செவ்வாய், செப்டம்பர் 14

எதிலும் அவசரம் எங்கு போய் முடியும் ?! தாம்பத்தியம் பாகம் - 17





முதல் நாள் இரவில் புதுமண தம்பதியினர்  எந்த அளவிற்கு புரிதலுடன் நடந்து கொள்கிறார்கள் அந்த அளவிற்குதான் தொடரும் நாட்கள் அமையும்.  அன்றுதான் உறவு நடக்கணுமா....?  ஒருவரை ஒருவர் புரிந்துக்கொண்ட பின் நடப்பதே பெரும்பாலும் சரியாக இருக்கும் என்று இதற்கு முந்தைய  முதல் இரவு கட்டுரையில் பகிர்ந்தேன்.  ஆனால் ஒருவேளை அப்படி நடக்காமல் இருந்திருந்தால் அதன் பின் விளைவுகள் கொஞ்சம் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கின்றன என்பதையும் மறுக்க முடியவில்லை.

இன்றைய திருமண முறை

நம்முடைய இந்த திருமண முறை  இன்னும் எவ்வளவு காலம் நடைமுறை வழக்கத்தில் இருக்கும் என்ற  நம்பிக்கை இல்லை. ஒரு பெண் எதிர்பார்க்கும் உடல், மனம் , அறிவுச்  சார்ந்த அனைத்துத்  தேவைகளையும் பூர்த்திச்  செய்யக்கூடிய அளவுக்குரிய ஆண் அவளுக்கு திருமணத்தின் மூலம் தேவைப்படுகிறது. ஆனால் இப்படிப்பட்ட ஒருத்தரை தேர்ந்தெடுக்கக் கூடிய தகுதி பெற்றோருக்கு இருக்குமா என்பது  சந்தேகமே. அந்த காலத்தில் ஒரு சமூக கட்டமைப்பு இருந்தது. பெற்றோர் விரும்பிய துணையுடன் மணம்  புரிந்தார்கள், உடல் கலந்தார்கள், மனம் ஒருமித்து வாழ முயற்சித்தார்கள் . ஆனால் இப்போதும்  அதே சமூக எண்ணம் தான் இருக்கிறது, ஆனால் தலைமுறையினர் மாறிவிட்டனர். 

தெரிந்த உறவினரின் மகனின் திருமணம் சில மாதங்களுக்கு முன்பு  வெகு விமரிசையாக நடந்தேறியது.  திருமணமும் 10 நாளில் பெண் முடிவுச் செய்யப்பட்டு முதல் நாள் நிச்சயதார்த்தம் மறுநாள் கல்யாணம் என்று குறுகியக் காலத்திற்குள் முடிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. மணமக்கள் இருவரும் நன்கு படித்தவர்கள்...நல்ல வேலையிலும் இருப்பவர்கள்...இருவரின் முழு சம்மதத்தின்  படி  தான் திருமணம் முடிவு செய்யப்பட்டது...

ஒரே மகன் என்பதால் திருமணம்  தொடர்பான பத்திரிகை அடிப்பது, உறவினர்களுக்கு கொடுப்பது, மண்டபம் பேசி முடித்தது உள்பட அனைத்து வேலைகளையும் மணமகன்  இழுத்துப்  போட்டு பார்த்தார். திருமணம் முடிந்த அன்று மறுவீடு சடங்கு எல்லாம் முடிந்து மணமக்கள் வீடு திரும்ப இரவு 11 மணி ஆகிவிட்டது.  பின்னர் இருவரும் தனியறைக்கு அனுப்பப்பட்டனர்.....

ஆனால் காலையில் மணப்பெண் கோபமாக அறையில் இருந்து வெளியில் வந்தாள், பலரும் காரணம் கேட்டதுக்கு கொஞ்சமும் யோசிக்காமல், 'எனக்கு பையனை பிடிக்கவில்லை...அவன் ஆம்பளையே இல்லை ' என்று மட்டும் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள். அவளது பெற்றோர் எவ்வளவோ சொல்லியும், 'உங்களுக்கு ஒன்றும் தெரியாது என் வாழ்க்கை முடிந்து விட்டது, இனி ஆக வேண்டியதைப்  பாருங்கள்' என்று ஒரே போடாய் போட்டு விட்டாள்.

முந்தினநாள் இரவு அப்படி என்னதான் நடந்தது என்றால், ஏற்கனவே மணமகன் கல்யாண வேலையாலும், பிரயாணக்  களைப்பினாலும் சோர்ந்து இருந்திருக்கிறார்...நேரமும் அதிகமாகி விட்டதால், பெண்ணிடம் தனக்கு களைப்பாக இருக்கிறது, தூங்க வேண்டும் என்று கூறி விட்டு இவள் பதிலுக்கு கூட காத்து இருக்காமல் தூங்கிவிட்டார். ஆவலுடன் அந்த இரவை எதிர்பார்த்து இருந்த மணமகள் வெறுத்துப்  போய் இருக்கிறாள். இதுதான் நடந்தது  

இப்போது நாலு மாதம் ஆகிறது விஷயம் கோர்ட்டு படி ஏறி...??!

(இந்த விசயத்திற்கு குறைச்  சொல்ல பெண்தான் கிடைத்தாளா என்று நினைக்காதீர்கள். பொறுமையாக, நிதானமாக இருக்க வேண்டிய பெண்களே இப்படி புரிந்துக் கொள்ளாமல் நடக்கிறார்கள் என்றால் ஆண்களைப்  பற்றி சொல்ல வேண்டியதே இல்லை ) 

எதிலும் அவசரம்...எங்குதான் போய் முடியும் ...??

குழந்தை பிறந்த இரண்டரை வயதிலேயே  படிக்க அனுப்புவதில் இருந்து கல்லூரியில் சேர்ப்பது , வேலை தேடுவது என்று எதிலும் அவசரம்...உணவிலும் கூட பாஸ்ட் புட், நிற்க கூட நேரம் இன்றி எதிலும் வேகம் வேகம் அனைத்திலும் வேகம்....??!  

சீக்கிரமே எல்லாவற்றிலும்  தம் பிள்ளைகள் வல்லவர்களாக மாறிவிட வேண்டும் என்கிற பெற்றோர்களின் ஆவலுடன் இணைந்த அவசரம்....!!  எதிர்பார்ப்புகள் விரைவாக நிறைவேறணும்  என்ற இன்றைய தலைமுறையினரின்  கட்டுக்கடங்காத வேகம் கடைசியில் 'ஆயிரம் காலத்து பயிர்' என்று நம் வீட்டு பெரியவர்கள் சொல்லி வந்த கல்யாணமும் விரைவாகவே முற்றும் போடக்  கூடிய அளவில்  வந்து நின்றுவிட்டது. 

நான் சொன்ன இந்த உதாரணம் போல் பல இருக்கலாம். ஆனால் அவற்றில் பல  இன்னும் செய்திதாள்கள், பத்திரிகைகள் வரை வரவில்லை, விரைவில் வரக்கூடிய அளவில் தான் விசயத்தின் தீவிரம் இருக்கிறது. 

ஒரே நாளில் எப்படி ஒரு முடிவுக்கு சுலபமாக வரமுடிகிறது என்றே புரியவில்லை. இந்த விவகாரத்தை வைத்து மட்டும் பார்த்தோம் என்றால் அந்த காலம் மாதிரி இருட்டு அறையில் நடப்பதை முதலில் கவனிப்போம்... அப்புறம்  மெதுவாக ஒருவருக்கு ஒருவர் புரிந்துக்  கொள்ளலாம் என்ற முடிவுக்கு வரலாம் என்பது போல் இருக்கிறது அல்லவா..??

பெண்களில் சிலர் இந்த மாதிரி நிதானமாக நடந்துக்  கொள்ளாமல் இருப்பதாலும், சில ஆண்கள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவசரப்படுவதாலும் தான்  ஆரம்பமே அலங்கோலமாகி  விடுகிறது.  இன்னும் பல காலம் சேர்ந்துத்  தான் இருக்கப்  போகிறோம் என்கிறபோது எதற்கு இந்த தேவை இல்லாத அவசரமும் ஆர்ப்பாட்டமும்.....?!

திருமணத்தை எதிர் கொள்ளும் அனைவருக்குமே எல்லாம் தெரியும் என்று சொல்ல முடியாது. 60 வயதை கடந்தவர்களுக்கு கூட முழு அளவிலான தெரிந்துக்  கொள்ளுதல் இல்லை என்றே சொல்ல முடியும். வெறும் 10 , 20 நிமிடங்களில் மட்டும் முடிந்து விடுவதல்ல அந்தரங்கம் என்பதும்...இயல்பாகவும் மெதுவாகவும் கையாளும் போதே அதன் அனுபவங்கள் புதுமையாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்/இருப்பதை உணரமுடியும்.      

தாம்பத்தியத்தின் ஆயுட்காலம் 

ஒரு மகிழ்ச்சியான, ஆரோக்கியமான தம்பதிகளுக்குள் எத்தனை வயது வரை உறவு நீடிக்கிறது என்று கேட்டால் 70 வயது வரை என்று பதிலளிக்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு.  அந்த காலத்தில் தாம்பத்திய உறவு என்பது குழந்தை பெற்றுக்கொள்வதற்கான ஒரே வழி என்று இருந்தது. அவர்களை பொருத்தவரைக்கும் இது 'இருட்டறைக்குள் நடக்கும் ஒரு நிகழ்வு' மட்டுமே. 

ஆனால் இன்றைய காலகட்டத்தில் கணவன், மனைவி இருவரும் தங்களை ரிலாக்ஸ் செய்துக் கொள்வது மிக அவசியமாகிறது. "உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், டென்ஷன் குறைய நீங்கள் எந்த டாக்டரையும் தேடி ஓடவேண்டியது இல்லை, உங்கள் துணையை நாடுங்கள்" என்பதே மருத்துவர்களின் முக்கியமான அறிவுரை.    

"வேலை பிரச்சனைகள், வீட்டு பிரச்சனைகள் எதையும் தங்களது அறைக்குள் நுழையவிடாமல் வாழ்க்கை துணையை அன்பாக நடத்தியும், ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறிக்கொள்ளும் தம்பதிகளுக்கு, மன அழுத்தத்திற்கு காரணமான 'கார்டிசால்' என்ற ஹார்மோன் குறைவான அளவிலேயே சுரக்கிறது. இந்த கெட்ட ஹார்மோன் சுரப்பதைக்  கட்டுப்படுத்துவது 'ஆக்சிடோசின்' என்ற ஹார்மோன். இந்த ஆக்சிடோசின் கணவன், மனைவி உடல் உறவின் போதே அதிக அளவில் சுரக்கிறது என்பது  அறிவியல் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும் 'மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சில தம்பதிகளுக்கு இடையே நெருக்கத்தை உருவாக்கியப் பிறகு அவர்களது மன அழுத்தம் பெருமளவு குறைந்ததாகவும்' ஆய்வுகள்  கூறுகின்றன.

இந்த மாதிரியான விசயத்தில் ஒரு சிலர் காட்டும் அலட்சியம், குடும்பத்தை எப்படி எல்லாம் சீர்குலைக்கிறது என்பதை எண்ணும்போது தான் இந்த உறவின் அவசியத்தை தம்பதியினருக்கு வலியுறுத்தவேண்டி இருக்கிறது.

தாம்பத்தியம் தொடரில்  இனி அடுத்து வருவது......

கணவன் அல்லது மனைவி இருவரில் ஒருவர் இந்த உறவிற்கு விரும்பி அழைக்கும் போது மற்றவர் மறுப்பது என்பது இன்று பெரும்பாலோரிடம் சாதாரணமாக காணப் படுகிறது. அப்படி 'உறவு மறுத்தல்' என்பதால் ஏற்படக்  கூடிய விளைவுகள் என்ன என்பதையும் , அதனை எப்படி எதிர் கொள்ளலாம் என்பதையும் அடுத்த பதிவில் பார்போம்.      



வியாழன், செப்டம்பர் 2

அவசர உலகில் நம் குழந்தைகள் - தொடர்ச்சி


இளம் பெற்றோரின் நிலை  

இதுவரை இருந்த தலைமுறையினருக்கு இல்லாத கஷ்டங்கள் இப்போதுள்ள இளைய  தலைமுறையினருக்கு உள்ளது. ஒன்று நல்லதா, கெட்டதா என்று பிரித்து சொல்ல கூட்டுக்குடும்பம் இல்லை.  பெரியோர்களின் வழிகாட்டுதல் இல்லாமல் சில நேரம் தடுமாறி விடுகின்றனர் .  

தங்கள் வரவேற்பறையில் வந்து விழுபவை எத்தகையவை என்பதை தரம் பிரிக்க இயலாதவர்களாகி விடுகின்றனர்.  தங்களை சுற்றி கலர் கலராய் நல்லதும், கெட்டதும் வலம் வரும்போது, அதையும் தாண்டி ஒழுக்கத்துடனும், முறையுடனும் வாழ்வது என்பது சவாலான விசயம்தான். அந்த சவாலை வெற்றிகரமாக பல இளம் தம்பதியினரும் சமாளித்து வருகின்றனர் என்பது ஆறுதலான விஷயம்.

இதே மாதிரியான சூழ்நிலையில் தங்களது குழந்தைகளை வளர்ப்பது என்பது அதைவிட மிகவும் கடினமான சவால்தான்.

பெண்களும் இப்போது வேலைக்கு செல்வதால், தன் வீட்டு வேலை, பணியின் சுமை , வேலை நேரத்தில் தங்கள் சகாக்களுடன் ஏற்படும் உறவு, உரசல், விரிசல் இதனால் ஏற்படும் மன அழுத்தம், மன உளைச்சல், உடல் சோர்வு போன்றவற்றையும் மீறி குழந்தைகளை கவனித்து வளர்ப்பது அவ்வளவு சுலபம் இல்லை.

குழந்தைகளின் எதிர்பார்ப்புகள்

குழந்தையின் வளமான வாழ்க்கைக்கு மிக முக்கியமான அடித்தளமே குழந்தைக்கும்,  அதன் பெற்றோருக்கும் இடையிலான உறவுதான் தீர்மானிக்கிறது.

*  எல்லா குழந்தைகளுமே தங்கள் பெற்றோரிடம் அன்பு, அரவணைப்பு, உணர்வு ரீதியான பாதுகாப்பு ஆகியவற்றை எதிர்ப்பார்கிறது. அது ஏமாற்றத்தில் முடியும்போது  தான் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுகின்றன. 

*  தங்களின்  பெற்றோர்கள் தங்களுடைய சிறு சிறு விருப்பங்களையும் நிறைவேற்ற   வேண்டும் என்று எதிர்பார்க்கும் அதே நேரத்தில் அதை காதுகொடுத்து கேட்கவாவது செய்யவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு.

* தங்களின் சிறு செயல்களையும் பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்கின்றனர். அது விளையாட்டாகவோ, படிப்பு மற்றும் எந்த விசயமாக இருந்தாலும் சிறு அங்கீகாரத்தை எதிர்பார்கிறார்கள் நம் பிள்ளைகள்.

*  தங்களின் ரோல் மாடலாக ஆண் குழந்தை தந்தையையும், பெண் குழந்தை தன் தாயையும் கொண்டு வளருகிறார்கள் . சிறந்த பெற்றோராய் தங்கள் பெற்றோரும் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் அதிகபட்ச எதிர்பார்ப்பு.

கிரச் (குழந்தைகள் காப்பகம்)

வேலைக்கு செல்லும் பெற்றோர் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை கிரச்சில்  விட்டு செல்கின்றனர். வார  இறுதியில் மட்டுமே தன் தாயுடன் முழு பொழுதையும் கழிக்கிறார்கள். தாயின் அன்பையும் அரவணைப்பையும் சிறு பிராயத்தில் இழந்து விடுவதால் அவர்கள் கண்களில் ஒரு ஏக்கம் நிரந்தரமாக தங்கி விடுகிறது. 

இதைவிட வீட்டு பெரியவர்களிடம் விட்டு செல்லப்படும் குழந்தைகள் நல்ல அன்பான கவனிப்பில் வளருகிறார்கள். ஆனால் பல வீடுகளில் பெரியோர்கள் இல்லாத நிலைதான் நிலவுகிறது. தங்கள் குழந்தைகளின் நன்மையை கருதியாவது பெரியோர்களை வீட்டில் இருக்க செய்வது அல்லது அவர்களுடன் இணைந்து வாழ்வது வேலைக்கு செல்லும் இளம் பெற்றோருக்கு நன்மையாக இருக்கும்.

சில ஆலோசனைகள்

*  உங்கள் விருப்பங்கள், கனவுகளை அவர்களின் மீது திணிக்காதீர்கள். LKG  படிக்கும் போதே டாக்டர் ஆகவேண்டும், இன்ஜீனியர் ஆகவேண்டும் என்பது போன்ற கனவுகளை விதைக்காதீர்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்தன்மை இருக்கும். வளர வளரத்தான் தான் என்னவாக  வேண்டும், எத்துறையில் சாதிக்க வேண்டும் என்பது பிடிபடும். அதை விடுத்து ஒன்றை மட்டுமே நாம் சொல்லி வளர்க்கும் போது பிற துறைகளில் அவர்களின் கவனம் செல்வது தடுக்கப்படுகிறது. அவர்களின் தனித்தன்மையும் பாதிக்கப்பட்டு, உங்களின் கனவும் நிறைவேறாமல் தடுமாறி போக கூடிய சூழ்நிலை ஏற்பட்டு விடும். 

*  வாய்ப்புகளை மட்டும் நீங்கள் ஏற்படுத்தி கொடுங்கள்....இன்றைய குழந்தைகள் மிக புத்திசாலிகள் சாதிப்பார்கள்....அவர்களுக்கு  போடப்பட்ட கனவு கைகட்டுகளை அவிழ்த்து விடுங்கள்.  தன் வாழ்கையை தாங்களே நிர்ணயிக்க கூடிய உரிமையை வளரும் பிள்ளைகளுக்கு கொடுங்கள், அதற்கு தேவையான உதவிகளை மட்டும் நீங்கள் செய்யுங்கள்.

*   முக்கியமாக ஒரு குழந்தையை ஓயாமல் விளையாட கூட விடாமல் படி படி என்று வற்புறுத்தும் போது அந்த பிள்ளை இப்படித்தான் பதில் சொல்லும், " படிக்கச்சொல்லி வற்புறுத்தி உட்கார வைத்தாலும் நான் மனம் வைத்து முயன்றால் தானே படிக்க முடியும். இப்ப கொஞ்சம் நேரம் விளையாடனும் போல் இருக்கிறது, விளையாடிவிட்டு வந்தால் ரிலாக்சாக  பீல் பண்ணுவேன். அப்புறம் படித்தால் மனதில் நன்கு பதியும். SO LET ME GO  TO PLAY "  இதுதான் நம் எல்லோருக்குமான பதில். நாம் தலை கீழாய் நின்றாலும் படிக்க வேண்டியது அவர்கள்தானே....நிதர்சனம் இதுவே...!! 

அதிக கண்டிப்பு இப்போது வேலைக்கு ஆகாது. ரொம்ப கண்டித்தால் 'சரிதான் போங்கள்' என்று அசால்டாக போய்ட்டே இருப்பார்கள்.


வழி முறைகள்

பெரிதாக ஒன்றும் இல்லை ஒரே ஒரு திட்டமிடல் மட்டுமே போதும் குழந்தைகளை நன்றாக வளர்ப்பதற்கு.  தினம் கிடைக்கும் கொஞ்ச நேரத்தையும் உங்கள் குழந்தைகளுடன் செலவு செய்யுங்கள் என்னதான் வேலை , பிசி என்றாலும் தினம் கொஞ்ச நேரம் அவர்களுடன் மனம் விட்டு பேசி சிரித்து பாருங்கள் உங்களின் அன்றைய மொத்த டென்ஷனும் பறந்து போகும். குழந்தைகளும் உற்சாகமாக  பள்ளியில் நடந்த விசயங்கள் அனைத்தையும்  உங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். இதன் மூலம் கிடைக்கக்கூடிய பெரிய நன்மை என்னவென்றால் அவர்களின் நடவடிக்கைகள் நல்லவை , கெட்டவை  இரண்டையும் தெரிந்து கொள்ள முடியும். அந்த தனிப்பட்ட நேரத்தில் சில நற்பண்புகளையும் அவர்கள் மனதில் சுலபமாக விதைத்து விட முடியும்

" சரியான திட்டமிடுதலும், முன் யோசனையும் மட்டும் இருந்தால் போதும் வேலையையும் இழக்காமல் , உங்கள் குழந்தைகளையும் நன்கு கவனித்து வெற்றிகரமாக வாழ்க்கையில் பேலன்ஸ்   பண்ண முடியும் " 

" நேரத்தை கொஞ்சம் அவர்களுக்காகவும்   கொடுங்கள்,  நம் குழந்தைகள் தானே சந்தோசமாக  இருந்துவிட்டு போகட்டுமே ".


   

வியாழன், ஆகஸ்ட் 26

அவசர உலகில் நம் குழந்தைகள்



ஒரு சமுதாயம் நல்ல விதத்தில் இருப்பதற்கு இன்றைய குழந்தைகளின் வளர்ப்பு மிகவும் அவசியம், இவர்கள் தான் நாளைய சமுதாயம். அதனால் இந்த விசயத்தில் நாம்  அசட்டையாக இருக்காமல் இன்னும் அதிகமாக கவனம் எடுத்து கொள்வது காலத்தின் கட்டாயம்.    




இன்றைய அவசர உலகத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன்  செலவு செய்யும்  நேரம் மிகவும் குறைவு தான். குழந்தைகள் நம்முடன்  வீட்டில் இருக்கும் நேரத்தை விட ஸ்கூல், டியூஷன், playground , டான்ஸ் கிளாஸ், மியூசிக் கிளாஸ்  இந்த மாதிரி இன்னும் பல காரணங்களால் வெளியே தான் பல நேரத்தை செலவு செய்கிறார்கள். வீட்டில் இருக்கும் கொஞ்ச நேரத்தையும் தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ் போன்ற பொழுதுபோக்கு சாதனங்கள் அவர்களை ஆக்கிரமித்து கொள்கின்றன.


பெற்றோர்களும் நம்மை தொந்தரவு செய்யாமல்  விட்டால் சரி தான் என்று விட வேண்டியதாகி விடுகிறது. பெற்றோர்களையும் குறை சொல்ல முடியாது, பெரும்பாலான இளம் பெற்றோர்களில்  இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருப்பார்கள், அலுவலக களைப்புடன் வீட்டில் உள்ள வேலைகளையும் செய்ய வேண்டி இருப்பதால் சோர்ந்து விடுவார்கள். தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ளவே அவர்களுக்கு நேரம் கிடைப்பது இல்லை. இதில் குழந்தைகளுடன் இருக்க இயலாத நிலையே உள்ளது.

ஆனால் இதையே காரணமாக சொல்லி தங்களை தாங்களே சமாதானம்  செய்து கொள்வது சரி இல்லை.

சமுதாயதிற்கு நல்ல பிள்ளைகளை கொடுப்பது உங்கள் கடமை.  ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்ககூடிய 'தார்மீக பொறுப்பு' இளம் பெற்றோருக்கு இருக்கிறது. நம்முடைய அன்பான, கண்டிப்புடன் கூடிய அரவணைப்பில் வளராத பிள்ளைகளின் எதிர்காலம் நிச்சயமாக சுபிட்சமாக, வளமாக இருக்காது !!


'குழந்தை வளர்ப்பு பற்றிய திட்டமிடல்' இப்போது கண்டிப்பாக தேவை படுகிறது. குழந்தைகளை நோய்கள், விபத்துகள் இவற்றில் இருந்து பாதுகாத்து வளர்க்கணும்... நல்ல பழக்க வழக்கங்களை கற்று கொடுக்கணும், படிப்பு மற்றும் பள்ளி சம்பந்தமான விவகாரங்களை பார்த்துக்கொள்ளவேண்டும். இது மாதிரி இன்னும் பல உள்ளன..அவற்றை சொல்லி கொண்டே போகலாம். இந்த மாதிரியான விசயங்களை  பெற்றோர்கள் நேரடியாக கண்காணித்து வளர்க்க வேண்டும். அப்போதுதான் அடுத்த தலைமுறை ஆரோக்கியமானதாக  உருவாகும்.      

சர்வதேச கணக்கெடுப்பு ஒன்று சமீபத்தில் எடுக்கப்பட்டது. அதை படிக்கும் போதுதான் இன்றைய நமது நிலை அதிர்ச்சி அளிக்கிறது...அந்த விவரங்கள் கீழே.....

*  பெற்றோர் இருவரும் வேலை பார்க்கும் சராசரி குடும்பங்களில் ஒரு வாரம் முழுமைக்கும் ஒட்டுமொத்தக் குடும்பமும் ஒன்றாக இருந்து செலவழிக்கும் நேரம் வெறும் 45 நிமிடங்கள் மட்டும்தானாம்....??!!

*   சுமார் 5 முதல் 16  வயதுக்குட்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒருவர் வாரத்துக்கு இரண்டு நாள்களாவது தம் பெற்றோரை பார்க்காமலேயே உறங்கச் செல்கிறார்களாம்...??!

*   வெறும் 20 சதவீத குடும்பத்தினர்தான் வாரத்துக்கு ஒரு நாளோ இரண்டு நாட்களோ குடும்பத்துடன் மொத்தமாக அமர்ந்து காலை உணவோ மதிய உணவோ அல்லது இரவு உணவோ உட்கொள்கிறார்கள்...??! 

*   கிட்டத்தட்ட இரண்டாயிரம் பெற்றோரிடம் கணக்கெடுப்பு  நடத்தியதில் 50 சதவீதத்துக்கும் அதிகமான பெற்றோர் ஒத்து கொண்ட  ஒரே  கருத்து , 'தங்கள் குழந்தைகளின் ஒரே பொழுது போக்கு, தொலைக்காட்சி, கம்ப்யூட்டர் போன்ற நவீன சாதனங்கள்தான் ' என்பது தானாம்.....!!?

இது நிச்சயம் ஆரோக்கியமான சூழ்நிலை இல்லை. என்ன செய்ய போகிறோம் பெற்றோர்களே...!!? 

நாம் எல்லோருமே வாழ்கையில் நம் குழந்தைகளுக்கு மிக சிறந்த விசயங்கள் எல்லாவற்றையும் கிடைக்க செய்ய  வேண்டும் என்று தானே விரும்புவோம்..அப்படி நல்ல விசயங்களை கொடுத்து வளர்க்க செய்ய சில நல்ல வழி முறைகள் இருக்கின்றன. 

அவை என்ன வென்று தொடர்ந்து அடுத்த பதிவில் பார்ப்போம்...  


         ௦      

செவ்வாய், ஆகஸ்ட் 24

'முதல் இரவு' - தாம்பத்தியம் - பாகம் 16

இதற்கு முந்தைய பதிவைப்  படிக்காதவர்கள்,


தாம்பத்தியம் பாகம் 15 படித்து விட்டு வந்தால் தொடர்ச்சிப்  புரியும் என்று நினைக்கிறேன். 

தாம்பத்தியத்தின் முக்கியக்  கட்டமாகிய அந்தரங்கம் பற்றியது தான் இனி வரும் பதிவுகள். நான் ஏற்கனவே சொன்னதைப்   போல் பல குடும்பங்களின் தலையெழுத்து அங்கே நடக்கும் விவகாரங்களை வைத்தே  எழுதப்படுகிறது. ஆனால் பல குடும்பங்களிலும் இதை ஒரு பொருட்டாகவே நினைப்பது இல்லை.

இதைவிட முக்கியம் வேறு ஒன்றும்  இல்லையா என்பதே...? முக்கியமானதில்,  இதுவும் ஒன்று அவ்வளவுதான்.  'பல ஊடலும்  சரியாவது, கூடலில்  தான்' அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றை ஏனோ பலரும் சரிவர கையாளுவது இல்லை.  ஒரு கணவன்,  மனைவி ஆகிய இருவரின் புரிதல் அங்கிருந்தேத்  தொடங்குகிறது...

முதல் நாள் இரவு

சாந்தி முகூர்த்தம் என்றால் " காதலில் துடித்துக்கொண்டிருந்த உள்ளம், ஆசைகளை அடக்கிக் கொண்டிருந்த உடம்பு அன்றைக்கு சாந்தி அடைகிறது " என்பது தான் அதன் அர்த்தம் என்று பெரியவர்கள் சொல்வார்கள்

ஆனால் முதல் நாளே நடந்துதான்  ஆகவேண்டுமா  என்பதுதான் இப்போதைய காலக் கட்டத்தை மனதில் வைத்து எழும் கேள்வி.

இருவேறு கலாச்சாரம், குடும்பச்  சூழ்நிலையில் பிறந்து வளர்ந்த ஆண், பெண் இருவரையும் திருமணம் என்ற பந்தம் இணைக்கிறது என்பது அற்புதமான ஒரு நிகழ்வு.  மாறுபட்ட எண்ணங்கள், வேறுபட்ட உணர்வுகள் என்று வளர்ந்த இருவரையும் அந்த ஒரு நாள் இணைக்கிறது. ஒருவருடைய  விருப்பு, வெறுப்பு என்னவென்று மற்றொருவருக்கு அந்த ஒரே  நாளில் எவ்வாறு  தெரிந்துக்கொள்ள முடியும்.  அப்படி எதையும் தெரிந்துக் கொள்ளாமல் புரிந்து கொள்ளாமல், உணர்வுகள் கலக்காமல் வெறும் இரு உடல்கள் மட்டும் கலப்பது என்பது ஒரு வித ஆர்வகோளாரில்  கொண்டுப் போய்விட்டு விடுகிறது ...??

தவிரவும் பல வருடங்களாக ஒன்றாக வாழ்ந்த தம்பதிகள் கூட இன்னும் ஒருவரின் ஆசைகள், தேவைகள், எண்ணங்கள் என்ன என்றேப்  புரியாமல் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது காலையில் தாலி கட்டி பின் அன்று இரவுக்குள் அவர்களுக்குள் எப்படி புரிதல் வந்து இருக்க முடியும் ?? அப்படி கொஞ்சம் கூட வந்திருக்க முடியாத சூழ்நிலையில் எப்படி அவர்களால் ஒருமித்து ஒன்று கலக்க முடியும். அப்படியே சேர்ந்தாலும் அது எப்படி முழுமைப்  பெற்றதாக இருக்கமுடியும்...??  அவசர கோலத்தில் அள்ளித்  தெளித்த ஒன்றாகத்தான் முடியும்.

அது இருவரில் ஒருவரின் ஏமாற்றத்தில் கூட முடிந்து விடலாம், அந்த ஏமாற்றம் வாழ்வின் இறுதி வரை கூட தொடரக்கூடிய வாய்ப்புகள்  இருக்கிறது. " first impression is the best impression " என்று சொல்வார்கள். அதனால் மிகவும் சென்சிடிவான இந்த விஷயத்தை கையாளுவதில் இருவருக்கும்  மிகுந்த கவனம் தேவைபடுகிறது.

நம் முந்தைய காலத்தில் பெரியவர்கள் நல்ல நேரம், காலம் பார்த்து இதனை நடத்தினர் . பிறக்க  போகும் குழந்தையை மனதில் வைத்து நேரத்தை முடிவு செய்தனர்.  அப்போது இருந்த ஆண், பெண் இருவருக்கும் எதிர்பார்ப்புகள் என்பது இப்போது இருப்பது போல் அதிகம் இல்லை. அதனால் பெரியோர்களின் வழி நடத்தலின் படி நடந்தார்கள்...., அதனால் இருவருக்கும் நடுவில் ஏதும் பிரச்சனை என்றால் அவர்கள் தலையிட்டுத்  தீர்த்து வைத்துவிடுவார்கள்.  அதனால் பிரச்ச்னை  அந்த நாலு சுவற்றுக்குள் மட்டுமே இருந்தன.

இந்த அவசர உலகத்தில் இருவரும் புரிந்துக்  கொண்டு கலப்பது மட்டுமே  தொடர்ந்து வாழ்க்கை நல்ல விதத்தில் பயணிப்பதற்கு உதவியாக இருக்கும்.

அன்றே முடியவேண்டும் என்பது கட்டாயமா??
என்ற  கேள்வி அவசியமா என்றால் அவசியமான கேள்விதான் . சில குடும்பங்களில் பிரிவினைக்கு அதாவது கருத்து வேறுபாட்டுக்கு  காரணம் என்ன என்று விரிவாக விசாரிக்கும் போது தான் தெரிகிறது. அவர்கள் சொல்லும் ஒரு வியப்பான பதில் , " அன்னைக்கு ராத்திரியிலேயே தெரிந்து விட்டது இவர் அல்லது இவளுடன் காலம் முழுக்க ஒற்றுமையாக இருக்கமுடியாது என்று...!! " .

அது எப்படி ஒரே இரவில் ஒருவர் சரி இல்லை என்ற முடிவுக்கு வர முடியும்...?? காரணம் ரொம்ப சுலபம். அங்கே தான் முழு வாழ்க்கைக்கும் தேவையான அஸ்திபாரம்   போடப்படுகிறது. அது அங்கே சரிவர போடப்படவில்லை என்றால் , வாழ்க்கை என்ற முழு கட்டிடமே ஆட்டம் கண்டுவிடும். அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றை நாம் ஏன் பேச தயங்க வேண்டும்...??

சில ஆலோசனைகள்

பூ மலரட்டுமே இயல்பாய்..!!

எதையும் முடிவுச்  செய்ய வேண்டியது திருமணம் முடிந்த அந்த 'புதுமண தம்பதிகள்' தான். இருவருமே ஒன்றில் தெளிவாக இருக்க வேண்டும்...அந்த அறைக்குள் செல்வதற்கு முன்பே 'நான்' என்பதை மறந்து விட்டு புது களி மண் போல மனதை வைத்துக்  கொண்டுச்  செல்லவேண்டும். படித்த படிப்பு, அந்தஸ்து, செல்வாக்கு, அழகு குறித்த பெருமை  அனைத்தையும் வெளியே விட்டு விட வேண்டும்....! (புது  மண்ணில் எழுதப்படும் எதுவும் நன்கு தடம் பதிந்து விடும், மேலும் புது மண்ணை வைத்து எதையும் செய்யமுடியும், பானை போலாகவோ அல்லது செங்கலாகவோ அல்லது  அழகான சிலையாகவோ ??  'எதை'  என்பது அவர்களைப்  பொறுத்தது).

தோழிகள், நண்பர்கள் என்று பலரும் சொல்லும் அறிவுரைகளை மனதில் வைத்து கொண்டுதான் பலரும் நடந்துகொள்வார்கள். ஆனால் உங்கள் நண்பர்கள், உறவினர்களையும் வெளியில் விட்டுவிட்டு செல்லுங்கள். இப்போது நீங்கள் தான் ஒருவருக்கு ஒருவர் நண்பர்கள், புதிதாய் பார்க்கும் நண்பர்களின் அறிமுகம் எப்படி இருக்குமோ அப்படி இருக்க வேண்டும் உங்களின் உரையாடல். அதுவே உங்களின் படபடப்பு, பயம், அச்சம், வெட்கம் அனைத்தையும் விரட்டும். உங்கள் மனமும், உடலும் அப்போதே உற்சாகமாகி விடும். தெளிவாக  தயக்கம் இன்றி பேசுங்கள்...

இங்கு ஒன்றை கட்டாயம் சொல்லியே ஆக வேண்டும். ஆணோ, பெண்ணோ தங்கள் துணையிடம் உண்மையாக இருக்க வேண்டும் என்று தங்கள் வாழ்வில் நடந்த, 'பிறரிடம் பகிர்ந்துக்  கொள்ளக்கூடாத' காதல் மாதிரியான சென்சிடிவான விசயங்களை சொல்லிவிடுவார்கள்.(பொய் சொல்ல சொல்றீங்களா  என்று நினைக்காதீர்கள்...உண்மையை சொல்லவேண்டிய அவசியம் இல்லை..அது இனி தொடரப்போகும் வாழ்க்கைக்கு முக்கியமும் இல்லை, தேவையும் இல்லை) காதல், ஈர்ப்பு போன்ற விசயங்கள் இப்போது சகஜமான ஒன்று. துணையிடம்  உண்மையைச்  சொல்கிறேன் பேர்வழி என்று கொட்டிவிட்டீர்கள் என்றால் முடிந்தது கதை.

எந்த ஒரு பெண்ணும், எந்த ஒரு ஆணும் தனது துணை இன்னொருவரால் காதலிக்கபட்டவர் என்பதை ஜீரணிப்பது என்பது சிரமம். அவர்களும் அந்த நேரம் பெருந்தன்மையாக ஏற்று கொள்வார்கள்  " இதுக்கு முன்னாடி நீ எப்படி இருந்தாலும் பரவாயில்லை, இனி உனக்கு நான் எனக்கு நீ " என்று கூட வசனம் பேசலாம்.  ஆனால் கொஞ்ச நாள் சென்றதும், இந்த உண்மை அவர்களின் மனதைக்  கண்டிப்பாக யோசிக்க வைத்து குழப்பும். சாதாரணமாக  வேறு யாரிடம் பேசினாலும் மனதில் கேள்வி குறி தோன்றும்..அப்புறம்  சந்தேகமாக உருவெடுக்கும்.......அப்புறம் என்ன உங்கள் நிம்மதி குலையும்.....தினம் போராட்டம் தான்.

அதனால் பழைய கதை பேசுவது இருவருக்குமே நல்லது இல்லை... எல்லோரின்  வாழ்விலும் ஏற்படக்கூடிய ஈர்ப்புதான் என்று ஒதுக்கி விட்டு இனி வாழப்போகும் பாதையை ஒழுங்குப்படுத்துவது தான் முக்கியம் என்ற திட  நம்பிக்கை கொண்டு கருத்துகளைக்  கவனமுடன் பரிமாறி கொள்ளுங்கள்.

இறுதியாக இருவரும் நன்கு பேசி ரிலாக்ஸ் ஆன பின்னர் உங்கள் அந்தரங்கம்  நடக்கட்டும் இயல்பாக.  ஆனால் கல்யாணக்  களைப்பில் இருவரும் இருந்தால் அந்த நாளை ஒத்திவைத்து விடுவது மிகவும் நல்லது.  இந்த இடத்தில் பெண்ணின் விருப்பம் கண்டிப்பாகக்  கேட்கப்பட வேண்டும். அவளின்  விருப்பம் இல்லாமல் எதுவும் நடப்பிக்கப்படுவதை இந்த விசயத்தில் எந்த பெண்ணும் விரும்புவது இல்லை. 

விருப்பம் இல்லை என்ற மாதிரி தெரிந்தால் பெரியக்  கட்டத்திற்கு போகாமல் சின்னச்சின்ன சீண்டல்கள், சில அன்பான வருடல்கள், மென்மையான சில முத்தங்கள் , ஆதரவான அணைப்பு இவற்றுடன் அந்த நாளை நிறைவுப்படுத்துங்கள். தன்னுடைய எண்ணத்திற்கும் கணவன் மதிப்புக்  கொடுக்கிறாரே என்று  எண்ணி நீங்கள் அவளின் மனதில் விரைவாய் குடியேறி விடுவீர்கள். முதலில் தனது துணையை  காதலிக்கத் (கற்றுக்கொள்ளுங்கள்)தொடங்குங்கள்...! அப்புறம் பாக்கலாம் மற்றதை...!!

அற்புதமான இந்த வாழ்க்கையை ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து சுவையானதாக மாற்றுங்கள். எல்லாம் அந்த ஒரு நாளில் மட்டுமே முடிந்துப்  போய் விடுவது இல்லை. அந்த நாள் ஒரு இனிய  தொடக்கம் மட்டுமே...இனி தொடரும் நாட்களில் மெது மெதுவாய் முன்னேறி அடுத்து  வெல்லுங்கள் அவளின் மனதையும், அழகையும்..... !

பின் குறிப்பு 

ஒருவேளை அன்றே நடக்கவில்லை என்றால் சில விரும்பத்  தகாத நிகழ்வுகள் அடுத்து நடக்கலாம்....??!!  அவை என்ன என்று அடுத்து தொடர்ந்துப் பார்க்கலாம்.

தொடர்ந்துப் பேசுகிறேன்... 
உங்களின் 'மனதோடு மட்டும்'💓
கௌசல்யா.     

திங்கள், ஆகஸ்ட் 23

நண்பர்களே ஒரு உதவி...!



இதை இந்த பதிவில்  படித்தேன். 



பூஜா என்ற இளந்தளிரை ஒரு கொடூரன் கடத்தி வந்து பிச்சை எடுக்க வைத்திருக்கின்றான்.  நாம் பல பேருந்து நிலையங்களில் பார்த்திருப்போம். குழந்தைகள் பிச்சையெடுப்பதை , கையில் தட்டினை வைத்துகொண்டு அவர்கள் கெஞ்சும்போது விழும் தட்டில் தானாகவே காசும் கண்ணீரும்..


பூஜாவை வைத்து பிச்சை எடுக்கும்போது அவன் கேரளா போலீசிடம் சிக்கியுள்ளான்.


பூஜா தற்போது திருவனந்தப்புரத்தில்  உள்ள நிர்மலா சிசு பவனில் சேர்க்கப்பட்டுள்ளாள்
போலீசார் அந்த பிச்சைகாரன் மூலம் குழந்தையின் இருப்பிடத்தை
கண்டறியலாம் என அவனிடம் விசாரிக்கும்போது , குழந்தையின் துரதிர்ஷ்டம்
அந்த பிச்சைக் காரனுக்கு வாயும் பேச முடியாதாம் காதும் கேட்காதாம்....


அந்த குழந்தை மழலை மொழியில் சொன்ன விபரங்கள்.:


தந்தை பெயர் : ராஜு  , தாயின் பெயர் : முன்னிதேவி ,
பிறந்த இடம் நாகலுப்பி ,
தனக்கு ஒரு அக்காவும் தம்பியும் இருப்பதாக கூறியுள்ளாள்.
விசாரித்துப் பார்த்ததில் அதுபோன்ற ஒரு இடம் யாரும்
கேள்விப் பட்டதாகவே தெரியவில்லை...

யாருக்கேனும் இந்த குழந்தைப் பற்றிய தகவல்கள் தெரிந்தாலோ.அல்லது குழந்தையைத் தேடும் பெற்றோர் பற்றி தெரிந்திருந்தாலும் கேரளாவில் உள்ள நிர்மலா சிசு பவனுக்கு தெரிவிக்கலாம்.
  தொலைபேசி  எண்   0471 - 2307434 
  இதைப் படிப்பவர்கள் தங்களால் முடிந்த வரை தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு தெரியப் படுத்துங்கள்.

 பதிவர்கள் அனைவரும் இதனை ஒரு இடுகையாக  இடலாமே...


இதன் மூலம் நிறைய  பேரை இந்தச் செய்தி சென்றடையும் என்று ஓர் நம்பிக்கை..


இதைப் படிப்பவர்கள் யாரும் அலட்சியப் படுத்த வேண்டாம்.எத்தனையோ தொடர் பதிவுகளைப் போடுகிறோம். ஒரு நல்ல காரியாத்துக்கு இதை செய்வோமே ?? இதனை forward  செய்ய எதுவும் நீங்கள் செலவழிக்க போவதில்லை.
உங்கள் நல்ல மனது மட்டுமே போதும்...


செய்வீர்களா நண்பர்களே.!!!!

புதன், ஆகஸ்ட் 18

கண்டனம் 3 - பெண்பதிவர் என்பவர்கள் இங்கே கேலி பொருளா...??


எனது இந்த கண்டனமும் பதிவுலகத்தை நோக்கியே தான்...??!! எங்கே நான் இருக்கிறேனோ அங்கே நிகழும் முறையற்ற செயல்களையே என்னால் சுட்டி காட்ட முடியவில்லை என்றால் வெளி உலகில் நிகழுவதை என்னால் எப்படி சாட முடியும்....

இந்த பதிவுலகில் கடந்த சில தினங்களாக என்ன நடந்துக்கொண்டு இருக்கிறது என்று சிலருக்கு தெரியும் ...பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால் பெண் பதிவர்களை பற்றிய இந்த பிரச்னைக்கு அவர்கள் சார்பில்  எனது இந்த கண்டனத்தை தெரிவிக்கிறேன். சில விசயங்களை ஆற போடுவது சரி இல்லை.

எழுதியவனை நோக்கி 

வலிமை மிகுந்த ஆயுதமான எழுத்து தங்கள் கையில் இருக்கிறது என்பதற்காக எது வேண்டுமானாலும் எழுதலாமா ?? அதுவும் முறையற்ற விதத்தில் பதிவுலக பெண் எழுத்தாளர்களை கேலி சித்திரமாகவும் , கேளிக்கை பொருளாகவும் உருவகபடுத்தி....??!!

பொதுவாக ஒரு பெண் கட்டாயம் விமர்சனத்துக்கு உட்பட்டுதான் ஆக வேண்டுமா....?? 

எழுதியவனிடம்  'ஏன் இப்படி எழுதுகிறாய்'  என்று கேள்வி கேட்டதிற்கு 'தன்  தளத்தை விளம்பரபடுத்த இப்படி எழுதுகிறேன்' என்று கேவலமான மட்டமான பதில் வருகிறது.. உன் விளம்பரத்திற்கு கூட பெண்கள் தான் தேவைபடுகிறதா...? பெண் பதிவர்களாகிய எங்கள் புடவையின் பின்னால் மறைந்து நின்று தான் நீ பிரபலம் ஆகவேண்டுமா..... ??  மதி கெட்ட மூடனே வெட்கமாக இல்லையா  உனக்கு.....?? 

உனக்கு இரண்டு சகோதரிகள் உண்டு என்பதை அறிவேன்...அவர்களை இப்படி கேவலமாக சித்திரம் வரைந்து நாலு பேர் பார்க்கும் இடத்தில் வைக்க வேண்டியது தானே...?? 

அன்பு பெண் பதிவர்களே...

நீங்கள் இந்த விஷயத்தை கண்டுகொள்ளாமல் இருந்தால்.......இன்று,  இவன் நம்மை பற்றி எழுதுவான....நாளை வேறொருவன் எழுதுவான்...இது தொடர்கதையாகும்....சிலருக்கு பெண்மையை இகழ்வது ஒரு மனோவியாதி......அப்படிபட்ட வியாதி உள்ளவர்கள் இங்கே அதிகம் என்பதை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்..... 

மேலும் ஒன்றை நினைவு கொள்ளுங்கள்...பெண்மை கேலி பொருள் அல்ல....நம் எழுத்தை விமர்சிக்கலாம்...நம் உருவத்தை விமர்சரிக்க கண்டவனுக்கும் இடம் கொடுக்க கூடாது....இப்போது இவர்களை வம்பிற்கு இழுத்தவன் நாளை உங்களையும் அந்த லிஸ்டில் சேர்க்கலாம்....இதைவிட மோசமாக...விபரீதமாக...!!

என் மரியாதைக்குரிய பதிவுலக தோழர்களுக்கு

சாதி, மத , கடவுள் பற்றி ஏதாவது பதிவுகள் வெளி வந்தால் உடனே முகமற்று வரும் அனானிகளின் கேள்விக்கு பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டு காற்றில் கத்தி சண்டை போட்டு கொண்டு இருக்கிறீர்கள்... அதை தவறு என்று சொல்லவில்லை. ..... 

ஆனால் அதே நேரம் இப்போது முழு விலாசத்துடன் , முகம் காட்டி எழுதிக்கொண்டு இருக்கிறவனை என்ன செய்ய போகிறீர்கள்....???  இவனுக்கு உங்கள் கண்டனத்தை தீவிரமாக தெரிவிக்க வேண்டும்...


விஷ செடியை ஆரம்பத்தில் பிடுங்க வேண்டும்...இதுவரை ஆறு பெண் பதிவர்களை பற்றி எழுதி உள்ளான்...இது தொடரும்...எப்போதும் போல் நம் வீடு பாதுகாப்பாக தானே இருக்கிறது என்று மெத்தனமாக இருக்காமல் அந்த செடியை வேர் அறுத்து போடுங்கள்...

உங்கள் வீட்டு பெண்ணிற்கு இந்த மாதிரி நடந்தால், " நாம் நடக்கும் பாதையில் கல், முள் இருக்கத்தான் செய்யும். நாம்தான் பார்த்து நடக்கணும் அல்லது எடுத்து போட்டு விட்டு நடக்கணும் "என்று தத்துவம் பேசி கொண்டு இருப்பீர்களா...??  தெளிவு படுத்துங்கள்.  

நண்பர்களே..., நான் சொல்வது சரியென்று பட்டால் உங்கள் கண்டனம் பாயட்டும்..அவனை நோக்கியும் அவனை  போன்றவர்களுக்கு  எதிராகவும் ......

பின் குறிப்பு.

1  அவனது தவறை நான் சுட்டி காட்டியபின் பெண்களின் பெயரை எடுத்துள்ளான். ஆனால் வெறுப்பிற்கு உரிய அந்த சித்திரம் நீக்கப்படவில்லை. 

2  அந்த தளத்தின் முகவரி கொடுக்கவில்லை காரணம்...இந்த  பதிவு சம்பந்தபட்டவனுக்கு போய் சேரணும் என்ற நோக்கில் எழுதப்பட்டது   இப்படி ஒரு கேவலமான பதிவினை வெளியிட்ட தளத்தையும், ஆளையும் குறிப்பிட்டு சொல்லி பிரபலபடுத்தும் அளவிற்கு அவன் பெரிய ஆளில்லை. இந்த பதிவின் சாரம் போய்ச்சேரந்தால் சரிதான்.



திங்கள், ஆகஸ்ட் 16

மின்சாரம் - மகிழ்ச்சியான செய்திகள்

நம் நாட்டில் இப்ப இருக்கும் முக்கியமான பிரச்னைகளில் ஒன்றுதான் 'மின்தட்டுப்பாடு'.  நம்ம அரசும் என்ன என்னவோ முயற்சி செய்தாலும் (உண்மை தாங்க ) இதை மட்டும் சரி படுத்தவே  முடியவில்லை...??!! தினம் இரண்டு மணி நேரம் இல்லை மூணு மணி நேரம் விருப்பம் போல் கரண்ட் கட் தான். ஆனால் மின் உற்பத்திக்காக பல இடங்களில் மின் காற்றாலைகளை  நிறுவி வந்தாலும் பிரச்சனை தீர்ந்த பாடில்லை. ஆனால் மின் உற்பத்தியை அதிகரிக்க செய்ய சில வழிமுறைகள் இருக்கின்றன. அதை இங்கே பார்க்கலாம். 

அதில் முக்கியமான ஒன்றுதான் 'மரபு சாரா எரிசக்தி'. அதாவது விவசாய கழிவுகள், நெல் உமி, தேங்காய் மட்டை, காடுகளின் கழிவுகள், கோதுமை கழிவு, குப்பை இவைகளில் இருந்தும்  மின் உற்பத்தி பண்ண முடியும், இவை எல்லாம் மரபு சாரா எரிசக்திகள். இவற்றில் இருந்து எல்லாம் மின்சாரம் தயாரிக்க முடியும் என்பதே பலருக்கும் தெரியாத  புது தகவல்  என்று நினைக்கிறேன். (ஒருவேளை உங்களுக்கு தெரிந்து இருந்தால் விவரங்களை சொல்லுங்கள் , உபயோகமாக இருக்கும் )

பல பொறியாளர்கள் பரிந்துரை செய்தும், நம் தமிழ் நாடு அரசு இவற்றில் இருந்து மின் உற்பத்தி செய்ய இதுவரை முயற்சி எடுத்ததாக  தெரியவில்லை ??  காரணம் தெரியவில்லை...?? ஆந்திராவில் நெல் உமியில் இருந்து மின்சாரம் தயாரிக்கக்கூடிய  45 மின் உற்பத்தி நிலையங்கள் 4 வருடங்களாக செயல்பட்டு வருகின்றன...??!!  அங்கே அனுபவமிக்க பொறியாளர்களின் ஆலோசனையினை   பெற்று அதன்படி வெகு ஜோராக மின் உற்பத்தி செயல்படுத்தபட்டு வருகிறது. இன்று 45 நிலையங்களில் ஒவ்வொன்றும் தலா 6  மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. இது கொஞ்சம் மகிழ்ச்சியான செய்திதான். 

மின் உற்பத்தி செய்வது ஒரு பக்கம் இருக்கட்டும்......இருக்கும் மின்சாரத்தை எப்படி எல்லாம் வீணாக்குகிறோம் என்பது தெரிந்தால் நம்முடைய ரத்த அழுத்தம் இன்னும் அதிகமாகும்.....

முறையற்ற மின் விநியோகம்

மின்சாரத்தை கொண்டு போய் விநியோகம் செய்யும் வழிமுறைகளினால் மட்டும் 30௦%  மின்சாரம் வீணாகிறது என்பதே அந்த  அதிர்ச்சியான செய்தி. ஆனால் பெருமையான விஷயம் என்னனா இந்த ஒழுங்கற்ற மின் விநியோகத்தால் மின்சாரத்தை வீணாக்குவதில் உலகத்திலேயே இந்தியாவிற்க்குதான் முதல் இடமாம்..... என்ன கொடுமைங்க இது ??!!

இதிலும் தமிழகத்தின் நிலை இன்னும் மோசம். மத்திய மின்சார ஆய்வு நிறுவனம் தமிழகத்தில் தற்போது செயல்பட்டுக் கொண்டு இருக்கும் ட்ரான்ஸ்பார்மர்களை  மாற்றச் சொல்லி 5 வருடம் ஆகிறதாம்....இதுவரை மாற்றவில்லை. ( இன்னும் பல வருடம் ஆகும்....?! முதல் இடத்தை அவ்வளவு சீக்கிரம் இழக்க மனசு வராதே  ??)

கழிவில் இருந்து மின்சாரம்

இந்த முறையில் ஆஸ்திரேலியா தனது மின் தேவையை பெருமளவு பூர்த்தி செய்கிறது.  கழிவு நீரை வடிகட்டி, அதில் இருக்கும் கழிவுகளை உருண்டைகளாக்கி  , அதில் இருந்து மின்சாரம் தயாரிப்பதுதான் 'கழிவு நீர் மின் உற்பத்தி'. இந்த முறையை நாம் செயல்   படுத்தினால் நமக்கு இரண்டு விதத்தில் ஆதாயம்.



 'பல கோடி  ரூபாய்' செலவு செய்து கூவத்தை சுத்தபடுத்த போவதற்காக  சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்து இருக்கிறது 'தமிழகம்'.  அதற்கு மாற்றாக  கூவத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடிவெடுத்தால் கூவமும்  சுத்தமாகும், நமக்கு மின்சாரமும் கிடைக்கும். அதற்காக கூவம் கரைகளின் ஓரத்தில்  பெரிய அளவிலான 'நீரேற்று நிலையங்களை' அமைத்து கூவம் நீரை சுத்திகரிக்கவேண்டும். பின்னர்  அந்த சுத்திகரிக்கபட்ட நீரை தொழிற்சாலை தேவைகளுக்கும், சேகரித்த  கழிவு உருண்டைகளை  மின்சாரம் தயாரிக்கவும் பயன்படுத்தி கொள்ளலாம்.  (ஒரு கல்லில் இரண்டு மாங்காய் )

சூரிய ஒளி மின்சாரம்



சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும்.  இதற்கு கட்டிடங்களின் உச்சியில் சூரிய ஒளி மின்சாரத்துக்கான 'சோலார் பேனல்' களை பொருத்தினால் போதும். ஆரம்ப முதலீடு காஸ்ட்லி என்றாலும் எதிர்காலத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்று தொலைநோக்கு பார்வையோடு பார்க்கும் போது , 'இதுதான் நிரந்தர தீர்வு' என்று அடித்து சொல்லலாம்.

இவை எல்லாம் அரசாங்கம் மட்டும் தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதை நம்பி இருப்பதற்கு பதில் நம்மால் முடிந்தவரை இவற்றை நாமே செய்து கொள்ள முடியும் என்று ஒரு குடும்பம் நிரூபித்து உள்ளது. இங்கே இல்லை பக்கத்தில் பெங்களூருவில் தான் அந்த அற்புதம்.

சிவகுமார் என்பவர் கர்நாடக மாநில அறிவியல் மற்றும் தொழிநுட்பத்துறையில் முதுநிலை விஞ்ஞானி. அவரது மனைவி திருமதி சுமா. இவர்களின் இல்லத்தில் தான் அந்த அதிசயம்.  10 வருடங்கள் முன் வீடு கட்டியதில் இருந்து இன்று வரை 'மின் இணைப்போ', 'குடிநீர் இணைப்போ', 'சமையல் எரிவாயு இணைப்போ' இல்லை...!! மாற்றாக சூரிய ஒளியும், மழை நீரும் தான்....!!??

வீட்டின் ஒவ்வொரு அறையின் கூரையிலும் நேரடியாக சூரிய ஒளி ஊடுருவும் வகையில் அந்த கட்டிடம் வடிவமைக்க பட்டுள்ளது. மின்சார தேவைக்கு 10 வருடங்களுக்கு முன் 7000  ரூபாய்  செலவில் மொட்டை மாடியில் 'சூரிய ஒளி மின் உற்பத்தி சிஸ்டத்தை' அமைத்துள்ளார்.

மழைநீர் சேகரிப்பு




தண்ணீர் தேவைக்கு அவர்கள் தேர்ந்தெடுத்த வழி 'மழைநீர் சேகரிப்பு'  தான். 45 ஆயிரம் லிட்டர் மழைநீரை சேகரிக்கும் தொட்டிகள் அமைத்து அதை சுத்திகரிக்க பில்டரை அவரே வடிவமைத்துள்ளார்.  அந்த 'பில்டர்'தான் இப்போது மாநில அரசுகளால் பரிந்துரை செய்யபடுகிறது.  இவர்கள் வீட்டை உதாரணமாக வைத்து மழைநீர் சேகரிப்பு முறையை வீட்டில்  அனைவரும் ஒரு மாதத்தில் அமைக்க வேண்டும் என்று சட்டமே போட்டு விட்டதாம் அரசாங்கம்.

ஆனால் நம்ம ஊர்ல போடப்பட்ட மழை நீர் சேகரிப்பு திட்டம் என்ன ஆச்சுனு... எப்படி சொல்ல....ஆரம்பத்தில் நல்லாத்தான் இருந்தது...மக்களிடம் சரியான விழிப்புணர்வை  ஏற்படுத்தாமல் போய்விட்டதால், ஏதோ கடமைக்கு செய்வது போல் மக்கள் செயல் படுத்தினார்களே  ஒழிய முழு மனதுடன் , முழு ஈடுபாட்டுடன் செய்யவில்லை....

எந்த ஒரு 'நல்லதுமே ஒரு வீட்டில் இருந்துதான்' தொடங்குகிறது என்பார்கள். அரசாங்கத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி குரல் கொடுப்பது அவசியம் தான்.  அதே சமயம் நம்மால் முடிந்தவரை தேவைகளை பூர்த்தி செய்ய முன் வரலாமே....

அடுக்குமாடி குடியிருப்பவர்களில் சேரும் கழிவு நீரை அவர்களே தகுந்த ஆட்களை வைத்து தேவையான மின்சாரம் தயாரித்து, மிச்ச நீரை செடிகளுக்கு உபயோகபடுத்தி கொள்ளலாம். வழிமுறைகளை சொல்லி கொடுக்க பொறியாளர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.  முயற்சியை நாம்தான் எடுக்க வேண்டும் 

சொந்த வீடு வைத்து இருப்பவர்கள் கொஞ்சம் 'இச்செய்தியை செவிமடுத்து, (செல் எடுத்து') சம்பந்த பட்டவர்களிடம் பேசி உங்கள் வீட்டையும்  மற்றவர்களுக்கு முன் உதாரணமாக்கி காட்டுங்களேன் எனதருமை பதிவுலக தோழர்களே....

நன்றி ஜூனியர் விகடன்