நான் எப்பவும் பதிவுலகம் பத்தி பெருமையாக நினைச்சிட்டு இருப்பேன். கடந்த போஸ்டில் கூட போன வருடத்தில் இனிய நினைவுகள் என்றால் பதிவுலகம் வந்ததை பற்றிதான் எழுதினேன். இனி வருங்காலத்தில் பதிவுலகம் தான் பலரின் பார்வையில் இருக்கும் என்றே நினைக்க வேண்டியது இருக்கிறது. உதாரணமாக இங்கே வெளியிடப்படும் சினிமா விமர்சனங்கள் தான் ஒரு படத்தின் வெற்றியை நிர்ணயிக்க கூடிய அளவிற்கு போய்விடலாம். அத்தகைய பதிவுலகத்தின் தற்போதைய ஒரு நிலை வருத்தப்படும் நிலையிலேயே இருக்கிறது.
தரமான பதிவுகள்
பதிவுகளின் அளவு கோள் எப்படி நிர்ணயம் செய்ய படிக்கிறது என்பதில் நம்மிடையே ஒரு தெளிவு இல்லை, குழப்பமே மிஞ்சுகிறது. சிலர் ஹிட்ஸ் அதிகம் வாங்கி இருப்பதை பார்க்கும் மற்றவர் இது எப்படி அவரால் முடிகிறது...நாம இந்த மாதிரி அதிக ஹிட்ஸ் வாங்க என்ன செய்ய வேண்டும்...? ஒரு வேளை நாம எழுதுற பதிவு நல்லா இல்லையா...
மத்தவங்களுக்கு பிடிக்கலையா என்று என்னை கேட்கும் போது என்னிடம் பதில் இல்லை. இப்படி கேட்டவர்கள் கொஞ்ச நாளில் பதிவு எழுதவே பிடிக்காமல் ஒரு விரக்தியின் உச்சத்தில் போய் விடுவதும் நடக்கிறது இங்கே...?! எங்கேயும் ஒரு சின்ன அங்கீகாரம் இருந்தால் தான் வாழ்க்கை ரசிக்கும்...அது கிடைக்காத போது ஏற்படும் விரக்தி கொஞ்சம் ஆபத்தானது...மன உளைச்சலில் கொண்டு போய் விட்டு விடும்.
இந்த மாதிரியான ஆட்கள் நம்மளை மத்தவங்க கவனிக்கணும் என்பதற்காக மேற்கொள்ளும் ஒரு வழியே ஆபாசமான தலைப்புகளை வைப்பது, பதிவுகளிலும் அதிக பட்ச அநாகரீக வார்த்தைகளை சேர்ப்பது என்பது. தொடக்கத்தில் நல்லா எழுதிக்கொண்டு வரும் சிலர் இந்த ஹிட்ஸ் மோகத்தால் பாதை மாறி விடும் அபாயம் தற்போது அதிகரித்து இருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. ஒன்று அவர்கள் தங்கள் பாதையை மாற்றி கொள்கிறார்கள், இரண்டாவது தங்களது மோசமான பதிவுகளால் பிறரை அந்நிலைக்கு போக மறைமுகமாக தூண்டி விடுகிறார்கள். இது இரண்டுமே சரியல்லவே !!?
என் பிளாக் என் இஷ்டம் !
சிலரின் தவறுகளை நாம் சுட்டி காட்டினால் உடனே அவர்களின் இயலாமை இப்படி தான் வெளிப்படுகிறது , 'இது என்னுடைய தளம்...என் இஷ்டம் நான் எதையும் எழுதுவேன்...உனக்கு பிடிச்சா வா...இல்லைனா வராத...' இப்படி சொல்லி சமாளிக்கிறது சரிதான்.
'எனக்கு பிடிக்கல நான் வருவது இல்லை, ஆனால் பலரை வரவழைகிறதே உங்களின் கவர்ச்சிகரமான தலைப்புக்கள், பதிவுகள்...?!' வாசகர்கள் எல்லோருமே ஆபாசத்திற்கு அடிமைகள் , இதற்கு மட்டும் தான் லாயக்கு என்ற உங்களின் கண்ணோட்டத்தை மாற்றுங்களேன். உங்கள் ஹிட்ஸ் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக நஞ்சை ஆழமாய் விதைத்து, நீரூற்றி வளர்த்து விடாதீர்கள் தயவு செய்து. (களைச் செடிகள், விஷச் செடிகள் தான் விரைவில் வளர்ந்துவிடும்...? இது இயற்கை !! )
சில விமர்சனங்கள்
விஷயம் இருக்கிறவங்க எழுதுறாங்க திறமை இல்லாதவங்க ஏன் பொறாமை படுரீங்கனு கூட ஒரு கேள்வி வரும். சரக்கு இருக்கிறவங்க எல்லாம் கொட்டினா பரவாயில்லை, ஆனா...??! தவிரவும் மக்களை திருத்தணும் என்று முடிவு பண்ணிட்டு யாரும் இங்கே எழுத வரல, முதல நாம சரியா இருக்கிறோமா இல்லையா என்றே தெரியாத போது நாம எப்படி மக்களை திருத்த முடியும்...?!
ஆபாசமாக எழுதுங்கள்
பெண்களை பத்தி கவர்ச்சியா எழுதியோ, ஆபாச வர்ணிப்பு, ஆபாச படங்களை போட்டு வாசகர்களை நீங்கள் இழுங்கள்...ஆனால் அதற்கு முன் ஒரு காரியம் பண்ணுங்கள், கூகிள்ல adult content warning என்கிற ஒரு வசதி இருக்கிறது அதையும் போட்டுடீங்கனா ஹிட்ஸ் இன்னும் அதிகமா அள்ளிட்டு போகும். நீங்களும் இந்த ஹிட்ஸ் சாதனை பத்தி பலரிடம் சொல்லி பெருமை பட்டுக்கலாம்...?!! 'பதிவர்கள்' என்கிற போர்வையில் சின்னத்தனமான வேலைகள் செய்வது அநாகரீகம்.
திரட்டிகள் என்ன செய்யும் ??
திரட்டிகள் என்பது பல பதிவுகளை ஒரே இடத்தில் சேர்த்து தருவது, மற்றும் பதிவர்களை ஊக்கபடுத்துவதற்காக இந்த வார சிறந்த பதிவர்கள் என்பது போல் தேர்ந்து எடுத்து வெளியிடுகிறார்கள். இதில் தவறு என்ன இருக்கிறது ? திரட்டிகள் எதன் அடிப்படையில் இதை முடிவு செய்கிறார்கள் என்பதை விட இது போன்ற திரட்டிகளை சில பதிவர்கள் தங்கள் விருப்பப்படி தங்கள் பக்கமாக திருப்பி கொள்கிறார்கள் என்பதே என் கருத்து. திரட்டிகளையும் அவர்கள் வழிக்கு கொண்டு செல்கிறார்கள்.
ஒரு போஸ்ட் போட்டவுடன் 'போஸ்ட் போட்டு இவ்வளவு நேரம் ஆச்சு, ஏன் வோட் அதிகம் வரல' என்று தங்கள் மனதை போட்டு குழப்பி கொள்ளும் ஒரு சிலரை பார்க்கும் போது எனக்கு பரிதாபமே மிஞ்சுகிறது. அதற்கு மாறாக எழுத்தை ஒரு வேதமாக சுவாசித்து பலவாறு சிந்தித்து எழுதும் பதிவர்கள் இந்த வோட் பற்றி எல்லாம் நினைப்பதே இல்லை...எதிர்பார்ப்பதும் இல்லை...இந்த மாதிரியான பதிவர்கள் தான் அநேகம் பேர் இருக்கிறார்கள்.
வேண்டுகோள்
உங்கள் தளம் எதையும் எழுதிட்டு போங்க, ஆனால் ஹிட்ஸ் புராணம் பாடி பிற பதிவர்களின் மனதையும் அவர்களின் எழுத்தையும் நோகடிக்காதீர்கள்.
எந்தவொரு பதிவுக்கும் நல்லா இருக்கு, அருமை இந்த மாதிரி டெம்பிளேட் கமெண்ட் வருவதை விட காரசாரமான கருத்துக்களை பின்னூட்டமாக பார்க்கும் போது தான் பதிவின் வீரியம் எந்த அளவிற்கு சென்றடைந்து இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதனால் ஹிட்ஸ் பத்தி கவலை படுவதை விட்டு விட்டு நல்ல விசயங்களை எப்படி எழுதலாம் என்பதை பற்றி நினைப்பது ஆரோக்கியமான மன நிலைக்கு நல்லது.




