவது எந்த கட்சியாகவும் இருந்துவிட்டு போகட்டும்.....! ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்த பின், யார் தவறு செய்தாலும் தவறுகளை தட்டி கேட்கவேண்டும்.உதாரணத்துக்கு சொல்லணும் என்றால்  எழுச்சியாக பேசுபவர்கள்,பத்திரிக்கைகளில், இணையத்தில் எழுதுபவர்கள் எங்கே தவறு என்றாலும் துணிந்து குரல் கொடுங்கள். அரசியல்வாதி, அரசு அதிகாரி யார் நேர்மைக்கு மாறாக செயல்பட்டாலும் எதிர்த்து கேளுங்கள். அரசாங்க அலுவலகத்தில் லஞ்சம் கேட்கபடுகிறதா, கொடுக்காதீர்கள், அதற்கும் மேலிடம் சென்று புகார் அளியுங்கள், ஒருவேளை அங்கேயும் நீங்கள் கண்டுகொள்ளபடவில்லையா ?

சோர்ந்து போகாதீர்கள், அதே அலுவலக வாசலில் கோஷம் போடுங்கள்.....உங்களை போன்ற நிலையில் பலரும் அங்கே நின்று கொண்டு இருக்கலாம்.....அவர்கள் வருவார்கள் உங்கள் துணைக்கு, ஒரு குரல் இரண்டாகும் , இரண்டு மூன்றாகும் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க நீங்கள் நிச்சயம் மேலிடத்தால் கவனிக்க படுவீர்கள், நீங்கள் சென்ற காரியம் தாமதமானாலும், எல்லோராலும் இந்த சம்பவம் கவனிக்கப்படும், முக்கியமாக மீடியாக்களால்.....! ஒரு இடத்தில் மட்டும் நடைபெற்றால் சாதாரண செய்தி, அதே செயல் பல இடங்களிலும் தொடர்ந்து நடைபெற்றால் யோசித்து பாருங்கள்...இந்த விழிப்புணர்ச்சி எத்தகைய மாற்றத்தை கொண்டுவரும் என்று...?!!

ஒரே நாளில் எதுவும் மாறிவிடாது.....ஆனால் நல்ல மாற்றங்கள் இப்போதைக்கு அவசியத்தேவை. அத்தகைய மாற்றங்கள் அரசியல்வாதிகளால் அல்ல மக்களால் என்னும் போது விரைவில் நடக்கும். நம் முன்னோர்கள் நாட்டை குறை சொல்லிக்கொண்டு வீட்டிற்குள் அமர்ந்திருந்தால் நமக்கு இந்த சுதந்திரம் கிடைத்திருக்குமா ? 

'வெள்ளையனே வெளியேறு' என்றார்கள் வெளியேறினார்கள் வெள்ளையர்கள் ! இன்று கொள்ளையனே வெளியேறு என்று சொல்ல கூடிய தைரியம் நமக்கு வேண்டும் !!    

இது சரியில்லை, அது சரியில்லை, நாடா இது என்று வெட்டிக்கதை பேசுபவர்கள் முதலில் அப்படி பேசுவதை நிறுத்துங்கள், உங்கள் வீரத்தை செயலில் காட்டுங்கள்...இது உன் தேசம் , உன் மக்கள், அரசியல் தலைவிதியை மாற்றி எழுத வை, உன்னால் முடியும்.....இனி மக்களை கண்டு அரசியல்வாதியும், அதிகாரிகளும் அஞ்ச வேண்டும்...நம் வரி பணத்தில் சம்பளம் பெறுபவர்கள் அவர்கள்...நாமே எஜமானர்கள் நினைவில் வைப்போம் இன்றே.....

நாட்டை மாற்று அதற்கு முன் நீ மாறு.................

நாட்டை குறை சொல்வதை விடுத்து
நம்மை சீர்தூக்கி பார்ப்போம் முதலில் !

அயலான் கண்ணில் துரும்பை பார்க்கும் முன்
உன் கண்ணில் இருக்கும் உத்ரம்
நினைவுக்கு வரட்டும் !

எங்கும் ஊழல், விமர்சிக்கும் முன் 
மேசைக்கடியில் நேற்று நீ கை நீட்டியது
நினைவுக்கு வரட்டும் !

யாரோ துப்பிய எச்சிலை அருவருக்கும்முன்
சற்றுமுன் நீ துப்பியது
நினைவுக்கு வரட்டும் !

தனிநபர் ஒவ்வொருவரும் நம்மை முதலில் திருத்திகொள்வோம், மாற்றம் நம் வீட்டில் இருந்து தொடங்கவேண்டும்.....

சொல்லாதீர்கள்...!!

வேற்றுகிரகவாசி போல சந்திரனில் இருந்து அப்போதுதான் இறங்கின மாதிரி படு மட்டமா பிறந்த நாட்டை விமர்சிப்பது எந்த விதத்தில் நியாயம் ? குறைகளை விமர்சியுங்கள் ஆனால் அத்துடன் நின்று விடாதீர்கள் தீர்வு ஒன்றையும் சொல்லுங்கள். தீர்வு சொல்ல இயலவில்லையெனில், குறைகளை சொல்வதையும் விட்டுவிடுங்க.....குறைகளை மட்டுமே தொடர்ந்து ஒருத்தர் சொல்லும்போது அது பலரின் மனதிலும் வலு கட்டாயமாக போய் உட்கார்ந்து கொள்கிறது....முடிவில் பலரின் மனதிலும் நாட்டை பற்றிய தவறான எண்ணமே மிஞ்சுகிறது...இந்நிலை நாளைய தலைமுறையினருக்கு நல்லதில்லையே...ஊழல் அற்ற ஒரு நல்ல நாட்டை நம் வாரிசுகளுக்கு விட்டு செல்வோம்...பிற நாடுகளை உதாரணம் காட்டுவது இனியும் இருக்காது அவர்கள் நம்மை பார்த்து கற்றுக் கொள்ளட்டும்.....!

ஊழல் நிறைந்த தேசத்தில் வாழ்வது தவறில்லை, அதை சகித்துக்கொண்டு போவது மாபெரும் தவறு !!

நாடு வல்லரசு ஆவது ஒரு புறம் இருக்கட்டும் முதலில் நல்லரசாக்க 'மக்கள்' நாம் முயற்சி மேற்கொள்ளுவோம். 

வாழ்க்கை ஒருமுறை, அதை அர்த்தத்துடன் வாழ்ந்து முடிப்போம் !!

வாழ்க பாரதம் ! வாழிய எம்மக்கள் !! 


பின்குறிப்பு :

ஊழலற்ற இந்தியா சாத்தியமா ? என்ற கேள்வி எனக்குள் எழுந்ததால் எழுதப்பட்ட பதிவு இது. முழுதும் களையப்பட இயலாது என்றாலும் முயற்சி செய்யலாமே என்ற ஒரு ஆசை என்போல் எல்லோர் மனதிலும் இருக்கும். இந்த தலைப்பில் விவரம் நன்கு தெரிந்த மற்ற நண்பர்கள் பதிவுகள் எழுதினால் தெரியாத பல விசயங்கள் தெரிய வரும். நாட்டின் மேல் அக்கறையுள்ள/இல்லாத பலருக்கும் ஒரு விழிப்புணர்வாக இருக்கும் . இது என் வேண்டுகோள். இயன்றவர்கள் எழுதுங்களேன்......


இந்த கேள்விக்கு பதில் இதுதான் என்பதுபோல் அன்னா ஹசாரே அவர்களின் உண்ணாவிரத போராட்டம் பற்றி எண்ண தோன்றுகிறது...அவரை பற்றி நண்பர் அருண்பிரசாத் அவர்கள் ஒரு பதிவு போட்டு உள்ளார். அவசியம் அதை படிக்க வேண்டுகிறேன்....




கழுகு - என்ன படிக்கலாம்...? +2 மாணவர்களுக்கான ஒரு வழிகாட்டும் தொடர்     


திங்கள், மார்ச் 28

தாம்பத்தியம் பாகம் 22 - உடலின் மீதான திருப்தியின்மை



பதிவை படிக்கும் முன் :

தாம்பத்தியம் தொடர்பான 21 பாகங்களில் திருமணம் முதல் கணவன் மனைவி உறவு நிலைகள், பிரச்சனைகள் போன்ற பல விசயங்களை பகிர்ந்திருந்தேன். கடைசி சில பதிவுகள் தாம்பத்தியத்தின் முக்கிய கட்டமான  அந்தரங்கம் எப்படி இருக்கவேண்டும், அங்கே ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்ன, அதை சரி படுத்தி கொள்ள என்ன வழிகள் இருக்கின்றன என்பதை பற்றியவை.....

கடைசி பதிவில் கணவன், மனைவி பாதை மாறுவதற்கு சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன என்றும் அதில் அதீத அன்பும் ஒரு காரணம் என்று  எழுதி இருந்தேன், இந்த பதிவு உடலின் மீதான திருப்தியின்மை பற்றியது, சொல்லபோனால் இந்த வார்த்தையே தவறுதான், யாரும் துணையின் உடல் பிடிக்கவில்லை என்று பாதை மாறமாட்டார்கள், அதன் பின்னால் மன ரீதியிலான சலிப்புகள் இருக்கும் என்பது தான் உண்மை. இது என் கருத்து. சலிப்புகள், வெறுப்புகள் ஏற்படாமல் தடுப்பதில் ஒரு வழியினை இங்கே பார்ப்போமே.....      

இருவருக்கும் உடல் அளவில் இருக்கும் வேறுபாடுகள்..

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணதிற்கு வரன் பார்க்கணும் என்று முடிவு செய்ததும் முதலில் கையில் எடுப்பது ஜாதகம். ஜாதகம் பொருந்தி இருந்தால் போதும் கண்ணை மூடி கொண்டு மணம் முடித்து விடுகிறார்கள் (ஒரு சிலர் விதிவிலக்கு)  எனக்கு ஜாதகத்தின் மேல் நம்பிக்கை இல்லை என்று வெளியில் பேசுபவர்கள் கூட கடைசியில் மனதிருப்திக்காக பார்க்காமல் இருப்பது இல்லை.ஆனால் அது மட்டுமே போதாது. திருமணம் முடிக்க போகும் ஆண், பெண் இருவருக்கும் உடல் பொருத்தம் இருக்க வேண்டியது மிக அவசியம். ஒரு பாட்டு கூட உண்டு "ரெட்டை மாட்டு வண்டி வரும்போது நெட்டை குட்டை என்றும் இணையாது.....!"  வண்டி ஓடவே இரண்டு மாட்டின் உடல் பொருத்தம் தேவை படும்போது, இந்த வாழ்க்கை வண்டி ஓட கணவன் மனைவி உடல் பொருத்தம் என்பது மிக அவசியம். (ஒரு சிலர் விதிவிலக்கு)

முன்னாடி எல்லாம் பெண்ணையோ பையனையோ வரன் பிடித்து இருக்கிறதா என்று பெற்றோர்கள் கேட்க மாட்டார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை, இருவரும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்கு என்று சொன்ன பிறகு தான் திருமணமே நடக்கிறது. ஆதலால் தங்கள் மனதிற்கும் தங்கள் உடம்பு அமைப்புக்கும் ஏற்றபடி அமைந்திருக்கிறதா துணை என்று பார்ப்பது மிக அவசியம். பணம், படிப்பு,அழகு,சொத்து, அந்தஸ்து எல்லாம் திருமணத்தின் ஆரம்ப சில வருடங்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சியையும், சமூகத்தில் ஒரு மதிப்பையும் கொடுக்கலாம். ஆனால் வருடம் சில கடந்த பின் ஆணோ பெண்ணோ இருவருக்கும் அது மட்டுமே போதுமானதாக இருப்பது இல்லை. துணைக்கு தன் மீதான கவனம் எந்த அளவில் இருக்கிறது,  தனக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் துணையிடம் இருக்கிறது  என்பதை பொறுத்தே வீட்டிலும் வெளியிலும் அவர்களின் நடவடிக்கைகள் இருக்கும். இச்சூழ் நிலையில் தான் உடல் பற்றிய யோசனைகளும் ஏற்படுகிறது.

உடல் அளவில் பொருத்தமாக  இருக்கிறவர்கள் தங்கள் அந்தரங்க வாழ்விலும் பொருத்தமாக இருப்பாங்க என்று சொல்ல இயலாது. தவிரவும் படுக்கையறையில் உடல் பொருத்தம் அவசியமும் இல்லை. நிறம்,அழகு, உயரம், குள்ளம் மற்றும் அந்தரங்க உடல் அமைப்புகள் இப்படிதான் இருக்கணும் என்று எந்த அளவுகோலும் இல்லை. தன் துணையை   படுக்கையில் உற்சாகமாக வைத்து கொள்ளாதவர் எவ்வளவு அழகாக இருந்தாலும் அங்கே திருப்தி கிடைக்காது . இதை முதலில் பிரச்சனைக்குரிய தம்பதிகள் புரிந்து கொள்ளவேண்டும். அந்தரங்கம் இனிமையாக நீடித்த காலத்திற்கு இருப்பதற்கு துணையின் உடலை திருப்தி செய்யணும், ஆனால் இங்கே திருப்தி என்று சொல்வதின் அர்த்தம் உடலுறவு இல்லை. பின்ன வேறு என்ன ??  தொடர்ந்து படிங்க......

உடலின் மீதான திருப்தியின்மை எப்போது ஏன் எதனால் ??

சில சரி செய்துகொள்ளகூடிய காரணங்கள் உடல் சுத்தமாக வைத்துகொள்ளாமை, அதிகபடியான வியர்வை, உடல் பருமன்/ஒல்லி, மனதிற்கு பிடிக்காத மணம் போன்றவை இருக்கலாம் ஆனால் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் தன் துணையின் அந்தரங்க நடவடிக்கைகள் பிடித்துவிட்டால் இந்த குறைகள் மிக பிடித்தவையாக மாறிவிடக்கூடும் !!

*  ஒரு சில நாட்களில் கணவன்/மனைவி யின் மனநிலை உறவிற்கு ஏற்றதாக இல்லாமல் இருக்கலாம். ஒரு சோர்வு,  ஆர்வம் இல்லாமை போன்றவை இருக்கும் போது துணை உறவிற்கு வற்புறுத்தினால் சலிப்பு வரும் நாளடைவில் இதே போன்ற வற்புறுத்தல்கள் தொடர்ந்தால் நிச்சயம் வெறுப்பு அதிகமாகி விரிசலில் கொண்டு போய் விட்டுவிடும். 

*  வேறு சிலருக்கு வேலை, வீடு, குடும்பம் போன்றவற்றினால் மன அழுத்தம் இருக்கலாம். உடல் சம்பந்தப்பட்ட உபாதைகளையும் சட்டை பண்ணாமல் உறவிற்கு அழைத்து அதன் பின் ஏற்படக்கூடிய உறவில் நிச்சயம் திருப்தி இருக்காது. 

*  பெண்களை பொறுத்தவரை வீட்டிற்கு உறவினர்கள் குறிப்பாக தனது பெற்றோர்கள் வந்திருக்கும் போது உறவை விரும்பமாட்டார்கள். குழந்தைகள் சரியாக தூங்கி விட்டார்களா என்று தெரியாதபோது உறவை மனதாலும் நினைக்கமாட்டார்கள். 

*  முக்கியமாக மருத்துவ ரீதியாக மட்டுமே, அது மருந்துகளின்மூலம் அல்லது கவுன்செல்லிங் மூலமாகவோ குணபடுத்தகூடிய உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஆண்/பெண்ணுக்கு இருந்தால் அங்கே கண்டிப்பாக உடலின் மீதான திருப்தியின்மை ஏற்படக்கூடும். 

கணவன்/மனைவி அழகாக இருந்து மனதிற்கு பிடித்திருந்தும் 'உடலுறவில் ஈடுபட இயலாதவர்கள்' இருக்கிறார்கள் என்ற தகவல் ஆச்சரியமாக இருந்தாலும் அதுதான் உண்மை. வெளி உலகில் வலம் வரவும், திருமணம் ஆன புதிதில் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெருமைபட்டுக்கொள்ள உதவிய இந்த அழகு அடுத்து தொடர்ந்து வரும் வருடங்களில் உடலுறவுக்கு உதவுவது இல்லை. அப்போது அங்கே தேவை படுவது வேறு ஒன்று...! 

பாதை மாறி சென்று விடாமல் தன் துணையை பிடித்துவைத்துக் கொள்ளும் சூட்சமம் ஒன்று இருக்கிறது, அதுதான் தொடுதல் !! 

பரவசம் இதுவே !

ஆண்/பெண் இருவரின் உடலிலும் உணர்ச்சி மிகுந்த சில பகுதிகள் இருக்கின்றன அது நபருக்கு நபர் வேறு படும். ஒருவருக்கு இதழை தொட்டால் பரவசம் ஏற்படும், சிலருக்கு இடுப்பு, கை, கால் பாதம், கழுத்து, காது மடல், நெற்றி இப்படி இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். இதில் தன் துணையின் உணர்ச்சி பகுதிகள் எது என்று தெரிந்து வைத்துக்கொள்வது முழுமையான இல்லறத்திற்கு மிக அவசியம். உறவிற்கு உடல், மனம் ஒத்துழைக்காத போது இந்த மாதிரியான இடங்களை தொடுவதின்/வருடுவதின் மூலம் பரவச நிலையை அடையமுடியும். உடலுறவுக்கு தயாராவதற்கு முன்பும் இது மாதிரியான முன்விளையாட்டுகளில் ஈடுபடும் போது உடலுடன், மனமும் உற்சாகமடைந்து பரவசநிலையை எட்டிவிடும், அதன் பின் நடக்கும் உறவே ஒரு முழுமையான உறவாக இருக்கும்.

சில தம்பதிகள் உடலில் வேறு எந்த பிரச்சனையும் இன்றியும் உறவில் ஈடுபட இயலாதவர்களாக இருப்பார்கள். அவர்கள் இந்த மாதிரியான விளையாட்டில் மட்டும்  சில நாட்கள் (உறவு கொள்ளாமல் )ஈடுபட வேண்டும். இதிலும் ஒரு முழு இன்பத்தை அடைய முடியும். வெறும் தொடுதலின் மூலம் சில நாட்களை கழித்து விட்டு பின் முழுமையாக  உறவில் ஈடுபடும் போது, நிச்சயம் கணவன் மனைவி இருவருக்கும் ஒரு வித்தியாசமான புதுமையான அனுபவமாக இருக்கும். இதை நான் சொல்லலைங்க நம்ம வாத்சயனார் முதல் மேல் நாட்டு மருத்துவர்கள் வரை இது ஒரு சிகிச்சை முறை என்று ஒத்துகொண்ட ஒரு விஷயம். 

சூட்சுமம் எது என்று தெரிந்து, தெளிந்து இல்லறத்தை நல்லறமாக கொண்டு செல்லுங்கள்.....!  




தாம்பத்தியத்தில் தொடரும் அடுத்த பதிவு கணவன்/மனைவி பாதை மாற ஒரு காரணம் மன பொருத்தம் இல்லாமை.......காத்திருங்கள் !!


படங்கள் - நன்றி கூகுள்