புதன், நவம்பர் 12

அடிக்கடி சொல்லுங்க... ஐ லவ் யூ ! தாம்பத்தியம் - பாகம் 31



காலில் சக்கரம் கட்டி ஓடிக் கொண்டிருக்கும் தம்பதியினர்  ஒரு நொடி நிதானித்து இந்த வாரத்தில் உங்கள் துணை உங்ககிட்ட எத்தனை முறை ஐ லவ் யூ சொன்னாங்க...கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க... அடடா ஒரு முறை கூட சொல்லலையா? ரொம்ப பாவமுங்க நீங்க ,  பரஸ்பரம் இதைச் சொல்லக் கூட  நேரம் , மூட்  இல்லாம என்ன தாம்பத்தியம் நடத்துரிங்களோ தெரியலன்னு வருத்தப்பட்டதுக்கு, அப்படி என்ன இதுல இருக்கு, நாங்க என்ன லவர்ஸ்ஆ , வயசு நாற்பது மேல ஆச்சு இன்னும் என்ன வேண்டிக்  கிடக்கு? அப்டி இப்டின்னு ஏகப்பட்ட சலிப்பு, புலம்பல்கள்.  ஆனா அதுக்கூட பரவாயில்லை  ‘ஐ லவ் யூ  சொன்னாத்தான் தெரியுமா லவ் பண்றேன்னு” என்று கேட்கும்  அப்பாவிகளுக்காகத்தான்  இந்த பதிவு !

கல்யாணம் முடிந்து குழந்தையும் பிறந்து பத்து வருஷம் ஆச்சு இனியென்ன  என்று ரொமான்ஸ் எல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு இரவின் நடுவில் ஐந்து நிமிட தேடலுடன் முடித்துக்கொண்டு விடிந்ததும் படுக்கையுடன் காதலையும் மடித்து ஓரமாக வைத்துவிட்டு ஆளுக்கு ஒரு பக்கமாய் பறந்துவிடுகிறார்கள். இதுதான் இன்றைய தாம்பத்தியம் ! பெரிதாக ஈர்ப்பு எதுவும் இருவரிடையே இருப்பதில்லை, அதனால்தான் நடுவில் ஏதாவது சிறு பிரச்சனை என்றாலும் கோர்ட் படியேறத்  துணிந்துவிடுகிறார்கள். இரு  மனங்களிலும் காதல் இருந்தால் மட்டுமே தாம்பத்தியம் இறுதிவரை சந்தோசமாக கழியும். மகிழ்ச்சியுடன் கூடிய தாம்பத்தியத்தில் அவர்களின் குழந்தைகளும் நன்முறையில் வளருவார்கள். எல்லாம் சரிதான் ஆரம்ப நாட்களில் இருந்த ஈர்ப்பு, காதல், கவர்ச்சி எல்லாம் எங்கையோப்  போய்விட்டது, மறுபடி அதையெல்லாம் எப்படி கொண்டு வருவது என்பது உங்கள் முன் நிற்கும் கேள்வி என்றால் விடை ‘ஐ லவ் யூ’

ஆமாங்க ஆமா ஐ லவ் யூ என்பது ஒரு மந்திரம். எப்படிப்பட்ட உடல், உள சோர்வையும் நொடியில் மாற்றக் கூடியது. உங்கள் துணையின் மீது கடலளவு நேசம் வைத்திருப்பீர்கள் ஆனால் அதை வெளிப்படுத்தத்  தெரியாமல் முழித்துக் கொண்டிருப்பீர்கள். இதற்காக கஷ்டப்பட்டு கவிதைலாம் எழுதிடாதிங்க (இருக்குற கவிஞர்கள் இம்சையே தாங்கல) :-) உங்களின் ஒட்டு மொத்த அன்பையும் வெளிப்படுத்த ஒரே வழி ஐ லவ் யூ சொல்வது தான். உங்களுக்கே உங்களுக்கான தனிமையின் போது பேச்சின் நடுவில் துணையின் கைவிரல்களைப்  பற்றி மெதுவாக ஐ லவ் யூ என்று சொல்லிப் பாருங்கள் ...நொடியில் மனதுக்குள் மத்தாப்பு வெடித்து வண்ணத்துப்பூச்சி பறக்கும் (அது எப்படி மத்தாப்புக்கும் வண்ணத்துப்பூச்சிக்கும் லாஜிக் இடிக்குதே என்றெல்லாம் அச்சு பிச்சுன்னு யோசிக்கப்படாது, பறக்கும் அவ்ளோதான்)  அடிக்கடி இப்படி பறக்க விடுங்கள்.  அப்புறம் பாருங்க,’ சாம்பார்ல உப்பு போட மறந்துப்  போச்சா, பிரெண்ட்ஸ் கூட வீக் எண்டு பார்ட்டி ஆ‘ கவலையேப்  படாதிங்க, உங்க துணைக்கு கோபமே வராது.

பிடிக்காத குணம் துணையிடம் இருக்கிறதா, அதை நினைத்து கோபம் எரிச்சல் அடையாமல் சிறு புன்னகை, கூடவே ஒரு ஐ லவ் யூ வுடன் அணுகுங்கள். அப்படியே அந்த பிடிக்காத குணத்தை நாசுக்காக வெளிப்படுத்துங்கள். இந்த அணுகுமுறையால் அதுவரை மாறவே வாய்ப்பில்லை என்பதை  ‘ஏன் மாறினால்தான் என்ன’ என்று துணையை யோசிக்கத் தூண்டும், பின் மெல்ல மெல்ல மாறவும் செய்வார்கள்.  இம்முறையில் மற்றொரு அனுகூலமும் இருக்கிறது ஐ லவ் யூ என்று சொல்லும்போது ஆட்டமேட்டிக்காக உங்கள் குரலிலும் ஒரு மென்மை வந்துவிடும், அதன்பின்  நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் தேனில் தோய்த்தெடுத்தவையாக வெளி வரும். அப்புறம் என்ன நீங்கள் சுட்டிக் காட்டும் குறை, குற்றம் சொல்வதை போலவே தெரியாது ஏதோ ஆலோசனைச்  சொல்வதை போலவேத்  தோன்றும். கடைசியாக  ‘சீக்கிரம் சரிபண்ணிக்கிறேன் டியர்’ என்பதில் வந்து முடியும். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் இது எவ்வளவு சுலபமான முறை என்று.      

இன்னொரு மேஜிக்கும் இதில் நிகழும் இயல்பாகவே நீங்கள் கோபம் கொண்டவராகவோ அல்லது எதிர்மறை எண்ணம் கொண்டவராகவோ அல்லது தாழ்வு மனப்பான்மை கொண்டவராகவோ இருந்தீர்கள் என்றால் அடிக்கடி சொல்லும் ஐ லவ் யூ உங்களையும் உற்சாகமான ஆளாக மாற்றிவிடும். (முகத்தை கடுகடுன்னு வச்சுட்டு குரல்ல கடுமையை ஏத்திகிட்டு பல்ல கடிச்சிட்டு வெடுக்குனா ஐ லவ் யூ சொல்விங்க!?) சொல்ல ஆரம்பிக்கும்போதே லேசான சிரிப்பு கொஞ்சம் வெட்கம் தன்னாலே வந்து ஒட்டிக்காதா என்ன .  ஐ லவ் யு சொல்லிச் சொல்லி அது ஒரு பயிற்சியாகவே மாறி, உங்க முகமும் பிரகாசமாய் அழகாய் ஜொலிக்கும் ,  நம்புங்க !

அன்பை வெளிப்படுத்தத்  தெரியாததால் தான் பல தம்பதியர் ஒரே வீட்டில் எலியும் பூனையுமாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்கள். மௌனமாக இருப்பது நல்லது என்று அன்பை வெளிக்காட்டாமல் இருந்தால் அன்பில்லாதவர் என்ற தோற்றம் தான் கிடைக்கும். எவ்வளவு செஞ்சாலும் அன்பா ஒரு வார்த்தை கிடையாது என்ற சலிப்பு  தான் ஏற்படும். இத்தகைய பல சலிப்புகள் ஒன்று சேர்ந்தால் என்னவாகும், அன்பான வார்த்தை எங்கிருந்து வருகிறதோ அங்கே பாயும் என்பதுதானே இயல்பு. மனித மனமே ஏதோ ஒரு அங்கீகாரத்திற்காகத்தான் போராடுகிறது. தம்பதியருக்குள் அங்கீகாரம் என்பது அன்பான வார்த்தைகளாக இருக்கிறது. சாப்பிட்டு முடித்ததும் கணவன் சாப்பாடு நல்லா இருக்கு’ என்பதற்கு பதில்  ‘வெகு ஜோர்டா செல்லம்’ என்று சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது தானே. தம்பதியருக்குள் நெருக்கம் அதிகரிக்க வார்த்தைகள் அருமையாக உதவும்.

FM ல ஒரு விளம்பரம்.  போனில் மனைவியை அழைத்து ஐ லவ் யூ என்பான் கணவன். அதற்கு மனைவி சிரித்துக் கொண்டே 'என்ன திடீர்னு, அடுத்த ரூம்ல தானே இருக்கிங்க நேர்ல வந்து சொல்லலாமே என்பாள். 'போன்ல உன் குரல் கேட்கிறப்போ அவ்ளோ அழகா இருக்கு ' என்று கணவன் சொல்ல அதன் பின் தொடரும்  போன் உரையாடல் அவ்ளோ இனிமையாக  படு ரொமாண்டிக்காக இருக்கும். இப்படிப்பட்ட சின்னச்  சின்ன பேச்சுக்கள் மூலம் தாம்பத்தியத்தை அருமையாக கொண்டுச் செல்ல முடியும். சந்தோசத்தை வெளியே எங்கும் தேட வேண்டாம் நம்மிடமே இருக்கிறது என்பதை தம்பதியர் புரிந்துக் கொள்ள வேண்டும். இயந்திர உலகில் கணவன் மனைவி இருவரும் வேலை பார்க்கும் நிலை, வீட்டிற்கு தூங்குவதற்காக மட்டுமே வருவதைப்  போலவே இன்றைய சூழல் இருக்கிறது. வேலையின் நிமித்தம் தொலைதூரம் பிரிந்திருந்தாலும் இணைக்கும் பாலமாக தொலைபேசி இருக்கிறது. கிடைக்கும் நேரத்தில் பேசும் பேச்சுகளின் நடுநடுவே ஐ லவ் யூ வும் போட்டுக்  கோங்க!!

ஆமா செய்றதெல்லாம் செஞ்சுட்டு ஐ லவ் யூ சொன்னா சரியாப்  போச்சா என்று சண்டையும் பிடிப்பாள் பெண், உடனே ஆண்கள் பின்வாங்கக்கூடாது, அப்போ ஒரு பேச்சு இப்போ ஒரு பேச்சு இல்ல எப்போவும் ஒரே பேச்சுன்ற மாதிரி ஸ்டெடியா நிக்கணும். வெளியே சண்டை பிடிச்சாலும் உள்ளுக்குள் ரசிக்கவே செய்வாள் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

தோல்வி இழப்பு போன்ற சூழலில் நானிருக்கிறேன் என்று தோள் சாய்த்துச்  சொல்லும் ஐ லவ் யூ வின் ஆறுதலுக்கு ஈடு வேறில்லை. துணையை தேற்றுவதை முழு மனதுடன் செய்யுங்கள். தவிக்கும் உள்ளத்திற்கு இது சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொடுக்கும். அன்பை நிலை நிறுத்தும்.

உங்களிடம் பிடிக்காததையும் பிடித்ததாக மாற்றும் சக்தி இந்த ஐ லவ் யூ க்கு உண்டு.

ஏதாவது பிரச்சனை திட்ட வேண்டும் என்று தோன்றினாலும் நீங்கள் சொன்ன ஐ லவ் யூ க்களை நினைத்து சே அவள்/அவர் நம் மீது அவ்ளோ காதலுடன் இருக்கும் போது எப்படி திட்ட என பின்வாங்கவே தோன்றும். 

ஆனால்  

ஐ லவ் யூ சொன்னா காரியம் சாதித்துவிடலாம் என்று மனதளவில் இல்லாமல் உதட்டளவில் பேசுபவர்களின் சாயம் ஒரு நாள் வெளுத்துவிடும். அதன் பிறகு உண்மையான அன்புடன் ஐ லவ் யூ சொன்னாலும் அது நடிப்பாகவே தெரியும், தாம்பத்தியம் சிதையும். கவனம் ! காதலும் அன்பும் தானாகப்  பெருகுவதில்லை இரு மனமும் இணையும் போதே சாத்தியமாகிறது. நீங்கள் அன்பு செலுத்தினால் பதிலுக்கு அன்பு கிடைக்கும், நீங்கள் போலியாக அன்பு காட்டினால் போலியான அன்பையே பதிலாக பெறுவீர்கள்...என்பதை உணர்ந்து மனபூர்வமாக அன்பு செலுத்துங்கள் காதலைக்  கொண்டாடுங்கள் ...உங்களின் அந்திமம் வரை !!       

98 சதவீத பெண்களின் எதிர்ப்பார்ப்பு என்ன என்று தெரியுமா ? தங்களின் மீதுள்ள காதலை அடிக்கடி கணவன் வார்த்தைகளால் வெளிப்படுத்த வேண்டும் என்பதே. இதே அவர்களின் விருப்பமும்... இவை கிடைக்காத போதே விரக்தியின் எல்லைக்கு சென்று 40% பேர் விவாகரத்து கோருகிறார்கள் 42%  பேர் வேறொரு உறவை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அந்த உறவு வேறு ஆணுடன் இருக்கலாம் அல்லது தங்கள் குழந்தையின் மேல் அதிக கவனம் செலுத்தி அதனுடன் மட்டும் நேரத்தை செலவழிக்கலாம் அல்லது ஏதோ ஒரு வேலையில்/தொழிலில்  தங்களை முழுமையாக ஈடுப்படுத்திக் கொள்ளலாம்.

ஆக எவ்விதமாக பார்த்தாலும் கணவனை ஒரு பொருட்டாக எண்ணாமல் தவிர்த்து விடுகிறார்கள் என்பதே இதன் அர்த்தம். தம்பதிகளுக்கிடையே பேசப்படும் வார்த்தைகளின் முக்கியத்துவத்தைப் புரிந்துக் கொள்ளுங்கள். சந்தோசமாக தாம்பத்தியத்தை கொண்டுச் செல்லுங்கள்.

வளவளனு எல்லாம் என்னால அன்பாகப் பேசமுடியாது... பேசவும் தெரியாது... என்பவர்களுக்காகவே உருவாக்கப் பட்டது தான் இந்த ஐ லவ் யூ !

சோ... காசா பணமா... சும்மா சொல்லுங்க... அடிக்கடி ஐ... லவ்... யூ... 
                                                                          
                                                    * * *
                                                            
தொடர்ந்து பேசுகிறேன்...

உங்களின் 'மனதோடு மட்டும்'' 
கௌசல்யா 

  



புதன், செப்டம்பர் 10

ஜீன்ஸ் பெண்களுக்கு தைரியத்தைக் கொடுக்கிறது - விகடன் கட்டுரையின் அபத்தம்!?




ஜீன்ஸ் பெண்களுக்கு தைரியத்தைக் கொடுக்கிறது -  விகடன் கட்டுரையின் அபத்தம்!?

பெண்களுக்கு தைரியத்தைக் கொடுப்பது ஜீன்ஸ் ஆ புடவையா என்று பட்டிமன்றம் வைத்தால் தோற்பது புடவையாக இருக்குமோ என்று புடவைகளின் சார்பாகப்  புலம்ப ஆரம்பித்ததின் விளைவே எனது இக்கட்டுரை! மூன்று வருடங்களுக்கு முன் ‘ஆபத்தான கலாச்சாரம்’ என்று நான் எழுதியப்  பதிவுக்கு ஒரு தோழி எதிர்பதிவு(கள்) எழுதி இருந்தார், அதில் ஜீன்ஸ் உடையை ஆஹா ஓஹோன்னுப்  புகழ்ந்துத்  தள்ளினார். வெளிநாட்டில் வசிக்கும் அவர் அப்படி எழுதியதில் எனக்கு பெரிதாக வியப்பேதுமில்லை... அதற்குப்பின் ஜீன்ஸைப்  பற்றி அதிசயப்படும்படியான ஒரு எழுத்தை இப்போதுதான் படிக்கிறேன். ஆனந்த விகடனில் ‘பேசாத பேச்செல்லாம்’ தொடரின் போன வார(3-9-14) கட்டுரையை தெரியாமப்படிச்சுத் தொலைச்சுட்டேன், அதுல இருந்து மண்டைக்குள்ள ஒரு வண்டு பிராண்டிக்கிட்டே இருக்கு. சரி நம்ம கருத்து என்னாங்கிறதையும் பதிய வச்சுடுவோம்னு இதோ எழுதியே முடிச்சுட்டேன். அந்த மகா அற்புதக் கட்டுரையை படிக்காதவங்களுக்காக அதுல சிலவரிகள அங்க இங்கக்  குறிப்பிட்டு இருக்கிறேன். (நன்றி விகடன்)

அந்த கட்டுரையாசிரியர் தனது ஆறு வயது மகளுக்கு , தனக்குப்  பிடித்த உடையை தேர்ந்தெடுக்கும் உரிமை/சுதந்திரத்தைக்  கொடுத்திருக்கிறார் என்பதை கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தார். பாராட்டவேண்டிய ஒரே விஷயம் இதுமட்டும்தான். அதுக்குபிறகு அந்த கட்டுரை சென்றவிதம் ஒரு வித எரிச்சலை ஏற்படுத்தியது......   அந்த பெண் குழந்தை விளையாடுறப்ப தன்னோட டிரஸ் மேல ஒரு துண்டை தாவணியா  போட்டுக்கிட்டுச்  சமைக்கிற மாதிரி, குழந்தை(பொம்மை) வளர்க்குற மாதிரியும் விளையாண்டுச்சாம், அதே குழந்தை குட்டி டிரௌசர் போட ஆரம்பிச்சப்ப ரொம்ப வீரமா தைரியமா கைல கேமரா புடிச்சிட்டு காடு  மலை எல்லாம் சுத்துவேன்னு சொல்லிச்சாம். இதுல இருந்து கட்டுரையாசிரியர்  புரிஞ்சிகிட்டது என்னனா “சர்வ நிச்சயமா நம் உடைக்கும் , நம் எண்ணத்துக்கும் தொடர்பு இருக்கு” அப்டின்றதானாம்...புடவைக்  கட்டுனா சமையல்கட்டோட நம்ம எண்ணம் நின்னு போயிடுமாம். புடவைல இருந்து அப்டியே சுடி, சல்வார்னு ஒவ்வொன்னா மாறி ஜீன்ஸ் போட்டப்போ மனசு அப்டியே ச்ச்ச்சும்மா ஜிவ்வுனு அதோ அந்த பறவையப்  போல பற, இதோ இந்த மானைப்  போல ஓடு, எமனே எதிர்ல வந்தாலும் எட்டி உத ன்ற மாதிரி வீரமும் தைரியமும் நமக்குள்ள போட்டிப் போட்டு வந்துடுமாம். 

‘புடவைய கட்டிண்ட்டு இனியும் வீட்டுக்குள்ள கோழையைப்  போல அடங்கி கிடக்காதிங்க பெண்களே... ஜீன்ஸ் போட்டுக்கிட்டு சுதந்திர வானில் ஒரு பறவையாய் பறந்துத்திரியுங்கள்’ என்று பெண்களுக்கு அறைகூவல் விடுக்கும் இவரை கண்டிப்பாக  பெண்ணிய இயக்கங்கள் எல்லாம் ஒன்னுக் கூடி ஒரு பாராட்டுவிழா நடத்தியே ஆகணும். புடவையைப்  பத்தி ஒரு பெரிய லெக்ட்சர் வேறக்  கொடுத்திருந்தாங்க, அப்டியே அசந்தேப்  போயிட்டேன்.

புடவை என்னும் மகாஇம்சை

புடவைக்  கட்டுனா நிமிசத்துக்கு ஒரு முறை இழுத்து இழுத்து விட்டுகிட்டு, வயிறு,இடிப்பு தெரியுதான்னு அட்ஜெஸ்ட் பண்ணுவதால வேலைல கவனம் சிதறிப் போயிடுமாம். குனிய முடியாது, வேகமா நடக்க முடியாது, வண்டி ஓட்ட முடியாது பஸ்ல ஏற முடியாது... இப்படி ஏகப்பட்ட முடியாதுகள் !!! அதைவிட முக்கியமா  வேலைக்கு போறப்  பெண்கள் ரெஸ்ட் ரூம் போறதும், நாப்கின் மாத்துறதும் மகா கொடுமையா இருக்குமாம். புடவை ஈரமாயிட்டாக்  காயுற வரை அங்கேயே நிக்கணுமாம் என்று எழுதியது எல்லாம் ரொம்பவே ஓவர்! . சொல்லப்போனால் இது போன்ற சமயத்தில் புடவை ஒருவிதத்தில் வசதியும் சுகாதாரமானதும் என்பது பெண்களுக்கு புரியும், பெண்ணியவாதிகளுக்குப் புரியாது. (அதுவும் தவிர புடவை கசங்கிடும் என்றும் காரணம் சொல்லமுடியாது, ஏன்னா அந்த நாட்களில் மொட மொடன்னு கஞ்சிப்  போட்ட காட்டன் புடவையோ, பட்டு புடவையோ நாம கட்ட மாட்டோம்)

கடைசியா நம்மூர் காலநிலைக்கு புடவை கொஞ்சமும் செட் ஆகாதுன்னு ஒரே போடா போட்டாங்க...(ஜீன்ஸ் அப்படியே ச்ச்சும்மா சில்லுனு இருக்குமாமாம்)

* பெண்கள் பிறர் முன் கம்பீரமா தெரியனுமா, ஜீன்ஸ் அணியுங்கள்!

* தேங்காய் வேணுமா, ஜீன்ஸ் போடுங்க, அதாவது தென்னை மரத்துல ஏறி தேங்காய் பறிக்கச் சொன்னாலும் பறிக்கத் தோணும்.

* ஓடலாம் ஆடலாம் மலை ஏறலாம் பைக் ஓட்டலாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். (சமையல் மட்டும் செய்யக்கூடாது, தெய்வக்குத்தம் ஆகிடும் ஆமா)

* வெட்கம் பயம் கண்டிப்பாக  இருக்கவே இருக்காது. துணிச்சல் பொங்கும். எவனாவது கிண்டல் பண்ணினாலும் என்னடா நினைச்சுட்டு இருக்கேனு சட்டையைப்  புடிச்சு கேட்க முடியும். ஆனா தாவணி, சேலை கட்டினா பயத்துல நடுங்கியேச்  செத்துடுவாள். (இந்த இடத்துல சமீபத்திய பாலியல் கொடுமைகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை)L

* யாரையும் லவ் பண்ணலாம், அதுமட்டுமில்லாம லவ் பண்றதப்  பத்தி வீட்ல சொல்ற அளவுக்கு தைரியத்தையும் ஜீன்ஸ் கொடுக்கும். (ஜீன்ஸ் போடும் பெண்களின் பெற்றோர்கள் கொடுத்து வச்சவங்க)

ம்ம்...என்னத்த சொல்ல !! இப்படியெல்லாம் ஜீன்ஸ்ஸோட பெருமைகளைப்  பாயிண்ட் பாயிண்டா புட்டுப் புட்டு வச்சது சாட்சாத் அந்த கட்டுரையாசிரியரே தான். (அடைப்பு குறிக்குள் இருப்பது மட்டும் அடியேன்)

இவ்வளவையும் சொல்லிட்டு பாலியல் வன்முறை உடையால் ஏற்படுவது இல்லை என்று சில கருத்துக்களையம்  சொல்லி இருந்தாங்க. எனது கருத்தும் இதே தான் என்றாலும், ஜீன்ஸ் குறித்தான அவர்களின் எண்ணத்திற்கு சாதகமாகவே இக்கருத்தையும் சொன்னதாக எனக்கு தோன்றியது.

ஆகச் சிறந்த கட்டுரையின் இறுதி வரியில் 'சோர்வைத் தொடருவதும், புத்துணர்ச்சியுடன் ஓடத்தொடங்குவதும் நம் தேர்வில் இருக்கிறது தோழிகளே' என்று அந்த கட்டுரையை முடித்திருப்பதன் மூலம் ஜீன்ஸ் மட்டுமே தேர்ந்தெடுங்கள் என்று குறிப்பால் உணர்த்திவிட்டார். (ஒருவேளை ஜீன்ஸ் கடை ஏதும் புதுசா திறந்திருக்கிறாரா என்று தெரியவில்லை)J

பெண்ணியம் மட்டுமே பேசும் பெண்களே...

பூ, பொட்டு, புடவை, வளையல், கம்மல் இதெல்லாம் போட்டுக் கொள்வது பெண்ணடிமைத்தனம் என்றுச் சொல்லி இதை எல்லாம் தவிர்த்து ஜீன்ஸ் போட்டு இதுதான் பெண்ணியம் அப்படினு என்ன கர்மத்தையும் சொல்லிக்கோங்க...ஆனால்  நமது பாரம்பரியத்தை நமது அடையாளத்தை கேலிச்  செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். 

ஜீன்ஸ் என்பது மேல்நாட்டினர் உடை, அவர்கள் நாட்டின் குளிர்காலத்திற்கு ஏற்றாற்போல் வடிவமைத்திருக்கிறார்கள். அன்றில் இருந்து இன்று வரை ஒவ்வொன்றாக அவர்களை பின்பற்றி வருவது ஒன்று மட்டும் தான் நாகரீகம் என்று இருப்பவர்கள் இருந்துவிட்டு போங்கள், ஜனநாயக நாடு இது, ஆனால் நமது பாரம்பரிய உடையை அவமானப்படுத்துவது என்ற உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது ??!!

பெண்கள் என்றால் அவங்க ஓடணும் , பாடணும் , ஆடணும் என்று புதிதாக  ஒரு பிம்பத்தை பெண்ணுக்கு ஏற்படுத்தும் இது போன்ற முயற்சிகள் தேவையற்றது. ஒரு கட்டுரை நல்லதை விதைக்காவிட்டாலும் பரவாயில்லை அபத்தங்களைப்  பேசாமலாவது இருக்கலாம்.

நீங்கள் புதுமையானவர்கள் என்பதற்காக நம் பழமையைக்  குறைச் சொல்லாதீர்கள்...பலரும் பெரிதும் மதிக்கும் மேற்குலகமே இன்று நம்மை பார்த்து மாறிக் கொண்டிருக்கிறார்கள்...ஏன் நாமே இன்று இயற்கை விவசாயம், கம்பு சோளம், திணை, குதிரவாலி, சாமை என்று மாறிக் கொண்டிருக்கிறோமே...!

எந்த உடையாக இருந்தாலும் அதை அணிபவரின் அப்போதைய மனநிலையைப் பொறுத்தே அன்றைய அவரது செயல்பாடு இருக்கலாம். அதற்காக  உடை அணிந்ததும் வீரம் வரும் என்பது எல்லாம் மகா அபத்தம். ஒருவரின் கல்வி, அறிவு, திறமை இவை தராத தைரியத்தையா உடை கொடுத்துவிடும். அவயங்களை மிகவும் இறுக்கிப் பிடிக்காத நாகரீகமான எந்த உடையும் பெண்ணுக்கு கம்பீரத்தைக்  கொடுக்கும். அனைத்தையும் விட அவரவர் உடலுக்கு பொருத்தமான உடையை தேர்ந்தெடுத்து அணிவது மிக முக்கியம். ஜீன்ஸ், சுடி, சல்வார், புடவை எதாக இருந்தாலும் அணியும் விதத்தைப்  பொருத்தே பெண்ணுக்கு அழகையும் கம்பீரத்தையும் கொடுக்கும். நாம் பார்க்கும் வேலைக்கு ஏற்ப உடையை தேர்ந்தெடுத்து அணியலாம், உடலுக்கு சிறிதும் பொருந்தாத உடைகளை அணிந்தால் அதுவே கேலிக்கூத்தாகிவிடும், அது புடவையாக இருந்தாலுமே!

நவநாகரீக உடைகள் மட்டும்தான் பெண்ணுக்கு தைரியத்தைக்  கொடுக்கும் என்று குருட்டாம்போக்கில் எழுதப் படும் இது போன்ற கட்டுரைகள் உண்மையில் ஆபத்தானவை.

பெண்களின் சாதனை உடையால் மட்டுமே நிர்ணயிக்கப் படுவதில்லை  

புடவை கட்டத்தெரியாது (தெரியும்ன்றது வேற விஷயம்) என்று சொல்வதே 90களில் பெருமையாகத்  தெரிந்தது, ஆனால் நகரங்களில் இப்போது புடவையே தேவையில்லை என்று தூக்கி எறிவதைபோன்ற எழுத்துக்கள், பேச்சுகள் அதிகரித்து வருவதைப் போல இருக்கிறது. பொருளாதாரத் தேவைக்கென்று யாரையும் சார்ந்து நிற்காமல் சுயத்தொழில் மூலமாக உழைத்து தன் குடும்பத்தை உயர்த்தி உன்னத நிலைக்கு கொண்டுவந்த பல பெண்கள் இன்று நம் கண்முன்னே பெண்மையைப்  பெருமைப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கிராமங்களில் இன்று எந்த பெண்ணும் வருமானம் இல்லாமல் இருப்பதில்லை, விவசாயம் , பீடி , செங்கல் தயாரிப்பு போன்ற தொழில்கள் முதல் மகளிர் குழுக்கள் மூலம் லோன் பெற்று சுயத்தொழில் ஆரம்பித்து   அசத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பலரும் நவநாகரீக உடை அணிந்தவர்கள் அல்ல.

அதுவும் தவிர கட்டுரையில் குறிப்பிட்ட மாதிரி, புடவை கட்ட நேரமாகும் என்பது எல்லாம் ஒரு காரணமே இல்லை, இன்றைய பெண்கள் மேக்கப் என்ற பெயரில் முகத்திற்கு மட்டும் செலவு செய்யும் நேரம் குறைந்தபட்சம் ஒருமணிநேரம் (நீயா நானா ல இளம்பெண்கள்  சொன்ன ஸ்டேட்மென்ட்). முகத்துக்கு அவ்ளோ நேரம் செலவு பண்ற பெண்கள் புடவை கட்ட ஒரு பத்து நிமிஷம் செலவு செய்வதில் தப்பில்லை. 

புடவைக்கு ஆதரவாக என்பதற்காக இப்பதிவினை நான் எழுதவில்லை, புடவை பெண்ணடிமைத்தனத்தின் அடையாளம் என்பது போன்றுக்  குறிப்பிட்டு இருக்கும் இந்த கட்டுரையை குறித்த எனது கோபத்தை, ஆதங்கத்தை இங்கே வரிகளாக்கி இருக்கிறேன். அவ்வளவே! 

இறுதியாக 

ஜீன்ஸ் அணிவதால் உடல் ரீதியிலான பல பிரிச்னைகள் ஏற்படக்கூடும் என்பது  மருத்துவர்களின் கடுமையான  எச்சரிக்கை .  மக்கள் நலனில் அக்கறை இருக்கிறது என்பதை போன்று 'டாக்டர் விகடன்' வெளியிடும் விகடன் குழுமம் இது போன்றப்  படு அபத்தமான கட்டுரையை எப்படி பிரசுரித்தது என்று புரியவில்லை. இளைஞர்கள் பலர் விரும்பிப்  படிக்கும் பிரபலமான பத்திரிக்கையான விகடனின் இந்நிலை வருத்ததிற்குரியது.  

ஜீன்ஸ் அணிவதால் ஏற்படும் உடல் உபாதைகள் குறித்துத்  தெரிந்துக் கொள்ள இணையத்தில் ஏராளமான கட்டுரைகள் குவிந்துக்  கிடக்கின்றன.  படித்துப் பாருங்கள் . 

கட்டுரையாசிரியர் ப்ரியா தம்பி அவர்களே! 

உங்களுக்கு சரியென்றுப் படுவதை ஒட்டுமொத்த பெண்களின் கருத்தாக எழுதுவது எப்படி சரியாகும். ஜீன்ஸ் தைரியம் தரும் என்று எழுதி இளம் சமுதாயத்தைக்  குழப்பாதீர்கள். பெண்களின் ஆடை இன்னைக்கு கடும் விமர்சனத்துக்கும் விவாதத்திற்கு உள்ளாகிவிட்டது என்பதை மனதில் வைத்து அதீத அக்கறையுடன் எழுத வேண்டிய சூழலில் இருக்கிறோம்...உங்களை பலரும் வாசிக்கிறார்கள் என்று ஒரு சார்பாக மட்டும் தயவு செய்து இனியும் எழுதி விடாதீர்கள். மிக அருமையான ஆளுமை நீங்கள், வாய்ப்பை சரிவர பயன்படுத்திக் கொள்ளுங்கள். பெண்களைப்  பற்றி பேச நிறைய இருக்கிறது, எதுவும் பேசப்படாமல் போய்விடக் கூடாது ...தொடர்ந்து பேசுங்கள்...நாங்கள் பேசாத பேச்சையெல்லாம் ...! நன்றி தோழி.



பிரியங்களுடன் 

கௌசல்யா 


திங்கள், செப்டம்பர் 1

நினைவே ஒரு சங்கீதம் - MJ

என் நினைவே ...

கடந்த ஜூன் 25 நினைவு தினத்தன்று எழுத வேண்டிய பதிவு, உன்னை பற்றிய நினைவுகளை எழுதவும் நேரம் இன்றி வேலைகளுக்குள் மூழ்கி போன என்னை, ‘என் பிறந்த தினத்தன்றாவது  வந்து எழுதுறியா’ என்று மிரட்டி கைப்பிடித்து இழுத்து வந்து எழுத வைத்ததும் அதே நினைவுகள் தான். பிறந்த தினமான ஆகஸ்ட் 29 அன்று எழுதி இதோ இன்று போஸ்ட் செய்தாலும் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது...வருடத்தில் ஏதோ ஒரு நாளில் உன்னைப்  பற்றி ஏதாவது கிறுக்கிக் கொண்டுத்தான் இருக்கப் போகிறேன்... உன்னை கொண்டாட அல்ல இந்த நினைவு நாள், பிறந்தநாள் எல்லாம்...அவற்றை எல்லாம் வழக்கம் போல மற்றொரு நாளாகவே கடந்து விடுகிறேன். ஆனால் என்னுள் நீ உயிர்ப்புடன் இருக்கிறாய் என்பதை இந்த ஒரு நாளில் பதிய வைத்து என் உயிர்ப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவேனும் எழுதுகிறேன் ... முன்பு உனது  சங்கீதம் பல நினைவுகளை கிளறிவிட்டுச் செல்லும், இப்போது உனது நினைவே ஒரு சங்கீதம் என்றாகிவிட்டது!! 


கரடு முரடான வாழ்க்கை பாதையில்  பஞ்சுப் பொதிகளை இறைத்து போட்டிருக்கிறதே உனது இசை... இதில் கடந்த ஐந்து வருடமாக இன்னும் அதிகமாக உன்னை நெருங்கிவிட்டேன் என தோன்றுகிறது... ஆன்மாவால் இறுகத் தழுவிக் கொண்டிருக்கிறாய்.  என்னை மட்டுமல்ல என்னைப்போல பல்லாயிரம் பேர் தினமும் ஏதோ ஒரு விதத்தில்  உன்னுடன் பயணித்துக் கொண்டு தானே இருக்கிறார்கள். உனது பெயர் தாங்கிய இந்த  பேஸ்புக் தளத்தில்  யாராலோ போடப்படும் உன்னை பற்றிய தகவலுக்கும் விழுந்தோடி வந்து லைக் கொடுப்பதும் கமென்ட் பண்ணுவது என்று உன்னுடன் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களாக வருகிறார்கள் , ரசிக்கிறார்கள், பேசுகிறார்கள், சிரிக்கிறார்கள் சென்று விடுகிறார்கள், அங்கே மறுமொழி கொடுக்க உன் போல் யாரும் இல்லை என்று எங்களுக்குத்  தெரியும், மறுமொழிக்காக வருபவர்கள் அல்லவே நாங்கள்.  உணர்வாய் , காற்றாய், இசையாய் எங்களை சுற்றி வியாபித்து இருக்கும் உன்னை, உன் இருப்பை தவிர்த்து வாழ்வது உன் ரசிகர்களுக்கு எங்கணம் இயலும் !

உன்னை பற்றிய பல வித வதந்திகள் போலவே உன் இறப்பும் ஒரு வதந்தியாக இருந்துவிடாதா  என்று இன்றும் எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள்... உண்மைதானே உன்னை உனக்காகவே ரசித்தவர்கள் ஆயிற்றே ... இசை, பாடல், குரல் எல்லாம் தாண்டியும் உன்னை நேசிக்கிறார்களே...அவர்களுக்காக நீ செய்ததை போல வேறு யாரும் செய்திருப்பார்களா என்ன...எதிர்பார்ப்பிலேயே வாழும் மனித கூட்டத்திற்கு இந்த நேசம் புரியாது...எங்கோ இருந்து எங்கள்  மனதை ஆளும் உன் ஆன்மா அப்படிப்பட்டவர்களை தவிர்க்கவும்  கற்றுத்தந்திருக்கிறதே. போதும் இவ்வாழ்க்கை என சோர்ந்து விழுந்தப்  போதெல்லாம் பிடித்துத் தூக்கிவிட்டாய்,  நடுவில் போக எண்ணாதே நிறைவாய் வாழ்ந்துவிடு என காதில் ஓதிக் கொண்டே இருக்கிறாய்... வாழ்க்கையை வாழ சொல்லித்தருகிறாய்.......

என் உலகம் அழகானது... உனக்குத் தெரியும், அது உன்னால் தான் என்று !! எனது சிறுவயது முதல் அதை எவ்வாறெல்லாம்  வடிவமைத்துக் கொண்டிருக்கிறாய் என்பதையும் அறிவாய் தானே... மரம், செடி கொடி, பூக்கள் பறவை , விலங்கு மழை மலை  என  இயற்கையின் அற்புதங்கள் அனைத்தையும் வெறிப் பிடித்து  நேசிக்கிறேன் , உன்னைப் போலவே ! 

உன் மீதான நேசம் புரிதலுக்கு உட்படாதது, என் எழுத்துக்கள் அதிக உணர்ச்சிவசபட்டதை போல தெரியும், தெரியட்டுமே ... கோவில் கோவிலாக அலைந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனின் முன்னால்  திடீரென்று கடவுள் வந்து நின்றால்   செய்வதறியாது ஒன்றும் பேசாமல்  மெய்சிலிர்த்து கண்ணீர் வழிய காலடியில் பூமி நழுவ விழிமூடி இருகரம் கூப்பி சாஸ்டாங்கமாக அத் தேவனின் பாதத்தில் விழுந்துவிடுவான். பரவச உணர்வுக்குள் ஆட்படும் அச்சமயத்தில் அறிவுக்கு அங்கே வேலை இல்லை...'நான்' என்பதை மறந்து சகலமும் அவனே என்று அவனிடம் சரணாகதி அடைவதே தானே பேரின்பம். இதை பக்தி என்பதும் அசட்டுத்தனம் என்பதும் அவரவர் புரிதல். 

உன் ரசிகர்களாகிய நாங்களும் இப்படியே தான்... எதிர்பார்ப்பு இல்லா உள்ளங்கள் இவை, அதீத அன்பால் சூழப்பட்ட உலகம் இது...அதீத அன்பு தவறென்று வாதிடும் மேதாவிகளை விட்டு என்றும் ஒதுங்கியே இருக்கிறோம்.  நாள்தோறும் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறோம் உன்னை... உனது இருப்பும் இறப்பும் எங்களை ஒரே நிலையிலேயே வைத்திருக்கின்றது...ஆமாம் நீ தங்கப்பேழையில் உறங்குவதாக எண்ணிக் கொள்வதிலும்  ஒரு நிறைவு இருக்கத்தான் செய்கிறது.

சிறுவயதில் அடிக்கடி ஒரு கனவு வரும் உண்மையில் அது கனவு அல்ல பகல் பொழுதின் கற்பனை என்பதுதான் சரி. கண்டம் விட்டு கண்டம் கடல் தாண்டி நடுவில் இருக்கும் அத்தனை நாட்டையும் ஊரையும் தாண்டி உலகின் இந்த ஒரு  மூலையில் இருக்கும் என் வீட்டிற்கு நீ வருவதாகவும் என் முன்னால் பாடுவதைப்  போன்றதுமான என் கனவிற்குத்தான் எவ்வளவு பேராசை !! கனவு வந்த நாள் அன்று கரைபுரண்டோடிய மகிழ்ச்சியை எவ்வாறு நான் வார்த்தைப்படுத்துவது, தெரியவில்லை. இந்த கனவு என் கல்லூரி காலத்தையும்  உற்சாகப்படுத்தி இருக்கிறது... சாத்தியமில்லாததையும் சாதித்துப் பார்ப்பதற்குப்  பெயர் தானே கனவு.  எட்டிய வானும் எட்டிப் பிடிக்கும் தூரம் தானே மனதுக்கு !  

உன்னை பற்றிய என் உணர்வுகளை எழுத்துகளில் கொண்டு வர முயலும் போதெல்லாம் பெருகும் கண்ணீருடன் தோற்றுப் போகிறேன் வார்த்தைகளிடம்... அவ்வாறு கண்ணீர் வடித்து வடித்து என் நிகழ்காலச் சுமைகளை இறக்கியும் விடுகிறேன்...அதற்காகவேனும் உன் குரலை கேட்டாக வேண்டுமாய் இருக்கிறது...

இப்போதெல்லாம் மனிதர்களை விட்டு நான் விலகியே இருக்கிறேன், அவர்கள் விரும்பிய படி என்னால் நடக்க(நடிக்க) இயலவில்லை என்பதால்... நேசக்  கேடயம் பிடித்து நிர்பந்த வாள் வீசுகிறார்கள்,தோற்று விழும் என்னிடம் பாசப்போர்வை போர்த்தி மீண்டுமாய் மற்றொரு போருக்கு தயார்படுத்துகிறார்கள்... அன்பிற்கு விலை பேசும் வியாபாரிகளிடம் மாட்டிகொண்டு விழிபிதுங்கும் வேளையில் எங்கிருந்தோ ஓடி வந்து இளைப்பாற்றும் உன் குரல் .   எனது  தனிமையை உனது  இசை போர்வையால் போர்த்தி சுக நித்திரை கொள்வது மட்டுமே மிகப் பிடித்ததாகி விட்டது. போதும்  இது போதும்  இன்றும் என்றும் எந்நாளும்...



எனக்கு தேவையான அன்பு காதல் நேசம் நட்பு அத்தனையையும் ஏதோ ஒரு பாடலில் இட்டு நிரப்பி நிரம்பி வழிந்துக் கொண்டிருக்கும் உணர்வுகள் எனும் கூண்டுக்குள்  அகப்பட்டு அடைந்து கிடப்பதை போன்ற ஒரு இன்பம் வேறு இருக்கிறதா என தெரியவில்லை...        அப்படி ஒன்று இருந்தாலும் அதை அல்பமாக எண்ணவும் பக்குவப்பட்டுவிட்டேன் நான்...இல்லை இல்லை பக்குவபடுத்தி விட்டாய் நீ என்பது தான் சரி.   காற்று வீசும் திசைக்கு ஏற்ப தலை ஆட்டும் சிறு மரம் போல உன் நினைவுகள் சொல்லும் இடம் தேடியே பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன். உன் நினைவுகளை கிளறிக் கிளறியே என்னை உயிர்பித்துக் கொள்கிறேன். என் தனிமைகளில் என்னை கூட்டத்தோடும் , கூட்டத்துக்கு நடுவில் தனிமையாகவும் உணர செய்வது பிடித்தவனின்  நினைவுகளன்றி வேறேது. வேடிக்கையும் வினோதமானதும்  தானே உன் நினைவுகள்.

நீ வீசிய அன்பு தூண்டிலில் நானாகவே வந்து மாட்டிக் கொண்டப் பின் மீண்டும் மீண்டு  போவதெங்கே... சுவாசத்தில் வித்தியாசம் கண்டாலும் என்னாச்சு என்று தலைக் கோதி விசாரிக்கும் வரிகளின் நேசத்தில், ஏதாவது எனக்கு ஆனாலும் நன்றாக இருக்குமே என ஏங்க வைக்கிறாயே... திமிர் பிடித்த மனதை ஆண்டு அடிமையாக்கும் கலையை எங்கே கற்றது உன் குரல்... சிறு வயது நாட்களுக்குள் என்னை தள்ளி உற்சாகத்தில் மூழ்கடித்து விளையாடிக் கொண்டிருக்கிறது  உனது ஒவ்வொரு பாடலும்...சந்தோசமும் சோகமும் ஒன்றாய் தாக்கும்  உன் பாடலுக்குள் நான் புதைந்த தருணங்களில் எல்லாம்... 

வருடத்திற்கு ஒரு முறை உன்னுடன் இப்படி எழுதி  எழுதிப் பேசிக்கொண்டிருப்பதை நீ மௌனமாய் கேட்டுக் கொண்டிருப்பாய் என்று உணரும் போது பெருகும் உற்சாகம் ஒன்று போதும் வருடம் முழுவதற்குமாய்...!   


பிரியங்களுடன்
கௌசல்யா 

* * * * * * * * * * * * * * * * *



ஆஸ்கர் மேடையை அலங்கரித்த மைக்கேல் 





இந்த வீடியோவில் 11 வயது கண்களின் துடிப்புதுள்ளல் , முக பாவனை , உடலின் அதிர்வு குரலின் வீச்சு அத்தனையும் காண்பவர்களையும் பீடித்துவிடுகிறதுஒரு வித போதைக்குள் தள்ளிவிடும் பரவச நிலை,  தியானத்தில் இருப்பதை போலவே இருக்கும் இது போன்ற சில பாடல்களில் என்னை இழக்கும் போது !

* * * * * * * * * * * * * * * * *

தொடர்புடைய முந்தைய பதிவுகள் 






புதன், ஆகஸ்ட் 13

குழந்தைகளுக்கு செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு தேவை...ஏன் ? சிறு அலசல்

அற்புதமான,உயர்ந்த கலாசாரம் பண்பாடு கொண்டவர்கள்  நாம்  என்று பெருமை பேசும் இங்கேதான் குழந்தைகளின் மீதான பாலியல் கொடுமைகள் மற்ற நாடுகளை விட மிக அதிகமாக இருக்கிறது,  மொத்தம் 53% குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்.  அதாவது இரண்டில் ஒரு குழந்தை இக்கொடுமைக்கு ஆளாகிறது!? இது எத்தகைய மோசமான நிலை, குழந்தைகள் நன்றாக வாழமுடியாத பாதுகாப்பற்ற ஒரு நாடு வல்லரசு கனவு காண்கின்றது.   இக்கொடுமைகள் நிகழ என்ன காரணம் என விவாதித்துக் கொண்டிருப்பதை விட இனி அவ்வாறு நடக்காமல் நம் குழந்தைகளை காப்பாற்றுவது தான் முக்கியம். ஆனால்   மனிதனின் மனபிறழ்வு, வளர்ப்பு  முறை, சிதைந்துவிட்ட இன்றைய குடும்ப அமைப்பு, பொருளாதாரத்துக்கு  பின் ஓடும்  பெற்றோர்கள், திரைப்படம், இணையம் போன்ற ஊடகங்கள், சந்தர்ப்பச் சூழல் என்று பல காரணங்கள் இருக்கும் போது  'பண்பாடு கலாசாரம் சீரழிந்து விட்டது' என்ற ஒற்றை வரியில் நாம் இப்பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடுகிறோம். 

பாலியல் துன்புறுத்தல் குறித்த சில புள்ளிவிவரங்களை பார்க்க நேர்ந்தபோது குழந்தைகளின் மீதான  கழிவிரக்கம் மேலும் அதிகரித்து மனம் பதறுகிறது.   

* குழந்தைகள் மீதான 89 சதவிகிதம் குற்றங்கள் உறவினர்கள், நண்பர்கள் என நன்கு அறிமுகமானவர்களாலேயே நடத்தப்படுகின்றன.

* ஒருமுறை வன்முறைக்கு ஈடுபடுத்தப்படும் குழந்தைகளில் 87 சதவிகிதம் பேர் மீது மீண்டும் மீண்டும் வன்முறை தொடர்கிறது.

* இவர்களில் 5-12 வயதுக்குள் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 42.06 சதவிகிதம்.

* வன்முறைக்கு  உள்ளாகும் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை 6 சதவிகிதம் அதிகம்.



இந்த விவரங்கள் வெளிப்படையாக தெரிய வந்தவை மட்டுமே, வெளியில் வராத தெரியாத கொடுமைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கக்கூடும். இந்த கொடுமைகளை தடுக்க நாம் என்ன செய்தோம், என்ன செய்யப் போகிறோம் ?! ஒவ்வொன்றிற்கும் அரசாங்கத்தை குற்றம் சொல்லிக்கொண்டு இருப்பதைப் போல இதற்கும் சொல்லிக் கொண்டிருப்பதை விட பெற்றோர்கள் தான் இதற்கான முயற்சியை மேற்கொள்ளவேண்டும்.  முக்கியமாக தங்களின்  உடலை பற்றிய புரிதல் குழந்தைகளுக்கு தெரிய வேண்டும். அப்போதுதான் உறவுகள்/அந்நியர்கள் அத்துமீறும் போது, (அசட்டையாக) அனுமதிக்காமல் தடுக்க தங்களால் ஆன முயற்சியை எடுப்பார்கள். 

பாலியல் கல்வி  அவசியம்

பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம் என்பதை ஏற்றுக்கொண்டாக வேண்டிய காலக்கட்டம் இது. பாலியல் கல்வி என்றதும் படித்தவர்களே முகம் சுளிக்கிறார்கள். ஆனால் பாலியல் கல்வி என்பது உடலுறவை பற்றி மட்டுமே சொல்லிக் கொடுப்பது அல்ல என்பதை புரிந்துக் கொள்ள தவறிவிடுகிறார்கள். படம் வரைந்து பாகங்களை குறி என்பதை போன்றதும்  அல்ல பாலியல் கல்வி. ஆண் பெண் உடல் அமைப்பு, உடல் உறுப்புகள் வளர்ச்சி , ஹார்மோன் சுரப்பால் ஏற்படும் மாற்றங்கள், பெண்ணின் மாதவிடாய், ஆணின் விந்து வெளியேற்றம், உறுப்புகளின் சுத்தம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு, .....என்று பல இருக்கின்றன. இவைகளை அறிவியல் ரீதியில் படித்து தெளிவது அவசியம். பேசாப் பொருளா மறுக்கப்பட்டத்தன் விதியை மாற்றித்தான ஆகவேண்டும்.

பாலியல் கல்வியை வீட்டில் இருந்தும்  தொடங்கலாம். உதாரணமாக பெண்ணின் மாதவிடாய் என்பது அச்சமூட்டக்கூடியதோ, அருவருப்பானதோ அல்ல அது இயல்பான ஒரு இயற்கை  நிகழ்வு என்பதை டீன்ஏஜ் பெண்களுக்கு புரிய வைப்பது அவசியம், இதை  தனது மகளுக்கு சொல்லவேண்டியது ஒவ்வொரு தாயின் கடமை. அதேபோல் ஆணுக்கும் பெண்ணின் மாதவிடாய் பற்றி தெரிந்திருப்பது நல்லது. அந்த நாட்களில்  பெண்ணின் அப்போதைய  மனநிலை , உடல்   அவஸ்தைகளுக்கு ஏற்றபடி பெண்ணின் உடனிருக்கும் சகோதரன், காதலன், கணவன் போன்றோர் புரிந்து நடந்து கொள்ள இயலும்.    

அதுவும் தவிர , பாலியல் குறித்த புரிதல் இருந்தால் தான்  காதல்  ஒரு உணர்வு என்பதும் பருவ வயதில் வரும் காதல்  பக்குவமான ஒன்றா அல்லது வெறும் இன கவர்ச்சியா என்பதையும் அப்போதுதான் அவர்களால் பிரித்துணரமுடியும். அதன் பிறகே அதற்கு ஏற்றார்ப் போல் தங்களை காத்துக் கொள்ள முடியும்.

சில தவறான புரிதல்கள்

நம் சமூகத்தில் காலங்காலமாக இருக்கும்  சில பழக்கங்களை தற்போது மாற்றினால் நல்லது.  குறிப்பாக சிறு குழந்தைகளின் முன் பெற்றோர் இவ்வாறுதான் நடந்துக் கொள்ள வேண்டும் என வரையறுத்துக் கொண்டதை சொல்லலாம்.

* தாய் உடை மாற்றிக் கொண்டிருக்கும் போது தற்செயலாக அங்கே வரும் குழந்தையிடம் ' அம்மா டிரஸ் பண்ணிட்டு இருக்கேன்ல நீ பாக்கக்  கூடாது வெளில போ' என குரலில் கடுமையுடன் சொல்வதுண்டு.  இது மிக தவறு. 'நான் என்ன பண்ணேன்,  அம்மா ஏன் இப்படி கோபமாகத்  துரத்துகிறாள்' என்று முதலில் குழம்பும், பிறகு 'அப்படியென்ன இருக்கு, நாம பார்த்தா என்னாகிவிடும்'  என்று யோசிக்கும். உடை மாற்றி  வெளியில் வரும் அம்மாவை இத்தகைய கேள்விக்களுடன் ஏறிட்டுப் பார்ப்பது சரியல்லவே. மாறாக அறைக்கு உள்ளே வந்த குழந்தைக்கு எதிர்ப்புறமாக திரும்பிக்  கொண்டு உடையை மாற்றலாம். ஆபாசமாக தெரியாமல் பிறர் அறியாவண்ணம் எவ்வாறு உடை மாற்றுவது என்பது எல்லா பெண்களுமே அறிந்த ஒன்றுதானே.  அப்படி இருக்கும் போது சிறுகுழந்தைகள் முன்பு மாற்றினால் தவறாகப் போய்விடும் என்று எண்ணுவது ஏற்புடையது அல்ல. சொல்லப்போனால் துணி விலகி உடல் தெரிவதை   அவர்களே கவனிக்காமல் இருக்கக்கூடும், ஆனால் பார்க்கக்  கூடாது என்று நீங்கள் வலியுறுத்தும் போதுதான் பார்த்தால் என்ன என்ற கேள்வியே எழும்.

* தற்போது வரும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பார்க்காமல் முற்றிலும் தவிர்ப்பதே நல்லது என்று தோன்றுகிறது.   குடும்பத்துடன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் போது ஆபாசமாக ஒரு காட்சி வந்துவிட்டால் உடனே வேகவேகமாக ரிமோட் எடுத்து சேனலை மாற்றும் வழக்கம் அநேகமாக எல்லா பெற்றோருக்கும் உண்டு. ஆனால் இது தேவையில்லை என்கிறேன் நான். அவசரப் படாமல்  இயல்பாக இருங்கள், அவர்கள் இதை சாதாரணமாகப்  பார்க்கலாம் அல்லது அவர்களாக முகத்தை வேறுப் பக்கம் திருப்பிக் கொள்ளலாம்  அல்லது அவ்விடத்தை விட்டு எழுந்துச் செல்லலாம். அவ்வாறு அவர்களாக அந்த காட்சியை தவிர்க்குமாறு விட  வேண்டுமே தவிர நாமாக வலியுறுத்திப்  பார்க்க தடுக்கும் போது 'அது என்னவாக இருக்கும், அதை நாம் ஏன் பார்க்கக் கூடாது, பார்த்தால் என்ன தப்பு' என்று சிந்தனை முழுவதும் அந்த காட்சியை சுற்றியே சுழலும். இறுதியில் அதே காட்சியை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் வெளி இடத்திலோ, நண்பர்கள் மூலமோ பார்த்தப் பின்பே  அவர்களின் மனது திருப்தி அடையும்.

* பெற்றோர்கள் தங்களின் பரஸ்பர அன்பை  குழந்தைகள் முன் வெளிக்காட்டக்கூடாது என்பார்கள், அதுவும்  சரியல்ல. இருவரும் லேசாக அணைத்துக் கொள்வதில் பெரிய தவறொன்றும் இல்லை. கட்டிப்பிடிப்பது அன்பை வெளிப்படுத்தும் ஒரு செயல் அவ்வளவே . குழந்தைகளை நாம் கட்டிப் பிடித்தால் அதிக மகிழ்ச்சி அடைவார்கள். அதே போன்று அம்மாவும் அப்பாவும் ஒற்றுமையாக அன்பாக இருக்கிறார்கள் என்று தான் புரிந்துக் கொள்வார்கள். இன்னும் சொல்லப் போனால் இன்றைய மன அழுத்தம் கொடுக்கும் வாழ்க்கை முறையில் இது போன்ற செயல்கள் அதிக பிணைப்பை ஏற்படுத்தும். குழந்தைகளுக்கும் தெரியட்டுமே பெற்றோர்கள் நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் அன்பானவர்கள் தான் என்பது. இதை பார்த்து வளரும் குழந்தைகள் நிச்சயம் அன்பானவர்களாகத் தான் இருப்பார்கள்.

மேலே  குறிப்பிட்ட மூன்று விசயங்களும் குழந்தைகளிடம் வலுக்கட்டாயமாக வற்புறுத்தி திணிக்க வேண்டியவை என்று குறிப்பிடவில்லை, மாறாக இயல்பாக நடப்பதை அப்படியே விட்டுவிடுங்கள், பெரிதுப் படுத்த வேண்டாம் என்றே கூறுகின்றேன்.

 வீட்டுக்கு வீடு இணையமும், எல்லோர் கையிலும் மொபைல் போனும் வந்துவிட்ட காலத்தில்  எத்தகைய ஆபாசக் காட்சியையும் ஒரு நொடியில் கண்டு விட  முடியும். பெற்றோர்கள் தடுக்கும் ஒவ்வொன்றையும் அவர்கள் வேறு இடத்தில் கண்டிப்பாகத்  தேடிக் கொள்வார்கள் என்பதே இன்றைய நிதர்சனம்.

மறுக்கப்படும் அனைத்துமே ஒரு சமயத்தில் தனது கட்டுக்களை உடைத்துக் கொண்டாவது  பெற்றேத்தீரும் . அதற்கு தேவை தகுந்த ஒரு சந்தர்ப்பம்... சந்தர்ப்பம் தானாக அமையவில்லை என்றால் அமைத்தும் கொள்வார்கள் இன்றைய குழந்தைகள்.

இவ்வாறு  பாலியல் சம்பந்தப்பட்ட பேச்சுக்கள், சிறு விசயங்களை வலிந்து தடுப்பதை விட அவை என்னவென்றும் வயதுக்கு தகுந்தபடி கொஞ்சங்கொஞ்சமாக சொல்லித்தரலாம். கை கழுவிவிட்டுதான்  சாப்பிட வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பதை போல ...

சிறு குழந்தைகளின் பாலியல் தொடர்பான கேள்விகள் 

பெண்களின் மார்பக வளர்ச்சி, உடலுறவு, மாதவிடாய், நாப்கின், ஆணுறை, சுய இன்பம், கற்பு, குழந்தைப் பிறப்பு பற்றியெல்லாம்  குழந்தைகளுக்கு பலவித சந்தேகங்கள் எழும், கேள்விகள் கேட்கிறார்கள். எதையோ ஒப்புக்கு சொல்லி மழுப்பாமல் உண்மையை சற்று எளிமையாக வயதிற்கு ஏற்றார் போல சொல்வது நல்லது . தொலைக்காட்சியில் ஜியாக்கிரபி சேனலே ஓரளவு சொல்லிவிடுகிறது, அதில் மிருகங்கள், பறவைகளின் வாழ்க்கை, சேர்க்கைகளை தெளிவாகவேப் பார்த்துவிடுகிறார்கள். அதை அப்படியே  மனிதர்களுக்கு பொருத்தி எப்படி சொல்வது என்பதுதான் நமது வேலை என்பதால் மிகவும் சுலபம்.  உங்களிடத்தில் திருப்தியான பதில் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் அடுத்துச் செல்லும்  இடம் நண்பர்கள். அவர்களும் இவர்கள் வயதுதான் என்பதால் அங்கேயும் தெளிவு கிடைக்காது, ஆனால் பதில் கிடைக்கும் அதுவும் அரைகுறையாக! முற்றிலும் மாறாக சொல்லக் கூடிய பதிலில் பெரிய ஆபத்து  ஒளிந்திருக்கும். இது பெரிய சிக்கல்.

இன்றைய  குழந்தைகள் மிகவும் வேகமானவர்கள், எல்லாவற்றையும் கூகுளில் தேடுவதை போல இதையும் தேடலாம், மிக அபத்தமான ஆபாசமான பக்கத்திற்கு செல்லக் கூடிய வாய்ப்புகள்  அதிகம். எச்சரிக்கை.

அதனால் நீங்களே அவர்களுக்கு தெளிவுப்படுத்துங்கள். அதிக அழுத்தம் கொடுத்தோ, சீரியசாகவோ சொல்லவேண்டியது இல்லை,எளிய மொழியில் இயல்பாக ஜஸ்ட் லைக் தட் மாதிரி சொல்லுங்கள். பெரிய பெரிய விளக்கங்கள் கொடுத்து அவர்களை குழப்பாமல், தத்துப்பித்துனு உளறாமல் பதில் சொல்வது முக்கியம். ஒரு வரியில் பதில் இருந்தாலும் போதும்.

ஆண், பெண் இரு குழந்தைகளுக்கும்  ஒருவருக்கு மற்றவரின் மீது ஒரு ஈர்ப்பு இருக்கும், அவனுக்கு ஏன் அப்படி, அவளுக்கு ஏன் அப்படி இருக்கிறது என்ற சந்தேகங்கள் தோன்றும். எதிர்பாலினத்தவரை அதிகமாக பிடித்தும், சுத்தமாக  பிடிக்காமலும் இருக்கும். இதை பற்றி எல்லாம் அவர்களிடம் சகஜமாக பேசாமல் நாம் தெரிந்துக் கொள்ள முடியாது. அவர்கள் கேள்வி கேட்டால் அதை அசட்டை செய்யாமல் குழந்தைகளிடம் பேச கிடைத்த ஒரு நல்ல சந்தர்ப்பமாக  எண்ணிப் பேசத் தொடங்குங்கள். குழந்தைகளிடம் எதிர்பால் குழந்தைகளை எப்படி அணுகுவது என்றும்,  உடலமைப்பு தான் வேறு வேறே தவிர  அவர்களும் உங்களை போன்றவர்கள் தான். யாரும் யாருக்கும் குறைந்தவர்களும் அல்ல உயர்ந்தவர்களும் அல்ல என்றும்  சொல்லுங்கள்.

இறுதியாக,

திருமணம் முடிந்து 30 வருடம் கழிந்த பின்பும் உடலுறவில் உச்சம்(கிளைமாக்ஸ்) என்பது என்ன என்பது பலருக்கும் தெரிவதில்லை. அது என்னவென்று தெரியாமலும் அதன் அவசியம்  புரியாமல் தவற விடுவதும், தவறான உறவுகள் ஏற்பட ஒரு காரணமாக இருக்கலாம் என்பது  நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்??

முக்கியமாக ஆணின் சிறு வயதிலேயே இந்த விதத்தில் இன்ன வயதில் இன்ன வயது பெண்ணுடன் தான் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும்  மற்றவை எல்லாம் மிக தவறானவை என்பதையும் புரிய வைத்துவிட்டோம் என்றால் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்பதன் சதவீதம்   குறையலாம். பாலியல் கல்வியின் மூலம் இது சாத்தியமாக வாய்ப்பு இருக்கிறது, சிறு வயதில் இருந்தே  இக்கல்வியை பயிற்றுவிக்க வேண்டியது அவசியம். வீட்டில் இருந்தே  தொடங்கலாம், பாலியல் கல்வியை வாழ்க்கைக்கான கல்வி என்று ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும்.

எனவே,

சிறு குழந்தைகள் பாலியல் தொடர்பான கேள்விகள் கேட்டால் உடனே பெரியவர்களின் பதில் நீ சின்ன பையன்/பொண்ணு இப்போ சொன்னா ஒன்னும் புரியாது வளர்ந்த பிறகு தானாக தெரியும், அதுவரை இதை பற்றி பேசவே கூடாது , ரொம்ப தப்பு ' என்று இனியும் சொல்லாதீர்கள்.

வளர்ந்ததும் எல்லாமே தானாக புரிந்துவிடாது, அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் அல்லது கற்றுக் கொடுக்கப்பட  வேண்டும். இவை இரண்டுக்குமே நம் சமூகத்தில் வழியில்லை. பாலியல் விழிப்புணர்வு இல்லாத சமூகம் சீரழிந்து தான் போகும் என்பதை கண்கூடாக ஊடகங்களில் கண்டு வருந்தி கடந்து போவதுடன் நமது சமூக கடமை அனேகமாக முடிந்தே விடுகிறது என்பது பெற்றோர்களாகிய நமக்கு மிக பெரிய அவமானம் !!?


* * * * * * * * * * * * * * *

நண்பர்களே இந்த தலைப்பை  சார்ந்து தொடர்ந்து எழுத இருக்கிறேன்...குறைகள் இருப்பின் தெரிவியுங்கள், மேலும் இதை பற்றிய செய்திகள், தகவல்கள் கொடுத்தாலும் உதவியாக இருக்கும்.

எனது இந்த கட்டுரை Lawyersline  மாத இதழில் கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது.

நன்றி.

பிரியங்களுடன்
கௌசல்யா

புதன், ஏப்ரல் 2

மனிதர் உணர்ந்துக் கொள்ள... இது மனிதக் காதல் அல்ல !!

Love story of malena

என் அன்புக் காதலா... 

கவிதைகளில் உன்னை பேசிப் பேசியும் தீரவில்லை என் காதல்... அதுதானோ என்னவோ கவிதை இன்று இப்படி கடிதமாகிவிட்டது. ம்ம்...தீராக் காதலை எப்படி சொன்னால் தான் என்ன  தீர்ந்தாப் போய்விடும் !   

'கா த ல்' என்ற வார்த்தையை இதுவரை மெல்ல உச்சரித்தவள் இன்று சற்றே சத்தமாக சொன்னேன்... அல்ல அல்ல கத்தியே விட்டேன். செவிப்பறை அடைந்த என் கத்தல் உள்ளுக்குள் ஏதோ ஒன்றை உடைத்து ஏற்படுத்திய உணர்வு பிரவாகத்தில் மூழ்குவதும் மிதப்பதுமான அதி அற்புதமான ஒரு உன்னத நிலை...மயங்கிச் சரிந்தேன் மெல்ல. ஒரு வார்த்தைக்கு இவ்வளவு வலிமையா ... என்னைத்  தொலைத்து உன்னில் என்னைத் தேடும் அபத்தத்திற்கு ஒரு அழகானப்  பெயரே காதல் ! 

நம் இருவரின் தேசங்கள் வேறு, திசைகள் வேறு, நான் கிழக்கு நீ மேற்கு... எந்த புள்ளியில் இணைந்தோம் இணைத்தது எது என்பதைப்  பற்றியெல்லாம் இதுவரை யோசித்ததில்லை யோசிக்க நேரமுமில்லை, காதலில் மூழ்கிப் போன நெஞ்சம் வேறு எதைத் தான் சிந்தித்தது. என்   சிந்தனை சொல் செயல் எல்லாம் உன்னை பற்றியே உன் ஒருவனை பற்றியே ...விடியலில் தூக்கம் கலையும் போதே உன்னுடனான கனவும் கலைந்துவிட மறுபடி இழுத்து அணைத்துக் கொள்கிறாய் நினைவுகளால்....இரவின் கனவுகளில் பகலின் கற்பனையில் என்று உன்னைப்  பார்த்துக் கொண்டே இருக்கும் என் விழிகள் வேறு யாரைத்தான் அறியும்!

நம் தேசங்களின் இடைவெளியோ பல ஆயிரம் மைல்கள், காதல் வந்தப்பின் தேசமென்ன திசையென்ன தூரமென்ன நடுவில் எதிர்படும் மலை என்ன தடுக்கும் கடல்தான்  என்ன?

நீயும் நானும் பேசிப் பேசியே
இருவருக்கும் இடையிலான
கடலளவு தூரத்தை
குறைத்து விடமாட்டோமா என்ன?
பிரிவும் தூரமும் காதலை
அதிகரிக்கவேச் செய்யும்
என்று சொன்னவனே நீ தானே !   

நன்றாக நினைவிருக்கிறது, பறவைகள் சூடான இடம் தேடி நாடு விட்டு நாடு இடம்பெயரும் ஒரு குளிர்காலம் அது.  அப்பொழுது தானே என்னைக் காக்கும் தேவனாய் வெகுத் தொலைவில் இருந்து நீ வந்துச்  சேர்ந்தாய். அன்பை வளர்த்தாய் ஆதரவு நானே என உன் தோள் சாய்த்தாய். உறவாடி உயிரானோம்... உயிர்(கள்) வளர்த்தோம்...  

கையிழந்து
கவலைச் சுமந்து வாழ்ந்த மனதில்
உன்னைச் சுமக்க வைத்தாய்... 
வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன் நான்
கவலைச்  சுமக்கிறாய் நீ !! 

தற்செயலாய் சந்தித்ததாய் ஒருநாள் சொன்னாய், உன்னை என்னிடம் அழைத்து வந்த அந்த தற்செயல் சொல்லிவிட்டது என்னைத் தேடிய உனது ஜென்மாந்திரத் தேடலை...!

விழிகளால் பேசிக் நட்பை வளர்த்து, செல்லச் சண்டைகளில் மூழ்கித் திளைத்து,  ஏதோ ஒரு தருணத்தில் என்னையே காதலைச்  சொல்லவும் வைத்துவிட்டாய்  ...சிறிதும் லக்ஜையின்றி நேராய் உன் முகம் பார்த்து காதலை நான் சொல்ல அதை ஓரக் கண்ணால் ரசித்துக் கொண்டே தலைக்  குனிந்தாய். அது வெட்கமா சம்மதமா என்ற குழப்பத்தில் நான் நிற்க எனது ஒரு கை கோர்த்து உள்ளங்கை வெப்பத்தில் மௌனமாய் உணர்த்தினாய். இன்று வரை நொடிக்கொரு முறை நான் காதலை வெளிப்படுத்திக் கொண்டே இருக்க நீயோ காதலாகவே இருக்கிறாய், வாழ்கிறாய்... 

காதலால் கட்டுண்டு வருடங்கள் பல உருண்டோடிவிட்டன.  நம் காதல், நாட்களை எண்ணுவதில்லை... பிரிந்தப்  பொழுதில் சேரும் பொழுதையும் சேர்ந்தப்  பொழுதில் ஒருவரை ஒருவருமாக  எண்ணிக்கொண்டிருக்கிறோம் என்று சொல்லாமல் சொல்லிக்  காதலை வளர்த்துக் கொண்டிருக்கிறோம்!

இதோ இந்த மார்ச் மாதத்துடன் நமது காதல் 12 வது ஆண்டை எட்டி விட்டது.  குளிர்காலம் முடிந்ததும் உன்னை பிரிய மனமின்றி பிரிந்து அடுத்த குளிர்காலத்திற்காக வழக்கம் போலவே காத்திருக்கப் போகிறேன்... காதல் என்றும் அழிவதில்லை அது நம்மை போன்ற பறவையின் காதலாக இருந்தாலும்...

இப்படிக்கு,

உன் அன்புக்காதலி 
மலேனா.   
மலேனா பறவையின் தீராக்காதல் கதை


இரண்டு பறவைகளின் காதல் கதை   
---------------------------------------------------------

1993 ஆம் ஆண்டு குரேஷியா நாட்டில் வேட்டைக்காரன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டதால் ஒரு இறக்கையை இழந்துத்  தவித்தது ஒரு பெண் நாரை. அதை  Stjepan Vokic என்ற ஒரு நல்ல மனிதர் அன்புடன் எடுத்துக் காப்பாற்றி தனது வீட்டின் கூரையில் இடம் ஒதுக்கிக் கொடுத்து  உணவிட்டு 20 வருடமாக வளர்த்து வருகிறார். 

தென் ஆப்பிரிக்காவில் குளிர்காலமாக இருந்தப்போது அங்கிருந்து குரேஷியா வந்த ஒரு ஆண் நாரை இறக்கை இழந்த பெண் பறவை மலேனா மீது தீராக் காதல் கொண்டது.  வருடந்தோறும் தவறாமல் மார்ச் மாதம் வருவதும் காதலில் திளைப்பதும் வழக்கமாகிவிட்டது. பெண் நாரை முட்டை இட்டு குஞ்சுகள் பொரித்ததும் பொறுப்புள்ள தகப்பனாக அவற்றிற்கு பறக்கக்  கற்றுக் கொடுக்கிறது.  பிள்ளைகள் நன்கு பறக்கப்  பழகியதும் அவற்றை அழைத்துக் கொண்டு தனது சொந்த  நாடான தென் ஆப்பிரிக்கா கிளம்பி விடுகிறது. இப்படியே கடந்த  32 பிள்ளைகளை பெற்று(!) வளர்த்து அழைத்துச் சென்றிருக்கிறது.

அந்த அன்புக் காதலன் ரோடான் ஒவ்வொரு வருடமும் மத்தியத்தரை கடல், மலைகள், பாலைவனம் எல்லாவற்றையும் கடந்து சுமார் எட்டாயிரம் மைல்கள் பறந்து வருகிறது . தனது காதலி மலேனா காத்திருப்பாள் அதற்கு ஏமாற்றம் தரக் கூடாது என்பதை ரோடான் நன்கு அறிந்திருக்கிறது. சரியாக மார்ச் மாதம் வந்து  அன்பாக குடும்பம் நடத்தி, தனது பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு காதலியிடம் விடைப் பெற்றுக் கொண்டு ஆகஸ்ட் மாதத்தில் தனது நாட்டிற்கு கிளம்பி விடுகிறது. 

காதலின் வலிமை இனம் மொழி மதம் தேசம் கடந்து மனிதர்களிடம் மட்டுமல்ல ஐந்தறிவு உயிர்களிடமும் உண்டு என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து வரும் இவர்களை எண்ணி ஆச்சர்யப்படாமல் இருக்க இயலவில்லை. 

மறுபடியும் 
உனது பயணத்தைத்  தொடங்கிவிடாதே
காதலை நான் வாசித்து
முடிக்கும் வரையிலாவது  
சற்றுப் பொறுத்துக் கொள்
முடிக்கவும் இயலாக் காதலை 
எனக்கு கொடுத்துவிட்டு
விட்டு விலகிச்செல்வது
அவ்வளவு சுலபமில்லை
புரியவைக்கிறேன் என்னை 
கொஞ்சம் அருகினில் 
நெருங்கி வா என் கண்ணே!  

என்று கொஞ்சிப்  பேசி மகிழ தனது காதல் கணவன் அடுத்து எப்போது வருவார் என்று ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் மலேனா... கூடவே Stjepan என்ற நல்ல மனிதரும் !!  எங்கே ரோடான் வராமல் போய்விடுமோ என்ற கவலையுடன் காத்திருக்கும் இவர் ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர். பணமில்லாமல் தனது தொலைபேசியையும் விற்று மலேனாவிற்கு உணவு வாங்கிய  இவரை போன்றவர்களால் தான் இப்பறவைகளின் காதல் வென்றிருக்கிறது ... உலகில் மனிதம் நிலைத்திருக்கிறது. 


மலேனாவின் காதல் !

இதோ இப்போது இந்த  மார்ச் மாதமும் கிளம்பி வந்துவிட்டது. தனது காதலியுடன் இணைந்து தங்களது 12 வது ஆண்டு விழாவை வெகுச்  சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த காதல் பறவைகளை நாமும் வாழ்த்துவோம் !!!  

                                 * * * * *

பின் குறிப்பு:

மலேனா ரோடான் பற்றி தனது தளத்தில் எழுதிய அன்புத்தோழி ஏஞ்சல் இவர்களைப்  பற்றி நீங்களும் எழுத வேண்டும் என்று அன்புக் கட்டளை இட நெருங்கிய தோழியாச்சே மீற முடியவில்லை, என்பதை  விட இந்த பறவைகளின் காதல் கண்டுப் பிரமித்துவிட்டேன். எனக்கு மிகப் பிடித்த 'காதல்' அவர்களிடம் கொட்டிக் கிடக்க இதோ எழுதியே விட்டேன். படிச்சிட்டுத்  திட்டுறதுனா தோழியை திட்டுங்க :-) 


பிரியங்களுடன்... 

கௌசல்யா     




புதன், மார்ச் 26

சும்மா ஒரு ஹாய் ஒரு ஹலோ ...!

just want to say hi ,hello

அன்பு உறவுகளுக்கு வணக்கம்

பதிவுகள் எழுதி ரொம்ப நாள்(மாசம்) ஆச்சு ...இனியாவது  தொடர்ந்து எழுத லாம் என இருக்கிறேன், அப்படி தீவிரமாக  பதிவுகள் எழுதுறதுக்கு முன்னாடி உங்களுக்கு ஒரு ஹாய் சொல்ல இந்த பதிவு . எப்படி இருக்கிறீர்கள் ? நலம் தானே !  எங்கே ஆள காணும் என்று நலம் விசாரித்த நட்புகளுக்கு எம் அன்பான நன்றிகள்!

மே மாதம் வரை மாணவர்களுக்கு தேர்வு டென்ஷன்... நமக்கு தேர்தல் டென்ஷன் ! (யார் வந்தா நமக்கென்ன என்று இருப்பவர்களுக்கு எந்நாளும் நன்னாளே) சமூக தளங்கள் தான் தேர்தல் முடிவை உறுதிச்  செய்யப்  போவதைப்  போல பரபரப்பாக இருக்கிறது. அரசியல் நக்கல் , நையாண்டிகள் , நிறைய பிளாஷ்பேக் கதைகள் என்று சூடு பிடித்து விட்டது. என்னைபோல அரசியல் கிலோ என்ன விலை என்பவர்களுக்குத் தான் இவங்கலாம் எதை பத்தி யாரை பத்தி பேசுறாங்கனு ஒரே குழப்பமாக இருக்கிறது .  ஜனநாயக கடமையைச்  சிறப்பாக ஆற்றிக் கொண்டிருக்கும்  சக வலைத்தள நண்பர்களுக்கு என் வாழ்த்துகள்.

வாழ்க்கை ஏதாவது  ஒரு பாடத்தை நமக்கு தினமும்  சொல்லிக் கொடுத்து கொண்டே இருந்தாலும் அத்தனை பேருமா அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்கிறோம், வெகு  சிலரே  கற்றுக் கொள்கிறார்கள், பலர் கற்க தவறி விடுகிறார்கள். ஒருவேளை நாம தவறவிட்டாலும் நம்ம கூட இருக்கிறவங்க கற்றுக் கொடுத்துடுவாங்கப்  போல. சிரிக்கத் தெரிந்த  மனிதனாச்சே நாம ,      சங்கடங்கள்  சிரமங்களைச்  சிரித்தே கடந்து விடலாம் என்று எண்ணினால், எங்கே சிரிக்க விடுகிறார்கள்...நம்மைச்  சுற்றி இருக்கிறவர்கள். எப்பொழுதும் எதையாவது பேசி, விவாதம் என்ற பெயரில் நம்மள குழப்பி,  கழுத்து சுளுக்குற அளவு கருத்துச்  சொல்லி...னு என்னவோ போங்க ரொம்பவேப்  படுத்தி எடுக்குறாங்க. அவங்க கூட பழகிப்  பழகி நமக்கும் அதே  பழக்கம் தொத்திகிடுச்சு (இல்லைனாலும் ஒன்னும் தெரியாதாக்கும்) அதிலும் முக்கியமா இந்த பதிவுலகம்  வந்ததில் இருந்து  வெளில யார் கிட்ட பேசினாலும் பதிவுல எழுதுற  மாதிரியே பேசிக்கிட்டு இருக்கிறேன். ரொம்ப நாள் கழிச்சு என்னோட காலேஜ் பிரெண்ட் ஒருத்திய  சந்திச்சேன், 'என்ன நீ என்னவோ மாதிரி பேசுற, நிறுத்தி நிதானமா,  முன்ன எல்லாம் இப்படி பேச மாட்டியே' கேட்ட பிறகு தான் எனக்கே இது புரியுது. :-)

சமீபத்துல கோர்ட்க்கு ஒரு கேஸ்ல சாட்சியாகப்  போனேன்...    எதிர்தரப்பு  வக்கீல் என்கிட்ட வந்து , நான் யாருக்காக போனேனோ அவரை  குற்றவாளி அப்டி இப்டினு சொல்லி, இதுக்கு என்ன பதில் சொல்ரிங்கனு கேட்க, டக்னு  'இப்டி நீங்க சொல்வதை வன்மையாகக்  கண்டிக்கிறேன்' னு சொல்லிட்டேன்,  வக்கீல் முறைக்க... கோர்ட் மொத்தமும் சிரிக்க...நீதிபதியும் லேசா சிரிச்சிக்கிட்டே , 'இங்க நாந்தான்மா கண்டிக்கணும், நீங்க கண்டிக்கக்கூடாது' என்று சொல்ல...நாக்க நான் கடிக்க...சில நொடிகள் கழிச்சி , 'அப்ப எதிர் வக்கீல் சொல்வதை வன்மையாக மறுக்கிறேன்' என்றேன் மெதுவாக !  (அங்க வச்சா நான் எழுதிய கண்டனம் போஸ்ட் ஞாபகத்துக்கு  வரணும்)  ஒரு வழியாக  விசாரணை  முடிஞ்சு வெளில வர,  எங்க தரப்பு வக்கீல், உள்ள போறதுக்கு முன்னாடி அவ்ளோ யோசிச்சிங்க, இப்படி தைரியமாகப்  பேசுவிங்கனு  நான் எதிர்பார்க்கல...முக்கிய சாட்சி உங்களோட இந்த ஒரு பதில் போதும் கேஸ் ஜெயிச்சிடும்னு  சொல்றாரு. (தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக முடிந்தது) 

பார்த்திங்களா, இந்த பதிவுலகம் எப்படி என்னை வளர்த்து விட்டுருக்குதுனு ! 

இப்படி இங்கே நான் கற்றதும் பெற்றதும் நிறைய நிறைய  ! கடந்த நாலு மாதமாக எழுதுவதில் ஒரு பெரிய இடைவெளி விழுந்துவிட்டது. பிற வேலைகள்,பிரயாணங்கள்  அதிகரித்து விட்டதால் மனமும் சோர்ந்துப் போய்விட்டது. . மறுபடி இதோ இன்று எழுதும் போது அதே பழைய உற்சாகம் ! அதுதான் இந்த பதிவுலகின் விந்தை. பழைய நண்பர்களை பார்த்ததும் வருமே ஒரு குஷி, அந்த மாதிரி !!!

பதிவுலகம் வரலைனாலும் டேப்லெட் மூலம் பேஸ்புக்  செக் பண்ணிட்டு இருப்பேன், பசுமைவிடியல் தளத்தில் அப்டேட் பண்ணுவேன். ஆனா  ஒரு  இம்சை ! ஓபன் பண்ணிய  கொஞ்ச நேரத்துல  இன்பாக்ஸ்ல  வந்து ' நீங்க ஆன்லைன் இருக்குறது தெரியும் , ஏன் பதில் சொல்ல மாட்டேன்கிறிங்க' என்பார்கள் சில துப்பறிவாளர்கள்! 'ஹாய், நல்லா இருக்கிங்களா?' ன்ற கேள்விக்கு எத்தனை முறைதாங்க பதில் சொல்றது. நிஜமா முடியல !!  அதை விட ஒரு சகோதரர் கேட்டார், 'என்னங்க இத்தனை மணிக்கு பேஸ்புக்ல இருக்கிங்க...அதும் ஒரு பெண்ணா இருந்துகிட்டு ?!'  என்ன கொடுமைங்க இது ?? நான் என்ன ரோட்லையா ராத்திரி 1 மணிக்கு தனியா நின்னேன். அப்படியே நின்னாலும் அது அவங்கவங்க  சொந்த விஷயம்... இவங்கள மாதிரியானவங்க கற்காலத்த விட்டு வெளில வரமாட்டாங்க போல !

அடிக்கடி கணவருடன் இரவு நேரத்தில் வெளியூர் பயணம் செல்லும்  சூழல் , வண்டி ஓட்டுற அவர் தூங்கக்கூடாதேனு  பேஸ்புக் அப்டேட்ஸ் படிச்சு அதை பத்தி பேசிக்கிட்டுப்  போவோம். அப்படியே ஊரும் வந்துவிடும்.....இதைப்   பத்தி எல்லாம் தெரியாம அடுத்தவங்களின் தனிப்பட்ட விசயத்தில்  மூக்கை நுழைக்கும் அதிக பிரசங்கிகள் எப்போ திருந்தப்  போகுதோ தெரியல . உங்களுக்கு தோணலாம் ,இந்த மாதிரி ஆட்களை பிளாக் பண்ணி இருக்கலாமே என்று , அப்படியும் கொஞ்ச  பேரை பிளாக் பண்ணியாச்சு,  எதுக்கும் நாம  கொஞ்ச நாள் ஒதுங்கி இருப்போம்னு  டீஆக்டிவேட் பண்ணி வச்சேன்... அப்போதான் தெரியுது வெளியுலகம் ரொம்ப அழகு என்று !! இப்படி அடிக்கடி வெளியுலகம் போய்வருவது  எல்லோருக்கும் நல்லது !! :-)

வாட்ஸ்அப் என்றொரு இனிய இம்சை

ஒருநாள்  ரெஸ்டாரென்ட் ஒன்றில் ஆர்டர் கொடுத்துவிட்டு டேப்லெட்டில் கேம்ஸ் விளையாடிகிட்டு இருந்தேன். அந்த பக்கம் வந்த ஒருத்தர் , நீங்க வாட்ஸ்அப்ல இருக்கிங்களா என்றார். நான் ரொம்ப வேகமா இல்லைங்க பேஸ்புக் ல இருக்கேன் சொன்னேன் . ஓ ! மீ டூ பட் வாட்ஸ்அப் இஸ் த பெஸ்ட் அப்டி இப்டி னு எடுத்துவிட்டுக்கிட்டே  இருந்தார். அப்டி என்னடா அதுல இருக்கும் ரொம்ப ஆர்வமாகி   கற்போம்  பிரபு தம்பிக்கு கால் பண்ணேன் , ஆண்ட்ராயிடு போன்ல இது ஒரு ஆப்ஸ் , fb இன்பாக்ஸ் மாதிரி சாட் பண்ணிக்கலாம் .போட்டோஸ், விடியோஸ் ஷேர் பண்ணிக்கலாம் என்று அவர்   சொன்னதையே விரிவாகச்   சொன்னான். சரி அதையும் என்னனு பார்த்திடலாம்னு டவுன்லோட் பண்ணி  யூஸ் பண்ணிகிட்டு இருக்கேன். டைப் பண்ணப்  பொறுமை இல்லைனாச்  சொல்ல வேண்டியதைப்  பேசி அனுப்பிடலாம் என்பது எனக்கு ரொம்ப புடிச்சுப் போச்சு.  முக்கியமா,  பிடித்தவர்கள் குரலை லைவா கேட்பதும்  நினைத்தப்போது எல்லாம் மறுபடி போட்டு கேட்பதும் ஒரு அலாதி குஷி!! :-)

வாட்ஸ்அப் நிஜமா பெஸ்ட். ஆனா பாருங்க இதுலயும்  அதே இம்சை ! ஓபன் பண்ணதும் 'ஆன்லைன்' னு காட்டிக் கொடுத்துவிடும். நான் இரண்டு நாளா இத ஓபன் பண்ணவே இல்லன்னு சத்தியம் எல்லாம் செய்ய  முடியாது. Last seen ல   மாட்டி அசடு வழிய வேண்டியதுதான். இதுக்கும் ஒரு வழி இருக்குனு இப்போதான் கண்டுப்பிடிச்சேன்  "WhatsApp-இல் ‘Last Seen’ நேரத்தை மறைப்பது எப்படி?  ன்ற போஸ்ட்ல சொன்னபடி செட்டிங்க்ஸ் செஞ்சுக்கலாம். 

சில பேர் இதை மொபைல் என்பதையே மறந்துடுவாங்க, இஷ்டத்துக்கு வீடியோ, சாங் , படங்கள்னு அனுப்புவாங்க, மெமரி வேகமா காலியாகி நான்  ஓபன் பண்றப்போ  'மரியாதையா  ரீசார்ஜ் பண்ணப்  போறியா இல்லையா'னு மிரட்டுது ஆன்ட்ராயிடு! பார்வேர்ட் மெசெஜ் ஒரு நாலு பக்கம் அளவுக்கு அனுப்புவாங்க, எல்லாம் படிச்சு நம்ம அறிவை வளர்த்துக்கவாம், இதையெல்லாம் முதல்ல அவங்க படிப்பாங்களானு தெரியல. அதைவிட  'இதை அப்டியே 108 முறை எழுதி அனுப்புங்க உடனே நல்லது நடக்கும்' என்ற அப்போதைய போஸ்ட் கார்ட் டைப்  மெசெஜ அப்படியே  வாட்ஸ்அப்ல அனுப்பி கொல்றாங்க. அறிவியல் வளர்ந்தாலும் இவங்க இன்னும் வளரலையே நினைக்குறப்போ அழவா சிரிக்கவா தெரியல.  இப்போ முடிவு பண்ணிட்டேன் இது போல அவஸ்தை படுத்துற அன்பு நபர்களை பிளாக் பண்ணியே ஆகணும்னு, ஏன் பண்ணினனு கேட்க மாட்டாங்க (நம்புங்க) அப்படியே கேட்டாலும் சொல்லிக்கலாம், என் போன்  என் உரிமை ! :-)  இந்த பாலிஸிய ஏன்  எல்லா இடத்திலும் பாலோ பண்ண முடியறதில்லை என்பது தான் நம்ம பலவீனம். ஆனா கண்டிப்பா  பாலோ பண்ணனும் ஏன்னா நம்ம ஹெல்த் முக்கியமில்லையா !

அவசியமான விசயங்களைக்  கேட்பதற்கும், சொல்வதற்கும் உபயோகப் படுத்துவதற்கு பதிலாக  ஹாய், ஹலோ, நலமா, என்ன பண்றிங்க , இப்போ பிரீயா, சாப்டிங்களா, என்று கேள்வியா கேட்டு வதைப்பது எந்த விதத்தில் நியாயம். அதுவும் ஒரே கேள்வியை தினமும்...பல பேர் கேட்டா நிலைமை அவ்ளோதான். இயந்திர வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஓட்டம், நிற்க நேரம் இன்றி ஓடிக்  கொண்டே இருக்கும் இந்த வாழ்க்கையில் எங்கே நிதானமாக பதில் சொல்ல முடிகிறது. அன்பு அதீத அன்பாக மாறி எதிர்பார்ப்புகள் அதிகரித்து இறுதியில் மன வருத்தத்தில் முடிந்து விடுகிறது. அன்பையும் அளவோடு செலுத்துவது  நல்லது அது நட்பாக இருந்தாலும் நெருங்கிய உறவாக இருந்தாலும்... அதிக உரிமை அதிக மன கசப்பு.  (அனுபவம்)

மேலும் இது போன்ற நவீன வசதிகள் அதிகரிக்க அதிகரிக்க நம்முடைய பிரைவசி பறிப்  போனது போல் இருக்கிறது. நம்ம வீட்டு கிச்சனை மத்தவங்க  எட்டி பாக்குற ஒரு பீல் (பெட்ரூம்னு சொன்னா மட்டும் மக்கள் புரிஞ்சுத்  திருந்திட போறாங்களா என்ன) நம்மளை யாரோ பின்தொடருகிற ஒரு உணர்வு எப்போதும் இருந்துக் கொண்டே இருப்பது நல்லாவா இருக்கு. தியேட்டர், ரெஸ்டாரென்ட், ஷாப்பிங் மால் , ஆபீஸ், துணி கடை, பாத்திர கடை , சூப்பர் மார்கெட் னு எங்க பார்த்தாலும் கேமரா, கெடுபிடி  !! பாதுகாப்பு என்ற பெயரில் தனி மனிதனின் சுதந்திரம் சுத்தமாக  பறிப்  போய்விட்டது.

எது எப்படி இருந்தாலும் நம் வாழ்க்கை நம் உரிமை என்று போய்க் கொண்டே இருக்கவேண்டும் ... அப்போது தான் நிம்மதி சாஸ்வதம். அவ்வாறு போகும் போது  எதிர்படும் எல்லா உயிர்களிடத்தும் சிறு  புன்னகை ஒன்றை உதிர்த்துச் செல்வோம் ... அது போதும் (ஒரு ஹாய் சொல்றேன்னு சொல்லிட்டு என்னை மாதிரி இப்படி கதைச்  சொல்லிக்கிட்டு இருக்கப்படாது) :-)



உலகம் அழகானது...அன்பு உயர்வானது  ...அன்பால் உலகை ஆளுவோம் !!


பிரியங்களுடன்
'மனதோடு மட்டும்'
கௌசல்யா