ஞாயிறு, மே 30

பிரச்சனைகளுக்கு பெண்களே காரணம் ! தாம்பத்தியம் பாகம் -3

பெண்களின் மனோபாவங்கள்:

ஒரு குடும்பம் சிறந்து விளங்குவதற்கு  பெண்தான் பெரும்பாலும் காரணமாக இருக்கிறாள் அதே நேரம் அந்த குடும்பம் சீர் குலையவும் அந்த பெண்ணே காரணமாகி விடுகிறாள்.  இதற்கு அவளது குணாதிசியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பொதுவான குணாதிசியங்கள்:

எல்லா பெண்களுக்குமே எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும்.   எதிர்காலத்தை பற்றிய கனவுகள் இருக்கும்.

பல பெண்களும்  விரும்புவது துடிப்பான, விவேகமான, படித்த, கொஞ்சம் அழகான (ரொம்ப அழகா இருந்தா ஆபத்துதானே), நகைச்சுவையுடன் பேசக்கூடிய (மனைவியுடன் மட்டும்), உயரமான (மனைவியை விட கொஞ்சம் அதிகமாக), புத்திசாலியான  (மனைவிக்கு  முன்னால் இல்லை ) , சிகரட் , தண்ணி அப்படினா என்ன என்று கேட்கக்கூடிய அப்பாவியா  (எங்க டார்ச்சர் தாங்க முடியாம தண்ணி அடிக்க தொடங்கினா, பரவாயில்லை, பொறுத்துக்கலாம் ). அப்புறம் முக்கியமான ஒரு விஷயம் என்னன்னா கை நிறைய சம்பளம் (கணவன், மனைவி இருவர் கையும் சேர்ந்தால் போல நிறையணும்)   . இவ்வளவு தாங்க பெண்களின் முக்கியமான எதிர்பார்ப்பு.

விருப்பங்களும், எண்ணங்களும்  ஒவ்வொருத்தருக்கும் ஏற்ப மாறுபடலாம், ஆனால் எதிர்ப்பார்ப்பு என்பது கண்டிப்பாக இருக்கும். எதிர்பார்ப்பில் ஏதாவது ஒன்று  குறைந்தாலும் அவள் மனதிற்குள் வெறுமை சூழ்ந்து விடும்.  இதுதான் இன்றைய பெண்களின் மனப்போக்கு.  இது மிகவும் ஆபத்தான ஒன்று தான்.  

முந்திய தலைமுறையினர் கிடைப்பதை வைத்து மனதிருப்தியுடன் குடும்பத்தை நடத்தினர்.  கணவனின் எண்ணத்திற்கு ஏற்ப தங்களுக்கு ஏற்புடையது இல்லை என்றாலும் சமாளித்தனர், அதனால் அவர்களின் திருமண வாழ்க்கை வெள்ளிவிழா கொண்டாடும் அளவிற்காகவாவது வந்தது.  ஆனால் இப்போது பல திருமணங்கள் முதலாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடுவதற்குள் கோர்ட்டில் முடிந்துவிடுகிறது.   இந்நிலை கவலைப்படக் கூடிய ஒன்று என்பதை யாரும் மறுக்கமுடியாது.   எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற போக்குதான்.   

ஆண்கள்தான் காரணம் என்று அவர்களை குறைச்  சொல்வதை விடுத்து தங்களால் முடிந்தவரை பிரச்சனைகளைச்  சரி செய்ய முயலவேண்டும்.  முக்கியமாக பிறர் சொல்வதைக்  கேட்காமல் சுயமாக முடிவு எடுக்க பழகிக்  கொள்ள வேண்டும். பலர் ஆலோசனை சொல்கிறேன் என்று அவர்கள் வாழ்வில் நடந்த சிலவற்றை முன் உதாரணமாக சொல்லி நம்மை குழப்பி விடுவார்கள்.  ஆனால்  சம்பந்தப்பட்ட பெண்ணோ அல்லது ஆணோ நிச்சயமாக அந்த பிரச்சனையைப்  பற்றி மட்டும்தான் யோசிப்பார்கள், அதனால்  ஒரு நல்ல தீர்வு கண்டிப்பாக கிடைக்கும்.   மற்றவர்களுக்கு இவர்கள் பிரச்சனை சாதாரண ஒரு சம்பவம் ஆனால் இவர்களுக்கு அது வாழ்க்கை அல்லவா ? 

பிறரின் சொல்படி நடக்கும் மனோபாவம்:

இப்போது  பல பெண்களும் நன்குப்  படித்து உலக அனுபவம் பெற்றவர்களாக இருந்தும் திருமணம் என்று வந்தவுடன் பிறரது  பேச்சுக்குச்  செவி சாய்ப்பவர்களாகி விடுகிறார்கள்.   

காதல் திருமணம் செய்தவர்களுக்கு, திருமணம் முடியும் வரை யார் சொல்வதும் காதில் விழாது.  ஆனால் திருமண வாழ்க்கையில் சின்ன பிரச்சனை வந்தால் போதும் அவன் மேல் தவறு என்று அவளும்,   இவள்  மேல்தான் தவறு  என்று அவனும், ஆட்களை வலிய தேடிப்  போய் மாறி மாறி குறைச்  சொல்வார்கள். கேட்பவர்களும் வாய்க்கு வந்ததைச்  சொல்லி பிரச்சனையில்  கொஞ்சம் எண்ணையை ஊற்றுவார்கள். அதுவரை புகைந்துக்கொண்டிருந்தது அதன்பிறகு நெருப்பாக பற்றிக்கொண்டு கொழுந்துவிட்டு எரியும் .  
  
பெற்றோர்கள் வரன் பார்த்து நடத்திவைக்கும் திருமணங்களில் பெண்ணிற்கு நல்லது பண்ணவேண்டுமே என்ற எண்ணத்தில் அவர்கள் நடந்து கொள்ளும் சில விதங்கள் அந்த பெண்ணின் வாழ்கையையே சீரழிப்பதை அவர்கள் உணருவதே இல்லை. வரன் பார்க்க தொடங்கும்போதே தரகரிடம் அவர்கள் வைக்கும் முதல் கோரிக்கையே  மாமியார் , நாத்தனார் மாதிரி எந்த பிக்கல், பிடுங்கலும் இல்லாத வீடாக  இருந்தால்  நல்லது என்பதுதான்...?! (இப்படியே இவர்கள் மகனுக்கு வரும் பெண் வீட்டாரும் இருந்து விட்டால் ஒன்று அந்த பையனுக்கு கல்யாணம் ஆக பல வருடம் ஆகும் அல்லது தாய் உடனே சாக வேண்டும் )  

இதை கேட்கும் பெண்ணின் மனநிலை என்ன ஆகும்....?   அந்த நிமிடமே அவள் மனதில் மாமியார், நாத்தனார் என்பதின் அர்த்தம்  பிக்கல், பிடுங்கல்தான் என்ற விஷ விதை மறைமுகமாக ஊன்றப்பட்டுவிடுகிறது.  ஒருவழியாக சம்பந்தம் இருவீட்டார்க்கும் பிடித்துபோய் நிச்சயத்தின் போது  அந்த மாமியார் கேட்கும் வரதட்சணையால் அந்த விதைக்கு நீர் ஊற்றப்படுகிறது.   பின்னர் திருமண நாள் நெருங்கும் நேரத்தில் அந்த பெண்ணின் உறவினர்களாலும், அக்கம்பக்கத்து நண்பர்களாலும் (நல்லது செய்வதாக  நினைத்து கொண்டு ) பல அழிவுரைகள் மன்னிக்கவும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.  அதில் சில வசனங்களை பார்ப்போம்:  

i )  'மாமியார்கிட்ட கொஞ்சம் கவனமா இருந்துக்கோ..!'   ( ஏன்னா அவங்க பூதம் பாரு, தூக்கிட்டு போனாலும் போய்டுவாங்க! ) சில நேரம் இப்படி சொல்றவங்களே இன்னொரு பெண்ணுக்கு  மாமியாரா கூட இருக்கலாம்.....!!

ii )    'நாத்தினார கிட்ட சேர்க்காத...!'  ( ஏன் தொத்து வியாதியா? ) ' உங்க வீட்டு விசயத்தில அவள் தலையிடாம பார்த்துக்கோ...!' (பெண்ணுக்கு, பிறந்த வீட்டில் எவ்வளவு உரிமை  இருக்கோ அந்த அளவு உரிமை நாத்தனாருக்கும் அவள்   பிறந்த வீட்டில் இருக்கக்கூடாதா ?)

iii )    அடுத்த ஆபத்து கணவனுக்கு!!  ' உன் கணவனை உன் கைக்குள்ள போட்டுக்கோ, முந்தானையில முடிஞ்சி வச்சுக்க ' ( அவ்வளவு குட்டியாவா இருப்பாரு..!! ) 

iv )      'கடைசியா முக்கியமா ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோ, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ  அவ்வளவு சீக்கிரம் தனி குடித்தனம் போற வழியப்  பாரு ' ( நீ சீரா கொண்டு வந்த பொருட்களை வித்து தின்னுடுவாங்க ) 'புத்திசாலியா பொழைச்சுக்கோ, நான் சொல்லவேண்டியதை  சொல்லிட்டேன் அப்புறம் உன் சாமார்த்தியம் ' கடைசியா கொஞ்சம் பொடி வச்சு சொல்லிவிட்டு  சென்று விடுவார்கள்.  

அந்த புதுப்பெண்ணும் எப்படி தன்னை புத்திசாலி என்று நிரூபிப்பது, எப்படி சாமார்த்தசாலி என்று பெயர் எடுப்பது என்பதை பற்றி யோசிக்கும் போதே ஏற்கனவே போடப்பட்ட விதை நன்கு ஆழ ஊன்றி துளிர் விட ஆரம்பத்திருக்கும். இப்படி இந்த விதத்தில் ஒரு பெண்ணை திருமணத்திற்கு தயார்  படுத்தினால் அவளது எதிர்காலம் என்னவாகும் என்று யாரும் ஒரு நிமிடம் கூட நினைத்துப்  பார்ப்பது இல்லை.   திருமணத்திற்கு பிறகு  ஏதாவது பிரச்சனை என்றால் இந்த நலம் விரும்பிகள் எங்கே என்று கண்ணில் விளக்கெண்ணை போட்டு கொண்டுத்தான் தேட வேண்டும்.  அப்படியே தென்பட்டாலும் 'நீதாம்மா பார்த்துக்கணும்' என்று நாசுக்காக சொல்லி  நழுவிவிடுவார்கள்.  பெற்றவர்களும் 'மகளே உன்  சமத்து' என்று   சொல்லிவிட்டால் அந்த பெண்ணின் நிலை என்ன....?   இது இன்றும் பல வீடுகளில் குடும்பங்களில் தொடர்ந்துக்  கொண்டுதான் இருக்கிறது.

திருமணத்திற்கு பிறகும் தொடரும் அவலம்

திருமணத்திற்கு பின் புகுந்த வீட்டில் பெண்ணின் கண்களுக்கு அங்குள்ள அனைவருமே எதிரிகளாகவே தெரியும். யாரிடமும் சரியாக பேசிப் பழகாமல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள்ளே முடங்கிவிடுகிறாள்.  கணவன் இருக்கும் நேரத்தில் மட்டும்தான் அவளது பேச்சையும், சிரிப்பையும் மற்றவர்கள் கேட்க முடியும். புதுப்பெண்தானே  போகப்போக சரியாகிவிடும் என்று பிறரும் சமாதானம்  செய்துக்  கொள்வார்கள் ( இவள் மனதில் விஷம் என்ற மரம் தற்போது கிளைப்  பரப்பிச் செழித்து  வளர்ந்திருப்பதை அறியாதவர்களாய்!! )

அந்த மாமியாரும், நாத்தனாரும் ஒருவேளை நல்லவர்களாக இருந்தாலும் இந்த பெண்ணை பொறுத்தவரை கெட்டவர்கள்தான் (அப்படிதானே அவளுக்கு சொல்லப்பட்டிருக்கிறது) புகுந்த வீட்டினரை தனது நாக்கு என்னும் விஷ கொடுக்கால் சமயம் கிடைக்கும் போதெல்லாம் கொட்ட தவறுவதே இல்லை.  அடுத்த சில நாட்களில் எடுத்ததுக்கெல்லாம் குற்றம் குறைச்  சொல்லி தன் கணவனை அந்த குடும்பத்திடம் இருந்து பிரித்து தனி குடித்தனம் கொண்டு போய்விடுகிறாள்.

கணவனும் அப்படி போனாலாவது சண்டை குறையுமே என்றுதான் போகிறான். அங்கும் சச்சரவு  தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் (எதையும்  குறை சொல்லியே  பழகி விட்டதால்)  காலம் கொஞ்சம் கடந்த பின்தான் கணவனும் தன் தாயை தவிக்கவிட்டு வந்ததை உணர்ந்து மனம் குமைகிறான். அவனுடைய இயலாமை வெறுப்பாக மனைவியின் மீது திரும்ப வீடு நரகமாகிறது,  இத்தனைக்கும் நடுவில் குழந்தை பிறப்பு வேறு (அது ஒரு தனி டிராக்) அழகான போகவேண்டிய திருமண வாழ்வும், கணவன், மனைவி உறவும்  பாதிக்கப்படுகிறது.  

ஆக இப்படிப்பட்ட நிலை உருவாக காரணமாக அமைவது அந்த பெண்ணின் நிலையற்ற  மனநிலைதான்.  மற்றவர்கள்  ஆயிரம் சொன்னாலும் கேட்கிறவர்களுக்கு புத்தி எங்கே போனது..?  தன் வாழ்க்கை எப்படிப்பட்ட நிலையில் அமைய வேண்டும் என்பதை படித்த அந்த பெண்தான் முடிவு  செய்யவேண்டும் .  மற்றவர்களின் ஆலோசனையை கேட்டாலும் தனக்குள் அதை பொருத்தி 'சரியாக இருக்குமா?'  என்று சீர்தூக்கி பார்க்கும் மனபக்குவம் இல்லாமைதான் கணவன் மனைவி உறவு கெடக்  காரணமாகி விடுகிறது .  இதுதான் இன்று பலரின் அனுபவம்.  


(பின் குறிப்பு)

நாங்கள் மட்டுமா காரணம் ?

இந்த கேள்வி பலருக்கும் தோன்றும்தான்.  மனைவியரும் ஒரு காரணம் தான்.  ஆனால் பெண்களால் மட்டும்தான் மலைபோல் பிரச்னையை உண்டாக்கவும் முடியும்,  அதை பனிபோல் விலக்கவும் முடியும்.  இன்னும் நிறைய பகிர வேண்டியது உள்ளது.  தாம்பத்தியம் கெட எடுப்பாற்கைப் பிள்ளை போன்ற மனநிலை ஒரு காரணம் என்றால் இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்களின் கருத்து வேறுபாட்டால் ஏற்படக்கூடிய சண்டையை பார்த்தே வளரக்கூடிய பெண்பிள்ளைகளின் பாதிக்கப்பட்ட மனநிலையும் ஒரு பெரிய முக்கிய காரணமாக இருக்கிறது.   இந்த இரண்டு காரணங்கள் பற்றி மட்டும் நாம் பார்த்தாலே போதும்,  குடும்ப சீர்குலைவு  எங்கிருந்து தொடங்குகிறது  என்பதை புரிந்து கொள்ளலாம்.


இரண்டாவது காரணத்தால் ஒரு படித்த, வசதியான, எந்த கெட்ட பழக்கமும் இல்லாத கணவன்,  திறமையான நல்ல குணம் படைத்த மனைவி, நல்ல குழந்தைகள் என்று எல்லாம் சரியாக இருந்தும் கருத்து வேறுபாடால் இன்று சிதைந்து (அவர்கள் இல்லை அவர்களது குழந்தைகள் ) நாலாபுறமாக சிதறி இருக்கிறார்கள் (கிடக்கிறார்கள் ). அந்த வீட்டின் பெண் பிள்ளையின் குடும்ப வாழ்விலும் இது எதிரொலித்து கொண்டிருக்கிறது, விளைவு அவளது குழந்தைகளையும் பாதித்து வாழையடி வாழையாக தொடர்ந்து கொண்டிருக்கும் பயங்கரம்.....!!  இது ஏதோ கற்பனை கதை இல்லை, கண்முன்னே நான் காணும்  உண்மை.  இதை பற்றி இனி தொடரும் பதிவில் கொஞ்சமாக பகிர்கிறேன்.


நெஞ்சை சுடுகின்ற நிஜம்.........!




     

புதன், மே 26

கண்ணீர் கவிதை

கடையில் இருந்து வந்த ஒரு பார்சலில்  சுற்றி வந்த துண்டு பேப்பரில் ஒரு கவிதை இருந்தது.  பெண்களிடம் இயல்பாய் இருக்கும் ஒரு குணம் தான் இந்த மாதிரி துண்டு காகிதத்தை கூட உடனே தூக்கி எறிந்து விடாமல் படித்து பார்ப்பது. நான் மட்டும் என்ன விதி விலக்கா ?

குப்பையில் தான் சில நேரம் மாணிக்கம் கிடைக்கும்,  ஆனால் எனக்கு கிடைத்ததோ மனதை பிசையும் ஒரு நிஜம்!  ஆனால் நிஜத்தை ஜீரணிக்கத்தான் முடியவில்லை....!  ஒரு இனமே நாளை புத்தகத்தில் மட்டும் படிக்ககூடிய வரலாறாய் மாறிவிடுமோ என்ற அச்சத்தை இந்த சில வரிகள் ஏற்படுத்திவிட்டதை என்னால் மறுக்கவும் முடியவில்லை, மறைக்கவும் முடியவில்லை....  அதனால் தான் உங்களிடமும் பகிர்கிறேன்.


                       " கவலை மட்டும் பட்டுகொண்டே
                        கல்லாய் சமைந்து விட்டோம்...?! "


வேதத்தில் ஒரு வரி உண்டு " கவலைபடுகிரதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான் ?  " .    கவலை மட்டுமே  படுவதால் ஒரு வழியும் பிறக்க போவதில்லை, அதனால் கவலை படாதீர்கள் என்பதை புரிய வைப்பதற்காக எழுத பட்ட ஒரு வசனம்.  கவலை படுவதால் தன் சரீர அளவோடு ஒரு அளவை கூட்ட முடியும் என்றால் கவலை படுங்கள், ஆனால் அப்படி முடியாது அல்லவா... அப்புறம் ஏன் கவலை படுகிறீர்கள் என்பதுதான் அதன் அர்த்தம்.  


உண்மையில் நாம் என்ன செய்கிறோம் இப்படி நடக்கிறதே என்று கவலை பட்டு கொள்வதின் மூலமே நாம் மன நிறைவு பெற்றுகொள்கிறோம்.  அதனால் எந்த கொடுமைகளும், சித்திரவதைகளும் நின்று விட போவது இல்லை.  இது நமக்கு நன்றாக தெரிந்து இருந்தும் செயல் அற்று இருக்கிறோம்.  நமக்கு நாமே 'எல்லாம் காலத்தின் கோலம்'  என்று சமாதானம் வேறு சொல்லிகொள்கிறோம்.     கடைசியில் அந்த காலம் போடக்கூடிய இறுதி கோலம் தான் இந்த கவிதையின் இறுதி வரிகள்......!?


எனக்கு நிஜம் உணர்த்திய அந்த வரிகள் உங்களின் பார்வைக்காக....


                  " என் தாத்தா
                  
                    பூமியைத் தோண்டியபோது
                  
                     நிறையத் தங்கம் கிடைத்ததாம்....
                  
                     என் அப்பா தோண்டியபோது
                  
                     நிறைய தண்ணீர் கிடைத்ததாம்....
                  
                     நான் தோண்டியபோது
                  
                     நிறைய கண்ணிவெடிகள் கிடைத்தன....
                  
                     என் மகன் தோண்டும்போது
                  
                     அவனுக்கு
                  
                      நிறைய எலும்புக்கூடுகள் கிடைக்கும்......!?"
                    
                                                                                         நன்றி- (குமுதம்) சிநேகிதி

                                                                                                                

வெள்ளி, மே 21

நினைவு நாள்

ன்று ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு தினம். இந்நாளை வன்முறை மற்றும் தீவீரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்கபடுகிறது . தீவிரவாதத்தால்  நம் குடும்பம் பாதிக்கபடாதவரை இது ஒரு சாதாரண நாள் தான் பலரின் பார்வையில்....! என்ன செய்வது நமக்கு அப்படியே பழகி விட்டது வேறு என்ன சொல்வது....?

தீவிரவாதத்தால்  பாதிக்கப்பட்ட, இன்றும் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் மக்களை எண்ணி நாம் ஒரே ஒரு நிமிடம் நமது வேலைகளை மறந்து அவர்களுக்காக பிராத்தனை செய்வோம் . எங்கும் அன்பும், அமைதியும் நிலவட்டும்.....! நமக்குள் அன்பு என்னும் நதி பிரவாகம் எடுத்து ஓடட்டும்......!  ஒருவருக்கு ஒருவர் சமாதானத்தை இந்த நாளில் சொல்லிகொள்வோம்.....!  அருகில் இருப்பவரின் கைகளை பற்றி 'சமாதானம் உங்களுக்கு கிடைக்கட்டும்' என்று அன்பாக கூறி கை குலுக்குவோம்.  அப்படி நீங்கள் செய்யும் போது 
உங்கள் அருகில் புன்சிரிப்புடன் கடவுள் நிற்பதை உணரமுடியும்!!  (அன்பிருக்கும் இடமே கடவுள் இருக்கும் ஆலயம் )

                                                                       *************



இந்த நாளை நினைவு கூறும்போது எனது கடந்தகால நிகழ்ச்சி ஒன்றை உங்களிடம் பகிர விரும்புகிறேன் . 

என் அம்மாவிற்கு உடல்நலக்குறைவினால் கர்ப்பபையை நீக்க வேண்டிஇருந்தது. ஆனால் அப்போது நடந்த குளறுபடியில் அம்மாவின் உடம்பின் வலதுபுறம் சரியாக இயங்காமல் போய்விட்டது. அதற்காக தொடர்ந்து சிகிச்சைகளை மேற்கொண்டே இருந்தோம். அப்படி ஒரு நிலையில் ஒருவரின் ஆலோசனையின் பெயரில் சென்னை இசபெல்லா ஆஸ்பிட்டலில் செக் அப் செய்வதற்காக மே மாதம் 20 ம் தேதி மாலையில் அம்மா, நான், அண்ணன் மற்றும் நண்பர்கள் புடைசூழ போயிருந்தோம்.


8   மணி அளவில் டாக்டர் செக்கப் செய்தார்கள், அப்போது அதிக அளவில் ரத்தபோக்கு ஏற்பட்டுவிட்டது.  டாக்டரும் , " இனி வீட்டிற்கு  கொண்டுபோவது சிரமம், இங்கே அட்மிட் செய்துவிடுங்கள்" என்று கூறிவிட்டார்கள்.  அம்மா வேறு மயங்கிய நிலையில் இருந்தார்கள், எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.  அரை மணி நேர  ஆலோசனைக்கு பிறகு அம்மாஉடன்  என்னை மட்டும் தங்க வைத்து விட்டு, காலையில் தேவையான பொருட்களை எடுத்துகொண்டு வருவதாக கூறிவிட்டு சென்றுவிட்டார்கள்.


என்னிடம் கொஞ்ச பணத்துடன் ஒரு பர்ஸ் மட்டும்தான் இருந்தது.  ரூமில் அம்மாவை கொண்டுவந்து படுக்கையில் படுக்கவைத்துவிட்டு நர்ஸ் போகும்போது 'மயக்கம் தெளியும்போது பழச்சாறு கொடுங்கள்' என்று  சொன்னார்கள். எனக்கு அந்த இடம் ரொம்பவே புதிது!  ஆஸ்பத்திரி வளாகத்தில் கடைகள் இருப்பதாக தெரியவில்லை, வெளியேதான் வாங்கவேண்டும்.  சரி என்று நான் கிளம்பும்போது நேரம் 10 .05 இருக்கும்.  மூணு மாடி இறங்கி கீழே வருவதற்குள் கேட்டை பூட்டி விட்டார்கள்.  6  அடிக்கும் மேல்  உயரம் இருக்கும்  கேட் மனதிற்குள் பயத்தை கொடுக்க  ஏதோ தைரியத்தில் கேட்டின் மேல் ஏறி அந்த புறம் குதித்துவிட்டேன்.


எந்த பக்கம் போவது என்றும்   தெரியவில்லை,  ஒளி  தெரியும் பக்கமாக நடந்தேன்.  சிறிது தூரம் சென்றதும் சில கடைகள் தெரிந்தன,   ஆனால் அந்த கடைகளையும் வேகவேகமாக இழுத்து மூடினர்......? எங்கும் ஒரே பரபரப்பாக அங்கும் இங்கும் ஓடினார்கள்......? அந்த இடமே கலவர பூமியாக தெரிந்தது!  பாதி மூடி கொண்டிருந்த கடைக்கு ஓடினேன்,  'இரண்டு பிரூட்டி வேண்டும்' என்றேன்.   அதை வேகமாக கொடுத்து விட்டு அந்த கடையையும் பூட்டி விட்டார்கள்!   எனக்கு ஒரே குழப்பம்!  யாரிடமும் கேட்கவும் பயம்!  இதயம் வேகமாக துடிக்க ஆஸ்பிட்டல் நோக்கி நடந்தேன் இல்லை மூச்சு வாங்க ஓடினேன்!   மீண்டும் ஒரு high jump பண்ணி உள்ளே வந்து மறுபடி ஓடி மூன்றாவது மாடி படி ஏறி அறையை அடைந்தேன்.   நான் வரவும் அம்மா எழவும் சரியாக இருந்தது.  அவர்களுக்கு குடிக்க கொடுத்து தூங்க வைத்து விட்டு நானும் குழப்பங்களுடன் தூங்கி போனேன். ( இத்தனைக்கும் யாரும் என்னை கவனிக்க வில்லை அவங்க வேலை அவங்களுக்கு)


காலையில் ஆறு மணிக்கு எழுந்தால் இரவில் நான் கண்ட அதே பரபரப்பு இங்கும்!  என்னவென்று நர்சிடம் கேட்டேன், அவர்கள் தினத்தந்தியை எடுத்து கொடுத்தனர். புரியாமல் பேப்பரை பார்க்க  'ராஜீவ் காந்தி படுகொலை' என்ற தலைப்பு செய்தி படித்ததும்  பதறிவிட்டேன்.   தொடர்ந்து செய்தியை படித்தபோதுதான் தெரிந்தது நான் முன்னிரவில் கடைக்கு சென்ற அதே நேரம்தான் இந்த கோர சம்பவம் நடந்து இருக்கிறது என்பதும் விஷயம் பரவியதால்தான் அந்த கடையடைப்பு என்பதும் புரிந்தது.  


கலங்கிய மனதுடன் அம்மாவை எழுப்பி செய்தியை சொன்னேன்.  தன் உடல் வேதனையைகூட மறந்துவிட்டு, " ஏன் இப்படி? மனித உயிருக்கு மதிப்பு இல்லையா? படுகொலைதான் பிரச்னைக்கு தீர்வா? "  என்று வேதனைப்பட தொடங்கிவிட்டார்கள்.
தாய்மைக்குத்தான் தெரியும் ஒவ்வொரு உயிரும் எவ்வளவு அற்புதம் என்று!  எந்த ஒரு உயிரின் இழப்பையும், எந்த ஒரு  தாயாலும் தாங்கிகொள்ளவே முடியாது!   'பெற்றால்தான் பிள்ளையா?'


தீவிரவாதத்தை விரும்புகிறவர்கள் தாய்மை நிலையில் இருந்து பார்த்தார்கள் என்றால் எந்த உயிரையும் கொடூரமாக கொல்ல மாட்டார்கள்......?!  


என் அம்மாவிற்கு உடல் வலியுடன் மனவலியையும் கொடுத்த அந்த நாளை மறக்கவே முடியாது.


                                                                                 *******
பின்குறிப்பு:


1   இந்த சம்பவத்தால் வாகனம் ஓடவில்லை என்பதாலும் சிறு சிறு கலவரங்கள் ஆங்காங்கே சில இடங்களில் நடைபெற்றதாலும்  என் அண்ணன் பைக்கில் வராமல் சைக்கிளில் சந்து பொந்தில் புகுந்து ஒரு வழியாக வில்லிவாக்கத்தில் இருந்து மயிலாப்பூருக்கு சாயங்காலம் நாலு மணிக்கு வந்து சேர்ந்தான்.  பிறகு அடுத்த நாலு நாளைக்கு போட்ட துணியையே போட்டு ஒருவழியாக சமாளித்தோம்.   எங்களை மாதிரி யாரெல்லாம் எப்படி கஷ்டபட்டார்களோ என்று வேறு, ஒரே கவலைதான் போங்கள்!!


(அப்புறம் அம்மாவுக்கு என்ன ஆச்சு என்று கேட்பவர்களுக்குகாக இந்த பின்குறிப்பு)  


    பத்து நாள் அங்கிருந்து தொடர்ந்து வைத்தியம் பார்த்ததில் கொஞ்சம் (நானும்தான்) தேறி வீடு வந்து சேர்ந்தோம்.  ஆறு மாதத்தில் நடக்க தொடங்கி விட்டார்கள்.
  
ஒவ்வொரு மே மாதம் 21 ம் தேதி வந்தால் எல்லோரும் பழைய நினைவை பகிர்ந்துகொள்வோம். எங்களது அவஸ்தையின் நினைவுநாள் !! இந்த வருடம் கூடுதலாக உங்களிடமும் சொல்லியாச்சு .........  




திங்கள், மே 17

தாம்பத்தியம் -2 பெண்களின் அறியாமை

கணவனின் மென்மையான அணைப்பில்தான்  ஒரு பெண் 'தான் பாதுகாப்பாக' இருப்பதாக உணருகிறாள்.  எல்லோருக்கும் அந்த பாதுகாப்பு உணர்வு கடைசிவரை கிடைக்கிறதா? இல்லை என்று தான் சொல்லமுடிகிறது.  ஏன் இல்லை, காரணம் என்ன என்பதை பற்றிய ஒரு பகிர்வுதான் இந்த தாம்பத்தியம் என்ற தொடர் பதிவு!     

 

தாம்பத்தியம் சுகமானதாக இருப்பதற்கு பெரும் பங்கு வகிப்பது பெண்கள்தான்.  பெண்மை அங்கே  திருப்தி அடையவில்லை என்றால் அந்த வீடு வாழ தகுதி அற்றதாகி விடுகிறது,  ஒரு குடும்பத்தின் கெளரவமே அந்த குடும்பத்தின் பெண்ணின் கையில் தான் இருக்கிறது,  வீடு சொர்கமாவதும், நரகமாவதும் அந்த பெண்ணை பொறுத்துதான் அமைகிறது.  முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால் கணவன் ராமனாக இருப்பதும் கிருஷ்ணனாக மாறுவதும் கூட அந்த மனைவியை வைத்துதான் இருக்கிறது என்பது என் கருத்து. கணவனுக்கு எல்லாமுமாக ஒரு மனைவி இருந்து விட்டால் அந்த கணவனுக்கு வேறு எண்ணங்கள் வரக்கூடிய வாய்ப்புகள் மிகவும் குறைவுதான்.  


அதனால் தாம்பத்தியம் என்று பார்க்கும்போது முதலில் பெண்களின் பலம், பலவீனங்கள் போன்றவற்றை கொஞ்சம் சுருக்கமாக (இயன்றவரை) தெரிந்துகொள்வது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.   


(நான் எழுதுவது அனைத்தும் சொந்த மற்றும் பிறரின் அனுபவங்களின் அடிப்படையில் அமைந்தவைதான்.    தவிர இது யார் மனதையும் புண்படுத்தாது என்று நம்புகிறேன். யார் மனதையும் கஷ்டபடுதுவது என் நோக்கம் அல்ல,  தாம்பத்தியத்தில் தடுமாறி கொண்டிருக்கும்  ஒரு சில மனங்களில் ஒரு மனதை மட்டுமாவது  எனது ஏதாவது ஒரு வரி கொஞ்சம் தொட்டுவிடாதா  என்ற ஒரு நப்பாசை தான் காரணம்)      

பெண்களின் அறியாமை :

பெண்கள் இன்று பல துறைகளில் முன்னேறி இருந்தாலும் இன்னும் அவர்களுக்குள் இருக்கும் அறியாமை போகவில்லை என்று தான் தோன்றுகிறது. நான் அறியாமை என்று சொல்வதின் அர்த்தம் எது என்றால், ' தங்களை பற்றி இன்னும் சரியாக அறிந்துகொள்ளவில்லை ', என்றுதான் சொல்வேன்.  

நீண்ட காலமாக பெண்ணுரிமை இயக்கங்கள் தொடர்ந்து சம உரிமை வேண்டும் என்று போராடி வருகின்றன,  அது எதற்காக.......?  பெண்கள் எப்போது தாழ்ந்து போனார்கள்? இப்போது உயர்த்தணும் என்று போராடுவதற்கு.  உண்மையில் பெண்கள் ஆண்களை விட 'எப்போதுமே ஒரு படி மேலே தான்' அப்படி இருக்கும்போது எதற்கு சம உரிமை என்று கேட்டு தங்கள் இடத்தை விட்டு கீழே  இறங்கி வர வேண்டும்.     


குழந்தை பேறு என்ற மகத்தான சக்தி நம்மிடம் இருக்கும்போது நாம் எப்படி ஆண்களுக்கு குறைந்து போவோம்...!?   அவர்களைவிட மேலே மேலே தான்!! ஆண்கள்  உடலளவில் பலமுள்ளவர்களாக இருந்தாலும் மனவலிமையில் பெண்களுக்கு ஈடாக மாட்டார்கள்.  இதை பெண்கள் மனதில் வைத்து கொண்டால் சரிசமமாக   சண்டைக்கு போக மாட்டார்கள், பரவாஇல்லை என்று விட்டுகொடுத்துவிடுவார்கள்!!      

சம வயது உடைய ஆண், பெண் இரண்டு பேரில் ஆணை விட பெண்ணின் அறிவு வளர்ச்சி, மன முதிர்ச்சி  அதிகமாக இருக்கும்,  இதை நான் சொல்லவில்லை விஞ்ஞானம் சொல்கிறது. அதனாலதான் திருமணதிற்கு பெண்  தேடும்போது 2 , 3  வயதாவது குறைந்த பெண்ணைத்தான் நம் பெரியவர்கள் முடிவு செய்கிறார்கள்.  வயது அதிகமான பெண்ணை மனம் முடித்த ஒரு சிலர்  பாவம் அந்த பெண்ணிற்கு கட்டுப்பட்டு  போக வேண்டிய நிலைக்கு தள்ளபடுகிறார்கள்.  

பெண்களுக்கே தங்களை பற்றிய தாழ்வுமனப்பான்மை  அதிகமாக இருப்பதால் தான் இன்னும் பலர் முன்னேறாமல் தங்கள் திறமைகளை தங்களுக்குள் போட்டு புதைத்து விட்டு வெறும் சவமாக வாழ்ந்துகொண்டிருகிறார்கள்.  


பெண்களின் சிறப்பு  இயல்புகள்  :


இயல்பிலேயே பொறுமை, விடாமுயற்சி, உறுதி, உழைப்பு, தன்னம்பிக்கை, தைரியம் ஆகிய திறமைகளை பெற்றவர்கள்தான்.  தவிர தாய்மை, அன்பு, கருணை, தயாளகுணம், விருந்தோம்பல்,  புன்னகை என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவற்றில் சில குணாதிசியங்களை மட்டும் பார்போம்.  


நவீன ஜான்சிராணிகள்!


நமக்கு ஆண் உடை தரித்து வாளெடுத்து   போரிட்ட ஒரு ஜான்சிரானியைதான் நன்றாக தெரியும். அவர் இருந்த  அப்போதைய இக்கட்டான சூழ்நிலையில் வாளேடுத்துதான்  ஆகவேண்டும் என்ற கட்டாயம், எனவே துணிந்து போரிட்டார்.  இன்றுவரை வீரப்பெண்மணி என்று புகலுகிறோம்.  


ஆனால் எல்லா பெண்களுக்குள்ளும் ஒரு ஜான்சிராணி இருக்கத்தான் செய்கிறாள்.  தேவைப்பட்டால் போரிடவும் தயங்க மாட்டாள்.   உண்மையில் அன்றைய ஜான்சிராணிக்கு  ஒரு குறிக்கோள்தான்,  போர்க்களம் ஒன்றுதான்.   ஆனால் இன்றைய பெண்களுக்குக்கோ தினம் தினம் பலவித போராட்டங்கள், விதவிதமான போர்களங்கள், அத்தனையையும் தனி ஒருவளாக சமாளிக்கும் ஆற்றல் பெற்றவள்!!           


கரண்டி பிடிக்கும் அதே கையால் துப்பாக்கி பிடிக்கவும் தயங்காதவள் பெண்தான்!
  
தைரியம்:

பெண்களின் தைரியத்தை பலர் நேரில் பார்த்திருக்கலாம், சிலர் அவர்களால் வாழ்கையில் மேல் நிலைக்கு வந்திருக்கலாம்,  பல ஆண்களின் வெற்றிக்கு பின்னால் பெண்கள்தான் இருந்திருக்கிறார்கள்.  உதாரணமாக குடும்பத்தில் திடிரென பிரச்சனை வந்து விட்டால் கலங்கி விடாமல் முதலில் சுதாரித்து எழுபவள் பெண்தான்..........!  கணவனையும் சோர்ந்து விடாமல் பார்த்துகொண்டு, பிரச்னைக்கு என்ன தீர்வு என்று ஆராய தொடங்கி விடுபவள் பெண்தான்.........!  தன் புன்சிரிப்பால் சூழ்நிலையை மாற்றி அடுத்த கட்டத்திற்கு போக தன் கணவனை ஊக்கபடுத்துபவள் பெண்தான்........!  பிரச்சனை பொருளாதாரமாக இருந்துவிட்டால் கொஞ்சமும் தயங்காமல் தன் கையில்  இருக்கும் தங்க வளையலை கழட்டி கணவனிடம் கொடுத்து நிலைமையை சமாளிக்க சொல்லுபவளும் பெண்தான்.........! பிரச்சனை  தங்கள் குழந்தைகளுக்கு தெரியகூடாது என்று  மறைத்து   அவர்களை உற்சாகமாக இருக்குமாறு பார்த்துகொள்பவள் பெண்தான்.........! 


இப்படி பெண்களின் சமயோசித்த செயல்களை சொல்லிக்கொண்டே போகலாம்.  

பெண்ணடிமை?:

பெண்கள் ஆணுக்கு அடிமையாக அடங்கி இருந்தார்கள் என்பதை முழுமையாக ஏற்று கொள்ளமுடியாது,  அப்படி ஒரு நிலைமை இருந்திருந்தால் பல பெண்கள் அந்த காலத்தில் சில பல புரட்சிகள் படைத்திருக்க முடியாது!  (உதாரணங்களை அடுக்கி கொண்டிருந்தால் தாம்பத்தியம் என்ற படைப்பு வேறு பாதையில்  பயணிக்க தொடங்கிவிடும், அதனால் ஒரு வரி தகவல் மட்டும் போதும் என்று நினைக்கிறேன்)  பலரும் வீட்டை விட்டு வெளியில் வந்து பல வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு புகழ் பெற்று இருந்தார்கள்.  வீட்டில் இருந்த பெண்களும் நல்ல குடும்ப தலைவிகளாக இருந்து தத்தம் பிள்ளைகளை நன்மக்களாக வளர்த்து உயர்த்தினார்கள்.

பெண்களின் மனநிலை எந்த காலத்திலும் ஒன்று தான்,  மாற்றங்கள் சூழ்நிலையை  பொறுத்து மாறுமே தவிர பெண், பெண்ணாகத்தான் எப்போதும் பரிமளிக்கிறாள்.  


தான் எப்படி வாழவேண்டும் என்பதை அந்த பெண்தான் தீர்மானிக்கவேண்டும்.   கோபுரகலசமாகவா?   குத்துவிளக்காகவா?  அல்லது சாதாரண தெருவிளக்காகவா?  என்பது அவள் முடிவிலும், அவள் வாழும் வாழ்க்கையை பொறுத்தும்தான் இருக்கிறது!
   

கணவன், மனைவி உறவு பாதிக்கபடுவது ஏதோ ஒருநாள் பிரச்சனையால் மட்டும்  ஏற்படுவது இல்லை, இதற்கு பல காரணங்கள் இருக்கின்றது.  மிக முக்கியமான காரணமாக இருப்பது ஆண்கள், பெண்கள் வளர்ந்த விதம்தான்.    


பெண்கள் வளர்ந்த விதம்:


முதலில் பெண்கள் வளர்ந்த விதத்தில் இரண்டு வகைகளை கொஞ்சமாக பார்ப்போம்.    பெண்களை அதிகமாக அடக்கி வைப்பது எப்படி தவறோ அந்த அளவிற்கு சுதந்திரம் கொடுத்து வளர்ப்பதும் தவறு என்பது என் கருத்து.  


அடக்கி வைத்து வளர்க்கப்படும் பெண்கள் எப்போது இதில் இருந்து மீள வழி பிறக்கும் என்ற எண்ணத்திலேயே வளருவார்கள், பின் திருமணம் முடிந்ததும் தன் மேல் திணிக்கப்பட்ட அடக்கு முறையை தன் கணவன் மேல் காட்ட தொடங்குவார்கள்,   ஒருவகையில் இதை  superiority complex என்றுகூட சொல்லலாம்.   தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற ஒரு வித மயக்கத்தில் நடப்பார்கள், தனது அடிமைத்தன  வளர்ப்பு கணவனுக்கு தெரிந்து விடக்கூடாது என்பதில் தொடங்கி தன் பேச்சை மட்டும்தான் கேட்கவேண்டும் என்பதில் முடியும். எதை எடுத்தாலும் சண்டை, சச்சரவு என்று தான் இருக்கும். ஒவ்வொரு சண்டையின் முடிவிலும் தற்கொலை என்ற ஆயுதம் பிரவோகிக்கப்படும்.   கணவன் அப்பாவி ஆக இருந்துவிட்டால் தப்பித்து விடுவார்,  மாறாக விவரமானவராக இருந்து  விட்டால் தினம் இங்கே தாம்பத்தியம் பயங்கரமாக அடி வாங்கும்.

மாறாக சுதந்திரமாக செல்லமாக வளர்க்கப்பட்ட பெண்களில் சிலர் திருமணதிற்கு பிறகு கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுகிறார்கள்.  புகுந்த வீட்டினரை எதிரிகளாக பார்கிறார்கள்,  மாமியார், மருமகள் சண்டையே இந்த வீட்டில் தான் அதிகமாக நடக்கிறது.  தனது விருப்பத்திற்கு ஏற்ப நடக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தை தனது கணவனிடம் காட்ட தொடங்குவாள்,  கொஞ்சம் கொஞ்சமாக தன் கணவனை தனி குடித்தனம் போக  தூண்டுவாள், கணவன் ஆரம்பத்தில் தவித்தாலும் வேறு வழி இன்றி இதற்கு உடன்பட்டு விடுவான்.  

தனியாக போனாலும் பிரச்சனை தீர்ந்து விட்டது என்றால் இல்லை என்பதுதான் பல அனுபவசாலிகளின் பதில்.  கணவன் தன்னை எப்போதும் தாங்கவேண்டும்,  சின்ன தலைவலி என்றாலும் ஓடி வந்து உபசாரம் செய்யவேண்டும்,  தன்னை ஆகா, ஓகோ என்று புகழவேண்டும், ரோட்டில் போகும்போது சும்மா கூட வேறு பெண்ணை ஏறிட்டு பார்த்து விட கூடாது என்பது  மாதிரி highly possessive ஆக இருப்பார்கள்.  மொத்தத்தில் இங்கே தாம்பத்தியம் தள்ளாடும்.

பெற்றோர்களால் பாதிக்கப்படும் பெண்கள்:


கருத்து வேறுபாடுகள் நிறைந்த எப்போதும் சண்டை போட்டுகொண்டே இருக்கும் பெற்றோர்களுக்கு மகளாக பிறந்து வளர்ந்த பெண்ணின் மனம் கவலைகள், குழப்பங்கள் நிறைந்ததாகவே  இருக்கும். வெளி பார்வைக்கு சகஜமானவளாக தோன்றினாலும், அவளது மனம் அடிக்கடி தனிமையையே நாடும்.  எதிர்காலத்தை பற்றிய பயம் அதிகமாகவே இருக்கும். படிப்பிலும் கவனம் இருக்காது, மிக குறைந்த அளவிலேயே தோழியர் இருப்பர்.  வெளி இடங்களில் சிரித்து பேசியபடியும், வீட்டில் எப்போதும் இறுக்கமாக, அமைதியாக  இருப்பார்கள். ஏன் வீட்டிற்கு வருகிறோமோ என்ற எண்ணம் ஒவ்வொருமுறை வீடு திரும்பும்போதும் மனதில் எழும்.  


கற்பனையாக ஒரு துணையை உருவாக்கி அதனுடன் சந்தோசமாக  வாழ்வதாக கருதி எப்போதும் ஒரு கற்பனை உலகில் வலம் வந்து சுகம் காணுவார்கள்.   இவர்களில் ஒரு சிலர் தாழ்வு மனப்பான்மையுடனும்,  ஒரு சிலர் உயர்வான மனப்பான்மையுடனும்   இருப்பார்கள்.  இவர்களது எதிர்கால திருமண வாழ்கையில் இதன் பாதிப்பு நிச்சயமாக   எதிரொலிக்கும்.   அந்த புகுந்த வீடும், கணவனும்  எவ்வளவு நன்றாக, நல்லவனாக  இருந்தாலும் இந்த மோசமான பாதிப்பு கண்டிப்பாக சில நேரங்களில் வெளிபட்டே தீரும்.....!!     


பல தாம்பத்தியங்கள் தடுமாற இந்த மாதிரி பாதிக்கப்பட்ட பெண்களும் ஒரு காரணம்தான்!?   ஆனால் இந்த அடிப்படை காரணம் அந்த கணவனுக்கு முழுவதுமாக தெரிய வாய்ப்பில்லை என்று தான் சொல்லவேண்டும்.  அந்த பெண்ணிற்கும் தனது ஆழ்மனதில் பதிந்தவைதான் தனது நிகழ்கால குழப்பங்களுக்கு காரணம் என்பதை உணர்ந்தாலும் பெரும்பாலும் அவளது பலவீனம் அதை ஒத்துகொள்ள விடுவது இல்லை.   விளைவு நல்ல குடும்பம், நல்ல கணவன் கிடைத்தும் அற்புதமான இந்த தாம்பத்தியம் உடைய தொடங்கிவிடுகிறது.........!!


               தவிரவும் ஒரு சில பெண்களின் குணங்கள்,  பெற்றோர்கள் மட்டும் உறவினர்களின் தவறான வழிகாட்டுதல்,  சொல்லபோனால் பக்கத்து வீட்டினர்கூட குடும்பம் பிளவுபட காரணமாக  இருந்து விடுகிறார்கள்.   அதில் முக்கியமான ஒரு சிலவற்றை தொடர்ந்து அடுத்த பதிவில் பார்க்கலாம்.   தொடர்ந்து வரும் சில தலைப்புக்கள்,  


பெண்களின் மனோபாவங்கள் 
ஆண்களின் சிறப்பியல்புகள் 
ஆண்களின் மனோபாவங்கள் 
திருமண பந்தம் (இரு குடும்பங்களின் இணைப்பு விழா)
கருத்து வேறுபாடுகள் ( பிரிவு, விவாகரத்து)
தீர்வுதான் என்ன? 
சுகமான தாம்பத்தியம் இப்படித்தான் இருக்கும்.


தொடர்ந்து படியுங்கள், இத்தனை குறித்த உங்களது விமர்சனங்களையும் (அர்ச்சனைகளையும்),  மேலான ஆலோசனைகளையும்,   கருத்துகளையும் தயவு செய்து தெரிவியுங்கள் அப்போதுதான் என்னால் பிற தலைப்புகளை நன்றாக தொடரமுடியும்.  


 காத்திருங்கள்.........!!    எழுத்துக்களை சுவாசிக்க மன்னிக்கவும் வாசிக்க......!!!   


      







       

புதன், மே 5

செல்போனில் எப்படி பேசுவது ?


செல்போன் நமது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு.  நகரம் தொடங்கி குக்கிராமம் வரை செல்போன் இல்லாத வீடே இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஆகிவிட்டது,  அவசியமான ஒன்றுதான்  என்பதில் சந்தேகம் இல்லை. வெளியே கிளம்பும் போது money purse எடுக்கிறோமோ இல்லையோ முதலில் போன் ஐ தான் எடுப்போம்.


ஆனால் செல்போன் ஐ எந்த இடத்தில் எப்படி பயன் படுத்துகிறோம் என்பதை வைத்துதான் அது இன்பமா, இம்சையா என்று சொல்ல முடியும்.


நாம் பஸ்சில் போகும்போது பல செல்போன்களின் ஒலியை கேட்கலாம். மிக ஒரு சிலரே போன்ஐ எடுத்து 'நான் பிரயாணத்தில் இருக்கிறேன், அப்புறம் கால் பண்றேன்னு' சொல்லிட்டு வச்சிடுறாங்க.   ஆனால் சிலர் இருக்காங்களே,  அவங்களை எந்த லிஸ்டில் சேர்ப்பது என்றே தெரியவில்லை.  அப்போதுதான் பேச நேரம் கிடைத்தது மாதிரி வளவளனு பேசிட்டே இருப்பாங்க,  தங்களை சுற்றி பலர்  இருக்காங்களே, அவங்களுக்கு தொந்தரவாக இருக்காதா அப்படி எல்லாம் யோசிப்பதே இல்லை.


அதைவிட கொடுமை என்னன்னா பஸ்சின் சத்தத்தில எங்கே நம்ம குரல் எடுபடாம போயிடுமோனு, வேற தொண்டை  கிழிய கத்துறது......   சில நேரம் காது கூசகூடிய வார்த்தைகளும் வந்து விழும்.....  பக்கத்தில பெண்கள் இருக்கிறாங்கனுகூட பார்ப்பது இல்லை,   அரசியல்வாதி கையில மைக் கிடைச்சமாதிரி nonstop ஆக போய்ட்டே இருக்கும் .


சமீபத்தில ஒரு பெண்மணி தனது நாத்தனாரை பற்றி தனது மற்றொரு உறவினரிடம் குறை சொல்லி சரியாக 15 நிமிடம் மூச்சு விடாம பேசினாங்க......  அவங்க வீட்டல எத்தனை பேர், என்ன வேலை பார்கிறாங்க,  அவங்க வசதி எப்படி என்பது எல்லாம் இப்ப எனக்கு அத்துபடின்னா பார்த்துகோங்க,  அந்தம்மா எவ்வளவு விவரமா பேசி இருப்பாங்க  என்று....!  இடையில சில அசிங்கமான வார்த்தைகள் வேறு!!


பொது  இடத்தில சிகரெட் பிடிக்ககூடாது என்று சட்டம் போட்ட மாதிரி பொது  இடத்தில செல்போன் பேசக்கூடாது என்று சட்டம் போட்டாலும் தேவலாம் என்று தோணுது.  அந்தளவுக்கு அநாகரீகம்.......


சிலர் நான் பாங்க்க்கு பணம் எடுக்கத்தான் போறேன் அப்படீன்ற மாதிரி மிக தெளிவா பேசினா என்னவாகும்,  திருடனை வா என்று கூப்பிடுவது போல் இருக்கும்.  மேலும் பெண்கள் குடும்ப விசயங்களை வெளியில் பேசுவதால் பல தொல்லைகளை சந்திக்க வேண்டிஇருக்கும்.  வித விதமா  எப்படி ஏமாத்துவது என்பதில் பலர் டாக்டர் பட்டமே வாங்கி இருக்காங்க என்பதை நாம் மறந்து விட கூடாது.


செல்போன் வந்ததால் பேசிகொண்டே ரயிலை கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்ததால் ரயில் மோதி இறந்த இளம்பெண்ணை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்கமுடியாது.....


பஸ், ரயிலில் போகும் போது அவசியம் ஏற்பட்டால் தவிர செல்போனில் பேசுவதை தவிர்ப்பது நலம். அப்படியே பேசினாலும் மெதுவான குரலில் ஓரிரு வார்த்தைகளுடன் முடித்துக் கொள்வது நலம்.  எங்கும் எப்போதும் நம் அந்தரங்கம் காக்கப்படவேண்டும்.


பொது இடத்தில் இருக்கும் போது செல்போன் அழைப்பு வந்தால் ஒரு நொடி தாமதித்து முக்கியமான போன் என்றால் மட்டுமே பேசவேண்டும். நம்மை பலர் உற்று நோக்குகிறார்கள் என்ற உணர்வு எப்போதும் இருந்தால் நல்லது.  வார்த்தைகளும் மெதுவாக வரும், விரைவாகவும் பேசி முடிப்போம்.


பிறரை விட காதலர்கள் ஓரளவு பரவாஇல்லை,  அடுத்தவர்கள் கேட்டுவிட கூடாது என்று வாயை கையால் மூடிக்கொண்டு பேசுகிறார்கள்....! அவர்களின் கண்களுக்கு மட்டும்தான் அருகில் இருப்பவர்கள் தெரிகிறார்கள் போல.....!!  ஆனால் மற்றவர்களின் கண்களுக்கு........!?        

திங்கள், மே 3

Real Good Friends

   நாங்களும் நல்ல நண்பர்கள்தான்......!! 

                     BIRD AND  MOUSE
           




                    என்  குடும்பத்தில மத்தவங்க எல்லாரும் ஷாப்பிங்                                                 போய்ட்டாங்க .....!!


                                     MOUSE  AND   FROG

              
                   எனக்கு தண்ணில கண்டம், பாத்து கூட்டிட்டுபோ...!!


                  DOG  AND  CHICKEN
                                                              
               ஒரு முட்டை போட இவ்வளவு கஷ்டமாடா....?!                              


                                              CAT AND  MONKEY
                                                    
        அம்மா  நான் குதிரை சவாரி போயிட்டு வரேன் டாட்டா
                         
                      CAT AND  DOG
              
                   யார் சொன்னது பூனையும் நாயும் எதிரிகள் என்று.....?

                        
                    

                     DOG & MONKEY 


எங்கள் அன்பிர்க்கும்உண்டோ அடைக்கும் தாழ்......!!


            
எங்களிடம் இல்லை நிற வேற்றுமை,  பார்த்தாவது திருந்துங்களேன் ...!!

(PHOTOS COLLECTION  என் மகன் கைங்கரியம், மிச்ச வேலை அடியேன், பிடிச்சிருக்கா?)   

ஒரு பெரிய சந்தேகம், VOTE போடறமாதிரி என் பதிவு இல்லையா???  

ஞாயிறு, மே 2

வேண்டுகோள்

 " நீண்ட பயணம் போகவேண்டும் என்று முடிவு  செய்த பின்னர்,
எந்த வழியாக   என்று பாதையை  தேடினேன்.....!
இப்போது பாதையையும் 
கண்டுகொண்டேன்!    ஆனால்
காலநிலை ஏற்றதாக  இல்லை,
பயணத்தை மட்டும் கொஞ்சம் தள்ளிவைத்து விட்டேன்...........! "  


( கவிதை இல்லைங்க!!)


பதிவுலக நண்பர்களுக்கு எனது சிறிய வேண்டுகோள் :


முதலில் எனது இடுகையை பாராட்டி நீங்கள் தொடர்ந்து அனுப்பிய ஈமெயில் மடல்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.  குறிப்பாக தாம்பத்தியம் பகுதி 2   வர ஏன் இந்த தாமதம் என்று என்னை அன்பாக கோபித்த அன்பு இதயங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் .  தனி தனியாக உங்கள் அனைவருக்கும் மடல் எழுத இயலாததால்,  எல்லோருக்கும்  சேர்த்து இந்த சிறிய விளக்கம் கொடுப்பது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.


கோடைகாலம் என்னை system   பக்கமே போக விடுவது இல்லை, காரணம் வெயில் இல்லைங்க, என் இரண்டு பசங்கதான்!    டிவி தேமே என்று இருக்க கம்ப்யூட்டர் தான் அவர்களது முழு நேர பொழுதுபோக்காக இருக்கிறது. மின்சாரதுறையின் புண்ணியத்தில் பகலில்  மூணு மணி நேரம் மட்டும்தான் அதற்கு ரெஸ்ட்.


கொஞ்சம் இரவல் வாங்கித்தான் இதை எழுதுகிறேன். (தண்டமாக 200 ரூபாய்க்கு ஐஸ்கிரீம்  அழுதிருக்கேன்)   


உங்களிடம் பகிர்ந்துகொள்ள முக்கிய இடுகைகளை மனதில் பூட்டி வைத்துள்ளேன்.   கொஞ்சம் மெதுவாக வெளியிடுகிறேன், தாமதத்திற்கு பொறுத்துகொள்ளவும்.  தொடர்ந்து ஆதரவு கொடுங்கள், காத்திருக்கிறாள் உங்கள் அன்பு தோழி 
அருவியாக கொட்ட!!  
                                                

சனி, மே 1

மே தினம்




நண்பர்கள் அனைவருக்கும்  "உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துக்கள்!!"  

ஒரு நாட்டின் வளர்ச்சியில்  பெரும் பங்கெடுக்கும் தொழிலாளிகளை நாம் இந்த நாளில் நினைவு கூறி வாழ்த்துவது நம் எல்லோரின் கடமை என்று கருதுகிறேன்.  நீங்களும் இதை சரி என்று உணர்ந்தால் கூறுங்கள் வாழ்த்துக்களை! (அவர்களின் மகத்தான உழைப்பில் நாம் பங்குகொள்ள முடியாவிட்டாலும் ஒரு வாழ்த்தையாவது ஒருவருக்கு ஒருவர் கூறுவோமே)  நன்றி.  

போலி உறவுகளின் ஈர்ப்பு...!? தாம்பத்தியம் - பாகம் 33

"இந்த ஆம்பளைங்க  ஏன்  இப்படி இருக்காங்க...????"  ரிங் ஆன செல்போனை ஆன் செய்து ஹலோ சொன்ன அடுத்த செகண்ட் இந்த கேள்வி காதை அறைந்தது? ஆ...