'திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' - சம்பந்தர்
'தண் பொருநைப் புனல்நாடு' - சேக்கிழார்
பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி - கம்பர்
என்று சான்றோர்கள் பாடி பரவசம் அடைந்த பூமி இந்த திருநெல்வேலி !! ஆசியாவின் மிகப் பெரிய சிவன் கோவில், இங்கே உள்ள நெல்லையப்பர் கோவில் என்பது ஒரு சிறப்பு.சிவபெருமானின் ஐம்பெரும் சபைகளில் 'தாமிர சபை' என்று போற்றப்படுவதும் இந்த கோவில் தான்.
திருநெல்வேலி என்றால் இலக்கியம் சுவைத்த டி.கே.சி, விடுதலை உணர்வு தந்த வ.உ.சி, எட்டயபுரத்து பாரதி, உனக்கேன் தரவேண்டும் வட்டி என ஆங்கிலேயரிடம் உறுமிய கட்டபொம்மன், ஆங்கிலேயரை முதன் முதலில் எதிர்த்த மன்னன் பூலித்தேவன், வாஞ்சிநாதன் இப்படி பலரும் நினைவுக்கு வரலாம்.....! பலருக்கு பாளையங்கோட்டை ஜெயில் நினைவுக்கு வரலாம்.....! முக்கியமாக எல்லோருக்கும் அல்வா நினைவுக்கு வரும்.....!
இப்ப எதுக்கு இந்த பில்டப்னா, இனிமேல் பதிவுலகத்திற்கு திருநெல்வேலி என்றால் 'பதிவர்கள் சந்திப்பு' நினைவுக்கு வரணும், வரும்.....!! (இது கொஞ்சம் ஓவர்தான்...!! )
ஆம் மக்களே வரும் வெள்ளிகிழமை அன்று சென்னை, மதுரை, கோவில்பட்டி, ஈரோடு, கோயம்புத்தூர், கோபி,விருதுநகர் இன்னும் ஊர்களில் இருந்தெல்லாம் பதிவர்கள் நெல்லை நோக்கி வராங்க.....!
எங்க ஊர்ல விஷேசமுங்க !
பதிவுலகம் மூலமாக முகம் தெரிந்தும் தெரியாமலும் நட்புகள் கொண்டாடி வருகிறோம். பின்னூட்டங்கள் மற்றும் நம்மை தொடருவதின் மூலம் பலர் நம்மை பற்றி அறிந்திருப்பார்கள். அப்படி அறிந்தவர்கள் தெரிந்தவர்களாக மாற உதவுகிறது 'பதிவர்கள் சந்திப்பு'.
அது போன்ற ஒரு சந்திப்பு இங்கே திருநெல்வேலியில் நடைபெற இருக்கிறது. 'உணவு உலகம்' திரு சங்கரலிங்கம் அண்ணன் அவர்கள் தலைமையில் வரும் 17.06.2011 வெள்ளி அன்று, பதிவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம். இது தொடர்பாக அவரது மெயிலுக்கு பத்தாம் தேதிக்குள் வருகையை குறித்து பதிவு செய்ய சொல்லி இருந்தோம்....பத்து பேர் முதல் பதினைந்து பேர் வருவார்கள் என்ற நினைத்தோம். ஆனால் வருவதாக விருப்பம் தெரிவித்து வந்த மெயில்களை பார்த்து பிரமித்துவிட்டோம். எங்களின் பொறுப்பு கூடியதாக உணரும் அதே நேரம் மிகவும் சந்தோசமாக அந்நாளை எதிர்பார்க்கிறோம்.
இடம்: மிதிலா ஹால்,A/C.
ஹோட்டல் ஜானகிராம்,
மதுரை ரோடு,
திருநெல்வேலி சந்திப்பு.
நாள்: 17.06.2011
நேரம்: காலை 10.00 மணி
நிகழ்ச்சி நிரல்
காலை 10௦.00 மணி --- வரவேற்புரை, பதிவர்கள் ஒரு சுய அறிமுகம்
காலை 11 .00 மணி --- செல்வாவின் நகைச்சுவை நேரம்
அதன்பின்னர் கலந்துரையாடல், அது முடிந்ததும் 1 மணிக்கு மதிய உணவு இத்துடன் சந்திப்பு நிறைவு பெறுகிறது.
இந்த பதிவர்கள் சந்திப்பில் ஒரு சிறந்த ஒன்றாக சிறிய சமூக சேவை ஒன்றினை செய்யலாம் என்று யோசித்து வைத்துள்ளோம்...வரும் நண்பர்களின் ஒத்திசைவுக்கு பின் செயல் படுத்தப்படும்.....!
நிகழும் நிகழ்வுகளை பதிவுலக நண்பர்கள் ஆன்லைனில் கண்டுகளிக்க நாற்று நிரூபன் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளார். புகைப்படம் எடுக்க போடோகிராபர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது , அதில் கலந்து கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் தவிர்த்துவிடலாம், கட்டாயம் இல்லை.
அப்புறம் முக்கியமாக, பதிவர்கள் சந்திப்பு என்று சொன்னாலும், உண்மையில் இது ஒரு குடும்ப விழா...விரும்பம் உள்ளவர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ளலாம்.
இம்சைஅரசன் - பாபு
அட்ரா சக்க - செந்தில்குமார்
ஜயவேல் - சண்முக வேலாயுதம்
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராஜன்
அன்புடன் எ.மு.ஞானேந்திரன்
நெல்லை நண்பன் - ராம்குமார்
நாய்க்குட்டி மனசு ரூபினா
ஜோசபின் பாபா
இவர்கள் அனைவரும் வருகிறார்கள்...இவர்கள் தவிர மற்றவர்கள் புதன்கிழமை (நாளை) கன்பர்ம் செய்து, சொல்வதாக இருக்கிறார்கள். மேலும் வர விருப்பம் இருக்கிறவர்கள், உணவுஉலகம் ஐடிக்கு மெயில் பண்ணுங்கள்...முக்கியமாக நெல்லையில் வேறு யாரும் பதிவர்கள் இருக்கிறார்களா என தெரியவில்லை...அப்படி இருந்தால் அவசியம் தொடர்பு கொள்ளவும்.
அவரது செல் எண் 9442201331.
அப்புறம் ஒண்ணச் சொல்லியே ஆகணும் - குற்றாலம்
தென்பொதிகைச் சாரலில் அமைந்துள்ளது குற்றால மலை, இதில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் உள்ளன.....இந்த செடிகள் மீது பட்டு விழும் மழைத்துளிகள் பின்னர் அருவியாக ஓடி வருவதால் அருவி நீரில் அந்த மூலிகை செடிகளின் மருத்துவ குணமும் கலந்து வருகிறது என்பதும் அதில் நீராடுவதால் உடலுக்கு ஆரோக்கியம் என்பது தனிச் சிறப்பு.
இப்போது சீசன் களைகட்ட தொடங்கிவிட்டது. தென் மேற்கு பருவக்காற்று குளிர்ச்சியாக வீசி, குற்றாலத்தில் சாரல் மழையை பெய்வித்து கொண்டிருக்கிறது .....!! அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது .....
வெள்ளிகிழமை பதிவர் சந்திப்பு என்றால் சனி, ஞாயிறு இரண்டு தினங்களும் மூலிகை கலந்து வரும் அருவிகளில் நீராடி அற்புதமான அனுபவத்தை பெற ஒரு நல்ல சந்தர்ப்பம். இது போன்ற சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது அனுபவித்து கொள்ளவேண்டும்...! (அவரவர் சொந்த செலவில்...?!) என்ன நான் சொல்றது...?! சரி தானே.....?!!
நெல்லையும் நாங்களும் உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலாக இருக்கிறோம். எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து இணையம் என்ற கடலில் வந்து விழுந்த நதிகள் நாம் ! நம்மிடையே இருக்கலாம் பல வேற்றுமைகள், இருந்தும் ஒன்றிணைகின்றோம் நட்பு என்ற அற்புதத்தால் !! சகோதர பாசத்தையும், தோழமை அன்பையும், மனித மாண்பையும் போற்றுவோம் !!
கலந்து கொள்ள இயலாத தோழமைகளிடம் இருந்து வாழ்த்துக்களையும், ஆசிர்வாதங்களையும் எதிர்பார்கின்றோம்...!
தமிழர்களாய், தமிழால் ஒன்றுபடுவோம் !
அன்பால் மனிதர்களை வசப்படுத்துவோம் !
படங்கள் - கூகுள்















