செவ்வாய், ஜூன் 5

சுற்றுச்சூழல் மீதான அக்கறை நமக்கு இருக்கிறதா ?!!



ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடபடுகிறது...இத்தினத்தை பொறுப்பேற்று நடத்துவதற்காக ஐ.நா சபையின் சுற்றுச்சூழல் திட்டக் குழு ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒவ்வொரு நாட்டை தேர்ந்தெடுக்கிறது...இந்த ஆண்டு இந்த வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்துள்ளது...

இதற்காக பெருமை கொள்ள முடியாது, எங்கே குறைவு இருக்கிறதோ அங்கே தான் நிறைவு செய்து கொள்ள வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்று தான் நாம் எடுத்து கொள்ள வேண்டும்...120 கோடி பேர் வாழும் இந்த நாட்டில் அடிப்படை தேவையான கழிப்பறை வசதி இல்லாமல் 60 % மக்கள் இருக்கிறார்கள் என ஆய்வு கூறுகிறது..!!

இத்தகைய மோசமான நிலையில் நாடு இருக்கும்போது வல்லரசு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என கூறும் அதி மேதாவிகளை என்னவென்று சொல்ல ??!

தரமற்ற குடிநீர்,
சாக்கடையாகும் நீர்பிடிப்பு பகுதிகள்,
பிளாஸ்டிக் கழிவால் சீர்கெட்டுப்  போன சுற்றுப்புறம்,
மணல் கொள்ளையால் காணாமல் போகும் ஆறுகள்,
மரங்களை வெட்டியதால் சுடுகாடாய் மாறிய பசுமை பிரதேசங்கள்

பூமியில் காணப்படும் செடி, கொடி, மரங்கள் முதல் மிருகங்கள், பறவைகள், பூச்சி இனங்கள் போன்றவற்றுடன் மனிதனும் இணைந்த இணைப்பே பல்லுயிரியம் (Bio diversity) எனப்படுகிறது. இவை அனைத்தும் சரிவிகிதத்தில் இருக்கவேண்டும். 

ஆனால்... 

மனிதனை தவிர மற்றவை தங்கள் பங்கை சிறப்பாக செய்து வரும் போது 'ஆறறிவு படைத்த மனிதன்' தன் சுயநலத்திற்காக கண்டபடி அனைத்தையும் அழித்துக்கொண்டு வருகிறான். சமன்பாட்டில் குறைவு ஏற்படும் போது இயற்கை குழப்பம் அடைந்து பல மாறுபாடுகளை ஏற்படுத்துகிறது. அதுதான் ஓசோனில் ஓட்டை, புவி வெப்பமடைதல் என்று தொடரும் ஆபத்துகள்...

இனியும் நாம் விழித்து கொள்ளவில்லை என்றால் வாழும் போதே நரகத்தை அனுபவிப்பதை விட வேறு வழி இல்லை.

மரங்கள்  நடுவது போன்ற கண் துடைப்புகள்

ஒரு வாரத்தில் இத்தனை மரங்களை நட்டோம் என்று லட்சத்தில் கணக்குகளை சொல்கிறார்கள்...இது சாத்தியமா ?!! எந்த ஊரில் , எந்த தெருவில் என்று விவரமாக கூறினால் நல்லது. நடுவதுடன் நிறுத்தி கொள்ளாமல் தொடர்ந்து அதை பாராமரிப்பது தான் மிக முக்கியம்...மரம் நடுவது என்பது வியாபாரம் அல்ல !! விளம்பரத்துக்காக மரம் நடுபவர்கள் தாங்கள் நட்ட மரங்களை தொடர்ந்து கண் காணிக்கிறார்களா என தெரியவில்லை. தற்போது வி.ஐ.பி கள் ஒரு கன்றை நடுவதை போன்று புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதுடன் அவர்களின் சமூக கடமை நிறைவேறி விட்டதாக நிறைவு கொண்டுவிடுகிறார்கள். இப்படி அல்லாமல் முழுமையாக மரம் நடுவதை செயல்படுத்த வேண்டும்...

அரசின்  வீண் ஜம்பங்கள் !!

"வனங்கள்: உங்கள் சேவையில் இயற்கை' என்ற தலைப்பில் உலக சுற்றுச் சூழல் தினத்தை கடைப்பிடிக்க ஐ.நா. சபை கேட்டுக் கொண்டுள்ளது. இதன்படி, பூமியின் சுற்றுச்சூழலைக் காப்பதில் வனங்களின் பங்கு, குறிப்பாக இந்திய வனங்களின் பங்கு குறித்து உலகம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடுசெய்யப்படும். - செய்தி 

 எந்த  வித விளம்பரமும் இல்லாமல் 30 வருடங்களாக 1360 ஏக்கர் பரப்பளவில் ஒரு காட்டையே உருவாக்கிய மாமனிதரை இன்று நினைவுகூர்வது ஏற்புடையதாக இருக்கும்...இவரை உலகிற்கு அறிமுகபடுத்த வேண்டியது இந்திய அரசின் கடமை. அதை செய்ய தவறிய அரசு தான் இப்படி சொல்கிறது......

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் " பூமியின் சுற்றுச்சூழலை காப்பதில் இந்தியா முக்கிய பங்காற்றி வருவதாகவும், பொருளாதார வளர்ச்சி- சுற்றுச்சூழல் பாதுகாப்பு விவகாரத்தில் சமநிலையை இந்தியா கடைப்பிடித்து வருகிறது"

இன்னும்  எத்தனை காலத்திற்கு இது போன்ற பச்சை பொய்களை நம் அரசியல்வாதிகள் கூறி கொண்டிருப்பார்கள் ???!! கேவலம் !!

சுற்றுச்சூழலின் எதிரி பிளாஸ்டிக் !!

2009 ஆம் ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது.வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வருபவர்களால் தான் பிளாஸ்டிக் குப்பைகள் சேருகின்றன. அதனையும் உடனுக்கு உடன் அகற்றி விடுகிறார்கள். ஊரின் நுழைவாயிலிலேயே இங்கே 'பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது' என்ற போர்ட் வைக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு எச்சரிக்கையாக இது இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்ட மக்களின் ஒத்துழைப்பை பெற்று சிறப்பாக முழுமையாக செயல்படுத்த பட்டு வருகிறது பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டம் !!

ஜூன் முதல் தேதியில் இருந்து திருநெல்வேலியில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பே இத்திட்டம் நடைமுறைக்கு வந்தாலும்,அவ்வளவாக கவனிக்க படவில்லை. ஆனால் தற்போது மேயர் அவர்களின் சிறப்பான அக்கறை, ஆர்வத்தினால் முழுமையாக செயல்படுத்த படும் என்று நம்புகிறோம்...! அரசு மட்டும் திட்டங்களை போடும் ஆனால் அதை கடைபிடிக்க வேண்டியது மக்களின் வேலை. 500 ஆண்டுகள் ஆனாலும் மண்ணில் மக்கமுடியாத பிளாஸ்டிக் பொருட்களை வாங்காமல் தவிருங்கள்.

கூவமாகும் தாமிரபரணி போன்ற அனைத்து நதிகளையும் சுத்தபடுத்த கடுமையான தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்...!!


நமது கடமையும் கூட

சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு என்பது ஏசி அறைக்குள் மீடியா மைக்குகள் சூழ கோட் போட்ட பெரிய மனிதர்கள் மட்டும் பேசி விவாதிக்கும் விஷயம் அல்ல...
பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த ஒரு நல்லதும் நடைபெறாது...இது நமது மண்...நம் பூமி...இதனை காக்கவேண்டியது நம் கடமை...

நம்மால் இயன்றவரை மரங்களை வெட்டாமல், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, நதியில் கழிவுகளை/குப்பைகளை போடாமல், மரங்களை நட்டு வளர்த்து, இயற்கை விவசாயத்தை மேற்கொள்வோம்...

அடுத்த தலைமுறைக்கு நல்லதை மட்டும் விட்டு செல்வோம்...!!


அனைவருக்கும் பசுமைவிடியல் நண்பர்களின் சார்பில் சுற்றுச்சூழல் தின வாழ்த்துக்கள்...!! 
 
source - பசுமை விடியல் 

படங்கள்  - நன்றி கூகுள்

வெள்ளி, ஜூன் 1

விவாதம் விவாகரத்தில் முடியும்...?! தாம்பத்தியம் - பாகம் 28

அன்பு நட்புகளே !

விடுமுறைக்கு பின் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்கிறேன்...தாம்பத்தியம் தொடரின் இந்த பாகத்தில் தம்பதிகளின் சாதாரண விவாதங்கள் கூட பெரியப்  பிரச்சனைக்கு வழிவகுத்துவிடும் என்பதை உணர்த்த எனக்கு தெரிந்தவரை எழுதி இருக்கிறேன்...படித்துவிட்டு நிறை குறைகளை சொல்லுங்கள்...தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.

* * *

கணவன் மனைவிக்குள் எந்த  பிரச்சனை என்றாலும் அது வீட்டை விட்டு வெளியேப்  போகக்கூடாது...'நாலு சுவத்துக்குள்ளத்தான் இருக்கணும் துன்பங்களையும் வேதனைகளையும் மனதுக்குள் போட்டுப்  புதைச்சுக்கோ' என்று பெண்ணுக்கும், 'எல்லாத்தையும் மென்னு முழுங்க பழகிக்கோ' என்று ஆணுக்கும் அறிவுரைச்  சொன்ன காலங்கள் மலையேறிப்  போய் லேட்டஸ்டா "சரிப்பட்டு வரலைனா டைவர்ஸ் பண்ணிடு" என்ற அட்வைஸ்கள் அதிகம் கேட்கின்றன.
 

விவாகரத்துக்கு இப்போதெல்லாம் நீண்ட நெடிய காரணங்கள் தேவையில்லை...
 
 ஒரு சில வார்த்தைகள் போதும்...!!

கணவன் மனைவி இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் மிக மிக முக்கியம். பேச்சு பரிமாற்றங்கள் சரியான விதத்தில் அமையாவிட்டால் பிரிவிற்கு இதுவே அடிப்படை காரணமாகி விடுகிறது. வெறுப்பாக, எரிச்சலுடன் எடுத்தெறிந்து பேசுவது, துணை பேசுவதில் இருக்கும் அர்த்தத்தை சரியாகப்  புரிந்துக்கொள்ளாமல் பேசுவது, ஈகோவைக்  காயப்படுத்துவது மாதிரி பேசுவது போன்றவை. கையாளுவதில் கவனம் இல்லையென்றால் ஆபத்தில் கொண்டுப்  போய் விட்டுவிடும். இன்றைய அவசர யுகத்தில் தம்பதியினர் பரிமாறிக்  கொள்ளும் உரையாடல்களும் sms அளவில் சுருங்கி விட்டன. பேசப்படுவது ஒரு சில வார்த்தைகள் என்கிற நிலையில் அதையும் கவனமின்றி உதிர்த்துவிட்டால் தொலைந்தது இல்லறம் !!

ஒருவரின் குணம், விருப்பு, வெறுப்பு, சந்தோசம், கோபம் எல்லாவற்றையும் வெளிப்படுத்துவது பேச்சுக்கள் தானே?

உரையாடல்களின் போது...

=>  தம்பதிகள் என்று இல்லை. காதலர்கள் இருவருக்கான உரையாடலில் ஒருவர் மற்றொருவரிடம் "ஏன் டல்லா இருக்கிற" என விசாரிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு இவர் காரணத்தை சொல்லி விட்டால் ' ஓ ! அப்படியா, சரி சரி கவலைப்படாத, சரியாய் போய்டும்' என்று ஆறுதல் கூறுவதுடன் மேட்டர் ஓவர். மாறாக 'ஒண்ணுமில்ல' என்று பதில் வந்தால் உடனே உஷாராகிவிட வேண்டும். ஆமாம் இனிதான் வார்த்தையை கவனமா கையாளனும் !! ஒண்ணுமில்ல என்றால், "ஏதோ இருக்கிறது அதை என்னவென்றுக்  கேட்கமாட்டியா, மனதில் இருப்பதை உன்னிடம் கொட்டி விட்டால் நான் சரியாகி விடுவேன்" என்ற ஏக்கம் ஆவலுடன் ஒளிந்திருப்பதை புரிந்துக் கொண்டாக வேண்டும்.  (இந்த 'ஒண்ணுமில்ல' வார்த்தையை சொல்வது அதிகமாக  பெண்கள் )

இந்த நிலைமை புரியாம ஏதோ பர்சனல் பிராப்ளம் போலனு விட்டுவிட்டால்  போச்சு. கதை கந்தலாகிவிடும். அந்த ஏக்கம் பொறுத்துப்  பொறுத்துப்  பார்த்து முடிவில் விரக்தியில் போய் விழுந்து விடும். இதனால் பெரிய சிக்கல்கள் அப்போது உடனடியாக வர வாய்ப்பு இல்லை என்றாலும் பல விரக்திகள் ஒன்று சேர்ந்தால்...?! யோசிங்க...!

=> உரையாடல் ஒரு கட்டத்தில் சண்டையின் தொடக்கம் போல தெரிஞ்சா  எதுக்கு வம்புனு   'சரி உன் இஷ்டம்' என்று கூறி ஒதுங்கி விடுவது  அல்லது ஒன்றும் பேசாமல் மௌனமாகி விடுவது. இது இரண்டுமே தவிர்க்கப்பட வேண்டும். இது துணையின் மீதான அக்கறையின்மையை காட்டும்.  அமைதியாகப்   போய்விட்டால் அவர்களை மதிப்பது போலாகும் என்பது எல்லாம் பழைய கதை...இப்போது அப்படியே தலைகீழ், சைலென்ட்டாக  இருந்தால்  ' மதிக்கவில்லை' என்று பொருள்.

=> சிலரது வீடுகளில் பேச்சு சூடுப் பிடிக்கத் தொடங்கியதும் உடனே சட்டையை மாட்டிகொண்டு வெளியே நடையைக்   கட்டிவிடுவார்கள் ஆண்கள்...

ரிலாக்ஸ் பண்ண, சிக்கலைத்  தவிர்க்க வெளியேறுவது  உங்கள் உடலுக்கும் மனதுக்கும் நல்லது. ஆனால் அங்கே வீட்டில்  மனதிற்குள்  புழுங்கிக் கொண்டிருக்கும் மனைவியின் மனநிலை !? அதுவும் தவிர எவ்வளவு நேரம் தான் பிரச்னைக்கு பயந்து வெளியில் இருப்பீர்கள், மறுபடி வீட்டிற்குள் வந்து தானே ஆக வேண்டும் அப்போது எவ்வாறு மனைவியின்  முகத்தை எதிர்கொள்வீர்கள்...அசட்டுச் சிரிப்புடனா? முறைத்துக்கொண்டா?  இரண்டையும் அலட்சியப்படுத்தி விட்டு தன்னை(மட்டும்) பற்றிய  சிந்தனைக்குள் விழுந்துக்  கொண்டிருப்பாள் மனைவி.

'நான் தனியாத்  தவிச்சிப்  புலம்பிட்டு இருக்கிறப்போ நீ கண்டுக்காம வெளில போறியா, அப்படியே இரு, எனக்கும் ஒரு காலம் வரும்' என்பதாக இருந்து விட்டால் அதன் பின் அக்கணவனின் நிலை !!? சண்டையிட சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி காத்திருக்கும் மனைவி , பிரச்சனை தான் முடிந்து விட்டதே என சகஜமான நிலையில் இருக்கும் கணவன்!! வசமாக ஒரு சந்தர்ப்பத்தில் அகப்பட்டுக்கொண்டால் என்னாகும் கணவன் நிலைமை...யோசிங்க...!

=> சரிக்கு சரி மல்லு கட்டும் சண்டை கோழிகள் சிலர். சின்னச் சண்டை வந்தாலும் போதும் எடுத்ததுமே உச்சஸ்தாயில் கத்துவது...'வெட்டுவேன், குத்துவேன், நீ ஒழிஞ்சாத் தான் நிம்மதி...' இந்த ரேஞ்சில் போகும் இவர்களது உரையாடல்...அடுத்த சில மணி நேரம்/சில நாள் கழித்து ஒன்றுமே நடக்காத மாதிரி சகஜமாகி விடுவார்கள். இரண்டு நிலையில் எது உண்மை... சண்டை போட்டு கத்தியது உண்மை என்றால் அடுத்துள்ள சமாதானம்? விட்டுக் கொடுத்தலா? விட்டுக்கொடுத்தல் என்றால் அது ஏன் சண்டையின் ஆரம்பத்தில் இல்லை. தெருச்சண்டை ரேஞ்சுக்கு இறங்கி சண்டை போட்டாச்சு, அப்புறம் விட்டுக் கொடுக்கிறாங்களாம்...என்ன லாஜிக் இது ?

சண்டையின் போது ஏற்படும் மன அழுத்தம், மன உளைச்சல் ! அதன் விளைவு , எங்கேப்  போய் முடியும் யோசிங்க...!

பழி வாங்கும் மனோபாவம்

நடந்த பிரச்சனையில் ஒருவர் வென்றதைப்  போன்று இருந்தால், அதாவது ஒருவரின் பேச்சுடன் அப்பேச்சு முடிவுக்கு(?) வந்தது என்றால் தனக்கு அடுத்து எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என பழி வாங்க காத்திருக்கும் தம்பதிகள் உண்டு. இது மிகவும் ஆபத்தான ஒன்று. பழிவாங்குவது என்பது அடுத்ததாக எவ்வாறு எங்கே செல்லும் என்று சொல்ல முடியாது...தற்போது இது போன்ற மனநிலை அதிகரித்திருக்கிறது என்பது கசப்பாக இருந்தாலும் உண்மை !!

ஈகோ !
(நான் என்னும் முனைப்பு)

"நம்மை பற்றிய நினைப்பும் உணர்வுகளும் தலைத்தூக்கும் வரையில் தான் நமது செயல் ஒழுங்காக இருக்கும்...வாழ்க்கையும் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும். ஆனால் ஈகோவானது மற்றவர்களுடன் ஒப்பிடப்பட்டு உயர்வு மனப்பான்மையாக மாறுவது தான் தவறு. இது தான் தன்னுணர்வு அகம்பாவமாக மாறும்  நிலை" என்கிறார் சிக்மண்ட் பிராய்ட்

தம்பதிக்குள் நீயா நானா என்கிற ஈகோவுக்கு இடமே தரக்கூடாது அன்பான உறவை ஈகோ கொத்திக்  கிழித்து விடும். பெரும்பாலும் இது தலைத்  தூக்கினால் எல்லாவற்றுக்கும் விவாதம் தொடங்கி விடும். இருவரில் ஒருவர் வாய் மூடும் வரை விவாதம்  நடந்துக்  கொண்டே இருக்கும். அதே சமயம் தற்காலிகமாக துணையின் அடக்கி வைக்கப் படும் உணர்ச்சிகள் எந்த நேரத்திலும் பெரிய பிரச்சனையாக வெடிக்கலாம்...

பெண்கள்

பொதுவாகச்  சொல்வாங்க ஆண்களுக்குதான் 'தான்' என்கிற ஈகோ அதிகம் இருக்கும் என்று... அப்படியல்ல பெண்களிடமும் உண்டு.ஆணின் ஈகோ பெண்ணை மட்டும் தாக்கும், ஆனால் பெண்களின் ஈகோ மொத்த குடும்பத்தையும் பாதிக்கும். உன்னைவிட 'நான் எதில் குறைந்துவிட்டேன் நானும் உன் அளவு படித்திருக்கிறேன், வேலை பார்க்கிறேன் ' இந்த எண்ணம் விவாதத்தின் போது விஸ்வரூபம் எடுத்து ஈகோ பூதாகரமாக வெளிப் படுகிறது.


ஆண்களை பொருத்தவரை அவர்கள் விவாதிப்பதை  அவ்வளவாக விரும்புவதில்லை. சில வார்த்தைகளை வேகமாக உச்சரித்து விட்டு அமைதியாகி விடுகிறார்கள், ஆனால் ஒரு சில பெண்கள் அத்தனைக்கும் தனித் தனி அர்த்தம் கண்டுப்பிடித்து வாதத்தை நீட்டித்துக் கொண்டேச்  செல்வார்கள்...வாதத்திற்கு சளைத்தவர்களில்லை பெண்கள் ! இத்தகைய பெண்களை ஆண்கள் விரும்புவதில்லை...இதைப்  புரிந்துகொண்டு  பெண்கள் குடும்பத்தைக்  கொண்டுச்  செல்லவேண்டும்....விவாதத்தில்  ஜெயிப்பது  முக்கியமில்லை... உறவில் ஜெயிப்பதே முக்கியம் ...!!

ச்சீ போடா,  முட்டாள், இடியட், ராஸ்கல் இதை தனிமையான நேரத்தில் சொன்னால்  இனிமையாக   இருக்கும், அதையே சண்டை நேரத்தில் கோபமாகச்  சொன்னால்... ?!!

பல விவாதங்கள் விவாகரத்தில் போய்த்தான் முடிந்திருக்கின்றன என்பதை மனதில் வைத்துக்  கொண்டு, பேச்சில் மிகுந்த கவனம் தேவை...'ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்' என்று சொல்வாங்க...எப்படிப்பட்டச்  சொல்லை வெளிப்படுத்த வேண்டும் என்பது உங்க சாய்ஸ் !!

பின் குறிப்பு-

இப்படியெல்லாம்  கூட நடந்துக்  கொள்வார்களா என அவரவர் வீட்டுச்  சூழலை ஒற்றுமைப்படுத்தி வினா எழுகிறதா ? பிரச்னையை ஏந்திக் கொண்டு என்னிடம் வந்தவர்களை வைத்துத்தான் தாம்பத்தியம் பதிவு எழுதுகிறேன்...தொடரைத்  தொடர்ந்து வாசிக்கிறவர்களுக்கு இது தெரியும். தெரியாதவர்களுக்காக இந்த சிறு  விளக்கம். நன்றி.

தொடர்ந்து பேசுகிறேன்...உங்களின் மனதோடு  மட்டும்...

பிரியங்களுடன்
கௌசல்யா

புதன், மே 2

திருமண விழாவில் பசுமை விடியல்...!

உணவு உலகம் திரு சங்கரலிங்கம் அவர்கள் மகளின் திருமணம் கடந்த புதன் அன்று 25/04/2012  திருநெல்வேலியில் வைத்து நடைபெற்றது. அன்று வருகை தருபவர்களுக்கு எங்கள் தொண்டு நிறுவனம் சார்பில் இலவசமாக மரகன்றுகளை வழங்கலாம் என முடிவு செய்தோம்.

'ஈஸ்ட் தொண்டு' நிறுவனத்தின் கீழ் இயங்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கமான பசுமை விடியல் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது செய்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதில் ஒன்றாக சங்கரலிங்கம் அண்ணன் வீட்டு திருமணத்தை பயன்படுத்திக்கொள்ள கேட்டதும் அண்ணன் சந்தோசமாக அனுமதி கொடுத்தார்.



மரகன்றுகளை வாங்க பலரை அணுகினேன், முக்கியமாக நமது அரசின் வனத்துறை ! ஆனால் அவர்கள் கூறிய சட்ட திட்டங்கள் எனக்கு மரகன்றுகள் இலவசமாக கிடைப்பதற்கு தடையாக இருந்தது. பலவாறு வேண்டியும் ஏமாற்றமே மிஞ்சியது. அதற்கு அவர்கள் கூறிய காரணங்கள்: "கன்றுகளை பெறுபவர்கள் முறையாக பராமரிக்கிறார்களா என நன்கு தெரிய கூடிய நிலையில் தான் அரசு இலவசமாக கொடுக்கும், இப்படி தனித் தனியாக கொடுத்தால் நாங்கள் எவ்வாறு கணக்கு எடுக்க முடியும், ஆயிரம் பேரின் முகவரியும் கொடுக்க முடியுமா?" என கேட்டனர்.

இதில் இப்படி ஒரு சிக்கலா என மிக வருத்தத்துடன் நாட்கள் செல்ல இறுதியாக உதவி செய்ய கேட்டு சங்கரலிங்கம் அண்ணனை சரண் அடைந்தேன். பரபரப்பான திருமண வேலைக்கு மத்தியிலும் அண்ணன் அவரது நண்பர் திரு.முத்துக்குமார் அவர்களிடம் தொடர்பு கொண்டு எனக்கு தேவையானவற்றை செய்யச் சொன்னார். 

அவரின் உதவியால் குற்றாலத்தில் இருந்து குறைந்த விலைக்கு மரக் கன்றுகள் கிடைத்தன.

எனது ஆதங்கம் என்னனா 'எங்கும் பசுமை, எதிலும் பசுமை' என சூளுரைக்கும் அரசு எங்களை போன்று சேவைகள் செய்ய முன்வருபவர்களுக்கு அந்த சட்டம், இந்த சட்டம் என சுட்டி காட்டிக்கொண்டு இராமல் தாராளமாக உதவினால் என்ன ?! விரும்பி கன்றுகளை வாங்கிச் செல்பவர்கள் அதனை எப்படி வீணாக்குவார்கள்...? நட்டு பராமரிக்கவே செய்வார்கள் என்பதை இவர்கள் ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். 

திருமணத்தன்று...

பெங்களூரில் இருந்து வந்திருந்த பிரபுவும் நானும் கன்றுகள் வழங்க வேண்டிய ஏற்பாடுகளை செய்தோம். உதவிக்கு அழைத்ததும் மறுக்காமல் வந்தான் நெல்லையை சேர்ந்த சகோதரன் சிராஜ். கன்றுகளுடன் பையினுள் சிறு குறிப்பு எழுதப்பட்ட துண்டு பிரசுரம் வைக்கும் யோசனையை எங்களிடம் கூறியது எறும்பு ராஜகோபால் தான். முன் தினம் இரவில் எல்லோருமாக அமர்ந்து பேசிகொண்டிருந்த போது "உங்களின் நோக்கம் என்ன ? நீங்க யார் ? என்பதை பற்றிய சிறு விளக்க குறிப்பு இருந்தால் நன்றாக இருக்கும்" என்றார். நல்ல யோசனையாக இருந்தது ஆனால் அவர் சொல்லும் போது நேரம் 8  மணி, பின் வேகவேகமாக எழுதி பிரபு + சிராஜ் இருவரிடம் கொடுத்து பிரிண்ட் பண்ண கொட்டும் மழையில் அனுப்பி வைத்தேன்...காலையில் வந்து சேர்ந்தது கட் செய்யபடாமல்...கட் பண்ண கத்தி தேட, சிசர் தேட என கொஞ்ச நேரம் அல்லாடி, சங்கரலிங்கம் அண்ணாவின் நண்பர் வந்தார் உதவிக்கு...!! மக்கள் வர தொடங்கவும் நம் பதிவர்கள் வந்தார்கள் உதவிக்கு, ஆளுக்கு ஒரு கன்றை எடுத்து பையில் வைத்து அரேஞ் பண்ணினார்கள்.(இதை ஏன் விரிவா சொல்றேனா, பலரின் ஒத்துழைப்பால் மட்டுமே இந்த சேவை சாத்தியப்பட்டது  .



திருமணம் நடைபெறும் ஹாலில் திரு. சிதம்பர பாண்டியன் சார் மரகன்றுகள் விநியோகிக்க இருப்பதை பற்றியும், வீட்டில் வைக்க இடவசதி இருப்பவர்கள் மட்டும் இந்த இளந்தளிர்களை பெற்று செல்ல வேண்டுமாறு அறிவித்தார்.அவருக்கு என் நன்றிகள்.

அங்கே நடந்தவற்றில்... 

மனம் கவர்ந்த சில சந்தோஷத் துளிகள் 

* மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் லைபிரேரியன் திருமதி.திருமகள் விழிகள் விரிய ஆர்வமாக பசுமை விடியல் பற்றிய அனைத்தையும் கேட்டறிந்தார்.தனக்கும் சுற்றுச்சூழல் குறித்தான விசயங்களில் ஆர்வம் இருப்பதாகவும், இனி பசுமைவிடியல் மேற்கொள்ள போகும் அத்தனை சேவையிலும் அவரை அழைக்க வேண்டுமென செல்பேசி எண்ணை கொடுத்தார். "உங்கள் கல்லூரியில் மரம் நடுவதை நாங்கள் செய்ய ஆர்வமாக இருக்கிறோம், அனுமதி கிடைக்குமா?' என்றேன், 'நேரில் வாருங்கள், முயற்சி செய்வோம்' என்றார். நமக்கு இது போதாதா, அடுத்த வாரம் போய்ட வேண்டியதுதான்.

* திருநெல்வேலி மாநகராட்சி மேயர் திருமதி. விஜிலா சத்யானந்த் அவர்கள் மணமக்களை வாழ்த்திவிட்டு மாடியில் இருந்து கீழிறங்கி எங்களை கடக்க முயன்றவர் திரும்பி, 'என்னது இங்க பச்சை பச்சையா இருக்கு' என சிரித்து கொண்டே பார்த்தார், உடனே நான் 'மேடம் ஈஸ்ட் டிரஸ்ட் ஞாபகம் இருக்கா?' என்றதும் (போலியோ முகாமில் எங்கள் நிறுவனம் கலந்து கொண்டு பணியாற்றியது, அப்போது பேசி இருக்கிறோம்) அவரும் அருகில் வந்து 'ஓ! நீங்களா' என்று ஆச்சர்யபட்டு துணிப்பையை எடுத்து பார்த்து வெகுவாக பாராட்டினார்...'உங்களின் இந்த முயற்சி நன்றாக இருக்கிறது' என்றவர் தனக்கும் ஒரு மரக்கன்றை வேண்டும்' என வாங்கி கொண்டார்...உடன் வந்த மாநகராட்சி அதிகாரிகளையும் 'ஆளுக்கு ஒண்ணா வாங்கிகோங்க' என வாங்க வைத்து சந்தோசமாக கிளம்பினார்.



* மாநகராட்சி ஆணையாளர் திரு. மோகன் அவர்கள் விசாரித்து மகிழ்வுடன் மரக்கன்றை பிரபுவிடம் இருந்து பெற்று கொண்டார்.



* ஒரு பாட்டி பிரபுவிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டார், இப்படி கேட்கிறாரே இவர் எங்க வாங்க போறார் என நினைத்தேன், திரும்பி பார்த்தா அவரை சுற்றி நிறைய பேர், அத்தனை பேருக்கும் ஆளுக்கு ஒரு கன்றாக கொடுக்க சொல்லி அசத்திட்டார். பிரபுவுக்கு தான் பாட்டி அங்கிருந்து கிளம்பியது பிடிக்கவில்லை.



* நாகர்கோவிலை சேர்ந்த திரு.கதிரேசன் என்பவர் "விரைவில் தனது வீட்டில் ஒரு திருமணம் நடைபெற இருக்கிறது,அங்கேயும் இதுபோல் மரக்கன்றுகளை வழங்கவேண்டும் என விரும்புகிறேன்,ஏற்பாடு செய்து தருவீர்களா" என்றார். எதிர்பார்த்த ஒன்று கண்முன் காட்சியாகி நின்ற சந்தோசத்தில் ஒரு கணம் அப்படியே சிலையாகி விட்டேன். பிரபுவின் முகத்திலோ பெருமித புன்னகை !! பரஸ்பரம் செல்பேசி எண்களை பரிமாறிகொண்டேன்...

* மாலை நடந்த ரிசப்ஷனிலும் தொடர்ந்து கன்றுகளை வழங்கினோம்...அப்போது வந்திருந்த பதிவர் நண்பர் துபாய்ராஜா மிக ஆர்வமாக 15 கன்றுகளை வாங்கிகொண்டார். (மறுநாள் காலையில் பிரபுவிற்கு போன் செய்து கன்றுகளை நட்டுவிட்டேன் என மகிழ்வுடன் கூறினார்) இரு மாதங்கழித்து கன்றுகளின் வளர்ச்சியை போட்டோ எடுத்து அனுப்பு வதாகவும் கூறினார். அவரது ஆர்வத்திற்கு என் நன்றிகள்.

* யானைக்குட்டி ஞானேந்திரன் தான் வாங்கி சென்ற கன்றுக்கு 'பவி' என பெயரிட்டு நட்டதாக மகிழ்வுடன் தெரிவித்தார்.

*  மாலை வந்த பசுமை விடியலின் உறுப்பினர் பதிவர் கூடல் பாலா அவர்கள் , திருமண வரவேற்பு முடியும் வரை கூட இருந்து மரக்கன்றுகளை வழங்கினார்.

எந்த ஒரு செயலும் பலரால் அங்கீகரிக்க பட்டால் அதன் மகிழ்ச்சியே தனிதான்...அத்தகையதொரு மனநிலையில் நாங்கள் இருக்கிறோம்.  

வேலையில் மும்முரமாக இருந்த போது 'ஆன்டி நான்  வந்திருக்கிறேன்' என ஒரு இனிய குரல்...அட 'உலகச் சாதனை சிறுமி' சுட்டிப் பெண் விசாலினி ஆசையுடன் அவளை வேகமாய் இழுத்து கட்டிக் கொண்டேன். அவளோட அம்மா சந்தோசமா 'இப்ப மேலும் இரண்டு கோர்ஸ் முடிச்சிட்டாள்' என்றார்...! மேலும் இரண்டு சாதனைகள் !! அவங்க சொல்ல சொல்ல ஆச்சர்யபட்டுகொண்டே இருந்தேன்...(இன்னும் பல சிறப்பு தகவல்கள் கூறினார்கள் அதை இப்போது சொல்ல அனுமதி இல்லை, மற்றொரு சமயத்தில் தெரிவிக்கிறேன்)

நல்லவை நடந்தேறியது நன்றாகவே...

முதல் முறையாக செய்ய போகிறோம், சங்கரலிங்கம் அண்ணனின் உறவுகள் நண்பர்கள் , அதிகாரிகள் என பெரிய மனிதர்கள் பலர் வரக்கூடிய விழா, தவறாக ஏதும் நிகழ்ந்துவிட கூடாதே என உள்ளுக்குள் ஒரு எச்சரிக்கை மணி அடித்து கொண்டே இருந்தது, அதனால் தானோ என்னவோ வந்திருந்த பதிவுலக உறவுகளிடம் கூட நன்றாக பேச முடியவில்லை...

இணையம் கொடுத்த ஒரு நல்ல சகோதரன் பிரபு , இரண்டு நாளாக கூடவே சுறுசுறுப்பாக இயங்கினான்...அவனது ஒத்துழைப்பு இல்லையென்றால் என்னால் இந்த அளவிற்கு நன்றாக நடத்தி இருக்க முடியாது...அவனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். 

வாழ்நாளில் சிறப்பான  ஓர் நாள்  !!

சமுதாயத்தின் மேல் எல்லோருக்கும் அக்கறை இருந்தாலும் ஒரு சிலருக்கே சமூக பணி ஆற்ற சந்தர்ப்பம் அமைகிறது...அப்படி எனக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கொள்ளாவிட்டால் நான் வாழும் நாட்கள் அர்த்தமில்லாதவை...இந்த மனநிறைவான நிகழ்வும் என் ஒருத்தியால் மட்டும் நடந்துவிடவில்லை...எத்தனை பேர் பங்கு பெற்று இருக்கிறார்கள் என்று எண்ணிக்கையில் அளவிட முடியாது...அவர்களுக்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் சொல்லி முடித்துவிட மனம் ஒப்புக்கொள்ளவில்லை, தொடர்ந்து அத்தகையவர்கள் வாழும் இந்த சமூகத்திற்கு தொடர்ந்து சேவை புரிவதே  அவர்களுக்கு நான் சொல்லும் நன்றியாக இருக்கும்...!

திங்கள் அன்று (30/4/2012) திருநெல்வேலியில் இருக்கும் 'ஸ்ரீ ரமணா பாலிடெக்னிக் கல்லூரி' யில் பசுமைவிடியல் சார்பில் 160 மரகன்றுகள் வழங்கப்பட்டது. என்னுடன் பெங்களூரில் இருந்து வந்திருந்த Miss.சில்வியா (Project Executive,Pasumai Vidiyal) மற்றும் அவரின் பெற்றோர் சகிதம் சென்றோம். நல்லமுறையில் கல்லூரியின் நிறுவனர் எங்களை மகிழ்வுடன் வரவேற்று உபசரித்தார், அங்கிருக்கும் ஊழியர்கள் உதவியுடன் மரக்கன்றுகள் நடப்பட்டன.



உங்களின் வாழ்த்துக்கள் ஆசியையும் எங்களுடன் இருக்கிறது என முழுமையாக நம்புகிறேன்...அவை எங்கள் குழுவை வழி நடத்தும் இன்றும், என்றும், எந்நாளும்...
                                                                    
மீண்டும் சந்திக்கிறேன்...

பிரியங்களுடன்
கௌசல்யா. 


வியாழன், ஏப்ரல் 19

துப்பு(பி) கெட்ட மனிதர்களே...!!

ஆறு மாதத்தில் மும்பை மாநகராட்சி பெற்ற வருவாய் 2.24 கோடி ரூபாய் !!எப்படி இந்த வருமானம் கிடைத்தது என தெரிந்தால் மற்ற மாநகராட்சியும் முயற்சி செய்யலாம். ஆமாம் எப்படி கிடைத்தது ?! எல்லாம் மும்பை மக்களின் கைங்கரியம் தான், இல்லை இல்லை வாய்(?) சாமார்த்தியம் தான்...!!? விசயம் ஒன்னும் பெரிசா இல்ல சின்னது தான், முடிஞ்ச வரை கண்ட இடத்துல துப்பி வைக்கணும், இதை மக்கள் ஒழுங்கா கடை பிடிச்சதால மாநகராட்சிக்கு வருமானம்...!! 

எந்த அளவு துப்பினாங்களோ அந்த அளவுக்கு வருமானம்தான். அப்படி மாஞ்சி மாஞ்சி துப்பிய மக்களின்  எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா 1 லட்சத்து 10 ஆயிரம் !! பொது இடத்தில் எச்சில் துப்பியதற்காக தலா 200 அபராதம் வாங்கி சேர்த்த பணம் ! இந்த தப்புக்காக இந்தளவு வருமானம் பார்க்க முடியுங்கிறது மக்களாகிய நமக்கு பெருமையோ பெருமை தான். நாடு பொருளாதாரத்துல முன்னேறனும்னா எவ்வளவு வேண்டுமானாலும் துப்புங்க...துப்பிகிட்டே இருங்க...

ஆனா விளைவு...??! தொடர்ந்து படிங்க...

தேசிய பழக்கம் ?!


பாக்கு, பான் பீடா, பான் மசாலா, புகையிலை, வெற்றிலை என எதையாவது மென்றுகொண்டே இருப்பது நம்மவர்களின் பழக்கமாகி விட்டது. இவ்வாறு மெல்லுவதால் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகம்...அசை போடுறதோட மட்டுமில்லாம போற வர்ற இடத்திலெல்லாம் துப்பி அசிங்கப்படுத்துகிறார்கள். கூடவே எச்சில் மூலம் பரவும் கிருமிகள் காற்றில் கலந்து காச நோயை ஏற்படுத்துகிறது...??!

மும்பையில் மட்டும் கடந்த வருடம் 9,168 பேர் இருமல் மற்றும் எச்சில் மூலம்  
பரவும் காச நோயால் பலியாகி உள்ளனர். இதனால்தான் பொது இடங்களில் எச்சில் துப்ப அங்கு தடை விதிக்கப்பட்டது. அபராதம் 200 ரூபாய் பிடிபட்டவர்கள் 6 மாதத்தில் ஒரு லட்சம் பேர் என்றால் பல லட்சம் பேர் தப்பி இருப்பார்கள்...!? யார் யார் எங்கே துப்புகிறார்கள் என உற்று பார்த்துக்கொண்டே இருக்கும் மாநகராட்சி ஊழியர்கள் நிலை பரிதாபம். 'உன் அப்பன் போட்ட ரோடா , நான் அப்படிதான் துப்புவேன்' என விதண்டாவாதம் பண்ணும் இந்திய குடிமகன்களையும் சமாளித்தாக வேண்டும்.


மாநகராட்சிதான் இதில் கவனம் செலுத்தணும் என்றில்லை.அவரவருக்கு சுயகட்டுப்பாடு, ஒழுக்கம் அவசியம். அவ்வாறு துப்புவர்களில் படித்தவர்கள், படிக்காதவர்கள் , ஏழை, பணக்காரன் என்ற எந்த பேதமும் இல்லை...மிக ஒற்றுமையாக எல்லோரும் சேர்ந்தே துப்பி கெடுக்கிறார்கள்.

'பொது இடத்தில் துப்புவது இந்தியர்களின் குணாதிசயம்' சொல்வது யாரோ சாதாரண நபர் அல்ல, மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகளே !!

காச நோய் 

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 8 லட்சம் பேர் காச நோயால் பாதிக்கபடுகின்றனர். ஒரு நாளைக்கு 1000 பேரும்  ஆண்டுதோறும் 4 லட்சம் பேரும் இறக்கின்றனர். கடந்த மாதம் மார்ச் 24 ஆம் தேதி தேசிய உலக காசநோய் தினம் கொண்டாடினார்கள்...இதை கொண்டாட்டம் என்று சொல்லகூடாது 'காசநோயால் இறந்தவர்களை நினைவுகூர்ந்தார்கள்' என்பதே சரி. கொடிய நோயான இது விரைவில் பரவ கூடியது, முக்கியமாக காற்றின் மூலமாக...! காச நோய் பீடித்தவர்களின்  தும்மல், எச்சி, இருமல் மூலமாக பிறருக்கும் தொற்றி விடுகிறது.    

அறிகுறி 

இந்த  நோய் உள்ளவர்களுக்கு முதலில் பசியின்மை தோன்றும், பின் எடை குறைதல் மூச்சு திணறுதல், தொடர் இருமல், சளியுடன் ரத்தம் போன்றவை ஏற்படும்.    

யாருக்கெல்லாம் அதிக ஆபத்து?

80 % நுரையீரலை பாதிக்கிறது. இது போக எலும்பு, மூளை மற்றும் வயிறு போன்ற இடங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எய்ட்ஸ், சர்க்கரை நோய், கல்லீரல் நுரையீரல் பாதிக்கப்பட்டவர்கள், எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் போன்றவர்களைத் தாக்கிறது.



முக்கியமாக, ஒவ்வொரு நோயாளியும் 10 லிருந்து 15 பேருக்கு பரப்பி விடுகிறார்கள்...!!?

ஒருவருக்கு தொடர்ந்து இருமல் இருந்தால் உடனடியாக சளியை பரிசோதனைக்கு கொடுக்க வேண்டும். அதுவும் காலையில் தூங்கி எழுந்ததும் முதலில் வரும் சளியை கொடுத்தால் தான் காசநோய் இருக்கிறதா இல்லையா என கண்டுபிடிக்க முடியும். ஆரம்பத்தில் கண்டுபிடித்துவிட்டால் 6 மாதத்தில் முழுமையாக குணப்படுத்தலாம்.

காசநோய்க்கான மாத்திரைகள் அனைத்தும் அரசு மருத்துமனைகளில் இலவசமாக கொடுக்கப்படுகிறது. காச நோய் பாதிக்கப் பட்ட பெண்களை வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கிற கொடுமையும் நடக்கிறது. சாதாரணமாக எச்சில் துப்புவதின் மூலம் ஆண், பெண், குழந்தைகள் என்று பாகுபாடு இல்லாமல் பரவகூடிய இந்த நோயின் மீது கவனம் கொள்வது மிக அவசியம். 

தயவு செய்து பொது இடங்களில் எச்சில் துப்புவதை தவிருங்கள்...சுத்தம் சுகாதாரம் பற்றி சிறிதாவது அக்கறை கொள்ளுங்கள்...


வாழ பிறந்தவர்கள் நாம், நோயினால் வாட பிறந்தவர்கள் அல்ல...!! 


நோய் வரும் முன் காப்போம்...நோயற்ற வாழ்க்கை வாழ்வோம்...கண்ட இடத்தில் எச்சில் துப்புவதை நிறுத்துவோம்...குறைந்தபட்சம் நிறுத்த முயற்சியாவது செய்வோம்...!!

                                                                   * * * * *


படங்கள்+தகவல் - நன்றி கூகுள் 

புதன், ஏப்ரல் 11

'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...?! தாம்பத்தியம் - 27

முன் குறிப்பு

இதற்கு முந்தைய பாகம் வெளிவந்து 6 மாதம் ஆகிவிட்டது...!! பிற பதிவுகளை விட தாம்பத்தியம் தொடருக்கு அதிக காலம் எடுக்கிறேன் என்றாலும் இனி தொடர்ந்து எழுதுகிறேன். நம்புங்க !! 'ஏன் தாமதம்' என கேட்டு வரும் மெயில்கள் இனி குறையணும்...திட்டு வாங்கி முடியல :) உங்களின் பொறுமைக்கு என் நன்றிகள் ! இந்த பதிவைப்  படித்து கருத்துக்களைக்  கூறுங்கள்...அதன் மூலம் இன்னொரு பதிவுக்கு மேட்டர் கிடைக்கட்டும்... :)

                                                         ************


ஏன் அவசியம் ?!

'செக்ஸ்' பற்றி வெளிப்படையாகப்  பேசுவதும், விவாதிப்பதும் மிகத்  தவறான ஒன்றாகப்  பார்க்கபடுகிறது,  நமது கலாச்சாரத்தில் இதற்கு நாம் கொடுக்கும் இடம் கிட்டத்தட்ட கடைசி, அதே நேரம் உலகிற்கு காமசூத்திரம் கொடுத்ததும் நாம் தான் !! கஜூராகோ கோவில் சிற்பங்களாக கலை வடிவிலும் எழுத்து வடிவிலும் பேசிய நாம்தான், இதனை குழந்தைப்  பெறுவதற்காகவும், அற்ப சந்தோசத்துக்காக என்று ஒதுக்கியே வைத்து விட்டோம்.  இதன் மகத்துவம் புரிந்த முன்னோர்கள் சொல்வதை ஏற்காத நாம் சமீபத்திய அறிவியலாளர்கள் இதன் அவசியம் குறித்துச்  சொல்லும் போது அப்படியா என்று புருவத்தை உயர்த்துகிறோம். மன இறுக்கம், மனஅழுத்தம் குறைந்து ஆரோக்கியத்தை இதன் மூலம் அதிகரிக்கலாம் என்பது எவ்வளவு அருமை!

உடல் எடை போட்டுவிட்டது, சுகர், பிரசர், அப்படி இப்படின்னு பிரச்சனைகளில் இருந்து தம்பதிகள் நிறைவான உடலுறவின் மூலம் தள்ளி இருக்கலாம் என்பது ஆச்சர்யம் தானே ?! மன இறுக்கம் தளர்ந்தாலே உடல் தன்னால் அழகு பெற்றுவிடும்! சிலர் கேட்கலாம், ஒரு சிலர் கண்டபடி இதே நினைப்பாகவே அப்டி இப்டி அலையுறாங்களே அவங்க ரொம்பவே நல்லா இருப்பாங்களே என்று...?!! தன் துணையை தவிர பிறருடனான உறவுகளில் சுகம்,சந்தோசம் இருக்கலாம், ஆனால் மன இறுக்கம் குறைய நிச்சயம் வாய்ப்பேயில்லை மாறாக தவறுச்  செய்கிறோம்(!) என்கிற குற்ற உணர்ச்சியால் மன அழுத்தம் அதிகரிக்கவே செய்யும் !! இந்த சப்ஜெக்ட் இந்த பதிவுக்கு தேவையில்லை என்பதால் இப்போதைக்கு இவ்வளவு போதும் :)

பரிணாம வளர்ச்சி பற்றி சொல்லிய டார்வின்... 

"மூளை, மூட்டுகள், ஜனன உறுப்புகள் உட்பட எந்த ஒரு உறுப்பையும் பயன்படுத்தாமல் விட்டுவிட்டால் , அந்த உறுப்பானது நாளடைவில் அதன் செயல் திறனை இழப்பதோடு மட்டுமின்றி தன்னளவில் சுருங்கி இறுதியில் மறைந்தேப் போகும்"

உறுப்புகளுக்கு ஓரளவு மிதமான இயக்கம் இருந்தாக வேண்டியது அவசியம். முற்றிலும் தவிர்த்தால் உடல் ரீதியாக, மன ரீதியாகப்  பாதிப்புகள் வர வாய்ப்புகள் அதிகம். இதயத்தை மாரடைப்பு ஆபத்தில்  இருந்து பாதுகாப்பளிக்கிறது. வெளிநாடுகளில் இன்னும் ஆராய்ச்சிப்  பண்ணிக் கொண்டே இருக்கிறார்கள், இதன் பயன்கள் வேறு என்னவெல்லாம் இருக்கிறது என்று !!

ஆனால் இதைப்  பற்றி எல்லாம் அக்கறையில்லாமல் ஏனோ தானோவென சம்பிரதாயத்துக்காக சலிப்பாகச்  சென்றுக்  கொண்டிருக்கிறது இன்றைய இயந்திர உலகில் தம்பதியரின் தனிப்பட்ட அந்தரங்கம்.

பணம் , படிப்பு, அந்தஸ்து, கௌரவம் இவை போன்றவற்றுக்கு தற்போது முக்கியத்துவம் கொடுக்கும் இதே காலத்தில் தான் விவாகரத்துகளும் பெருகி வருகின்றன. விவகாரத்துக்  கோரும் தம்பதியரிடம் ஆழமாக விசாரித்து பார்த்தால் ஒன்று புரியும்,அவர்களுக்குள் நடக்கும் பல பிரச்சனைகளுக்கும் அடிப்படையாக, மூலகாரணமாக இருப்பது செக்ஸ் என்பது...!!

பெண்களின் மனோநிலை

உடலுறவைப்  பொறுத்தவரை தனது விருப்பத்தை நேரடியாக வெளிப்படுத்த மாட்டாள். ஒரு சில பெண்கள் சுற்றி வளைத்துப்  பேசிக்  குறிப்பால் உணர்த்தலாம்...கேலியும் கிண்டலுமாக வெளியிடலாம். அவரவர் கணவனின் எண்ணவோட்டங்களை பொறுத்து இது மாறுபடும். பொதுவாக நம் சமூகத்தில் ஆண்களுக்கு பெண்கள் செக்ஸ் பற்றி பேசினால் அவள் அனுபவரீதியாக எல்லாம் அறிந்தவளாக இருப்பாள் என்கிற எண்ணம் உண்டு.ஆண்கள் என்று இல்லை, பெண்ணே மற்றொரு பெண் இவ்விசயத்தை விவரித்துப்  பேசினால் அப்பெண் அனுபவப்பட்டவள் என்று முடிவு பண்ணிவிடுகிறாள்.  இதற்கு அஞ்சியே பல பெண்கள் உறவு குறித்து சந்தேகம் எதுவும் இருப்பினும் வாய் திறக்க மறுக்கிறார்கள். 

இந்த விஷயத்தைப்  பொறுத்தவரை கற்றுக்கொடுக்கும் இடத்தில் இருப்பதைத்  தான் ஆண் விரும்புகிறான். (எந்த காலமாக இருந்தாலும் !)

எனவே பொதுவாக பெண் இவ்விசயம் குறித்து அதிகம் வெளிப்படையாக பேசுவதையும், ஆணுக்கு முன்னரே செயல்படுவதையும் தவிர்த்தல் நல்லதே. ஒரு சிலர் தனது மனைவி செக்ஸ் பற்றி வெளிப்படையாக பேசுவதையும், விவாதிப்பதையும் விரும்புவார்கள். கணவன் மனமறிந்து பேசுவது முக்கியம்.

ஆண்களின் மனநிலை 




உறவை பற்றிய எண்ணம் தோன்றியதும் மனைவி உடனே உடன்பட்டே ஆகவேண்டும் என்பதே பெரும்பாலான கணவர்களின் எதிர்பார்ப்பு.அதற்கு முன் மனைவியின் உடலறிந்து, மனமறிந்து என்பதெல்லாம் இரண்டாம் பட்சமாகி விடுகிறது. பெண்களுக்கு மெதுவாகவே  உடல் கிளர்ந்தெழ தொடங்கும், ஆனால் ஆண் இதனைக்  கவனிப்பது இல்லை. தான் இயங்கி திருப்தி  அடைந்தால் போதும் பெண்ணுக்கு என்று தனியாக திருப்தி அடைதல் இல்லை   என முடிவு செய்துக்  கொள்கிறார்கள், அவளது உணர்வுகளுக்கும் வடிகால் தேவை என்பதை மறந்து...! 

பத்து வருடங்கள் கழிந்தப்  பின் 

தாம்பத்தியத்தில் அந்தரங்க உறவு என்பது மிக முக்கியம் என்றாலும் திருமணம் முடிந்த பத்து ஆண்டுகள் கழிந்த தம்பதியினரின் இது குறித்த விருப்பங்களில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆணின் விருப்பம் ஒரு விதமாகவும் பெண்ணின் விருப்பம் வேறு ஒன்றாகவும் இருக்கின்றன.

உதாரணமாக 

திருமணம் முடிந்த புதிதில் நகைச்சுவையாக பேசக்கூடிய கணவனை மிக விரும்புவாள்  மனைவி...ஆனால் பத்து வருடம் கழிந்த பின் அதே மனைவி கணவனின் நகைச்சுவை பேச்சை அவ்வளவாக ரசிப்பதில்லை. ஒரு காரணம் என்னவென்றால், நம்மிடம் பேசுவதைப்  போலத்தானே பிற பெண்களிடமும் பேசுவார், அது அவ்வளவு நல்லதில்லையே என்ற மனோபாவம் ஒரு காரணம், மற்றொன்று 'இருக்கிற சூழ்நிலைத்  தெரியாம அது என்ன எதுக்கெடுத்தாலும் தத்துபித்துனு உளறிட்டு ?!!' என்பது...

இது போல் முதல் பத்து வருடங்களில் பிடித்தவை எல்லாம், அடுத்து தொடரும் காலங்களில் பிடிக்காமல் வெறுப்பிற்கு இடமாகி விடுகின்றன...! அது போன்றே அந்தரங்க விசயத்திலும் மாற்றம் ஏற்படுகிறது, மற்றவை அவ்வளவாக பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது, ஆனால் உடலுறவு விஷயம் அப்படி அல்ல...இதில் தவறினால் சமயங்களில் குடும்பத்தில் மிகப்  பெரிய பாதிப்புகளையும், பிரிவுகளையும் ஏற்படுத்திவிடக் கூடும்.

அப்படி என்ன இதில் இருக்கிறது ? என்ன என்ன பாதிப்பு ஏற்படும் ? இது என்ன அவ்வளவு முக்கியமா ? இது போன்ற கேள்விகளுக்கான பதில்களைத்  தொடர்ந்துப்  பார்க்கலாம்.....

பெண்களின் விருப்பமின்மை ?! 

பகலில் மனைவிடம் எந்தவித அன்னியோனியமும்  இல்லாமல் இரவில்  மட்டும் தேடும் கணவனை எந்த மனைவியும் விரும்புவதில்லை. ஒருவேளை உறவிற்கு உடன்பட்டாலும் அதில் எவ்வித உணர்ச்சியும் இருக்காது 'என்னவும் செய்துவிட்டுப்  போ' என்கிற விரக்தி மட்டுமே இருக்கும்...இதே நிலை தொடர்ந்து நீடித்தால் உடல் உறுப்புகளில் கடினத்தன்மையும், வலியும் ஏற்படக் கூடும்.

பொதுவாக முப்பத்தைந்து அதற்கு மேல் வயதுள்ள பெண்களில் சிலருக்கு  உறவின் மேல் விருப்பமின்மை தோன்றும்...இதை சில நடவடிக்கைகளை வைத்து கணவர்கள் புரிந்துக் கொள்ளலாம்...

* இவர்களில் பலரும் கருத்தடை சாதனம் பொருத்தியோ, குடும்பக்  கட்டுப்பாடு ஆபரேஷன் செய்தவர்களாகவே இருப்பார்கள். இருந்தும் ஆணுறை அணியச்  செய்து உறவுக்  கொள்ளச் சொல்வார்கள்.

* உறுப்பில் வலி இல்லை என்றாலும் வலிக்கிறது, எரிச்சலாக இருக்கிறது என்பார்கள்.

* தலை வலி, வயிறு வலி போன்ற வெளியேத்  தெரியாத காரணங்கள்.

* தூக்கம் வருகிறது, பசங்க தூங்கல, டயர்டா இருக்கு...

நேரடியாக உறவு பிடிக்கவில்லை என்றுச்  சொல்லத்  தயங்குவார்கள். அப்படி சொல்லிவிட்டால் கணவன் தன்னை வெறுத்துவிடுவானோ என்கிற அச்சம் ஒரு காரணம் !!

கணவனின் புரிதலின்மை 

மனைவி உறவின் மேல் விருப்பம் இல்லை என்பது போல் காட்டிக்கொண்டால் அது போல் கோபம் வேறு எதிலும் ஒரு ஆணிற்கும் வராது. சாதாரண நேரத்தில் மனைவி மீது அன்பை வாரி பொழிபவர்களும், உறவுக்கு 'ரெட் சிக்னல்' என்றதும் எரிமலையாய் பொங்கிவிடுவார்கள்...எதற்காக மறுக்கிறாள், என்ன காரணம் என்று நிதானித்து யோசிக்கக்  கூடிய மனநிலை ஆண்களுக்கு அப்போது இருப்பதில்லை. உடனே நடந்தாகவேண்டும் என்று உறவைப்  பற்றிய ஒரு உந்துதல் மட்டுமே அவர்கள் மனதில் இருக்கும்.

உறவு நடக்காத பட்சத்தில் மனைவி மீது எரிந்து விழுவது, சம்பந்தம் இல்லாமல் திட்டுவது, ஒரு சிலர் ஒரு நிலையை தாண்டி போய் ' உனக்கு வேறு யாருடனோ தொடர்பு இருக்கிறது, அதுதான் என்னை நிராகரிக்கிற' என்று சிறிதும் யோசிக்காமல் நடத்தையில் சேறை வாரி இறைப்பார்கள்.

இதற்கு பிறகு மனைவிக்கு, கணவனின் மேல் இருக்கிற அன்பு மொத்தமாகக்  குறைந்து போகும் என்பதைத்  தவிர வேறு எந்த நல்ல விசயமும் நடக்க போவதில்லை.

உடல் உறவை தவிர்த்தல் என்பது இப்படி சந்தேகத்தில் வந்து முடிந்துவிடக்  கூடிய ஆபத்தும் இருக்கிறது !!?

இத்தகைய விஷயத்தை வெகு சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் கவனமாக கையாளுவது கணவன் மனைவி இருவருக்கும் நல்லது. 

ஒரு உண்மை தெரியுமா??

படுக்கை அறையில் ஆணை விட பெண்ணே அதிக இன்பத்தை பெறுகிறாள்...உடலுறவின் மூலம் அவர்களது ஈஸ்ட்ரோஜன் அதிகரிப்பதால் பெண், உறவை அதிகம் விரும்பவேச்  செய்வாள்...அப்படிப்பட்ட பெண் உறவை தவிர்க்கிறாள் என்றால், எதனால் என்றுப்  புரிந்துக்  கொள்வது ஒரு கணவனின் கடமை...அந்த காரணத்தை அறிந்து சரி செய்துக்  கொள்வது தொடரும் குடும்ப வாழ்க்கைக்கு மிக மிக முக்கியம்.

தொடர்ந்து பேசுகிறேன்...

உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா 

                                                                 * * * * *

படங்கள் - நன்றி கூகுள்

வியாழன், ஏப்ரல் 5

யார் இந்த மாமனிதர் ?! 'இந்தியாவின் பெருமை' ஜாதவ் பயேங் !!

தனி நபர் வளர்த்த காடு

உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது...எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துகொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?!!

கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்...!!

                                                           
                                              மாமனிதருக்கு...என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் !!


யார் இவர் ?

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை 'முலாய்' என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வர பட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால் தான் இந்நிலை என புரிந்து கொண்டபோது இவரது வயது 16 ! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில்  மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம்,முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்...ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார் .

1980 ஆம் ஆண்டில் அசாமில் உள்ள  ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் 'சமூககாடுகள் வளர்ப்பு' திட்டத்தின் படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும்  இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது, பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட இவர் மட்டும் மரகன்றுகளை பராமரித்து கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதனை அப்படியே மறந்துவிட்டனர், அந்த பக்கம் யாரும் எட்டி கூட பார்க்கவில்லை...!

மண்ணை வளப்படுத்த புது யுக்தி - எறும்பு 

200 ஹெக்டேர் பரப்பில் மூங்கில் மட்டும் வளர்த்து வந்த இவர் பிற மரங்களையும் வளர்க்க முயற்சி எடுத்துள்ளார்...ஆனால் மணல் அதற்கு ஏற்றதாக இல்லை என்பதால் தனது கிராமத்தில் இருந்து 'சிவப்பு எறும்பு'களை சேகரித்து எடுத்து வந்து மணல் திட்டில் விட்டு இருக்கிறார். இந்த எறும்புகள் இவரை பலமாக தாக்கியும் மனம் தளராமல் இருந்துள்ளார். இந்த எறும்புகள் மண்ணின் பண்பை நல்லதாக மாற்றக்கூடியவை என்கிறார்...வெகு விரையில் மண்  பயன்பாட்டுக்கு மாறியது. பிறகு அந்த இடம் முழுவதிலும் விதைகளை ஊன்றியும், பிற மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வந்துள்ளார்...இப்படி ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, 30 வருடங்கள் !!

                                        இவர்களுக்கு வானம் தொட்டுவிடும் தூரம் தானோ...?!!
      
இப்படி 2008 வருடம் வரை உலகில் யாருக்கும் தெரியாமல் ஒரு காடு பரப்பளவிலும், உயரத்திலும், அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது.

2008 ஆம் ஆண்டு தற்செயலாக 115 யானைகள் இந்த காட்டு பகுதிக்குள் புகுந்துவிட்டது. அதனை துரத்தி சென்ற வனத்துறையினர் இந்த காட்டை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருகின்றனர். அரசு பதிவேட்டில் இடம் பெறாத இந்த காடு இங்கே எப்படி சாத்தியம் என் வியந்திருக்கின்றனர். முலாய் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்து விஷயம் முழுவதும் அறிந்து மிக மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.

காடு வளர்ப்புக்காக வனத்துறையோ மாநில அரசோ எந்த உதவியும் செய்யாத போது யாரையும் எதிர்பார்க்காமல் தனது சமூக கடமை இது வென எண்ணி இத்தனை வருடங்களாக தனது மண்ணுக்காக உழைத்த இவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.

குடும்பம் 

மரங்களின் மேல் உள்ள அக்கறையினால் சொந்த ஊரை விட்டு இந்த காட்டுக்குள் சிறிய வீட்டை கட்டி தனது மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்ந்து  வருகிறார். வருமானத்திற்க்காக சில மாடுகளை வளர்த்து பாலை கறந்து விற்று குடும்ப செலவை பார்த்து கொள்கிறார்.

டீன் ஏஜ் பருவத்தில் தொடங்கியவர் தற்போது 50 வயதை நெருங்குகிறார். "இந்த காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபட தயார் " என்கிறார் இந்த தன்னலமற்ற மாமனிதர் !!

இவரது தன்னலமற்ற பணி இப்படி இருக்க தற்போது காட்டை பற்றி அறிந்த அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் உரிமை கொண்டாடவும், பாதுகாக்க பட்ட இயற்கை பகுதியாக அறிவிக்கவும் வரிசையில் காத்து இருக்கிறார்கள்.

மரங்கள் மட்டும் அல்ல

                                                 மூங்கிலிலை காடுகளே...!! 


தேக்கு , அகில், சந்தனம், கருங்காலி,ஆச்சா போன்ற மரங்களும், 300 ஹெக்டேர் பரப்பளவில் மூங்கில் காடுகளும் இருக்கின்றன. காட்டு விலங்குகளும் பறவைகளும் அதிக அளவில் இங்கே வாழ்ந்து வருகின்றன...!! 100 யானைகளுக்கு மேற்பட்டவை 6 மாதங்களுக்கு மேல் இங்கே வந்து தங்கி செல்கின்றன. பறவைகள் விலங்குகளின் சொர்க்கபுரி தான்  இந்த 'முலாய் காடுகள்' !! 

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருக்கிறது...இரு ஆண்டுகளுக்கு முன் மிக 'பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டாம் ராபர்ட்' இந்த காட்டிற்கு வந்து படப்பிடிப்பை நடத்திச் சென்றுள்ளார். 'ஆற்றின் நடுவே மணல் திட்டில் இவ்வளவு பெரிய காடு வளர்ந்திருப்பது அதிசயம்' என வியந்திருக்கிறார். 

இப்படி பட்ட ஒரு மனிதர் வெளிநாடுகளில் இருந்தால் இதற்குள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். தங்கள் நாட்டின் பெருமை என ஒரு பட்டமே கொடுத்து கௌரவித்து இருப்பார்கள்...ஆனால் இங்கோ பத்திரிகைகளில் கூட அவ்வளவாக செய்தி வெளியிட படவில்லை...இவரது புகைப்படத்தை மிகுந்த தேடுதலுக்கு பின் தற்போதுதான் கூகுளில் பார்க்கவே  முடிந்தது.


      கரை தொடும் நதி...பச்சை புடவை போர்த்திய மலை...பூலோக சுவர்க்கம் இதுவன்றோ !!

மரம் நடுவதையே ஒரு விழா அளவுக்கு பெரிது படுத்தி புகைபடத்திற்கு முகத்தை காட்டி பெருமைப்பட்டு கொள்ளும் சராசரி மனிதர் போல் அல்ல முலாய். எதையும் எதிர்பார்க்காமல் இந்த மண்ணிற்கு தான் செய்யும் கடமை என சாதாரணமாக கூறும் அவரை அறிந்துகொண்ட பிறகாவது நம் கடமை தனை உணர்ந்து நாம் வாழும் சமூகத்திற்கு நமது சிறிய பங்களிப்பை கொடுப்போம்.

உலக வெப்பமயமாதல் என அச்சப்பட்டு கொண்டு மட்டும் இருக்காமல் செயலிலும் இறங்க வேண்டிய தருணம் இது. ஒரு தனிமனிதரால் ஒரு காட்டையே உருவாக முடிகிறது என்றால் நாம் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு ஒரு மரமாவது ஏன் நட்டு வளர்க்க கூடாது. நகரங்களில் இருப்பவர்கள் இயன்றவரை மொட்டை மாடியில் தோட்டம் போட்டும், தொட்டிகளில் செடிகளை வளர்த்தும் குளிர்ச்சியாக வைத்து நமது சுற்றுச்சூழலை பாதுகாத்துக் கொள்ளலாம்...சிறிது முயன்றுதான் பாருங்களேன்...!!




                 இயற்கையை நேசிப்போம்...!! எங்கும் பசுமை செழிக்கட்டும்...!!


பின்குறிப்பு 

'மனிதருள் மாணிக்கம்' இவர்...! இவரது செயல் பலருக்கும் தெரியவேண்டும். மத்திய மாநில அரசுகள் இவருக்கு விருது கொடுத்து கௌரவிக்க வேண்டும்...என்பதே இங்கே எனது வேண்டுகோள்.

இவரை அறிவதன் மூலம் எல்லோருக்கும் சுற்றுச்சூழலின் மீதான ஒரு கவனமும், மரங்களை வளர்ப்பதன் மேல் ஒரு ஆர்வமும்  வரக்கூடும்...நண்பர்கள் விரும்பினால் தங்கள் தளங்களில் இவரை பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்...


இங்கே இடம்பெற்ற படங்கள் அனைத்தும் முலாய் காடுகளில் எடுக்கப்பட்டது !!



தகவல் -  The Times of India, இணையம் 
படங்கள் - நன்றி கூகுள்
                           

திங்கள், ஏப்ரல் 2

குருதட்சணை - 'மறுபடி பிறந்தேன்...!'



ஒவ்வொரு நாளும் நம்மை சுற்றி நிகழ்பவை பல படிப்பினைகளை கொடுக்கிறது, அதை உற்று கவனிப்பவர்கள் அதில் இருந்து தெளிவினை கற்றுக்கொள்கிறார்கள். தெருவில் எதிர்படும் ஒரு சாதாரண மனிதர் கூட நமது சிந்தனையை லேசாக தூண்டிவிடலாம்...அப்படி இருக்கும்போது நெருங்கி பழகக்கூடிய நண்பர்களில் ஒரு சிலர் நம் பாதையை செம்மை படுத்தலாம். தவறுகளை சுட்டிக்காட்டலாம், ஆலோசனைகளை கொடுக்கலாம், அவர் நம் வாழ்வை முன்னேற்ற உதவலாம். என்னவொன்று அது போன்றவர்களை இனங்கண்டு அவர்களுடன் நம்மை பிணைத்துக்கொண்டு விட வேண்டும். பின் நல்லவை அனைத்தும் தானாக நடைபெறும்.

ஒவ்வொருவருக்கும் யாராவது ஒருவர் வழிகாட்டியாக அமைவார்கள். குழந்தைகள் தங்கள் தந்தையை ஒரு ரோல் மாடலாகவும், இளைஞர்களில் ஒரு சிலர் திரைப்பட கதாநாயகர்கள், ஒரு வி ஐ பி, ஒரு தொழிலதிபர் போல ஆகவேண்டும் என எண்ணுவார்கள் !வெளி தோற்றத்திலும், வாழ்க்கையில் முன்னேறுவதற்கும் அவர்கள் மேற்கொண்ட வழிமுறைகளை இவர்கள் பின்பற்றலாம், அதன் படி நடக்கலாம்.

ஆனால் 'குரு' என்ற ஒருவர் இது போன்றவர் அல்ல, இதற்கு எல்லாம் மேலே !! குரு என்று ஒருவர் நமக்கு இருந்தால் அவர் நமது வெளித்தோற்றத்தை மட்டும் மாற்றுவதில்லை, நமது அகத்தையும் சிறப்பாக பரிமளிக்கச் செய்வார்.

தனக்கு 'இதுதான் வாய்க்கும், வேறு எதற்கும் தான் லாயக்கில்லை' என ஓட்டுக்குள் சுருங்கிய நத்தை போல வாழும் மக்களுக்கு விழிப்பை கொடுத்தால் நிச்சயம் சாதிப்பார்கள்...அதற்கு தேவை ஒரு குரு ! உண்மையில் 'குரு யார்' என்பதும் 'அவரை உணர்வது எப்படி' என்ற வித்தை நமக்கு தெரிந்துவிட்டால் எல்லோருமே சாதனையாளர்கள் தான். ஆனால் ஒரு சிலரின் வாழ்வில் குரு என்பவர் தானாக அமைந்துவிடுவார்...அப்படி தானாக அமைந்த நண்பர் ஒருவர் எனக்கு குருவான அற்புதம் நிகழ்ந்தது இதே பதிவுலகத்தில்...!!

குரு என்பவர் யார்?

சோர்ந்து இருக்கும் போது நம்மை உற்சாகபடுத்துவதும், அழும்போது கண்ணீரை துடைப்பதும் குரு வேலையல்ல...எடுத்ததுக்கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு துள்ளி குதித்து ஆர்ப்பரிப்பது, நிச்சயம் குருவின் வேலையாக இருக்காது...அதிகாரம் செலுத்துவதும், அடிமைபடுத்துவதும், தனது ஆளுமையை திணிப்பதும் குருவின் அடையாளம் அல்ல. 

குருவை வழிக்காட்டி என்று ஒற்றை வார்த்தையில் முடிக்கவும் எனக்கு விருப்பம் இல்ல...போகிறபோக்கில்  இதுதான் வழி, இந்த  விதத்தில்  பயணித்தால்  நன்று  என்று சொல்வதுடன்  வழிகாட்டியின்  கடமை  ஏறக்குறைய  முடிந்துவிடலாம். ஆனால் ஒவ்வொரு மனிதனுக்கும் மிக தேவை 'சுதந்திரம்'.

தன்னை சுற்றி பின்னப்பட்டிருக்கும் தேவையற்ற வலைகளை உடைத்து, வெளியே  வர வைக்க வேண்டியதே குருவின் பணி. அச்சுதந்திரத்தை கொடுப்பதே குருவின் விருப்பமாக இருக்கும். தனியாளாக உலகை எதிர்கொள்ளும் திடத்தை அச்சுதந்திரம் கொடுக்கும்...ஒருவேளைக்கான  உணவை கொடுத்து விடுவதுடன் முடிந்துவிடுவதில்லை, தொடர்ந்து உணவை பெறுவதற்குரிய செயலை/வேலையை ஏற்படுத்தி கொடுப்பதுதான் விழிப்புணர்வு...ஏறக்குறைய இத்தகைய விழிப்பு நிலையில் நம்மை வைத்திருப்பதும் தான் குருவின் வேலை. எல்லை கோடுகளை போட்டுக்கொண்டு அனாவசியமான கட்டுப்பாட்டிற்குள் அமிழ்ந்து கிடக்காமல் அக்கோடுகளை அழித்து வெளியில் கொண்டு வருபவரே குருவின் தகுதியை அடைகிறார்.

இப்படி பட்ட குருவின் இலக்கணங்களுக்கு அப்படியே பொருந்திபோனார் எனது நண்பர். குரு போல் நடந்து கொள்ளவேண்டும் என பிரயத்தனம் எதுவும் எடுத்து என்னிடம் அவர் பழகவும் இல்லை, அந்நிலையில் அவரை வைத்து நான் பேசவும் இல்லை ஆனால் இவை யாவும் இயல்பாய் நடந்தன. ஒரு குருவிற்குரிய தகுதி அவரிடம் இருக்கிறது...மழை வாங்கும் நிலமாக நான் இருக்கிறேன் அவ்வளவே !!

எனது குரு

'சிறகடித்து பற...உனது வானமாய் நான் இருக்கிறேன்' என உற்சாகம் கொடுத்து, அதுவரை எனக்கு புலப்படாமல் என்னுடனிருந்த சிறகுகளை எடுத்து எனக்கு  பூட்டி விட்டார். 'இந்த மனிதர்கள் தான் உலகம், இவர்களுக்கு பிடித்த மாதிரி, இவர்களுக்கு ஏற்றார் போல் தான் இனி வாழ்ந்தாக வேண்டும்' என்று என்னை சுற்றி போட்டு வைத்திருந்த கோடுகளை என்னை வைத்தே அழிக்க வைத்தார். 'உன்னை எதிர்ப்பார்த்து, அதோ நிற்கிறான் எளிய மனிதன் அவனிடம் செல், அவன் தேவை எது என கேட்டு நிறைவேற்றி வை' என எனக்குள் பேசும் குரல் நிச்சயமாக எனது குருவின் குரலாக இருக்கும்.

என்ன தவம் செய்தனை ?!

மனவுலகில் இருந்து புறவுலகிற்கு இழுத்து வந்த சக்தி ! மகா சக்தி...குரு !!

உடல் தொடர்பான, உணர்வு தொடர்பான, மனம் தொடர்பான உறவாக இல்லாமல் இவற்றை எல்லாம் தாண்டி அக நிலையில் பூத்த இந்த உறவு வேறு யாரும் தொடாத ஒரு பரிமாணத்தை தொட்டது. வெகு தொலைவில் இருந்தும் என்னுள் இயங்கி கொண்டிருக்கிறது, என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது.

எனது இலக்கு எது என அவர் நிர்ணயிக்கவில்லை, ஆனால் எனது இலக்கு எது என உணரச்செய்தார் !! ஒரு மனிதனாக இந்த சமூகத்திற்கு என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறாரோ அதை என் மூலம் நிறைவேற்ற குருவால் மட்டுமே முடிகிறது.

பாசாங்கான உலகில், ஒருவர் மேல் மற்றொருவருக்கு எழும் கோபத்தை உடனே வெளிப்படுத்துவதில் இருக்கிறது எங்கள் உறவின் உன்னதம் !! சிரித்து பேசிய நாட்களை விட சண்டையிட்டு மௌனம் சாதித்த நாட்கள் அதிகம். அந்த மௌனத்திலும் பாடம் கற்றுத்தருவது அவருக்கு மட்டுமே சாத்தியம்...!

சிறுவயது முதல் யார் பேச்சையும் கேட்டு நடக்க தயாராக இல்லாதவள் இப்போதும் மாறாமல் அப்படியே தான் இருக்கிறேன், ஆனால் இவர் பேச்சை கேட்காமலேயே நடந்து கொண்டிருக்கிறேன் அவர் சொல்லிய படி...!! என் மனதை சோலைவனமாக மாற்ற அவர் முயற்சிக்கவில்லை ஆனால் பாலைவனம் எது என்பதை உணர்த்தினார், அதை விட்டு ஒதுங்கி போகச் செய்தார்.

குரு என்ற பிம்பத்திற்கு அகங்காரம் இல்லை, அதிகாரம் செய்ய தெரியாது...சாதாரணமாக சொன்னாலே உடனே செய்து விட தூண்டும்.

என் தவறுகளின் காரணம் நான் மட்டுமே, ஆனால் என் நல்லவைகள் அனைத்திலும் சூட்சமமாய் என்றும் நிற்பது குருவானவர் தான் !!

யார் அவர்?!

யாருடன் இருந்தால் மிக வசதியாக உணர்கிறீர்களோ அவர் சரியான குரு அல்ல, யாருடைய அருகாமையில் நீங்கள் மிக அசௌகரியமாக உணர்ந்தாலும் அவரை விட்டு விலக முடியாமல் விரும்பி ஏற்கிறீர்களோ அவர் தான் உண்மையான குரு - சத்குரு

நிதர்சனம் !! ஆரம்பத்தில் நண்பராக தெரிந்த அவர் நாட்கள் செல்ல செல்ல எனக்குள் மாற்றங்களை விதைத்து, என் கட்டுகளை அறுத்தெறிய கூடிய குருவானார். இந்த அற்புதம் ஒரே நாளில் நிகழ்ந்துவிடவில்லை...பல பேச்சுக்கள், விவாதங்கள், கருத்துமோதல்கள்,கோபங்கள், சண்டைகள், மௌனங்கள் எல்லாம் நிகழ்ந்தேறின...அத்தனையிலும் வென்றதென்னவோ குரு தான்.

ஆண் பெண் என்ற பாகுபாடுகள் என்றும் எங்கள் மத்தியில் நினைவுக்கு வந்ததே இல்லை...அப்படி பிரித்து பேதம் பார்க்க ஏனோ எங்களுக்கு தோணவே இல்லை...நேரமும் இல்லை !!

வெறும் எழுத்து, மாற்றங்களை ஏற்படுத்துமா என்பதை அனுபவரீதியில் உணர முடிந்தது... இறுமாப்பை உடைத்து போட்டு ஒன்றுமில்லாமல் செய்யும் ஆற்றல் அவரது எழுத்திற்கு இருக்கிறது என்பது மிக ஆச்சர்யம். அவ்வாறே உடைத்தும் போட்டது.


இந்த பதிவுலகம் சகோதர உறவுகளை, நண்பர்களை கொடுத்திருக்கிறது...கூடவே மிகச்சிறந்த ஒரு குருவையும் கொடுத்திருக்கிறது ! 
எனது குரு யார் என்று இங்கே அடையாளம் காட்ட எனக்கு ஏனோ தோன்றவில்லை. அவரை குறித்து பலருக்கும் பலவித அபிப்பிராயங்கள் இருக்கலாம். அதை எல்லாம் உடைத்து போட நான் விரும்பவில்லை. அது அதுவாகவே இருக்கட்டும் !!  

                                                  குரு பிரம்மா குரு விஷ்ணு
                                                  குரு தேவோ மஹேஸ்வரஹ
                                                  குரு சாட்சாத் பரப்ரம்மா
                                                  தஸ்மை ஸ்ரீ குருவே நமஹா...!

                                                               * * *


எனது பிறந்தநாளான இன்று நண்பரை குறித்து இங்கே பதிவிட கிடைத்த வாய்ப்பை எண்ணி பெருமைபடுகிறேன்...அதே சமயம் அவரை குருவாக அடைய காரணமான பதிவுலகத்தை மிக மதிக்கிறேன்...!  


பிரியங்களுடன் 
கௌசல்யா