திங்கள், ஆகஸ்ட் 6

முகநூலில் இப்படியும் நடக்கிறது...!? கேட்டால் கிடைக்கும் !!



முகநூல் பல நல்ல விசயங்களுக்கு பயன்பட்டு வருகிறது என்பது பலருக்கு தெரிந்திருக்கலாம், சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்...அப்படி தெரியாத நல்லவைகளில்  ஒன்றை பற்றியதே இந்த பதிவு.

முக நூலில் ரொம்ப இம்சை படுத்துவது ஒன்னு இருக்குதுனா அது குரூப் தான். நம்மை ஏதேதோ (நம்ம டேஸ்டுக்கு கொஞ்சமும் ஒத்துவராத)குரூப்புகளில் இணைத்து விட்டுடுவாங்க. அப்புறம் அங்க  யாராவது லேசா தும்மினாலும் நமக்கு நோட்டிபிகேசன் வந்து விழும்...இப்படி ஏகப்பட்டதுகள் சேர்ந்து அதுல நம்ம பிரண்ட்ஸ் கொடுத்த கமெண்ட்ஸ் பத்தி எங்க இருக்குனு கண்ணுல விளக்கெண்ணை ஊத்தி தேடனும்...என்னை(?) கேட்காம எதுலையும் சேர்க்காதிங்கனு அன்பா(!) மிரட்டியும் பார்த்தாச்சு...யாரும் கேட்கிறதா இல்ல...

இந்த மாதிரியான நிலையில (கற்போம்) பிரபு ஒருநாள் 'அக்கா இந்த குரூப்ல சேருங்க'னு ஒரு லிங்க் அனுப்பினான்...'என்னடா இது சோதனை' சரி தம்பி சொல்றானேன்னு போய் பார்த்தேன்...'கேட்டால் கிடைக்கும்' னு தலைப்பு இருந்துச்சு...ஆயிரக்கணக்குல மெம்பெர்ஸ் இருந்தாங்க...ஆன்லைன் ஷாப்பிங் போலனு  தோணிச்சு...என்னதான் பண்றாங்கன்னு கொஞ்சம் படிச்சு பார்த்தேன்...

அடடா...!! எவ்ளோ பெரிய விஷயத்தை அமைதியா பண்ணிட்டு வராங்க இதை போய் கிண்டல் பண்ணினோமே, என் தலைல இரண்டு தட்டு தட்டி ஜாயின் பட்டனை கிளிக் பண்ணினேன்...உடனே என்னை சேர்த்துக்கல...கேபிள் சார் பொறுமையா, யார் இது? என்ன ஏதுன்னு யோசிச்சு பார்த்து இரண்டுநாள் கழிச்சு சரி சரி சேர்த்துக்கிறோம்னு இணைத்துவிட்டார்...!!  

'கேட்டால் கிடைக்கும்' அப்படினா ??

தலைப்பே இது எதற்காக என்பதை நமக்கு சொல்லி விடுகிறது...கேட்காம இருந்தா எப்படி கிடைக்கும் என்பதும் இதில் அடங்கி இருக்கிறது...!!

தங்களை பற்றி சொல்லும் போது இப்படி சொல்கிறார்கள்...

"சமூகத்தில் நடக்கும் சிறு சிறு தவறுகளை, அநியாயங்களை, பிரச்னைகளை தட்டிக்கேட்டுப் பழகுவோம். அப்போதுதான் ஒரு நேர்மையான சமுதாயத்தை நம்மால் உருவாக்க முடியும்...!"

இந்த குழுமம் ஆரம்பித்து (31 july 2011) ஒரு வருடம் ஆகிறது...இதுவரை 1,495 உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்...தொடர்ந்து இணைந்து கொண்டிருக்கின்றனர்...திரு கேபிள்சங்கர் அவர்களும் திரு சுரேகா அவர்களும் இணைந்து இதை ஆரம்பித்து இருக்கிறார்கள்...திட்டமிடல் கூட்டம் ஒன்றும் வைக்கிறார்கள் அதில் உறுப்பினர்கள் கலந்து கொண்டு திட்டங்களை வரைமுறைப் படுத்திக்கலாம். வீதியில் இறங்கி உதவி செய்ய இவர்கள் சிறிதும் தயங்குவதில்லை என்பதை அங்கே பகிரப்படும் செய்திகளை வைத்து புரிந்து கொள்ளமுடியும்...

அரசு குழாய்ல தண்ணி வரலையா?, வாங்கின பொருளின் தரம் குறைவா  இருக்கா ? கேஸ் சிலிண்டர் கொண்டு வருபவர்கள் எக்ஸ்ட்ரா கேட்டு பிரச்னை பண்றாங்களா? அரசு துறையின் முக்கியமா போன் நம்பர் வேணுமா ?அவசரமாக யாருக்கேனும் ரத்தம் தேவையா ?இன்னும் நிறைய...  இப்படி பல பல சிக்கல்கள்/பிரச்சனைகள்  எதாக இருந்தாலும் இங்கே பகிரலாம்...ஒன்றை பகிர்ந்ததும் ஆளாளுக்கு ஓடி வந்து உதவுறாங்க...ஆலோசனை சொல்றாங்க...பிரமிப்பாக இருக்கிறது...!! 

உறுப்பினர்கள் பலரும் பல துறைகளை சார்ந்தவர்களாக இருப்பதால் அங்கே சொல்லப்பட்ட பிரசனைகளுக்கு வேண்டிய ஆலோசனைகளை உடனுக்கு உடன் அவர்களே தருகிறார்கள்...அதை தவிர வெளியே சென்று தீர்க்க பட வேண்டியவை திரு. சுரேகா அவர்களின் வழிகாட்டுதலின்படி தீர்க்கபடுகிறது...இருந்த இடத்திலேயே பிரச்சனை தீர்க்கப்படுவது புதுமை மட்டுமல்ல, இப்போதைய அவசியத்  தேவையும் கூட... அப்படி தீர்க்கப்பட்ட ஒரு விஷயம் தான் கீழே சொல்லப்பட்டிருப்பது...'கேட்டால் கிடைக்கும்' குழுவினரின் அதிரடி செயலுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு சாம்பிள் மட்டுமே !!

இத்தகைய சிறந்த ஒரு குழுமத்தை பற்றி என்னிடம் கூறி என்னை அதில் சேர சொன்ன  பிரபுவுக்கு என் நன்றிகள்.

திரு சுரேகா அவர்களின் தளத்தில் இருந்து அவர்களின் அனுமதியுடன் இங்கே அப்பதிவு வெளியிடபடுகிறது...படித்து பாருங்கள்...

'கேட்டால் கிடைக்கும்' குழுமத்தில் உறுப்பினராகுங்கள்...தகவல்களை பரிமாறுங்கள்...ஆலோசனை செய்யுங்கள்...பயன் பெறுங்கள்...

நல்லதொரு நாளைய சமுதாயத்தை இன்றே நாம் வடிவமைப்போம்...!!
                                                             
                                                ASK...YOU WILL GET IT !!

**************************************************************************
திரு சுரேகா அவர்களின் பதிவு
----------------------------------------------

கேட்டால் கிடைக்கும் – முகப்புத்தகத்தில் நானும் , நண்பர் கேபிள் சங்கரும் உருவாக்கிய ஒரு குழுமம். அதில் நிறைய பேர் உறுப்பினர்களாக ஆனார்கள். அவற்றில் ஒருவர் பாலாஜி ஸ்ரீராமன்.
கடந்த ஜூன் 29 அன்று.. கேட்டால் கிடைக்கும் குழுமத்தில் அவர் தன் பிரச்னையை கீழ்க்கண்டவாறு பகிர்ந்திருந்தார்.

Dear All,


I was unemployed for 5 months and despite the advice from my friends, I decided to join NIIT and now I'm suffering. I paid the money for the MCITP Course on 3rd of April and they did not schedule a single class until May 15. I decided to quit after asking for a class for multiple times and everytime I get the same response saying it'll be scheduled from next week (And it never was). So, I quit (saying that my brother is getting maried and I'll not be in Chennai - but the actual reason was I got a new job) and now I'm struggling to collect the refund money. I paid 26000+ and from 15th May, they say like the refund will be processed by the month end and initially they said I'll get the money by June 1st week. When I asked on June 1st week, they said June 15. Again, they said June 20 and When I called on June 20, they said the old employees were transferred and a new guy has taken care. He said that the refund has been processed and I'll get the money today (29th June). When I called today, they said the same story - month end process and you'll get that by July 4th or 6th (This time they're not even sure of the date!). I hardly belive that the money will be ready by July 4 or 6 - they'll have another excuse for that anyway. Can someone help me getting this process a little faster? I tried sending a feedback via the NIIT site, but after submitting the feedback, "The page cannot be displayed" Error comes up! My Student ID was: S130030500006. NIIT Adyar Center Number: 044-42116419.



NIIT யில் படிக்கச் சேர்ந்தபோதே முழுத்தொகையையும் கட்டிவிட்டார். ஆனால், அவர்கள் ஒரு வகுப்புகூட எடுக்கவில்லை. இப்படியே ஒன்றரை மாதம் ஓட்டிவிட்டார்கள். பின்னர் இவருக்கும் வேறு வேலை கிடைக்க, நான் படிக்க விரும்பவில்லை. நீங்களும் ஒரு வகுப்பும் எடுக்கவில்லை ஆகவே என் தொகை ரூபாய் 26,000த்தை திருப்பிக்கொடுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அவர்களும் நீண்ட ஆலோசனைக்குப்பின், புத்தகத்துக்கான தொகையாக ரூபாய் 6,000த்தைக் கழித்துக்கொண்டு மிச்சத்தைத் தருவதாகச் சொல்லி இழுத்தடித்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான் அவர் நம்மிடம் சொன்னார்.

நான் அவரை அங்கு செல்லச்சொல்லி, அவர்களிடம் முறையாகக் கேட்டுவிட்டு பின்னர் எனக்கு தொலைபேசச் சொன்னேன். பேசினார். பின்னர் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, NIIT ஆட்களிடம் பேசினேன். முதலில் ஒருவர்,

'எங்க பணம் ரிட்டர்ன் பாலிஸி படி… ப்ராஸஸ் நடந்துக்கிட்டிருக்கு சார்.. சீக்கிரம் வந்துரும். இன்னும் ஒரு வாரத்தில் கொடுத்துருவோம்' என்றார்.

நான் உடனே..

'ஓக்கே.. ஒரு வாரத்தில் கொடுத்துருங்க.. ஆனா. அவர் கட்டின முழுத்தொகையையும் கொடுங்க!' என்றேன்.

'இல்லை சார் அப்படி செய்யமுடியாது.. எங்க கம்பெனி ரூல்ஸ்படி.. ஒருத்தர் சேந்ததுக்கு அப்புறம் விலகினா, புக் அமௌண்ட்டை திருப்பித்தரமாட்டோம். அவருக்கு நாங்க புக் கொடுத்துட்டோமே…' என்றார்.

'நீங்க க்ளாஸே எடுக்காம அவருக்கு புக் கொடுத்திருக்கீங்க..! அதை அவர் பயன்படுத்தவே இல்லை. அதனால்..புக்கைத்திருப்பித்தரச்சொல்லிடுறேன். முழுத்தொகையையும் கொடுத்திடுங்க!' என்றேன்.

'அது எங்க ரூல்ஸ்படி செய்யமுடியாது சார்' என்று மீண்டும் சொன்னார்.

நான் ஆரம்பித்தேன்.

பாலாஜிக்குன்னு ஒரு ரூல்ஸ் இருக்கு... அதன்படி.. ஒரு இன்ஸ்ட்டிட்யூட்டில் காசு வாங்கிக்கிட்டு பாடமே நடத்தாம இருந்தா, அந்தக் காசை திருப்பி வாங்கிடுவார் தெரியுமா?' என்றேன்.

'என்ன சார் இப்படி பேசுறீங்க..? பாலாஜிக்கு என்ன தனி ரூல்ஸ்' என்றார். 

'அப்போ, என்ஐஐடி-க்கு மட்டும் என்ன தனி ரூல்ஸ்.... ஒரு சேவையை செய்யறதுக்குத்தான் காசு வாங்கணும். செய்யாத சேவைக்கு எதுக்கு உங்களுக்கு காசு? இப்படி எந்த விதத்திலும் நீங்க பணம் வாங்க நுகர்வோர் சட்டத்தில் இடமில்லை' என்று கொஞ்சம் காட்டமாகப் பேசினேன்.

'நான் எங்க சீனியர்கிட்ட கன்சல்ட் பண்ணிட்டு சொல்றேன் சார்' என்றார்.

பிறகு அடுத்த வாரத்தில் மீண்டும் பாலாஜி அங்கு சென்றார். இதோ அதோ என்றார்கள். மீண்டும் நான் அழைத்து 'இந்த வாரம் பணம் வராவிட்டால், எங்கள் குழுமத்திலிருக்கும் 1400 பேரில் குறைந்தது 50 பேராவது மொத்தமாக NIIT க்கு வருவோம்' என்றேன்.

நான்கு நாட்களில், பாலாஜி போன் செய்தார்.
‘சார்! நினைச்சே பாக்கலை..புக்கு காசையும் சேத்தே ஒரே செக்கா கொடுத்திட்டாங்க.. நானும் புக்கை திரும்பக்கொடுத்திட்டேன். நான் கொடுத்த மொத்தப்பணமும் திரும்ப வந்துடுச்சு! மிக்க நன்றி சார்! கேட்டால் கிடைக்கும் குழுமத்துக்கு நன்றி' என்றார்.

நாங்கள்தான் சொல்லிக்கொண்டே இருக்கிறோம்.

                          கேட்டால் கிடைக்கும்.!
************************************************************************
பின்குறிப்பு:

குழுமத்தை பற்றி எனது தளத்தில் பகிரவேண்டும் என்று விரும்பினேன்...அவர்களிடம் தெரியபடுத்தியதும் முழு மனதுடன் சம்மதம் தெரிவித்தார்கள்...

நன்றிகள் - திரு.சுரேகா & திரு.கேபிள்சங்கர்
http://www.surekaa.com/2012/07/blog-post_31.html 



படம் - கூகுள்  

செவ்வாய், ஜூலை 17

என்னை வெகுவாக பாதித்த தலைநகரம்...?!

இந்தியாவுல இருக்கிற நாலு பெரிய சிட்டிகள்ல வளர்ந்த காரணத்தால சென்னை தெரியும், மும்பை, கொல்கத்தா போயாச்சு...இந்த டெல்லி மட்டும் ரொம்ப நாளா பிடிபடாம இருந்துச்சு!! (இருக்குற ஏழு கண்டங்கள்ல 6 பார்த்துட்டேன் ஒன்னும் மட்டும் பார்க்கலன்னு சொல்ற மாதிரி என்னா ஒரு பில்ட்அப் !!கண்டுக்காதிங்க)டெல்லிய பார்க்கவும்  ஒரு வேளை வந்தது...கிளம்பிட்டேன்.

வெளியூர் எங்கேயாச்சும் போயிட்டு வந்தா ஒரு போஸ்ட் போடனுமாம். " நாம பதிவர்கள் அதனால  அனைத்தையும் பதிவு பண்ணியே ஆகணும்" னு ஒரு நாள் நடந்த நிகழ்ச்சியை பல நாள் பல தொடரா போடுற நண்பர் ஒருத்தர் போன்ல மிரட்டல் விட்டார். எனக்கு பயண கட்டுரை மாதிரி எழுத வராது. அதனால பயணத்தில் என்னை பாதித்த விசயங்களை மட்டும் இங்கே பதிகிறேன். 

ரசித்தேன்

அழகுனா அழகு அவ்ளோ அழகு !! என்னனு கேட்குறீங்களா ?! வடநாட்டு பெண்களைத்தான் சொல்றேன்...!! வழியெங்கும் அவங்களை திரும்பி திரும்பி ரசிச்சு பார்த்துட்டே இருந்தேன்...சலிக்கவே இல்லை...அசரவைக்கும் கோதுமை நிறம் அழகுதான்...ஆனாலும் அவங்க பண்ணுற ட்ரெஸ்ஸிங், அதுக்கு பொருத்தமா ஹேர் ஸ்டைல், லிப்ஸ்டிக் அசத்துறாங்க போங்க !! நாள் பூரா பார்த்துகிட்டே இருக்கலாம்...ஜீன்ஸ்,லெக்கின்ஸ் (சில டிரஸ் பேர் வேற தெர்ல) அப்டி இப்டின்னு எந்த டிரெஸ் போட்டாலும் கன கச்சிதமா இருக்கு...மாடர்னா இருக்கிறோம் அப்டின்ற அலட்டல் சுத்தமா தெரியல...ரொம்ப இயல்பா இருக்காங்க... என்னை அதிகமா பாதிச்சது முதல்ல இந்த அழகு பெண்கள் தான்!!

சிலிர்த்தேன்

ஷேர் ஆட்டோல ஒரு பயணம், வண்டில பயங்கர சத்தமா லாலாக்கு டோல் டப்பிமா ரேஞ்சுக்கு சாங்க்ஸ் அலறுது !! ஹிந்தினாலும் புரியும்(?) இது பஞ்சாபி  போல...ஒரே டமால் டிமில்னு சவுண்ட் !! கண்ட்ரோல் பண்ணி அமைதியா இருந்தேன், திடிர்னு நம்ம கொலைவெறி சாங்...அப்டியே மெய் சிலிர்த்து போச்சு... வண்டில இருக்கிறவங்க  உற்சாகமா தலையாட்டி கூடவே பாடுறாங்க...அப்போ சொல்ல தோணிச்சு ' இது எங்க ஊரு பாட்டுங்க' !! முதல்ல வண்டில  ஏறியதும்  ஒரு பொண்ணு "நீங்க மராட்டியா?" னு கேட்டா. நான் "இல்ல மதராசி" ன்னேன். அவ இப்போ "நீங்க மதராசி தானே கொலவெறினா  என்ன மீனிங் ?" நான் என்ன பதில் சொன்னேன்னு இங்க சொன்னா நீங்க அடிக்க வந்துடுவீங்க !

ஆனா பாருங்க இந்த பாட்டால தமிழ் மொழி அழிஞ்சு போய்டும் அப்டி இப்டி நு ஆளாளுக்கு சொன்னாங்க...(ஒருவேளை பாட்டு ஹிட் ஆகலைனா சொல்லி இருக்க மாட்டாங்கலோ ?!) தமிழ் பாட்டுன்னு தான் இந்த பாட்டு உலகம் எல்லாம் சுத்தி வருது...எப்படியோ இப்படி நம்ம தமிழ் வளருது(?)னு, தமிழுக்கு இப்படி ஒரு அடையாளம்னு மனசை தேத்திப்போம்...!

விழுந்தேன்

மெட்ரோ ட்ரெயின்ல போய் சுத்தி பார்க்கலைனா டெல்லி வந்ததே வேஸ்ட்னு பிரண்ட் சொல்ல, சரி போயிடுவோம்னு முடிவு பண்ணினோம்...ஏற்கனவே கொல்கத்தாவுல மெட்ரோ ட்ரைன்ல போன பழக்கம் இருக்கிற தெம்புல இருந்தேன். ஆனா அங்க ஒரு கண்டம் எனக்கு காத்திருக்குனு தெரியாம போச்சு...எஸ்கலேட்டரில் பல முறை போன அனுபவம் வேற இருக்கேனு ரொம்ப மிதப்பா காலை வச்ச அடுத்த நொடி உலகமே சுத்திச்சு...அட ஆமாங்க, எஸ்கலேட்டேர் மேலே போயிகிட்டே இருக்கு...ஆனா நான் மட்டும் மேலே போகல...என் உடம்பு அப்டியே பின்னாடி சாயுது...ஏன்னு ஒன்னும் புரியல...கைபிடிய இருக்கமா பிடிச்சும் நழுவிகிட்டே போகுது...ஒரு அடிக்கும் குறைவான இடைவெளியே இருக்கு என் தலை கீழே விழ...கிட்டத்தட்ட மல்லாந்து படுத்த மாதிரி ஒரு போஸ்...! என் பையன் மேலே போயிட்டு 'வாம்மா' ங்கிறான் என் நிலமை புரியாம...டக்குனு எஸ்கலேட்டேர் நின்னுடுச்சு...ஆ! னு ஒரே சத்தம், என்னடா கத்த வேண்டிய நான் கத்தல, வேற யார் கத்துரானு திரும்பி பார்த்தா பின்னாடி நாலு ஸ்டெப்ஸ் தாண்டி வரிசையா மூணு பேரு ஒருத்தர் மேல ஒருத்தர் மல்லாந்து விழுந்து கிடந்தாங்க...(பிரச்னை எங்கனு இப்பவரை புரியல !)

எழுந்தேன்

எஸ்கலேட்டேர் நின்ன பிறகும் என்னால முன்னோக்கி எழ முடியல...அப்போ மேலே இருந்து ஒருத்தர் இறங்கி வந்து கை நீட்டினார். 'தெய்வமே'னு டக்குனு அவர் கையை பிடிச்சிட்டேன்...அப்டியே தூக்கி நிக்க வச்சுட்டார்...'தேங்க்ஸ்'னு நான்   சொல்ல, பதிலுக்கு அழகா ஒரு ஸ்மைல். அவ்வளவு தான் போயே போய்ட்டார்...(டெல்லில  ஆண்களும் அழகுதான் !!):)

'ஏம்மா பார்த்து வர கூடாது, இப்டியா விழுவீங்க,வெரி பேட்' னு சொல்லி என் பையன் ஒரு லுக் விட்டான் பாருங்க...டெல்லி மெட்ரோ ட்ரெயின் காலத்துக்கும் மறக்காது !! 

வியந்தேன் 

ஊர் சுத்தமா பளிச்சுனு இருந்தது. எங்கும் குப்பையே இல்லை. (நான் பார்த்தவரை) துப்பினால் அபராதம் விதிக்கப்படும் என்ற போர்ட் இருந்தது ரொம்ப பிடிச்சது....அதை மக்கள் சரியா பாலோ பண்ணுவதை  பார்த்து வியப்பா இருந்தது. அப்புறம் வழியெங்கும்  யூகலிப்டஸ் மரங்கள் (இந்த மரத்தின் மற்றொரு முகம் அங்குள்ள மக்களுக்கு தெரியுமா தெரியல!) நிறைய கண்ணில் பட்டது. நொய்டாவுல இருக்கும் போது ஷாப்பிங் போற வழியில ஒரு ரோட்டை காட்டி "இது நொய்டா(உ.பி), இதை தாண்டினா இதோ இது டெல்லி"னு பிரண்டோட கணவர் கை காட்டி சிரித்துக்கொண்டே சொன்னப்போது ரசித்து வியந்தேன்...சில அடி தூர இடைவெளியில் இரு மாநிலங்கள்! ஆம், எல்லைகள் இருக்கின்றன, அவை மனிதர்களை பிரிப்பதில்லை.....ஆனால் அவனாக சாதி மதம் இனம் என்று பாகுபாடு பார்த்து பிரிந்து நிற்க்கிறான் என்று மனதிற்குள் ஒரு ஆதங்கம் மின்னலாய் தோன்றி மறைந்தது.

மொத்ததுல ஊர் ரொம்ப பிடிச்சது...நிஜாமுதீன், மயூர் விஹார், ராஜீவ் சௌக், சாந்த்னி சௌக், கரோல் பாக், நொய்டா, கிரேட்டர் நொய்டா, மதுரா,ஆக்ரா, இந்த பெயர்கள் மட்டும் நல்லா மனசில பதிஞ்சு போச்சு.

நெக்ஸ்ட் செங்கோட்டை ! அங்க போனதும் ஒரு மிடுக்கு(!) ஓடிவந்து ஒட்டிகிச்சு. அதன் கம்பீரம் அத்தனை அழகு...அப்புறம் மதுரா,அங்க இங்கே சுத்தி அப்படியே யமுனா நதி கரையோரமா போயாச்சு...அங்கே அமைதியாய் தாஜ் மஹால் !!

கரைந்தேன் 

ரொம்ப நாளாக போகவேண்டும் என்று விரும்பிய இடங்களில் ஒன்றான தாஜ்மஹாலை அவ்ளோ பக்கத்துல பார்த்ததும் சந்தோஷத்தில் கொஞ்ச நேரம் பேச்சே வரல...என் மகனுக்கு இதன்  வரலாறை  சொல்லிக்கொண்டே கட்டிடத்தின் பிரமாண்டத்தை பார்த்து வியந்து கொண்டிருந்தேன்...அருகே செல்ல செல்ல இனம்புரியாத ஒரு பரவசநிலை...

ஷாஜஹான் மும்தாஜ் உறங்கும் இடத்தை அடைந்ததும் அதுவரை மனதிற்குள் வியந்த கட்டிடத்தின் பிரமாண்டம், கலை அழகு, கம்பீரம் எல்லாம் மறைந்து ஒரு ஆழ்ந்த அமைதி என்னைச்சூழ  அப்படியே நின்றுவிட்டேன்...ஒரு சிலருக்கு இது சமாதியாக, சிலருக்கு உலக அதிசயமாக, சிலருக்கு கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக, சிலருக்கு காதல் சின்னமாக  இருக்கலாம்...இரு உள்ளங்களின் நேசங்களின் சங்கமம் இது. அந்த உணர்வை உள்வாங்கும் போதே மனிதனாய் பிறந்ததின் பொருள் புரியலாம்...அமைதியாக ஒரு தியான நிலைக்கு மனதை கொண்டு வந்து பார்த்தால், 'ஆண் பெண் கொள்ளும் நேசம் மட்டும் பெரிதில்லை காணும் அத்தனை உயிர்களையும் நேசிக்க வேண்டும் என்ற பாடத்தை தாஜ்மஹால் நம் காதோரம் சொல்லி தருவதை தெரிந்து கொள்ள முடியும்.உணரமுடியும் நான் உணர்ந்தேன்.  கண்களால் பருகி மனம் முழுதும் நிறைத்தேன் !! நரம்புகளில் குளிர் புன்னகை ஓடி உள்ளத்தை குளிர்வித்ததை அனுபவித்தேன்...உயிர்த்தேன்...மகிழ்ந்தேன்...!

பிறரிடம் பகிர இயலாத ஏதோ ஒன்றை வெற்றிகொண்ட நிறைவு !! 

திகைத்தேன்

வந்தவர்களில் பலரும் தாஜ்மஹால் முன் நின்று புகைப்படம் எடுப்பதில் தான் தீவிரமாக இருந்தார்கள்...உலக அதிசயம்னு சொல்றாங்களே அப்டி என்ன இதில் இருக்கிறது அதை பார்ப்போமே என்ற ஆர்வம் அவர்களிடம் அவ்வளவாக தெரியவில்லை. எந்த இடத்தில் நின்றால் புகைப்படம் நன்றாக அமையும் என்ற கவனம் தான் இருந்தது...அனேகமாக இன்றைய தினத்தில் எல்லோரின் கையிலும் ஏதோ ஒரு ரூபத்தில் காமரா. படமாக எடுத்து தள்ளுகிறார்கள்...

கண்களால் ரசிக்க வேண்டிய காட்சிகளை நிழல் படமாக்கி கொள்வதில் அந்த காட்சி அன்னியமாகிவிடுகிறதே...கண் வலிக்கும் வரை பார்த்து பார்த்து ரசிக்கவேண்டும்...இன்றே வாழ்வின் கடைசி நாள் என்பதை போல சுற்றி இருக்கும் அழகை எல்லாம் ஆசை தீர அள்ளி பருக வேண்டும்...

பல வருடங்களாக பாடுபட்டு உருவாக்கிய ஒரு அழகை, அற்புதத்தை, அரிய பொக்கிஷத்தை அவசர அவசரமாக பத்து நிமிடத்தில் சுற்றி வருவதற்கு ஏன் அவ்வளவு தூரம் போவானேன்...புகைப்படத்தில் பார்த்துகொண்டால் போதுமானது...மனிதனின் இயந்திரத்தன வாழ்க்கை அழகை ரசிப்பதற்கும் அவசரப் படுகிறது !!

                           என்ன ஒரு கம்பீரம் !! (வண்டில போகிறபோது அப்டியே ஒரு கிளிக்)
தொலைத்தேன் 

வெளியூர் சென்றும் என்னுடன் போனில் தொடர்பு கொண்டு விசாரித்த பதிவுலக தம்பியர், அண்ணன்கள், நட்புகள் அதிலும் 'நீ ஜப்பான் போனாலும்(?) கால் பண்ணி பேசுவேன்'னு மிரட்டி ஒரு மணி நேரம்(ரோமிங்!!) :) பேசிய என் நெருங்கிய நண்பர் இவர்கள் எல்லோரும் அங்கிருந்த நாட்களுக்கு மேலும் வண்ணங்களை சேர்த்தார்கள்!!

எல்லாம் நல்ல படியாத்தான் போச்சு என் மொபைல் தொலையும் வரை...தொலைஞ்ச பத்தாவது நிமிஷம் தெரிஞ்சவங்க ஒருத்தர் போன்ல இருந்து என் கணவருக்கு கால் பண்ணினேன்..."உன் நம்பருக்கு அடிச்சு பார்த்தியா?"னு கேட்டார். "ஆமாம்ங்க , நாட் ரீச்சபிள் வருது" னேன். "அப்டியா சரி விடு யாரோ எடுத்துடாங்க, எடுத்ததும் சிம்மை கழட்டி இருப்பாங்க, மறந்துட்டு ரிலாக்ஸா கிளம்பி வா...இங்க நீ வர்றதுக்குள்ள வேற போன் ரெடி பண்ணிடுறேன்" என்றார்.. அவர் சொல்லிட்டார். ஆனா எனக்கு மனசு கேட்கல...எல்லோரோட நம்பரும், சில முக்கியமான தகவல்களும் போச்சேனு ஒரே பீலிங். சரி போகட்டும், இனி புதுசா முதல்ல இருந்து தொடங்கலாம்னு சமாதானம் பண்ணிகிட்டேன்.(வேற வழி ?!)

கேளுங்களேன் 

பக்கத்துக்கு ஊரோ, தூர ஊருக்கு பயணமோ எதாக  இருந்தாலும்  பயணங்கள் இனிமையானவை. பிரயாணத்துல இருக்கும் போது சிலர் 'வீட்ல கதவை சரியா பூட்டினமா , கேஸ் மூடினமா' யோசிக்க ஆரம்பிச்சு மறுபடி வீடு வந்து எல்லாம் சரியா இருக்குனு தெரியும்  வரை அதை பத்தியே யோசிச்சிட்டு இருப்பாங்க. பயணம் எதுக்காக வேண்டுமானாலும் இருக்கட்டும் ஆனால் நாம் பயணிக்கும் அத்தருணம் நமக்கானது மட்டும் தான். அந்த நேரத்தில் உங்களை உற்சாகபடுத்தி கொள்ள தவற விட்டு விடகூடாது... செல்லும் பாதையெங்கும் கொட்டி கிடக்கும் இயற்கையை ரசியுங்கள், உள்வாங்குங்கள்...அருகில் அமர்ந்திருக்கும் சக மனிதரை சிறு புன்னகையால் சிநேகியுங்கள். சுற்றுலா செல்வதென்றால் காட்சிகளை கேமெராவில் அள்ளுவதை குறைத்துக் கொண்டு இயற்கை அழகை, காட்சிகளை கண்களால் நன்றாக பருகுங்கள்... ஒவ்வொரு பயணமும் மறக்ககூடாததாக மாறட்டும்...மாறும் !! 

பிரியங்களுடன்
கௌசல்யா



வியாழன், ஜூன் 28

பள்ளிகளில் மாணவிகள் படும் சங்கடங்கள்...! ஒரு பார்வையும் தீர்வும் !!

ஒரு சமுதாயம் படித்த ஆண்களையும் படிக்காத பெண்களையும் கொண்டிருந்தால் முன்னேற்றம் அடைவதென்பது இயலாத காரியம். பெண் கல்வியே சமுதாய முன்னேற்றத்திற்கு சிறந்த வழி - பாரதியார்


மொத்த மக்கள்தொகையில் பாதிக்குபாதி இருக்கும் பெண்கள் கல்வி அறிவில் முன்பை விட இப்போது முன்னேற்றமான நிலையில் இருக்கிறார்கள் என முழுமையாக நிறைவு கொள்ள இயலவில்லை...காரணம் கல்வி நிலையங்களில் மாணவிகள் அனுபவிக்கும் சங்கடமான ஒரு பிரச்சனை. வெளியே பேசவே கூடாத ஒன்று  என்ற நிலை என்று மாறும் தெரியவில்லை...!!


2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக்கணக்கின் படி இந்தியளவில் படித்த பெண்கள் 65%. இது 2001 ஆம் ஆண்டு இருந்ததை விட 12% அதிகமாகும். அதே சமயம் 8 ஆம் வகுப்பில் படிப்பை விட்டு விலகும் பெண்களின் எண்ணிக்கை அதிகம். இதற்கு குடும்ப சூழ்நிலை மட்டும் காரணம் அல்ல பள்ளியில் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பான கழிப்பறையும், தண்ணீர் வசதியும் இல்லாதது !!? இந்தியாவில் உள்ள அரசு சார்ந்த அனைத்து வகையான பள்ளிகளிலும் 51% பள்ளிகளில் டாய்லெட் வசதியே  இல்லை. 74% பள்ளிகளில் தண்ணீர் வசதி இல்லையாம். இதனாலேயே 7 & 8 ஆம் வகுப்பு மாணவிகளில் (வயதுக்கு வந்துவிடுவதால்) 7% மாணவிகள் பள்ளியை விட்டு நின்று விடுகிறார்கள் என்ற காரணத்தை ஒரு செய்தியாக எண்ணி கடந்து போக முடியவில்லை.

பள்ளிகளில் கழிப்பறை எவ்வளவு இன்றியமையாதது என்பதில் சிறிதும் அக்கறை இன்றி இருக்கின்றன பள்ளி நிர்வாகமும், அரசும்...!  கிராம, நகர  தெருவோரங்கள் அசிங்கப்படும் அவல நிலைக்கு முக்கிய காரணம் ஆரம்ப பள்ளியில் கழிப்பறை பற்றிய கவனத்தை,விழிப்புணர்வை மாணவர்கள் மனதில் பதிய வைக்க தவறியதே...??!! கழிப்பறை இல்லாத அல்லது இருந்தும் சுகாதாரமற்ற பள்ளிகள் எவ்வாறு மாணவ, மாணவிகளுக்கு இதை பற்றிய விழிப்புணர்வை போதிக்கும்...?! நல்லவைகளின் ஆரம்பம் பள்ளி என்பது திரிந்து சமூக ஒழுங்கீனங்களின் ஆரம்பம் பள்ளிகள் என்றாகிவிட்டதோ...??!

ஏற்படும்  பிரச்சனைகள்

இன்றைய தினத்தில் நாள் ஒன்றுக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்...ஆனால் பள்ளி செல்லும் நம் குழந்தைகளோ சுகாதாரமற்ற கழிவறை பக்கம் போக தயங்கியே நீர் அருந்துவதில்லை...காலையில் வீட்டில் இருந்து கிளம்பும் அவர்கள், மீண்டும் வீடு வந்தபின்னே சிறுநீர் கழிக்கிறார்கள்...இவ்வாறு சிறுநீர் வெளியேறாமல் இருப்பதால் கிட்னி பாதிப்படைய கூடிய வாய்ப்பு இருக்கிறது...தண்ணீர் அருந்தாமல் தவிர்ப்பதால் வயிற்று கோளாறுகளுக்கு ஆளாக்கி விடுகிறார்கள். சுகாதாரமற்ற கழிப்பறையை பயன்படுத்துவதின் மூலம் நோய்தொற்று ஏற்பட்டு கருப்பப்பை பாதிப்படைவதுடன் வெள்ளைபடுதல், மலட்டுத்தன்மை உள்ளிட்ட அது தொடர்பான பல்வேறு துன்பங்களையும் அனுபவிக்க நேரும் என சொல்கிறார்கள்.
.
பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் போது இதை பற்றி அவசியம் விசாரிக்கவேண்டும்...சங்கடமின்றி 'அந்த மூன்று நாட்களை' கடந்து போக கூடிய அளவிற்கு அங்கே பாத்ரூம் வசதி இருக்கிறதா ?! அது சுத்தமாக இருக்கிறதா? இன்னும் சொல்ல போனால் தாய் அந்த இடத்திற்கு சென்று பார்த்து வரலாம்...அங்கே ஏதும் சரியில்லை என்றால் பள்ளி நிர்வாகத்திடம் சரி பண்ண சொல்ல வேண்டும். 

அரசின் இலவச சானிடரி நாப்கின்

தற்போது தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் வளர் இளம் பெண்களுக்கு சானிடரி நாப்கின் கொடுப்பதாக அறிவித்திருக்கிறது. பாராட்டப்பட வேண்டிய நல்ல விஷயம்...அதே நேரம் பெண்கள் பள்ளிகளில்/கல்லூரிகளில்  கழிப்பறை வசதி சரியான விதத்தில் இருக்கிறதா என அரசு கவனித்து நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும். கட்டாயம் எடுத்தாக  வேண்டும் !!

மாணவிகளின்  தவறு அல்ல !

மாணவிகள் உபயோகித்தப் பின் சானிடரி நாப்கின்களை நல்ல முறையில் டிஸ்போஸ் பண்ண வேண்டும். ஆனால் சரியான முறைப்படி செய்ய இயலாததால் டாய்லெட் மற்றும் கழிவு நீர் செல்லும் குழாய்களில் அவை அடைத்து கொண்டு பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடுகிறது...அகற்றுவதற்கு ஆள் கிடைப்பதில்லை. அடைத்து கொண்டதை அகற்ற தாமதமாகும் ஒவ்வொரு மணி நேரமும் சுகாதார கேடு  அதிகரிக்கிறது.

பள்ளி நிர்வாகம் இது குறித்து மாணவிகளிடம் கண்டிக்கும் நிலையில் அவர்கள் அந்த நாட்களில் பள்ளிக்கு செல்வதையே தவிர்த்துவிடுகிறார்கள்...இங்கே தவறு மாணவிகளிடம் இல்லை, பள்ளி நிர்வாகத்திடம் இருக்கிறது.


பள்ளி மாணவிகளை பொறுத்தவரை மாதம் தோறும் அல்லாமல் 2, 3, வெகு சிலருக்கு 5 மாதங்களுக்கு ஒரு முறை தான் மாதவிடாய் நிகழுகிறது...அது போன்ற சமயத்தில் அதிக அளவில் ரத்தபோக்கு இருக்கலாம். கிராமத்து மாணவிகளை பொறுத்தவரை துணியை பயன்படுத்துவார்கள், அதிகபடியான ரத்தபோக்கால் பெரும் அவதிப்பட நேரும். ஒரு நாள் முழுவதும் துணி அல்லது நாப்கின் மாற்றாமல் வகுப்பில் இருப்பது வெகு சிரமம். பிறருக்கு தெரியும் படி ஒருவேளை இருந்துவிட்டால் அதனால் ஏற்படக்கூடிய அசுயை, அவமானம் (?) போன்றவை அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடும். உடல் ரீதியிலான பாதிப்புகளுடன் உளவியல் பாதிப்புக்கும் ஆளாகிறார்கள்...

உபயோகித்த நாப்கின்களை அகற்ற சரியான வழிவகை செய்தாக வேண்டும்.

என்னதான் வழி?!

2011 ஆம் ஆண்டு திருப்பூர்  ஜெய்வாபாய் நகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திரு. A.ஈஸ்வரன் என்பவர் மாணவிகள் சந்திக்கும் இத்தகைய பிரச்னைக்கு என்ன வழி என தீர யோசித்து ஒரு வழிமுறையை கண்டுபிடித்து வெற்றியும் பெற்று இருக்கிறார். பலரின் பாராட்டையும் பெற்று உள்ளார். இப்படியொரு வித்தியாசமான முயற்சியை பாராட்டி 1997 ஆம் ஆண்டு மங்கையர் மலர், மகளிர் சிந்தனை, மாலை மலர் போன்ற பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. செய்தி கேள்விப்பட்ட திருப்பூர் பகுதிகளில் உள்ள மில் கல்லூரிகளில் இருந்து வந்து இதை பார்வை இட்டு சென்று தங்கள் இடங்களிலும் அமைத்துள்ளனர். தற்போது தொழில் ரீதியாக மின்சாரம், எல்.பி.ஜி கேஸ் போன்றவை பயன்படுத்தி தயாரித்து பெண்கள் கல்லூரி பள்ளிகளுக்கு விற்று வருகிறார்கள்...!

அப்படியென்ன  கண்டுபிடிப்பு ?!

பழைய இரும்பு டிரம்மை சில மாற்றங்கள் செய்து புகை போக்கியுடன் கூடிய பாய்லராக வடிவமைத்து வைத்து அதன் இரு புறமும் 2 பாத்ரூம்களை கட்டி இருக்கிறார். பாத்ரூம் செல்லும் மாணவிகள் சிலிண்டரில் உள்ள சிறிய திறப்பானைத் திறந்து உபயோகபடுத்திய துணியை/நாப்கினை போட்டு விடலாம். பள்ளி முடிந்த மாலை நேரம் பாய்லரின் கீழேயுள்ள கதவைத்திறந்து மண்ணெண்ணெய் சிறிது ஊற்றி எரித்து விடலாம். புகை போக்கி மூலமாக புகை வெளியேறி விடும்...!


மத்திய அரசின் RMSA திட்டம் மூலமாக பெண்கள் பள்ளிகளில் கழிப்பறை கட்ட பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்...வெறும் கழிப்பறை மட்டும் கட்டுவதை விட இது போன்ற பாய்லர்களையும் சேர்த்து கட்ட தமிழக அரசும், கல்வித்துறையும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


ஆணென்ன ? பெண்ணென்ன ?

மாணவன் , மாணவி யாராக இருந்தாலும் வீட்டில் இருப்பதை விட பள்ளிகளில் தான் அவர்களின் பெரும்பாலான நேரம் கழிகிறது. அவர்களின் ஆரோக்கியத்திலும் பள்ளிகள் அக்கறை காட்டவேண்டும். ஒரு நாளைக்கு பள்ளி செல்லும் சிறுமி/சிறுவன் இரண்டு கிளாஸ் நீர் அருந்துவதே அதிகம். பெற்றோர் கொடுத்துவிடும் தண்ணீரையும் குடிக்காமல் மீதம் எடுத்து வருகிறார்கள்...கேட்டால் தண்ணீர் குடிக்க டைம் இல்ல, ஏதாவது ஒரு சாக்கு. இதை பெற்றோர்கள் நாம் கண்டுகொள்ளாமல் இருக்கக் கூடாது. குழந்தைகளை தயங்காமல் தண்ணீர் அதிகம் குடிக்க சொல்லுங்க...பள்ளியில் இருக்கும் கழிவறை சம்பந்தப்பட்ட பிரச்னையை குழந்தைகள் சொல்ல மாட்டார்கள் நாம் தான்  அக்கறை எடுக்கவேண்டும்...தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளை அணுகி கழிவறை வசதிகள் எவ்வாறு இருக்கிறது என விசாரித்து கவனியுங்கள்.

பெண் குழந்தைகள் என்றால் மேற்கூறிய பாய்லர் பற்றி பள்ளிகளுக்கு எடுத்து கூறுங்கள். படிப்பில் மட்டும் அக்கறை கொள்ளாமல் அவர்களின் ஆரோக்கியத்திலும் சிறிது கவனம் கொள்ளுங்கள்.

                                                                  * * * * * * * * *

 தகவல்,படங்கள்  உதவி 

- நன்றி திரு. A. ஈஸ்வரன்,
  http://jaivabaieswaran.blogspot.in/2010/04/blog-post_14.html
                                   
  மற்றும் இணையம் 



செவ்வாய், ஜூன் 26

கொஞ்சம் உதவி செய்யுங்கள்...! ஞானாலயா

இணையதளங்கள் இன்று பலராலும் கூர்ந்து கவனிக்க படுகிறது, விமர்சிக்க படுகிறது...இங்கே உள்ள தகவல்கள், துணுக்குகள், போன்றவை பத்திரிகைகள், தினசரிகளில் பகிரபடுகிறது. இப்படி இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்...! இத்தகைய இடத்தில் இருக்கும் நமக்கு, நல்லது செய்ய ஒரு வாய்ப்பு  கிடைத்தால் செய்யாம இருக்கலாமா?! வேற யாருக்கும் உதவி கேட்கல, நம்ம தமிழுக்காகத் தான் கேட்கிறேன்...'அப்படி என்னங்க ஆச்சு  தமிழுக்கு' ன்னு நீங்க பதறினா நிச்சயம் உதவி செய்வீங்க தானே...?! இப்ப தமிழுக்கு ஒன்னும் ஆகல, (ஏதோ  அப்டி இப்டின்னு ஓரளவு பெட்டரா இருக்குது ?!) ஆனா தமிழை பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறதே...! தமிழ் தமிழன்னு சொன்னா மட்டும் போதுமா இந்த தமிழுக்காக இதுவரை நாம என்ன செஞ்சிருக்கோம் ?! செய்றதுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு...தமிழ் நன்றாக நிலைத்து வாழட்டும் நம் தலைமுறை தாண்டியும்...! அதிகம் யோசிக்காம கை கொடுங்க...! எப்படின்னு புரியலையா...சரி நான் இத்தோட முடிச்சிகிறேன்...தொடர்ந்து படிங்க...புரியும் !
கழுகு இணைய தளம் ஒரு பதிவு வெளியிட்டது...அதனை இங்கே அப்படியே பகிர்கிறேன்...படித்து கழுகின் லிங்க் சென்று எடுத்து நீங்களும் பகிருங்கள் பலரையும் சென்றடையட்டும்...நன்றிகள் !

                                                                         * * * * *
நமது சந்ததியினருக்கு நம் வாழ்க்கைமுறையை அறியும் வாய்ப்பை விட்டுச் செல்வது எழுத்து ஒன்றினாலே சாத்தியம். அப்படி தமிழில் எழுதப்பட்ட அரிய ஆவணங்களாக விளங்கப்போகும் எண்ணற்ற நூல்களை பாதுகாக்கும் ஒரு கடமை நமக்கு காத்திருக்கிறது. 

புதுக்கோட்டையைச் சேர்ந்த திரு. கிருஷ்ண மூர்த்தி ஐயா மற்றும் அவரது துணைவியார் திருமதி டோரத்தி அம்மாள் இருவரும் தங்களின் வாழ்நாளை அர்ப்பணித்து தமிழனின் ஒப்பற்ற வரலாற்றின் பாகங்களை சுமார் 90,000க்கும் மேற்பட்ட பழைமையான நூல்களாகவும், சிற்றிதழ்களாகவும், அரிய கடிதங்களாகவும் சேர்த்து வைத்திருக்கின்றனர். அதற்காக தங்களது வாழ்நாளில் ஈட்டிய பொருளை எல்லாம் அதைப் பராமரிக்கக் கொட்டி கொடுத்து இருக்கின்றனர்.  

தங்களின் பணிக்காலம் முடிந்த பின்பு கிடைத்த ஓய்வூதிய பணத்தால் ஞானாலயா என்னும் மிகப்பெரிய, தமிழகத்தின் அளவில் இரண்டாவதும் அறிவில் முதலாவதுமான புத்தக சேகரத்தை புதுக்கோட்டையில் உருவாக்கி இருக்கிறார்கள்.

அரசினையும், அரசியல் தலைவர்களையும் அவர்கள் முட்டி மோதி இந்த மிகப்பெரிய நூலகத்திற்கு எந்த ஒரு குறிப்பிடத்தகுந்த உதவிகளையும் அவர்களால் பெற முடியவில்லை. 70 வயதுகளைக் கடந்திருக்கும் பெரியவர் கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்கள் இதற்காக சில தனியார் நிறுவனங்களை அணுகியபோது அவர்கள் உதவி செய்கிறேன் என்ற போர்வையில் தங்களின் வியாபார நோக்கத்தையே முன்னிலைப்படுத்தி திட்டமாக முன் வைத்திருக்கின்றனர்.

தமிழ் சமூகத்தின் பெருமைகளை எல்லாம் நம் சந்ததிகள் கற்றறிய வேண்டும் என்ற பெரு நோக்கில் புத்தகங்களை சேகரித்து இன்று மலை போல அறிவினை நூல்களில் குவித்து வைத்திருக்கும் திரு. கிருஷ்ணமூர்த்தி ஐயாவின் நோக்கம், இந்த மிகப்பெரிய நூலகத்தின் பயன்பாடுகள் சாதாரண பொதுமக்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதே! அதோடு மட்டுமில்லாமல் நூலகத்தின் பயன்பாடுகள் ஏழைகளுக்கு எட்டாக்கனியாய்ப் போய்விடக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில் வர்த்தக ரீதியாய் வந்த உதவிகளை எல்லாம் மறுத்தும் விட்டார்கள்.

புதுக்கோட்டையும் அதன் சுற்றுப்புற ஊர்களும் நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தினரால் சூழப்பட்டது. தமிழுக்கு அரும் தொண்டாற்றியுள்ள இச்சமூகத்தார் இருக்கும் இடத்திலேதான் தமிழகத்தின் மிகையான பதிப்பகங்கள் இருந்தது என்று நினைவு கூறும் திரு. கிருஷ்ண மூர்த்தி ஐயா அவர்கள், வெள்ளைக்காரன் காலத்தில் புதுக்கோட்டை மட்டும் தனி சமஸ்தானமாக இருந்ததால் இங்கே காகிதத்துக்கு வரி விலக்கு இருந்ததாலும் நிறைய பதிப்பகங்கள் இருந்ததாகக் கூறுகிறார்.

இதனை நினைவு கூறும் பொருட்டு மட்டுமில்லாமல் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஞானாலயா போன்ற மிகப்பெரிய புத்தக சேகரங்கள் இருந்தால் மிகையான வெளிநாடு வாழ் தமிழர்கள் வந்து போகும் இடமாக தென் தமிழகம் மாறுவதோடு,  இயற்கையாலும் வர்த்தகத்தாலும் பின் தங்கிப்போயிருக்கும் தென் தமிழகத்திலிருந்து அறிவுப்புரட்சி தொடங்கட்டும் என்ற பெரு நோக்கமுமே புதுக்கோட்டையில் ஞானாலாயாவைப் பிறப்பித்தது என்றும் கூறுகிறார்.



ஞானாலயாவில் இருக்கும் ஒவ்வொரு புத்தகமும் முதல் பதிப்பிலேயே ஐயா அவர்களால் வாங்கப்பட்டதோடு மட்டுமில்லாமல் யார் எந்த புத்தகம் தேடி வருகிறார்களோ அவர்களுக்கு புத்தகத்தினைப் பற்றிய மேலதிக விபரங்களையும், பின் புலங்களையும், பதிப்பிக்கப்பட்டபோது நிகழ்ந்த வரலாற்றையும் நம் கண் முன் கொண்டு நிறுத்தி விடுகிறார் திரு. கிருஷ்ண மூர்த்தி ஐயா அவர்கள்.

தனி மனிதர்களால் உருவாக்கம் கொண்ட இந்த ஞானாலயாவால் பயன் பெற்றிருக்கும் அரசியல் தலைவர்களும், எழுத்தாளர்களும், கவிஞர்களும் இன்று வாழ்க்கையின் உயரத்தில் மிகப்பெரிய பிரபலங்களாய் ஆனதோடு ஞானாலயாவை மறந்து விட்டார்கள். விபரம் அறிந்த பெருமக்கள் அனைவரும் தெளிவாய் அறிவர். தமிழகத்திலேயே தமிழர் வரலாறு அறியவும், தொன்மையான விடயங்களை ஆராய்ந்து அதில் முனைவர் பட்டம் பெறவும் ஞானாலாயா என்னும் அறிவுக் களஞ்சியத்தை விட்டால் வேறு வழியில்லை என்று....

இருப்பினும் இந்த அரிய பொக்கிஷம் காலமெல்லாம் தலை நிமிர்ந்து நின்று தமிழ்ப் பிள்ளைகளுக்கு எப்போதும் வழிகாட்டும் ஒரு அறிவுக் கோயிலாய் திகழ வேண்டும் என்ற பெரு விருப்பத்தை யாரும் கொண்டிருக்கவில்லை என்ற நிதர்சனத்தை நாம் வலியோடு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இதன் விளைவே ஞானாலயாவை உருவாக்கிய கிருஷ்ண மூர்த்தி ஐயா இன்று தனது தள்ளாத வயதிலும் இந்த பெரும் பொக்கிஷத்தை காலத்தால் அழியாத காவியமாய் ஆக்க போராடிக் கொண்டிருக்கிறார்.

அ)  ஞானாலயாவிற்காக தங்களிடம் இருந்த பொருளை எல்லாம் கொட்டி இன்று கட்டப்பட்டிருக்கும் கட்டிடமும் போதவில்லை மேலும் மேல் தளத்தில் இதன் விரிவாக்கப் பணிகள் செய்யப்பட வேண்டும். பணிகள் துவங்கப்பட்டுவிட்டன.. நம்மைப் போன்றவர்களை நம்பி....

ஆ ) ஞானாலயாவில் இருக்கும் புத்தகங்களை எல்லாம் தொகுத்து மின் புத்தகங்களாக இணையத்தில் பதிவேற்ற வேண்டும். காகிதங்களில் அச்சிடப்பட்ட நூல்களில் ஆயுட்காலம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அழிந்து போய் விடும் அபாயம் இருக்கிறது அல்லவா?

இ) ஐயா. திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் ஒவ்வொரு பழந்தமிழ் நூல்களைப்பற்றியும், அவை சம்பந்தமான சுவாரஸ்யமான விவரங்களைப் ஒலிவடிவத்தில் பதிவு செய்து அவற்றையும் இணையத்தில் ஏற்ற வேண்டும்.

ஈ) நூலகத்தைப் பராமரிக்கவும், அங்கே பணி செய்யும் இரண்டு பணியாளர்களுக்கும் மாதா மாதம் ஊதியம் கொடுக்கப்படவேண்டும்.

 உ)  புத்தகங்களை மின்னேற்ற தொழில் நுட்பத்தில் தேர்ந்த தமிழ்ப்பிள்ளைகள் இதற்கு உதவ முன் வரவேண்டும். மேலும் மின்னேற்றுவதற்கு தேவையான கருவிகளையும் வாங்க வேண்டும்.

இப்படி பல கட்டங்களாய் விரிந்து கொண்டிருக்கும் இந்த அரிய பணியை செய்ய பணத்தேவை தவிர்க்கமுடியாததாக இருக்கிறது. நம்மில் அத்தனை பேராலும் பெரும் பொருள் கொடுத்து உதவ முடியாது என்ற நிதர்சனத்தை கழுகு தெளிவாகவே உணர்ந்திருக்கிறது. நம்மால் என்ன இயலுமோ அதை நேரடியாய்க் கொடுக்கலாம் என்ற கோரிக்கையை வேண்டுகோளாய் உங்களிடம் வைக்கும் இந்த நொடியில்...

ஞானாலயா பற்றிய செய்தியை காட்டு தீயாய் தமிழ் பேசும் தமிழர்கள் அத்தனை பேருக்கும் கொண்டு செல்லுங்கள் என்ற வேண்டுகோளினை நாங்கள் வலுவாக வைக்கிறோம். 



நாம் சந்திக்கும் ஒவ்வொரு தமிழரிடமும் ஞானாலயாவைப் பற்றி பேசுவோம், இப்படியான பேச்சுக்கள் சமூக நல ஆர்வலர்கள்,  புரவலர்கள், நல்லெண்ணம் கொண்ட தமிழ் நேசர்கள் அத்தனை பேரிடமும் செல்லும் போது அவர்கள் ஞானாலயா பற்றிய மேலதிக விபரங்களைத் தெரிந்து கொண்டு தங்களின் சுய தெளிவோடு உதவிகள் செய்வது தவிர்க்க முடியாததாய் போய்விடும்.

தமிழ்த் தாத்தா ஐயா. உ.வே.சா அவர்களை நாம் கண்டதில்லை ஆனால் ஐயா உ.வே.சா அவர்கள் அரும்பாடு பட்டு கரையான் அரித்த ஓலைச்சுவடிகளை எல்லாம் சேகரித்து அவற்றை புத்தகமாக்கி இருக்காவிட்டால் நாம் வாசித்தறிய மிகையான தமிழ் நூல்கள் கிடைத்திருக்காது. 

அந்த சூழ்நிலையின் சாயலைக் கொண்டதே இப்பணியும்..

நமது தமிழ்சமூகம் தொன்று தொட்டே தலை நிமிர்ந்து வாழ்ந்த சமூகம். கலை, இலக்கியம், பண்பாடு, வீரம் என்று நம் மூததையர்கள் வாழ்ந்த வரலாறுகளை நாம் எடுத்து வாசிக்கும் போது நமது அறிவு விசாலப்படுகிறது. .ஒப்பற்ற ஒரு சமூகத்தின் அங்கம் நாம் என்ற தன்னம்பிக்கையில் எட்ட முடியாத உயரங்களையும் நாம் எட்டிப்பிடிக்க முடியும்.

எந்த மொழியில் நாம் விபரங்களை விளங்கிக் கொண்டாலும், பிறப்பால் நமது உணர்வோடு கலந்துவிட்ட, உயிர் தாய்மொழியில் நமது தொன்மைகளை வாசித்து உணரும் போது பிறக்கும் உற்சாகம்...இந்த உலகை படைத்து அதை நாமே இயக்குகிறோம் என்ற இறுமாப்பினை ஒத்தது.

இணையத்தில் எழுத வந்து விட்டு, எத்தனையோ குழுக்களாய் பிரிந்து நின்று எது எதையோ நிறுவ நாம் போராடிக் கொண்டிருப்பதில் தவறில்லை. ஆனால் அப்படி நாம் நமது கருத்துக்களைப் பகிர நம்மிடம் இருக்கும் தாய் மொழியாம் தமிழுக்கு, தமிழர் வளர்ச்சிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணக்கிடக்கை உங்களுக்கு இருக்கிறது என்றால் நீங்கள் கண்டிப்பாய் ஞானாலயாவுக்கு ஏதேனும் செய்யுங்கள்......

குறைந்த பட்சம் இந்த கட்டுரையின் கருத்துக்களை இணையத்திலும், இணையம் சாராத தமிழர்களிடம் கொண்டு சேருங்கள். நம்மால் முடிந்த அளவு நன்கொடை, அல்லது நன்கொடையாளர்களை அடையாளம் கண்டு உதவச் செய்தல் அவசியம். எந்த கட்சிக்காவும், மதத்திற்காகவும், சாதிக்காகவும், இல்லாமல் நாங்கள் தமிழுக்காய் உங்களிடம் கையேந்தி வந்திருக்கிறோம்.....

எம் தாய்த் தமிழ் உறவுகளே...தமிழுக்காய் ஒன்று கூடுங்கள்....! 

ஞானாலயா பற்றிய மேலதிக விபரங்கட்கு;



ஞானாலயாவிற்கு பொருளதவி செய்ய;

வங்கி விவரம்:
Account Holder: Sri B. KRISHNAMOORTHY
S B Account Number: 1017047
Bank Name: UCO Bank
Branch: PUDUKKOTTAI (Tamilnadu India).
Branch Code: 000112

ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா, 6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம், புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.
தொ.பே. எண்: 04322-221059 மொபைல்: (0) 9965633140

மேலும் ஞானாலயாவுக்காக தொடர்ச்சியாக இயங்கப்போகும் கழுகோடு கரம் கோர்க்க கழுகிற்கு (kazhuhu@gmail.com) தகவல்களை மின்னஞ்சல் செய்யவும். உங்களின் ஆதரவினைப் பொறுத்து ஞானாலயாவிற்கு என தனி வலைப்பக்கம் துவங்க உத்தேசித்து தொடங்கியும் விட்டோம்...அதில் எல்லோரும் பங்கு பெரும் அளவில் செய்ய இருக்கிறோம்...உங்களின் மேலான ஆதரவினை தாருங்கள். நன்றி.

ஞானாலயா வலைப்பக்கம் லிங்க் - http://gnanalaya-tamil.blogspot.in/ 
                                                               * * * * *

பின் குறிப்பு 

கழுகு இணைய தளத்தின் பதிவை இங்கே பதிவிட்டதில் மகிழ்கிறேன்...பதிவிட அனுமதி கொடுத்த கழுகிற்கு என் நன்றிகள். நல்லனவற்றை தேடி பிடித்து வெளிக்கொண்டு வரும் கழுகிற்கு என் பாராட்டுகள்...!

கட்டுரை உதவி - கழுகு 

திங்கள், ஜூன் 25

உன் நினைவுகளின் தாலாட்டில்...! மைக்கேல் ஜாக்சன்

எங்கிருந்தோ வந்தாய்...! 


 நிறமற்ற என் நாட்களிலும் வண்ணங்களை பூசிச் செல்வாய்...!! உன்னை விட வேறு யார் இப்படி என்னை கவனித்து கொண்டார்கள்...!? உறவுகள் நட்புகளுக்கிடையே ஏதோ ஒரு எதிர்பார்ப்பு உண்டு...! நேசிக்கவும் நிபந்தனை விதிக்கும் சுயநல மனிதர்கள் மத்தியில் வாழும் வாழ்கையில் எந்த வித எதிர்பார்ப்பும் வைக்க இயலாத உன்னை நேசிக்க தூண்டியது எதுவோ...? எனது 11 வயதில் இருந்து தொடங்கிய இந்த உறவு நாளுக்கு நாள் உயிர்ப்புடன் வளர்ந்து கொண்டே செல்லும் விந்தை எதுவோ ?! ஆராய முடியவில்லை, என்றாலும் 'பிடிச்சிருக்கு' என்ற ஒன்றை சொல் பொருத்தமான பதிலாக இருக்கலாம் !!


நமக்கு பிடித்தவர்கள் எது செய்தாலும், சொன்னாலும் அழகு தான், அவர்கள் வைக்கும் ஒரு சிறு புள்ளியை கூட விடாமல் சுற்றிச் சுற்றி வரும் நமது  மனம். அவர்களை நிழலென பின் தொடர்ந்து செல்லும் மனதை கட்டுபடுத்த வழி  ஏது...?!

எங்கோ தூரத்தில் இருந்து கொண்டு குரலால், வார்த்தையால் வழிநடத்த முடியும் என்பதை முதன்முதலாய் சாத்தியமாக்கி காட்டினாய் நீ !!

அழுகைகள், வேதனைகள்,வலிகள்,துயரங்கள், சிக்கல்கள், அத்தனையிலும் மயிலிறகென மனதை வருடி துணையாக இருக்கிறாயே...! மனது சரியில்லாத ஒவ்வொரு நேரமும் உனது பாடலை ஒலிக்க வைத்து அமைதி அடைந்திருக்கிறேன் இன்று வரை...! பிரச்சனைகளால் தூக்கமற்று புரளும் என்னை, பல இரவுகள் தாலாட்டி தூங்க வைத்திருக்கிறாய் ! குழப்பமான மன நிலையை சீராக்கி பிரச்னையை எதிர்கொள்ள வைத்திருக்கிறாய் ! எல்லாம் செய்த உன்னை இன்று மிக அதிக அதிகமாய் நினைக்க வைத்துவிட்டாய்...

இதோ நீ மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் சென்று இன்றுடன் மூன்று ஆண்டுகள் முடிந்து விட்டன...! பலரும் சொல்றாங்க 'மிஸ் யு ' னு...விடியும் ஒவ்வொரு நாள் காலையிலும் உன் குரல் கேட்டு என் நாளை  தொடங்கிற எனக்கு உன்னை 'மிஸ் யூ' என்று சொல்வது சற்று வேடிக்கையாகத்தான் இருக்கும்...?!

மூன்று வருடங்களுக்கு முன் 

காலை நேர பரபரப்பில் இருந்த என் வீட்டை சென்னையில் இருந்து வந்த அம்மாவின் போன் அழைப்பு மாற்றிப்போட்டது. அம்மா, "அந்த பையன் இறந்துட்டான்டி" புரியாத குழப்பத்தில் நான், "யார்மா, எந்த பையன் ?" அம்மா "அதான் அந்த பையன், உனக்கு பிடிக்குமே MJ " (என் அம்மாவிற்கு இன்னும் நீ பையன் தான் !!)அதிர்ச்சியுடன் "என்னமா சொல்ற ?" "ஆமாண்டி  கொலை பண்ணிட்டாங்களாம், டிவில நியூஸ் போட்டு பாரு...... " என்னென்னவோ சொல்லிக்கொண்டே போக இங்கே என் காலடியில் பூமி நழுவி கொண்டிருந்தது...மயக்க நிலைக்கு போன என்னை என் கணவர் பிடித்து சோபாவில் அமர்த்தினார்...சில நிமிடம் கழித்து பதட்டத்துடன் டிவியை போட்டு BBC , NDTV இரண்டு சேனலையும் மாத்தி மாத்தி பார்க்க அங்கே தெரிந்த உண்மை நெஞ்சை கீறி கிழிக்கத் தொடங்கியது...

ஸ்கூல் போக கிளம்பி நின்ற குழந்தைகளை மறந்தேன், என் நிலை புரிந்த கணவர் அவர்களை கவனித்து தயார் பண்ணி அனுப்பினார்...

தொடர்ந்து வந்த தொலைபேசி அழைப்புகளில் அண்ணன், தம்பியினரின் வருத்தமான விசாரிப்புகள்...துக்கவீடாகி போனது என் வீடு...!

'ரிலாக்ஸா இருமா, நான் கொஞ்சம் வெளில போயிட்டு வரேன்' என்று என் தனிமையின் அவசியம் உணர்ந்து கிளம்பினார் என்னவர். அதுக்காகவே காத்திருந்ததை போல அதுவரை கண்ணீர் விட்டு கொண்டிருந்த நான் அவர்  அகன்ற அடுத்த நொடி கதற தொடங்கினேன்...எப்போதும் பறிக்கப் பிடிக்காத என் தோட்டத்து ரோஜா பூக்களை (செடியில் இருந்தால் மேலும் 3 நாட்கள் வாடாமல் இருக்கு என்பதால் பறிக்க மாட்டேன்)பறிக்க சென்று, பூத்திருந்த அத்தனை மலர்களையும் கை நிறைய அள்ளி கொண்டுவந்தேன். சுவரில் மாட்டி இருந்த ஆளுயர படத்திற்கு மாலையாக்கினேன்...சில பூக்களை உதிர்த்து மெல்ல தூவி பார்த்துக்கொண்டே இருந்தேன்...!

நெருங்கிய நேசங்களின் பிரிவின் போது என் கண் அழுதிருக்கலாம் , அன்று உனக்காக என் இதயம் அழுததை உணர்ந்தேன்...!!

மிக பிடித்ததால் தான் கடவுள் உன்னை விரைவாக அழைத்து கொண்டார் போலும்...
சிலர் சொன்னார்கள் கண்மூடித்தனமான நேசம் இது, உணர்ச்சி வேகத்தில் ஏதேதோ சொல்கிறேன் என்று...சிறு வயது முதல் கூடவே இருந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் என்னை நெறிப்படுத்தி கொண்டு வந்த ஒரு உன்னத உயிரை பற்றி சொல்ல 'உணர்ச்சிவசப்பட்ட நிலை' மட்டும் போதாது அதிகபடியான புரிதலும் பக்குவமும் வேண்டும்...! 

சேவை எண்ணத்தை சிறுவயதில் விதைத்தது நீ ...அது தானே இன்று தொண்டு நிறுவனமாய் செயல்பட்டு கொண்டிருக்கிறது...!! நீ கற்றுக் கொடுத்த நேசத்தை என்னை சுற்றி இருக்கும் அத்தனை பேரிடமும் செலுத்தி எல்லோரையும் நேசிப்பேன்...!இதோ இந்த வீடியோவிலும் உன் பேச்சு நெகிழவைத்து விடுகிறது...


முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டன் முன் ஜாக்சனின் "Gone to Soon - Heal The World" பாடல்கள்...மனதை மெல்ல ஊடுருவி இதமாய் வருடி கொடுக்கும் ...அத்தனை  பேரும் எழுந்து நின்று ஜனாதிபதி உட்பட கரகோஷ ஒலி எழுப்புவது அருமை ! நம்மை அருகில் அழைத்து வெகு இயல்பாய் எடுத்து சொல்வதை போன்ற  நடை பாவனைகள் அழகு ! இம்மண்ணை விரும்ப, மனிதர்களை நேசிக்க என் மனதில் சிறுவயதிலேயே மனித நேயத்தை பதிய வைத்தது இப்பாடல் (Heal the World) என்பது உண்மை. 

Heal The World
Make It A Better Place
For You And For Me
And The Entire Human Race
There Are People Dying
If You Care Enough
For The Living
Make A Better Place
For You And For Me



You Are Not Alone பாடல்.  ஆறுதலாய் தோள்  சாய்க்கும், பலமுறை அனுபவித்திருக்கிறேன்...தனிமையாக உணரும் தருணம் தவறாமல் இப்பாடலை போட்டு கண்கள் மூடி கேட்க, பாடல் முடியும் தருவாயில் என் தியானமும்(!) முடிந்திருக்கும்...!! புது உற்சாகம்  மனதில் பிறந்திருக்கும் !!

(சில வரிகள்...)

Another day has gone
I'm still all alone
How could this be
You're not here with me
You never said goodbye
Someone tell me why
Did you have to go
And leave my world so cold

Everyday I sit and ask myself
How did love slip away
Something whispers in my ear and says
That you are not alone
For I am here with you
Though you're far away
I am here to stay

You are not alone
I am here with you
Though we're far apart
You're always in my heart
You are not alone

வாழ தகுதி அற்ற இடமாக மாறி கொண்டிருக்கிறது இந்த பூமி...! சுயநலதிற்க்காக, வசதிக்காக, தேவைக்காக இன்னும் எவைகளுக்கோ மனிதன் உலகை, சுற்றுப்புறத்தை சிதைத்து கொண்டிருக்கிறான், சிதைந்து கொண்டிருக்கிறான்...!! இப்பாடலில் தெறிக்கும் வேதனை வரிகள், இசை, காட்சிகள் மனதை வலிக்க செய்யும் கேட்கும்போதெல்லாம்...!!  



What about sunrise
What about rain
What about all the things
That you said we were to gain...
What about killing fields
Is there a time
What about all the things
That you said was yours and mine...
Did you ever stop to notice
All the blood we've shed before
Did you ever stop to notice
The crying Earth the weeping shores?

What have we done to the world
Look what we've done
What about all the peace
That you pledge your only son...
What about flowering fields
Is there a time
What about all the dreams
That you said was yours and mine...
Did you ever stop to notice
All the children dead from war
Did you ever stop to notice
The crying Earth the weeping shores


கடந்த வருடங்களில் இதே தினத்தில்  எழுதிய இரு பதிவுகள்
நினைவு தினம் 
மைக்கேல் ஜாக்சனுக்கு ஒரு கடிதம்...!
ஒரு ரசிகையாய் என் உணர்வுகளை வருடம் தோறும் இந்த நாளில் எழுதி பதிவு செய்வதால் கிடைக்கும் மன நிறைவு மிக பெரிது...!! அதற்க்கு துணை செய்யும் பதிவுலகத்துக்கு என் நன்றிகள்...

இவ்வுலகம் அழகானது, மிக அருமையானது மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் ஒவ்வொரு கடமையை சேர்த்தே கொடுத்திருக்கிறது...மனிதனுக்கு கொடுக்கப்பட்ட ஒரு கடமை பிற உயிர்களை நேசிப்பது !! எல்லோரையும் தூய மனதுடன் அன்பால் அரவணைப்போம்...!! வாழும் நாட்களை அர்த்தமுள்ளதாகிகொள்வோம்.

பிரியங்களுடன்
கௌசல்யா


வெள்ளி, ஜூன் 22

சில புரிதல்களும், விளக்கங்களும்...! வீட்டுத் தோட்டம்

பதிவர் வவ்வால் அவர்கள் வீட்டுத் தோட்டம் பதிவில் நான் சொல்லியிருந்த கீரை வளர்ப்பதற்கான எளிய வழிமுறையினால் நீர் கசிவு ஏற்படும், தளம் பாதிக்கப்படும் என்று பின்னூட்டத்தில் கூறி இருந்தார். அத்துடன் தொடர்ந்து துணை பதிவு ஒன்றும் (பசுமை மாடி - வீட்டுத்தோட்டம் ) எழுதி இருந்தார். கடந்த ஒரு வாரமாக என்னால் இணையம் வர இயலாத சூழ்நிலை. அதனால் உடனே வாசித்து பதில் சொல்லமுடியவில்லை. அப்பதிவில் மிகவும் விளக்கமாக எல்லா நுணுக்கங்கள்  பற்றியும் விரிவாக தெளிவாக எழுதி இருந்தார். உபயோகமான நல்ல பல தகவல்கள். அப்பதிவை பற்றி சொல்லும் முன் ஒரு சிறு தன்னிலை(வீட்டுத் தோட்டம் தொடரை குறித்த) விளக்கம்...

ஆர்வமின்மை 

தோட்டம் போடுவது என்பது அக்ரி படித்தவர்கள் , விவசாயம் தெரிந்தவர்கள் சம்பந்தப்பட்டது, அவர்களுக்கு தான் தெரியும் நமக்கும் இதுக்கும் ஒத்துவராது என்பதே பலரின் எண்ணம்னு நினைக்கிறேன். கொஞ்சம் கூட முயற்சி செய்து பார்ப்பது  இல்லை. சுலபம் இல்லை மிகவும் கடினம் என்று தெரிஞ்சவங்க சிலர் என்னிடம் கேட்கிறப்போ 'என்னடா இது சோதனை' என்பது போல இருக்கும்...எங்க வீட்டு தோட்டத்துல ரோஜா செடிகள் நிறைய பூ பூக்கும் அதை பார்க்கிறவங்க 'உன் கை ராசி, அதுதான் இப்படி, நானும் எத்தனையோ வச்சு பார்த்துட்டேன் ஒரு பூவோட நின்னுடுது'னு சொல்வாங்க...அவங்களுக்கு பொறுமையா சில நுணுக்கங்களை சொல்வேன். மொத்தமா எல்லாம் கேட்டு விட்டு 'நீ என்னதான் சொல்லு, இதுகெல்லாம் ராசி வேணும்'...!!?? மறுபடியும் முதல்ல இருந்தான்னு எரிச்சல் வரும்.

இப்படி நம்மில் பலரும் ஒவ்வொன்னுக்கும் ஏதோ சில சமாளிப்புகளை கொடுத்து கொண்டு இருக்கிறோம்...தோட்டத்தை பொறுத்தவரை செய்து பார்ப்போமே, அதன் நெளிவு சுளிவுகளை கத்துக்கணுமேன்னு முயற்சி பண்றதே இல்ல. பணம் சம்பாதிக்க காட்டும்  ஆர்வம், முயற்சிகள் இதில் சிறிதும் இல்லை. உடம்பிற்கு ஏதும் வந்துவிட்டால் ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்ய தயங்காத நாம் இதற்கு மிகவும் யோசிப்பது சரியில்லை. தோட்டம் போடுவது என்பது நம் ஆரோக்கியத்துடன் சம்பந்தப்பட்டது...!! உடல்நலத்துடன் மனநலமும் பேணப்படும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.  இதில் ஆர்வம் வரணும், இனியும் அசட்டையாக இருக்க கூடாது என்பதை வலியுறுத்தவே தான் இந்த வீட்டு தோட்டம் தொடரே எழுதத் தொடங்கினேன். 

ஆர்வம், அக்கறை வர வைத்துவிட்டால் போதும், இதில் இருக்கும் சாதக பாதகங்களை அவங்களே புரிஞ்சிப்பாங்க. கூகுள்ல தட்டினா வந்து விழும் பல தகவல்களை விட அனுபவத்தில் பெற்றதை சொல்லும் போது " அட இவ்வளவுதானா மேட்டர், நாமும் செஞ்சு பார்த்தால் என்ன?" என ஒரு ஆர்வம் வந்துவிடாதா என்கிற ஒரு எதிர்பார்ப்பு, நம்பிக்கையில் எழுதுகிறேன். படிக்கும் ஒருவர் இரண்டு பேர் முயன்றால் கூட போதும் என்கிற விருப்பம் காரணமாகவே எளிமையாக பெரிய மேற்கோள்களை காட்டாமல் எழுதுகிறேன்.

அரிசி மண்ணுக்கு மேலா, அடியிலா என்பது தெரியாத, தெரிந்து கொள்ள விரும்பாத தலைமுறையினருக்கு நடுவில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்மில் பலரும் விவசாய பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் விவசாயத்தை வெறுக்கிற, அதன் மேல் பற்று இல்லாதவர்களாக இருக்கிறோம். இது நல்லதுக்கல்ல. வீட்டில் தோட்டம் போடுவதின் மூலமாக இயற்கையுடன் நம்மை பிணைத்து கொள்ளமுடியும். இயந்திரங்களின் துணையுடன் வாழும் வாழ்க்கைக்கு நடுவில் கொஞ்சம் பசுமையுடன் வாழ்ந்து மனதை மென்மையாக்கி கொள்வோம்.

'இது செடி, இதுதாங்க மண், இதில் நட்டுவிட்டால் போதும்' என்று சொல்வதற்கு பல இணைப்புகள் கூகுளில் இருந்தாலும் ஆர்வம் இல்லாதவர்கள் எப்படி தேடி போவார்கள்...?! நிச்சயம் போக மாட்டார்கள்...அவர்களை தேட வைக்கணும்...தேடி கண்டடைந்த பின்னர் முயற்சி செய்து பார்க்கலாம்...பலன் கிடைத்ததும் புது புது நுணுக்கங்களை அவர்களாகவே கண்டு பிடிப்பார்கள்...பின் செயல்படுத்தி வெற்றி காண்பார்கள்...ஒரு முறை தோட்டம் போட்டு அதன் மகத்துவத்தை அனுபவித்து விட்டார்கள் என்றால் இறுதிவரை விட மாட்டார்கள். மரம், செடிகளுடனான காதல் இன்பம் எத்தகையது என்பதை அனுபவித்து பார்த்தால்தான் தெரியும் !! மீளவே முடியாத போதை அது !! 

ஒகே, இப்ப நேரா விசயத்துக்கு வரேன்...அப்ப இதுவரை சொன்னது விசயமே இல்லையானு கேட்ககூடாது :)

ஆர்வத்தை கொண்டுவருவது முதல் படி என எண்ணியதால் சில வரிகளில் மட்டும் முடித்துக்கொண்டேன்...தொடராக எழுத போவதால் ஒவ்வொன்றை பற்றியும் தனித்தனியாக மேலும் பல தகவல்களை சேர்த்து எழுதுகிறேன். 

தோட்டக்கலை பொறுத்தவரை நாள்தோறும் ஏதாவது புது புது முறைகள்  வரும், போகும். வீட்டுத்தோட்டத்தில் அவரவர் கிரியேடிவிட்டிக்கு  தகுந்த மாதிரி கண்டுபிடித்து செய்து கொண்டே போகலாம்...சட்டதிட்டங்கள் இருக்குமோனு யோசிச்சிட்டே இருக்ககூடாது...சில விதங்கள் இப்படி இருந்தால் நல்லது என வழி  காட்ட முடியும் அவ்வளவே. அடிப்படை தேவையான மண், நீர், விதை இவற்றை வைத்து இருக்கிற இடத்திற்கு ஏற்ற மாதிரி செய்துகொள்ள வேண்டியது தான்.

முன்னாடி எல்லாம், மொட்டை மாடியில் தொட்டிகள் வைத்தால் ரூப் கனம் தாங்காமல் இறங்கிவிடும்(சேதமாகி விடும்) என்று கூட பயந்திருக்கிறோம் ??! :) 

மாடியில் கீரைத்தோட்டம் போடுவதில் சிறந்தது  என்பது கனம் கூடிய பிளாஸ்டிக் சாக்கை/விரிப்பை சரியான விதத்தில் பயன்படுத்துவதில் இருக்கிறது. தென்னை நார் கழிவை அடியில் பரவலாக விரிக்கலாம்...நீரை உறிஞ்சி வைத்துகொள்ளும்...மண்ணில் ஈரப்பதம் இருந்துகொண்டே இருக்கும்...அதிகபடியான நீர் வெளியேறவும் செய்யாது...தொட்டியில் செடி வைக்கும் போதும் இதை பயன்படுத்தி கொண்டால் நல்லது. தினம் தண்ணீர் ஊற்றவேண்டுமே என கவலை படவேண்டாம்.3 அல்லது 4 நாள் வரை தாங்கும்.

திரு வின்சென்ட் சார் அவர்களின் இந்த பதிவும், காணொளியும் உங்களுக்கு மாடியில் கீரை பயிரிடுவதை பற்றிய ஒரு தெளிவினை/புரிதலை கொடுக்கும்.

மாடியில் கீரை வளர்ப்பு - லிங்க் சென்று பார்க்கவும்.

http://youtu.be/s5gXutQws8E


'வீட்டுத்தோட்டம் காலத்தின் கட்டாயம்' என்று வலியுறுத்துகிறது வின்சென்ட் சாரின் இந்த  Powerpoint Presentation. அவசியம் பாருங்க...

 http://www.authorstream.com/Presentation/vincent2511-607128-home-garden/

மொட்டை மாடியில் கீரைத் தோட்டம் அமைக்க

"ஒரே ஷீட்டாக ஹை டென்சிட்டி பாலித்தீன் ஷீட்டினை(HDPE sheet)பயன்ப்படுத்த வேண்டும். இது கடைகளில் கிடைக்கிறது.

தேவையான அளவில் வாங்கிக்கொண்டு ,பின்னர் மேல் மாடியில் நான்கு புறமும் சுவர் போல செங்கற்களை அடுக்கி விட்டு அதன் மீது ,பிளாஸ்டிக் ஷீட்டினை பரப்பி நான்கு புறமும் வெளிப்புறமாக கொஞ்சம் மடக்கி விட்டு விட வேண்டும். இப்போது தண்ணீர் கசியாத சதுர பிளாஸ்டிக் குளம் போல ஒரு அமைப்பு கிடைத்திடும்.

இந்த அமைப்பில் நீர் ஊற்றி சேகரித்தால் கூட கசியாது." - வவ்வால் 
கழிவு நீர் சுத்திகரிக்கும் முறை,தொழு உரம் தயாரிப்பது என்பதை குறித்து விரிவாக பதிவிட்டதையும் அவசியம் படிங்க...

(காய்கறி கொடி பந்தலின் கீழே கீரை வளர்ப்பதை போல் அமைத்து கொள்வது நன்று)

பதிவர் வவ்வால் அவர்களுக்கு,

உங்கள் பின்னூட்டத்துக்கும் துணை பதிவுக்கும் முதலில் என் நன்றிகள். 

எனது பதிவை ஊன்றி படித்து அதில் தங்கள் பார்வையில் குறையாக தெரிந்ததை பின்னூட்டத்தில் குறிப்பிட்டதோடு அல்லாமல் விரிவான விளக்கம் கொடுக்கவேண்டும் என தனி பதிவு எழுதிய உங்களுக்கு  என் பாராட்டுகள். 

அதிலும் துணை பதிவு என்று குறிப்பிட்டது என் கவனத்தை மிக ஈர்த்தது...(எனக்கு தெரிந்ததெல்லாம் எதிர்பதிவு?!) :) இச்சமயத்தில் எதிர்பதிவுகள் எழுதிய சகோதர, நண்பர்கள் என் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. பதிவின் கருத்தை குறித்த விமர்சனத்தை விட எழுதியவரை பற்றிய கடும்விமர்சனத்தை தான் இதுவரை பார்த்திருக்கிறேன். அத்தகையோரை பற்றி மட்டும் தெரிந்த எனக்கு வவ்வால் அவர்களின் துணை பதிவை படித்து ஆச்சர்யம் ஏற்பட்டது ! சக மனிதரை மதிக்கக்கூடிய இந்த பண்பை கற்றுக்கொள்ளவேண்டும் நான் உட்பட...பதிவில் இருக்கும் குறைகளை(?) சுட்டிக்காட்டுகிறேன் என்ற போர்வையில் தனிமனித தாக்குதல் நடத்தும் பதிவுலகத்தில் நாகரீகமான இவரது அணுகுமுறையை எண்ணி உண்மையில் மகிழ்கிறேன். ஒருவருக்கொருவர் நல்ல கருத்துக்களை, நிறை குறைகளை பரிமாறும் ஆரோக்யமான நிலை தொடர இவரை போன்றோர் இருக்கிறார்கள் என்ற மன நிறைவுடன் இப்பதிவை முடிக்கிறேன். 

கௌசல்யா  

தகவல்,படங்கள் உதவி 
நன்றி வின்சென்ட் சார்