வியாழன், செப்டம்பர் 19

மகளிர் அமைப்புகளின் குறுகிய கண்ணோட்டம் - ஒரு அனுபவம்



பெண்களுக்கு எதிராக  எங்கே என்ன நடந்தாலும் மகளிர் அமைப்புகள் முதலில் குரல் கொடுத்துவிடும். ஆபாச சுவரொட்டி கிழிப்பது முதல் பாலியல் வன்முறைக்கு எதிராக கொடிப் பிடித்து கோஷம் போட்டுப்  போராடுவது வரை  இவர்களைப்  பற்றி ஓரளவு அறிந்திருக்கிறேன். உண்மையில் இவர்களின் வேகம் எதுவரை  எந்த விதத்தில் என்று மகளிர் அமைப்பில் என்னை இணைத்துக் கொள்ளும் வரை எனக்கு தெரியாது. பாதிக்கப்பட்ட பெண்கள்  இவர்களிடம் பிரச்னையைக்  கொண்டுச்  செல்லும்போது அதை இவர்கள் கையாளும் விதத்தை அனுபவத்தில் கண்டு அதிர்ச்சியும், கோபமும்,  சலிப்பும்  வந்து விட்டது. அனைத்து இடத்திலும் இப்படித்தானா? இல்லை எனது முதல் அனுபவம் இப்படியா என தெரியவில்லை. (நமக்குனே இப்படி எல்லாம் வந்து சேருமோ என்னவோ ?!)

பதவி(?) ஏற்றதும் முதல் பணி, பிரச்சனையுடன் ஒரு பெண் வந்து சேர்ந்தாள். அவள் சொன்னதின் சுருக்கம் - ஒரு ராங் கால் மூலமாக(?!)  லீவ்ல இருக்குற ராணுவ வீரருக்கும் இந்த பெண்ணுக்கும் பழக்கம். திருமணம் செய்து கொள்வதாகச் சத்தியம் செய்தப்  பின் முதல் முறையாக நேரில் சந்திப்பு. கோவில் வாசலில்(?) வைத்து திருமணம். பெண்ணின் சொந்த ஊரில் சில வாரங்கள் குடித்தனம். பெண் தற்போது இரண்டு மாத கர்ப்பம். தற்போது  இவளை விட்டுவிட்டு முதல் மனைவியிடம்(?) போய்விட்டாராம். ஆமாம்ங்க ஆமா  அவர் ஏற்கனவே திருமணமானவர். இது முன்பே இந்த பெண்ணுக்கு தெரியுமாம், இருந்தும்   காதல் தெய்வீகம்(?) என்பதால் திருமணம் !?? இதில் எனது வேலை என்னனா இந்த இருவரையும் சேர்த்து வைக்கணும். அதுதான் எப்படினுனே எனக்கு புரியல. இவங்க இரண்டு பேரையும் சேர்த்து வச்சுட்டா, அந்த பாவப்பட்ட முதல் மனைவி, இரு சிறு குழந்தைகளின் நிலை !

முதல் மனைவி பேச்சைக்  கேட்டுவிட்டு கர்ப்பிணி என்னை கைவிட்டுட்டார்னு ஒரே அழுகை. இந்த பிரச்சனையில் நான் என்ன செய்யணும் என்று எனக்கு ஆலோசனை என்ற பெயரில் கட்டளை வந்தது வட  மாவட்டத்  தலைவியிடம் இருந்து... சமூக நலத்துறையிடம் ஒரு புகார் மனு எழுதிக்கொடுக்கணும், அவங்க அனுப்புகிற  கடிதத்தைப்  பார்த்து அவன் வருவான், பேசி முடிக்கணும் என்று. நானும் அந்த தலைவி சொன்னபடி எல்லாம் செஞ்சேன். எனக்கு முதல் கேஸ் வேறயா ? நீதி நியாயம் எல்லாத்தையும்  கொஞ்சம் ஓரமா வச்சுட்டு ரொம்ப சின்சியராப்  பொறுமையைக்  கையாண்டேன்.

இதற்கிடையில் இந்த பெண்ணை இவளோட பெற்றோர் வீட்டை விட்டு வெளில அனுப்பிட்டாங்க, சில துணிகளை தோழி வீட்டில் வைத்துவிட்டு மொபைல் போன், ஹான்ட் பேக் உடன் தினம் பஸ்ஸில் திருநெல்வேலி வருவதும் சாயங்காலம் ஊருக்குப்  போவதுமாக இருந்தாள். செலவுக்கு பணம் இல்லன்னு பணம் கொடுத்துச்  செலவுக்கு வச்சுக்க சொன்னேன். இரண்டு நாள் கழிச்சு "என் வீட்டுக்காரரும் அவர் மனைவியும் என்னை அடிக்கிறாங்க  , நெல்லை பஸ் ஸ்டாண்ட்ல இருக்கேன்" னு போன். பதறியடிச்சு ஓடி வந்தால் , அடியால் வீங்கிப் போன  முகத்துடன் இவ மட்டும் நிற்கிறாள்...! ஜூஸ் வாங்கிக்  கொடுத்து ஆசுவாசப்படுத்தினேன்.

"கால் பண்றேன், அவங்ககிட்ட நீங்க பேசுங்க" என்றாள்,  போனை எடுத்தது  முதல் மனைவி, 'ஏன் இப்படி அடிச்சிங்க' னு நான் கேட்ட அடுத்த செகண்ட் 'ஓ அந்த லெட்டர் அனுப்புனது  நீதானா, அவளுக்கு தான் புத்தி இல்லைனா  உனக்கு எங்க போச்சு புத்தி, அவளுக்கு போய் பரிஞ்சுட்டு வரியே , கல்யாணம் ஆனவர்னு தெரிஞ்சும் வந்துருக்கானா அவளுக்கு பேர் என்ன' அப்டி இப்டின்னு கெட்ட வார்த்தைல திட்ட அப்படியே ஆடிப் போயிட்டேன், டக்னு போன்ன கட் பண்ணிட்டேன்.  ஆனா அவ கேட்டதுல இருந்த நியாயம் புரிந்தது.  'நீ ஊர் கிளம்பிப்  போ நாளைக்கு பேசிக்கலாம்னு இந்த பொண்ண அனுப்பி வச்சேன்.  

ஏதோ ஒரு வேகத்துல காதல், கல்யாணம் என்று போனாலும் இப்போது இந்த பெண்ணை விட்டு விலகுவது தான் அந்த ஆணின் நோக்கமாகத்  தெரிகிறது. ஏற்கனவே என்னிடம் பேசிய அந்த மாவட்டத்  தலைவி மறுபடி கால் பண்ணி, "அவன் மாசம் இருபதாயிரம் வாங்குறான் இல்லை அதுல பத்தாயிரம் மாசாமாசம் இவளுக்கு கொடுத்துத்தான் ஆகணும், இவளுக்கும் உரிமை(?!) இருக்கு, அதனால அவனோட ஊருக்கு நீங்க கிளம்பிப்  போங்க , போய் பேசுங்க, அதுக்கு பிறகு தான் இந்த பொண்ணு தன்கிட்ட இருக்குற அவனோட சர்டிபிகேட் , ரேசன் கார்ட் எல்லாம் தருவா, அப்டின்னு ஸ்ட்ராங்கா சொல்லிட்டு வாங்க"னு !! எனக்கு அப்போதான் புரியுது , இந்த பெண் முன்னாடியே  உஷாரா அவனுடைய முக்கிய ஆவணங்கள் எல்லாம் கைப்பத்திக்கிட்ட விஷயம்...அவங்கக்கிட்ட மெதுவாகச்  சொன்னேன், 'மேடம் இந்த பொண்ணு சம்பந்தப்பட்ட எதுவும் என் மனசுக்கு சரினு படல, மேற்கொண்டு இதுல  நான் தலையிடுறதா இல்லை சாரி' னு சொல்லி போனை வைத்துவிட்டேன்  .

நல்லது பண்ணலாம்னு நினைச்சா 'எது நல்லது' என்பதில் எனக்கு குழப்பம்.

எனக்குள்  நிறைய கேள்விகள் !! இந்த விசயத்தில் நிறைய தவறுகள், குளறுபடிகள்... என் மனசாட்சிக்கு விரோதமாக என்னால் செயல்பட முடியவில்லை. அந்த பெண்ணைப்  பொருத்தவரை உதவி என்று கேட்டுச்  செய்ய முடியாமல் போனது வருத்தம் என்றாலும் ஒரு பெண்ணிற்கு உதவுவதாகச்  சென்று இன்னொரு பெண்ணுக்கு துரோகம் எவ்வாறு இழைப்பது...

* முதல் மனைவி உயிருடன் இருக்க இரண்டாவது திருமணம் எப்படி ?

* திருமணம் கோவிலில் வைத்து  நடைபெறவில்லை, கோவில் குருக்கள் மறுக்கவே கோவில் வாசலில் தாலியைக்  கட்டிக் கொண்டாயிற்று.

* செல்போன்

ஒரு ராங் காலோ, மிஸ்டு காலோ போதும் காதல் என்ற பெயரில் ஒரு கலாசாரச் சீரழிவு அரங்கேற...குரலை வைத்து ஒருவரது குணம், படிப்பு, அழகு, அந்தஸ்து கண்டுபிடித்து விட முடியும் என்று நம்பி தொலைந்துப் போகும் ஆண்களும், பெண்களும் இன்று அனேகம். தனக்கு திருமணமானது எங்கே பெண்ணுக்கு தெரியப் போகிறது என்று பெண்ணை ஏமாற்றும் ஆண்கள்...ஆணை எப்படி தன் பிடிக்குள் வைத்துக் கொள்ளலாம் என்று பல சூழ்ச்சிகளைச்  செய்யும் பெண்கள் ! இப்படி நம் சமூகம் ஏதோ ஒன்றை நோக்கி வேகமாகச் செல்வதை போலத் தெரிகிறது. இது மிக மோசமான ஒரு நிலை!    

இத்தனை குளறுபடிகள், தவறுகள்  உள்ள ஒரு பிரச்னையை ஒரு பெரிய அமைப்பு எப்படி ஒரு தலைபட்சமாகப்   பார்க்கிறது என்று எனக்கு புரியவில்லை. அமைப்பு என்பது ஒரு சிலர் சுயமாக எடுக்கும் முடிவா ? பலர் கலந்துப் பேசி எடுக்கும் முடிவா ? பலர் கலந்துப்  பேசி எடுப்பதாக இருந்தால் அதில் இடம் பெற்ற ஒருவருக்குமா இது ஒரு தவறான வழிகாட்டுதல் என்று தெரியவில்லை. ஒரு பெண்ணிற்கு வாழ்வு பெற்றுக்  கொடுப்பதாக கூறிக் கொண்டு வாழ்ந்துக் கொண்டிருக்கும் பெண்ணின் வாழ்க்கையை சிதைப்பதல்லவா இது.  

ஒரு பெண்ணின் வாழ்வைக்  கெடுத்தவன் என்று அந்த ஆணுக்கு வேண்டுமானால் தண்டனை கொடுக்கலாம், அப்படிக் கொடுத்தாலும் பாதிப்பு அந்த மனைவிக்கும் இரு  குழந்தைகளுக்கும் தான்...அனைவரையும் அழைத்து யாருக்கும் பாதகம் இல்லாமல் பேசி முடிப்பது ஒன்றுதான் இப்போதைக்கு சரியான ஒன்றாக இருக்க முடியும் ஆனால் இது நடப்பதற்கு ஒரு சதவீதமும் வாய்ப்பு இல்லை என்பதுதான் என் வருத்தம். 
   
ஒருதலை பட்சமானதா மகளிர் அமைப்புகள், மனித உரிமைக்  கழகங்கள் போன்றவை !!??

மகளிர்க்கு பாதுகாப்பாய் இருக்கவேண்டியது தான் அதற்காக  ஒரு பெண் சொல்லிவிட்டாள்  என்று  சம்பந்தப்பட்ட ஆணை  மட்டுமே குற்றவாளியாக கூண்டில் நிற்க வைப்பது என்பது தவறான ஒன்று. இந்த பெண் விசயத்தில் அந்த தலைவி நடந்துக்  கொண்ட விதம் மனித உரிமை அமைப்புகள் ,மகளிர் அமைப்புகள் என்றால் இப்படித்தான் இருக்குமோ என்ற ஐயத்தை எனக்கு ஏற்படுத்திவிட்டது. கடிவாளம் கட்டிய குதிரையை போல ஒரே திசையை மட்டும் பார்ப்பார்கள் போலும். அவர்களின் ஒரே எண்ணம் அந்த ஆணிடம் இருந்து மாதம் பத்தாயிரத்தை வாங்கி இந்த பெண்ணிடம் கொடுத்துவிட வேண்டும் என்பதாக இருந்தது. அதே நேரம் அந்த முதல் மனைவியின் நிலைமையைப்  பற்றிய அக்கறை துளியும் இல்லை. முறையாய் கல்யாணம் முடித்து இரு குழந்தைகளுடன் அந்த பெண் வாழ்க்கையை எப்படி சமாளிப்பாள் என்பதைப்  பற்றி சிறிதாவது யோசிக்க வேண்டாமா?

மகளிர் அமைப்பை நாடி வந்த பெண் சிறிதும் குற்றமற்றவள் என்றும் , அவள் கைக்  காட்டும் அத்தனை பேரும் தவறானவர்கள் என்பதைப்  போல பார்க்கும் பார்வையை முதலில் மாற்றுங்கள், இல்லையென்றால் அப்பாவிகள் பலரின் நிலை மிக பரிதாபம் தான். 

மகளிர் அமைப்புகள், சம்பந்தப்பட்ட அனைவரையும் விசாரித்து யார் மீது உண்மையில் தவறு என்பதை ஆராய்ந்தப் பின்னரே ஒரு முடிவுக்கு வரவேண்டும். ஆலோசனை கொடுக்கிறேன் பேர்வழி என்ற பெயரில்  எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இறங்கி அமைதியாய் சென்றுக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தைச்  சிதைத்துவிடக் கூடாது.

'அவன விட்டேனா பார், ஒரு வழி பண்ணிடுவேன், கால்ல விழ வைக்கிறேன், ஆம்பளைனா அவ்ளோ திமிரா, இவன மாதிரி எத்தனை பேரை பார்த்திருக்கிறேன், அவன்கிட பணத்தை வாங்காமல் விட கூடாது' என்பதை போன்ற கூப்பாடுகள் போடும் இடமா மகளிர் அமைப்புகள்...??!!! ஒரு பெண் புகார் கொடுத்துவிட்டாள் என்றதும் சம்பந்தப்பட்ட ஆணை எப்படியாவது குற்றவாளிக்  கூண்டில் ஏற்றியே ஆகவேண்டும் என்ற கண்ணோட்டத்தில் மட்டும் செயல்பட்டால் அந்த ஆண் நிச்சயம் ஏதோ ஒரு விதத்தில் இறுதியில் குற்றவாளி ஆகிவிடுவான். 

இந்த பெண் விஷயத்தை பொருத்தவரை இந்த பெண்ணிடமே  அதிக தவறுகள் இருக்கின்றன. செல்போன் காதலை உண்மை என்று நம்புவதும், திருமணம் ஆனவன் என்று தெரிந்தும் திருமணம்(?) முடித்தது,  இறுதியாக அவனது ஆவணங்கள் வைத்துக் கொண்டு மாதம் பத்தாயிரம் பணம் கொடுத்தாக வேண்டும் என்ற ரீதியில் மிரட்டுவதும் அநியாயம்.

ஒருகட்டத்தில் சமாதானமாக போய்விடலாம் என்று சம்பந்தப்பட்ட பெண் முன்வந்தாலும் இவர்கள் விட மாட்டார்கள் போல...ஆண்கள் என்றாலே அயோக்கியர்கள் என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே மகளிர் அமைப்புகள் செயல்பட்டால் அதன் உதவியை நாடும் பெண்களின் கணவன்/காதலன் குடும்பத்தினரின்  நிலை நிச்சயமாக கேள்விக்குறிதான் !!

பின்குறிப்பு

எனக்கு கிடைத்த ஒரு அனுபவத்தின் வைத்து  எழுதி இருக்கிறேன். யாரையும் குற்றம் சொல்லவேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கம் அல்ல. நிறைகளை சொல்ல பலர் இருப்பதை போல சமூகத்தில் தெரியும் சில குறைகளை நான் சொல்கிறேன் அவ்வளவே!  அது எப்படி இப்படி சொல்லலாம் என பெண்ணிய கொடிப் பிடிப்பவர்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள்!

                                                               * * * * *

இன்னும் பேசுவேன்...

கௌசல்யா  


புதன், ஆகஸ்ட் 14

நமக்கே நமக்கான திருவிழா - சென்னையில் 'பதிவர்கள் சந்திப்பு'


சென்ற வருடம் போலவே இந்த வருடமும் சென்னையில் பதிவர்களின் சங்கமம் நடைபெற இருக்கிறது. பதிவர்கள் கூடும் திருவிழா பற்றி பதிவுலகிலும் பேஸ்புக்கிலும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. களைக்கட்டத் தொடங்கிவிட்ட இந்த அற்புத நிகழ்வைப் பற்றி பலரும் பதிவிட்டு சந்திப்புப் பற்றி தெரியாத பலருக்கும் கொண்டு போய் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது பதிவர்களாகிய நமது கடமையும் கூட என்பது என் கருத்து.  

முன்பை போல் இல்லாமல் இப்போது தான் பதிவுலகம் என்ற ஒன்று இருப்பது வெளியே கொஞ்சம் தெரிய தொடங்கி இருக்கிறது. பதிவர்களுக்கென்று ஒரு அங்கீகாரம் தேவை என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பதை விட இது போன்ற நிகழ்வுகளில் கலந்துக்கொண்டும் அல்லது இதை பற்றிய செய்திகளைப்  பலருக்குக்   கொண்டுச்  செல்வதின் மூலம் பதிவுலகத்தின் இருப்பு மற்றவர்களுக்கும்  தெரிய வரும். 

பதிவுலகம் முன்பு போலில்லை, பதிவர்கள் பலர் பேஸ்புக் , ஜி பிளஸ் , டுவிட்டர் என்று போய்விட்டார்கள் என்ற பொதுவான ஒரு குறை உண்டு, எங்கே சென்றாலும் பதிவர்கள் எழுதிக் கொண்டுத்  தானே இருக்கிறார்கள் என்பது ஒரு ஆறுதல். ஆனால் இனியும் அப்படி இல்லாது தொடர்ந்து நிறைய கதைகள், கட்டுரைகள், கவிதைகள், பயண அனுபவங்கள்,  வெளிவர வேண்டும். எழுதுவதைக்  குறைத்துக் கொண்டவர்கள் மீண்டும் எழுத இது போன்ற சந்திப்புகள் நிச்சயம் ஒரு உத்வேகம் கொடுக்கும்.

பத்திரிகை உலகமும், அரசியல் , திரைத்துறை போன்றவையும்  இங்கே நடப்பதை கவனிக்க தொடங்கி ரொம்ப நாளாகிறது. பதிவர்களின் பல கதைகள், கவிதைகள், கட்டுரைகள் பத்திரிகை உலகில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பேஸ்புக் டுவிட்டர் ஸ்டேட்ஸ்கள் வராத மாத வார இதழ்கள் குறைவு தான்.அப்படி பட்ட முக்கியத்துவம் பெற்ற இடத்தில் இருக்கும் நாம் நமக்கே நமக்காக நடைபெற இருக்கும் இந்த மாபெரும் சந்திப்பில் கலந்துக் கொள்வதன் மூலம் நமது ஒற்றுமை உலகறியட்டும். 

சந்திப்புக்கான ஏற்பாடுகள்

ஒவ்வொன்றையும் மிக அருமையாக திட்டமிட்டு , வாரமொருமுறை கலந்தாலோசித்து, கட்டுக்கோப்புடன் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.  தனித்  தனி குழுவாக பிரித்து அவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்திருக்கிறார்கள் , யாருக்கெல்லாம் என்ன பொறுப்பு என்பதை இங்கே http://www.tamilbloggers.info/2013/07/blog-post_30.html சென்று பார்க்கலாம் ! 

விழா நடைபெறும் இடம்

சென்னை வடபழனியில் கமலா தியேட்டர் அருகில் உள்ள CINE MUSICIAN'S UNION' க்கு சொந்தமான கட்டிடம் .

இதுவரை தங்கள் பெயரை உறுதி செய்தவர்கள் தவிர மேலும் கலந்துக் கொள்ள விரும்புவர்கள் தொடர்பு கொள்ள

ரமணி ஐயா: svramanni08@gmail.com
அலைபேசி: 9344109558
திரு.தமிழ்வாசி பிரகாஷ் : thaiprakash1@gmail.com
அலைபேசி 9080780981

பதிவர்கள் தெரிவிக்க வேண்டிய விபரங்கள் 
வலைத்  தளம் பெயர், முகவரி (blog  name & blog url address)
தொடர்பு மின்னஞ்சல்  முகவரி
தொலைபேசி எண் 
ஊர் பெயர் 
முதல் நாள் வருகையா என்ற விபரம்

இந்த வருடம் பதிவர்களின் அறிமுகம் , கவிதை நூல் வெளிஈட்டு விழா , சிறப்பு அழைப்பாளரின் பேச்சு என்பதுடன் பதிவர்களின் தனிப்பட்ட திறமையை வெளிக்காட்டவும் ஒரு நிகழ்வு வைக்கலாம் என உள்ளார்கள்.
எழுத்தில்  தங்கள் திறமையை காட்டியவர்கள் பாட்டு, நடனம் , மிமிக்ரி, நடிப்பு , குழு நாடகம் இப்படி பல வற்றிலும் கலந்து, கலக்க இது ஒரு நல்ல வாய்ப்பு. இதில் ஆர்வம் உள்ளவர்கள், நூல் வெளியிட விருப்பம் உள்ளவர்கள் கவிஞர் மதுமதி அவர்களிடம்   மின்னஞ்சலில் தெரிவியுங்கள். (விரைவாக)
 kavimadhumathi@gmail.com 
அலைபேசி : 989124021

நிகழ்ச்சிநிரல்  பற்றிய குறிப்புகளுடன் கூடிய அழைப்பிதழ் விரைவில் வெளியிடப் பட இருக்கிறது. 

விழா குழுவினரிடம் ஒரு வேண்டுகோள் - 

இந்நிகழ்வை பத்திரிகை, தொலைகாட்சியிடம் ஏன் கொண்டுச் செல்லக் கூடாது. அங்கே வரும் பலரும்  பத்திரிகை , ஊடகத்துறையுடன் தொடர்பு உள்ளவர்கள் அல்லவா, அவர்களின் மூலமாக கொண்டுப்  போகலாமே...இதை விளம்பரம் என்று தயவுசெய்து எண்ணக்கூடாது. மறைமுகமாக அவர்களுக்கும் பதிவர்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்றபோது நம்மைப் பற்றி மக்களிடம் கொண்டு சேர்ப்பது அவர்களின் கடமை தானே ? இதற்கான முயற்சியை எடுக்கலாமே என்பதே எனது வேண்டுகோள்.    

அன்புள்ளம்  கொண்ட பதிவுலக நட்புகளே!

வருடம் ஒரு முறை நடப்பது என்பது சிறப்பு என்றாலும் மாதம் ஒரு முறையாவது பதிவர்களின் சிறு சிறு  சந்திப்பு நடைபெறவேண்டும். வெறும் சந்திப்பாக மட்டும் இல்லாமல், பதிவுலகை கட்டுக் கோப்புடன் கொண்டு செல்வதற்கும், நம்மில் யாருக்காவது எந்த உதவியாவது தேவை என்றால் அனைவரும் ஒன்றிணைந்து உதவுவதும் என்று இருந்தால் நன்றாக இருக்கும்.

மேலும் இந்த வருடம்,   

200 பேருக்குமேல் வருவதாக அறிகிறேன். இதற்கு  ஆகும் செலவு ஒரு லட்சத்தை தாண்டக் கூடும், செலவினை யாரெல்லாம் செய்ய இருக்கிறார்கள் என தெரியவில்லை, இருப்பினும் நமது பங்களிப்பு சிறிதாவது இருந்தால் நன்றாக இருக்கும்.  பணம் என்றாலே பிரச்சனை எழும், இருந்தும்  கடந்த வருட சந்திப்பு முடிந்ததும் வரவு செலவு கணக்கை தெளிவாக விரிவாக பதிவிட்டு இருந்தார்கள். நான் கூட நினைத்தேன், இவ்வளவு விரிவாக தெரிவிக்க வேண்டுமா என்று, ஆனால் இது அவசியமானது என்று விழா குழுவினர் இதற்காக சிரத்தை எடுத்து செய்ததை மனமார பாராட்டுகிறேன். 

மேலும் சென்ற  வருட விழா தொடர்பான வேறு வகை விமர்சனங்கள் அங்கே இங்கே என்று எழுந்தன. இருப்பினும் விழா அமைப்பினர் அத்தனைக்கும் பதில் தெரிவித்ததையும் நாம் அறிவோம். அது போன்றவை இந்த வருடமும் எழலாம் என்ற ஐயம் சிலருக்கு இருக்கலாம்.  ஒரு நாலு பேரை வைத்து சந்திப்பு நடத்துவதே  சிரமம் என்கிற போது நூறு பேருக்கு மேல் கூடும் ஒரு இடத்தில் சலசலப்புகள் வரும் , முடிந்த பின்னரும்  எதிர்வினைகள் எழத்தான் செய்யும்.  எதையும் நாம் பெரிதுப் படுத்தாமல் இருந்தாலே போதுமானது  யார் பிரபலம் யார் சீனியர் ஜூனியர் என்பதை விட பதிவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றில் சிறந்தவர்கள் தான் என்ற ஒரு எண்ணம் நமக்குள் இருந்தால் மட்டும் போதும், எந்த ஈகோ பிரச்னையும் எழாது.  

தவிரவும் பங்குப்  பெரும் அனைவரும், விழா அமைப்பினர் தான் எல்லாம் செய்யவேண்டும் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பதை விட இது நமக்கான விழா நாமும் இயன்றவரை சமமான/சரியான  ஒத்துழைப்பு, ஈடுபாடு  கொடுப்பது நல்லது. நிச்சயம் மிக சிறப்பான ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது. எனது உறவுகளிடம் இதை பகிர்ந்துக்  கொள்வது எனக்கு ஒரு நிறைவை கொடுக்கும் என்பதால் இதைச் சொல்கிறேன். 

யாரெல்லாம் வருவார்கள் என்னவெல்லாம் சுவாரசியங்கள்  நடக்கப் போகின்றது என்ற ஆவல், நாள் நெருங்க நெருங்க அதிகமாகிக் கொண்டேச் செல்கிறது.

சாதி, மத, இன,கொள்கை வேறுபாடுகள் இன்றி பதிவர்கள் என்ற ஒரே ஒரு  அடையாளத்தோடு மட்டும் நடக்க போகும் இதில் கலந்துகொண்டு தமிழ் பதிவுலகை பெருமைப்படுத்தபோகும் அத்தனை உறவுகளுக்கும் என் வாழ்த்துகள். அனைத்தும் குறைவின்றி நடைபெற்று முடிய எல்லாம் வல்ல தேவனிடம் என் பிரார்த்தனைகள் ! சந்திப்பை திருவிழாப் போல் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் நேச உறவுகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்...! விழா மிகச் சிறப்பான வெற்றி பெறட்டும்  ...! 

                               ஓங்குக தமிழ் பதிவுலக மக்களின் ஒற்றுமை !!

                                                        * * *

                                               வெல்க தமிழ் !!!

                                                        * * *

செவ்வாய், ஜூலை 23

தாம்பத்தியம் - 30 'பழையக் காதலை கணவரிடம் சொல்லலாமா ?!'



ஆண் பெண் யாராக இருந்தாலும் பருவ வயதில் காதலில் விழுவதும், காதலை கடந்துப் போவதும் சகஜம். சிலர் திருமணத்தில் இணைவர், பலர் வேறு ஒருவருடன் திருமணத்தில் இணைவர். இதில் ஒரு பெண்ணை காதலித்து வேறு பெண்ணை மணக்கும் ஆணுக்கு அவ்வளவாக பிரச்சனை இருக்காது. ஆனால் ஒருவரை காதலித்து மற்றொருவரை மணக்கும் பெண் ஆரம்பம் முதலே குழப்பத்தில் ஆழ்ந்துவிடுகிறாள். காதலனை எப்படி மறக்க  என்பது ஒரு பக்கம் என்றாலும் அக்காதலை கணவனிடம் சொல்லவா  மறைக்கவா என்ற கேள்வி ஒரு பக்கம் !!

ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்தேன் என்று எல்லா ஆண்களும் தன் மனைவியரிடம் சொல்கிறார்களா என தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக பெரிய அளவில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பில்லை. பொதுவாக ஒரு ஆணின் கடந்த காலத்தை பெண் பெருந்தன்மையுடன்  கடந்துவிடுகிறாள்.(விதிவிலக்கின் சதவீதம் குறைவு) 

அதைப்  போல ஒரு பெண் தனது கடந்தகால காதலை கணவனிடம் சொல்ல முடியுமா? சொன்னால் நிலைமை என்ன? சொல்லாமல் மறைத்தாலும் என்றாவது ஒரு நாள் யாரோ ஒருவரின் மூலமாக கணவனின்  காதுக்கு விஷயம் தெரியவரலாம். யார் மூலமாகவோ தெரிந்து பிரச்சனையாவதை விட நாமே சொல்லிவிடுவது பெட்டர் என்று சில பெண்கள் சொல்லிவிடுகிறார்கள் ...அவ்வாறு சொன்ன ஒரு பெண்ணின் நிலை இன்று மிக பரிதாபம். சந்தேகம் கொண்டு தேளாய் கொட்டுகிறான் கணவன், உறவினர்களிடம் போனில் பேசினாலும்  'அவன்கிட்ட தானே பேசுற, உருகி உருகி காதலிச்சிட்டு எப்படி மறக்க முடியும்?' 'அவன விட்டுட்டு என்னை கல்யாணம் பண்ணிகிட்ட அப்போ அவனுக்கு உண்மையா இல்ல, இப்போ எனக்கு மட்டும் எப்படி உண்மையா இருக்க முடியும்?' 'காதல் எதுவரை கை வரையா இல்ல அதுக்கு மேலயா?' என்று வித விதமான கொடிய வார்த்தைகளால் தினமும் அர்ச்சனை. துன்புறுத்தல் தொடர இப்போது விவாகரத்துதான் ஒரே முடிவு என்ற நிலை.

பருவ வயதில் காதல் வந்தது தவறா ? தன் காதலை ஏற்காமல் வற்புறுத்தி இவரை திருமணம் செய்வித்த பெற்றோரின் தவறா ?  கணவனிடம் எதையும் மறைக்காமல் உண்மையாக வாழ எண்ணிய தனது தவறா ? இப்படி பல கேள்விகளுக்குள் தன்னை புதைத்துக்கொண்டிருக்கிறாள்...

இன்றைய சூழலில் பல குடும்பங்களில் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் இச்சிக்கலில் இருந்து எப்படி மீள்வது என்பது ஆண் பெண்ணின் பரஸ்பர புரிதலைப்  பொறுத்து அமைகிறது.  இந்த விசயத்திற்கு  எப்படி  கவுன்சிலிங்  கொடுத்தேன்?! என்பது ஒரு புறம் இருக்கட்டும். இதுவரை கணவரிடம் சொல்லாமல் இருக்கிறோமே என்ற குற்றவுணர்ச்சியுடன் உள்ள பெண்கள் அல்லது கடந்த காலத்தைப்  பற்றிய குழப்பத்துடன் திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள் அவர்களுக்கு  இங்கே சொல்லப் போகிறவைகள் உபயோகப்படலாம். தொடர்ந்து வாசியுங்கள்... 

ஆண்களின் கடந்த காலம் எப்படி இருந்தாலும்  அட்ஜெஸ்ட் செய்து வாழ பெண்கள் பழகிக் கொள்வார்கள். இந்த பக்குவம் ஆண்களிடம் உள்ளதா என்பது ஒரு கேள்விக் குறியே !

நம் திரைப் படங்களில் ஏற்கனவே ஒருவரால் காதலித்து கைவிடப்பட்ட கதாநாயகியை திருமணம் செய்யும் கதாநாயகன் தியாகச்சீலனை போல காட்டப்படுவான். அப்புறம் மறுமணத்திற்கு தயாராகும் கதாநாயகிக்கு குழந்தை இருக்காது, அதாவது முதல் கணவன் முதலிரவுக்கு முன்னரே இறந்துவிடுவான் அல்லது குடும்ப வாழ்விற்கு தகுதி இல்லாதவனாக இருப்பான். திரைப்படங்கள் என்றில்லை நம் சமூகமே இப்படித்தான் பெண்ணைச்  சித்தரித்து வைத்திருக்கிறது.

நம் சமூகத்தில் ஆண்கள் பலருடன்  நட்பாக இருக்கலாம், காதலிக்கலாம், சில பல திருமணங்கள் கூட செய்துக்  கொள்ளலாம். அவர்களின் மதிப்பு எவ்விதத்திலும் குறைவதில்லை. நான் ஆம்பளை என்பதில் அடங்கிவிடுகிறது அத்தனையும்...! ஆனால் பெண்கள் தாங்கள் காதலித்ததையே மறைத்தாக வேண்டும் !! காதல் வயப்பட்டவள் என்றால் அவள் இங்கே மதிப்பிழந்தவளாக  கருதப்படுகிறாள். பெண் என்பவள் ஒருவனுக்காகவே பிறந்து அவனுக்காகவே வாழ்ந்து அவனுடனே இறந்து விடவேண்டும் என்ற ஆழ்மன புதைக்குழியில் இருந்து இன்னும் வெளிவரவில்லை இந்த சமூகம். (அதனால்தானோ என்னவோ  முறைத்தவறிய பொருந்தாக்  காதல்கள்,  கல்யாணங்கள் பல !)

காதல்

காதல் என்பது அழகான ஒரு உணர்வு. பலரின் மனதிலும் முதல் காதல் ஒன்று என்றும் இருக்கும். அந்த காதல் உங்களை அழகாய் பார்த்துக் கொள்ளும் சோர்வுறும் நேரம் தட்டி எழுப்பி உற்சாகப்படுத்தும். தோளில் சாய்த்து ஆறுதல் படுத்தும். நிகழ்கால குடும்பச் சுமைகளை உங்களிடம் இருந்து பகிர்ந்து எதிர்காலத்தை பற்றிய ஆவலை ஏற்படுத்தி வாழவைக்கும்! ஆனால்   கணவரிடம் கடந்தக்  காலத்தை வெளிப்படுத்தும் போது அதன் அழகு , இயல்பு ஒருவேளை குறைந்துப்போகலாம். காதலின்  உண்மையான வடிவம் சிதைந்து போகலாம். கணவனுக்கு உண்மையாக இருப்பதாக எண்ணிக் கொண்டு கடந்த காலத்தைச்  சொல்வது புத்திசாலித்தனம் அல்ல. உண்மையாக இருப்பது என்பது வேறு, உண்மையைப் போட்டு உடைப்பது என்பது வேறு. உண்மையைச்  சொல்லி அதுவரை தெளிவாக இருக்கும் கணவனின் மனதில் குழப்பத்தை குடி வைத்து விடக்கூடாது. அதன்பின் ஆயிரம் சத்தியங்கள் செய்தாலும் குழப்பத்தை வெளியேற்றுவது மிகக் கடினம்.

தீக்குளிக்கச்  சொல்லும் ராமன்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதற்காக நாம் சீதையாகிவிட முடியாது. கடந்தகாலத்தை கூறி... நிகழ்காலத்தை நரகமாக்கி... எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி விடாதீர்கள் !!

பொய் சொல்லக் கூடாதே தவிர உண்மையை மறைப்பதில் தவறில்லை. 

பொய் சொல்லக்கூடாது என்றால் காதல் அனுபவம் உண்டா என்று கணவன் கேட்கும் போது என்ன செய்வது என யோசிக்கிறீர்களா ? இந்த கேள்வி வந்தவுடனே உஷாராகி விட வேண்டியதுதான். பரந்த உள்ளம் கொண்ட ஒரு ஆண் தன் மனைவியின் கடந்த காலத்தை ஆராய விரும்ப மாட்டான், அவளாக சொல்லாதவரை !  மீறி கேட்கிறான் என்றால் இவனை போன்றவர்களிடம் பொய் சொல்வதைத்  தவிர வேறு வழியில்லை. பிறகு  வேறு யாரோ மூலமாக காதல் விவகாரம் தெரியவந்தாலும் 'ஆமாம், அதை நானே மறந்துவிட்டேன், மறந்த ஒன்றைப்  பற்றி இப்போது  ஏன் பேசணும் ...இப்போது என் சிந்தனை எல்லாம் நீங்க, குழந்தைகள் பற்றி மட்டும்தான்' என்று கூறி அத்துடன்  முற்றுப்புள்ளி வைத்துவிடுங்கள்.  

பெண்களே...

திருமணத்திற்கு முன் பல நம்மை கடந்துச்  சென்றிருக்கும். பெற்றோரின் கருத்து வேறுபாடுகள், யாரோ ஒருவரின் தவறான தொடுதல், ஏமாற்றம், தோல்வி இப்படி ஏதாவது இருக்கலாம் இதை எல்லாம் அப்படியே சொல்லிவிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நிகழ்கால நிம்மதியான வாழ்க்கைக்கு ஆண், பெண் யாருடைய கடந்த (கசந்த)காலமும் தேவையில்லை. இது உங்கள் இருவருக்கும் மட்டுமேயான ஒரு புதிய வாழ்க்கை. இதில் தேவையற்ற பழையன கழிதல் வேண்டும். இந்த வாழ்க்கையில் குழந்தைகள், நெருங்கிய உறவினர்கள் இவர்களுடன் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பதை பற்றிய பேச்சுக்கள் மட்டும்தான் கணவன் மனைவியரிடம் இருக்க வேண்டும். 

கண்ணைவிட்டு மறைந்த கடந்த காலம் பற்றிய கவலை இன்றி
கண்ணுக்கே தெரியாத எதிர்காலம் பற்றிய அதிக எதிர்பார்ப்பும் இன்றி
கண்முன் தெரியும் நிகழ்காலத்தில் எவ்வாறு சந்தோசமாக வாழ்வது என்பதைப்  பற்றி மட்டுமே நினையுங்கள்...பேசுங்கள்... வாழ்வு வளமாகும்... தாம்பத்தியம் மகிழ்ச்சி வெள்ளத்தில் கரைபுரண்டு ஓடட்டும்...........

இது ஆண்களுக்காக...


பெண் நம்மை போன்ற உயிரும் உணர்வும் உள்ளவள், பருவ வயதில் உண்டாகும் ஈர்ப்புக்கு ஆளாவது சகஜம் தான்' என்று ஒத்துக் கொள்ளும் உயர்ந்த உள்ளம் உங்களுக்கு வேண்டும்.  தன் மனைவியானவள் தன் கடந்தகால காதலை தெரிவித்தால் 'பரவாயில்லை போனதுப்  போகட்டும், உன் தவறு ஏதுமில்லை...கடந்த காலத்தை காதலனுடன் சேர்த்துத்  தூக்கிப் போட்டுவிடு... இனி உனக்கு நான்தான் எனக்கு நீ தான்' என்று பெண்ணின் மனதில் இருக்கும் குற்றவுணர்ச்சியை முதலில் போக்குங்கள். ஆண்கள் இந்த விசயத்தில் கட்டாயம் மாறித்தான் ஆகவேண்டும். உண்மையை வெளிப்படையாக சொன்ன மனைவியின் வெள்ளை மனதைப்  புரிந்து அகமகிழ்ந்து அணைத்துக் கொள்ளும் அளவு மனம் பக்குவப்பட்டாக வேண்டும். அப்போதுதான் மனைவியும் கணவனிடம் தான் எதையும் மறைக்கவில்லை என்ற ஒரு மனநிம்மதியுடன் தன்னை புரிந்துக் கொண்ட கணவனைப்  போற்றுவாள், மனதார முழுமையாக காதலிக்கத் தொடங்குவாள் அந்த நொடியில் இருந்து ...!  இனிவரும் நாட்கள் நிச்சயமாக நலமுடன் அமையும்.   

* * *

ஒரு ஆண் தனது கடந்த காலத்தை மனைவிடம் "சொல்லாமல் தவிர்ப்பதா? சொல்லி தவிப்பதா?" எப்படி என்றும் பாக்கணுமே :) அதையும் பார்த்துடுவோம் இனி வரும் பதிவில் ... 

தொடர்ந்து பேசுகிறேன்...

உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா


செவ்வாய், ஜூலை 16

பிரியமானவன் - MJ

ஒவ்வொருவரும்  யாரோ ஒருவரின் ரசிகராக இருப்பார்கள். பிடிக்கும் என்பதையும் தாண்டி ஒரு ரோல் மாடலாக, குருவாக எண்ணி அவரது கருத்துகளை பின்பற்றலாம். சிலர் நேசிக்கவும் செய்வார்கள், இது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத நேசம். இத்தகைய நேசம் நம்மை நெறி படுத்துகிறது என்றால் நேசிப்பதில் தவறென்ன. என்றுமே ஒருவரை ஒருவர் சந்திக்க வாய்ப்பே இல்லையென்ற போதில் அவரை பற்றிய  நினைவுகளை சுமந்து வாழ்வது என்பது சுகம். இதை எழுத்தில் சொல்வது  மிக சிரமம், உணர வேண்டும்.  

ஒவ்வொரு வருடமும் ஒரு தினத்தில் MJ வின் மீதான நேசம் எழுதப்படவேண்டும் என்பது எனது முடிவாகிவிட்டது, என்றாலும் அழுத்தும் பணிச்சுமை, அதனை தொடர்ந்த பிரச்னை,சிக்கல் என்று என்னை தனித்து செயல்படவிடாமல் முடக்கிப் போட்டுவிட்டது. எப்போதோ ஒருசில நேரங்கள்  மட்டும் தனக்கு பிடித்தவர்களை நினைப்பவர்களுக்கு அவர்களை குறித்த தினங்கள் மட்டும் முக்கியமானதாக  இருக்கும். ஆனால் பிடித்தவர்களின் நினைவுகளுக்குள்  முப்பொழுதும் மூழ்கி கிடப்பவர்களுக்கு ஒவ்வொரு நொடியும் முக்கியம்தான். எனக்கும் அதுபோன்றே ஆகிவிட்டது, அவரது நினைவுதினம் முடிந்து சில நாட்கள் கழிந்தபின் கிடைத்த இந்த தனிமை, இதோ இப்போது என்னை எழுதவைத்துக் கொண்டிருக்கிறது.

ஜூன் 25 அன்று இந்த பதிவை எழுத நேரம் கிடைக்கவில்லை என்பதை விட நான் தனித்திருக்கவில்லை என்பதுதான் சரி. உறவுகள் நட்புகள் என்ற பெயரில் யார் யாரோ சூழ்ந்துக்கொண்டு  அவர்கள் இயக்க  இயங்கிக் கொண்டிருக்கிறேன் ஒரு இயந்திரமாக ! இவர்கள் எல்லோரும் எப்போதும் எதையோ பேசுகிறார்கள்... பேசியதற்கு மாறாக செயல்பட்டு அதுதான் இயல்பு, இயற்கை, கடவுள் என்று ஏதேதோ கூறி தங்கள் தவறுகளை தெய்வீகமாக்குகிறார்கள். இவர்களுக்கு மத்தியில் நேசத்தை கொண்டாடும்  என் போன்ற ஆனந்தக் கூத்தாடிகளை பார்க்கும் போது உளருபவர்களாக தெரியலாம்...எனக்கென்னவோ நாங்கள் வாழ்க்கையை வாழ்வதாகவும்...மற்றவர்கள் வாழ்வதாக சொல்லிக்கொண்டு  எப்பொழுதும் பிறரின் வாழ்க்கையை அலசி ஆராய்ந்துக் கொண்டே இருப்பதாகவும் தெரிகிறது ! 

பிற பதிவுகளுக்கும் இதற்கும் ஒரே   ஒரு வித்தியாசம். மற்றவை பிறர் வாசிக்க  இது நான் வாசிக்க...சுவாசிக்க !  வார்த்தை அலங்காரங்களோ மேதாவித்தனமோ சிறிதும் இன்றி ஆழ்மன உணர்வுகள் அப்படியே வெளிப்படும் ஒரு இடம் இது...கட்டுக்கடங்கா நேசம் கொண்ட மனது குழந்தையாய் துள்ளிகுதித்து  எழும் உணர்வுகளை வார்த்தைகளாக்கிவிட்டே அமைதிக் கொள்கிறது . அப்படி என்ன ஒருவரின் மீது ஈடுபாடு என்று  பலர் பல வருடங்களாக கேட்டுள்ளனர். இதே கேள்வியை எனக்குள்ளும் கேட்டிருக்கிறேன் பதில் என்னவோ வழக்கம் போல 'பிடிச்சிருக்கு அவ்வளவுதான்' என்பதாக இருந்துவிடுகிறது.




அடுத்தவர்களின் அந்தரங்கத்தில் நுழைந்தே பழக்கப்பட்டு போன இந்த மனித சமூகத்திற்கு புரிவதில்லை இது போன்ற நேசங்கள். இன்றைய நட்புகளின்  நலம் விசாரிப்பதில் கூட ஏதோ ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. சுயநலம் மட்டுமே பெரிதென்று வாழும் இந்த உலகில் உண்மையான நேசம்  பெரிதாய் கண்டு கொள்ளப்படுவதில்லை. அவர்கள்  சிரித்தால் நாம் சிரிக்கவேண்டும் அழுதால் அழவேண்டும்...இதற்கு மாறாக இருந்துவிட்டால் அந்த நிமிடமே நேசம் பொய்யென்று ஆகிவிடுகிறது.       

எல்லோருக்கும் பேச பழக ஏதோ ஒரு காரணம் தேவையாக இருக்கிறது...தேவைகள் ஏதுமின்றி நேசம் கொள்ள யாருக்குமிங்கே நேரமுமில்லை...அவசர உலகில் அன்பும் அலட்சியமாகிவிட்டது.

ப்ரியம் எந்த கணமும் எதன் மீதும் யார் மீதும் வரலாம், ஆனால் சக மனிதன் மீது கொள்ளும் நேசம் கட்டாயம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுவிடும். அது எப்படி இது எப்படி என்று வினா எழுப்பியே வீணாய் போனவர்கள் நிறைந்த மண் இது. எப்போதோ சிறுவயதில் கேட்ட ஒரு குரல், இப்போதும் சோர்ந்து போகும் நேரமெல்லாம் தோள் சாய்த்து ஆறுதல் படுத்துகிறது, இதை உணர பெரிதாய் ஏதும் தேவையில்லை நேசம் நம்மில் நிறைந்திருந்தால் போதும்.  

என்  பிரியமானவனே...

என்னை சுற்றி மனிதர்கள் பலர் இருக்க நானோ உன்னை உன் இசையை உன் குரலை சுற்றிக் கொண்டிருக்கிறேன். இது பிடித்திருக்கிறது, மிக பிடித்திருக்கிறது  !!  அழகாய் அருமையாய் என்னை பார்த்துக் கொள்கிறது உன் இசை. புது செல்போன் ஒன்று எனக்கு வாங்கியதும் எனது மகன்கள் இருவரும் பாடல்களை நெட்டில் இருந்து download செய்து போட்டி போட்டு போனில் அப்லோட் செய்து முடித்தார்கள் ...அத்தனையும் உனது பாடல்கள்  ! என் கணவரும் தன் பங்கிற்கு   'லிஸ்ட்ல அந்த 'You are not alone' சாங் விட்டுடாதிங்கடா' என அக்கறையாய் சொல்ல, எனக்கு பிடித்த உன்னை என் குடும்பமே கொண்டாடிய  அத்தருணத்தில் வானம் என் வசப்பட்டிருந்தது !

அப்போது எனக்கு பத்து வயதிருக்கலாம்...காய்ச்சலின் தீவிரத்தில் படுக்கையில் இருந்த என் காதில் முதன்முறையாக ஒலிக்க தொடங்கியது ஒரு பாடல், அர்த்தம் சரியாக புரியாத நிலையில் அந்த குரலில் தெரிந்த ஏதோ ஒன்று  எனக்குள் அன்பு,இரக்கம், கருணை என அத்தனையும் சேர்ந்த ஒரு உணர்வு கலவையாய் எனக்குள் ஊடுருவிய நிலையில் மெல்ல கண் மூடினேன்...அன்று மூடிய விழிகளுக்குள் ஆழ்ந்துவிட்ட  அந்த குரல் இன்று வரை வெளிவரவே இல்லை !  இன்று வரை மானசீகமாய் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்,  'யாரோ நீ...? உனக்கு என் நன்றிகள்' ! எனக்குள்  இரக்கம், கருணை,நேசம்  இருக்கிறதென்றால் உன்னால் மட்டும் தான் என சத்தியம் செய்வேன். அறியா வயதில் எனக்குள் நீ விதைத்த நல்லவைகள் இன்றும் என்னை வழிநடத்துகிறது...

Think about the generations and to say we want to make it a better
world for our children and our children's children. So that they know
it's a better world for them; and think if they can make it a better
place.

Heal the world
Make it a better place
For you and for me and the entire human race
There are people dying
If you care enough for the living
Make a better place for
You and for me.

If you want to know why
There's a love that cannot lie
Love is strong
It only cares for joyful giving.
If we try we shall see
In this bliss we cannot feel
Fear or dread
We stop existing and start living
Then it feels that always
Love's enough for us growing
Make a better world, make a better world.

உனக்கு மரணம்  இத்தனை சீக்கிரம் வந்திருக்கக் கூடாது என அன்று  நினைத்தேன்...கோவில் சிலையிலும் ஆபாசத்தை தேடும் மோசமான உலகம் இது...அடுத்தவரில் குற்றம் குறை கண்டுபிடித்தே தன்னை ஒரு புத்தனாக காட்டிக் கொள்ள துடிக்கும் மனிதர்கள் நடுவில் வாழ்ந்தால் உன் போன்றோரை சாவிற்கு அவர்களாகவே அழைத்து சென்றுவிடுவார்கள். உன்னை குறித்த ஒவ்வொரு செய்தியையும் விற்று காசாக்கிக் கொண்டிருக்கிறார்கள் நீ மரித்து  நாலாண்டுகள் கழிந்த பின்னும்...

ஜூன் 25 அன்று  மண்ணைவிட்டு நீங்கினாய் என் போன்ற ரசிகர்களை விட்டு அல்ல...உண்மையில் முன்பை விட இப்போதுதான் என்னை மிக நெருங்கி இருக்கிறாய். சுவாசமாய் உன் குரல் இருக்க வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன் அழகிய நினைவுகளுடன்  நினைவாய் !

உனது பாடல்
உன் ஞாபகத்தை கூட்டி
விழிகளில் நீர் பெருக்கி
இமைகளை நனைத்து நனைத்து
வரைய வைக்கிறது
உன்னை ஒரு ஓவியமாய்...

* * *

உனது இசையலைகள் 
மோதி மோதி
கரைத்துவிடுகின்றன
எனது சோகக்கரைகளை...

* * *

தேடி தேடி  சேகரித்த
உன் புகைப்படங்கள்
உன் வார்த்தைகள்
உன்  பாடல்கள்
உன் வெள்ளை சிரிப்பும்
அங்கும் இங்குமாய்
பதிந்திருக்கும் உன் தடங்கள்

இவை போதுமெனக்கு
இந்த ஜென்ம ஓட்டத்தை
முழுதாய்
நிறைவாய் ஓடி முடிக்க...

* * *

இன்றும் எனக்குள்
நீ இருக்கிறாய்...
உன் இசை இருக்கிறது...
நானும் இருக்கிறேன் !!

* * *

*  'People ask me how I make music. I tell them I just step into it. It's like stepping into a river and joining the flow. Every moment in the river has its song. So I stay in the moment and listen' 
    
  *  “Let us dream of tomorrow where we can truly love from the soul and know love as the ultimate truth at the heart of creation.”

*  “I spend a lot of time in the forest. I like to go into the forest and I like to climb trees. My favorite thing is to climb trees, go all the way up to the top of a tree and I look down on the branches. Whenever I do that it inspires me for music. There are these two sweet little kids, a girl and a boy, and they're so innocent; they're the quintessential form of innocence, and just being in their presence I felt completely speechless, 'cause I felt I was looking in the face of God whenever I saw them. They inspired me to write ‘Speechless.’”
- Michael Jackson 
* * *
சிலநேரம் மீண்டும் மீண்டும் பலமுறை கேட்கும் ஒரு பாடல் இது...தனது ரசிகரிடம் சொல்வதை போன்ற பாட்டின் இந்த வரிகள் வலிகொடுக்கும் தனிமைக்கு ஆறுதல் ! கேட்கும் ஒவ்வொருமுறையும் கண்கலங்காமல் இருக்கமுடிவதில்லை...கண்ணீரில் கரைந்தும்விடுகிறது மனக் கு(க)றைகள் 
You are not alone
I am here with you
Though we're far apart
You're always in my heart
You are not alone 
 
 
நான் எழுதிய  
முந்தைய பதிவுகள் 
பிரியங்களுடன்
கௌசல்யா 
 

செவ்வாய், ஏப்ரல் 30

சாதியை எதிர்த்து என்ன செய்துவிட முடியும் நம்மால்...?!!


சாதிப்பெயர் வச்சாத்தான் என்ன தவறு ?
சாதி மறுப்பவர்களும் சாதி கொடிப்  பிடிப்பவர்களும் அவர்கள் கருத்தில் நிலையாக நிற்கிறார்கள் , ஆனால் அடிப்படையில் இருவருக்கும் அதிக வேறுபாடில்லை. தான் பிறரை விட மேம்பட்டவன், வித்தியாசமானவன்,  எப்படியாவது தான் முக்கியத்துவம் பெறவேண்டும் என்ற முயற்சி மட்டும் தான் அங்கே தெரிகிறது.  

முகநூலில் சில  நாட்களுக்கு முன் ஒரு புகைப்படம் ஷேர் செய்திருந்தார்கள்.  அந்த புகைப்படம் 'கீதாவீரமணி பிராமணாள் ஹோட்டல்' என்று எழுதிய பெயர் பலகை...! இதை பார்த்த பலரும் ஆவேசமாக தங்கள் கருத்துக்களை(படு மோசமாக) கூறியிருந்தனர். (இது சாதி பெயரா வர்ணம் சம்பந்தப்பட்டதா என்பது இல்லை எங்கே பிரச்சனை) இது சாதிய அடையாளத்தைக்  குறிக்கிறது இது மிக தவறு என்பதாகத்தான் அங்கே விவாதம் நடந்தது. இந்த ஹோட்டல் இருக்கும் அதே ஊரில் தான் சிவகாசி நாடார் மெஸ், சைவ பிள்ளைவாள் மெஸ், செட்டியார் மெஸ் போன்றவையும் இருக்கின்றன.  ஒருவரின் பெயருக்குப்  பின்னாடி சாதி பெயர் போடக்கூடாது, பெயர் பலகையில் சாதி பெயர் இருக்கக்கூடாதுனு கூச்சல் கேட்கும் போது எனக்கு ரொம்ப அன்னியமா தோணுது !!?

என் கேள்வி ஒன்றுதான் 

பெயர் பலகையிலும், தனது பெயரின் பின்னாலும் சாதிப்பெயர் வச்சாத்தான் என்ன தவறு ?

இதை எடுக்கச்  சொல்லி வற்புறுத்துவதோ, மோசமானக்  கருத்துக்களை மாறி மாறி முன்வைப்பதாலோப்  பெரிதாக என்ன நடந்துவிட போகிறது?!! நம் சமூகத்தில் சாதிய எண்ணங்கள் ஆழ வேரூன்றிப்   புண்பட்டுப்  புரையோடிக் கிடக்கிறது. அதை எதிர்த்து என்ன செய்துவிட முடியும் நம்மால்...?! இணையத்தில் ஒருத்தர் முகம், மற்றொருவர் அறியாத நிலையில் சாதி பெயரை வைத்தது தவறு என கிண்டலும் கேலியுமாகக்  கூச்சலிடுவது சம்பந்தப்பட்ட பிரிவினரின் மனதில் காயத்தை ஏற்படுத்தும். இங்கே இப்படி கூச்சலிடுபவர்களால் தெருவில் இறங்கி இதை தைரியமாக சொல்ல இயலுமா...? நிச்சயமாக முடியவே முடியாது !! 

சாதிக் கலவரம்

சமீபத்தில்  நடந்த கலவரத்தைக்  குறித்து சமூகத் தளங்களில் பலரும் ஆவேசமாக கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதில் எத்தனை பேர் உண்மையாக சாதியை வெறுப்பார்கள். சாதி மறுப்பு கவிதைகளும் பதிவுகளும் காரசாரமாக எழுதலாம், நிஜ வாழ்வில் சாதியை மறுத்து இருக்க இயலுமா? இருப்பார்களா ? நிச்சயம் முடியாது. அப்புறம் எதற்கு இந்த வீண் ஆர்ப்பாட்டம் ?!

இரு சக்கர வாகனம் ஒன்றில் இருந்த பெயர் சாதியை குறிக்கிறது என்று வெகுண்டு எழுந்த  உணர்வாளர்கள் உடனே தங்கள் எதிர்ப்பை பலவாறு தெரிவித்து அப்பெயரை மாற்ற வைத்துவிட்டார்கள். நல்ல விஷயம் தான். அதே சமயம் இந்த போராட்ட வேகத்தை மற்றதில் காட்டுவார்களா ? உதாரணமாக " பள்ளியில் சாதிப்  பெயரை குறிப்பிட மாட்டோம் "  இதை போராடி மாற்றினால் உண்மையில் பாராட்டுக்கு உரியவர்கள். அதை விட்டுவிட்டு  உயிரில்லாத பெயர் பலகையிலும், வண்டியில்  போட்டதை எடுங்க என்று போராடுவதில் என்ன இருக்கிறது. இதை பற்றி முகநூலில் ஒருவரின் கம்மென்ட் "

"நரேஷ் அய்யர் எனும் திரையிசைப் பாடகர் தமிழ் பாடல்கள் பாடி வருகிறார்
அவரையும் பாடக்கூடாதென கையெழுத்து வேட்டை தொடங்கலாமா ?"

கேலிக் கூத்தாகி போனது தமிழனின் இன்றைய நிலை !!

சாதியைப்  பற்றி காரசாரமாக விவாதிப்பவர்களே ! இவர்களை பற்றியும் கொஞ்சம் பேசுங்களேன்...!! அப்படியாவது விடியுமா இவர்களது கிழக்கு...??!

பல கிராமங்களில் இரட்டை குவளை முறை இன்றும் தொடருகிறது ...! கையால் கழிவறைக்  கழிவுகளை அள்ளுகிற மனிதர்களும் உண்டு இங்கே...! எங்கே, சிறிது  அவர்களைப்  பற்றியும்  பேசுங்கள். அந்நிலை மாறவேண்டும் என கூச்சலிடுங்கள், போராடுங்கள். மனிதர்களிடையே ஒரு பிரிவினர் ஒதுக்கி வைக்கப்பட்டுச்  சிதைக்கப்படுகிறார்களே அவர்களைப்  பற்றியும் நினையுங்கள். அதை விடுத்து சாதியை வெறுப்பதை போன்ற முகமூடி அணிந்து  'இந்த நூற்றாண்டில் இது என்ன கேவலம்' என கூச்சலிடும் வெட்டி பேச்சு வீணர்களாக மட்டும்  இருக்காதீர்கள்...?? 

நீ என்ன செய்தாய்?

சாதி வேண்டாம் என்பவர்கள் தங்கள் குழந்தைகளை சாதி குறிப்பிடாமல் பள்ளியில் சேர்த்தார்களா? பள்ளி, அரசு வேலையில் சலுகை ஏதும் வேண்டாம் என கூறி இருக்கிறார்களா? அங்கெல்லாம்  சாதி தேவைப்படுகிறதே !  சாதிவாரி கணக்கெடுப்பு அரசு செய்கிறது. கேட்டால் அப்போதுதான் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு செய்வதற்கு வசதியாக இருக்குமாம். அரசாங்கம் மனிதனை இந்த சாதி அந்த சாதி என தனித்துப்  பார்க்க ஒரு காரணம் சொல்லும் போது, சாதியை முன்னிலைப் படுத்துபவர்களுக்கும்  ஏதோ ஒரு காரணம் இருக்கும், இருந்துவிட்டு போகட்டுமே ? அதில் உங்களுக்கு ஏன் வருத்தம் ?!

கலப்புமணம்

கலப்பு மணம் புரிந்தால் சாதி மறைந்துவிடும் என்கிறார்கள். கலப்பு மணம் புரிந்தால் சலுகைகள் , வேலை வாய்ப்புகள் என அரசு கொடுக்கிறது. ஆனால் இந்த சலுகைக்காக கலப்பு மணம்  பயன்பட்டது அன்றி வேறு நல்லவை ஒன்றும் நடக்கவில்லை. இதனால் சாதி மறைந்ததா ?! நிச்சயமாக மறைய வாய்ப்பே இல்லை. கலப்பு மணம் புரிந்த தம்பதிகளில் கணவன் எந்த சாதியோ அது அவர்கள் குழந்தைகளின் சாதியானது. இந்த விதத்திலும் ஏதோ ஒரு சாதி தொடரத்தானே செய்கிறது. கலப்பு மணத்தில் பெண் சாதி மறைந்து ஆண் சாதி தொடர்கிறது. மற்றபடி சாதியே மறைந்தது என்று சொல்ல இயலாது. சொல்லப்போனால் இரு வேறு  சாதி மணம் முடித்திருந்தால் குடும்பத்தில் வேறு ஏதோ பிரச்சனை என்றாலும், "உன்ன போய்  கட்டினேன் பாரு, உன் சாதி புத்தித்  தானே உனக்கும்"    என்று மாறி மாறி சாதி குறித்த சண்டையாக அது மாறிவிடுகிறது.

நடைமுறையில்...

காலங்காலமாக ஊறிப்போன ஒரு உணர்வு(?) இது. புதிதாய் ஒருவர் அறிமுகமானதும் இவர் எந்த சாதிகாரராக இருக்கும், ஒருவேளை நம்மாளா இருக்குமோ என எண்ணத் தொடங்கிவிடுகிறது மனித மனம். வீட்டு வாடகைக்கு ஆள் வைப்பது என்றாலும் எந்த சாதி என்று முதலில் கேட்டுவிட்டுதான் பிறவற்றைப்  பேசுவார்கள். ஒருசில படித்தவர்கள் நேரடியாக கேட்காமல் சொந்த  ஊரு எது , எந்த தெரு என்று சுத்தி வளைச்சு கேட்டு 'இந்த துறையில் வேலை பாக்குறவர் உங்க சொந்தகாரரா' என்பதில் வந்து முடிந்துவிடும். அந்த சோகால்ட்  சொந்தகாரரை வைத்து 'இவர் இன்னார்' என்று முடிவுக்கு வருவார்கள்.

கடவுளைத்  தேடவும் சாதி 

இந்த தலைப்பில் சொல்லனும்னா நிறைய சொல்லலாம். ஆனா அது வேறு ஒரு வம்பில் கொண்டு போய் விட்டு விடும்...!!? எனக்கு கொஞ்சமாகத்  தெரிந்த  ஒரு விஷயம் பற்றி மட்டும் சொல்றேன்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆடி தபசு என்று பெரிய திருவிழா ஒன்று உண்டு. கொண்டாடப்படும் 12 நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சாதிக்கு என்று ஒவ்வொரு நாளையும் ஒதுக்கிவிடுவார்கள். அந்த நாளில் சம்பந்தப்பட்ட சமூதாயத்தினர் மட்டும் ஒன்று சேர்ந்து ஸ்பெஷல் பூசை, தேரோட்டம் இருக்கும். சாதிப்  பெயரை கொட்டை எழுத்தில் போஸ்டரில் எழுதி போட்டு இருப்பாங்க...அந்த போஸ்டரின் முன்பு வைத்து பாட்டு கச்சேரி, மேடை பேச்சு அப்டி இப்படி என்று எல்லா கொண்டாட்டங்களும் நடக்கும். ஒருத்தர் கண்ணுக்கும் இது பெரிதாகத்  தெரிவது இல்லை. வெளியே பேசிக்கொள்ளும் போதும் இன்னைக்கு எங்காளுக 'மண்டகபடி' என்று சொல்வதில் இருக்கும் பெருமை, சந்தோசம் வேறு எதிலும்(!) இருக்காது.

இந்த மண்டகப்படி அன்று சில மண்டையுடை(?) சம்பவங்களும் ஏதோ இரு சாதிக்கு நடுவில்  நடக்கும். போன வருடம் இந்த சாதியில் ஒருத்தர் தலை போனா இந்த வருடம் எதிர் பார்ட்டில ஒருத்தர் தலைப்  போகும்.(எங்கும் கொலை பார்த்து கேட்டு இப்டி சாதாரணமா சொல்ற அளவுக்கு நிலைமை ஆகிபோச்சு ?!!) காவல்துறைக்கு ஆடி தபசு முடியும்வரை தூக்கம் இருக்காது...யாருக்கு என்ன நடக்கபோகிறதோ என்று...!! இப்படி இருந்தாலும் வருடந்தோறும் நடக்கத்தான் செய்கிறது...சாதியை முன்னிறுத்தி கடவுளை வணங்குவதும் தொடரத்தான் செய்கிறது...!!

பள்ளிகளில் சாதி

கல்வி ஒன்றால் தான் இது போன்றவற்றை களைய முடியும் என்பது எல்லாம் பொய். தென் மாவட்டத்தில் ஒரு பிரபல பள்ளியின் பெயரே ஒரு சாதியின் பேரை கொண்டு தான் இருக்கிறது...(அதுபோன்ற பள்ளிகள் நிறைய இருக்கிறது) இன்று வரை அதன் பெயரை மாற்றவேண்டும் என்று ஏன் ஒருவருக்கும் தோணவில்லை...வேறு ஒன்றுமில்லை, நமக்கு பழகி போய்விட்டது...! இப்படி இருக்கும் போது சாதிப்  பெயரை எழுதாதே என்பது அபத்தம். கல்வி பயிலப்  போகும் இடத்தில் 'சாதி என்ன' என்ற கட்டத்தை பூர்த்தி செய்தால் தான் கல்வியே கிடைக்கும். இந்த நிலை மாறினால் தான் சாதியை ஒழிப்பதை(?) பற்றி சற்று யோசிக்கவாவது முடியும்.

பொருளாதார முன்னேற்றம் சாதியை ஒழித்துவிடும் என்றாலும் நம் நாட்டில் அத்தகைய நிலை வரும் நாள் எந்நாளோ ?!

இரு சொ(நொ)ந்தஅனுபவம்

* எனது இரண்டாவது மகன்(9 வயது)ஒருநாள் மாலையில் பள்ளிவிட்டு  வந்ததும் 'நான் என்ன காஸ்ட்'என்றான்...நான் ஜெர்க்காகி 'என்னடா இது புதுசா?',

'மிஸ் கேட்டாங்கமா ' என்றான்.

மறுநாள் பள்ளிக்கு சென்று அந்த ஆசிரியையிடம், "ஏங்க சின்ன பையன் கிட்ட எதைக்  கேட்கிறதுன்னு இல்லையா?? அவன் என்ன சாதின்னு ஆபீஸ் பைல்ல இருக்குமே எடுத்துப்  பார்த்துக்க வேண்டியது தானே ?"

அதுக்கு அவங்க " இல்லைங்க பையனும் தெரிஞ்சி வச்சுகிட்டா நல்லதுதானே" என்றதும் எனக்கு BP எகிறி " எதுங்க நல்லது? சாதி தெரிஞ்சிக்கிறதா, பசங்களுக்குள்ள இப்பவே நான் இந்த சாதி, அவன் அந்த சாதினு பேசிக்கிறது நல்லதாங்க...?! பாடத்தை மட்டும் சொல்லிக்  கொடுங்க அது போதும்"னு சொல்லிட்டு, அப்படியே பள்ளி தாளாலரிடம் ஒரு புகாரை(?) அளித்துவிட்டு வந்தேன். ஒரு ஆசிரியை சாதிப்பற்றி பேசுவதும், அதை மாணவர்கள் அவசியம் தெரிஞ்சிக்கணும் என்ற அளவில் தான் நம் சமூக அமைப்பு இருக்கிறது.

* எங்க மேட்ச் பாக்டரிக்கு(தீப்பெட்டி தயாரிப்பது)  பக்கத்து கிராமங்களில் இருந்து  தொழிலாளர்கள் வருவாங்க, வயதானப்  பெரியவர்களை சின்ன பொண்ணுங்க 'ஏய் இங்க வா, போ' னு கூப்பிடுவாங்க. சொந்தகாரங்கப்  போலனு ஆரம்பத்துல இருந்தேன். போகப்  போகத்தான் இது சாதி குறித்தான ஒருவிதமான மரியாதை என்று புரிந்தது.  (யார் எந்த சாதின்னு நீங்களே புரிஞ்சிக்கோங்க) ஒரு நாள் மொத்தமாக  எல்லோரையும் கூப்ட்டு 'இங்க பாருங்க உங்க ஊர்ல எப்படி வேணும்னா கூப்ட்டு பேசுங்க, ஆனா இங்க எல்லோரும் ஒண்ணுதான், வயசுக்கு மரியாதைக்  கொடுத்து பேசணும்'னு கொஞ்சம் அதட்டிச்  சொன்னேன்.(இதை ஏன் பெரிசுப்படுத்துறனு என் மாமி டோஸ் விட்டது தனிக் கதை)

அதன்  பிறகு பாக்டரி உள்ளே இருக்கும் போது 'வாங்க போங்க' சாயங்காலம்  கம்பெனி வண்டியில்  ஏறியதும்  'வா போ'னு மாறிடும். அவ்வாறு அழைத்துப்  பேசுவதில் அவ்வளவு சந்தோசம்,நிறைவு. இதை என்னவென்றுச்  சொல்ல ? யார் இதை மாற்ற ? மாறவே மாறாது என்பதே வேதனையான நிதர்சனம் !! 

என்னத்த சொல்ல...

சாதிக்  குறித்த அடிப்படையே இங்கேத்  தவறாக இருக்கிறது . சாதி வேண்டாம் என்று சொல்றவங்களுக்கு ஒரு காரணம் இருப்பது போல வேண்டும் என்று சொல்றவங்களுக்கும் ஒரு காரணம் இருக்கு...

'சாதி வேண்டும்' என்று சொல்பவர்களைக்  கூட உண்மையைச்  சொல்றாங்க என எடுத்துக்கலாம். ஆனால் சாதி வேண்டாம் என்பவர்களைப்  பற்றி ரொம்பவே யோசிக்கவேண்டும். ஏன்னா 'வேண்டாம்' என்று சொல்வதற்கு முன் தன்னை சுய மதிப்பீடு செய்யணும்... தன் குழந்தைக்கு பள்ளியில் சாதி குறிப்பிடவில்லை, அதே இனத்தில் திருமணம் முடிக்கவில்லை, சாதியை முன்னிறுத்தி சலுகை எதுவும் பெறவில்லை. இதற்கு எல்லாம் 'இல்லை' என்று சொன்னால் 'சாதி வேண்டாம்' என்று சொல்வதிலும் உண்மை இருக்கிறது எனலாம்.

அரசியல்வாதிகள்

சாதிகளை நிலைப்படுத்தி மக்களை பிரிக்கும் வழிகளை அரசியல்வாதிகள் நன்குத்  தெரிந்து வைத்திருக்கின்றனர். சாதிக்  குறித்த முடிவான கொள்கையை வெளிப்படையாக யாராலும் கூறமுடியாது. குழப்பநிலையையே விரும்புகின்றனர். பிறந்ததிலிருந்து இறக்கின்ற வரை சாதி தேவைப்படுகின்றது. அடக்கம் செய்ய தனிப்பட்ட சுடுகாடுகள் ! சாதி அடிப்படையில் தேர்தல்! அந்தந்த சாதியைச்   சேர்ந்தவர்களே அந்தந்த இடங்களின்  வேட்பாளர்கள்...! 

மேடையில், சாதியத்துக்கு எதிராக  வலுவாகப்  பேசிய ஒருவர்  தன் பேச்சை நிறைவு செய்யும் போது எப்படிச் சொல்லி முடிக்கிறார் என்றுதான் பாருங்களேன்...!!

"நான் உங்கள் வேட்பாளர்
நீங்கள் என்னை தேர்ந்தெடுத்தால்
சாதிகளை ஒழிப்பேன்
வீதிகளில் உள்ள
சாதிகளின் பெயர்களை அழிப்பேன்
சாதி என்ற வார்த்தை உள்ள பக்கத்தை
அகராதியில் இருந்து கிழிப்பேன்
நீ அந்த சாதி
நான் இந்த சாதி
என்று
பேசுவோரால் தான் தேசம் கெட்டுவிட்டது!
எனவே
சாதியில்லாத
சமூகத்தை அமைக்க
எனக்கே ஓட்டுப் போடுங்கள்..."

என கூறியவர் பேச்சை முடிக்கும் போது

"நினைவிருக்கட்டும்
நான் உங்கள் சாதிக்காரன்...!!?"                              


* * * * * * * * *

பின் குறிப்பு

சாதியைக்  குறித்து சமூக வலை தளங்களில் நடக்கும் விவாதங்கள் ஆரோக்கியமானதாக இல்லை. மாறாக ஒருத்தரை ஒருத்தர் சாடி எழுத்துப் போர் புரிகிறார்கள். படித்தவர்களிடையே ஒரு தெளிவு இல்லை என்ற போது புண்பட்டுப்  புரையோடிக்  கிடக்கும் சமூகத்தில் நல்ல மாற்றத்தைக்  கொண்டு வருவது யார் ? தயவுசெய்து இதை நாம் உணர்ந்து  கவனமாக வார்த்தைகளைக்  கையாளவேண்டும். மாற்ற முடியாதது என்று எதுவும் இல்லை, மாற்றலாம் அதே நேரம் மனித நேயம் மிக முக்கியம். மனிதத்தைத்  தொலைத்து இங்கே எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.  

* * * * *
படம் : நன்றி கூகுள்
கவிதை :நன்றி (யாரோ ஒரு யதார்த்த கவிஞர்)


பிரியங்களுடன் 

உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா  


செவ்வாய், ஏப்ரல் 16

குழந்தைகளின் மீதான அதிக எதிர்ப்பார்ப்பு...ஆபத்து!!?

குழந்தைகளின் மீதான அதிக எதிர்ப்பார்ப்பு ஆபத்தில் முடிந்துவிட கூடும்...! குழந்தைகளை தங்கள் விருப்பத்திற்காக  வளைக்கப் பார்க்கும் பெற்றோரை எண்ணி எழுதப்பட்ட பதிவு மட்டுமே !

படத்தில் இருக்கும் இந்த சிறுவனின் நிலையில் தான் பெரும்பாலான  குழந்தைகள் இருக்கிறார்கள் !

பொம்மலாட்ட பொம்மைகளைப் போல இன்றைய குழந்தைகள் ஆட்டுவிக்கப்படுகிறார்கள் ! ஒரே குழந்தை அழகாய் ஆடணும், சுருதி பிசகாமல் பாடணும், விளையாடணும், நீச்சல் பழகணும், கராத்தே கத்துக்கணும்..... இவ்வளவும்  சிறப்பா பண்ணிட்டு படிப்பிலும்  முதல்ல வரணும் அப்படியே ஹிந்தி, ஆங்கிலம் சரளமா பேசணும் !!!??

என்ன கொடுமைங்க இது.  தங்களால் செய்ய முடியாததை தன் குழந்தையாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் சரி,  ஆனால் தாங்கள் அன்று அனுபவித்த சின்ன சின்ன சந்தோசங்களை  குழந்தைகளும் அனுபவிக்கணும்னு ஏன் யாருமே நினைக்கிறது இல்ல...?? 


போட்டிகள் நிறைந்த இன்றைய உலகின்  வேகத்திற்கு ஈடு கொடுக்க வேண்டுமே என்கிறார்கள். அதற்காக குழந்தைகளின் குழந்தைத்தனத்தை பணயம் வைக்கிறார்கள்.   அதன் வயதுக்கு ஏற்ற செயல்களை செய்யவிடாமல் அளவுக்கு அதிகமான அழுத்தம் கொடுத்து பெரிய மனிதர்களாக்காதீர்கள். அதன் விளைவை வெகு சீக்கிரம் நீங்கள் அனுபவிக்க நேரும் மிக கொடுமையாக...! வயதுக்கு மீறிய பேச்சுகள், செயல்கள் என்றுமே ஆபத்து ! என் குழந்தை எப்படி பேசுறா என்பது எல்லா நேரமும் சாதாரணமாக சொல்லி பெருமைப்படகூடிய விஷயம் அல்ல.  

குழந்தை  குழந்தையாகவே...

தன்  போக்கில் விளையாடும் ஒரு குழந்தையை சிறிது நேரம் கவனித்துப் பாருங்கள்...அத்தனை ஆச்சர்யங்கள் அற்புதங்கள் அங்கே தெரியும் ! ஒவ்வொரு குழந்தையும் மதிப்பிடமுடியா பொக்கிஷங்கள் !! குழந்தை குழந்தையாக இருப்பது மட்டும்தான் அழகு, மாறாக ஒரு பொம்மை போல நடத்துவது மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.  . குழந்தை செய்வதை எல்லாம் திறமை என்ற பெயரை சூட்டி மறைமுகமாக ஒரு வன்முறைக்கு பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறோம். 

மீடியாக்கள்  வேறு தன் பங்கிற்கு இந்த காரியத்தை கனகச்சிதமாக செய்கிறது

சமீபத்தில் ஒரு தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு 6 வயது குழந்தை ஆடிய ஆட்டம் எல்லோரையும் ஆரவார கூச்சலிட வைத்தது. முகநூலில் இந்த குழந்தையின் நடனத்தை ரசித்து பல ஆயிரம் ஷேர்ஸ், பலவித கமெண்ட்டுகள், அதிலும் ஒருவர் 'நீ நல்லா வருவே' என வாழ்த்த(?) எதில் நல்லா வர, குத்து பாட்டு நடிகையாகவா ? என்ன சொல்ல தெரியல. இந்த 'நல்லா வருவ' க்கு என்ன அர்த்தம்னும் புரியல.

பார்க்கும்  கண்ணை பொறுத்தது என்று எப்படி இதை ரசிப்பது. இன்றைய திரைப்படங்கள் நன்றாகவே நம் கண்ணையும் கருத்தையும் கெடுத்து வைத்திருக்கிறது. முகநூலில்  கருத்து சொன்னவர்களும் சிறு குழந்தை என்று எண்ணாமல் 'எப்படி இடுப்பை வளைக்குறா', கிறங்கடிக்குது கண்ணு, என்னமா கண் அடிக்கிறா என ஒவ்வொன்றாக வர்ணிக்கும் போது குழந்தையின் தாயால் அதை பாராட்டாக எண்ணி மகிழமுடிகிறது என்பது எனக்கு  ஆச்சர்யம் மட்டுமல்ல அதிர்ச்சி ! 
போனமாதம்  ஒரு விழாவிற்கு சென்றிருந்த இடத்தில் , 4 வயதிருக்கும் ஒரு பெண்குழந்தையை பார்த்து எனக்கு அருகில் இருந்த ஒரு  தோழி ,'செம கிளாமர் ' என கமென்ட் அடித்து சிரித்தார். காரணம் இது தான்,  இடுப்பு தெரியும்விதத்தில் அக்குழந்தை அணிந்திருந்த மாடர்ன் உடை. சிறு குழந்தையின் ஆடை அழகை ரசிக்கும் லட்சணம் இப்படி இருக்கு! அதுவும் ஒரு பெண்ணே ப்படினா... ஆண்கள் ?!!

சினிமா,  தொலைகாட்சி போன்றவற்றை  பார்த்து அதில் வருபவர்களை போல தனது குழந்தையும் இருக்கணும் என்பதை போன்ற போட்டி மனப்பான்மை ஒரு கட்டத்தில் அதீத பிடிவாதமாகி குழந்தையின் மீது அப்படியே திணிக்கப்படுகிறது. பெற்றோர்களின் விருப்பத்திற்கு குழந்தை ஒத்துழைக்காத போது கொடிய வார்த்தைகளால் அர்ச்சனை...இறுதியில் அடி !!?   

அதுவும் தவிர, இது போன்ற போட்டிகள், நிகழ்ச்சிகளினால்  கைத்தட்டு வாங்குவது தான் முக்கியம் என்பது  குழந்தையின் மனதில் ஆழமாக  பதிந்துவிடுகிறது...கிடைக்கும் கைத்தட்டுக்காக எவ்வளவு கஷ்டப்படவும் தயாராகிவிடுகிறார்கள். வளர வளர பிறர் நம்மை பாராட்டனும் என்பதை நோக்கித் தான் அதன் பயணம் இருக்கும். தன் சுயத்தை தொலைத்துவிட்டு அடுத்தவங்க புகழ, நல்ல(!) பெயர் எடுக்க என்று முயலுகிறது. இதில் ஏதோ ஒன்றில் தோல்வி என்றபோதில் தன்னையே காயப்படுத்திக் கொள்கிறது...சமயத்தில் தற்கொலை ! 

தேவையற்ற அதிக மன அழுத்தம்


நண்பர்  ஒருத்தர் சொன்னார், 'என் குழந்தை இப்பவே ஓஷோ புக்  படிக்கிறாள்' என்று... நம்மில் பலருக்கு புரிய கடினமான விஷயத்தை குழந்தையை  படிக்கவைக்க வேண்டியதன் அவசியம் என்னனு புரியல...?! ஒன்பது  வயது குழந்தைக்கு வேண்டிய புத்திமதிகளை பெற்றோர்கள் நீங்கள் சொல்லி வழிகாட்ட முடியாதா? யாரோ ஒருவர்  அன்று அவர் வாழ்ந்த சூழல், பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒன்று இன்றைய குழந்தைகளுக்கு எப்படி புரியும், எப்படி இன்றைய சூழலுக்கு சரியாக வரும்.  பெற்றோர்கள் நீங்கள் அதை படித்து அதில் குழந்தையின் வயதிற்கு  தேவையானதை மட்டும் அதன் மொழிக்கு ஏற்ற மாதிரி சொல்லி கொடுங்கள். அதை விட்டுவிட்டு ஒரு புத்தகத்தை கையில் கொடுத்து ' இதை படித்து தெளிவு படுத்திக்கொள், வாழ்வை தைரியமாக எதிர்கொள்'  என்பது சரியல்ல. சிறு குழந்தையின் மனதைக் கடினமாக்காதீர்கள் ! 

ஒவ்வொரு குழந்தையின் ரோல்மாடல் அவங்க பெற்றோர்கள் என்பதை பலர் மறந்துவிடுகிறார்கள். குழந்தைகளை  சிறந்தவர்களாக வடிவமைப்பது பெற்றோர்களின் கையில் தான் உள்ளது. விவேகானந்தர், பாரதி, காந்தி, ஓஷோ, புத்தர்,அரிச்சந்திரன் போன்றவர்களை முதலில் உங்களிடத்தில்  கண்டுக்கொள்ளட்டும்... கண்டு கற்றுக்கொள்ளட்டும்... உணரட்டும்...உங்களை மதிக்கட்டும் ! நாளை புத்தகத்தில் மகான்களை பற்றி படிக்கும் போது என் தந்தை என் தாயும் இவர்கள் வழி நடப்பவர்களே , இவர்களை போன்றவர்களே என பெருமைப்படட்டும். குறைந்தபட்சம் உங்கள் குழந்தைகள் முன் பொய் சொல்வதை தவிருங்கள் அது போதும்.

மாறாக,

மகான்களை பாடத்தில் படிக்க வைத்து பிள்ளைகளை சிறந்தவர்களாக்கி விடலாம் என்று மட்டும் எண்ணாதீர்கள். உங்களிடத்தில் காணமுடியாத  நல்லவைகள் வேறு இடத்தில் காணும் போது குழப்பம் தோன்றும், 'நாம மட்டும் ஏன் பின்பற்றணும்' என்ற கேள்வி எழும் ! உங்களிடத்தில் இல்லாத ஒன்றை வேறிடத்தில் காணும்போது உங்கள் மீதான மதிப்பின் சதவீதம் பற்றியும்  சற்று சிந்தியுங்கள் !!  அரிச்சந்திரன் கதையை கேட்டு பின்பற்றி நடந்தது என்பது அந்த காலம் ...இப்போதைய உலகம் வேறு...! விரல் நுனியில் உலகத்தை தொட்டுக் கொண்டிருக்கும் இவர்கள் நிறைய பேசுகிறார்கள், அதைவிட நிறைய யோசிக்கிறார்கள் ! 
  
எங்கையோ ஏதோ ஒரு குழந்தை திருக்குறளை மொத்தமாக ஒப்பிக்கிறது    என்பதற்காக உங்கள் குழந்தையையும் படுத்தி எடுக்காதீர்கள்.   ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் திறமை இருக்கும். அது எது என்று கண்டு அந்த வழியில் நடக்க விடுங்கள், வழிகாட்டுங்கள், வழிக்காட்டுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள்! மாறாக உங்கள் விருப்பதிற்காக குழந்தைகளை வளைக்க பார்க்காதீர்கள், ஒடிந்துவிடுவார்கள் ! 

பொருளாதாரத்தில்  உயர்ந்தவர்களாக, புகழ் பெற்றவர்களாக ஆகவேண்டும் என்று எண்ணி வளர்க்காமல் நல்ல மனிதர்களாக, அன்பு நிறைந்தவர்களாக, சமூக அக்கறை உள்ளவர்களாக வளருங்கள். அப்போதுதான் உங்களின் எதிர்காலம் நிம்மதியாக சந்தோசமாக கழியும்.

ஆரோக்கியமான சமூதாயம் நம் வீட்டில் இருந்துதான் ஆரம்பிக்கிறது என்பதை நினைவில் வைத்து நம் குழந்தைகளை அதன் இயல்பிலேயே வளர்த்து நம் நாட்டிற்கு நல்ல மகனை/மகளை கொடுப்போம். ஒரு சமூகம் சிறப்பாக கட்டமைக்கப்பட பெற்றோர்களின் பணி மிக முக்கியம் !

தயவுசெய்து குழந்தையை குழந்தையாக இருக்க விடுங்கள், வாழவிடுங்கள்...! உலகை தெரிந்துக் கொள்ள அதற்கு இன்னும் காலம் இருக்கிறது.. மூன்றே வருடத்தில் தென்னையை  வேண்டுமானால் காய்க்க வையுங்கள் குழந்தையை அல்ல !

குழந்தையின் வயதுக்கு  மீறி அதிகமாக திணிக்கும் போது அதை எதிர்கொள்ளமுடியாமல் சோர்ந்து  தன்னம்பிக்கையை  இழந்து விடுகிறது. சிறுவயதிலேயே பாராட்டுக்கு மயங்கும் குழந்தை அதே பாராட்டை வாழ்க்கையின் ஒவ்வொன்றிலும் எதிர்பார்க்கும் போது இந்த உலகின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல்... எரிச்சல், கோபம் , இயலாமை,விரக்தி, சுயபச்சாதாபம்  போன்றவைகள் மனதை ஆக்ரமித்து கடுமையான மன அழுத்தத்தில் விழுந்து விடுகிறார்கள்.

தனது குழந்தைக்குள்  இவ்வாறு நிகழ்வது பெரும்பாலான பெற்றோருக்கே தெரிவதில்லை. தன்னால் முடியவில்லை என்ற நிலையில் தன் வயதை ஒத்த அல்லது தன்னை விட வயது குறைந்த ஒன்றின் மீது தன் கோபத்தை பதிய வைக்கிறது. அது பாலியல் ரீதியிலாக கூட இருக்கலாம் என்பதே ஜீரணிக்க முடியாத அதிர்ச்சியுடன் கூடிய உண்மை !?

பின்குறிப்பு 

பாலியல் ரீதியில் பாதிக்கப்படும் குழந்தைகளை விட பாலியல் துன்புறுத்தலை நிகழ்த்துபவர்கள், வன்கொடுமையை ரசிப்பவர்கள் அதிகம். அவர்களின் ஆரம்பம் எங்கிருந்தும், இப்படியும் தொடங்கலாம் என்பதை இந்த பதிவு உணர்த்த முயலுகிறது. வேறு என்னவெல்லாம் காரணமாக இருக்கலாம்... தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன் .

தொடர்ந்து பேசுகிறேன்...
உங்களின் மனதோடு மட்டும்
கௌசல்யா  

செவ்வாய், மார்ச் 12

மாணவர்கள் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் தமிழ் நண்டுகள் !?

சிகப்பு கம்பள வரவேற்பு ஒரு பக்கம், நேரில் சென்று பொன்னாடை போர்த்து வாழ்த்துவது ஒருபக்கம் நடக்க மேடையில் ஈழத்துக்காக உயிரை விடவும் தயார் என இரட்டை வேடம் போடும் அரசியல்வாதிகளை தான் நமக்கு தெரியும். மாணவர் சக்தியை அரசியல்வாதிகள் தங்களின் சுயநலத்துக்காக பயன்படுத்துவதையும் அறிவோம்.

மாறாக இன்று ஈழ மக்களுக்காக உண்ணாவிரத்தை கையில் எடுத்திருக்கும் கல்லூரி மாணவர்களின் உணர்விற்கு என் வணக்கங்கள். மாணவர்கள் நினைத்தால் சமூகத்தில் அரசியலில் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியும். இப்படி ஒரு போராட்டம், புரட்சி இங்கே வராதா என் சமூக அக்கறை உள்ள எல்லோரின் மனதிலும் நிச்சயம் ஒரு கேள்வி எழும். அதற்கான பதிலாய் இவர்களின் போராட்டத்தை பார்க்கிறேன்.


ஈழம் முழுமையாக சிங்கள இராணுவத்தால் சூழப்பட்டு இன அழிப்பு வேலைகள் கனகச்சிதமாக நடைபெறுகிறது. நெஞ்சில் ஈரம் உள்ள எவரும் நம் பாலச்சந்திரனுக்காக இரு சொட்டு கண்ணீர் விடாமல் இருந்திருக்க முடியாது. சிறு பாலகனையும் சுட்டுக்கொல்லும் அளவுக்கு ஈனமதி படைத்த அரக்கர்கள் ! இவர்களிடம் பணிந்து போகும் மத்திய அரசு. கொலை பாதகங்களை, பாலியல் ரீதியிலான கொடூரங்களை ரசித்து கொண்டாடும் சர்வ தேச அரசியல் !!

அகிம்சை வழியில்  போராடும் மாணவர்களை பல இன்னல்கள் கொடுத்தும் அடக்க நினைக்கிறது அரசு. ஆனால் ஒரு கல்லூரி தானா இருக்கிறது தமிழகத்தில்...?! தீ பரவட்டும் அனைத்து மாணவர்களிடையே...நீதி கிடைக்கட்டும்...! மாபெரும் ஜன சமுத்திரத்தில் மாணவர்கள் தம் மக்களின் உரிமைக்காக கொடுக்கும் குரல் சர்வ தேசம் எங்கும் ஒலிக்கட்டும். மாணவர்கள் உலகம் கேளிக்கை நிறைந்தது மட்டுமல்ல சமூக அக்கறை அதிகம் கொண்டது என சுயநல உலகம் உணரட்டும்.

அதிகார வர்க்கத்தினரின்/ஆசிரியர்களின் இன்டெர்னல் மார்க் கிடையாது என்ற மிரட்டல்கள் ஒரு பக்கம்... மனிதர்களை உணர்ச்சி அற்றவர்களாக்கும் முயற்சி இது. இன்றைய மாணவர்களுக்கு சமூக அக்கறை இல்லை என்று சொல்லும் நாவுகள் தான் இப்படி பேசுகின்றன.  இன்று வாழும் தேசம் நாளை பறிபோகும் என்றானாலும் படிப்பில் முதல் இடம் பிடிப்பது எப்படி என்ற சிந்தனையில்  இருக்க சொல்கிறது இன்றைய கல்வி !

தமிழ் நண்டுகள்

இந்த சூழலில் எனக்கு தமிழ் நண்டுகள் கதைதான் நினைவுக்கு வருகிறது. தமிழர்களின் குணம் இது போன்றதுதான் என அடிக்கடி நிரூபிக்கிறார்கள் இங்கே சிலர் ! இணையத்தில் பலரது வாதத்தையும், கருத்துக்களையும் பார்த்தால் நண்டு கதை இவர்களை வைத்து தான் சொல்லப்பட்டது போல இருக்கிறது. பூட்டப்பட்ட அறைக்குள் உணர்ச்சி பிழம்பாய் கொந்தளித்தால் போதும் நாடு சுபிட்சமாகிவிடும் என்பதை போல வேறு சிலரது எண்ணமாக இருக்கிறது !! இப்படி எல்லாம் இருக்காமல் ஒன்று மாணவர்களின் போராட்டத்திற்கு கருத்துக்களால் வலிமை சேர்க்கலாம் அல்லது எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து விடுவது உத்தமம்.

ஈழத்தில் நடக்கும் இன அழிப்புகள் பற்றி சிறிதும் அக்கறையற்ற தமிழ்நாட்டு தமிழர்கள்(?) மாணவர்கள் போராட்டத்தை கிண்டலும் கேலியும் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை மாணவர்கள் சிறு பிள்ளைகளாம், மன முதிர்ச்சி இல்லாதவர்களாம் ...அரசியல்வாதிகளால் தவறாக கையாளப்படலாம் என்பது பலரின்  எண்ணம் ஆனால் மாணவர்களின் எழுச்சிக்கு காரணமே இன்றைய அரசியல்வாதிகள் மேலுள்ள கோபம் தானே. மக்கள் நலனை மறந்த ஊழல் மலிந்த அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்ட மாணவர் சமுதாயத்தால் மட்டும் தான் இயலும். இவர்களுக்கு தலைவன் என்று யாரும் தேவை இல்லை, சமூக நலன் மட்டும் தான் தலைவன் என்பதாக இருந்தால் இவர்களின் வேகத்திற்கு முன் பொய்மை கயமை ஏதும் நிற்க முடியாது. முக்கியமாக இவர்களிடம் இருக்கவேண்டியது துணிவுடன் கூடிய பொதுநலம் மீதான ஒற்றுமை.

இன்று சேனல் நான்கை பார்த்து பொங்குகிற நீங்கள், இத்தனை நாள் என்ன செய்தீர்கள் என்ற கேள்விகள்  மனதை வதைக்கிறது. என்ன பதிலை சொல்வது எங்களின் கையாலாகாத்தனம் என்றா ?! குத்த குத்த  பொறுத்துக்கொண்டே இருக்கும் புழு ஒரு கட்டத்தில் தன் உடலை வளைத்து எதிர்ப்பைக் காட்டும். அது போல அரசியல்வாதிகளால ஏதாவது நல்லது நடந்துவிடாதா என பொறுத்து பொறுத்து இன்று அதற்கு வழியே இல்லை என்று ஆனதும் மாணவர்கள் போராட்டத்தை கையில் எடுக்கிறார்கள். முத்துகுமரன், செங்கொடியை யாரும் மறக்கவில்லை, அன்று அவர்கள் பற்ற வைத்த தீ இன்று எரிய தொடங்கி  இருக்கிறது. எனது கவலை எல்லாம் நெருப்பு நீர்த்து போய்விடகூடாது என்பதாகத்தான் இருக்கிறது. மாற்றம் தேவை அதுவும் உடனடியாக...சப்பை கட்டும் பேச்சுக்கள் கேட்டு கேட்டு சலித்துப் போய்விட்டது.  

மாணவர்கள் ஒன்றுகூடுவது கேளிக்கைக்காக திரைப்பட கதாநாயகர்களுக்காக, கிரிகெட்டுக்காக என்ற போது   கண்டுகொள்ளாத பெற்றோர்கள் உண்ணாவிரதம் என்றதும் அவர்களின் படிப்பை பற்றி/எதிர்காலம் பற்றி  கவலைப்படுகிறார்கள். நாட்டுக்காக வீட்டுக்கு ஒருவனை அனுப்பியதும் நாம் தான் !   மாணவர்கள் தான் தேசத்தின் தூண்கள் என்பதை உணருங்கள்.

நேற்றைய செய்தி ஒன்று 

லயோலா கல்லூரி மாணவர்களின் உண்ணாநிலை போராட்டத்தை முடக்கியபின் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளனர். அதன் மூலம் தமிழகமெங்கும் உள்ள கல்லூரி மாணவர்களை ஒன்றாக இணைத்து போராட இருப்பதாக பத்திரிக்கையாளர்களிடம் மாணவர்கள் கூறி உள்ளனர்.

மேலும் 'எங்கள்  அமைப்புக்கு அரசியல் சாயத்தை பூச வேண்டாம் எனவும் எந்த அரசியல் கட்சிகளும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தலையிட வேண்டாம்' எனவும் கேட்டுள்ளனர்.   

இவர்கள் தெளிவாகவே உள்ளனர். கருத்து சொல்றோம்னு இணைய போராளிகள் எதையாவது சொல்லி குழப்பாம இருந்தால் சரி.

மாணவர்கள் சமூக உணர்வு பெறுவதை அதிகாரத்தில் இருப்பவர்கள் விரும்ப மாட்டார்கள்.  அதனால்  பல எதிர்ப்புகளை சமாளித்தாக வேண்டும்.  வேகமாக பரவக்கூடியது என்பதால் விரைவாக போராட்டத்தை முடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். நாட்டை சீரழித்து கொண்டிருக்கும் அத்தனை பிரச்சனைகளிலும் மாணவர்களின் தலையீடு மிக அவசியம் என்பதை போராட்டத்தை குறை சொல்பவர்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள் .

மாணவ நண்பர்களே !!! 

சினிமா, விளையாட்டு, கேளிக்கை தவிர வேறு ஏதும் தெரியாது என நினைத்துக்கொண்டிருக்கும் அனைவரது எண்ணத்தையும் தவிடுபொடியாக்குங்கள்...பிற மாநிலத்து இளைஞர்கள் அவர்களின் உரிமைக்காக உறுதியுடன் நின்று போராடும் போது அவர்களை விட நீங்கள் எந்த விதத்தில் குறைந்து விட்டீர்கள்...நம் பாரதியின் அக்னிகுஞ்சுகள் நீங்கள்...! நினைவில் கொள்ளுங்கள் !!

யாருடைய போலி சமாதானத்தையும், பொய்யான வாக்குறுதிகளையும் நம்பாதீர்கள். உங்கள் போராட்டத்தை சிதைக்க பல வகையிலும் முயற்சிகள் எடுக்கப்படும்...எதற்கும் அஞ்சாதீர்கள்...உள்ளஉறுதியுடன் ஒற்றுமையாக நில்லுங்கள்...! பல நல்ல உள்ளங்கள் தூரத்தில் நின்று உங்களுக்காக உங்களின் நலன் வேண்டி மனதார தொழுது கொண்டிருக்கின்றன... என்பதை மறக்காதீர்கள் ! 

வெல்க தமிழ் ! வெல்லட்டும் இளைஞர்களின் ஒற்றுமை !